விசுவாச வாழ்க்கை

திருமதி.மிக்கேல் அம்மாள்- சென்னை.

நாம் அனைவரும் இறைவனை விசுவசிக்கின்றேம் என்ற விசுவாசப்பிரமாணத்திலும், திருப்பலியிலும் மனப்பாடமாகச் சொல்லி விடுகின்றோம். ஆனால் நம் விசுவாசம் நம் வாழ்க்கையில் எப்படி உள்ளது எனத் தியானிப்போம். விசுவாசம் என்பது நாம் நம்பிக்கையோடு எதிர்ப்பார்ப்பவைக் கிடைக்கும் என்னும் நிலையான உறுதி. இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்து வாழ்வது தான். எபிரயர் 11ஆம் அதிகாரத்தை நாம் படித்தோமானால் முன்னோரின் விசுவாசத்தை அறிந்துக் கொள்ளலாம்.

இறைமகன் இயேசு மக்களிடம் அற்புதங்களைச் செய்யும்போது விசுவாசிக்கிறயா? எனப் பலமுறை கேட்பதை நாம் நற்செய்தியில் காண்கிறோம். அஃதாவது இறைவனையும், அவரது வல்லமையும் அவரில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொள்கிறோமா எனக் கேட்கிறார். அவரை விசுவாசித்த மக்கள் அனைவரும் நோயிலிருந்தும், பேயின் கட்டுகளிலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுதலை அடைந்தார்கள். இறைமகன் இயேசு மக்களிடம் புதுமைகள் செய்யும்போது விசுவாசத்தை உறுதிப்படுத்துவதைப் பார்க்கிறோம்.

இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, "என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்துக் கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" என்றார். யோவான்8:31,32

நம் விசுவாசம் எப்படி உள்ளது?
நாம் இறைவனின் வார்த்தையில் நிலைத்திருக்கிறோமா, இல்லை நம் வாழ்க்கையில் இன்பம், துன்பம், வியாதி, பிரச்சனை என்று வரும்போது நாம் இறைவனிடம் நம்பிக்கை வைத்து முற்றிலும் இறைவனைச் சார்ந்து வாழ்கிறோமா இல்லை, மனிதனையோ, செல்வங்களையோ, நம் பலத்தையோ, மந்திரவாதி என்று இவர்களைச் சார்ந்து வாழ்கிறோமா என்று பார்ப்போம். நம்மில் அனேகர் இப்படி மனிதர்களைச் சார்ந்து, தங்கள் உயிரையும், ஆன்மாவையையும் இழந்து வாழ்கிறோம். விசுவாசம் என்பது இறைவன் நமக்குத் தரும் ஒரு நன்கொடை. கடவுளின் கிருபை. விசுவாசத்தின் வழியாகத் தான் நாம் மீட்புப் பெறுகிறோம்.-எபேசியர் 2:7,8
இறைவன் நமக்கு விசுவாசத்தைத் துவக்கி வைக்கின்றார். நாம் விசுவாசத்தில் வளர்ந்துப் பெருக வேண்டும். கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றினபோது சீடர்கள் இயேசுவை விசுவசித்தார்கள். சீடர்களுக்கு விசுவாசத்தைத் துவக்கி வைக்கிறார். பின் சீடர்கள் விசுவாசத்தில் வளர்ந்தார்கள். இயேசுவிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்கும், அவரில் விசுவாசம் கொள்பவருக்கும் இயேசு புதுமைகளைச் செய்து அவர்களை விசுவாசத்தில் உறுதிப் படுத்துகிறார். நம்பிக்கைக் கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர். மாற்கு 16:16. நம்பிக்கை உள்ளவரின் குணநலன்கள்.

  • இறைவனைச் சார்ந்து வாழ்கிறோம்.
  • இறைவனின் வார்த்தைகளைப் பற்றி கொண்டு வாழ்தல்.
  • பரிசுத்த ஆவியைச் சார்ந்து வாழ்தல்
  • பகைவரை அன்பு செய்து வாழ்தல்
  • துன்பத்தில் இறைவனைப் புகழ்ந்து வாழ்வது.

பல நேரங்களில் நாம் இறைவனிடம் கேட்டும் விண்ணப்பங்களுக்குப் பதில் கிடைக்காமல் போகிறது. காரணம் நம் பாவங்களே தடையாயிருக்கிறது என்று இறைவார்த்தைகள் சொல்கின்றன. எசாயா 59 ஆம் அதிகாரம் "மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கைக் குறுகிவிடவில்லை; கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை. உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன; உங்கள் பாவங்களே அவர் செவிச் சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன". ஆகவே நாம் பாவங்களுக்கு மன்னிப்பைச் சமாதான உள்ளத்தோடு கேட்க வேண்டும். அப்போது நம் இறைவேண்டல் இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்கும். இந்த நம்பிக்கை விலையேறப்பெற்றதாய் வல்லமைமிக்கதாய் இருக்கும்.

கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே நம் இறைவனிடம் ஆழ்ந்த விசுவாசமும், அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டு, இறைவார்த்தையைப் பற்றிக் கொண்டு வாழவும், செபவாழ்வில் நிலைத்து இறைவனைச் சார்ந்து வாழவும் இதற்கு வேண்டிய வல்லமையை இறைவன் நமக்கு அளித்து ஆசீர்வதிக்க வேண்டுவோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது