மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு மறையுரை
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
2அரசர்கள் 6:14-17 | 2திமோத்தேயு 2:8-13 | லூக்கா 17:11-19

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



அமெரிக்கா ஜனாதிபதியாக ஆகுமுன் ஆப்ரகாம் லிங்கன் ஒரு தடவை உணவருந்த ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருந்தார். உணவு அருந்தியபின், உணவுக்கு உரிய பணத்தை சர்வரிடம் கொடுத்து, உன் அன்பான சேவைக்கு நன்றி' என்று சொன்னார். அந்தப் பணியாளர் உள்ளத்தில் பெருமகிழ்ச்சியோடு, 'ஐயா! நான் இந்த உணவு விடுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். இங்கு வரும் ஒவ்வொருவரையும் அன்போடு உபசரித்துள்ளேன். ஆனால் நீங்கள் மட்டும்தான் அன்பாகப் பேசி, எனக்கு நன்றி சொன்னீர்கள். உங்களை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன்' என்றான். மறு ஆண்டே ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நன்றியுள்ளவர்கள் அனைவராலும் போற்றப் படுவார்கள்! எல்லா பண்புகளுக்கும் தாயாக இருப்பது நன்றிதான் என சீசர் கூறுகிறார். எத்தகைய குற்றங்களுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் செய் நன்றி மறந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்கிறார் திருவள்ளுவர்.

இறைவாக்கினர் எலிசா சீரியா நாட்டு நாமான் என்பவனைக் குணமாக்குகிறார். நாமான் திரும்பி வந்து நன்றி கூறி, அன்பளிப்பு வழங்குகிறார். ஆனால் எலிசா அன்பளிப்பை வாங்க மறுத்தபோது, இஸ்ரயேலின் கடவுள் ஒருவரே உண்மையான கடவுள், (2 அர. 5:15) என்று அறிக்கையிடுகிறார் நாமான். இவர் ஒரு யூதரல்லாத பிறவினத்தைச் சேர்ந்தவர் (முதல் வாசகம்).

இன்று வாசித்த நற்செய்தியிலே, இயேசு பத்து தொழு நோயாளிகளைக் குணமாக்குகிறார். குணம் பெற்றவர்களில் யூதரல்லாத சமாரியன் மட்டும் திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி சொல்லுகிறான். "ஆனால் பத்து பேர் குணமாகவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? (லூக். 17:17-18) கடவுளைப் போற்றிப் புகழ, இந்த அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பி வரக்காணோமே” என்கிறார் இயேசு (மூன்றாம் வாசகம்). இன்று கூட கிறிஸ்தவ திருத்தலங்களுக்குப், பிற சமயத்தவர்தான் நன்றி உணர்வோடு அதிகமாகக் காணிக்கை செலுத்த வருகிறார்கள்.

நாம் கடவுளுக்குப் புகழுரையும், நன்றியும் செலுத்த வேண்டும் என்பதற்கு நம் ஆண்டவர் இயேசுவும், அன்னை மரியாவும் நமக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர். இலாசரை உயிர்பிக்கும் முன்பாகக் கடவுளுக்கு நன்றி கூறுகிறார் இயேசு (யோவா. 11:41). இறுதி உணவின்போது அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி கூறித்தான் தன் உடலாக, இரத்தமாக மாற்றுகிறார் (லூக். 22:19).

எடுத்துக் கடவுளுக்கும் ஆண்டவரைப் போற்றிப் பெருமைப் படுத்துகிறது. என் மீட்பராம் கடவுளை நினைத்து என் மனம் பேருவகை கொள்ளுகிறது” (லூக். 1:46-47) என்று அன்னை மரியா புகழ்ச்சிப் பாடல் இசைக்கிறார். திருப்பாடல் ஆசிரியர் பாடிய 150 பாடல்களில், பாதிக்கு மேல் நன்றியும், புகழ்ச்சியும் கலந்த கீதங்கள் அல்லவா.

அன்பார்ந்தவர்களே, கடவுளைப் போற்றுவது இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும் நாம் கடவுளைப் புகழக் கற்றுக்கொள்ள வேண்டும். துன்பம் வந்தால் கடவுள் தான் காரணம் என்று திட்டுகிறோம். நல்லது நடந்தால் கடவுள் காணாமற்போய் விடுகிறார்! ஒரு தாய் தன் பச்சிளங் குழந்தையோடு தூங்கிக் கொண்டிருந்தபோது கருந்தேள் ஒன்று அந்தத் தாயைக் கொட்ட வேதனையால் துடி துடித்தாள். ஆனால் இந்த வேதனையிலும், என் குழந்தையைக் கொட்டாமல், என்னைக் கொட்டியதற்காக, இறைவா! உமக்கு நன்றி என்றாள். இந்த மனநிலைதான் இன்று நமக்குத் தேவை என்பதை உணருவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு


சிலருக்கு ஆடுவது பிடிக்கும்!
சிலருக்குப் பாடுவது பிடிக்கும்!
சிலருக்கு உண்பது பிடிக்கும்!
சிலருக்கு உடுத்துவது பிடிக்கும்!
சிலருக்கு உறங்குவது பிடிக்கும்!
சிலருக்கு முத்தமிழ் பிடிக்கும்!
சிலருக்கு முக்கனி பிடிக்கும்!

இயேசுவுக்கு என்ன பிடிக்கும்? என்பதை இன்றைய நற்செய்தி சுட்டிக்காட்டுகின்றது. இயேசுவுக்கு நன்றி பிடிக்கும் (லூக் 17:16), புகழ்ச்சி பிடிக்கும் (லூக் 17:18). இவ்வாறு இயேசு நன்றியையும், புகழ்ச்சியையும் நம்மிடமிருந்து எதிர்ப்பார்ப்பதற்குக் காரணம் உண்டு! நன்றி சொல்பவர்களையும், தன்னைப் புகழ்கின்றவர்களையும் கடவுள் வரலாற்றிலே வாழ்வாங்கு வாழவைத்திருக்கின்றார். நாம் இறைவனிடமிருந்து எழில்மிகு வரங்களைப் பெற்று, வளமுடன் வாழ, இறைவனுக்கு நன்றி சொல்லி வாழ, இறைவனைப் புகழ்ந்து வாழ இயேசு நம்மை அழைக்கின்றார்.

பழைய ஏற்பாட்டில் செங்கடலைக் கடந்த பிறகு மோசேயும், அவருடைய மக்களும் கடவுளுக்கு நன்றி சொல்லி, அவரைப் புகழ்ந்து பாடினர் (விப 15:1-21). அவ்வாறு நன்றி சொன்ன, புகழ்ந்த மோசேயைக் கடவுள் வரலாற்றிலே உயர்த்தி வளமுடன் வாழவைத்தார். புதிய ஏற்பாட்டிலே திருச்சபையின் ஆரம்பகாலத்திலே வாழ்ந்த கிறிஸ்தவர்கள் நடுவிலே இல்லை என்ற சொல்லே இல்லாமல் இறைவன் பார்த்துக்கொண்டார். காரணம் அவர்கள் ஒவ்வொரு நாளும் அப்பத்தைப் பிட்டு, கடவுளைப் போற்றி வந்தார்கள் (திப 2:46-47).

இறைவனிடமிருந்து நாம் பெற்ற நன்மைகளை நினைத்துப்பார்த்தால் அங்கே நன்றி மன்றாட்டுப் பிறக்கும். இறைவனுடைய இணையில்லா அன்பையும், ஆற்றலையும் நினைத்துப் பார்த்தால் அங்கே புகழ்ச்சி மன்றாட்டு பிறக்கும். இந்த இருவகையான மன்றாட்டுக்களுக்கும் தாயாக விளங்குவது நம்பிக்கை. இறைவன் ஒருவர் இருக்கின்றார். அவர் அன்பே உருவானவர். அவர் ஆற்றல் மிக்கவர். அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளாத எதுவும் என்னிடமில்லை என்று சொல்லி, சொல்வதை வாழ்ந்து காட்ட விரும்புகின்றவர்கள் மட்டுமே இறைவனுக்கு நன்றி சொல்வர். இறைவனைப் புகழ்வர்.

நன்றி சொல்பவர்களும், புகழ்கின்றவர்களும் கடவுளை நம்பி வாழ்வதால், அவரை நம்புகின்றவர்களை இறைவன் கைவிடுவதில்லை. இதனால் தான் புனித பவுலடிகளார், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் (எபே 5:20) என்றும், எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள் (1 தெச 5:18) என்றும் கூறுகின்றார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம், எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக (எபி 13:15அ) எனக் கூறுகின்றது.

ஒரு சின்ன சந்தேகம்! நமக்கு ஏற்படும் இழப்புகளுக்காகக் கூட கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? இந்தக் கேள்விக்கு ஒரு வாக்கியக் கதை ஒன்று பதில் சொல்லும். இதோ அந்தக் கதை : தவமிருந்து பெற்ற தன் முதல் குழந்தை இறந்தாலும் அந்தப் பெண் தனக்குத் தாய்மையை அளித்த கடவுளுக்கு நன்றி சொன்னாள்.

நம்மை ஒருபோதும் மறுதலிக்க விரும்பாத (2 திமொ 2:13) இறைவனுக்கு இன்ப நேரத்தில், நலம் பெற்ற நாமானைப் போலவும், துன்பநேரத்தில் கதையில் வந்த பெண்ணைப் போலவும் நன்றி கலந்த புகழ்ச்சி மன்றாட்டை சமர்ப்பித்து அவரின் நிறையாசிகளைப் பெற்று நாளும் வளமுடன் வாழ்வோம்.

மேலும் அறிவோம் :

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் (குறள் : 104).
பொருள் : நன்றி பாராட்டும் பண்புடையவர், பிறர் தமக்குச் சிறிதளவே உதவினாலும் அதனைப் பெருமை பொருந்திய பனையளவாகக் கருதிப் போற்றுவர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்

கடவுள் இரண்டு வானதூதர்களை வையகத்துக்கு அனுப்பினார். ஒரு வானதூதரை மக்களின் விண்ணப்பத்தையும், மற்றொரு வானதூதரை மக்களின் நன்றியறிதலையும் பெற்று வரும்படி கேட்டார். மக்களின் விண்ணப்பங்களையெல்லாம் சேகரித்த வானதூதர் அவற்றைப் பெரிய சாக்கு ஒன்றில் போட்டுச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு வந்தார். ஆனால் மக்களின் நன்றியறிதலைச் சேகரித்த வானதூதரோ அவற்றை ஒரு சிறிய பையில் போட்டுக் கொண்டுவந்தார். இக்கதை கூறும் செய்தி: கடவுளிடம் வரங்கள் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பலர்; பெற்ற வரங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துவோர் ஒரு சிலரே!

மனிதர் செய்யும் எத்தகைய பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு; ஆனால் செய்நன்றி மறந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்கிறார் வள்ளுவர். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு (குறள் 10)

இன்றைய முதல் வாசகத்தில், எலிசா என்ற இறைவாக்கினர் சீரிய நாட்டுத் தொழுநோயாளி நாமான் என்பவரைக் குணப்படுத்துகிறார். நாமான் எலிசாவுக்கு நன்றி செலுத்தும் வண்ணம் அவருக்கு அன்பளிப்பு வழங்குகின்றார். ஆனால் எலிசா அந்த அன்பளிப்பை வாங்க மறுத்தபோது, இஸ்ரயேலின் கடவுள் ஒருவரே உண்மையான கடவுள் என்று அறிக்கையிடுகிறார் நாமான். அவர் பிற இனத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து பத்துத் தொழுநோயாளிகளைக் குணப்படுத்துகிறார். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டும் கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகிறார். அவர் பிற இனத்தவர். கிறிஸ்து மிகவும் மனம் வருந்திக் கூறுகிறார்: "பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா! மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப்புகழ அன்னியராகிய உம்மைத்தவிர வேறு எவரும் திரும்பி வரக் காணோமே?” (லூக் 17: 17-18),

இன்றும்கூட கிறிஸ்தவத் திருத்தலங்களுக்கு வரும் பிற சமயத்தவர் தான் அதிகமாகக் காணிக்கை செலுத்துகின்றனர். கடவுளுக்கும் மாதாவுக்கும் நன்றியுள்ளவர்களாகத் திகழ்கின்றனர். ஓர் இந்து மனிதர் சகாய அன்னையிடம் விண்ணப்பித்து அவருக்கு வேலை கிடைத்தது; அவர் தனது முதல் மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாயையும் அப்படியே மாதாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார். அவரிடம் இருந்த நன்றி உணர்வு எத்தனைக் கிறிஸ்தவர்களிடம் இருக்கின்றது?

நமது புகழுரையும் நன்றியறிதலும் கடவுளுக்குத் தேவையில்லை. மாறாக, அவை நாம் மீட்படைய பயன்படுகின்றது. என்று திருச்சபை தனது திருவழிபாட்டில் எடுத்துரைக்கின்றது. (திருப்பலி, தொடக்கவுரைகள், பொது IV ).

நாம் கடவுளுக்குப் புகழுரையும் நன்றியும் செலுத்த வேண்டும் என்பதற்குக் கிறிஸ்து சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். விண்ணரசின் மறைபொருளை ஞானிகளுக்கு வெளிப்படுத்தாமல் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியதற்காகக் கடவுளைப் போற்றுகிறார் (லூக் 10:21). ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் முன் கடவுளைப் போற்றுகிறார் (மாற் 6:41). அவ்வாறே ஏழு அப்பங்களைக் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளிக்கு முன் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார் (மாற் 8:6). இலாசரை உயிர்த்தெழச் செய்யுமுன் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார் (யோவா 11:41). இறுதி இரவு உணவின் போது அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார் (லூக் 22:19). உயிர்த்தபின் எம்மாவு சீடர்களுடன் பந்தியில் அமர்ந்து அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றுகின்றார் (லூக் 24:30), எனவே கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் கடவுளைப் போற்றி அவருக்கு நன்றி செலுத்துவது தகுதியும் நீதியுமாகும்.

இன்பத்தில் கடவுளைப் போற்றவும் அவருக்கு நன்றி செலுத்தவும் இயலும். ஆனால், துன்பத்தில் துவளும்போது, சோதனை வாட்டி வதைக்கும் போது கடவுளை எவ்வாறு புகழ்வது? திருத்தூதர் பவுல் கூறுகிறார்: “எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்" (1 தெச 5:18). இது சாத்தியமாகுமா? சாத்தியம் என்பதற்குத் திருத்தூதர் பவுலே நமக்கு ஓர் எடுத்துக்காட்டு. பிலிப்பு நகரில் பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்; கையிலும் காலிலும் விலங்குகள்; அந்நிலையிலும் "நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்பாடி இறைவனிடம் வேண்டினர்" (திப 16:24-25),

ஒரு தாய் தனது ஒரு வயது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரைக் கருந்தேள் ஒன்று கொட்டி விட்டது. வலியால் துடித்த அவர் : "கடவுளே! இத்தேள் என் குழந்தையைக் கொட்டாமல், என்னைக் கொட்டியதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்" என்றார்.

எத்தீமையிலும் ஒரு நன்மை உண்டு. உண்மையில் கடவுளின்மேல் அன்பு செலுத்துபவர்களுக்கு அனைத்தும் நன்மையாக மாறும். இன்றைய இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்துவுக்காகப் பல துன்பங்களை ஏற்ற பவுல் கூறுகிறார்: "நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; ஆட்சி செய்வோம்" (2 திமொ 8:13). ஒவ்வொரு சாவிலும் ஓர் உயிர்ப்பு உண்டு.

கடவுளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் நமது நன்றியுணர்வைக் காட்ட வேண்டும், குறிப்பாக நமது பெற்றோர்களுக்கு நன்றி காட்ட வேண்டும். ஏழை விதவை ஒருவர் தன் வீட்டின் முன் தென்னம்பிள்ளை வைத்து, தன் மகனைப் படிக்க வைத்தார். மகன் படித்து அமெரிக்காவில் வேலை பார்த்தான். அம்மா அடக்கத்திற்கு அவன் வரவில்லை . அம்மா இறக்குமுன் மகனுக்குப் பின்வருமாறு கடிதம் எழுதி வைத்தார்: "மகனே. நீ பிறந்தபோதுதான் நம் வீட்டின் முன் தென்னம்பிள்ளை நட்டேன்; நீயும் வளர்ந்தாய், தென்னம்பிள்ளையும் வளர்ந்தது; அது கொடுத்த தேங்காய்களை விற்று உன்னைப் படிக்க வைத்தேன். இன்று அமெரிக்காவில் இருந்து கொண்டு என் அடக்கத்திற்குக் கூட வர உன்னால் முடியவில்லை. ஆனால் நான் வளர்த்த தென்னம்பிள்ளையின் பாளை என்னோடு கல்லறைக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்துகிறது." இது கதையல்ல நிஜம். தென்னையைப் பெத்தா இளநீர்; பிள்ளையைப் பெத்தா கண்ணீர்!

'நற்கருணை' என்ற சொல்லுக்கு 'நன்றியறிதல்' என்பது பொருள். ஒவ்வொரு திருப்பலியிலும் கடவுளைப் போற்றி நன்றி கூறுகிறோம். அப்ப, இரசத்தை எடுத்து. “ஆண்டவரே! அனைத்துலகின் இறைவா! உம்மைப் போற்றுகிறோம்” என்கிறார் குரு. “இவர் வழியாக இவரோடு, இவரில்" என்ற இறுதிப் புகழுரை நன்றிப் புகழுரை. கடவுளுக்கு உதட்டால் மட்டுமல்ல, உள்ளத்தால் நன்றி செலுத்துவோம். நமது வாழ்வே ஓர் இறைபுகழாக, நன்றியுரையாக அமையட்டும்.

“ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.. (திபா 118:1)
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பத்தில் ஒன்றுதானா?

வாழ்க்கையில் உற்சாகம் தரும், ஊக்கமூட்டும் அழகான, இதமான வார்த்தைகள் மூன்று. 1. தயைகூர்ந்து, 2. மன்னிக்கவும், 3. மிக்க நன்றி.

வீடு வீடாகப் பொருள்களை வழங்கிவரும் அந்தச் சிறுவனுக்கு மிகுந்த பசி. உணவு வாங்கக் கையில் காசில்லை. அருகில் இருந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண்மணி கதவைத் திறந்தாள். அவனுக்கோ பசிக்கிறது என்று சொல்லக் கூச்சம். சிறுவனின் கண்களில் தெரிந்த பசியைக் கவனித்த அவள் உள்ளே சென்று ஒரு கிண்ணம் பால் கொண்டுவந்து கொடுத்தாள்.

பாலைப் பருகிப் பசியாறிய சிறுவன் கேட்டான்: “நான் உங்களுக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கேன்?!" "கடனா? அப்படி ஒன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலையில்லையென என் அம்மா சொல்லியிருக்கிறார்..." அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள். சிறுவனோ "ரொம்ப ரொம்ப நன்றி" என்று புன்னகையுடன் சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. அந்தச் சிறுவன் மேல்படிப்பு முடித்து நகரிலேயே மிகப்பெரிய மருத்துவர் ஆனான். அந்தப் பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய். அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அப்பெண்மணியும் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ அறிக்கையில் அந்தப் பெண்ணின் ஊரைப்படித்ததும் அவருக்குள் சின்ன மின்னல். விரைந்து அறைக்குப்போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளேதான். பால் கொடுத்துப் பசிதீர்த்த அதே நல்ல உள்ளம். அன்று முதல் நேரடியாகத் தானே முன்நின்று சிறப்புச் சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின் அவளும் முழுமையாக நலமடைந்தார். பல இலட்சங்கள் செலவு. பெரிய தொகைக்கான சீட்டை அனுப்பியது மருத்துவமனை. எப்படிப் பணம் கட்டப் போகிறோமோ என்ற பதற்றத்துடன் சீட்டைப் பிரித்தபோது அவள் திகைத்துப் போனாள்.

அந்தச் சீட்டின் கடைசியில் எழுதப்பட்டிருந்தது. “ஒரு கிண்ணம் பாலில் உங்கள் கடன் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்”. அவளுடைய கண்கள் கசிந்தன.

நன்றி சொல்பவராகட்டும், நன்றிக்கு உரியவராகட்டும் இரண்டு பேருக்குமே எவ்வளவு மகிழ்ச்சி, மனநிறைவு!

நன்றி கூறுபவர்கள் இரண்டு வகையினர்:
1. பெற்ற நன்மைக்கு நன்றி கூறுபவர்கள் - மனிதனின் எதார்த்தப் பார்வையோடு - நாமான் போல், நற்செய்தியில் வரும் சமாரியர் போல. நன்றி கூறும் நல்ல பழக்கம் கடவுளை மாட்சிப்படுத்துவதற்கு ஒப்பாகும் (லூக். 17:18).
படைக்கும்போதே கடவுள் நமக்கு ஏராளமான கொடைகளை ஆசீராக அளித்திருக்கிறார். நமது மூச்சக்காற்று, நமது களைப்பைப் போக்கும், கழுவித் தூய்மைப்படுத்தும் நீர், உணவுக்கான காய்கள் கனிகள், கண்ணுக்கும் மனதுக்கும் களிப்பூட்டும் இயற்கையின் படைப்புக்கள் என்று எத்தனை எத்தனையோ!
கடவுளுக்கு நன்றி சொல்லக் காரணங்களுக்கா பஞ்சம்?
விவிலியத்தைப் புரட்டுங்கள். நீண்ட பட்டியலிடலாம். தி.பா. 35:18-19, 96:2, 52:8-9, 118:21, ரோமை 1:8, 7:25, தி.ப. 28:15 இன்னும் ...

