நீ எனக்குத் தேவை
சில ஆண்டுகளுக்கு முன் ஒரிசா மாநிலத்தில் ஏற்பட்ட புயல், பெரு வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, பொருள் இழந்து, உறவினர்களையும் இழந்து அனாதைகள் ஆக்கப்பட்ட காட்சியை நாம் எல்லாப் பத்திரிக்கை, தொலைக்காட்சி மூலமாகக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இதனால் சக்தி படைத்த பலர் இடம் பெயர்ந்து சென்றதும் உண்டு. ஆனால் ஒரு சிலர் அங்கேயே தங்கி உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பரிதாப நிலை பல நாட்கள் தொடர்ந்த போது சமூகத் தொடர்பினர், செய்தித் தொடர்பினர் உண்மையான செய்தியைச் சேகரிக்கச் சென்றார்கள். இப்படி ஒரு குழு ஒரு கிராமத்தில் நுழைந்தபோது, பல மக்களையும் சந்தித்துச் செய்திகள் சேகரித்தார்கள். இவ்வாறு ஒரு குடிசைக்குள் இக்கூட்டத் தொண்டன் குனிந்து நுழைந்தபோது, வெள்ளத்தில் கணவனை இழந்த ஒரு ஏழைப் பெண், எண்ணெய் இன்றி சப்பாத்தியை நெருப்பில் சுட்டுத் தன் குழந்தைகளுக்குக் கொடுக்க தயாரித்துக் கொண்டிருந்தாள். இவரைக் கண்டவுடன் இன்முகத்தோடு வாருங்கள் என வரவேற்று, தன் குழந்தைகளுக்குக் கொடுக்க இருந்த நெருப்பில் சுடப்பட்ட சப்பாத்தியை இந்தத் தொடர்புச்சாதனக் குழுவினருக்குக் கொடுத்தாள் மகிழ்ச்சியோடு. இந்த நிகழ்ச்சி பல பத்திரிக்கைகளிலும், தொலைத் தொடர்பு சாதனங்களிலும் வெளியானபோது அது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
அன்பார்ந்தவர்களே! இதேபோன்ற ஒரு அழகான நிகழ்ச்சியை நம் ஆண்டவர் இயேசுவின் காலத்தில் நடந்ததாக இன்றைய நற்செய்தியில் வாசிக்கக் கேட்டோம்.
அன்பார்ந்தவர்களே! கொடுப்பது என்பது பெருந்தன்மையைக் குறிக்கும் செயலாகும். இந்த உலகில் ஒரு சிலர் பெருமைக்காகக் கொடுக்கிறார்கள். இது அவர்களின் சுயநலத்தைக் காட்டும் செயலாகும். இதைத்தான் பரிசேயர்கள் செய்தார்கள். அரசியல்வாதிகள் ஒரு சிலர் தொல்லை தாங்க முடியாது கொடுப்பார்கள். இது அவர்களின் இயலாமையைக் காட்டுவதாகும். இதைப்பற்றித்தான் இயேசு கதவைத் தட்டும் மனிதனின் பிடிவாதத்தைக் காட்டுகிறார். இதைத்தான் இன்றைய அரசாங்கம் செய்கிறது.
ஒரு சிலர் கடமைக்காகச் செய்கிறார்கள். இதைத்தான் சக்கேயுவின் வாழ்க்கையில் பார்க்கிறோம். இது சட்டம் ஒழுங்கு ஆட்கொள்ளும் தன்மையைக் காட்டுகிறது. இன்றைய உலகில் இதைத்தான் நாம் செய்துகொண்டே இருக்கிறோம்.
ஆனால் விரல் விட்டு எண்ணும் அளவுக்குத்தான் அன்பினால், மனித மாண்பால் தூண்டப்பட்டுக் கொடுப்பவர் உண்டு. இதில் நாம் இடம் பெற வேண்டும்.
முடிவுரை
பெருந்தன்மை என்பது நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்ற அளவில் அமைவது அல்ல. மாறாக எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். உன்னிடம் பொருள் இல்லாமல் இருக்கலாம். அதனால் கொடை வள்ளலாக இருக்க வேண்டாம். பிறர் துன்பத்தைக் காது கொடுத்துக் கேட்க முடியாதா? அன்பார்ந்தவர்களே புனித பிரான்சிஸ் பால் போர் கூறுவதுபோல் நாம் நம்மைப் பலவிதமாகப் பிறருக்குப் பகிர்ந்து கொடுக்கலாம். முதலாவது நாம் பிறருக்குக் கொடுக்க வேண்டியது மன்னிப்பு. இரண்டாவது பிரமாணிக்கம். மூன்றாவது நம் வாழ்வால் நல்ல முன் மாதிரியை - மரியாதை. எனவேதான் இயேசு கொடுங்கள் பெற்றுக் கொள்வீர்கள் (லூக். 6:38) என்கிறார். பெருந்தன்மை என்பது அன்பை முன்னிலைப்படுத்தி தியாகத்தை எதிர்பார்க்கிறது. இல்லையென்றால் கொடுக்க முடியாது. இறுதியாகச் சொல்லுகிறேன்.
பொருட்களைக் கொடுத்தவர் இறைவன் - நாம் அல்ல. அதைக் கொடுப்பதில் நமக்குப் பெருமை. அல்ல நாம் நம்மை வழங்க அழைக்கப்படுகிறோம்.
திரும்பி வரும் அன்பு
மூன்று வகையான அன்பு உண்டு : 1. உள்ளத்திலிருந்து கொடுத்தல் (லூக் 19:1-10), 2. உள்ளதையெல்லாம் கொடுத்தல் (மாற் 12:41-44), 3. உள்ளதையெல்லாம் கொடுத்து உயிரையும் கொடுத்தல் (இரண்டாம் வாசகம்).
இன்றைய நற்செய்தியிலே வருகின்ற ஏழைக் கைம்பெண் அவரிடம் உள்ளதையெல்லாம் கடவுளுக்குக் கொடுத்து இயேசுவின் புகழ்ச்சிக்கு உரியவராகின்றார்.
நம்மில் யார் யார் தங்களிடம் உள்ளதிலிருந்து அல்லது உள்ளதையெல்லாம் தர்மம் செய்கின்றார்களோ அவர்களெல்லாம் கடவுளால் தவறாமல் உயர்த்தப்படுவார்கள். இந்த உண்மையைச் சுட்டிக்காட்ட விவிலியத்திலிருந்து இதோ இரு உதாரணங்கள்.
பழைய ஏற்பாட்டுக் காலத்திலே எத்தனையோ விதவைகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட சாரிபாத்து நகரில் வாழ்ந்தார்கள். ஆனால் கடவுள் அந்நகரிலிருந்த ஒரு கைம்பெண்ணின் வாழ்க்கையை மட்டும்தான் உயர்த்திப் பிடித்தார். காரணம் அவர் உள்ளதிலிருந்து கொடுத்தார் (1 அர 17:10-16).
புதிய ஏற்பாட்டில் எத்தனையோ பெண்கள் வாழ்ந்திருந்தாலும் ஒரே ஒரு பெண்ணை மட்டும் கடவுள் பெண்களுக்குள் ஆசி பெற்றவராக (லூக் 1:42), எல்லாத் தலைமுறையினரின் போற்றுதலுக்கும் உரியவராக (லூக் 1:48) உயர்த்தினார். காரணம் கன்னிமரியா தன்னை முழுவதும் கடவுளுக்குக் கொடுத்து, நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்றார்.
திங்கள் பிறந்தாலும்
தீபம் எரிந்தாலும்
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
கண்ணீரில் உப்பிட்டு
காவிரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது காற்றினிலே
என்று வாழுகின்ற ஏழைகள் பக்கம் நமது ஈரம் நிறைந்த கண்களைத் திருப்புவோம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.
தன்னலமற்ற அன்பு பந்து போன்றது. அதை நாம் சமுதாயம் என்னும் சுவற்றில் எறியும்போது அது நம்மிடமே திரும்பி வரும். நாம் பிறரை அன்பு செய்தால், பிறர் நம்மைத் தவறாது அன்பு செய்வார்கள்.
மேலும் அறிவோம் : ஈத்துலக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் : 228).
பொருள் :
வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் மகிழ்வதைக் கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப் பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு வழங்காது பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்!
“தெய்வீகப் பிச்சைக்காரன்" என்ற தலைப்பில் வங்க கவி தாகூர் ஒரு கவிதை எழுதியுள்ளார். அக்கவிதையில் அவர் கூறுவது: ஓர் அரசர் மாறுவேடத்தில் ஓர் ஊருக்குச் சென்று அங்கு ஒரு பாத்திரம் நிறைய கோதுமை மாரிகளை வைத்திருந்த ஒரு பிச்சைக்காரனிடம் பிச்சை கேட்டார். அவனோ ஒரே ஒரு கோதுமை மானியை மட்டும் கொடுத்தான். அரசர் அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் ஒரு கோதுமை மணி அளவு தங்கம் போட்டுவிட்டு மாயமாக மறைந்துவிட்டார். ஒரு கோதுமை மணி அளவு தங்கத்தைப் பார்த்த அப்பிச்சைக்காரன் தன்னை நொந்துகொண்டு, "நான் எல்லாக் கோதுமை மணிகளையும் கொடுத்திருந்தால், பாத்திரம் நிறைய தங்கம் கிடைத்திருக்குமே" என்று சொல்லி தனது கஞ்சத்தனத்தை எண்ணிக். கண்ணீர் விட்டான்.
நாம் மற்றவர்களுக்கு எவ்வளவு கொடுக்கின்றோமோ, அவ்வளவுக்குக் கடவுள் நமக்குத் திருப்பிக் கொடுப்பார். இதைக் கிறிஸ்துவே பின்வருமாறு கூறியுள்ளார்: "கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். அந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்" (லூக் 6:38)
இன்றைய முதல் வாசகமும் நற்செய்தியும் தாராள உள்ளம் கொண்ட இரு கைம்பெண்களைப்பற்றிக் கூறுகிறது. பழைய ஏற்பாட்டில் கைம்பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. மற்றவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் கடவுளை மட்டும் நம்பி வாழ்ந்த இறைவனின் ஏழைகள்' என்று அழைக்கப்பட்ட 'அனாவிம்' வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக விளங்கினர். கடவுள் கைம்பெண்களைச் சிறப்பாக ஆதரிப்பதாக இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: “ஆண்டவர் அனாதைப் பிள்ளைகளை யும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்" (திபா 146:9).
இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற சரிபாத்து கைம்பெண் பஞ்சகாலத்தில் இறைவாக்கினர் எலியாவுக்குக் குடிக்கத் தண்ணீரும், சாப்பிட அப்பமும் கொடுக்கிறார். தன்னைப் பற்றியோ தனது மகனைப்பற்றியோ அவர் கவலைப்படவில்லை , கடவள் அவரை அபரிமிதமாக ஆசிர்வதிக்கிறார். பஞ்ச காலம் முடியும்வரை அவர் பானையில் மாவும் குறையவில்லை; கலயத்தில் எண்ணெயம் {குறையவில்லை, "அனாதைகளைப்பற்றிக் கவலைப்படாதே, நான் அவர்களை வாழவைப்பேன் உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும்" (எரே 49:11) என்று கடவுள் எரேமியா வாயிலாகக் கூறியது சரிபாத் கைம்பெண் வாழ்வில் நிறைவேறுகிறது.
இன்றைய நற்செய்தியில் வருகின்ற ஏழைக் கைம்பெண் தன்னிடமிருந்த இரண்டு செப்புக்காககளை உண்டியல் பெட்டியில் போட்டுவிடுகிறார், எல்லாருடைய காணிக்கைகளிலும் கைம் பெண்ணின் காணிக்கையே பெரியது என்று கிறிஸ்துவே பாராட்டுகிறார், ஏனெனில் மற்றவர்கள் தங்களிடம் உபரியாக இருந்ததைக் காணிக்கையாகக் கொடுத்தனர். ஆனால் ஏழைக் கைம்பெண் அவரது வாழ்வாதாரம் அனைத்தையும் காணிக்கையாகச் செலுத்திவிட்டார். அவர் நாளையைப் பற்றிக் கவலைப்படவில்லை. நாளையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், "நாளையக் கவலையைப் போக்க நாளை வழிபிறக்கும்" (மத் 6:34) என்ற ஆண்டவரின் அருள் வாக்கைக் கடைப்பிடித்தார்.
அருளாளர் அன்னை தெரசாவிடம், "உங்கள் சபைக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?" என்று கேட்டதற்கு, "கடவுள்தான் என்னுடைய பாதுகாப்பு" என்றார், அவருடைய சபையின் எதிர்காலம் பற்றிக் கேட்டதற்கு, "இது என்னுடைய வேலையாக இருப்பின் அழிந்துவிடும், கடவுளின் வேலையாக இருப்பின் எனக்குப் பிறகும் என் சபை நீடிக்கும்" என்றார், இறைப்பராமரிப்பில் அவர் முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்திருந்தார்.
ஒளவையார், அங்கவை, சங்கவை என்ற இரு பெண் குழந்தைகளை வளர்க்க ஒரு வெள்ளாடு தேவைப்பட்டது. அதற்காகச் சேர மன்னனிடம் சென்று பால் கொடுக்கும் ஒரு வெள்ளாடு கேட்டார், அரசரோ பொன் வெள்ளாடு கொடுக்க, ஒளவையார் அரசரிடம்: *பொன் வெள்ளாடு பால் கொடுக்காதே" என்றார். அரசரும் அவரிடம், "பால் கொடுக்கும் வெள்ளாட்டை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டேன். பிச்சைக் கேட்பவர் எதையும் பெற்றுக்கொள்வர்; ஆனால் பிச்சைக் கொடுப்பவரோ தனது தகுதிக்கேற்ப பிச்சையிட வேண்டும்" என்றார். ஒளவையார் அரசரின் வள்ளல் தன்மை வியந்து பாடினார்.
நாம் எவ்வளவு குறைவாக உண்டியலில் காசு போட்டாலும், உண்டியல் அதை ஏற்றுக்கொள்ளும், ஆனால் நாம் நமது தகுதிக்கேற்பக், காணிக்கைக் கொடுக்க வேண்டாமா?
கைம்பெண்கள் சமுதாயத்தில் மதிக்கப்படுவதில்லை, அவர்கள் சுமங்கலிகள் அல்ல, நல்ல காரியங்களை முன்நின்று நடத்தக்கூடாது. இத்தகைய பிற்போக்கான சிந்தனைகளுக்கு இன்றைய அருள்வாக்கு வழிபாடு சவுக்கடி கொடுக்கிறது. தாராள உள்ளம் கொண்ட இரண்டு கைம்பெண்கள் நமக்கு கொடுத்துக்காட்டாக நிறுத்தப்படுகின்றனர், அவர்களைப் பின்பற்றிக் கடவுளுக்கும் பிறர்க்கும் தாராளமாகக் கொடுப்போம். கடவுள் நம்மை இம்மை, மறுமை நலன்களால் நிரப்புவார்.
முழுமையாய் உமதே..
புனித இரண்டாம் ஜான் பால், தான் திருத்தந்தையான பிறகு முதன் முறையாக அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு வருகை தந்தார். அங்கே மேடையிலிருந்து முன்வரிசையில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஊனமுற்ற ஓர் இளம்பெண்ணைப் பார்த்தார். உடனே கீழே இறங்கி அருகில் சென்று செபமாலை ஒன்றோடு சிறு அட்டையை இணைத்துக் கொடுத்து அவளது நெற்றியில் முத்தமிட்டார். அந்த அட்டையில் இரு லத்தீன் வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன - " Totus Tuus'" என்று. அதன் பொருள் "முழுமையாக உனது". தான் சந்திக்கின்ற ஒவ்வொருவருக்கும் தன்னையே முழுமையாகக் கையளிக்கும் அவருடைய ஆசையை இந்த நிகழ்வு வெளிப்படுத்தவில்லையா?
விவிலிய சமயத்தின் பண்பு அதுதான். இறைவனாகட்டும், இறைவன் சாயலான மனிதனாகட்டும், தன்னையே முழுமையாகக் கையளிக்க வேண்டும் என்பது. மனிதனுக்கு எழுதும் மடல்களில் எல்லாம் 'truly yours' அதாவது உண்மையுடன் உனது' என்று கையெழுத்திடுகிறோம். ஆனால் கடவுளுக்கு எழுதும் கடிதங்களில் அது போதாது; மாறாக 'totallyyours' (totus tuus) அதாவது முழுமையாக உமது' என்றுதான் கையெழுத்திட வேண்டும்.
இந்த உண்மையை உணர்த்தும் வகையில் இன்றைய வழிபாட்டு வாசகங்கள் இரண்டு கைம்பெண்களை நம் கண்முன் நிறுத்துகின்றன. 1. சாரியாத்து ஊரின் கைம்பெண். 2 எருசலேம் நகரின் கைம்பெண்.
ஆகாபு மன்னனின் அடாத செயல்களை முன்னிட்டு நாட்டில் கடும் பஞ்சம் உண்டாகும் என்று இறைவாக்கினர் எலியா முன்னறிவித்திருந்தார். அவ்வாறே பஞ்சம் தலை விரித்தாடியது. தன் உயிரைக் காத்துக் கொள்ள புற இனத்தினர் வாழும் பகுதிக்குச் செல்கிறார். விறகு பொறுக்கிக் கொண்டிருந்த விதவைப்பெண்ணைச் சந்திக்கிறார். அவள்தான் எலியாவுக்கு உணவளித்த ஏழை சாரிபாத்துக் கைம்பெண். அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாதவள். அந்தக் கடுமையான பஞ்ச காலத்தில் இறைவாக்கினர் எலியா உணவு கேட்டபோது, தன் இயலாமையை ஒளிவு மறைவு இன்றி , கள்ளங்கபடின்றி வெளிப்படுத்துகிறார். இதுவே ஏழ்மைக்குரிய சிறப்பம்சம். அதனாலன்றோ " ஏழையின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்'' (மத் 5:3) என்றார் இயேசு. தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் இறைவாக்கினரின் வார்த்தைகளை நம்பி முழுவதையுமே அவருக்கு உணவாகத் தருகின்றாள். விளைவு? வாழ்நாள் முழுவதற்குமே எடுக்க எடுக்கக் குறையாத, எண்ணெய் வற்றாத கலயத்தை அமுத சுரபியாகவன்றோ இறைவன் அவளுக்கு வழங்கிவிட்டார்!
மற்றவர்கள் பார்க்க வேண்டுமென்றோ, பாராட்ட வேண்டுமென்றோ, ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றோ அல்ல, ஆண்டவர் மட்டும் தன்னைப் பார்த்தால் போதும் என்று செயல்பட்டவள் அந்த எருசலேம் நகர்க் கைம்பெண். பலரும் ஆதாயத்தைத் தேடிக் காணிக்கை போட்டார்கள். இவளோ தன் ஆதாரத்தையே காணிக்கையாக்கினாள் என்ற இயேசுவின் பார்வையில் எப்படி உயர்ந்து நிற்கிறாள். தன் பிழைப்புக்கான அந்த இரண்டு செப்புக் காசுகளையுமே காணிக்கைப் பெட்டியில் போட்ட அவளது மனநிலை என்ன?
அமுக்கிக் குலுக்கிக் கொடுப்பார் என்ற எதிர்நோக்கா அவளைக் கொடுக்க வைத்தது? பழைய ஏற்பாட்டில் பத்தில் ஒரு பகுதி (தசம் பாகம்) எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு செப்புக்காசுகளில் ஒன்றைக் கொடுத்திருந்தால் கூட, அது இரண்டில் ஒரு பகுதி, ஐம்பது விழுக்காடு வருமானத்தில் பாதியாகும். ஆனால் அவளது காணிக்கை முழுமையானது.
அனைத்தையும் விண்ணரசின் பொருட்டுத் துறந்துவிடும் ஓர் உத்தமசீடனை விதவைப் பெண்களின் வடிவில் பார்க்கிறோம். ஆண்டவனுக்குக் கொடுப்பது நமது நன்றியுணர்வின் வெளிப்பாடு. மீண்டும் இறைவன் நமக்குக் கொடுப்பார் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதுதானே!
பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி அவதிப்பட்டுக் கொண்டிருந்தான் ஒரு பணக்காரன். அதனால் மன அமைதி இழந்து தவித்தான். அந்நிலையில் தனது பிரச்சனைகள் தீர்ந்தால், தனது ஆடம்பர மாளிகையை விற்று, அதன் முழுத் தொகையையும் ஆலய உண்டியலில் போடுவதாக நேர்ச்சை செய்து கொண்டான். காலம் சென்றது. அவன் கவலைகள் தீர்ந்தன. "இவ்வளவு விரைவில் என் மன்றாட்டுக்குச் செவி கொடுப்பார் என்று முன்பே தெரிந்திருந்தால் இப்படிப் பைத்தியக்காரத்தனமாக நேர்ந்திருக்க வேண்டாமே. அழகான ஓர் அந்தோணியார் மொட்டை போடுகிறேன் என்று நேர்ந்திருப்பேனே " என்று புலம்பினான். ஆனால் அதே வேளையில் ஓர் அச்சம். நேர்ச்சைப்படி செயல்படத் தவறினால், வேறு பெரும் கேடு வந்தால் என்ன செய்வது? பயந்து நேர்ச்சையை நிறைவேற்ற முடிவு செய்தான்.
வீட்டின் விலை ரூ.100/- என்று விளம்பரப்படுத்தினான். வீட்டை விலைக்கு வாங்கத் திரண்டது மக்கள் கூட்டம். இவன் என்ன உளறுகிறானா என்று பலரும் நினைத்தனர். "வீட்டை விலைக்கு வாங்க விரும்புகிறவர்கள் அவ்வீட்டில் உலவும் ஒரு பூனையையும் சேர்த்து வாங்கிக் கொள்ள வேண்டும் " என்று நிபந்தனை விதித்தான். பூனையின் விலை ரூ. 50 இலட்சம் என்று நிர்ணயித்தான். கிறுக்கன் உளறுகிறான் என்று நினைத்த அவர்களில் ஒருவர் 50 இலட்சத்து நூறு ருபாய் கொடுத்து வீட்டை வாங்கிக் கொண்டார். வீடும் பூனையும் விலை போயின.
விற்ற பணத்தை ஆலயத்துக்கு எடுத்து வந்து நூறு ரூபாயைக் காணிக்கைப் பெட்டியில் போட்டுவிட்டு மற்ற 50 இலட்சத்தையும் தன் சட்டைப்பையில் திணித்துக் கொண்டான். ''வீடு விற்ற பணம் ஆண்டவனுக்கு. பூனை விற்ற பணம் எனக்கு" என்று திருப்திப்பட்டுக் கொண்டானாம்.
அறிவுக்கும் அருப்பணத்துக்குமிடையே எவ்வளவு பள்ளத்தாக்கான இடைவெளி! நேர்ச்சையை நிறைவேற்றுவதில் கூட இவ்வளவு குறுகிய மனமா? கோணல் புத்தியா?
இந்தப் பொய்மையும் போலித்தனமும் திருப்பலியில் நாம் பாடும் காணிக்கைப் பாடல்களில் கூட தலை நீட்டுகின்றன. கழுத்திலும், காதிலும் தங்கம் மின்ன, "பொன்னும் பொருளுமில்லை, என்னிடத்தில் ஒன்றுமில்லை உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" என்று பாடுவது கூட பொய்யின்றி வேறென்ன?
அழகான வரிகள், அருமையான இசை. ஆனால் அருத்தமுள்ளதா? பொருத்தமானதா? என்ற கேள்விகளை எழுப்பும் இன்னொரு பாடல் :
''மணம் தரும் மலரில் மகிழ்ந்திடும் இறைவா
என் மனம் ஏற்கத் தயக்கமோ? - நான்
காகிதப் பூ என்ற வருத்தமோ?''
இயற்கைப் பூவில் தான் இறைவன் இன்பம் காண்கிறார், செயற்கைப் பூவுக்கு முகம் சுளிக்கிறார் என்பதுபோலப் பாடலாமா?
இயற்கை மலர்தான் இறைவனுக்கு ஏற்ற காணிக்கை என்று நினைக்கலாமா? வழியில் கிடக்கிற தேங்காயை எடுத்துப் பிள்ளையாருக்கு உடைத்தாலும் பரவாயில்லை. பிள்ளையாருடைய தேங்காயை எடுத்தே அவருக்கு உடைப்பதா? சொல்லப்போனால் காதிதப்பூதான் கடவுள் விரும்பும் காணிக்கையாக இருக்கும். அதில்தான் என் ஆற்றலை என் திறமையை, என் கற்பனை வளத்தை, என் கடின உழைப்பை அதாவது என்னையே பார்ப்பார்.
பாவமே பலிப் பொருளாகும் அளவுக்கு, இருப்பதுபோல என்னை ஏற்றுக் கொள்பவர் என் கடவுள் !
அந்த விதவையின் காணிக்கை (தேவைக்கு மிகுதியான மிச்சத்திலிருந்து கொஞ்சம், அதுவும் பிறர் பெரிதாகக் கணிக்க வேண்டும் என்பதற்காகவே கொடுத்தது அன்று)
- கடவுள் மட்டுமே எனக்குச் சொந்தம், தனக்கிருக்கும் ஒரே துணை என்று உள்ளூர உணர்ந்ததால் கொடுத்தது.
- நாளையத் தேவைக்குக் கடவுள் இருக்கிறார் என்ற ஆழமான நம்பிக்கையால் அனைத்தையும் கொடுத்தாள்.
''ஆண்டவரே என் உரிமைச் சொத்து" என்ற உணர்வில் வாழ்வது நிறைவு தரும் (தி.பா. 16:5).
‘இறுதி நிமிட தயாரிப்பு’
1981ம் ஆண்டு, ஒருவர், தான் இறப்பதற்குமுன் எழுதிய உயிலில், 57,000 டாலர்கள் இயேசுவுக்கு வழங்கப்படவேண்டும் என்று கூறியிருந்தார். இயேசு, இரண்டாம் முறை இவ்வுலகிற்கு வரும்போது, அவருக்கு பணம் தேவைப்படும் என்றும், அதுவரை, அந்தப் பணத்தை, அதிக வட்டிக்கு விடும்படியும், அவர் தன் உயிலில் குறிப்பிட்டிருந்தார். இது ஒரு சிரிப்புத்துணுக்கு போலத் தோன்றினாலும், இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து, நம்மிடையே நிலவும் தெளிவற்ற கருத்துக்களுக்கு, இது ஓர் எடுத்துக்காட்டு என்பதை மறுப்பதற்கில்லை. இயேசுவின் இரண்டாம் வருகையையும், உலக முடிவையும் இணைத்து, வரலாற்றில் பலமுறை, பல்வேறு வதந்திகள் வலம் வந்துள்ளன. குறிப்பாக, நாம், 2000மாம் ஆண்டை நெருங்கிய வேளையில், இவ்வகை வதந்திகள், பல தீவிர குழப்பங்களை உருவாக்கின என்பதை அறிவோம். இந்தக் குழப்பங்களை மூலதனமாக்கி, வர்த்தகர்களும், ஏன், ஒரு சில மதப் போதகர்களும், இலாபம் தேடினர் என்பதையும் நாம் வேதனையுடன் அறிந்துகொண்டோம்.
எருசலேம் நகரில், இயேசுவின் விண்ணேற்ற குன்றுக்கருகே 'ஒலிவ மலை ஹோட்டல்' (Mount of Olives Hotel) என்ற விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியை நடத்தும் உரிமையாளர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் பல்லாயிரம் கிறிஸ்தவர்களுக்கு 1998ம் ஆண்டு ஒரு மடலை அனுப்பியிருந்தனர். அம்மடலில் கூறப்பட்ட விளம்பர வரிகள் இதோ: "2000மாம் ஆண்டு, இயேசுவின் 'இரண்டாம் வருகை' நிகழும்போது, ஒலிவ மலையில் நீங்கள் காத்திருக்க வேண்டாமா? எங்கள் ஹோட்டலில் ஓர் அறையை உங்களுக்காக ஒதுக்கி வைக்கிறோம். முன்பதிவு செய்துகொள்ளுங்கள்" என்று அம்மடலில் கூறப்பட்டிருந்தது.
வர்த்தக உலகினர் மேற்கொண்ட இந்த முயற்சிகளைக் காணும்போது, ஒரு சில கேள்விகள் எழுகின்றன. உலகம் முடிந்தபின்னரும் தாங்கள் சேர்த்துவைக்கும் பணம் நீடிக்கும் என்று வர்த்தகர்கள் நினைத்தனரா? அல்லது, 'உலக முடிவு', 'இரண்டாம் வருகை' ஆகியவற்றை, கேலிப்பொருளாக மாற்றி, வேடிக்கை செய்தனரா என்பதில் தெளிவில்லை. தங்களைச் சுற்றி நடப்பதையெல்லாம், அது, உலக முடிவே ஆனாலும் சரி, அவற்றை வைத்து, இலாபம் தேடுவதில், வர்த்தக உலகினர் தீவிரம் காட்டுகின்றனர் என்பது வேதனை தரும் உண்மை. அவர்கள் காட்டும் ஆர்வம், உறுதி, தீர்மானம், ஆகியவை, ஆன்மீக உலகத்தைச் சார்ந்தவர்களிடம் உள்ளனவா என்பது சந்தேகம்தான்.
உலக முடிவு என்ற உண்மை, நம்மில் எவ்வகை எண்ணங்களை எழுப்பவேண்டும், எவ்வகையான உறுதியைத் தரவேண்டும் என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இவ்வழைப்பு இன்று நம்மை வந்தடைவதற்குக் காரணம் உண்டு. கத்தோலிக்க வழிபாட்டில், ஒவ்வோர் ஆண்டையும், ஐந்து காலங்களாகப் பிரித்துள்ளோம் - திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்புக் காலம், தவக்காலம், உயிர்ப்புக் காலம், மற்றும், பொதுக்காலம். மே மாதத்தின் இறுதி நாள்களில் நாம் கொண்டாடிய தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவைத் தொடர்ந்து, கடந்த 26 வாரங்களாக நாம் கடைபிடித்துவந்த பொதுக்காலத்தின் இறுதியை நாம் நெருங்கியுள்ளோம். அடுத்த ஞாயிறு, கிறிஸ்து அரசர் திருநாள். அதைத் தொடர்ந்து வரும் திருவருகைக்கால முதல் ஞாயிறன்று, திருவழிபாட்டின் புதிய ஆண்டைத் துவக்குகிறோம். பொதுக்காலத்தின் இறுதியில், இறுதிக் காலத்தைப்பற்றி சிந்திக்க, இன்றைய இறைவாக்கு நம்மை அழைக்கிறது.
இறுதிக் காலம், எப்போது, எவ்விதம் வரும் என்பது தெரியாது. ஆனால், அந்த இறுதிக் காலத்தைச் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதே, இன்றைய வழிபாட்டின் வாசகங்கள் நமக்குத் தரும் அழைப்பு. இறுதிக் காலத்தைச் சந்திக்க எவ்விதம் தயார் செய்வது?
ஆங்கிலத்தில், ‘last minute preparation’ – ‘இறுதி நிமிட தயாரிப்பு’ என்ற ஒரு சொற்றொடர் உண்டு. நாம் அனைவரும் வாழ்க்கையில் இதுவரை அனுபவித்த, இனியும் அனுபவிக்கவிருக்கும் ஓர் அனுபவம் இது. நாம் எழுதப்போகும் தேர்வுகளுக்காக, பல நாட்களாக நாம் தயார் செய்தாலும், கடைசி நேரத்தில், தேர்வு எழுதும் அரங்கத்தின் வாசலில் நின்றபடி எத்தனை ‘இறுதி நிமிட தயாரிப்பு’கள் செய்துள்ளோம்! வீட்டில் நிகழும் வைபவங்களுக்கு, பல நாட்கள் தயாரித்தாலும், வைபவத்திற்கு முந்திய இரவு, அரக்க, பரக்க, ஓடியாடி, வேலைகள் செய்கிறோம். அதேபோல், வேலையில் சேர்வதற்குமுன் நடத்தப்படும் நேர்காணல், வீட்டுக்கு வரவிருக்கும் விருந்தினர்... என்று, கடைசி நேர தயாரிப்புக்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். மேலே சொன்னவை அனைத்திலும், பொதுவாக மேலோங்கியிருக்கும் ஓர் உணர்வு, எதிர்பார்ப்பு.
நல்ல காரியங்களை எதிர்பார்க்கும்போது, ஆனந்தம், ஆர்வம் ஆகியவை நம்மைச் செயல்பட வைக்கும். ஆனால், நல்லவை அல்லாத சூழல்களை நாம் எதிர்பார்க்கும்போது, நமது மனநிலை எப்படி இருக்கும்? எடுத்துக்காட்டாக, நமக்கு மிக நெருங்கியவர்கள், மருத்துவமனையில், உடல்நலமின்றி, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, எவ்வித எதிர்பார்ப்பு இருக்கும்? அதை எதிர்பார்ப்பு என்றுதான் சொல்லமுடியுமா? எதிர்பார்ப்பு, நல்லதோ, கெட்டதோ, அது எதிர்காலத்தோடு தொடர்புடையது...
எதிர்காலத்தைப்பற்றி தெரிந்து கொள்ளும் சக்தி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவ்வப்போது நமக்குள் ஏக்கம் எழுவதில்லையா? இத்தகைய சக்திக்காக இளவயதில் நான் ஏங்கியதுண்டு. எடுத்துக்காட்டாக, படிக்கும் காலத்தில், ‘அடுத்த நாள் தேர்வுக்கு வரப்போகும் கேள்விகளை முன்னரே தெரிந்துகொண்டால் நன்றாக இருக்குமே’ என்று ஏங்கியதுண்டு. நமக்குக் கிடைக்கப்போகும் வேலை, நமக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை, பிறக்கப்போகும் குழந்தை, நமது ஒய்வுகால வாழ்க்கை ஆகியவற்றைப்பற்றி முன்கூட்டியே தெரிந்துகொண்டால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எத்தனை பேர் ஏங்குகிறோம்?
எதிர்காலத்தைத் தெரிந்துகொள்வதற்கு எத்தனை வழிகளை நாம் பின்பற்றுகிறோம்! கைரேகையைப் பார்த்து, கிளியைக் கேட்டு, நாள், கோள், நட்சத்திரங்களைப் பார்த்து... எத்தனை வழிகளில் எதிர்காலத்தைப்பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்! எதிர்காலம் முழுவதும், "நல்ல காலம் பொறக்குது" என்ற சொற்களையே நாம் கேட்டுக் கொண்டிருந்தால், பரவாயில்லை. ஆனால், அந்த எதிர்காலத்தில் பிரச்சனைகள் மலைபோல் காத்துக் கிடக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டால், ஏன் இதைத் தெரிந்து கொண்டோம் என்று வருத்தப்படுவோம்.
எதிர்காலத்தைப்பற்றிய கேள்விகளில் மிக முக்கியமான கேள்வி - நம் ஒவ்வொருவரின் இறுதி நாள் பற்றியது. நாம் அனைவரும் மரணத்தை, ஒரு நாள் சந்திக்க இருக்கிறோம். ஆனால், அதைப்பற்றி எண்ணவோ, பேசவோ தயங்குகிறோம். மரணத்தைப்பற்றி, மரித்தோரைப்பற்றி சிந்திக்க திருஅவை நமக்கு நவம்பர் மாதத்தை வழங்கியுள்ளது. இந்த நவம்பர் மாதத்தின் ஒரு ஞாயிறன்று, நமது இறுதி காலம்பற்றி, இந்த உலகத்தின் இறுதி காலம்பற்றி சிந்திக்க நமக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உலக முடிவைப்பற்றி, சிறப்பாக, உலக அழிவைப்பற்றி கூறும், பல திரைப்படங்கள் வந்துள்ளன. இனியும் வரும். இவற்றில் பெரும்பாலானவை, மக்களைக் கவர்ந்த வெற்றிப் படங்கள். இத்திரைப்படங்கள் ஏன் வெற்றி அடைந்தன என்பதை அலசிப்பார்த்தால், மனித இயல்பு பற்றிய ஓர் உண்மையை உணரலாம்.
அழிவைப் பார்ப்பதற்கு நமக்குள் இனம்புரியாத ஆர்வம் உள்ளது. எடுத்துக்காட்டாக, சாலையில் விபத்து ஒன்று நடந்ததும், அங்கு கூடும் கூட்டத்தில், பலர் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தால் அங்கு ஈர்க்கப்படுவர். இந்த அடிப்படை ஆர்வத்தை மூலதனமாக்கி, நமது தொடர்பு சாதனங்கள், முக்கியமாக, திரைப்படங்கள், பல்வேறு திரைப்பட வித்தைகளைப் பயன்படுத்தி, அழிவை, பிரம்மாண்டமாக, கவர்ச்சியாக காட்டுகின்றன. இந்த பிரம்மாண்டங்கள், அழிவைப்பற்றிய துன்ப உணர்வுகளிலிருந்து நம்மை அந்நியப்படுத்தி, நமது மனங்களை மழுங்கடித்து விடுகின்றன. இது ஆபத்தான ஒரு போக்கு.
தொலைக்காட்சி, சினிமா, பத்திரிகைகள் வழியே, அழிவை, அடிக்கடி பார்ப்பதும், அழிவை, பிரம்மாண்டமாய்ப் பார்ப்பதும் ஆபத்து. ஊடகங்களில் பார்க்கும் அழிவுக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் அழிவுக்கும் பல வேறுபாடுகள். நிழல் படங்களில் அழிவைப் பார்த்து, பார்த்து பழகிவிட்டு, நிஜமாய் நடக்கும் அழிவுகளில், உயிர்கள் அழிக்கப்படுவதையோ, அல்லல்படுவதையோ, உணரமுடியாமல் போகக்கூடிய ஆபத்து உள்ளது.
இந்த அழிவுகளைப்பற்றி அடிக்கடி பேசுவதும், கேட்பதும் மற்றுமோர் ஆபத்தை உண்டாக்கும். அழிவுகளை அடிக்கடி பார்க்கும்போது, மனதில் நம்பிக்கை வேர்கள் கொஞ்சம், கொஞ்சமாய் அறுந்துவிடும் ஆபத்தும் உள்ளது. நம்பிக்கை வேரறுக்கப்படும் போது, அவநம்பிக்கை விதைக்கப்படும், விரக்தி வேர்விட்டு வளர்ந்துவிடும். உலக முடிவையும், அழிவையும் கவர்ச்சிகரமாகக் காட்டும் ஊடகங்களாகட்டும், அல்லது இந்த முடிவுகளைப் பற்றிய தவறான கருத்துக்களை மக்களுக்குச் சொல்லி பயமுறுத்தும் போலி மதத் தலைவர்களாகட்டும், அவர்களிடமிருந்து நாம் பெறும் உணர்வுகள், பெரும்பாலும், அவநம்பிக்கையும், விரக்தியுமே!
அழிவைப்பற்றி அடிக்கடி பேசி, அவநம்பிக்கை என்ற நோயைப் பரப்பிவரும் இவ்வுலகப் போக்கிற்கு ஒரு மாற்று மருந்தாக, இறைவனின் இரக்கம், இறுதிகாலம் வரை தொடரும் என்ற நம்பிக்கையை, நமக்குள் நாமே வளர்க்கவேண்டும். பிறரிடமும் இந்த நம்பிக்கையை வளர்க்க கடமைப்பட்டுள்ளோம். இந்த நம்பிக்கையை வளர்க்கும் சொற்களை, இறைவாக்கினர் தானியேல் நூலில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்.
தானியேல் 12: 1-3 நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்... ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.
இறுதியாக, ஓர் எண்ணம். நவம்பர் 18, இஞ்ஞாயிறன்று, உலக வறியோர் நாளைச் சிறப்பிக்கிறோம். 2016ம் ஆண்டு நிறைவுற்ற இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக வறியோர் நாளை, வழிபாட்டு ஆண்டின் ஒரு பகுதியாக உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும், வழிபாட்டு ஆண்டின் நிறைவாக, நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு முந்தைய ஞாயிறு, அதாவது, பொதுக்காலம், 33ம் ஞாயிறை, உலக வறியோர் நாளாகச் சிறப்பிக்க திருத்தந்தை அழைப்பு விடுத்தார். அதன்படி, 2017ம் ஆண்டு, நவம்பர், 19ம் தேதி, முதலாவது உலக வறியோர் நாளை சிறப்பித்த நாம், இஞ்ஞாயிறு, இரண்டாவது உலக வறியோர் நாளைச் சிறப்பிக்கிறோம்.
இரண்டாவது உலக வறியோர் நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்புச் செய்தியொன்றை, இவ்வாண்டு, சூன் 13ம் தேதி, பதுவை நகர் புனித அந்தோனியார் திருநாளன்று வெளியிட்டார். "இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்" என்ற தலைப்பில், திருத்தந்தை வெளியிட்ட அச்செய்தியின் சில வரிகள், நம் சிந்தனைகளை நிறைவு செய்யட்டும்:
தங்கள் மாண்பு மிதிக்கப்பட்ட நிலையிலும், இறைவனிடமிருந்து ஒளியும், ஆறுதலும் வரும் என்ற நம்பிக்கையுடன், தலைநிமிர்ந்து நிற்கும் வறியோரின் குரலை இறைவன் கேட்கிறார். வறியோரின் குரலை நாம் கேட்கிறோமா என்ற ஆன்ம ஆய்வை மேற்கொள்ள, உலக வறியோர் நாள் தகுந்ததொரு தருணம்.
எருசலேம் ஆலயத்தில் பலிகளை நிறைவேற்றும் சடங்கு முடிந்ததும், விருந்தொன்று நடத்தப்பட்டது. முதலாவது உலக வறியோர் நாளன்று, உலகின் பல மறைமாவட்டங்கள், இதையொத்த அனுபவத்தைப் பெற்றன. என் சகோதர ஆயர்களுக்கு, அருள்பணியாளர்களுக்கு, சிறப்பாக, வறியோரின் பணிக்கென அருள்பொழிவு பெற்றுள்ள தியாக்கோன்களுக்கு சிறப்பான அழைப்பு ஒன்றை விடுக்கிறேன். அதேவண்ணம், துறவியர், பொதுநிலையினர் அனைவரையும் அழைக்கிறேன். வறியோரின் குரலுக்கு நாம் அனைவரும் செவிமடுத்து, புதிய வழியில் நற்செய்தியை அறிவிப்பதற்கு, உலக வறியோர் நாள் ஓர் அருள்நிறை தருணமாக அமையட்டும்.
பொதுக்காலம் 32-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (1அர. 17:10-16)
17-ஆம் அதிகாரம் இறைவாக்கினர்கள் எலியா, எலிசா ஆகியோரின் பணியின் தொடக்கவுரையாக அமைகிறது. யூத மக்கள் சமுதாயத்தில் நிலவி வந்த அனைத்து அநீதி அமைப்புகளையும், வாழ்க்கை முறைகளையும் கேள்விக் குறியாக்குகின்றனர். ஏனென்றால் அவை அனைத்தும் இறைவனின் திட்டத்திற்கு அப்பாற்பட்டது. எலியா இறைவாக்கினர் பாகால் கடவுளை வழிபடும் அரசன் ஆகப்பை எதிர்த்தார். பாகாலை மக்கள் நில வலிமையின் தெய்வமாகக் கருதினர். இஸ்ராயேல் மக்கள் தங்களின் அரசர்களாலும், அரசிகளாலும் இத்தகயை ஒரு தெய்வத்தை வழிபட்டூ துன்பப்பட்டனர். இந்த நேரத்தில் எலியா 'யாவே' கடவுளைப்பற்றி போதிக்கிறார். இந்த பகுதியிலே வருகின்ற மூன்று நிகழ்வுகள் நம் அன்றாட வாழ்க்கையிலிருந்தே எழுகின்றன. 1-6 பஞ்சத்தைப் பற்றிய முன்னறிவிப்பு, 17-16 அன்றாட உணவு, 17-24 இறப்பு என வாழ்க்கையின் அம்சங்களைப் பற்றி பேசுகின்றன.
மழையின்றி ஆறுகள் வறண்ட போது, சரேப்தா ஊர் விதவை “வழியாக இறைவன் எலியாவிற்கு உதவுகிறார். விதவையிடம் போதிய மாவும், எண்ணெயும் இல்லாவிடினும், இறைவனின் வார்த்தைக்கு செவிகொடுத்ததினால் இறைவாக்கினருக்கு மட்டுமன்று அவளுக்கும், அவள் மகனுக்கும் போதிய உணவு கிடைக்கிறது. இத்தகைய ஒரு நிகழ்வு இறைவனின் உன்னத பராமரிப்பை நமக்குக் காட்டுகிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபி. 9:24-28)
இயேசு தனது இறப்பின் மூலம் விண்ணுலகக் கருவுலத்திற்குச் சென்று விட்டார். மூன்று வகையான இரத்தப்பலி காணிக்கைகள் பழைய ஏற்பாட்டில் காணலாம். ஆனால் இயேசு தம் இரத்தத்தின் மூலம் அனைவரின் பாவங்களையும் கழுவினார். அவருடைய இறப்பு, இயேசுவை புதிய உடன்படிக்கையின் மூலகாரணமான சக்தியாக மாற்றியது. இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இரத்தம்தான் புதிய உடன்படிக்கையின் அடித்தளம். பழைய உடன்படிக்கையின் படி மீண்டும் மீண்டும் பலிகளை நிறைவேற்ற வேண்டும்.
ஆனால் இயேசு தன் இறப்பின் மூலம் என்றும் நிலைத்து "நிற்கும் ஒரு சிறந்த பலியாகி நாமனைவரின் பாவங்களை கழுவுகிறார். இரண்டாம் வருகையின் போது நாமனைவரையும் முழுமையை நோக்கி வழிநடத்திச் செல்வார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மாற்கு 12:38-44)
இயேசு இப்பகுதியிலே தன்னுடைய புகழ்ச்சிக்காக அலங்கார ஆடை உடுத்தி ஊர்வலம் வரும் பரிசேயர்களைக் கடிந்து கொள்கிறார். அவர்களனைவரும் கடினமான தீர்ப்புக்குள்ளானவர்கள் என்று இயேசு கண்டனம் செய்கிறார். இத்தகையோர் அனைவரும் இயேசுவின் உண்மையான சீடராக இருக்க முடியாது என்பதைச் சொல்லி இறைவனை மகிமைப்படுத்தும் மனிதர்களாக வாழ இயேசு அழைப்பு விடுக்கிறார்.
இயேசுவின் உண்மையான சீடர் யார் என்பதைக் காட்ட மாற்கு நற்செய்தியாளர் இந்நிகழ்வை இங்கே குறிப்பிடுகின்றார். இயேசுவின் சீடர் என்பவர் இயேசுவுக்காக அனைத்தையும் கொடுப்பவர். இத்தகைய ஒரு முழுமையான அர்ப்பணிப்பு, அந்த கைம்பெண்ணின் கடவுள் நம்பிக்கையிலும் முழுமையான அன்பிலும் வெளிப்படுகிறது. இந்த பெண் நாளை பற்றி கவலை இல்லாமல் இருக்கிறாள். ஏனென்றால் அவள் உண்மையாகவே கடவுள் மீது நம்பிக்கை வைத்திருந்தாள்.
மறையுரை
கிணற்றைச் சுற்றி ஒரே கூட்டம். வடிகட்டின கஞ்சன் ஒருவன் கிணற்றில் விழுந்து விட்டான். தண்ணீரில் தத்தளித்தான். உயிருக்குப் போராடியபடி கத்தினான். “ஐயோ உதவி யாராவது என்னைக் காப்பாற்றுங்களேன்!'” காப்பாற்ற முயன்றவர்கள் கத்தினார்கள், “கையைக் கொடு, கையைக் கொடு” கைகளை நீட்டினார்கள். யாருக்கும் அவன் கை கொடுப்பதாய் தெரியவில்லை. எவ்வளவு கத்தினாலும் பயனில்லை. யாரலும் காப்பாற்ற முடியவில்லை. கைப்பிசைந்து நின்றார்கள். சேதி கேட்டு முல்லா வந்தார். நடப்பதைக் கூர்ந்து கவனித்தார். பரப்பரப்பில்லாமல் அவனருகில் போனார். அவனிடம் ஏதோ சொன்னார். கையை நீட்டினார். என்ன ஆச்சிரியம்! உடனே அவன் முல்லாவின் கையைப் பற்றி கொண்டான். வெளியே இழுத்துப் போட்டு காப்பற்றினார். அங்கிருந்தவர்களுக்கு ஒரே வியப்பு “முல்லா உங்களுக்கு மட்டும் அவன் எப்படி கைதந்தான்? முல்லா அந்த இரகசியத்தை வெளியிட்டார் “அவனே ஒரு கஞ்சன், நீங்கள் அவனிடம் போய் “கை கொடு கை கொடு' என்று கேட்கலாமா? கஞ்சன் எப்படி கொடுப்பான். நான் என் கையைப் பிடி, என் கையைப் பிடி என்றேன். உடனே பிடித்துக் கொண்டான்”, தொடர்ந்தார் “எடுப்பதில் உள்ள இன்பம் கொடுப்பதில் இருப்பதில்லையே”.
நாம் அனைவரும் அந்த கஞ்சனைப் போலத்தான் வாழ்கிறோமா? இல்லையா என்பதை இந்த பத்து நிமிடங்களில் நாம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்போம். நம் இறைவன் தன் மக்களுக்காக அனைத்தையும் படைத்தார். ஆதாம், ஏவாளுக்கு. அனைத்து சுகங்களையும் வசதிகளையும் இறைவன் ஏதேன் தோட்டத்திலே கொடுத்தார். இறைவன் தன் அன்பை முழுமையாக வெளிப்படுத்தினார். ஆனால் அந்தோ பரிதாபம் அவர்கள் இருவரும் தங்களின் முழு மனதை இறைவனுக்குக் கொடூக்கவில்லையே. காயினுக்கு அழகான கொளுத்த ஆடுகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பின் முத்தாக இறைவன் ஆபேலைக் கொடுத்தார். ஆனால் அந்தோ பரிதாபம்! அவன் இறைவனுக்கு. ஏற்புடைய காணிக்கையை வழங்கவில்லை. நம் அன்பின் வெளிப்பாடு நாம் கொடுக்கும் பொருள் களிலும், சொற்களிலும், செயல்களிலும்: வெளிப்படுகின்றன. இன்றைய திருவழிபாட்டின் வாசகங்கள் அனைத்தும் பகிர்ந்து வாழ்தலைப் பற்றி கூறுகின்றன. நம்மிடம் உள்ள பொருள்களை முழுமையாக நாம் பகிர்ந்து வாழ்ந்தோம் என்றால் நாம் வாழ்வின் கொடைகளை நிறைவாகப் பெற முடியும். நம் கைகள் கொடுத்து சிவந்த கையா அல்லது வாங்கியே சிவந்த கையா? கொடுத்திருந்தால் வாழ்வு கிடைத்திருக்கும். இல்லையென்றால் இன்றும். நாம் கையேந்தியே இருப்போம். இன்றைய வாசகங்கள் நமக்கு இரண்டு கருத்துகளை உணர்த்துகின்றன.
1. உன்னிடம் உள்ளதைக் கொடு
இன்றைய முதல் வாசகம் (1அர. 17:10-16) இறைவாக்கினர் எலியா சரேப்தா ஊர் கைம்பெண்ணிடம் அனுப்பப்படூவதைக் கூறுகிறது. அக்காலக் கட்டத்தில் எலியா ஆகாபு அரசனிடம், இறைவன் முன்னிட்டு வாக்களித்த பஞ்சம் பெரிதும் அனைத்து மக்களையும் பாதித்துக் கொண்டிருந்தது. இறைவாக்கினர் எலியா உணவின்றி தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் இறைவன் வாக்களித்தவாரே அவர் சரேப்தா ஊர் கைம்பெண்ணை அணுகி தனக்கு உணவு வேண்டுமென்று வேண்டுகிறார். அந்த பெண்ணானவள் முதலில் தயங்கினாள். ஆனாலும் இறைவாக்கினரின் வாக்குறுதிக்கு கீழ்படிந்து, அவள் செய்தாள். தன்னிடம் இருந்த அனைத்தையும் அவள் கொடுத்தாள். தானும் தன் மகனும் உண்ண வேண்டிய உணவை இறைவாக்கினருக்குக் கொடுத்தாள். தங்களுக்கு உணவு உண்ண இல்லையென்றாலும், மனமுவந்துக் கொடுத்தாள். அவளுடைய அத்தகைய மனபாங்கிற்குக் கிடைத்த பரிசு கடவுளின் பராமரிப்பு உள்ளதைக் கொடுத்தோம் என்றால் நமக்கு வாரி வழங்கப்படும்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலே நாம் ஒரு உன்னத எடுத்துகாட்டைக் காண்கிறோம். இயேசுவின் பாரட்டைப் பெற்ற ஒரு சிலரில் அன்று எருசலேம் கோவிலில் காணிக்கைப் போட்ட பெண்மணியும் ஆவாள். வற்புறுத்தலுக்காக கடமைக்காக வணிக நோக்குடன் காணிக்க அளிப்பவர் உண்டு ஆனால் இப்பெண்மணியோ “தன் வறுமையிலும், தான் வைத்திருந்த யாவும் பிழைப்புக்கானதும் முழுவதுமே போட்டுவிட்டாள் (12:44) தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்தாள். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளவில்லை. முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் அவள் அவ்வாறு செய்தாள். இறைமகன் இயேசுவின் பாராட்டைப் பெற்றாள். இருப்பது அனைத்தையும் கடவுளுக்கு கொடுத்தோமென்றால் நம் வாழ்வு இறைவனால் நிச்சயம் பாரட்டப் பெறும்.
பிறருக்கு நம்மிடம் உள்ளதை அனைத்தும் கொடுத்து வாழ்ந்தோமென்றால் இறைவன் நம்மை பராமரிப்பார். மேலும் இறைவனால் பாரட்டப்படுவோம். தூய பிரான்சிஸ்கு அசிசி ஒரு. சிறந்த எடுத்துக்காட்டு. இயேசுவின் மேல் கொண்ட நம்பிக்கையினால் தன் சொத்துக்கள், தன் ஆடைகள் ஏன் தன் தந்தையையும் இறைவனுக்காக இழந்தார். இறைவன் அவரைப் பராமரித்தார். இன்று நாமனைவரும் அவரை வாயாறப் புகழ்ந்து பேசுகிறோம்.
2. உள்ளத்திலிருந்து கொடு
நாம் எதைப் பிறருக்குக் கொடுத்தாலும் முகமலர்ச்சியுடன் முழு உள்ளத்துடன் கொடுக்க வேண்டும். நம் இதயம் தூய இரத்தத்தையும், அசுத்த இரத்தத்தையும் தன்னிடம் கொண்டிருக்கின்றன. அது நினைத்தால் அசுத்த இரத்தத்தை மட்டும் தன்னகத்தே கொண்டு தூய்மைச் செய்யாமல் இருக்கலாம். அப்படி இருந்தால் நோயினால் சாவோம். ஆனால் இறைவன் அவற்றை முற்றிலும் மாறுபட்டதாக படைத்தார். அசுத்த இரத்தத்தையும் சுத்தம் செய்து அனுப்புகிறது. எந்த பாரபட்சம் பார்ப்பதில்லை. அதே போல நாமும் முக மலர்ச்சியுடனோ அல்லது முழுமனதுடன் பகிர்ந்து வாழ வேண்டூமென்றால் அது நம் உள்ளத்திலிருந்து ஊற்று எடுக்க வேண்டும்.
சக்கேயு உள்ளத்திலிருந்து கொடுக்க முன் வந்தமையால் இயேசு அவனிடம் “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என்கிறார் (லூக்கா 19.9). நாமும் நம் உள்ளத்திலிருந்து கொடுத்தோமென்றால், மீட்பு பெறுலோம். இதைதான் தூய (பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 9ம் அதிகாரம் வசனங்கள் 7 முதல் 9 வரை தெளிவாகக் கூறுகிறார். ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மன வருத்தத்தோடோ, கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முக மலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்குரியவர். கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்த சூழ்நிலையிலும், எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்கு தருவார். அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம். உங்களுக்குத் தருவார். ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும் போது அவரது. நீதி என்றென்றும் நிலைத்திருக்கும் என்று மறைநூல் எழுதியுள்ளது அல்லவா!
3. உன்னையே கொடு
பிறர் வாழ மண்ணுலகப் பொருட்களை பகிர வேண்டும் அதே நேரத்தில் இறைமகன் இயேசு நமக்கு கூறும் கருத்து தன்னையே முழுமையாகக் கொடுக்க வேண்டூம். இன்றைய இரண்டாம் வாசகம் இதைதான் உணர்த்துகிறது. இறைமகன் இயேசு தன்னையே முழுமையாகக் கொடுத்தார். ஆனால் நாமனைவரும் ஒவ்வொரு நாளும் நமக்காக இறந்து கொண்டிருக்கிறோம். பிறருக்காக நாம் வாழ்வு கொடுக்கும் போது நாமும், உலகம் அனைத்தும் வாழப் பெறுகிறது. தொடக்கக் காலத்திலே இயேசுவைப் போல் பலபேர் தன்னையே கொடுத்ததினால்தான் "இன்று கிறிஸ்தவம் ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறது. அன்று வேத சாட்சிகளும், ஏன் திருத்தூதர்களும் தங்களையே அர்ப்பணம் “செய்ததால்தான் இன்று நாமனைவரும் இறைவனின் இடைவிடா அன்பையும் அருளையும் நிறைவாய் பெற்றுள்ளோம். தூய சவேரியார் தன்னையே இறையாட்சிக்காக பரிசாகத் தந்தார். இறைமகன் இயேசு நமக்காக சிலுவையே பலியாகத் தந்தார். தன்னைக் கொடுத்த அனைவரும் வாழ்வின் ஊற்றாய் விளங்குகின்றன.
நம்மிடம் உள்ளதையும், நம்மையும் உள்ளத்திலிருந்துக் கொடுக்கும் போது நாம் வாழ்வு பெறுகிறோம். வாழ்வில் கணவன் மனைவிக்காக என்ன வாங்கிக் கொடுத்தீர்கள்? அதே போல மனைவியும், பெற்றோர்கள் குழந்தைகளுக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? இன்றைய காலக்கட்டத்திலே பண வசதிகளையும் பொருள் வசதிகளையும் செய்து கொடுத்து நாமனைவரும் நம்மையே ஒவ்வொருவருடன் பகிர்ந்து கொள்ள துணிகிறோமா? கணவன் மனைவியுடனும், மனைவி கணவனுடலும், பெற்றோர் குழந்தைகளுடனும் எவ்வளவு நேரத்தையும், உங்களையும் பகிர்ந்து கொள்கிறீர்கள்? மனிதர்கள் மனதின் உருவம் மனமானது. பொருளைவிட இன்னொரு மனதைத்தான் என்றும் தேடும். இறைமகன் இயேசுவைப் போல் நம்மை நாம் கொடுக்க முன்வர வேண்டும்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
1. பகிர்தலே வாழ்வின் ஊற்று
2. பகிர்தல் கடவுளின் கொடை
பொதுக்காலம் - முப்பத்து இரண்டாம் ஞாயிறு
முதல் வாசகம்: 1அர 17: 10-16
இஸ்ரயேலின் அரசனான ஆகாபின் காலத்திலே (கி.மு. 874-853) ஆண்டவர் எலியா என்னும் இறைவாக்கினரை அனுப்புகிறார். இந்த எலியா பற்றிய நிகழ்ச்சிகள் 1அர 17 முதல்2 அர1ம் அதிகாரம் முடியக் கூறப்படுகின்றன. இன் றைய வாசகம் சாரிபாத் ஊர்க் கைம்பெண்பால் அவர் நிகழ்த்திய புதுமைபற்றிக் கூறுகிறது.
ஆண்டவான் பராமரிப்பு
நாட்டிலே பஞ்சம். பனியோ மழையோ கிடையாது (17 : 1) எனினும் தம் இறைவாக்கினரைப் பாதுகாக்கிறார் இறைவன். காரீத் ஆற்றின் தண்ணீரை அளித்ததோடு, காகங்கள் வழி அவருக்கு உணவும் அளிக்கிறார் (17 : 2-6) மழையின்றி அவ் ஆறு வறண்ட போதும் சாரிபாத் ஊர் விதவைவழி, அவருக்கு உணவளிக்கிறார். விதவையிடம் போதிய மாவும் எண்ணெய்யும் இல்லாவிடினும் இறைவாக்குக்கு அவள் பணிந்ததினாலே, இறைவாக்கினருக்கு மட்டுமன்று, அவளுக்கும் அவள் மகனுக்கும் போதிய உணவு கிடைக்கிறது.
தம்மவரை, தம்மில் நம்பிக்கை வைப்பவர்களை இறைவன் ஒருபோதும் கைவிடுவது கிடையாது. வாய் திறந்து கேட்காதபோதே தேவையை அறிந்து உதவுபவர் கடவுள். “உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்" (மத் 6 : 32). எலியாவின் தேவையை அறிந்து அவருக்கு உதவிய இறைவன் நமக்கும் நம் தேவைகளில் உதவுவார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு வேண்டுவோம். வயல்வெளி மலர்களையும் வானத்துப் பறவைகளையும் பராமரித்துக் காத்துவரும் இறைவன் தம்முடைய சாயல்களாகப் படைக்கப்பட்டுள்ள நம்மைக் கைவிட்டுவிடுவாரா? (மத் 6 : 25-34).
ஆண்டவரின் தனியன்பு
தம் மக்களான இஸ்ரயேல் மேல் ஆண்டவர் அன்பு கொண்டுள்ளார். எனினும் பிறவினத்தார் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். “உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்'' (லூக்4 : 25-26). இயேசுவும் தம் மக்களாலே ஒதுக்கப் பட்டார், வெறுக்கப்பட்டார். தம் மக்களுக்காகவே அவர் வந்தாலும் அவர் தனியன்பு வெளிப்படுவது பாவிகள், பிறவினத்தார், ஒதுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், ஏழை எளியோர்பால் தானே? “மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' (லூக் 15 : 31-32) என்று கூறிப் பாவிக்காக விருந்து படைத்தவர் அல்லவா அவர்? தொண்ணுற்றொன்பது ஆடுகளை விட்டுவிட்டு, காணாமற்போன ஒரு ஆட்டைத் தேடிச் சென்றவர் அல்லவா அவர்? (லூக் 15 :1-7).
இங்கும் சீதோன் நாட்டுச் சாரிபாத் ஊரினளிடம் எலியாவை இறைவன் அனுப்பியது, இறைவனுடைய தனிப்பட்ட சிறந்த அன்பைக் காட்டுகிறது எனலாம். நாமும் பிறவினத்தார்பால்-இந்துக்கள், இசுலாமியர், பெளத்தர் மற்றும் பிறர்பால் அனுப்பப்பட்டுள்ளோம். இறைவனின் அரும்பெரும் செயல்களை, இறைவனின் அளவுகடந்த அன்பை இவர்களுக்கு நம் வாழ்வு வழியும், சொற்கள் வழியும் எடுத்தியம்புகிறோமா? சிலுவையில் அறையப்பட்டுள்ள இயேசுவின் கைகளும் கால்களும் செயலற்ற நிலையில் இருக்கும்போது, நாமே இயேசுவின் கைகளாகவும் கால்களாகவும் மாறிப் பிறருக்கு உதவுவோமா? நம்முடைய வாழ்விலே நாம் எதிர்ப்பட வேண்டிய சாரிபாத் ஊர் விதவைகள் யார்? அவர்களைத் தேடிச் செல்வோமா?
அஞ்சாதே நீ போய், சொன்னபடியே செய்.
அவள்போய் எலியாவின் சொற்படி செய்தாள்.
இரண்டாம் வாசகம் : எபி. 9:24-28
கிறிஸ்து எக்காலத்துக்கும் தலைமைக்குரு. பழைய உடன்படிக்கைப் பலிமுறைகளை ஒழித்துவிட்டு, தமது இரத்தத்தால் புதிய உடன்படிக்கைப் பலியை நிறைவேற்றினார். இப்புதிய உடன்படிக்கைப் பலியின் மூலம் என்றும் நமக்காக இறைவன் முன்னிலையிலிருந்து பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். இதுவே இன்றைய வாசகக் கருத்து.
ஒரே முறை கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்தார்: ப.ஏ. முறைப்படி பல குருக்கள் பலமுறை பலிப்பொருட்களைச் செலுத்தினர் (எபி 7 : 23-24). கிறிஸ்து ஒருவர்தான் ஒரேமுறை தம்மையே பலியாகச் செலுத்துகிறார். பழைய பலி முறைகள் மக்களை நிறைவுள்ளவர்களாகச் செய்யமுடிய | வில்லை (9:9). எனவேதான் அவை திரும்பத்திரும்ப நிறைவேற்றப்பட்டன. கிறிஸ்துவின் பலியோ முடிவில்லா மீட்பை அனைவருக்கும் அளிக்கவல்லது (9:12). எனவே ஒரே முறை மட்டும் நிறைவேற்றப்படுகிறது. ப.ஏ. குருக்களோ ஆட்டுக் கடாக்கள், இளங்காளைகளின் இரத்தத்தைக்கொண்டு பலிசெலுத்தினர் (9:13-14). கிறிஸ்துவோ தம் இரத்தத்தைச் சிந்தியே, தம்மையே பலியாகச் செலுத்தி இறைவனின் தூயகத்தில் நுழைகிறார் (9: 14-25). எனவே “ஒரே முறையில் எக்காலத்திற்குமே பலியை நிறைவேற்றி விட்டார்” (7:27). இவ்வாறு கிறிஸ்துவின் இரத்தத்தாலே நாம் அனைவரும் மீட்புப் பெற்றுவிட்டோம். கிறிஸ்து தம் இரத்தத்தை எடுத்துக்கொண்டு இறைவன்முன் நிற்கும் காட்சி என்றும் நம் மனத்தில் இருப்பதாக! எவ்வளவு நம்பிக்கை தரும் காட்சி இது?
நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்
நம் பாவங்களிலிருந்து நம்மை மீட்க வல்லவர் கிறிஸ்து தலைமைக் குரு. “ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினார்' (எசா. 53:12). துன்புறும் ஊழியன் என்பார் எசாயா. இத்துன்புறும் ஊழியன் நம் இயேசு தலைமைக் குருவேயாவர். அவர் “அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்” (எபி 7: 25). எனவேதான் யோவானும் “ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார் ( 1யோவா 2: 4) என்பார். “வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின்மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு (திவெ. 1: 18) என்கிறார் இயேசு. நமக்காகப் பரிந்து பேச இயேசுவே இறைவன்முன் நிற்கும்போது நமக்குப் பயமோ அச்சமோ எதற்கு? பாவம் நம்மை ஆட்கொண்டபோதும் நாம் நம்பிக்கை இழக்கக்கூடாது. இயேசுவின் இரத்தமும் அவர் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுதலும் நம்மை ஒருபோதும் கைவிடா.
இயேசு நமக்காகப் பரிந்து பேசின், நாமும் பிறருக்காக இறைவனிடம் நம் செயல்களில் பரிந்துபேசக் கடமைப்பட்டுள்ளோம். ஆபிரகாமும் (காண் : தொநா 18: 22 -33) மோசேயும் (விப. 17 : 8-13) மக்களுக்காகப் பரிந்து பேசினர். இறைவனும் அவர்கள் குரலொலியைக் கேட்டார். நாமும் நம்மைச் சூழ இருப்போருக்காக, விசேஷமாக, பாவிகளுக்கு நம்முடைய செபங்களில் ஒரு தனியிடத்தை ஒதுக்குவோமா? இயேசுவோடு சேர்ந்து, நாமும் அவருடைய குருத்துவத்திலே பங்குபெற்று, பாவிகளுக்காக இறைவனிடம் பரிந்துரை செய்வோமா? “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளைதானே வளரும்'' என்பார்கள். நாமும் பிறருக்காக வேண்டும்போது, இறைவன் நம்முடைய தேவைகளைக் கவனித்துக் கொள்வார்.
நமக்காகப் பரிந்து பேசும் இயேசு. இறுதி நாளில் நமக்கு மீட்பும் அளிப்பார் (9:28) என்பது திண்ணம். “பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளித்த'' இயேசு நமக்கு விண்ணக வாழ்வைத் திண்ணமாகத் அளிப்பார். நமக்காகப் பேசும்படி கடவுளின் திருமுன் நிற்கிறார். நற்செய்தி : மாற்கு 12 : 38 - 44 மறைநூல் அறிஞர்கள் சிறப்பாடை அணிந்து, கையிலே வேத நூலை ஏந்தி. வாயிலே மந்திரங்கள் முணுமுணுக்க மக்களை மயக்கினர். அனைவரின் பாராட்டைப் பெற விரும்பினர். இதற்கு முற்றிலும் மாறானது கைம்பெண்ணின் காணிக்கை. மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் பாராட்டைப் பெறவில்லை; அவரால் புகழப்பட்டவள் கைம்பெண்ணே.
பாவனை செய்பவர் பரிசயேர்
“தாலித்” என்பது செபவேளையில் அணிந்துகொள்ளும் ஒர் ஆடை. மறைநூல் அறிஞர்களோ இதை மற்ற நேரங்களிலும் அணிந்து கொண்டு செபம் செய்வதாகப் பாவனை செய்தனர். செபக்கூடத்தில் உள்ள முக்கிய இடங்களை இவர்களே ஆக்கிரமித்துக்கொண்டனர். சான்றோர்களிடம் விளங்கவேண்டிய அடக்கமுடைமை இவர்களிடம் எள்ளளவும் இல்லை.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் (குறள் 121)
என்பதை அறவே மறந்தனர். “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்'' (மத் 14 : 29) என்ற இயேசுவின் அழைப்பை ஏற்காதவர்கள்.
உள்ளத்தை ஊடுருபவர் இறைவன்
மனிதர்கள், மக்களின் வெளிச் செயல்களைக் கொண்டே, அவர்களை எடை போடுவர். நமது எண்ணங்களையும் நோக்கங்களையும் அவர்கள் அறியார். ஆனால் உள்ளத்தை ஊடுருவி அறியும் இறைவனோ அனைத்தையும் உள்ளது உள்ளவாறே மதிப்பிடுகிறார். மக்கள்முன் மதிப்புள்ளதாக எண்ணப்படும் செயல்கள் இறைவன் முன் செல்லாக் காசுகளாகி விடுவதும் உண்டு. எனவே செப ஆடை அணிவது, முதலிருக்கையில் அமர்வது உண்டு. எனவே செப ஆடை அணிவது, முதலிருக்கையில் அமர்வது, பொது இடங்களில் வணக்கம் பெறுவது போன்ற செயல்களால் ஒருவன் புனிதனாகிவிடுவதில்லை. பரிசேயர்களும் மறைநூல் அறிஞரும் பக்திமான்கள் போல் நடித்துக்கொண்டு, கைம்பெண்ணின் உடைமைகளை விழுங்குகிறார்கள். இத்தகையோருக்கு அன்றே விடுதலைப் பயணம் எச்சரிக்கை விடுத்தது: ““அந்நியனைத் துன்புறுத்தவும் வதைக்கவும் வேண்டாம். நீங்களும் எகிப்திய நாட்டில் அந்நியராய் இருந்தீர்கள் அல்லவா? விதவைகளுக்கும் "திக்கற்ற பிள்ளைகளுக்கும் அநீதி செய்தீர்களாயின், அவர்கள் நம்மை நோக்கிக் கூப்பிட, நாம் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டு, கோபம் மூண்டவராய், வாளினால் உங்களைக் கொல்வோமாதலால், உங்கள் பெண்களும் விதவை ஆவார்கள் 22 : 21- 22). சமயத்தின் போர்வையில், பக்தர்கள் வேடத்தில் நடத்தப்படும் பல்வேறு பாவங்களின் எதிரொலியை இங்குக் காணலாம். ஏமாறவும் வேண்டாம்; ஏமாற்றவும் வேண்டாம்.
உள்ளதெல்லாம் அளித்தவள் ஏழைக் கைம்பெண்
இயேசுவின் பாராட்டைப் பெற்ற ஒரு சிலரில், அன்று எருசலேம் கோவிலில் காணிக்கை போட்ட பெண்மணியும் ஒருத்தியாவாள். வற்புறுத்தலுக்காக, கடமைக்காக, வணிக நோக்குடன் காணிக்கை அளிப்பவர் உண்டு. அவர்களும் தம் பொருளில் சிறு பகுதியையே அளிப்பர். இப் பெண்மணியோ “தன் வறுமையிலும் தான் வைத்திருந்த யாவும், தன் பிழைப்புக்கானது முழுவதுமே போட்டுவிட்டாள் (12 : 44). தன்னைப் பற்றிக் கவலைப்படாது, தன்னைவிட வறுமையில் வாடுபவர்க்கு மனிதாபிமானத்துடன் அளிக்கப்படும் பொருளுதவியை ஒருவேளை மக்கள் காணாதிருக்கலாம்; நாளிதழ்களில் இதற்கு விளம்பரம் இல்லாதிருக்கலாம். ஆனால் இறைவன் இவர்களை 'எடைபோட்டுப் பாராட்டுகின்றார்.' இறைவன் பாராட்டைப் பெற முயலுகின்றோமா?
வறியார்க் கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து (குறள் - 221)
ஏழைகள் உவந்தளிக்கும் சிறுகாணிக்கைகள் தான் இன்று வெள்ளமெனத் திரண்டு இன்றைய ஆலயங்களை, கருணை இல்லங்களை, மருத்துவ மனைகளை, சேவை மையங்களைக் கட்டி எழுப்பியுள்ளது.
காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட எல்லாரிலும் இந்த ஏழைக் கைம்பெண்ணே அதிகம் போட்டாள்