செபிப்பது எப்படி?

nikodemus

நண்பனோடு நண்பனாக

நண்பன் நண்பனோடு அன்புடன் உரையாடுவது போல மனிதன் இறைவனோடு உரையாடுவதே செபம். இரு நண்பர்களும் ஒரிடத்தில் கூடுவார்கள். பேசுவார்கள். முடியாதபோது கடிதம் எழுதி உரையாடுவார்கள். தொலைவில் உள்ள நண்பருக்குக் கடிதம் எழுதுவதுபோல் இன்று நாம் உணரவேண்டும். வேறுசில சமயங்களில் அவர் நம் அருகில் இருப்பதை உணர்ந்து நெருக்கமாக அவருடன் உரையாடமுடியும்.

நண்பனைப் பார்க்கலாம். கடவுளைப் பார்க்கமுடியாது. நண்பனுடைய குரலைக் கேட்கலாம். கடவுளுடைய குரலைக் கேட்க முடியாதென்று நினைப்பீர்கள். நண்பனைவிட இறைவன் உண்மையாகவே நம் அருகில் இருப்பவர். நம்முள் நம் இதயத்தில் வீற்றிருக்கிறார். நம் நண்பர் நம் அருகில் இருந்து உரையாடலைக் கேட்பதைவிட இறைவன் அதிக நெருக்கமாக நம்மோடு இருக்கின்றார்.

என்றும் எங்கும் நம்மோடு இருக்கும் இறைவன், நம்மோடு பேச எப்பொழுதும் ஆவலோடு இருக்கிறார். அவர் நம்மை நினைக்காத நேரமில்லை. நாம் தான் அவரோடு பேச நேரம் வேண்டும். மனம் வேண்டும். ஆவல் வேண்டும்.

அவரை அன்புடன் நினைக்கும்பொழுது அவரிடம் பேசுகிறோம். நம் எண்ணத்தில் அவரிடம் சென்று அவரிடம் பேசலாம். வாழ்த்தலாம். வணங்கலாம். நமக்குத் தேவையானவற்றைச் சொல்லலாம். நாம் பெற்றுள்ள நன்மைகளுக்காக அடிக்கடி நன்றி கூறவேண்டும்..

செபத்திற்கு அடிப்படையானது நம்பிக்கை

செபத்திற்கு அடிப்படையானது நம்பிக்கை. "நீங்கள் இறைவனிடத்தில் வேண்டும்போது எவற்றைக் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று வீட்டீர்கள் என நம்புங்கள். நீங்கள் கேட்டபடியே நடக்கும்" மாற்கு 11:24 என்கிறார் இயேசு.

இயேசு செபித்தார் என்பதை பைபிளில் பல இடங்களில் காணலாம். நாம் எப்பொழுதும் செபிக்க வேண்டுமென்று இயேசு முன்மாதிரி காட்டினார். மேலும் நாம் செபிக்க வேண்டுமென்று கட்டளையும் கொடுத்தார். 'அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டி வந்தார்," லூக் 15:6. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார், அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். மாற் 1:35 இயேசு செபிப்பதை சீடர்கள் கவனித்து வந்தனர். அவர் செபித்து திரும்பி வரும்பொழுது முகமலர்ச்சியுடன், உடல்புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார். சீடர்கள் இயேசுவை அணுகி எங்களுக்கும் செபிக்கக் கற்றுத் தாரும் என்று கேட்டனர். நீங்கள் இவ்வாறு செபியுங்கள் என்றார் இயேசு.

'
விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயதெனப் பேற்றுப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!
இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்!
எங்களுக்கு எதிராக குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துளள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும்!
எங்களைச் சோதமைக்கு உட்படுத்தாதேயும்!
தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்!
மத்6:9-13

இதுவே இயேசு கற்பிக்க செபம். செபத்தைப்போல பயன்தரும் சீரிய செயல் வேறெதுவும் இல்லை.

உமக்கு விருப்பமானால்

நாம் உருக்கமாக செபிக்கும்பொழுது உள்ளம் உயருகின்றது. இறைவன் மனம் இரங்குகின்றார். குறிப்பாக நமக்குத் துன்பமும். துயரமும். கவலையும் மேலிடும்பொழுது தந்தையாகிய இறைவனிடம் செபிக்கவேண்டும். களைப்புறாமல் விடாது விழித்துதிருந்து செபிக்கவேண்டும்.

இயேசு தனக்கு வரும் துன்பங்கள் சித்திரவதை அனைத்தையும் முன்னறிந்து செபத்தினால் தம்மையே திடப்படுத்திக் கொண்டார். 'தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல. உம் விருப்பப்படியே நிகழட்டும்." என்று செபித்தார்.

செபம் ஆன்மாவின் உயிர்நாடி. செபம் வீணாகப் போவதில்லை என்பது உண்மை. மிக எளியவரும் வலிமையற்றவரும் கூட செபத்தினால் மாபெரும் செயல்களைச் சாதித்து விடலாம். அவர் நம் அன்புள்ள தந்தை. எனவே அவர் நமக்க உதவி செய்ய வல்லவர். செபத்தில் இன்பம் காணும் வரையில் செபித்துப்பழகுவோமாக. வாழ்நாளெல்லாம் செபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  செபங்கள்