ஜனநாயக அரசியலில் அவ்வப்போது புதுக்கட்சிகள் தோன்றுவதைப் பார்க்கிறோம். உடனே, பல புதிய, பழைய அரசியல்வாதிகள் அக்கட்சிகளிலே அங்கத்தினர்களாகின்றனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு, அக்கட்சி வளர்ந்து பெரியதாகி விட்டால் தாங்கள் உயர்ந்த இடத்தில் இருப்போம் என்பதுதான். இப்படிப்பட்ட மனிதர்களில் பெரும்பான்மையானவர்களில் சுயநலமே விஞ்சியிருக்கிறதேயொழிய பொதுநலம் என்பது அறவே இல்லை என்பது நாம் காண்கின்ற எதார்த்தம். இப்படிப் பதவியில் இருக்க வேண்டும் என்கின்ற ஆசையும், எதிர்பார்ப்பும் காலம் காலமாக இருக்கின்ற உணர்வு. இவ்வுணர்வுகள் தவறல்ல, மாறாக அவ்விடத்தில் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை எடுத்தியம்புவது இன்றைய வார்த்தை வழிபாடு .
இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தில் அவரது சொல்லாலும், செயலாலும் கவரப்பட்ட எண்ணற்றோர் அவரது சீடர்களாயினர். அச்சீடர்களிலிருந்து இயேசு பன்னிருவரைத் திருத்தூதுப் பணிக்காகத் தேர்ந்தெடுத்தார். அவர் அவர்களைத் தேர்ந்தெடுக்கக் காரணம் தம்மோடு இருக்கவும், நற்செய்தியைப் பறை சாற்ற அனுப்பப்படவும், பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டி ருக்கவும் (மாற். 3:14) ஆகும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தால் தாங்கள் சிறப்புத் தகுதி வாய்ந்தவர்கள், மற்றவர்களைவிட மேலானவர்கள் என்கிற உணர்வு அவர்களில் சிலருக்கு வந்திருக்கலாம். மற்றவர்களுக்குச் சிறப்பான இடம் கிடைப்பதற்கு முன் அவ்விடத்தை நாம் பெற்றுவிட வேண்டும் என்கின்ற எண்ணமும் இருந்திருக்கலாம். ஏனெனில், தாவீது, சாலமோன் காலத்திய அரசியல் விடுதலையும், மேன்மையும் தங்களுக்கு கிடைக்காதா? தங்கள் இனத்தைச் சார்ந்த ஒருவர் சுதந்திரமாக நம்மை ஆளமாட்டாரா? என்ற எதிர்பார்ப்பு உரோமை ஆட்சியின் கீழ் இருந்த இஸ்ரயேல் மக்களிடத்தில் இருந்தது. இந்த அரசியல் விடுதலை உணர்வு பரவலாக இருந்த காரணத்தினால் இயேசு அரசியல் விடுதலையைத் தரும் மெசியாவாக இருப்பாரோ என்கின்ற எண்ணமும் இருந்தது. அதன் விளைவாகவே செபதேயுவின் மக்கள் யாக்கோபும், யோவானும் நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும் (மாற். 10:37) என்று வேண்டினர். என்னே சுயநலம்! வலப்புறமும், இடப்புறமும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்கள் அமர வேண்டும், வேறு எவரும் ஆண்டவரின் அரியணையை அண்டக்கூடாது என்கிற உணர்வு அவர்களிடமிருந்தது.
இயேசு தன்னைப் பின்பற்றுவதின் நோக்கத்தையும், விளைவுகளையும் விளக்கி கண்மூடித்தனமாக அல்ல, மாறாகச் சிந்தனைத் தெளிவோடு தன்னைப் பின்பற்ற அழைக்கிறார். இயேசு இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கமே தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் (மாற். 10:45) ஆகும். எனவே, இயேசுவைப் பின்பற்ற விழைபவர் பதவிக்காக , வசதிகளுக்காக அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும், பிறருக்காகத் தன்னையே இழக்கவும் தயாராக இருக்க வேண்டும். இதைத்தான் இயேசு தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவா. 15:13) என்றார். ஆவியின் கொடையால் அனைத்தையும் தாங்கும் இதயம் பெறுவோம், பணி செய்து பரமனின் சீடர்கள் என்பதை மெய்ப்பிப்போம்.
சாய்ந்து கொள்ள தேவை ஒரு தோள் !
ஓர் ஊரிலே எல்லாருக்கும் நல்லவராக மனிதநேயம் மிகுந்த பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். காலையிலே சூரியோதயமாகவும், மாலையிலே சந்திரோதயமாகவும் விளங்கிய அவருக்கு ஒரு மகன். அவனுக்கு வயது பத்து இருக்கும். ஒருநாள் அவன் அவனது தாயைப் பார்த்து, அம்மா, அப்பாவைப்போலவே நானும் ஒருநாள் எல்லாராலும் போற்றப்படும் பெரிய மனிதராக வாழ விரும்புகின்றேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்றான்.
தாய் மகனைப் பார்த்து, "மகனே, நான் உன்னை ஒரு கேள்வி கேட்கின்றேன். நீ சரியான பதிலைச் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்கின்றேன்” என்றாள். "சரி" என்றான் மகன். "உன் உடலிலே உள்ள உறுப்புகளில் மிகவும் உயர்ந்தது எது?" மகன் சொன்ன எந்த பதிலையும் தாய் சரியானது என ஏற்றுக்கொள்ளவில்லை. மகன் தோல்வியை ஏற்றுக்கொண்டு, "நீங்களே பதிலைச் சொல்லி விடுங்கள் அம்மா” என்றான்.
தாய் மகனைப் பார்த்து, "மனித உடலிலே மிகவும் உயர்ந்த உறுப்பு அவனது தோள்தான். காரணம் அதுதான் சோர்ந்துகிடக்கும் மனிதர்களையெல்லாம் தாங்கிப்பிடித்து ஆறுதல் அளிக்கின்றது. நீ உயர்ந்த மனிதனாக வாழ விரும்பினால், ஆறுதல் தேடும் தலைகளுக்கு உனது தோள்கள் மீது சாய அனுமதி அளி. அப்போது ஊரும், உலகும் உன்னைப் போற்றும் " என்றாள். இதே உண்மையைத்தான் இன்றைய நற்செய்தியிலே இயேசு சுட்டிக் காட்டுகின்றார். தொண்டுகளிலே சிறந்த தொண்டு துவண்டு விழும் தலையை நமது தோள் மீது சுமப்பதாகும் (முதல் வாசகம்).
இயேசு, தொண்டர்களாக வாழ முன் வாருங்கள், அப்போது உலகம் உங்களை வணங்கும் என்று போதித்ததோடு நிறுத்திக்கொள்ளவில்லை. போதித்ததைச் சாதித்தும் காட்டினார். "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத் 11:28) என்று சொன்ன இயேசு, வார்த்தையை வாழ்வாக்கி, வலுவற்றவர்களின் மீது இரக்கத்தைப் பொழிந்து (இரண்டாம் வாசகம்) மக்களின் உடல் பாரத்தை (மத் 9:27-31), மன பாரத்தை (லூக் 7:36-50) இறக்கி வைத்தார். இயேசு பலரின் பாவத்தைச் சுமந்தார் (எசா 53:12). "சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே (இயேசுவே), சுமந்தார்” (1 பேதுரு 2:24) என்கின்றார் புனித பேதுரு. "எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார் என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது" (மத் 8:16இ-17) என்கின்றார் புனித மத்தேயு.
இதுவே நமது செபமாக இருக்கட்டும்:
“இறைவா, நடந்து, நடந்து கால்கள் களைத்துவிட்டன !
ஏந்தி, ஏந்தி கைகள் சோர்ந்துவிட்டன!
பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துவிட்டன!
இப்போது எங்களுக்குத் தேவையானதெல்லாம்
சாய்ந்துகொள்ள ஒரு தோள்! ஒரு தொண்டர்!
என்று சொல்லி அழுகின்ற இடிந்துபோன இதயங்களுக்கு நான் இதம் தர,
நான் தோள் கொடுக்க, எனக்கு
உமது இரக்கத்தையும், ஆசியையும் தந்தருளும். ஆமென்."
மேலும் அறிவோம் !
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7)
பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.
பள்ளி ஆய்வாளர் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர்களிடம், "எந்தப் பாடத்திலும் 'பெயில்' ஆகாத மாணவர்கள் மட்டும் வலது கையை உயர்த்திப் பிடியுங்கள்" என்றார். ஒரே ஒரு மாணவன் மட்டும் கையை உயர்த்தினான், அதைப்பார்த்த மற்ற மாணவர்கள் சிரித்தனர், அவர்கள் ஏன் சிரிக்கின்றனர்? என்று ஆய்வாளர் கேட்டார். அதற்கு மாணவர்கள், "சார், அவன் ஒரு பாடத்திலும் தேர்வு எழுதவில்லை " என்றனர். ஒரு பாடத்திலும் தேர்வு எழுதவில்லை யென்றால், 'பெயில்' ஆகமுடியாது. ஆனால் அது ஒரு சாதனையா?
துறைமுகத்தில் இருக்கும் கப்பல் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக இருக்கும். ஆனால் துறைமுகத்தில் இருப்பதற்காக எத்தக் கப்பலும் செய்யப்படுவதில்லை , கப்பல் கடலில் பயணம் செய்யவேண்டும்: கடல் கொந்தளிப்பு, புயல், பனிப்பாறை முதலிய பல்வேறு தடைகளையும் மேற்கொள்ள வேண்டும், தனது இலக்கை அடைந்து சாதனை படைக்க வேண்டும், அவ்வாறே மனிதர்களும் தங்கள் வாழ்வில் எழும் பல்வேறு சவால்களைச் சமாளித்து சாதனை புரிய வேண்டும்.
பறவை பிறந்தது பறப்பதற்காக: மனிதன் பிறந்தது துன்புறுவதற்காக (யோபு 5:7). கிறிஸ்துவும் துன்புறுவதற்காகவே இவ்வுலகிற்கு வந்தார். அவர், "எல்லாவகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர், எனினும் பாவம் செய்யாதவர்” (எபி 4:15) என்று. இன்றைய இரண்டாவது வாசகம் தெளிவாகக் கூறுகிறது.
இறைவாக்கினர் எசாயா என்பவர் கிறிஸ்துவைத் 'துன்புறும் ஊழியனாகச் சித்தரித்து நான்கு கவிதைகள் எழுதியுள்ளார், துன்புறும் ஊழியனைப் பற்றிய நான்காம் கவிதையின் ஒருபகுதி இன்றைய முதல் வாசகமாக அமைந்துள்ளது. கடவுள் கிறிஸ்துவைப் பலருடைய பாவங்களுக்காக வதைத்தார்; கிறிஸ்து பிறருடைய பாவங்களுக்காகத் தம்மைப் பரிகாரப்பலியாக்கினார். ஆனால் இறுதியில் உயர்வடைந்து. தமது வாழ்வின் நிறைவை எய்தினார், சிலுவை அவரை வீழ்த்தவில்லை, மாறாக, சிலுவையைக் கொண்டே பாவத்தையும் பாவத்திற்குக் காரணமான அலகையையும் அவர் வீழ்த்தினார்.
கிறிஸ்துவின் சீடர்களுக்குச் சிலுவை விருப்பப்பாடமல்ல), கட்டாயப்பாடம், "என்னைப் பின்பற்ற விரும்புவர் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (லூக் 9:23). தமது சிலுவைச் சாவைக் கிறிஸ்து மூன்று முறை முன்னறிவித்தார். மூன்று முறையும் சீடர்கள் அதைப்புரிந்து கொள்ளவில்லை. முதன்முறை. பேதுரு கிறிஸ்துவிடம், "ஆண்டவரே, இதுவேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" (மத் 16:22) என்றார், இரண்டாம் முறை, சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று வாதாடினர் (மாற் 9:34), மூன்றாம் முறை, யாக்கோபும் யோவானும் விண்ணகத்தில் தங்களுக்கு முதல் இரண்டு இடங்களை ஒதுக்கீடு செய்து கொடுக்கும்படி கிறிஸ்துவிடம் விண்ணப்பித்தனர் (மாற் 10:37) வீடுபற்றி எரியும்போது பீடிக்கு நெருப்புக் கேட்ட கதை!
கிறிஸ்து தம் சீடர்களின் மடமையைக் கண்டு மனவருந்தி, அவரோடு விண்ணக மகிமையில் பங்குபெற விழைகின்றவர்கள் அவருடைய துன்பக் கலத்தில் பருக வேண்டுமென்றும், அவருடைய பாடுகளின் திருமுழுக்கைப் பெறவேண்டுமென்றும் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், கிறிஸ்துவின் சீடர்கள் மற்றவர்களிடமிருந்து பணிவிடை ஏற்காமல், மற்றவர்களுக்குப் பணிபுரிய வேண்டும் என்றும் சீடர்களுக்கு அறிவுறுத்தினார்.
இன்றைய காலக்கட்டத்தில் இல்லறத்தாரும் துறவறத் தாரும் ஆடம்பர வாழ்வையும் சொகுசு வாழ்வையும் விரும்புகின்றனர், இறையரசுக்காகவோ மற்றவர்களுடைய நலனுக்காகவோ உழைக்கவும் ஊழியம் புரியவும் விரும்புவதில்லை . பணிவிடை பெறவே விரும்புகின்றனர்: பணிவிடை புரிய முன்வருவதில்லை . சுருக்கமாக, கிறிஸ்துவின் மனநிலை (பிலி 2:5) நம்மிடம் இல்லை.
ஒரு குடும்பத்தில் கணவர் தம் மனைவியிடம் சமைக்கும் படி கேட்டதற்கு அவர், "நான் உங்கள் மனைவி மட்டுமே; சமையல்காரி அல்ல" என்று நறுக்கென்று பதில் சொன்னார். அன்று இரவு திருடன் வீட்டில் புகுந்து மனைவியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்தான். கணவர் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தார், மனைவி அவரிடம், "என்னங்க, சும்மா பார்த்துக்கொண்டு இருக்கிறீங்க; திருடனை அடிச்சு விரட்டுங்க” என்றதற்கு. கணவர், "நான் உனக்குக் கணவன் மட்டுமே; காவற்காரன் அல்ல; போலிசைக் கூப்பிடு" என்று பதிலடி' கொடுத்தார்!
கணவனும் மலைவியும் கடமை, உரிமை என்ற குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டு, ஒருவர் மற்றவர் மீது வஞ்சகம் தீர்த்துக் கொள்ள விரும்பினால், இல்லறம் நரகமாகி விடும். பழி வாங்குவதில் அல்ல, பணிவிடை புரிவதில் ஒருவர் மற்றவருடன் போட்டிபோட வேண்டும். "உணவு விடுதியில் சாப்பிடும் இட்லிக்கும் வீட்டில் சாப்பிடும் இட்லிக்கும் உள்ள வேறுபாடு என்ன?" என்று ஒரு கணவரிடம் கேட்டதற்கு அவர், உணவு விடுதியில் இட்லி சாப்பிட்ட பிறகு மாவு ஆட்டுவேன்: வீட்டில் மாவு ஆட்டியபின் இட்லி சாப்பிடுவேன்" என்றார் வீட்டு வேலையில் மனைவிக்கு உதவி செய்வது கணவனுக்கு இழிவு அல்ல. அது அவருடைய கடமையாகும்.
பயிற்சி காலத்தில் குருவானவர்களும் நவகன்னியர்களும் கிராமங்களுக்குக் களப்பணிபுரிய மகிழ்ச்சியுடன் செல்வர். ஆனால் குருக்களாகவும் கன்னியர்களாகவும் மாறியபின் அவர்கள் அத்தகைய பணிகளை மேற்கொள்ளவதில்லை. தாழ்ச்சி அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறது; தலைக்கனம் ஏறிவிடுகிறது. இருப்பினும், வித்தியாசமான துறவிகளும் இருக்கின்றனர். ஓர் அருள்சகோதரி ஒரு பணக்காரரிடம் சென்று தனது அனாதைக் குழந்தைகளுக்காக நன்கொடை கேட்டார். அப்பணக்காரர் அந்த அருள்சகோதரி முகத்தில் காரித் துப்பி, அவருடைய கன்னத்தில் அறைந்தார். ஆனால் அந்த அருள்சகோதரியோ மிகவும் பணிவுடன், புன்னகை பூத்த முகத்துடன் பணக்காரரிடம், "இது நீங்கள் எனக்கு அளித்த பரிசு; என் அனாதைக் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்” என்று கேட்டார். பணக்காரர் அச்சகோதரியிடம் மன்னிப்புக் கேட்டு, அவருக்குத் தேவையான பணத்தைக் கொடுத்தார், அவர் தான் அன்னை தெரசா!
தாழ்ச்சியின் அவசியத்தைப் பற்றிக் கிறிஸ்து தமது சீடர்களுக்குப் பலமுறை "கொள்கை விளக்கம்" (Theory) அளித்தார். அது அவர்களது மரமண்டையில் ஏறவில்லை . இறுதியாக அவர் "செய்முறைப் பயிற்சி" (Practical) செய்து காட்டினார், இறுதி இரவு உணவின்போது அவர்களுடைய பாதங்களைக் கழுவி, "நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” (யோவா 13:15) என்றார். இல்லறத்தாரும் துறவறத்தாரும் மற்றவர்மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மற்றவருக்கு ஊழியம் புரிய முன்வந்தால் இவ்வையகம் வானமாக மாறாதா?
"அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தாளே வந்து எய்தும் பராபரமே" - தாயுமானவர்
வாழ்வதற்குத் தரும் வாடகை
"ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்". பழைய திரைப்படப் பாடல் இது. வயது என்றாலே வருடக்கணிப்பில் தான் பார்க்க வேண்டுமா என்ன!
அந்த விந்தை மனிதருக்கு நாள் கணிப்பில்தான் ஞானம் பிறக்குமாம். உங்கள் வயது என்ன என்று கேட்டால் ஏறத்தாழ 100 ஆண்டை எட்டிய அவர் 100 என்று சொல்ல மாட்டார். 36525 நாள்கள் (லீப் ஆண்டுகளில் வரும் எக்ஸ்ட்ரா நாட்களையும் இணைத்து) என்பார். இப்படி ஒரு பழக்கத்துக்குக் காரணம் திருப்பாடல் 90:12ல் வரும் வரிகளாம்: "எங்கள் (வாழ்) நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும். அப்போது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்" உண்மைதான் 100 ஆண்டுகள் என்பதை விட 36525 நாள்கள் என்று சொல்லும்போது கால ஓட்டத்தில் ஒரு விரைவைப் பார்க்கலாம். அந்த வேகத்தின் முன்னே வாழ்க்கை என்ற லட்சியப் பயணத்தில் ஒரு பின்னடைவும் கண்ணில் படும். தன்னிலை உணர்வுதானே ஞானம்!
இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து நான் சாதித்தது என்ன? இந்த சமுதாயத்துக்காகச் செய்தது என்ன?
அவுட்லுக் என்ற ஆங்கில இதழில் 1999 மே 3ல் வந்த செய்தி தினத்தந்தியில் 2012 செப்டம்பர் 1ல் "இயற்கை நாயகி திம்மக்கா” என்ற தலைப்பில் கட்டுரையாக வந்தது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு 70 கி.மீ. தொலைவில் கூலிகல் என்று ஒரு சிற்றூர். அங்கே 80 வயதைக் கடந்த ஒரு மூதாட்டி, திம்மக்கா என்பது பெயர். கணவனை இழந்தவர். குழந்தைகள் இல்லை. இந்த சாமானியப் பெண்மணி செய்த சாதனை என்ன தெரியுமா? 50 ஆண்டுகளுக்கு முன்பு 400 ஆலமரக் கன்றுகளை வாங்கி சொந்த ஊரின் சாலையோரத்தில் நட்டு 2 கி.மீ. தண்ணீர் சுமந்து மாற்றி வளர்த்து வந்திருக்கிறார். இன்று 284 பெரிய வளர்ந்த ஆலமரங்கள் சாலையின் இருபுறமும் வரிசையாக விழுதுவிட்டுப் படர்ந்து நிழல் தருகின்றன. தினமும் காலையில் வந்து அம்மரங்களைக் கட்டி அணைத்து, "எனக்கு இப்போது 284 குழந்தைகள்" என்று பூரிக்கின்றார். வயது முதிர்ந்தோருக்கான உதவித் தொகை பெற்று உயிர் வாழும் அவர் கூறுகிறார்: “மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தான் வாழும் சமுதாயத்துக்கு ஏதாவது விட்டுச் செல்ல வேண்டும்". மரங்களை நாம் வளர்த்தால் அவை நம் சந்ததியை வாழவைக்கும் என்பதும் அவரது நம்பிக்கை .
எங்கோ எப்பொழுதோ படித்தது நினைவுக்கு வருகிறது: "நீ இங்கே பூமியில் வாழ வந்ததற்காகத் தருகிற வாடகை தான் நீ செய்வதாகச் சொல்லுகிற சேவை" (Service is the rent you pay for your life on earth).
- மனிதனாகப் பிறப்பெடுத்ததற்கே வாடகையாகச் செலுத்த வேண்டியது சேவை என்றால் இயேசுவின் சீடனாக மாற எத்தகைய தியாகம் நிறைந்த தொண்டு எதிர்பார்க்கப்படும்? "மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" (மாற்கு 10:45) என்று தன்னை முன்னிலைப்படுத்தித் தன் சீடர்களுக்கு விடுக்கும் சவால்: “நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?" (மாற்கு 10:38) பலிவாழ்வுக்கு இட்டுச் செல்லும் பணி வாழ்வு.
தலைவர் இயேசுவின் இலட்சியம் எங்கே? அவரது தொண்டர்களாக அர்ப்பணித்த சீடர்களின் எதிர்பார்ப்புக்கள் எங்கே?
ஆசைக்கோர் அளவில்லை. அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செயவே நினைவர்' - மனித ஆசையை வெளிப்படுத்தும் தமிழ்க்கவிதை. ஏனையச் சீடர்களின் உள்ளங்களில் பொறாமை தீ பற்றி எரியும் அளவுக்கு யாக்கோபும் யோவானும் எப்படித் தங்கள் ஆசையை வெளிப்படுத்துகிறார்கள் ?
"போதகரே, நாங்கள் கேட்பதை எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்" இயேசு நம்மை அழைத்தது நாம் கேட்பதை இயேசு செய்ய வேண்டும் என்பதற்காகவா? மாறாக இயேசு - கேட்பதை, விரும்புவதை நாம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே!
"நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவன் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்". இயேசு நம்மை அழைத்தது உரிமைகளையும் சலுகைகளையும் பதவிகளையும் நாம் அனுபவித்து ஆனந்தம் கொள்வதற்காகவா? மாறாக இயேசுவின் எண்ணம் இலட்சியம் இவற்றை நமதாக்கி அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்பப் பொறுப்புடன் செயல்பட அன்றோ !
''இதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபம் கொள்ளத் தொடங்கினர்" இப்படிப் பொறாமைக்கும் சீற்றத்துக்கும் காரணம், என் குடும்பம், என் இனம், இரத்த வழி சகோதர பாசம் என்ற குறுகிய வட்டத்தில் கோரிக்கை வைத்ததுதான். இயேசு நம்மை அழைத்தது இந்தத் தன்னல உறவுச் சுவரை தகர்த்தெறிந்து எல்லா மக்களின் நலனுக்காகவும் நம்மை அர்ப்பணிப்பதற்காக அல்லவா!
இயேசுவின் சீடர்கள் எப்படி இருக்கக் கூடாது என்பதற்குப் பிற இனத்தாரை எடுத்துக்காட்டாக்கும் இயேசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தன்னையே முன்னிறுத்துகிறார். இயேசுவுக்கு, தான் மானிடப் பிறப்பு எடுத்ததன் நோக்கம் தெளிவாக இருந்தது. "பணி புரிய, பலருடைய மீட்புக்குத் தன் உயிரை விலையாகக் கொடுக்க" என்பதுதான் அது. இறைமகனாயிருந்தும் தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியது இதற்கு அசைக்க முடியாத சான்று. இத்தகைய குறிக்கோள் தெளிவு இல்லாமல் ஏனோ தானோ வென்று வாழ்பவர்கள் பலர். பதவி, பட்டம், பணம் பொருள் இவற்றை இலக்காகக் கொண்டு வாழ்கின்றனர் பலர்.
தான் சாகாமலிருக்க ஏதாவது வழி உண்டா ? என்று முனிவர் ஒருவரிடம் இளைஞன் ஒருவன் கேட்டான். முனிவரோ "நான் சொல்லித் தரும் மந்திரத்தை நாள்தோறும் நீ மட்டும் சொன்னால் நிலைத்து வாழ்வாய். பிறருக்கு நீ சொல்லிக் கொடுத்தால் இறந்துவிடுவாய்'' என்றார்.
இந்த இளைஞனோ ஊர் மக்களையெல்லாம் ஒன்று திரட்டி இந்த மந்திரத்தை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தான். விளைவு? நோயுற்றான். சாகக் கிடந்தான். அப்போது முனிவர் அவனைச் சந்திக்க நேர்ந்தது. "நான்தான் முன்கூட்டியே எச்சரித்திருந்தேனே. உனக்கு மட்டும் நான் சொன்ன இரகசியத்தை பிறருக்கு ஏன் வெளிப்படுத்தினாய்?" என்று கேட்டார். இளைஞனோ, "நான் மட்டும் சொல்லிவந்தால் நான் மட்டும் தானே வாழ்வேன். இப்போது நான் இறந்தாலும் இவர்கள் பலர் நீடு வாழ்வார்கள் அன்றோ!" என்றான்.
இந்த இளைஞனைப் போல நான் மடிந்தாலும் பிறர் வாழட்டும் என்று நினைக்காவிட்டாலும், தன்னைப் போல பிறரும் வாழட்டும் என்று நினைப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?
"இயேசு அவர்களுக்கு முன் போய்க் கொண்டிருந்தார்" (மாற்கு 10:32) என்று சொல்லப்படுகிறது. அப்படியெனில் சீடர்கள் பின்வாங்குகின்றனர். இயேசு தனக்கு நிகழப்போகும் அனைத்தையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். ஆனால் சீடர்கள் ஒன்றில் மட்டும் தெளிவோடிருக்கின்றனர். அதுதான் "இருக்கை". இயேசு சிலுவையில் இறந்து தன்னைக் கடவுளுக்கும் மனிதருக்கும் காணிக்கையாக்குவதில் கருத்தாய் இருக்கின்றார். சிலுவையில் தொங்குவதைவிட இருக்கையில் அமர்வது எளிதானது, இன்பமானது. இருக்கை ஓர் அரசியல் அடையாளம், அதிகாரத்தின் அடையாளம். அதைத்தான் மனித மனம் நாடுகிறது. மரியாதை கிடைப்பதாக நினைக்கிறது. இயேசுவோ மனித இன மீட்புக்காகச் சிலுவையையே அரியணையாக ஏற்றார். அதனால் இன்றும் அவர் மனித மனங்களில் ஆட்சி செய்கிறார். இருக்கையில் இடம் பிடிக்க நினைப்பவர்கள் இதயங்களில் இடம் பிடிக்க இயலாது. அன்பு உடையவர்களே ஆட்சி புரிபவர்கள்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே - இதுவே இயேசுவின் சிந்தனை".
நமது கிறிஸ்தவ அழைப்பு அழகான ஒரு பூமாலை. அது குரங்கு கையில் சிக்கலாமா?
அரியணையில் அமர்வதா, சிலுவையில் அறையப்படுவதா?
மதிப்பும் மரியாதையும் பெறுவது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஊற்றெடுக்கும் தாகம். இத்தாகத்தைத் தணிக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகளைக் கொண்டு, மரியாதையின் இலக்கணத்தைப் பலரும் பல வழிகளில் எழுதுகிறோம். சிம்மாசனங்களில் அமர்ந்து மாலைகள் பெறுவது ஒருவகை மரியாதை. சிலுவைகளில் அறையப்பட்டு உருகுலைந்தாலும், மக்களின் மனம் எனும் சிம்மாசனங்களில் அமர்வது மற்றொரு வகை மரியாதை.
இறை வார்த்தை சபையைச் சார்ந்த ஜான் புல்லன்பாக் (John Fullenbach) என்ற குரு தன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தைச் சொல்கிறார். உரோமையில் இறையியல் ஆசிரியராக இருக்கும் ஜான், அருளாளரான அன்னை தெரேசா உயிரோடிருந்தபோது, கொல்கத்தா சென்று அன்னையுடன் பணிசெய்ய விரும்பினார். அன்னையும் அழைப்பு விடுத்தார். கொல்கத்தாவில் பணியை ஆரம்பித்த முதல் நாள் ஓர் அருட்சகோதரியுடன் கொல்கத்தாவின் மிகவும் ஏழ்மையான ஒரு பகுதிக்கு ஜான் செல்லவேண்டி இருந்தது. அப்பகுதியில் ஒரு வயதானப் பெண்மணி அவர்களிடம், "தயவு செய்து என் வீட்டுக்கு வாருங்கள். என் கணவர் சாகக்கிடக்கிறார்." என்று வேண்டினார். மிகவும் அழுக்காய் இருந்த ஒரு குடிசைக்குள் ஜானும் அந்தச் சகோதரியும் சென்றனர். பல நாட்கள் படுக்கையில் இருந்த ஒரு மனிதரை அங்கே கண்டனர். ஜானுக்குப் பெரிய அதிர்ச்சி. இவ்வளவு மோசமான நிலையில் ஒரு மனிதர் இருக்கமுடியுமா என்ற அதிர்ச்சி... அவ்வளவு நாற்றம் அங்கே. அவரைத் தங்கள் இல்லத்திற்குக் கொண்டு செல்லலாம் என்று சகோதரி கூறியதும், இருவரும் குனிந்து அவரைத் தூக்க முயன்றனர். அப்போது, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த மனிதர், ஜான் முகத்தில் எச்சில் துப்பினார். அதிர்ச்சி, கோபம் எல்லாம் ஜானைத் தாக்கின. ஓரளவு சமாளித்துக்கொண்டு, அந்த மனிதரை அன்னையின் இல்லத்திற்குக் கொண்டு போய் சேர்த்தார். தொடர்ந்து அங்கே தங்கிய நாட்களில், ஜான் அனுபவித்த அதிர்ச்சிகள் பல உண்மைகளைச் அவருக்குச் சொல்லித்தந்தன. அவரது விசுவாசத்தை உறுதிபடுத்தின.
அன்னை தெரேசாவும், பிற சகோதரிகளும் செய்த சேவை அவரை அதிகமாய்ப் பாதித்தது. அதைவிட, அந்த நோயாளிகளில் சிலர் சகோதரிகள் மீதும், அன்னை மீதும் கோபப்பட்டு, பேசிய வார்த்தைகள், நடந்துகொண்ட விதம்... இவைகளை அந்த சகோதரிகள் சமாளித்த அழகு... இவை அனைத்தும் அவரது விசுவாச வாழ்வை ஆழப்படுத்தியதாகக் கூறுகிறார்.
இயேசுவின் வலப்பக்கமும், இடப்பக்கமும் இரு அரியணைகளில் அமர்வதற்குத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்த இரு சீடர்கள் இன்றைய நற்செய்தியின் நாயகர்கள். அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை” என்று இயேசு சொல்கிறார். இயேசு சொல்லும் இந்த வார்த்தைகள் இன்றையத் தலைவர்கள் பலருக்குப் பொருத்தமான வார்த்தைகள்... அரியணையில் ஏறுவதற்கும், ஏறியபின் அங்கேயே தொடர்ந்து அமர்வதற்கும் தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நம்மை ஆச்சரியத்தில், அதிர்ச்சியில், அவமானத்தில் நெளிய வைக்கின்றன. இவர்கள் அறியாமல் செய்கிறார்களா, அல்லது மதியிழந்து செய்கிறார்களா என்ற கேள்வியை நம்முள் எழுப்புகின்றன. மரியாதை, அதிகாரம் எனபனவற்றை தவறாகப் பயன்படுத்தும் தலைவர்கள் அறியாமையில் செய்கிறார்கள் என்று இயேசு பெருந்தன்மையுடன் சொல்கிறார். இந்த அறியாமையின் உச்சக்கட்டமாக, இயேசுவை இத்தலைவர்கள் சிலுவை என்ற அரியணையில் ஏற்றியபோது, மீண்டும் இயேசு 'இவர்கள் அறியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்' என்று தந்தையிடம் வேண்டியது நமக்கு நினைவுக்கு வருகிறது.
செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இரு அரியணைகளில் அமர்வதற்கு விடுத்த இந்த விண்ணப்பம் மற்ற சீடர்களுக்குக் கோபத்தை மூட்டியது. பேராசை, பொறாமை, கோபம் என்ற இந்தச் சங்கிலித் தொடர் தன் சீடர்களைக் கட்டிப்போடும் ஆபத்து உள்ளது என்பதை உணர்ந்த இயேசு, உண்மையான மதிப்பு என்றால் என்ன, மரியாதை பெறுவது எவ்விதம் என்ற பாடத்தை அவர்களுக்குச் சொல்லித் தருகிறார். “உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.” இயேசுவின் இந்தக் கூற்று நமக்கு ஒரு பெரும் சவாலாக அமைகிறது. இயேசுவின் இக்கூற்றை அடிப்படையாகக் கொண்டு பணியாளர் தலைமைத்துவம் (Servant Leadership) என்ற கருத்து, தற்போது மேலாண்மைப் பள்ளிகளில் பாடமாகச் சொல்லித் தரப்படுகிறது.
இயேசுவின் இந்த சவாலை ஏற்று வாழ்ந்த தலைவர்கள் வரலாற்றில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஜார்ஜ் வாஷிங்டன் பற்றி சொல்லப்படும் ஒரு கதை என் நினைவுக்கு வருகிறது. ஒரு நாள் ஜார்ஜ் வாஷிங்டன் சாதாரண உடைகள் அணிந்து தன் குதிரையில் ஏறிச் சென்றார். போகும் வழியில் ஒரு தளபதியின் குதிரைவண்டி சேற்றில் அகப்பட்டிருந்ததைப் பார்த்தார். அந்த வண்டியைச் சேற்றிலிருந்து வெளியேற்ற நான்கு வீரர்கள் வெகுவாக முயன்று கொண்டிருந்தனர். தளபதியோ அருகில் நின்று அவர்களுக்கு கட்டளைகள் கொடுத்துக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற வாஷிங்டன் தளபதியிடம், "ஏன் நீங்களும் இறங்கி உதவி செய்தால் வண்டியை வெளியில் எடுத்துவிடலாமே!" என்று சொன்னதற்கு, தளபதி, "நான் ஒரு தளபதி" என்று அழுத்தந்திருத்தமாய் சொன்னார். உடனே, வாஷிங்டன் குதிரையிலிருந்து இறங்கி, வீரர்களுடன் சேர்ந்து முயற்சி செய்து, வண்டியை வெளியில் தூக்கிவிட்டார். பின்னர் தளபதியிடம் "அடுத்த முறை உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உங்கள் அரசுத் தலைவரைக் கூப்பிடுங்கள்... நான் வந்து உதவி செய்கிறேன்" என்று சொல்லி தளபதியின் கையைக் குலுக்கினார். அப்போதுதான் தளபதிக்குப் புரிந்தது, தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் என்று.
ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம் ஒன்று இப்போது என் நினைவுக்கு வருகிறது. சீக்கியரான ஒரு மாவட்ட ஆட்சியர், தமிழ் நாட்டில் ஒரு முக்கிய நகருக்கு நியமனம் ஆனார். மக்களுக்கு நன்மை பயக்கும் பல அதிரடி மாற்றங்களை மாவட்ட ஆட்சியாளர் அந்நகரில் கொணர்ந்தார். சிம்மாசனத்தில் அமர்ந்து மாலையையும், மரியாதையையும் எதிர்பார்க்கவில்லை இத்தலைவர்.. நேர்மையாக, சிறப்பாக செயல்பட்டார்.
ஒரு நாள் அதிகாலையில் இவர் வழக்கம்போல் உடற்பயிற்சிக்காக நடந்து போனபோது, ஓர் இடத்தில் சாக்கடை அடைத்துக்கொண்டு தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது. ஒரே நாற்றம். நகராட்சி ஊழியர் அதைச்சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தனர். மாவட்ட ஆட்சியர் அங்கே போனதும், கேட்டார்: "என்ன பிரச்சனை?" "சாக்கடை அடைச்சிருக்கு, சார்." "அது தெரியுது. சுத்தம் பண்றதுதானே." "ஒரே நாத்தமா இருக்கு சார், எப்படி இறங்குறதுன்னு தெரியல." அவர்கள் சொல்லி முடிக்கும் முன்பு, அவர் சாக்கடையில் இறங்கி, அங்கிருந்த கருவிகளை வைத்து, அந்த அடைப்பை எடுத்து விட்டார். பிறகு மேலே வந்து, "இப்படித்தான் செய்யணும்" என்று சொல்லி அவர் வழி போனார். சாக்கடை அடைப்பு திறந்தது, அவர்கள் வாயடைத்து நின்றனர்.
வாழ்க்கையின் பெரும் பகுதியை ஏழைகளுக்காகவும், சமுதாயத்தால் விலக்கப்பட்டவர்களுக்காகவும் செலவழித்த அன்னை தெரேசா ஒரு பெரிய தலைவரா? ஆம். கோடான கோடி மக்கள் மனதில் அரியணை கொண்டிருக்கும் தலைவர் அவர். அதிகாரம் என்பதற்குச் சரியான இலக்கணம் சொல்பவர்கள்.. ஜார்ஜ் வாஷிங்டனும், சீக்கியரான அந்த மாவட்ட ஆட்சியரும்... இவர்களை இந்தப் பாதையில் சிந்திக்கத் தூண்டிய இயேசுவின் வார்த்தைகள் நம்மையும் நல்வழிபடுத்த வேண்டுவோம்.
சிம்மாசனம், சிலுவை, இரண்டுமே அரியணைகள் தாம். நாம் மட்டும் சுகம் காணலாம் என்று அரியணை ஏறி அமர்ந்தால், சுற்றியிருந்து சாமரம் வீசுகிறவர்கள் கூட நம்மை மதிக்கமாட்டார்கள். கட்டாயம் நேசிக்க மாட்டார்கள். ஆனால், பலருக்கும் சுகம் தருவதற்கு சிலுவை என்ற அரியணை ஏறினால், பல நூறு ஆண்டுகளுக்கும் மக்கள் மனதில் மதிப்போடும், அன்போடும் அரியணை கொள்ள முடியும்.
சிம்மாசனமா, சிலுவையா... தேர்ந்து கொள்ளுங்கள்.
மறையுரை
யார் நீடு வாழ்பவர்?
* தலைவர்மீது முழு நம்பிக்கை கொண்டிருக்கும் ஊழியர்.
* தலைவரது ஆணையை தாரக மந்திரமாக ஏற்றுக்கொள்பவர்.
* தலைவரது திருவுளத்தை நிறைவேற்றுவதில் இன்பம் காண்பவர்.
* தலைவன் தரும் துன்பம் தனது வெற்றிக்கான முதல்படி எனக் கருதுபவர். இப்படிப்பட்ட ஊழியனைக் குறித்து தலைவர் பெருமிதம் கொள்வார். எனக்கு நல்ல பணியாளர் கிடைத்துள்ளார், எனது பணியாளர் நல்ல பண்பாளர் என்று தலைவர் அகமகிழ்வார்.
அருள்நிறைந்த இறை அரியணை யார்?
* நமது தனிப்பெரும் தலைமைக்குருவான இயேசு கிறிஸ்து.
* வானங்களைக் கடந்து தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கும்
இயேசுதான் இரக்கத்தின் அரியணை.
* நம்மைப் போன்ற சோதனைகள் இயேசுவுக்கும் இருந்தன எனினும் அவர் பாவத்தின் நிழல்கூட தம்மீது படாமல் வாழ்ந்தார். பணிவிடை பெறுவதா? வழங்குவதா?
* நமக்கு வழங்கப்படும் பொறுப்புகள் கடவுள் நமக்கு அளிக்கும் பணிபுரியும் வாய்ப்புகள்.
* கடமையைச் செய்யும் போது எதிர்பார்ப்பு எதையும் முன் வைத்தல் கூடாது.
* பணிவிடை பெறுபவர் தன்னிடம் உள்ளதையும் இழக்கிறார்; பணிவுடை புரிபவரோ பன்மடங்காகப் பலனைப் பெறுகிறார்.
* இருக்கும் இடம் எதுவாயிருந்தாலும் நினைக்கும் மனம் உயர்ந்ததாக இருந்தால் எல்லாம் சுபமாகும்.
பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசா. 53:10-11)
இறைவாக்கினர் எசாயாவின் காலத்தில் யூதா வலிமை மிக்க அண்டை நாடான பாபிலோனியாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. யூதாவின் மக்கள் தொடர்ந்து ஆண்டவருக்கு. பணியாற்றாது அவர்மீது நம்பிக்கையிழந்து பல்வேறு வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தார்கள். ஆகவே யூதாவின் மக்களுள் பலர் பாபிலோனில் அடிமைகளாக நசுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்கள். இந்த சூழ்நிலையில் தான், இரண்டாம் புத்தகமாகிய 40 முதல் 55 அதிகாரங்கள் கடவுள் தம் மக்களை விடுவித்து அவர்களது சொந்த நாடான எருசலேமில் புதுவாழ்வு வாழுமாறு அழைத்துச் செல்வார் என்று கூறுகிறது. இப்பகுதியில் மறுவாழ்வு என்பது பல்வேறு வழிகளில் கொண்டு வரப்படுகிறது. அதில் ஒன்று துன்புறும் ஊழியனது செயல்பாடுகள். ஆக அதிகாரம் 40 முதல் 55 வரை மொத்தம் 4 பாடல்கள் இந்த ஊழியனது பணியையும், புதுவாழ்வு செய்தியையும் நமக்குத் தெரிவிக்கின்றன. கடைசியில் வரும் 4-ஆவது பாடல் இன்றைய முதல் வாசகத்தை உள்ளடக்கியுள்ளது (எசா 52;13-53:12).
இன்றைய முதல்வாசகத்தில் (53:10-11) துன்புறும் ஊழியரின் உச்சகட்ட துன்பங்களுக்கு ஆண்டவர் அளிக்கும் பரிசு மிகச்“சிறந்தது என்று வாசிக்கிறோம். ஆகவே “நீங்கள் பாபிலோனில் துன்புறுத்தப்பட்டாலும் உங்களை தன்னுடைய ஊழியன் வழியாக வாக்குறுதியின் நாட்டுக்கு அழைத்துச் செல்வார் என்பது உறுதி” என்பது தெளிவாக புலப்படுகிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபி. 24:14-16)
“கண்ணுக்குக் கண்' “பல்லுக்குப் பல்' என்று வாழ்ந்த யூதர்களுக்கு, “எதிரியை அன்பு செய்” 'கீழ்ப்படுதலின் வழி மீட்பு”, “துன்பத்தின் வழி இன்பம்' என்ற அன்றாட வாழ்க்கையின் அனுபவங்கள் முரண்பாடாகத் தெரிந்தது. இந்த நற்செய்தியை ஏற்று கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் யூதக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். யூதக்கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மீது தீராத தாகம் கொண்டிருந்தாலும், பல்வேறு தீயசக்திகளின் ஆக்கிரமிப்பால், அவ்வப்போது நம்பிக்கையிழந்து தங்களது விசுவாசத்தில் தளர்ச்சி அடைந்தார்கள். இச்சூழலில்தான் எபிரேயருக்கு எழுதிய திருமுகம் தரப்படுகிறது. விசுவாசத்தில் முன்மாதிரிகள் பலர் மேற்கோள் காட்டப்படுகின்றனர்.
குறிப்பாக இன்றைய இரண்டாம் வாசகத்தில், தலைமைக்குருவான இயேசு எல்லாவற்றிற்க்கும் மேலானவர். இருப்பினும் நாம் வாழ்வு பெறும் பொருட்டு அவர் எல்லா துன்பங்களையும், துயரங்களையும் ஏற்றுக்கொண்டார். “துன்பங்களின் வழி ஆறுதல்” தரும் ஆண்டவர் நம் தலைமைக்குருவாம் இயேசு. எவ்வளவுதான் துன்பம் அனுபவித்தாலும், தன் தந்தைக்கு விசுவாசமுள்ளவராக விளங்குகிறார். இதைப்போல நாமும் துன்பத்தின் மத்தியிலும் நம்பிக்கை குன்றாமல் இருக்க கருத்தாயிருக்க வேண்டும்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மாற்கு 10:35-45)
உரோமையர்களின் ஆட்சிக் காலத்தில் பூதக்கிறிஸ்தவர்கள் பட்ட துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் அளவே கிடையாது. இத்ததைய சூழ்நிலையில் இயேசுவை ஏற்றுக் கொண்டு அவரை வாயார அறிக்கையிட்டவர்கள், நம்பிக்கையில் தளர்ந்து போவது எதார்தமாகியது. இத்ததையோரைத் தேற்றுவது ஒரு கட்டாயக் கடமையாகத் தென்பட்டது. இத்தகைய பின்னணியில் எழுதப்பட்டது தான் மாற்கு நற்செய்தி. இயேசு தனது சாவைப்பற்றி மூன்றாவது முறையாக (மாற்கு 10:32-34) அறிவித்தபின் இன்றைய நற்செய்தி வாசகப் பின்னணி (1035-45) நமக்குக் கொடுக்கப்படுகிறது. துன்பத்தை நாளும் பொழுதும் தியானித்து ஏற்றுக்கொள்ள தந்தையிடம் சக்தி கேட்க, சீடர்கள் வந்து அரசுரிமை கேட்கிறார்கள். இங்கு துன்பத்தை ஏற்றுக் கொள்வதே நான் தரும் அரசுரிமை என்று புது வாக்குக்கொடுக்கிறார்.
மறையுரை
சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் மெய்யியல் படித்துக் கொண்டிருந்த காலம் அது விடுமுறைக்காலங்களில் பங்குத்தள அனுபவத்திற்காகச் சென்றிருந்தேன். நல்ல பங்கு பாசமான மக்கள். அதிகம் படித்தவர்கள் முடிந்த அளவுக்கும் கற்றறிந்தவர்கள். விவசாயிகள். மீன்பிடித்தெழிலாளர்கள் என பலவகைப்பட்ட பங்கு மக்களை பார்க்க முடிந்தது. அப்படியாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே அந்த பங்குத்தந்தை சீரும் சிறப்புமாக பணியாற்றிக். கொண்டிருந்தார்.
ஒரு நாள் பலவற்றையும் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.. தீடிரென நான் கேட்டேன். “ஏன் Father என்னதான் இருந்தாலும் ஒரு மனிதன் எவ்வளவு துன்பங்களை அனுபவிக்க முடியும்? இதுக்கு என்னதான் முடிவு சாமி? இந்தக் கேள்வி அவருக்கு எட்டுச்சோ, இல்லையோ “பிரதர் நான் ஒன்று சொல்றேன், அத மனசுலயே வச்சிக்கோங்க” என்று ஆரம்பித்தார்.
“எங்க வீட்டுல நாங்க எட்டு பேர் ரொம்பக் கடினப்பட்ட குடும்பம். எங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் ஏதாவது வேலை செஞ்சாத்தான் எங்களுக்கு ஒரு வேளை சோறாவது கிடைக்கும். நிறைய நாள் சாப்பிட்டும், சாப்பிடாமலும் தூங்கியிருக்கேன். சாப்பாட்டுக்காக கண்ணீர்விட்டுக் கதறியிருக்கிறேன். நான்பட்ட துன்பங்கள்கூட எனக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால் எனக்கு பிறகு ஒரு தங்கச்சியும் தம்பியும் இருக்காங்க. அவங்கள நினைச்சாத்தான் இன்னும் எனக்கு வருத்தமா இருக்கு! ஏன்ண வசந்தாமேரி என்ற ஒரு தங்கச்சியும் இருக்காங்க. அவங்கள நினைச்சா தான் இன்னும் எனக்கு வருத்தமா இருக்கு! ஏன்னா, வசந்தா மேரி என்ற என் தங்கச்சி பிறவியிலேயே இரண்டு கால்களும் முடமாகிப் பிறந்தவள். இது மட்டுமல்ல. என் தம்பி அந்தோணி கூட காதும் கேட்காதவன், பார்வையும் இல்லாதவன் எனக்கு இருந்த ஒரு அண்ணனும், அக்காவும் திருமணமாகி தனிக்குடித்தனம் போன: வர்கள் தான். திரும்பி செத்தார்களா? பிழைச்சாங்களான்னு கூட கேட்கவரவில்லை” என்று சொன்னவர். தொடர்ந்தார், துன்பங்கள் ஆயிரம், ஆயிரம் ஆனால் நாம் எப்படி ஏற்றுக் கொள்கிறோம் என்பது தான் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு அடங்கியிருக்கிறது. இதைதான் இன்றைய முதல் வாசகமாகிய எசாயா 53:10-11 இறை- வார்த்தைகளில் வாசிக்கிறோம்.
வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை
வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை (9)
நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர் சுமந்தார் (11ஆ)
அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும்
ஆண்டவர் திருவுனம் கொண்டார் (10)
இத்தகைய துன்ப துயரங்களையெல்லாம் ஏற்று பொறுமை- யோடு ஆண்டவருக்கு பிரமாணிக்கமாக வாழ்ந்ததால் ஆண்டவர் செல்கிறார்:
“அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார் நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார் அதனால் நான் அவருக்கு. மதிப்புமிக்கவரிடையே சிறப்பளிப்பேன்” (எசா. 53:11-12).
துன்பமில்லாத வழ்க்கையே இல்லை, ஏனென்றால் நாம் அனைவரும் நமது விருப்பு வெறுப்புகளின் படி வாழக் கற்றுக் கொண்டு விட்டோம். இதையும் கடவுள் ஏற்றுக் கொண்டு “நீ இதை விரும்புகின்றாயா? சரி எடுத்துக் கொள்; உன் விருப்பப்படி ஆகக்கடவது” என்று கொடுக்கிறார். ஆனால் நமது சுயநல எண்ணங்களால் நாம் நமது பொறுப்புணர்வை இழந்து போய்விடுகிறோம். இங்கு தான் தேவையற்ற சிறு சிறு துன்பங்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. இருப்பினும் இத்தகைய துன்பங்களை நாம் ஏற்று வாழ்ந்தோமென்றால் அதிலும் ஆண்டவர் நம்மை நிறைவாக ஆசிர்வதிப்பதை பார்க்க முடியும். ஆபிரகாம் தொடங்கி திருவெளிபாடு எழுதிய யோவான் வரை எல்லாருமே துன்பங்களை மனமுவந்து ஏற்று ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்து வாழ்ந்தார்கள்!
1.அந்த சமுதாயத்தில் 90 வயதுவரை குழந்தை இல்லாமல் துன்பப்படுவது என்பது மிகவும் கொடூரமானது; இழிவானது. அதுவும் கூட 90 வயதுக்கு பிறகு குழந்தை பாக்கியம் கிடைப்பது என்பது அதைவிட கொடூரமானது. இருப்பினும் ஆண்டவருக்காய் ஏற்றுக் கொண்டார்கள். ஆபிரகாம் - சாராள் தம்பதியினர்.
2.யோசேப்பு, தண் கூடப்பிறந்த சகோதரர்களாலேயே கைவிடப்பட்டார்; ஆள்கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்டு. அனாதையாக கிடந்தார்; ஊரும் பேரும் தெரியாத நாட்டிற்கு விற்கப்பட்டு படாத துன்பங்கள் பட்டார். ஆனால் இத்தனை: மையும் ஏற்றுக் கொண்டதால் இறைவன் கொடுத்த பரிசு - அரண்மனை - அதிகாரி?
3. பெண்மணியைச் சான்று காட்ட வேண்டுமா? கணவனை இழந்தார். கணவன் இறந்து விட்டாரே என்று நினைத்து, இருந்த. இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்கிறார். நகோமி அந்தத் தாய்! இரண்டு மகனும் இறந்து போகிறார்கள். ஒரு மருமகள் (ஓர்பா) தன் அப்பா வீட்டுக்கு சென்று விடுகிறார். ஆனால் மருமகள் (ரூத்து) எந்த சூழ்நிலை வந்தாலும், “நான் உம் கூடவே இருப்பேன் என்று சொல்லி வேதனைகளையும் பொறுத்துக் கொண்டு தன் மாமியாரைக் காப்பாற்றுகிறாள்!”
இந்த மகா பாக்கியவான்களெல்லாம் நமக்கு நம் துன்ப வேளைகளில் முன் மாதிரி! நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்று கற்றுத் தருபவர்கள். ஏன் இன்னும் தெளிவாகவே இன்றைய நற்செய்தியில் இயேசுவான நம் ஆண்டவர் “நான் குடிக்கும் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? என்று கேட்கிறார். நாம் யாக்கோபு மற்றும் யோவானைப் போல “ஆம்” என்று சொல்ல முடியுமா?
குடும்பங்களில் வருமானம் மிகவும் குறைவாக இருக்கிறதா? கணவன் மனைவியரே உங்களிடையே சண்டை சச்சரவு வேண்டாம். இளைஞர்களே நீங்கள் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் நினைத்ததெல்லாம் நடக்கவில்லை என்று குழப்பமாக இருக்கிறதா? எல்லாவற்றையும் மனநிம்மதியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். பிள்ளைகளே, பள்ளிக் கூடத்தில் அதிகமான வீட்டுப்பாடம். அப்பா அம்மா தொந்தரவு, நண்பர்கள் புரியாத நிலை, என பிரச்சனைகள் ஆயிரம்! ஆண்டவரிடத்தில் ஓப்புக்கொடுங்கள். தினந்தோறும் அவரிடம் கொண்டுப்போய்ச் சேருங்கள். பிறகு அவர், உங்களை இந்த பாத்திரங்களிலுள்ள துன்பத் தண்ணீரைப் பருக ஆற்றல் தருவார்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
* துன்பங்களை ஏற்று பிரமாணிக்கமாய் வாழ்தல்.
* கடவுளின் திட்டத்தை தேர்ந்து தெளிந்து அதன்படி வாழ்தல்.
* இயேசுவைப்போன்று துணிவுடன் வாழக்கற்று கொள்ளல்.
* தலைவன் பணியாளனக வாழ்தல்.
* இழப்பதில் தான் பெறுகிறோம்.
பொதுக்காலம் - இருபத்தொன்பதம் ஞாயிறு ( முதல் வாசகம் : எசா. .53 : 10 - 11)
“துன்புறும் ஊழியனைப் பற்றி ' எசாயா 4 பாடல்கள் பாடியுள்ளார் (காண்: 42 : 4-4; 49 : 1-6; 50 : 4-9; 52: 13-53 : 12). இவற்றிலே நான்காவது பாடலின் ஒரு பகுதி இன்றைய வாசகமாயமைகிறது. இத்துன்புறும் ஊழியன் யார் என்பது பற்றிப் பல கருத்துக்கள் நிலவுகின்றன. எசாயா காலத்திலேயே, குறிப்பிட்ட ஒரு நபரை (2 ம் எசாயா எனப்படுபவர்) இது குறிக்கலாம். எனினும், “பலருடைய (அனைவருடைய) மீட்புக்காகவும் தன் உயிரையே தந்த (மாற்.10 : 45) இயேசுவைச் சுட்டும் என்பதில் தவறேதும் இல்லை. மத்தேயுவும் துன்புறும் ஊழியன் இயேசுவே என்று கூறுவதும் காணற்பாலது (மத்.12 ; 15 -21).
ஆண்டவரின் திட்டம்
“அவரை” வேதனையில் ஆழ்த்தி நொறுக்க ஆண்டவர் விரும்பினார் ' (53 : 10). ஆம், துன்பமும் துயரமும் இறைவன் திட்டத்திலே இடம் பெறுகின்றன. எனவே துன்பப்படும் எவனும் ஆண்டவரால் தண்டிக்கப் படுகிறான் என்று எண்ணுவது தவறு. “இவன் பார்வையற்றவனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா? இவன் பெற்றோர் செய்த பாவமா? என்று வினவியோருக்கு இயேசு தந்த பதில் “இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார் ' (யோ. 9 : 1-3) என்பதாகும். எனவே துன்பத்தின் வழி ஆண்டவர் திருவுளம் நிறைவேறுகிறது என்பதை நாம் உணர்ந்து, நம் வாழ்வில் வரும் இன்னல், இடைஞ்சல்கள், துன்ப துயரங்களை விரும்பி ஏற்று, அவை வழியாக இறைவனை மகிமைப்படுத்துவோம். துன்பங்களிலிருந்து விடுபட முயற்சியெடுக்கக் கூடாது என்பது அன்று; மாறாக, துன்பங்கள் வழியும் இறைத் திருவுளம் நம்மில் நிறைவேறுகிறது என்பதை நாம் உணர வேண்டும் என்பதே கருத்து.
துன்பம் வழி வாழ்வு : துன்பம் ஒரு புதிர்
“நான் ஏன் துன்பப்பட வேண்டும்? குற்றம் ஒன்றும் செய்யவில்லையே. நல்லவர்களுக்கு வாழ்வு இவ்வுலகில் இல்லையா? கடவுளுக்குக் கண்ணில்லையா?”' என்பதெல்லாம் துன்பக் குழுறல்களின் வெளிப்பாடு என்பதை உணர்வோம். நம்முடைய வாழ்விலும் இத்தகைய கேள்விகள் எழாமலில்லை.
எனினும், இறைத்திட்டத்திலே துன்புறும் ஊழியன் வேதனைப்படுவது தனக்காக அன்று, தன்னைப் பாவங்களில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக அன்று; ஆனால் பிறருக்காக , பிறர் தம் பாவங்களிருந்து விடுதலை பெறுவதற்காக என்பது உணரற்பாலது. “அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொண்டார் ', “பலருடைய பாவத்தைத் தாமே சுமந்து கொண்டு பாவிகளுக்காகப் பரிந்து பேசிணார் ' (53 : 11 - 12) என்பதன் மூலம் இக்கருத்து அப்பட்டமாக வெளிப்படுகிறது. கிறிஸ்துவும் “பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார் ' (மாற். 10 : 45) என்பார் மாற்கு.
கிறிஸ்துவின் வழியே கிறிஸ்தவனின் வழியுமாகும். “கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார் (1 பேது. 2 : 21 - 24). ஆம், சிலுவை வழியைத் தவிர வேறு வழியை அவர் நமக்குக் காண்பித்துச் செல்லவில்லை. “எமக்காக இறைவா, இடர்பட வந்தீர். ' நாங்களும் பிறருக்காக இடர்படப் பின்வாங்காத மனவுறுதியைத் தாரும் என்று வேண்டுவோம். “பாவிகளுக்காக அவர் பரிந்து பேசினார் ' (எசா 53 : 12). நாமும் நம்முடைய அன்றாட செபங்களிலே பாவிகள் மனம் திரும்ப வேண்டுவோம் . நம்முடைய துன்ப துயரங்கள் அனைத்தையும் பாவிகளின் மனமாற்றத்திற்காக ஒப்புக்கொடுப்போம்.
அவர் பாவிகளுள் ஒருவனாகத் கருதப்பட்டார். அவர் பாவிகளுக்காகப் பரிந்து பேசினார்.
இரண்டாம் வாசகம்: எபி. 4:14-16
நம்முடைய தலைமைக் குருவாகிய இயேசு இறைவன்பால் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்; அதே வேளையில் மனிதர் பால் அளவற்ற இரக்கம் மிகுந்தவர் (எபி. 2 : 17 - 18) என்பது எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் சாரமாகும். இன்றைய வாசகத்திலே கிறிஸ்து தலைமைக் குரு மனிதர் பால் காட்டும் அளவிறந்த இரக்கம் பற்றிக் கூறப்படுகிறது.
கிறிஸ்து தனிப்பெரும் தலைமைக் குரு
மனிதருக்கும் இறைவனுக்கும் இடையே நின்று இருவரையும் இணைக்கும் பாலம் குரு எனலாம். மனிதர்களுடைய வேண்டுதல் மன்றாட்டுக்களை இறைவனிடம் எடுத்துச் செல்வதும், இறைவனின் ஆசியையும் அருளையும் மனிதருக்குக் கொணர்வதும் இவரது பணி. எனவே தான் இவர் “இடையாளர் ' எனப்படுவார். கிறிஸ்துவோ இவ்இடையாளர்களுக்கு எல்லாம் தலைமையானவர். ““விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார் (எபி. 9 : 24). பழைய உடன்படிக்கையின் குருக்கள் முன்கூடாரத்திலும், தலைமைக் குரு பின் கூடாரத்திலும் ஆண்டுக்கு ஒரு முறை நுழைவது வழக்கம் (9 : 6 - 10). கிறிஸ்துவோ “முன்னதைவிட மேலானதும் நிறைவுள்ளதுமான கூடாரம் ஒன்றைக் கடந்து ஒரே முறையில் எக்காலத்திற்குமே தூயகத்தில் நுழைந்துவிட்டார் (9 : 1). எனவே இவரே தனிப்பெரும் தலைமைக்குரு. நமக்கு வாழ்வும் வளமும் மன்னிப்பும் மகிழ்வும் பெற்றுத்தரும் தலைமைக் குரு நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுமாறு வேண்டுவோம்.
கிறிஸ்து இரக்கம் மிகுந்த தலைமைக் குரு
பழைய உடன்படிக்கையின்படி தலைமைக் குரு தலைமுறை அட்டவணைப் படி, லேவியர் குலத்திலிருந்து வந்தவர். “சாதாரண இஸ்ரயேல் மக்களிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டவர். ஆனால் கிறிஸ்து தலைமைக் குருவோ நம்மோடு நாமானார். பாவம் தவிர மற்றனைத்திலும் நம்மில் ஒருவரானார். “தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் ' என்பது மரபு. நம்முடைய இழிநிலை, சோதனை, துன்பங்கள் அனைத்தையும் தனதாக ஏற்றார் கிறிஸ்து. இவை யாவும் அவர் ஏற்றது நமது ஈன நிலையை அறிந்து, நம்மோடு அவரும் துன்பப்பட்டு, அதன் வழி நம்மைத் துன்பத்திலிருந்து மீட்பதற்காக. "ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார் ' (எபி. 2 : 14). மனிதரைத் தன் “சகோதரர்கள் என்று ஏற்றுக்கொள்ளத் தயங்கவில்லை, எல்லாவற்றிலும் சகோதரர்களைப் போலானார் (காண் : எபி. 2:10 - 18). ஒன்றிலே மட்டும் அதாவது பாவத்தைப் பொ றுத்தமட்டிலும் அவர் நம்மிடமிருந்து வேறுபட்டார் (4 : 15). இவ்வாறு இயேசு தம் மக்களோடு இணைந்த நிலையிலே தன் தலைமைக் குருத்துவத்தை வாழ்ந்ததுபோல, நாமும் நம்முடைய குருத்துவ அழைப்பை (காண் : 1 பேது. 2 : 9; விப. 19 : 5 - 6) பிறருடைய துன்ப துயரங்களில் பங்குகொள்வதன் மூலம் வாழ்ந்து காட்ட வேண்டும். எங்கெல்லாம் துன்பம் துயரம், நோய் நோக்காடு, இன்னல் இடைஞ்சல், எளிமை ஏமாற்றம், தாழ்வு தனிமை, வேதனை வருத்தம் உளவோ, அங்கெல்லாம் நாமும் இருக்க வேண்டும். இதுவே நமது குருத்துவ அழைப்பு.
கிறிஸ்துவை அணுகி வேண்டுவோம்.
“வானங்களை எல்லாம் கடந்து: சென்ற ' கிறிஸ்து குரு (4 : 14) நமக்காக இறைவனிடம் பரிந்து பேசும் சக்தி வாய்ந்தவர். “கடவுளின் வலப்புறத்திலே அமர்ந்திருக்கும் அவர் ' (10 : 12) கடவுளிடம் வல்லமையுள்ளவர். “நமக்காகப் பரிந்து பேசுவதற்கெனவே என்றும் வாழ்கிறார் (7 : 25). நாம் எத்தகைய பாவச்சேற்றில் அமிழ்ந்துவிடினும் “* தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார் (1யோ. 2 : 1) என்ற ஆம்ந்த நம்பிக்கையோடு அவரைத் துணிவுடன் அணுகிச் செல்வோம். “'கனித்துணை நீ நிற்க யான் தருக்கித் தலையால் நடந்த வினைத் துணையேனை விடுதி கண்டாய் (திருவா. நீத்தல் விண்ணப்பம்)
அவர் நம்மைப்பால் ஒருவர். தக்கவேளையில் உதவக்கூடிய இயேசு குரு
நற்செய்தி மாற்கு: 10:35-45
இயேசு பன்னிரண்டு திருத்தூதர்களை அழைத்தார். அவர்களில் இருவர் யாக்கோபும், யோவானும் (1, 19 - 20). இவர்கள் நமதாண்டவருடன் 3 ஆண்டுகள் தங்கி, அவரது போதனையைக் கேட்டும், எல்லா மனிதர்களிடமும் காணப்படும் போட்டி, பொறாமை, பதவிஆசை என்ற பலவீனங்கள் இவர்களிடமும் காணப்பட்டன. இவற்றைத் திருத்தும் வகையில் அமைந்ததே இன்றைய நற்செய்தி.
தாழ்விலே தான் உயர்வு
யோவானும் யாக்கோபும் தாமே நேரில் இயேசுவிடம் பதவி கேட்டதாக மாற்கு குறிப்பிடுகிறார். ஆனால் மத்தேயு இவர்களின் தாய் சலோமி தன் மக்களுக்காக மன்றாடியதாகக் கூறுகிறார் (20 : 20 - 23). தன் சக திருத்தூதர்களின் பலவீனத்தை அம்பலப்படுத்த விரும்பாததால் மத்தேயு இப்படிக் கூறியிருக்க வேண்டும். திருத்தூதர்கள் புனிதர்களாகப் பிறக்காதது மட்டுமன்று, ஆண்டவருடன் வாழ்ந்த காலத்திலும் உலக கண்ணோட்டமும், உள்ளப் பேராசையும் நிறைந்தவராகவே வாழ்ந்தனர் என்பதற்கு இந்நிகழ்ச்சி சான்று. “நீர் மாட்சிமையில் வீற்றிருக்கும் பொழுது எங்களில் ஒருவர் வலப்பக்கமும், மற்றவர் இடப் பக்கமுமாய் அமர அருள் புரியும்" என வேண்டினர் (10 : 32). அப்பொழுது நமதாண்டவர் தான் குடிக்கும் கிண்ணத்தையும், தான் பெறவிருக்கும் திருமுழுக்கையும் குறிப்பிட்டு அதில் பங்கு பெறும் திடமனது உண்டா எனக் கேட்கிறார். மனித உருவிலே இறைவன் வந்தது பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு அன்று. தன்னையே அழித்துக் கொள்வதன் வழியாக மக்களுக்கு மீட்பு வழங்கவே ஆகும். அவர் தந்தையின் பிரிய மகன் (மாற். 1 : 11) ; அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதே இவரது வாழ்வின் குறிக்கோள். இக்குறிக்கோள் கல்வாரியில் தான் முற்றுப்பெறும். தான் இறைவன் திருச்சித்தத்திற்குப் பணிந்து நடப்பதுபோல, தன் சீடர்களும் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
பேரன்பு செய்தாரில் யாவரேஈ பெருந்துயர் எய்தா நின்றார்? (பாரதியார்!)
பணியே பலி
கிண்ணம் இறைவனது கோபத்தையும் தண்டனையையும் குறிக்கும் (எரே. 25 :15,17). எனவே தான் துன்பங்கள், பாடுகளின் சின்னமாக கருதப்பட்டது (எசா. 51 : 17 - 23; எசே. 23, 31 - 33). இதே பொருளில் தான் இயேசு இக்கிண்ணத்தை கெத்சமனித் தோட்டத்தில் கண்டார் (மாற். 14 : 23). நான் பெறவிருக்கும் திருமுழுக்கு என்பதும் நமதாண்டவர் படவிருக்கும் பாடுகளையும் மரணத்தையும் குறிக்கும். எனவே இயேசுவின் சீடனாக இருக்க விரும்புபவன், அவரது மரணத்திலும் பங்குகொள்ள விரும்புபவனாய் இருக்கவேண்டும். இந்த இரு திருத்தூதர்களிடம் தொடக்க நிலையில் உலகப் போக்குத் தென்பட்டாலும், அவர்கள் நாளடைவில் தெளிவு பெற்று இயேசுவுக்காக வேதனைகள் அனுபவித்து அவரது பாடுகளிலே பங்கு பெற்றனர்.
தங்களுக்கெனத் தனியிடம் வேண்டிய இந்த இரு திருத்தூதர்களைக் கண்டு ஏனைய சீடர்கள் பொறாமைப்பட்டனர். இவர்களுக்குப் பாடம் கற்பிக்கிறார் இயேசு. ஆள்பலம், அதிகார பலம் என்ற அடிப்படையில்தான் உலகம் ஒருவனை எடை போடுகின்றது. “பிறவினத்தாரிடையே தலைவர்கள் ஆளுகின்றனர்; உங்களுள் எவன் பெரியவனாக இருக்க விரும்புகிறானோ அவன் பணியாளனாய் இருக்கட்டும்” (10 : 44). மற்ற உயிர்களைத் தனது பணிக்காகப் பயன் படுத்துவதைவிட, தனது சேவையால் மற்றவர்கள் பயன் அடைய வேண்டும். முதன்மை பெற விரும்புபவன் பணியாளனாகட்டும். இறுதி இராவுணவு வேளையில் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுவதின் வழியாக இயேசு தன் போதனையைச் சாதனையாக்கினார். ஒவ்வொரு கிறிஸ்தவனும் திருமுழுக்கின் வழியாக இயேசுவின் மரணத்திலும் உயிர்ப்பிலும் பங்கு கொள்கிறான். இதைச் செயலில் காட்டுகின்றோமா? அவரைப்போல் பணி வாழ்வு, பலி வாழ்வு வாழ்கின்றோமா? இறை அரசைப் பரப்புவதில் என் பங்கென்ன? என் கடன் பணி செய்து கிடப்பது தானா?
மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவே வந்தார்.
அரியணை ஏறுவதா? அருகில் சென்று பணிபுரிவதா?
நீட் தேர்வைக் குறித்து பல கலந்துரையாடல்கள் நம் சமூகத்தில் அரங்கேறு கொண்டிருக்கின்றன. நீட்டின் எண்ணம் மிக நீண்ட தொலைவில் இல்லையென்றாலும் நீடித்த கொள்கைப் பிடிப்புடன் நீட் வேண்டாமென்று பலரும் போர்க்கொடி உயர்த்தி நிற்கும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட நிலையில் பள்ளிப்படிப்பை முடித்த பல மாணவ, மாணவியர் தங்களை இந்த நுழைவுத்தேர்வுக்கு தகுதியுள்ளவராக மாற்றிட பயிற்சியெடுத்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பணம் படைத்தோர் உயர்ந்த நிறுவனத்தில் படித்து நீட்டில் வெற்றி பெறுகின்றனர். ஆனால் ஏழை எளிய மாணாக்கரோ என்ன செய்வதென்று விழிபிதுங்கி நிற்கும் அவலமும் அரங்கேறுகிறது. இத்தகு தருணத்தில் நம் கண்களைச் சற்று அகல விரித்தால் நம் விழிகளில் விழுந்து விடுகிறது 'ஆற்றுப்படை' என்ற அறக்கட்டளை. இளைஞர்களின் சக்தி, உலகத்தின் மாபெரும் சக்தி என்பதை உணர செய்து வருகின்றனர் நம்மில் பல இளைஞர்கள். அந்த வரிசையில் சென்னையில் உள்ள பெல்லோ சிட்டிசன் பவுண்டேஷன் பல இளைஞர்களை ஊக்குவித்து தன் பணியை ஆற்றி வருகிறது. இந்த நிறுவனம் துடிப்புமிக்க செயல்திறனுடன், திறமையாக உள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு பெரும் பணியைச் செய்து வருகின்றனர். அவ்வாறாக, நீட் தேர்வுக்கென்று ஆன்லைன் மூலமாக பயிற்சி அளித்துக்கொண்டிருந்த கார்த்தி;க்கேயன் என்னும் இளைஞனை இந்த குழுமம் அடையாளம் கண்டது. அவர்கள் ஒரு குழுவாக இணைந்து இப்போது ஏழை எளிய மாணவர்களுக்கு தங்களால்; முடிந்தவரை ஆன்லைன் வகுப்பின் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சியளித்து வருகின்றார். 'ஆற்றுப்படை' என்ற அறக்கட்டளையின் வழியாக கார்த்திக்கேயனும், பெர்சி மேரி வர்க்கீசும் தற்போது சென்னையில் மாணாக்கருக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர். இவர்களின் இந்த வியத்தகு பணியானது அரியணையில் நிற்பது என்பதற்கல்ல. மாறாக, முடியாதவர்களின் அருகில் சென்று முடிந்தவரை ஏன் இயலாத சூழலில்கூட பணியாற்றுவதன் அடையாளம். ஆகவே பெல்லோ சிட்டிசன் பவுண்டேசன் மூலம் உதித்த ஆற்றுப்படை அறக்கட்டளை அரியணையில் ஏறுவதைக் காட்டிலும், அருகில் சென்று பணிபுரிகிறது என்பதே உண்மை!
இறைஇயேசுவில் இனியவர்களே!
இன்றைய இறைவாக்கு வழிபாடானது மிக அழகான ஒரு செய்தியை வலியுறுத்தி நிற்கிறது. இறைவன் விரும்புவது அரியணை ஏற்பதையா? அல்லது அருகில் சென்று பணிபுரிவதா? என்பதை மிகத் தெளிவாக எண்பித்துகாட்டுகிறது இயேசுவின் வாழ்க்கை. இயேசு தன்னுடைய பணிவாழ்வு யாருhக்கானது. அவரின் இலக்கு மக்கள் யார்? எத்தகைய பணியைச் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையெல்லாம் தெளிவாக தன் வாழ்வில் எடுத்துரைத்தார் (லூக் 4:18-19). அதுமட்டுமல்லாமல் தான் எத்தகைய வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுத்து பயணிக்க தந்தை என்னை அனுப்பியிருக்கிறார் என்பதையும் அவ்வப்போது சொல்லாமல் இல்லை. தன்னுடைய வாழ்வு எருசலேமில் சிலுவையில் உயிர்த்துறந்து, உயிர்த்தெழுவது என்கிற ஆழமான சிந்தனையை அடிக்கடி சீடர்களிடத்தில் உச்சரித்து சில நேரங்களில் அவர்கள் உணர்வற்றவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை எச்சரித்து இருக்கிறார். அதற்கு சிறந்த உதாரணமாக இன்றைய நாள் நற்செய்தி அமைந்துள்ளது. இயேசுவின் வாழ்வில் நான்கு வார்த்தைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தன.
பயணம்
துன்பம்
பணிபுரிதல்
நற்செய்தி அறிவித்தல்
இந்த நான்கின் அடிப்படையில்தான் இயேசு தன் சீடர்களுக்கு பலவற்றைக் கற்றுக்கொடுத்தார்.
அரசர்களின் பயணம் அடுத்தவர்களுக்கானது அல்ல தங்களுக்கானது. ஆனால் இயேசுவின் ஒவ்வொரு பயணமும் அடுத்தவர்களுக்கானது.
அரசர்களின் வாழ்வு இன்பத்தில் திளைத்து நிற்பதற்கானது. ஆனால் இயேசுவின் வாழ்வோ துன்பத்தில் நுழைந்து நிற்பதற்கானது.
அரசர்களின் வாழ்வு அனைத்தும் பணிவிடை பெறுவதிலே குறியாய் இருந்தன. இயேசுவின் வாழ்வு முழுவதும் பணிபுரிவதிலேயே கரைந்துபோயின.
அரசர்கள் கட்டளைகளைப் பிறப்பித்து, கால்மேல் கால் போட்டு அறிவிப்பார்கள். ஆனால் இயேசுவோ காலார நடந்து நற்செய்தியை அறிவித்தார்.
இயேசு என்னவோ மாபெரும் அரசர்தான். ஆனால் மனிதநேயமிக்க அரசர். மனிதர்களுக்காக தன் உயிரை இழக்கத் துணிந்த அரசன். அத்தகைய அரசனின் வாழ்வெல்லாம் கட்டிவைப்பு, அடிப்பு, இறப்பு, உயிர்ப்பு இவற்றைப் பொருத்தது. இதை உணர வழியில்லாமல் உணர்ச்சிவயப்பட்டு உரக்க கேட்கின்றனர் செபதேயுவின் மக்கள் யாக்கோபும், யோவானும். என்னக் கேட்கிறார்கள்: வலப்புறம் மற்றும் இடப்புறம் அரியணையில் அமரும் உரிமை. இயேசுவின் பதிலோ – நான் பருகும் துன்பக் கிண்ணத்திலும், பெறும் திருமுழுக்கிலும் பங்கேற்பீர்கள். ஆனால் அரியணையை வழங்குவது என் தந்தையின் விருப்பம் என்று நிறைவு செய்கிறார். மற்ற சீடர்கள் கோபம் கொள்கிறார்கள்.
இங்கு நமக்கான பாடமாக இயேசு சொல்ல விரும்புவது என்ன என்பதை சிந்தித்து பார்ப்போம். இயேசு அரியணைக்கு ஆசைப்பட்ட மனிதர் கிடையாது. காரணம் இரண்டு:
மாட்சிமிகு அரியணை அவருக்கு ஏற்கெனவே தந்தையால் கொடுக்கப்பட்டிருக்கிறது (லூக் 1:32), (பிலி 2:6-11). ஆனால் அவர் அதை வலிந்து பற்றிக்கொண்டிருக்கவில்லை.
தன் பணிவாழ்வின் வழியாக மக்கள் மனமென்னும் அரியணையில் இயேசு அமர்ந்துவிட்டார்.
தன்னைப் போன்று தம் சீடர்களும் இருக்க வேண்டுமென்று இயேசு நினைத்தார். அவரின் நினைப்பு இங்கு மாற்றுச்சிந்தனைக்குட்பட்டதை எண்ணி மிக ஆழமான படிப்பினைகளைத் தம் சீடர்களிடம் கூறுகிறார்:
தலைவர்கள் அடக்கி ஆளுகிறார்கள் - நீங்கள் அன்புச் செய்யுங்கள்
அதிகாரம் கொள்கிறார்கள் - நீங்கள் ஆளுமைகளை உருவாக்குங்கள்
பெரியவராக இருக்க ஆசைப்படாதீர்கள் - நீங்கள் தொண்டராய் இருங்கள்
முதன்மையானவராய் இருக்காதீர்கள் - பணியாளராக இருங்கள்
தொண்டு ஏற்பவராக அல்ல – நீங்கள் தொண்டு புரிபவராக இருங்கள்
உயிரை எடுப்பவராக அல்ல – பலருடைய மீட்பிற்காய் உயிரைக் கொடுப்பவராய் இருங்கள்
இவையெல்லாம் இயேசு வெறும் வார்த்தையில் சொல்லவில்லை. மாறாக, இன்று வாசிக்க கேட்கும் முதல் மற்றும் இரண்டாம் வாசகத்தின் அடிப்படையில் கற்றுக்கொடுக்கிறார். அரியணை ஏற்பதில் ஆர்வம் கொள்ளாமல், அருகில் சென்று பணிபுரிய விரும்புவதே உண்மையான சீடத்துவ வாழ்வு. அதை பிரமாணிக்கத்தோடு ஆற்றிட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே அதற்கான வழியையும் நமக்கு காட்டுகிறார்.
எவ்வாறு அரியணையைத் தவிர்த்து, அருகில் செல்வது:
முதல் வாசகத்தின் அடிப்படையில், இயேசுவைப் போன்று துன்பத்தை ஏற்க துணிந்தால், நாமும் அரியணை தவிர்த்து அருகில் சென்று பணிபுரியலாம். அவர்களின் பணி எப்படியிருக்குமென்றால்,
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதாய் அமையும்
நேர்மையானதாய் இருக்கும்
தீச்செயல்களைப் பிறருக்காய் சுமப்பதாய் உருவாகும்
நீடு வாழ்வதாய் உதிக்கும்
பிறருக்காய் தன்னை இழப்பதாய் அமையும்
எவ்வாறு அரியணைத் தவிர்த்து, பணிபுரிவது:
இரண்டாம் வாசகத்தின் அடிப்படையில், இயேசுவின் சீடத்துவ வாழ்வில் பங்கேற்கும் நாம், பின்வரும் சிந்தனைகளை உள்வாங்கினால் அரியணை தவிர்த்து, பணிபுரிய முடியும்.
இயேசுவின் போதனையை விடாமல் பற்ற வேண்டும்
இறைஇரக்கத்தை நாட வேண்டும்
இறையருளைக் கண்டடைய வேண்டும்
இறைமன்னிப்பை பாவத்தால் புறக்கணிக்காமல் இருக்க வேண்டும்
இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச்செல்ல வேண்டும்
இவற்றையெல்லாம் நாம் செய்கையில் நிச்சயமாய் இறைவிருப்பத்தை நம்மில் நிறைவேற்றும் அன்பர்களாய் வாழ்வோம். அத்தகைய வரத்தை வேண்டி செபிப்போம்.
நம்முடைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்து இருக்கின்ற ஆயர் மாமன்ற (2021-2023) சிந்தனைகள்கூட அரியணை ஏற்பதை காட்டிலும், அருகில் சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகளே என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆயர் மாமன்றத்தின் மூன்று வார்த்தைகள் அருகில் சென்று பணிபுரிவதன் அடையாளங்களே – தோழமை, பங்கேற்பு, பணி (communion, participation, mission)
எனவே நாமும் இறைவனின் துணையோடு தோழமையுணர்வுடன், பங்கேற்பு மனநிலையோடு, பணி செய்திடவும், பரமன் இயேசுவின் சீடத்துவ வாழ்வில் நம்மை இணைத்துகொள்ளவும் அருள்வேண்டுவோம். அரியணையைத் தவிர்த்து அருகில் சென்று பணிபுரிவோம்!