தந்தையின் அன்பு

AJS ராஜன். பாலவாக்கம், சென்னை

நடைபாதையில் ஒரு சிறுவன் நின்று கொண்டு இருந்தான். அவன் அணிந்து இருந்த பள்ளிச் சீருடை முதுகில் புத்தகச் சுமையைத் தாங்கிக் கொண்டு, கையில் ஒரு கூடையில் தண்ணீர் பாட்டிலும் டிபன் பெட்டியும் இருந்தது. சந்தேகமே வேண்டாம் அச்சிறுவன் பள்ளிப் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான் என்பது வெளிப்படை.

அச்சமயம் ஒரு வயதானவர் நடைபாதையில் நின்று கொண்டிருந்த சிறுவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். "இந்த வழியாகப் பள்ளிப் பேருந்து வராதே. ஏன் அந்தச் சிறுவன் இங்கு நின்று கொண்டு இருக்கின்றான். தெரியாமல் நிற்கிறானோ?" என நினைத்துக் கொண்டு அவன் அருகில் சென்று " தம்பி! நீ இங்கு ஸ்கூல் பஸ்க்காகக் காத்துக் கொண்டு நிற்கிறே இல்ல? இங்கு ஸ்கூல் பஸ் வராதே" எனச் சொன்னார்.

" தாத்தா இங்கு ஸ்கூல் பஸ் வரும் எனக்குத் தெரியும்"

"இல்லையப்பா. அதோ தெரிகிற ரோடு சந்திப்பில் தான் பஸ் வரும்" எனச் சொல்லிக் கொண்டு கையை நீட்டி இடத்தைக் காண்பித்தார்.

"நோ! நோ!! பஸ் இங்குத் தான் வரும். வேணும்னாத் தாத்தா பாருங்க. சரியாக ஏழரைக்குப் பஸ் இங்கு வரும்."

சிறுவன் சொல்லி முடிப்பதற்குள் பள்ளிப் பேருந்து வந்து நின்றது. சிறுவன் கதவைத் திறந்து உள்ளே சென்று, ஆச்சிரியத்துடன் நின்று கொண்டிருந்த வயதானவரைப் பார்த்து " பை! பை!! தாத்தா ஏன் இந்தப் பஸ் இங்கு வந்து என்னைக் கூட்டிக் கொண்டு போகிறது தெரியுமா? இந்தப் பஸ் டிரைவர் யார் தெரியுமா, இந்தப் பஸ் டிரைவர் எங்க அப்பா தான்" என்றான்.

"அந்த அப்பா யார்?" தன் அன்பைச் செலுத்தி மக்களை நேசிக்கும் பரமபிதா, இறைவன் நம்மீதுக் கொண்டுள்ள அளவற்ற அன்பினாலும், பிரதிப் பலன் பாராது நமக்கு உதவும் இறைவன். நாம் எங்கிருந்தாலும், எந்த நேரத்திலும் எதைக் கேட்டாலும் நமக்கு நன்மை தரக்கூடிய காரியங்களை இறைவன் நம்மைத் தேடி வந்து நேசத்தோடு செய்வார். கடவுளுக்கு மக்கள் மீது அன்புச் செய்யும் மனம் என்றும் குறையாது.

நாம் எப்படி இறைவனுக்கு அன்பு செலுத்தமுடியும்? கடவுளே அன்பு! அன்பே கடவுள்!! நாம் நமது அயலானை நேசிப்பது, ஏழைக்கு உதவி செய்வது மூலம் கடவுளை நாம் நேசிப்பது என்பது சாத்தியமானச் செயலாகும். நீ பிறருக்கு அன்பு செய்வது, இறைவனை அன்பு செய்கிறோம் என்பது வெளிப்படை. ஆகவே நாம் ஒருவரை ஒருவர் நேசிப்போம். எல்லா மக்களும் இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ளோம். ஆகவே அயலானை நேசிப்பது, விரோதியை நேசிப்பது இறைவனை நேசிப்பதற்குச் சமம்.

அன்பே கடவுள்! கடவுளே அன்பு!!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது

தமிழ்க் கத்தோலிக்க இணையத்தளம்-அன்பின்மடல்
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.

https://anbinmadal.org | 2002-2025 | Email ID: anbinmadal at gmail.com