இயேசுவின் இனிய நாமத்தில் என் நெஞ்சுக்கினிய உள்ளங்களே! வணக்கம்!

புத்தாண்டு பிறந்து விட்டது! இந்தப் புத்தாண்டில் நாம் மிகவும் எதிர்பார்ப்புடன் ஒரு நல்ல, வெளிச்சமான, வெற்றிகரமான, சுபிட்சமான ஆண்டு நம் வாழ்வில் உருவாகும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆம், இது உண்மையே! ஆனால், இந்த நிலை நம் வாழ்வில் கால்பதிய வைக்க வேண்டுமென்றால், இவை எல்லாம் நம் கையில்தான் உள்ளது. நமது நம்பிக்கையே இதற்கு உயிர்நாடி!

இறைவன், இறைமகன், தூய ஆவியார் நம்மோடு இருக்கிறார்கள் என்று உணர்ந்தால், நமது எதிர்காலம் சிறப்பாக அமையும். ஏனென்றால் நாம் நம்பும் கடவுளின் பெயர் இம்மானுவேல்! அதாவது 'கடவுள் நம்மோடு' என்பது அர்த்தமாகும். 'இயேசு நம்மோடு இருக்கின்றார்' என்று நம்புவதே நமது வாழ்வுக்கு வெற்றி தரும். இதை நிரூபிக்க இதோ ஒரு நிகழ்ச்சி:

ஒருமுறை ஓர் அமெரிக்கக் குடிமகன் ஸ்வீடன் நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்குப் பேருந்து ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தார். பேருந்தில் அருகில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து, "உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளைவிட அமெரிக்காதான் மக்களாட்சியில் தலைசிறந்த நாடாகத் திகழ்கின்றது. எந்த ஓர் எளிய அமெரிக்கக் குடிமகனும், எவ்விதச் சிரமமுமின்றி அமெரிக்க ஜனாதிபதி குடியிருக்கும் வெள்ளை மாளிகைக்குப் போகலாம். அது மட்டுமன்றி, ஜனாதிபதியையே மிக எளிதில் நேரிலேயே பார்க்கலாம்" என்றார்.

அதைக் கேட்ட ஸ்வீடன் நாட்டுப் பயணி, "நீர் கூறுவது உண்மை என்றால், அமெரிக்காவைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக ஸ்வீடன் நாட்டில்தான் மக்களாட்சி மிகச் சிறப்பாக நடக்கிறது என்று கூற வேண்டும். காரணம், ஸ்வீடன் நாட்டில்தான் ஒரு குடிமகன் அந்நாட்டு அரசனுடனேயே சமமாக அமர்ந்து கொண்டு ஒரு பேருந்தில் பயணம் செய்ய இயலும்" என்றார்.

இதைக் கேட்ட பின்னர்தான் தன்னுடன் பயணம் செய்து கொண்டிருந்த பயணி அந்நாட்டு மன்னர் என்பதை அமெரிக்கக் குடிமகன் அறிந்து கொண்டார்.

கிறிஸ்து அரசருக்குள்ளான பெயர்களில் ஒன்று 'இம்மானுவேல்' என்பது. இம்மானுவேல் என்றால் 'நம்மோடு கடவுள்' என்று பொருள். நம் அரசர் இயேசு எந்நாளும், எல்லா இடங்களிலும் இருக்கின்றார். ஆகவே, நம் வாழ்நாள் முழுவதும் நம்மோடு வாழ்கின்றார்! நம்மோடு இருக்கின்றார்!

கடவுள் நம்மோடு இருக்கும்பொழுது நமது வாழ்வில் தோல்வியே இருக்காது. கடவுளுடைய மதிப்பீட்டின்படி என்றும் நம் வாழ்வில் வெற்றிக்கொடிதான் பறக்கும்.

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்" என்று உறுதி மொழியைக் கொடுத்துச் சென்றிருக்கிறார் இயேசு. இறையாசீர் என்றும் உங்களோடு இருப்பதாக!

எல்லோருக்கும் எனது உளம் கனிந்த, மகிழ்ச்சிப் பொங்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

- தந்தை தம்புராஜ் சே.ச.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது