ஆயன் குரலைக் கேட்ட ஆடு

அல்போன்ஸ்-திருச்சி

விடியற் காலையின் மங்கிய ஒளியில், கல்லறை நோக்கி நடந்த மதலேன் மரியாவின் விழிகளில் ஒன்றே ஒன்று தான் இருந்தது. அது ஒரு “தேடல்”. அவள் கால்கள் நகர்ந்தாலும், அவள் உள்ளம் துக்கத்தில் நின்றது. விழிகளில் கண்ணீர், இதயத்தில் இழப்பு. அவள் தேடியது உடல். அவள் இழந்த அன்பை மீண்டும் காணும் ஏக்கம்.
கண்ணீரால் ஈரமான அவள் கண்கள் இருளை ஊடறுத்துப் பார்த்தன;
அவள் கேட்ட கேள்வி “என் ஆண்டவரை எங்கே வைத்தீர்கள்?”
அந்தக் கேள்விக்குள், மனித துக்கமும் தெய்வ நம்பிக்கையும் ஒன்றாகக் கலந்திருந்தன.
இயேசு மரியாவின் பெயரைச் சொன்ன அந்தத் தருணத்தில், மரியாவின் உள்ளத்தில் விடியல் உதித்தது. கண்ணீர் மகிழ்ச்சியாக மாறியது; தேடல் சாட்சியாக மாறியது. அவள் கண்டது மரணம் இறுதி அல்ல; இருள் அதிகாரம் அல்ல; ஒளி வென்றுவிட்டது.
நற்செய்திகள் வரிகளைப் பார்ப்போம்

மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்;
அவர் இரு வானதூதரிடம் “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார். அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால், இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை.
இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார்.
இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள். (யோவான் 20:11-15)

மரியாள் ஆயன் குரலைக் கேட்ட ஆடு

“மரியா!”. என்ற ஒரு அழைப்பே அவளுடைய இதயத்தைத் திறந்தது. அந்தக் குரலைக் கேட்டவுடன் “போதகரே!” என்று கூறினாள்.
“நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன” (யோவான்10-14), மேய்ப்பரின் குரலைக் கேட்டவுடன் பின்தொடரும் ஆட்டைப் போல, மரியாளும் ஆண்டவரின் குரலைக் கேட்டவுடன் அவரை உணர்ந்தாள்.
இந்த நிகழ்வு நமக்கொரு ஆழமான ஆன்மீக உண்மையைச் சொல்லுகிறது. ஆண்டவர் நம்மைப் பல சமயங்களில் வெளிப்படையான தோற்றத்தில் அல்ல, உள்ளத்தின் அழைப்பில் சந்திக்கிறார். அந்த அழைப்பைக் கேட்கும்போது தான் நாம் அவரை உணர்கிறோம்; மரியாள் ஆயன் குரலைக் கேட்ட ஆட்டைப் போல ஆண்டவரை அடையாளம் காண்கிறோம்.
கல்லறைத் துயரமும் கூட நம்பிக்கையின் தோட்டமாக மாறுகின்றன.

நற்செய்தி வரிகள்

யோவான் நற்செய்தி இயேசு உயிர்த்தெழுதல் காட்சியை வெகு அழகாகத் தொடங்கிறது. “வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில், இருள் நீங்கும் முன்பே மதலேன் மரியா கல்லறைக்குச் சென்றார்.” (யோவான் 20:1) விடியற் காலையில், இருள் நீங்கும் முன்பே” என்ற வரிகளில் விடியற்காலை என்று கூறினாலே போதுமானது. அந்த நேரப் பொழுதைப் புரிந்து கொள்கிறோம். பிறகு “இருள் நீங்கும் முன்பே என்று சொல்கிறார்.
“விடியற் காலையில்” என்றும் “இருள் நீங்கும் முன்பே” என்றும் சொல்லப்படுவது வெளிப்படையாகப் பார்க்கையில் இரண்டும் ஒரே நேரத்தையே குறிக்கின்றன. ஏன் இருமுறை? ஏன் இவ்வளவு முக்கியம்? என்ன சொல்லவருகிறார்?
“இரண்டு வேறு சொற்றொடர்கள்போலத் தோன்றினாலும், காலத்திலும், அனுபவத்திலும், அர்த்தத்திலும் ஒரே தருணத்தையே காட்டுகின்றன. ஒரே நேரத்தைச் சுட்டினாலும், அவை ஒரே அர்த்தத்தை மீண்டும் கூறுவதற்காக அல்ல; இரண்டு நிலைகளைத் தெளிவாகக் காட்டுவதற்காக. இரண்டும் ஒரே காலப்புள்ளியை இரு திசைகளிலிருந்து விவரிக்கின்றன. இந்தச் சொற்றொடர் மிக முக்கியமானது.
யோவான் இங்கு நேரத்தை மட்டும் சொல்லவில்லை. மரியாவின் இரண்டு மனநிலையை சொல்கிறார்.

“இருள் நீங்கும் முன்பே."

மரியா கல்லறைக்குச் சென்ற நேரம், கடவுள் எப்படி செயல்படுகிறார் என்பதை காட்டுகிறது: மரியாவின் உள்ளத்தில் இன்னும் இருளில்தான் இருக்கிறது சிலுவையின் சோகம், மரணத்தின் அமைதி, சந்தேகம், துக்கம், குழப்பம், இழப்பு, மற்றும் பயம்.
பிறகு இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால், இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை. இருள் நீங்கும் முன்பே மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார்.
“இருள் நீங்கும் முன்பே” என்று சேர்ப்பதன் மூலம், மரியாவின் அனுபவ நிலையைச் சொல்கிறார்: அவள் கண்களுக்கு இன்னும் இருள் தான் தெரிகிறது. நம்பிக்கை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை.
மரியாள் முதலில் இயேசுவைக் காணவில்லை.அவள் தோட்டக்காரன் என்று நினைத்தாள்.

விடியற் காலையில்.

விடியற்காலை என்பது இருள் ஒளி எல்லை நேரம் இருள் விலகி, நம்பிக்கை, அறிவு, மகிழ்ச்சி ஆகிய ஒளி நுழையும் நேரம்.
“விடியற் காலையில்” என்பது வெளிச்சம் வரப்போகிறது என்ற நம்பிக்கையின் பார்வை.
இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். மனம் முழுதும் ஆனந்த வெள்ளம். தேடல் நிறைவானது.
விவிலியத்தில் இவ்வகை இரட்டைச் சொல்லாட்சி அலங்காரம் அல்ல. அது ஆன்மீக உண்மையை ஆழமாகப் பதியச் செய்யும் வழி. “இருள் நீங்கும் முன்பே” –அவள் துக்கத்தில் இருந்தாள்.
“விடியற் காலையில்” – இயேசுவைக் கண்டாள் மகிழ்ச்சி அடைந்தாள்.
மரியாவின் இரு மனநிலைகளையும் தெரியப்படுத்தவே “இருள் நீங்கும் முன்பே” “விடியற் காலையில் இரட்டை சொல்லாட்சியை யோவான் கூறுகிறார்.

பிறப்பும், உயிர்தெழுதலும்

இந்த இருளும், ஒளியும் என்ற இரட்டை சொல்லாட்சியை. யோவான் தன் நற்செய்தியின் தொடக்கத்திலேயே அழகாகத் தொடங்குகிறார்.
“ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது;
இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை”.(யோவான் 1:5)
இயேசுவின் வாக்கு மனுஉருவான பிறப்பின் பொழுதும், உயிர்தெழுதலின் பொழுதும் இரண்டு இடங்களில் இருளும், ஒளியும் என்ற வரிகளைப் பார்க்கின்றோம்.
ஒளி இருந்தது என்பதே போதுமானது. ஏனெனில், ஒளி என்பது இருளோடு போராடி வெல்ல வேண்டிய ஒன்றல்ல ஒளி வந்தாலே இருள் விலகிவிடும். எனவே அதைத் தனியாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை
ஆனால் இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை என்பதை மீண்டும் சொல்வதன் மூலம், புதிய செய்தியைச் சொல்லவில்லை; மாறாக, முதல் வாக்கியத்தில் உள்ள உண்மையை உறுதி செய்கிறது.
வெற்றியின் முழுமை உறுதிப்படுத்தப்படுகிறது.
ஒளி வந்தது – ஆரம்பம்;
இருள் வெற்றி கொள்ளவில்லை – நிறைவு.
இருள் என்பது பயம், வெறுப்பு, மறுப்பு
ஒளி என்பது தேவனின் அன்பும் சத்தியமும்
“இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை” என்ற வாக்கியம், மனிதன் பயப்படுகிறான் என்பதாலேயே, விவிலியம் அவனுக்குப் புரியும் மொழியில் சொல்கிறது: “ஒளி வந்துவிட்டது; கவலைப்படாதே, இருள் இனி ஆட்சி செய்ய முடியாது.” இது நம்பிக்கைக்கான மொழி.
மதலேன் மரியா கல்லறையில் கண்ட துயரம் ஆனந்தம் இரு நிலைகளையும் காட்டியது போல இயேசு வாழ்க்கை முழுவதும், ஒளியும் இருளும் ஒன்றோடொன்று எதிரே வந்ததை. பார்க்கப்போகிறோம்.

அதைத்தான் இந்த இரட்டை சொற்கள் குறிக்கின்றன.
இயேசு பிறந்தபோது ஒளி வந்தது. ஆனால் உடனே ஏரோதின் கொலை வடிவில் இருளும் வந்தது—
இயேசு ஆலயத்தில் கற்றுக் கொடுத்தபோது ஒளி பிரகாசித்தது.
ஆனால் சிலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை அது இருள்.
இயேசு நோயாளிகளைக் குணப்படுத்தினார். அது ஒளி.
ஆனால் சிலர் அவரைக் குற்றம் சாட்டினர் அது இருள்.
சிலுவையில் இருள் மிக ஆழமானதாகத் தோன்றியது.
வேதனை, அவமானம், மரணம் அனைத்தும் இருள் போல இருந்தது.
ஆனால் மூன்றாம் நாளில், உயிர்த்தெழுதல் நிகழ்ந்தது அதுவே பேரொளி.
இந்த இரட்டைச் சொல்லாட்சி, விசுவாசம் எப்படி செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது: முழு வெளிச்சம் கிடைத்த பிறகு நடப்பது விசுவாசம் அல்ல; இருள் இன்னும் விலகாத போதும் கடவுளை நோக்கி நகர்வதே உண்மையான விசுவாசம்.
ஆயன் குரலைக் கேட்போம் உணருவோம். உள்ளம் உருகுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது