மண்ணில் மடிந்து, விண்ணில் ஜொலிக்க...
சிந்தனைச் செல்வர். பேராசிரியர் -அ.குழந்தைராஐ; காரைக்குடி.
ஈஸ்டர் என்றால் நம் நினைவுக்கு வருவது கொண்டாட்டம் விருந்து, சாக்லேட் மற்றும் ஈஸ்டர் முட்டை. இதற்கெல்லாம் அப்பால் ஈஸ்டர் என்பது இயேசுவின் உயிர்ப்பின் விழா. உயிர்த்தெழுவதற்கு முன் சாவைச் சந்தித்து அதனை வென்று இறைமகன் இயேசு தான் சொன்னதை வெற்றியுடன் நிலை நாட்டியுள்ளார்.
ஈஸ்டர் என்னும் வார்த்தை 'EOSTRE" எனும் AngloSaxon மொழியிலிருந்து வந்தது. பொருள் 'திறப்பு" என்பதாகும். இந்நிகழ்வின் பழைய வரலாறு 'பாஸ்கா" எனப்படும் Passover. கடந்து செல்லுதல் எனப்படும். ஈஸ்டர், ஏன் ஆண்டுக்கொருமுறை மாறி மாறி வருகிறது. என்றால், அன்றைய பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடிய முறையைப் பின்பற்றியதாகும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 21ஆம் தேதிக்கு பின்வரும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஞாயிறுக்கிழமை தான் ஈஸ்டர் (21ஆம் தேதியே பௌர்ணமி ஞாயிறு வந்தால் அடுத்த ஞாயிறு கொண்டாடுவர்கள்).
முட்டை உடையாமல் கோழிக்குஞ்சி உருவாவதில்லை
கற்கள் உடைக்கப்பட்டால் தான், சிற்பம் வெளிவரும்
நெல் உடைபட்டால் அரிசி உருவாகும்
சந்தனம் அரைப்பட்டால் மணமுண்டு
பட்டை தீட்டினால் வைரம் ஜொலிக்கும்.
துன்பங்களிலிருந்து விடுபட்டு தெய்வீகமாவது மனிதம்....
சிலநாடுகளில் இயேசுவின் பிறப்புப் பெருவிழாவைக் காட்டிலும்,உயிர்ப்புப் பெருவிழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள். இதிலும் ஓர் உண்மை உள்ளது. மானிடனாகப் பிறப்பதைக் காட்டிலும், வேறு எந்த மார்க்கத்திலும் இல்லாத ஒன்றை இயேசு செய்து காட்டியது தான் உயிர்த்தல் எனும் மாபெரும் மறையுண்டு. இயேசுவுக்கு முன் யாரும் உயிர்த்ததில்லை. அவருக்குப் பின்னரும் யாரும் உயிர்த்தெழ முடியாது. ஏனெனில் மனுகுலம் முழுமைக்கும் ஒரு முறை இயேசு உயிர்த்தெழுந்தார் .
உயிர்த்த இயேசு ஒருநாளில் காட்சிக் கொடுத்து மறைந்தவர் அல்ல. 40 நாட்கள் 13 முறைப் பல்வேறு நபர்களுக்கு, பல சூழல்களில் காட்சி கொடுத்துள்ளார். தோமா தொட்டுப் பார்த்து "ஆண்டவரே" என விளித்தார். பின்னர்ப் பல ஆண்டுகள் கழித்துக் காலந்தப்பியப் பிறவியான பவுல் அடியாருக்கும் காட்சி தந்தார். எனவே இவைகள் கற்பனைக் கதையல்ல.
உயிர்ப்பின் விவிலிய ஆதாரம் என்ன?
இயேசு தான் உயிர்ப்பதற்கு முன் 3 நபர்களை உயிர்தெழ வைத்திருக்கிறார்.
1.யாயீர் மகள் (மத்.9:25)
2.நயீன் பட்டண விதவையின் மகன்
3.இலாசர் (யோவான் 11)
யாயீர் மகளை வீட்டில் உயிர்த்தெழச் செய்தார். நயீம் பட்டணச் சிறுவனை - கல்லறைக்குப் போகும் வழியில் உயிர்ப்பித்தார். இலாசரை இறந்த 4 நாட்களுக்குப் பின் கல்லறையில் உயிர்தெழச் செய்து, தன்னுடைய உயிர்ப்புக்கு முன் சுவையாக இதைச் செய்தார். தாபோர் மலையில் மறு உருவாகித் தன்னைக் காண்பித்து, பேதுருவைக் குழப்பத்திற்கு உள்ளாக்கிய நிகழ்வு மற்றொரு சுவை.
இயேசுவின் உயிர்ப்பு ஏன் - எதற்காக - எவருக்காக?
1.கிறிஸ்துவின் உயிர்ப்பு நமக்கு முன்னேடி. நம்மை உற்சாகப்படுத்த, நம்பிக்கைக் கொள்ள. 'கிறிஸ்து உயிருடன் எழுயப்படவில்லை யென்றால், நாங்கள் பறைசாற்றிய நற்செய்திப் பொருளற்றதாயிருக்கும்" என்கின்றார் பவுல்(1 கொரி.15:14)
2.இயேசுவின் உயிர்ப்பு அவர் ஆண்டவர் என நிருபிக்கப்பட்டது (உரோமை1:4)
3.இயேசுவின் உயிர்ப்பு நம் பாவங்களிலிருந்து நம்மை மீட்கிறது(1கொரி15:17)
4.'இறந்தேன், ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கிறேன்" சாவின் மீது இயேசுவுக்கு அதிகாரம் உண்டு.(திருவெளி 1:17-18)
ஊனுடலில் மண்ணுலகில் 33 ஆண்டுகள் வாழ்ந்தார். ஆனால் உயிர்த்த இயேசு ஆவியானவர் வடிவில் நம்மில் என்றென்றும் வாழ்கின்றார்.
உலகில் உள்ள மதங்களில் எந்த மதத்திற்கும் இல்லாத சிறப்பு நம் இயேசுவுக்கு உண்டு. இன்றும் கூட அவரது சிலுவைப் பாதையை, மரணத்தை நினைத்துப் பல்லாயிரக்கணக்கானோர் அழுகின்றனர். ஏனெனில் அவர் நம்மில் ஒருவர். உலகம் முடியும்வரை நான் உங்களோடு எந்நாளும் இருப்பேன் என்று வாக்குக் கொடுத்த அவர் சாகவில்லை. மாறாக நாம் மகிழ்ச்சியுடன் ஆவியின் கனிகளைப் பெற்றவர்களாக மாற்ற அவர் உயிர்த்தார். உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாய் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ அழைக்கிறார். வாருங்கள், வாழ்ந்துக் காட்டுவோம். . . .
அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்.