குருகுலத்திற்கு வாழ்த்துரை

திருமதி. அருள்சீலி அந்தோணி ஆலந்தூர்அருட்பணியாளர்களே!
தேவ அழைத்தல் என்பது ஒரு கடல் பயணம்!
அதில் கரைச் சேர இருக்கு ஒருவழி!
அவ்வழியோ கரடுமுரடானது.

ஆனால்
பணியாளர்களே!
நீவீர் அதனை மலர் பாதையாக்குங்கள்.!
எங்கும் எதிலும் கவனமுடன் செயல்படுங்கள்!
முழு ஈடுபாட்டுடன் சமுதாயத்தை நோக்கிச் செல்லுங்கள்!
அங்கு இறைமகனின் இறையரசு சிதறிக் கிடக்கின்றது!
சிதறிய முத்துக்களை இனங்கண்டுக் கரைச் சேர்த்திடுங்கள்!
இதுவே நிறைவாழ்வின் சிகரம்!
எவ்வளவு காலம் வாழ்ந்தீர் என்பதைவிட, 
எப்படிப் பணிசெய்தீர்கள் என்பதே முக்கியம்!

நண்பர்களே!
இறைமகனின் பணியை மேற்கொள்ளவே, 
இந்தச் சிறப்பு அருள் பொழிவுப் பெற்றுள்ளீர்கள்!
தூய ஆவியின் தூயக் காற்றைச் சுவாசிக்கத் தவறாதீர்கள்!
காரணம் நீர் தடம் பதிக்கும் இடமெல்லம் 
நச்சுக் காற்றுப் படர்ந்துள்ளது.!
எனவே கவனமுடன் சுவாசிக்கப் பழகுங்கள்!

திருப்பணியாளர்களே!
கொஞ்சம் நில்லுங்கள்!
உம் நிறைவாழ்வை நோக்கிய பயணத்தில் 
நீர் யார் எனக் காட்டவே, ஒரு தேவ அழைப்பு.
சோதனைகளைக் கண்டு துவண்டுப் போகாதீர்கள். 
துன்பத்தைக் கண்டு தூர விலகி விடாதீர்கள்.
எந்த வேளையிலும் சமுதாயத்தில் இறைசாயலை 
முத்திரைப் பதிக்க மறவாதீர்!!

அன்பர்களே!
அன்பு வழியில் பணிகள் புரிந்திட!
சமுதாயத்தை இறையாட்சியில் மலர்விக்க
உழைப்பைக் கடல் அலைகளிடமிருந்தும்,
சிரிப்பை முல்லை மலர்களிடமிருந்தும்,
தியாகத்தைக் கற்பூரத்திடமிருந்தும் கற்று
தேவாழைத்தல் என்பது இனிமையானது
என்ற நினைவலைகளிலேயே அதன் சிரிப்பிலே மூழ்கி
உமது ஆற்றலுள்ளவரை விடியலை நோக்கிச் செல்லுங்கள்!

குருகுலமே!
ஒரு வினாடி
உமது பணி வாழ்வுப் பயணம் நிறைவுப் பெற 
அற்பக் காரியங்களை அறவே அகற்றுங்கள்!
முதலில் பெரிய அறச்செயல்களை 
இறைமகனின் இதயத்தில் நிரப்புங்கள்!
உம் பணி வாழ்வுக் கனவுகளில் கரைகின்ற கருவல்ல அது.
அனுபவங்களைப் பதிவுச் செய்கின்ற அத்தியாயம்!
பணியின் சிறப்பு என்பது வசதிகளை வைத்து எழுவது அல்ல! மாறாக

இறைகுலமே!
நீர் வாழ்கின்ற வழிமுறைகளை வைத்தே தீர்மானிக்கபடுகின்றது.
சமுதாயத்தைச் சீர்த்தூக்கிப் பார்க்க வந்தவர்களே!
கொஞ்சம் கேளுங்கள்!
" நுரைகள் மோதிக் கரைகள் உடையாது
புகை மோதி விரிசல்கள் விழாது!
நீர்குமிழ் மோதிக் கப்பல்கள் மூழ்காது! "

குருகுலமே!
பணிவாழ்வில் இடர்கள் பலத்தோன்றினாலும்
அதனால் துவண்டுவிடாதீர்கள்.
" புறாவின் மனம் கொள்வீர்!
சிலந்தியின் விடாமுயற்சியை மேற்கொள்வீர்!
புறா கட்டுவது கூடாயினும் மிக உயர்த்திலேயே கட்டும்
அதே போல் சிலந்தித் துவண்டு போகாமல் தன் பின்னல் கூடு கட்டும்! "

மரியவியான்னியின் மறு பிறப்பானவர்களே!
இமயம் நீர்-தாழ்வு உமக்கில்லை!
வானம் நீர்-சுனக்கம் உமக்கில்லை!
கதிரவன் நீர்-குளிர் உமக்கில்லை!
சமுத்திரம் நீர்-சோர்வு உமக்கில்லை!
சம்பாதிக்கப் பிறந்தவர்களல்ல!
இந்தச் சமுதாயத்தைச் சீர்த்தூக்கி நிறுத்த பிறந்தவர்கள்!
" உருவாக்கம் " என்பது உலகம் தயாரிப்பதல்ல!.
ஒவ்வொரு பணியாளரின் உள்ளம் தீர்மானிப்பவையே!

நண்பர்களே!
உமது உள்ளங்களைப் பெரிய ஜகத் குருவாம் இயேசுவின்
விழுமியங்கள் என்ற எரிபொருளால் நிரப்பிவையுங்கள்!
தீய எண்ணங்களை எடுத்தெரியுங்கள்!
உங்கள் எண்ணங்களை
எழுத்துக்கள் ஆக்கும் இரசாயனம் உங்களிடம் உள்ளது.!
இறைமகனின் மனப்புள்ளிளைச் சித்திரமாக்கும்
ஆற்றலை இன்னும் ஏன் சிறை வைத்துள்ளீர்கள்!

குருகுலமே!
சிந்தனை என்பது மரம் போன்றது!
மரத்திலிருந்து-
சிலுவைச் செய்து கொள்வதும்
படகு செய்து கொள்வதும்
உங்கள் பொறுப்பு!
வாழ்வதற்காக அல்ல! வெல்வதற்காகவே இந்தத் தேவ அழைப்பு!!

திருப்பணியாளர்களே!
நொறுங்குண்ட மனிதர்களைச் சமுதாயத்தில் 
விரக்தியின் விளிம்பியைத் தொட்டவர்களே!
பண்பட்ட நிலமாக உமது பணியால் மாற்றிடுவீர்!
அதில் கிறிஸ்து என்னும் விதையை ஊன்றிடுவீர்! 
உமது தொடர் பராமரிப்பில் முளைத்து
ஆலமரவிழுதுகளை போன்று உமது சேவைப் பலுகிப் பெறுகி, 
இறையாட்சி இம்மண்ணில் மலரச் செய்திடுவீர்!

பணியாளர்களே!
பட்டித் தொட்டிகளில் மலிந்துக் கிடக்கும் வறியோரின் வாழ்வு
உமது கரங்களில் தான் என்பதை மறவாதீர்கள்...
உமது அழைப்பு ஒரு சிகரம்!

இறைமகன் உமது தாயின் கருவிலேயே உங்களைத் 
தனது கல்வாரிப் பலியை தினம்
அரங்கேற்றத் தகுதியுடையவர்களாய் தெரிந்து கொண்டார்.
இடர் வரும்போது இயேசு என்னும் 
சுதந்திரக் காற்றைச் சுவாசியுங்கள்!
என்று தணியும் இயேசுவின் தாகம்!
இந்தத் தாகம் தணிந்திட உமது அழைப்பே வடிகால்!
என்பதைப் பதிவு செய்து இந்த வாழ்த்துரையை
அனைத்து உலகக் குருக்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது