உயிர்ப்பில் ஒரு உறவு

திரு இரான்சம் அமிர்தமணி

ஈஸ்டர் பெருவிழா! இறைமகன் இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததன் மாட்சிமையைக் கொண்டாடுகின்ற திருவிழா!

மூன்று ஆண்டுகளாகத் தனது சீடர்களோடு நெருக்கமாக உறவாடி, இறையரசின் மேன்மையை எடுத்துச் சொல்லி, பற்பல போதனைகளைச் செய்து, எத்தனையோ அருள் அடையாளங்கள் வாயிலாகத் தன் இறைத்தன்மையை நிரூபித்து, அவர்களைத் திடப்படுத்தி வழிநடத்தி வந்த இயேசு, வெள்ளிக்கிழமையன்று கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு உயிரிழந்துவிட்டார். அவர் கல்வாரிக் குன்றில் சிலுவையில் அறையப்பட்டு இறந்துபோனதை சீடர்கள் பலரும் நேரிலே கண்டார்கள். “ஆண்டவர் - போதகர் என்று அவர்கள் கொண்டாடிய இயேசு இப்போது இல்லை” என்ற எண்ணமே அந்தச் சீடர்களின் மனதில் இருளையும், குழப்பத்தையும், அச்சத்தையும் உண்டாக்கியிருந்தது.

அடுத்த ஓரிரு நாள்களுக்குச் சீடர்களின் மனதில் இந்தச் சங்கடமான நிலைமையே நீடித்திருந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கல்லறைக்குப் போய்விட்டு மிரட்சிக் கலந்த வியப்போடும், மகிழ்ச்சியோடும் திரும்பிவந்த மற்றச் சீடர்கள், "கல்லறைத் திறந்து கிடக்கிறது, இயேசுவின் உடல் அங்கே இல்லை: அவர் உயிர்த்துவிட்டார்!" என்று கூறியதைக் கேட்டபோது அனைவரது உள்ளமும், உடலும் புத்துணர்ச்சியாலும், புதுப்பிக்கப்பட்ட விசுவாசத்தாலும் நிறைந்தது. வெள்ளிக்கிழமை வேதனையிலிருந்து விடுபட்டு, வெற்றித் திருநாளாம் உயிர்ப்பு ஞாயிறின் உன்னதத்தை, உற்சாகத்தைக் கண்டுகொண்டார்கள்.

ஆம்..! சாதாரணத் தண்ணீரைச் சுவைமிகு இரசமாக மாற்றிய இறைமகன் இயேசு, தனது உயிரற்ற உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையைப் புதிய வாழ்வின் கருவறையாக மாற்றினார். கிறிஸ்துவின் உயிர்ப்பு, கிறிஸ்தவத் திருமறையின் மறையுண்மையும், வலிமையுமாக இருக்கின்றது. கிறிஸ்துவின் உயிர்ப்பு, புனைந்துரைக்கப்பட்ட புராணக் கதையல்ல; மாறாக, திடமான, நம்பத்தகுந்த சாட்சியங்களோடு நிரூபிக்கப்பட்ட மறுக்கமுடியாத வரலாற்று உண்மையாகும்.

வெற்றி ஆரவாரத்தோடு இயேசு எருசலேம் நகருக்குள் நுழைந்ததும், அதனைத் தொடர்கின்ற அவரது பாடுகளும், மரணமும் பழைய ஏற்பாட்டு நூலில் பல இறைவாக்கினார்களால் முன்னுரைக்கப்பட்டுள்ளன. "பல துன்பங்களை அனுபவித்து உயிர் துறந்த பின்னர், மூன்றாம் நாளில் நான் உயிர்த்தெழுவேன்" என்று இயேசு பல தடவைச் சொன்னது, அவரது உயிர்ப்பில் நிரூபிக்கப்பட்டது.

