முதல் திருப்பலி.
பெரிய வியாழன் கடைசி இரவு உணவு என்பது ஒரு சாதாரண உணவு நிகழ்ச்சி அல்ல; அது இயேசு தமது முழு வாழ்வையும், இரட்சிப்பின் தத்துவத்தையும், சீடர்களுடன் அமர்ந்து அப்பம் இரசம் வழியாக இறைவாக்கை நிறைவாக்க வழி காட்டினார்.
திருவிருந்தில்.
இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, “இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்” என்றார். (மத்.26:26), (மாற் 14:22), (லூக் 22:19)
மத்தேயு, மாற்கு மற்றும் லூக்காஸ் நற்செய்திகளில் இரவு விருந்தில் இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுப்பதை மூன்று நற்செய்திகளையும் கவனித்தால் எல்லோரும் ஒரே கருத்தை வரிசை மாறாமல் சொல்கிறார்கள்.
அப்பத்தை “எடுத்தார் – ஆசீர்வதித்தார் – பிட்டார் – கொடுத்தார்”
இவை நான்கு எளிய செயல்கள்போலத் தோன்றினாலும், விவிலியம் முழுவதையும் இணைக்கும் ஆழ்ந்த இரட்சிப்பின் இலக்கணம் இதற்குள் மறைந்திருக்கிறது.
இயேசு கடைசி இரவில் எதையும் விளக்கவில்லை; ஆனால் ஒரு அப்பத்தைப் பேசவைத்தார்.
வார்த்தைகள் இல்லை; ஆனால் நான்கு செயற்பாடுகள் முழு இரட்சிப்பு வரலாற்றையும் சொல்லிவிட்டன.
அப்பம் எடுக்கப்பட்டது –
ஆசீர்வதிக்கப்பட்டது –
பிடப்பட்டது –
கொடுக்கப்பட்டது என்பது போலவே, இயேசுவின் வாழ்க்கையும் இந்த நான்கு நிலைகளைக் கடந்து மனிதனுக்கான வழியாக, வாழ்வாக, உணவாக, உயிராக மாறியது. அந்த நான்கு செயல்கள் சீடர்களுக்கு எம்மாவுஸ் பாதையில் நம்மோடு தொடர்ந்து வரும் மனிதர் உயிர்த்த கிறிஸ்து என்பதையும் அறிந்தனர்.
ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
1. “இயேசு அப்பத்தை எடுத்தார்…” (மத். 26:26)
அப்பத்தை “எடுத்தார்” என்பது, மனிதரைத் தேர்ந்தெடுத்ததை குறிக்கிறது. சாதாரண அப்பம் போலவே, சாதாரண மனிதர்களை இயேசு தமது இரட்சிப்பின் திட்டத்தில் எடுத்துக்கொண்டார். “தேவன் தமது ஒரேபேறான குமாரனை உலகத்திற்கு அனுப்பியதினால், அவரால் உலகம் இரட்சிக்கப்படும்படியாக” (யோவான் 3:17) தந்தை தன் ஒரே மகனை எடுத்து உலகத்திற்காக அனுப்பினார். யோர்தானில் அவர் ஞானஸ்நானம் பெற்றபோது, “இவன் என் அன்புக்குமாரன்; இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்” (மத் 3:17) என்று அறிவிக்கப்பட்டது. இயேசுவே தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பம் என்பதை வெளிப்படுத்துகிறது. இஸ்ராயேல் இனத்தாரை கடவுள் தேர்ந்து எடுத்துக் கொண்டது போல, இங்கு அப்பம் தேர்வு செய்யப்பட்டது நம்மை இயேசு கடவுளின் அரசிற்கு தேர்ந்தெடுத்ததைக் காட்டுகிறது. இயேசு “எடுத்தார்” என்பதே, “நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்.” (யோவா. 15:16) என்ற வார்த்தையின் நிஜம்.
2. “ஆசீர்வதித்தார்…”
(மத். 26:26; லூக் 22:19) ஆசீர்வாதம் என்பது வெறும் ஜெபச் சொல் அல்ல. பழைய ஏற்பாட்டில் தேவன் ஆசீர்வதித்தபோது உயிர் பெருகியது (தொ.நூ. 1:28). இங்கு இயேசு ஆசீர்வதிக்கையில், அப்பம் அவர் சொந்த உடலின் அர்த்தத்தைப் பெறுகிறது. ‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே’ (யோவான் 6:41) “வாழ்வுதரும் உணவு நானே” (யோவான் 6:48) என்ற இயேசுவின் அறிவிப்பு, இங்கே வெளிப்படுகிறது அப்பம் ஆசிர்வதிக்கப்படுவது போல இயேசுவின் வாழ்க்கையும் ஆசிர்வதிக்கப்படுகிறது. “ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். (லூக்கா 4:18) இயேசு ஆசிர்வதிக்கப்படுவது இங்கே தெளிவாகிறது. அவர் செய்த அடையாளங்கள், போதனைகள், இரக்கச் செயல்கள் அனைத்தும் கடவுளின் ஆசீர்வாதத்தின் வெளிப்பாடாக இருந்தன. இந்த ஆசீர்வாதம் முழுமையான கீழ்ப்படிதலால் வந்தது.
3. “அப்பத்தைப் பிட்டு” (மத்.26:26)
பிடுதல் என்பது வலி, தியாகம், சிதைவு. பிட்ட அப்பம் அது முறிக்கப்பட்ட கிறிஸ்துவின் உடல். “அவரோ, நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்.” (எசாயா 53:5) என்று சொல்லப்படும் சிலுவையின் முன்னறிவிப்பு, இங்கு அப்பத்தில் நிகழ்கிறது. வாழ்வளிக்கும் அப்பமாக மாற, இயேசு உடைக்கப்பட வேண்டியது அவசியம். அது சிலுவையில் நடந்தது. அது வாழ்வு கொடுக்க வேண்டிய அப்பத்தின் உடைப்பு. “அவர் நம் அக்கிரமங்களுக்காகக் காயப்படுத்தப்பட்டார்” (ஏசாயா 53:5) “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் உடல்” (லூக்கா 22:19) அப்பத்தை பிடாமல் பிறருக்கு பகிர முடியாது. இயேசு உடைக்கப்பட்டதால், முறிக்கப்பட்டதால், காயப்பட்டதால் தான், அவர் வாழ்வளிக்கும் அப்பமாக மாறினார்.
4. “அதைச் சீடர்களுக்குக் கொடுத்து…” (மத். 26:26)
இயேசு உடல் முறியவேண்டியது மட்டும் போதாது; அது பகிரப்பட வேண்டும். கொடுக்கப்பட்ட அப்பம் – தன்னை முழுவதும் அனைவருக்கும் கொடுத்த இயேசுவாகும்,
“எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.” (யோவா. 3:16) உடைந்த அப்பம் பிறருக்காகக் கொடுக்கப்பட்டது. இயேசுவின் வாழ்க்கையின் நிறைவு இதுதான்.
“பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்”(மாற்கு 10:45). சிலுவைக்குப் பின் உயிர்த்தெழுதல் அது இயேசு தன்னை கொடுத்ததன் தெய்வீக உறுதிப்பத்திரம். இயேசு தன்னை முழுவதும் கொடுக்கப்பட்டபோது, அவர் வாழ்வுதரும் உணவானார். தம் வாழ்க்கையையே வாழ்ந்து காட்டினார்.
தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்,
தூயஆவியால் ஆசீர்வதிக்கப்பட்டார்.
சிலுவையில் பிடப்பட்டார்,
உலகத்தறகாகக் கொடுக்கப்பட்டார்.
இந்த நான்கு நிலகளை கடந்து தான், இயேசு மனிதனுக்கான வாழ்வுதரும் உணவானார். நான்கு செயல்களும் பெரிய வியாழன் இரவு விருந்தில் பார்க்கிறோம் அதுவே முதல் திருப்பலி.
5. ஐயாயிரம் பேருக்கு அப்பம்
ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். (மத்14:19)
இந்த அற்புதத்திலும் செயல் படிகள் தெளிவக காணப்படுகின்றன.
செயல் படிகள்
1. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்தார்.
2. விண்ணை நோக்கி நன்றி செலுத்தினார்.
3. அப்பங்களை பிய்த்துச் சீடர்களுக்குக் கொடுத்தார்.
4. சீடர்கள் அதை மக்களுக்குப் பகிர்ந்தனர்.
இங்கு ஒரு ஆழமான திருப்பலி வடிவம் உள்ளது. எடுத்தார் ----- நன்றி கூறினார் ---- பிய்த்தார் ----- கொடுத்தார்.
5. எம்மாவூஸ் வழியில் நடந்த அனுபவம்
அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். (லூக்24:30-31)
உயிர்த்தெழுந்த இயேசு இரு சீடர்களுடன் எம்மாவூஸ் வழியில் நடந்த சம்பவம் மிகவும் அழகான ஆன்மீகப் பயணமாகும்.
1. இயேசு அப்பத்தை எடுத்தார்.
2. அவர் நன்றி கூறினார்.
3. அப்பத்தை பிட்டு
4. கொடுத்தார்
5. உடனே அவர்களுடைய கண்கள் திறந்தன.
தெய்வீக அர்த்தம் சீடர்களின் இந்த நிகழ்வு விசுவாசியின் ஆன்மீக வளர்ச்சியைக் காட்டுகிறது. முதலில் மனம் குழப்பத்தில் இருக்கும்; பின்னர் கிறிஸ்து வார்த்தையை விளக்குகிறார்; இறுதியில் அப்பத்தை எடுத்து, ஆசிர்வதித்து, பிட்டு, பகிரும் அனுபவத்தில் கிறிஸ்து அறியப்படுகிறார். இதனால் வார்த்தையும் அப்பமும் சேரும்போது விசுவாசியின் கண்கள் திறக்கப்படுகின்றன.
இந்த நான்கு செயல்களும் பின்னர் திருப்பலியில் இன்றும் மனித வாழ்வை வடிவமைக்கும் உயிருள்ள அழைப்பு.
அப்பம் எடுக்கப்பட்டது: மனித வாழ்வு தேவனுடைய கைகளில் இருப்பதை நினைவூட்ட.
ஆசீர்வதிக்கப்பட்டது: எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்றி சொல்லும் வாழ்வை கற்றுக்கொடுப்பதற்காக.
பிடப்பட்டது: அகந்தை உடைந்து, அன்பு வெளிப்பட வேண்டியதைக் காட்ட.
கொடுக்கப்பட்டது: வாழ்வு பிறருக்காக அர்த்தமடையும் என்பதற்காக.
கடவுளின் அரசு நம் கைகளில், இன்றே, இப்பொழுதே நிறைவடைகிறது.உண்மையான திருப்பலி நான்கு செயல்களும் ஆலயத்தில் முடிவடைவதில்லை; அது, வீடுகளில், வீதிகளில் பணியிடங்களில் தொடர்கிறது.


