அருளைப் பெறுவோம்

அல்போன்ஸ் - திருச்சி

நற்செய்தி சொல்லவருவது மனிதன் தன் அகங்காரம், தீயவைகள் அனைத்தும் நீங்கி தெய்வவாழ்வை அடைதல் வேண்டும். அதற்கு நம்மிடம் வேண்டியது நன்கு அறிவு முதிர்ந்த விசுவாசம் மிக்க மனப்பூர்வமான சரணகதி.

சரணாகதி செய்யவேண்டியது இறைவனிடம். அது பல்வேறு மாந்தர்களுக்கும் அருள்புரிய காத்திருக்கிறது.

லூக்கா நற்செய்தியில் வெகுதெளிவாக மக்கள் இயேசுவிடம் விசுவாசம் வைத்து, அவரிடம் அருளை பெறுகின்றனர். நற்செய்தி காட்டும். காட்சிகளில் சிலவற்றைப் பார்ப்போம். ஒவ்வொரு வரியும் பக்திமணம் கமழம்…

இயேசு மூன்று வழிகளில் நம்பிக்கை கொள்பவருக்கு அருளுவதைப் பார்க்கலாம்.

முதலாவதாக
குரு தன் கரத்தால் சீடனை தொட்டு மெய்யுணர்வை உணர்த்துவது, வியாதியைக் குணப்படுத்துவது இது ஸ்பரிச தீட்சையாகும். இங்கே குருவைத் தொட்டு விமோசனம் பெறுவதைப் பார்ப்போம்.

பன்னிரண்டு ஆண்டு இரத்தப் போக்கினால் வருந்திய பெண், இயேசுவின் பின்னால் வந்து அவரது மேலாடையின் ஓரத்தைத் தொட்டார். உடனே அவளது இரத்த போக்கு நின்றுபோயிற்று. இயேசு என்னைத் தொட்டவர் யார் என்று கேட்க, அவள் அவர்முன் விழுந்து தொட்டகாரணத்தையும், பிணி நீங்கியதையும் மக்கள் முன்னிலையில் அறிவித்தார் (லூக்கா 6:43-43) இயேசு அவளிடம் “உன் நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ” என்றார்.

இயேசு தொட்டாலும், இயேசுவை தொட்டாலும் ஸ்பரிசம் பட்டவுடனே பிணி நீங்கிவிடும். அமைதியும் வந்துவிடும்.

இரண்டாவதாக
லூக்கா காட்டும் காட்சியைப் பார்ப்போம்.
(லூக்கா 7:37-38,48)
பாவியான பெண் ஒருத்தி, பரிசேயருடைய வீட்டில் விருந்துண்ண வரும் இயேசு, அங்கே பந்தியில் அமர்ந்ததும், இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அழுதுகொண்டே நின்றார்.

அழுதாள்.
திருவடியை கண்ணீரால் நனைத்தாள்.
கூந்தலால் துடைத்தாள்.
தொடர்ந்து முத்தமிட்டாள்.
காலடிகளில் நறுமணத்தைலம் பூசினாள்.

ஒவ்வொரு செயலும் தீர்மானமாக, முழு நம்பிக்தையோடு, விசுவாசத்தோடு செய்கின்றதை லூக்கா ஒன்று விடாமல் தெரிவிக்கின்றார்.
ஆன்மிக உலகில் பரம்பொருளுக்குச் சில பொருட்களை அடையாளமாகக் கூறுவதுண்டு.
கூந்தல் ஞானத்துக்குக் குறியீடு. அதே போல் திருவடி திருவருளுக்குக் குறியீடு. இறைவனின் திருவருளைப் பெறுதலை திருவடி அடைதல், திருவடியை தலைமேல் கொள்ளுதல் என்பதை மரபாகக் கூறுகின்றோம்.

திருவடிக்கு ஒளி உண்டு. பக்தன் மட்டுமே கண்டு உணரக்கூடிய ஒன்று.
இயேசு அப்பெண்ணைப் பார்த்து “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். பின் உமது நம்பிக்கை உம்மை மீட்டது அமைதியுடன் செல்க என்றார்.
திருவடி தீட்சையைப் பெண்ணொருத்தி பெற்றாள். திருப்பாதங்கள் பெருஞ்சிறப்பைக் கொண்டவையாகப் பார்க்கின்றோம். பாதத்திற்கு எந்த வேறுபாடும் இல்லை, அடைந்தவர்களுக்கு அடைக்கலம் தருவது ஒன்றைத் தவிர வேறெதானாலும் அடையாளம் காணமுடியாதவை பாதங்கள்.

மூன்றாவதாக
குருவின் பார்வையிலேயே கிடைக்கும் அருள். இதன்படி, பார்வை மூலமாகவே மெய்ஞ்ஞானம் பெறலாம். இது நயனதீட்சை (அருட்பார்வையால் சீடனுக்கு ஞானம் உண்டாக்குதல்) என்பர். மீண்டும் லூக்காவிடம் செல்வோம் (லூக்கா 22:55-62) பேதுரு தலைமைகுருவின் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்தபொழுது மூன்றுமுறை என் இயேசுவை எனக்குத் தெரியாது என்று மறுதலித்தார். அப்பொழுது ஆண்டவர் திரும்பிப் பேதுருவை கூர்ந்து நோக்கினார். சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் என்று கூறியது பேதுரு நினைவு கூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

மனத்தின் சாளரங்கள் கண்கள். மனம் உணர்வதை வார்த்தைகளின் உதவியின்றியே பேசவல்லவை கண்கள். மொழி இல்லாமல் மொழி பேசும் வல்லமை, கண்களுக்கு மட்டுமே உண்டு. இயேசுவின் பார்வையே பேதுருவிடம் பேசிவிட்டன. மனம் நொந்து போனர் பேதுரு. நயனத் தீட்சையைப் பெற்றவர் அவர்.
மேற்கண்ட காட்சிகளுக்கு மிகவும் முக்கியமானதை கட்டாயம் கடைப்பிடித்தால் தான் அருளைப் பெற முடியும்.
இதையும் லூக்கா கூறுகின்றார்.

உன் முழு இதயத்தோடும்
முழு உள்ளத்தோடும்.
முழு ஆற்றலோமும்
முழு மனதோடும்
கடவுளாகிய ஆண்டவரை அன்பு செய்வோம். அருளைப் பெறுவோம்.
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது