வாழ்வின் அரிய தருணங்கள்

அருட்திரு தந்தை திவாகர் க.ச.

மனித உயிர்களாகிய நாம் காலம் இடம் என்ற நியதிகளுக்கு உட்பட்டவர்களாகவும் கட்டுப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக மாதங்கள் வருடங்களாக உருண்டோடிக்கொண்டிருப்பதில் நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவை தானாக வந்து போகும். ஆனால் வழக்கமான வாடிக்கையான இந்தக் கால ஓட்டத்தை அலங்கரிப்பதும், ரசிக்க வைப்பதும் சில பல அரிய தருணங்கள். ஓர் ஆண்டை எடுத்துக்கொண்டால் புத்தாண்டு தினம், திருநாள் பெருநாள், பிறந்தநாள், திருமணநாள் என்று நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாட்கள் இருப்பது நமது வாடிக்கையான வாழ்விற்குச் சுவைத் தருகின்றன. இதோடுகூட நாம் உழைத்து விருதுகள் பெற்ற நேரங்கள், சாதித்த சாதனைகளின் பதிவுகள், அபிமான நபர்களோடு கொண்ட தொடர்புகள் சந்திப்புகள் என்று அரிய தருணங்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகலாம். இவைகள் நீங்கா நினைவுகளாக, ஆட்டோ கிரஃபுகளாக இருந்து கொண்டு ‘இந்த நிமிடம் இப்படியே தொடராதா’ என்று நம்மை ஏங்க வைக்கலாம், உற்சாகப்படுத்தலாம். இதைதவிர ஒரு நாளின் நேரமும்; மாதத்தின் நாட்களும் முகூர்த்த நேரம், நல்லநேரம் கெட்ட நேரம் என்று வகுத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அறிவியல் சார்ந்த அர்த்தங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இவைகள்மட்டும்தான் நமது வாழ்வின் அரிய தருணங்களா?

நமது வாழ்வில் வந்துபோகின்ற எந்த நொடிப்பொழுதுதான் அரிதானது இல்லை? weddingஇந்த நாள், இந்த நொடி, இந்த நிமிடம் இதற்குமுன் எப்போதும் வந்ததில்லை, இனிமேலும் வரப்போவதில்லை. இவை அரிதானவை அல்லவா? அசாதாரணங்களையே பார்த்துப் பார்த்துப் பழகிப்போன நமக்குச் சாதாரணங்கள் எடுபடுவதில்லை. அவை பல கண்டுக்கொள்ளப்படாமல் போய்விடுகின்றன. அப்படி அரிதாகத் தோன்றும் தருணங்களை நமது வாழ்வில் நம்மைக் கேட்டுக்கொள்ளாமல் நிகழும் நிகழ்வுகளை வைத்துத் தீர்மானிப்போமென்றால் நம்மைப்போல் இரங்குதற்குரியவர் யாரும் இருக்கமாட்டார்கள். எப்போது நமது வாழ்வின் அரிய தருணங்களை நாமே தீர்மானித்து ஏற்படுத்துகிறோமோ அப்போதுதான் நமது அரிய தருணங்களில் நாம் பெருமை கொள்ளமுடியும்.

நேரத்தைப் பொறுத்தமட்டில் மூன்று வகையானவர்கள் உள்ளனர். சிலர் நேரத்தினால் தள்ளிக்கொண்டு செல்லபடுகின்றவர்கள், இவர்கள் அரிய தருணங்களுக்காக காத்துகிடந்து தங்கள் வாழ்வை வீணாக்குவர். வேறு சிலர் நேரத்தை தள்ளிக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் காலம் தப்பி பயிரிடுபர்களாவர். மற்றும் சிலர் நேரத்தின்மீது பயணம் செய்பவர்கள். அவர்கள் அதற்கு கடிவாளமிட்டு சாதனைகள் படைத்து நல்ல தாக்கங்கள் ஏற்படுத்துபவர்கள்.

அந்த அரியதருணம் எப்போது வரும் என்று வினவினால், அது வருதொன்றன்று, அது நாம் கொணருவது. அதுவும் இப்போது இங்கு இன்று நிகழ்காலத்தில் கொண்டு வரவேண்டியது. நிகழ்காலத்தில் நம்பிக்கைக்கொண்டு அதில் நிலைக்கொண்ட ஒருவர்:

time“நாளை என்ற சொற்களை இன்றே நான் அழித்துவிடுவேன். இந்த நாள் மீண்டும் வரப்போவதில்லை, நாளை வராமலே போகலாம் என்று உணர்ந்து நான் ஆழமாக உணர்வுக்கொண்டு வித்தியாசம் ஏற்படுத்தும் விதத்தில் வாழப்போகிறேன். எனது வழிவில் வரும் தடைகளைத் தோற்கடித்து, எதிர்மறைச் சிந்தனைகள் என்னைத் தாக்கவிடாமல் பார்த்துக்கொள்வேன். எனது சிறு சிறு செயல்களையும் அரிய செயலாகப் பரிணமிக்கச் செய்து பிறருடைய வாழ்வில் நல்ல பதிவுகளைப் பதியச் செய்வேன், என்கிறார்.

இயேசுபிரான் தன் சீடர்களுக்குச் செபிக்கக் கற்பித்தபோது அவர்கள் அன்றாட உணவைக் கேட்டுப் பரமதந்தையிடம் மன்றாடவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். அவர் மதம் சார்ந்த நாள் நேரம் ஆசாரங்களையும் சாங்கியங்களை அறிந்திருந்தாலும்; பிறருடைய வாழ்வில் அரியதருணங்களைக் கொண்டு வரும் முயற்சிக்கு அவை தடைவிதிக்காமல் பார்த்துக்கொண்டார். பிறருடைய நலனில் அக்கறைக்கொண்டு நமது வாழ்வை அரிய தருணமாக மாற்றுவோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது