நீரில் மிதந்த நெருப்பு

ஆ.அல்போன்ஸ் திருச்சி.

நற்செய்திகளைத் தினமும் பக்தியுடன் வாசிக்கின்றோம். ஒவ்வொரு முறையும் பல்வேறு பரிமாணங்களில் மனதிற்கு ஆறுதலாகவும், ரசனைக்குரியதாகவும் பல வண்ணமும் மனமும் உடைய நந்தவனங்களாய் நம்மை ஈர்க்கின்றது.

நற்செய்தியை வாசிக்கும் அனுபவமும் அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கமும் வித்தியாசமானவை. அதன் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் நம்மைக் கதை மாந்தரோடு ஒன்றிணைக்கிறது.

ஞானியரோடு நட்சத்திரத்தைப் பார்க்கின்றோம். இடையர்களோடும் வானதூதர்களோடும் பேசினோம். மழலை இயேசுவை பார்த்த மாத்திரத்தில், ஆசையோடு தூக்கிக்கொண்டு ஏரோதிற்குப் பயந்து எகிப்திற்கு ஓடினோம். இன்னும் மழலைகளின் இரத்தம் வீதிகளில் தேங்கிகிடக்கிறது.

எருசலேம் ஆலயத்தில் இயேசு காணிக்கையானபொழுது மகிழ்ந்தும், காணாமல் போனபொழுது கலங்கியும் நிற்கிறோம். சீடர்களோடு நடந்து மறையுரையை, அருளுரையை இயேசுவின் அருகில் நின்று கேட்டோம். சமாரியப் பெண்ணைக் கிணற்றின் அருகே கண்டு அவள் இயேசுவை மெசியாவாக உணர்ந்ததை அறிந்தோம்.

இப்பொழுது இயேசு எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைகின்றார். வெற்றிகளைக் குவிக்கும் வீரர்கள் குதிரைகளில் வருவது வழக்கம். ஆனால் இயேசு இங்குக் கழுதை மீது வருகின்றார். அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்வோம் நாமும். இயேசுவை சுமந்த தாய், கழுதை மீது சென்றாள். இங்கு இயேசு கழுதை மீது வருகின்றார். தாழ்மையின் உருவகமாகக் கழுதை மீது வெற்றிகரமாக வருகின்றார். சாலமோன் அரசராகத் தேர்தெடுத்த பொழுதும், ஆபிரகாம் ஈசாக்கை பலிகொடுக்கக் கூட்டிவந்ததும் கழுதை மீது தான்.

யூதர்களுக்குச் செக்காரியாவின் நூலில் (9:9) வரிகள் தெரிந்தன. அதனால் “ஓசான்னா” என்று ஆர்ப்பரிக்கிறார்கள். ஒலிவ மலையிலிருந்து எருசலேம் நகரத்தின் கிழக்கு வாசல் வழியாக மக்கள் எதிர்பார்த்த மெசியாவாக வருகிறார், இத்துணைக் காலமும் இயேசு சீடர்களுடன் நடந்து வந்தவர் இன்று கழுதைமீது வருகின்றார்.

இயேசு மக்களுக்குத் தெரிவிக்கும் செய்தி என்ன?

மெசியா வருவார் என்ற தீர்க்கதரிசனத்தை உருவமாக்கி உண்மையாக்குகின்றார். உரோமவீரர்கள் குதிரைகள், தேர்கள் வழியாக வருவது வழக்கம். இயேசு இங்கு முற்றிலும் மாறாகச் சமாதானத்துடன், தாழ்மையைக் குறிக்கும் கழுதை மீது ஊர்வலம்... உரோமர்களின் ஊர்வலம் போரைப் பறை சாற்றும். இயேசுவின் ஊர்வலம் சமாதானத்தைப் பேசும்.

எருசலேம்:
எருசலேம் பற்றிய அறிவு நமக்கு ஒரு கட்டாயத் தேவை, ஒவ்வொரு காலகட்டத்திலும் இயேசுவோடு இணைந்தே செல்கிறது. முதன் முதலில் எருசலேம் நற்செய்தியில் அறிமுகமாகும் பொழுதே கலங்குகிறது.

ஞானியர் ஏரோதிடம் யூதர்களின் அரசன் எங்கே பிறந்திருக்கின்றான் என்று கேட்டபொழுது ஏரோது கலங்கினான். எருசலேமும் கலங்கியது. (மத்தேயு 2:3). ஏன் இவ்வாறு எழுதுகின்றார்?

ஏரோது கலங்குவதற்கு உரிய காரணம் எல்லோருக்கும் தெரியும். அதில் ஓர் அர்த்தம் உண்டு. தனக்குப் போட்டியாக வந்துவிடுவான் என்று பயப்படுகின்றான். ஆனால் இங்கு எருசலேம் ஏன் கலங்குகிறது? எருசலேம் பற்றிய செய்திகளைச் சொல்லியே ஆக வேண்டும்.

அஃது ஒரு நகரமட்டுமல்ல. எதிர்காலத்தில் இயேசு நின்று நிலைத்து போராட போகின்ற யுத்த பூமியாகக் கூறுவார் (மத் 23:37) “எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே!

இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்.(லூக் 19:41) எருசலேம் ஒரு கலவர பூமி. பரிசேயர், சதுசேயர், மதகுருக்கள் ஏன் ஒட்டு மொத்த எருசலேமே அவரைக் கொல்ல துடிக்கின்றது.

இயேசு முற்றிலுமாக, உணர்ச்சிமயமாய் மனித மீட்பை மனதில் கொண்டு செயல்படும் நேரத்தில் கண்ணீர் விடுகின்றார்.

இயேசு பிறந்த செய்தியைக் கேட்டுக் கலங்கிய எருசலேம், அவர் ஊர்வலமாக நகரின் உள்ளே நுழைந்தபொழுது "நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு இவர் யார்” என்று விசாரித்தார்கள்! (மத்தேயு 21:10) மத்தேயு துல்லியமாக இயேசுவுக்கும் எருசலேமிற்கும் உள்ள அதிர்வுகளைக் கூறுகின்றார்.

இயேசு வரும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் பரபரப்பு அல்லது அதிர்வலைகள் தொற்றிக் கொள்கின்றன. இயேசு படகில் ஏறத் திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்படுகிறது. (மத் 8:24)

தன்னைப் பிடிக்கவருகின்ற வீரர்களுக்கு 'நான்தான்' என்று இயேசு கெத்சமனித் தோட்டத்தில் கூறுகையில் எல்லோரும் தரையில் விழுந்தார்கள். (யோவான் 18:6). இயேசு உயிர் பிரியும் அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன (மத்தேயு 28 :51-52)மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. (மத் 28:1-2)

இயேசுவின் அதிர்வுகளை இயற்கையின் விளைவுகளை மத்தேயு தெளிவாக எழுதுகின்றார்.

இப்பொழுது மீண்டும் அதே கேள்விக்கு அஃதாவது எருசலேம் கலங்கியதன் பதில் தேடுவோம். இயேசுவின் பிறப்பை கேள்விபட்ட எருசலேம் தந்தையின் விருப்பத்தை, மக்களுக்காக வாழ்வு தரவருகின்றவரை நாம் கொல்லவேண்டியிருக்கிறதே என்று கலங்கியது. எருசலேமை பற்றி மேலும் ஒரு விளக்கம். இயேசு வாழ்ந்த காலத்தில் எருசலேம் நகரம் யூதர்களின் அதிகாரமையமாக விளங்கியது. அரசியல் அதிகாரம், பொருளாதர அதிகாரம், ஆன்மிக அதிகாரம் அனைத்தும் அங்கே மையம் கொண்டிருந்தன. எருசலேம் ஆலயம் என்பது ஏழைகளை எமாற்றும் இடமாக இருந்தது. அதேபோல் ஆட்சியாளர்கள் ஏழை எளிய மக்களிடம் வரி வசூலித்து அவர்களைப் பொருளதாரச் சுமைக்கு ஆளாக்கினார்கள். இதையெல்லாம் இயேசு நன்கு அறிந்திருந்தார்.

ஆட்சியாளர்கள் கொண்டிருந்த அரசியல் அதிகாரத்திற்கும், இயேசு கொண்டிருந்த அதிகாரத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. யூத அரசர்கள் கொண்டிருந்த அதிகாரமோ மண்ணுலகு சார்ந்த அதிகாரம். இது மக்களை அடக்கி ஆள்வதற்கான அதிகாரம் நேர்மையையும் நீதியையும் விலைக்கு விற்கும் அதிகாரம், இந்த அதிகாரம் தற்காலகமானது மட்டுமல்ல போலியானது பெருமையும் புகழையும் விரும்பும் அதிகாரமாக அஃது இருந்தது.

இயேசு ஓர் அரசராகக் கோவேறு கழுதையின் மீது ஏறி வரும்பொழுது விண்ணுலகின் அதிகாரம் தாங்கியவராய் வருகிறார். அது விண்ணுலகு மதிப்பீடுகளின் அன்பு, அறம், உண்மை, நிதி நேர்மை, பதிர்வு, மன்னிப்பு, இரக்கம் போன்றவற்றை மக்களிடையே விதைப்பதற்கான அதிகாரமாக இருந்தது. அவருடைய அதிகாரம் மக்களை வாழ வைப்பதற்கான அதிகாரமாக இருந்தது. இயேசு, ஓர் அரசராக எருசலேம் நகருக்குள் நுழைந்தாலும் கீரிடம் தாங்கி மாபெரும் தேரில் பயணிக்கவில்லை. மாறாகச் சமூகத்தில் சுமைகளை ஏற்றிச் செல்லும் கோவேறு கழுதையின் மீது பயணம் செய்தார். “தாவீதின் மகனே வாழி !“ என்று எல்லோரும் கூறும்போது மிகவும் தாழ்ச்சியோடும் எளிமையாகவும் எருசலேமுக்குள் நுழைகிறார். தன் தலையில் முள்முடி சூடிக் கொள்ளப் போகிறோம் என்பதை முன்கூட்டியே அறிந்த இயேசு மனதில் தாழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஆரவாரம் இல்லாமல் பயணம் செய்கிறார்.

இதைத் திருத்தூதர் பவுல் வெகு அழகாக எழுதுவர். கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாக இருக்கும் நிலையைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய ஒன்றாகக் கருதவில்லை. மாறாகத் தம்மையே தாழ்த்தி அடிமைக்கோலம் பூண்டார்.(பிலி.2:6-11)

இயேசு நகருக்குள் நுழைந்தபொழுது தாவீது மகனுக்கு ஓசான்னா என்று பாடி மகிழ்ந்தார்கள். ஆனல் இயேசு, தான் துன்பப்படப் போகிறோம் என்பதை அறிந்து மனம் கலங்கியவராய் வருகிறார். ஒருவருடைய சாவு எவ்வளவு வலியைத் தருமோ என்பதல்ல முக்கியம். தான் சாகப் போகிறோம் என்பதை அறிந்து கொண்டு அதை நோக்கிப் பயணிப்பது அதைவிட வலி நிறைந்தது. எனவே வெளியே சொல்லமுடியாத வலியோடும் வேதனைகளோடும் பயணம் செய்தார்.

யூதர்கள் வார்த்தையால் கொடுக்கும் அவமானங்களையும், சாட்டையால், ஆணியால் அறையும் வலிகளையும் தாங்கிக் கொள்ளும் மனநிலையுடன் கழுதையில் ஏறிவருகின்றார்.

ஏன் இத்தனை துன்பங்கள் பட வேண்டும். பலருடைய மீட்புக்காக ஒருவர் சாக வேண்டும் என்ற தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவே இயேசு பாடுகள் படுவதை விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டார். நம்மையும் ஆழமாக அன்பு செய்வதன் அடையாளமாகவே இயேசு துன்பங்களை ஏற்றுக் கொண்டார். சுற்றியுள்ள பல நகரங்களிலிருந்த பாஸ்கு கொண்டாட வரும் மக்கள் கூட்டத்தின் நடுவில் ஊர்வலம்.

நீரில் மிதந்த நெருப்பு

யூதகுருமார்கள் அவரை அழிக்க, கொல்லுவதற்கு சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்தார்கள்.

எருசலேம் ஒரு பிரபஞ்ச நகரம்-தலைநகர், மதங்களின் புனித பூமி, கலாச்சார மேதல்களின் போர்களம்- யுத்த பூமி, யூதர்களின் வழிபாட்டு தலம் - சாலமோன் கட்டிய பேராலயம்.

இங்கே தான் ஊர்வலயாக வருகின்றார். ஊர்வலத்தில் ஓசான்னா என்று ஒங்கி குரலெழுப்வோம். பின் கூட்டத்தோடு பிலாத்துவின் அரண்மனையில் வெளியே நின்று இயேசுவை சிலுவையில் அறையும், பரபாசை விடுதலை செய்யவும் என்று கூவப்போகிறோம். உயர்ந்த லட்சியவாதியை மரணம் கூடத் தோற்கடிப்பதில்லை என்பதை இயேசு தன்னுடைய சாவின் மூலம் நிருபித்து காட்டிவிட்டார். அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றுவிடலாம். ஆனால் நீதிக்கான நேர்மைக்கான, மன்னிப்புக்கான, இரக்கத்துக்கான அவரின் வேட்கையை, லட்சியத்தை எந்தச் சிலுவை மரணமும் தோற்கடிக்க முடியாது என்பதைத் தான் குருத்து ஞாயிறு சுட்டிகாட்டுகிறது. குருத்தோலைத் திருவிழா தரும் செய்தி என்ன? தம்மையே தாழ்த்தி அடிமைக் கோலம் பூண்டர் இயேசு.

அதுசரி

இயேசு ஊர்வலமாக எருசலேமிற்குள் செல்கின்றார். அங்கோ யாரெல்லாம் அவருக்காகக் காத்து இருக்கிறார்கள்.
சிலுவையும்! மரணமும்!!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது