மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலத்தின் ஆம் ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-எரேமியா 31: 7-9 | எபிரேயர் 5: 1-6 | மாற்கு 10: 46-52

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



ஓர் இளைஞன் 21 வயதில் வியாபாரத்தைத் தொடங்கினான். பெரும் இழப்பு. சட்ட சபைக்குப் போட்டியிட்டார். மண்ணைக் கவ்வினார். தொழில் தொடங்கினார். தோல்வியைத் தழுவினார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். படுதோல்வி . நாற்பத்து ஏழாவது வயதில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்விக்கு மேல் தோல்வி. ஆனால் 52 வயதில் ஜனாதிபதி தேர்தலில் குதித்தார். வெற்றி அவரை முத்தமிட்டது. அவரின் புகழ் உலகெங்கும் பரவியது. அவர் யார் தெரியுமா? தன்னம்பிக்கை இழக்காது, தோல்வியைக் கண்டு துவளாது , தடைக்கற்களைக் கண்டு தடுமாறாது, விடா முயற்சியோடு போராடி இறுதி இலக்கை தன் வசப்படுத்திக் கொண்ட மாமனிதர்! அவர்தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக திகழ்ந்த ஆப்ரகாம் லிங்கன்.

என்னால் முடியும் என்ற ஒரு மனநிலை வேண்டும். அதைத்தான் ஆன்மீக மொழியில் விசுவாசம், நம்பிக்கை என்றழைக்கிறோம். சைக்கிளை ஓட்டாமல் ஒருவர் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முடியுமா? நீரில் இறங்காமல், நீச்சல் கற்றுக்கொள்ள முடியுமா? அதேபோல், ஆண்டவரில் விசுவாசம் வைக்காமல் அவரிடம் எப்படி நன்மை பெற முடியும்?

இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார். சிதறிக் கிடக்கும் மக்களை ஒன்று சேர்க்கும் கடவுளே யாவே! இறைவனின் இந்த நல்ல, வல்ல செயல்களில் இஸ்ரயேல் மக்கள் நம்பிக்கை கொள்ள அழைப்பதே இன்றைய முதல் வாசகத்தின் மையப் பொருள்.

இன்றைய நற்செய்தியிலே தரப்படுகின்ற பார்த்திமேயு என்ற குருடனைப் பாருங்கள். ஏராளமானோர் இயேசுவின் பின்னால் கூட்டமாகச் சென்றதைப் பொருட்படுத்தாமல் கூக்குரலெழுப்பிக் கத்துகின்றான். யார் என்ன சொன்னாலும் பொருள் படுத்தவில்லை. ஆண்டவர் இயேசுவையே நோக்குகிறான். மற்றவர்கள் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. ஆண்டவர் மட்டுமே தெரிந்தார். பார்த்திமேயு குரல் எழுப்பியபோது மற்றவர்கள் தடுத்தார்கள், அதட்டினார்கள். பார்த்திமேயு முடங்கவில்லை. மீண்டும் அதிகமாகக் கத்தினான். தன் முயற்சியில் வெற்றி கண்டான். ஆண்டவரின் கவனத்தைக் கவர்ந்தான். ஆண்டவர் அவனைக் கூப்பிட்டு, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் (மாற் 10:51) என்று கேட்கிறார்.

நான் பார்வை பெற வேண்டும் என்றான். கேட்டது கிடைத்தது. கேளுங்கள் கொடுக்கப்படும் (லூக். 11:9) என்ற ஆண்டவர் தன் வார்த்தைகளைப் பொய்யாக்கவில்லை. பார்த்திமேயு கேட்டது கிடைத்தது.

பிச்சை கேட்பவன் கெளரவம் பார்க்க முடியுமா? நமக்கோ கேட்பதற்கு கஷ்டம்! எனக்கு என்ன தேவையென்று ஆண்டவருக்கு தெரியாதா? என்ற வீண் வம்பு பேசியே வீணாகிப் போகிறோம்.

வாய்ப்புக்களை இழக்கின்றவர்கள் வாழ்வை இழக்கிறார்கள். மற்றவர்கள் அதட்டுகிறார்கள் என்று அமைதி காத்திருந்தால் பார்த்திமேயு என்ற கதாபாத்திரம் விவிலியத்தில் இல்லாமலேயே போயிருக்கக் கூடும்.

வாய்ப்புக்களைப் பயன்படுத்தி வாழத் தெரியாத சிலர் கூறுவதுண்டு. இந்த சாமியார் இருக்கும் வரை நான் கோவில் பக்கமே போகமாட்டேன். யாருக்கு நட்டம்? பார்த்திமேயு இயேசுவை மட்டும் சிந்தித்தானா அல்லது மற்றவர்கள் அதட்டுகிறார்களே என்று சிந்தித்தானா? கடவுளைச் சந்திக்க யாரும் தடையாக இருக்க முடியாது, உன்னைத் தவிர. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை பர்த்தலோமேயு நமக்குக் காட்டுகிறார். முதல் முயற்சியிலே வெற்றியில்லையே என்று சோர்ந்துவிடாதே! வெற்றி பெறும்வரை, தொடர்ந்து இறுதி இலக்கையே நோக்கிய வண்ணமாகப் புறப்பாடு என்பதையும் இன்று பார்த்திமேயு நமக்குப் பாடமாகத் தருகிறார்.

இயேசுவின் கருணை உள்ளம் பார்த்திமேயு வழியாக இன்று நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது.

உதவிக்கரம் நீட்ட எத்தனையோ முறை உங்களுக்கு வாய்ப்புக்கள் கிடைத்தும், நல்ல சமாரித்தனைப் போல நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லையென்றால் நாம் பார்வை அற்றவர்களே! நன்மைகள் செய்ய வாய்ப்பு இருந்தும் நன்றாக அறிந்திருந்தும் அதைச் செய்யாவிட்டால் பாவம்.

இறுதியாக பார்த்திமேயு தனது அழுக்கடைந்த மேலாடையை வீசி எறிந்துவிட்டு துள்ளிக் குதித்து இயேசுவிடம் வந்தது போல, நாமும் நமது பழைய பாவ இயல்பைக் களைந்துவிட்டு புதிய வாழ்வைத் தொடங்க (எபே. 4:22-24) புறப்படுவோம். புதிய பார்வை பெற்று புதுப்படைப்பாக மாறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நமது பிரச்சினைகளை இயேசு தீர்த்துவைப்பார்.

விடுதலை தேடும் உலகம் இது!
இல்லாமையிலிருந்து விடுதலை; கல்லாமையிலிருந்து விடுதலை;
அறியாமையிலிருந்து விடுதலை; வெள்ளத்திலிருந்து விடுதலை;
பூகம்பத்திலிருந்து விடுதலை; நோயிலிருந்து விடுதலை;
பாவத்திலிருந்து விடுதலை; மரணத்திலிருந்து விடுதலை.

இதுவே இன்றைய மனிதனின் மூச்சும் பேச்சும். விடுதலை நிறைந்த இறையரசிலே (உரோ 14:17) நாமெல்லாம் கானத்து மயிலாக, வானத்துக் குயிலாக ஆடிப்பாடி வாழ விரும்புகின்றோம். இதோ நாம் தேடும் விடுதலையை, நமக்குத் தரும் ஆற்றல்மிக்க இயேசுவை இன்று நமக்கு இன்றைய நற்செய்தி சுட்டிக்காட்டுகின்றது.

அவர் பெயர் பார்த்திமேயு. அவர் பார்வை அற்றவர். அவர் காலதேவன் கண் திறப்பான் எனக் காத்திருந்தார். காத்திருந்த காலம் அவருக்குக் கனிந்தது! மீட்பர் வந்தார் ! பார்வையற்றோர் பார்வை பெறுவார் (லூக் 4:18) என முழக்கமிட்டவர் வந்தார். மகன் உங்களுக்கு விடுதலை அளித்ததால் நீங்கள் உண்மையிலேயே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள் (யோவா 8:36) என்றவர் வந்தார். யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் (யோவா 7:37) என்று உரைத்தவர் வந்தார். பார்த்திமேயு தாகத்தோடு உடல் நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தார்; விடுதலை அடைந்தார் ; இயேசுவுடன் வழி நடந்தார்.

இயேசு இன்றும் அரும் அடையாளங்கள் பல செய்துகொண்டுதான் இருக்கின்றார். இதற்கு லூர்து நகரிலும் வேளாங்கண்ணியிலும் பூண்டியிலும் நடக்கும் புதுமைகள் சாட்சி சொல்லும். விடுதலையை விரும்பும் நாம் அனைவரும் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! அது என்ன? நமது முழு நம்பிக்கையையும் இயேசுவின் மீது வைக்க வேண்டும்.

அண்மையில் ஓர் அபூர்வக் காட்சி ஒன்றை சாலையொன்றில் கண்டேன். அந்த மோட்டார் சைக்கிளில் நான்குபேர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். சைக்கிளை ஓட்டியவர் பின்னால் இரண்டு பேர் அவருக்கு முன்னால் ஒருவர்! மோட்டார் சைக்கிளை ஓட்டிய அப்பா முன்னால் அவரது நான்கு வயது மகன் அமர்ந்திருந்தான். மக்கள் நெருக்கம் நிறைந்த குறுகிய சாலை அது! அப்பா மிகக் கவனமாக, பய பக்தியோடு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். ஆனால் மகனோ, அந்தச் சிறுவனோ டைட்டானிக் ஸ்டைலில் இரண்டு கைகளையும் விரித்து சிரித்தபடி பயணம் செய்தான். அவனுக்கு அச்சமே இல்லையா? கொஞ்சம் கூட அச்சமில்லை! காரணம் அப்பா மோட்டார் சைக்கிளை ஓட்டுகின்றார் என்ற உள் உணர்வு. இப்படிப்பட்ட உள் உணர்வுக்குப் பெயர்தான் நம்பிக்கை.

இருளும் ஒளிதான் எனக்கு (திபா 139 : 5,12) என்று திருப்பாடல் ஆசிரியரோடு சேர்ந்து பாடுவதற்குப் பெயர்தான் நம்பிக்கை. இயேசுவின் மீது நமது முழு நம்பிக்கையையும் வைக்கும்போது அவர் நமது பிரச்சினையை அவரது பிரச்சினையாக மாற்றிக்கொள்வார்..

மேலும் அறிவோம் :

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் (குறள் : 71).

பொருள் : ஒருவர் உள்ளத்தில் கொண்டிருக்கும் அன்பினைத் தாழ்ப்பாள் இட்டு அடைத்து வைக்க இயலாது. அன்பரின் துன்பத்தைக் காணும்போது சிந்திடும் கண்ணீர்த்துளியே அந்த அன்பைப் பலரும் அறியச் செய்துவிடும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கண்மருத்துவரிடம் ஓர் இளைஞன், "டாக்டர் எனக்கு ஆண்கள் சுத்தமாகத் தெரியலை. பெண்கள் மட்டும், அதுவும் வயசுப் பெண்கள் மட்டும் தெரியுது. என் பார்வை கிட்டப் பார்வையா? அல்லது எட்டப் பார்வையா? என்று கேட்டதற்கு, மருத்துவர், "உன் பார்வை கெட்டப் பார்வை" என்றார், நம்மில் பலருக்குப் பார்வைக் கோளாறு உள்ளது. நாம் யாரைப் பார்க்க விரும்புகிறோமா, எப்படிப் பார்க்க விரும்புகிறோமோ அப்படித் தான் பார்க்கிறோம். நமக்குத் தேவையான நலமான பார்வையை இன்றைய அருள்வாக்கு வழிபாடு அளிக்கிறது.

இன்றைய நற்செய்தியில் பர்த்திமேயு என்ற பார்வையற்ற பிச்சைக்காரருக்குக் கிறிஸ்து பார்வை அளிக்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, அரீரியாவில் அடிமைகளாய்ச் சிதறிக்கிடந்த எஞ்சிய இஸ்ரயேல் மக்களைக் கடவுள் மீண்டும் எருசலேமுக்கு அழைத்து வருவார் என்றும், அவர்களில் பார்வையற்றவரும் அடங்குவர் என்றும் முன்னறிவிக்கிறார். அப்படித் திரும்பி வருபவர்கள் மகிழ்ச்சி நிறைந்தவர்களாகக் காணப்படுவர், கண்ணீரோடு விதைப்பவர்கள் மகிழ்ச்சியுடன் அறுவடை செய்வது போல் (பதிலுரைப்பாடல், திபா 126:5) அகதிகளாக அவதிப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சியுடன் தாயகம் திரும்புவர்.

தாவீது மகனும் மெசியாவுமாகிய கிறிஸ்து பார்வையற்ற பர்த்திமேயுவுக்குப் பார்வை அளித்து, இன்னல் நீக்கி இன்பம் கொடுத்து, இருளிலிருந்து மக்களை ஒளிக்குக் கொண்டுவந்து மகிழ்வைத் தருகிறார். பர்த்திமேயு பார்வை பெற்றார் என்பதைவிட அவர் கிறிஸ்துவின் சீடராக மாறி அவரைப் பின்பற்றினார் என்பது நமது கவனத்தை ஈர்க்கிறது. உயிர்த்த கிறிஸ்துவை மகதலா மரியா மட்டும் ஒருமுறை 'ரபூனி', அதாவது, போதகரே என்றழைத்து அவரைப் பற்றிக் கொள்கிறார் (யோவா 20:16-17). பாத்திமேயுவும் கிறிஸ்துவை 'ரபூனி' என்றழைத்து அவரைப் பின்பற்றி அவரது சீடராக உருவெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்து சிலுவை சுமந்து சென்றபோது அவரைப் பின் தொடர்ந்த ஓர் இளைஞன் தனக்கு ஆபத்து வந்தபோது தன் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு ஆடையின்றி ஒடினான் (மாற் 14:51-52). ஆனால் பர்த்திமேயுவோ தம் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு கிறிஸ்துவைப் பின் தொடர்கிறார் (மாற் 10:50-52). பார்வை உள்ளவன் கிறிஸ்துவை விட்டுவிட்டு ஓடுகிறான்; பார்வையற்றவன் கிறிஸ்துவை நெருங்கி வருகிறான். புறப்பார்வை உள்ளவன் ஆன்மீகக் குருடனாகிறான். புறப்பார்வை அற்றவன் ஆன்மீக ஞானியாகிறான். "பார்வையற்றோர் பார் வை பெறவும், பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவும் வந்தேன்" (யோவா 12:39) என்று கிறிஸ்து ஆன்மிகக் குருடர்களாகிய பரிசேயரிடம் கூறியது நினைவு கூறத்தக்கது.

நமது பார்வை எவ்வாறு உள்ளது? ஒருவர் கண் மருத்துவரிடம் சென்று. "எனக்கு எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறது என்றதற்கு, மருத்துவர் அவரிடம், அதற்கு ஏன் நான்கு பேர் வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டாராம்! கண் மருத்துவருக்கே பார்வைக் கோளாறு! மனித இனத்தை ஓரினமாக இணைக்க வேண்டிய கிறிஸ்துவர்களுக்கே பார்வைக் கோளாறு. இக்கோளாறு திருத்தூதர் பவுல் காலத்தில் இருந்தே வருகிற ஒரு தொற்று நோய், அவர் காலத்தில் கொரிந்து திருச்சபையில் நான்கு கட்சிகள் இருந்தன: பவுல் கட்சி, அப்பொல்லோ கட்சி, கேபா கட்சி, கிறிஸ்துவின் கட்சி (1கொரி 1:12}, இத்தகைய கட்சி மனப்பான்மை கொண்ட கிறிஸ்துவர்கள் ஆவியில் வாழ்வதில்லை; ஊனியல்பில் வாழ்கின்றனர் என்று பாடுகிறார் பவுல் (1 கொரி 3:1-4).

அன்றைய நிலையை விட இன்றைய நிலை இன்னும் மோசமாகக் காட்சி அளிக்கிறது. தமிழகத் திருச்சபையில் காணப்படும் சாதி வேறுபாட்டைக் கண்டு, தூய ஆவியாருக்கே மன உளைச்சல் (Ternsion) ஏற்பட்டு, மருத்துவ விடுப்பில் (Madical Leave) போய் விட்டாராம்! வேடிக்கையாக அல்ல, வேதனையாக இருக்கிறது. நெஞ்சுப் பொறுக்குதில்லையே, இந்த இழிநிலையை நினைத்துவிட்டால்.

கிறிஸ்துவக் கண்ணோட்டத்தில் யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமை என்றும் உரிமைக் குடிமகன் என்றும், ஆண் என்றும் பெண் என்றும் இல்லை (கலா 3:28). கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருக்கிறார் (கொலோ 3:11). இத்தகைய பார்வை என் இன்னும் நமக்கு வரவில்லை? 'ரபூனி நான் பார்வை பெறவேண்டும்.' நாம் நமது இலக்கை அடையும் வரை மனந்தளராது போராட வேண்டும் என்பதற்குப் பர்த்திமேயு ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார். கிறிஸ்துவிடம் வராமல் அவரைத் தடுக்க மற்ற மக்கள் முயன்றனர். ஆனால் பாத்திமேயு அத்தடைகளை எல்லாம் தாண்டி கிறிஸ்துவிடம் ஓடி வந்தார்; தமது இலக்கை அடைந்தார்; பார்வை பெற்றார். நாம் நினைப்பதெல்லாம் உயர்வாக இருக்கவேண்டும்; நாம் விரும்பியது கிடைக்கவில்லை என்றாலும் நாம் நம் இலக்கிலிருந்து பின் வாங்கக்கூடாது.

"உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல், மற்றும் அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து" (குறள் 596)

ஆர்த்தி என்ற ஒரு சிறுமி கூட்டத்தில் அம்மாவை விட்டுப் பிரிந்து விட்டாள். அவள் 'அம்மா அம்மா' என்று கத்துகிறாள், அவளுடைய அம்மாவும் 'ஆர்த்தி ஆர்த்தி' என்று கத்துகிறாள். அவ்வாறே நாம் கடவுளைத் தேடும்போது கடவுளும் நம்மைத் தேடுகிறார். பர்த்திமேயு 'தாவீதின் மகனே எனக்கு இரங்கும்' என்று கத்துகிறார், கிறிஸ்துவும் அவரைக் கூப்பிடுங்கள்" என்கிறார், கடவுளை நோக்கி நாம் இரண்டு அடி எடுத்து வைத்தால், கடவுள் நம்மை நோக்கி இருபது அடி எடுத்து வைக்கிறார். ஆழம் ஆழத்தை அழைக்கிறது (திபா 42:7) என்பதற்கிணங்க, 'அவலம்' என்ற ஆழத்தில் அமிழ்ந்து அவதிப்படும் நாம், 'இரக்கம்' என்ற கடவுளின் இணையற்ற ஆழத்தை அழைக்கவேண்டும். 'ஆண்டவரே எனக்கு இரங்கும்' என்பது தான் நமது அன்றாட மன்றாட்டு.

பழைய பாவ இயல்பைக் களைந்து எறிந்துவிட்டு, புதியதொரு வாழ்வைத் தொடங்குவது எவ்வாறு என்பதையும் பார்த்திமேயு நமக்கு உணர்த்துகிறார். தமது மேலுடையை வீசி எறிந்துவிட்டு, துள்ளிக் குதித்துக் கொண்டு கிறிஸ்துவிடம் வருகிறார்; பார்வை பெறுகிறார்: புதிய மனிதராகிறார்; இயேசுவின் சீடராகிறார். இயேசுவைப் பின் தொடர்கிறார், நாமும் புதுப்படைப்பாக மாற வேண்டும். "ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ" (2கொரி 5:17).

கந்தல் ஆடை அணிந்து என்னிடம் வந்த ஒரு பிச்சைக் காரருக்குப் புதிய வேட்டியும் புதிய சட்டையும் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து அவர் பழைய கந்தல் ஆடையுடன் வந்ததைக் கண்டு அவரிடம், "புதிய வேட்டியும் சட்டையும் எங்கே?" என்று கேட்டதற்கு அவர்: "புதிய வேட்டி கட்டிக்கிட்டுப் பிச்சை கேட்டால், யார் பிச்சை போடுவார்?" என்றார். அவருடைய பிச்சைக்காரப் புத்தி அவரைவிட்டு அகலவில்லை. கந்தலை அகற்றிக் கண்ணியமாக வாழ அவருக்குக் கண்பார்வை இல்லை.

நமது நிலை என்ன? பழைய சித்தையில் புதிய இரசத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம். அடிப்படையில் மனமாற்றமின்றி ஆயிரம் அமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மனம் மாற்றமின்றி அமைப்புகளை மட்டும் மாற்றுவதால் ஒரு பயனும் விளையாது. பர்த்திமேயுவைப் பின்பற்றிப் புதிய பார்வை பெறுவோம்; புதுப்படைப்பாக மாறுவோம்: புத்துலகம் படைப்போம்.

"ரபூனி நான் பார்வை பெற வேண்டும்."

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கண்கள் மனதின் கதவுகள்

உடலில் எத்தனையோ இடங்களில் முடிகள் எல்லாமே எப்போதும் வளர்ந்து கொண்டிருக்கின்றன - ஒன்றைத் தவிர. அது கண் புருவத்தில் உள்ள முடி. ஏன் அப்படி ? கடவுள் படைப்பின் சிறப்பு அது. எந்த முடி வளர்ந்தாலும் பாதிப்பு இருக்காது. புருவ முடி வளர்ந்தால் பார்வையை அல்லவா மறைக்கும்! மனிதனின் பார்வை எப்போதும் எச்சூழலிலும் மறையக்கூடாது என்பதற்காக அற்புதமாகக் கடவுள் அப்படித் திட்டமிட்டிருக்கிறார். "கண் தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப்போனால் உங்கள் உடல் முழுவதும் இருளாயிருக்கும்" (மத். 6:22)

கண்கள் நம் மனதின் கதவுகள். இந்த உலகை முழுமையாகப் பார்ப்பதற்கு, உலகில் உள்ள வண்ணங்களை, வடிவங்களைக் கண்டு இரசித்து மகிழ்வதற்கு இந்தக் கண்கள் மட்டும் இல்லையென்றால் உலகமே சூன்யமாகி விடாதோ! கடவுள் கொடுத்துள்ள விலை மதிப்பற்ற, மிகத் தேவையான மகத்தான கொடை பார்வைத்திறன். அது இல்லையெனில் அடுத்தவர் துணையை நாடி நாடியே கூனிக்குறுகிப்போய் விடுவோம்.

"உங்கள் பார்வை எப்படி? " என்று கேட்டால் "என் பார்வைக்கு என்ன குறைச்சல்? தூரத்தில் வரும்போதே பஸ் எண் தெரிகிறது. சின்ன எழுத்தைக் கூடக் கண்ணாடி இல்லாமல் எளிதாகப் படிக்க முடிகிறது'' என்று பளிச்சென்று பதில் சொல்லலாம். ஆனால் வாழ்க்கையில் நிறைவு காண இந்தப் பார்வை மட்டும் போதாது. இதை விட முக்கியமான பார்வை ஒன்று வேண்டும்.

தேவை நம்பிக்கைப் பார்வை!
பர்த்திமேயுவின் நம்பிக்கைக்கு முன்னே நாமெல்லாம் குருடர்கள். யாராவது கொஞ்சம் வழிகாட்டினால் வழி தெரிகிறது கண்பார்வை இல்லாதவர்களுக்கு ! எத்தனை பேர் எப்படி வழிகாட்டினாலும் வழி தெரிவதில்லை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இவர்களில் யார் குருடர்கள் ?

தனது வாழ்வுக்கான போராட்டத்தை, மனக் குமுறலை பார்க்கத் தவறியது மட்டுமல்ல பலர் தடுக்க முயன்றபோதும் எதையும் பொருட்படுத்தாமல் "தாவீதின் மகனே எனக்கு இரங்கும்" என்று பர்த்திமேயு கத்தினானே, அந்த நம்பிக்கைப் பார்வையால் தானே நலமடைந்தான் ! "உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" (மார்க். 10:52). நம்பிக்கை மட்டுமே நம் வாழ்க்கையில் பார்வையைக் கொடுக்கும் பாதையைக் காட்டும், பயணத்தை நடத்தும்.

எதிலும் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. நமது பார்வையின் கோணத்தைக் கொஞ்சம் மாற்றினால் அதில் உள்ள நல்ல நம்பிக்கையூட்டும் சங்கதிகள் தெளிவாகத் தெரியும். அவைகள் தாம் நம் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உதவும்.

ஒரு விபத்தில் இரண்டு நண்பர்களுக்குக் கால் போய்விட்டது. இருவருக்கும் செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. ஒரு நண்பரால் அதன் பிறகு அன்றாட வாழ்க்கையில் இயல்பாய் ஈடுபட முடியவில்லை. செயற்கைக்கால் என்பதை மிகவும் அசிங்கமாக உணர்ந்தார். வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். வாழ்க்கையே அவருக்குச் சோகத்தில் கழிந்தது. ஆனால் மற்றொரு நண்பர் செயற்கைக் கால் பொருத்தியதை ஒரு விபத்தின் அளவிலேயே பார்த்தார். விபத்துச் சோகம் அவருக்கும் இருந்தது. ஆனால் அது மனத்தை அழுத்தவிடாமல் பார்த்துக் கொண்டார். செயற்கைக் காலை அவர் ஜாலியான விடயமாகப் பார்க்க ஆரம்பித்தார். நண்பர்கள் மத்தியில் அந்தக் காலில் தாளம் போட்டுப் பாடிக்காட்டுவார். போகப்போகச் செயற்கைக்கால் அவருக்குப் பிரச்சனையாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் அவரது நம்பிக்கை நிறைந்த பார்வை.

"மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களில் பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் அடங்குவர். ... அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள். ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன். நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன். இடறி விழாதவாறு சீரான வழியில் அவர்களை நடக்கச் செய்வேன்'' (எரே. 31:8-9). இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் தந்த இந்த வாக்குறுதி எப்படி இயேசுவில் நிறைவு காண்கிறது என்பது தான் இன்றைய வழிபாடு கூறும் செய்தி.

"உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' மார்க். 10:51). தாவீது மகனே என்று இயேசுவை அறிந்தவராய் கத்திய பர்த்திமேயுவைப் பார்த்துக் கேட்ட அதே கேள்வியைத் தான் யாக்கோபையும் யோவானையும் பார்த்துக் கேட்கிறார். (கடந்த ஞாயிறு வாசகம்). கேட்டது ஒரே கேள்வி. பதிலோ எப்படி வேறுபடுகிறது! செபதேயுவின் மக்கள் இடது பக்க வலது பக்க இருக்கைகள் வேண்டும் என்கிறார்கள். பார்வையற்ற பர்த்திமேயுவோ பார்வை பெற்று இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்கிறார். அந்தக் கேள்விக்கு நாம் சொல்லும் பதில் என்னவாக இருக்கும்?

மனிதன் தன் பார்வையை முறைப்படுத்துவது மட்டுமல்ல. கடவுளின் பார்வையைத் தனது பார்வையாக்கிக் கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்! எதையும் கடவுள் பார்ப்பதுபோல் நம்மால் பார்க்க முடிந்தால் ..... " மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றார். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்'' (1 சாமு. 16:7).

மன்னன் ஒருவனுக்குத் தலைவலி. எத்தனையோ மருத்துவம் செய்தும் தலைவலி தீரவில்லை. தலைவலிக்கான காரணமும் புரியவில்லை . ஒரு முனிவர் வந்தார். அவர் சொன்னார்: "மருந்துகள் மூலம் குணமடைகிற தலைவலி அல்ல இது. நீர் எங்கே போனாலும் வந்தாலும் பச்சை நிறம் கண்ணில் படுகிற மாதிரி பார்த்துக்கொள்ளும். பச்சை நிறம் கண்ணுக்கு நல்லது. பார்க்கப் பார்க்கத் தலைவலியும் பறந்து விடும்"

அரசன் அமைச்சர்களை அழைத்தான். ஆலோசனை நடத்தினான். அரண்மனை எங்கும் பச்சை வண்ணம் அடிக்கச் சொன்னான். வீடுகளுக்கெல்லாம் பச்சை வண்ணம் பூச, ஊர் மக்கள் அனைவரும் பச்சைநிற உடைகளையே அணிய ஆணையிட்டான்.

காட்டுக்குப் போன முனிவர் திரும்ப வந்து பார்த்தபோது திகைத்துப் போனார். தனது யோசனை இந்த அளவுக்குக் கொண்டு வந்து விட்டதா! அரசனைச் சந்தித்து, "மன்னா, பச்சை நிறத்தைப் பார் என்றால் இப்படி ஒரு கூத்தா? இத்தனை பண விரயமா? உம் பார்வையை மாற்றிக் கொண்டால் போதாதா? ஒரு பச்சை நிறக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டால் எல்லாம் பச்சையாகத் தெரியுமே” என்றார்.

இந்த உலகம் முழுவதும் நம் உள்ளுணர்வுகளின் வெளிப்பாடுதான். இந்த உலகத்தை - நாட்டு நடப்புகளை பார்க்கிற நமது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நமது குறுகிய பார்வை மாறட்டும். பிறரில் குறைகாணும் பார்வை நீங்கட்டும். நமது ஆணவப் பார்வை அகலட்டும். பிறரை அவமதிக்கும் அலட்சியப் பார்வை மறையட்டும். இல்லையென்றால் நாம் அனைவரும் குருடர், கிட்டப்பார்வையுடையோர் (II பேதுரு 1:6-9).

நம்பிக்கை மட்டுமே நம் வாழ்க்கையில் பார்வையைக் கொடுக்கும், பாதையைக் காட்டும், பயணத்தை நடத்தும். யாராவது கொஞ்சம் வழிகாட்டினால் வழி தெரிகிறது. கண்பார்வை இல்லாவர்களுக்கு ! எத்தனை பேர் எப்படி வழிகாட்டினாலும் வழி தெரிவதில்லை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ! எத்தனை பேர் எப்படி வழிகாட்டினாலும் வழி தெரிவதில்லை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு! இவர்களில் யார் குருடர்கள் ? பர்த்திமேயுவின் நம்பிக்கைக்கு முன்னே நாமெல்லாம் குருடர்களே!

இயேசுவே, எம்மாவு சீடர்களின் மனக் கண்களைத் திறந்தவரே (லூக். 24:45), உம்மிடமிருந்து புதிய பார்வை பெற்றவர்களாக ......

- பிறரிடம் எப்பெழுதும் நல்லதையே கண்டிட,
- எல்லோரிலும் இரக்கத்துடனும் பரிவுடனும் செயல்பட ,
-அனைவரையும் உரிய வகையில் மதித்து நடந்திட,
- எதையும் நீர் பார்ப்பதுபோல் பார்த்திட எங்களுக்கு வரமருளும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அகக்கண் கொண்டு பார்க்கும் அற்புதம்

பார்வை தந்த புதுமை, இன்றைய நற்செய்தியாக நமக்குத் தரப்பட்டுள்ளதை, இறைவன் நமக்கு வழங்கும் அருள்நிறை வாய்ப்பாக எண்ணிப்பார்க்கலாம். இப்புதுமையை, இரு கண்ணோட்டங்களில் சிந்தித்து பயன்பெற முயல்வோம். பெயர் சொல்லி அழைப்பது, பார்வை பெறுவது என்பவை, அவ்விரு கண்ணோட்டங்கள். இந்தப் புதுமை, இயேசு ஆற்றிய இறுதிப் புதுமையாக, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவற்றில், நற்செய்தியாளர் மாற்கு மட்டும், பார்வையற்று, தர்மம் கேட்டு வாழ்ந்த அம்மனிதருக்கு, பெயர் தந்திருக்கிறார். திமேயுவின் மகன் பர்த்திமேயு என்பது அவர் பெயர். இம்மூன்று நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள புதுமைகளில், குணமடைந்தவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே புதுமை இது மட்டுமே. மற்ற புதுமைகளிலெல்லாம், முடவர், பார்வையற்றவர், தொழுநோயாளி என்று பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது.

பெயர் சொல்லி அழைப்பது... என்ற நம் முதல் எண்ணத்தில், இரு வேறு பக்கங்கள் உள்ளன. அவை, எதிரெதிர் துருவங்களாய் உள்ளன. ஒருவருக்குரிய உண்மை மதிப்பளித்து, பெயரோ, அடைமொழியோ சொல்லி அழைக்கும் ஒளிமயமான பக்கம். ஒருவர், அவமானத்தால் குறுகிப் போகும் வண்ணம், பெயரோ, அடைமொழியோ சொல்லி அவரை இழிவுபடுத்தும், இருள் சூழ்ந்த பக்கம்.

ஒரு சிலருக்கு அவர்கள் செய்யும் தொழில் அவர்களது அடையாளங்களாக மாறிவிடும். செய்யும் தொழில் உயர்வான தொழிலாக இருந்தால், அந்த அடையாளங்களை நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்வோம். எடுத்துக்காட்டாக, மருத்துவராக பணியாற்றுபவரை, பெயர் சொல்லி அழைப்பதைவிட "டாக்டர்" என்று சொல்லும்போது, கூடுதலான மரியாதை வெளிப்படும். இதேபோல், ஆசிரியர், பேராசிரியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை, teacher, professor, inspector என்ற அடைமொழிகளுடன் அழைக்கும்போது, சொல்வதற்கும் பெருமையாக இருக்கும், கேட்பதற்கும் பெருமையாக இருக்கும். மதம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களையும், தனிப்பட்ட பெயர் சொல்லி அழைப்பதை விட, மரியாதையான அடைமொழிகளால் அழைப்பதுதான் அதிகமாய் பழக்கத்தில் உள்ளது. Father, Brother, Sister, சாமி, குருவே... இப்படி பல பட்டங்கள். பெயர் சொல்லி அழைப்பதன் ஒளிநிறைந்த பக்கம் இது.

இனி நாம் சிந்திக்க இருப்பது, பெயர் சொல்லி அழைப்பதன் இருளான பக்கம். நாம் வாழும் சமுதாயத்தில், தெருவைச் சுத்தம் செய்வோர், காலணி தைப்பவர், வீட்டு வேலை செய்பவர் ஆகியோரை, நாம் எப்படி அழைக்கிறோம்? தொழிலால் வரும் அடைமொழிகளைப் பயன்படுத்தி அவர்களை அழைக்கும்போது, அதில் மரியாதை ஒலிக்காது. அவர்களின் இயற் பெயர்களும் யாருக்கும் தெரிவதில்லை. எனவே, அவர்கள் எல்லாருமே, "ஏய், டேய், அடியே, இவளே..." என்ற ஏக வசனங்களால் அழைக்கப்படுகின்றனர். இந்திய சமுதாயத்தை பீடித்துள்ள சாபமான சாதிகளின் அடிப்படையில், ஒரு சிலர், அவர்கள் பிறந்த குலத்தின் பெயரிடப்பட்டு, கேவலமாக அழைக்கப்படுகின்றனர். பெயர் சொல்லி அழைப்பதன் இருள் சூழ்ந்த பக்கங்கள் இவை. நம் அகக்கண்களைக் குருடாக்கும் பழக்கங்கள்.

நம் அகக்கண்கள் பார்வை இழந்திருந்தால், அதற்கு இறைவன் பார்வைத்திறன் தரவேண்டும் என்று மன்றாடுவோம். ஒருவரை, பெயர்சொல்லி அழைக்கும்போது, அழைப்பவரும், அழைக்கப்படுபவரும் மாண்பு பெறும் புதுமைகள் நடப்பதை, வாழ்வில் உணரமுயல்வோம்.

பார்வை பெற வேண்டும்... இது நமது இரண்டாவது சிந்தனை. உடல் பார்வை பெற விழைந்தார் பர்த்திமேயு. ஆனால், உள்ளத்தில் அவர் ஏற்கனவே தெளிவான பார்வை பெற்றிருந்தார்.

இயேசுவின் சீடர்களான யாக்கோபும், யோவானும், அவரது இருபுறங்களிலும் அரியணைகளில் அமர விரும்பியதை, சென்ற வார நற்செய்தியாகக் கேட்டோம். அதைத் தொடர்ந்து, பார்வையற்ற பர்த்திமேயுவின் நிகழ்வு, இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது. இவ்விரு நிகழ்வுகளையும், நற்செய்தியாளர் மாற்கு, ஒன்றன்பின் ஒன்றாக, உடனுக்குடன் இணைத்திருப்பது, நம் சிந்தனைகளைத் தூண்டுகிறது.

சென்ற வாரம் நாம் வாசித்த நற்செய்தியில், "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" (மாற்கு 10:36) என்று இயேசு, யாக்கோபு, யோவான் இருவரிடமும் கேட்டபோது, அவர்கள், இயேசுவின் இருபுறமும் அரியணைகளில் அமர்வதைக் குறித்துப் பேசினர். அதே கேள்வியை, இயேசு, இன்றைய நற்செய்தியில், பர்த்திமேயுவிடமும் கேட்கிறார். "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" (மாற்கு 10:51) என்று இயேசு கேட்டதும், அவர் பார்வை பெற விழைவதைக் கூறுகிறார்.

யாக்கோபும், யோவானும், கண்களில் தெளிவானப் பார்வைத்திறனைப் பெற்றிருந்தாலும், இயேசு யார் என்ற உண்மை நிலையைக் காண இயலாதவண்ணம், அரியணை ஆசை, அவர்களின் அகக்கண்களை குருடாக்கி இருந்தது. ஆனால், உடலளவில் பார்வைத்திறன் அற்றிருந்த பர்த்திமேயுவோ, இயேசுவை, அகக்கண்களால் "தாவீதின் மகன்" என்று உணர்ந்திருந்தார். விவிலியத்தில், இந்தப் பட்டத்தை, இயேசுவுக்கு முதன்முதலில் தந்தது, உடலளவில் கண் பார்வையற்று, அதேவைளை, உள்ளத்தளவில் பார்வை பெற்றிருந்த பர்த்திமேயு. அகக்கண்களால் ஆழமான உண்மைகளைப் பார்க்கமுடியும் என்பதற்கு பர்த்திமேயு நல்லதோர் எடுத்துக்காட்டு.

பார்க்கும் திறன் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற வேண்டும். சரியான பார்வை பெற வேண்டும். சன்னலை வைத்து சொல்லப்படும் மற்றொரு கதை. கணவனும், மனைவியும் ஒரு வீட்டுக்கு குடி வந்தனர். அந்தப் பெண்மணி, அடுத்தநாள் காலையில், காபி அருந்திக்கொண்டே, தன் வீட்டு கண்ணாடி சன்னல் வழியே அடுத்த வீட்டில் வேலை செய்யும் பெண், துணிகளைக் காய வைப்பதைப் பார்த்தார். "ச்சே, அந்தம்மாவுக்கு சரியா துணி துவைக்கத் தெரியல. துவச்ச பிறகும் பாருங்க, அந்தத் துணியெல்லாம் எவ்வளவு அழுக்கா இருக்கு" என்று அப்பெண் தன் கணவனிடம் முறையிட்டார். இந்த முறையீடு, மூன்று நாட்கள் தொடர்ந்தன.

நான்காம் நாள் காலையில், வழக்கம் போல், சன்னல் வழியே பார்த்து குறை சொல்ல நினைத்த பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். "இந்தாங்க, இங்க வாங்களேன்" என்று கணவனை அவசரமாக அழைத்து, "அங்க பாருங்க. நான் மூணு நாளா சொல்லிகிட்டிருந்தது அந்த அம்மா காதுல விழுந்திருச்சின்னு நினைக்கிறேன். இன்னக்கி அந்தத் துணியெல்லாம் சுத்தமா இருக்கு" என்று வியந்து பாராட்டினார்.

கணவன் அமைதியாக, "அடுத்த வீட்டுலே ஒன்னும் குறை இல்ல. இன்னக்கி நம்ம வீட்டு சன்னல் கண்ணாடியை நான் காலையில எழுந்து சுத்தமாகினேன்" என்று சொன்னார்.

பார்வை பெற வேண்டும்... அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெற வேண்டும்... தெளிவான, சரியான பார்வை பெற வேண்டும்... பார்வைகளைச் சீர்படுத்தி, அடுத்தவரைச் சரியான கண்ணோட்டத்தில் காணவும், அவர்களுக்கு உரிய மரியாதையைத் தரும் வகையில் அவர்களைப் பெயரிட்டு அழைக்கவும், இறைவன் நம் உள்ளத்தைத் தூய்மையாக்க வேண்டுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மறையுரை

நற்செயல்களுக்கு எழுகின்ற தடைகள்‌ எல்லாம்‌ தற்செயலாக நிகழ்பவை அல்ல; மாறாக அவை திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அதுபோலத்தான்‌ பார்வையற்ற பர்த்திமேயு தனக்குப்‌ பார்வையளிக்க வல்லவர்‌ ஒருவர்‌ பயணிக்கிறார்‌ என்பதை அறிந்து கூக்குரலிட்டபோது வெளிப்பட்ட தடைகள்‌ எனலாம்‌. “பேசாதே” இன்றும்‌ சாமானியன்‌ ஒருவன்‌ கருத்துக்கூறலுக்கு எதிரான கண்டனங்கள்‌ எழுந்த வண்ணம்‌ உள்ளன. `அதட்டுதல்‌' கட்டளையிடுவதில்‌ இது ஒர்‌ அணுகுமுறை.

  1. கனிவாய்‌ அச்செயல்‌ நடைபெறுவதால்‌ என்ன நன்மை என உணர்ந்து விடுக்கும்‌ அழைப்பு.
  2. கண்டனமாய்‌, கட்டளையாய்‌ விடுக்கும்‌ மிரட்டல்‌.
  3. ஒருவன்‌ இருக்கும்‌ நிலையிலேயே இருக்கட்டுமே அவனுக்கு மாற்றமோ முன்னேற்றமோ தேவையில்லை என்ற பார்வை.
  4. “கொடுப்பதால்‌ குறைந்துவிடும்‌” என்ற உலகப்‌ பார்வை - சிந்திப்போம்‌ “பகிர்வதால்‌ ஒளி குறைவதில்லை; கற்பிப்பதால்‌ பாடம்‌ மறைவதில்லை பேரொளியாம்‌ கிறிஸ்து வழங்க நினைக்கும்போது அதைத்‌ தடுக்க முயல்வது அறிவின்மையின்‌ வெளிப்பாடு.

எல்லாவற்றுக்கும்‌ மேலாக பார்வையற்ற பர்த்திமேயுவின்‌ `நம்பிக்கை' அவருக்குப்‌ புதிய பார்வையும்‌ புதிய பாதையையும்‌ கொடுத்தது நமது நம்பிக்கை நற்செயல்களை நம்மில்‌ அணியமாக்கட்டும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அடிமை நிலையை மாற்றிய ஆண்டவர்

‘சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம் … ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்!’

இன்றைய பதிலுரைப்பாடலில் (காண். திபா 126), ஆசிரியர் மேற்காணும் அழகான வரிகளைப் பாடுகின்றார். இஸ்ரயேலுக்கு நாம் இன்று செல்லும்போது நிறைய வறண்ட ஓடைகளைக் காணலாம். ஆனால், வற்றிய அந்த ஓடைகளுக்கு வெளியே, ‘ஓடையைக் கடக்க வேண்டாம்’ என்று எச்சரிக்கைப் பலகை வைத்திருப்பார்கள்.’தண்ணீர் இல்லாத ஓடையைக் கடந்தால் என்ன?’ என்று நாம் கேட்கலாம். ஆனால், இஸ்ரயேலின் நில அமைப்பின்படி, எங்காவது ஓரிடத்தில் மழை பெய்தால், அனைத்து ஓடைகளும் உடனடியாகத் தண்ணீரால் நிரம்பி விடும். அல்லது வறண்ட ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஆக, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வறண்ட ஓடை வெள்ளம் ஓடும் நீரோடையாக மாறிவிடும். ஆகையால்தான், ‘கடக்க வேண்டாம்’ என்னும் எச்சரிக்கை. திருப்பாடல் ஆசிரியர் இந்த நிகழ்வை அப்படியே எடுத்து, ‘ஆண்டவரே எங்கள் அடிமை நிலையை நீர் இவ்வளவு விரைவாக மாற்றியருளும்!’ என்று பாடுகின்றார். பாடலின் முதற்பகுதியில் தங்கள் அடிமைநிலை மாற்றப்பட்டதாக உணர்கின்றார்.

அடிமை நிலை என்றால் என்ன?

‘பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை. அடிமைக்கு வீட்டில் நிலையானதொரு வீடில்லை’ (யோவா 8:34-36) என்கிறார் இயேசு. ஆக, ‘அடிமை’ என்பது ‘தற்காலிகம்.’ அல்லது ‘அடிமை’ நிரந்தரமானவர் அல்ல. அல்லது அடிமைக்கு நிரந்தரத்தின்மேல் உரிமை இல்லை. அடிமை மனப்பான்மையில் ஒருவர் தன் தான்மையையும் தன்மதிப்பையும் இழந்துவிடுகிறார். ஓர் அடிமை தனக்கென எதையும் உறுதிசெய்ய முடியாது.

இஸ்ரயேல் மக்கள் அசீரிய அடிமைத்தனத்தின்போதும், பாபிலோனிய அடிமைத்தனத்தின்போதும் மிகவும் இழிவான நிலைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தங்கள் நாடு, மண், அரசு, வீடு, ஆலயம் என அனைத்தையும் இழந்த பாபிலோனியாவில் அவர்கள் அடிமைகளாக இருந்த நிலையை, ஆண்டவராகிய கடவுள் ஒரே நாளில் மாற்றினார் என்று புகழ் பாடுகின்றனர்.

இந்த நிகழ்வு எப்படி நடந்தது?

‘நாங்கள் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்’ என்கிறார் ஆசிரியர். அதாவது, ‘எல்லாம் கனவுபோல இருந்தது’ என்கிறார் ஆசிரியர்.

கனவுபோல இருப்பது என்றால் என்ன?

கனவு போல நடக்கும் ஒன்றுக்கு மூன்று பண்புகள் உண்டு. (அ) கனவில் நடக்கின்ற எதுவும் எதிர்பாராமல் நடக்கின்றது. ‘இன்று எனக்கு இது கனவில் வரும்!’ என்று நாம் எதையும் நினைத்துத் தூங்கச் செல்வது கிடையாது. கனவு என்பது எதிர்பாராமல் நிகழக் கூடியது. ஆக, ஆண்டவர் தங்களுடைய அடிமை நிலையை மாற்றியது எதிர்பாராத நேரத்தில் நடந்தது என்கிறார்கள் இஸ்ரயேல் மக்கள். (ஆ) கனவில் நடக்கின்ற எதுவும் விரைவாக நடக்கும். நாம் ஒரே கனவில் பிறந்து, வளர்ந்து, உயர்ந்துவிட முடியும். கனவில் ஒரே நொடியில் பெரிய கட்டடத்தை நம்மால் எழுப்பிவிட முடியும். இப்படியாக, இஸ்ரயேல் மக்களின் விடுதலை விரைவாக நடக்கின்றது. (இ) கனவில் நடக்கும் எதற்கும் நம் முயற்சி தேவையில்லை. அதாவது, நீட் தேர்வுக்குப் படிக்காமலேயே கனவில் நான் நீட் தேர்வில் வெற்றிபெற முடியும். கனவில் நடக்கும் எந்த நிகழ்வுக்கும் நம் முயற்சி தேவையில்லை. ஆக, மனிதர்களின் முயற்சி இல்லாமலேயே அனைத்தும் நடந்தேறியதாக இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் அளப்பரிய செயலைப் புகழ்ந்து பாடுகின்றனர்.

இன்றைய பதிலுரைப்பாடலில் நாம் காணும் இந்த உருவகங்கள் இன்றைய வாசகங்களின் கருத்துகளை மிக அழகாகச் சுருங்கச் சொல்கின்றன.

இன்றைய முதல் வாசகம் (காண். எரே 31:7-9), எரேமியா நூலின், ‘ஆறுதலின் புத்தகம்’ என்ற பகுதியிலிருந்து (எரே 30-31) எடுக்கப்பட்டுள்ளது. யூதாவின் அழிவைப் பற்றி இறைவாக்குரைக்கின்ற எரேமியா இப்பகுதியில், யூதாவின் மீட்பு குறித்து இறைவாக்குரைக்கின்றார். ‘இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை ஆண்டவர் மீட்டருளினார்’ என்கிறார் எரேமியா. ‘எஞ்சியோர்’ என்னும் பதம், முதலில், ‘நாடுகடத்தப்பட்டு உயிருடன் இருக்கும் அடுத்த தலைமுறையினரையும்,’ ‘ஒடுக்கப்பட்டோர், ஏழைகள், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், பெண்கள், அநாதைகள், குழந்தைகள்’ ஆகியோரையும் குறிப்பிடுகின்றது. ஆண்டவராகிய கடவுள் அனைவரையும் ஒன்று சேர்க்கின்றார். அனைவரையும் ஒன்று சேர்த்தல் என்பது, ‘யூதா’ மற்றும் ‘எப்ராயிம்’ என்னும் இரு பெயர்கள் வழியாகக் குறிக்கப்படுகின்றது.

‘அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள். ஆறுதல் அளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்’ என்கிறார் ஆண்டவர். ‘அழுகை’ என்பது அவர்களுடைய மனமாற்றத்தைக் குறிக்கின்றது. தங்கள் முன்னோர்கள் தங்களுடைய சிலைவழிபாட்டால் அடிமை நிலைக்கு உட்படுத்தப்பட்டதை எண்ணி இவர்கள் அழுது தங்கள் மனத்தை இறைவன்பக்கம் திருப்புகின்றனர். இறைவனும் அவர்களுக்கு ஆறுதல் தருகின்றார்.

ஆக, அடிமைத்தனத்தில் எஞ்சியிருத்த மக்களின் நிலையை விடுதலையின் நிலைக்கு மாற்றுகின்றார் ஆண்டவராகிய கடவுள்.

இரண்டாம் வாசகம் (காண். எபி 5:1-6) இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதற்பகுதியில், அருள்பணியாளராக ஒருவர் பணிசெய்வதற்குத் தேவையான பண்புகள் வரையறுக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதியில், இயேசுவின் குருத்துவத்தின் பண்புகள் முன்வைக்கப்படுகின்றன. இஸ்ரயேல் மக்களின் குருக்கள் லேவி குலத்தின் உறுப்பினர்களாக இருந்தனர். அல்லது லேவி குலத்தில் பிறத்தல் என்பது அவர்களை, ‘குருக்கள்’ நிலைக்கு உயர்த்தியது. தலைமைக்குரு என்பவர் லேவி குலத்தில் பிறந்தவராக இருப்பதோடு, அவர் ஆரோனின் குடும்பத்தில் பிறந்த அவருடைய வழிமரபினராக இருக்க வேண்டும். அவர் மனிதர்களின் வழிமரபினராக இருப்பதால் அவரும் பாவத்திற்கு உட்பட்டவராக இருக்கிறார். ஆக, அவர் தனக்கென முதலில் பலி செலுத்தி, பின்னர், மற்றவர்களுக்காக பலி செலுத்த வேண்டும்.

இயேசு லேவி குலத்தில் பிறந்தவர் அல்லர். அவர் யூதா குலத்தில் பிறந்தவர். ஆக, அவர் ஆரோனின் வழிமரபினரும் அல்லர். இப்படி இருக்க, அவரை நாம் எப்படி தலைமைக்குரு என அழைக்கலாம்? எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இரு நிலைகளில் இயேசுவை, ‘தலைமைக்குரு’ என முன்வைக்கின்றார். ஒன்று, திபா 2:7-இன் படி, கடவுளின் மகனாக இருக்கிறார். ஏனெனில், ‘நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்’ என்று கடவுள் அவரிடம் சொல்கின்றார். ஆக, கடவுளின் மகன் என்ற முறையில் இயேசு இறைவனின் திருமுன் பணியாற்றும் உரிமையையும், இறைவனின் திருத்தூயகத்திற்குள் நுழையும் உரிமையையும் பெறுகின்றார். இரண்டு, திபா 110:4-இன் படி, இயேசுவின் அருள்பணி நிலை இறைவனின் ஏற்படுத்துதலால் வருகிறது. ‘மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே!’ என்று ஆண்டவராகிய கடவுள் அவரிடம் சொல்கின்றார். ஆபிரகாமைச் சந்திக்க வருகின்ற மெல்கிசதேக்கு எந்தவொரு தொடக்கமும் முடிவும் இல்லாமல், எந்தவொரு மனித வழிமரபும் இல்லாமல் வருகின்றார். இயேசுவும் தொடக்கமும் முடிவும் இல்லாத கடவுளாகவும், எந்தவொரு மனித வழிமரபும் இல்லாமலும் வருவதால், மெல்கிசதேக்கின் முறைப்படி அவர் நிலையான குருவாக இருக்கின்றார்.

ஆக, நம் வலுவின்மையில் பங்குபெறும் தலைமைக்குரு இயேசு நமக்காக ஒரே பலி செலுத்தி நம் அடிமை நிலையை மாற்றினார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 10:46-52), திமேயுவின் மகன் பர்த்திமேயுவுக்குப் பார்வை தருகின்றார் இயேசு. இது ஒரு வல்ல செயல் போல இருந்தாலும், இதை ஓர் உருவகம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், இயேசுவுக்கு அருகில் இருந்தவர்கள், இயேசுவை நேரில் கண்டவர்கள், அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால், பார்வையற்ற பர்த்திமேயு, ‘இயேசுவே, தாவீதின் மகனே!’ என நம்பிக்கை அறிக்கை செய்கின்றார். ‘நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்’ என்னும் இவரின் வார்த்தைகள், ‘இவர் ஏற்கெனவே பார்வை பெற்றிருந்தார்’ என்றும், ‘இவர் இரண்டாவது பெற்றது நம்பிக்கை பார்வை’ என்றும் பொருள்கொள்ளப்படுகின்றன.

மாற்கு கதையாடல்களை மிகவும் நுணுக்கமாகப் பதிவு செய்யக்கூடியவர். இந்த நிகழ்வை அவர் பதிவு செய்வதிலும் அது வெளிப்படுகின்றது. இயேசுவும் சீடர்களும் எரிகோவுக்கு வந்துவிட்டு மீண்டும் வெளியேறுகின்றனர். ‘திரளான மக்கள் கூட்டம்’ என்பது இயேசுவைப் பின்பற்றியவர்களையோ, அல்லது இயேசுவோடு உடன்பயணித்தவர்களையும் குறிக்கலாம். வழியோரம் அமர்ந்து பிச்சையெடுக்கின்ற பர்த்திமேயு, நாசரேத்து இயேசுதாம் போகிறார் எனக் கேள்விப்பட்டு, ‘இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்!’ எனக் கூக்குரலிடுகின்றார். இயேசுவே தனக்கு நலம் தர இயலும் என்றும், இந்த வாய்ப்பைத் தவற விட்டால் இனி தனக்கு வாய்ப்பே கிடைக்காது என்றும் அறிந்தவராகக் குரல் எழுப்புகின்றார் பர்த்திமேயு. மக்கள் கூட்டம் அவரை அதட்டுகின்றது. ஆனால், அதே மக்கள் கூட்டம், ‘துணிவுடன் எழுந்து வாரும். இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்’ என்று தன் இயல்பை மாற்றிக்கொள்கின்றது. அவர் பார்வை பெறுவதற்குத் தடையாக இருந்த மக்கள் கூட்டம், அவர் பார்வை பெறுவதற்கு உதவியாக மாறுகின்றது.

அவர் தன் ‘மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வருகின்றார்.’ இங்கே மேலுடை என்பதை அவர் அணிந்திருந்த ஆடை எனப் புரிந்துகொண்டால் அவர் நிர்வாணமாக இயேசுவிடம் வந்திருக்க வேண்டும். மேலுடை என்பது தனக்கு முன்பாக அவர் விரித்து வைத்து பிச்சை கேட்கப் பயன்படுத்திய ஆடை என்று நினைத்தால், தன் பழைய வாழ்க்கையையும், பாதுகாப்பு வளையத்தையும் அவர் விட்டுச் சென்றார் என்று புரிந்துகொள்ளலாம். ‘உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என நீர் விரும்புகிறீர்?’ என்னும் இயேசுவின் கேள்விக்கு உடனடியாக, ‘என் போதகரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்’ எனச் சொல்கிறார் அவர். தன் விருப்பம் என்ன என்பதை மிகத் தெளிவாக அறிந்திருந்தார் அவர். ‘நீர் போகலாம். உம் நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று’ எனச் சொல்கின்றார் இயேசு. அவரும் பார்வை பெற்றவராக இயேசுவைப் பின்தொடர்கின்றார்.

ஆக, பர்த்திமேயுவின் பார்வையற்ற நிலை என்னும் அடிமை நிலையிலிருந்து அவரை விடுவிக்கின்றார் இயேசு. இது மூன்று நிலைகளில் நடந்தேறுகின்றது: (அ) இயேசுவைப் பற்றிய நம்பிக்கை அறிக்கை செய்கின்றார், (ஆ) மக்கள் கூட்டத்தின் அதட்டலிலும் தன் நம்பிக்கையை அவர் இழக்கவில்லை, (இ) தன் மேலுடையை (பாதுகாப்பு வளையத்தை) இழக்க அவர் தயாராக இருந்தார்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குத் தரும் செய்தி என்ன?

ஆண்டவராகிய கடவுள் நம் அடிமை நிலையை இன்றும் மாற்றுகின்றார். பாவத்தில் விழுந்து கிடக்கும் அடிமை நிலை, நாம் விட்டு விலக இயலாத தீமை என்னும் அடிமை நிலை என அனைத்திலுமிருந்து நம்மை விடுவிக்க அவர் நம் நடுவே வருகின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரின் உடனிருப்பைக் கண்டுகொள்வதும், அறிக்கையிடுவதுமே.

புனித அகுஸ்தினார் தன், ‘ஒப்புகைகள்’ நூலில், ‘மேலுடை’ என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகின்றார். அவர் தன் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு, மனமாற்றம் அடையத் தயாரா உடன், அவருடைய பழைய பழக்கங்கள், அவரின் ஆடையின் விளிம்பைப் பிடித்துக்கொண்டு, ‘நீ போய்விடப் போகிறாயா? நாங்கள் இல்லாமல் நீ இருந்துவிடுவாயா? நீ மீண்டும் வருவது எப்போது? எங்களைவிட்டுப் போகாதே!’ எனச் சொல்கின்றன. ஆனால், தன் மேலுடையைக் களைந்துவிட்டு மனமாற்றத்தைத் தழுவிக்கொள்கின்றார் அகுஸ்தினார். பல ஆண்டுகள் முயற்சி எடுத்துக் கிடைக்காத மனமாற்றம் கனவுபோல ஒரு நொடியில் நடந்தேறுகிறது.

நம் வாழ்விலும் ஆண்டவர் மாபெரும் செயல்களை இப்படித்தான் நடத்துகின்றார். கண்ணீரோடு விதைவிதைக்கும் நம்மை அறுவடையின் மகிழ்ச்சியால் நிரப்புகின்றார்.

பார்வையற்று வறண்டு கிடந்த பர்த்திமேயு என்னும் ஓடையை இயேசு வான்மழை நிறைந்தோடும் நீரோடையாக மாற்றுகின்றார்.

நாம் செய்ய வேண்டியது என்ன?

(அ) பார்வையற்ற நபர் கொண்டிருந்த நம்பிக்கைப் பார்வை பெறுதல்

பர்த்திமேயுவின் கண்கள் மூடியிருந்தாலும் கடந்துசெல்பவர் இயேசுதாம் என்பதை அறிந்தவராக இருக்கிறார்.

(ஆ) உடனடி முடிவு

இயேசுவா? மேலுடையா? என்று உடனடியாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் பர்த்திமேயு. உடனடியாக முடிவு எடுத்ததோடு அதை விரைவாகவும் செயல்படுத்துகிறார்.

(இ) பழைய வாழ்க்கை விடுத்தல்

இயேசுவைச் சந்தித்த ஒருவரின் வாழ்க்கை முழுமையாக மாறுகிறது. அவர் தன் பழைய வாழ்க்கையைத் தூக்கி எறிந்துவிட்டுப் புதிய வாழ்க்கைக்குள் நுழைகிறார்.

நம் அடிமைநிலையும் மாறும்! கனவு காண்பது போல நமக்குத் தெரிய அனைத்தும் மாற்றம் பெறும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயலாமை உணர்வைக் களைவோம் மீண்டும் பார்வை பெற!

நாம் இணையத்திலே கையிழந்த ஊனமுற்றோர் கால்களால் எழுதுவது, வரைவது சமப்பது போன்ற நிகழ்வுகள், பார்வையில்லாதவர் படித்து மாவட்ட ஆட்சியராதல், பார்வையற்ற பல சிறந்த பாடகர்கள், காலில்லாமலே கைகளால் பல காரியங்கள் செய்பவர்கள், உடல் அசைவின்றி ஜடம் போல இருந்தாலும் அறிவிலே சிறந்தவர்கள் போன்ற நிகழ்வுகள் பலவற்றை கண்டிருப்போம். இவ்வாறு காணும்போதெல்லாம் நமக்குள்ளே பல சிந்தனைகள் உதிக்கும். அவர்களின் தன்னிம்பிக்கையை நாம் பாராட்டுவோம். நம்மிடம் எல்லாம் இருந்தும் நாம் இப்படி செயலிழந்து இருக்கிறோமே என நம்மை நினைத்தே வேதனை கூட பட்டிருக்கலாம் அல்லவா!

இத்தகைய மனிதர்கள் அனைவருமே தங்கள் இயலாமையை இல்லாததாக்கிவிட்டவர்கள். இன்றைய நற்செய்தியின் வழியில் சிந்தித்தோமென்றால் இவர்கள் துணிச்சலோடு வாழ்க்கையை எதிர்கொண்டு மீண்டும் பார்வை பெற்றவர்கள் எனலாம். ஏனென்றால் இல்லாத ஒன்றை பற்றி இவர்கள் கவலைகொள்ளவில்லை. மாறாக இருப்பவற்றை பயன்படுத்தி வாழ்கிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகம் இக்கருத்தைத் தான் நமக்குள்ளே ஆழமாக பதிக்கிறது என நான் உணர்கிறேன். பார்வையற்ற பர்த்திமேயு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். என்னதான் வாழ்க்கையில் விரக்தி அடைந்திருந்தாலும் அவரது உள்ளத்தில் ஏதாவது ஒரு மூலையில் வாழ வேண்டுமென்ற ஆசை இருந்திருக்குமன்றோ. பார்வையற்ற அவர் இயேசு வரு தைக் கேள்வியுற்ற போது தன்னுடைய பார்வைக் குறைபாட்டை சரிசெய்ய நம்பிக்கையோடு தனக்குள்ள கேட்கும் சக்தியையும் பேசும் சக்தியையும் பயன்படுத்தினார். ஆம். ஏதோ சத்தம் கேட்கிறது என்று அவர் சும்மா இருந்து விடவில்லை. அச்சத்தம் என்னவென்பதை விசாரிக்கிறார். இயேசு வருகிறார் என்று கேட்டவுடனும் சும்மா இருந்துவிடவில்லை. இயேசுவே எனக்கு இறங்கும் என கத்துகிறார்...பிறர் தடுத்தாலும் கத்துகிறார்.இயேசுவே கேட்டு அவரை தன்னிடம் அழைக்குமளவுக்கு கத்துகிறார்.

ஆம். பர்த்திமேயுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமிதுதான். நம்மிடமுள்ள குறைகளிலேயே அல்லது இயலாமையிலேயே கவனத்தை செலுத்தி இருப்பதை பயன்படுத்தாமல் வாழ்ந்தால் நாமும் பார்வையற்றவர்களே. நம் இயலாமையை இல்லாததாக்க இருப்பவற்றை துணிவோடும் நம்பிக்கையோடும் பயன்படுத்தி மீண்டும் ஒளிபெற்றவர்களாய் வாழ இயேசு நம்மை அழைக்கிறார். அவர் அழைப்பை ஏற்று இயலாமை என்ற மேலாடையைக் களைந்து விட்டு நம்பிக்கையோடு வாழத் தயாராவோம்.

இறைவேண்டல்

அன்பின் இறைவா! இயலாமை உணர்வைக் களைந்து இருப்பவற்றை முறையாக பயன்படுத்தி ஒளிபெற்றவர்களாய் வாழ அருள் தாரும். ஆமென் .

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ 30-ஆம்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (எரே 31:7-9)

இஸ்ராயேல்‌ மக்களுக்கு விடுதலை கிடைக்கும்‌ என்ற அடிப்படையில்‌ இந்த பகுதி எழுதப்பட்டுள்ளது. விடுதலையளிக்கும்‌ இறைவனை மீட்பர்‌, ஆயர்‌, தந்தை ஆகிய கோணங்களில்‌ இன்றைய வாசகம்‌ சித்தரிக்கிறது. எபிரேயத்தில்‌ “கோயல்‌” [GOEL] என்ற சொல்‌ மீட்பளிப்பவனைக்‌ குறிக்கும்‌. இச்சொல்‌ கொலை செய்யப்‌பட்டவனுடைய உறவினன்‌ கொலை செய்தவனைப்‌ பழிவாங்கு தலையும்‌ (எண்‌. 35:19), ஒரு கைப்பெண்ணின்‌ துயரிலிருந்தும்‌ வெட்கத்திலிருந்தும்‌ அவளை விடுவிக்கும்‌ உறவினனுடைய நிலை யையும்‌ சுட்டும்‌ (ரூத்‌ 2: 20). இதே போன்று அடிமைப்பட்டு பலவிதமான துன்பங்களை அனுபவித்துக்‌ கொண்டிருந்த இஸ்ராயேல்‌ மக்களை மீட்க ஆண்டவர்‌ வருகின்றார்‌ என்பதை இன்றைய வாசகம்‌ சுட்டிக்‌ காட்டுகின்றது. இங்கே கடவுள்‌ இஸ்ராயேல்‌ மக்களோடு செய்து கொண்ட உடன்பாட்டு உறவினால்‌ அவர்‌ அவர்களின்‌ தந்தையா கின்றார்‌. “இஸ்ராயேல்‌ குழந்தையாயிருந்த போதே நாம்‌ அவன்மேல்‌ அன்பு கூர்ந்தோம்‌; எகிப்திலிருந்து நம்‌ மகனை அழைத்தோம்‌” (சே 11:1) என்று கடவுளுக்கும்‌ இஸ்ராயேல்‌ மக்களுக்கும்‌ இருந்த தந்தை மகன்‌ உறவு இங்கே தெளிவுபடுத்தப்படுகின்றது. இவ்வாறு தன்னுடைய தந்தைக்குரிய பரிவோடு கடவுள்‌ அவர்களை மீட்பார்‌ என்று இன்றைய வாசகம்‌ தெளிவுபடுத்துகின்றது.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (எபி. 5:1-6.)

தலைமைக்குருவானவர்‌ மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின்‌ பிரதிநிதியாக கடவுள்‌ முன்‌ நிற்கின்றார்‌. தலைமைக்‌குருவின்‌ முதன்மையானக்‌ கடமை, பலி ஓப்புக்கொடுப்பது. முதலில்‌ அவர்‌ தனது பாவங்களுக்காகவும்‌, தனது குடும்பத்தாரின்‌ பாவங்களுக்காகவும்‌ பலி ஒப்புக்கொடுக்கின்றார்‌. பிறகு மக்களுடைய பாவங்‌ களுக்காக பலி செலுத்துகின்றார்‌. ஆரோன்‌ ஒரு காளையை அவருடைய பாவங்களுக்கும்‌, அவருடைய குடும்பத்தாரின்‌ பாவங்களுக்கும்‌ கழுவாயாக பலியிடுகின்றார்‌. பிறகு அனைத்து இஸ்ராயேல்‌ மக்களின்‌ பாவங்களுக்காகவும்‌ பலி ஒப்புக்கொடுக்கின்றார்‌ (லேவி. 16:11)

இங்கே இயேசு தலைமைக்குருவாக செயல்படுகின்றார்‌. இந்த. நிலையை அவர்‌ தெரிந்துகொள்ளவில்லை, மாறாக கடவுள்‌ தாமே அவருக்குக்‌ கொடுத்துள்ளார்‌ (எபி. 5:5). இவர்‌ பாவம்‌ தவிர ஏனைய வற்றில்‌ நம்மைப்‌ போல்‌ ஒருவராக இருந்தார்‌. “பாவங்களைப்‌ போக்கு வதற்காகவே இயேசு தோன்றினார்‌” (1யோவான்‌ 1:5). அதே வேளையில்‌ அவர்‌ பாவமின்றி இருந்தார்‌ (யோவான்‌ 1:6). இங்கே தலைமைக்குருவாகிய இயேசுவே நம்முடைய பாவங்களுக்கு பலியாக தம்மை ஓப்புக்கொடுக்கின்றார்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (மாற்கு 10:46-52)

இயேசு வாழ்ந்த காலத்தில்‌ எரிக்கோ ஒரு மிக முக்கிய நகரமாக விளங்கிற்று. அனைத்து நாடுகளையும்‌ இணைக்கும்‌ வழித்‌ தடமாக அமைந்திருந்தது. இந்நகரம்‌ எருசலேமில்‌ இருந்து 17 மைல்‌ தொலைவில்‌ இருந்தது. இந்நகரின்‌ வழியாகத்தான்‌ மக்கள்‌ எருசலேம்‌ செல்லமுடியும்‌. பாஸ்கா காலத்தில்‌ ஆயிரக்கணக்கான திருப்பயணிகள்‌ எரிக்கோ வழியாக எருசலேம்‌ நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்‌. இவ்வாறு செல்லும்‌ திருப்பயணிகள்‌ எரிக்கோ வாயிலில்‌ அமர்ந்திருக்கும்‌ ஏழைகளுக்கு உதவி செய்வது வழக்கம்‌. கண்தெரியாத பார்த்திமேயும்‌ அவ்வாயிலில்‌ அமர்ந்திருக்கிறான்‌. இயேசு எரிக்கோவில்‌ இருக்கிறார்‌ என்பதை அவன்‌ கேள்விப்பட்டவுடன்‌, அவனுடைய உள்ளத்தில்‌ நம்பிக்கை ஊற்று எழுகிறது. அவன்‌ தான்‌ பார்வை பெறுவோம்‌ என்று நம்பி அவரைக்‌ காண வாயிலில்‌ காத்துக்கிடக்கிறான்‌. வாயிலின்‌ வழியாக பல விதமான மக்கள்‌ செல்கின்றார்கள்‌. இயேசுவின்‌ வருகையைப்‌ பற்றி கேள்விபட்டவுடன்‌ “ஆண்டவரே தாவீதின்‌ மகனே, என்மேல்‌ இரக்கமாயிரும்‌” என்று கத்துகிறான்‌. இயேசு அவனது மன்றாட்டுக்கு செவிகொடுக்கிறார்‌.

மறையுரை

“விசுவாசத்தின்‌ கரங்கள்‌ தட்டும்போது இரக்கத்தின்‌ கதவுகள்‌ திறக்கப்படுகின்றன”..

என்னங்க எப்படி இருக்கீங்க? ஏதோ இருக்கிறோம்‌ தம்பி. என்ன செய்து கொண்டு இருக்கிறீங்க? சும்மாதாங்க இருக்கிறேன்‌. பிள்ளைகள்‌ எல்லோரும்‌ எப்படி இருக்கின்றார்கள்‌? அப்படியே தறுதலையாதான்‌ சுத்திக்கிட்டு இருக்கதுங்க கோயிலுக்கெல்லாம்‌ போறீங்களா? என்னங்க, கோயிலுக்கப்‌ போயி என்னத்த வாரி சுருட்டிக்கிட்டோம்‌! விவசாயம்‌ எப்படி இருக்கு? உழைச்சவன்‌ கணக்கு பார்த்தா உழவுக்குக்கூட மிஞ்சாது” என்கின்ற மாதிரீ அது ஒண்ணும்‌ புன்னியமில்லைங்க. இவ்வாறு வியாக்கினங்களை பேசிக்கொண்டு வாழ்வில்‌ நம்பிக்கையில்லாமல்‌, தன்மீது நம்பிக்கை இல்லாமல்‌ கடவுள்‌ மேலும்‌ நம்பிக்கை இல்லாமல்‌, காலத்தை கடத்து கின்றவர்கள்‌ மத்தியில்‌ இன்று பார்த்திமேயு என்னும்‌ குருடன்‌ விசுவாச வாழ்வின்‌ சாட்சியாக நம்முன்‌ நிற்கின்றார்‌.

வாழ்நாள்‌ முழுவதும்‌ இருளில்‌ வாழ்ந்த பார்த்திமேயுவுக்கு இயேசுவின்‌ வருகை அவனது வாழ்வில்‌ ஒளியேற்றுகின்றது. எரேமியா இறைவாக்கினரின்‌ இறைவாக்கு இங்கே நிறைவேறுகின்றது. “இதோ வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான்‌ அழைத்து வருவேன்‌. மண்ணுலகின்‌ கடை எல்லைகளினின்று அவர்களைக்‌ கூட்டிச் "சேர்ப்பேன்‌; அவர்களுள்‌ பார்வையற்றோரும்‌ காலூனமுற்றோரும்‌, கருவுற்றோரும்‌, பேறுகாலப்‌ பெண்டிரும்‌ அடங்குவர்‌”.

இருளில்‌ கிடந்த அவனுக்கு இயேசுவின்‌ வருகை சர்க்கரைப்பந்தலில்‌ தேன்மாரிப்‌ பொழிந்தது போல இருந்தது. “அருட்சோதி பெரும்பதி என்‌ அப்பன்‌ வரும்‌ தருணம்‌, வரைந்து. வரைந்து எல்லாம்செய்‌ வல்லசித்தன்தானே வருகின்ற தருணம்‌. இது” (திருவருட்பா 5583) என்பது போன்று சாலையின்‌ வாயிலில்‌. இயேசுவை சந்திக்கக்‌ காத்துக்கிடக்கன்றான்‌. திருப்பாடலாசிரியர்‌. பாடுவது போல்‌ “என்‌ உயிர்‌ உம்மீது தாகம்கொண்டுள்ளது. நீரின்றி. வறண்ட தரிசு நிலம்‌ போல என்‌ உடல்‌ உமக்காக ஏங்குகின்றது” (தி.பா. 63:1) என்று இயேசுவைக்‌ காண ஆவல்‌ கொண்டு. நிற்கின்றான்‌. இதோ அந்த சாலையின்‌ வழியாக பல மக்கள்‌. கடந்து செல்கின்றார்கள்‌. பெரியவர்கள்‌, சிறியவர்கள்‌, வணிகர்கள்‌, கால்நடைகள்‌ என கூட்டம்‌ கூட்டமாக கடந்து செல்கின்றார்கள்‌. இவ்வளவு மக்கள்‌ கூட்டத்தின்‌ நடுவே இயேசுவின்‌ வருகையை அறிந்தவுடன்‌ “இயேவே தாவீதின்‌ மகனே, என்மேல்‌ இரக்கம்‌. வையும்‌” என்று உரக்கக்‌ கத்துகின்றான்‌. கூட்டம்‌ அவனை கழுந்து. கொண்டாலும்‌ மேலும்‌ மேலும்‌ உரக்கக்‌ கத்துகிறான்‌. இயேசுவை பற்றிக்கொண்டு தனது இருண்ட வாழ்விலிருந்து விடுதலை பெற ஆவல்கொண்டு நிற்கிறான்‌.

“நான்‌ சிறுமையுற்றுவன்‌, ஏழை; கடவுளே என்னிடம்‌ விரைந்து வாரும்‌; நீரே எனக்குத்‌ துணை என்னை விடூவிப்பவர்‌, என்‌ கடவுளே காலம்‌ தாழ்த்தாதேயும்‌” (தி.பா. 70:5) என்று திருப்பாடலாசிரியர்‌ பாடுவதுபோல்‌, அவன்‌ உள்ளம்‌ ஆண்டவருக்காக ஏங்குகின்றது. நமதாண்டவர்‌ இயேசு தன்னை நோக்கி வந்த அந்த குருடனின்‌ அபயக்‌ குரலுக்கு கனிவோடு செவிகொடுக்கின்றார்‌; தன்னை அறிந்துகொண்ட அந்த அன்பான ஆட்டினை தன்னோடு ட்டி சேர்த்துக்‌ கொள்கிறார்.‌

செவியைப்‌ பொருத்தியவர்‌ கேளாதிருப்பாரோ? கண்ணை உருவாக்கியவர்‌ காணாதிருப்பாரோ? (தி.பா. 94:9), என்ற வாக்கிற்‌- கிணங்க ஆண்டவர்‌ அவனது குரலுக்குச்‌ செவிக்‌ கொடுத்து அவனது தேவை என்னவென்று கேட்கின்றார்‌. “பட்ட பாடெல்லாம்‌ மெய்ய நீ அறிந்ததே” என்று எண்ணி “நான்‌ பார்வை பெறவேண்டும்‌” என்று வேண்டுகின்றான்‌.

“அவர்‌ அவர்களது மன்றாட்டுக்குச்‌ செவிசாய்த்து அவர்களது துன்பத்தை கண்டு மனமிரங்கினார்‌. தமது பேரன்பிற்கேற்ப பரிவிரக்கம்‌ கொண்டார்‌” (தி.பா. 106:44,45) என்ற வாக்கிற்கிணங்க ஆண்டவர்‌ இயேசு அவனுக்கு பார்வை கொடுக்கின்றார்‌.

எசாயா இறைவாக்கினரின்‌ இறைவாக்கு “அப்போதாவது பார்வையற்றோரின்‌ கண்கள்‌ பார்க்கும்‌, காதுகேளாதோரின்‌ செவிகள்‌ கேட்கும்‌” (எசா 35:5) இங்கே செயல்வடிவம்‌ பெறுகின்றது. இந்த உலக வாழ்வில்‌ செத்துப்‌ போயிருந்த அவனுக்கு இன்று உயிர்ப்பு கிடைத்துள்ளது. “என்றுமுள்ள பேரன்பால்‌ உனக்கு இரக்கம்‌ காடடுவேன்‌” (எசா 54:8) என ஆண்டவர்‌ தன்னுடைய அளவில்லாத இரக்கத்தை அவன்மீது பொழிந்து அவனைக்‌ குணப்படுத்துகின்றார்‌. "மனிதனின்‌ விசுவாசக்‌ கரங்கள்‌ தட்டும்போது கடவுளின்‌ இரக்கத்தின்‌ கரங்கள்‌ தானாக திறக்கும்‌.

நான்‌ ஒரு ஊரில்‌ களப்பணி செய்து கொண்டிருந்தேன்‌. ஒருநாள்‌ காய்கறி வாங்குவதற்காக பக்கத்திலிருந்த நகரத்திற்கு. செல்ல பேருந்தில்‌ ஏறினேன்‌. ஒப்போது எல்லா இருக்கைகளும்‌ நிரம்பியிருந்தன. ஆனால்‌ ஒரு இருக்கையில்‌ மட்டும்‌ 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார்‌. அவர்‌ என்னைக்‌ கண்டவுடன்‌ “பிரதர்‌ இங்கே வந்து அமருங்கள்‌” என்று சொன்னார்‌. நானும்‌ சற்று ஆச்சரியத்தோடு எப்படி இவர்கள்‌ என்னை கண்டு கொண்டார்கள்‌ என்று எண்ணி அங்கு சென்று அமர்ந்தேன்‌. அவர்‌ சொன்னார்‌. “பிரதர்‌ நான்‌ இப்பொழுது உயிரோடு இருக்கிறேன்‌ என்றால்‌ அது இயேசு எனக்குப்‌ போட்ட பிச்சை” என்று சொன்னார்‌. நான்‌ சற்று ஆச்சரியத்தோடு அவர்களைப்‌ பார்த்தேன்‌. அவர்‌ மேலும்‌ “இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு புற்றுநோய்‌ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோயைப்பற்றி கேள்விப்பட்டவுடன்‌ என்‌ உடன்‌ பிறந்த சகோதரர்‌ முதல்‌, சகோதரி வரை ஒருவரும்‌ என்னை வந்து பார்க்கவில்லை. நான்‌ பாவி என்று எண்ணி என்னை ஒதுக்கி வைத்தார்கள்‌.

ஆனால்‌ என்‌ இரு பிள்ளைகளும்‌ தங்களது கல்வியை நிறுத்திவிட்டு என்னை கவனித்துக்கொண்டார்கள்‌. என்‌ கணவரும்‌ தனது வேலையை விட்டுவிட்டு என்னை கவனித்துக்‌ கொண்டார்‌. என்னை சென்னையில்‌ ஒரு பெரிய மருத்துவமனையில்‌ சேர்த்தார்கள்‌ அங்கே எனக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சிகிச்சையும்‌ நரக வேதனையாக இருந்தது! அப்பொழுதெல்லாம்‌ நான்‌ இயேசுவின்‌ சிலுவையைப்‌ பற்றிக்கொண்டு அழுவேன்‌; ஆண்டவரை நோக்கித்‌ தினமும்‌ கண்ணீரோடும்‌ மன்றாடுவேன்‌ தினந்தோறும்‌ செபமாலை சொல்வேன்‌; இதோ இன்று பூரண குணம்‌ பெற்றிருக்கிறேன்‌. என்‌ பிள்ளைகளும்‌ கடவுளின்‌ கிருபையால்‌ ஆசிரியர்‌ பயிற்சி நிறுவனத்‌- தில்‌ படித்துக்கொண்டு இருக்கிறார்களென்று கடவுள்மேல்‌ அவருக்கு. இருந்த நமபிக்கையையும்‌, கடவுள்‌ அவருக்குச்‌ செய்த நன்மைத்‌ தனத்தைப்‌ பற்றியும்‌ கூறினார்கள்‌.

இதுபோன்ற ஆயிரக்கணக்கான அற்புதங்கள்‌, அதிசயங்களை ஆண்டவர்‌ செய்து கொண்டு இருக்கிறார்‌. உண்மையான செபங்கள்‌, விசவாசத்தோடு கூடிய செபங்கள்‌, கண்ணீரோடு கூடிய செபங்கள்‌, பெருமூச்சோடு கூடிய செபங்கள்‌ ஒருபோதும்‌ வீணாய்‌ போனதில்லை.

கடவுள்‌ கனிவோடு நமது வேண்டுதல்களுக்குச்‌ செவி கொடுக்கிறார்‌. நாம்‌ வேண்டுவது நன்மைத்‌ தரக்கூடியதாக இருந்தால்‌ அவற்றை செய்து கொடுக்கின்றார்‌. கடவுள்‌ எதிர்பார்ப்பது விசுவாசம்‌, நம்பிக்கை. நம்பிக்கை நமது செயமாக இருக்கவேண்டும்‌. நம்பிக்கை நமது வாழ்வின்‌ ஆதாரமாக இருக்க வேண்டும்‌.

“ஆண்டவரில்‌ நம்பிக்கை வைப்போர்‌ பேறுபெற்றோர்‌.
ஆண்டவரே அவர்களது நம்பிக்கை” (எரே 17:7).

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

1. ஆண்டவர்‌ இயேசு, “உனக்கு நான்‌ என்ன செய்ய வேண்டும்‌?” என்று பார்த்திமேயுவை நோக்கி கேட்டபோது அவன்‌, “நான்‌ பார்வை பெறவேண்டும்‌” என்று தனது முக்கியமான தேவையை மட்டும்‌ கேட்கின்றான்‌. நாமும்‌ ஆண்டஹிடம்‌ மன்றாடும்‌ பொழுது நமது தேவையை கேட்போம்‌. ஆண்டவர்‌ பேராசைகளை விரும்பு- வதில்லை. நமது தேவையை நாம்‌ சொல்லும்‌ பொழுது கடவுள்‌ அவற்றை கண்டிப்பாக நிறைவேற்றுவார்‌.

2. ஆண்டவர்‌ இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா; அவரே தலைமைக்‌ குருவாக இருந்து நமது பாவங்களுக்கு தன்னை பலியாக ஓப்புக்கொடுத்தார்‌. அவரில்‌ நாம்‌ நம்பிக்கை வைப்போ- மானால்‌ நமக்கு மீட்பு உண்டு. அவரது இரக்கத்தால்‌ நாம்‌ மீட்பு பெற்றோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ - முப்பதாம்‌ ஞரயிறு / இரண்டாம்‌ ஆண்டு

எரேமியாவின்‌ 30, 31-வது அதிகாரங்கள்‌ ஆறுதல்‌ மொழி நூல்‌ என்று அமைக்கப்படுகிறது. இஸ்ரயேல்‌ மக்களுக்கு முழுவிடுதலை கிட்டும்‌ என்ற நம்பிக்கை அடிப்படையிலே இப்பகுதி எழுதப்பட்டு உள்ளது. “நம்‌ மக்களாகிய இஸ்ரயேலுக்கும்‌ யூதாவுக்கும்‌ மீண்டும்‌ முன்புபோல வளவாழ்வு தருவோம்‌" (30 :3) என்ற வாக்குறுதி உண்மைப்பட இருப்பதை இப்பகுதி முழுவதும்‌ காணலாம்‌. இன்றைய வாசகம்‌ விடுதலையளிக்கும்‌ இறைவனை மீட்பர்‌, ஆயர்‌, தந்தை ஆகிய கோணங்களில்‌ காண்கிறது.

இறைவன்‌ மீட்பர்‌

எபிரேயத்தில "கோயேல்"‌ (goel) என்ற சொல்‌ கொலை செய்யப்பட்டவனுடைய உறவினன்‌ கொலை செய்தவனைப்‌ பழிவாங்குதலையும்‌ (எண்‌. 35 :19), ஒரு கைம்பெண்ணின்‌ துயரிலிருந்தும்‌ வெட்கத்திலிருந்தும்‌ அவளை விடுவிக்கும்‌ உறவினன்‌ நிலையையும்‌ (ரூத்‌ 2:20) சுட்டும்‌. பழிவாங்குபவனும்‌, கைம்பெண்ணின்‌ உறவினனும்‌ “கோயேல்”- “மீட்பர்‌'' என்று அழைக்கப்பட்டனர்‌. இது போன்று இஸ்ரயேலரின்‌ எதிரிகளை வென்று அவர்களுக்கு முழுவிடுதலை அளித்த இறைவனையும்‌ “கோயேல்‌” - “மீட்பர்‌'' என்ற சொல்லாலேயே அழைத்தனர்‌ (எசா. 41: 14; 43 :14; 44 : 6; 47 : 4). இதே பாணியிலே “ஆண்டவர்‌ தம்‌ மக்களை மீட்பார்‌ ' என்கிறது இன்றைய வாசகம்‌ (31 :7). ஆம்‌, இறைவன்‌ நமது “மீட்பருமாவார்‌'” (மத்‌ 1: 21). அவரது மீட்புச்‌ செயலுக்குமுன்‌ நாம்‌ அனைவரும்‌ குற்றவாளிகளே என்பதை உணர்ந்து அவரிடம்‌ மன்னிப்பு வேண்டுவோம்‌. மன்னிப்பும்‌ மீட்பும்‌ நமக்கு ஒவ்வொரு நாளும்‌ அளிக்கப்படும்‌ இறைக்‌ கொடைகளாகும்‌ என்பதை உணர்ந்து அவருக்குப்‌ புகழ்பாடுவோம்‌, நன்றி கூறுவோம்‌.

இறைவன்‌ ஆயர்‌

ஆடுகள்‌ வழிதவறிப்‌ போவதும்‌ இடையர்கள்‌ அவற்றைத்‌ தேடியலைவயும்‌, அவ்‌ ஆடுகளை எதிரிகளிடமிருந்து காத்து, அவற்றிற்கு உணவளிப்பதும்‌ இடையர்கள்‌ வாழ்விலே நடக்கும்‌ அன்றாட நிகழ்ச்சிகள்‌. “ஆண்டவரே என்‌ ஆயர்‌; எனக்கேதும்‌ குறையில்லை. பசும்புல்வெளிமீது எனை அவர்‌ இளைப்பாறச்‌ செய்வார்‌; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச்‌ செல்வார்‌” (31:8; தி.பா.23; யோ. 10 1-21). ஆயன்‌ ஆடுகள்பால்‌ கொண்ட அன்பு தனியன்பு, தேடும்‌ அன்பு, பொறுமையான அன்பு, பாதுகாக்கும்‌ அன்பு, மகிழ்ச்சியுறும்‌ அன்பு, தன்‌ உயிரையே தரும்‌ அன்பு. இறை இயேசு நம்பால்‌ காட்டும்‌ அன்பும்‌ இத்தகையதே. நம்முடைய வாழ்விலே சில வேளைகளில்‌ நாம்‌ ஆடுகளாயும்‌, சில வேளைகளிலே ஆயர்களாயும்‌ இருக்க அழைக்கப்பட்டுள்ளோம்‌. ஆயர்‌ இயேசுவின்‌ குரலைக்‌ கேட்டு மந்தையோடு அவரைப்‌ பின்பற்றும்‌ ஆடுகளாயிருக்கிறோமா? குழந்தைகள்‌, சிறியோர்கள்‌, நம்மிடம்‌ ஒப்படைக்கப்பட்டோருக்குப்‌ பண்பும்‌ பரிவும்‌ அன்பும்‌ மகிழ்ச்சியும்‌ தரும்‌ ஆயர்களாக இருக்கிறோமா?

இறைவன்‌ தந்தை

இஸ்ரயேலோடு செய்துகொண்ட உடன்பாட்டு உறவினால்‌ இறைவன்‌ அவர்களுக்குத்‌ தந்தையாகிறார்‌. “இஸ்ரயேல்‌ குழந்தையாய்‌ இருந்தபோது அவன்‌ மேல்‌ அன்புகூர்ந்தேன்‌; எகிப்திலிருந்து என்‌ மகனை அழைத்து வந்தேன்‌” (ஓசே. 11 : 1) என்பார்‌ ஓசே இறைவாக்கினர்‌. “அவர்கள்தாம்‌ இஸ்ரயேல்‌ மக்கள்‌; அவர்களையே கடவுள்‌ தம்‌ மக்களாக ஏற்றுக்‌ கெண்டார்‌” (உரோ 9 :4) என்பார்‌ பவுல்‌. உடன்பாட்டுறவினால்‌, மீட்பினால்‌ மட்டுமன்று இறைவன்‌ இஸ்ரயேலரின்‌ தந்தை; அவர்‌ படைப்புக்‌ கடவுள்‌ என்ற முறையிலும்‌ மக்களின்‌ தந்தையாவார்‌. “நம்‌ அனைவர்க்கும்‌ தந்தை ஒருவரன்றோ? நம்மைப்‌ படைத்தவர்‌ ஒரே கடவுளன்றோ? ” (மலா. 2 : 10; இச. 32 : 6; எசா. 64 : 8). “எந்தையாய்‌ எம்பிரான்‌ மற்றும்‌ யாவர்க்கும்‌ தந்தை தாய்‌ தம்பிரான்‌ ' (திருவா. திருச்சதகம்‌) ஆகிய கடவுளை ஏத்துவோம்‌, வாழ்த்துவோம்.

(அவர்கள்‌ அழுகையோடு திரும்புவர்‌: நாமோ இரக்கத்தோடு இவர்களை அழைத்து வருவோம்.)

இரண்டாம் வாசகம் : எபி. 5:1-6

தலைமைக்‌ குருவுக்கு இன்றியமையாக்‌ குணம்‌ இரக்கம்‌. பிறரின்சோதனை, துன்பங்களுக்குத்‌ தானும்‌ உட்பட்ட நிலையிலேயேதான்‌ அவர்‌ பிறருக்கு உதவமுடியும்‌ (எபி. 4 : 15 -16). இன்றைய வாசகத்தில்‌ நம்‌ தலைமைக்குரு மக்களின்‌ துன்பத்திலே பங்கு கொள்பவர்‌ என்பதும்‌, அதே வேளையில்‌ இறைவனாலே இப்பணிக்கு அழைக்கப்பட்டவர்‌ என்பதும்‌ புலனாகின்றன.

நம் தலைமைக் குரு மனிதர்

எந்தத்‌ தலைமைக்‌ குருவும்‌ வானத்திலிருந்து இறங்கி விடுபவான்று. மாறாக மனிதர்களிடமிருந்தே தேர்ந்தெடுக்கப்படுகிறார்‌. மனிதர்களில்‌ இருந்து வருபவர்தான்‌ அம்மனிதருடைய நிலையை, அவர்களுடைய பலவீனங்களை, சோதனை, துன்பங்களை அறியமுடியும்‌, அனுபவித்திருக்க முடியும்‌. அப்போதுதான்‌ அம்மனிதருக்கு அவர்‌ இரக்கம்‌ காட்ட முடியும்‌. இயேசுவைப்‌ பொறுத்தமட்டில்‌, அவர்‌ பாவம்‌ தவிர ஏனையவற்றில்‌ நம்மைப்‌ போல்‌ ஒருவர்‌ ஆனார்‌ (4: 15-16). “பாவங்களைப்‌ போக்குவதற்காகவே இயேசு தோன்றினார்‌ ' (1 யோ. 1 :5). அதே வேளையிலே அவர்‌ மட்டும்‌ பாவமின்றி இருந்தார்‌ (1 யோ.! :6) என்பதை உணர வேண்டும்‌. நாமும்‌ குருகுலமாக அழைக்கப்பட்டுள்ளோம்‌ (1 பேது. 2 : 9). பாவமற்ற பரிசுத்த வாழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளோம்‌. அதே வேளையிலே நாமும்‌ மக்களுடைய துன்ப துயரங்களில்‌, இன்னல்‌ இடைஞ்சல்களில்‌, நோய்நோக்காடு பலவீனங்களில்‌ பங்குகொள்ள வேண்டும்‌. அப்போதுதான்‌ நமது குருகுல அழைப்புக்கு நாம்‌ ஏற்றவர்களாவோம்‌.

தலைமைக்‌ குருவின்‌ அழைப்பு

“எனக்குக்‌ குருத்துவப்பணி புரிவதற்காக உன்‌ சகோதரன்‌ ஆரோனையும்‌ அவன்‌ புதல்வர்‌ நாதாபு, அபிகூ, எலயாசர்‌, இத்தாமர்‌ ஆகியோரையும்‌ இஸ்ரயேல்‌ மக்கள்‌ நடுவிலிருந்து அழைத்துவா'' (விப. 28 : 1) என்பது இறைவனின்‌ கட்டளை. தானாகவே தனக்கு ஆரோன்‌ தேடிக்கொண்ட தனியுரிமையன்று அவரின்‌ குருத்துவநிலை. கிறிஸ்துவும்‌ தாமே தம்மைக்‌ குருவாகும்‌ மகிமைக்கு உயர்த்திக்கொள்ளவில்லை (5 :5). “ நீர்‌ என்‌ மைந்தர்‌; இன்று நான்‌ உம்மைப்‌ பெற்றெடுத்தேன்‌ ” (தி.பா. 2:7) என்று கூறிய தந்தையே கிறிஸ்துவைக்‌ குருத்துவ நிலைக்குத்‌ தேர்ந்தெடுத்து மகிமைப்படுத்தினார்‌. மெசியாவைச்‌ சுட்டும்‌ திருப்பாடல்கள்‌ 2 ; 110 ஆகிய இரண்டிலும்‌ இக்கருத்தே நிலவுகிறது. (இங்கு திபா. 2-இல்‌ “ஈன்றெடுத்தேன்‌” என்பது எக்காலத்துக்கும்‌ பிறப்பித்தேன்‌. உயிர்ப்பினாலே பிறப்பித்தேன்‌ என்று பொருள்படும்‌); “மெல்கிசெதேக்கின்‌ முறைப்படி நீர்‌ என்றென்றும்‌ குருவே (திபா. 110 :4; தொநூ. 14:18) என்பது இயேசு ஆபிரகாமின்‌ சந்ததியாரைவிட உயர்ந்த நிலையிலே குருவாயிருக்கிறார்‌ என்பதைச்‌ சுட்டும்‌ இயேசு இணையற்ற குரு, ஒப்பற்ற குரு, என்றென்றும்‌ குரு, எல்லோருக்கும்‌ குரு, நமது குரு.

இயேசுவின்‌ இக்‌ குருத்துவத்திலே நாமும்‌ பங்கு பெறுகிறோம்‌. நாமும்‌ இறைவனாலே “தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர்‌, அரச குருக்களின்‌ கூட்டத்தினர்‌ ' (1 பேது. 2:9) . எனவே இருளினின்று, பாவத்தினின்று விலகிய வாழ்வை வாழ அழைக்கப்பட்டுள்ளோம்‌. நாம்‌ பரிசுத்த குலம்‌ என்பதை உணர்ந்து புனித வாழ்வை வாழ முயற்சிப்போம்‌. “ஆகவே, அவர்‌ வழியாக எப்போதும்‌ நாம்‌ கடவுளுக்குப்‌ புகழ்ச்சிப்பலியைச்‌ செலுத்துவோமாக. அவருடைய பெயரை அறிக்கையிடுவதன்‌ வழியாக நம்‌ உதடுகள்‌ செலுத்தும்‌ காணிக்கையே இப்புகழ்ச்சிப்‌ பலியாகும்‌. நன்மை செய்யவும்‌ பகிர்ந்து வாழவும்‌ மறவாதீர்கள்‌. இவ்வகைப்‌ பலிகளே கடவுளுக்கு. உகந்தவை (எபி 13 : 15-16) என்பதை உணர்வோமா?

நீரே என் மகன்: இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்.

நற்செய்தி : மாற்கு 10:46-25

நற்செய்தியில்‌ நான்கு இடங்களில்‌ பார்வையற்றோர்‌ பார்வை பெற்ற நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. பார்வையற்றவரும்‌ பேச்சற்றவரும்‌ (மத்‌ 12 :22); எரிக்கோவில்‌ பார்வையற்றோர்‌ (10: 46); பெத்சாய்தாவில்‌ பார்வையற்றவர்‌ (மாற்‌ 8: 22) எருசலேமில்‌ பிறவியிலேயே பார்வையற்றவர்‌ (யோ. 9). இன்றையத்‌ தியானப்‌ பொருள்‌ எரிக்கோவில்‌ நடந்த நிகழ்ச்சி.

ஆண்டவரே ஒளி

பார்வையற்றோர்‌ பார்வை பெறல்‌ மெசியா கால அறிகுறிகளில்‌ ஒன்றாகும்‌ (எசா 61:1-2). இவனது புறக்கண்கள்‌ மூடி இருந்தாலும்‌ இவனது அகக்கண்‌- விசுவாசப்‌ பார்வை -திறந்து இருந்தது. அவன்‌ நமதாண்டவரில்‌ மெசியாவைக்‌ கண்டுகொண்டான்‌. அவர்‌ குணமளிக்க வல்லவர்‌ என்பதை உணர்ந்தான்‌. “இயேசுவே ! தாவீதின்‌ குமாரனே" என்று கூவி அழைத்தான்‌. ஆண்டவரின்‌ அருகிலே நின்றவர்கள்‌ அவனை அதட்டினர்‌; அடக்கினர்‌. ஆனால்‌ அவன்‌ தன்‌ கருமமே கண்ணாயினான்‌; அவனது குரல்‌ இத்தெய்வத்‌ திருமகனின்‌ செவியைத்‌ துளைக்கும்‌ அளவுக்குக்‌ கத்தினான்‌ (10 : 49). அவனது அலறல்‌ வீணாகவில்லை. ஆண்டவர்‌ அங்கு நின்று அவனைத்‌ தன்‌ அருகில்‌ அழைத்தார்‌. தன்‌ போர்வையை எறிந்துவிட்டு துள்ளிக்‌ குதித்து அவன்‌ அவரிடம்‌ வந்தான்‌; பாவ இருளில்‌ இறைவனைத்‌ தேடி அலையும்‌ ஆன்மா, ஆண்டவராம்‌ ஒளியைக்‌ கண்டவுடன்‌, மகிழ்வுடன்‌ அவரை அடைவதன்‌ அறிகுறி இம்மனிதன்‌. ஆண்டவர்‌ அழைக்கிறார்‌ என்று அறிந்த உடன்‌ அனைத்தையும்‌ உதறித்‌ தள்ளி, ஓடோடி அவர்‌ பாதம்‌ பணியும்‌ ஆன்மாவின்‌ அடையாளம்‌ இவன்‌. “தைரியமாயிரு; எழுந்திரு; அவர்‌ உன்னை அழைக்கிறார்‌ ' (10 : 50) நமக்கும்‌ தெம்பூட்டும்‌ சொற்கள்‌ இவை.

அவரே குணமளிப்பவர்‌

தனது பரிதாப நிலையையும்‌, தன்னால்‌ எதுவும்‌ செய்ய இயலாது. என்பதையும்‌, பார்வை அளிக்கும்‌ மருத்துவர்‌ இயேசு ஒருவரே என்பதையும்‌, பார்த்திமேயு உணர்ந்திருந்தான்‌. நமது உடல்‌ ஊனம்‌, உள்ள ஊனம்‌ ஆகிய குறைகளிலிருந்து நமக்குக்‌ குணம்‌ அளிப்பவர்‌ இயேசுவே என்பதை உணர்ந்து அவரைக்‌ கூவி அழைக்க வேண்டும்‌. நமதாண்டவர்‌ நாள்தோறும்‌ நம்மைச்‌ சந்திக்க வருகிறார்‌. விசுவாசக்‌ கண்‌ திறந்தால்‌ தான்‌ அவரைக்‌ காணமுடியும்‌; அவரது காலடி ஒலியைக்‌ கேட்கமுடியும்‌. அவரைக்‌ கண்டுகொள்ள என்‌ அகக்கண்கள்‌, அவரது அழைப்பைக்‌ கேட்க எனது செவிகள்‌, அதை ஏற்க என்‌ உள்ளம்‌ தயாராயுள்ளதா? அவரீல்‌ ரும்பிக்கை வேண்டும்‌ செபத்தின்‌ அனைத்து அம்சங்களும்‌ இவனது விண்ணப்பத்தில்‌ விளக்கம்‌ பெறுவதைக்‌ காணலாம்‌. பார்வை பெறவேண்டும்‌ என்ற அவனது நீண்ட நாள்‌ ஆசை; இத்தேவை இவனது வாழ்க்கைப்‌ பிரச்சனை. உள்ளத்தை வாட்டிப்‌ பிழிந்த பிரச்சனை. எனவே, இவனது கதறல்‌ ஆழ்உள்ளத்தினின்று புறப்படுகிறது. இயேசுவின்‌ பிரசன்னம்‌ அவனது தேவை நிறைவேற நல்ல வாய்ப்பினை நல்குகிறது. இயேசுவைக்‌ கூவி அமைக்கும்பொழுது இவனைச்‌ சுற்றியுள்ள குரல்கள்‌ அவனை அடக்க முயலுகின்றன. அவற்றிற்கெல்லாம்‌ எதிர்நீச்சல்‌ போடுகிறது அவனது தனிக்குரல்‌. தன்‌ இயலாமையை எண்ணிக்‌ கதறுகிறான்‌. அவனது ஆழ்ந்த விசுவாசம்‌ அவனுக்குப்‌ பார்வை அளிக்கிறது. நாம்‌ இயேசுவை அடைய முயலும்போது பல்வேறு சோதனைகள்‌, தடைகள்‌ ஏற்படலாம்‌. அவரைப்‌ பகிரங்கமாக அழைப்பதை, நாம்‌ அவரது பக்தர்கள்‌ என்று பறைசாற்றுவதை அடக்க முயலும்‌ சமுதாயத்தில்‌ நாம்‌ வாழ நேரிடலாம்‌.

ஏசா நிற்பர்‌; என்னை உனக்கடியான்‌
என்று பிறர்‌ எல்லாம்‌ பேசா நிற்பர்‌” - திருவாசகம்‌

எச்சூழ்நிலையிலும்‌ திடஉள்ளத்துடன்‌ கிறிஸ்துவுக்குச்‌ சான்று பகர்வது நமது கடமை. அவன்‌ கண்பார்வை பெற அவனது நம்பிக்கை ஒரு நிபந்தனையாயிருந்தது. எனவே தான்‌ இயேசு “உன்‌ நம்பிக்கை உன்னைக்‌ குணமாக்கியது; நீ போகலாம்‌" என்றார்‌. நம்‌ கதறலும்‌, இயேசுவின்‌ கருணை உள்ளத்தைத்‌ தொட வேண்டுமானால்‌, அதில்‌ பக்தியும்‌, நம்பிக்கையும்‌, விடா முயற்சியும்‌ இடம்‌ பெற வேண்டும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தெரிந்து கொண்டால்… தொடர்வது எளிது!

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அகில உலகத்தை ஆட்டிப் படைக்கும் சக்தியாக வலம் வருவது எதுவெனில் அது கொரானா என்னும் பெருந்தொற்றே. வெளியே போனால் தொற்றிக் கொள்ளும், மற்றவருடன் நின்றால் பரவிவிடும், அருகில் இல்லாமல் இருந்தால் அகன்று போகும் என்றெல்லாம் இன்றுவரை தொடர்ந்து பல்;வேறு பரப்புரைகள் மற்றும் எச்சரிக்கைகளைக் கொடுத்து கொண்டு வருகின்றது நம்முடைய அரசு. நம் அரசு மட்டுமல்ல உலகமே இத்தகைய அச்சுறுத்தலைக் கண்டு, மீண்டும் அவதி உருவாகிவிட கூடாது என்பதில் கருத்தாய் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் கொரானா தொற்று வெகு அதிகமாக இருந்த கடந்த வருடம், எங்குப் பார்த்தாலும் ஊரடங்கு. மக்கள் வெளியே வர முடியாத நிலை. உட்கார்ந்து பேச முடியாத சூழல். ஊரில் நடமாட முடியாத நடவடிக்கை. இவ்வாறு இருக்கையில் ஆந்திர மாநிலத்தில் கொஞ்சம் தளர்வு கொடுத்து மக்கள் நடமாடும் நேரம் வந்தது. ஆனால் முழுமையான ஊரடங்கு தளர்வு இல்லை. அப்போது நிறைய காவலர்கள் தங்கள் கடமைகளைச் செய்து கொண்டிருந்தனர். குறிப்பாக சாலையோரத்தில் காவல்துறை நண்பர்கள் கால்கடுக்க நின்றுகொண்டு மக்களைப் பாதுகாத்து கொண்டிருந்தனர். இதைக் கவனித்த ஏழைத் தாய் ஒருவர், திடீரென கையில் குளிர்பானப்பாட்டில்களோடு காவலர்கள் அருகில் வந்தார். எல்லாக் காவலர்களுக்கு தான் வாங்கிவந்த குளிர்பானங்களை ஊற்றிக்கொடுத்து குடிக்க சொன்னார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக மாறியது. இதைக்கண்ட ஆந்திர மாநில டி.ஜி.பி கௌதம் சவாங்கின் அந்த தாயை வெகுவாய் பாராட்டினார். நன்றிச் சொன்னார். இத்தகு சிறப்புமிகு பணியைச் செய்தவர் யார் தெரியுமா? சாதாரண 3000ரூபாய் சம்பளம் வாங்குகிற கூலித் தொழிலாளிதான் அந்த தாய். அவரின் பெயர்தான் லோகமணி. அவரைச் சந்தித்த பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள், எப்படிம்மா உனக்கு செய்ய தோணுச்சு என்று, அதற்கு அவர், யாரென்று தெரியாத பொழுதும் நமக்காக அவர்கள் உதவி செய்கிறார்கள். அவர்களை எப்படி இப்படி கஷ்டப்படவிடுவது என்று யோசித்தேன். அதனால்தான் செய்கிறேன் என்றார். தெரியாத மனிதர்களுக்காய் அவர்கள் கொடுக்கும் உடனிருப்பை, உதவியை, பாதுகாப்பை நான் என் எளிய முயற்சியால் அங்கீகரிக்கிறேன். அவர்களின் பணியைத் தெரிந்துகொள்கிறேன். ஆகவே உதவினேன் என்றார். ஆகையால் மற்றவரும் இதைச் செய்வார் என் நம்புகிறேன் என்றார். தெரியாத காவலர்களுக்கு உதவி செய்யும் அனைவருக்கும் தெரிந்தவராய் மாறினார் ஏழைத்தாய்.

இறைஇயேசுவில் இனியவர்களே!

வாழ்க்கையில் நாம் இரண்டு விதமான பயணங்களை மேற்கொள்கின்றோம். ஒன்று தெரிந்த இடத்திற்கு அல்லது தெரிந்த மனிதரை நோக்கியது. இரண்டு தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் பயணத்தைத் தொடர்வது. உதாரணமாக, நீச்சல் அடிப்பது எப்படி என்று பார்த்திருப்போம். அது தெரிந்தது. ஆனால் நீச்சல் அடிக்க எனக்கு தெரியாது. அப்படிப்பட்ட நிலையில்; நான் என்ன செய்கிறேன், நீச்சல் கற்க விரும்புகிறேன். அது தெரியாத ஒன்றை தெரிந்துகொள்ளும் நிலையாகும். இத்தகைய ஆழமான புரிதலைத்தான் இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குக் கொடுக்கிறது. பார்வையற்ற பார்;த்திமேயு தெரிந்த இயேசுவை நோக்கிப் பயணித்து, தெரியாத தன் பார்வையை தெரிந்த மனிதரிடமிருந்து பெற்றுக்கொள்கிறான். இயேசு யார் என்பது அவனுக்குத் தெரியும். அதே போன்று அவனுக்குப் பார்வை தெரியாது என்பதும் தெரியும். ஆக எனக்குத் தெரிந்த இயேசு என் தெரியாத கண்களைத் தெரிய வைப்பார் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. இதுதான் அவனின் ஆன்மீகம். இதுதான் அவனின் இறைப்பற்று. இதுதான் இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கை. இதைச் சற்று ஆழமாக சிந்திப்போம்.

இஸ்ரேயல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த போது தந்தையாம் கடவுளின் பெயரையோ, புகழையோ, அவர் செய்த நன்மைகளையோ நினைத்துப்பார்த்து துதிக்ககூட வழியில்லாமல் அம்மக்கள் தவித்தனர். அழுக்குரல் எழுப்பினர். கூக்குரலிட்டனர். இதைக்கண்ட யாவே இறைவன் வி.ப 3:7இல் காண்பது போன்று ‘என் மக்கள் படும் துன்பத்தைக் கண்ணால் கண்டேன்’ என்று அவர்களுக்கு விடுதலை வாழ்வு கொடுக்க மோசே என்னும் மாபெரும் இறைவாக்கினரை கடவுள் தன் சார்பாக அனுப்பி வைத்தார். மோசேயும் மக்களை விடுதலை வாழ்விற்கு அழைத்து வந்தார். தன் இரக்கத்தால், மாபெரும் கருணையால் கடவுள் உங்களை மீட்டார் என்பதை அடிக்கடி அவர் பறைசாற்றினார். இதனை வி.ப 4:31இல், “ஆண்டவர் இஸ்ரயேல் மக்களைச் சந்தித்துவிட்டார் என்றும், அவர்களது துயரத்தை கண்ணோக்கிவிட்டார் என்றும் மக்கள் கேள்விப்பட்டபோது, குப்புறவிழுந்து தொழுனர்” என்ற இறைவார்த்தை மிகத் தெளிவாய் சொல்கிறது. இவ்வாறாக, இறைவன் இஸ்ரயேல் மக்களை வழிநடத்தி வந்ததை தெரிந்த மக்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். தங்கள் தலைமுறையினர் போற்றும்வண்ணம் பற்பல செயல்களைத் தொடர்ந்து செய்யவும் பணித்தனர். இந்தப் பின்னணியில்தான் இன்றைய முதல் வாசகம் தன் பயணத்தைத் தொடர்கிறது. மோசே, ஆரோன், யோசுவா இவர்களுக்குப் பின் வந்த அரசர்கள், நீதித்தலைவர்கள் இவர்களின் அணுகுமுறையால் மக்களின் போக்கு வித்தியாசமானது. தவறிலிருந்து மீண்ட மக்கள் மீண்டும் தவறு இழைக்க ஆரம்பித்தனர். ஆகவே அவர்கள் அடிமை வாழ்விற்குள் மீண்டும் நுழைய தொடங்கினர். அதைத்தான் எரேமியா நூல் மிக அழகாய் பறைசாற்றுகிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் மக்கள் உழல்வதையும், கடவுள் உழன்ற மக்களை திரும்ப தன் நலமான அடைக்கலத்துக்குள் கொண்டு வந்து சேர்ப்பதையும் இறைவாக்கினர் உரைக்கிறார். எனவேதான் முதல் வாசகத்தில் கடவுள் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள் என எரேமியா பின்வருமாறு அம்மக்களுக்கும் நமக்கும் கூறுகிறார். கடவுள் யார் என்றால்?

1. அவர்களை மீட்டவர்
2. இடறி விழாது நடக்க செய்தவர்
3. வடக்கு நாட்டிலிருந்து அழைத்து வந்தவர்
4. நம்மைக் கூட்டிச் சேர்த்தவர்
5. ஆறுதல் அளித்தவர்
6. நீரோடைகள் ஓரமாக நடத்தி வந்தவர்

இவ்வாறு எரேமியா இறைவாக்கினர் உங்கள் மூதாதையரை வழிநடத்திய கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள், தெரிந்து கொள்ளுங்கள் என்று அறிவித்தார். தெரிந்து கொண்டால் அவர் யார் என்பது புரிந்துவிடும், அவர் கொடுத்த கட்டளைகளும் நம்மைவிட்டு நீங்கா என்றார்.

இதே சிந்தனையைத்தான் நற்செய்திப் பகுதியும் சற்று வித்தியாசமான நோக்கத்தில் பிரதிபலிக்கின்றன. தெரியாத மனிதரை இவர்தான் அவர் என்று தெரிந்துகொண்டவுடன், பார்வையற்ற பார்த்திமேயு என்ன செய்கிறார் என்றால், தெரியாத தன் பார்வையை தெரிய வைக்க தெரிந்த மனிதரான இயேசுவிடம் கேட்கிறார். இதுதான் நம்முடைய வாழ்வாகவும் அமைய வேண்டுமென்று திருஅவை எதிர்பார்க்கின்றது. ஏழு அருளடையாளங்கள் வழியாக இயேசு யார் என்பதையும், அவரின் உடனிருப்பு எது என்பதையும் அறிந்துள்ள நாம் அவரைப் பின்பற்றிட நம்முடைய பார்வையின்மையைப் போக்கிட அவரிடமே மன்றாட வேண்டுமென்பதற்காகவே திருஅவையில் அருளடையாளங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இன்று நாம் நற்செய்தியில் காணும் பார்வையற்ற மனிதன் ஆறு செயல்களைத் தன்னில் செய்கிறான்:

1. தேடுகிறான்
2. கத்துகிறான்
3. எறிகிறான்
4. குதித்தெழுகிறான்
5. பார்வை கேட்கிறான்
6. பார்வை பெறுகிறான்

இந்த ஆறுமே எதன் அடையாளம் என்றால் பார்வை பெறுதலின் அடையாளம். தேடுவது என்பது மறைக்கப்பட்டதன் அடையாளத்திலிருந்து மாறுவது கத்துவது என்பது அடங்கியிருப்பதன் அடையாளத்திலிருந்து தன்னை வெளிப்படுத்துவது எறிவது என்பது ஒட்டியிருப்பதன் அடையாளத்திலிருந்து தேவையற்றதை தூக்கியெறிவது குதிப்பது என்பது முடங்கியிருப்பதன் அடையாளத்திலிருந்து முயற்சிப்பது பார்வை கேட்பது என்பது பார்வையற்றதன் அடையாளத்திலிருந்து மீண்டும் பார்ப்பது பார்வை பெறுவது என்பது சாவின் அடையாளத்திலிருந்து வாழ்வைப் பெறுவது இவ்வாறாக இயேசுவின் பார்வையைக் கொடுக்கும் நிகழ்வானது, தன்னை நம்பி வந்த பார்வையற்ற மனிதரின் வாழ்வில் இவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்கியது. இத்தகு மாற்றம் நம்மிலும் உருவாக வேண்டுமென்பதுதான் இயேசுவின் விருப்பம்.

ஆனால் இன்றைய இரண்டாம் வாசகத்தில் வருவது போன்று பாவத்தின் அடிமைகளாய் நாம் இருப்பதும், பாவத்தின் தன்மைகள் நம்மைச் சூழ்ந்திருப்பதும், குறைகளால் நிரம்பியிருப்பதும், குற்றங்களோடு வாழ்வதும் இவையெல்லாம் மீண்டும் நாம் பார்வை பெற தடையாக இருக்கின்றன. அத்தகைய தடைகளைப் போக்குவதற்குதான் தெரிந்த மனிதரான இயேசுவை நாமும் பார்வையற்ற மனிதனைப் போல அணுக வேண்டும். ஏனென்றால் நமக்காகப் பாவம் போக்கும் பலியாக இயேசு தன்னைத் தந்துள்ளார் என்ற கூற்றினை அழகாய் எடுத்துரைக்கின்றது எபிரேயருக்கு எழுத்ப்பட்ட திருமுகம். அப்படியென்றால், பிரியமானவர்களே நாம் என்னச் செய்தால், பார்த்திமேயுவைப் போன்று; பார்வை பெற முடியும்.

பின்வரும் தலைப்புகள் அதற்கான வழிகளை அமைத்து தருகின்றன.

1. தடுத்தாலும், தாண்டிச் செல்ல வேண்டும்:

பார்வையற்ற பார்த்திமேயு தன்னைத் தடுத்தவர்கள் மத்தியில் நிற்கவில்லை. மாறாக, தாண்டிச் செல்கிறார். இத்தகைய மனநிலை நமக்கு வேண்டும். இன்றைய உலகச் சூழலில் மது, மாது, போதைப் பழக்க வழக்கங்கள், குடி, கெட்ட நடத்தை, புறணி பேசுதல், தீய நாட்டங்கள், தகாத உறவுகள், அவப்பெயரை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு செயல்கள் நம்மைத் தாண்டிச்செல்ல விடாமல் தடுத்து நிறுத்துகின்றன. இதையெல்லாம் தாண்டி, பிலி 4:13இல் உள்ளவாறு, “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” என்று முன்னேறிச் செல்ல வேண்டும். அப்போது நிச்சயம் பார்வை பெறுவோம்.

2. மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழ வேண்டும்:

நாம் வாழும் இச்சமூகத்தில் பல்வேறு விதமான ஆடைகளை ஒன்றன்பின் ஒன்றாக நாம் அணிந்துள்ளோம். போட்டி, பொறாமை, கர்வம், ஆணவம், தலைக்கணம், வீண் பிடிவாதம், அடுத்தவரை அடிமைப்படுத்தும் எண்ணம் போன்ற பல்வேறு ஆடைகள் நம்மீது இருப்பதால்தான் நாம் முழுமையான பார்வை பெற முடியவில்லை. இருப்பினும், பார்த்திமேயு மேலுடையை எறிந்தார் என்பதன் அடையாளமே புனித அகுஸ்தீனார் சொல்வது போன்று பழைய பாவ நிலையை எறிவதாகும். பாவ ஆடையை எறிந்து, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தால் நாம் பரிசுத்தமான ஆடையை அணிந்து கொள்ளலாம். அப்போது முழுமையான பார்வையும் பெறலாம்.

3. மீண்டும் பார்வை பெற விருப்பம் வேண்டும்:

பார்த்திமேயு தேடியது, கத்தியது, மேலுடையை எறிந்து, குதித்தெழுந்து ஓடியது இவையெல்லாம் எதற்காக? பார்வையற்ற என்ற தன் வாழ்வை பார்வை பெறுதல் என்னும் புதிய வாழ்வை பெறுதலின் அடையாளமாய் எண்ணினான். பழைய பாவ வாழ்வை விடுத்து புதிய வாழ்வை பெற நாம் விரும்ப வேண்டும். விருப்பம் இல்லாமல் யாரும் விரும்பிய மகிழ்ச்சியைப் பெற முடியாது. அது போலத்தான் நாம் விரும்புகின்ற மகிழ்ச்சியை அதாவது பார்வையைப் பெற வேண்டுமென்றால், நமக்கும் கடவுளைத் தேடும் விருப்பம் அவசியம்.

4. பின்பற்றி, வழிநடக்க வேண்டும்:

மீண்டும் பார்வை பெற்ற மனிதன் தன் வாழ்வை வேறு எங்கும் தேடவில்லை. மாறாக, பார்வை தந்த கடவுளிடத்தில் தேடுகிறான். அதுபோன்றுதான் நாமும் கடவுளிடமிருந்து பெற்றோம் என்றால், பெற்றவுடன் கொடுத்தவரை மறந்துவிடாமல், கொடையாக பெற்றுள்ளோம் என எண்ணி கடவுளின் மக்களாய் அவரைப் பின்தொடர வேண்டும். இந்த தொடரல் எப்போது நிகழும் என்றால் நாம் கடவுளை யார் என்று தெரிந்து கொண்டால் மட்டுமே முடியும்.

நாம் ஒவ்வொருவரும் கடவுள் யார் என்று தெரிந்து கொள்வதற்கே திருஅவை திருப்பலி, நற்கருணை ஆசீர், நவநாள் பக்தி முயற்சிகள், திருச்செபமாலை, மன்றாட்டு மாலை ஆகிய யாவற்றையும் கொடுத்திருக்கின்றது. இவற்றையெல்லாம் கடமைக்குச் செய்யாமல் கடவுளை யார் என்று தெரிந்து கொள்ள எடுக்கும் முயற்சிகளாய் அணுகினால் பார்வையற்ற மனிதனைப்போல நாமும் நிச்சயம் பார்வை பெறுவோம்! புதிய பார்வையோடு இயேசுவைப் பின்பற்றுவோம்!! - ஆமென்

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு ser