மூன்றாவது பேழை

பேராசிரியர் அ. குழந்தை ராஜ் - காரைக்குடி.

1.நோவாவின் பேழை - முதல் பேழை

noha arkமனிதர்கள் மற்றும் விலங்குகள், பறவைகளைக் காத்த முதல் பேழை நோவாவின் பேழை. 'இத்தலைமுறைகளில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கின்றேன். தக்க விலங்குளில் 7 ஜோடியும், தகாத விலங்குகளில் ஒரு ஜோடியும்  தேர்ந்தெடுத்துக் கொள். 40 நாட்கள் மழைபெய்து உலவை அழிக்கப்போகிறேன்" என்றார் ஆண்டவர். 600 வயதான நோவா கடவுளின் கட்டளைக்கேற்ப கோபர் மரத்தால் ஒரு பேழையை செய்தார். எல்லா உயிரினங்களையும் ஏற்றிக்கொண்டார். 40 நாட்கள் மழை பெய்தது. நோவாவும் அவர் மனைவியும் புதல்வர்கள் சேம்,காம், எப்பேத்து அவர்களின் மனைவியர் ஆகிய 8 பேர் மட்டும் காப்பாற்றப்பட்டனர். கடவுள் தமக்குத்தாமே சொல்லிக் கொண்டது யாதெனில் ' மனிதரின் குற்றங்களுக்காக நிலத்தை நான் சபிக்க மாட்டேன்" எனக் கூறி நோவாவோடு ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி அதன் அடையாளமாக வானவில்லை உண்டாக்கி பெற்றுக் கொண்டது இந்த பேழை. மனித உயிர்களை உடலைக் காத்த முதல் பேழை.(தொ.நூ. 6:-7)

2.மோவேயின் உடன்படிக்கைப் பேழை-இரண்டாவது பேழை

box

இரண்டவதாக மோசே சீனாய் மலையிலிருந்து கொண்டு வந்த உடன்படிக்கைப் பலகையை சித்தம் மரத்தால் ஆன ஒரு பேழையைச் செய்து, அதனுள் மூன்று பொருட்களை வைக்கிறார்.
 


	1. பத்துக்கட்டளைகள் அடங்கிய கற்பலகைகள்
	2. ஆரோனின் துளித்து கோல்
	3. மன்னா வைத்திருந்த பாத்திரம்.
	
	

அந்த பேழையை இரக்கத்தின் இருக்கையில் வைத்தார். திரு உறைவிடத்தினுள் பேழை எடுத்துக் செல்லப்பட்டது. திருத்தூயகத்தின் திரை தொங்கவிடப்பட்டு உடன்படிக்கைப் பேழை மறைக்கப்பட்டது. (வி.ப. 25:37) இந்த உடன்படிக்கைப் பேழை தான் நாம் இன்று காணும் நற்கருணைப் பேழைக்கு முன் அடையாளம். இந்த உடன்படிக்கைப் பேழையை மக்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ, அங்கெல்லாம் அதை எடுத்துக்சென்றனர். ஒரு கூடாரத்தில் வைத்து மரியாதை செய்தனர். பகலில் மேகத்தூண்கள் அக்கூடாரத்தை மூடியிருக்கும். ஆண்டவரின் பிரசன்னம் எப்போதும் இருக்கும்.

பின்னர் நடந்த பற்பல சண்டைகளில் இந்த உடன்படிக்கைப் பேழை யாரிடம் இருந்ததோ அவர்கள் வெற்றி பெற்றனர். பேழையை இழந்தவர் தோற்றுப்போயினர். பேழை புறப்படும் போதெல்லாம் மோசே 'ஆண்டவரே எழுந்தருளும் உம் பகைவர் சிதறுண்டு போகட்டும், உம்மை வெறுப்போர் உம் முன்னின்று ஒடியொழியட்டும்" என்று கூறுவார். (எண்.10:35) மோசே இந்தப் பேழையைச் சுமக்கும் பொறுப்பை லேவியின் வழிவந்த குருக்களிடமும், இஸ்ரேயலின் தலைவர்கள் அனைவரிடமும் ஒப்படைத்தார். ஆனால் பொதுநிலையினராகிய நாம் இன்று நற்கருணை எனும் கடவுளின் உடலை ஒவ்வொரு நாளும் சுமந்து செல்லும் வாய்ப்பினையும் அதிகாரத்தையும் இயேசு நமக்குத் தந்திருக்கிறார். பின்னர் யோர்தான் ஆற்றைப் பிரிக்க, பேழையை ஆற்றின் நடுவே எடுத்துச் சென்றார்கள். ஆறு செங்கடலைப் போல பிரிந்தது. மோசே அன்று தன் கோலால் செங்கடலை இரண்டாய் பிளந்தார். யோசுவா காலத்தில் பேழை யோர்தான் ஆற்றை இரண்டாகப் பிரித்தது. சாமுவேல் காலத்தில் பேழையை ஏலியின் புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் வைத்திருந்தனர். பெலிஸ்தியர் போர் தொடுத்து பேழையைக் கைப்பற்றினர். (1சாமு :4) பெலிஸ்தியர் தாகோன் எனும் தங்கள் தெய்வத்தின் முன் பேழையை வைத்தனர். மறுநாள் காலையில் தாகோன் சிலை ஆண்டவரின் பேழைக்கு முன் முகங்குப்புற விழுந்து கிடந்தது.

அது போலத்தான் கத்தோலிக்கர்களுக்கு அருளும் நற்கருணை நாதரின் முன் அனைத்து உலகமும் மண்டியிடுகின்றது. பேழை பெலிஸ்தியரிடம் 7 மாதம் இருந்தது. இந்தப் பேழையை திருப்பி அனுப்ப முடிவுசெய்து 5 பொன்மூலைக்கட்டிகள் 5 பொன் சுண்டெலிகளைச் செய்து குற்ற நீக்கப்பலியாக வைத்து அனுப்பப்பட்டபோது யோசுவாவின் வயலுக்கு வண்டி வந்து நின்றது. அந்த இடத்தின் பெயர் பெத்சமேசு. 20 ஆண்டுகள் கிரியத்து எயாரிமில் பேழை தங்கியது. (1 நாமு. 7:2) பின்னர் உடன்படிக்கைப் பேழை பலர் கைமாறி கடைசியில் தாவீது அரசரிடம் வந்தது. அப்போது தான் தாவீது அரசர் நடனமாடி வந்தார்.(2 சாமு 6:14) பிற்பாடு கடவுள் 'நான் தங்குவதற்கு எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? என்றார். இப்படியாக இந்தப்பேழை மனித ஆன்மாக்களை மீட்கக்கூடிய வல்லமை பெற்று திகழ்ந்தது.

3 மரியா - மூன்றாவது பேழை

Flight_Egyptமரியாள் மூன்றாவது பேழை, எப்படி? இயேசுவை சுமக்கும் பாக்கியம் பெற்றவர் அல்லவா? எப்படி உடன்படிக்கைப் பேழை உருவான மோசே காலம் முதல் சாலமோன் காலம் வரை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டதோ அதுபோலவே இயேசுவின் பிறப்பும் தற்செயலான செயல் அல்ல. மாறக அது முன் குறிக்கப்பட்டது. எசாயா இறைவாக்கினர் தன் 66 அதிகாரங்களில் இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, கொள்கை முழுக்கம், பாடுகள், உயிர்ப்பைப் பற்றியும் மீக்கா இறைவாக்கினர் பிறக்கும்போகும் இடத்தைப் பற்றியும் (பெத்லகேம்) பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே முன்னறிவித்து விட்டனர். முன்னைய பேழைகள் மனித உடலையும் ஆன்மாவையும் காப்பாற்றின. ஆனால் நமது மீட்பர் இயேசுவைத் தாங்கிய மரியா எனும் பேழை நமக்கு ஆவியை தரக்கூடிய வல்லமைமிகு செயலை ஆற்றியது. இயேசுவின் பிறப்பு முதல் உயிர்த்தெழும் வரை அந்த மூன்றாம் பேழையாக மரியா மீட்பரின் திட்டத்தில் பங்கு கொண்டார். மரியாவின் பங்கு மகத்தானது. இயேசுவை கருத்தாங்கும் முன்தன் கருத்தியியல் ரீதியில் இயேசுவை ஏற்று, 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்து, எகிப்துப்போய் திரும்பி வந்து, கோவிலில் காணமால் போனவரைக் கண்டுபிடித்து, புதுமையைச் செய்யவைத்து உயிர்த்தபின் சீடர்களை ஒன்று சேர்த்து ஜெபித்து, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுத்தந்து விண்ணகம் சென்றவர் மரியா எனும் பேழை மண்ணகத்தில் இருந்தது. இப்போது விண்ணகத்தில் உள்ளது.

4 பொதுநிலையினர் - நான்காவது பேழை

அப்படியென்றால் பொதுநிலையினர் சுமக்கும் பேழை எது? ஒவ்வொரு நாளும், விசுவாசக் கண்களுக்குப் புலப்படும் நற்கருணை நாதரை திருப்பலி நேரத்தில் உண்டு, அவரை நாம் நம் சிந்தனையிலும், விசுவாசத்திலும் ஏற்றுக்கொள்கிறோமே, நாம் தான் இப்போது மீட்பரை ஒவ்வொருநாளும் சுமந்து செல்லுகிறோம். நம்மோடு இயேசு ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்துகொள்கிறார். ஏற்கனவேயிருந்த உடன்படிக்கைகள் குறைவாக இருந்ததினால், நமக்கு புதிய உடன்படிக்கையைத் தருகிறார். சிலுவைவழியாக எல்லோரையும் ஒருடலாக்கி கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார். ஆவியானவரின் கொடைகள், வரங்கள்,கனிகளை நாம் பெறவேண்டுமென இயேசு தன் உடலை அப்பத்தின் வடிவில் நம்மோடு ஒவ்வொரு நாளும் தங்கி நமக்குள் இருந்து பேசும் ஆற்றல், வல்லமை, வலிமையைத் தருகிறார். அன்று உடன்படிக்கைப் பேழை சென்ற இடமெல்லாம் வெற்றி கிடைத்தது போல, இயேசுவை வார்த்தையாலும் அப்பத்தின் வடிவிலும் சுமந்து செல்லும் நாம் பிற இனத்தவர்க்கும் நம் மக்களுக்கும் சமாதானத்தை,மன நிறைவை, அமைதியை, பொறுமையை, விசுவாத்தைத் தூண்டுகிற மக்களாக மாறவேண்டும். உங்களுக்குத் தெரியாதா. கடவுளின் ஆலயம் தூயது. நீங்களே அக்கோவில் (1 கொரி.3:16-17) எனவே பொதுநிலையினராகிய நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ, அங்கெல்லாம் நாம் இயேசு கிறிஸ்துவை சுமந்து செல்கிறோம். அன்று மக்கள் உடன்படிக்கைப் பேழையை கண்ணுக்குப் புலப்படும் வழியில் தூக்கிச்சென்றார்கள். ஆனால் நாமோ கண்ணுக்குப் புலப்படா வகையில் நம்பிக்கையின் அடிப்படையில் கிறிஸ்துவை நம் உடலில், உயிரில், ஆன்மாவில், ஆவியில் ஒவ்வொரு நாளும் தூக்கிச் செல்கிறோம். பேழையானது, நம் ஆண்டவர் நமக்குள் இருக்கும்போது, அவரை அறிவிக்க அடையாளம் காட்ட இன்னும் ஏன் தயக்கம்? கடவுள் நம்மைத் தேடிவந்ததைப் போல நாமும் பிற இனத்தவரை நாடி, தேடிச்செல்வோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது