கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்



உனக்கு வரவிருக்கின்ற துன்பத்தைப் பற்றி அஞ்சாதே!
திருவெளிபாடு 2:10

நமது அன்பு அன்னை கன்னி மரியா தனது மூன்றாம் வயதில் ஆலயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டார்கள். கன்னி கருதாங்கி குமாரனை பெறுவாள் என்ற இறைவாக்கின் அடிப்படையில் மெசியாவை பெற்றெடுக்கப்போகும் பெண்ணின் கன்னிமை குறித்து சந்தேகம் எழக்கூடாது என்பதற்காக யூத குருக்கள் அர்ப்பணிக்கப்படும் குழந்தைகளை மூன்று வயது முதல் தேவாலயத்தின் மறைவில் பெண் ஆசிரியர்களின் பாதுகாப்பில் பராமரித்து வந்தார்கள். 15 வயது வரை பரிசுத்த ஆவியால் கருவுறவில்லை என்று கண்டால் அந்த பெண்ணை அவளின் பெற்றோரிடம் அனுப்பிவிடுவார்கள். பெற்றோர் இறந்து போயிருந்தால் தலைமை குருவே அந்த பெண்ணின் குலத்திலிருந்து ஒரு மனமகனை முறைப்படி தேர்வு செய்து அந்த பெண்ணுக்கு மணஒப்பந்தம் செய்து அனுப்புவார். இவ்வாறு பெற்றோரால் மூன்று வயதில் ஆலயத்தில் கடவுளுக்கு அர்ப்பணிக்கபட்டபோது அன்னை கன்னி மரியாள் தன் பெற்றோர் பிரிந்து செல்ல அஞ்சவில்லை.தலைமை குருவின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து சூசையோடு மணஒப்பந்தமாகி நாசரேத்துக்குச் செல்லவும் நம் அன்னை அஞ்சவில்லை.


கபிரியேல் தூதர் வாழ்த்துரைத்த போதும் நித்தியத்துக்கும் தன் கன்னிமையை இறைவனுக்கு காணிக்கையாக்கிவிட்ட நிலையில் மெசியாவை தான் கருவற்று பெறப்போவதை அறிந்த மரியாள் தனது கன்னிமை காணிக்கையை இறைவன் ஏற்கவில்லையோ என்று கலங்கி வானதூதரிடம் இது எப்படி நிகழும்? "நான் கன்னி ஆயிற்றே" என்று கேட்கிறார். "தூய ஆவியின் நிழலில் உன்னத கடவளின் வல்லமையால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது" என்று வானதூதர் உரைத்தபோது குழந்தை உருவான விதம் பற்றி நீதிமானாகிய யோசேப்புக்கு விவரிக்கவும் மனிதர் முன் விசாரிக்கவும் அவர்களால் தீர்ப்புக்குள்ளாகி கல்லெறியப்படும் சூழ்நிலை ஏற்படும் என்று உணர்ந்தபோதும் அன்னை கண்ணிமரியாள் மனிதருக்கோ உலக தீர்ப்புக்கோ அஞ்சவில்லை. "நான் ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று உறுதியளித்தார்கள். தனக்கு வர இருந்த துன்பத்தைப் பற்றி அன்னை கன்னி மரியாள் அஞ்சலில்லை. ஒரு கழுதையின் மீது அமர்ந்து யூதேயா மலை நாட்டிற்கு விரைந்து சென்றார்கள் கருதாங்கிய சில நாட்களில். கரு கலைந்துவிடுமோ என்றும் அஞ்சவில்லை. இறைவனின் மீட்பு பயணம் அன்னை கன்னி மரியாவால் தொடங்கப்பட்டது. இயேசுவின் உயிர் காக்க எகிப்துக்கு ஓடிப்போக அஞ்சவில்லை. இயேசுவை காணிக்கையாக்கிய போது வியாகுல வாளுக்கும் அஞ்சவில்லை. கல்வாரியில் சிலுவை அடியில் என் மகன் பரிசுத்தர் என்று மௌன சாட்சியம் கொடுத்து நிற்கவும் அஞ்சவில்லை. இயேசுவுக்கு பின் 12 வருடங்கள் இயேசுவின் திருச்சபைக்கு தாயாக இருந்து சிலுவையினடியில் தன்னிடம் இயேசுவால் கொடுக்கப்பட்ட இயேசுவின் முதல் சீடர்கள் அனைவருக்கும் துணையிருந்து வரவிருக்கும் துன்பத்தைப் பற்றி அஞ்ச வேண்டாம் என்று வீர அமுதூட்டி திருச்சபைக்கு அடிக்கற்களாய் அவர்களை நிறுவிய அன்னை கன்னி மரியாள் உலகிற்கோ, மனிதருக்கோ அஞ்சவில்லை.


இறைவனின் சித்தம் சிதைய நாம் காரணம் ஆகக்கூடாது என்று என்னி இறைவார்த்தையை முற்றும் முழுவதும் வாழ்வாக்கவே இறைவனுக்கு மட்டுமே அஞ்சி தன்னை அடிமை என்று அர்ப்பணித்தார்கள்.


நாம் எவற்றுக்கெல்லாம் அஞ்சுவதில்லை என்று சிலபல உதாரணங்களைக் குறித்து சிந்திப்போம். இன்றைய உலகில் அனேகர் அனேக காரியங்களுக்கு அஞ்சுவதில்லை.

  • கருசிதைவு செய்ய - அஞ்சுவதில்லை. இணைச5:17
  • குழந்தைகளை வளர்ப்பது பற்றி கடவளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்பது பற்றி அஞ்சுவதில்லை. இணைச 6:7
  • கத்தோலிக்க திருச்சபையை விட்டு விலகுவதற்கு- அஞ்சுவதில்லை.இணைச 5:7
  • திருமண உறவுகளில் வாழ்க்கைத்துணையாய் எந்த மதத்தசராயினும் ஏற்றுக்கொள்ள அஞ்சுவதில்லை.தானியேல்2:43
  • கிறிஸ்தவன் கிறிஸ்தவள் என்று பெயரைக்கொண்டிருந்தும் உலகத்தார் தூற்றும் படி பாவ வாழ்வு வாழ அஞ்சுவதில்லை.இணைச5:11
  • ஒய்வு நாளாம் ஞாயிற்று கிழமையை கடவுளின் புனித நாள் என்று மதிக்காமல் அன்று திருப்பலியில் பங்கேற்பதை தவிர்ப்பதற்கு அஞ்சுவதில்லை. இணைச 5:12
  • விபச்சாரத்தை பாலியல் தொழில் என்று அங்கீகரிக்க- இணைச 5:18 அதற்கும் ஒரு படி மேலாய் சோதோமின் தீச்செயலை அங்கீகரிக்கவும் அஞ்சுவதில்லை.தொ.நூ 19:4,5
  • அளவு கடந்த பொருளாசையால் லஞ்சம், திருட்டு போன்றவைகளில் ஈடுபடவும்- அஞ்சுவதில்லை.தொ.நூ 27:35
  • உடன் வாழ்வோர் உற்றார் உலகத்தாரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கவும்- அஞ்சுவதில்லை.மாற்கு 3:21,22
  • பிறர் மனைவியோடு, பிறர் கணவரோடு தகாத உறவு கொள்ளவும்- அஞ்சுவதில்லை.மத் 14:3,4
  • பிறர்க்கு உரிமையான வீடு, நிலம், சொத்து போன்றவற்றை எவ்விதமாவது அழிக்கவோ அல்லது தனதாக்கிக்கொள்ளவோ அஞ்சுவதில்லை. அதற்காக மாந்திரீகம், செய்வினை, பில்லிசூனியம் செய்யவும்- அஞ்சுவதில்லை. திருவெளி 9:21, 21:8, 22:15

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாவ வாழ்வால் தன்னை படைத்தவரையே கொலை செய்யவும்- அஞ்சுவதில்லை. நம் பாவங்களாளேயே நம் பாவங்களுக்கு பரிகாரபலியாகி நமக்கு மன்னிப்பை பெற்றார் இயேசு. கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நாம் இதை அறிந்தும் பாவம் செய்ய அஞ்சுவதில்லை.


நமது பாவத்தால் இயேசுவை துன்புறுத்தி கொலை செய்கிறோம் என்பதை உணர்ந்து பாவத்தை நம்மிடமிருந்து முழுவதும் ஒழித்து தூய வாழ்வு வாழ முயல்வோம். பாவத்தை நம்மிடமிருந்து விலக்குவதில் ஏற்படும் துன்பங்கள் என்னும் உருவமில்லா சிலுவைகளை தாழ்ச்சியோடு சுமந்து கொள்ள அஞ்ச வேண்டாம். அஞ்சாமல் இருக்க துணிவு வேண்டும்: துணிவைப்பெற நம்பிக்கை வேண்டும். கல்வாரி சிலுவையில்- பரிகாரபலியில்- இயேசுவின் அன்பை உளமாற உணர்ந்தால் நம்பிக்கை பிறக்கும். அஞ்சாமல் துணிவோடும் நமபிக்கையோடும் நிலை வாழ்வை நோக்கி முன்னேறிட அன்னை கன்னி மரியாளின் கரம் பற்றி புதிய ஆண்டில் அடிவைக்க வாழ்த்துக்கள். மரியே வாழ்க.


ஆன்மாவைக் கொல்ல இயலாமல் உடலை மட்டும் கொல்பவர்க்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். மத் 10:28.

,திருமதி சேவியர் அன்னா ரெக்ஸ்-சென்னை