புனித யோசேப்பு ஒரு புதுமைத் தந்தை

கார்டிலியா மேரி
புனித யோசேப்பு

புனித யோசேப்பு யார்? அவருக்கும் இறைமகன் இயேசுவுக்கும் உள்ள உறவு என்ன?

"வளர்த்து ஆளாக்கினால் கூட நான் உங்கள் பிள்ளை இல்லை" என்பது போல் இயேசு எருசலேம் ஆலயத்தில் பேசுகிறார்.

புனித யோசேப்பு ஒரு புதுமைத் தந்தை. தந்தை என்று கூறும் போது மனைவியிடத்தும் பிள்ளைகளிடத்தும் இரத்த உறவு கொண்டவர் என்பது சொல்லாமலேயே தெரியும்.

ஆனால் புனித யோசேப்பின் மனையாள் மரியாள் அவரோடு உடலுறவு கொள்ளாமலேயே கருவுற்றாள்.

இக்காலத்தில் இப்படியொரு நிகழ்ச்சி ஏற்பட்டால் என்ன நடக்கும்? அந்த ஆண் மகன் அந்தப் பெண்ணை வெட்டிக் குழித் தோண்டிப் புதைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான்.

ஆனால் யோசேப்பு மரியாளைச் சந்தேகக் கண்களால் நோக்கவும் முடியாமல், மாறுபட்ட அவள் உடல் தோற்றம் வெளிப்படுத்தும் உண்மையை ஒதுக்கவும் முடியாமல், தவித்துக் குழம்பி இறுதியில் தெளிவடைகிறார்.

எந்த ஓர் எளிய தந்தையும் தன் கடமையை ஆற்ற அனுபவிக்கும் துயரங்கள், ஏக்கங்கள், கவலைகள் அத்தனையும் புனித யோசேப்பு வெகுவாகப் பாதித்தன.

இத்தனையையும் அவர் நம்பிக்கையோடு சமாளித்தார்.

பொதுவாகப் புனித யோசேப்பு என்றதுமே, நாம், ”பாவம் அவர் ஒரு அப்பாவி” என்று கூறிவிடுகிறோம். அவர் ஓர் அப்பாவியா? இல்லை, அவர் ஒரு கர்ம வீரர்.

அவர் அப்பாவியாக இருந்திருந்தால் இயேசுவைப் போன்ற ஒரு துறுதுறுத்த பையனையும் அன்னை மரியாளைப் போன்ற ஓர் அழகிய பெண்ணையும் எப்படிச் சமாளித்திருப்பார் ?

அந்நிய நாட்டில், புற இனத்தார் மத்தியில் சிரமத்தோடு வாழ்க்கையைச் சமாளித்து வருககையில் மீண்டும் தாயகம் செல்லப்பணிக்கப்பட்டு நாசரேத்தில் தன் எளியக் குடும்பத்தை நிலை நாட்ட அவர் மேற்கொண்ட சிரமங்கள் எத்தனை?

அன்னை மரியாளும் புனித யோசேப்புயும் இறைவன் இயேசுவை வளர்த்து ஆளாக்குவதிலேயே தங்களது முழுக் கவனத்தையும் செலுத்தி, அவரது வளர்ச்சியில் இன்பம் கண்டு வாழ்ந்ததால் அவரிடத்திலேயே நிறைவுக் கண்டனர்.

இவ்விதம் தன் மனைவியோடும் மகனோடும் புனித உறவு கொண்டிருந்த யோசேப்பு ஒரு புதுமைத் தந்தை அல்லவா?

நன்றி:-திருஇதயத்தூதன்
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு