தமிழ் வேர்ச்சொல் அறிஞர், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்.

திரு மதுரை இளங்கவின்

lent2018 இலங்கை தமிழுக்கும் கத்தோலிக்க மதத்திற்கும் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவரும், பன்மொழிப் புலவருமான - தமிழ் வேர்ச்சொல் அறிஞர், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர். 1875ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாயைச் சேர்ந்த இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை -தங்கமுத்து தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எட்டாவது பரராசசேகரனின் பரம்பரையில் சைவக் குடும்பத்தில் பிறந்தவர் சுவாமி ஞானப்பிரகாசர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வைத்தியலிங்கம்.

ஐந்து வயதிருக்கும் போதே இவர் தந்தை இறந்துவிட்டதால், அவர் தாயார், கத்தோலிக்கரான தம்பிமுத்து என்பவரை மறுமணம் செய்துகொள்ள மதம் மாறினார். அப்போது மகனும் கத்தோலிக்க மதத்தில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு வைக்கப்பட்ட பெயர்தான் ஞானப்பிரகாசர் என்பது!

இவர், திருமறை குருவாக விருப்பங் கொண்டார். 1893 இல் தொடர்வண்டித் துறையில் எழுதுவினைஞர் தேர்வில் முதலாவதாகத் தேறி கடிகமுகவயிலும் பின்னர் கொழும்பிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1895 ஆம் ஆண்டு இறைப்பணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ். குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். 01.12.1901 அன்று குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஞானப்பிரகாசர் சிறு வயதிலேயே இலக்கணப் பிழையின்றி விரைவாகக் கவிதை புனையும் ஆற்றல் கைவரப் பெற்றார். வயலின், மத்தளம் போன்ற வற்றை வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார்.

இவருடைய வளர்ப்புத் தந்தையான தம்பிமுத்துவிடம், தமிழ்ச் செய்யுள், தமிழக வரலாறு, தமிழ் இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார்; பின்னாளில் தான் விரும்பியபடி திருமறைப் பணியாளராகப் பயின்று குருவானார். ஞானப்பிரகாசர் கால்டுவெல்லின் திராவிட மொழி ஒப்பிலக்கணம், கதிரைவேலரின் தமிழ் அகராதி ஆகியவற்றை விரும்பிப் படித்து, வேர்ச்சொல் ஆய்வில் ஈடுபட்டார். தமிழே உலகின் உயர்தனிச் செம்மொழி என்று பதினெட்டுச் சான்றுகளுடன் உறுதிபட எடுத்துரைத்த இவர், செந்தமிழ்ச் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி தந்தார். தமிழ் அமைப்புற்றது எவ்வாறு, தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகள், தமிழ் வேர்ச்சொல் ஒப்பியல் பேரகராதி ஆகிய மூன்று அரிய நூல்களைப் படைத்தார். இவரின் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டே தேவநேயப்பாவாணர் சொற்பிறப்பு ஒப்பியல் அகரமுதலியை உருவாக்கப் பாடுபட்டார் என்று கூறுவர்.

நல்லூர் ஞானப்பிரகாசர் தனது சமயப் பணியை ஆற்றும்போது, தமிழ்ப் பணியையும் தொடர்ந்து ஆற்றிவந்தார். கிறிஸ்தவராக இருந்துகொண்டு இவர் ஆற்றும் தமிழ்த் தொண்டினை இந்து, இஸ்லாம் சகோதரர்கள் பெரிதும் மதித்தனர். இந்து சமய மடாதிபதிகள் ஞானப்பிரகாசருடன் தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் பற்றி அள வளாவிப் பெரிதும் இன்புற்றனர். பிற சமயத்தாரின் பேரன்பைப் பெற்ற நல்லூர் ஞானப்பிரகாசர் மென்மேலும் தமிழ் ஆய்வில் தனது கவனத்தைச் செலுத்தி, வேர்ச்சொல் ஆய்வில் முழுமையாக ஈடுபட்டார். ஞானப் பிரகாசர், சிந்து சமவெளி நாகர கம் தமிழரின் நாகரிகம் என்ற ஈராஸ் அடிகளாருடன் இணைந்து, சிந்து சமவெளி நாகரிகத்தால் தமிழரின் பண்பாடு சிறந்துள்ளதையும், தமிழ் மொழியின் தொன்மையையும் தெளிவுபடுத்தினார்.

சிங்கள மொழியில் திராவிட மொழிக் கூறுகளை இவர் எடுத்து விளக்கிய போது, இவருக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இவரின் கருத்தை பிற நாட்டு மொழியறிஞர்கள் ஏற்று ஆதரவு தெரிவித்தனர். இலங்கை அரசு இவரை வரலாற்றுச் சுவடிகளின் ஆய்வுக்குழுவில் நியமித்து கெளரவித்தது. இவரை ஜெர்மன் மொழியறிஞர்கள் தங்கள் நாட்டிற்கு அழைத்து, தமிழின் பழைமையையும் பெருமையையும் அறிந்து கொண்டு, இவரைப் பெரிதும் பாராட்டினர்.

ஜெர்மன் அரசு இவரது உருவம் பொறித்த அஞ்சல்தலை (முத்திரை) வெளியிட்டு பெருமை செய்தது. குடும்ப வாசகம், அமலோற்பவஇராக்கினி தூதன் ஆகிய இரு இதழ்களுக்கு இவர் ஆசிரியராக இருந்தார். திங்கள் இதழ்களான இவை தவிர, சத்தியவேதப்பாதுகாவலன்' என்னும் வார இதழுக்கும் ஆசிரியராய் இருந்தார். இவற்றில் திருமறைக் கோட்பாடுகளையும், இறையியல் கோட்பாடுகளையும், மக்களின் வாழ்க்கையோடு இயைந்து விளக்கி வந்தார். ஞானப்பிரகாசர், தமிழரின் தொன்மை வரலாறும் சமயமும், யாழ்ப்பாண வரலாற்று ஆய்வு, கத்தோலிக்க திருச்சபையும் அதன் போதகர்களும், போர்த்துக்கீசியர் - ஒல்லாந்தர் கால யாழ்ப்பாண வரலாறு, யாழ்ப்பாண அரசர்கள் ஆகிய அரிய நூல்களைப் படைத்தார்.

இவர் படைத்த செகாசசேகரன் புதினமும், சுப்பிரமணிய ஆராய்ச்சி, பிள்ளையார் ஆராய்ச்சி ஆகிய நூல்களும் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. பன்மொழிப் புலவரான நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசருடைய தமிழ்த் தொண்டினைப் பாராட்டித் திருப்பனந்தாள் மடம் அவரை கெளரவித்து சன்மானமும் வழங்கியிருக்கிறது. இவர் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட தேவாலயங்களைக் கட்டுவித்துள்ளார். மேலும், பல வாசக சாலைகளையும் ஏற்படுத்தியுள்ளார். 1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி மானிப்பாய் மருத்துவனையில் இவர் காலமானார். இவ்வேர்ச் சொல் தமிழறிஞரை அவரது பிறந்த நாளான ஆகஸ்ட்30-இல்நினைவுகூர்ந்து போற்றுவோம்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது