கானாவூர் திருமணம்

திரு. அல்போன்ஸ், திருச்சி.

திருவிவிலியத்தில் இறைமகன் இயேசுவின் பொது வாழ்வில் கானாவூர் திருமணம் தான் முதல் புதுமையாகத் திகழ்கிறது. மங்களகரமான, மகிழ்ச்சிகரமான நிகழ்வாக உள்ளது. அன்னை மரியாள் தன் திருவாய் மலர்ந்த பேசியது தான் அன்னை கடைசி வார்த்தைகளாகப் பதிவாகி உள்ளது.

இந்நிகழ்ச்சியில் நால்வர் முன்னிலைப் படுத்தபடுகின்றனர்.

1.இறைமகன் இயேசு, 2.அன்னை மரியாள், 3.இயேசுவின் சீடர்கள், மற்றும் 4.திருமண வீட்டுப் பணியாளர்கள்.


முதலில் இருக்கும் இருவர் இறை ஆளுமை கொண்டவர்கள் அவர்கள் நன்மையைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது. எனவே மற்ற இரு பிரிவினர் சாதாரணச் சக மனிதர்கள் என்ன செய்தார்கள் எனச் சிந்திப்போம்? இயேசுவைப் பின்பற்றி வந்த சீடர்கள்; மரியாள் கூறியதை - இயேசு செவிமடுத்து அதற்குப் பதிலும் தருகின்றதைக் கவனித்திருப்பார்கள். ஆக, பிரச்சனையைத் தெரிந்துகொண்ட பின்பும் உடனிருந்த சீடர்கள் இது தொடர்பாக எதுவும் செயல்பட்டதாக விவிலியம் சான்றுப் பகறவில்லை, மாறாகத் தண்ணீர் திராட்சை ரசமாகித் திருமண வீட்டில் மகிழ்ச்சி மீண்டும் வந்ததைக் கண்டபின் சீடர்கள் இயேசுவின் மீது நம்பிக்கைக் கொண்டார்கள் என்று விவிலியம் பறைசாற்றுகின்றது. ஆக ஆண்டவர் இயேசுவின் அரும் செயல்களையும் வல்லமையையும் கண்டு சீடர்கள் அவர்மீது நம்பிக்கைக் கொண்டனர்.

பாருங்கள் இந்த இரண்டாம் சமூகப் பிரிவினரை, இவர்கள் திருமண வீட்டில் தங்கள் பணிகளைச் செய்வதில் மும்முரமாக இருந்தவர்கள். மரியாள் அவர்களை அழைத்து "அவர் உங்களுக்குச் சொல்வதை எல்லாம் செய்யுங்கள்" என்று அவர்களிடம் கூற அதைச் செவிமடுத்த பணியாளர்கள் - இயேசுவின் முன்பு வந்து அங்கிருக்கும் துப்புரவுக் கற்தொட்டிகளில் தண்ணீரை நிரப்புங்கள் என்ற இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து மனமுவந்து செய்து முடிக்கின்றனர். இயேசுவின் கட்டளை மீண்டும் தொடர்கின்றது. அந்த நீரை மொண்டுப் பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு செல்லுங்கள் என்றபொழுது், என்ன என யோசிக்காமல் செய்து முடித்தனர். முடிவு தண்ணீர் திராட்சை ரசம் ஆனதற்கு இவர்களும் ஒரு காரணம் ஆனார்கள்.

கேள்வி என்னவெனில் இயேசுவையும் மரியன்னையையும் யாரென்று அறியாத பணியாளர்கள், செய்திக்குச் செவிமடுத்துக் கட்டளைகளுக்குக் கீழ் படிந்துச் செயலாற்றியது சிறப்பானதா?....

தண்ணீர் திராட்சை ரசமாக மாறியதைக் கண்டபின் சீடர்கள் இயேசு மீது நம்பிக்கை வைத்தது சிறப்பானதா?.

அற்புதம், அதிசயமின்றி இந்தச் சீடக் கூட்டம் இயேசுவின் வார்த்தைகளுக்கு எப்போது கல்யாண வீட்டுப் பணியாளரைப் போல் செவிமடுக்கும்.....?

இப்போதும் அதிசயம் அற்புதங்களை நாம் எதிர்பார்ப்பவர்கள். ஆனால் கல்வாரியில் சிலுவையில் இறந்த இயேசுவைப் பரிகசித்த யூதர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

கானா ஊரில் இயேசுவின் முழு மகிமையை வல்லமையைக் காணாதவர்களாக அன்றைய சீடர்கள் இருந்தார்கள்.

நாமோ அந்த இயேசு ஆண்டவரின் உயிர்ப்பைக் கண்டு அனுபவித்துச் சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரின் சீடர்கள். இந்நிலையில் அவருடைய உயிர்ப்பை விட அவரின் வார்த்தைப்படி‌ச் செயல்பட வேறு என்ன அற்புதங்கள் வேண்டும்.?

இயேசுவோ அறுவடை மிகுதி; வேலையாட்கள் குறைவு என்று கூறுகின்றார். வேலை ஆட்களாக, பணியாளர்களாக மாறலாமா?
யோசிப்போம்......

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது