வாழ்வாகும் வார்த்தைகள்
அருள்பணி ஜோசப் சஜீ OMD
“வார்த்தைகள் வாழ்வாகும்போது வழிகள் பிறக்கின்றது”
சில வார்த்தைகள் மனமகிழ்வைத் தருகின்றன. சில வார்த்தைகள் கவலையைத் தருகின்றன. சில வார்த்தைகள் வெற்றியைத் தருகின்றன. சில வார்த்தைகள் ஏமாற்றத்தைத் தருகின்றன. சில வார்த்தைகள் காயங்களை ஏற்படுத்துகின்றன. சில வார்த்தைகள் மருந்தாகின்றன. சில வார்த்தைகள் அமைதியைத் தருகின்றன.
இவ்வாறு வார்த்தைகள் மனித வாழ்வின் இதயமாகவும், உறவு வாழ்வின் அடித்தளமாகவும் அமைகின்றது. எத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் அவைகளுக்கு வலிமை அதிகம். ஏனென்றால் கொட்டிய வார்த்தைகளைத் திரும்ப அள்ள முடியாது. ஆனாலும் எல்லா நேரங்களிலும் இதன் விளைவை நாம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறோம். திருவள்ளுவர் திருக்குறளில், வார்த்தையின் வலிமையைப் பற்றிக் கூறும்போது, “தீயினாற் சுட்ட புண் உள்ளாரும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” என்று கூறி, தீப்புண் கூட ஆறிவிடும். சொல்லால் ஏற்படுத்திய மனப்புண் ஆறாது என்ற சிந்தனையை உலகிற்கு வெளிச்சம் காட்டுகின்றார்.
உலகில் வாழுகின்ற எல்லா மனிதர்களுக்கும் தங்களுடைய கருத்தை, சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்குச் சுதந்திரம் உண்டு. ஆனால் எப்படி வெளிப்படுத்த வேண்டும், எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவுகள் மிக மிக அவசியம். ஏனென்றால் ஒருவர் தன்னுடைய வார்த்தைகளை வெளிப்படுத்தும்போது, அது அதன் இலக்கை அடைந்து பிறரைக் காயப்படுத்துகின்றது. இது ஒருவேளை வெளிப்படுத்தியவருக்கு முழுமையான மன நிம்மதியைக் கொடுத்தாலும், இது தற்காலிகமான நிம்மதி தான். ஒரு சில நேரங்களில், அரசியல் தலைவர்கள் கூடத் தங்கள் கருத்துக்களைத் தெளிவாகவும், மக்களுக்கு ஏற்ற முறையிலும் வெளிப்படுத்தத் தெரியாமல், கடுமையான வார்த்தைகள் வழியாக வெளிப்படுத்திச் சர்ச்சையில் சிக்கிவிடுவது நாம் அன்றாடம் பார்க்கின்ற நிகழ்வுகளாகவே இருக்கின்றது. சரியான வார்த்தைகளைச் சரியான இடத்தில் பயன்படுத்துவதிலும், நிறைகளைச் சொல்லும்போதும், குறைகளைச் சுட்டிக்காட்டும் போதும் இருப்பதைவிட, ஒருவரைக் குற்றம் சாட்டும்போதோ, ஒருவரைக் குறை கூறும்போதோ, எந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றோம் என்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் பிறருக்கு நம்மை அறிமுகப்படுத்துவதே இந்த வார்த்தைகள்தான்.
இயேசுவின் பணி வாழ்க்கையில், மலர் உலகிற்கு மணம் பரப்புவது போல, இயேசு தன்னுடைய வார்த்தையால் உலக மாந்தர்களுக்கு வாழ்வு கொடுத்தார் என்பதை விவிலியத்தில் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டுகின்றார். ஒரு மனிதன் வாழ்க்கையை வாழ்வதும், வாழ்க்கையில் வீழ்வதும் சொல்லுகின்ற வார்த்தைகளில்தான் அடங்கியுள்ளது. மறைநூல் அறிஞரும் பரியர்களும், “போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டாள்” (யோவா 8:4) என்று கடுமையான வார்த்தைகளால் குற்றம் சாட்டுகின்றபோது, இயேசு, “உங்களில் பாவம் செய்யாதவர்கள் முதலில் இப்பெண் மேல் கல் எறியட்டும்” (யோவா 8:7) என்ற கனிவான வார்த்தைகளால் அவளை மீட்டு, புதிய வாழ்வைப் பரிசாகக் கொடுக்கின்றார். எனவே எசாயா இறைவாக்கினர், “மழையும் பனியும், வானத்திலிருந்து இறங்கி, நிலத்தை நனைத்து, முளை அரும்பி, விதைப்பவனுக்கு விதையையும், உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல் திரும்பிச் செல்வதில்லை” (எசா 55:10) என்பது போல, இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளும் பிறருக்கு வாழ்வைக் கொடுக்காமல் திரும்பிச் செல்வதில்லை என்று நாம் அறுதியிட்டுக் கூறலாம். ஆகவே வெல்லும் வார்த்தைகளாக இருந்தாலும், கொல்லும் வார்த்தைகளாக இருந்தாலும், நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்து, வார்த்தைகளை வாழ்வாக்குவோம். வார்த்தைகள் வழியாகட்டும்.