விவிலியம் தொடங்கி வைத்த ஒரு கேள்வி

அ.அல்போன்ஸ் - பெங்களுர்

மற்ற எத்தனையோ நூல்கள் இருந்தும் விவிலியம் பிரபலமாக இருப்பதற்கு காரணம் என்ன? அது நம் வாழ்க்கையோடு ஒப்பிடக்கூடிய அளவில் ஒன்றுபட்டதன்மை தான் இவ்வுலகில் பலநூறு மைல்கள் தாண்டினாலே மொழிகள் மாறும்.ஆனால் இயேசு என்ற ஒற்றை மந்திரம் உலகில் எல்லா இடங்களிலும் வாழும் மனிதர்களுக்கு புரியும். மொழியில் விலகி செல்லும் நாடுகளை, தேசங்களை ஒருகட்டுக்கள் கொண்டு வருவது விவிலியமாகும்.

சிங்காரவனத்தின் உன்னதங்களோடு தொடக்கநூல் அழகாக தொடங்குகிறது. ஏவாள் வனமுழுவதும் சுற்றி வந்தவள். விதி காட்டிய வழியில் பாம்பின் சொல் கேட்டு பழத்தை பறித்து தன் துணையான ஆதாமிற்கு கொடுத்தாள். பழத்தை தின்ற ஆதாம் பாவத்தை கொண்டான். திசை தெரியாத ஆசை இறுதியில்… இருவரும் நிர்வாணத்தை உணர்ந்தனர்… ஓய்வெடுத்த கடவுள் அங்கே வந்தார். அவர் வருகையை அறிந்து ஆதிபெற்றோர். மரங்களுக்கு இடையில் ஒளிந்து கொண்டனர்… கடவுள் ‘ஆதாமே நீ எங்கேயிருக்கிறாய்?" என்று கேட்டார்.

ஆதாம் தன்னுணர்வு இழந்து மரத்தில் மறைந்து இருந்தவன். கடவுளின் குரலுக்கு எழுந்துவரவும் முடியாதவனாகிவிட்டான். ஆண்மையானவன் என்பதில் ஐயம் இல்லை ஆனால் வாய்மையானவனா என்பதே கேள்வி. ஆதாம் சற்றே வழுக்கிவிட்டான் அதனால் கடவுளும் அவனை விலக்கிவைத்தார். ஆதாமே நீ எங்கேயிருக்கிறாய் என்பது அவரை தேடுவதற்க்கான கேள்வி அல்ல அது ஆழம் வாய்ந்தது. பொருள் நிறைந்தது. அது நம் ஒவ்வொருவரையும் பார்த்து கேட்கும் கேள்வி - மையசரடான கேள்வி.

விவிலியம் தொடங்கி வைத்த கேள்விக்கான விடைகளை நாம் தேடவே இல்லை என்பதே பல தலைமுறைகளாக தொடரும் கேள்வி, கேள்வியையும் பதிலையும் சற்றே ஆராய்வோம். தொடக்கநூல் தொடர்ந்து பல ஆகமங்களில் விடை தேடிய பொழுது - இறைவாக்கினர் வந்தனர், மறைவாக்கினர் வந்தனர் மறைந்து போயினர்.

சமுதாயம் அல்லது மனிதகுலம் என்னும் நோக்கும் பொழுது ஒரு மனிதன் நடந்துகொள்ள வேண்டிய முறை அவன் ஒரு முன் உதாரணமாக பின் பற்ற வேண்டிய அறநெறிகள் என தொன்று தொட்டு பாரம்பரியமாக விவிலிய நீதிமொழிகள், பழமொழிகள், சங்கீதங்கள் என எழுத்துபூர்வமாக பதிவு செய்யப் பட்டுள்ளதுமான வழிகாட்டு நெறிகள்; பழைய ஏற்பாடு முழுவதும் பரவிகிடக்கின்றன.

கேள்விக்கான பதில் “நீ எங்கேயிருக்கின்றாய்?” அதை காணவில்லை.

“நீ எங்கேயிருக்கின்றாய்? ” என்ற கேள்விக்கு பதிலாக மட்டுமல்ல அதற்கு விளக்கவுரையாக வாழ்ந்து காட்டியவர் இயேசு சரி இயேசு எங்கேயிருக்கின்றார்? அவரே கூறுவார் தந்தை என்னிலும் நான் தந்தையினுள்ளும் (அரு 11:38,14:11) இருக்கிறேன். என்னுள் இருந்து கொண்டு செயலாற்றுவது என் தந்தையே (அரு14:11) என்பார்.

இயேசு தந்தைக்குள்ளும் தனக்குள் தந்தையும் வாழ்வதை கூறுகின்றார். நாம் எங்கே இருக்கின்றோம் ஒருவன் எனக்கு அன்பு செய்தால் நாங்களும் அவனிடம் வந்து குடிகொள்வோம். இயேசுவின் சீடரான பவுலடிகளாரும் தெள்ள தெளிவாக அனுபவமாக கூறுவார். “எனக்குள் கிறிஸ்து கிறிஸ்துவுக்குள் நான்” கிறிஸ்துவுக்குள் வாழ்ந்தால் புதியதொரு படைப்பு தோன்றுகிறது. (2.கொரி 5:17) இந்த உறவை அதாவது கிறிஸ்துவுக்குள் நான், எனக்குள் கிறிஸ்து என்ற உறவை உவமைகளின் வாயிலாக கூறுகின்றார்.

மனிதர்களான நம்மை பூமியின் உப்பு - உலகின் ஒளி என்றும் கூறுகின்றார்.
உப்பானது நீரில் கரைந்துவிடும் தன்மையது மனிதர்களான நம் விவிலியத்தில் தனித்துவம் என்ற ஒன்று இல்லை உப்பு கடலில் ஆழந்தால் என்ன ஆகும்? அதனுடைய தனித்துவத்தை இழந்து கடல் எது உப்பு எது என்று பிரித்து காணமுடியாதபடி ஒன்றாகிவிடும். நாம் நம்மை இழந்து கிறிஸ்து என்னும் கடலில் மூழ்கிப்போவேம். வாழ்வது நானல்ல கிறிஸ்துவாகும்.

பூமியின் உப்பு கிறிஸ்துவுக்குள் நாம் என்பதாகும். உலகின் ஒளி என்றபொழுது உலகில் வாழும் நாம், நமக்குள் ஒளியாக வாழ்வது கிறிஸ்துவாகும் என்று உரத்தகுரலில் சொல்லலாம். உலகின் ஒளி எனக்குள் கிறிஸ்துவாகும். ‘நீ எங்கேயிருக்கிறாய்?' கேள்வியை கேட்டவரின் உள்ளேயே நாம் வாழ்கிறோம். கடவுள் அரசில் இருக்கிறோம். அதை உணர்வதற்கு நமக்கு தேவை. அன்பு ஒன்றுதான் அந்த அன்பின் வழியாக பெறுகின்ற அனுபவம் ஒவ்வொன்றும் ஒரு உணர்ச்சி பொக்கிஷம். உள்ளத்தை அன்பின் களஞ்சியமாக செய்து கொள்வதுதான் பூரணமாக வாழ்வதற்கு வழி.

நான் என் தந்தையினுள்ளும்
நீங்கள் என்னுள்ளும்
நான் உங்களுள்ளும் இருப்பதை
அந்நாளில் அறிந்து கொள்ளீர்கள் (அரு 14:20)    

ஆதி பெற்றோர் பெற்ற சாபத்தின் கடுமையே பாவநீக்கத்துக்கு படி ஆகிறது தவறுகள் தண்டனைக் குரியவை. தண்டனைக்குபின் மன்னிப்புக்குரியவை என்ற உயர் மானுட பண்பு கிறிஸ்துவின் பால் அழுத்தமாக தெரிகிறது. இது ஏதேன் தோட்டத்தில் அறியும் செய்தி.
அன்பின் வழியாக கிறிஸ்துவுக்குள்ளும் தந்தைக்குள்ளும் வாழமுடியும் என்பது கல்வாரி மலையின் செய்தி.
வாழுவோம் - கிறிஸ்துவோடு - கிறிஸ்துவுடன் - கிறிஸ்துவுக்குள்……….


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது