தூயஆவியில் திருமுழுக்கு

"வானகத்தில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாகப் பரிசுத்த ஆவியை அளிப்பார்" (லூக் 11:13) என்ற வாக்குறுதியின் பேரில் முழு நம்பிக்கை வைத்து, மிகுந்த தாகத்துடன் இறைமக்களாகிய நாம் நம் தந்தையிடம் கேட்டு தூய ஆவியைப் பெற்றுக் கொள்வதே தூய ஆவியில் திருமுழுக்கு.

இதை நாமோ, நமக்காகப் பிறரோ நம்முடன் சேர்ந்து செபிக்கும்போது பெற்றுக்கொள்ளலாம். இது ஒரு விசுவாச அனுபவம். இந்த அனுபவத்தை இறைமக்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும்.

இந்த அனுபவத்தை எருசலேமில் மாடியறையில் ஒரே மனதாய் செபத்தில் ஈடுபட்டிருந்த இயேசுவின் சீடர்கள் பெந்தக்கோஸ்தே திருநாளன்று பெற்றார்கள் (திப 1:13, 14, 2:1-4). சமாரியாவில் பிலிப்புவின் நற்செய்தியை விசுவசித்து திருமுழுக்குப் பெற்றிருந்தவர்கள் பெற்றார்கள் (திப 8:12,14-17), எபேசு நகரில் பெற்றார்கள் (திப 19:1-7).

இவர்கள் அனைவரும் விசுவாசிகள், திருமுழுக்கு பெற்றிருந்தவர்கள். அப்போஸ்தலர்கள் இவர்கள்மீது கைகளை விரித்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுமாறு இவர்களுக்காகச் செபித்தபோது பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அப்போது ஆவியின் கொடைகளையும் பெற்றார்கள் (திப 8:15,17, 19:6,7).

ஆவியில் திருமுழுக்கு என்பது வேறொரு அருட்சாதனம் அல்ல. ஏற்கெனவே திருமுழுக்கு, உறுதிபூசுதல் வழியாக நாம் பெற்ற அதே தூய ஆவியால் நம் உள்ளங்கள் நிரப்பப்படுவதால் நம்மிலிருந்து தூய ஆவியின் செயல் வெளிப்படும் ஆற்றலைப் பெறுவதாகும். (1கொரி 12:7).

இந்த அனுபவம் நம் விசுவாசத்தை உறுதிப்படுத்தி, நிறையன்பில் வளர, கிறிஸ்துவுக்குச் பணிகளைச் சாட்சிகளாய் வாழ இறை செய்யத் தேவையான ஆர்வத்தையும், ஆற்றலையும் நமக்கு அளிக்கக் கூடியதாகவுள்ளது. மேலும் நம் கிறித்தவ வாழ்க்கையில் ஆவியின் கொடைகளைப் பெற்று அனுபவிக்கவும், பயன்படுத்தவும் ஆவியின் கனிகள். அதாவது தூய ஆவி விளைவிக்கும் பலன்கள் (கலா 5:22) நம்மில் காணப்படவும் ஆரம்பக்கட்டமாக இந்த ஆவியின் திருமுழுக்கு உள்ளது.

ஒரு புது வாழ்வுக்கு அடிகோலுகிறது. அதைத் தொடர்ந்து நாம் ஆவியில் வாழும் வாழ்வில் வளர வளர தேவ ஆவியில் நிறைந்து உயிருள்ள கிறித்தவ வாழ்க்கையில் நாம் வாழ்கிறோம்.

இப்படிப்பட்டவர்களின் வாழ்வில் காணக்கூடியவைகளைச் சற்று பார்ப்போம்.

முதலாவதாக, தூய ஆவியின் வழியாய் கடவுளின் அன்பால் நிரப்பப்பட்ட இவர்கள்(உரோ 5:5) இறை தந்தையையும், ஆண்டவராகிய இயேசுவையும், பிறரையும் உண்மையான அன்பு கொண்டு (1கொரி 13:4-7) அன்பு செய்யக்கூடிய ஆர்வத்தையும், சக்தியையும் உடையவர்களாக இருக்கிறார்கள்.

இது எப்படி அவர்களுடைய வாழ்வில் காணப்படுகிறது என்றால், இறை தந்தையையும், இயேசுவையும், தூய ஆவியானவரையும் உளமாற இனம் கண்டதொரு மகிழ்ச்சியுடன் புகழத் தயங்குவதில்லை (திபா 99:1-5).

தனிமையில் இருக்கும்போது மனதிற்குள்ளும், குழுவாக, சபையாகக் கூடியிருக்கும்போது அக்களிப்புடன் உரத்தக் குரலில் போற்றிப் புகழ்வது இவர்களுக்கு எளிதாகவுள்ளது. அவர்கள் கொள்ளும் மகிழ்ச்சி புகழ்ச்சியாகி எழுச்சி காணப்படுகிறது (திபா 26:6, 414, 65:1, 94:1). அப்போது கைகொட்டிப் பாடுகிறார்கள் (திபா 46:1, 97:5). கைகளை உயர்த்திப் போற்றுகிறார்கள் (திபா 62:4, 133:2). விவிலியம் கற்பிப்பதற்கேற்ப கடவுளைப் போற்றுவதும், புகழ்வதும் இறை பிரசன்னத்தை இவர்கள் உணர வழி வகுக்கிறது.

அன்புறவிலே ஒருவரையொருவர் சந்திக்கும்போது மகிழ்ச்சியுடன் ‘ஆண்டவரைப் போற்றுவோம்' என்று கூறி ஒருவருக்கொருவர் "இயேசுவே நம் ஆண்டவர், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள்' என்று நினைவூட்டுகிறார்கள். இதற்கு அவர்கள் தயங்குவதில்லை, வெட்கப்படுவதில்லை.

மேலும் அன்பு செய்யும் ஆண்டவருடன் அதிகமாகத் தொடர்பு கொள்ளத் தனியாகச் செபிப்பதற்கும், அவரை அதிகமாக அறிந்து கொள்ள விவிலியத்தைப் படிக்கவும் இவர்களுக்கு எப்படியோ நேரம் கிடைக்கிறது. அதில் பிரமாணிக்கமாயிருந்து ஆண்டவருடன் உறவிலும், அவரை அறியும் அறிவிலும் வளர ஆசிக்கிறார்கள்.

இதற்கெல்லாம் இவர்களுக்குத் துணையாய் இருப்பவர் அவர்களுக்கு உள்ளுயிராய் உள்ள தூய ஆவியானவரே (உரோ 8:10,26, யோவா 14:26).

சிறப்பாக ஒருவரையொருவர் அன்பு செய்யவும், மன்னிக்கவும் - மன்னிப்புப் பெறவும், தியாகத்துடன் ஒருவருக்கொருவர் பணி புரியவும். உதவி செய்யவும், ஒற்றுமையுடன் மனமுவந்து வாழ்வும் இவர்களுக்கு முடிகிறது (எபே 4:16, 4:16, 18,26-32, கொலோ 3:9,10,12-17).

இரண்டவதாக, 'தங்கள் விருப்பம்போல்' என்ற காலம் படிப்படியாகக் குறைந்து 'ஆண்டவருக்கு ஏற்றாற்போல்' என்ற எண்ணம் அவர் களில் வளர்கிறது. எதைச் செய்ய நினைத்தாலும், எங்கு செல்வதாயிருந்தாலும், நேரத்தை எப்படி கழிப்பது என்றிருந்தாலும் இயேசுவுக்குப் பிடிக்குமா என்று தங்களுக்குள் கேட்டு அவரை மகிழ்விக்கும் வகையில் வாழ வேண்டும் என்ற ஆசை அவர்களுள் வேரூன்ற ஆரம்பிக்கிறது.

இப்படிப்பட்ட மனப்பான்மைக்குக் காரணம் என் மீட்பராகிய இயேசுவே என் சொந்த ஆண்டவராக இருக்கிறார். 'என்னை ஆட்கொண்டவரும் அவரே, என்னை ஆள்பவரும் அவரே' என்று அவர்கள் ஏற்றுக்கொண்டு, ஆவியானவர் காட்டும் பாதையில் செல்ல அவர்கள் விரும்புவதே (1கொரி 12:13, கலா 5:24-25).

மூன்றாவதாக, ஆவியானவரின் ஆற்றலின் பேரில் அதிகமதிகமாக நம்பிக்கை கொண்டு அவருடைய கையில் தங்கள் காரியங்களை ஒப்படைத்து விடுகிறார்கள்.

கடவுளின் மக்கள் என்றால், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று அவரது திருவுளப்படி வாழ வேண்டுமென்றால் அவரது ஆவியாலேயே வழிநடத்தப்பட வேண்டும் (உரோ 8:14) என்று உணர்ந்து, தங்களுடைய ஆன்மீக வாழ்க்கையில் மட்டுமல்ல, உலகச் சார்பான வாழ்க்கையிலும் அவரது உதவியை நாடத் தவறுவதில்லை.

செபத்தில் அவரது குரலைக் கேட்டு அதற்குச் செவிசாய்க்கிறார்கள். தங்கள் உள்ளத்திலிருந்து அவர் பேசுவதை உணர்கிறார்கள். அவர்களுடைய மனசாட்சி, அவர்களோடு தங்கி அவர்களுள் இருக்கும் உண்மையின் ஆவியானவரின் ஏவுதலின்படி பேசுகிறது (யோவா 14:17).

உலகம் காட்டும் மாதிரியைப் பின்பற்றாமல், உள்ளம் புதுப்பிக்கப் பெற்று திருவுளம் எது என உய்த்துணரவும், கடவுளுக்கு எது உகந்தது, எது தலைசிறந்தது எது நல்லது என நன்கு அறிந்து வாழ ஆவியின் ஏவுதலின்படி நடக்க முயலுகிறார்கள் (உரோ 12:2,3, கலா 5:16).

அப்படிப்பட்டவர்களுடைய வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டாக அமைகிறது.
நான்காவதாக, ஆவியின் ஆற்றல் தங்களில் வெளிப்படும் வகையில் அவர்கள் ஆவியின் கொடைகளைப் பெறுகிறார்கள். அவற்றின் உதவியைக் கொண்டு தாங்களும் உறுதி பெற்று வாழ்கிறார்கள் (எசா 11:12). பிறருக்குப் பணிபுரிய அவற்றைப் பயன்படுத்தி பொது நன்மைக்காக (1கொரி 12:7), திருச்சபையைக் கட்டியெழுப்ப (எபே 4:12), பிறருக்குப் பணிபுரிய (1பேது 4:10), அன்புடன் கூடிய கிறித்தவ சமுதாயத்தை உருவாக்க (உரோ 12:6-8) இறைவனின் கைக்கருவியாகிறார்கள்.

இவையனைத்தும் கிறித்தவ சீடத்துவத்தின் அருள் வரங்களைச் சொந்த வாழ்க்கையில் காணும் அனுபவமாக உள்ளன. இதற்கு தேவை ஆவியானவரின் ஆற்றல். அந்த ஆற்றலைப் பெற நாம் ஆவியானவரால் நிரப்பப்பட வேண்டும். முழு சுதந்திரத்துடன் அவர் நம்மில் அவர் செயல்பட வேண்டும். அவர் கடவுளின் ஆவியானதால் அவரால் நாம் நிரம்பியிருக்கும்போது நாம் கடவுளின் பிரசன்னத்தால் (1கொரி 3:16), கடவுளின் அன்பால் (உரோ 5:5), கடவுளின் வல்லமையால் (திப 1:8) நிரம்பியிருப்போம்.

இதுவே ஆவியின் திருமுழுக்கு அனுபவம்!
அன்புச் சகோதரனே. சகோதரியே! சற்று சிந்திப்போமா?

உலக மாயையில் சிக்கி, அதில் உழன்று வாடும் நாள் மாறி ஆன்மீக வாழ்க்கையில் உயர்ந்து வாழும் நாள் வராதாவென்று ஏங்கி நிற்கிறோமா? இதற்கு ஒரு வழியுண்டு.

1) நம் அன்றாட வாழ்க்கையை இறையன்பில் வாழும் - இறையன்பில் வளரும் இறை பிரசன்னத்தில் வாழும் இறை வல்லமையில் இயங்கும் ஒரு வாழ்க்கையாக மாற்றியமைத்தால்...

2) என் திருச்சபை வாழ்க்கை வேறு (வழக்கமான திருப்பலி, விழாக்கால அருட்சாதனம் என்ற வாழ்க்கையாகத்தான் உள்ளதா?) என் சொந்த வாழ்க்கை வேறு என்ற மனப்பான்மையைத் துறந்தால்...

3) கோயிலில் அவர் ஆண்டவர். வீட்டில் நான் ஆண்டவர் என்ற கூற்று மறைந்து, இயேசுவே என் ஆண்டவர், என் வாழ்வின் ஆண்டவர், என் குடும்பத்தின் ஆண்டவர், என் தொழிலின் ஆண்டவர், என் மகிழ்ச்சியின் ஆண்டவர், என் துயரத்தின் ஆண்டவர், என் போக்கின் ஆண்டவர், என் ஆறுதலின் ஆண்டவர் (திபா 120:8), எல்லாம் இயேசுவே, எனக்கெல்லாம் இயேசுவே என்று கொண்டால் தூயஆவியில் வாழும் புது வாழ்வு காணலாம், நிறை வாழ்வு வாழலாம். இயேசுவின் சாட்சியாக வாழலாம்.

இந்த மாற்றத்தைச் செய்யக் கூடியவர் தூய ஆவியானவரே. எனவே, அவரை நோக்கி வேண்டுவோமா?

தூய ஆவியே, துணையாக வருவீர். இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர். ஆமென்.

நன்றி -தேற்றும் ஆவியின் அனல்
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது