இத்தாலியத் தமிழன் வீரமாமுனிவர்

அன்னக்குடில் செ.இன்னாசிமுத்து

நேப்பிள்ஸ், வெனிஸ், ஜெனோவா, பிளாரன்ஸ் எனும் புகழ்மிக்க மாநகரங்களைத் தன்னகத்தே கொண்டு மாமலைகளையும், மடுக்களையும் துள்ளிவரும் அருவிகளையும் கண்ணுக்கினிய சோலைகளையும், பாய்ந்தோடும் ஆறுகளையும், வளமிக்க நிலப்பரப்பினையும் தனதாக்கி அவனியையெல்லாம் ஆண்ட பெருமைமிக்க இத்தாலிய நாட்டு வெனிஸ் மாநிலத்து மாந்துவா மாவட்டக் காஸ்திக்கிலியோனே என்னும் சிற்றூரின் கொண்டல்போ பெஸ்கியே! எலிசபெத் அம்மையே! இத்தாலியத் தமிழன் என நாங்கள் என்நாளும் போற்றும் வீரமாமுனிவரின் 271 வது விண்ணகப் பிறப்பைக் (பிப்ரவரி) கொண்டாடும் இந்நாளில் இதோ அம்முனிவரை எங்களுக்குக் கொடுத்த உங்களிருவரின் கமலபாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்.

"மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனின் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?" என்ற இயேசுவின் அமுத மொழியால் தொடப்பட்ட புனித இஞ்ஞாசியாரின் இயேசு சபையில் இணைந்து குருவாக மலர்ந்து இந்தியத் திருநாட்ழன் கோவா நகரில் கால் பதித்து கேரளம் வழியாகத் தமிழகம் வந்து காமநாயக்கன்பட்டியில் தமிழ் கற்று இத்தமிழின், தமிழரின் நாடி நரம்புகளையெல்லாம் உனதாக்கி வாழ்ந்து உன் இறைபணிக்கு எங்கள் தமிழ் பயக்குமெனக் கருதி எண்ணற்ற நூற்களைத் தேர்ந்தெடுத்து தமிழ்மண்ணில் மணம் பரப்பிய எங்கள் செந்தமிழ்த் தேசிகன், மலர்களின் தந்தை, தூயதுறவி, கொன்தான்சியுஸ் ஜோசப் பெஸ்கி என்னும் தைரியநாதரே! எங்கள் தமிழ்ப்புலமை உம்மைச் சிறப்பு செய்தளித்த வீரமாமுனிவரே! இதோ உம்மை ஒருகணம் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.

செம்மண் காவிநிற உடையும் தலைப்பாகையும், நெற்றியிலே நீர் அணிந்த கோபிச்சந்தனமும் காதிலே முத்துக்கடுக்கண், கையிலே கோலொன்று- இந்தியத் துறவிகளின் கோலமல்லவா இது. நீர் ஓர் துறவி. திரிசிபுரத்ததுச் சந்தா சாகியால் இசுமதி சந்நியாசியென அழைக்கப்பட்டவர்.

கற்றறிந்த தத்துவ போதகராம் இராபர்ட் தே நொபிலியின் காலடித் தடங்களும் வாழ்வும் உமக்கு வழிகாட்டியதால் தான் மதுரை ஆயர் பணித்தளத்து மாமேதையாக முத்துக் குளித்துறை முதல் கோனான்குப்பம் வரை மேருமலை முதல் வங்கக்கடல் வரை உன்னுடைய ஆன்மீகப் பயணம் சீரும் சிறப்புமாக இருந்ததோ? கூடவே தமிழ்ப்பயணமும் தொடர்ந்ததோ?

தஞ்சைத் தரணியிலே துயருற்ற மக்கள் புகலிடம் தேடி வந்தபோது காவலூர்க் கன்னித்தாய் அடைக்கல அன்னையின் அரவணைப்பில் அமர வைத்து நீ ஆற்றிய சமூகப்பணி உன்னில் இணைந்ததோ?

காவலூர் வளாகத்துப் புல்லாகாவது பிறக்க வேண்டும் எனத் தாகத்தோடிருந்த நீ காவலூர்க் கன்னிக்கு கதம்ப மலர்கள் பதினெட்டால் கலம்பகமல்லவா பாடினாய். அதனால்தான் எங்கள் இயேசு சபைக் குருமார்கள் உன்னை மலர்களின் தந்தையென அழைத்தனரோ? அடைக்கல அன்னைக்கு நீ அணிவித்த அடைக்கலமாலை இன்றும் வாடாத மாலையாகவல்லவா கழுத்தை அலங்கரிக்கிறது. நீ பாடிய வெண்கலிப்பாவால் அன்னையின் இதயம் கனிந்து போனதால்தானோ அவள் செபமாலை - உத்தரியம் எனும் பேயோட்டும் கருவிகளைத் தன் இருகரத்தில் ஏந்தியவளாய் 'அஞ்சேல்‌' எனக் கூறி அணைத்து இன்னும் நம்மைத் தேற்றிக் கொண்டிருக்கிறாள்.

ஆரியனூர் எனும் கோனான் குப்பத்து மக்களோடு மக்களாய் நீ இணைந்து சிறு குடிலில் வாழ்ந்து அமைத்த சிற்றாலயத்துள் உறையும் பெரிய நாயகி மாதா எங்கள் நெஞ்சில் நிறைவுற்றுத் துலங்குவதேன்? பாரத மண்ணின் தென்தமிழ் நாட்டுத் தமிழ்க்கன்னியாய் நீ சிந்தித்தாய் காதிலே ஜிமிக்கி, காலிலே கொலுசு, கரங்களில் வளையல்கள், கழுத்திலே சங்கிலி, இடையிலே ஒட்டியாணம், உடலிலே புடவை, இப்படியெல்லாம் அமைக்க நீ கனவு கண்டாயா? தரிசனம் கண்டாயா? இல்லையில்லை அன்னை மரியாவை அந்நியக்காரி என்று இம்மண்ணின் மைந்தர்கள் ஒதுக்கி விடக் கூடாது என்றெண்ணி அம்மா இம்மண்ணிலுதித்தவர் - இம்மண்ணுக்குரியவள் என நீ சிந்தித்ததாலல்லவோ அவளுருவை இப்படியெல்லாம் அமைத்தாய். மூன்று காண்டங்களும் 36படலங்களும் 3615 பாடல்களும் கொண்ட தீந்தமிழ்க் காவியம் 'தேம்பாவணியை' நீ இயற்றச் செய்தவர் அன்னை பெரிய நாயகியல்லவோ! இவையெல்லாம் போதாதென்று நீர் எழுதி அகராதிகள், உரைகள், கதைகள், காவியங்கள், காப்பியங்கள் தான் எத்தனை, எத்தனை!

உம் விண்ணகப் பிறப்புத் திருநாளிலே இவற்றையெல்லாம் நாங்கள் நினைத்துப் பார்க்கிறோம். 1680 நவம்பர்த் திங்கள் எட்டாம் நாளிலே உன் தாயின் கருவறை நீங்கி அவர் மடியிலே தவழ்ந்தாய். 1747 பிப்ரவரித் திங்கள் நான்காம் நாளில் கல்லறை உன்னை அழைக்க நீ அதில் நுழைந்தாய்.

ஐயனே! வீர மாமுனிவனே! நீ ஒரு சகாப்தம்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது