இறப்போம் உயிர்ப்போம்.
திரு AJS ராஜன் - சென்னை
ஒருவர் தனது வீட்டிற்குப் பின்புறமுள்ள தோட்டத்தில் இரண்டு விதைகளைப் புதைத்தார்.
ஒரு விதை நினைத்தது:
இருண்டப் பூமியில் எனது வேர்களைச் செலுத்தி இங்கு என்ன இருக்கிறது? என்று புது உலத்தைக் கண்டு கொள்ளுவேன். எனது இளங்குருத்துகள் முளைவிட்டு மண்ணைப் பிளந்து கொண்டு வெளியே வந்து வெளி உலகைப் பார்க்க ஆசைப்படுவேன். மணணை எதிர்த்துக் கொண்டு மேல் எழும்ப விடாமுயற்சிச் செய்வேன். மேலே வந்ததும் அழகான பச்சை இலைகளை வளர்த்துப் பசுமையை உண்டாக்குவேன். சிலநாட்களில் பூக்க ஆரம்பிப்பேன். அப்பொழுது அவ்வழியே செல்லும் சிறுவர்களும், பெரியவர்களும் நின்று அதன் அழகை ரசித்துச் செல்வார்கள். என்ன அழகு! என்ன பெருமை எனக்கு! பின்னர் அது கனியாக மாறும் மக்கள் அதனை உண்டு மகிழ்வர். சிலர் எனது நிழலில் அமர்ந்து இளைப்பாறி, கனியை உண்டுச் செல்வார். பல பறவைகள் இரவில் எனது கிளைகளில் அமர்ந்து உறங்கும்.இவ்வாறாக அந்த விதைத் துணிவுடன் தன் நம்பிக்கையுடன் வளரத் தொடங்கியது.
மற்றெரு விதை புலம்பியது.
ஐயோ! என்ன செய்வேன்? இருண்டப் பூமிக்கு அடியில் சென்றால் எனக்கு ஒன்றும் தெரியாதே? வழிகாட்டி இல்லமால் குருடனைப்போல் ஆனால் எனது நிலை என்ன? எனது வழிகாட்டி யார்? மேலேயுள்ள மண்ணைப் பிளந்து கொண்டு வெளியே வர முயன்றால் மென்மையான எனது இளந்தளிர்கள் இன்னலுறுமே. வலிதாங்காதே. இதனைக் கடந்தாலும் எனது இலைகளைப் பூச்சிகளும், புழுக்களும் தின்று எனது உழப்பை வீண்ணடிக்குமே! இதிலிருந்து தப்பினாலும் நான் பூக்கும் மலர்களைப் பெண்கள் பறித்துத் தலையில் வைத்துக் கொள்ளுவார்களே! அப்பொழுது எனக்கு வேதனைத் தாங்க முடியாது.
நான் காய்க்கும் பழங்களைச் சிறுவர்கள் கல்லால் அடித்துப் பறிப்பார்கள். பறவைகளும், அணில்களும் எனது கனிகளைக் கடித்து யாருக்கும் உதவாமல் செய்து விடுமே? நன்றாக வளர்ந்தாலும் விறகுக்காக என்னையே வெட்டி எரித்துச் சாம்பலாக்கி விடுவார்களே ! என்ன செய்வது?
"நல்ல நேரம் வரும் பொழுது நான் முளைக்கிறேன்" என எண்ணிக் கொண்டு துணிவில்லாமல் தன்னம்பிக்கையின்றிச் செயலற்றுக் கிடந்தது.
இரண்டு மூன்று நாட்கள் கழித்து அந்தத் தோட்டத்திற்குள் நுழைந்த ஒரு கோழி இரைக்காக மேய்ந்து கொண்டிருந்தது. மண்ணைத் தனது கால்களால் கிண்டிய பொழுது முளைக்காத விதை அதன் கண்ணில் பட்டது. உடனே ஆவலுடன் அதைக் கொத்தித் தின்று விட்டது.
யோசியுங்கள்...
இயேசு நிக்கதேமிடம் "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகின்றேன்" என்றார். மேலும் "ஒருவர் தண்ணீராலும், தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாடசிக்கு உட்பட இயலாது" எனக் கூறினார். பாலை நிலத்தலி மோசேயால் பாம்பு உயர்த்தப் பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்படவேண்டும் இப்பொழுது அவரிடம் நம்பிக்கைக் கொள்ளும் அனைவரும் நிலை வாழ்வுப் பெறுவர்.
தன் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் தன் மகனை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கைக் கொள்ளுவோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை (யோவான் 3:3-18)
தவநாட்களை அனுசரித்துக் கொண்டு இருக்கும் நாம் இயேசுவோடு வெள்ளியன்றுச் சிலுவையில் இணைந்து மரித்து, உயர்ப்பு ஞாயிறு அன்று மறுபடியும் பிறப்போம். முளைத்த விதைபோல் நாமும் இறந்துப் பின்னர் உயிர்பெற்று என்றும் நிறைவான இறைபிரசன்னத்தில் வாழ்வோம் என்ற நம்பிக்கையுடன் துணிந்துச் செயல்படுவோம்.
முளைக்காத விதையைச் சாத்தான் என்ற கோழித் தின்றது போல் நாமும் இறக்காமல் அலகையின் வலையில் சிக்கி நமது நம்பிக்கையையும் மறுபடிப் பிறப்பதையும் இழக்காமல் நமது பேரின்ப வாழ்வை நழுவவிடாமல் இருப்போம்.