இளைஞன் தாவீது

அருட்திரு தந்தை தம்புராஜ் சே.ச.

தாவீது தனது இளம் வயதிலேயே இறைவனால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அரசனாகத் திருப்பொழிவு செய்யப்படுகின்றார். தாவீதின் ஆளுமையில் பல அம்சங்களை நாம் பார்க்கின்றோம். அவர் ஓர் ஆடு மேய்ப்பவராக இருந்தார். கவிதை எழுதுவதில் வல்லவாகத் திகழ்ந்த ஒரு கலைஞன். அரக்கனைக் கொன்ற பெருமை அவருக்கு உண்டு. இஸரயேல் அரசர்களில் முதன்மை வாய்ந்த  அரசனாகப் பெயர் பெற்றப் புகழில் திளைத்தவர். இயேசுவின் மூதாதையர் பட்டியலில் முதன்மை ஸ்தானத்தை வகிக்கின்றனர்.

அக அழகா? புற அழகா?

யாழுடன் தாவீதுசாமுவேல் இறைவாக்கினர் இறைவனால் அனுப்பப்பட்டு அரசரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றார். ஈசா தனது ஏழு மகன்களையும் இறைவாக்கினர் முன் கடந்து போகச் செய்கின்றார். ஆனால் சாமுவேல் ஈசாயைப் பார்த்து 'உன் பிள்ளைகள் இத்தனை பேர்தான்? என்று கேட்க, 'இன்னொரு சிறுவன் இருக்கின்றான். அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கின்றான்." என்று பதில்  அளித்தார். அதற்குச் சாமுவேல் அவரிடம் ஆளனுப்பி 'அவனை அழைத்து வா. ஏனெனில் அவன்  வரும்வரை நான் உணவருந்த மாட்டேன் " என்றார். தாவீது வந்ததும் இறைவாக்கினர் எண்ணெய்யால்  அவனை அரசனாக அபிஷேகம் செய்கின்றார். மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரே அகத்தை பார்க்கின்றார். இளைஞனே, இளம்பெண்ணே, நீ வெளி அழகைப் பார்த்து மயங்கி விடுகிறாயா? வெளித்தோற்றத்தை அழகுபடுத்த எத்தணை கவனம் செலுத்துகிறாய்? ஆனால் உன் உள்ளத்தின் அழகை மேம்படுத்த நீ எத்துணை கரிசனையாய் இருக்கின்றாய் என்பதை நினைத்து செயல்பட வேண்டும்.

ஆவியின் ஆற்றலா? மனிதனின் ஆற்றலா?

தாவீதுக்குத் திருப்பொழிவு செய்தவுடனே ஆவியானவரின் ஆற்றல் அவர்மீது வந்து தங்கியது. அன்று
முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது (1சாமு 16:13). ஆவியின் ஆற்றலோடு, இயற்கையான திறன்களும் தாவீதுக்கு இருந்தன. பணியாளருள் ஒருவன் இளைஞனாய் இருந்த தாவீதைப் பற்றிக் கூறுவதைக் கேட்போம். 'ஈசாவின் மகனைப் பார்த்தேன். அவன் யாழ் மீட்டுவதில் வல்லவன். வீரமுள்ளவன். போர்த்திறன் பெற்றவன். மேலும் ஆண்டவர் அவனோடு  இருக்கின்றார். (1 சாமு 16:18)

தாவீது கோலியார்தோடு சண்டை போட்டு அவன் மீது வெற்றி கொள்கின்றான். கோலியாத்து தனது உடல் வலிமையில் நம்பிக்கை வைத்து போர் புரிந்தான். ஆனால் தாவீது ஆண்டவரின் ஆவியானவரின் வல்லமையில் நம்பிக்கை வைத்திருந்தான். கோலியாத்து தாவீதைப் பார்த்து இகழ்ந்து பேசி, 'நீ கோலுடன் என்னிடம் வர நான் என்ன நாயா? என்று சபிக்கின்றான். ஆனால் தாவீதோ ;நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகின்றாய். நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் தம் பெயரால் வருகிறேன்" என்றான்.(1சாமு 17:45)

கோலியத்துடன் தாவீதுஇளைஞனே? இளம்பெண்ணே, கடவுள் உனக்குக் கொடுத்திருக்கும் பல திறமைகளைப் பற்றி நினைந்து இறைவனுக்குப் புகழ்பாடு. ஆனால், அவற்றின் மீது மட்டும் சார்ந்து வாழாதே. ஆவியின்  கொடைகளைப் பெற்றுத் திருச்சபையின் பொதுநலனுக்காகப் பயன்படுத்து. தாவீது தனது வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்தாலும், தவறு செய்தவுடனேயே மனமுருகி இறைவனிடம் மன்னிப்பு கேட்டார்.  மனம் மாறித் தனது வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டார். பொய், பித்தலாட்டம், விபச்சாரம்,கொலை, கர்வம், கடவுளின் சித்தத்திற்கு எதிராக மக்கள் கணக்கெடுப்பு போன்ற பாவங்களில் விழுந்தாலும் ஒவ்வொரு முறையும் தனது தவற்றை உணர்ந்து மனம் மாறினார். இதை நிருபிக்கும் வண்ணம் அழகான, உருக்கமான மனமாற்றத்தின் திருப்பாடல்களை எழுதியள்ளார்.  கடவுள் தாவீதைப் பெருமைப்படுத்தி உயர்த்தினார். அவரைப் பற்றிப் புகழ்ந்ததுமில்லாமல் அவர் இயேசுவின் மூதாதையர் படடியலில் சேர்த்துள்ளார் என்பதைக் கீழவரும் வரிகளில் நாம் படிக்கின்றோம். 'ஈசாயின் மகனான தாவீதை என்இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன். என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்." என்று சான்று பகிர்ந்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி  கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.(திப13:22-23,மத்1:6).

ஆம் இளைஞனே, இளம்பெண்ணே உன்னைப் பற்றிக் கடவுள் இவ்வாறு சொல்லமுடியுமா? இறைவனின் இதயத்துக்கு உகந்தவனாக, உகந்தவளாக நீ உன் வாழ்க்கையை நடத்துகிறாயா? இறைவனின் விருப்பம் அனைத்தையும் உன் வாழ்வில் நீ நிறைவேற்றத் தயாராகயிருக்கின்றாயா? இறைவன் இளைஞர்களை ஆசீர்தித்து இறைவனது இதயத்துக்கு உகந்தவர்களாக நேர்மையிலும், நீதியிலும் அவர்கள் வாழ அவர்களுக்காக மன்றாடுவோம்.


மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது