ஆறுதலின் செய்தியை அறிவிப்பவர்களாக

அருட்தந்தை அந்தோனிராஜ் - பாளையங்கோட்டை

Message of Comfort

டி.எல். மூடி (D.L.Moodi) என்ற ஒரு மறைபோதகர் இருந்தார். அவர் எங்கெல்லாம் நற்செய்தியைப் போதிக்கச் செல்கிறாரோ, அங்கெல்லாம் இறைவன் மிகவும் கண்டிப்பானவர், தவறு செய்பவர்களைத் தண்டிப்பவர் என்றே போதித்து வந்தார்.

ஒருநாள் அவர் தன்னுடைய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், ஊருக்குப் புதிதாக ‘மூர்ஹவுஸ்’ என்ற ஒரு போதகர் வந்திருப்பதாகவும், அவரது போதனையைக் கேட்க மக்கள்கூட்டம் அலைமோதுகிறது என்றும் சொன்னார். அதற்கு டி.எல். மூடி, “மக்கள்கூட்டம் அலைமோதும் அளவுக்கு அப்படி என்னதான் அவரது போதனையில் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்” என்று சொல்லி அவரது நற்செய்திக்கூட்டம் நடக்கக்கூடிய இடத்திற்குச் சென்றார்.

கூட்டம் தொடங்கியது. மூர்ஹவுஸ் மக்களுக்கு முன்பாக வந்து இறைவார்த்தையை போதிக்கத் தொடங்கினார். அவர் போதித்த பகுதி கடவுளின் அன்பைச் சொல்லும் யோவான் 3:16. அவர் மக்களைப் பார்த்துச் சொன்னார், “இறைவனின் அன்பை எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும், அதை முழுமையாக விளக்கவிட முடியாது. காரணம், இறைவனின் அன்பு பரந்து விரிந்ததாக இருக்கின்றது. ஒருவேளை யாக்கோபு கண்ட கனவில் வரும் விண்ணகத்திற்கு ஏறிச்செல்லக்கூடிய ஏணி எனக்குக் கிடைத்தால், நான் அந்த ஏணியில் விண்ணகத்திற்கு ஏறிச்சென்று, அங்கே இருக்கும் கபிரியேல் தூதரிடம் இறைவனின் அன்பைப்பற்றி முழுமையாக எடுத்துரைக்கச் சொல்வேன்” என்று போதிக்கலானார்.

அவரது போதனையைக் கேட்ட மக்கள்கூட்டம் ‘கடவுள் தங்களை இந்தளவுக்கு அன்பு செய்கிறாரே’ என்று கண்ணீர்விட்டு அழுதது. அப்போதுதான் டி.எல். மூடி கடவுளின் நீதியை, தண்டனைத் தீர்ப்பைக் குறித்துப் போதிப்பதைவிட அவரது அன்பைக் குறித்துப் போதிப்பது எவ்வளவு உயர்ந்தது என்பதை உணர்ந்துகொண்டு, அதனையே மக்களுக்குப் போதித்துத் தொடங்கினார்.

இறைவனின் தண்டனைத்தீர்ப்பைக் குறித்து போதிப்பதைவிட, அவரது அன்பை, ஆறுதல் செய்தியைக் குறித்துப் போதித்தால் அது எல்லா மக்களையும் சென்றடையும், எல்லா மக்களுக்கும் வாழ்வளிக்கும் என்பதை இந்நிகழ்வானது நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாள் வாசகங்கள் ‘இறைவனின் அறுதல் செய்தியைப் போதிக்க’ அழைப்புத் தருகிறது. திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் நற்செய்திப் பணியாளர்கள்தான். ஆகையால், இறைவனின் அழைப்பை உணர்ந்து, அவரது ஆறுதலிக்கும் செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவேண்டும் என்பதே இன்றைய வாசகங்களின் சாரம்சமாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எழுபத்தி இரண்டு சீடர்களைப் பணிக்கு அனுப்புகிறார். அப்படி அனுப்புகிறபோது அவர் சொல்லக்கூடிய அறிவுரையாவது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.. நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக! என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்..” என்கிறார் (லூக் 10: 1-6).

இயேசுவின் பார்வையில் எது அமைதி? அல்லது அமைதியைத் தரும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்க்கும்போது இன்றைய முதல் வாசகத்தில் அதற்கான பதில் காணக்கிடக்கிறது. எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் இஸ்ரயேல் மக்களைப் பார்த்துக் கூறுகின்றார், “ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்” என்கிறார் ஆண்டவராகிய கடவுள்.

ஆக, ஒரு தாய் தன்னுடைய பிள்ளையைத் தேற்றுவதுபோல் இறைவன் நம்மைத் தேற்றுவார் என்பதுதான் அறுதல் தரும் செய்தி. இச்செய்தியை இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும், நாம் சந்திக்கும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் எண்ணமாக இருக்கிறது. அதுவே ஒவ்வொரு சீடர்களின் கடமையாக இருக்கின்றது.

இன்றைக்கு தேவையில் இருக்கின்ற மக்களுக்கு பொருளைத் தர மக்கள் இருக்கிறார்கள்; தங்களிடம் இருக்கும் பணத்தைத் தருவதற்குக் கூட மக்கள் இருக்கிறார்கள். ஆனால் குடும்பத்தால்/உறவுகளால் கைவிடப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசுவதற்கு ஆட்கள் இல்லை. அப்படிப்பட்ட ஆறுதல் தரும் செய்தியை வழங்குவதற்குத்தான் இயேசுவின் சீடர்களாகிய நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

பிரான்ஸ் நாட்டில் ஜரீன் கான் என்றொரு இஸ்லாமியப் பெண்மணி இருந்தாள். அவள் ஒரு துப்புரவுப் பணியாளர். கிறிஸ்துவின் போதனையால் ஈர்க்கப்பட்டு, கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவள். அதன்பொருட்டு ஜரீன் கான் என்ற தன்னுடைய பெயரை சோபியா என்று மாற்றிக்கொண்டாள்

கிறஸ்தவ மதத்திக்கு மாறிய பிறகு அவர், தான் துப்புரவுப் பணிசெய்யும் இடங்களிலெல்லாம் கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை அறிவித்து வந்தார். அத்தோடு மட்டுமல்லாமல் தன்னாலான உதவிகளையும் ஏழை, எளிய மக்களுக்குச் செய்துவந்தார்.

ஒருநாள் இவர் செய்துவந்த பணிகளைப் பிடிக்காத ஒருவர் அவரிடம், நீங்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கிறீர்கள் என்பதற்காக போயும், போயும் ஒரு மரச் சிலைக்கு முன்பாகவா நற்செய்தி அறிவிக்கவேண்டும்” என்று ஏளனமாகப் பேசினார். ஏனென்றால் சோபியாவிற்கு சரியாகத் கண்பார்வை தெரியாது. அதனால்தான் சோபியா, ஒருமனிதர் தனக்கு முன்பாக இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, அவருக்கு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்திருக்கிறார். அதைப் பார்த்துதான் அந்த மனிதர், இவர் மரசிலைக்கு நற்செய்தி அறிவிப்பதாக ஏளனமாகப் பேசினார். அம்மனிதர் ஒரு கிறிஸ்தவரும்கூட.

அந்த மனிதரின் பேச்சுக்கு சோபியா இவ்வாறு பதிலளித்தார். “கிறிஸ்துவின் போதனையைக் கேட்டுவிட்டு, மரம்போல் யாருக்குமே நற்செய்தி அறிவிக்காமல் இருக்கின்ற உங்களைக் காட்டிலும், மரசிலைக்கு நற்செய்தி அறிவிக்கின்ற நான் எவ்வளவோ மேல்” என்று ஒரு போடு போட்டார். கேள்வி கேட்டவர் வெட்கித் தலைகுனிந்து நின்றார்.

நாம் எந்த நிலையில் இருந்தாலும் கிறிஸ்துவைப் பற்றிய/ இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்றதொரு செய்தியை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது. ஆக, நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவை பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவரது அன்புக்கு சான்று பகர்ந்து வாழவேண்டும்.

அடுத்ததாக, கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்று சொன்னால், அதில் துன்பங்கள் இல்லாமல் இல்லை. நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்பும்போது, “ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவது போன்று உங்களை நான் அனுப்புகிறேன்” என்கிறார். ஓநாய்கள் என்கிறபோது பணிவாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை ஆண்டவர் இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

கடலில் அலைகள் இருப்பதுபோன்று கடவுளின் பணியைச் செய்யும் அவருடைய மக்களுக்கு துன்பங்கள், சவால்கள், வேதனைகள் இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், அவர் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததனால் உடலில் ஏற்பட்ட தழும்புகளைக் குறித்துப் பேசுவார். ஆக, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும்போது நமக்கு பல்வேறு இடர்களும், துன்பங்களும் வரலாம். அவற்றைக் கண்டு பயப்படாமல், தொடர்ந்து இறைப்பணியாற்ற வேண்டும் என்பதுதான் நமக்கு முன்பாக இருக்கும் சவாலாக இருக்கின்றது.

ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள தன்சானியா நாட்டில் Tanganyika என்ற மிகப்பெரிய ஒரு ஆறு இருக்கிறது. அந்த ஆற்றின் கரையோரத்தில் புகழ்பெற்ற தேவாலயம் இருக்கிறது. அந்த தேவாலயத்தின் வாசகமேடையில் ஜேம்ஸ் லாசன் (James lawson) என்ற குருவானவரின் வாழ்க்கைக் குறிப்பானது அடங்கி இருக்கிறது.

அவரது வாழ்க்கை வரலாறாவது; ஜேம்ஸ் லாசன் என்பவர் கிழக்காசிய நாடுகளிலிருந்து நற்செய்திப்பணி செய்வதற்காக தன்சானியாவிற்கு வந்த மிகவும் துடிப்புள்ள ஒரு இளங்குருவானவர். அவர் நினைத்தார், இங்கே நற்செய்தி அறிவிப்புப் பணி செய்யவேண்டுமென்றால், முதலில் இவர்களுடைய மொழியை, இவர்களுடைய கலாச்சாரத்தை, பண்பாட்டைக் கற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நற்செய்திப் பணியை மிகவும் முனைப்போடு செயல்படமுடியும் என்று அவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு என அத்தனையும் கற்றுக்கொண்டார்.

கற்றுக்கொண்ட நேரம் போக மற்ற நேரங்களில், அவர் ஏழை, எளியவருக்கு உதவுவது, நோயாளிகளைச் சந்திப்பது, அவர்களோடு ஜெபிப்பது என்று தண்ணயே ஈடுபடுத்திக்கொண்டார்.

இப்படி நன்றாகச் சென்றுகொண்டிருந்த அவருடைய வாழ்வில் திடிரென்று புயலடித்தது. ஆம், அவரைக் கொடிய நோய் ஒன்று தாக்க, அவர் படுத்தபடுக்கையாகி இறந்துபோனார். இதை அறிந்த மக்கள் யாவரும் கண்ணீர்விட்டு அழுதார்கள். தங்களுக்காகப் பணிசெய்ய வந்த இந்தக் ரு இப்படிச் சிறுவயதிலே இறந்துபோய்விட்டாரே என்று புலம்பினார்கள்.

நமக்கும் இந்தச் செய்தி சற்று வேதனையாகத் தான் இருக்கும். ஆனால் ஜேம்ஸ் லாசன் என்ற அந்த குருவானவரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய குறிப்புக்குக் கீழே இப்படியாக ஒரு வசனம் பொறிக்கப்பட்டிருக்கிறது. “என்ன செய்தோம் என்பது முக்கியமல்ல, மாறாக் எதற்காக முனைப்போடு செயல்பட்டோமோ அது முக்கியம்” (Not What I did, But I strove to do). இதுதான் கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஆறுதல் தருவதாக இருக்கின்றது.

ஆம், கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் நாம் என்ன செய்தோம் என்பது முக்கியம் கிடையாது. எதை நோக்கி பயணப்பட்டோம் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது. சீடத்துவப் பணியில் நமக்குத் துன்பங்கள், சோதனைகள், சவால்கள் என எல்லா வரலாம். ஆனாலும் இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.

ஆகவே, இயேசுவின் சீடர்களாக, அவருடைய நற்செய்திப் பணிபுரிய அழைக்கப்பட்டிருக்கும் நாம், அவரது ஆறுதலிக்கும் செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம். நற்செய்திப் பணியில் வரும் துன்பங்களைத் துணிவுடன் தாங்கிக்கொள்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் அருளை, இரக்கத்தை நிறைவாய் பெறுவோம். மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது