மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

காலம் -ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



ஏழை இலாசர் - பணக்காரன்

இன்றைய நற்செய்தியிலே வருகின்ற உவமையில் ஏழை பணக்காரன் என்ற இரு நபர்கள் முன் நிறுத்தப்படுகிறார்கள். ஏழைக்கு பெயர் தரப்பட்டுள்ளது. பணக்காரனுக்குப் பெயர் தரப்படவில்லை. பணக்காரர்கள் நிரந்தரமான முகவரி அற்றவர்கள் என்பதே இயேசுவின் செய்தி. பணக்காரர்கள் விண்ணுலகிலும் நிலையான இடம் பெற வேண்டுமெனில் தங்களுக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டுத் தன்னைப் பின்பற்ற வேண்டும் என்பதே இயேசுவின் உறுதியான போதனை. ஏழைகள் இந்த உலகத்திலே இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக அதற்குக் காரணம் பணக்காரன்தான். உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க உறைவிடமும் இல்லாமல் வாடுகின்ற ஏழைகள் இருக்கின்ற நிலையில் பணக்காரர்களை வாழ அனுமதிப்பதே குற்றமாகும். எனவே ஆமோஸ் இறைவாக்கினர் சீயோன் குன்றின் மீது இன்பத்தில் திளைப்போரே. இஸ்ரயேல் மக்கள் தேடி வரும் அளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே உங்களுக்கு ஐயோ கேடு! (ஆமோஸ். 6:1) என்று அச்சத்தை விளைவிக்கும் இறைவாக்கு உரைக்கின்றார் (முதல் வாசகம்).

"தன் தேவைக்கு மேல் பொருள் சேர்த்து வைத்திருப்பவன் திருடன்" என்றார் காந்தியடிகள். "தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதி. பணக்காரர்களின் பெரிய தவறு தனக்குக் கீழே பசியினால் வாடி இருப்பவர்களைப் பார்க்க மறுக்கும் கோழைத்தனம்தான்.

கடையில் ஒரு மனிதன் தங்க நாணயங்களை விற்றுக் கொண்டிருந்தான். திருடன் ஒருவன் தன் பையில் தங்கங்களை அள்ளிப் போட்டு வேகமாக ஓட ஆரம்பித்தான். அருகில் நின்ற போலீஸ்காரர் இந்த திருடனைப் பிடித்து வந்து சிறையில் அடைத்தான். இவ்வளவு ஆட்களும், நிற்க உன்னால் எப்படி இந்தத் (மூன்றாம் வாசகம்) தந்திரத்தோடு செயல்பட்ட கண்காணிப்பாளனின் முன்மதியை மட்டும் இங்கே நாம் பார்க்க வேண்டும். ஆண்டவர் இயேசுவே கூறுகிறார் மிகுதியான உடைமைகளை ஒருவன் கொண்டிருந்தாலும், அவனுக்கு வாழ்வு வந்துவிடாது (லூக்.12:15) என்று.

அறம், பொருள், இன்பம் என்ற வழி முறையில், பொருள் மட்டுமல்ல. பொருளோடு அறமும், இறையருளும் சேர்ந்தால் தான் உண்மையான இன்பம் கிடைக்கும். நேற்றைய வேலையை இன்று முடிப்பவன் ஒரு முட்டாள். இன்றைய வேலையை இன்றே முடிப்பவன் ஒரு சராசரி மனிதன். நாளைய வேலையை இன்றே செய்பவன் ஓர் அறிவாளி. இதைத்தான் இன்றைய நற்செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது.

ஆண்டவர் இயேசு கூறுகிற அநீத செல்வங்களைக் கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள் (லூக்.16:9) என்றும், நீங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது (லூக்.16:13) என்றும் கூறுகிறார். நமது வாழ்வு இவ்வுலகில் குறுகிய காலம்தான். எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். இறைவன் கொடுத்த செல்வங்கள். கொடைகள், திறமைகள், ஆற்றல்கள் அனைத்தையும் பயனுள்ள முறையில் முன்மதியோடு வாழ அழைக்கப்படுகிறோம்.

தனக்காக வாழ்பவன் மிருகம்
தனக்காகவும் பிறருக்காகவும் வாழ்பவன் மனிதன்
பிறருக்காகவே வாழ்பவன் தெய்வம்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நீ என் கையாகச் செயல்படு

செல்வந்தன் ஏன் தீப்பிழம்பில் வேதனையுற்றான்? அந்தப் பணக்காரனிடம் ஏழை இலாசர் பிச்சைக் கேட்டதாகவோ, அவன் தர்மம் செய்ய மறுத்ததாகவோ நாம் படிப்பதில்லை. எந்தக் குற்றமும் செய்யாத ஒருவன் வேதனையுறுவது போலத் தோன்றுகின்றது. ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப்பார்த்தால் செல்வந்தன் செய்த பாவம், கடமையில் தவறிய பாவம் என்பது நமக்குப் புரியும்.

இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு இந்த உலகத்தில் வாழும் ஒவ்வோர் ஆணையும், ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து, தான் உண்டு, தன் வேலை உண்டு என்று வாழாமல், உங்கள் வீட்டை விட்டு வெளியே வாருங்கள். உலகத்திலே என்ன நடக்கின்றது என்று பாருங்கள் என்கின்றார்.

பணக்காரன் ஏன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை? பல காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை தான் சம்பாதித்த சொத்து. தனக்கு மட்டுமே சொந்தம்; அதை நான் எப்படி வேண்டுமானாலும் செலவழிக்க எனக்கு உரிமை உண்டு என்று அவன் நினைத்திருக்கலாம். ஒருவேளை அவன் இன்றிருப்போர் நாளை இருப்பதென்ன நிச்சயம்; ஆகவே இன்றே அனுபவி ராஜா அனுபவி, என்று அனுபவிப்போம் என நினைத்திருக்கலாம். ஒருவேளை அவன் பக்கத்தில் இருந்தவர்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்களெல்லாம் நன்றாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்ற தவறான செய்தியை அவனுக்கு அளித்திருக்கலாம். ஒருவேளை வீட்டைவிட்டு வெளியே வந்து உலகத்தில் என்னதான் நடந்துகொண்டிருக்கின்றது என்பதைப் பார்க்க அவனுக்கு நேரமில்லாமல் இருந்திருக்கலாம்.

எது எப்படியோ ? ஒன்று மட்டும் தெளிவாக இருக்கின்றது. பசியாயிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களின் பசியைத் தீர்க்காதவர்களுக்குப் பாதாளம் ஒன்று. தீப்பிழம்பு ஒன்று காத்துக்கொண்டிருக்கின்றது; அத்தீப்பிழம்பிலிருந்து அவர்களால் விடுதலை பெற முடியாது. அங்கே இரக்கம் என்ற சொல்லுக்கே இடமில்லை (லூக் 16:25-26) என்பதை அந்த செல்வந்தன் அறிந்துவைத்திருக்கத் தவறியிருந்தான். இறந்த பிறகு அந்தப் பணக்காரன் அந்தத் தவறை உணர்ந்து அவனுடைய சகோதரர்கள் வேதனை மிகுந்த இடத்திற்கு வராதவாறு எச்சரிக்கப்படவேண்டும் என விரும்புகின்றான் (லூக் 16:27-28).

ஆம். பசியாயிருப்பவர்களுக்குப் போதிய உணவை நாம் கொடுக்க மறுக்கும் வரை, தவறும் வரை பொருளாசையிலிருந்து நாம் நம்மையே விடுவித்துக்கொள்ளாதவரை (1 திமொ 6:10) நமக்கு இறையாட்சியின் (உரோ 14:17) உரிமைப் பேறு (மத் 25:34), நிலைவாழ்வு [1 திமொ 6:12] கிடைக்கப்போவதில்லை.

ஓர் இலட்சாதிபதி ஒரு நாள் கனவு கண்டான். அந்தக் கனவிலே கடவுள் தோன்றினார். அந்தக் கடவுளை வரவேற்று அவன் உபசரித்தான். பிறகு அவனுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலம், பங்களா. வாடகை வீடுகள், கடைகள், பெரிய தொழிற்சாலை. அவனுடைய வங்கிக்கணக்கு, செல் ஃபோன்கள், டி.வி, டெக், கம்ப்யூட்டர்கள் அனைத்தையும் சுட்டிக்காட்டி. இத்தனைக்கும் சொந்தக்காரன் நான் என்றான். அப்போது கடவுள், இவையெல்லாம் நான் உனக்குத் தந்தவைதானே! என்றார். அதற்கு அந்தப் பணக்காரன், ஆம் என்றான். அப்படியானால் இவை யாவும் யாருக்குச் சொந்தம்? என்றார். அவனோ, உமக்குத்தான் என்றான்.

கடவுளோ, என்னால் நேரடியாக ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாது என்பதால் உன்னிடம் இதைக் கொடுத்திருக்கின்றேன். நீ என் கையாகச் செயல்படு என்றார். முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் விடுக்கும் எச்சரிக்கையை நமது கண்முன் நிறுத்தி நம் வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்வோம். மேலும் அறிவோம் :

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (குறள் : 226).

பொருள் :
பசியால் வாடித் துன்புறும் வறியவர் பசிக் கொடுமையைப் போக்க வேண்டும். அச்செயலே ஒருவன் தான் தேடித்திரட்டிய செல்வதைப் பிற்காலத்தில் உதவுவதற்காகச் சேமித்து வைக்கத்தக்க கருவூலமாகும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர். "நான் கொலை செய்யவில்லை; திருடவில்லை; விபசாரம் செய்யவில்லை; எனக்குச் சொர்க்கம் கிடைக்குமா?" என்று கேட்டார். விவேகானந்தர் அவரிடம் தன் அறையிலிருந்த மேசை, நாற்காலியைக் காட்டி, "இந்த மேசைக்கும் நாற்காலிக்கும் சொர்க்கம் கிடைக்கும் என்றால், உமக்கும் சொர்க்கம் கிடைக்கும்" என்றார். "நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே" என்று அவர் விவேகானந்தரிடம் கேட்டார். விவேகானந்தர் அவரிடம் கூறினார்: "இந்த மேசையும் நாற்காலியும் கொலையோ விபச்சாரமோ செய்யவில்லை. அவற்றிற்குச் சொர்க்கம் கிடைக்குமா? எனவே, சொர்க்கத்திற்குப் போகவேண்டுமென்றால், தீமை செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது; நன்மையும் செய்ய வேண்டும்."

இன்றைய நற்செய்தி குறிப்பிடும் செல்வந்தர் தான் செய்த தீச்செயல்களுக்காக நரகத்துக்குப் போகவில்லை. மாறாக, அவர் செய்ய வேண்டிய நற்செயலைச் செய்யாமல் விட்டுவிட்டதற்காக அவர் தண்டனை பெற்றார். அவர் பாலும் பழமும் உண்டு. பஞ்சு மெத்தையில் படுத்து பகட்டான வாழ்வு நடத்தியது குற்றமில்லை. ஆனால் அவர் வீட்டு வாசற்படியில் மனித உருக்குலைந்து பரிதாபமாகப் படுத்துக்கிடந்த ஏழை இலாசரை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. எனவே, அவருடைய இரக்கமற்ற. மனிதநேயமற்ற செயலுக்காகவே அவர் தண்டிக்கப்பட்டார்.

நாம் இரண்டு விதங்களில் குற்றம் இழைக்கலாம். நாம் செய்ய வேண்டிய நற்செயலைச் செய்யாமல் விட்டாலும் குற்றம்; நாம் செய்யக்கூடாத தீயசெயலைச் செய்தாலும் குற்றமாகும் என்று குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர்.

செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்" (குறள் 466).

மனத்துயர் செபத்தில்: "குற்றங்கள் பல செய்தேன் எனவும் நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனநொந்து வருந்துகிறேன்" என்று பாவ அறிக்கை செய்கின்றோம்.

எனவே. நாம் தீமைகள் செய்யாமல் இருப்பதோடு, நன்மைகள் செய்ய வேண்டும்; குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். கடவுள் பணக்காரர்களுடைய கடவுள் அல்ல. ஏழைகளின் கடவுள். செல்வராயிருந்தும் நமக்காக ஏழையான கிறிஸ்து (2 கொரி 8:9), ஏழைகள் பேறுபெற்றவர்கள் என்றும் (லூக் 6:20). செல்வர்களுக்கு ஐயோ கேடு என்றும் (லூக் 6:24) தெளிவாகக் கூறியுள்ளார்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் கூறுகிறார்: இன்பத்தில் திளைப்போரே உங்களுக்கு ஐயோ கேடு; குடித்துவீட்டு கும்மாளம் அடிப்போரே நீங்கள் நாடு கடத்தப் படுவீர்கள். உங்கள் இன்பக் கழிப்பு இல்லாது ஒழியும் (ஆமோஸ் 6:1-7).

இதற்கு நேர் மாறாகப் பதிலுரைப்பாடல் கூறுகிறது: "ஆண்டவர் பசித்திருப்போர்க்கு உணவளிக்கிறார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்" (திபா 146). கடவுள் ஏழைகள் பக்கம் என்றால், நாம் யார் பக்கம் இருக்கின்றோம்?

உண்மையான சமயப் பற்றின் வெளி அடையாளம் என்ன? இக்கேள்விக்கு புனித யாக்கோபு கூறும் பதில்: "தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தல் ஆகும்" (யாக்1: 27) தூய யோவான் கேட்கிறார்: "உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டு பரிவுகாட்ட வில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?" (யோவா 3:17). எனவே கடவுளன்பு, பிறரன்பு வழியாகவே எண்பிக்கப்பட வேண்டும்.

வசதிபடைத்தவர்கள் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யாததற்குக் காரணம் என்ன? பொருள் ஆசை: மேலும் மேலும் பணம் சேர்க்க வேண்டுமென்ற பேராசை. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தமது சீடர் திமொத்தேயுவுக்குக் கூறும் 'அறிவுரை: "கடவுளின் மனிதனாகிய நீ பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு" (1 திமொ 6:11). பாம்பைக் கண்டு ஓடுவது போல பொருள் ஆசையிலிருந்து ஓடவேண்டும். அதே திருத்தூதர் மேலும் கூறுகிறார்: செல்வர்கள்' மேட்டிமை உணர்வு கொள்ளக்கூடாது. செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் கடவுளிடம் மட்டுமே நம்பிக்கை வைத்து, அவர்கள் தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிக்க வேண்டும் (1 திமொ 6:17-18).

ஏழைகளுக்கு உதவி செய்ய மறுப்பவர்களுக்காகக் காத்திருப்பது என்ன? ஒரு பணக்காரர் நிறைய வாழைப்பழங்களைத் தின்று அவற்றின் தோலை வீதியிலே வீசியெறிந்தார். ஒரு பிச்சைக்காரன் அத்தோலை எடுத்துத் தின்றான். பணக்காரர் அந்தப் பிச்சைக்காரனைக் கூப்பிட்டு அவன் முதுகில் பலமுறைக் கையால் குத்தினார். ஆனால் அப் பிச்சைக்காரன் சிரித்துக்கொண்டு சொன்னது: "தோலைத் தின்ற எனக்கு இந்தத் தண்டனை என்றால். பழத்தைத் தின்ற உமக்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ?" புனித யாக்கோபு செல்வர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை: "செல்வர்களே... உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள்... இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள்" (யாக் 5:1-5).

ஏழைகளை வாழவைத்தால் நமக்கு வானகப் பேரின்பம் காத்திருக்கிறது. ஏழைகளைச் சாகடித்தால் நமக்குக் கொடிய நரகம் காத்திருக்கிறது. “இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்... உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்" (திபா 95: 7-8).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பெயரும் பின்னணியும்

ஆல்பெர்ட் சுவைட்சர். அவர் பன்முகத்திறமைகளைத் தன்னகத்தே கொண்டவர். மாபெரும் மெய்யியல் மேதை, சிறந்த அறிவியல் அறிஞர், புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர், உயர்ந்த இறையியல் வல்லுனர், பேர் பெற்ற இசைக் கலைஞர், அனைத்துக்கும் மேலாக மறைத்தூதுப் பணியாற்றிய மருத்துவர்.

அவரது மகத்தான சேவைக்காக 1950ஆம் ஆண்டில் “இந்த நூற்றாண்டின் மாமனிதர்" என்ற பட்டம் கிடைத்தது. 1952இல் அமைதிக்கான நோபல் பரிசை உலகம் வழங்கியது. பத்து ஆண்டுகள் கல்வி, கலை, அறிவியல் என்று பல துறைகளில் உலகளவில் கொடிகட்டிப் பறந்த இவரை, கிறிஸ்துவின் மீது கொண்ட பற்று பொதுநலச் சேவையாளராகத் திசை மாற்றியது. 38ஆவது வயதில் மருத்துவ உயர் படிப்பை முடித்து 43ஆவது வயதில் ஆப்பிரிக்கா சென்று அந்த இருண்ட கண்டத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் மருத்துவமனை கட்டி 47 ஆண்டுகள் மருத்துவப்பணி மூலம் இறைப்பணி ஆற்றி 90ஆவது வயதில் 1965இல் இறையடி சேர்ந்தார்.

"இத்தகைய பிறரன்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் எப்படி வந்தது?” என்று கேட்டபோது அவர் சொன்னார்: "செல்வரும் ஏழை லாசரும் என்ற உவமையை ஆழச் சிந்தித்ததின் பயனே எனது மனமாற்றமும் வாழ்க்கைத் திருப்பமும். என்னைச் சுற்றிலும் பல்லாயிரம் மக்கள்பசியால், நோயால் துன்புறும்போது நான் மட்டும் இன்பமாக இருப்பதை என்னால் ஈற்றும் சீரணிக்க முடியவில்லை”. இறைவார்த்தை அவரது இதயத்தை ஊடுருவி மாற்றத்தை ஏற்படுத்தியது.

"நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியா?' (தொ.நூ.4:9) என்ற காயின் கேள்விக்கு இயேசு தரும் விளக்கமே இன்றைய நற்செய்தி. இரங்கும் மனம் கொண்டவர்கள் என்றுமே வாழ்வார்கள். தன்னைச் சுற்றிலும் தங்கள் இருப்பு நிலைக்காகப் போராடுபவர்களைக் கண்டும், மரத்த இதயத்தோடு இருப்பவர்கள் மகிழ்ச்சியற்ற, நிம்மதியற்ற இருளுலகிற்குள் தள்ளப்படுவார்கள் என்பதே அந்த நற்செய்தி!

'செல்வரும் இலாசரும்' என்ற உவமையின் தனிச் சிறப்பு கதையில் வரும் ஒருவருக்கு - அவருக்கு மட்டும் இலாசர் என்று பெயரிட்டிருப்பது, அது சுட்டிக்காட்டும் உண்மைகள் இரண்டு.

1. இலாசர் என்ற பெயருக்கு ஒரு பொருள் உண்டு. அது இயற்பெயரல்ல. காரணப் பெயர். இறைவனே எனக்குத் துணை என்பது அதன் பொருள். தனக்கென ஆளோ செல்வமோ துணையாக இல்லாத நிலையில்கடவுள் மட்டுமே பற்றுக்கோடு என்கிறது பதிலுரைப்பாடல். "ஆண்டவர் ஒடுக்கப்பட்டோருக்கான நீதியை நிலை நாட்டுகின்றார்... அனாதைகளையும்கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்" (தி.பா. 146:7-10). ஏழை பேறு பெற்றவன் ஏழை என்பதால் அல்ல. இறைவனைச் சார்ந்து வாழ்வதால். ஆண்டவரே துணை என்பதற்கு வசதி படைத்தவர்கள் சான்று பகர வேண்டும்.

2. இலாசர் என்ற பெயருக்கு ஒரு பின்னணி உண்டு. புதுமைகள் கூட ஒருவருடைய மனமாற்றத்துக்கு உதவாது. "அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காவிட்டால் இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள்” (லூக். 16:31). மார்த்தா மரியாவின் உடன்பிறப்பு இலாசரை உயிர்பெற்றெழச் செய்தார் இயேசு. அது மனமாற்றத்துக்கோ இயேசுவில் நம்பிக்கைக்கோ பரிசேயர்களைத் தூண்டவில்லை. மாறாக மனதை மேலும் கல்லாக்கி இயேசுவோடு இலாசரையும் கொல்ல வேண்டும் என்று எண்ண வைத்தது.

ஒருவரின் ஏழ்மைக்கு அவரே காரணமாகக்கூடும் - உழைக்க மனமில்லாத சோம்பேறித்தனம், மது போதை, சூதாட்டம், கூடா நட்பு போன்றவைகளால். ஆனால் பெரிதும் சமூக அநீதியின் விளைவுதான் ஏழ்மை. வாய்ப்பும் வழிகளும் சிலருக்கு மறுக்கப்படும்போது, இருப்பவற்றை எல்லாரோடும் பகிர்ந்து கொள்ள விரும்பாதபோது ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்ற அக்கறை இன்றி பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கும்போது ஏழ்மை வரவழைக்கப்படுகிறது.

“படகில் இரு கைகளாலும் அள்ளி படகும் பிழைக்கும். இந்த ஏழ்மைக்குப் பலியாகி இவ்வுலக வாழ்வில் நுன்புறுவோருக்கு நீதி இவ்வுலகில் மறுக்கப்பட்டாலும் அது மறு உலகில் நிச்சயம் உண்டு. இறையரசுக்கான ஏக்கம் ஏழைகளுக்கு மட்டும்தான் இருக்கமுடியும். இறைவனைத் தவிர அவர்களுக்கு வேறு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் உலகம் இகழ்ந்து ஒதுக்கும் ஏழைகளைப் பார்த்து, "நீங்கள் பேறு பெற்றவர்கள்" என்கிறார் இயேசு. வீட்டு வாசலில் கிடக்கும் ஏழையைப் பற்றிய உணர்வே இல்லாமல் செல்வச் செருக்கில் மிதப்பவனுக்கு ஆமோஸ் விடும் எச்சரிக்கை: "இன்பத்தில் திளைத்திருப்போருக்கு இன்பக் களிப்பும் ஒரு நாள் இல்லாதொழியும்” (முதல் வாசகம்). உவமையில் வரும் செல்வந்தன் பாதாளத்தில் புதைக்கப்படுவது மட்டுமல்ல. வதைக்கப்படுகிறான். (லூக். 16:23).

அவன் அட்டூழியம் செய்ததாகவோ எவருக்கும் அநீதி இழைத்ததாகவோ எந்தக் குறிப்பும் இல்லை. எனினும் நரக நெருப்பில் தள்ளப்படுகிறான் என்றால் அவன் செய்த தீச்செயல்களுக்காக அல்ல. நற்செயல் செய்யத் தவறியதற்காக. ஏழையை எட்டி உதைத்தான் என்பதற்காகஅல்ல, எழையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பதற்காகவே! செய்யத் தகாதவற்றைச் செய்வதும் குற்றம். செய்ய வேண்டியவற்றைச் செய்ய தவறினாலும் குற்றமே! சாவுக்குப் பின் செல்வந்தனுக்கும் இலாசருக்கும் இடையே நிலவிய, கடக்க இயலாத பாதாளம் உலகில் வாழும்போதே செல்வந்தன் ஏற்படுத்திக் கொண்டதுதான். “ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக் கொள்கிறானோ, அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்கு செவி கொடுக்க மாட்டார்” (நீ.மொ.21:13)

''மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (லூக். 12:15) அப்படியானால் வாழ்வு என்பது எதிலே? பணத்திலோ பொருளிலோ, பகட்டிலோ அல்ல; அன்பிலே, இரக்கத்திலே, மனித நேயத்திலேதான்.

தன் வீட்டு வாயில் அருகே இருந்த ஏழையை எவ்விதத்திலும் துன்புறுத்தாமல், வெறுமனே கண்டு கொள்ளாத, கருணை காட்டாத செல்வந்தனுக்கே இந்தக் கதியென்றால், செல்வச் செருக்கில் ஏழைகளை இழிவாக நடத்துவோருக்கு, எள்ளி நகைப்போருக்கு, ஏமாற்றிச் சுரண்டுவோருக்கு என்னவெல்லாம் காத்திருக்குமோ!

பேரரசர் ஒருவர் மலர்ப்படுக்கையில் தூங்குவதே வழக்கம். படுக்கையில் மலர்களைப் பரப்புவதற்கென்றே ஓர் அடிமைப்பெண் வேலைக்கு அமர்த்தப்பட்டாள். ஒரு நாள் தானும் சிறிது மலர்ப்படுக்கையில் படுத்தால் என்ன என்ற ஆர்வம் எழ அரசன் இல்லாத நேரம் பார்த்துப் படுத்தவள் தன்னையறியாது கண்ணயர்ந்துவிட்டாள். வந்து பார்த்த அரசனுக்குச் சினத்தால் கண்கள் சிவந்தன. சவுக்கால் அடித்தான். இரத்தம் பீறிட்டது. சிறிது அதிர்ந்த அவள் தன்னுணர்வு பெற்றவளாகக் கசையடிகளைத் தாங்கிக் கொண்டு கலங்காது சிரித்துக் கொண்டிருந்தாள். "பெண்ணே, இரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கிறேன், நீ சிரிக்கிறாயே, வலிக்கவில்லையா?” என்று வியக்க, ''பேரரசே, ஒருசில நிமிட நேரமே இம்மலர்ப்படுக்கையில் நான் தூங்கிவிட்டதற்கு இக்கொடிய தண்டனை என்றால், காலம் முழுவதும் படுத்துறங்கும் தங்களுக்கு இறைவன் தரவிருக்கும் தண்டனையை நினைத்தேன். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை".

"செல்வர்களே... உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள்... இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்கைகளைக் கொழுக்க வைத்தீர்கள்” (யாக். 5:1-5).

இறைமக்கள் ஏழை எளியோர் மீது அக்கறை கொண்டு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் திருஅவை புதிய மணமக்களை ஆசீர் அளித்து இப்படி வாழ்த்துகிறது: "உலகிலே நீங்கள் இறையண்புக்குச் சாட்சிகளாகத் திகழுங்கள். இவ்வாறு உங்கள் தயவைப் பெற்ற துன்புற்றோரும் வறியோரும் இறைவனின் வீட்டில் உங்களை ஒரு நாள் நன்றியுணர்வுடன் வரவேற்பார்களாக".

படகும் தண்ணீரும் வீட்டில் செல்வமும் நிறைந்துவிட்டால் இருகைகளாலும் அள்ளி அள்ளி வெளியே தள்ளுங்கள். அப்போதுதான் படகும் பிழைக்கும். வீடும் பிழைக்கும்" - கபிர்தாசர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பெயரற்ற செல்வரும் திருவாளர் இலாசரும்

தாய் ஒருவர் தன் ஐந்து வயது மகளுடன் கடைக்குச் சென்றார். கடையில் பல பொருட்களை வாங்கிவிட்டு, பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்றபோது, கடைக்காரர், தாயுடன் நின்ற சிறுமியைப் பார்த்து, மிட்டாய்கள் இருந்த ஒரு கண்ணாடி ஜாடியைக் காட்டி, "உனக்கு வேண்டிய அளவு மிட்டாய்களை எடுத்துக்கொள்." என்றார். சிறுமி தயங்கி நின்றாள். "உனக்கு மிட்டாய் பிடிக்காதா?" என்று கேட்ட கடைக்காரரிடம், "எனக்கு மிட்டாய் ரொம்பப் பிடிக்கும்." என்று சொன்னாள். சிறுமி மிட்டாய்களை எடுக்க வெட்கப்படுகிறாளோ என்று எண்ணியக் கடைக்காரர், அந்த ஜாடிக்குள் அவரே கைவிட்டு, மிட்டாய்களை எடுத்துக் கொடுத்தார். கடைக்காரர் தந்த மிட்டாய்களை, சிறுமி இருகைகளிலும் பெற்றுக்கொண்டார். தாயும், மகளும் வெளியே வந்ததும், "கடைக்காரர் மிட்டாய் எடுத்துக்கொள்ளச் சொன்னபோது, ஏன் நீ எடுக்கவில்லை?" என்று தாய் கேட்டார். அதற்கு, அச்சிறுமி ஒரு குறும்புப் புன்னகையுடன், "என் கையைவிட கடைக்காரர் கை பெரிதாக இருந்தது, அதனால்தான்." என்று பதில் சொன்னாள்.

அச்சிறுமியின் சிந்தனை ஓட்டத்தை, அறிவுத்திறமை என்றோ, தந்திரம் என்றோ முடிவு செய்யலாம். அச்சிறுமிக்கு இவ்வளவு பேராசை கூடாது என்று நம்மில் சிலர் தீர்ப்பும் எழுதலாம். அச்சிறுமிக்குத் தீர்ப்பு வழங்குவதற்கு முன், நாம் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்கவேண்டும். ஆம் அன்பர்களே, அச்சிறுமிக்கு இப்படி ஓர் எண்ணம் எங்கிருந்து வந்திருக்கும்? வயது வந்தவர்கள், வளர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் அனைவரும் இவ்வகை எண்ணங்களை அக்குழந்தையின் உள்ளத்தில் விதைத்திருக்க வேண்டும். அச்சிறுமியின் பெற்றோரை, குடும்பத்தை மட்டும் நாம் குறை கூறக்கூடாது. இன்றைய ஒட்டுமொத்த சமுதாயமும் இப்படிப்பட்ட எண்ணங்களைக் குழந்தைகள் மனங்களில் வளர்த்துவருகிறது. எனவே, இக்குழந்தையின் பேராசைக்கு நாம் அனைவரும் பொறுப்பேற்று, குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டும்.

‘ஆசையே அனைத்து துனபங்களுக்கும் காரணம்’ என்று புத்தர் கூறியது தலைகீழாக மாறி, இன்று ஆசையே அனைத்து நன்மைகளுக்கும் காரணம் என்று இவ்வுலகம் சொல்லித்தர துணிகிறது.

பேராசையால் செல்வத்தைக் குவித்து, பின்னர் அச்செல்வத்திற்கு அடிமையாகி, பணிவிடை செய்வதன் ஆபத்தைச் சென்ற வாரம் வீட்டுப் பொறுப்பாளர் உவமை வழியாக இயேசு கூறினார். இவ்வுவமையின் இறுதியில், 'கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது' (லூக்கா 16:13) என்று கூறிய இயேசு, "நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்போது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்" (லூக்கா 16: 9) என்ற அறிவுரையையும் தந்தார்.

நிலையான உறைவிடங்களில், அதாவது, நிலைவாழ்வில் நம்மை வரவேற்கக் காத்திருக்கும் நண்பர்கள் யார்? அவர்கள் எப்போதுமே நம்மைச் சுற்றியுள்ள ஏழைகளே என்பதை ஓர் உவமை வழியாக இயேசு இன்று கூறியுள்ளார். 'செல்வரும் இலாசரும்' என்ற மிகப் புகழ்பெற்ற உவமை இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது. இவ்வுவமை ஒரு வைரத்தைப் போல் வெவ்வேறு வண்ணத்தில் ஒளி தரும். இந்த வைரத்தின் முழு அழகை உணர்வதற்கு நேரம் இல்லாததால், இவ்வுவமையின் முதல் வரிகளில் மட்டும் நமது கவனத்தைச் செலுத்தி, பாடங்களைப் பயில முயல்வோம்.

லூக்கா நற்செய்தி 16:19-21 உள்ள முதல் மூன்று இறைச்சொற்றோடர்களில் இவ்வுவமையின் இரு நாயகர்களை இயேசு அறிமுகம் செய்துள்ளார். இந்த அறிமுக வரிகளில் செல்வரைப் பற்றி மூன்று குறிப்புக்களும், இலாசரைப் பற்றி ஐந்து குறிப்புக்களும் காணப்படுகின்றன.

செல்வரைப் பற்றிய மூன்று குறிப்புக்கள் இதோ:

  • செல்வர் ஒருவர் இருந்தார்.
  • விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்திருந்தார்.
  • நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.

இலாசரைப் பற்றிய ஐந்து குறிப்புக்கள் இதோ:

  • இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்.
  • அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது.
  • அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
  • செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
  • நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

இந்த எட்டு குறிப்புக்களையும் இணைத்துச் சிந்திக்கும்போது, மூன்று ஒப்புமைகளை நாம் உணரலாம். பாடங்கள் பல சொல்லித்தரும் ஒப்புமைகள் இவை. “செல்வர் ஒருவர் இருந்தார். இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்...” என்பது முதல் ஒப்புமை. இயேசு கூறிய இவ்வரிகளைக் கேட்டதும், யூதர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். செல்வரைப் பெயரிட்டுக் குறிப்பிடாத இயேசு, ஏழையைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டார்; பெயர் கொடுத்ததால், கூடுதல் மதிப்பும் கொடுத்தார். இயேசு கூறியுள்ள அனைத்து உவமைகளிலும் இந்த ஓர் உவமையில் மட்டுமே கதாபாத்திரத்திரத்திற்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்பது இவ்வுவமைக்குரிய தனிச் சிறப்பு. தனித்துவமான இச்சிறப்பு தெருவில் கிடந்த ஓர் ஏழைக்குக் கிடைத்துள்ளது.

செல்வங்கள் பெறுவதை இறைவனின் ஆசீராகவும், வறுமை, ஏழ்மை இவற்றை இறைவனின் சாபமாகவும் எண்ணிவந்த இஸ்ரயேல் மக்களுக்கு, குறிப்பாக, மதத் தலைவர்களுக்கு, இயேசு ஏழைக்குக் கொடுத்த மதிப்பு அதிர்ச்சியைத் தந்திருக்கும். கடவுள் எப்போதும் ஏழைகள் பக்கம்தான் என்பதை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இயேசு வலியுறுத்தி வந்தார். இந்த உவமையில் ஏழைக்கு இலாசர் என்ற பெயர் கொடுத்து, இந்த உண்மையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏழைகளைத் தாழ்வாக எண்ணி வந்த இஸ்ராயலர்கள் மேல் அவசரப்பட்டுக் கண்டனம் சொல்ல வேண்டாம். இதே மனநிலைதானே இன்றும் நம்மிடையே உள்ளது! ஒரு செல்வரைப் பற்றிப் பேசும்போது, திருவாளர் இவர், திருவாளர் அவர் என்ற அடைமொழியுடன் பேசுகிறோம். ஏழைகளைக் குறிப்பிடும்போது, பொதுவாக அவர்களை ஓர் எண்ணிக்கையாகக் குறிப்பிடுகிறோம். எடுத்துக்காட்டாக, “திருவாளர் மாணிக்க வள்ளலார் அவர்கள் இன்று நடத்திய தண்ணீர் பந்தலுக்கு நூற்றுக்கணக்கான ஏழைகள் வந்தனர்” என்பதுதானே நமது பேச்சு வழக்கு? ஏழைகளை எண்ணிக்கைகளாகக் கணக்கிடாமல், மனிதப் பிறவிகளாக மதிக்க வேண்டும் என்பதற்கு இயேசு தன் உவமையில் கூறியுள்ள முதல் ஒப்புமை நல்லதொரு பாடம்.

செல்வரையும், இலாசரையும் குறித்து நாம் காணும் இரண்டாவது ஒப்புமை, அவர்களின் தோற்றத்தைப் பற்றியது. செல்வர் செந்நிற மெல்லிய ஆடை அணிந்திருந்தார் என்றும்... இலாசரின் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது என்றும் இயேசு கூறுகிறார். மனதில் ஆணிகளை அறையும் வரிகள்... செல்வர் அணிந்திருந்த மெல்லியச் செந்நிற ஆடை ஒருவேளை அவரது உடலோடு ஒட்டியதாக, ஏறக்குறைய அவரது தோலைப் போல் இருந்திருக்கலாம். இலாசாரோ, உடலெங்கும் புண்ணாகி, அவரும் சிவந்தத் தோலுடன் இருந்திருப்பார்.

அரசப் பரம்பரையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நிறம் சிவப்பு. செல்வர் தன்னைத்தானே ஓர் அரசனாக்கும் முயற்சியில் செயற்கையாகச் செய்யப்பட்ட செந்நிற ஆடை அணிந்திருந்தார். இலாசாரோ உடலெங்கும் புண்ணாகி, இயற்கையிலேயே செந்நிறமாய் இருந்தார். ‘யூதர்களின் அரசன்’ என்ற அறிக்கையுடன், சிலுவையில் செந்நிறமாய்த் தொங்கிய இயேசுவின் முன்னோடியாக இலாசரைப் பார்க்கச் சொல்லி இயேசு நமக்கு அறிவுறுத்துகிறாரோ? என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது இந்த ஒப்புமை.

மூன்றாவது ஒப்புமை வரிகள் உள்ளத்தில் அறையப்பட்ட ஆணிகளை இன்னும் ஆழமாய் பதிக்கின்றன.

  • செல்வர் நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
  • இலாசர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
  • செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
  • நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

செல்வர் மறுவாழ்வில் நரக தண்டனை பெற்றதற்கு இந்த ஒப்புமையில் காரணம் காணமுடிகிறது. நரக தண்டனை பெறுமளவு அச்செல்வர் செய்த தவறுதான் என்ன? அவர் உண்டு குடித்து மகிழ்ந்தார்.... ஒருவர் உண்டு குடித்து மகிழ்வதால் நரகமா? இது கொஞ்சம் மிகையானத் தண்டனையாகத் தெரிகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அன்பர்களே, அவர் உண்டு குடித்ததற்காக இத்தண்டனை கிடையாது... தேவையுடன் ஒருவர் அவருக்கு முன் கிடந்தபோது, அதனால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல், நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தாரே... அதற்காக இத்தண்டனை.

ஓர் ஏழை தன் வீட்டு வாசலில் கிடப்பதற்கு அனுமதித்த செல்வரைப் பாராட்ட வேண்டாமா? அந்தச் செல்வர் நினைத்திருந்தால், காவலாளிகள் உதவியுடன், இலாசரைத் தன் வீட்டு வாசலிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாம் என்று செல்வர் சார்பில் வாதாடத் தோன்றுகிறது. செல்வர் இலாசரை அப்புறப்படுத்தியிருந்தால்கூட ஒருவேளை குறைந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்குமோ என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். புதிராக உள்ளதா? விளக்குகிறேன்.

இலாசர் மீது செல்வர் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால்... அது வெறுப்பைக் காட்டும் எதிர்மறையான நடவடிக்கையாக இருந்திருந்தாலும் பரவாயில்லை, இலாசர் என்ற ஒரு ஜீவன் அங்கு இருந்ததே என்பதையாகிலும் அச்செல்வர் உணர்ந்திருப்பார். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள செல்வரைப் பொருத்தவரை, இலாசரும் அவர் வீட்டில் இருந்த ஒரு மேசை, நாற்காலியும் ஒன்றே... ஒருவேளை அந்த மேசை நாற்காலியாவது தினமும் துடைக்கப்பட்டிருக்கும். மேசை, நாற்காலியைத் துடைக்கும் துணியைவிட கேவலமாக “இலாசர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்” (லூக்கா 16: 20) என்று இயேசு குறிப்பிடுகிறார். 'கிடந்தார்' என்ற சொல், இலாசரின் அவலநிலையை அழுத்தமாகக் கூறுகிறது.

செல்வரைப் பொருத்தவரை, அவரது காலடியில் மிதிபட்ட தூசியும் இலாசரும் ஒன்று. தூசி காலடியில் கிடைக்கும்வரை பிரச்சனை இல்லை அதே தூசி மேலெழுந்து, கண்களில் விழும்போது, பிரச்சனையாகிவிடும். தூசியாகச் செல்வரின் வீட்டு வாசலில் கிடந்த இலாசர், மறுவாழ்வில் மேலே உயர்த்தப்பட்டு, அந்தச் செல்வருக்குத் தீர்ப்பு வழங்கும் அளவுகோலாக மாறுகிறார் என்பதை இன்றைய நற்செய்தியின் பிற்பகுதியில் காண்கிறோம்.

ஆபிரகாமின் மடியில் இலாசரைக் கண்ட செல்வர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும்' (லூக்கா 16: 24) என்று மன்றாடுகிறார். இந்த வரிகளைச் சிந்திக்கும் ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறுவது நம் சிந்தனைக்குரியது. வாழ்நாளெல்லாம் தன் வீட்டு வாசலில் கிடந்த இலாசரின் பெயர் அச்செல்வருக்குத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். மறுவாழ்வில் அந்த ஏழையின் பெயரை முதல் முறையாக இச்செல்வர் உச்சரித்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மறுவுலகில் அச்செல்வர் இலாசருக்கு அளித்த மதிப்பில் ஆயிரத்தில் ஒரு பகுதியை இவ்வுலகில் அளித்திருந்தால், மீட்படைந்திருப்பாரே என்று எண்ணத் தோன்றுகிறது.

வான் வீட்டில் நுழைவதற்கு ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்று சென்ற வாரம் இயேசு எச்சரித்தார். நண்பர்களாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, மனிதப் பிறவிகள் என்ற அடிப்படை மதிப்பையாவது அவர்களுக்குக் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படை மதிப்பை வழங்க மறுத்தால், நரகம்தான் கிடைக்கும் என்பதை இன்று இயேசு தெளிவுபடுத்துகிறார். செல்வர் நரக தண்டனை பெற்றது அவருக்குத் தரப்பட்ட ஒரு பாடம். இவ்வுலகில் இலாசர் வாழ்ந்தபோது அவரை ஒரு மனிதப் பிறவியாகக் கூட மதிக்காமல் செல்வர் நடந்துகொண்டது, இலாசருக்கு நரக வேதனையாக இருந்திருக்கும். அந்த நரக வேதனை எப்படிப்பட்டதென்று செல்வர் உணர்வதற்கு கடவுள் தந்த பாடம், இந்த மறுவாழ்வு நரகம். இதற்கு மேலும் தெளிவான பாடங்கள் நமக்குத் தேவையா, அன்பர்களே?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (ஆமோ. 6:1, 4-7)

ஆமோஸ் இறைவாக்கினர் நீதியின் இறைவாக்கினர் என்று அழைக்கப்படுபவர். காரணம் இஸ்ராயேலில் இருந்தச் செல்வந்தர்கள் ஏழைகளை அடிமைப்படுத்தியும், அவர்களிடம் இருந்தச் செல்வங்களை ஏமாற்றிப் பறித்தும் வாழ்ந்து வந்தனர். பலமுறை இறைவாக்கினர் அவர்களது குற்றங்களைக் கறித்து எடுத்துச் சொன்னபோதும், அவர்களிடையே எந்த மனமாற்றமும் ஏற்படவில்லை. பணம்தான் தங்களது வாழ்வின் பலம் என்று கருதினார்கள். கடவுளையும், ஏழை மக்களையும் புறம்தள்ளிவிட்டு தங்களதுச் செல்வத்தையே நிலையாகக் கருதினார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் இறைவாக்கினர் ஆமோஸ் அவர்களைப் பார்த்து "நாட்கள் வரும், அப்பொழுது நீங்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவீர்கள்" என்றார். அவ்வாறே, அசீரிய மன்னன் செனாகரீப் இஸ்ராயேலை வீழ்த்தி மக்களைச் சிறைபிடித்து நாடுகடத்தினான்.

இரண்டாம் வாசகப் பின்னணி (1திமோ. 6:11-16)

தூய பவுல் உரோமை சிறையில் இருந்தபோது, தன்னுடைய நண்பர் திமோத்தேயுவுக்கு எழுதியக் கடிதம் இன்றைய வாசகமாக அமைகிறது. காரணம், திமோத்தேயு எபேசு நகரில் பலவித சூழ்நிலைகளிலும், துன்பங்கள் மத்தியிலும் மக்களை வழிநடத்திக் கொண்டிருந்தார். எனவே பவுல் துன்பங்கள் மத்தியிலும், குழப்பங்கள் மத்தியிலும் எப்படியொரு நல்ல ஆயனாக இருக்க வேண்டும் என்று திமோத்தேயுவுக்குக் கடிதம் எழுதுகிறார். விசுவாசம் என்னும் போராட்டத்தில் ஈடுபடும் போதுதான் நிலைவாழ்வை உறுதி- யாகப் பற்றிக்கொள்ள முடியும். அப்போதுதான் திமோத்தேயுவினால் கடவுளுக்குச் சாட்சிய வாழ்வு வாழ முடியும் என்று பவுலடியார் கூறுகிறார். இன்றைய வாசகத்தில் 17 முதல் 19 வரையுள்ள வசனம் சேர்க்கப்படவில்லை என்றாலும், இத்தகைய வசனங்கள் நமதுக் கிறிஸ்துவ வாழ்வுக்கு 'முன்மாதிரிகையின் படிவமாக' இருக்கப் பல நல்ல கருத்துக்களைப் பவுல் எடுத்துச் சொல்லுகிறார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 16:19-31)

இயேசு இன்றைய உவமையில் எந்தவித முடிவையும் நமக்குச் சொல்லவில்லை. மாறாக இரக்கமற்ற மனிதர்களின் முடிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாமே உணர்ந்துக் கொள்ளச் செய்கிறார். இன்றைய உவமையை, இயேசு பரிசேயர்களுக்கு ஓர் பாடமாக அமைக்கிறார். காரணம், பணக்காரர்களிடம் இருக்கும் செல்வம் அவர்களது புனிதத் தன்மைக்குக் கடவுள் கொடுத்தப் பரிசு என்றும், ஏழைகள், கடவுளின் அருளிலிருந்து விலகி இரண்டாம் இடத்தில் இருப்பவர்கள் என்றும் நினைத்தார்கள். ஆனால் இயேசு இன்றைய உவமையின் வாயிலாகப் பணத்தின் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் இறந்தபின் எத்தகைய நிலையை அடைவார்கள் என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறார். மேலும் ஏழை என்ற ஒரே காரணத்தால் இலாசர் விண்ணகம் செல்லவில்லை, மாறாகத் தன் ஏழ்மை நிலையிலும் கடவுளை இறுகப் பற்றிக் கொண்டதே ஆகும் என்பதையும் இவ்வாசகம் சுட்டிக்காட்டுகிறது.

மறையுரை

கிறிஸ்துவர்களின் அடையாளம்: பணமா? பாசமா?

2004-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26-ஆம் நாளை இதயம் உள்ள எவரும் மறக்க முடியாது, "சுனாமி" என்றச் சொல் தமிழகராதியில் தடம் பதித்த நாள். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய துக்க நாள், கறுப்பு நாள் என்றேச் சொல்லலாம். காலையில் எழுந்துக் கடற்கரை சாலையிலே கால்வலிக்க நடந்துசென்று கடற்காற்று வாங்கியவர்கள் எல்லாம் கடலோடு போனார்கள். "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்று கடற்கரையில் குடும்பம் நடத்திய மீனவர்கள் எல்லாம் குலைந்து போனார்கள். ஆம்! இத்தனை துன்பங்கள், துயரங்கள், கண்ணீர்கள் மத்தியில் சில இரக்கமற்ற இதயங்களும் இருக்கத்- தான் செய்தன. எரியும் வீட்டில் எதைப் பிடுங்கலாம் என்று மண்ணில் புதைந்திருந்தவர்களின் கையில், கால்களில் இருந்த அணிகளன்கள் சூறையாடப்பட்டன. தன் கடைசி மூச்சுக்காய்ப் போராடிக் கொண்டி- ருந்தவர்களின் தாலியைப் பறித்து விதவையாய் ஆக்கினார்கள். இப்படியாக ஈரக்குலை நடுங்கச் செய்யும் கோரக் காட்சிகள் மத்தியில் சில ஈவு இரக்கமற்ற மனிதர்களும் இருந்தார்கள் என்பது தான் உண்மை. இந்த நிகழ்ச்சியைக் கேட்டவுடன் நம்மில் பலர் நினைத்திருக்கலாம். 20-ஆம் நூற்றாண்டில் வாழ்கின்ற மனிதர்கள் இதயத்தை அடகு வைத்துவிட்டார்கள் என்று, முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி, மயிலுக்குப் போர்வைத் தந்தான் பேகன், ஒளவை -யாருக்கு அதியமான் கனி கொடுத்தான் என்றெல்லாம் சொல்லி தமிழனின் பெருமையை எடுத்துச்சொல்லி 20-ஆம் நூற்றாண்டு மனிதர்கள் இதயம் அற்றவர்கள் என்று குற்றம் சுமத்துகிறோம். இது முறையா? அல்லது உண்மையா?

கடவுள் உலகைப் படைத்து மனிதனை உலாவவிட்ட நாளில் இருந்தே இத்தகைய இரக்கமற்றச் செயல்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. "ஆதாம்-ஏவாள்” இவர்களின் முதல் கனி என்று சொல்லப்பட்ட "காயின்" தன் தம்பி. ஆபேலைப் பொறா மையின் காரணமாக, வஞ்சக சூழ்ச்சி செய்து முதல் கொலைக்கு வழி வகுக்கிறான் (தொ.நூ. 4:8). இப்படிப்பட்ட இரக்கமற்றச் செயல்தான் மானுட வரலாற்றில் முதல் கொலையைப் பதிவு செய்து மனிதனை மானம் கெட்டவனாக மாற்றியது. அதன் தொடர் கதையாய்தான், தன் தந்தையால் அதிகம் அன்பு செய்யப்பட்டத் தம்பி யோசேப்புவை "கனவுகாண்பவன்" என்றுபட்டம் கட்டி அவனை 20 வெள்ளிக்காசுக்காக மிதியானைச் சேர்ந்த வியாபாரிகளிடம் விலைபேசி விற்றுவிடுகிறார்கள் அண்ணன்கள் (தொ.நூ. 37:27). இப்படிப்பட்ட அண்ணன்கள் இன்று இருந்திருந்தால் "கனவு காணுங்கள்" என்று சொல்லும் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமையும் விற்றிருப்பார்கள். இரக்கமற்றத் தன்மைக்கு மேலும் ஓர் உதாரணம் தான் மன்னன் ஆகாப், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்பார்கள். உண்மைதான், அப்படிப- பட்ட மணம் கொண்ட தோட்டம் நம் வீட்டின் அருகிலே இருந்தால் யாருக்குத்தான் அது நம்முடையதாக இருக்கக் கூடாதா என்று மனம் வராது? அப்படிப்பட்ட எண்ணம் தான் மன்னன் ஆகாப்புக்கு வந்தது. தன் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க வேண்டிய மன்னன், தன் மனைவி இசபேலை கருவியாகப் பயன்படுத்தி, நாபோத்தின் தோட்டத்தை அபகரித்துக் கொண்டு, நாபோத்தைக் கல்லுக்கு இரையாக்கிவிட்டான் (1அர 21:16).

இப்படிப்பட்ட இரக்கமற்ற குணத்தைத்தான் இன்று இயேசு தன்னுடைய உவமைகளின் வாயிலாக நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். கல்லும் கரையக்கூடிய தோற்றத்தில் தன் வீட்டின் வாயில் அருகே அமர்ந்திருந்த ஏழை லாசருக்கு ஒரு பிடி உணவு கொடுக்க மனமில்லாத அந்தப் பணக்காரன் நிலையை நமக்குச் சொல்லி, இரக்கமில்லாதவன் இறந்ததும் எப்படிப்பட்ட நிலையை அடைவான் என்று சுட்டிக் காட்டுகிறார். இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் "சீயோன் குன்றின் மீது இன்பத்தில் திளைப்போரே, சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! உங்களுக்கு ஐயோ கேடு! (ஆமோ 6:1) என்று கூறுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலே நம்மைச் சிந்திக்க வைக்கும் வசனம், "உங்களுக்கும் (பணக்காரர்களுக்கும்) எங்களுக்கும் (ஏழைகளுக்கும்) இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது" (லூக்கா 16:26) என்பதாகும். பிளவு இருப்பது உண்மை என்றால், பணக்காரர்கள் எல்லாம் விண்ணகம் போக முடியாதா? அல்லது கிறிஸ்துவ மதம் என்பது வெறும் ஏழைகளுக்காகவா? இயேசு என்றும் பணத்தையும், பணக்காரர்களையும் குறை கூறவில்லை. அப்படி இயேசு பணத்தை அடியோடு வெறுப்பதாக இருந்திருந்தால் யூதாசை தன் கூட்டத்திற்குப் பொருளாளராக நியமித்திருக்கமாட்டார். மத்தேயுவைத் தன் சீடராக அழைத்திருக்க- மாட்டார் (மத்தேயு 9:9), நிக்கோதேமுவின் உறவை விரும்பி இருக்க- மாட்டார், அப்படி என்றால் இங்கே, 'பிளவு' என்பது எதைக் குறிக்கிறது. பிளவு என்பது பணக்காரர்களின் இரக்கமற்றத் தன்மையைக் குறிக்கின்றது. காரணம், கடவுள் மனிதனின் இதயத்தி- லிருந்து பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறார் (மத்தேயு 12:7). ஆகவேதான் தன்னிடம் இருந்த இரண்டு செப்புக்காசுகளையும், தனக்கென வைத்துக்கொள்ளாமல் காணிக்கைச் செய்த கைம்- பெண்ணைப் பாராட்டுகின்றார் (லூக்கா 21:3).

அநீதியான முறையாக இருந்தாலும் தன் முன்மதியால் செல்வத்தைப் பகிர்ந்துகொண்ட பொறுப்பாளன் பாராட்டப்படுகிறான் (லூக்கா 16:1-8). காரணம், நம் ஆண்டவர் இயேசு இரக்கத்தின் கடவுள். ஆகவேதான், ஆயனில்லா ஆடுகளாய் இருந்த இஸ்ராயேல் மக்கள்மீது இரக்கம் கொண்டார் (மத்தேயு 9:36).

இப்படிப்பட்ட இரக்கமற்ற குணம் கொண்டவர்களின் சரித்திரத்தை விவிலியம் போற்றியதுக் கிடையாது, மாறாக இறந்து போனார்கள், நிம்மதியை இழந்தார்கள் தன் மனதை அடிமைப்படுத்திக்கொண்டு, இஸ்ராயேல் மக்களை அனுப்ப மறுத்த மன்னன் பாரவோன் தன் மகனையும், நிம்மதியையும் இழந்தார் (வி.ப. 14:23). வறுமையின் பிடியில் வாழ்ந்தவர்களை நினையாமல், தன் களஞ்சியத்தை இடித்துக் கட்டுவதில் கவனம் செலுத்தியவன், அன்றே இறந்து போனான் (லூக்கா 12:13-21). யூத மக்களை இரக்கமின்றி கொன்று குவித்த ஹிட்லர், தானே தூக்கு மாட்டிக் கொண்டு இறந்தான்.

மாறாக, இரக்கத்தை ஆடையாகக் கொண்டவர்கள் இறந்தும் வாழ்கின்றார்கள். பத்துமாதம் பெற்றெடுத்தத் தாய்மார்கள், தன் வியர்வையின் விளிம்பில் பிள்ளைகளை வளர்த்தத் தந்தையர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டபோது அவர்களைப் பெற்ற பிள்ளைகளே அடியோடு மறந்தபோது, பீட்டர் தமியோன் என்பவர் தன்னை அவர்களுக்காக அர்ப்பணித்து, முதலுதவியும், இறையுதவியும் செய்து அதே நோயால் மாண்டு, புனிதரானார் என்றால் அதற்குக் காரணம் அவரது இதயத்தில் இருந்த இரக்கமே. எனவே கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாகிய நாம் பணத்திற்கு மதிப்பு கொடுக்காமல், இரக்கத்திற்கு மதிப்பு கொடுப்போம். "பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும், காசேதான் கடவுளப்பா, அதுக் கடவுளுக்கும் தெரியுமப்பா..." என்று சொல்லி நம்மையே நாம் பணத்திற்காக நியாயப்படுத்திக் கொள்ளாமல், இரக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சி எடுப்போம். பணம் தன்னிலே நன்மையானதுதான். ஆனால் அதை எந்தவித மனதுடன் பயன்படுத்து கிறோம் என்பதை பொறுத்துத்தான் நம் வாழ்க்கை அமைகின்றது. எனவே "பணத்தைக் கொண்டு அநேக நண்பர்களைச் சம்பாதித்துக்- கொள்ள முயற்சி எடுப்போம்" (லூக்கா 16:9).

பிற மறையுரைக் கருத்துக்கள்

  1. விண்ணுலகில் ஆண்டவன் அருகில் அமர மண்ணுலகில் ஏழைகளின் வாழ்வை நினைத்துப் பார்ப்போம்.
  2. அயலானை அன்னியனாகப் பார்க்காமல், அகிலத்தைப் படைத்த ஆண்டவனின் பிள்ளைகளாகப் பார்ப்போம். பகிர்ந்தால் பரலோகம் இல்லையேல் அந்தோ பரிதாபம்!
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக் காலம் இருபத்தாறாம் ஞாயிறு

இன்றைய இறைவார்த்தைகளும் கடந்த வாரத்தைப் போலவே செல்வத்தைப் பற்றிப் பேசுகின்றன. முதல் வாசகத்தில் ஆமோஸ் இறைவாக்கினர்செல்வச்செழிப்பிலேவாழ்பவர்களுக்கு ஐயோ கேடு எனச் சாடுகின்றார். நற்செய்தியில் செல்வர் - ஏழை இலாசர் உவமையை நமதாண்டவர் விவரிக்கின்றார். இவை யெல்லாம் செல்வத்தின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டு கின்றன. அதை ஆராயுமுன் இன்றைய நற்செய்தியின் பின்னணி யையும் அறிந்து கொள்ள முயல்வோம்.

பின்னணி

லூக்கா நற்செய்தியில் இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணத்தில் மக்கள் கூட்டம், அவரது எதிரிகள் மற்றும் அவரது சீடர்கள் ஆகியோருடன் இயேசு தொடர்பு கொள்வதை, உரையாடு வதை மாற்றி, மாற்றிக் காண்கிறோம். பதினைந்தாம் அதிகாரத்தின் மூன்று 'காணாமற்போன. ' உவமைகள் இயேசுவுக்கு எதிராக முணுமுணுத்த (லூக் 15:1-2) பரிசேயர், மறைநூல் அறிஞர்களுக்குப் பதிலாகக் கூறப்பட்டவை. பதினாறாம் அதிகாரத்தின் முதல் பகுதி இயேசு தம் சீடருக்குச் செல்வத்தை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றிக் கூறப்பட்டது (காண். லூக் 16:1-12). இவ்வதிகாரத்தின் இரண்டாம் பகுதி 'பண ஆசைமிக்க பரிசேயர்' இயேசுவை ஏளனம் செய்தபோது (வச. 14) அவர்களுக்குப் பதில் மொழியாகக் கூறப்பட்டது (வச. 15-31). இதன் ஒரு பகுதியாக இன்றைய நற்செய்தி அமைகின்றது.

மேலும் இந்தப் பகுதியைப் பரிசேயரின் ஏளனமாக மட்டு மல்லாமல் இறைவாக்கினருக்கு ஏற்பட்ட எதிர்ப்பாகவும், அவர்கள் இயேசுவை புறக்கணித்ததாகவும் காண வேண்டும். அவர்களுக்குப்‌ பதில்‌ சொல்லும்‌ விதத்தில்‌ இயேசு, அவர்கள்‌ (பரிசேயார்‌) எப்படி. இறைவனால்‌ புறக்கணிக்கப்படுவர்‌ என்பதையும்‌ இலைமறைகாயாக சுட்டிக்காட்டுகின்றார்‌ (காண்‌. வச. 15, செல்வர்‌ - ஏழை இலாசர்‌ உவமை). இனி இன்றைய உவமை தரும்‌ முக்கிய செய்திகளைக்‌ காண்போம்‌.

1. தலைகீழ்‌ மாற்றம்‌

லூக்கா நற்செய்தியின்‌ ஒரு முக்கியமான கருத்தோட்டம்‌ இந்தத்‌ “தலைக&ழ்‌ மாற்றம்‌”. அன்னை மரியாவின்‌ புகழ்‌ இதத்தில்‌ இது முன்னுரைக்கப்பட்டது. உள்ளத்தில்‌ செருக்குடன்‌ சிந்திப்‌ போரைச்‌ சிதறடித்து வருகிறார்‌. வவியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்‌; தாழ்நிலையில்‌ இருப்போரை உயர்த்து கிறார்‌. பசித்தோரை நலன்களால்‌ தநிரப்பியுள்ளார்‌; செல்வரை வெறுங்கையராய்‌ அனுப்பிவிடுகிறார்‌ லூக்‌ 7:57-53). இயேசு தனது “சமவெளிப்‌ பொழிவிலும்‌” இந்தத்‌ தலைகீழ்‌ மாற்றத்தை முன்‌ வைக்கிறார்‌: “இப்பொழுது பட்டினியாய்‌ இருப்போரே, நீங்கள்‌ பேறுபெற்றோர்‌; ஏனெனில்‌ நீங்கள்‌ - நிறைவு பெறுவீர்கள்‌. இப்பொழுது அழுது கொண்டிருப்போரே, நீங்கள்‌ பேறு. பெற்றோர்‌; ஏனெனில்‌ நீங்கள்‌ சிரித்து மகிழ்வீர்கள்‌” (லூக்‌ 6:2), “செல்வர்களே ஐயோ! உங்களுக்குக்‌ கேடு! ஏனெனில்‌ நீங்கள்‌ எல்லாம்‌ அனுபவித்துவிட்டீர்கள்‌. இப்போது உண்டு கொழுத்திருப்போரே ஐயோ! உங்களுக்குக்‌ கேடு! ஏனெனில்‌ . பட்டினி கிடப்பீர்கள்‌. இப்போது சிரித்து இன்புறுவோரே ஐயோ! உங்களுக்குக்‌ கேடு! ஏனெனில்‌ துயருற்று அழுவீர்கள்‌‌” (லூக்‌ 6:24 25). இத்தகையதொரு தலைகீழ்‌ மாற்றத்தை இந்த உவமையிலும்‌ காண்கின்றோம்‌. இதை ஆபிரகாம்‌ இவ்வாறு விளக்குகின்றார்‌, “மகனே, நீ உன்‌ வாழ்நாளில்‌ நலன்களையே பெற்றாய்‌; அதே வேளையில்‌ இலாசர்‌ இன்னல்களையே அடைந்தார்‌. . . இப்பொழுது அவர்‌ இங்கே ஆறுதல்‌ பெறுகிறார்‌; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்‌' (வச. 25). இந்த தலைகீழ்‌ மாற்றத்தை இறைவன்‌ நிகழ்த்‌ துகின்றார்‌. அப்படியானால்‌ அந்த நபர்களுக்கு (செல்வர்‌ - ஏழை) எந்த அறநெறிப்‌ பொறுப்பு இல்லையா? எனும்‌ கேள்வி எழுகின்றது. உவமையை வாசிக்கின்றபோது அவர்கள்‌ நல்லவர்‌ (ஏழை) என்றோ, கெட்டவர்‌ (செல்வர்‌) என்று குறிப்பிடப்படவில்லை. அப்படியானால்‌ யார்‌ தவறு செய்தது? எங்கே, எப்படித்‌ தவறு நிகழ்ந்தது? இக்கேள்விகளுக்கான. விடையை இவண்‌ காண்போம்‌.

2. அறநறிக்‌ காரணம்‌

இந்த உவமையின்‌ இரண்டாம்‌ பகுதி இந்தத்‌ தலைகீழ்‌ மாற்றத்திற்கான காரணத்தை மறைமுகமாக விவாதிக்கின்றது. ஆபிரகாம்‌-செல்வர்‌ இடையேநிகழும்‌ உரையாடல்‌ இதை வெளிக்‌ கொணர்கின்றது. இந்த உவமையில்‌ எவரும்‌ நல்லவர்‌ அல்லது கெட்டவர்‌ எனக்‌ குறிப்பிடப்படாவிட்டாலும்‌, செல்வரின்‌ பேச்சிலும்‌ தொனியிலும்‌ அவரின்‌ செருக்குத்‌ தெரிகின்றது. லாசரை, தனது வேலையாள்போல எண்ணி, தமது விரல்‌ நுனியைத்‌ தண்ணீரில்‌ நனைத்து தனது நாவைக்‌ குளிரச்செய்ய சொல்கிறார்‌ (வச. 24), அவரைத்‌ தனது தந்தையின்‌ வீட்டுக்குச்‌ சென்று தம்‌ சகோதரர்களை எச்சரிக்கச்‌ சொல்கிறார்‌. எனவே செல்வராக ஆணையிடும்‌ போக்கு இன்னும்‌, இங்கும்‌ செல்வரிடம்‌ தொடர்கின்றது.

அவர்‌ உலகில்‌ வாழ்ந்த காலத்தில்‌ அவரின்‌ செல்வச்‌ செழிப்பான வாழ்வும்‌, அவரது வீட்டு வாயிலருகே “கிடந்த” இலாசரை கண்டு கொள்ளாமல்‌ இருந்ததும்‌ அவரது குற்றமாகப்‌ பார்க்கப்படவேண்டும்‌.மேலும்‌ உவமைமுடி கின்றபோது“ மோசே மற்றும்‌ இறைவாக்கினர்‌” பற்றிய குறிப்புகளும்‌ காணப்படுகின்றன. இவர்களின்‌ போதனைகள்‌ இஸ்ரயேல்‌ மக்கள்‌ தங்கள்‌ நாட்டில்‌, நிலத்தில்‌ ஏழைகளை எப்படி. நடத்துவது என்பது பற்றியும்‌ அமைந்திருந்தனர்‌ (காண்‌. விப 2221-22; 23:9; லேவி 19:9-10, 19:33; 23:22 இச 70:17-19; 1428-29; 757-171, 16:9-757 2417-18 2672-15: ஆமோ 2:6-8, ஓசே 12:7-9; மீக்‌ 3:1-3; செப்‌ 3:1-3; மலா 3:5; எசா 5:7-10; 30:12 மத்‌ 58:3; எரே 5:25-29; 9:4-6). இத்தகு போதனைகளின்‌ படி அவர்‌ (செல்வர்‌) வாழவில்லை என்பது அவரது குற்றம்‌. இரண்டாவது அவரது சகோதரர்களும்‌ அந்த போதனைகள்‌ படி வாழ்ந்தாலே ‌ போதும்‌. மாறாக இறந்தவர்‌ உயிர்த்து தரும்‌ “சாட்சியத்தால்‌” அவர்கள்‌ மாறமாட்டார்கள்‌ என்பது உவமையின்‌ செய்தி. எனவே ஏழையர்‌ மீது அக்கறை கொண்டு இறையரசை உரிமையாக்கிக்‌ கொள்வோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் - இருபத்து ஆறாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம் : ஆமோஸ் 5:1,4-7

ஆமோஸ் 5-ம் அதிகாரம் இஸ்ரயேலைப் பற்றிய புலம்பலாக அமைகிறது. இப்புலம்பலிலே, இன்றைய வாசகமானது இஸ்ரயேலை ஆண்டவர்பால் மனம் திரும்ப அழைக்கிறது. "மனம் வருந்தாவிடில் மீட்பு இல்லை” என்று ஆமோஸ் அறிவுரை கூறுகிறார்.

ஆண்டவரைத் தேடுங்கள்

“நம்மைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்" (5: 4- 6) என்று இருமுறை வாசகத்தில் வருகிறது. "ஆண்டவரைத் தேடுதல்" என்று ப.ஏ. இல் கூறுவது, “ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்” (மத். 6: 33) என்று பு.ஏ இல் கூறுவதற்குச் சமம். கடவுளை, அவரது அரசைத் தேடுவது என்பது கடவுளுடைய விருப்பத்தை அறிந்து, அவருடைய கட்டளைகளைப் பின்பற்றி நடப்பதாகும். அவர் தந்த கட்டளைகளிலெல்லாம் முதன்மையானதும் தலையாயதும் அன்புக் கட்டளையாகும். “உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவேறுகிறது (கலா. 5:14). ஆம், கண்களுக்கு அப்பாற்பட்ட கடவுளை, அக்கடவுளின் சாயல்களான மனிதர்கள்வழிதான் அறிய முடியும். எனவேதான் யோவானும் “கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும்" (1 யோ. 4:12) என்பார். ஆம், கடவுளைத் தேடுவோம், அவரது அரசைத் தேடுவோம். எவ்வாறு? பிறருக்கு அன்பு செய்வதன் மூலம், “அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு” (குறள் 80).

பெத்தேலைத் தேடாதீர்கள்

பெத்தேல், கில்கால், பெயேர்செபா என்று குறிக்கப்படும் இடங்கள் குலமுதுவர்கள் பீடம் கட்டி இறைவனை வழிபட்ட இடங்கள். இவை பாபிலோனியரால் அழிவுபட்டுவிடும். எனவே இவற்றிற்குச் செல்ல வேண்டாம் என்று இஸ்ரயேலருக்குப் பணிக்கிறார் கடவுள். (“பெத்தேல்" என்றால் கடவுளின் வீடு; “கில்கால்” என்றால் ஒன்றுமற்ற வீடு என்று பொருள்படும். இங்கு வார்த்தை விளையாட்டுவழி இக்கோயில்களின் நிலையாமையைக் குறிப்பிடுகிறார் எனலாம்). மேலும், இவ்விடங்களுக்குச் செல்வது வாழ்க்கையில் அநீதி செய்வதற்கு ஒப்பிடப்படுவதைக் காண்க (5 : 7). "நீங்கள் நீதியை எட்டிக் கசப்பாய் மாற்றுகிறீர்கள், நேர்மையைத் தரையில் வீழ்த்துகிறீர்கள்" (5:7).

எனவே, ஆண்டவரைத் தேடுவது என்பது அன்பு வாழ்வை, நீதிவாழ்வை சுட்டுமாயின், பெத்தேல், கில்கால், பெயேர்செபாவைத் தேடிச்செல்வது அநீதி வாழ்வைக் குறிக்கும் எனலாம். ஏழைகளைத் துன்புறுத்தல், அநீதி அக்கிரமங்கள் புரிதல் முதலியவற்றிலிருந்து மனம் திரும்பி வருவதே ஆண்டவரைத் தேடுவதாகும். ஆம், "ஆண்டவரைத் தேடுவோம்; அப்போது நாம் வாழ்வோம்" (5:6). "நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்; அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கிவந்துவிட்டது" (ஓசே. 10 : 12) என்ற ஓசேயின் சொற்களும் நம்மை அன்பும் நீதியும் மிக்க வாழ்க்கைக்கு அழைப்பதை அறிவோமா?

குறிப்பு: பெத்தேல், கில்கால், பெயேர்செபாவைத் தேடிச் செல்வது என்பது புறதெய்வ வழிபாட்டையும் குறிக்கலாம் (காண்: ஒசே. 4:15). இம்முறையிலே காணும்போது, நம் வாழ்விலே தெய்வங்களாக வழிபடும் பணம், பதவி, பெண், மண், பொன் முதலியவற்றை நாம் அகற்றி, முழு இதயத்தோடும், ஆன்மாவோடும், இறைவன் ஒருவர் மட்டுமே நமக்கு எல்லாம் என்று, அவரை மட்டுமே தேட வேண்டும், நாட வேண்டும், தொழ வேண்டும். “யாமார்க்கும் அடிமையல்லோம்”

ஆண்டவரைத் தேடுங்கள்.

இரண்டாம் வாசகம் : 1 திமொ. 6:11-16

தாம் திருநிலைப்படுத்திய தொண்டர் திமொத்தேயுவுக்குச் பவுல் அளிக்கும் அறிவுரை நம் அனைவருக்கும் பொருந்தும். ஆண்டவரில் வாழ்தல் என்பது அன்பில் வாழ்தல்; இறைத் தந்தையை விசுவசித்தல் என்ற இரு அடிப்படைகளில் அமையும் என்பார் பவுல்.

அன்பு வேண்டும்

தலத்திருச்சபையின் தலைவர் என்ற முறையிலே திமொத்தேயு மக்களுக்கு எடுத்துக்காட்டான வாழ்வு வாழ வேண்டும். சிறப்பாக "நீதி, பக்தி, விசுவாசம், அன்பு, மனவுறுதி, சாந்தம் இவற்றைக் கடைப்படிக்க வேண்டும்” (6:11). இவ்வாழ்வு வாழ்வதற்குக் கடவுளே அவரை அழைத்துள்ளார் (6:12). அழைத்த கடவுள் அந்நிலைக்கு ஏற்ற வரங்களும் அளிப்பார் என்பது திண்ணம். தூய ஆவியாரின் வரங்களாகக் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் பவுல் கூறுவதும் இதுவே. "தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்” (கலா. 6 : 22). கிரேக்கர் மத்தியிலே பெரியோன் என்றழைப்பதற்குத் தகுதியானவன் கொண்டிருக்கவேண்டிய குணநலன்கள் இவை. இவற்றைப் பவுல் கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவத் தலைவர்களுக்கும் உரிய குணங்களாகத் தருவதிலிருந்து நமது அழைப்பின் உயர்வு அறியக் கிடக்கிறது.

இக்குணங்கள் நம்முடைய “நான்-நான், "நான்-பிறர்", "நான்-கடவுள்" ஆகிய 3 தொடர்புகளிலும் விளங்க வேண்டியன. நம்மைப் பொறுத்தமட்டில் மனவுறுதி; பிறரைப் பொறுத்தமட்டில் நீதி, அன்பு, சாந்தம்; இறைவனைப் பொறுத்தமட்டில் விசுவாசம், பக்தி என்ற முறையிலே நமது உறவுகள் நமது கிறிஸ்தவ வாழ்வின் வெளிப்பாடுகளாக அமைய வேண்டும். இத்தகைய ஓர் உயர்ந்த அழைப்பு வாழ்வை வாழும்போது "முடிவில்லா வாழ்வை இப்போதே கைப்பற்றிக் கொள்கிறோம்" (6:12). இத்தகைய வாழ்வை வாழ முயற்சிகள் எடுப்போமா?

விசுவாசம் வேண்டும்

விசுவாசம் என்பது அறிவுக்கு மேலானவற்றை நம்புவது அன்று; மாறாக நம்மைப் பெயர் சொல்லி அழைத்த இறைவனை எந்நிலையிலும் பற்றிக்கொண்டு, அவருக்கு நம்மைச் சரணாக்குவதாகும். இங்கு இவ்விசுவாசத்தை ஒரு புகழ்ப்பா வடிவிலே (6:15-16) தருகிறார் பவுல். ஏழு கோணங்களிலே, ஏழு பெயர்களால் இறைவனை வருணிக்கிறார் (இது ஒரு ஆதிகாலக் கிறிஸ்தவப் புகழ்ப்பாவாயிருந்திருக்கலாம்). கடவுள் ஓர் அரசர், அளவற்ற இன்பம் தருபவர், தலைவர்க்கெல்லாம் தலைவர், ஆண்டவர்க்கு எல்லாம் ஆண்டவர், என்றும் முடிவற்றவர் (இறவாதவர்), ஒளிப்பிழம்பு, கண்காட்சிக்கு அப்பாற்பட்டவர். இத்தகைய கடவுளுக்கு “என்றென்றும் மகிமையும் வல்லமையும் உரியன' (16) என்று முடிகிறது புகழ்ப்பா. நம் விசுவாச வெளிப்பாடாக நாமும் "படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி, இடரைக்களையும் எந்தாய் போற்றி, ஈசபோற்றி, இறைவா போற்றி, தேசப் பளிங்கின் திரளே போற்றி, அரசே போற்றி, அமுதே போற்றி” (திருவா) என்று பாடுவோம். "தோழா போற்றி துணைவா போற்றி, வாழ்வே போற்றி, என் வைப்பே போற்றி, முத்தா போற்றி முதல்வா போற்றி, அத்தா போற்றி அரணே போற்றி” என்று ஏத்துவோம்.

விசுவாசம் வெறும் சொற்களோடு அமையக் கூடாது. செயல்களாக மலர வேண்டும். நாம் கடவுளை விசுவசிக்கிறோம் என்பதை நமது நடத்தை, சிறப்பாக, நமது மூன்று உறவுகளும் காட்ட வேண்டும். இத்தகைய விசுவாச வாழ்க்கைதான் உயிருள்ள விசுவாச வாழ்க்கையாகும். "அதைப்போலவே, நம்பிக்கையும் செயல்வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்ற தாயிருக்கும்” என்ற யாக்கோப்புவின் (யாக். 2: 17) வார்த்தைகள் நம்மை வழி நடத்துவனவாக.

ஆண்டவருக்கு என்றென்றும் மகிமையும் வல்லமையும்.

நற்செய்தி: லூக். 16: 19-31

“பணக்காரனும் ஏழை இலாசரும்” என்ற உவமை லூக்காவுக்கே உரியது. பணத்தின் குறிக்கோள் மக்களுக்கு ஈந்து வாழ்வதே என்பதை இயேசு இங்குச் சுட்டுகிறார். பணக்காரர், பணம், ஏழைகள், ஏழ்மை என்பனபற்றிப் பன்முறை லூக்கா சுட்டுவது மனத்திலிறுத்த வேண்டியதாகும்.

பணம் ஈந்து வாழவே

பணம் இன்று வரும் நாளைப் போகும். இருக்கும்போது பணத்தை நல்வழியில் பயன்படுத்துவதே நலன் பயக்கும். பணத்தை மட்டுமன்று; நம்மிடம் இருக்கும் அனைத்தையும் இறைவன் கொடையென்று எண்ணி, பிறருக்கு அளிப்பவன்தான் உண்மையிலே உயர்ந்தவன். "ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல் தாம்உடைமை வைத்திழக்கும் வன்க ணவர்” (குறள் 228). இன்றைய உவமையில் வரும் பணக்காரன் வாழ்வுபோல்தானே நமது வாழ்வும் அமைந்துள்ளது. நமது பதவி, படிப்பு, பணம், நேரம், திறமை முதலியவற்றைப் பிறர் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துகிறோமா? அல்லது “நான்”, “எனது, “எனக்கு” என்னும் சுயபற்று தான் நம்மை அடிமைப்படுத்தியுள்ளதா? "எவ்உயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்வாய் பராபரமே" (தாயுமா) என்பது நமது நடத்தையில் உண்மைப்படுமா? "தாமின்புறுவது உலகின்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்" (குறள் 399) என்பதை நம்மைப் பற்றிக் கூற முடியுமா? "பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள் 322) என்பது நம் உணவைப் பகிர்ந்து கொள்வதில் மட்டுமன்றி, நாம் பெற்றுள்ள அனைத்து நலன்களுக்கும் பொருந்தும். “செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனின் தப்புந பலவே” (புறநா) என்ற தமிழ்மரபு நம்மை ஈதல் வாழ்வுக்கு உந்துவதாக.

ஏழ்மை நம் இரக்கத்தைத் தூண்டவே

“இலாசர்” என்னும் சொல்லுக்கு “இறைவன் உதவுவார்” என்பது பொருள் ஆகும். ஆம், ஏழைகள் இறைவனின் நண்பர்கள். இவ்வுலகில் தங்களது என்று சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லாத நிலையிலே இறைவனையே அடைக்கலமாகக் கொண்டு வாழ்வோர் இவர்கள். கடவுள் மட்டுமன்று; நாமும் ஏழைகள்பால் இரங்கி உதவ வேண்டும் என்பதற்காகவே ஏழைகள் உலகில் உளரோ என்று எண்ணத் தோன்றுகிறது! "உன்னிடம் வறியவர் இல்லாதிருக்கட்டும். அப்பொழுது நீ உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் உன்னை ஆசியால் நிரப்புவார்" (இச. 15 : 4) என்ற ஆண்டவர், “உனது நாட்டில் ஏழைகள் என்றும் இருப்பர். எனவே நான் உனக்குக் கட்டளையிட்டுச் சொல்கிறேன்; உன் சகோதரனுக்கும், உன் நாட்டில் உள்ள வறியவர்க்கும், தேவையுள்ளோர்க்கும் உன் கையைத் தாராளமாய்த் திற” என்கிறார் (இச. 15:11). எனவே, “ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை” என்று பாரதியார் கூறியதை நாம் நம்முடைய ஈகைக் குணத்தால் உண்மைப்படுத்த வேண்டும்.

உவமையில் வரும் பணக்காரன் நரகத்தில் தள்ளப்படுவதும், ஏழை இலாசர் விண்ணக மகிமையில் பங்குபெறுவதும் எதிர் காலத்தில் மட்டுமன்று; இவ்வுலகிலுமே என்பதை நாம் உணர வேண்டும். எந்தப் பணக்காரன் போதுமென்று சொல்கிறான்? பயமின்றி வாழ்கிறான்? இவ்வுலகே அவனுக்கு நரகமாவதில்லையா? உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, உந்த இடமின்றித் திரிவோர் முகத்திலே காணப்படும் அமைதி, பயமின்மை இவ்வுலகிலே இவர்கள் விண்ணகத்தைச் சுவைக்கின்றனர் என்று காட்டுவதில்லையா? "ஏழைகளே, நீங்கள் பேறு பெற்றவர்கள்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே" (லூக். 6:20) என்ற சொற்கள், ஏழைகள்தான் கடவுளின் அரசை ஏற்க முடியும், நற்செய்திக்குக் காது கொடுக்க முடியும் என்பதையன்றோ நமக்குக் கூறுகின்றன!

வானதூதர் அவனைத் தூக்கிச் சென்று ஆபிரகாமின் அருகிலே அமர்த்தினர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு