அமைதி

அருட்திரு தந்தை திவாகர் க.ச. பங்கு தந்தை பாத்திமா ஆலயம் கோயம்புத்தூர்.

இன்று அதிகம் தேடப்படுவது அமைதி என்பதை நாம் அறிவோம்.
இன்று பேசப்படுகின்ற எத்தனையோ விதமான மாசுகளில் சப்த-மாசும் (Sonic Pollution) ஒன்றாகும். அநேகமாக சப்தமில்லாத நேரமும் இடமும் இல்லாமல் போய்விட்டது. சப்தமற்ற நிலையை அஞ்சி வெறுக்கும் நிலை நிலவுகிறது. இந்த சூழலில் அமைதி என்பது சப்தமில்லாமையாக என்று நினைக்கப்படுகிறது. போரினால் சிதைந்துக் கொண்டிருக்கும்; சூழலில் அமைதி என்பது போரற்ற நிலையாகக் கருதப்படுகிறது.  இதில் முரண்பாடு என்னவென்றால்அமைதியை போர் கொண்டு நிலைநாட்டப்போவதாக நினைத்து போர் தளவாடங்களை வாங்கி குவிப்பதற்காக கோடிக் கோடியாக பணத்தைக் கொட்டுவதுதான். இரண்டாம் உலக யுத்தம் தொடுக்கப்பட்டதற்கு காரணம் யுத்தம் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக என்பது சொல்லப்படாத ஒரு உண்மை. ஆனால் இரண்டாம் உலக யுத்தம் முடிந்தபின் இதுவரை சுமார் 150 போர்கள் உலகமெங்கும் நடந்தேறி இருக்கின்றன.

ஒரு நாட்டின் எல்லையில் போரில்லை என்றால் அந்த நாடு அமைதியாக இருக்கிறது என்று சொல்லும் நிலை இன்று இல்லை. இன்று எல்லைத்தாண்டி எதிரிகளை எதிர்கொண்டு போரிடுவதைவிட உள் நாட்டுக்குள்ளாக தீவிரவாத வன்முறை சம்பவங்களை சமாளிக்கவேண்டிய நிலை வந்துவிட்டது. இதற்கெல்லாம் ஒரு காரணம் சமாதானமும்ää அமைதியும் எங்கிருந்தோ வருவதாக நாம் யூகித்துக்கொள்வதாகும். அமைதியின்மையின் வேர்கள் நம்மை தவிர வேரிடத்திலோ, வேரொருவரிலோ இருப்பதாக நினைத்து அவற்றை சரி செய்ய முயற்சிப்பதே நாம் எல்லோரும் தேடும் அமைதி இன்னும் நமக்கு கிட்டாமல் தூரமாகிக்கொண்டே போகிறது.

அன்னை தெரேசாளின் கணிப்பில், ‘உலகத்தில் காணப்படும் அமைதி குழைவு குடும்பங்களில் வேறு கொண்டிருக்கின்றது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய தரமான நேரத்தைக் கொடுப்பதில்லை. பிள்ளைகளும் தங்கள் பெற்றோரிடமிருந்து அஞ்சி வெறுத்து ஒதுங்குகிறார்கள்.’ ‘அமைதியின் மறுபெயர் நீதி’ என்று ஆஸ்கர் ரொமேரோ என்ற எல் சல்வாதோரில் சுட்டுக் கொல்லப்பட்ட பேராயர் கூறுகிறார். நீதி என்பது ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவர் தகுதிக்கேற்ற பங்களிப்பு அளிப்பதையும், ஒவ்வொருவருக்கும் அவரவர் நியாயமான தேவைகளுக்கேற்ப வளங்கள் பகிர்தளிக்கப்படு;தலையும் உள்ளடக்கிய ஒன்றாகும். இந்த நீதி பொருள்களை சார்ந்தவற்றில் மட்டும் நின்றுவிடாது உள்ள, உடல், உணர்வு, ஆன்மீகத் தேவைகளையும். உள்ளடக்குவதாக இருந்திடவேண்டும்.

வன்முறையிலும் தீவிரவாதிலும் சமூக குற்றங்களிலும் ஈடுபட்ட இளைஞர்களை விசாரித்ததில் கிடைத்த ஒரு முக்கிய தகவல், அவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோராலோ, சிறப்பான நபர்களாலோ வஞ்சிக்கப்பட்டு அடிப்படையான பாசம் தரப்படாமல் விடப்பட்டவர்கள் என்பதாகும். அவர்கள் ஏதே ஒருவிதத்தில் அநீதிக்கு ஆளாகியவர்கள். இன்னும் சிலர் ஆயிரமிருந்து வசதிகள் இருந்தும் No Peace of Mind என்று புலம்புபவர்கள் தங்களுக்குதானே கொடுத்துக் கொள்ள வேண்டிய நியாயமான ‘தன்அன்பு’ காத்துக்கொள்ளவேண்டிய ‘உள சமநிலை’ தங்கள் அகத்தோடு வைத்துக்கொள்ளவேண்டிய போதுமான ‘அகத்தொடர்பு’ கொண்டில்லாததனாலே அமைதி இழந்து தவிக்கின்றனர்.

peace to all இயேசு பிரானின் சீடர்களில் ஒருவர் யாக்கோபு. அவர் சண்டை சச்சரவுகளின் காரணம் நம்முள் இருக்கிறது என்கிறார்:
உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் … சண்டை சச்சரவுகள் உண்டாக்குகிறீர்கள்.” (யாக் 4:1,2).

நாமும் நமது உலகமும் நாடித்தேடும் உண்மைiயான அமைதி நமது அகத்தில் உள்ள அகங்காரத்தையும் காமத்தையும் இச்சையையும் அடக்கி ஆழ்வதினால் மட்டுமே கிடைக்கும் என்பதைத் தான் கிருஷ்ணபரமாத்மாவும் குருஷேத்திரத்தில் போருக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு சொல்வது நமக்கு தெரியுமன்றோ! இயேசுபிரான் ‘அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படுவர்’ என்கிறார். இத்தகைய அமைதியை நம்முள் கண்டு பிறரிடத்தில் விதைத்து கடவுளின் மக்கள் ஆவோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது

தமிழ்க் கத்தோலிக்க இணையத்தளம்-அன்பின்மடல்
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.

https://anbinmadal.org | 2002-2025 | Email ID: anbinmadal at gmail.com