இறுதித் தீர்ப்பு
இறுதித் தீர்ப்பு என்று சொன்னதும் நமக்கு மரண பயம்தான் ஏற்படும். இறுதித் தீர்ப்பு என்பது இயேசுவை நாம் முகமுகமாக தரிசிப்பதே ஆகும். மரண பயத்தை அகற்றிவிட்டால் இறுதித் தீர்ப்பைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
அறுவை சிகிச்சை அறைக்கு அடுத்த அறையில் 48 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவர் இருந்தார். அவரது கையில் இரத்தம் ஏறிக் கொண்டிருந்தது. மூக்கின் வழியாய் நன்றாய் சுவாசிக்க பிராணவாயு கொடுக்கப்பட்டது. உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை யாருக்குமே இல்லை. சிறிது நேரத்தில் கண் விழித்த அவர், உதவிக்கு பக்கத்தில் இருந்த நர்ஸைப் பார்த்து இதையெல்லாம் எடுத்துவிடுங்கள் என்றார். ஆனால் அந்த நர்ஸ் அவரிடம், இவற்றை எடுத்துவிட்டால் நீங்கள் இறந்துவிடுவீர்கள், நான் அந்த காரியத்தை செய்ய மாட்டேன் என்று மறுத்தார். அதற்கு அந்தப் பெரியவர், ஒரு மணி நேரத்துக்கு முன்னே நான் இயேசுவைக் காணச் செல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? என்று கேட்டாராம்.
இந்த பெரியவர், தனது இறப்பை, இயேசுவை நேரடியாக காண்பதற்கு ஒரு வாய்ப்பாக எண்ணினார். அதனால்தான் அவரிடம் மரண பயமே இல்லை. இறுதி என்னும் சொல் நமது வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. திருவிழாவின் இறுதி நாளில்தான் மிக சிறப்பான நிகழ்ச்சிகள் அரங்கேறும். மாணவன் தனது இறுதித் தேர்வைத் தான் நன்றாக எழுத வேண்டும் என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். விளையாட்டு வீரன் தனது இறுதியாட்டத்தில்தான் தனது திறமைகள் அத்தனையும் பயன்படுத்துகிறான். ஏன்? மனிதனின் இறுதி ஊர்வலத்தில்தான் நீண்ட அமைதி நிலவுகிறது.
இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் இறுதித் தீர்ப்பு சீக்கிரமாக நம்மை வந்து சேரும் என்றும், நமது இறப்பிற்குப் பின் நாம் அனைவருமே தீர்ப்புக்கு உள்ளாக்கப்படுவோம் என்றும் கூறுகின்றன. மரணத்தை அடுத்தே இறுதித் தீர்ப்பு வரும். எனவே மரண பயத்தை அகற்றி நல்மரணமடைய நாம் இப்போதிருந்தே நற்காரியங்கள் பல செய்ய வேண்டும்.
மரணத்தை எப்படிப் புரிந்து கொள்வது! இந்த உலகிற்கு வழிப்போக்கர்களாக வந்த நாம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிப் போக வேண்டும். கல்லறைத் தோட்டத்திலே இருந்த ஒரு கல்லறையில் நான் ஒரு வழிப்போக்கன் என்று எழுதியிருந்தது. இவர் தமது வாழ்வையும், மரணத்தையும் புரிந்து கொண்டவர். முதலில் நாம் நமது சிந்தனையைச் சீர்படுத்த வேண்டும். உலகத்தில் நான் ஒரு வழிப்போக்கன் என்ற சிந்தனை வேண்டும்.
நான் ஒரு பயணி . நாம் அனைவரும் பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். சிலர் சின்ன வயதிலேயே தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்வதுண்டு. சிலருக்கு 55 வயதில் பயணம் முடியும். வேறு சிலருக்கு 90ம் 100மாக வாழ்நாள் அமையும். எத்தனை நாள் வாழ்கிறோம் என்பது இங்கு முக்கியமல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.
நாம் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களல்ல என்றே நமது வாழ்நாளைக் கழிக்க வேண்டும் (பிலி 3:20). இதைத்தான் இயேசு யோவா. 18:38-இல் அருமையாகக் கூறுகிறார்: என் அரசு இவ்வுலக அரசைப் போன்றதல்ல என்று. கிறிஸ்தவர்களாகிய நாம், நமதாண்டவர் இயேசுவை நேரடியாகச் சந்திக்க நம்மை நாமே தயாரிக்க வேண்டும். நாம் கிறிஸ்துவுக்கே சொந்தம். ஒரு நாள் அழிந்து போகும் இந்த உலகிற்குச் சொந்தமல்ல. வள்ளுவர் இதைத்தான் பற்றற்றது பற்றுக என்று இந்த உலகைப் பற்றிக் கூறுகிறார்.
சிலுவையில் தொங்கி, நம்மையெல்லாம் மீட்ட அதே இறைவன்தான் நற்கருணை வழியாக நம்முள்ளத்தில் எழுந்து வரவிருக்கிறார். மரணம் என்பது வானக வாழ்வுக்கு முகவுரை என்பதை உணர்ந்து மரண பயத்தை அகற்றி, இறுதித் தீர்ப்பை எதிர்கொள்ள அவரிடம் திடன் கேட்போம்.
வாழ ஆசை!
நமது எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள நம் எல்லாருக்குமே ஆசை உண்டு! நமது எதிர்காலத்தைப் பற்றிய நற்செய்தி ஒன்று இன்று நமக்கு அறிவிக்கப்படுகின்றது : "இயேசு மீண்டும் வருவார். அவர் வரும்போது தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்." நம்மை தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக மாற்றப்போவது எது? இயேசுவின் விருப்பம். இயேசு அவருக்குப் பிரியமானவர்களைத் தேர்ந்தெடுப்பார். இயேசு யோவான் 15:16-இல் "நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்" என்கின்றார். யாரைக் கடவுள் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகின்றாரோ அவர்களை இயேசு தேர்ந்தெடுத்து, அவர்களது பாவங்களையெல்லாம் மன்னித்து, அவர்களைப் புனிதராக்கி, அவர்களைக் கடவுளுக்கு ஏற்புடையராக்குவார் (எபே 1:3-10).
கடவுள் யாருமே அழிந்துபோகக்கூடாது என்று விரும்புகின்றவர் (யோவா 17:12). அனைவரையும் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள அவர் ஆசைப்படுபவர். அவரது ஆசையோடு ஒத்துழைப்பவர்கள் அத்தனைபேரும் அழியா வாழ்வைப் பெறுவர்.
ஒரு மனிதன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான்!
இளகிய மனம் கொண்ட இறைவன் அவன் முன்னால் தோன்றி, பக்தா! உன் தவத்தை மெச்சினோம். உனக்கு என்ன வேண்டும்? என்றார். இறைவா இரண்டே இரண்டு வரங்கள் வேண்டும். இரண்டே இரண்டு வரங்கள்தானே! தந்தோம். என்ன வரங்கள்? ஒன்று, நான் தூங்கும்போது சாகும் வரம் வேண்டும். சரி, இன்னொன்று? நமட்டுச் சிரிப்புடன் சொன்னான் பக்தன் : நான் தூங்காமல் வாழும் வரம் வேண்டும்.
மனிதனுக்கு இந்த உலகத்திலே உயிரோடு வாழ எவ்வளவு ஆசை பாருங்கள்! இம்மையில் நாம் வாழ ஆசைப்படும் அளவுக்கு மறுமையிலும் நாம் வாழ ஆசைப்படுவது நல்லது! நாம் இயேசுவால் | தேர்ந்துகொள்ளப்பட்டால் நமக்கு முடிவில்லா காலத்திற்கும் ஒளி வீசும் வாழ்வு கிடைக்கும் (முதல் வாசகம்). | தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக மாற நாம் செய்ய வேண்டியது என்ன? இயேசு நம்மைத் தேடிவரும்போது அவருடைய விருப்பத்தோடு, மரியாவைப் போன்று (லூக் 1:38), திருத்தூதர்களைப் போன்று (லூக் 5:11) ஒத்துழைக்கவேண்டும்.
மேலும் அறிவோம் :
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும் (குறள் : 367).
பொருள் : ஆசை உண்டாகாதபடி ஒருவன் அதனை முழுமையாக அகற்றிவிட்டால், எப்போதும் அழியாமல் நிலைத்திருக்கும் ஆற்றல் பெறுவான்!
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை உடனடியாக திகழப் போகிறது என்பதை வலியுறுத்தி, "இயேசு வருகிறார்" என்ற தலைப்பைத் தாங்கிய துண்டுப் பிரசுரங்களைப் பெந்தகோஸ்து சபையினர் ஒரு பேருந்து நடத்துனரிடம் கொடுத்தார். அவரோ, "யார் வந்தாலும் வரட்டும்; ஆனால் மரியாதையாய் பயணச் சீட்டு வாங்கிய பிறகே பேருந்தில் பயணம் செய்ய முடியும்" என்றார்.
பேருந்தில் பயணம் செய்யப் பயணச்சீட்டுத் தேவைப்படுவது போல, விண்ணகப் பேருந்தில் பயணம் செய்யவும் பயணச் சீட்டுத் தேவை. அப்பயணச் சீட்டு: நம்பிக்கையும் அன்புமாகும். ஆனால் காலம் செல்லச் செல்ல இந்த இரண்டு தற்பண்புகளும் மக்களிடம் இல்லாமற்போகும் அல்லது குறைந்து போகும் என்று கிறிஸ்துவே முன்னறிவித்துள்ளார், "மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையை காண்டாரோ?" (லூக் 18:8). "நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்" (மத் 24:12).
உலகம் எப்போது எப்படி முடியும் என்று பலர் இன்று கேட்கின்றனர், வாழ்க்கையின் உண்மைத் தன்மையை (நிலையாமையை) ஆராயாதவர்கள், கோடிக்கணக்கான எண்ணங்களை எண்ணுவா் என்கிறார் வள்ளுவர்.
ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல (குறள் 337)
இருப்பினும் திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் நமக்கு இன்றைய திருவழிபாடு உலக முடிவைப் பற்றியும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியும் எடுத்துரைக்கிறது,
இன்றைய முதல் வாசகமாகிய தானியேல் நூலில் சொல்லப்பட்டுள்ள வைகளும், நற்செய்தியில் கிறிஸ்து கூறியுள்ளவைகளும் திருவெளிப்பாடு இலக்கிய வகையைச் சார்ந்தவை. அவற்றைச் சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ளாமல், அவற்றில் பொதிந்துள்ள உண்மைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும், அவ்வுண்மைகளில் சில பின்வருமாறு: "இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது" (1 கொரி 7:21), இவ்வுலகம் ஒரு முடிவுக்கு வரும். அதற்குமுன் கிறிஸ்துவின் சீடர்கள் துன்புறுத்தப்படுவர், போலி இறைவாக்கினர்கள் தோன்றி மக்களை ஏமாற்றுவர், இயற்கையில் அச்சத்துக்குரிய மாற்றங்கள் பல நிகழும். ஆனால் கிறிஸ்துவின் சீடர்கள் அச்சமடையக்கூடாது. ஏனெனில், எல்லாம் கடவுளின் கையில்தான் உள்ளது. கிறிஸ்துவே வரலாற்றின் நாயகன். உலகின் கதியையும் மனிதரின் கதியையும் நிர்மாணிப்பவர் அவரே. அவர் மீண்டும் வருவார்: நீதி வழங்குவார், புதிய வானகமும் புதிய வையகமும் மலரும் கிறிஸ்துவின் சீடர்கள் நம்பிக்கை இழுக்கலாகாது, "இறுதிவரை உறுதியாய் இருப்பவர் மீட்புப் பெறுவர்" (மத் 24:13).
கிறிஸ்து தமது இரண்டாம் வருகையைக் காலம் தாழ்த்துவதாக நாம் கருதலாம். ஆனால், பேதுரு கூறுகிறார்: ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் உள்ளது (2 பேது 3:8) கிறிஸ்து இன்னும் வராததால் அவர் வர மாட்டார் என்று நினைப்பது அபத்தமாகும். திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "விண்ணகமே நமது தாய்நாடு. அங்கிருந்து கிறிஸ்து வருவார் எனக் காத்திருக்கின்றோம்* (பிலி 3:20). கோடைகாலத்தில் மரங்களின் இலைகள் உதிர்ந்த பிறகு புதிய தளிர்கள் தோன்றுவது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியானது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. இதுதான் அத்திமரம் உவமை உணர்த்தும் உண்மை .
உலகம் எப்பொழுது முடியும் என்பது நமக்குத் தெரியாது என்று கிறிஸ்து கூறுவதன் நோக்கம்: உலக முடிவைப்பற்றித் தெரிவது நமக்கு நன்மை பயக்காது. நாம் எப்போதும் விழிப்புடன் இருந்து நமது கடமையைச் செய்ய வேண்டும்,
வாக்குரிமை இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இல்லையென்றால், நாம் தேர்தலின்போது வாக்களிக்க முடியாது. அவ்வாறே "வாழ்வு நுலில்" நமது பெயர் இல்லையென்றால் நம் மீட்படைய முடியாது. "நூலில் யார்யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்” (தானி 12:1) என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. கிறிஸ்து தம் சீடர்களிடம், "உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" (லூக் 10:20) என்கிறார். "வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் தெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள்" (திவெ 20:15) என்று திருவெளிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது,
வாழ்வு நூலில் இடம்பெற வேண்டுமென்றால் , நம்மிடம் நம்பிக்கையும் அன்பும் செயல்வடிவம் பெற வேண்டும். கிறிஸ்தவ வாழ்வு என்பது “அன்பின் வழியாகச் செயலாற்றும் நம்பிக்கை ” (கலா 5:3). "அன்பு செய்பவர்கள் சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளனர்" (1 யோவா 3:10) நமது இறுதித் தீர்ப்பு அன்பின் அடிப்படையில் அமையும் (மத் 25:34-40),
ஒரு காலத்தில் அன்புக்கு அழுத்தம் கொடுத்து நீதியைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. தற்போது நீதிக்கு அழுத்தம் கொடுத்து அன்பு ஓரம் கட்டப்பட்டுள்ளது, நீதி இருக்கும் இடத்தில் அன்பு இல்லாமற்போனாலும், அன்பு உள்ள இடத்தில் நீதி கட்டாயம் இருக்கும். ஏனெனில் நீதி என்பது குறைந்த அளவு அன்பு என்பதை உணர்க, அன்பைச் செயலில் காட்ட வேண்டும் (1 யோவா 3:18). அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக, நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும் (1 யோவா 4:18)
அன்பில் நாம் வாழும்போது உலக முடிவைப்பற்றி நாம் அச்சம் அடையத் தேவையில்லை . உலக முடிவு என்பது படைப்பின் அழிவாக இருக்காது, மாறாக அதன் நிறைவாக இருக்கும். கிறிஸ்துவின் முதல் வருகையை ஏற்று, அவரது இரண்டாம் வருகையை எதிர்பார்த்துள்ள நாம், வாரும் ஆண்டவராகிய இயேசுவே வாரும்' (திவெ 22:20) என்ற மன்றாட்டுடன் இத்திருவழிபாட்டு ஆண்டை நிறைவு செய்வோம்.
ஞானம் இங்கே விற்கப்படுகிறது
ஆங்கில மேதை செஸ்டர்டன் ஞாபக மறதி உள்ளவர். ஒரு மயம் அவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது டிக்கெட் பரிசோதகர் வந்து அவரது பயணச் சீட்டைக் கேட்டார். அங்குமிங்கும் தேடிப்பார்த்த பின்னும் அது கிடைத்தபாடில்லை. பெரிய மனிதரைத் தொந்தரவு செய்ய விரும்பாத பரிசோதகர், “சரி, தேடிப்பார்த்து வையுங்கள். நான் அடுத்த பெட்டிக்குப் போய்விட்டு வருகிறேன் " என்று சொல்லிப் புறப்பட்டார். அதற்கு செஸ்டர்டன் “எனக்கு எண் பயணச் சீட்டை எங்கே வைத்தேன் என்பது மறந்து போய்விட்டது கூட பெரிய பிரச்சனை இல்லை. நான் எந்த ஊருக்குப் போய் சேர வேண்டும் என்பதே மறந்துவிட்டதே! அதுதான் இப்போதைய பெரிய பிரச்சனை” என்றாராம்.
வாழ்வின் நோக்கம் என்ன? வாழ்க்கைப் பயணத்தில் நம் இலக்கு என்ன? என்பதையே நம்மில் எத்தனை பேர் மறந்து வாழ்கிறோம்!
கிரேக்க நாட்டுத் தத்துவ ஞானி தியோஜினஸ். ஏத்தன்ஸ் மாநகரத்தின் வீதியில் ஒரு நாள் கூடாரம் அமைத்து கடை வைத்தார். அந்தக் தடையின்முன் ஒரு பெரிய விளம்பரப் பலகையைப் பொருத்தியிருந்தார். “ஞானம் இங்கே விற்கப்படுகிறது" என்ற அறிவிப்பு அது. அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த பணக்காரன் ஒருவன் அந்த விளம்பரத்தைப் படித்துவிட்டு ஏளனமாகச் சிரித்தான். உடனே தன் வேலையாளை அழைத்து மூன்று நாணயத்தைக் கொடுத்து கொஞ்சம் ஞானம் வாங்கிவருமாறு பணித்தான். வேலையாள் ஞானியிடம் சென்று பணத்தைக் கொடுத்து ஞானத்தைக் கேட்டான். பணத்தைத் தன் பையில் போட்டுக் கொண்ட ஞானி ஒரு காகிதத் துண்டில் பின்வருமாறு எழுதிக் கொடுத்தான்: “நீ எதைச் செய்தாலும் உன் கண் முன்பாக இறுதி முடிவைக் கொண்டிரு.
இந்த அறிவுரை அடங்கிய காகிதத் துண்டைப் பெற்றுக் கொண்ட அந்தப் பணக்காரன் தொடக்கத்தில் அதை வேடிக்கையாக, விளையாட்டாக நினைத்தாலும், காலப்போக்கில் அதில் உண்மையிலேயே ஞானம் இருப்பதை உணர்ந்து அவ்வார்த்தைகளில் அடங்கியுள்ள உண்மையை, தான் மட்டுமன்றி மற்றவர்களும் அறிந்து உணர்ந்து பயனடைய வேண்டுமென்பதற்காக அதனைத் தங்கத் தகட்டில் பொறித்துக் கதவு நிலையில் மாட்டி வைத்தானாம்.
தலையில் வழுக்கை. தடவிப் பார்த்துச் சிரித்துக் கொண்டே ஒருவர் சொன்னார், “உதிர்ந்து விழும் ஒவ்வொரு முடியும் இன்று இறுதிச் சந்திப்பு நெருங்கி வருகிறது என்பதை நினைவூட்டுகிறது'” என்று. காலத்தின் அறிகுறிகளை அறிந்து உணர்ந்து அதற்கு ஏற்ற முறையில் வாழ்வைச் சீர்படுத்திக் கொள்ள நினைப்பவர் அவர். எதிர்காலம் பற்றிய எதுவுமே நிச்சயமில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இறுதியாக ஒருநாள் இறைவனைச் சந்திப்போம். அது தனி மனித இறப்பிலோ உலக முடிவிலோ, தனித் தீர்வையிலோ பொதுத் தீர்வையிலோ நடக்கும். அந்தச் சந்திப்பு ஆனந்தம் தரும் ஒன்றாக இருக்குமா, இல்லை அச்சுறுத்துகின்ற ஒன்றாக இருக்குமா - அது நாம் இன்று வாழும் வாழ்க்கையைப் பொருத்தது.
திருடன் எப்போது வருவான் என்று யாருக்குத் தெரியும்? விபத்து எப்போது நிகழும் என்று யாருக்குத் தெரியும்? இறப்பு எப்போது வரும் என்று யாருக்குத் தெரியும்?
ஆண்டவரின் நாள் பற்றி ஆமோஸ் இறைவாக்கினர் குறிப்பிடுவார். “அந்த நாள் சிங்கத்திடமிருந்து தப்பியோடிய ஒருவனைக் கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும். அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து சுவரில் கைவைத்துச் சாய்ந்தபோது பாம்பு ஒன்று கடித்தார் போலும் இருக்கும்” (ஆமோ. 5:19). அந்த நாள் மனிதன் எதிர்பாராத நாளாக இருக்கும். “மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகள் எல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது' (தொ. நூ. 6:5,6). விளைவு? நோவா காலத்துப் பெருவெள்ளம், பேரழிவு. அதுபோல அந்த நாள் தெய்வ சினத்தின் நாளாகக்கூட இருக்கும்.
இயேசுவும் அந்த நாளைப் பற்றிப் பேசுவார். “இதுபற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம் வருகிறது. அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர். தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்” (யோ. 5:28-29).
இறைவன் மாட்சியோடு வரும்போது ‘ “இறந்து போய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர். அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர். வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர்”” என்று முதல் வாசகத்தில் முழங்கும் தானியேல் (12:2). அதற்கு முன் “நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். (12:1) என்கிறார். வாக்குரிமை இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லைவயன்றால் தோதலின்போது எப்படி வாக்களிக்க மூடியும்?
இந்த நூல் யாது? இதுதான் யோவான் கண்ட “வாழ்வின் நூல்” (தி.வெ. 20:12). 72 சீடர்களும் நற்செய்திப் பணியில் தங்கள் சாதனைகளையெல்லாம் பெருமிதத்துடன் எடுத்துக் கூறியபோது, “வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன்... ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” (லூக் 10: 12-20) என்று அறிவுறுத்துகிறார் இயேசு.
சிதறிய விண்மீன்களையெல்லாம் சேர்த்திணைத்து வானத்தில் தன் பெயரைக் காண்பாராம் சிறுமலர் தெரசா. சிறு வயதிலேயே அவ்வளவு முதிர்ச்சி!
வாழ்வு நூலில் எழுதியுள்ளது என்றால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களின் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவது என்று பொருள். அழைக்கப்பட்டவர்கள் பலர். தேர்ந்து கொள்ளப்பட்டவர் சிலரே! இந்தப் பின்னணியில் யோவான் கண்ட காட்சியைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் (தி.வெ. 20:12-15). இப்பொருளில் தான் சீனாய் மலையடியில் பொற்கன்றுக் குட்டியை வழிபட்ட இஸ்ரயேல் மக்களைக் கண்டித்தார். “எவன் எனக்கு எதிராகப் பாவம் செய்தானோ, அவனையே என் நூலிலிருந்து நீக்கி விடுவேன்” (வி.ப. 32:33).
வானகத்தில் இருக்கும் வாழ்வு நூலில் நமது பெயரை இறைவன் எழுதுவதாம் எழுதாமல் விடுவதும் அவருடைய விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப அன்று, நமது வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகளைப் பொருத்தது. எனவே இயேசுவின் வருகையின்போது இறைவன் அல்ல தீர்ப்பிடுவது, நாம். நம்மையே தீர்ப்பிட்டுக் கொள்கிறோம் என்பதே உண்மை.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வோம். இரக்கத்தின் காலமான நிகழ்காலத்திலேயே இறைவனுக்கு ஏற்ற செயல்களில் ஈடுபடுவோம்.
இயற்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு பொருள் இருக்கிறது; ஏதோ ஒன்றுக்கு அடையாளமாகவும் இருக்கிறது. மனிதன் இந்த நிகழ்வுகளைக் கொண்டே நடக்க இருப்பவற்றைக் கணித்துத் தன்னைக் காத்துக் கொள்ளவும். தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளவும் பழகிக் கொள்கிறான். விண்ணும் மண்ணும் யாவும் ஒழிந்து போனாலும் அதை உருவாக்கிய இறைச்சக்தி, இறைவனின் திருவார்த்தை நிலைத்து நிற்பது, மாற்றம் கொணரும் ஆற்றல் மிக்கது!
தூக்கம் கலைவதல்ல விழிப்பு. வாழ்க்கை தூங்கி விடாமல் பார்த்துக் கொள்வதே விழிப்புணர்வு
பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (தானி. 12:1-3)
இஸ்ராயேல் மக்கள் வாழ்ந்த நாட்டை அந்நிய நாட்டு மன்னர்கள் தங்களுடையதாக்கிக் கொண்டுயிருந்த நேரம் மக்களை பலவாறு துன்பப்படுத்துகிறார்கள். “ஒண்ட வந்த (ஒதுங்க) பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்” என்ற பழமொழி சொல்வார்கள். அதே போல்தான் நான்கு திசையிலும் இருந்து வரும் அரசர்கள், தங்கள் படை வலிமையால் யூதர்களை அழித்தனர். அனைத்து உடமைகளும், பொருளுடைமைகளும், செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்ட காலத்தில் தான், மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இறைவனின் வருகைக்காக காத்திருக்கின்றனர். இறைவன் வந்து அராஜக மன்னர்களை வீழ்த்தி மீண்டும் புது. வாழ்வு தருவார் என்ற நம்பிக்கை தருவதாக அமைகிறது இவ்வாசகம். இறைவன் வரும்போது மூன்று நிகழ்வுகள் நடக்கும் என ஆசிரியர் கூறுகின்றார். 1. இறந்தோர் உயிர்த்தெழுவர். 2 இறுதி தீர்ப்பு 3 உலக முடிவு. எனவே உலக முடிவு என்பது துன்பம், வேதனை, இடர்பாடு, நிம்மதியற்ற வாழ்வு முடிந்து, நல்லவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டு அனைவரும் மகிழ்வோடு வாழ்வோம் என்ற நம்பிக்கை தரும் வாசகமாக அமைந்துள்ளது.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபி. 10:11-14,18).
இந்த வாசகமானது நம்முடைய பாவங்களுக்காக மரித்து தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்த இயேசுவின் பலியை விட சிறந்த பலி இல்லை என்று எடுத்துக் கூறுகின்றது. அவரின் இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு என மூன்றையும் உள்ளடக்கியதுதான் அவரது பலி. தம் பகைவர் தமக்கு கால்மனையாக்கப்படூம் வரை காத்திருக்கிறார் என்றால் நம் பாவங்களுக்கு முக்கிய காரணமான அகங்காரம், ஆணவம், சுயநலம், பொறாமை, ஏலனம் பேசுதல், தரக்குறைவாக நினைத்தல் போன்றவைதான் கடவுளின் பிள்ளைகளாகிய நம் எதிரிகள். நமக்கு எதிரிகளான இவை இயேசுவுக்கும் எதிரிகளே. எனவே இரண்டாம் வருகையின் போது நம்முடைய சொந்த எதிரிகளை வீழ்த்தக் கூடிய வல்லமை தருவார் என்ற உயர்ந்த விசுவாசத்தை தருவதாக அமைகின்றது.
நற்செய்தி வாசகப் பின்னணி (மாற்கு 13:24:32)
பதின்மூன்றாம் பிரிவின் தொடக்கத்திலே (13:1,2) இயேசு எருசலேம் கோவிலின் அழிவு பற்றி முன்னறிவிக்கின்றார். உடனே சீடர்கள் அவரிடம் சில கேள்விகள் கேட்கின்றனர்:
1. நீர் கூறியவை எப்போது நிகழும்?
2. இவை அனைத்தும் நிறைவேறும் காலத்திற்கான அறிகுறி என்ன? (13:4)
இந்த இரண்டு கேள்விக்கான பதிலைத்தான் நற்செய்தியில் "காண்கிறோம். மத்தேயு நற்செய்தியிலே விரிவான கேள்விகளாக இருப்பதை பார்க்கலாம் (மத்தேயு 24:3). உமது வருகைக்கும் "உலக முடிவுக்கும் அறிகுறி என்ன என்று சீடர்கள் கேட்கின்றனர். எனவே தனது வருகையை இயேசு உறுதி செய்யும் விதமாக இன்றைய நற்செய்தியில் விளக்குகின்றார்.
மறையுரை
சாதரணமாக காகம் ஒன்று நம் வீட்டு முன்பு காலையில்: கத்துகிறது என்றால், யாராவது விருந்தினர்கள் வருவார்கள் என்று யூகிக்கின்றோம். வீட்டு மூலைகளில் பல்லி கத்தினால் அது கத்தும்: திசையை பொருட்டு ஏதாவது நிகழும். உள்ளங்கை அறித்தால் ஊருக்கு போக சொல்லும் போன்ற யூகங்களை சாதராண மக்கள் நாம் துறிந்துள்ளோம். அதுபோல இயேசு அன்று வாழ்ந்த மக்க- ளுக்கும் தனது இரண்டாம் வருகையை பலவிதமான இயற்கை நிகழ்வுகளால் அறிந்து கொள்ள செய்கின்றார். அவரின் வருகையை இயேசு மட்டூம் முன்னறிவிக்கவில்லை.
மாறாக பழைய ஏற்பாட்டு காலத்திலே இறைவாக்கினர்கள் "வழியாக முன்னறிவிக்கபட்டது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இறைமகனின் வருகை ஏன்? எதற்காக அவர் வரவேண்டும்? வந்த பின் என்ன நடக்கும்? கொடிய வேதனைகளை யார் அனுபவிப்பர்? அவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டும் தப்புவர் என்று யாரை குறிப்பிடுகின்றார்? போன்ற பலவிதமான கேள்விகள் நம் மனதில் எழுகின்றன, இவை அனைத்தையும் இரண்டு பிரிவுகளாக பார்ப்போம். 1, கிறிஸ்து வருகையின் நோக்கம் மற்றும் 2. அவர் வந்த பின் என்ன நடக்கும்?
3) கிறிஸ்து வருகையின் நோக்கம்:
இன்றைய வாசகத்தில் முன்பு உள்ள அதாவது பனிரண்டாம் பிரிவை வாசித்தால் அதில் கிறிஸ்து பரிசேயர்களையும் மறைநூல் அறஞர்களையும் காண்பிக்கிறார். காரணம், சாதராண மக்களை அன்று வாழ்ந்த சமுதாயத்தின் உயர்குடி மக்கள், பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள், அடக்கியாளுகின்றனர். ஏழைகளுடையதை பிடுங்கி கொள்கின்றனர் (12:40). எனவே அத்தகைய கொடியவர்களை அடக்குபவர்களை அழிக்கவே அவரின் வருகை அமைந்துள்ளது. இறைவாக்கினர் எசாயா நூல் 13:10-13-இல் வாசிக்கின்றோம், “உலகை அதன் தீயச்செயலுக்காகவும், தீயோரை அவரின் கொடுூஞ்செயலுக்காகவும் ஆண்டவர் வந்து தண்டிப்பார். மேலும் ஆணவக்காரர்களின் அகந்தையையும், இறுமாப்பையும் அழிக்க ஆண்டவர் வருவார்” என்றும் இறைவாக்கினர் எசாயா கூறுகின்றார்.
நற்செய்தியாளர் லூக்காவும் இச்செய்தியை விவரிக்கின்றார். அதாவது உண்டு, குடித்து களியாட்டம் செய்து இறைவனை அறிந்து வாழ்ந்த மக்களை இறைவன் கந்தகத்தீயாலும், நெருப்பாலும் அழித்தார். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அச்சுறுத்துகின்றார் (லூக்கா 17:29,30). இவையனைத்தும் இன்றும் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கின்றது. பரந்து விரிந்த இந்த உலகில் சுருங்கிப் போன இதயம் கொண்டவர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். சிறுகுடும்பத்தில் உதயமாகி உலகின் எல்லா இடங்களிலும் ஆணவம் தலைவிரித்தாடூவதைப் பார்க்கின்றோம். முன்னேறிய நாடூகள் பிற நாடுகளின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள இயலாததால் தான் ஆணவப் போர் தொடுத்து அடக்குகின்றன. எங்கே தங்களைப் பொருளாதார அளவில் பிற நாடுகள் முந்திவிடுமோ என்று எண்ணி பயந்து பிறநாட்டு மக்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டுகின்றது.
நாட்டின் நிலப்பரப்பை பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற பேராசையால் நாடுகளுக்குள் தினமும் சண்டையிட்டுக் கொண்டு அழிவின் பாதையை நோக்கிப் பயணிக்கின்றனர். ஏன்! நமது நாட்டிலும் அரசியல் அராஜகம் காரணமாக, சாதாரண குடிமக்கள் துன்பப்படுவது நமக்குத் தெரியும். ஒவ்வொரு குடும்பத்திலேயும், ஒவ்வொரு கிராமத்திலும், மாவட்டத்திலும், மாநிலத்திலும் துன்புறும் மக்கள் இருக்கிறார்கள். காரணம் செருக்குற்றவர்கள் மட்டும் வாழ நினைப்பதுதான்.
பக்கத்து வீட்டில் புது 7:47 வாங்கினா, அடுத்த வீட்டில பழைய 7:77 வெளியே உடையும். பக்கத்து வீட்டு பையன் தன் பையனை விட ஒரு மார்க் அதிகமா வாங்கினாலும் தன் பையனுக்கு அடிவிழும். உடன் பிறப்புகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாதிருப்பது புதிதல்ல நமக்கு. வாய்க்கால் சண்டை, வரப்புச் சண்டை, மோட்டார் சண்டை, நடைபாதைச் சண்டை, தண்ணீர் சண்டை என எல்லாமே நம்மிலும் உள்ளது. நமக்குள்ளே உருவாகும் இந்த சிறுதுளி ஆணவம், பொறாமை, வன்குணம் ஆகியவை வெளியில் வரும் போது பிறரைத் துன்புறுத்தி வாழும் நிலைமையாகின்றது. நம்மை விட எளியவரை வாட்டி வதைத்து, அச்சுறுத்தி வாழ முயல்கின்றோம். இவற்றைப் போக்கத்தான் ஆணடவர் இயேசுவின் வருகை அமைந்துள்ளது. தீய சிந்தனைகள் படைத்த உலகம் கிறிஸ்துவின் வருகையில் அழிக்கப்பட வேண்டும். இல்லையெனில் மாற்றம் நிகழ இறைத் திட்டத்திற்கு செவிசாய்க்க மறுக்கின்றோம்.
யாரெல்லாம் அழிவுக்குட்படுத்தப்படாதவர்கள்.
வேதனைகள், துன்பங்கள் நிறைந்த உலகம் முடிவுறும் போது வான தூதர்களின் மூலம் ஆண்டவர் தாம் தேர்ந்து கொண்ட மக்களை பாதுகாப்பில் அணைத்துக் கொள்வார். யாரெல்லாம் மனம் திரும்பி ஆண்டவர் பக்கம் வருகின்றார்களோ அவர்கள் உயிர் வாழ்வர். இறைவனால் தேர்ந்து கொள்ளப் படூபவர்கள் வேறு யாருமில்லை நாம் தான். நாம் அவரின் பிள்ளைகள் தானே! அதனால்தான் இன்னும் நாம் உயிர் வாழ்கிறோம். யோவேல் இறைவாக்கினர் கூறுகிறார் (2:31-32) “ஆண்டவர் திருப்பெயரைச் சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப் பிழைப்பர், ஆணடவரால் அழைக்கப்பட்டவர்களே தப்பிப் பிழைப்பர்.” இதைதான் தி.ப. 2:19,20-இல் காண்கின்றோம். எப்போது அவரை நம் உள்ளத்தில் அனுமதிக்கின்றோமோ, அப்போது நாம் பிழைக்கத் தகுதியுள்ளவர்களாகின்றோம்.
நாம் தவறு செய்யும் போதும், தீயவழியில் செல்லும் போதும் நம் மனசாட்சியானது அல்லல்படூகிறதென்றால், அதற்காக நாம் மனம் வருந்துகின்றோம் என்றால், அதுதான் இறையேசுவின் வருகைக்காக நாம் செய்யும் தயாரிப்பு. அவ்வாறு சிந்தனை, எண்ணமே இல்லையெனில் நமதுள்ளம் மழுங்கிப் போய்விட்டது. என்றுதான் அர்த்தம். தவறு செய்வது மனித இயல்புதான். ஆனால் அதை திருத்திக் கொள்வதும் மனிதனால் இயலாதது இல்லையே. நம் மனது தூய்மையாக இருக்குமானால் நமது எண்ணம், சிந்தனை, சொல், செயல் யாவும் தூய்மையாக இருக்கும், அங்கே தூய இறைவனும் குடிகொள்வார்.
அவரின் வருகைக்கு பின் என்ன நடக்கும்?
1. தான் தேர்ந்து கொண்டவர்களை இறைவன் என்றுமே கைவிடுவதில்லை. இந்த நாளில் நம்பிக்கையோடு அவரது இவ்வுலகத் துன்பங்களின் சோதனையால் மன உறுதியுடன் இருந்து (மாற்கு 13:13) அல்லும் பகலும் ஆண்டவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் மட்டுமே அவர் நீதி வழங்குவார், மீட்பு தருவார் (லூக்கா 18:7-8).
2. இவ்வுலக பார்வையில் தீயவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக, ஏழைகளாக கருதப்படுபவர்களை ஆண்டவர் உயர்த்துவார். தம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள்மேல் யாரும் குற்றம் சுமத்த அனுமதிக்கவே மாட்டார். (உரோ. 8:34)
3. தூய பவுல் கூறுகின்றார், “நீங்கள் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்குரிய இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, “பொறுமை ஆகியப் பண்புகளை அணிந்து கொள்ளுங்கள். (கொலோ. 3:12)
ஆண்டவரின் வருகையின் போது துன்புறும் உலகம் முடிவுறும் போது புது மனிதர்களாக, புதுப்படைப்பாக மாற்றப்படுபவர்கள் தூயவரால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களே!
இறையேசு மீண்டும் வரும்போது நம் பாவங்கள் அனைத்தையும் 'போக்கிடுவார். ஏனெனில் ௮வர் நமக்காகவே நம் பாவங்களை தாங்கிக் கொண்டார். யோவான் 1:29. இதோ கடவுளின் ஆட்டுக்: குட்டி, இவரே உலகின் பாவங்களைப் போக்குவார் என்று கூறுகின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவது போல கிறிஸ்து நமக்காக பலியாக்கப்பட்டூள்ளார். அவரது ஒரே பலி எப்போதும் மீட்புக்கு வழியாய் உள்ளது. எபிரேய திருமுக ஆசிரியர் கூறுகின்றார், “கிறிஸ்து மீண்டும் தோன்றுவார், ஆனால் பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காக காத்திருப்பவர்களுக்காக மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்” (எபி. 9:28)
இயேசுவை நாம் சந்திக்கும் நாள் நம் ஒவ்வொருவரையும் பொறுத்தது. வழக்கமாக நம் வீட்டு முக்கிய நிகழ்வுகளுக்கு விருந்தினர்கள் யார் யார் வருவர் என்று அறிந்துதான் விருந்து ஏற்பாடு செய்வோம். கிறிஸ்துவும் தன் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார் (மத்தேயு 24:30, தி.ப. 1:10). அவரைச் சந்திக்கும்போது நம் உள்ளம் தூய்மை அடையும். “இயேசு' என்ற சொல் வெறும் வார்த்தை மட்டுமல்ல. நம் மனக் காயங்களை, பாவங்களை அகற்றி தூய்மையாக்கும், மீட்புக்கு வழிவகுக்கும் வார்த்தை.
பிற மறையுரைக் கருத்துக்கள்
1. கிறிஸ்து மானிடமகன்
மாற்கு 13:26
மத்தேயு 8:20
2 கடவுளின் வார்த்தை உயிருள்ளது
மாற்கு 13:31
பொதுக்காலம் - முப்பத்து மூன்றாம் ஞாயிறு
முதல் வாசகம் : தானி 12 : 1-3
உடல் உயிர்ப்பு, ஒருவர் செய்த செயல்களுக்கு மறுவுலகில் கைம்மாறு பெறல் ஆகியவை பற்றி எடுத்துக்கூறும் ஒரு சில ப.ஏ. மேற்கோள்களில் இன்றைய வாசகமும் ஒன்று (காண் : 2 மக் 7 : 9-14 முதலிய). திருவழிபாட்டு ஆண்டின் கடைசி வாரங்களில் உயிர்ப்பு, மறு உலகு பற்றிய வாசகங்கள் இறுதிநாளை நமக்கு நினைவுறுத்துகின்றன.
இறுதிக்காலம்
“ஆண்டவருடைய பெரும் கோபத்தின் நாள்” (புல 1 : 12); “துன்பத்தின் காலம்" (எரே 30 :7), “இருளும் காரிருளும் கவிந்த நாள்; மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்” (யோவே. 2 : 2) என்று இறுதிநாள் அழைக்கப்படுகிறது. அது ஆண்டவருடைய நாள்; அவர் மக்களினங்களுக்குத் தீர்ப்பளிக்கும் நாள். “மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும்” (தானி 12:1). இத்தகைய இறுதிக்காலம்பற்றிய நினைவு நம் மனத்தில் எப்போதும் இருத்தல் வேண்டும். நம்மை அச்சப்படுத்துவதற்காக அல்ல; அன்புள்ள ஆண்டவராகிய கடவுள் நீதி வழுவாதவர் என்று நாம் உணர்வதற்காக. அவர் நீதி அரியணைக்குமுன் நாம் அனைவரும் பாவிகளே என்று உணர்ந்து நம் பாவங்களுக்காக ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் அழுவோம். பிறர் பாவங்களுக்காகவும் இறைவனிடம் மன்னிப்பு விழைவோம். அந்நாள் நம் எல்லோருக்கும் நல்ல நாளாய் அமைய வேண்டுமாயின், இந்நாட்களில் பாவத்தை அகற்றி வாழ்வோம்.
நல்லோர் வாழ்வர்
வாழ்வின் புத்தகத்திலே பெயர் எழுதப்பட்டோர் (அதாவது, இவ்வுலகில் அன்பு வாழ்வு வாழ்ந்தோர்) மீட்புப்பெற்று, இறைப்பிரசன்னத்திலே இருப்பர். “உம் கண்கள் கருமுளையில் என் உறுப்புகளைக் கண்டன; நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள நாள்கள் எல்லாம் எனக்கு வாழ்நாள் எதுவுமே "இல்லாத காலத்திலேயே உமது நூலில் எழுதப்பட்டுள்ளன” (திபா. 139 : 16). “எருசலேமில் வாழ்வோரும், 'புனிதர்' எனப்படுவர்” (எசா. 4 : 3) என்பதற்கொப்ப நம்முடைய வாழ்நாட்கள் அமையவேண்டும். வாழ்வு எவ்வழியோ சாவும் அவ்வழி தானே. சாய்ந்த பக்கம் தானே மரம் விழும்! எனவே வாழ்வோரின் புத்தகத்தில் நம் பெயர் எழுதப்படக்கூடிய வண்ணம் நம் வாழ்வை வாழ்கின்றோமா? புனித வாழ்வு என்பது அன்றாடம் ஒவ்வொரு மணித்துளியும் இறைவனுக்காக, இறைமக்களுக்காக வாழ்வது ஆகும். இவ்வாறு வாழ்பவர்கள் “என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்” (2 மக் 7 :8) என்று நம்ப இடமுண்டு. இறவா வாழ்வு நாம் இறந்தபின் நமக்குக் கிடைக்கும் பரிசுமட்டுமன்று; இவ்வுலகில் இருக்கும்போதே நாம் வாழும் இறைவாழ்வே, இறைமக்களுக்காக, நம்மைப் பலியிட்ட அன்பு வாழ்வே என்பதை உணர்ந்து, நம் வாழ்வைச் சீர்திருத்துவோமா?
தீயோர் சாவர்
தீயோரைப் பற்றிக் கூறும்போது “*மெய்வாழ்வுக்குரியோரின் அட்டவணை யிலிருந்து அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்! அவற்றை நேர்மையாளரின் பெயர்களோடு சேர்க்காதேயும்”” (திபா.69 : 28) என்பார். மறுவுலகில் மட்டுமன்று, இவ்வுலகிலும் தீயோர் மகிழ்ச்சியான வாழ்வை வாழ இயலாது. பழகின ஒவ்வொரு பாவமும், தீமையும் மேலும் மேலும் அதே பாவத்திற்கும் தீமைக்குமே மக்களை இட்டுச் செல்கின்றன. இவ்வுலகிலே துன்பம்; மறுவுலகிலும் “முடிவில்லாத இழிவும் நிந்தையுமே”' (தானி 12 :3); “அவர்களை அரிக்கும் புழு சாவதில்லை; அவர்களை எரிக்கும் நெருப்பு அணைந்து போவதில்லை” (எசா. 65: 24) இறுதிக்கால வாழ்வு நம்மை நன்மை செய்யத் தூண்டாவிட்டாலும், இறுதிக்கால அழிவு நம்மைப் பாவ வழியினின்று மனம் திருப்பாதா?
நல்லவை செய்வோம், அல்லவை தவிர்ப்போம். பிறரையும் நல்வழியில் திருப்ப முயல்வோம். ஏனெனில் இன்னோர் “வானத்தின் பேரொளியைப் போலவும், விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்” (தானி 12 : 3). நம் வாழ்வு பிறருக்கு முன்மாதிரியாக அமைவது எப்போது?
யார் யார் பெயர் நூலில் எழுதப்பட்டுள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்கப்பெறுவர்.
இரண்டாம் வாசகம் :எபி 10 :11-14,8
ப.ஏ. இல் பல தலைமைக் குருக்கள் பலமுறை பலிகளை நிறைவேற்றினர். அவற்றால் பாவங்கள் முழுதும் கழுவப்படவில்லை. பு.ஏ. இலோ கிறிஸ்து ஒரே முறை தம்மையே பலியிட்டு உலக மக்கள் அனைவரின் பாவங்களையும் போக்கிவிட்டார். இத்தகைய வல்லமைமிக்க புதுப்பலியைப் பற்றி இன்றைய வாசகம் எடுத்துக் கூறுகிறது.
பழைய பலிகள்
ப.ஏ. பலிகள், பு.ஏ. பலியின் நிழல்கள் மட்டுமே (எபி 10: 1. அவை ஒவ்வொரு ஆண்டும் பாவப் பரிகார நாளில் செலுத்தப்பட்டதிலிருந்து, பாவங்கள் முழுவதும் கழுவப்படவில்லையென்பது புலனாகின்றது. இப்பலிகளை ஏற்படுத்திய சட்டங்களும் வல்லமையற்றன என்பதும் தெளிவு (எபி10 :1). காளை மாடுகள், ஆட்டுக்கடாக்களின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது (எபி 10 : 4). எனவே தான் இப்பலிகளால் வழிபடுபவர்கள் ஒரே முறையில் எக்காலத்திற்குமே தூய்மை அடையமுடியவில்லை. பாவங்களினின்று விடுதலை அடைய முடியவில்லை (எபி 10 : 2). இன்றும் இதுவே உண்மை. ஆண்டவர் விரும்புவது நம் பலிகளையல்ல; நம்முடைய நல்ல உள்ளங்களையே. “எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு? என்கிறார் ஆண்டவர். ஆட்டுக்கிடாய்களின் எரி பலிகளும், கொழுத்த விலங்குகளின் கொழுப்பும் எனக்குப் போதுமென்றாகிவிட்டன; காளைகள், ஆட்டுக்குட்டிகள் வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தத்திலும் எனக்கு நாட்டமில்லை....நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ..... உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும்.'' வெற்றுச் சடங்கான பலிகளைத் தவிர்ப்போமா? அன்புப் பணியான பலியை மட்டும் நிறைவேற்றுவோமா?
புதிய பலி
இது இயேசுவின் பலி. அவர் தம்மையே மக்களுக்காகக் கையளித்த சிலுவைப் பலி. மக்களுடைய பாவங்களைக் கழுவிப்போக்கிய பலி. பிற உதவிப் பொருள்கள் இல்லாது தன் இரத்தத்தையே தந்தைக்கு அளித்த பலி. இறைத் தந்தையால் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பலி. எனவேதான் “கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார்” (எபி 10:12). பாவங்கள் அனைத்தையும் எக்காலத்திற்கும் அழித்தொழிக்கக்கூடிய பலி. எனவேதான் “தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார் (எபி 10 : 13) எனக் கூறப்படுகிறது (தோல்லவியுற்றவர்களைக் குப்புறமுழந்தாளிட வைத்து, அவர்களைப் படியாகக்கொண்டு வெற்றி வாகனத்தில் ஏறுவது மன்னர்களின் வழக்கு. இக்கருத்து கிறிஸ்துவின் மேல் ஏற்றிக் கூறப்படுகிறது). கிறிஸ்துவின் ஒப்புமையற்ற இப்பலியினால் நாம் பரிசுத்தராகிறோம்; நிறைவுள்ளவர்களாகிறோம் (எபி 10 : 14). “உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள் ” (மத் 5 : 48) என்று கூறிய ,இயேசு தம்முடைய சிலுவைப் பலியால் நம் எல்லோரையும் நிறைவுள்ளவர்களாக்குகிறார். “அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்'' (யோ 17 : 19) என்ற முறையிலே இயேசு நம்மைப் புனிதப்படுத்துகிறார். ஒவ்வொரு நாளும் திருப்பலியிலே கிறிஸ்துவின் அர்ச்சனையை நினைவு கூர்கிறோம். “எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள் ' (லூக்.22 : 9) என்ற இயேசுவின் கட்டளைக்கேற்பத் திருப்பலி என்றும் நடைபெறுகிறது. நாம் ஞாயிற்றுக் கிழமைக் கிறிஸ்தவர்கள் தானா? திருப்பலியில் பங்கு பெறுவது ஒரு கடமை மட்டும்தானா? திருப்பலியின்பால் நமது ஈடுபாடு எந்நிலையிலுள்ளது? “நாம் அர்ச்சிக்கப் பெறும்படி கிறிஸ்துவின் அர்ச்சனையில் பங்கு பெறுகிறோமா?
ஒரே பலியினால் நம்மை என்றென்றைக்கும் நிறைவு உள்ளவராக்கினார்.
நற்செய்தி: மாற்கு 13: 24-32
திருவழிபாட்டு ஆண்டின் இறுதி வாரங்களில் உலக முடிவு பற்றியும் இறைவனின் இறுதி வருகை பற்றியும் வாசகங்கள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. திருவெளிபாட்டு இலக்கிய நடைமுறையில் இறுதிக் காலம் விளக்கமுறுகிறது. "இன்றைய வாசகம் இறுதிக்கால வருகையின் அறிகுறிகளையும் அது வரவிருக்கும் நேரத்தையும் எடுத்துக்கூறி மக்கள் மனம் திரும்புவதற்கான விழிப்புணர்ச்சியைத் தூண்டுகிறது.
ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்
இன்றைய வாசகத்தில் கூறப்படும் அறிகுறிகளும், இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவங்களும் முக்கியத்துவம் வாய்ந்தன அல்ல. இவை திருவெளிபாட்டு இலக்கிய மரபைச் சார்ந்தன. ஆனால் கிறிஸ்து வருவார், அவர் எந்நேரமும் வரக்கூடும், அவரின் வருகைக்காக நம்மைத் தயார் செய்ய வேண்டும் என்பது மட்டும் உண்மை.
கிறிஸ்து அண்மையிலிருக்கிறார் என்பது முதற்பொருளிலே கி.பி. 70-ஆம் ஆண்டில் தேவாலயம் அழிவுற்றதைச் சுட்டியது. பின்னர். ஒவ்வொருவர் வாழ்விலும் நீதிக் கடவுளாகிய கிறிஸ்து வரவிருப்பதைச் சுட்டுகிறது எனலாம். இவ்வருகைக்கு நேரமும் காலமும் கிடையாது. எந்நேரமும் (சிறப்பாக, நாம் எதிர்பாராத வேளையிலே) இயேசு நம்மை எதிர்ப்படலாம். அவரை எதிர்ப்பட நாம் தயாரா? அண்மையில் இருக்கிறார் என்பதால் (காண் : “வாசலிலேயே இருக்கிறார்'” 13 : 29) நாம் நினைக்கும் ஒவ்வொரு செயலும் அவருடைய நீதித் தீர்ப்புக்குமுன் அவரைச் சார்ந்ததாகவோ அல்லது அவருக்கு எதிராகவோ வெளிப்படும் என்று பொருள்படும். ஆண்டின் இறுதிக்காலத்தில் இருக்கிறோம். நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் இவ் இறுதிக்காலத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து நம் வாழ்வைச் சீர்ப்படுத்துவோமா? “ஆண்டவர்தாம் கடவுள் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால்தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்” (1 அர 18 :21) என்னும் சொற்கள் நம்மைப் பார்த்துக் கூறப்பட்டன என்பதை உணர்வோமா? ஆண்டவர் அருகிலுள்ளார். இன்னும் இருமனத்தினராய் நொண்டிக் கொண்டிருப்போமா? அல்லது “மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது... என்பு நைந்துருகி நெக்கு நெக்கேங்கி, அன்பெனும் ஆறு கரையது பாள, நன்புலன் ஒன்றி, நாதா” என்று இறைவன்தாழ் பணிவோமா? (திருவா : போற்றித் திருஅகவல்)
இறைவார்த்தை அழியாது, பொய்க்காது
இறுதி நாள் தீர்ப்பு ஒவ்வொரு நாளும் நாமே நமக்கு இட்டுக்கொள்ளும் தீர்ப்பே. இத்தீர்ப்பிலிருந்து நாம் தப்பவே முடியாது என்பது ஆண்டவருடைய வார்த்தைகளாகும். இறைவனின் வார்த்தை பொய்க்கவே மாட்டாது. விண்ணும் மனாணும் அழிந்தாலும் இறைவார்ததை என்றும் உண்மைப்படும். ஏனெனில் “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது; ஆற்றல் வாய்ந்தது'' (எபி 4 : 12). இறைவார்த்தைக்குச் செவிமடுப்போமா? மனம் திரும்பி நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவோமா? “ஆண்டவரே பேசும்; உன் அடியவன் நான் கேட்கின்றேன்.” மகனுக்கும் கூட இந்நாள் பற்றித் தெரியாது (13 : 32) என்பதன் மூலம் இயேசு இந்நாளைத் தெரிவிக்க விரும்பவில்லை என்பதும், எந்நாளும் எந்நேரமும் இந்நாளின் வெளிப்பாடே என்பதும், எனவே, எப்போதும் தயாராயிருக்க வேண்டும் என்பதும் புலனாகின்றன. எந்நேரமும் இறைவன் நம்மையும் நாம் இறைவனையும் நீதித் தீர்ப்பில் எதிர்ப்படுவதாக நினைத்து, நம் நினைவு சொல் செயல்களைச் சீர்ப்படுத்துவோம். இன்னும் சிலநாட்களில் கிறிஸ்துவின் திருவருகைக் காலத்தைக் கொண்டாடவிருக்கும் நாம், அத்திருவருகை இன்றும் நம்மில் நிறைவேற நம்மையே அர்ப்பணிப்போம். “அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது'” (13 : 32) என்பது எப்போதும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருப்பதாக.
அவர் அண்மையில் இருக்கிறார்.
நான் அசைவுறேன்!
ஆண்டின் பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறு இன்று. வருகின்ற ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. இன்றைய ஞாயிற்றை ஏழைகள் அல்லது வறியோர்க்கான (8-ஆவது உலக நாள்) ஞாயிறு என்றும் நாம் சிறப்பிக்கின்றோம். வறியோர் ஆண்டுக்கான செய்தியாக நம் திருத்தந்தை வழங்கியுள்ள தலைப்பு: ‘வறியோரின் செபம் இறைவனை நோக்கி எழுகிறது’ (சீஞா 21:5). யூபிலி 2025-க்கான தயாரிப்புக்காக வழங்கப்பட்டுள்ள ‘இறைவேண்டல்’ என்னும் கருத்துருவே இத்தலைப்பின் பின்புலத்தில் உள்ளது.
இன்றைய நாளின் வாசகங்கள் உலகத்தின் இறுதி நாள்கள் பற்றிப் பேசுகின்றன.
முதல் வாசகம் தானியேல் நூலின் இறுதிப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. திருவெளிப்பாட்டு நடை என்னும் இலக்கியக் கூற்றை நாம் இங்கே காண்கிறோம். இந்த நடையில் நிறைய உருவகங்களும், அடையாளங்களும், குறிச்சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. துன்பம், போர், வன்முறை, வறுமை, பசி, பஞ்சம், இயற்கைப் பேரிடர்கள் என வருந்தும் உலகம் நொடிப்பொழுதில் முடியும் அல்லது மாறும் என மொழிகிறது இந்த நடை. செலூக்கிய அரசர் நான்காம் எபிஃபேனஸ் காலத்தில் யூதர்கள் அனுபவித்த துன்பங்களின் போது தானியேல் காட்சி காண்கின்றார். நீதித் தீர்ப்பின்போது என்ன நடக்கும் என்பதைக் காட்சியாகக் காண்கிறார் தானியேல். மிக்கேல் என்னும் அதிதூதர் யூத நாட்டின் காவல் தூதராக இருக்கின்றார். மக்களின் கருத்துகளைக் கடவுள்முன் கொண்டு செல்பவர் இவரே. கடவுளின் கட்டளைகளை உடனடியாக நிறைவேற்றுபவரும் இவரே. உலக முடிவில் தீமைக்கு முடிவு கட்டுவதற்காக கடவுள் மிக்கேல் அதிதூதரை அனுப்புகிறார். இந்த நேரத்தில் இறந்தோர் உயிர் பெறுவர். நல்லோர் எனவும், தீயோர் எனவும் இரு குழுக்களாக அவர்கள் பிரிக்கப்படுவர். தானியேல் நூலைப் பொருத்தவரையில் நல்லோர் என்பவர் கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருந்து, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, துன்பங்களை ஏற்றுக்கொண்டோர் ஆவர்.
இரண்டாம் வாசகத்தில், எருசலேமில் வாழ்ந்த தலைமைக் குருக்களுக்கும் ஒப்பற்ற தலைமைக் குருவாம் இயேசுவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தொடர்ந்து பட்டியலிடுகின்றார் ஆசிரியர். ஒரே பலியால் – தன் உடலால் – நிறைவுள்ளவராக்குகிறார் இயேசு. நிறைவுள்ளவராக்குதல் என்பது பலி செலுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுதலைக் குறிக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில், மாற்கு நற்செய்தியில் உள்ள திருவெளிப்பாட்டு நடைப் பகுதியை – உலக இறுதியை – வாசிக்கின்றோம். உலக இறுதியின்போது வான்வெளியில் நிகழும் மாற்றங்களையும், மானிட மகனின் வருகையையும் முன்மொழிகின்ற இயேசு (மாற்கு), ‘விண்ணும் மண்ணும் ஒழிந்து போகும். என் வார்த்தைகள் ஒழிய மாட்டா’ என்கிறார். மேலும், அந்த நாள் வானகத் தந்தைக்கு மட்டுமே தெரியும்.
ஆக, தொடங்கியது அனைத்தும் முடிவுறும் என்றும், இறுதியில் நல்லோர் வெல்வர் என்றும், இயேசுவின் வழியாக நாம் அனைவரும் நிறைவுள்ளவராக்கப்படுவோம் என்றும் முன்மொழிகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.
உலகம் அழிந்தாலும், வான்கோள்கள் அதிர்ந்தாலும், நல்லோர்-தீயோர் எனப் பிரிக்கப்பட்டாலும், நமக்கு இவை அனைத்தும் அச்சம் தந்தாலும், ‘நான் அசைவுறேன்!’ எனத் துணிவோடும் உறுதிபடவும் கூறுகின்றார் பதிலுரைப் பாடல் ஆசிரியர் (திபா 16). ‘ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன். அவர் என் வலப் பக்கம் உள்ளார். எனவே, நான் அசைவுறேன்’ என்கிறார் பாடல் ஆசிரியர். ஆண்டவரைத் தன் கண்முன் வைத்துள்ளவர்கள் அசைவுறுவதில்லை.
இன்றைய வாசகங்கள் நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றன:
(அ) டிவோஷன். தமிழில், ‘அர்ப்பணம்’ என்று சொல்லலாம். ஆண்டவருக்கும், வாழ்க்கைக்கும், நம் அழைப்புக்கும் நாம் கொடுக்கும் பதிலிறுப்பே டிவோஷன். தானியேல் காலத்தில் சிலர் தங்கள் ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளைப் பற்றிக்கொண்டனர். அப்படி அவர்கள் பற்றிக்கொண்டதே அர்ப்பணம்.
(ஆ) டெடிகேஷன். ‘அர்ப்பணம்’ என்பது ‘உணர்வு’ என்றால், ‘ஈடுபாடு’ என்பது செயல். எடுத்துக்காட்டாக, நான் இறைவனுக்கு அர்ப்பணமாக இருந்தால், அவர்சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுவேன். குடும்ப உறவில், கணவன் மனைவியிடமும் மனைவி கணவரிடமும் அர்ப்பணத்தோடு இருந்தால், அவர்கள் தாங்கள் செய்கின்ற அனைத்திலும் ஈடுபாட்டுடன் விளங்குவர்.
(இ) டிஸிப்லின். ‘ஒழுக்கம்’ என்று இதை மொழிபெயர்க்கலாம். தீர்க்கமான முடிவும் அந்த முடிவைச் செயல்படுத்துதலுமே ஒழுக்கம். ஒழுக்கம் என்பது அறநெறி சார்ந்த ஒன்று அல்ல. மாறாக, அது அன்றாட வாழ்வியல் சார்ந்தது.
அர்ப்பணம், ஈடுபாடு, ஒழுக்கம் என்னும் அணிகலன்கள் நம்மை அலங்கரித்தால், நாம் எச்சூழலிலும் அசைவுறாமல் நிலைத்து நிற்க முடியும்.
இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 16), வறியோர்க்கான உலக நாள் கருத்துருவோடு இணைந்து செல்கிறது. ‘இறைவா, என்னைக் காத்தருளும். உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்’ எனப் பாடுகிறார் ஆசிரியர். ஆசிரியரின் இச்சொற்கள் அவருடைய கையறுநிலையையும், இறைவன்மேல் கொண்டுள்ள சார்புநிலையையும் எடுத்துரைக்கின்றன.
சார்பு நிலையை உணர்பவர்கள் ஏழைகள். வறுமை அல்லது ஏழ்மை அல்லது வறிய நிலை என்பது இடம், நேரம், நபர், மதிப்பீடு சார்ந்தது. எடுத்துக்காட்டாக, ரூபாய் 1 இலட்சம் மாத ஊதியம் பெறுகிற ஒருவர் நம் ஊரில் செல்வர் எனக் கருதப்படுவார். ஆனால், இதே வருமானம் உடைய ஒருவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வருமானம் போதாதவர் எனக் கருதப்படுவார். வறுமை என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. ஆன்மிக வறுமை, அறிவு வறுமை, உணர்வு வறுமை என நாம் பல நிலைகளில் வறியோர்களாகவே இருக்கிறோம்.
ஆக, ‘வறிய நிலை’ என்பது ‘வெறுமை நிலை.’ இந்த வெறுமையை நிரப்ப வல்லவர் ஆண்டராகிய கடவுள் ஒருவரே. கடவுள்மேலும் ஒருவர் மற்றவர்மேலும் சார்புநிலையை வளர்த்துக்கொள்ளும் நாம், திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, ‘நான் அசைவுறேன்!’ எனச் சொல்வோம்!
இன்றைய நாளில் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோமை நகரில் ஏறக்குறைய 1300 ஏழை மக்களோடு உணவருந்துகிறார். உரோமையில் ஏழ்மையா? என்னும் கேள்வி உடனே எழலாம். ஏழ்மை என்பது போதாத நிலை. ‘இதுவே போதும் என்றால் அது செல்வம்! எதுவும் போதாது என்றால் அது வறுமை!’ நாமும் ஏதாவது ஒரு நிலையில் வறியவர் ஒருவருக்கு நம் உதவிக்கரம் நீட்டுவோம்!
நான் அசைவுறேன் – ஏனெனில், நான் கடவுள்மேல் சாய்ந்துள்ளேன்!