உயிர்ப்பு: பேசாத மொழி.
இந்த பிரபஞ்சத்தை நாம் அண்ணாந்து பார்க்கையில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் அழகை வாரி இறைக்கும். ஆனாலும் நம் கண்களுக்கு சூரியனும் நிலவும் தனியோர் அழகு. அதைப் போல் தான் என்றும் வாழும் நற்செய்திகள்.
இயேசு மார்த்தாளிடம் "உயிர்ப்பும் உயிரும் நானே" என்றார். இந்த வரிகள் தத்துவ ஆழமும், ஆன்மீகம் உச்சமும் கொண்டு நம்மை பிரமிப்பூட்டுகின்றது. விவிலிய உட்பொருளின் எதிரொலியாக இந்த வரிகள் உள்ளது.
உயிர்ப்பு:
ஆன்மீக அனுபவத்தில் மனிதன் பாவங்கள் செய்து இறந்துவிட்டான். அவனது முதல் தேவை பாவத்திலிருந்து வெளிவருதல். மீண்டும் மறுபிறப்பு. மரணத்திலிருந்து வாழ்விற்கு உயர்தெழுதல் வேண்டும்.
ஊதாரி மகன் மனந்திருந்தி திரும்பியபொழுது தந்தை கூறுகின்றார். “என் மகன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயர்பெற்று வந்துள்ளான்” (லூக்கா 15:24)
இதுவே உயிர்ப்பு. இந்த வார்த்தையை நாம் உற்று நோக்க வேண்டும். இது எல்லாருடைய மனதிலும் எழும் முக்கியமான கேள்வி. உயிர்ப்பு என்றால் என்ன?.
உயர்ப்புக்கான பதிலை, விளக்கத்தை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது. அது ஓர் அனுபவம். பேசாதமொழி. உயர்ப்பின் விளக்கத்தை, பதிலை தேடி ஆழமாக சென்றால் கேள்வி மறைத்துவிடும். அது ஒரு அனுபவமாக மாறிவிடும்.
இயேசு உயிர்த்த அன்றே உயர்ப்பிற்கு ஒரு அழகான நிகழ்வை நடத்திக் காட்டுகின்றார்.
தோட்டக்காரரும், இயேசுவும்
மரியா இயேசுவின் கல்லறைக்கு வெளியே நின்று அங்குள்ள தோட்டகாரரைப் பார்த்து “உடலை எங்கே வைத்தனர்?” என்று வினாவ, தோட்டக்காரரின் உருவத்தில் நின்ற இயேசு ‘மரியா‘ என்றார். உடனே மரியா அவரைப் பார்த்து “போதகரே” என்றார். இயேசுவை கண்டாள்.
தோட்டக்காரர் உருவத்தில் கண்டவர் இயேசுவை உணருகின்றாள். அதுவே உயர்ப்பின் அனுபவம். அதை வார்த்தைகளால் கூறமுடியாது. உயிர்ப்பைப் பற்றி சொல்லக்கூடிய அனைத்தும் அதை பொய்யாக்கும். எந்த விளக்கமும் விவரிக்க முடியாத ஒன்று.
அதற்கு பதில் அளிக்க மனம் முன் வந்து ஒரு விளக்கத்தைக் கொடுக்கும். நமக்கு நாம் நினைக்கும் உண்மையை மட்டும் சித்தரிக்கும்.
உயிர்ப்பை அறியும் முயற்சியே நம்மை வழி தவறச் செய்கிறது. உயர்ப்பை உணரலாம். ஆனால் விவரிக்க முடியாது. அது நமக்குள் இருக்கமுடியும். உள்ளத்தின் உள்ளே இருந்து மட்டுமே உணரமுடியும். அது ஓர் ஆன்மீக பிறப்பு.
இந்த உயர்ப்பின் அனுபவத்தை வெகு தெளிவாக பவுலடியார் கூறுகின்றார். இனி வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். (கலா. 2:20)
இதில் ”வாழ்வது நானல்ல” என்பது உயர்ப்பாகும். கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் என்பது உயிர்.
பழைய பாவ ஆசைகள், வாழ்க்கை முறைகள் விட்டு புதிய சுகத்துடன் மாற்றபட்டு கிறிஸ்துவுடன் நம்மை அடையாளம் காணலாம். உயிர்ப்பு - பேசாத மொழி பந்தி மேற்பார்வையாளன் நீரை இரசமாக சுவைத்த அனுபவம்.
தோட்டக்காரரை இயேசுவாக பார்த்த அனுபவம். சமாரிய நாட்டின் கிணற்றடியில் களைப்பாக காணப்பட்ட இயேசுவை மெசியாவாக கண்ட அனுபவம்..
அந்த அனுபவம் என்பது கிறிஸ்து என்னில் வாழ்கிறார் என்ற நிலையாகும். நம்வாழ்வில் கிறிஸ்துவின் பிரசன்னமாக கருதப்படும் பரிசுத்த ஆவியானவர், நமக்குள் வசிப்பதாகவும் கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ வழிகாட்டுவாகவும் புரிந்து கொள்ளலாம். அதுவே உயர்ப்பின் உயிர் ஆகும்.
பழைய சுயத்திற்கு மரணம் மற்றும் கிறிஸ்துவில் வாழ்வதுமே உயிர்ப்பும் உயிரும் ஆகும்.
வாழ்ந்து காட்டுவோம். மனதில் இருக்கும் காயங்களுக்கு மென்மையான மருந்து போடும் தான் உயிர்ப்பும் உயிரும் நானே என்ற கிறிஸ்துவின் வார்த்தைகள்.. வாழ்ந்து காட்டுவோம்.