மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
ஆமோஸ் 8: 4-7 |1திமொத்தேயு 2: 1-8 | லூக்கா 16:1-13

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



விவேகம் - முன்மதி

சீனா தேசத்திலே ஆட்சிபுரிந்த அரசன் ஒருவன், தன் அவையிலே கோமாளித்தனமாக செயல்பட்ட ஒருவனிடம் ஒரு கோலைக் கொடுத்து, உன்னை விட பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டால் இந்த கோலைக் கொடுத்து விடு என்றார். நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் மறைந்தன. வருடங்கள் உருண்டோடின. மரணப்படுகையிலே இருந்த அரசனிடம் அந்தக் கோமாளி வந்து, "அரசே! நீங்கள் இறந்த பின் போகும் இடம் உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்க, 'தெரியாது' என்றார் அரசர். "இறந்தபின் வசதியாக வாழ்வதற்கு முன் ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா?" என்று கேட்க 'இல்லை' என்றார். "அப்படியானால், உலகத்திலே உங்களைவிடப் பெரிய முட்டாள் இருக்க முடியாது. எனவே நீங்களே இந்தக் கோலைப் பெற்றுக் கொள்ளுங்கள்,” என்று கொடுத்துவிட்டுச் சென்றான்.

இந்த உலக வாழ்விற்குப் பின் எங்கே போகிறோம் என்று அறிந்து அதற்கு உரிய முன் ஏற்பாடுகளை நாம் செய்யாமல் இந்த உலகத்தில் வாழ்ந்தால் நாம் தான் பெரிய முட்டாள்கள்! நமக்கு அறிவுடைமை, முன்மதி, விவேகம், பொருட்களைப் பயன்படுத்தும் முறையைப் பற்றிச் சிந்திக்க அழைக்கிறது இன்றைய வார்த்தை வழிபாடு. அம்மாவாசை எப்போது முடியும்? நல்ல விலைக்கு விற்க ஓய்வு நாள் எப்போது முடியும்? கள்ளத் தராசைக் கொண்டு எப்படியெல்லாம் மோசடி செய்யலாம் (ஆமோ.8:4-6) என்று காத்திருந்து, வஞ்சிப்பவர்களைச் சாடுகிறார் இறைவாக்கினர் ஆமோஸ் (முதல் வாசகம்). உலகச் செல்வங்கள் நிலையற்றவை. நேர்மையற்ற செல்வங்கள் இந்த நிலையற்ற, நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு, வேலையிலிருந்து நீக்கப்பட இருந்த கண்காணிப்பாளன் எப்படி முன்மதியோடும், விவேகத்தோடும் செயல்பட்டான் என்பதை இயேசு அழகாகச் சித்தரிக்கிறார் (மூன்றாம் வாசகம்). தந்திரத்தோடு செயல்பட்ட கண்காணிப்பாளனின் முன்மதியை மட்டும் இங்கே நாம் பார்க்க வேண்டும். ஆண்டவர் இயேசுவே கூறுகிறார் மிகுதியான உடைமைகளை ஒருவன் கொண்டிருந்தாலும், அவனுக்கு வாழ்வு வந்துவிடாது (லூக்.12:15) என்று.

அறம், பொருள். இன்பம் என்ற வழி முறையில், பொருள் மட்டுமல்ல. பொருளோடு அறமும், இறையருளும் சேர்ந்தால் தான் உண்மையான இன்பம் கிடைக்கும். நேற்றைய வேலையை இன்று முடிப்பவன் ஒரு முட்டாள். இன்றைய வேலையை இன்றே முடிப்பவன் ஒரு சராசரி மனிதன். நாளைய வேலையை இன்றே செய்பவன் ஓர் அறிவாளி. இதைத்தான் இன்றைய நற்செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது.

ஆண்டவர் இயேசு கூறுகிற அநீத செல்வங்களைக் கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள் (லூக்.16:9) என்றும், நீங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது (லூக்.16:13) என்றும் கூறுகிறார். நமது வாழ்வு இவ்வுலகில் குறுகிய காலம்தான். எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். இறைவன் கொடுத்த செல்வங்கள். கொடைகள், திறமைகள், ஆற்றல்கள் அனைத்தையும் பயனுள்ள முறையில் முன்மதியோடு வாழ அழைக்கப்படுகிறோம்.
தனக்காக வாழ்பவன் மிருகம்
தனக்காகவும் பிறருக்காகவும் வாழ்பவன் மனிதன்
பிறருக்காகவே வாழ்பவன் தெய்வம்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பணத்தின் மதிப்பு என்ன?

இன்றைய நற்செய்தியில் முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளரை இயேசு புகழ்கின்றார். தன் எதிர்காலத்திற்குத் தேவையானது பணமன்று, மாறாக நல்ல நண்பர்கள் என்பதை உணர்ந்து செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளரை நாம் இயேசுவின் உவமையில் சந்திக்கின்றோம்.

இயேசுவின் வார்த்தைகள் நமக்குக் கற்பிக்கும் பாடம் என்ன? பணத்தைச் சேர்த்துவைப்பதை விட நம் எதிர்கால வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக அமைய, அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதே நல்லது என்ற உண்மையை நமக்கு இயேசு இன்று எடுத்துச்சொல்ல விரும்புகின்றார்.

பணத்தைச் சேர்த்துவைப்பதால் எந்தப் பயனுமில்லை என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு கதை!

ஓர் ஊரிலே ஒரு பெரிய பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனிடம் கோடிக்கணக்கில் பணம் இருந்தது. ஆனால் அவன் சரியான கஞ்சன் ! கருமி! காசு காசு என்று பிசாசு போல அலைந்தான்.

ஒருநாள் அவன் சற்றும் எதிர்பாராத ஒன்று நடந்தது! அவன் நினையாத நேரத்தில் அவன் முன்னால் மரணதூதன் நின்றான். அவன் அந்தப் பணக்காரனைப் பார்த்து, உன் உயிரைக் கடவுள் எடுத்து வரச்சொன்னார் என்றான். அதற்கு அந்தப் பணக்காரன், இன்னும் ஒரு வருடம் அவகாசம் கொடு. என் கணக்கு, வழக்குகளையெல்லாம் முடித்துவிட்டுத் தயாராக இருக்கின்றேன் என்றான்.

		மரணதூதனோ, முடியாது என்றான். 
		பணக்காரன், மூன்று மாதங்கள் கொடு என்றான். 
		மரணதூதன். முடியாது என்றான். 
		பணக்காரன், மூன்று நாள்கள் கேட்டான். 
		மரணதூதன் மறுத்துவிட்டான்.
		

பணக்காரன், மூன்று மணி நேரம் தருவாயா? என்றான். மரண தூதன், மூன்று மணி நேரம் தரமுடியாது என்றான். கடைசியாக பணக்காரன், மூன்று நிமிடங்களையாவது தருவாயா? என்றான்.

மரணதூதன், சரி, இரண்டு நிமிடங்கள் தருகின்றேன்! அதற்குள் நீ செய்ய வேண்டியதை செய்துகொள் என்றான். அந்த இரண்டு நிமிடங்களைப் பயன்படுத்தி அவனது கடைசி ஆசையை அந்தப் பணக்காரன் எழுதினான்: உலக மக்கள் அனைவரும் அறியவேண்டியதாவது! உங்களிடம் கோடிக்கணக்கில் பணமிருக்கலாம். ஆனால் அதை வைத்து உங்களால் மூன்று நிமிடங்களைக் கூட வாங்க முடியாது.

நினையாத நேரத்தில் மரணதூதன் உங்களை அழைத்துப்போக வருவான். ஆகவே, எப்போதும் தயாராக இருங்கள்.

உங்களிடம் பணமிருந்தால் அதைக்கொண்டு தர்மம் செய்யுங்கள். அப்போது இம்மையிலும் உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள்; மறுமையிலும் கடவுள் உங்களுக்கு நண்பராவார்; உங்களுக்கு முடிவில்லா வாழ்வும் கிடைக்கும்.

ஆம். பணத்தை நல்ல முறையில் பயன்படுத்தி நமக்கு வேண்டிய பாதுகாப்பை நாம் தேடி வைத்துக்கொள்ளவேண்டும்.

நாம் பணத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது அது சேர வேண்டியவர்களுக்கு போய்ச் சேர்கின்றதா என்பதை நாம் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். நமது பணத்திற்கு உரியவர்கள் யார் என்பதை இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் நமக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றார்.

வறியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியோரை நமது பணம் சென்றடைய வேண்டும் என்கின்றார் ஆமோஸ். ஏழை எளியவர்களோடு தங்கள் செல்வத்தைப் பகிர்ந்துகொள்ளாது, அதைச் சேர்த்துவைக்க ஆசைப்படுகின்றவர்களுக்கு கடவுளின் ஆசி கிடைக்காது; நடுக்கமும், புலம்பலும்தான் அவர்கள் வாழ்க்கையிலே மிஞ்சும் (ஆமோ 8:8).

தன்னையே உலகுக்குக் கொடுத்த இயேசு ஆண்டவர் (இரண்டாம் வாசகம்) நம்மிடமுள்ளதை உலக மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றார். அவரின் ஆசையை நிறைவேற்றி அவரின் ஆசியைப் பெற்றுக்கொள்வோம்.
மேலும் அறிவோம் :

வறியார்க்கொன்(று) ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர(து) உடைத்து (குறள் : 221).

பொருள் : ஏழை எளியோர்க்குத் தேவையான பொருளை வழங்குவதே ஈகை என்னும் அறச் செயலாகும். ஏனையோர்க்குக் கொடுப்பவை அனைத்தும் பயனை எதிர்நோக்கித் தரும் இயல்பின ஆகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பழங்காலத்தில் ஓர் அரசர் தமது அரசவையில் கோமாளியாகச் செயல்பட்ட ஒருவரிடம் ஒரு கோலைக் கொடுத்து, "உன்னைவிடப் பெரிய முட்டாள் ஒருவரைக் கண்டுபிடித்து அவரிடம் இக்கோலைக் கொடு" என்றார். பல ஆண்டுகளுக்குப்பின் அரசர் மரணப்படுக்கையில் இருந்தார். கோமாளி அவரிடம், "அரசே! நீங்கள் இறந்தபின் போகுமிடம் உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டதற்கு அரசர், "தெரியாது" என்றார். கோமாளி மீண்டும் அரசரிடம், "இறந்தபின் வசதியாக வாழ்வதற்கு முன் ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா?" என்று கேட்டதற்கு. "இல்லை" என்றார். கோமாளி அரசரிடம், "இறந்தபின் எங்கே போகப்போகிறீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியாது. இறந்தபின் வசதியாக வாழ்வதற்கும் நீங்கள் முன் ஏற்பாடு செய்யவில்லை. அப்படியானால் உங்களைவிட ஒரு பெரிய முட்டாள் இருக்க முடியாது. எனவே நீங்கள் என்னிடம் கொடுத்த இக்கோலை நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறி கோலை அவரிடம் கொடுத்து ஏளனமாகச் சிரித்தார்.

இம்மை வாழ்வுக்குப் பின் நாம் எங்கே போகிறோம் என்று தெரியாமலும், போகின்ற இடத்தில் வசதியாக வாழ முன் ஏற்பாடுகள் செய்யாமலும் நாம் இருந்தால், உண்மையில் நம்மைவிடப் பெரிய முட்டாள் வேறு எவரும் இருக்க முடியாது. நமக்குத் தேவையானது அறிவுடமை, முன்மதி, விவேகம். அறிவாளிகள் எதிர்காலத்தை முன்னறியும் ஆற்றல் பெற்றவர்கள். அத்தகைய ஆற்றல் அற்றவர்கள் அறிவில்லாதவர்கள்.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃது அறி கல்லாதவர். (குறள் 427)

இயேசு கிறிஸ்து நாம் மறுவாழ்வைப் பற்றியும் மீட்பைப் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதைப் பின்வருமாறு கூறுகிறார்; "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்" (மத் 16:26). இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "இயேசு கிறிஸ்து அனைவரின் மீட்புக்காகத் தம்மையே ஈடாகத் தந்தார்" (1 திமொ 2:6). "மீட்பின் பயனை நாம் பெறாவிட்டால் நாம் பிறந்ததால் எப்பயனும் இல்லையே" என்று திருச்சபை பாஸ்காப் புகழுரையில் கூறுகிறது.

மனநல மருத்துவமனையில் ஒரு நோயாளி மற்றொரு நோயாளியின் கழுத்தை வெட்டிவிட்டார். அதிர்ச்சி அடைந்த மருத்துவர் அவரிடம் ஏன்? அவர் அவ்வாறு செய்தார் என்று கேட்டதற்கு அவர் கூறியது: "பயப்படாதே டாக்டர்! நாளை காலை அவன் தூங்கி எழுந்தவுடன் தலையைக் காணாமல் தேடுவான். அப்போது தலையைக் கொடுத்துவிடலாம். " தலையை இழந்தவர் உயிர்வாழ முடியுமா? அவ்வாறே ஆன்மாவை இழந்தவர் எவ்வாறு முழுமையான வாழ்வு வாழ முடியும்? எனவே, விண்ணக வாழ்வை இழந்து விடாமல் இம்மண்ணக நலன்களை நாம் பயன்படுத்த வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் முன்மதியுடன் செயல்பட்ட நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமையைக் கூறுகின்றார் கிறிஸ்து. வீட்டுப் பொறுப்பாளர் நேர்மையற்ற மோசடிக்காரர், இருப்பினும் தனது எதிர்காலத்தைக் கருதி முன்மதியுடன் செயல்பட்டார். அவர் இருளின் மகன்; ஆனால் இவ்வுலகக் காரியங்களைப் பொறுத்த மட்டில் ஒளியின் மக்களைவிட முன்மதியுடன் நடந்து கொண்டார்.

முன்மதியுடன் செயல்பட்ட நேர்மையற்ற பொறுப்பாளரைப் பின்பற்ற வேண்டும் என்கிறார் கிறிஸ்து. செல்வம் நேர்மையற்றது; அச்செல்வத்தைக் கொண்டு நாம் நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும்; அதாவது, நமது செல்வத்தைக் கொண்டு ஏழைகளுக்கு இம்மையில் உதவி செய்தால். மறுமையில் அவர்கள் நமக்காகக் கடவுளிடம் பரிந்து பேசுவார்கள். சுருக்கமாக, இம்மையில் நாம் ஏழைகளை வாழவைத்தால், மறுமையில் ஏழைகள் நம்மை வாழவைப்பார்கள்.

செல்வத்தை நேர்மையற்ற (அநீதி) செல்வம் என்று கிறிஸ்து குறிப்பிடுவது ஏன்? ஏனெனில் பெரும்பாலும் மக்கள் நேர்மையற்ற வழிகளில் செல்வம் சேர்க்கின்றனர். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் அவருடைய காலத்தில் நிலவிய சமூக அநீதிகளைப் பின்வருமாறு கோடிட்டுக் காட்டியுள்ளார்: தானியங்களில் கலப்படம் செய்கின்றனர்; கள்ளத் தராசைப் பயன்படுத்துகின்றனர்; ஒரு வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும், இரு காலணிக்கு வறியோரையும் விலைக்கு வாங்குகின்றனர் (ஆமோ 8:4-7). இவ்வாறு முறைகேடான வழிகளில் திரட்டப்படும் செல்வம் நேர்மையற்ற செல்வம்தானே!

நம் நாட்டில் ஒருவர் மண்ணை அள்ளித் தின்றார். ஏன் என்று அவரைக் கேட்டதற்கு அவர் கூறினார்: "நமது நாட்டில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் மண்தான்." ஒரு பள்ளி மாணவன் ரயில் பெட்டியிலிருந்த மின் விசிறியைக் கழட்டி எடுத்தான். உடன் பயணிகள் ஏன் என்று கேட்டதற்கு அவன் கூறினான்: "எனது வகுப்பு ஆசிரியர், அரசு உடைமைகளை எல்லாம். நமது சொந்த உடைமைகளாகக் கருத வேண்டும் என்று நேற்றுதான் வலியுறுத்திச் சொன்னார்" இவ்வாறு கலப்படம் செய்து, அரசு செத்துக்களை சூரையாடிச் செல்வம் திரட்டும் காலம் இது. இச்சூழலில் நேர்மையற்ற செல்வத்தை நேர்மையான செல்வமாக மாற்றுவதற்கு ஒரே வழி அதைக்கொண்டு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல் ஆகும்.

ஒரு பணக்காரப் பெண்மணி விண்ணகம் சென்றபோது அவருக்கு ஒரு குடிசை வீடுதான் கிடைத்தது. ஏன் என்று அவர் பேதுருவைக் கேட்டபோது அவர் கூறியது: "நீங்கள் உலகில் வாழ்ந்தபோது ஏழை எளியவர்களுக்கு நீங்கள் கொடுத்த பணத்தைக் கொண்டு இந்தக் குடிசை வீடு மட்டும்தான் எங்களால் கட்ட முடிந்தது."

“எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்." (லூக் 6:38).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நேர்மையும் திறமையும்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 'பிரிட்டானியா' என்ற கப்பல் ஸ்பெயின் நாட்டின் தங்க நாணயங்களை ஏற்றிக் கொண்டு பிரேசில் நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத காரணத்தால் கப்பலில் பெரும் பழுது ஏற்பட்டு கப்பலினுள் தண்ணீர் புகத் தொடங்கியது. கப்பலின் கீழ்த்தளத்தில் இருந்த தங்க நாணயப் பெட்டிகளை மேல்தளத்துக்குக் கொண்டு வந்து அடுக்கினர். நிலைமை கட்டுக்கடங்காமல் மோசமாகவே, நெருக்கடியில் தப்பிக்கப் பயன்படும் உயிர்காக்கும் சிறு படகுகளில் மாலுமிகள் வெளியேறினர். அவ்வேளையில் யாராவது கப்பலினுள் தப்பித்தவறி மாட்டிக் கொள்ளக் கூடாதே என்று பார்ப்பதற்காக ஒரு மாலுமி மூழ்கும் கப்பலின் மேல்தளத்துக்குச் சென்றார். அவர் அங்கு கண்ட காட்சி அதிர வைத்தது. ஓர் ஆள் பெட்டிகளில் இருந்த நாணயங்களைத் தரையில் கொட்டி அவற்றின் நடுவே போதிமரப் புத்தர் போல அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்து "உயிர் பிழைக்க உடனே வெளியேறு" என்று உரக்கக் கத்தினார். அதற்கு அந்த ஆள் என்ன சொன்னான் தெரியுமா? "கப்பல் மூழ்கி இதே இடத்தில் நீருக்கடியில் சென்றாலும் எனக்குக் நவலையில்லை. என் வாழ்நாள் முழுவதும் நான் ஓர் ஏழையாகவே இருந்திருக்கிறேன். இறக்கும்போதாவது ஒரு பணக்காரனாகச் சாக விரும்புகிறேன்” என்றானாம்!

ஆண்ட்ரூ கார்னெகி என்பவர் அமெரிக்காவில் 40 வயதிலேயே மிகப் பெரிய பணக்காரர் ஆனவர். இரயில்வே துறைக்கு இரும்பு வணிகம் செய்தே பணம் ஈட்டினார். நீண்ட தூரப்பயணங்களில் உறங்கும் வசதிகளை (sleeping berths) முதலில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்குரியது. அவர் எழுதிய “சொத்து எனும் நற்செய்தி" (gospel of wealth) என்ற நூலில் அவர் குறிப்பிடுகிறார்: "பணக்காரனாகச் சாவது இழிவானது" (It is disgrace to die rich). வாழ்வின் முதற் பகுதியில் பணம் சேர்த்த அவர் மறுபகுதியில் பயனுறச் செலவழிப்பதில் முற்பட்டார்.

ஆல்ஃபிரட் நோபல் ஒரு நாள் விழித்தெழுந்து நாளிதழைப் புரட்டியபோது அவருக்குப் பேரதிர்ச்சி. அவர் இறந்துவிட்டதாகச் செய்தி - வெடிகுண்டு மன்னன் இறந்துவிட்டார் என்ற தலைப்பில். செய்தி தவறுதலானது. ஆனால் உயிர்போக்கும் வெடிமருந்துகளை விற்று பெரும் பணக்காரனான அவரது வாழ்வில் எத்தகைய திருப்பத்தை ஏற்படுத்தியது! எதிர்காலத் தலைமுறை தன்னை 'வெடிகுண்டு மன்னன்', 'மரண வியாபாரி' என்ற முகவரியிலா இனம் கண்டு கொள்ளுவது? இந்த எண்ணத்தின் விளைவு? சமாதானத்திற்காகவும் சமூக வளர்ச்சியின் சாதனைகளுக்காகவும் நோபல் பரிசுகளை நிறுவ வைத்தது.

வாழ்வு சிறக்கப் பணம் வேண்டும். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. வாழ்க்கையில் பணத்தைவிட முக்கியமானவை பல இருக்கின்றன. ஆனால் ஒரே தொல்லை. அத்தனைக்கும் பணம் தேவைப்படுகின்றது. நற்செய்தி பணத்தைவிட எவ்வளவு புனிதமானது. ஆனால் நற்செய்திப் பணி என்றால் விசுவாசப் பரம்புதல் காணிக்கை வேண்டும். ஆனால் பொருள் சேர்ப்பது மட்டுமல்ல. அதற்கான வழியும் முக்கியம். இது நேர்மையானதா? சரியானதா? முறையானதா? சமூக நீதியின் இறைவாக்கினர் ஆமோஸ் எப்படிக் கடுமையாகச் சாடுகிறார். வணிகத்தில் மோசடி, எடைக்கல் தராசு இவற்றில் ஏமாற்று வித்தை... இப்படி... (முதல் வாசகம்).

நேர்மையாளர்கள் இன்று அருகி வரும் அபூர்வ இனமாகி விட்டனரா? "ஆட்டோவில் தவறவிட்ட நகைப் பெட்டியை காவல்துறையிடம் ஒப்படைத்தார் ஆட்டோக்காரர்" என்ற ஒரு செய்தி வந்தால் வியக்கிறோம். அடடா! இப்படி ஒரு நேர்மையா என்று ஆச்சரியப்படுகிறோம். மனிதர்களிடம் இயல்பாக இருக்க வேண்டிய நேர்மை இன்று வியக்க வைக்கும் அரிய பண்பாகிவிட்டதைத்தானே இது காட்டுகிறது!

மனித வாழ்க்கைக்கு முக்கியம் பொருளாதாரம் அல்ல, மனித மதிப்பீடுகளே! நாணயம், நேர்மை, நம்பகத்தன்மை போன்ற நல்ல விழுமியங்களின் மீது கட்டமைக்கப்படும் வாழ்க்கையே சமூக வளர்ச்சிக்கும் மன மகிழ்ச்சிக்கும் ஆதாரம்!

கள்ளக் கண்காணிப்பாளன் மட்டுமல்ல, அவனை முன்மதியாளன் என்று மெச்சிப் பாராட்டும் கதைத் தலைவனும் சுயவனே! அநீதி இழைப்பவன் மட்டுமல்ல, அநீதிக்குத் துணை போகிறவனும் அயோக்கியன். தீமை செய்பவன் மட்டுமல்ல தீமைக்குத் துணை நிற்பவனும் அயோக்கியன். அதனால்தான் இயேசு தனது வார்த்தையாக அல்ல, கதைத் தலைவனின் வாய்மொழியாகப் பாராட்டை அமைக்கிறார்.

"பொருளாசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்" (1திமோத். 6:10). "உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு... உன் நேர்மையைக் கதிரொளி போலும் உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார்" (தி.பா. 37:5-6).

நேர்மையும் திறமையும் நிருவாகத்தின் இரண்டு கண்கள். நேர்மையற்ற திறமையும் திறமையற்ற நேர்மையும் எதற்கும் உதவாது.

பணம், பொருள் அனைத்தும் வெறும் கருவியே. இலக்கு அல்ல. கப்பல் செல்லத் தண்ணீர் தேவை. ஆனால் அந்தத் தண்ணீரே கப்பலுக்குள் புகுந்துவிட்டால் கப்பலின் நிலை என்னாவது? அது போல நம் வாழ்வுக்குப் பணம் தேவை. ஆனால் பணமே வாழ்வாகிவிடுகிறபோது வாழ்வு அழிவுப் பாதையில்தானே செல்லும்!

வானகம் என்பது ஒரு மாளிகை. அதனைக் கட்டி எழுப்ப கடவுள் அமைத்துத் தந்த சாரம்தான் இவ்வுலகம் - உலகம் தரும் செல்வம் - செல்வம் தரும் இன்பம். வீடு எதற்காக? படுக்க, அமர, பல்வேறு வேலை செய்ய. சாரத்திலேயே ஓரளவு படுக்கலாம், உட்காரலாம் என்று நினைத்து மாளிகையைக் கட்டி எழுப்பாது சாரத்திலேயே குடியிருக்க நினைக்கலாமா?

எனவே இயேசு சொல்கிறார்: "நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக் கொள்ளுங்கள்" (லூக். 16:9) "விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்" (மத்.6:20).

நிலம் நன்றாய் விளைய, இருக்கும் களஞ்சியத்தை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டி, நெஞ்சைப் பார்த்து, “உண்டு, குடித்து மகிழ்ச்சியில் திளைத்திடு” என்றதும் கடவுள் அவனிடம், “அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உண்மையில் பிரிந்துவிடும். நீ சேர்த்து வைத்தவை யாருடையதாகுமோ?" என்றார் (லூக். 12:19,20). இந்த உவமைக்கு விளக்கம் கூறும்போது புனித அம்புரோஸ் சொல்கிறார்: ஏழைகளின் வயிறுகள், விதவையின் இல்லங்கள், அனாதைக் குழந்தைகளின் வாய்கள் இவைகளே நாம் கட்டி எழுப்ப வேண்டிய நிலையான நெற்களஞ்சியங்கள்”. பணக்காரர்கள் ஏழைகளுக்கு இவ்வுலகில் உதவி செய்கிறார்கள். ஏழைகள் பணக்காரர்களுக்கு மறு உலகில் உதவி செய்கிறார்கள்.

பெரிய பணக்காரர் ஒருவர் இறந்து விண்ணகம் சென்றார். வாயில்காக்கும் தூதன் அவரை அழைத்துச் சென்றார். வழியெல்லாம் அரிய பெரிய அரண்மனைகள், மாட மாளிகைகள். அவற்றைக் கடந்து அவர் தங்க வேண்டிய சிறு குடிசையைக் காட்டினார். தூதனைப் பார்த்து குடிசையா? அத்தனை பெரிய மாளிகைகள் இருக்கும்போது எனக்குமட்டும் சிறு என்று கேட்டார். அதற்குத் தூதன் "நாங்கள் என்ன செய்வது? நீங்கள் அனுப்பிவைத்த பொருள்களை வைத்து இந்தச் சிறு எவ்வளவு குடிசையைத்தான் கட்ட முடிந்தது” என்றார். “நான் பூமியில் பெரிய செல்வந்தன் தெரியுமா?" என்று கத்த, தூதன் அமைதியாகச் சொன்னார்: "தெரியும். ஆனால் இங்கு நீர் ஏழைதான் என்பதை நீர் புரிந்து கொள்ளவே இந்தக் குடிசை தரப்பட்டுள்ளது".

ஏழை மட்டுமல்ல. அவன் அறிவிலி. “கடவுள் முன் செல்வம் இல்லாதவனாய் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே" (லூக்.12:21)

செல்வம் என்பது சிந்தனையின் நிறைவு. நாய் விற்ற காசு குரைக்காது. உண்மை. ஆனால் மனச்சாட்சி விற்ற காசு குரைக்கும். குரைக்க வேண்டும். இல்லையென்றால் மனச்சாட்சியில் புற்றுநோய் புரையோடிவிட்டது என்று பொருளாகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஏமாற்றுபவரைப் போற்றுவதா?

எல்லாரையும், எல்லா நேரங்களிலும் உன்னால் ஏமாற்ற முடியாது என்று லிங்கன் சொல்லிச் சென்றது அவரது வாழ்க்கையிலேயே பொய்த்துப் போய், இன்றும் அது தொடர்ந்து பொய்யாகிப் போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்று உலகின் பல நாடுகளிலும் நடக்கும் மக்களாட்சியை, அந்த ஆட்சியை ஆட்டிப் படைக்கும் பண சக்தியை, பணத்தைக் கடவுளாக்கி வழிபடும் அரசியல் வாதிகளை எண்ணிப் பார்க்கும்போது, நாம் எல்லாரும் எல்லா நேரங்களிலும் எமாற்றப்படுகிறோமோ என்ற ஆழ்ந்த கவலை மனதை அழுத்துகிறது.

அரசியலை, அரசியல் வாதிகளை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டும்போது, மற்ற விரல்கள் என்னைக் குத்திக் காட்டுவதை உணர்கிறேன். அரசியல் வாதிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு, அல்லது, அவர்களையும் மிஞ்சிவிடும் அளவு நாம் வாழும் இந்தச் சமுதாயம் ஏமாற்றி வருகிறது. பாலில் நீரைக் கலந்து, அரிசியில் கல்லைக் கலந்து ஏமாற்றிய காலமெல்லாம் மலையேறிப் போய் விட்டது. இன்று சிமென்ட்டில் சாம்பலைக் கலந்து கட்டப்படும் கட்டிடங்கள் இடிந்து உயிர்சேதம் உண்டாகிறது. மருந்துகளில் கலப்படம் செய்யப்பட்டு மனித உயிர்கள் பலியாகியுள்ளன. பத்திரத்தாள் மோசடி, சீட்டுக் கம்பெனிகள், அயல் நாட்டு வேலைகள், அசலைப் போலப் போலிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள், கள்ள நோட்டுகளை அச்சடித்தல், திருமண சந்தைகள் என்று எமாற்றுவது ஒரு முழு நேர வியாபாரமாகி விட்டது.

ஒவ்வொரு ஏமாற்றுச் செய்தியும் வெளி வரும்போது, பின்னது முன்னதை விஞ்சும் அளவுக்குத் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன. திட்டமிட்டு ஏமாற்றுவதை ஆமோஸ் இறைவாக்கினர் இன்றைய ஞாயிறு வழிபாட்டின் முதல் வாசகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்:

ஆமோஸ் 8 : 4-7
வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்: வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்: கோதுமைப் பதர்களையும் விற்கலாம் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா? ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

உலகின் அனைத்து நாடுகளிலும் வாழும் ஒரு சில செல்வர்களின் சக்தியால், அவர்கள் வழிபடும் செல்வத்தின் சக்தியால், இன்று உலக அரசுகளும், அகில உலக அமைப்புக்களும் சக்தி இழந்து வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக கோவிட்-19 பெருந்தொற்று, இவ்வுலகின் சுவாசத்தை தன் அரக்கப்பிடியில் வதைத்த வேளையில், உலகின் பொருளாதாரத்தை பெருமளவு சிதைத்த வேளையில், செல்வந்தர்களின் வாழ்விலும், பொருளாதாரத்திலும் எந்த வீழ்ச்சியும் இல்லை. இன்னும் பார்க்கப்போனால், இந்தப் பெருந்தொற்றின் நெருக்கடிகள் செல்வந்தர்களுக்கு கூடுதல் வருமானத்தைத் தந்தன என்பது வேதனையைத் தருகிறது.

ஏமாற்றுவதை ஒரு தொழிலாக எடுத்து நடத்தி வருபவர்களைக் கண்டு வேதனை, கோபம் இவைகள் அதிகம் எழுந்தாலும், கூடவே வியப்பும், பிரமிப்பும் மனதில் எழுகின்றன. இவ்வளவு நுணுக்கமாகத் திட்டமிட்டு ஏமாற்றுகிறார்களே என்ற வியப்பு. இந்த வியப்புதான் இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இயேசு கூறிய உவமைகளிலேயே புரிந்து கொள்வதற்கு வெகுகடினமான உவமை லூக்கா நற்செய்தி 16ம் அதிகாரத்தில் தரப்பட்டுள்ள இந்த ‘வீட்டுப் பொறுப்பாளர்’ உவமை. வழக்கமாக, இயேசுவின் உவமைகளில் வரும் கதாபாத்திரங்கள் நல்லவைகளை எண்ணி, நல்லவைகளைச் செய்து நாலு பேருக்குப் பாடமாக, முன் உதாரணமாக இருப்பார்கள். இன்று இயேசு கூறும் இந்த உவமையின் நாயகன் நேர்மையற்ற, ஏமாற்றுகிற வீட்டுப் பொறுப்பாளர். இவரது ஏமாற்றும் திறன் கண்டு இயேசு வியந்து போகிறார்.

வீட்டு உரிமையாளரின் செல்வத்தைப் பாழாக்கியதால், வேலையை விட்டு நீக்கப்பட இருந்த இந்த மேலாளர், தன் வீட்டுத் தலைவரிடம் கடன் பட்டவர்களை வரவழைத்து, அவர்களைத் தப்புக் கணக்குகள் எழுதச் சொல்லி, தன் எதிர்காலத்தைப் பாது காத்துக் கொள்கிறார். கதையின் முடிவில், நேர்மையற்ற அந்தப் பொறுப்பாளர் பாராட்டுகளைப் பெறுவது நம்மை வியக்கச் செய்கிறது.

இயேசு இவ்வாறு வியந்து பாராட்டுவது அவரது ஓர் அழகிய குணத்தை வெளிப்படுத்துகிறது. திறமை கண்டவிடத்து பாராட்டும் குணம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி என் நினைவுக்கு வருகிறது. "Give the devil his due" அதாவது, சாத்தானுக்குரிய பாராட்டைக் கொடு. சீசருக்கும், இறைவனுக்கும் உரியவைகளை ஒன்றோடொன்று கலந்து குழப்பாமல், அவரவருக்குரியவைகளைக் கொடுக்கச் சொன்னவர்தானே இந்த இயேசு. திறமை கண்டவிடத்து பாராட்டுவதற்கு பரந்த மனம் வேண்டும். இப்படி பாராட்டுவதால், இயேசு சாத்தான் பக்கம், அல்லது நேர்மையற்ற பொறுப்பாளர் பக்கம் சாய்ந்து விட்டார், அவர் செய்ததை நியாயப்படுத்துகிறார் என்று அர்த்தமல்ல. பாராட்டுவது வேறு, பின்பற்றுவது வேறு.

ஒளியின் மக்களையும் இந்த உலக மக்களையும் ஒப்புமைப் படுத்தி, உலக மக்களின் முன் மதியை பாராட்டுகிறார். இந்தப் பாராட்டுடன் இயேசு நிறுத்தவில்லை. தன் கருத்துக்களைத் தொடர்கிறார். முன் மதியுடன் சேர்த்து வைக்கும் செல்வத்தைப் பூச்சி அரிக்கும், அல்லது கள்வரால் திருடப்படும் கருவூலங்களில் சேர்ப்பதோ, தானியக் கிடங்குகளைப் பெரிதாக்கி மேலும், மேலும் சேர்த்து வைப்பதோ மதியீனம் என்று சில வாரங்களுக்கு முன் எச்சரித்துள்ளார் இயேசு. (லூக்கா 12 : 13-21; 33-34)

இன்று அவர் தரும் அறிவுரை இதுதான்: லூக்கா 16 : 9
ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.

இதே எண்ணத்தை ஆறு வாரங்களுக்கு முன் வேறொரு வகையில் எடுத்துரைத்தார் இயேசு. லூக்கா 12 : 33

உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பதில்லை.

ஏழைகள் விண்ணரசின் உரிமையாளர்கள் என்பது இயேசுவின் நம்பிக்கை. (மத்தேயு 5 : 3; லூக்கா 6 : 20அ) எனவே, அழிந்து போகும் செல்வங்களைக் கொண்டு இந்த ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்வது முன் மதியுடன் நடந்து கொள்ளும் ஒரு செயல். அப்படி செய்து கொண்டால், விண்ணரசில் நமக்கும் இடம் கிடைக்கும் என்று தெளிவு படுத்துகிறார் இயேசு. ஏழைகளை எவ்வாறு நண்பர்களாக்குவது, அல்லது குறைந்த பட்சம் எப்படி அவர்களை மரியாதையாய் நடத்துவது என்பதை அடுத்த ஞாயிறு சிந்தனைக்குரிய நற்செய்தி நமக்குத் தெளிவு படுத்தும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (ஆமோ. 8:4-7)

ஆமோஸ் இறைவாக்கினர் ஐந்து விதமான சமுதாயத் தீமைகளைச் சுட்டிக் காட்டுகின்றார். இன்றையப் பகுதியில் நான்காவது தீமையாக, மனித வளங்களைச் சுரண்டுபவர்களையும், பொருளாதார வளங்களை அபகரிப்பவர்களையும், சமுதாய சூழல் பற்றியும், நெருப்புக் கனல் பறக்கப் பேசுகின்றார். மக்களின் மனமோ பாதாளத்தில் தள்ளும் பணத்தின் மேல் இருந்தது. நிலக்கிழார்களும், பணக்காரர்களும், ஓய்வு நாளிலும் ஏமாற்றிப் பிழைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அச்சமுதாயத்தில் ஏழைகளின் நிலைமையோ கேள்விக்குறியாக இருந்தது. ஏழைகளை ஏமாற்றுவது வெறும் குற்றமாக இருந்திருக்கின்றது (வி.ப. 22:24-25; லேவி. 25:35-37; இ.ச. 23:20-21). ஒருவன் தான் வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழலில் தன் மகனையே அதற்கு விலையாகக் கடன் வாங்கியவனிடம் கைப்பிடித்துக் கொடுத்து விடுகின்றார். இந்தச்சமுதாயச் சூழல் சீர்கெட்டுப் போய்விட்டது, வேலியேப் பயிரை மேய்கின்றதே! என்ற உள் குமுறல்களை வெளியில் கொட்டித் தீர்க்கின்றார். பெரும்பணக்கார முதலைகளினால்தான் சமுதாயத்தில் ஊழல் பெருகியது, சிலைவழிபாடும் கொண்டுவரப்பட்டது என்கிறார் இறைவாக்கினர்.

இரண்டாம் வாசகப் பின்னணி (1திமோ. 2:1-8)

உண்மையான கிறிஸ்தவன் எவ்வாறு இருக்க வேண்டும். எப்படிப் போராட வேண்டும் என்று கற்பித்த பவுல் இன்று செப வாழ்வைப் பற்றிக் கூறுகின்றார். இவர் தன்னுடைய அனுபவத்தையே இந்நூலில் எழுதியுள்ளார் என்பதால் மிகவும் நம்பத்தக்கதாக உள்ளது. இதில் எப்படி செபிக்க வேண்டும், யாருக்காகச் செபிக்க வேண்டும்? ஏன் செபிக்க வேண்டும்? என்று நயம்படக் கூறுகிறார். இவ்வுலகச் சிற்றின்பங்களில் இருந்துக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் இறைவனுக்கு மட்டுமே உண்டு. உயர் பதவியில் இருப்போருக்காக, ஏழைக்காக, அனாதைகளுக்காக, கைவிடப்பட்டோருக்காக, சமுதாயத்தில் அநீதி செய்து கொண்டிருப்போருக்காக முக்கியமாகப் பணம் படைத்தவர்களுக்காகவும் செபிக்க வேண்டும். செபத்தினால் அனைவரும் இறைவன் பக்கம் திரும்ப வேண்டும் என்பது தூய பவுலின் கனவாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 16:1-13)

லூக்கா நற்செய்தியாளர் எழுதியக் காலத்தில் சமுதாயத் தில் சீர்கேடுகள் பல இருந்ததை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இந்நற்செய்தியில் பொருளாதாரத்தைப் பற்றியும் பணக்காரர்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். லூக்கா 16-ஆம் அதிகாரம் முழுவதுமே எப்படிக் கிறிஸ்தவன் பணத்தைக் கையாள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்.
1. 16:1-8-இல் விசுவாசமற்ற ஊழியன் பற்றியும்
2. 16:19-31-இல் பணக்காரன் மற்றும் இலாசர் பற்றியும்
குறிப்பிட்டுள்ளது.
ஏழைகள் அனைவரும் தினக்கூலிக்காக வயல்வெளிகளில் வேலைசெய்து எஜமானுக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தருகின்றார்கள் (மத்தேயு 20:1-6). தாங்கள் வேலை செய்து, பெற்ற கூலியால் கடனை அடைப்பதிலேயே வாழ்நாளை இழந்து விடுகின்றார்கள் (மத்தேயு 21:33-46; லூக்கா 20:1-19). லூக்கா நற்செய்தியாளர் நகர் புறத்தில் வசித்தவர் என்பதால், எஜமான்களும் நகர் புறத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதைக் காண்கின்றார். எனவே தன் நிலங்களைக் கண்காணிப்பதற்குக் கண்காணிப்பாளர்களை அமர்த்துகின்றார்கள். கொடுமைப்படுத்தி அவர்களிடமிருந்து பிடுங்கு வதையும் கண்கூடாகப் பார்க்கிறார். எஜமானர்களோ தொலைவில் இருக்கின்றார்கள். யார் இவர்களைத் தட்டிக்கேட்க முடியும்?

மறையுரை

கருவறை முதல், கல்லறைவரை சில்லரை தேவை! பணம் இல்லாத உலகைக் கற்பனை செய்து பார்க்க இயலாது. நாம் எதைத் தொட்டாலும் காசுதான், தண்ணீர் பாட்டில் முதல் சவப்பெட்டி வரைக் காசு கொடுத்துதான் வாங்குகின்றோம். தற்காலப் பாடல் வரிகள், மக்களின் வாழ்க்கை முறையை எடுத்துச் சொல்கிறது: ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால்தான் வாங்கலாம். நீங்கள் அமெரிக்கா நாட்டு பணத்தை (டாலர்) கூர்ந்துக் கவனித்தால் அதில் நாங்கள் கடவுளை நம்புகின்றோம் (In God we trust) என்றிருக்கும். ஆக மனிதன் பணத்தைக் கடவுளாக வணங்குகின்றான். அரசன் முதல் ஆண்டி வரை, முதல்வர் தொடங்கி கடைநிலையிலுள்ளோர் அனைவருக்கும் பணம் அத்தியாவசியப் பொருளாகக் கருதப்படு கின்றது. இன்றைய வாசகங்கள் விடுக்கும் சவால்களோ! பொருளாதாரச் செல்வங்களை இழந்து, அருள் செல்வங்களை நம தாக்கிக்கொள்ள அழைக்கின்றது. செல்வங்களால் அநீதி பெருகி, நீதி மடிந்துக் கிடக்கிறது, இந்த அழியக்கூடிய செல்வங்களை விடுத்து, அழியா அருட்செல்வமாகியக் கடவுளை எப்படிப் பிடித்துக் கொள்ள முடியும் என்பதற்காக வாழும் கலையைக் கற்றுக்கொடுக்க இன்றைய வாசகப் பகுதிகள் நமக்கு வாழ்வின் செய்தியாக அமைகின்றன.

நமது ஆண்டவர் கொடுத்தப் பழைய ஏற்பாட்டிலே, யூதர்கள் தங்களுக்கென்று சில சட்டங்களை உருவாக்கிக் கொண்டனர். அவ்வாறு கொண்டு வரப்பட்ட சட்டங்களில் பணத்தின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பதை விவிலியம் எடுத்துக் காட்டுகின்றது. அடிமைகளை வாங்குவதற்கும் (வி.ப. 12:44; ஆமோ. 8:6), பண்டமாற்று முறைக்கும் (எசே. 11:12; 2அர. 7:1-16; 1குறி. 21:25). புதிய ஏற்பாட்டிலோ இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்கும் (மத்தேயு 27:3,5-6,9), பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை அறிவோம். இஸ்ராயேல் மக்கள் பணத்தைச் சேர்ப்பதில் நோக்கம் கொண்டிருந்தனர். ஒருபுறம் ஏழை மக்களைச் சுரண்டியும், மறுபுறம் கடவுளின் இறையாசீர் பெறவிரும்பியும் வாழ்ந்தனர், எனவேதான் பணம்படைத்த மக்களைக் கடவுள் கடிந்துக்கொண்டார். பணக்காரன் விண்ணரசில் நுழைவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது என்கிறார். உனக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு, உனக்குச் செல்வம் மிகுதியாகக் கிடைக்கும் என்கிறார் (மத்தேயு 19:21). மக்கள் செல்வத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை வழியுறுத்திக் கூறுகின்றார்.

ஆமோஸ் சமாரியா மக்களுக்குத் தூதுரைக்கும்போது செல்வர்கள் பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலிமையுடன் போதித்தார். அவருடைய தைரியம் நமக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும். நற்செய்தியிலே அநீதக் கண்காணிப்பாளன் விவேகத்தோடு நடந்துகொண்டதால் எஜமான் அவனை மெச்சிக் கொண்டான். ஆண்டவர் நமக்கு அறிவுறுத்துவதோ அநீதச் செல்வத்தைக் கொண்டு நண்பர்களைச் சம்மாதித்துக் கொள்ள வேண்டும் (16:9). அத்தோடு கடவுளுக்கும் செல்வத்துக்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது (16:24). பணத்தினால் குணத்தை இழந்தவர்கள் எப்படி மனிதனை அன்பு செய்ய இயலும்? என்பது இயேசுவின் வாதம். பணம் ஒரு மனிதனைக் குறுகலான பார்வைக்கு இழுத்துச் செல்வதோடு, அழிவையே கொணர்கிறது. இதையே பேதுரு, மந்திரவாதி சைமன் என்பவரை நோக்கி (தி.ப. 8:20) 'உன் பணத்தோடு நாசமாய்ப்போ. பணம் கொடுத்துக் கடவுளின் கொடையை வாங்க நினைத்தாய்' என்று சாடுகின்றார். ஆண்டவர் இயேசு கிறிஸ்து பணக்காரர்களை நேசித்தார். ஆனால் அவர்களின் வாழ்க்கை முறைகளைக் கண்டித்து திருத்தம் கொடுத்தார்.

இரண்டாம் வாசகத்தில் தூய பவுல், கிறிஸ்தவர்கள் எதைப் பின்பற்ற வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். செபத்தினால் நாம் ஒவ்வொருவரும் இறையருள் வேண்டி மன்றாட வேண்டும். செபத்தினால் எல்லாமே நடைபெறும் என்பதைக் கூறினா லும், பணக்காரர்களுக்காகச் செபிக்க வேண்டும் என்று ஆசிக்கின்றார். இன்றைய உலகில் பணக்காரர்களுக்கு எதிராக நாம் நின்று, ‘நீ செய்வது தவறு' என்று கூற இயலாது. காரணம் அவர்களுடையக் கண்களைப் பணம் மறைக்கின்றது. பணத்தினால் எல்லாம் சாதித்து விடுகின்றார்கள். நீதியை விலைக்கொடுத்து வாங்குகின்றார்கள். பெண்ணின் கற்பிற்கு இவ்வளவு விலையென்று நிர்ணயிக்கின்றார்கள். ஏழையை எடைபோட்டு வாங்குகின்றார்கள். எனவேதான் இப்படிப் பட்டப் பணக்காரர்களுக்காகச் செபிக்கக் கற்றுக் கொடுக்கின்றார்.

நம்முடைய வழிபாட்டிலும் செபத்திலும் இறைவனை நமக்கு மேற்பட்டவராகவும், அதே வேளையில் நம்மோடு இருப்பவராகவும் காண வேண்டும். செபம் என்பது 2 பண்புகளை உள்ளடக்கியது. நன்றியறிதல், விண்ணப்பம் ஆகியவை இருக்க வேண்டும். யாருக்கு செபிக்க வேண்டும்? அரசர்களுக்கும், அதிகாரிகளுக்கும், பெரியவர்- களுக்கும், பணத்தைக் கையாளுபவர்களுக்காகவும் செபிக்க அழைக்கின்றார். அத்தோடு நின்றுவிடாது கைகளை உயர்த்தி செபம் செய்யவும் பணிக்கின்றார். அவ்வாறு செபம் செய்யும்போது தூய ஆவி முழுமையாய் நிறைவாய் நம்மில் குடிகொள்கின்றார். நம்முடையத் திருப்பலிக் கொண்டாட்டம் எவ்வளவு அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது என்று பார்த்தீர்களா? தொடக்கத்தில் மன்றாட் டையும், இறுதியில் நன்றி மன்றாட்டையும் காண்கின்றோம். ஒவ்வொருமுறையும் செபிப்போமா! என்று சொல்லும்போது குரு கைகளை உயர்த்தி செபிக்கின்றர். நாமும் தனிமையில் இறைவ னோடு உறவாடும்போது மற்றவர்களுக்காகச் செபிப்போம். கைகளை உயர்த்தி இறைவேண்டலில் ஈடுபடும்போது அருள் வளங்கள் நிறைவாய்க் கிடைக்கும் என்பது புலனாகின்றது (வி.ப. 10:21; . 28:2;. 8:18).

பவுல் தான் பெற்ற அனுபவங்களை முன் சுவைத்தவராய் மக்களுக்குச் செபத்தின் வல்லமையைக் கற்பிக்கின்றார். செபம் செய்வதே இறைவனுக்கு ஏற்புடையது, இதுவே சிறந்தது என்கிறார். இறையருள் செல்வத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொள்வோம், செபம் என்ற ஆயுதம் நம்மில் நிச்சயம் மாற்றங்களைக் கொண்டுவரும். செபத்தினால் ஒன்றாக இணைவோம், விண்ணகத் தந்தையின் பிள்ளைகளாவோம்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

🕇 கந்து வட்டிகாரர்கள், மீட்டர் வட்டிகாரர்கள் எனச் சமுதாய மக்களைச் சுரண்டி வாழும் மக்களைப் பற்றியும், செல்வத்தின் அருமை, பெருமைகளையும் சமுதாய நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு சொல்லுதல்.
🕇 தனித்திரு, பசித்திரு, விழித்திரு, செபித்திரு இறைவனுக்காக வாழச் சகோதர அன்பில் நிலைத்து வாழ, செபம் செய்வோம். செபமே வாழ்வு, ஜெயமே வாழ்வு.
🕇 பணக்காரர்களை வெறுத்து ஒதுக்காது, அவர்களையும் அன்பு செய்வோம். இயேசு சக்கேயு, மத்தேயு, நூற்றுவத்தலைவன் இவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டது போல பணக்காரர் களையும் ஒருநாள் விண்ணரசில் ஏற்றுக்கொள்வார்.
🕇 ஏழைகள் நமது வாழ்வின் சொந்தங்கள் என்பதை நினைத்து வாழவும் உறவாடவும் பழகிக் கொள்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக் காலம் இருபத்தைந்தாம் ஞாயிறு

இன்றைய இறைவார்த்தைகளை வாசிக்கும்போது சிலருக்கு குழப்பம் ஏற்படலாம். அவை முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைக் கூறுகின்றனவோ எனும் ஐயம் ஏற்படலாம். முதல் வாசகத்தில் இறைவாக்கினரான ஆமோஸ் அநீதியான பழக்கங்களைச் சாடுகின்றார் இறைவன் அவைகளை மறக்காமல் தண்டிப்பார் என்று கூற நற்செய்தியில் நமதாண்டவர் நேர்மை யற்ற வீட்டுப் பொறுப்பாளனின் தவறான செயலைப் பாராட்டுவது போலத் தோன்றுகின்றது. நற்செய்தி உண்மையாக வலியுறுத்தும் செய்தியை அறிந்துகொள்ள அதைப் பற்றிய சில பின்னணித் தகவல்களைத் தெரிந்து கொள்வது நல்லது.

பின்னணி

லூக்கா நற்செய்தியின் பதினைந்தாம் அதிகாரம் முழுவதும் இயேசு பரிசேயருக்கும், மறைநூல் அறிஞருக்கும், அவர்கள் இயேசுவுக்கு எதிராக முணுமுணுத்துக் கூறிய வார்த்தைகளுக்குப் பதிலாக, தன் நிலைப்பாட்டை விளக்கிக் கூறியதாக அமைகின்றது. ஆனால் இந்தப் பதினாறாம் அதிகாரத்தின் முதல் பகுதி இயேசு தம் சீடருக்குத் தனிமையில் கூறியது. இது சீடர்களுக்கான அறிவுரையேயன்றி, பொது மக்களுக்கு நீதி பற்றிய ஒரு விவாதம் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே இவை தனி வெளியில் கூறப்பட்டவை. இவ்வதிகாரத்தின் பதினான்காம் வசனத்தில் விவாதம் மீண்டும் பொது வெளிக்கு வருகின்றது. அங்கு இயேசு மீண்டும் பரிசேயருடன் விவாதத்தில் ஈடுபடுகின்றார்.

அடுத்து, முதல் எட்டு வசனங்களில் ஓர் உவமையை கூறுகின்றார் இயேசு. இந்த உவமை பிற உவமைகளைப்போலவே வச.1, உவமையின் பின்னணியையும் (உடமைகளை பாழாக்கியது) வச. 2. அதன் சிக்கலையும் (கணக்கை ஒப்படைக்கப் பணிக்கப் படுதல்), வச. 3 முதல் 8 அ வரை இந்தச் சிக்கலுக்கு வீட்டு பொறுப்பாளர் கண்ட தீர்வையும் (கணக்கைக் குறைத்து பிறர் அவரைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ள முன்மதியோடு செயல்பட்டது), இறுதியில் வசனம் 8ஆ-வில் இந்த உவமையின் உடனடி போதனையையும் கொண்டுள்ளது.

1. நேர்மையில்லாவிட்டாலும் முன்மதியாவது வேண்டும்

இந்த உவமையில் வீட்டுப் பொறுப்பாளர் நேர்மையாக நடக்கவில்லை என்பது தெளிவு. அவர் தலைவரின் உடமைகளைப் பாழாக்கினார் (வச.1).ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டபோதும், அவரிடம் கணக்கு கேட்கப்பட்டபோதும் அவர் நேர்மையற்ற வராகவே செயல்படுகின்றார். கடன் பெற்றவர்களின் கணக்கைக் குறைத்து எழுதச் செய்கிறார் (வச. 5-7). இவ்வாறு அவர் தன் தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட்டாலும் அவரை ஏற்றுக்கொள்ள சிலர் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார். முன்மதியோடு செயல்படுகின்றார். எனவே பாராட்டப்படுகின்றார். வசனம் 8ஆ இந்த உவமையின் உடனடிப் போதனையைக் கூறுகின்றது (ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்கமுன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்)எனவே இவையெல்லாம் இவ்வுலகின் மக்களின் செயல்பாடுகள். இதில் ஒளியின் மக்களாகிய சீடர்கள் குறைந்த பட்சம் இந்த முன்மதியையாவது கற்றுக்கொள்ள வேண்டும். வச. 9 என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இதை லூக் 12:33ன் பின்னணியில் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம் (உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப் போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்).

2. இரு துருவ நிலைகள்

வச. 10-12ல் மூன்று முறை இரு வகையான முரண்பட்ட நிலைகளைச் சொல்லி அறிவுரை வழங்குகிறார் இயேசு. இது உவமைக்கு வெளியே இயேசு தருகின்ற அறிவுரை. இதில் மிகச் சிறியவை பெரியவை, நேர்மையற்ற செல்வம் உண்மை செல்வம், பிறருக்கு உரியவை - உங்களுக்கு உரியவையென எதிர் நிலைகள் குறிப்பிடப்பட்டு, இதில் முதலாவதாக உள்ள சாதாரண சிறியவற்றில் நாம் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தால்தான் உயரிவை நம்மிடம் நம்பி ஒப்படைக்கப்படும் எனச் சிறியவற்றிலும், இவ்வுலக பொருள் களிலும் நாம் நீதியுடனும் நேர்மையுடனும் இருக்க வேண்டும் என்பது இயேசுவின் எதிர்பார்ப்பு. இங்கு இயேசுவும் ஆமோசும் ஒத்துப் போகின்றதைக் காண்கிறோம்.

3. செல்வமா? தெய்வமா?

இன்றைய நற்செய்தியின் இறுதி வசனம் செல்வத்தின் மீது அதிகப் பற்றுக் கொள்வதால் வரும் அபாயத்தை விளக்குகின்றது, எச்சரிக்கின்றது. ஏற்கெனவே லூக் 12:33-ல் கூறியதுபோல உலகச் செல்வங்களைக் கொண்டு தர்மம் செய்தால் நாம் விண்ணுலக செல்வம் பெற்று இறைவனோடு இருக்கலாம். இவ்வழி நம்மைக் கடவுளுக்குப் பணிவிடை செய்பவர்களாக மாற்றும். இல்லையேல் செல்வமே எல்லாம் என்று அதற்காகவே நாம் வாழ்ந்தால், அதுவே நம் 'கடவுளாகி' உண்மைக் கடவுளிடமிருந்து நம்மைப் பிரித்துவிடும் என எச்சரிக்கின்றார்.

முடிவாக

இன்றைய இறைவார்த்தை உலக செல்வத்தைப் பற்றிய புரிதலை நமக்குத் தருகின்றது.
🕇 அதை ஈட்டுவதிலும், பயன்படுத்துவதிலும் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும்.
🕇 அழியும் இவ்வுலக செல்வத்தைக் கொண்டு விண்ணுலக அழியா செல்வத்தை ஈட்டிக் கொள்ள வேண்டும்.
🕇 எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனும் அவரை அடையும் வழிகளுமே முதன்மையானதாக இருக்க வேண்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம் - இருபத்து ஐந்தாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம் : ஆமோஸ் 8: 4-7

ஆடுமாடுகளை மேய்ப்பவராயிருந்த ஆமோஸ், கடவுளின் கட்டளையை ஏற்று இறைவாக்குப் பணி செய்தவர் (7 : 14). கி.மு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நீதிக்காகப் போர்க்கொடி உயர்த்தியவர்; ஏழைகளின் நண்பன். "நீதி தண்ணீரைப் போல் வழிந்தோடட்டும்; நேர்மை நீரோடை போல் பாயட்டும் (5 : 24) என்பது அவர் விரும்பிய சமுதாயச் சீர்திருத்தம். ஏழைகளைக் கொடுமைப்படுத்தும் செல்வந்தர்களுக்கு எதிராகக் கூறப்பட்ட இறைவாக்கே இன்றைய வாசகம்.

ஏழைகளின் இன்னல்கள்

தன் நூலில் பல்வேறு இடங்களில் இறைவார்த்தையைக் கூர்ந்து கேட்கும்படி அழைப்பு விடுக்கிறார் ஆமோஸ். "இஸ்ரயேல் மக்களே உங்களுக்கு எதிராக ஆண்டவர் உரைத்த வாக்கைக் கேளுங்கள்" (3:1). இன்றைய இறைவாக்கு ஏழைகளைத் துன்புறுத்தி அநியாயமாகப் பணம் சேர்க்கும் செல்வந்தர்களைச் சாடுகிறது. இவர்கள் எளியவர்களை நசுக்குகின்றனர்; அவர்களை ஒழிக்க வழி தேடுகின்றனர் (4:1); ஏழைகளின் தலைகளை மண்ணில்பட மிதிக்கிறார்கள் (2:7). இவர்களது கெடுபிடியால் ஏழை மக்கள் தங்கள் நிலங்களை இழந்தனர்; பொருளற்ற இவர்கள் செல்வாக்கற்றவராயினர். இவர்களுக்காகப் பரிந்து பேச யாருமில்லை. இவர்கள் இறைவனை நோக்கித் தம் கரங்களை உயர்த்தினர் (காண்: திபா. 15 : 5). இறைவன் துணை புரிவார் என்ற நம்பிக்கையில் இவர்கள் என்றும் இறைவனுக்குப் பிரமாணிக்கமாக வாழ்ந்தனர். இவர்களைக் கொள்ளை யடித்துக் கொழுத்த பணக்காரர்களைப் பார்த்து "எளியவர்களைக் கொள்ளையிட்ட பொருள்கள் உங்கள் வீடுகளில் நிறைந்துள்ளன; நம்முடைய மக்களை நீங்கள் நசுக்குவதன் பொருள் என்ன? எளியோரின் முகத்தை உருக்குலைப்பதன் பொருள் என்ன?" என்று கேட்கிறார் எசாயா (3 : 14). சமுதாயத்தின் அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கும் இறைவாக்கினனாக நான் மாற வேண்டும்.

அநீதியாளர் தண்டனை பெறுவர்

வாரத்தின் ஓய்வு நாளைத் தவிர, ஒவ்வொரு அம்மாவாசையும் ஓய்வு நாளாக அனுசரிக்கப்பட்டதால், அந்நாட்களில் தொழில் செய்ய முடியாத பண முதலைகள் எப்பொழுது இந்தச் சமயத் தொடர்புள்ள ஓய்வு நாட்கள் ஒழியும் என்று காத்திருந்தனர். இந்நாட்கள் முடிந்த உடன் கள்ளத் தராசுகளையும் எடைக்கல்லையும் பயன்படுத்திக் கொள்ளை இலாபம் ஈட்டினர். ஒரு சோடி செருப்புக்கு எளியவரை விலை பேசினர் (6): பழைய-பதரான கோதுமையை விற்றனர். இது அநீதி, சமுதாயத் துரோகம். இன்றைய சமுதாயத்திலும் கள்ளத் தராசுகள், போலிச் சரக்குகள், வட்டிக்கடைகள், இலஞ்ச ஊழல்கள் போன்ற சமுதாயக் கேடுகளால் ஏழைகள் மேலும் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்படுவதையும், சுரண்டல் பேர்வழிகள் மேலும் பணம் படைத்தோராய் மாறுவதையும் பார்க்கிறோம். ஆனால், ஏழைகளுக்கு இன்னல்கள் விளைவிப்போர் ஆண்டவரால் தண்டிக்கப்படுவர் என்ற எச்சரிக்கை மொழிகளையும் நாம் மறந்துவிடக் கூடாது. "சிங்கத்திடமிருந்து தப்பி ஓடிய ஒருவனைக் கரடியொன்று சந்தித்தாற் போலும், தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து சுவரில் கைவைத்துச் சாயும்போது பாம்பொன்று கடித்தாற் போலவும் இருக்கும்" (5 : 9). "ஆண்டவர் ஆணையிட்டுக் கூறுகிறார். அவர்களுடைய இந்தச் செயல்களில் ஒன்றையேனும் நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்" (7). இறைவன் என்றும் ஏழைகள் பக்கமே இருக்கிறார் என்பதற்கு இறைவாக்கே சான்று பகர்கிறது. ஏழைகளின் கண்ணீர் இறைவனின் இதயத்தை இளகச் செய்யும் சக்தி வாய்ந்தது. ஏழைகளுடன் என் உடைமையைப் பகிர்ந்துகொள்ள முடியாவிட்டாலும், அவர்கள் மேலும் வறியராவதற்கு நான் காரணமாயிருக்கக் கூடாதென்பதை உணர வேண்டும்.

		 “என்பு உருகி, நெஞ்சம் இளகிக் கரைந்து கரைந்து 
		 அன்பு உருவாய் நிற்க அலைந்தேன், பராபரமே!"
		 

எளியவர்களை நசுக்கி, நாட்டில் உள்ள ஏழைகளை ஒழிக்கத் தேடுகிறவர்களே, இதைக் கேளுங்கள்... உங்கள் அநீதச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

இரண்டாம் வாசகம் : 1 திமொ. 2:1-8

தலத்திருச்சபையைக் கட்டி எழுப்பி, தம் மந்தைகளைக் கிறிஸ்தவ ஒழுக்கத்தில் பழக்க வேண்டியது ஆயர்களின் பணியாகும். கிறிஸ்தவ நன்னெறியின் முதல் கட்டமாக மக்களைச் செபத்தில் ஒன்றிக்கும்படியும், ஒருவர் மற்றவருக்காகச் செபிக்கும்படியும் தூண்டுகிறார் பவுல்.

அனைவர்க்காகவும் செபிக்கவும்

"வேண்டுதல், செபம், மன்றாட்டு, நன்றியறிதலை அனைவருக்காகவும் நீங்கள் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்'' (1). கிறிஸ்தவர்கள் செபத்தில் சுய நலத்தைத் தேடாது, அனைத்து மக்களுக்காகவும் செபிக்க வேண்டும். அனைவரும் என்ற பட்டியலில் பகைவரும் இடம் பெற வேண்டும். பகைவர்க்காகச் செபிப்பவன், கிறிஸ்தவ வாழ்வின் கொடு முடியை எட்டி விடுகிறான் எனலாம் (காண் மத். 5:45). நமது செபம் இறைவனிடம் வரம் கேட்கும் மன்றாட்டாக இருக்கலாம்; பொதுவான புகழ் ஆராதனையாக இருக்கலாம்; நன்றிக் கீதமாக மலரலாம். நம்மை ஆளுவோர்க்காகச் செபிப்பது மிகவும் முக்கியம். எல்லா

அதிகாரங்களும் இறைவனிடமிருந்து வருகின்றன (யோ. 19 : 11). ஆட்சியிலுள்ளோர் வழியாக இறைவன் நம்மைப் பராமரிக்கிறார். இதை ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளோர் உணர வேண்டும். அரசியல் சட்டங்களுக்கு நாம் கட்டுப்பட வேண்டும் என்பது பவுலின் போதனை (காண் உரோ.13:1 - 7). அரசியல் சீர்கேட்டை எதிர்த்த இறைமகனே, தனக்காகவும் திருத்தூதர்களுக்காகவும் வரி செலுத்தும் உண்மைக் குடிமகனாக வாழ்ந்து காட்டியுள்ளார். செசாருக்குரியதை செசாருக்கும், இறைவனுக்குரியதை இறைவனுக்கும் செலுத்துங்கள் என்று கூறியவரும் அவரே (மத். 22 : 21). ஆட்சியில் உள்ளவர்கள் சிந்தனையில் தெளிவும், செயலில் தூய்மையும் மனத்திடமும் பெற அவர்களுக்காக மன்றாட வேண்டும்.

		 “எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும்நின் 
		 தெய்வ அருட்கருணை செய்வாய் பராபரமே!” (தாயு) 

நற்செய்தி: லூக். 16:1-13

நமதாண்டவரின் உவமைகளில் வரும் நல்ல சமாரித்தன், ஆயக்காரன், ஊதாரிப்பிள்ளையின் தந்தை, மனம்மாறிய ஊதாரி இளைஞன் போன்ற பாத்திரங்கள் நமக்கு வழிகாட்டிகள்; காயமுற்றுக் கிடந்தவனைக் கண்டும் காணாதவர்போல் வழிநடந்து சென்ற குரு, லேவியன், செபிக்கச் சென்று சுயவிளம்பரம் செய்துகொண்ட பரிசேயன், ஊதாரித் தந்தையின் மூத்தமகன் போன்றவர்கள் நாம் விலக்கவேண்டிய பாத்திரங்கள். இன்றைய உவமையில் வரும் கண்காணிப்பாளன் பாராட்டிற்கும் உரியவன்; கண்டனத்திற்கும் உரியவன்.

விவேகமும் வினாவும்

தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த உடைமைகளை விரயம் செய்த கண்காணிப்பாளன் வேலையினின்று நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டான். கண்காணி வேலை தவிர வேறு வெட்டவோ, கொத்தவோ இவன் அறியான். எனவே ஏற்கனவே தன் தலைவனிடம் கடன் வாங்கியவர்களை அழைத்து அவர்கள் திருப்பிக்கொடுக்க வேண்டியதைக் குறைத்து எழுதிக்கொள்ள ஏற்பாடு செய்தான். இவர்களுக்குத் தான் சலுகை காட்டியதால், தன் வேலை நீக்கத்திற்குப் பிறகு தனக்கு இவர்களிடம் இருந்து சலுகை கிடைக்கும் என நம்பினான். விவேகத்துடன் விரைவில் செயல்பட்ட கண்காணிப்பாளன் இவன். யூதர்களோ எதிர்பார்க்கப்பட்ட மெசியா தம்மிடையே தோன்றியிருந்தும், நித்திய வாழ்வை நிர்ணயிக்கும் இவரது வருகைபற்றி யாதொரு கவலையோ, கவனமோயின்றி வாழ்ந்தனர். கிறிஸ்து வேண்டுமா, வேண்டாமா என்று கால தாமதமின்றி முடிவெடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. "நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல” (1 தெச. 5: 5). எனவே, நித்திய வாழ்வுக்கு உரியவற்றில் நாம் விவேகத்துடனும், வேகத்துடனும் இயங்க வேண்டும் என்ற பாடமே இங்குப் போதிக்கப்படுகிறது.

செல்வத்தைத் தன் எதிர்கால நல்வாழ்வுக்காகப் பயன்படுத்தினான் இக்கண்காணிப்பாளன். "உங்கள் உடைமைகளை விற்றுப் பிச்சை யிடுங்கள். இற்றுப்போகாத பணப்பைகளையும், வானகத்தில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள் (12:33). இந்த உவமையில் நீதியை ஆண்டவர் குறிப்பிடுகின்றார். அநீத செல்வத்தைக் கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள்; அதே செல்வம் உங்களைக் கைவிடும்பொழுது, அவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்" (9). கூடாரங்கள் இறைவனின் பிரசன்னத்தை உணர்த்தின (விப. 26:36:8). எனவே முடிவில்லாக் கூடாரம் நமது விண்ணக வாழ்வைச் சுட்டுகிறது (காண்: எபி. 8: 2; 9: 11). அநீதி இங்குப் பாராட்டப்படவில்லை. ஏனெனில், விண்ணரசு ஏழைகளுக்கே உரியது (லூக். 6:20:18:24-27).

நம்பிக்கையற்ற ஊழியன்

விவேகமுடன் இவன் செயல்பட்ட போதிலும் இவன் ஒரு மோசடிக்காரன். தலைவனின் உடைமையை விரயம் செய்தவன். இவ்வுலகத் தலைவனிடம் பிரமாணிக்கமற்றவன்; இவன் எப்படி இறைவனாகிய தலைவனிடம் பிரமாணிக்கமாயிருக்க முடியும்? மிகச் சிறியதில் நீதியற்றவன், மிகப் பெரியதிலும் நீதியற்றவனே. நமக்கு இறைவன் பல்வேறு கொடைகளை- தாலந்துகளை-உலகச் செல்வங்களை அளித்துள்ளார்; அவற்றைத் தக்க முறையில் பராமரித்துப் பெருக்கும்படி கட்டளையிட்டுள்ளார். இவற்றை நல்லமுறையில் பயன்படுத்தி, விண்ணக வாழ்வை நம்முடையதாக்கிக் கொள்ள வேண்டும் (காண்: தாலந்து உவமை லூக். 19:17).

இந்த உவமையின் முடிவு “எவனும் இருதலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது; கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய முடியாதென்ப தாகும்"(13). செல்வம் இறைவனைக் காண, அவரை அடையத் துணைபுரிய வேண்டும்.

அநீத செல்வத்தின் மட்டில் நீங்கள் நம்பத் தகாதவர்களாய் இருந்தால்.
உங்களை நம்பி உண்மைப் பொருளை ஒப்படைப்பவர் யார்?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வளமான எதிர்காலம் அவரில்!

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டு வாசகங்களைச் சிந்திப்பதற்கு முன், நாம் நம் வாழ்வில் காண்கின்ற அடிப்படையான மூன்று முரண்பாடுகளைப் புரிந்துகொள்வோம்:

1.அறநெறி முரண்பாடு

‘இலக்கு ஒருபோதும் வழிமுறைகளை நியாயப்படுத்துவதில்லை’ என்பது முக்கியமான அறநெறிக் கோட்பாடு. எடுத்துக்காட்டாக, நான் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற நல்ல இலக்கு இருக்கிறது. அதற்காக நான் புத்தகத்தைப் பார்த்து அப்படியே எழுதுகிறேன் என வைத்துக்கொள்வோம். என்னுடைய இலக்கு நல்லது என்பதற்காக நான் பயன்படுத்திய வழிமுறை சரி என்றாகிவிடாது.

ஆனால், அதே வேளையில், ஒவ்வொரு தேவையும் சூழலும்தான் ஒரு செயல் நன்மையா அல்லது கெட்டதா என்பதை நிர்ணயக்கிறது என்பது இன்னொரு அறநெறிக் கோட்பாடு. ஒரு பெண் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அறுவைச் சிகிச்சை செய்தால் குழந்தை அல்லது தாய் மட்டும்தான் பிழைப்பார் என்ற நிலை. அந்தப் பெண் அந்தக் குடும்பத்தில் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்குத் தாய். மேலும், அண்மையில் தன் கணவனை விபத்தில் இழந்தவள். இந்த நேரத்தில் மருத்துவர் குழந்தை இறந்தாலும் பரவாயில்லை என்று தாயைக் காப்பாற்றுகிறார். அப்படிச் செய்ததால் அவர் கொலையாளி என்று நாம் சொல்வதில்லை. ஏற்கெனவே இருக்கும் குழந்தைகள் அநாதைகளாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் தாயைக் காப்பாற்ற முன்வருகிறார். ஆக, அவருடைய செயலில் ஒரு குழந்தை பலியானாலும் அவருடைய செயல் நியாயமானதே என்கிறது அறநெறி. இது ‘சிட்வேஷன் எதிக்ஸ்’ – ஒவ்வொரு சூழலும் அறநெறியை நிர்ணயிக்கும்.

மேற்காணும் இரண்டு அறநெறிக் கோட்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இந்த முரண்பாடு வருகிறது.

ஒரு வீட்டுப் பொறுப்பாளர் நேர்மையற்றவராக இருக்கிறார். அவர் வெளியே அனுப்பப்படுகின்ற நிலையில், தன் நேர்மையற்ற நிலையில், நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்கிறார். இயேசு இவரின் முன்மதியைப் பாராட்டுகின்றார். அப்படி என்றால், இலக்கு சரியானது என்பதற்காக அவர் பயன்படுத்துகின்ற வழிமுறை சரியானதா? என்ற கேள்வி நம்மில் எழுகிறது. அல்லது அந்த நேரத்தில் அந்தச் சூழல் அவர் செய்தது சரி? என்று ஏற்றுக்கொள்வதா?

‘பொய்சாட்சி சொல்லாதே!’ ‘பிறரை ஏமாற்றாதே!’ போன்ற விவிலிய சிந்தனையோடு இதை எப்படி தொடர்புபடுத்துவது?

2.வாழ்வியல் முரண்பாடு

‘நாளைய தினத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்!’ என்று சொல்லும் இயேசு, ‘அடுத்து என்ன நடக்கும் எனக் கலங்காதீர்கள்’ என்று அறிவுறுத்தும் இயேசு, பத்துக் கன்னியர் எடுத்துக்காட்டில், ‘எதிர்காலத்திற்கு தயராக இருக்காத பெண்கள் அறிவிலிகள்’ என்று சாடுகின்றார். அப்படி என்றால், எதிர்காலம் பற்றிய கவலை இன்றி வாழ்வதா? அல்லது எதிர்காலத்திற்கான தயாரிப்போடு வாழ்வதா?

காலத்தைப் பற்றிய உணர்வைக் கடவுள் மனிதர்களுக்கு மட்டுமே கொடுத்திருக்கின்றார் என்று பெருமிதம் கொள்கிறார் சபை உரையாளர் (காண். 3). மனிதர்களுக்குக் கொடையாக இருக்கின்ற இந்த உணர்வே பல நேரங்களில் அவர்களுக்கு சுமையாகவும் மாறிவிடுகின்றது. என்னுடைய எதிர்காலம் இப்படி இருக்கும் என எண்ணுகின்ற நான், அந்த எதிர்காலத்தில் வாழ்வதற்காக என்னுடைய நிகழ்காலத்தை அன்றாடம் தியாகம் செய்கிறேன் அல்லது வாழ்வைத் தள்ளிப் போடுகிறேன் என்பது அடுத்த முரண்பாடு.

அப்படி என்றால், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதா? அல்லது எதிர்காலத்திற்காக முன்னரே தயாரிப்பதா?

3.பொருளாதார முரண்பாடு

‘அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்கிறார் வள்ளுவர். ‘நீ ஏழையாக இருந்தால் நீ மற்றவர்களை அறிவாய். பணக்காரராக இருந்தால் மற்றவர்கள் உன்னை அறிவர்’ என்கிறார் ஷேக்ஸ்பியர். செல்வம் நமக்குத் தேவையா? இல்லையா? தேவை என்றால் எவ்வளவு தேவை? இன்று மேலாண்மையியலில் எண்கள் பற்றிய படிப்பு அதிகமாகிக்கொண்டு வருகிறது. நம்மிடம் இருக்கின்ற ஆதாரங்கள் நான்கு: ‘பணம்,’ ‘நேரம்,’ ‘உடல்நலம்,’ மற்றும் ‘உறவுகள்.’ இந்த நான்கில் பணமும் நேரமும் எண்களால் ஆனவை. எண்களால் எண்ணப்படும் ஒன்றில் ஒருவர் பிரமாணிக்கமாக இருந்தால் எண்ணப்படாத அல்லது எண்ணமுடியாதவற்றிலும் பிரமாணிக்கமாய் இருப்பார் என்பது மேலாண்மையியல் பாடம். இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, ‘சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் மிகப் பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவர்’ என்கிறார்.

இன்று நான் தேவையான பணத்தை வைத்திருக்கவில்லை என்றால் என்னுடைய மற்ற எல்லா செயல்பாடுகளும் முடங்கிப் போகும். ஆக, பணம் எனக்குத் தேவை. இது ஒரு பக்கம் என்னை இழுக்க, மற்றொரு பக்கம், ‘கடவுளுடைய பராமரிப்புச் செயலின்மேல் நம்பிக்கை அவசியம்’ என்ற எண்ணம் என்னை இழுக்கிறது.

செல்வம் வைத்துக்கொள்வதா? வேண்டாமா? – இது மூன்றாவது முரண்பாடு.

இந்த முரண்பாடுகள் இறுதிவரை இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும், இந்த முரண்பாடுகள் நடுவில் நம்முடைய வாழ்க்கைச் சக்கரத்தை எப்படி நடத்திக்கொண்டு போவது?

இதற்கு விடையைத் தருகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

‘வளமான எதிர்காலம் அவரில்’ என்ற எளிதான பதிலை இது நமக்கு முன்வைக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஆமோ 8:4-7) இறைவாக்கினர் ஆமோஸ் வடக்கு இஸ்ரயேலில் இறைவாக்குரைக்கின்றார். அந்த நேரம் இஸ்ரயேல் மிகவும் வளமிக்க நாடாக இருந்தது (கிமு 722). வலிமையான, வளமிக்க நாடாக அது இருந்தாலும் அந்த நாட்டில் நிறைய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அடக்குமுறைகளும் இருந்தன. விவசாயத் தொழில் செய்துவந்த அடித்தட்ட வகுப்பினர் மிகப்பெரிய அடக்குமுறைக்கு ஆளானார்கள். பணக்காரர்களும், செல்வந்தர்களும், ஆளும் வர்க்கத்தினரும் அவர்கள்மேல் தூக்க முடியாத சுமையைச் சுமத்தினர். இவர்களுக்கு எதிராக ஆமோஸ் இறைவாக்குரைக்கின்றார்: ‘வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே! கேளுங்கள்!’ மேலும், ‘அமாவாசை எப்போது முடியும், ஓய்வுநாள் எப்போது முடியும்’ என்ற அவர்களுடைய சமய வெளிவேடத்தையும் தோலுரிக்கின்றார். அமாவசையும் ஓய்வுநாளும் பொருளாதாரப் பண்டமாற்றைத் தடை செய்தன. இவை இரண்டும் முடிந்தால்தான் பொருளாதாரப் பரிவர்த்தனை தொடரும் என்று அவர்கள் எதிர்நோக்கினர். அடக்கி ஆண்டவர்கள் தங்களுடைய சமயக் கட்டளைகளைக் கடைப்பிடித்தாலும் அவர்கள் தங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கத் திட்டங்கள் தீட்டினர். பணவீக்கத்தை அதிகப்படுத்தி இன்னும் நிறையப் பொருள் ஈட்டவும், ஏழைகளை அடிமைகளாக மாற்றவும் திட்டங்கள் வகுத்தனர்.

இவர்களின் இத்திட்டங்கள் மோசேயின் சட்டங்களுக்கு எதிரானவை (காண். இச 10:14-22, 24:19-21) என்று சுட்டிக்காட்டுகின்ற ஆமோஸ் அவர்கள் செய்வது அநீதி என்று அவர்களைச் சாடுகின்றார். இப்படி அநீதியாக அவர்கள் செயல்படுவது அவர்களுடைய நாட்டிற்கே அழிவைக் கொண்டுவரும் என எச்சரிக்கின்றார். அது விரைவில் நிறைவேறுகிறது. ஆமோஸ் இறைவாக்கினரின் இறைவாக்குப் பணி முடியும் நாள்களில் இஸ்ரயேல் நாட்டின் வளம் திடீரெனக் குறைந்து அவர்கள அசீரியாவுக்கு அடிமைகளாகின்றனர்.

ஆமோஸின் இறைவாக்கு அவரின் சமகாலத்து பணக்கார மற்றும் ஆதிக்க வர்க்கம் செய்வது மடமை என்று எச்சரிக்கை செய்கிறது. மேலும், தங்களுடைய சகோதர சகோதரிகளை அடக்கி ஆண்டு அதன் வழியாகப் பணம் சேர்ப்பது முறையன்று. இப்படிச் செய்யும்போது அவர்கள் கடவுளின் சட்டத்தை மீறுகின்றனர். கடவுளின் சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்தான் வளமான எதிர்காலம் இருக்கிறதே தவிர, வலுவற்றவர்களை அழிப்பதில் அல்ல என்கிறார் ஆமோஸ்.

இன்றைய இரண்டாம் வாசகத்தின் (காண். 1 திமொ 2:1-8) பின்புலம் இதுதான்: தொடக்க காலத்தில் கிறிஸ்தவ திருச்சபை சந்தேகக் கண்ணோட்டதுடன் பார்க்கப்பட்டது. அவர்களுடைய வித்தியாசமான தனிப்பட்ட வாழ்க்கை முறை, சிலுவையில் அறையுண்ட மெசியாமேல் நம்பிக்கை போன்றவற்றால் கிறிஸ்தவம் உரோமைப் பேரரசின் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. கிறிஸ்தவத்தால் உலகிற்கு ஆபத்து என்றும், எதிர்கால சமூகம் அழிவுறும் என்றும் கருதியது உரோமை. இத்தவறான புரிதலை பவுலும் மற்றவர்களும் சரி செய்ய முயற்சி செய்கின்றனர். கிறிஸ்தவர்கள் அமைதியானவர்கள் என்றும், உரோமைப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட குடிமக்கள் என்றும், ஒட்டுமொத்த சமூகத்தின்மேல் அக்கறை கொண்டவர்கள் என்றும் எடுத்துரைக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் 1 திமொத்தேயு திருமுகத்தின் ஆசிரியர், நம்பிக்கையாளர்கள் எல்லாருக்கும் குறிப்பாக ஆட்சியில் இருப்பவர்களுக்கும் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றார்.

இயேசுவின் வழியாக எல்லாரும் மீட்புப் பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று சொல்வதன் வழியாக, அவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை ஆட்சியாளர்கள் கைகளில் அல்ல, மாறாக, இறைவனின் கரங்களில் ஒப்புவிக்கின்றனர்.

ஆக, எதிர்காலம் என்பது ஆட்சியாளர்கள் கைகளில் அல்ல என்பதை அடிக்கோடிடும் ஆசிரியர், காலங்களைத் தன் கரங்களில் தாங்கியிருக்கிற கடவுளிடம் அதை ஒப்படைக்கின்றார்.

விவிலியத்தின் வியப்பான பாடங்கள் என்று கருதப்படுகின்றன சில பாடங்கள். அவற்றில் ஒன்றை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 16:1-13) வாசிக்கின்றோம்: நேர்மையற்ற கண்காணிப்பாளர் உவமை. மேலோட்டமாக வாசித்தால், ஒருவர் நேர்மையற்றவராய் வாழ்வதிலும், கையூட்டு கொடுப்பதிலும், பொய்க்கணக்கு எழுதுவதிலும் தவறில்லை என்று சொல்வதுபோல இருக்கிறது. ஆனால், இதன் பொருள் அது அல்ல. ‘அதிர்ச்சி’ என்ற இலக்கியக்கூற்று இங்கே பயன்படுத்தப்பட்டு, சொல்லப்படுகின்ற செய்தி ஆழமானதாகத் தரப்படுகிறது. இந்த நிகழ்வில், நேர்மையற்ற கண்காணிப்பாளர் தன்னுடைய தவற்றை வீட்டு உரிமையாளர் கண்டுபிடித்தாலும் இன்னும் அவர் நேர்மையற்றவராகவே செயல்படுகின்றார். அவருடைய வீட்டு உரிமையாளர் அவரைத் தண்டிப்பதற்குப் பதிலாக பாராட்டுவதில்தான் அதிர்ச்சி அடங்கியுள்ளது. இந்த உவமையின் செய்தி கண்காணிப்பாளரின் செயலில் அல்ல, மாறாக, அவருடைய எண்ண ஓட்டத்தில்தான் இருக்கிறது. தலைவர் அவருடைய செயலைப் பாராட்டவில்லை. மாறாக, தன்னுடைய எதிர்காலத்தை தன்னுடைய வசதிக்கு மாற்றிக்கொள்ளும் அவருடைய திறனைப் பாராட்டுகின்றார். நம்பிக்கையாளர்கள் தங்களுடைய செல்வத்தின்மேல் எத்தகைய கண்ணோட்டம் கொண்டிருக்க வேண்டும் என்பதை இந்த உவமை கற்றுத்தருகிறது. ஆக, அழிந்துபோகக் கூடிய, பயனற்ற செல்வத்தை ஒருவர் பயன்படுத்தி நிலையான வீட்டை வடிவமைத்துக்கொள்ள முடியும்.

லூக்கா நற்செய்தியாளர் பணத்தையும் செல்வத்தையும் நம்பிக்கை மற்றும் சீடத்துவத்தின் எதிரிகளாகவே முன்வைக்கின்றார். இந்த உவமையைச் சொல்வதன் வழியாக, ஆபத்தான நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு ஒரு நம்பிக்கையாளர் தன்னுடைய வாழ்வை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவுரை வழங்குகின்றார் இயேசு. இயேசுவைப் பொருத்தவரையில், செல்வம் ஒருவரைப் பேராசைக்கும் தனிமைக்கும் இட்டுச் சென்றால் அது ஆபத்து. ஆனால், அச்செல்வம் பிறரோடு பகிர்ந்துகொள்ளப்பட்டால், மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யப்பயன்பட்டால் அது நலம் பயக்கும். பணத்தைக் கையாளுவதும், செல்வத்தைப் பெற்றிருப்பதும் இன்றியமையாத ஒன்று என்று எண்ணுகின்ற இயேசு, தன்னுடைய சீடர்கள் இந்த நேர்மையற்ற கண்காணிப்பாளரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள அழைக்கின்றார்.

ஒருவர் எப்படிப் பணத்தைப் பயன்படுத்துகிறார் என்பது முக்கியமானது. ஏனெனில், ‘சிறியவற்றில்’ ஒருவர் நம்பத்தகுந்தவராய் இருந்தால்தான் ‘பெரியவற்றிலும்’ அவர் நம்பத்தகுந்தவராய் இருப்பார். மேலும், பணம்தான் ஒருவருக்கு அடிமையாய் இருக்க வேண்டுமே தவிர, பணத்திற்கு அவர் ஒருபோதும் அடிமையாகிவிடக் கூடாது. இதுவே ஒவ்வொரு சீடரும் மேற்கொள்ளவேண்டிய தெரிவு. எல்லாவற்றையும் கடவுளுக்குக் கீழ் கொண்டு வந்து, கடவுளை மட்டுமே ஒருவர் தெரிந்துகொள்ளும்போது, செல்வங்கள் அழிந்தாலும், அழியாத கடவுளின் பாதங்களை சீடர் பற்றிக்கொண்டிருப்பதால் அவருடைய எதிர்காலம் வளமானதாக இருக்கும்.

இவ்வாறாக, இன்றைய இறைவார்த்தை வழிபாடு, வளமான எதிர்காலம் என்பதை பொருளாதார நீதி, சமூக அமைதி, மற்றும் செல்வத்தைப் பற்றிய சரியான பார்வை என்ற நிலைகளில் புரிந்துகொள்ள அழைக்கிறது. இம்மூன்றும் நிலைபெறுவது இறைவனில்தான் என்பதால் வளமான எதிர்காலம் என்றும் அவரில் என்பது நாம் இன்று கற்கின்ற வாழ்க்கைப் பாடமாக இருக்கிறது.

‘வளமான எதிர்காலம் அவரில்’ என்ற புரிதல் எனக்கு இருந்தால், திருப்பாடல் ஆசிரியர் போல (காண். 113) நானும், ‘நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் எவர்?’ என்று சொல்ல முடியும்.

‘கடவுள் அனைத்தையும் பார்த்துக்கொள்வார். ஆனால், நீ உன் ஒட்டகத்தைக் கட்டி வை’ என்பது மத்திய கிழக்குப் பகுதியில் வழங்கப்படும் பழமொழி. நம்முடைய எதிர்காலம் அவரில்தான்! இருந்தாலும் பொருளாதாரத்தை என் தேவைக்கு வளைத்துக்கொள்ளாமல் ஏழைகள் நலன் காப்பதும், எல்லாரும் அமைதியுடன் வாழ இறைவேண்டல் செய்வதும், நிலையற்ற செல்வத்தைப் பயன்படுத்தி நிலையான உறவுகளைச் சம்பாதித்துக்கொள்வதும் தேவை!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நேர்மையற்ற தனமே நேரியவற்றைத் தகர்க்கும்…

நிகழ்வு:

2005ஆம் ஆண்டு திருச்சி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபொழுது என் கண்முன் நடந்த அருமையான ஒரு பாராட்டு விழா. ‘நேர்மையாளர்களைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் அந்தப் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்றைய திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் மேடையை அலங்கரித்திருந்தனர். அப்போது பள்ளி சீருடை அணிந்த எம்பள்ளியின் மாணவர்கள் இருவரும் அவர்களோடு அமர்ந்திருந்தனர். இவ்வளவு பெரிய மனிதர்களிடையே இவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்ற வியப்பும், ஆச்சரியமும் என்னில் எட்டிப்பார்த்தது. நேரங்கள் கடந்து போகவே மாணவர்கள் இருவரையும் கலெக்டர் வெகுவாய் பாராட்டினார். இவர்களைப் போல நீங்களும் நேர்மையோடு வாழ வேண்டும் என்று அறிவுரை வழங்கி ஆக்கமும் ஊக்கமும் தந்து அமர்ந்தார். அதன் பின் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரும் மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டிவிட்டு இடம் அமர்ந்தார். ஏன் இவ்வளவு பாராட்டுகள் என்று எண்ணுகிறீர்களா? எட்டாம் வகுப்பு படித்த சரவணன் மற்றும் கோபி ஆகிய இருவரும் ஒரு நாள் மாலை பள்ளி முடிந்தவுடன் தங்கள் வீடு நோக்கிச் செல்கிறார்கள். போகிற வழியில் காலில் மஞ்சள் பை ஒன்று தட்டுகிறது. இதைப் பார்த்த சரவணன் இது என்ன என்று கேட்டவாரே பையைத் திறக்கிறான். அதில் கட்டுக்கட்டாய் பணமும் கொஞ்சம் நகைகளும் இருப்பதைக் காண்கிறான். அதைக் கோபியிடமும் காட்டுகிறான். அன்றே அவர்கள் அந்தப் பணப்பையை எடுத்துச் சென்று செலவிட்டு, ஆனந்தமாய் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. பையினுள் இருந்த கல்யாண பத்திரிக்கையைப் பார்த்துக் கே.கே.நகரில் இருக்கும் தவறவிட்ட மனிதரின் வீட்டிற்குச் சென்று அவர்களிடத்தில் இந்தப் பையை ஒப்படைத்தார்கள். குடும்பமே இவர்களைக் கொண்டாடியது. இச்செய்தி திருச்சி மாநகரம் முழுவதும் பரவியது. இதனால்தான் இவர்களுக்கு இந்தப் பாராட்டு விழா. நேர்மையோடு வாழ்ந்ததால் நேரியவற்றை தங்கள் வாழ்வில் தேடிய நல்ல மாணவர்களாக, மனிதர்களாக, திகழ்ந்தார்கள். இவர்களின் இந்த நேர்மையான வாழ்வு பிற மாணவர்களுக்கும் முன்மாதிரியான மற்றும் எடுத்துக்காட்டான வாழ்வாய் அமைகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆக நேர்மை நம்மில் இருந்தால் நேர்த்தியான காரியங்கள் மட்டுமே நம்மைச் சூழும். அதுவே நேர்மையற்ற தன்மையாய் அமைந்தால் நேரிய வாழ்வு நம்மை விட்டு விலகும்!

இறைஇயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே!

இன்றைய நாளின் இறைவாக்குகள் அனைத்துமே நாம் நேர்மையாய் வாழ வேண்டும் என்ற சிந்தனையை வழங்குகின்றது. நேர்மையான உள்ளம்தான் நேரியவற்றை செய்யும். நேர்மையான உள்ளம்தான் நேரிய கருத்துகளையும், காரியங்களையும் நம்மில் தென்பட செய்யும். இத்தகைய சிந்தனைகளைத்தான் வாசகங்கள் மிகத் தெளிவாக வழங்குகின்றன.
முதல் வாசகத்தில் நேர்மை என்கிற பண்பு - இஸ்ரயேலின் பணப்பலத்தால், ஆணவத்தாலும் மடிகிறது.
இரண்டாம் வாசகத்தில் நேர்மை என்கிற பண்பு – தூய உள்ளம் இல்லாமையால் மடிகிறது.
நற்செய்தியில் நேர்மை என்கிற பண்பு – பொறுப்பற்ற தன்மையால் மடிகிறது.
இவ்வாறாக, மனிதன் படைத்தவனை மறந்து படைப்புகளுக்கெல்லாம் தூபமிட்டான் என்று சொன்னால் அவனது நேர்மைத்தனம் அடியோடு மறைந்துவி;டும் என்பதை தெளிவாய் உணர்த்துகிறது இன்று நாம் வாசிக்கும் வாசகங்கள். மனிதன் நேர்மையாய் வாழ்வதற்கே படைக்கப்பட்டவன். அவனின் நேர்மை தன்னையும் பிறரையும் வளர்த்தெடுக்கவும், இறைவனின் திருமுன்னிலையில் தயக்கமின்றி நிற்கவும் வாழவும் செய்கிறது. இதை உணர்வதே இன்றைய நாளினுடைய சிறப்பு. அதுவே நம் வாழ்விற்கான மதிப்பு!

முதல் வாசகத்தில்,

நீதியின் இறைவாக்கினாரான ஆமோஸ் இஸ்ரயேல் மக்களின் நலமற்ற வாழ்வையும் நேர்மையற்ற தன்மையையும் சுட்டிக்காட்டுகிறார். 2கொரி 2: 17இல் வாசிப்பது போல “நாங்கள் கடவுளின் வார்த்தையை மலிவுச் சரக்காகக் கருதும் பலரைப் போன்றவர்கள் அல்ல. மாறாக, கிறிஸ்துவோடு இணைந்துள்ள நாங்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்னும் முறையில் அவர் முன்னிலையில் நேர்மையோடு பேசுபவர்கள்” என்று ஆமோஸ் இஸ்ரயேல் மக்கள் வாழ்வில் பணத்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்ற மனநிலையை மாற்ற, நேர்மைக்கு எதிராக நடக்கும் செயல்களைக் குறித்தும் உரக்க இறைவாக்கு அறிவிக்கிறார். மக்களைக் குறிப்பாய் ஏழை மக்களை எந்தளவிற்கு அடிமைப்படுத்தி. கசக்கிப் பிழிய முடியுமோ அந்தளவிற்கு அவர்களின் பணப்பலம் மேலோங்கிக் காணப்பட்டது. அதைக் கண்டித்த ஆமோஸ் இறைவாக்கினர் நீங்கள் நேர்மையற்ற உள்ளத்தோடு நேர்மையான செயல்களில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டி இறைவாக்கு உரைக்கிறார். எனவே ஆமோஸ் 8:7 இல் “அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒரு போதும் மறக்கமாட்டேன்” என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆக முதல் வாசகத்தில் நேர்மையற்ற உள்ளத்தோடு ஏழை எளிய மக்களை நிலத்தின் பெயராலும், கடனின் பெயராலும், அடக்கி ஆளும் குணம் ரொம்ப நாள் நீடிக்காது என்ற உண்மையைக் காண்கிறோம்.

நற்செய்தியில்,

இயேசுவின் இன்றைய போதனை எல்லோருக்கும் வியப்பாகவும், வித்தியாசமாகவும் இருப்பதைக் காணலாம். வீட்டுப்பொறுப்பாளராய் இருக்க வேண்டியவன் பொறுப்பற்ற நிலையில் இருக்கிறான். ஆனால் அவர் செய்த முன்மதி செயலை வீட்டு உரிமையாளர் பாராட்டுவதாய் அமைகிறது. இதில் நிறைய பின்னோட்டங்கள் உள்ளன. பின்புலத்தன்மையோடு அணுகினால் நேர்மையாய் நடக்க வேண்டிய வீட்டுப்பொறுப்பாளர் தன் ஆதாயத்திற்காக நேர்மையற்ற முறையில் கடனை வசூலிப்பவனாய் இருக்கிறான். அதிக வட்டியிடுபவனாய் இருக்கிறான். எனவேதான் தன்னுடைய நேர்மையற்ற தனம் தெரிந்துவிடும் என்பதற்காக அத்தகைய நிலையை மாற்றுவதற்காக முன்மதியாய் செயல்படுகிறான். இத்தகைய செயல் உண்மையில் பாராட்டுக்குரியது அல்ல. ஆனால் பாராட்டு பெறுவது அவனின் முன்மதியான மாற்றுவழியில் சம்பாதித்ததை மீண்டும் அளிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டதற்காகவே. ஆகச் சிந்திப்போம் நம்முடைய பொறுப்புகளில் நேர்மையற்ற முறையில் நாம் வாழ்ந்தால் கடைசிவரை நிலைத்து நிற்க முடியாது. ஆள்பலம், அடியாள் பலம், பண பலம், அரசியல் செல்வாக்கு இவற்றால் நேர்மையாய் என்றுமே வாழ முடியாது. கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது என்பது நேர்மைக்கும் ஏமாற்றத்தனத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது. ஒன்று நேர்மையாய் வாழ்ந்தால் ஏமாற்றி ஏச்சு பிழைக்கமாட்டோம். நேர்மையற்றோராய் வாழ்ந்தால் ஏச்சு பிழைப்போம். நேரியவற்றை என்றுமே செயல்படுத்த முடியாது. இதை;தான் புனித பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்தில் சொல்கிறார்: “நற்செயல்களைச் செய்வதில் எல்லாவகையிலும் நீயோ முன்மாதிரியாய் இரு. நாணயத்தோடும் கண்ணியத்தோடும் கற்றுக்கொடு” (தீத்து 2:7). எவ்வளவு ஆழமான புரிதலைப் பவுல் கற்றுக்கொடுக்கிறார். இந்தப் பின்னணியில்தான் யோசுவா தன் நூலில் இவ்வாறு எழுதுகிறார்: “ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் அவருக்கு ஊழியம் புரியுங்கள்” (யோசுவா 24:14). சிந்திப்போம் பொறுப்பற்ற நிலையிலிருந்து மாறிப் பொறுப்புள்ள இறைவனுக்கு நேர்மையோடு பணிபுரியும் ஊழியராய் வாழ நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு தருகின்றது.

இரண்டாம் வாசகத்தில்,

நாம் நேர்மையாய் வாழ்வதற்கு இறைவன் புனித பவுல் வழியாக அழகான படிப்பினைகளை வழங்குகின்றார். மன்றாடுதல், வேண்டுதல், பரிந்து பேசுதல், நன்றிச் செலுத்துதல், ஒன்றாய் வாழ்தல், கண்ணியத்தோடு நடத்தல், இறைப்பற்றோடு வாழ்தல், அமைதியில் திளைத்தல், கடவுளின் திருமுன் நின்று மீட்;படைதல் இவையெல்லாம் சரியாக, நிறைவாக நம் வாழ்வில் தென்பட்டால் நிச்சயம் நாம் நேர்மையாய் வாழ முடியும். வாழ்வதற்கான சூழலும், முழுமையான வாய்ப்புகளும் நமக்குக் கிடைக்கும். நேர்மையற்ற உள்ளத்தினர் கண்டிப்பாக வேண்டுவதோ, கண்ணியத்தோடு நடப்பதோ, உண்மையைப் பேசுவதோ, கடவுளின் திருமுன் வருவதோ இயலாத காரியம். அது அவர்களால் முடியாது. இப்படிப்பட்டவர்கள் நேர்மையான உள்ளத்தோடு கடவுளின் திருமுன் வரவே இயலாது என்பதைச் சுட்டிக்காட்ட விழைகிறார் புனித பவுல்.

ஆகவே இன்றைய இறைவாக்குகள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்தும் படிப்பினைகளை இப்போது பார்ப்போம். எல்லாருமே நேர்மையாய் இருக்க வேண்டும். நேர்மையின் வழியாய் நேரிய செயல்களை ஆற்ற வேண்டும். அதற்கான வழிமுறைகள் என்னென்ன?

  1. இடைவிடா இறைவேண்டல்:
    இன்றைய இரண்டாம் வாசகத்தில், 1திமொத் 2:8 இல் “எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன்” என்று வாசிக்கின்றோம். நேர்மை என்ற உன்னதமான குணத்தை இக்குவலயத்தில் நாம் பெற வேண்டுமென்றால் நம்முடைய முயற்சியால் அது நடக்காது. அதற்கு இறைத்துணை அவசியம். இடைவிடாத இறைவேண்டல்தான் நம்மை இறைவனின் உயிருள்ள சாட்சியாய் மாற்றும். அது புனித யாக்கோபு தன் திருமுகத்தில் சொல்லப்படுவது போல, “நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்” (யாக் 5: 16).
  2. செவிசாய்கின்ற செவிகள்:
    இன்றைய இரண்டாம் வாசகத்தில் வருவது போது நாம் கடவுளின் நல்லெண்ணத்திற்கு செவிசாய்க்கும் பொழுதெல்லாம் நேர்மையின் உச்சமாய் நேரியவற்றை செய்யும் உன்னத படைப்பாய் நாம் வாழ்கின்றோம். இதைத்தான் எசாயா 30: 21 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: “நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் ‘இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்’ என்றும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்”. நாம் நேர்மையாய் வாழ்ந்து நேரியவற்றை செய்து முடிக்க வேண்டுமென்றால், நாம் எப்போதுமே கடவுளின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும். யோவான் 10:16 இல் “நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும்” என்று வாசிக்கின்றோம். கடவுளின் குரலுக்குச் செவிசாய்த்து நேர்மையாய் வாழ்வோம்!
  3. கறைபடியாத கரங்கள்:
    “கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர். பொய்த்தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர், இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார். தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்பு பெறுவார்” (திபா 24:5,6) என்று திருப்பாடல்களிலிருந்து வாசிக்கின்றோம். நேர்மையாய் வாழ்தலே கறைபடியாத கரங்களோடு வாழ்வதே என்று அர்த்தம். கறைபடிந்த கரமாக உள்ளமாக நாம் எல்லோரும் வாழ்கின்றோம். ஆனால் நான் கறைபடியாதவன் மற்றவர்கள் கறைபடித்தவர் என்ற பொய்யுரைகளும் தீயப்பரப்புரைகளும் இன்று அதிகமாகிவிட்டன. ஆகவே யோசித்துப் பார்ப்போம் என் வாழ்வில் நான் கறைபடியா கரங்களோடு வாழ்க்கையில் நான் நேர்மையாய் வாழ்கிறேன். நேரியவற்றை நாடுகிறேன் என்பது புரியும்.
  4. பழுதற்ற பிரமாணிக்கம்:
    நேர்மையான தன்மை என்பது பிரமாணிக்கத்தோடு வாழ்வதாகும். கடவுள் நமக்கென்று கொடுத்தவற்றில் முழுமையான மனத்தெளிவோடும், பிரமாணிக்கத்தோடு வாழ வேண்டும். அதுதான் நேர்மையின் அடையாளம். இதைத்தான் 1கொரி 4:2 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: “பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ!” எந்தச் சூழ்நிலையிலும் இறைவனுக்கு பிரமாணிக்கமாய் வாழ முற்படும் தன்மை நம்மை நேர்மையான வாழ்வுக்கு அழைத்துச் செல்லும், நேரியவற்றை நினைத்துப் பயணிக்கச் செய்யும். இத்தகைய மனநிலை எழும் போதுதான் புனித பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் காணப்படுவது போல நம் வாழ்வு அமையும்: “அடிமைத்தளையில் இருப்போர் தங்கள் தலைவர்களை முழு மதிப்புக்கு உரியவர்களாகக் கருத வேண்டும். அப்பொழுது கடவுளின் பெயரும், போதனையும் பழிச்சொல்லுக்கு உள்ளாகாது” (1திமொத் 6:1). நாம் எப்போதுமே பழுதற்ற பிரமாணிக்கத்தோடு பழைய ஏற்பாட்டில் யோசுவா சொன்னது போன்று செய்வோம்: “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” (யோசுவா 24:15).

எனவே இன்றைய நாளின் இறைவாக்குகளின் பின்னணியில் நேர்மையோடு வாழ்வதே கடவுளின் மாபெரும் எதிர்பார்ப்பு, அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் மக்களாய் நம் வாழ்வை அமைத்துக்கொள்ள இடைவிடா இறைவேண்டலும், செவிசாய்கின்ற செவிகளும், கறைபடியா கரங்களும், பழுதற்ற பிரமாணிக்கமும் அவசியம். அதற்கான வரம் வேண்டித் தொடர்ந்து செபிப்போம்! நேர்மையாய் வாழ்வோம்!! நேரியவற்றை நலமுடன் செய்வோம்!!!
“கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப் பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்” (பிலி 1:11)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு