merry christmas!
சிறப்புசெய்தி santa இடமிருக்கிறது கவிதை முகப்பு பக்கம்

கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு செய்தி

அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பு பெருவிழா

இறைமகன் இயேசு கிறிஸ்து மனுவுருவானதை நினைவுகூறும் புனித நாள் கிறிஸ்துமஸ். 'கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஓப்பானார். மனித உருவில் தோன்றினார். (பிலி 2:6,7). மனிதர்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்து மனிதத்தை புனிதமாக்க வேண்டும் என்பதற்காக மனித உருவை கிறிஸ்து ஏற்றுக்கொண்டார். 'இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்" (மத் 1:23). தனது பெயருக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் இயேசு.

நமது தெய்வம் எங்கோ ஆகாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தெய்வமல்ல. கல்லாக உணர்வுகளற்ற தெய்வமுமல்ல. மாறாக, தான் படைத்து உருவாக்கிய மனிதர்களோடு கூட உறைபவர். கடவுளின் தன்மையே தனித்து வாழ்வதல்ல. மாறாக உடனுறைவதுதான். ஆகவே தான் கடவுள் ஒருவர் என்றாலும் மூன்று ஆட்களாக இணைந்து செயல்படுகிறார் என்று நாம் விசுவசிக்கிறோம்.

பழைய ஏற்பாட்டில் 'யாவே கடவுள் தான் தேர்ந்தெடுத்த இனமாகிய இஸ்ரேல் மக்களோடு இணைந்து வாழ்பவராக சித்தரிக்கப்படுகிறார். காலங்களை கடந்து வாழ்வோரின் கடவுளாக தன்னையே மோசேக்கு அறிமுகம் செய்து கொள்கிறார். 'உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே(வி.ப.3:6). 'அவர் இறந்தோரின் கடவுள் அல்ல, மாறாக, வாழ்வோரின் கடவுள் (மத் 22:32) என்று இயேசு தந்தையாம் கடவுளுக்கு சான்று பகர்ந்தார்.

தனது மக்களாகிய இஸ்ராயேல் இனத்தவர் எகிப்தில் பட்ட வேதனைகளை, கொடுமைகளை அவர்களோடு உடனிருந்து உணர்ந்தவராக கடவுள் வெளிப்படுத்துகிறார். "எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன், அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன். ஆம், அவர்களின் துன்பங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும், தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்க்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்." (வி.ப. 3:7-8).

மனிதர்கள் படும் துன்பத்தை உணர்ந்து இறங்கி வந்து மீட்பதுதான் கடவுளின் தன்மை. பாலைவனத்தில் பகலில் மேகத்தூணாகவும் இரவில் நெருப்பாகவும் அவர்கயேளாடு உடனிருக்கிறார் (வி.ப.40:38).

இஸ்ராயேல் இனத்தவரை தனது பாதையில் வழிநடத்திச் செல்வதற்காக, மக்கள் தலைவர்களை தனது பிரதிநிதிகளாக, தனது உடனிருப்பின் அடையாளமாக அனுப்புகிறார். மோசே, யோசுவாவைத் தொடர்ந்து நீதித் தலைவர்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள் கடவுளின் பிரசன்னத்தை இஸ்ரேல் மக்கள் உணருமாறு செய்தார்கள்.

பழைய ஏற்பாட்டில் நாம் காணும் இந்த 'உடனிருப்பு' புதிய ஏற்பாட்டில் புதிய பரிணாமம் பெறுவதை நாம் பார்க்கிறோம். அந்த புதிய பரிணாமத்தின் தொடர்ச்சி நற்கருணை. கிறிஸ்மஸ்,நற்கருணை இரண்டுமே கடவுளின் உடனிருப்பின் அருளடையாளமாக உள்ளது. 'நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.' (1 யோவான் 4:9) அதையே உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் 'ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு கட்டினார்' (உரோ 8:3). 'வாழ்வு பெறும் பொருட்டு அதிலும் நிறைவாக பெறும் பொருட்டு' (யோவா 10:10). கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். அந்த வாழ்வை நாம் நிறைவாக வாழ கிறிஸ்து தனது உடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாக விட்டுச்சென்றுள்ளார். 'நிறைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார்' (யோவா 6:27). 'கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது' (யோவா 6:33).

மனிதருக்கு வாழ்வு தருவதற்காக கடவுள் மனிதரோடு உடன் உறைகிறார். பழைய ஏற்பாட்டு யாவே கடவுள் இஸ்ரேல் மக்களோடு செய்த உடன்படிக்கை அதுவே. கிறிஸ்து மனிதர் ஆனதன் மூலம் அந்த உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டது. கிறிஸ்து தன்னையே உணவாக நற்கருணையில் தந்தபோது இந்த உடன்படிக்கை தொடருகிறது. இவ்வுலகில் இயேசுவின் இறுதி வார்த்தைகளில் அந்த வாக்குறுதி நமக்கு தரப்படுகிறது. 'இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்.' நாம் பெறும் நிலைவாழ்வை பிறரோடு பகிர்ந்து அர்த்தமுள்ள வகையில் கிறிஸ்மஸ் பெருவிழாவை கொண்டாடுவோம்.


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com