merry christmas to all

பெத்லகேம் பெருவிழா


மோட்சம் ஒரே விழாக்கோலமாக இருந்தது. இயேசுவின் பிறந்தநாளாம் இன்று. ஒரே பரபரப்பாக வானதூதர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். இயேசு தூதர்களிடம் 'இந்த வருடம் என் பிறந்தநாளை பூமியில் மனிதர்களோடு கொண்டாடப் போகின்றேன்".'அப்போ நாங்களும் உங்களோடு வருகிறோம்" என்றனர். 'சரி கிளம்புங்கள்" என்றார் இயேசு.

பூமி நோக்கி வருகையிலேயே பட்டாசு, மத்தாப்புக்கள் பூப்பூவாய் வானில் வெடிக்க இயேசு சிறு குழந்தையாகி மகிழ்ந்து சிரித்தார். 'என் பிறந்த நாளை இவ்வளவு சிறப்பாக கொண்டாடுகிறார்களே மாந்தர்கள்! அதோ அங்கே ஜெகஜோதியாக வண்ண விளக்குகளில் ஒளி பிரகாசமாக தெரிகிறதே. அங்கே செல்லலாம்" என இயேசுவும் தூதர்களும் அங்கே சென்றனர். ஓவ்வொரு வீட்டிலும் குழந்தைகளும் இளைஞர்களும் குவியலாக பட்டாசுகளை வைத்துக் கொண்டு வெடித்து மகிழ்ந்தனர். 'என்னவொரு மகிழ்ச்சி அவர்கள் பிறந்தநாளுக்கும் இந்த வானவேடிக்கை எல்லாம் உண்டா?" என்று இயேசு கேட்க 'இல்லை சாமி உங்க பிறந்தநாளுக்கு மட்டும் தான் இந்த கொண்டாட்டம்" என்றனர் வானதூதர்கள். என்ன ஒரு பெருந்தன்மை. அவர்கள் பிறந்த நாளைவிட என் பிறந்த நாளுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கிறார்களே? சந்தோசமாக இருக்கிறது. சரி இவர்களது பெற்றோர்களை உள்ளே சென்று பார்ப்போம். பெண்களின் சிரிப்பொலியும் பேச்சும் கேட்க இயேசு அங்கே நுழைந்தார். தங்கங்களும், வைரமும் ஜொலிக்க பட்டுசேலைகள் பளபளக்க அந்த அறையே தகதகவென தங்க ஒளியால் நிறைந்திருந்தது. 'பெண்கள் இவ்வளவு அலங்கார பதுமைகளாக காணப்படுகிறார்களே! இதில் எவ்வளவு சந்தோசம் கிடைக்கும்?" என்று இயேசு கேட்க 'ஆமாம் சாமி பெண்களின் ஒட்டு மொத்த சந்தோசமே நகையும் சேலையும் தானே. இன்று தான் அவர்களின் வசதியை காட்ட ஒரு வாய்ப்பு கிடைக்கிறது" என்றனர் தூதர்கள்.

சரி ஆண்களின் சந்தோசம் எதில் எப்படி என பார்ப்போம் என அடுத்த அறையில் நுழைந்தது இயேசுவின் பட்டாளம். அங்கே பெரிய மேசை மீது விதவிதமான மதுபான பாட்டில்களும் அசைவ உணவுகள், டிபன் வகையறாக்கள் என பரப்பி வைக்கப்பட்டிருக்க, அட்டகாசமான சிரிப்பொலியும், மகிழ்ச்சியும் ஆண்களிடம் பார்த்த இயேசு 'மதுபானம் இவ்வளவு மகிழ்ச்சி தருகிறதா? அப்ப நாமும் அமர்ந்து கொஞ்சம் டேஸ்ட் பார்க்கலாமா" என கேட்க தூதர்கள் 'வேண்டாம். வேண்டாம்.. நாம் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றது. வாருங்கள் போவோம்" என அங்கிருந்து கிளம்பினர். 'சரி அடுத்து நாம் எங்கு போகிறோம்?" என்றார். 'இப்ப நாம் பார்த்த பகுதி மிகவும் வசதிபடைத்தோர் பகுதி. அடுத்து நாம் பார்க்கப் போவது நடுத்தர மக்கள் வாழும் பகுதிக்கு" என அங்கே சென்றடைந்தனர்.

சில குழந்தைகள் அங்கும் இங்கும் ஒடிக் கொண்டிருந்தனர். ஒரு குழந்தை கையில் பலகாரங்களோடு வர இயேசு அருகில் போய் 'எங்கே பாப்பா போகிற?" என்றார். 'என் அத்தை வீட்டிற்கு கிறிஸ்மஸ் பலகாரங்கள் கொடுக்கப் போறேன்" என்றது. உறவினர், நண்பரோடு சந்தோசத்தை பகிர்ந்து கொள்கின்றேனரே. சரி இவர்களது அம்மாக்கள் என்ன செய்கிறார்கள் என அங்கு சென்றார். பெண்கள் அடுப்படியில் மும்மரமாய் வகைவகையான சமையலில் உழன்று கொண்டிருந்தனர். ஆண்கள் ரொம்ப சொகுசாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். சில ஆண்கள் தொலைப்பேசியில் வாழ்த்து பகிர்ந்து கொண்டிருந்தனர். சில வீடுகளில் நண்பர்கள், உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. மிகுந்த ஆர்ப்பாட்டம் இல்லாமல் கூட இந்த மக்களிடம் மகிழ்ச்சி நிறைவாக இருக்கிறதே. சந்தோசம் எனக் கூறி கிளம்பினர்கள் இயேசுவின் குழுவினர். பல வீடுகள் சென்று பார்த்ததில் நேரமாகிவிட சரி நாம் வீட்டிற்கு கிளம்பலாம் எனக்கூறி கிளம்புகையில், ஒரு பகுதியில் வானவேடிக்கைகள் இல்லை, எந்த சப்தமுமில்லை, ஏன் இங்கே அமைதியாக இருக்கிறது? என்ன நடக்கிறது பார்ப்போம் வாருங்கள் என இயேசுவின் குழு அங்கே சென்றது.

எதிரில் சிறுவன் வேகமாக வர இயேசு அவனிடம் 'என்ன தம்பி ஊரே கிறிஸ்மஸ் விழா கொண்டாடுது, நீங்க கொண்டாட மாட்டிங்களா?" 'இல்ல ஐயா, இந்த கிராமத்துல நாங்க மட்டும் தான் கிறிஸ்தவர்கள். இனிமே தான் கொண்டாடுவோம்." 'ஏன் பகல்ல கொண்டா மாட்டீங்களா?"

'அதுக்கு வாய்ப்வே இல்லை ஐயா"

'ஏன்?"

'எங்கப்பா டிரைவர் வேல பார்க்குறாரு. இன்னிக்கு விசேஷனால முதலாளி அவங்கள சர்ச்க்குக் கூட்டிட்டுப் போகன்னு, கடைக்கு போகன்னு, அப்பா ரொம்ப பிஸியா இருப்பாங்க."

'சரி அம்மா?" என்று கேட்டார் இயேசு.

'அம்மா 4 வீட்ல வேலை செய்யறாங்க. இன்னிக்கு அந்த வீடுகளெல்லாம் சமையல் வேலை, வீட்டு வேலை என வேலை நிறைய இருக்கும். அதெல்லாம் முடிச்சுட்டு வர நேரம் ஆயிடும்" என்றான்.

'டேய் டேவிட்டு சீக்கரம் வாடா" என்று அவன் அம்மாவின் குரல் ஒலிக்க 'ஐயா நீங்க அதோ அந்த மைதானத்துல போய் உட்காருங்க. அங்க தான் கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்." என அவசர அவசரமாக சொல்லிக் கொண்டே ஓடிவிட்டன். இயேசு மைதானம் செல்ல அங்கு சிறுமிகள் சிறுவர்கள், பெரியவர்கள் என கலகலப்பாக மைதானம் காணப்பட, ஒரு பெரியவர் வந்து 'ஐயா புதுசா இங்க. வெளியூரா? டேவிட் வீட்டுக்கு வந்தீங்களா?" என்று கேட்க இயேசு 'சும்மா இந்த ஊரப் பார்க்க வந்தேன். ஆமா இந்த ஊரில எத்தனைக் குடும்பம் இருக்கு?

"30, 35 குடும்பங்கள் இருக்கு"

'எல்லோரும் என்ன வேலை செய்றாங்க?"

'இங்குள்ள பாறைகள்ல கல்லு உடைக்கிறாங்க. மழை நேரம் வந்தா கஷ்டந்தாங்க. பாறை வழுக்கும். வேலை செய்ய முடியாது. வெயல் காலத்துல விடியக்காலம் போயி உச்சி வெயில் வர்ற வரை வேலை பார்த்து திரும்புவோம். இந்த பிள்ளைங்க படிச்சு தலையெழுத்த மாத்தனும். அதுவரை கஷ்டந்தாங்க". அந்த நேரத்தில் டேவிட் ஒடி வர இயேசு டேவிட் குடும்பத்தை பத்தி விசாரிக்கிறார். பெரியவர் 'அதுவாங்க சுனாமி வந்தப்ப வீடு வாசல் இழந்து எங்க போகறதுனு தெரியாமா கால்நடையா எங்க ஊர்க்க வந்தப்ப பேச்சு மூச்சு இல்லாம மயங்கி விழுந்திட்டான் டேவிட். அப்ப நாங்கதான் அவன் உசுற காப்பத்தி அடைக்கலம் கொடுத்தோமுங்க. அந்த நன்றிக்காக 5 வருசமா தவறாம இந்த நாள்ல ஒட்டு மொத்த கிராமத்துக்கும் பட்டாசு இனிப்பு கொடுத்து சந்தோசப்படுவாங்க. ரொம்ப நல்ல மனசுங்க அவ்வுகளுக்கு. அதோ டேவிட் அப்பா அம்மா வந்துட்டாங்க. வாங்க நாமும் போவோங்க."

டேவிட் அப்பா எல்லா சிறுவர்களையும் வட்டமாக நிற்கச் செய்தார். டேவிட் அம்மா மெழுகுவர்த்தி ஏற்றி டேவிட் அப்பா கையில் கொடுக்க அவர்கள் அனைவரும் அமைதியானார்கள். டேவிட் அப்பா ஜெபம் சொல்ல ஆரம்பித்தார். 'அன்பின் குழந்தை இயேசுவே, இந்த நல்ல நாளுக்காக நன்றி கூறுகின்றோம். இந்தச் சிறுவர்கள், அவர்கள் பெற்றொர்கள் அனைவரையும் ஆசீர்வதியும். குழந்தையாக பிறந்திருக்கும் அன்பு இயேசுவே எங்கள் மத்தியில் வாரும். இச்சிறுவர்களின் பட்டாசு மகிழ்ச்சியில் எவ்வித ஆபத்தும் இடையூறும் இன்றி பாதுகாத்து அருளும். இக்கிராமத்து மக்கள் எங்களுக்கு அடைக்கலம் தந்த கிருபைக்காக நன்றி கூறுகிறோம். அவர்களை நிறைவாய் ஆசீர்வதியும்" என்று கூறி ஜெபத்தை முடித்தார்.

சிறுவர்கள் அனைவருக்கும் டேவிட் மத்தாப்பு எடுத்துக் கொடுக்க, அனைவரும் டேவிட் அப்பாவின் கையிலிருந்த மெழுவர்த்தியில் ஏற்றிக் கொண்டு மகிழ்ச்சி ஆராவாரத்துடன் பட்டாசு கொளுத்த அந்த கிராமமே ஒளிஒலியால் நிறைந்தது. வெடித்து முடித்து, சிறுவர்கள் சாப்பிட தயார் ஆனார்கள். பெரியவர்களும் சிறுவர்களும் வட்டமாக அமர, அவர்களோடு இயேசுவும் அமர்ந்தார். டேவிட் அம்மாவும் அப்பாவும் தட்டுகளில் சாப்பாடும், இனிப்பும் வைத்துத் தர டேவிட் ஓடி ஓடி அனைவருக்கும் கொடுக்க, பெரியவர்கள் அவனை கட்டி அனைத்து முத்தமிட்டனர். டேவிட் ஓடி வந்து இயேசுவுக்கும் கொடுக்க, இயேசுவும் கட்டியணைத்து அவரது நிறைவான ஆசீரை பொழிந்தார்.

நிறைந்த மனத்துடன் இயேசு கிளம்பினார். தூதர்களிடம் 'நான் விரும்பிய, விரும்புகின்ற கிறிஸ்மஸ் இதுதூன். நாசரேத்தில் என் அம்மா, அப்பாவுடன் என் பிறந்த நாளை கொண்டாடிய மகிழ்ச்சி எனக்குக் கிடைத்தது. இது தான் பெத்லகேம் பெருவிழா" எனக் கூறி விண்ணகத்திற்குத் திரும்பினார்.



கிறிஸ்துமஸ் மடல்-2010

santa
home

வழங்கியவர்:
திருமதி அமலி எட்வர்ட்
நாகமலை
மதுரை

 

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com