வெற்றி ஆரவாரத்தோடு எருசலேமில் நுழைதல்: மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். (செக்காரியா 9:9)

காட்டிக் கொடுப்பதற்கு கூலி - முப்பது வெள்ளி காசுகள்: அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளைக்; கொடுத்தார்கள். ஆண்டவர் என்னிடம், "கருவூலத்தை நோக்கி அதைத் தூக்கி எறி; இதுதான் அவர்கள் எனக்கு அளித்த சிறந்த மதிப்பீடு!" என்றார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் எறிந்துவிட்டேன். (செக்காரியா 11:12,13)

தண்டிக்கப்பட்டு துன்புறுத்தப்படுத்தல்: அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். (எசாயா 53:5)

எதிர்ப்பு சொல்லாமல் கொடுமைகளை ஏற்றுக்கொள்ளுதல்: அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். (எசாயா 53:7)

குற்றவாளிகளோடு ஒருவராகக் சாவுக்கு கையளிக்கப்படுத்தல்: அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினர். (எசாயா 53:12)

blood of Jesusஊடுருவக் குத்தப்படுத்தல்: அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்றுநோக்குவார்கள்; அவனை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்துபோன தம் தலைப் பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள். (செக்காரியா 12:10) தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழந்து கொண்டார்கள்; என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள். (திருப்பாடல் 22:16)

அவரது எலும்புகள் முறிவுப்படுவதில்லை: அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. (திருப்பாடல் 34:20)

செல்வந்தரோடு புதைக்கப்படுவார்: வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை; ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்; செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.(எசாயா 53:9)

சாவை வென்று உயிர்த்தெழுதல்: என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.(திருப்பாடல் 16:11,12) ஆனால், கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி; பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து என்னைத் தூக்கி நிறுத்துவார். (திருப்பாடல் 30:3) நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். (திருப்பாடல் 49:15)

தனது உயிர்ப்பை இயேசு முன்னறிவித்தது: இயேசு மறுமொழியாக அவர்களிடம், "இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" என்றார். அப்போது யூதர்கள், "இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?" என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார். (யோவான் 2:19-21)
யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார். (மத்தேயு 12:40)
இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். (மத்தேயு 16:21)

திருத்தூதர் புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலின் பதினைந்தாம் அதிகாரத்தில் கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு உறுதியான சான்று பகர்கின்றார். "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்" என்று 14-ஆம் வசனத்திலும், "இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது" என்று 20-ஆம் வசனத்திலும் தெளிவாக எழுதுகிறார்.

வலியும், துயரமும், கண்ணீரும் மிகுந்த இவ்வுலகில், உயிர்வாழ்வதன் மேன்மையை இந்த உயிர்ப்பு விழா நமக்கு நினைவூட்டுகின்றது. "நமது ஆன்மாவில், அவர் நிறுவிய திருச்சபையில், புனிதமிகு திருநற்கருணையில், விண்ணகத்தில் கிறிஸ்து உண்மையாகவே வாழ்கிறார்" என்ற நமது விசுவாசமே, நம்முடைய தனிப்பட்ட வேண்டுதல்களுக்கும், கூட்டுப் பிரார்த்தனைகளுக்கும் பொருளைத் தருகின்றது. உயிர்த்தெழுந்த கிறிஸ்து இயேசு எங்கும் எப்போதும் பிரசன்னமாயிருக்கிறார் என்ற நம்பிக்கையே, சோதனைகளை ஜெயித்திடும் வலிமையையும், தேவையற்ற கவலைகள்-அச்சங்களிலிருந்து விடுதலையும் நமக்குத் தருகின்றது.

walk to emmaus
அன்று எம்மாவு கிராமத்திற்கு செல்லும் வழியில் இரண்டு சீடர்களோடு கூடவே பயணித்தது போல, இன்றும் நம் வாழ்க்கைப் பாதையில் உயிர்த்த இயேசு நம்மோடு துணையாக வந்துகொண்டிருக்கிறார். அன்றாட வாழ்வில் நமது எதிர்பார்ப்புக்களை மாற்றியமைப்பதன் வழியே, பல நிகழ்வுகளில் நாம் எதிர்கொள்ளுகின்ற பல மனிதர்களின் வடிவில் நம்மை சந்திக்கின்றார். எப்போதும் துணைநிற்கின்ற நண்பனின் தோள்களில், எதிர்பாராத நேரத்தில் கைகொடுக்கின்ற அயலானின் கருணையில், தேவையான சமயத்தில் உதவி செய்கின்ற அறிமுகமற்ற ஒருவரின் பரிவில், நமது குடும்பத்தாரின் உண்மையான அன்பில், சிறு குழந்தையின் பாசாங்கு இல்லாத சந்தோஷத்தில் - இங்கெல்லாம் அவரது பிரசன்னத்தை நாம் அறிந்துகொள்ள நமது கண்களை திறக்க முயற்சி செய்கிறார். நமது அகக்கண்களைத் திறந்து நாமும் இயேசுவோடு பயணம் செய்யத் தயாராவோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  ஈஸ்டர் பெருவிழா