2. என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுபவர்கள் (1 தெச. 5:17)
- கிறிஸ்துவின் விவிலியப் பார்வையோடு.
ஆங்கிலக் கவிதையின் அருமையான வரிகள் இவை:
- என்னிடம் இல்லாதவற்றுக்காய் நன்றி. அவைதான் அவற்றை நோக்கி என்னைப் பயணிக்க ஊக்குவிக்கின்றன.
- என்னிடம் இருக்கும் குறைவான அறிவுக்காய் நன்றி. அதுதான் என்னைக் கற்றுக் கொள்ளத் தூண்டுகிறது.
எனது குறைகளுக்காய் நன்றி. அவைதான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.
எனது பிழைகளுக்காய் நன்றி. அவைதான் எனக்கு அனுபவப் பாடங்களை அள்ளிக் கொடுக்கின்றன.
எனது சோர்வுகளுக்காய் நன்றி. அவைதான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகின்றன.
எனது சோதனைகளுக்காய் நன்றி. அவைதான். சோதனைகளைச் சாதனைகளாக மாற்றும் திறனை அளிக்கின்றன.

மலரில் முள்ளைப் பார்க்காமல் முள்ளில் மலரைப்பார்க்கின்ற மனநிலை அது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற உணர்வு நிலை அது.

அரசன் தன் அமைச்சரோடு வேட்டையாடக் காட்டுக்குள் நுழைகிறான். வழியில் புலி தாக்க ஒரு விரலை இழக்கிறான். வேதனையில் அரசன் துடிக்க அமைச்சர் 'எல்லாம் நன்மைக்கே' என்கிறான். அதனைக் கேட்ட அரசனுக்கு ஆத்திரம். வறண்ட பாழும் கிணற்றில் அமைச்சனைத் தள்ளிவிடுகிறான். அந்த நேரத்திலும் 'எல்லாம் நன்மைக்கே' என்கிறான். பிறகு காட்டுக்குள் புகுந்த அர- சனைக் காட்டுவாசிகள் பிடித்துத் தங்கள் தெய்வத்துக்குப் பலியிட முயல, ஒரு விரல் இல்லாத உடல் குறையினால் அவனை விடுவித்து விடுகின்றனர். திரும்பும் வழியில் அமைச்சரைக் கிணற்றிலிருந்து வெளியே தூக்கி எடுத்து “உன்னை நான் கிணற்றில் தள்ளியபோது 'எல்லாம் நன்மைக்கே' என்றாயே ஏன்?” என்று கேட்க அமைச்சர் சொன்னார்: “நீங்கள் ஒரு விரலை இழந்திருந்ததால் கொல்லப்படாமல் காப்பாற்றப்பட்டீர். அந்நிலையில் நான் அங்கே இருந்திருந்தால் என்னைப் பலிகொடுத்திருப்பார்கள்”. என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்ற உணர்வு நம்பிக்கையின் வெளிப்பாடன்றோ!
இயேசு சமாரியரைப் பார்த்து, “உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” (லூக். 17:19) என்றார். நம்பிக்கையின் அளவுகோலான நன்றியுணர்வு நலமளித்தது மட்டுமல்ல. மீட்பளித்தது (பழைய மொழிப்பெயர்ப்பு) "எந்நாளும் எவ்விடத்திலும் நன்றி கூறுவது தகுதியும் நீதியுமாகும். மீட்புக்குரிய செயலுமாகும்" என்பது திருப்பலிச் செபம். யோர்தானில்‌ மூழ்கி நலமடைந்த நாமான்‌, நம்பிக்கை அறிக்கையாகத்‌ தானே தன்‌ நன்றி உணர்வை வெளிப்படுத்தினார்‌! “இஸ்ரயேலைத்‌ தவிர வேறு எந்த நாட்டிலும்‌ கடவுள்‌ இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன்‌" (2. அர. 5:15). நாமானின்‌ இந்தச்‌ செயல்‌ இயேசுவாலும்‌ பாராட்டப்படுகிறது (ஜாக்‌. 4:27).

அதனால்தான்‌ திருப்பாடல்‌ ஆசிரியர்‌ தெம்போடு பாடுகிறார்‌. “ஆண்டவர்‌ எனக்குச்‌ செய்த எல்லா நன்மைகளுக்காகவும்‌ நான்‌ அவருக்கு என்ன கைமாறு செய்வேன்‌? மீட்பின்‌ கிண்ணத்தைக்‌ கையில்‌ எடுத்து ஆண்டவரது பெயரைத்‌ தொழுவேன்‌" (தி.பா. 116:12-13).

ஒரு கல்லுரி. புதிதாகப்‌ பணியில்‌ சேர்ந்த பேராசிரியை தன்‌ மாணவர்களிடம்‌ தலைக்கு மூன்று சிறிய பட்டு நாடாக்களைக்‌ (06) கொடுத்து “உங்கள்‌ வாழ்க்கையில்‌ ஏதோ ஒரு நன்மை செய்த மூன்று பேரின்‌ கைகளில்‌ கட்டுங்கள்‌. அப்படிக்‌ கட்டும்போது அவர்கள்‌ ஒவ்வொருவரிடமும்‌ கூடுதலாக மூன்று நாடாக்களைக்‌ கொடுத்து உங்களைப்‌ போலவே அவர்களையும்‌ செய்யச்‌ சொல்லுங்கள்‌” என்று அனுப்பினார்‌.

ஏழைமாணவன்‌ ஒருவன்‌ தனது. படிப்புக்குப்‌ பழைய புத்தகங்களைக் கொடுத்து உதவிய மூத்த மாணவன்‌ கையில்‌ கட்டினான்‌. பிறகு அவனிடமும்மூன்று ரிப்பன்களைக்‌ கொடுத்துத் தான் செய்தது போலச்‌ செய்யச்‌ சொன்னான்‌.

ரிப்பன்கள்‌ கைமாறின. ஒரு வாரத்திற்குள்‌ கல்லூரி தொடங்கி ஊர்‌ முழுவதும்‌ பரவியது. அனைவர்‌ கைகளிலும்‌ நன்றியின்‌ சின்னமாக வண்ணமயப்‌ பட்டுநாடாக்கள்‌!

அது வியக்கத் தக்க நிகழ்வானது. ஏதேதோ வேறுபாடுகளை வளர்த்துக் கொண்டிருந்தவர்கள் தாங்கள்‌ அனைவருமே ஏதோ ஒரு வகையில்‌ ஒருவருக்கொருவர்‌ கடன்பட்டவர்கள்‌. ஒருவர்‌ ஒருவரைச்‌ சார்ந்திருப்பவர்கள்‌ என்பதைப்‌ புரிந்து கொண்டனர்‌. நன்றி உணர்வு என்பது ஒரு மந்திரச்‌ சொல்‌. அதனால்‌ உறவுகள்‌ மலரும்‌. புது உலகம்‌ பிறக்கும்‌. Court Your blessing நினைத்துப்பார்‌. நன்றி சொல்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பிணிகள் பிணைக்கும்.

பத்துத் தொழுநோயாளர்களை இயேசு குணமாக்கும் நிகழ்வு இன்றைய நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நற்செய்தி மூன்று பாடங்களை நமக்கு முன் வைக்கிறது.
முதல் பாடம் - தொழுநோயாளர்களுக்கு நாம் தரவேண்டிய மதிப்பு
2வது பாடம் – சமுதாய வேறுபாடுகளைப் போக்கும் சிறந்த மருந்து துன்பம்
3வது பாடம் - வாழ்நாளெல்லாம் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய நன்றி உணர்வு

இயேசு தொழுநோயாளர்களைக் குணமாக்கும் நிகழ்வுகள் லூக்கா நற்செய்தியில் இருமுறை பதிவாகியுள்ளன (லூக்கா 5: 12-14; 17: 11-19). தன் பணிவாழ்வின் துவக்கத்திலும், இறுதியிலும் இயேசு ஆற்றிய புதுமைகள் இவை. இவ்விரு நற்செய்திப் பகுதிகளிலும், தொழுநோயாளர்கள் அவர், இவர் என்று மரியாதையுடன் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவன், இவன் என்றல்ல. முன்பு நாம் பயன்படுத்திய விவிலிய மொழிபெயர்ப்பில் அவன், இவன் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொழுநோயாளரை ஒரு மனிதராக எண்ணி, அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டிருக்கிறது. இது நாம் அண்மையில் பின்பற்றும் ஓர் அழகான பழக்கம். வார்த்தைகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதிலிருந்தே பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

இயேசு ஆற்றிய இப்புதுமையைப்பற்றி சிந்திப்பதற்கு முன்னால், தொழுநோயாளர் என்ற வார்த்தையைப்பற்றி சிறிது சிந்திப்போம். தொழுநோய் உள்ளவர்களை, பழையத்தமிழில், ‘குஷ்டரோகி’ என்று சொல்வோம். ஆங்கிலத்திலும் அவர்களை leper என்று சொல்வோம். நல்லவேளையாக, தற்போது, தமிழிலும், ஆங்கிலத்திலும் தொழுநோயாளர், leprosy patient என்ற சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.

குஷ்டரோகி என்றோ, leper என்றோ சொன்னபோது, மனிதர்கள் என்ற நிலையை இழந்து, ஏதோ அந்த நோயாகவே அவர்கள் மாறிவிட்டனர் என்ற கண்ணோட்டம் மனதில் பதிந்தது. இந்த நோய் உடையவர்கள் மனிதப் பிறவியிலிருந்து பல படிகள் தாழ்ந்த நிலையில் உள்ள ஒரு பிறவியாக நினைத்தோம், அவர்களை அப்படியே நடத்தினோம். சாதிய மடமையில் வாழும் சமுதாயங்களில், ஒரு சில குலங்களில், குடும்பங்களில், இடங்களில் பிறந்தவர்களை, ஏதோ பிறவியிலேயே அவர்கள் குறையுடன் பிறந்தவர்கள் போலவும், எனவே, அவர்களைப் பார்க்கும்விதம், அவர்களோடு பழகும்விதம் இவைகளில் வேறுபாடுகள் காட்டுவது, அச்சமுதாயங்கள் வளர்த்துக்கொண்ட சாபக்கேடு.
குஷ்டரோகி என்பதற்கும், தொழுநோயாளர் என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள். வெறும் வார்த்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல, மாறாக, சிந்தனையிலேயே இவை இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. ‘வேலைக்காரி’ அல்லது ‘வேலைக்காரன்’ என்ற வார்த்தைகளுக்கும், ‘பணியாளர்’ என்ற வார்த்தைக்கும் வேறுபாடுகள் உள்ளன. ‘முடவன்’ என்ற வார்த்தைக்கும் ‘மாற்றுத் திறனாளி’ என்ற வார்த்தைக்கும் வேறுபாடுகள் உள்ளன. வார்த்தைகளில் மதிப்பு ஒலிக்கும்போது, மனதிலும் மதிப்பு உருவாகும் என்று நம்புகிறோம். வார்த்தைகள் என்ன அவ்வளவு முக்கியமா என்று நம்மில் சிலர் நினைக்கலாம். ஆம், உள்ளத்தின் நிறைவிலிருந்துதான் வாய் பேசும் என்றும், தீயைவிட அதிக சூடானது வார்த்தைகள் என்றும் நாம் சொல்லக் கேட்டிருக்கிறோம், உணர்ந்தும் இருக்கிறோம். நோயுற்றோரை, பணியாளரை, மாற்றுத் திறனாளிகளை மதிப்புடன் நடத்துவதற்கு, முதலில் நாம் அவர்களைக் குறிப்பிடும் வார்த்தைகளிலிருந்து பாடங்களைத் துவக்க வேண்டும். இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லித்தரும் முதல் பாடம் இது.

இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளில் நாம் கற்றுக்கொள்ளக் கூடிய 2வது பாடம் சொல்லப்பட்டுள்ளது. இதோ இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள்: லூக்கா நற்செய்தி, 17:11-19
இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.
இயேசு ‘கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்’ என்ற கூற்றுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. யூதர்களும், சமாரியர்களும் வாழ்ந்தப் பகுதிகள் அவை. இன்றைய நமது கலாச்சாரப் பின்னணியில் இதைச் சிந்தித்தால், அக்ரகாரத்தின் வழியாகவும், சேரியின் வழியாகவும் இயேசு நடந்தார் என்று சிந்திக்கலாம். தேவையற்ற பாகுபாடுகளுடன் வாழும் யூதர்களையும், சமாரியர்களையும் ஒன்று சேர்க்கமாட்டோமா என்ற ஏக்கம் நிறைந்த சிந்தனைகளுடன் இயேசு அவ்வழியே சென்றிருக்கவேண்டும்.
அந்நேரம், பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிராக வந்தனர். அவர்கள் யூதரா? சமாரியரா? தெரியவில்லை. அவர்கள் அனைவரும் தொழுநோயாளர்கள். தொழுநோய் என்ற ஒரே காரணத்தால், யூத சமூகமும், சமாரிய சமூகமும் அவர்களைப் புறக்கணித்தன. அந்த புறக்கணிப்பு அவர்களை இணைத்தது. இதுவே ஒரு புதுமைதானே!

நோய், நொடி, துன்பம், பேரழிவு என்று வரும்போது மனித சமுதாயம் பலவகைகளில் இணைந்து விடுகிறது. 1977ம் ஆண்டு, திருச்சி தூய வளனார் கல்லூரியில் நான் பயின்றுகொண்டிருந்தபோது, பெருவெள்ளம் ஒன்று திருச்சியைச் சூழ்ந்தது. கல்லூரியும் பாதிக்கப்பட்டது. கல்லூரியைச் சுற்றியிருந்த வீடுகள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டப் பகுதிகளில், சேரிகளும் உண்டு, அக்ரகாரங்களும் உண்டு. பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானோர் கல்லூரிக் கட்டடத்தின் 2வது 3வது மாடிகளில் தஞ்சம் புகுந்தனர். சாதி, மதம், இனம், ஏழை, செல்வர் என்ற பாகுபாடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு, எல்லாரும் சேர்ந்து தங்கினர். அரசு சார்பில் அளிக்கப்பட்ட உணவு பொட்டலங்களை எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டனர். அவர்கள் வீட்டுச் சுவர்கள் வெள்ளத்தில் இடிந்தபோது, காலம் காலமாய் அவர்கள் கட்டிவைத்த பிரிவுச்சுவர்களும் இடிந்தன. ஆனால், வெள்ளம் வடிந்து, அவர்கள் மீண்டும் அவரவர் வீட்டுச் சுவர்களை எழுப்பியபோது, இந்த பிரிவுச்சுவர்களும் கட்டப்பட்டுவிட்டன என்று நினைக்கிறேன்.
2001ம் ஆண்டு, சனவரி 26, இந்தியக் குடியரசு நாளன்று, குஜராத் மாநிலத்தில் Bhuj என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்து முஸ்லிம் என்ற வேறுபாடுகள் ஏதுமின்றி மனிதர்கள் ஒருவருக்கொருவர் இரத்ததானம் செய்தனர். ஆனால், அதே குஜராத்தில், அடுத்த ஆண்டு, 2002, பிப்ரவரியில் உருவான கலவரங்களில் ஒருவர் ஒருவரின் இரத்தத்தை அந்த மாநிலமெங்கும் சிந்தினர்.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, நியூயார்க்கில், இரு பெரும் வர்த்தகத் கோபுரங்கள் விமானங்கள் கொண்டு தாக்கப்பட்டதால், இடிந்து விழுந்த நிகழ்வு அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த அழிவு அனைவரையும் சமமாக்கியது. இதைப்பற்றி ஒருவர் மின்னஞ்சலில் எழுதியது, எனக்கு நினைவுக்கு வருகிறது.
As the soot and dirt and ash rained down,
We became one color.
As we carried each other down the stairs of the burning building,
We became one class.
இடிந்து விழுந்தன கோபுரங்கள், நிமிர்ந்து நின்றது மனித குலம். அந்த இடிபாடுகள் எழுப்பிய, புகையும், புழுதி மண்டலமும் சூழ இருந்த மக்கள் அனைவரையும் ஒரே நிறமாக்கியது. வெள்ளையர், கறுப்பர் என்ற பாகுபாடுகள் இல்லாமல் போயின.
பல நூறு ஆண்டுகள் அமெரிக்க மக்கள் கண்டு வரும் சமத்துவம் என்ற கனவு அந்த அழிவு நேரத்தில், நனவாகியது. ஆனால், பாவம், அந்த அழிவிலிருந்து மீண்டதும், பழைய பாகுபாடுகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன.

தொழுநோய் என்ற துன்பம், பாகுபாடுகளை மறந்து, இந்த பத்து நோயாளிகளை சேர்த்து வைத்தது. ஆனால், தொழுநோய் நீங்கியதும் என்ன நடந்திருக்கும் என்பதை இப்படி நினைத்துப் பார்க்கிறேன். "அவர்கள் புறப்பட்டு போகும்போது, அவர்கள் நோய் நீங்கிற்று" என்று நற்செய்தி கூறுகிறது. நோய் நீங்கியதை உணர்ந்த ஒருவர் உரத்தக் குரலில் கடவுளைப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார். அவர் ஒரு சமாரியர். "மற்ற ஒன்பது பேரும் எங்கே?" என்று இயேசு தேடுகிறார். இந்தக் கேள்வியில் ஒலிக்கும் இயேசுவின் ஏக்கம் புரிகிறது. அவர்கள் அனைவரும் தன்னிடம் திரும்பிவந்து நன்றி சொல்லவேண்டும் என்ற ஏக்கம் அல்ல. நோயுற்றிருந்தபோது அவர்களிடம் அவர் கண்ட அந்த ஒற்றுமை எங்கே போனது என்பதை இயேசு அதிகம் தேடியிருப்பார். அந்த ஒற்றுமை எங்கே போனது? போகும் வழியில் அது போய்விட்டது.

நோயாளி என்ற ஒரே குலத்தில் இருந்த அவர்கள், நோய் நீங்கியதும் யூதர் என்றும், சமாரியர் என்றும் பிரிந்தனர். அவர்கள் மத்தியில் ஒரு சமாரியர் இருந்ததை அவர்கள் மீண்டும் உணர்ந்தனர். அந்தச் சமாரியரை மேலும், கீழும் பார்த்தனர். "நீங்கள் போய், உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" என்று இயேசு சொன்னதை நினைத்துப் பார்த்தனர். குருக்களிடம் தாங்கள் போகும்போது, இந்தச் சமாரியனோடு போனால், மீண்டும் பிரச்சனைகள் வருமே. இது நாள் வரை அவர்களை விலக்கிவைத்த தொழுநோய் என்ற தீட்டோடு, ஒரு சமாரியனோடு அவர்கள் சேர்ந்திருந்தது மற்றொரு தீட்டாக மாறுமே.

தொழுநோயுற்றபோது தன்னுடன் துன்பத்தில் இணைந்தவர்கள் மனதில் இப்போது வேற்றுமை எண்ணங்கள் வளர்ந்திருந்ததை அவர்களின் வெப்பப் பார்வையிலேயே அந்த சமாரியர் உணர்ந்திருக்கவேண்டும். அவராகவே அவர்களை விட்டு விலகுகிறார். அனால், அவருக்குள் ஒரு சின்ன கலக்கம். தன்னை இவ்வளவு அன்போடு குணமாக்கியவர், "குருக்களிடம் காட்டுங்கள்." என்று கட்டளையிட்டாரே. என்ன செய்யலாம்? என்ற கலக்கம் அது. அவரது மனதில் ஒரு தெளிவு பிறக்கிறது. தன்னை குணமாக்கியவரே ஒரு பெரும் குரு. தெய்வம். அவரிடமே சரண் அடைவோம். இந்தத் தெளிவோடு அந்தச் சமாரியர் இயேசுவிடம் திரும்ப வருகிறார்.

திரும்பி வந்த சமாரியரைப் பார்த்து, இயேசுவுக்கு ஒருபுறம் மகிழ்வு. மறுபுறம் வேதனை. நன்றிக்கடன் செலுத்தவந்த சமாரியரைப் பார்த்து மகிழ்வு. ஆனால், அவர் மீண்டும் தனிமைபடுத்தப்பட்டது, ஒதுக்கப்பட்டது குறித்து இயேசுவுக்கு வேதனை. "மற்ற ஒன்பது பேரும் எங்கே?" என்று மனம்விட்டு, வாய்விட்டு கேட்டே விடுகிறார். இயேசுவின் இந்த ஏக்கம் நிறைந்த கேள்விக்கு நாம் இன்றும் பதில் சொல்லமுடியாமல் தடுமாறுகிறோம். நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளின் போதும், கலவரங்கள், போர்கள் என்று மனிதர்கள் உருவாக்கும் அழிவுகளின்போதும் ஒருங்கிணையும் நாம், இத்துன்பங்கள் விலகியதும் மீண்டும் நம் சுயநலச் சுவர்களை எழுப்பிவிடுகிறோமே இது ஏன்? இன்றைய நற்செய்தி இக்கேள்வியை 2வது பாடமாக நமக்கு முன் வைக்கிறது. நமது பதில் என்ன?

இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லித்தரும் 3வது பாடம் - வாழ்நாளெல்லாம் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய நன்றி உணர்வைப் பற்றிய பாடம். உலகில் உள்ள மக்களை இரு குழுக்களாகப் பிரிக்கலாம். நன்றியுள்ளவர்கள், நன்றி மறந்தவர்கள். இவ்விரு குழுக்களில், ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருப்பார்கள்? இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டது போல, ஒன்றுக்கு ஒன்பது என்பதுதான் அந்த கணக்கோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நம்முடைய சொந்த வாழ்வையும் ஆய்வுசெய்தால், அங்கும் இதே கணக்கு நிலவுகிறதா என்பதைச் சிந்தித்துப் பார்க்கலாம். நம்மில் பலருக்கு, என்னையும் சேர்த்து சொல்கிறேன்.. நன்றி உணர்வு ஒன்று எழுந்தால், அதை அழுத்தி, புதைத்துவிட ஒன்பது பிற எண்ணங்கள் எழுந்து வரும். இதனால், நாம் நன்றி சொல்லும் நேரங்களைவிட, கவலைகளையும், கோபதாபங்களையும் சொல்லும் நேரங்கள்தாம் அதிகம். நமது செபங்களைச் சிறிது ஆய்வு செய்தால், அவற்றில், பத்தில் ஒன்பது பகுதி குறைகளை வெளியிடும் விண்ணப்பச் செபங்களாகவும், பத்தில் ஒரு பகுதி மட்டுமே நிறைகளைக் கூறும் நன்றி செபங்களாகவும் இருக்கலாம்.

இறைவனுக்கும், பிறருக்கும் நன்றி சொல்லும்போது, அதுவும் உதட்டளவில் இல்லாமல், உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்லும்போது, அழகியதொரு நிறைவை நாம் கட்டாயம் உணர்ந்திருப்போம், இல்லையா?

நன்றியைப் பற்றிய இரு அழகான எண்ணங்கள் நமக்கு உதவியாக இருக்கும்… “The most important prayer in the world is just two words long: Thank you” Meister Eckhart உலகத்திலேயே மிக முக்கியமான, அவசியமான செபம் இரண்டே வார்த்தைகளில் அடங்கும்: உமக்கு நன்றி.

இன்னொமொரு அழகான கூற்று: “God has two homes - one in heaven and the other in a humble, thankful heart” - Izaak Walton. கடவுள் வாழும் இல்லங்கள் இரண்டு. ஒன்று விண்ணகம். மற்றொன்று நன்றி நிறைந்த உள்ளம். கடவுள் விரும்பித்தங்கும் இல்லமாக நம் உள்ளங்கள் இருக்கவேண்டும் என்பது, இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் 3வது பாடம்.

மனிதர்கள் எந்நிலையில் இருந்தாலும், அவர்களை மதிக்கும் மனதை நாம் அனைவரும் பெறவும், நம்மிடையே வளர்ந்துள்ள பிரிவுகள் மறையவும், வாழ்வில் நாம் என்றும் நன்றியுள்ளம் கொண்டு வாழவும் அன்னையின் பரிந்துரையை வேண்டுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (2அர. 5:14-17)

அக்காலத்தில் சீரியா நாட்டு மன்னனின் படைத்தலைவனான நாமான் ஒரு வலிமை மிக்க வீரனாய் இருந்தான். ஆனால் அவனுக்குத் தொழுநோய் பிடித்திருந்தது. இஸ்ராயேலைச் சார்ந்த சிறுமியின் மூலம் இறைவாக்கினர் எலிசாவைப் பற்றி அறிந்து அங்கே செல்கிறான். எலிசா நாமானை ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் தனது ஆள்மூலம் நாமானை யோர்தானில் 7 முறை குளிக்கச் சொல்லுகிறார். ஆனால் நாமான் எதிர்பார்த்ததோ வேறு, எலிசா தன்னைத்தொட்டு குணமாக்குவார் என்றெண்ணினான். இருப்பினும், நாமான் கடவுளின் அடியாரது வாக்கிற்கிணங்கி யோர்தானில் மூழ்கி எழ நோய் நீங்கியது. உண்மையான இறைவனுக்கு ஆராதனை செய்கிறான். இஸ்ராயேலின் கடவுளைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்று சான்று பகிர்கிறான்.

இரண்டாம் வாசகப் பின்னணி (2திமோ 2:8-13)

இறைப்பணி புரிய மனஉறுதி வேண்டும் என்று தூய பவுல் திமொத்தேயுவுக்கு இரண்டாம் திருமுகம் வரைகிறார். ஏனெனில் உயிர்த்தெழுதலைப் பற்றிய மாறுபாடான போதனைகளும், உலக இச்சைகளுக்குட்பட்ட போதனைகளும் துவக்க திருச்சபையிலிருந்த புதிய உறுப்பினர்களுக்கு ஒரு நம்பிக்கையற்ற நிலையை ஏற்படுத்தியிருந்தது. எனவே மக்களுக்கு நம்பிக்கை ஊட்டத் திமொத்தேயு வழியாக மற்றவர்களைத் திடப்படுத்துகிறார். உலகப் போக்கிலான போதனைகள் சதை அழுகும் நோய்களும் ஒப்பாகும் என்று சாடுகிறார். எனவே உறுதியுடன் நற்செய்தி சொல்லத் தன் மகனாக நினைத்துக் கடிதம் எழுதுகிறார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 17:11-19)

தந்தையின் திட்டம் நிறைவேற வேண்டிய நாட்கள் நெருங்கி வருவதைக் கண்ட இயேசு எருசலேமுக்குப் போகின்ற வழியிலே கலிலேயா, சமாரியா பகுதிகள் வழியாகச் செல்கிறார். இந்த ஊர்களுக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில்தான் தொழுநோய்ப் பிடித்தவர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துதான் இயேசு அவ்வழியே செல்லுகிறார். ஏனென்றால் தொழுநோய்ப் பிடிக்கப்பட்டவர்கள் சமுகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட- வர்கள், வெறுக்கப்பட்டவர்கள். தாங்கள் இருப்பதை மற்றவர்- களுக்குத் தெரிவித்து தங்களிடம் உள்ள மணியை அடித்து ஒலியெழுப்பி எச்சரிக்கைச் செய்வர். அந்த அளவுக்குத் தொழு- நோயாளிகள் வேதனை அடைகின்றவர்கள். குணமளிக்கும் இயேசு வருவதைக் கண்டதால் 10 தொழுநோயாளிகளும் தங்களைக் குணமாக்க மனமிரங்கும்படி வேண்டுகின்றனர். ஆனால் ஒரு சமாரியர் மட்டுமே நன்றிச் சொல்லத் திரும்பி வந்தார்.

மறையுரை

"நன்றி மறப்பது நன்றன்று", "செய்நன்றி மறந்தாருக்கு உய்வில்லை", "பிறர் உனக்குத் தினையளவு நன்மை செய்தால், அதைப் பனை அளவாகக் கருதி பாராட்ட வேண்டும்", என்ற நீதி நூல்கள் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். இத்தகைய நன்றியுணர்வை ஆறறிவுள்ள மனிதர்கள் பயன்படுத்து கின்றார்களோ இல்லையோ ஐந்தறிவுள்ள நாய் தனது எசமானுக்கு நன்றி விசுவாசத்துடன் இருக்கும். தன்வாலை ஆட்டித் தன் நன்றியைத் தெரிவிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மனிதர்களாகிய நாம் நன்றியுள்ளவர்களா? அப்படியானால் நாம் யாருக்கு நன்றி- யுள்ளவர்களாக இருக்க வேண்டும்? இன்றைய வாசகங்கள் நமக்கு நன்றியின் மேன்மையை எடுத்துரைக்கின்றன.

எந்த ஒரு மனிதனும் பிறரின் துணை இல்லாமல், உதவி- இல்லாமல் வாழ்தல் என்பது கடினமான ஒன்று. ஆதலால் இவ்வுலகில் ஒருவரைச் சார்ந்து தான் வாழ முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. பிறரிடமிருந்து உதவி பெறுபவனின் குறைந்த அளவு கைம்மாறு எது என்றால் 'நன்றி' என்ற வார்த்தைதான். இந்த வார்த்தைச் செயலோடு இணையும்பொழுது புண்ணியமாகும். இப்படி நன்றி என்ற புண்ணியத்தில் வளருகின்ற மனிதன் தன்னைப் படைத்தவரைக் கண்டு கொண்டு நன்றியுள்ளவனாக வாழும் பொழுது மேண்மையான புண்ணியங்களைத் தடையின்றி பெற்றுக்- கொள்கிறான். பெற்றோர்கள் எல்லாருமே தன்பிள்ளைக்கு எதிர்- பார்ப்பு இல்லாமல் செயல்படுபவர்கள். எந்தப் பெற்றோர்களாவது தன் பிள்ளைகளிடம் நன்றி எதிர்பார்ப்பார்களா? கண்டிப்பாகக் கிடையாது. ஆனால் பிள்ளைகள் ஒவ்வொருவரும் தன் எந்த ஒரு மனிதனும் பிறரின் துணை இல்லாமல், உதவி- இல்லாமல் வாழ்தல் என்பது கடினமான ஒன்று. ஆதலால் இவ்வுலகில் ஒருவரைச் சார்ந்து தான் வாழ முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. பிறரிடமிருந்து உதவி பெறுபவனின் குறைந்த அளவு கைம்மாறு எது என்றால் 'நன்றி' என்ற வார்த்தைதான். இந்த வார்த்தைச் செயலோடு இணையும்பொழுது புண்ணியமாகும். இப்படி நன்றி என்ற புண்ணியத்தில் வளருகின்ற மனிதன் தன்னைப் படைத்தவரைக் கண்டு கொண்டு நன்றியுள்ளவனாக வாழும் பொழுது மேண்மையான புண்ணியங்களைத் தடையின்றி பெற்றுக்- கொள்கிறான். பெற்றோர்கள் எல்லாருமே தன்பிள்ளைக்கு எதிர்- பார்ப்பு இல்லாமல் செயல்படுபவர்கள். எந்தப் பெற்றோர்களாவது தன் பிள்ளைகளிடம் நன்றி எதிர்பார்ப்பார்களா? கண்டிப்பாகக் கிடையாது. ஆனால் பிள்ளைகள் ஒவ்வொருவரும் தன் பெற்றோருக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்வது தான் கடமையும், கைமாறுமாகும். இவ்வாறு இருக்க நம்மைப் படைத்தவருக்கு நாம் நன்றிச் சொல்லுவதாலோ, இறைவனைப் புகழ்வதாலோ இறை- வனுக்கு நன்றிச் சொல்லுவதாலோ இறைவனுடைய மாட்சிமை கூடுவதுமில்லை, குறைவதுமில்லை. மாறாக நம்முடைய புகழுரையும் நன்றியுரையும் நாம் மீட்பு பெற உதவுகிறது என்பது தான் உண்மை. பெற்ற நன்மைகளுக்கு நன்றி செலுத்துகிறவன் மேலும் மேலும் இறைவனிடமிருந்து நன்மைகள் பெறத் தன்னை தகுதியுடையவன் ஆக்குகிறான். நம்பிக்கையில் வளர்கிறான். கடவுளின் மனிதரான எலிசா, தன்னைத் தொட்டு நோயைக் குணமாக்குவார் என்று எண்ணி வந்தப் படைத்தலைவன், ஆள்மூலம் சொல்லியனுப்பியதைக் கண்டு சினமடையலாம். இருப்பினும் வலிமைமிக்க வீரனான நாமான் இறைவாக்கினார் எலிசாவின் வாக்கை நம்பி யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழத் தன்னைப் பிடித்திருந்தத் தொழுநோய் நீங்கியதைக் கண்டு “இஸ்ரேயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்துக் கொண்டேன்" என்று கூறி எலிசாவுக்கு நன்றியாக அன்பளிப்பு கொடுக்கிறான். ஆனால் இறைவாக்கினர் வாங்க மறுத்து விடுகிறார். மாறாக, எலிசா வழியாக அருளைப் பெற்றுக் கொண்டு வேறு எந்தத் தெய்வங்களுக்கும் பலி செலுத்தமாட்டேன் என்று உறுதியாக முடிவு எடுத்து உண்மை இறைவனுக்கு ஏற்றவாறு வாழ்ந்தான் என்பதை இன்று முதல் வாசகத்திலே கேட்டோம். இறைவனைக் கண்டு கொண்டு அவருக்கு நன்றி செலுத்தும்பொழுது அவருடைய எல்லையற்ற அன்பும் அருளும் நம்மை மீட்பின் பாதைக்கு அழைத்துச் செல்லும். இன்றைய நற்செய்தி வாசகத்திலே, இறைமகன் இயேசு 10 தொழுநோயாளிகளைக் குணமாக்கிட ஒருவன் மட்டும் திரும்பி வந்து அவருக்கு நன்றி செலுத்துகிறான். குணமளிக்கும் இயேசு வருவதைக் கண்டு உரக்கக் கத்தி "ஐயா! இயேசுவே எங்களுக்கு இரங்கும்" என்று 10 பேரும் வேண்டினார்கள். குணமளிக்கும் ஆண்டவர் அவர்கள்மேல் பரிவு கொண்டு அவர்களைக் குருவிடம் சென்று காட்டச்சொல்லுகிறார்.

பார்வையற்றவர்களைக் குணமாக்கியவர், ஊனமுற்றவர்களை குணமாக்கியவர், ஊமையானவரைப் பேசவைத்தவர், இறந்தவரை யெல்லாம் உயிர்த்தெழச் செய்த ஆண்டவர் இயேசு இந்தத் தொழுநோயாளர்களைத் தொடவில்லை. மாறாகக் ‘குருவிடம் சென்று உங்களைக் காட்டுங்கள்' என்று சொல்லுகிறார். தன் முன் முழந்தாள் படியிட்டு மன்றாடிய தொழுநோயாளியைக் கைகளால் தொட்டு குணமாக்கிய ஆண்டவர் (மத்தேயு 8:1-4; மாற்கு 1:40-45) இவர்களைத் தன் உள்ளத்தால் மட்டும் தொட்டு குணமாக்க விரும்புகிறார். இவர்களது நம்பிக்கையை அறிய விரும்புபவராக இயேசு இங்கே தோன்றுகிறார். அதுமட்டும் அல்லாமல் யூதச் சமுதாயத்தில் யாராவது தொழுநோய்ப் பிடிக்கப்பட்டு இருந்தால், அவனைக் குருதான் நோய் குணமாகி விட்டதா, இல்லையா என்று பார்த்துச் சொல்ல வேண்டும் என்பதையும் குணம் பெற்றதற்- கான காணிக்கைச் செலுத்த வேண்டும் என்றும் இயேசு நன்கு அறிந்திருந்தார். எனவே தான் அந்த 10 தொழுநோயாளிகளையும் ஆண்டவர் குருவிடம் காட்டச் சொல்லுகிறார். ஆரோன் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்த மோயிசன் சட்டத்தைக் கடைபிடிக்க ஆண்டவர் அவர்களைக் குருக்களிடம் அனுப்புகின்றார். அவர்கள் அவ்வாறு செல்லும்பொழுது வழியிலேயேக் குணமடைந்து விட்டதை உணர்ந்த சமாரியன் திரும்பி வந்து ஆண்டவருக்கு நன்றி சொல்லுகிறான். இவருடைய நன்றி உணர்வைக் கண்ட இறைமகன் இயேசு இவனுக்கு ஆசீர் அளித்து அனுப்புகிறார். புற இனத்தானான சமாரியனை மெச்சுகிறார். ஆனால் யூதர்களின் நன்றியின்மையைக் கண்டு ஆண்டவர் திகைக்கிறார். ஆனால் இப்படிப் பட்டவர்களையும் புறம்பே தள்ளாதவர் நம் ஆண்டவர் என்பதை உணர்ந்து நாம் அவரை அணுக வேண்டும். யூதன் அல்லாத சமாரியன் குணமானதைக் கண்டாவது குருக்கள் இயேசுவின் மீது நம்பிக்கைக் கொள்ள வழிசெய்கிறார்.

உடல்நோய்களை மட்டும் குணமாக்க வந்தவரல்ல நம் ஆண்டவர். மாறாக நமது ஆன்ம நோயையும் குணமாக்கி மீட்பு வழங்க வந்தவர். குணமளித்தல்தான் இயேசுவின் மீட்பாக இருந்தது. ஏனென்றால் பாவத்தால் உடல் மட்டுமல்ல, ஆன்மாவும் நோய்வாய- பட்டுள்ளது என்பது அவருக்குத் தெரியும். உடல் இச்சைகளின் வழி ஆன்மாவும் தொழுநோய் பிடித்த ஆன்மாவாக மாறிவிடும். ஒருவனுடைய ஆன்ம நோய் குணமாகும்பொழுது அவனது உடல் நோயும் குணமாகிறது என்பதை இன்று நமக்கு உணர்த்தவே நம்மைப் பிடித்துள்ள ஆன்மாவின் தொழுநோயைக் குருவிடம் காட்டச் சொல்லுகிறார். எந்த மனிதனையும் அவர் உடல் வேறு ஆன்மா வேறு என்று பிரிக்கவில்லை. ஆதலால் நம்மையும் ஒப்புரவு என்னும் திருவருட்சாதனத்தின் வழியாகக் குருக்களிடம் சென்று பாவ- மன்னிப்பு பெற்று ஆன்ம நோயினின்று விடுதலை பெறச் சொல்லு- கிறார். மெல்கிசதேக்கின் முறைப்படி ஆண்டவர் இயேசுவே நமக்கு என்றும் பெரியக் குருவாக இருக்கிறார். அதனால் தான் தன் அதிகாரத்தைக் குருக்களுக்குக் கொடுத்து இன்று அவர்கள் வழியாகப் பாவமன்னிப்பு பெற வழி செய்துள்ளார். ஆகவே நாம் குருவிடம் செல்லும்பொழுது மனிதர்களிடம் செல்லுவதில்லை. மாறாக நம் பெரியக் குருவாகிய ஆண்டவர் இயேசுவிடமே செல்லு- கிறோம் என்று எண்ணி பாவமன்னிப்பு திருவருட்சாதனத்தில் பங்கேற்க வேண்டும். நம் நோய்களையும் பாவங்களையும் சுமந்து கொண்டவர் அவர். அவரிடம் 'ஆண்டவரே எங்கள்மேல் இரக்கமாயிரும்' என்று கேட்கும்பொழுது நம்மை அரவணைத்து குணமாக்குவார். அவர்மீது கொண்ட நம்பிக்கையில், பாவமன்னிப்பின் வழி குணம் பெறுகின்றபொழுது, நன்றி மறந்த 9 தொழுநோயாளர்- களைப் போல் இல்லாமல் நன்றி சொல்ல வந்த சமாரியனைப் போல எப்பொழுதும் நன்றியுள்ளவர்களாய் வாழ்ந்து காட்டுவோம். அதனால் இறையாசீர் பெற்று வளமுடன் வாழ்வோம்.

எத்தகைய நோயையும் குணமாக்குகின்ற, எந்தப் பாவத்தில் இருந்தும் சாபத்திலிருந்தும் விடுதலை கொடுக்கின்ற ஆண்டவர் இயேசுவிடம் தொடரும் திருப்பலியிலே நம்மை முழுமையாக அர்ப்பணித்து நன்றியுள்ளம் கொண்டவர்களாய் நற்கருணை மூலம் வருகின்றவரைத் தாழ்ச்சியான உள்ளத்தோடு வரவேற்போம். நம்பிக் கையினால் நலம் பெற்று நற்கருணையினால் அழியா வாழ்வைப் பெறுவோம். நோயற்ற வாழ்வே குறைவற்றச் செல்வமாக அன்னை மரியின் பரிந்துரைவழி ஆண்டவர் இயேசுவிடம் செல்லுவோம். மீட்பு பெறுவோம். அவருடைய செயல்களுக்காய் நன்றி கீதம் பாடுவோம்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

  • குணமளிப்பவர் நம் ஆண்டவர் இயேசு ஒருவரே.
  • பாவம் நீங்கினால் நோய் நீங்கும்.
  • மனித நேயமே இறை நேயம்.
  • நம்பினோர் கெடுவதில்லை.
  • நன்றி சொல்ல மறவாதே. நன்மைகள் பெறாமல் இராதே.
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக் காலம் இருபத்தெட்டாம் ஞாயிறு

1. பின்னணி

இன்றைய முதல் வாசகமும் நற்செய்தியும் பல விடயங்களில் ஒன்றிணைகின்றன. இரண்டிலும் தொழு நோயாளர் குணமாதல் பேசப்படுகிறது. இருவரும் யூதரல்லா பிற இனத்தார், இருவரும் (நாமானும், சமாரியரும்) நன்றியுடையவர்களாக இருக்கின்றனர், திரும்ப வந்து நன்றி செலுத்துகின்றனர். இயேசுவின் வாழ்விலும் லூக்கா இந்த இடத்தில் இதை விவரிப்பதற்கும் பல காரணங்களும் பொருளும் உள்ளன. அவற்றை விவரிக்கும் முன் இந்நிகழ்வுக்கான சில பின்னணித் தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

1.1. யூதத்தில் தொழுநோயாளர்

யூத சமயத்திலும் சமூகத்திலும் தொழுநோயாளர்களை நடத்தும் விதம்குறித்துக் கட்டளைகள் இருந்தன. எண் 5:2-3ன் படி அவர்கள் மக்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டுத் தனியாக, ஒதுக்குப் புறத்தில் வாழ வேண்டும். லேவி 13:45-46ன் படி மேலுதட்டை மறைத்துக்கொண்டு, மற்றவர்கள் தங்களை அணுகிவராவண்ணம் 'தீட்டு, தீட்டு' எனக்குரலெழுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் சமூகத்திற்கு புறம்பாக்கப்பட்டவர்களாக இருப்பர். அவரைத் தீட்டுள்ளவர் எனக்கண்டு அவரைச் சமூகத்திற்குப் புறம்பாக்கும் வேலையையும் (லேவி 13:3, 10-11), அவர் தீட்டற்றவர் (லேவி 13:13) எனக் கணித்து அவரைச் சமூகத்தில் இணைத்துக் கொள்ளும் பணியையும் சமூகத்தின் பிரதிநிதியாய் குரு செய்வார்.

1.2. லூக்கா நற்செய்தியின் பின்னணி

லூக்கா நற்செய்தியின் பதினேழாம் அதிகாரத்தின் தொடக்கத் தில் சீடத்துவத்தின் எதிர்பார்ப்புகள், தேவைகள், சவால்கள் ஆகியவற்றைக் குறித்து பேசியபின் இயேசுவின் வரலாறு, நிகழ்வுகள் மீண்டும் தொடர்கின்றன. இயேசு ஓர் இறைவாக்கினராக எருசலேம் நோக்கிப் பயணம் செய்கின்றபோது கலிலேய, சமாரியப் பகுதிகளில் இந்நிகழ்ச்சி நடைபெறுகின்றதாக அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பகுதிக்கும், இதற்கு முந்தைய பகுதிக்கும் இடையேயும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. முந்தைய பகுதியில் 'கடுகளவு நம்பிக்கை'யைப் (வச. 6) பற்றி இயேசு பேசுகின்றார். இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசு நலம் பெற்ற சமாரியரிடம் “உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” (வச 19) என்று கூறி அனுப்புகின்றார். எனவே நம்பிக்கை எனும் கருத்து இவையிரண்டையும் இணைக்கின்றது. அதேபோல முந்தைய பகுதி "நன்றி கூறுவதைப் பற்றி”ப் (வச. 9) பேசுகின்றது. இந்த பகுதியிலும் நன்றி கூறுவது மையப் புள்ளியாக அமைந்துள்ளது. எனவே இப்பகுதி சீடர்களுக்கு நன்றியைப் பற்றி உணர்த்தும் பகுதியாகக்கூட கொள்ளலாம். அதாவது சீடர்கள் தாங்கள் செய்த பணிக்கு நன்றியை எதிர்பார்க்கக் கூடாது (காண். வச. 7-10) மாறாக செய்ய வேண்டிய கடமையைத் தாங்கள் செய்ததாக எண்ணிக் கொள்ள வேண்டும். ஆனால் தாங்கள் பெற்ற நன்மைக்கு சமாரியரைப் போல நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் எனும் கருத்தை இந்தப் பகுதி சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சிப்பதாகவும் கொள்ளலாம். இனி இன்றைய நற்செய்திப் பகுதி தரும் பிற செய்திகளை இவண் காண்போம்.

2. கிறிஸ்தியல்

இந்த நற்செய்திப் பகுதி நமதாண்டவரைப் பற்றிய இரு செய்திகளை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. முதலாவது, இயேசுவுக்கு இருக்கும் குணப்படுத்தும் ஆற்றல், குறிப்பாகக் கொடியது எனப்படும் தொழுநோயையும் குணப்படுத்தும் ஆற்றல். லூக் 5:12-16-ல் இயேசு தொழுநோயாளர் ஒருவரைத் தொட்டுக் குணமாக்குகின்றார். இங்குப் பத்துப் பேரைத் தொடாமலே தூரத்திலிருந்தே குணமாக்குகின்றார். அடுத்து இயேசுவை எருசலேம் நோக்கிப் போய்க் கொண்டிருப் பவராகக் காட்டுவது அவரை ஓர் இறைவாக்கினராக படம்பிடித்து காட்டுகின்றது. இந்தப் பயணத்தில் அவரை ஏற்றுக் கொண்டு அவருக்குச்சார்பாயிருந்தவர்களையும், அவரை எதிர்த்து அவருக்கு எதிராய் இருந்தவர்களையும் லூக்கா அவ்வப்போது பதிவு செய்கின்றார். அந்த வகையில் இறைவாக்கினருக்கான ஏற்பும் எதிர்ப்பும் என்னும் கண்ணோட்டத்திலும் இப்பகுதியைக் காணலாம். அதோடு கூட ஓர் இறைவாக்கினர் ஒரு நல்ல செயலைச் செய்தபிறகு அதற்கு நல்ல நேர்மறையான பதிலிருப்பை, உதவி பெற்றவரிடமிருந்து நன்றியை எதிர்பார்க்கும் ஏக்கத்தை, "பத்து பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே" (வச. 17-18) எனும் இயேசுவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

ஐந்தாம் அதிகாரத்தில் ஒரு தொழுநோயாளரை குணப்படுத்திய போதும், இங்கும் இயேசு அவர்களை மறவாமல் குருவிடம் காட்டச் சொல்கின்றார். இவ்வாறு இயேசு மோசேயின் சட்டத்தைக் கடைப்பிடிப்பவராகக் காட்டப்படுவதோடல்லாமல், தொழுநோயாளர்களின் உடல் நோய் நீங்குவது மட்டுமல்லாமல் அவர்கள் மீண்டும் சமூகத்தோடு இணைக்கப்பட்டு சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை இயேசு வலியுறுத்துவதாக இதைக் கொள்ள வேண்டும்.

3. குணமடைந்தவர்

இதே நிகழ்ச்சிப் பகுதியைக் குணமடைந்தவர் எனும் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அவர்கள் இயேசுவை எதிர்கொண்டு வருகின்றனர். தங்களைத் தாங்களே 'தீட்டு' 'தீட்டு' எனக் கத்துவதற்குப் பதிலாக 'ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்' என்று குரலெடுத்து கூவுகின்றனர். தங்களின் செபத்தை ஏறெடுக்கின்றனர்.அடுத்து 'நீங்கள் போய் உங்களைக்குருக்களிடம் காண்பியுங்கள்' (வச.14)எனும்வார்த்தையைநம்பி, இயேசுவைநம்பி குருக்களிடம் செல்லும் வழியிலேயே தங்களின் நம்பிக்கையால் நலமடைகின்றனர். அதனால்தான் இயேசுவும், 'உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது' என்கிறார் (வச. 19). இறுதியாக, திரும்பி வந்த சமாரியர் 'கடவுளைப்போற்றி புகழ்கின்றார் (வச. 15), இயேசுவின் காலில் முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்துகிறார் (வச. 16). எனவே இந்தக் குணமடைந்தவரைப் போல நாமும் நம் வாழ்வில் முதலில் இறைவார்த்தையின் மீது, இயேசுவின்மீது நம்பிக்கையுடையவர்களாக இருப்போம்.அடுத்து இறைவனிடமிருந்து பெற்ற நன்மைகளுக்கு நன்றியுடையவர் களாய், இறைவனை புகழ்கின்றவர்களாக இருக்க முயல்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் - இருபத்தெட்டாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம் : 2 அர. 5 : 14-17

சிரியா அரசனின் படைத்தலைவனான நாமான் தன் தொழுநோயிலிருந்து இஸ்ரயேல் இறைவாக்கினர் எலிசாவால் குணமாக்கப்பட்டது பற்றிக் கூறுகிறது இன்றைய வாசகம். சிரியாவையும் இஸ்ரயேலையும் தம் விருப்பத்திற்கும் திட்டத்திற்கும் ஏற்ப நடத்திச் செல்பவர் ஆண்டவர் ஒருவரே என்று எடுத்துக்காட்டுவதோடு, நாமான் நலம் பெற்று இஸ்ரயேலரின் கடவுளை ஏற்றுக்கொண்டதைப் பற்றியும் இன்றைய வாசகம் வழியாக அறிகிறோம்.

நாமானின் கீழ்ப்படிதல்

"நீ போய் யோர்தான் நதியில் ஏழு முறை குளித்தால் உன் உடல் நலம் பெறும்; நீயும் தூய்மையடைவாய்" (5 : 10) என்ற எலிசாவின் சொற்கள் நாமானைக் கோபமடையச் செய்தனவெனினும், எலிசா தன்னைத் தொட்டுக் குணப்படுத்தவில்லையே என்று நாமான் வருத்தமுற்றாலும், நல்ல தண்ணீரையுடைய அபானா, பர்பார் என்ற தன் நாட்டு ஆறுகளை விட்டுவிட்டு, யோர்தான் ஆற்றில் குளிக்கச் சொல்கிறாரே என்று முணுமுணுத்தாலும், இறுதியிலே நாமான் எலிசாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறான் (5: 11 - 13). "அவனது உடல் நலம் பெற்றுச் சிறு குழந்தையின் உடலைப் போல் மாறிற்று; அவனும் முழுவதும் தூய்மை யடைந்தான்" (5: 14). இறைவாக்குக்குச் செவிமடுக்கும்போது இறைவனுக்கே செவிமடுக்கிறோம். ''உயிரைக் கொடுக்கவும் உயிரை எடுக்கவும் வல்ல கடவுள்" (5:7) இன்னும் அவருடைய வார்த்தைகள் வழியாக, வேதாகமம் வழியாக நம்மிடம் பேசுகிறார்; நமக்குக் குணமளிக்க விரும்புகிறார். அவருடைய வார்த்தைகளுக்குச் செவிமடுப்போமா? "எழுந்து நட" (லூக். 5: 21 - 25) என்று அன்று சொன்ன இயேசு இன்றும் "நோயிலிருந்து எழுந்து நட", "பாவத்திலிருந்து எழுந்து நட' “சுயநலத்திலிருந்து, பேராசையிலிருந்து, அநீதியிலிருந்து எழுந்து நட" என்று நம்மிடம் கூறுவதைக் கேட்டுக் கீழ்ப்படிவோமா?

நாமானின் நன்றி

"பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” (லூக். 17: 11- 19) என்றார் இயேசு. நாமானின் நன்றிச் சொற்களைக் கேட்ட கடவுள் நிச்சயம் மகிழ்வுற்றிருப்பார். "இஸ்ரயேலின் கடவுளைத் தவிர வேறு கடவுள் அனைத்துலகிலும் இல்லை" (5:15) என்ற அவனுடைய நன்றிச் சொற்களும், அச்சொற்களை உறுதிப்படுத்திய அவனது காணிக்கைகளும் (5 : 15) நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. நன்றி செலுத்துவது ஒரு கடப்பாடாகும். இறைவனுடைய அளவற்ற அன்றாடக் கொடைகளுக்காக மட்டுமன்று, நம்மைச் சூழவிருப்போரின் நற்சொற்கள், செயல்களுக்கு “நன்றி” யென்று வாய்திறந்து கூறுகிறோமா? “இடரைக் களைந்த எந்தாய் போற்றி”, "நனவிலும் நாயேற்கருளினை போற்றி”, “அடைந்தவர்க்கருளிய அப்பா போற்றி”, “இருள்கெட அருளிய இறைவா போற்றி” (திருவாசகம் போற்றித் திருவகவல்). "போற்றி, போற்றி" யென்று இறைவனுக்கும் ஏனையோருக்கும் நன்றிக்கீதம் பாடுவதற்குப் பழகிக்கொள்வோமா?

நாமானின் வாக்குறுதி

அந்நிய தேவர்களை விட்டுவிட்டு, "ஆண்டவருக்கு மட்டுமே பலியிடுவேன்" (5:17) என்பான் நாமான். அவன் மறந்தும் பிறதெய்வங்களை வழிபடவோ, பிற தெய்வ வழிபாடுகளில் ஈடுபடவோ மாட்டான் என்பதும் அவனுடைய சொற்களிலிருந்து (5 : 18) புலனாகின்றது. இயேசுவையே முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொண்ட நாம் எத்தனை “குட்டித் தெய்வங்களுக்கு" நமது உள்ளத்திலே பீடம் கட்டித் தூபம் காட்டுகிறோம்? பெண், மண், பொன் இவையனைத்தும் தன்னிகரில்லாத் தலைவனாகிய இறைவனுடைய இடத்தை ஆக்கிரமிக்கும்போது, உண்மையாகவே இயேசுவைத் தவிர, "யாமார்க்கும் குடியல்லோம்” (திருவாசகம், திருச்சதகம்) என்று நாம் வாய்விட்டுக் கூறமுடியுமா?

ஆண்டவரைத் தவிர வேறு கடவுள் அனைத்துலகிலும் இல்லை.

இரண்டாம் வாசகம் : 2 திமொ. 2:8-13

தன் “அன்பு மகன் திமொத்தேயு” தன்னுடைய மறைப்பணியிலே பற்பல துன்பங்கள் எதிர்ப்படும்போது தளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகப் பவுல் சில அறிவுரைகள் கூறுகிறார். இவ்வறிவுரைகளின் கருப்பொருளும் பவுலின் வாழ்வுச் சாட்சியமும் இன்றைய வாசகம் வழி வெளிப்படுகின்றன.

பவுல் சாட்சியம் பகரும் நற்செய்தி

தெய்வத்தன்மையை விடுத்த, பலவீன மனிதனாக மட்டும் இயேசுவை இன்று சிலர் போதிக்கின்றனர்! மாறாக, மனிதக் குறைபாடுகளே இல்லாத வேற்றுலகப் பிறவியான தெய்வீக இயேசுவை மட்டுமே போதிப்பவரும் உண்டு. இரு சாராருமே “இயேசு நிகழ்ச்சியை” முழுவதும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. "மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆக வேண்டியதாயிற்று" (எபி. 2 : 10 -18) என்று கூறிய அதே ஆசிரியர், “மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே” (எபி. 5 : 5 - 6), “கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப்பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார்" (எபி. 1: 1 - 4) என்றும் இயேசு கிறிஸ்துவின் மனிதத் தன்மையையும் இறைத்தன்மையையும் இணைத்தே கூறுவது காணற்பாலது. ஆம், இயேசு உண்மையான மனிதன், உண்மையான கடவுள். இவ்விரண்டு உண்மைகளும் சேர்ந்தே “நற்செய்தி" ஆகிறது. பவுல் இவ்வுண்மையை ஒழிவு மறைவின்றி ஏற்று இயேசுவைத் தாவீதின் வழிவந்த மனிதன் என்றும் அதே வேளையிலே இறந்தோரிடமிருந்து உயிர்த்த கடவுள் என்றும் போதிக்கிறார் (2 திமொ.2:8; உரோ. 1:3-4; திப. 13:22-23). கடவுள் என்ற முறையில் நம்மனைவருக்கும் மேம்பட்ட “முதலும் முடிவும்" இயேசு; மனிதர் என்ற முறையில், நம் நோய் நோக்காட்டில், நமது பலவீனங்களில், நமது சாவில் நம்மோடு இணைந்த “நம் சகோதரர்” இயேசு. இம்முழு நற்செய்திக்குச் சான்று பகர்தல் நம் கடன்.

பவுலின் நற்செய்திப் பணி

"நற்செய்திக்காகக் குரல்கொடுக்கவே நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என இவர்கள் அறிவார்கள்” (பிலி. 1: 16). அந்நற்செய்திக்காக, “பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறி பட்டேன்; மூன்று முறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில் ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன். இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும்பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது” (2 கொரி. 11: 23 29) என்று கூறும் பவுல் நம் எல்லோரையும் வெட்கித் தலை குனிய வைக்கிறார். என்னென்ன காரியங்களுக்கெல்லாம் நம்முடைய நேரத்தைக் கொடுத்து, நம்முடைய திறமைகளைக் கொடுத்து, நம்முடைய பணத்தைக் கொடுத்து, நம்முடைய உடலையே, உயிரையே கொடுக்குமளவுக்கு உழைத்து ஓய்ந்திருக்கிறோம். அவற்றில் நூற்றில் ஒரு பங்கு நற்செய்திப் பணிக்காகக் செலவளித்திருக் கிறோமா?

நற்செய்தி காட்டும் வாழ்வு

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்" (யோ. 12 : 24) என்ற ஆண்டவரின் சொற்களே நற்செய்தியின் சுருக்கம் எனலாம். துன்பமின்றி இன்பமோ, வருத்தமின்றி வாழ்வோ, இறப்பின்றி உயிர்ப்போ கிடையாது. எனவே மறுவுலக வாழ்வு பெற மட்டுமன்று, இவ்வுலக வாழ்வை வளப்படுத்தவும் “இயேசுவோடு நாமும் இறக்க வேண்டும்" (2:11).

அவரோடு இறந்தோமானால் அவரோடு வாழ்வோம்.

நற்செய்தி: லூக். 17:11-19

நமதாண்டவர் பாவம் தவிர ஏனைய அனைத்திலும் நம்மையொத்தவர். அவர் திருமணத்திற்குச் சென்றதும், துக்கம் விசாரிக்கச் சென்றதும், குழந்தைகளைக் கொஞ்சியதும், தாகத்தால் தவித்தபொழுது சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் கேட்டதும் (யோ. 4:7), கெத்சமனித் தோட்டத்தில் மரணபயம் அனுபவித்ததும் அவர் நம்மையொத்த முழுமனிதன் என்பதற்குச் சான்றுகள். இன்று அவரது மனித உள்ளம், நன்றி நவின்றதற்காக மகிழ்ந்து, நன்றி கொன்றவர்களுக்காக வேதனைப்படுவதைக் காணலாம்.

எளியோரின் குரல் கேட்போமா?

இப்பத்து தொழுநோயளிகளும் ஊருக்குப் புறம்பே ஒதுக்குப் புறத்தில் வாழ்ந்தனர் (லேவி. 13: 45-46; எண். 5: 2). கையில் மணியுடன் நடந்து சென்றனர். மற்றவர்கள் அவர்கள் மணிச் சத்தம் கேட்டு, கவனமாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இப்படி சமுதாயத்தில் நிராகரிக்கப்பட்டவர்களையே இயேசு அன்புடன் நோக்கினார். அவர்களுடன் பேசினார். தூரத்தில் நின்றுகொண்டே அவர்கள் “இயேசுவே எங்கள்பேரில் இரக்கமாயிரும்" என்று உரக்கக் கூவினார். இயேசுவை முன்பின் காணாதவர்கள்; அவரது போதனையைக் கேட்டிராதவர்கள்; எனினும் அவர்களது அழைப்பிலே அவரைத் தம் குருவாக, இரக்கத்தின் இருப்பிடமாகக் காண்கின்றனர். வெந்து போன உடல் : நொந்து போன உள்ளம்; அங்கிருந்து எழுந்த குமுறலே அவர்களது செபம். இன்று தெருவிலே சரியான ஆடையின்றி, அழிந்துகொண்டிருக்கும் உடலைக் கொண்ட இத்தகையவரைக் காண்கின்றோம். இவர்களது குரல் நமது செவிக்கு எட்டுகிறதா? அவர்களைத் தேடிச் சென்ற இயேசுவின் இரக்க உள்ளம் என்னிடம் உண்டா?

"மன்னுயிர் எல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணர்தல் வேண்டும்." (பாரதி)

இறைச்சக்தியில் நம்பிக்கை வைப்போமா?

தன்னிடம் குணம் வேண்டி வந்தவர்களின் விசுவாசத்தை மேலும் சோதிக்கிறார் இயேசு. நீங்கள் போய்க் குருக்களிடம் உங்களைக் காட்டுங்கள் என்றார் (17:14). இறைவாக்கினர் தன்மீது கரங்களை வைத்து, செபித்துக் குணமாக்குவார் என்று ஆவலுடன் வந்து, ஏமாற்றமுற்று, கோபமடைந்த நாமான் போலின்றி (2 அர. 5) இவர்கள், உடனே திரும்பிச் சென்றனர். இயேசுவின் வார்த்தையிலே அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. இறைச்சக்தி ஆற்றலுள்ளது; தூரத்திலிருந்தே தொடாது குணமாக்கும் அற்புத சக்தி வாய்ந்தது அது. அவர்கள் நம்பிக்கை வீணாகவில்லை. அவர்கள் செல்லும்போது குணமடைந்தனர். நமது செபமும் பலனளிப்பது விசுவாசத்தின் அளவைப் பொருத்தது.

பெற்ற நன்மைக்கு நன்றி பகர்வோமா?

குணமடைந்த சமாரியன் உரத்த குரலில் கடவுளை மகிமைப்படுத்திக் கொண்டு திரும்பி வந்தான். குணமளிக்கும் இம்மருத்துவரிடம் வந்து அவரது பாதத்தில் முகம் குப்புற விழுந்து நன்றி செலுத்தினான். நற்செய்தி ஏடுகளில் சில இடங்களில் இயேசுவின் இதயம் பொங்கி எழுவதையும், வேதனைச் சொற்களாக அது வெடிப்பதையும் கேட்கிறோம். சீடனே நம்பிக்கைத் துரோகம் செய்ததால் "யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?" என்றார் (லூக். 22: 48). அநியாயமாகத் தன்னை அறைந்ததற்காய் வேதனைப் படுகிறார் (யோ. 18:23). "பத்துப் பேர் குணமானார்களே! மற்ற ஒன்பது பேர் எங்கே”? என்கிறார். அவர் நமக்குச் செவிசாய்த்ததற்காக நாம் நன்றி நவில்கின்றோமா?

நாம் இறைவனிடம் எண்ணரிய நன்மைகளைப் பெற்றுள்ளோம். நமது பிறப்பு ஒரு கொடை; நமது வாழ்வு இறைவனின் அன்றாடப் புதுப்படைப்பு. மீட்பு, மாபெரும் மறையுண்மை. இவை அனைத்திற்கும் நன்றி கூறுவோம். நன்றியைச் செய்கையில் காட்டுவோம்.

பத்துப் பேர் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு