நற்கருணை
ஒரு குகையிலே வாழ்ந்த ஒரு ஞானி சாகாமைக்கு மருந்து கண்டு பிடித்திருப்பதாகவும், அதைப் பெற விரும்புவோர் குறிப்பிட்ட ஓர் இடத்தில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து கூடும்படியும் விளம்பரம் செய்தார். கடல் அலையென ஏராளமான மக்கள் வந்து குவிந்தார்கள். ஞானியார் வந்தவுடன், மக்கள் பரபரப்போடு அவர் சொல்வதைக் கேட்க ஆவலோடு இருந்தார்கள். மக்கள் கூட்டத்தைப் பார்த்து நீங்கள் இறவாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் பிறவாமல் இருந்திருக்க வேண்டும் என்றார். வந்தவர்கள் அனைவரும் வெட்கத்தால் தலைகுனிந்து வீடு திரும்பினார்கள்.
அருமையான சகோதரனே! சகோதரியே! சாகாமைக்கு மருந்து இல்லை. பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று வந்தே தீரும். இது இயற்கையின் நியதி. காலத்தின் கட்டாயம். ஆனால் இயேசு கிறிஸ்து சாகாமைக்கு மூன்று வகையான மருந்துகளை வழங்குகிறார். இந்த மூன்றையும் நமதாக்கிக் கொண்டால் நாம் நிலை வாழ்வு பெறுவோம். சாவு நம்மைப் பாதிக்காது.
சாகாமைக்கு இயேசு வழங்கும் முதல் மருந்து என்ன? அவரில் நம்பிக்கை கொள்வதாகும். இன்றைய நற்செய்தியிலே என்னை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர் (யோவா. 6:47). மேலும் வாசரை உயிர்த்தெழச் செய்யும் முன் மார்த்தாவிடம் சொன்னார் : உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் (யோவா. 11:25-26).
சாகாமைக்கு இயேசு வழங்கும் இரண்டாவது மருந்து
அவருடைய வார்த்தையைக் கடைப்பிடித்தலாகும்.
என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் (யோவா. 8:51) என்று இயேசு கூறுகின்றார். நான் கூறிய வார்த்தைகள் ஆவியும் உயிரும் ஆகும் (யோவா. 6:63) என்கிறார். நாங்கள் யாரிடம் செல்வோம்? வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன. (யோவா. 6:68).
சாகாமைக்கு இயேசு வழங்கும் மூன்றாவது மருந்து
அவருடைய திருவுடலாகும். இன்றைய நற்செய்தியில் வாழ்வு தரும் உணவு நானே! இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் (யோவா. 6:51).
பகுதி - II
ஆண்டவருடைய அருள் வாக்கைக் கேட்டு அதைச் சுவைத்த பின்னரே ஆண்டவருடைய திருவுடலாகிய நற்கருணையை உட்கொள்வது முறையாகும். எனவேதான் ஒவ்வொரு திருப்பலியிலும் அருள்வாக்கு வழிபாடு முதல் பகுதியாகவும் - நற்கருணை வழிபாடு இரண்டாம் பகுதியாகவும் அமைந்துள்ளன. இந்த நற்கருணையானது இறைவனின் திருப்பிரசன்னம், ஒரு திருப்பலி, அதோடு ஒரு திருவுணவு என்ற மூன்று முக்கிய பரிமாணங்களை உள்ளடக்கியது.
இன்றைய முதல் வாசகத்தைப் பாருங்கள் (1 அரச 19:4-8)
எலியா தீர்க்கதரிசி மனச்சோர்வினால் சாக விரும்புகிறார். இருப்பதைவிட இறப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்து உறங்கும் வேளையில் வானதூதர் இரண்டு முறை அவரைத் தட்டி எழுப்பி எழுந்து சாப்பிடு என்று கூறி அப்பமும் தண்ணீரும் கொடுக்கிறார். எலியா அந்த உணவினால் வலிமைப் பெற்று நாற்பது நாட்கள் நடந்து ஒரேபு என்ற கடவுளின் மலையை அடைகிறார். எலியாவுக்கு உணவு தேவைப்பட்டது போல் பயணம் செய்யும் திருச்சபையில் இருக்கும் நமக்கும் உணவு தேவைப்படுகிறது. நமது வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு ஏற்படும் இளைப்பு, களைப்பு, ஏக்கம், மனச் சோர்வை நீக்க ஆண்டவர் நமக்கு வழங்கும் பயண உணவு அவருடைய அருள்வாக்கும் அவரது திருவுடலுமாகும். இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க இயலாத வகையில் இணைந்துள்ளது.
உம் சொற்கள், என் நாவுக்கு எத்துணை இனிமையானவை. என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை (தி. பாடல் 119:103) என்று திருப்பாடல் ஆசிரியர் பாடுகிறார்.
ஆண்டவர் எவ்வளவு இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் (தி. பா. 34:8) என்றும் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர்.
எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுக்கு உயிர்த்த ஆண்டவர் கொடுத்தது முதலில் அருள்வாக்கு, மறைநூலை விளக்கினார். அதன் பின்னரே அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தார். அவர்கள் இயேசுவைக் கண்டு கொண்டார்கள் (லூக். 24:25-31).
முடிவுரை:
இயேசுவை நாம் உண்டால் மட்டும் போதாது. நாம் இயேசுவாக மாற வேண்டும். என்னை உண்போர் என்னால் வாழ்வர் (யோவா. 6:57) என்ற வார்த்தை அந்த உண்மையை உணர்த்துகிறது. வாழ்வது நானல்ல. இயேசுவே என்னில் வாழ்கிறார் (கலாத். 2:20) என்று கூற வேண்டும். இயேசுவாக மாறுவது என்றால் மனக்கசப்பு, சீற்றம், சினம், கடுஞ்சொல் , தீயவை தவிர்த்து பிறர்பால் பரிவு காட்டி மன்னித்து வாழ அழைக்கப்படுகிறோம். இயேசு விரும்பிய இறையாட்சியை நாம் வாழும் இம்மண்ணில் இப்போதே மலரச் செய்ய நாம் இயேசுவாக மாற வேண்டும். இதற்குத் துணையாக இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு, அவர் தந்த அருள்வாக்கைக் கடைப்பிடித்து, அவரது திருவுடலை உண்டு, சாகா வரம் பெற்றவர்களாக நாம் வாழ்வோம்.
இதோ ஓர் அற்புத மருந்து
ஆப்பிரிக்கா கண்டத்தில் வாழும் ஒருவகையான காட்டுப்பூனைகளுக்கும், காடுகளில் வாழும் நஞ்சு நிறைந்த பாம்புகளுக்குமிடையே அடிக்கடி சண்டை நடக்கும். எப்பொழுதெல்லாம் சண்டை நடக்கின்றதோ அப்பொழுதெல்லாம் காட்டுப்பூனைகள் வெற்றி பெறும்.
தன்னை பாம்பு கடித்துவிட்டால், பூனை உடனே ஓடிப்போய் ஒரு குறிப்பிட்ட புல்லின் மீது புரளும். அந்தப் புல் அந்தப் பூனையின் மீது பட்ட காயத்தின் வழியாக நஞ்சை உறிஞ்சி எடுத்துவிடும்; பூனை பிழைத்துக்கொள்ளும். போரிலே வெற்றிபெறும் வரை, காயப்படும்போதெல்லாம், பூனை புல்லைப் பயன்படுத்திக்கொள்ளும்.
பல நேரங்களில் நம்மையே நாம் காயப்படுத்திக்கொள்கின்றோம்; அல்லது மற்றவர்களால் காயப்படுத்தப்படுகின்றோம். இப்படி காயப்படும்போது அந்தக் காயங்களால் ஏற்படும் வலியிலிருந்து. பாதிப்புகளிலிருந்து விடுதலை அடைய ஓர் அருமையான வழி, இனி வாழ்பவன் நானல்ல ; கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார் (கலா 2:20) என்று கூறிய புனித பவுலடிகளாரைப் போல நற்கருணை ஆண்டவரோடு ஐக்கியமாவதாகும்.
நற்கருணை ஆண்டவர் ஓர் அற்புத மருந்து, மூலிகை. அன்று பாலை நிலத்தில் கிடைத்த உணவு (முதல் வாசகம்) மக்களின் உடல் பசியை மட்டும்தான் தீர்த்தது. ஆனால் நம்மை எல்லா விதமான பாதிப்புகளிலிருந்தும் காக்கும் ஆற்றல் இயேசுவின் உடலுக்கு உண்டு (யோவா 2:1-11, மத் 9:27-31, லூக் 7:36-50, மாற் 1:21-28, யோவா 11:1-44). இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடிகளார் காட்டும் வழியில் நம்மை நடக்க வைக்கும் சக்தி நற்கருணைக்கு உண்டு.
மேலும் அறிவோம் :
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் குறள்; 217
பொருள் : உலக நலம் பேணும் பெருந்தகையாளனிடம் செல்வம் திரளுமானால், அது பூ, இலை, தளிர், காய், கனி, வேர், பட்டை ஆகிய அனைத்து உறுப்புகளாலும் பிணி போக்கும் மருந்து மரத்துக்கு இணையானதாகும்.
பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு ஞானி, சாகாமைக்கு அவர் மருந்து கண்டுபிடித்திருப்பதாகவும், அதைப் பெற விரும்புவோர் குறிப்பிட்ட ஒரு வளாகத்தில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் வரும்படியும் விளம்பரம் செய்தார். கடல் அலையென பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்தனர், ஞானியார் அவர்களைப் பார்த்து, நீங்கள் இறவாமல் இருக்க வேண்டு மென்றால், நீங்கள் பிறவாமல் இருந்திருக்க வேண்டும்" என்றார். வந்தவர்கள் அனைவரும் வெட்கத்தால் தலை குனிந்து விடு திரும்பினர்.
சாகாமைக்கு மருந்து இல்லை. பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பு என்று ஒன்று இருந்தே தீரும். இது இயற்கையின் நியதி; காலத்தின் கட்டாயம். ஆனால் இயேசு கிறிஸ்து சாகாமைக்கு மூவகையான மருந்தை நமக்கு வழங்குகிறார். இம்மூன்றையும் இணைத்துச் சாப்பிட்டால் நாம் நிலை வாழ்வு பெறுவோம்; சாவு நம்மைப் பாதிக்காது.
சாகாமைக்கு இயேசு வழங்கும் முதல் மருத்து: அவரில் நம்பிக்கை கொள்வதாகும். இன்றைய நற்செய்தியில், என்னை நம்புவோம் நிலை) வாழ்வைக் கொண்டுள்ளனர்" (யோவா 6:47) எனகிறார். மேலும், இலாசரை உயிர்த்தெழச் செய்யுமுன் மாத்தாவிடம், *உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. . . என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்" (யோவா 11:25 28) என்று திட்டவட்டமாகக் கூறினார்.
சாகாமைக்கு இயேசு வழங்கும் இரண்டாவது மருந்து: அவருடைய வார்த்தையைக் கடைப்பிடித்தலாகும். "என் வார்த்தையைக் கடையிடிப்போர் என்றுமே சாக மாட்டார்கள" (யோவா 3:51).
சாகாமைக்கு இயேசு வழங்கும் மூன்றாவது மருந்து: அவருடைய திருவுடலாகும், இன்றைய நற்செய்தியில், வாழ்வு தரும் உணவு நானே ... உண்பவரை இறக்காமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே" (யோவா 6:48 - 50) என்று இயேசு சுட்டிக் காட்டுகிறார்,
நற்கருணையை உட்கொள்ளுமுன் கிறிஸ்துவை நம்பி, அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிக்க வேண்டும். கிறிஸ்துவை நம்பி, அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பதின் உச்சக் கட்டமே நற்கருணையை உட்கொள்வதாகும். கிறிஸ்துவின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்காமல், அவருடைய திருவுடலுக்கு மட்டும் மதிப்புக் கொடுத்தால் போதுமா? என்று உண்மையையே பேசுபவர் (2 கொரி 1:19). அவர் நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபி 13:8). உண்மையும் நம்பிக்கையும் உடைய அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதும் உண்மையும் நம்பிக்கையும் பற்றுறுதியுமாகும்.
கடவுளிடம் நாம் எவ்வாறு பற்றுறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்றைய முதல் வாசகத்தில் யோசுவாவும், நற்செய்தியில் பேதுருவும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகத் திகழ்கின்றனர்.
இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இனத்தெய்வங்களையும் வழிபட்டு, இருமனத்தோராய் திகழ்ந்தனர். இந்நிலையில் யோசுவா அம்மக்களிடம், "நானும் கால் வீட்டாரும் ஆண்டவருக்கே கோழியம் புரிவோம்" (யோசு 24:15) என்று திட்டவட்டமாகக் கூறினார். அவ்வாறே, எல்லாரும் இயேசுவை விட்டுச் சென்ற கட்டத்திலும் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (யோவா 6:67) என்று திண்ணமாக அறிக்கையிடுகிறார். ஒருவருக்குக் கேடுகாலம் வருவதும் ஒருவிதத்தில் நல்லது; ஏனெனில் அப்போதுதான் அவருடைய உண்மையான நண்பர்கள் யார் என்பதை இனம் காண முடியும் என்கிறார் வள்ளுவர்,
கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைநரை
நீட்டி அளப்பதோர் கோல் (குறள் 796)
குளத்தில் தண்ணீர் இருக்கும்போதுதான் அதில் கொக்கும் மீனும் இருக்கும். தண்ணீர் வற்றி வறண்டு விட்டால் பறவைகள் வேறிடத்திற்குப் பறந்து போய்விடும். மாறாக, அக்குளத்திலுள்ள செடிகொடிகன் அக்குளத்திலேயே இருந்து அதிலேயே மாண்டுவிடும். இன்பத்தில் நட்புரிமை கொண்டாடி துன்பத்தில் காலை வாரிவிடுபவர்கள் நண்பர்கள் அல்ல. நயவஞ்சகர்கள்.
ஓர் உண்மைக் காதலன் தன் காதலியிடம், "நீ மாலையானால் நான் அதில் மலராவேன். நீ பாலையானால் நான் அதில் மணலா வேன்" என்கிறான். இன்றைய இரண்டாம் வாசகத்தில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவு கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயுள்ள பிரிக்க முடி யாத உறவு என்பதை விளக்குகிறார் புனித பவுல். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் வெட்டிப் பிரித்தாலும் விட்டுப் பிரியாமல் இருப்பவர்களே உண்மையான தம்பதியர். அவ்வாறே இயேசுவுக்கும் அவருடைய அன்பின் அருள் அடையாளமாகிய நற்கருணைக்கும் நாம் என்றும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான், அவனுக்கு இயேசுவின் மீதோ நற்கருணை மீதோ உண்மையான பற்றுறுதி இல்லை. நற்கருணை பற்றி இயேசு கொடுத்த விளக்கத்தின் இறுதியில் அவர் யூதாசை "அலகை" என்று அழைத்தார் (யோவா 6:70). இயேசுவின் இறுதி உணவின்போது அவளுக்குள் அலகை நுழைந்தது: நற்கருணையில் பங்கேற்காமல் அலகை அவனை இருளில் அழைத்துச் சென்றது (யோவா 13:27-30).
யூதாசு நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கை, இன்றும் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகிப் பிரிவினை சபைகளுக்குச் செல்கின்றனர், அவர்கள் மீண்டும் நற்கருணையிடம் திரும்பி வருவது அரிது.
ஒரு பெண்மணியிடம் பிரிவினை சபையினர், "நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்களின் தீராத நோயை எடுத்துவிடுகிறோம்" என்று அழைத்தனர். அப்பெண்மணியோ, "நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்தாவிட்டால், வேறு எந்த சபைக்கும் போக, நான் தயாராக இல்லை " என்று உறுதிபடக் கூறினார், சுண்டல் கொடுக்கிற கோவில்களுக்கெல்லாம் ஒடும் சிறு பிள்ளைகளைப்போல், இங்கும் அங்குமாகப் புற்றீசல்போல் பலுகிவரும் பிரிவினை சபைகளுக்கு ஒடும் இழிநிலையைக் கைவிட வேண்டும். அல்கையின் வஞ்சக வலையில் வீழ்ந்து நம் ஆன்மாவை இழக்கக் கூடாது.
எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுக்கு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்து, தம்மை அவர்களுக்கு அடையாளம் காட்டிய உயிர்த்த ஆண்டவர். அவர்கள் கண்கள் திறந்தவுடன் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார், ஏன்? இனிமேல் இயேசுவின் இரண்டாம் வருகைவரை, அவரை நாம் அப்பம் பிடுவதில், அதாவது நற்கருணைக் கொண்டாட்டத்தில் காண வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகும். இயேசுவின் விருப்பத்தை ஏற்காதவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல. அவர்கள் யாரோ? யான் அறியேன் பராபரமே!
வாழ்க்கைக்கு இலக்கு வேண்டும்
ஜெர்மனி நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் ஒரு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளச் சென்றார்கள். அவர்கள் பயணம் செய்த விமானம் பனிமலை ஒன்றில் விபத்துக்குள்ளானது. ஏழு பேர் இருந்த அந்த விமானத்தில் ஐந்துபேர் இறந்துவிட்டனர். இருவர் உயிர் தப்பினர். இந்த விமானம் எங்கு விழுந்து நொறுங்கியது என்பதை இரண்டு மாதங்களுக்குப் பின்தான் ஜெர்மனி அரசால் கண்டுபிடிக்க முடிந்தது. பிறகு உயிரோடிருந்த இரண்டு பேரையும் மீட்டு நாட்டுக்கு அழைத்துச் சென்றபோது பலர் இவர்களை நாட்டுக்குள் நுழையவிடக்கூடாது என்றார்கள். காரணம் இந்த இரண்டு மாதங்களும் அவர்கள் உணவு கிடைக்காத நிலையில் தங்களோடு இருந்து இறந்துபோன தங்கள் நண்பர்கள் ஐவரின் உடலையும் தின்று தங்கள் உயிரைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர். மனித இறைச்சியை உண்ட இவர்களை எப்படி நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்வது என்பதுதான் பிரச்சனை.
' இந்தச் சூழ்நிலையில் இறந்துபோன வீரர்களின் பெற்றோர்கள் * ஒன்றிணைந்து ஓர் அறிக்கை விட்டனர். அதில் இறந்துபோன எங்கள் பிள்ளைகளை நாங்கள் இந்த உயிரோடு இருக்கும் விளையாட்டு வீர்களில் காண்கிறோம். எங்கள் பிள்ளைகள் இவர்களில் உயிர் வாழ்வதாகக் கருதுகிறோம் என்று சொன்னதும் மக்கள் அந்த விளையாட்டு வீரர்களை ஏற்றுக் கொண்டார்களாம்.
இங்கே மனித இறைச்சியை உண்டு அதனால் இறக்காமல் உயிர்வாழ்ந்த ஒரு நிகழ்வைப் பார்க்கின்றோம். ஆனால் வரலாற்றில் அந்த விளையாட்டு வீரர்கள் இறப்பது உறுதி. இயேசு இன்றைய நற்செய்தியில் வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்'' (யோ. 6:51) என்று அழுத்தமாகக் சொல்கிறார். வழக்கமான முணுமுணுப்பு., எனினும் தன் உடல் சாகா வரம் தரும் உணவு என்கிறார் இயேசு.
சாகா வரம் தரும் உணவு என்றால் என்ன பொருள்? நற்கருணை அருந்துபவர்கள் எல்லாரும் இந்த உடலில் சாகமாட்டார்கள் என்றா பொருள்? "உங்கள் முன்னோர்கள் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே” (யோ. 6:49, 50). உங்கள் முன்னோர்கள் மன்னாவை உண்டனர். ஆயினும் இறந்தார்கள். அதாவது மன்னாவை உண்டும் தங்கள் இலக்கான வாக்களிக்கப்பட்ட நாட்டினுள் நுழையவில்லை. மோசே உள்பட எவருக்கும் அந்தப் பேறு கிட்டவில்லை. ஆனால் இயேசுவை உண்பவர்கள் இலக்கை அடைவார்கள்.
வாழ்க்கை என்பது இலக்கு நோக்கிய பயணம். அப்படியானால் பயணத்தின் இலக்கு எது? பயணத்தின் தன்மை என்ன? பயணத்துக்கு வலிமை தருவது எது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தருகிறது இன்றைய வழிபாடு.
1. பயண இலக்கு. விண்ணகம் நோக்கியது நம் வாழ்க்கைப் பயணம். "நிலையான நகர் நமக்கு இங்கு இல்லை. வரப்போகும் நகரையே நாம் நாடிச் செல்கிறோம் " (எபி. 13:!4). இவ்வுலகில் நாம் வழிப்போக்கர்களே!முதல் வாசகத்தில் வரும் இறைவாக்கினர் எலியாவின் பயணம் மனித வாழ்க்கைப் பயணத்தின் ஒரு முன்னடையாளமே! அவர் எங்கே போகிறார்? ஒரேபு மலையை நோக்கி, அதாவது சீனாய் மலை நோக்கி. அங்குதானே மோசே கடவுளைச் சந்தித்தார்!
பொதுவாக மலைகள் கடவுளின் உறைவிடமாகவே கருதப்படுகின்றன. குன்றுதோறும் குடியிருக்கும் குமரா என்றுதானே பிற சமயத்தினர் கூடத் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். ஒரேப் மலையை நோக்கி எலியா செல்கிறார் என்றால் கடவுளை நோக்கிப் பயணிக்கிறார் என்று பொருள். நமக்கும் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கு கடவுளே! 'ஆடி அடங்கும் வாழ்க்கை ஆறடிக் குழிக்குள்ளே' என்று நாம் வாழக்கூடாது. ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ' என்று விரக்திக் கீதம் பாடக்கூடாது. இதையே இயேசு நற்செய்தியில் “நிலை வாழ்வு” என்று குறிப்பிடுகிறார். இயேசுவை உண்பவர்கள் இலக்கை அடைவார்கள்.
2. பயணத்தின் தன்மை. அது பாலைவனப்பாதை. இறைவாக்கினர் எலியா தன் உயிரைக் காத்துக் கொள்ள மேற்கொண்ட சாவுப்பயணம். எதிர்ப்புக்களையும் இடற்பாடுகளையும் இழிவுகளையும் ஏளனங்களையும் எதிர்கொள்ள மனவலிமை இழந்த விரக்திப் பயணம். இறைவனை அடையக்கூட இறைவனின் அருள் வேண்டும். சொந்த முயற்சியாலும் முனைப்பாலும் சொர்க்கத்துக்கான கோபுரம் கட்ட முயன்றவர்களின் கதி (தொ.நூ. 11) நாம் அறிந்ததுதானே!இயேசுவே நம் வழி. “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாயன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை ” (யோ. 14:6).
நாம் நமக்காக மட்டும் படைக்கப்படவில்லை. இறைவனுக்காகவும் நாம் சார்ந்த சமுதாயத்திற்காகவும் படைக்கப்பட்டுள்ளோம். ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உண்டு. எனவே “எழுந்து சாப்பிடு. ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்'' என்று வானதூதர் அப்பமும் தண்ணீரும் கொடுக்க "அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து ஒரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்” (1 அரசர் 19:7-8).
3. பயணத்துக்கான வலிமை. வாழத் தேவையான வலிமையையும் நம்பிக்கையையும் தருவது. நோயில் பூசுதலில் “வழி உணவைப் பெற்றுக் கொள்" என்று சொல்லி நற்கருணை வழங்கப்படுகிறது. அது வழி உணவு மட்டுமல்ல. பயண முடிவில் உயிர்ப்பின் உறுதிப்பாடு மகிமையின் அச்சாரம். “எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன்” (யோ. 6:54).
புனித பிரான்சிஸ் சலேசியார் கூறுவார்: “வலிமை வாய்ந்தோர் (புனித வாழ்வு நடத்துவோர்) வலிமை இழக்காமல் இருக்கவும். வலிமையற்றோர் (ஆன்ம வாழ்வில் பலவீனர்கள்) வலிமை பெறவும் அடிக்கடி நற்கருணை உட்கொள்ள வேண்டும்”.இறைவாக்கினர் எலியாவுக்கும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நற்கருணைக்கு முன்னோடி நிகழ்வுகள் அவை கடவுளே நேரடியாக இருமுறை எலியாவுக்கு உணவளிக்கிறார்.
1. யோர்தானுக்கு அப்பால் கெரீத்து என்ற ஓடைக்கருகில் காகங்கள் வழியாக அப்பமும் இறைச்சியும் (1 அர. 17:6).
2. சூரைச் செடியின் கீழ் தளர்ந்து படுத்திருந்த போது வான தூதர் வழியாக அப்பமும் தண்ணீரும் (1 அர. 19:7-8).
எலியா தாமே வல்லமையோடு உணவு வழங்குவது இருமுறை.
1. சாரிபாத் கைம்பெண்ணின் வீட்டில் அள்ள அள்ள அமுத சுரபி போல (1 அர. 17:14).
2. குகைகளில் தங்க வைக்கப்பட்ட இறைவாக்கினர் நூறு பேருக்கு (1 அர. 18:4).
பயணத்தின் இலக்கும் இயேசுவே. பயணத்தில் வழி நடத்துபவரும் அவரே. வலிமையாக இருப்பவரும் அவரே.
சாகாமைக்கு ஒரே மருந்து பிறவாமை. பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று இருந்தே தீரும். இது இயற்கையின் நியதி. ஆனால் இயேசு சாகாமைக்கு மூன்று வகையான மருந்தை வழங்குகிறார்.
மருந்து 1 : இயேசுவில் நம்பிக்கை கொள்வதாகும். "என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்” (யோ. 6 : 47).
மருந்து 2 : இறைவார்த்தையைக் கடைப்பிடித்தலாகும். "என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்" (யோ . 8: 51).
மருந்து 3 : இயேசுவின் திருஉடலை உண்பதாகும். “உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே” (யோ. 6 : 50).
வன்முறையை விரும்பும் ஒரே உயிரினம் - மனிதர்கள்
சென்ற வார ஞாயிறு சிந்தனையில் நாம் எண்ணிப்பார்த்த ஒரு குறும்படத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். இரு சிறுத்தைகளும், ஒரு மானும் இணைந்து விளையாடும் அழகை, அந்தப் படம் வெளிக்கொணர்ந்தது. அந்த குறும்படத்தின் இறுதியில் திரையில் தோன்றும் சொற்கள், இன்றைய நம் சிந்தனைகளை ஆரம்பித்து வைக்கின்றன. "மிருகங்களுக்குப் பசியில்லாதபோது, வன்முறையும் இல்லை. மனிதர்கள் மட்டும் ஏன் காரணம் ஏதுமின்றி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்?" என்ற கேள்வியுடன் அந்தக் குறும்படம் முடிவுற்றது.
பசியையும், வன்முறையையும் இணைக்கும் இந்தக் கேள்விக்கு, எளிதான விடைகள் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, நாம் வாழும் இன்றைய உலகில், காரணம் ஏதுமின்றி வெடிக்கும் வன்முறைகளால், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும், குழந்தைகள், குறிப்பாக, பெண் குழந்தைகள் துன்புறுவதையும் காணும்போது, வன்முறைகளுக்கு முடிவே கிடையாதா என்ற விரக்திக்கு நாம் அடிக்கடி தள்ளப்படுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மனிதர்களுக்குப் பசி வந்தால், பத்து பண்புகள் பறந்து போய்விடும் என்பதை, தமிழ் மூதறிஞர் ஔவைப்பாட்டி சொல்லிச் சென்றார். மானம், குலப்பெருமை, கற்ற கல்வி, அழகிய தோற்றம், பகுத்தறிந்து பார்க்கும் அறிவு, தானம் செய்வதால் வரும் புகழ், தவம் மேற்கொள்ளும் ஆற்றல், முன்னேற்றம், விடாமுயற்சி, பெண்மீது கொள்ளும் காதல் உணர்வு ஆகிய பத்து பண்புகளும், பசியால் வாடும் ஒருவரிடமிருந்து ஓடிவிடும் என்பதை 'நல்வழிப்பாடல்' என்ற தொகுப்பில் பட்டியலிட்டுள்ளார், ஔவைப்பாட்டி. அவர் இங்கு 'பசி' என்று குறிப்பிடுவது, நமது வயிற்றுப் பசி. உடல் தொடர்புடைய இந்தப் பசி, நமக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், அதைத் தாண்டி, மனிதர்கள் மட்டும் அறிவுப்பசி, அதிகாரப்பசி, ஆணவப்பசி, ஆசைப்பசி, காமப்பசி, கோபப்பசி என்று, வேறு பல வடிவங்களிலும் 'பசி'யால் வாடுகின்றனர். வயிற்றை வாட்டும் பசி என்றால், அதை உணவைக்கொண்டு தீர்த்துவிடலாம். ஆனால், நமது மனதையும் அறிவையும் வாட்டும் வேறு பல பசிகளை, தீர்க்கும் வழியறியாது தவிக்கும்போது, வன்முறை என்ற வழியை தெரிவு செய்கிறோம்.
கடந்த இரு ஞாயிறு வழிபாடுகளில், பசியையும், உணவையும் இணைக்கும் விவிலியப் பகுதிகளைச் சிந்தித்து வந்துள்ளோம். இன்று, மூன்றாவது வாரமாக, பசியும், உணவும் நம் சிந்தனைகளை மீண்டும் நிறைக்கின்றன. இந்த வாசகங்களில், வயிற்றுப்பசி, உணவளித்தல் என்ற கருத்துக்கள் மையமாகக் காணப்பட்டாலும், இவற்றைச் சிறிது ஆழமாக அலசும்போது, மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பல்வேறு ‘பசி’கள், இந்த வாசகங்களில் வெளிப்படுவதையும் நாம் உணரலாம். எடுத்துக்காட்டாக: பாலைநிலத்தில் அமர்ந்து, தாம் சாகவேண்டுமென்று மன்றாடிய இறைவாக்கினர் எலியாவுக்கு, வானதூதர் உணவளிக்கும் நிகழ்வு, இன்றைய முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது (1அர.19:4-8). இப்பகுதியை மேலோட்டமாக சிந்திக்கும்போது, பசித்திருந்த இறைவாக்கினருக்கு வானதூதர் உணவளித்தார் என்ற அளவில் நமது சிந்தனைகள் நின்றுபோக வாய்ப்புண்டு. ஆனால், எலியா ஏன் பாலை நிலத்திற்குச் சென்றார் என்பதை சிந்திக்கும்போது, இந்த நிகழ்வில் புதைந்திருக்கும் வேறுவகையானப் பசிகளும், அவை உருவாக்கும் வெறிகளும் வெளிப்படுகின்றன.
இஸ்ரயேல் அரசன் ஆகாபுவின் மனைவி ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறியில் –பசியில் - இருந்ததால், எலியா, பாலை நிலத்திற்கு ஓட வேண்டியதாயிற்று. அரசி ஈசபேல் வணங்கிவந்த பாகால் தெய்வம், பொய்யான தெய்வம் என்பதை, இறைவாக்கினர் எலியா, அரசருக்கும், மக்களுக்கும் உணர்த்தியதால், ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறி கொண்டார்.
தெய்வ வழிபாடு என்பது, மனிதர்கள் மேற்கொள்ளும் ஓர் உன்னத முயற்சி. ஆனால், உண்மை தெய்வங்களை புறந்தள்ளிவிட்டு, பணம், பதவி, போன்ற பொய் தெய்வங்களை வழிபடும் மனிதர்களை அவ்வப்போது சந்தித்து வருகிறோம். அத்தகைய வழிபாடுகளில் ஈடுபட்டிருப்போரிடம், அத்தெய்வங்கள் பொய்யானவை என்பதைத் துணிந்து சொன்ன மனிதர்களை, அவர்கள், தங்கள் கொலைப்பசிக்கு இரையாக்கியுள்ளதையும் நாம் அறிவோம். அவர்களில் ஒருவரான அரசி ஈசபேல், எலியாவைக் கொல்லத் துரத்துகிறார்.
தமிழகத்தில், 'ஸ்டெர்லைட்', கூடங்குளம், 'டாஸ்மாக்' என்ற பல அரக்கர்களை வழிபட்டு வரும் அரசுக்கும், முதலாளிகளுக்கும் எதிராக மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள், நம் நினைவுகளை கீறுகின்றன. இந்தப் போராட்டங்களில் உயிர் துறந்த தியாக உள்ளங்கள் இறைவனின் அமைதியில் இணையவேண்டும் என்றும், இவர்கள், தொடர்ந்து, மக்களின் போராட்டங்களுக்கு உந்துசக்தியாக இருக்கவேண்டும் என்றும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.
போலி தெய்வங்களோடும் அவற்றை வழிபடும் மனிதரோடும் மேற்கொள்ளும் போராட்டம் நீண்டது என்றும், அப்போராட்டத்திலிருந்து தப்பித்துச் செல்லாமல், அதைத் துணிவுடன் சந்திக்க, இறைவன் நமக்குத் தேவையான சக்தியை, தன் வானதூதர் வழியாக, வழங்குவார் என்றும் இன்றைய முதல் வாசகம் சொல்லித் தருகிறது. வானதூதர் தந்த உணவினால் ஊட்டம் பெற்ற இறைவாக்கினர் எலியா, தன் போராட்டத்தைத் தொடர, இறைவனின் மலையை அடைந்தார் என்று இன்றைய முதல் வாசகம் நிறைவு பெறுகிறது.
பொதுவாகவே, உண்மைகள் கசக்கும். அந்தக் கசப்பான மருந்தை அருந்தி, குணம் பெறுவதற்குப் பதில், மருந்தைத் துப்பிவிட முயல்கிறோம். ஒருசில வேளைகளில், அந்த மருந்தைத் தந்தவர் மீதும் நமது கோபத்தைக் காட்டுகிறோம். இத்தகைய ஒரு சூழலை இன்றைய நற்செய்தி சித்திரிக்கிறது. இதோ, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள்:
யோவான் நற்செய்தி 6: 41-51
அக்காலத்தில், “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ‘நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்’ என இவர் எப்படி சொல்லலாம்?” என்று பேசிக்கொண்டார்கள்.
இயேசு கூறிய உண்மைகளைக் கேட்பதற்கு, அவரைத் தேடி ஆயிரக்கணக்கான மக்கள், பாலைநிலம் சென்றனர் என்பதையும், அவர்களது உள்ளப் பசியைப் போக்கிய இயேசு, அவர்களது வயிற்றுப் பசியையும் தீர்த்தார் என்பதையும் இருவாரங்களுக்கு முன் நற்செய்தியாகக் கேட்டோம். தங்கள் பசி போக்கும் எளிதான குறுக்கு வழி, இயேசு, என்றெண்ணிய மக்கள், அவரைத் தேடி மீண்டும் சென்றனர் என்பதை, சென்ற வார நற்செய்தியில் கேட்டோம். தன்னை தேடி வந்த மக்களைப் பயன்படுத்தி, தன் புகழை வளர்த்துக்கொள்ளும் பசிகொண்ட சாதாரண அரசியல் தலைவராக இயேசு வாழ்ந்திருந்தால், உணவைப் பலுகச் செய்த புதுமையை மீண்டும், மீண்டும் அவர்கள் நடுவில் நிகழ்த்தி, தன் புகழ் பசியைத் தீர்த்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, இயேசு, மக்களின் நலனை முன்னிறுத்தி, அவர்களுக்கு சில உண்மைகளைக் கூறினார்.
மக்கள் பேராசைப் பசி கொண்டதும், அதைத் தீர்க்க, தன்னை ஒரு குறுக்கு வழியாகக் கருதி, அவர்கள் தேடி வந்ததும் தவறு என்ற உண்மைகளை, இயேசு, வெளிப்படையாகக் கூறினார். அவர் வழங்கிய கசப்பு மருந்தை ஏற்க மறுத்த யூதர்கள், மருந்தைக் கொடுத்த இயேசுவை எதிர்க்கும் முயற்சிகளில் இறங்கினர்.
உண்மையைக் கூறும் ஒருவரை, கருத்தளவில் எதிர்க்க முடியாதவர்கள், பொதுவாகப் பயன்படுத்தும் மற்றொரு வழி, உண்மையைச் சொன்னவரின் பிறப்பு, குலம் இவற்றை கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்குவது! இத்தகைய எதிர்ப்புக் கணைகளையே, யூதர்கள் இயேசுவின் மீது தொடுத்தனர். தனது பிறப்பைக் குறித்து அவர்கள் ஏவியக் கணைகளைப் பொருட்படுத்தாத இயேசு, மனம் தளராமல், மக்களுக்கு நலம் தரும் உண்மைகளைத் துணிவுடன் சொன்னார். இந்த உண்மைகளை இன்னும் இரு வாரங்கள் நமது ஞாயிறு வழிபாட்டில் தொடர்ந்து பயில முயல்வோம்.
இறுதியாக ஓர் எண்ணம்... கடந்த வாரம், ஆகஸ்ட் 6, 9 ஆகிய இரு தேதிகளைக் கடந்துவந்தபோது, உலகின் கவனம் மீண்டும் ஜப்பானை நோக்கித் திரும்பியது. 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமா நகரிலும், 9ம் தேதி நாகசாகி நகரிலும் அமெரிக்க ஐக்கிய நாடு அணுகுண்டுகளால் தாக்கியபோது, 1,29,000த்திற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அணுக்கதிர் வீச்சுக்களால் பாதிக்கப்பட்ட 1 இலட்சத்திற்கும் அதிகமானோர், பல்வேறு நோய்களால் துன்புற்று இறந்துள்ளனர்.
1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்தபோது, சடக்கோ சசாக்கி (Sadako Sasaki) என்ற பெண் குழந்தைக்கு 2 வயது. பத்தாண்டுகள் கழித்து, அப்பெண்ணுக்கு, இரத்தத்தில் புற்றுநோய் உள்ளதென்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இனி ஓராண்டு வாழக்கூடும் என்றும் கூறப்பட்டது.
சடக்கோவின் தோழிகள் அவரிடம் ஜப்பானில் நிலவும் ஒரு புராணக் கதையைக் கூறினர். அதாவது, ஒருவர், 1000 காகித நாரைகளைச் செய்தால், அவர் விழையும் ஓர் ஆசை நிறைவேறும் என்ற கதையைச் சொன்னார்கள். அதன்படி, சிறுமி சடக்கோ, காகித நாரைகளைச் செய்ய ஆரம்பித்தார். அவர் 644 நாரைகள் செய்து முடித்த வேளையில் இறந்தார். அவர் இறந்ததும், அவரது தோழிகள் சேர்ந்து, பல்லாயிரம் காகிதக் நாரைகளைச் செய்து, நிதி திரட்டி, சிறுமி சடக்கோ நினைவாக ஒரு சிலையை உருவாக்கினர்.
சிறுமி சடக்கோ, 1000 நாரைகளைச் செய்யத் துவங்கிய வேளையில், அவர் மனதில் என்னென்ன ஆசைகள் இருந்திருக்கும் என்பதைச் சிறிது கற்பனை செய்து பார்க்கலாம். தான் உயிர் வாழவேண்டும் என்ற ஆசை, கட்டாயம் அச்சிறுமியின் மனதில் இருந்திருக்கும். அத்துடன், தான் துன்புறுவதுபோல், இனி உலகில் எந்தக் குழந்தையும் துன்புறக் கூடாது என்ற ஆசையும் அவர் மனதில் இருந்திருக்கும் என்று நம்பலாம்.
இன்றளவும், சிறு குழந்தைகள், காகித நாரைகளை செய்து, அந்தச் சிலைக்கருகே காணிக்கையாக வைக்கின்றனர். ஹிரோஷிமா, நாகசாகியில் நிகழ்ந்தது, இனி, உலகில் ஒருபோதும் நிகழக்கூடாது என்ற ஆசையுடன், குழந்தைகள் இந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர். அக்குழந்தைகள் ஆசைப்படும் அமைதியான உலகை உருவாக்குவது, நமது தலைமுறையின், குறிப்பாக, இளைய தலைமுறையினரின் கடமை.
2015ம் ஆண்டு, ஆகஸ்ட் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆனதால், அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்களின் 70ம் ஆண்டு நினைவை தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்டார். அவ்வேளையில் அவர் கூறிய சொற்களுடன் இன்றைய நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:
"ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசப்பட்டது, ஓர் அடையாளமாக விளங்குகிறது. அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் தவறாகப் பயன்படுத்தும்போது, மனிதர்களிடம் வெளிப்படும் அழிவு சக்திக்கு ஓர் அடையாளமாக இந்நிகழ்வு விளங்குகிறது" என்று தன் துயரங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இறுதியில், "போரை வெல்வதற்கு ஒரே வழி, போரிடாமல் இருப்பது" என்று அழுத்தந்திருத்தமாக கூறி முடித்தார்.
போரற்ற, வன்முறையற்ற பூமி உருவாகவேண்டும்; போர்க்கருவிகளை, அணு ஆயுதங்களை உருவாக்கி, வர்த்தகம் செய்யும் மனிதர்களின் வெறி அடங்கவேண்டும்; என்ற நமது ஆவல், வெறும் காகிதப் பறவைகளாக தொங்கிக் கொண்டிராமல், உண்மையானப் பறவைகளாக விடுதலை வானில் சிறகடித்துப் பறக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.
மறையுரை
நற்கருணையில் ஆண்டவரின் பிரசன்னம் உண்மையானது: உலகம் முடியும்வரை நிரந்தரமானது. இதனை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஆயிரமாயிரம் அற்புதங்கள்இதனைப் புலப்படுத்துகின்றன. “இஃது என் உடல்: இஃது என் இரத்தம்” என்று சொன்ன ஆண்டவர் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார். ஆகையால் நம்பிக்கையின் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
உமது பிரசன்னம் கூட வரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச் செய்யாதீர்: நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்? நீர் எங்களோடு வருவதாலும் நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினின்றும் வேறுபட்டு நிற்பதாலும் அன்றோ ”(விப33:15-16) என்று முறையிட்ட மக்களுக்கு “உங்களோடு என்றும் இருப்பேன் (யோசு 3:7) என்ற வாக்குறுதியை இறைவன் தந்தார். அவருடைய பிரசன்னமே அனைத்தையும் விட மேலானது. இதோ ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைப்பார் (திவெ 21:3,4). என்ற இறைவாக்கு நற்கருணையில் உண்மையாகிறது. ஆகையால்தான் நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்: மருள வேண்டாம்” (யோவா 14:27) என்று சொல்லி அதற்குச் சாட்சியாய் இந்த நற்கருணைப் பிரசன்னத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.
கடவுளின் தோற்றத்தை நற்கருணையிலே நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஏமாந்து போகின்றார்கள். இறைவனின் விருப்பம் என்பது தம்மை வெளிப்படுத்துவதுதான். ஆனால் மனிதன் விரும்பும் விதத்தில் வெளிப்படுத்துவது அல்ல. மாறாக அவர் விருப்பப்படியே அவர் தன்னை வெளிப்படுத்துகிறார். அவர் வெளிப் படுத்துகிற விதத்தில் அவரைக் கண்டுகொள்பவர்கள், கண்ணுக்குப் புலப்படுவதை மட்டுமல்ல புலப்படாதவற்றையும் கூட நம்புவர்.
காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்(யோவா 20:29) என இயேசு சொல்கிறார். அந்தப் பேற்றினைப் பெற்ற முதல் பாக்கியசாலிகள் இடையர்கள். அவர்களுக்குத் துணை நின்றது மனித ஞானம் அல்ல, இறைவெளிப்பாட்டின்மீது கொண்ட நம்பிக்கை.
சாதராணத் துணிகளில் பொதியப்பட்ட மீட்பரை இடையர்கள் தங்கள் நம்பிக்கையால் கண்டுகொண்டனர். சாதாரண மனிதராகப் பணிசெய்த ஆண்டவர் இயேசுவைப் பேதுரு மட்டுமே மெசியா எனக் கண்டுபிடித்தது அவரிடமிருந்த நம்பிக்கையால். தோட்டக்காரர் தோற்றத்தில் வந்த உயிர்த்த இயேசுவை மகதலா மரியா தன்னுடைய போதகர் என்று கண்டுகொண்டது அவரிடமிருந்த நம்பிக்கையால்தான். இவர்களிடமிருந்த நம்பிக்கை நம்மிடம் இருந்தது என்றால் நற்கருணைப் பேழையில் அப்ப உருவில் மறைந்திருக்கும் இயேசுவை நம்மால் காண முடியும். அவரை அனுபவிக்க முடியும். அவராக மாற முடியும்.
அவர் எத்துணை இனியவர்!
‘ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்’ எனத் துள்ளிக் குதிக்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (பதிலுரைப்பாடல். காண். திபா 34).
ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் எலியா துவண்டு கிடக்கின்றார். நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் எளிய பின்புலம் கண்டு மக்கள் இடறல்பட்டு நிற்கின்றனர். இரண்டாம் வாசகத்தில் தங்களின் பழைய வாழ்க்கை நிலைகளில் சிக்கிக் கிடக்கின்றனர் எபேசு நகர இறைமக்கள்.
இந்தப் பின்புலத்தில் நம் ஆண்டவரை இனியவர் என்று எப்படிப் புரிந்துகொள்வது?
பாகால் இறைவாக்கினர்கள் நானூறு பேரை நேருக்கு நேராக எதிர்கொண்டு, அவர்களை வெட்டி வீழ்த்திய எலியா, ஈசபேல் தன்னை விரட்டுவது கண்டு, பயந்துபோய் அகதியாகப் பாலைநிலத்தில் அலைகின்றார். சில நேரங்களில் நம் வாழ்க்கையின் மிக இனிமையான பொழுதுகள் மிகவும் துன்பமான பொழுதுகளாகவும், வெற்றியில் களிக்க வேண்டிய பொழுதுகள் தோல்வியில் துவண்ட பொழுதுகளாகவும் ஆகிவிடுகின்றன. ‘அச்சமுற்று, தன் உயிரைக் காத்துக்கொள்ளுமாறு தப்பி ஓடுகின்ற’ எலியா, சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, ‘ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும். என் உயிரை எடுத்துக்கொள்ளும். நான் என் மூதாதையரை விட நல்லவன் அல்ல’ என்கிறார். ஒரே நேரத்தில் எலியா நான்கு எதிர்மறை உணர்வுகளால் அவதியுறுகிறார்: ஈசபேல் பற்றிய பயம், தன் செயல்மேல் கோபம், தன் கடந்த காலம் பற்றிய குற்றவுணர்வு, தன்நிலை பற்றிய தாழ்வு மனப்பான்மை.
‘உயிரைக் காத்துக்கொள்ளுமாறு’ ஓடிய எலியா, ‘உயிரை எடுத்துக்கொள்ளும்’ என ஆண்டவரிடம் கேட்பது ஏன்? தன் உயிரை எடுக்குமாறு தன்னைத் துரத்துகின்ற ஈசபேலிடம் அதைக் கொடுத்திருக்கலாமே! புலம்பிக் கொண்டே இருந்த அவர் அப்படியே தூங்கிவிடுகின்றார். மனச்சோர்வும் தூக்கமும் உடன்பிறந்த சகோதரர்கள். வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, ‘எழுந்து சாப்பிடு!’ என்கிறார். தணலில் சுட்ட அப்பமும் தண்ணீரும் கண்டு, அவற்றை உண்டபின் மீ;ண்டும் உறங்கிப் போகின்றார். ‘நீ நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும்’ என்று இரண்டாம் முறை வானதூதர் உணவு வழங்கியபோது, உண்டு வலிமை பெறுகின்றார். நாற்பது நாள்கள் அவர் மேற்கொள்ளும் பயணமே அவருடைய இறையனுபவப் பயணமாக மாறுகின்றது. அந்த மலையில் அவர் புதிய மனிதராகப் பிறக்கின்றார்.
ஆக, ‘இறந்து போக வேண்டும்’ என வந்தவர், புதிய வாழ்வுக்குப் பிறக்கின்றார். ஆண்டவர் அவருக்குப் பரிமாறிய உணவினால் அவருடைய வாழ்க்கை மாறுகின்றது. ஆண்டவராகிய கடவுள் அவருக்குக் கொடுத்தது அப்பம் என்றாலும், அது அவருடைய உடல் வலிமைக்குப் பயன்பட்டதோடு, அவர் ஆன்மிக வலிமை பெறுவதற்கான பயணத்திற்கும் உதவியாக இருந்தது. மனச்சோர்வு மற்றும் விரக்தியானால் வருந்திய இறைவாக்கினர் நம்பிக்கையும் எதிர்நோக்கும் பெறுகின்றார். ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை உணர்கின்றார்.
இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்தவ வாழ்வின் அடையாளம் பற்றிய கருத்துரு தொடர்கின்றது. கிறிஸ்தவ அடையாளம் என்பது தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியது. இந்தத் தெரிவு நிபந்தனையற்றதாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும் தெரிவில் ஒருவர் உறுதியாக இருத்தல் வேண்டும். கிறிஸ்தவக் குழும வாழ்விற்கான ஆறு தடைகளைப் பவுல் பட்டியலிடுகின்றார்: ‘மனக் கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல், தீமை’. இவை கிறிஸ்தவ அடையாளத்தை வலுவிழக்கச் செய்வதோடு, தூய ஆவியாருக்கும் துயரம் வருவிக்க வல்லவை எனப் பவுல் எச்சரிக்கின்றார். மேலும், கிறிஸ்தவ அடையாளத்திற்கு வலுவூட்டும் காரணிகளையும் அவர் முன்மொழிகின்றார்: ‘நன்மை செய்தல், பரிவு காட்டுதல், மன்னித்தல், அன்புகொண்டு வாழ்தல்.’ கிறிஸ்துவையே அன்பிற்கான முன்னுதாரணமாக வைக்கின்றார் பவுல். அன்பில் தற்கையளிப்பு இருக்க வேண்டும் என்பது பவுலின் பாடம்.
ஆக, மனக்கசப்பு கொண்டு வாழும் எபேசு நகர மக்களுக்கு இனிமையாக வருகின்றது கிறிஸ்துவின் அன்பு. கிறிஸ்துவுடைய அன்பின் தற்கையளிப்புப் பண்பை அறிந்தனுபவிக்கும் அவர்கள், அந்த அன்பை தங்கள் வாழ்வின் மேல்வரிச்சட்டாக ஏற்க வேண்டும்.
நற்செய்தி வாசகம் கடந்த வார வாசகத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. தம்மைத் தேடி வந்தவர்களின் தேடலைக் கூர்மைப்படுத்துகின்ற இயேசு, இந்த வாரம், அந்தத் தேடலின் தேடுபொருள் தாமே என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றார். இயேசு, தம்மையே, ‘வானிலிருந்து இறங்கி வந்த உணவு’ என்று முன்மொழிந்தபோது, அதைக் கேட்கின்ற மக்கள் முணுமுணுக்கின்றனர். இரண்டு காரணங்கள்: ஒன்று, இயேசு வானிலிருந்து இறங்கி வரவில்லை. ஏனெனில், அவர் நாசரேத்தூரில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய எளிய பின்புலம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மேலும், ‘இவர் யோசேப்பின் மகனல்லவா!’ என்று அவரைக் கேலி செய்கின்றனர். இயேசு ஒரு கன்னியிடமிருந்து பிறந்தார் என்றும், எந்தவொரு ஆண்தொடர்பும் இல்லாமல் அவருடைய அன்னை வியத்தகு முறையில் கருத்தாங்கினார் என்றும் இயேசுவின் சமகாலத்தவர்கள் அறிந்திருந்தனர். அந்தப் பின்புலத்தில்தான் அவரைக் கேலி செய்யும் நோக்குடன், ‘யோசேப்பின் மகனல்லவா!’ என்று அவருடைய பிறப்பு பற்றியும் இடறல்படுகின்றனர். இப்படிச் சொல்வதன் வழியாக இயேசுவின் பிறப்பில் எந்தவொரு இறைத்தொடுதலும் இல்லை என்பதை உறுதிபடச் சொல்கின்றனர்.
‘கடவுள் ஈர்த்தாலொழிய தன்னிடம் யாரும் வர இயலாது’ என உறுதிபடச் சொல்கின்றார் இயேசு. மேலும், தம்மை அவர்கள் உண்ண வேண்டும் என முன்வைக்கின்றார். உண்ணப்படும் பொருள் தன்னையே இழக்கின்றது. சிலுவையில் இயேசு தம்மையே இழப்பார் என்பதை இது முன்னுணர்த்துகிறது.
இயேசுவின் எளிய பின்புலம் கண்டு இடறல்பட்டவர்களுக்குத் தம்மையே உணவாக அளிக்க முன்வருகின்றார் இயேசு.
ஆக,
முதல் வாசகத்தில் மனச்சோர்வடைந்த எலியா, ஆண்டவராகிய கடவுள் தருகின்ற அப்பம் என்ற உணவின் வழியாக, அவரது இனிமையைச் சுவைக்கின்றார்.
இரண்டாம் வாசகத்தில், மனக்கசப்பில் வாழ்ந்த எபேசு நகர நம்பிக்கையாளர்கள், இயேசுவின் அன்பில் திகழ்ந்த தற்கையளிப்பு வழியாக, அவருடைய இனிமையைச் சுவைக்கின்றனர்.
நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் எளிய பின்புலம் கண்டு அவரைப் பற்றி இடறல்பட்டவர்கள், தந்தையால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் வந்து அவருடைய இனிமையைச் சுவைக்கின்றனர்.
இவ்வாறாக, ஆண்டவர் இனியவராக இருக்கின்றார்.
இது நமக்கு இரண்டு நிலைகளில் சவாலாக அமைகின்றது:
முதலில், ‘நான் ஆண்டவருடைய இனிமையைச் சுவைக்கின்றேனா?’
இரண்டு, ‘நானும் ஓர் இனியவராக இருக்கின்றேனா?’
எலியா போலச் சோர்ந்து விழும் பொழுதுகள் பல. மனக்கசப்பினால் குடும்ப மற்றும் குழும உறவுகளில் நாம் எதிர்கொள்ளும் துன்பங்கள் பல. இயேசுவின் ஊர்க்காரர்கள்போல மற்றவர்களின் பின்புலம் கண்டு இடறல் படும் பொழுதுகள் பல.
ஆனால், இவற்றையெல்லாம் கடந்த இனிமை நம் இறைவனிடம் உள்ளது என உணர்ந்துகொள்தல் நலம்.
‘அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர். அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை’ என்னும் பதிலுரைப்பாடலின் வரிகள் நம் வாழ்வியல் அனுபவமாக மாறட்டும்.
இறைவனைப்போல் இனிமையானர்களாய்...
இன்றைய பதிலுரைப்பாடல் நமக்கெல்லாம் கொடுக்கின்ற அழைப்பு "ஆண்டவர் எவ்வளவு இனியவரென்று சுவைத்து பாருங்கள் " என்பதாகும். ஆண்டவர் இனிமையானவர் என்பது நமக்கெல்லாம் அறிவளவில் தெரியும். ஆனால் அதை சுவைத்தல் என்பது ஆன்ம அளவில் மட்டுமே சாத்தியமாகும்.அதை இன்றைய வாசகங்கள் நமக்கெல்லாம் தெளிவாய் விளக்குகிறது.
வாழ்க்கையை வெறுத்து பகைவர்களுக்கு அஞ்சி ஒளிந்து தன்னுயிரை எடுத்துக்கொள்ளுமாறு வேண்டினார் இறைவாக்கினர் எலியா. அப்படி இருந்த அவருக்கு உணவளித்து நம்பிக்கையையும் அளித்து வழிநடத்தினார் இறைவன். சாக வேண்டும் என செபிக்கும் ஒருவரை தேற்றி தன் அன்பின் இனிமையை அங்கே உணர்த்துகிறார் கடவுள்.
நற்செய்தி வாசகத்தில் நானே உணவு என்று கூறி தன்னை மக்களின் மீட்புக்காக இழக்கின்ற இயேசுவை நாம் காண்கிறோம். அவருடைய போதனை பலருக்கு முரணாகத் தோன்றினாலும் குற்றமாக ஏன் பைத்தியக்காரத்தனமாகக் கூடத் தோன்றினாலும் அவர் தான் காட்டும் அன்பிலும் பரிவிலும் மன்னிப்பிலும் ஒருபோதும் குறைய வில்லை. உடலாலும் மனதாலும் சோர்ந்திருந்த பலருக்கு இயேசு இனிமையானவராய் வாழ்ந்தார். தன்னையே தந்தார்.
இன்றும் நமக்கெல்லாம் நற்கருணை வழியாகத் தந்துகொண்டிருக்கிறார். நம்மை வழிநடத்துகிறார். மன்னிக்கிறார். ஆசிர்வதிக்கிறார்.
இப்படிப்பட்ட இனிமையான ஆண்டவரின் பிள்ளைகளாய் இனிமையான இயேசுவின் சீடர்களாய் வாழ வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதென்ன?நாமும் இனியவர்களாய் வாழ்வதே சரியான செயல்.
பேச்சிலே குணத்திலே செயல்களிலே இனிமை கொண்டவர்களாய் இருக்க வேண்டும். வாழ்வே வெறுமை என எண்ணுவோர்க்கு தைரியமும் ஆறுதலும் தரும் வார்த்தைகள் மொழிய முன்வருவோமா? தேவையுள்ளவர்களுக்கு உதவுதல், தனிமையில் இருப்போருடன் நேரம் செலவிடுதல், வெறுப்பவர்களைக் கண்டால் கூட புன்னகைத்தல் ஆசி கூறுதல், இருப்பதை இல்லாதாரோடு பகிர்தல் .....இப்படிப்பட்ட எளிய செயல்களைச் செய்ய முன் வருவோமா? இவற்றை செய்தால் ஆண்டவர் எவ்வளவு இனியவரென்று பிறர் நம் மூலம் அறிந்து கொள்வார்களன்றோ. அத்தகைய வரம் வேண்டுவோம். இனியவர்களாவோம்.
இறைவேண்டல்
இனிய இயேசுவே உம்மைப்போல் நாங்களும் இனியவர்களாய் மாற வாழ வரமருளும். ஆமென்.
பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (அர. 19:4-8)
இந்த வாசகமானது அரசர்கள் முதல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. முதல், இரண்டாம் சாமுவேல் நூல்களும் தாவீதின் இறப்பிலிருந்து யூதா நாடுகடத்தப்பட்டது வரை யூதா, இஸ்ராயேல் நாடுகளின் அரசர்களைப் பற்றி கூறுவதால் அரசர் ஆகமம் என்று பெயர் பெற்றன. இந்த நூல்கள் சுமார் 400 ஆண்டுகள் இந்நூாடுகளை ஆண்ட அரசர்களைப் பற்றி கூறுகின்றன. இஸ்ராயேல் நாட்டை ஆகாபு அரசன் ஆண்டுவந்த காலத்தில் எலியா என்ற இறைவாக்கினர் வாழ்ந்து வந்தார். ஆகாபின் மனைவி ஈசபேல் பாகால் கடவுளை வணங்கினாள், மக்களையும் வழிபடச் செய்தாள். இதற்கிடையில் கடவுள் இஸ்ராயேல் நாட்டில் பஞ்சம் ஏற்பட செய்கின்றார். அரசன் எலியாவை சந்திக்கின்றான். எலியா பொய் இறை: வாக்கினர்களை கார்மேல் மலையில் ஒன்று திரட்டச் செய்கின்றார். அங்கே உயிருள்ள இறைவனை வெளிப்படுத்தி பாகால் இறை- வாக்கினர் அனைவரையும் கொன்று குவிக்கிறார். இதனால் ஈசபேல் எலியாவை கொலை செய்யப் போவதாகச் சொல்கிறாள். எலியா ஈசபேலுக்கு பயந்து ஓடுகின்றார். லிரக்தியடைகின்றார்.. இந்த நிலையில் பாலைவனத்தில் கடவுள் ஆறுதலும், அடைக்கலமும் தருகின்றார். இதனால் திடம் பெற்ற எலியா ஒரேபு மலையை அடைகின்றார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபே. 4:30-5:2)
எபேசியருக்கு எழுதிய திருமுகமானது சிறையிலிருந்து எழுதப்பட்ட மடல்களில் ஒன்றாகும். தூய பவுலடிகளார் காலத்தில் யூதர் அல்லாத பிற இனத்தாரும் கிறிஸ்துவை ஏற்று கிறிஸ்தவர்களாக வாழ முற்படுகின்றனர். அவ்வாறு கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் பிற இனத்தவரைப் போல் இல்லாமல், ஒரு புதிய அன்பு நிறைந்த, பிறரை மன்னித்து வாழும் வாழ்வை வாழ வேண்டும் என்று தூய பவுலடிகளார் கூறுகின்றார். இவ்வாறாக கிறிஸ்துவோடு கொண்டூள்ள உறவை, நம்பிக்கையை தங்களின் வாழ்வில் காட்ட வேண்டும் என்கிறார் தூய பவுல். நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 6:41-51)
இயேசு 5 அப்பத்தையும் 2 மீனையும் கொண்டு ஐந்தாயிரம் பேருக்கு உணவளிக்கிறார். இதனை கண்ட மக்கள் இயேசுவை அரசராக்க முயல்கின்றனர். ஆனால் இயேசு கப்பர்நாகுமுக்கு செல்கின்றார். மக்கள் கூட்டம் அவரைத் தேடி அங்கேயும் செல்கின்றது. அவரைப் பார்த்து “ராபி” எப்போது இங்கு வந்தீர்? என்று கேட்கின்றார்கள். ஆனால் இயேசு அவர்களின் எண்ணங்களை உணர்ந்தவராய், “அழிந்து போகும் உணவுக்காக உழவகைக வேண்டாம், மாறாக வாழ்வு தரும் அழியா உணவுக்காக உழையுங்கள்” என்று கூறி தாமே அந்த அழியா வாழ்வளிக்கும் உணவு என்று கூறினார்.
மறையுரை
“வாழ்வு தரும் உணவு நானே, என்னை நம்புவோர் நிலை வாழ்வு கொண்டூள்ளனர்” (யோவான் 6:47-48). சென்ற மாதம் 21- ஆம் தேதி திங்கட்கிழமை நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்த போது ஒரு செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது ஒரிசா மாநிலத்தில் ஒரு தாய் தன் மூன்று வயது மகனை 50 ரூபாய்க்கு விற்றுவிட்டாள். அதேப் போல் 23-ஆம் தேதி புதன்கிழமை நாளிதழில் வந்த மற்றொரு செய்தி, மும்பை மாநகரில் பிச்சையெடுக்க குழந்தைகளை அனுப்பும் ஏஜென்சி பற்றிய ஒரு தகவல். இந்த ஏஜென்சி ஏழைகள் நிறைந்த பகுதிக்கு சென்று அவர்களுடைய குழந்தைகளை காலையில் 6 மணிக்கு பிச்சையெடுக்க அழைத்து சென்றுவிட்டு மாலையில் 6 மணிக்கு. திரும்ப கொண்டுவந்து விடுவார்கள். ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்படும். இது போன்ற நிகழ்வுகளுக்கு முக்கிய காரணம் ஏழ்மை. ஒரு வேளை உணவு கூட இல்லாத அவல நிலை. எல்லாம் இந்த ஒரு சான் வயிற்றுக்காக. ஆம் நம்முடைய வாழ்வில் முக்கியமான தேவை உணவு. ஒருவன் நல்ல உடை இல்லாமல், இருக்க இடமில்லாமல் கூட இருக்கலாம். ஆனால் உண்ண உணவு இல்லாமல் இருக்க முடியாது. அதனால் தான் அவன் உணவுக்காகப் போராடுகின்றான். ஏனெனில் உணவு அவனுக்கு உடல் வலிமையைக் கொடுக்கிறது, சக்தியைக் கொடுக்கிறது, அவன் உடல் வளர்ச்சிக்கு ஏதுவாயிருக்கிறது.
ஆனால் உடல் வளர்ச்சி மட்டும் இருந்தால் போதாது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் உடலும், ஆன்மாவும் சேர்ந்த கலவை. நாம் உடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், நம் ஆன்மாவுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடலைப் போல் ஆன்மாவும் வளர வேண்டும், சக்தி பெற வேண்டும். எனவே உடலைப் போல் ஆன்மாலிற்கும் உணவு தேவைப்படுகிறது. இந்த உணவு கொஞ்சம் வித்தியாசமானது. இது சாதாரணமான பொருள் கிடையாது, மாறாக ஒரு மனிதருடைய உடலும், இரத்தமும். இந்த மனிதர் வேறு யாருமன்று நம்முடைய மீட்புக்காக கடவுள் நிலையிலிருந்து மனிதனாய் அவதரித்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. ஆம் “நானே வானிலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு" என்று கூறி தன்னையே நம் ஆன்மாவிற்கு உணவாகக் கொடுக்- கின்றார். இதைதான் இன்றைய வாசகங்கள் நமக்குத் தெள்ள தெளிவாக காட்டுகின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் “விண்ணிலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு நானே” என்று இயேசு கூறுகின்றார். இதனைக் கேட்ட யூதர்கள் அவருக்கு. எதிராக முணுமுணுக்க ஆரம்பிக்கின்றனர். இவர் யோசேப்பு மகன் அல்லவா? இவருடைய தாயும், தந்தையும் நமக்குத் தெரியும் என்று கூறி இயேசுவை நம்ப மறுக்கின்றனர். ஏனெனில் அவர்களின் நம்பிக்கையின் படி மோயீசன் அளித்த “மன்னா” தான் வானிலிருந்து இறங்கி வந்த உணவு, வாழ்வு அளிக்கும் உணவு என்று எண்ணிணார்கள். இதனைத் தான் யோவான் 6:31-இல் வாசிக்கின்றோம். “எங்கள் முன்னோர் பாலைநிலத்தில் வானத்திலிருந்து பொழிந்த மன்னவை உண்டனர்” என்று கூறி மன்னாவை அழிவில்லா உணவாக கருதினர்.
ஆனால் இயேசு அவர்களுடைய நம்பிக்கை தவறானது என்றும், தான் மோயீசனை விட பெரியவரென்றும், தன்னுடைய உணவானது மன்னாவை விட சிறந்ததென்றும் அவர்களுக்கு காட்ட விரும்பினார். அதனால் தான் இயேசு கூறுகிறார் “உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன், வானத்திலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல, வானத்திலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே (யோவான் 6:30). ௮தே போல மன்னவை உண்டவர் இறந்துபோயினர். தன்னை உண்போர் நிலைவாழ்வு பெறுவர் என்று கூறுகிறார். இதன் மூலம் இஸ்ராயேல் மக்களுக்கு அருளிய பழைய உணவாகிய மன்னாவுக்- கும், இப்பொழுது அருளிக் கொண்டிருக்கின்ற புதிய உணவிற்கும் உள்ள வேற்றுமையைக் காணலாம்.
பழைய உணவாகிய மன்னா இஸ்ராயேல் மக்கள் பாலை- வனத்தில் இருந்த போது அவர்களுடைய உடல் பசியைத் தீர்த்து “வாக்களிக்கப்பட்ட நாட்டை அடைய உதவியது. ஆனால் புதிய உணவாகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருடைய ஆன்ம பசியைத் தீர்க்க வந்திருக்கிறார். “மன்னா” உணவானது இஸ்ராயேல் மக்கள் பாரவோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்று கடவுளின் விண்ணரசை அடைய வலிமைக் கொடுக்கிறது. மன்னா ஒவ்வொரு நாளும் அழிந்து போனது. இதனை வி.ப. 16:20-இல் பார்க்கின்றோம். சிலர் மோசேக்கு கீழ்படியாமல் மன்னாவை காலை வரை மீதி வைத்தனர். அது புழுவைத்து நாற்றமெடுத்தது என்று வாசிக்கின்றோம்.
அதே போல் மன்னா இந்த மண்ணுலக நாட்டை அடையவே உதவியது. ஆனால் புதிய உணவாகிய இயேசு நாம் விண்ணுலக அரசை அடைய உதவுகிறார். மன்னா உண்ட மக்கள் அழிந்து போயினர். ஆனால் புதிய உணவை உண்டவர்கள் அழியவே மாட்டார்கள். “உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்ட போதிலும் இறந்து போயினர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு வானத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே” (யோவான் 6-49-50) இந்த வாழ்வு அளிக்கும் ஆன்மீக உணவாகிய இயேசு ஒவ்வொரு நாளும் நற்கருணை வடிவில் வருகின்றார். நாம் என்ன செய்ய வேண்டும்? இதேக் கேள்வியைத் தான் இஸ்ராயேல் மக்கள் இயேசுவைப் பார்த்து கேட்டனர். இயேசு கூறுகின்றார், “கடவுள் அனுப்பியவரை நம்ப வேண்டும்” (யோவான் 6:29). ஆம் நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கைக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். உடல் பசியைப் போக்கும் உணவை வீட ஆன்ம பசியைப் போக்கும் இயேசுவை நம்ப வேண்டும். இயேசுவே வாழ்வு தரும் உயிருள்ள உணவு என்று நம்ப வேண்டும். நற்கருணையில் இயேசு தன் ஆன்மாவோடும், உடலோடும் பிரசன்னமாய் இருக்கின்றார். “நற்கருணையில் பிரசன்னமாய் இருக்கின்ற இயேசுவை நம்முடைய ஐம்புலன்௧ளினாலோ அல்லது நம் அறிவின் மூலமாகவோ உணர முடியாது. மாறாக நம்பிக்கை மூலமாகவே உணர முடியும்”. தூய அகுஸ்தினார் கூறுனிறார் “ஒருவன் நற்கருணையில் பிரசன்னமாய் இருக்கும் இயேசுவிடம் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் நம்பிக்கை மிக அத்தியாவசியமானது” இவ்வாறாக நாம் இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கை தான் நம்மை இயேசுவிடம் அழைத்துச் செல்கிறது. ஆனால் இந்த நம்பிக்கையை வெறும் சொல்லளவில் இல்லாமல் நம்முடைய செயல்களில் காட்ட வேண்டும். இதனைத் தான் அன்னைத் தெரேசா தன்வாழ்க்கையில் மேற்கொண்டார்கள். அன்னைத் தெரேசா தேவ நற்கருணைக் கொண்டாட்டத்தில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டவர்கள். அந்த நம்பிக்கையை வெறும் வார்த்தையளவில் இல்லாமல் ஏழைகளை அன்பு செய்வதன் மூலம், முதியவர்களை, இறக்கும் தருவாயில் இருப்பவர்களை பாதுகாத்த தன் மூலம் வெளிப்படுத்தினார்கள்.
நாமும் நம் வாழ்க்கையில் கிறிஸ்துவின் மீது குறிப்பாக நற்கருணையில் எழுந்தருளி வருகின்ற இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ள அழைக்கப்படுகின்றோம். அந்த நம்பிக்கையை நம் செயல்: பாடுகளின் மூலம் வெளிகாட்ட வேண்டும். எவ்வாறு வெளிப்- படுத்துவது? இதனை இன்றைய இரண்டாம் வாசகம் தெள்ள தெளிவாக காட்டுகிறது. நாம் மற்றவரிடத்தில் அன்பு செய்ய வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவி அவர்கள் இருக்கின்ற நிலையிலே அவர்களை ஏற்று, முழுமையாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்த வேண்டும். நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். இயேசுவின் கட்டளைகளை கடைபிடிப்பதன் மூலம் நாம் கிறிஸ்து ஆண்டவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிக்காட்ட முடியும். அவ்வாறு செய்யும் போது நற்கருணை நமக்கு ஆற்றலையும், சக்தியையும், மனபலத்தையும், நிலைவாழ்வையும் நமக்கு கொடுக்கும். அதற்காக இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
1.ஆன்ம உணவாகிய இயேசு இறைவார்த்தையின் மூலம் நம்மிடம் வருகின்றார். 2. கடவுளின் திட்டத்தை உணர்ந்து நிறைவேற்றுவதும் ஆன்ம உணவாகும்.
பொதுக்காலம் - பத்தொன்பதாம் ஞாயிறு
ஆர்வத்துடன் கடவுள் சேவையில் ஈடுபட்ட இறைவாக்கினர் எலியாவிற்கு ஏற்பட்ட கடுமையான மனச் சோர்வும், அச்சோர்விலிருந்து அவர் விடுபட்டதும் இன்றைய வாசகம்.
நான் சாகவேண்டும்
நான் ஏன் பிறந்தேன்? நான் செத்து ஒழிந்தால் எவ்வளவோ நல்லது! இவை போன்ற உணர்ச்சிகள் சாதாரண மனிதனுக்கு, கடுமையான துன்பச் சூழலில் தோன்றினால் வியப்பில்லை. ஆனால் ஆர்வத்துடன் கடவுள் சேவையில் ஈடுபட்டு, தன்னந்தனியனாகக் கடுமையான சவால்களைச் சமாளித்த இறைவாக்கினருக்கு இவ்வளவு மனச் சோர்வா? “ஆண்டவரே என் கடவுள்” என்று பொருள்படும் பெயருடைய இறைவாக்கினருக்கா இவ்வளவு மனச் சோர்வு?
இத்தகைய கொடுமையான சோதனை, சாகவேண்டும் என்று நினைக்கிற அளவிற்கு இறைவாக்கினர்கள் சிலருக்கு துன்பம் ஏற்பட்டுள்ளதைத் திருநூலில் படிக்கிறோம். ஆண்டவரிடம் கொண்ட பக்தியும், உலகிலே காணும் கொடிய பாவமும், தமது பணியினால் நலம் ஏற்படவில்லையே என்ற வருத்தமும் கொடுமையாக வாட்ட, இத்தகைய உணர்வு சூழ்கிறது. ஆண்டவரது நன்மைப் பெருக்கமும் நமது தீவினைப் பெருக்கமும் நம்மைக் கலங்கச் செய்கிறதா? “நான் என் முன்னோரைவிட நல்லவன் அன்று; அதாவது நம் முன்னோரைவிட நற்பயனை அதிகம் விளைவிக்கவில்லை என்பதால் நாம் வருத்தம் உற்றது உண்டா?
தேறுதல் பெறுகிறார்.
பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் மிக முக்கியமான இறைவாக்கினர் எலியா. மக்களின் மனத்தில் மிகுந்த இடம் பெற்றிருந்தவர். கடவுளின் பெருமையை உணர்த்தியவரும், சமூக நீதிக்காகப் போராடியவரும், எளியவர் மாட்டுப் பேரன்பு கொண்டு நன்மை புரிந்தவரும், வேண்டியது வேண்டியபடி அருள்பவரும் இவர் என்ற புகழ் பெற்றிருந்தார். ஆனால் நன்முயற்சிகள் வெற்றி அடையாத போது கொண்ட மனக் கலக்கத்தால், சாவதே மேல் என்று வேண்டினார். ஆண்டவர் தம் அடியாரைக் கைவிடுவாரா?
நமதாண்டவரும் வேதனை வெள்ளத்தில் தவித்தவர். “என் உள்ளம் சாவு. வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது” என்று கதறினார். கழுமரத்தில் தொங்கிய பொழுது இறைவா, இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர் என்று. கதறியழுதார். நமதாண்டவரின் மனவேதனைக்குமுன் நமது வேதனை ஒன்றுமில்லாமை எனலாம். அவ்வளவு வேதனை அனுபவித்தவரே, நமது துன்பத்தை உணர்ந்தவரே, நமக்கு ஆறுதல் அளிக்கக் கூடியவர் என்பதில். ஆறுதல் அடைவோம்.
தூதர் ஒருவர் இறைவாக்கினரிடம் வந்து, “எழுந்து சாப்பிடு” என்றார். வானவர் அமுதத்தை உண்ட இறைவாக்கினர் திடம் பெற்று மீண்டும் கடவுள் சேவையில் இறங்குகிறார். இந்நிகழ்ச்சியைத் தேவ நற்கருணையின் முன்னோடியாகவே திருச்சபை எண்ணுகிறது. திருப்பயணிகளாகிய நமக்குத் தெம்பு ஊட்டும் உணவு தேவ நற்கருணை. திருமகனின் திருவிருந்தில் பங்குபெறுவோர் இம்மையிலே நிலை வாழ்வில் பங்கேற்கின்றனர் என்கிறார் நம் பெருமான் (யோ. 6 : 54). உயிருள்ள விசுவாசத்துடன் நற்கருணை விருந்தில் பங்கேற்கிறோமா நாம்?
(எழுந்து சாப்பிடு. ஏனெனில் நீ இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியருக்கிறது.)
இரண்டாம் வாசகம் எபே 4:30-5:2
கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தலையாய வழிகாட்டி நம் பெருமானே ஆவார். நம் பெருமானைப் பின்பற்றுவது எப்படி, ஏன், என்பதற்கு விடையாக அமைகிறது இன்றைய வாசகம்.
வாக்குச் தூய்மை
திருச்சபையை-விசுவாசிகளின் திருக்கூட்டத்தை -அன்பால் கட்டி எழுப்பவேண்டிய கிறிஸ்தவருக்குத் தூய ஆவியார் ஞானம் நிறைந்த பேச்சு, அறிவு செறிந்த பேச்சு, இறைவாக்கு வரம், பரவசப் பேச்சு, அதனை விளக்கும் வரம், (1 கொரி. 12 : 8 - 10) என்று பற்பல வரங்களை அருளி அவர்களின் வாக்கைப் பரிசுத்தப்படுத்துகிறார். அப்படியிருக்க வாக்குத் தூய்மை இல்லாமையினாலே கெட்டு, அசுத்த உதடுகளை உடையவர்களாய் வாழ்வது தூய ஆவியாரை இழிவுபடுத்துவது ஆகாதா? “மனத்தில் ஒர் தூய்மை இல்லை; வாயில் ஒர் இன்சொல் இல்லை, சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா ' (திருமலை) என்று வெட்கப்படத்தக்க வகையில், பேசுவது எப்படி? ஆதலின், “மனக்கசப்பு, சீற்றம், சினம், வீண் கூச்சல், பழிச் சொல் ஆகிய அனைத்தும் உங்களை விட்டு ஒழியட்டும்" என்கிறார் பவுல். இவை உள்ள இடத்தில் பகையும் பிரிவினையும் அல்லவா விளையும்?
மாறாக பரிவு, இரக்கம், மன்னிப்பு ஆகியவை கிறிஸ்தவர் வாழ்க்கையில் மிகுந்த அளவில் இடம் பெற வேண்டும். இவையே சிதறுண்ட மனித இனத்தை ஒன்று சேர்க்கும். பிளவுபட்ட மனித சமுதாயத்தை ஒருங்கு இணைக்கும். 'கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்' (எபே. 1 : 10). “யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே '' (திருமந்திரம்) என்பார் திருமூலர். ஆதலின், ஆருயிர்கட்கு. எல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும் (திருவருட்பா) என்ற குறிக்கோளுடன் வாழ்வது உயர்ந்த கிறிஸ்தவ நெறியாகும். இதுவே கிறிஸ்துவின் இறுதிக் கட்டளை.
கிறிஸ்து உங்கள்மேல் அன்பு கூர்ந்ததுபோல்...
வாக்குத் தூய்மை பெற்றவர்களாய் அன்பு கூர்ந்து வாழ வேண்டும் என்பது எதனால்? பேச்சு வரங்கள் பலவற்றைத் தூய ஆவியார் வழங்குகிறார். அவ்வாறு இருக்க, “இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன் கொலோ வன் சொல் வழங்குவது (குறள் 99). திருக்கூட்டமாக வாழ. வேண்டியவர்கள் வாக்குத் தூய்மை இல்லாமையால் பிரிவினையை ' வளர்த்துத் திருச்சபையை அழித்து விடுவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்து நம்மை நேசித்து நமக்காக அன்பு கூர்ந்து, உயிர்த் தியாகம் புரிந்தார் என்பதனால் கிறிஸ்துவைப் பின்பற்ற. வேண்டும். “இவரே என் மேல் அன்புகூர்ந்தார்; எனக்காகத் தம்மையே கையளித்தார் ” (கலா. 2 : 20) “கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்து அதற்காகத் தம்மையே கையளித்தார். அத்திருச்சபை கறைதிரையோ வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார் ' (எபே. 5 : 25).
கிறிஸ்து அன்புருவம் என்று நாம் எண்ணலாம்; பேசலாம். ஆனால் ஒவ்வொரு கிறிஸ்தவனும் “கிறிஸ்து என்மேல் அன்பு கூர்கிறார் ' என்று உணர்கிறானா? கிறிஸ்துவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டு, அன்பினைச் சுவைத்திருப்பதாகச் சொல்ல இயலுமா? அல்லது கிறிஸ்து அன்பு கூர்கிறார் என்பது, யார் மீதோ, எப்போதோ அன்பு கூர்ந்தார் என்ற வெற்றுப் பேச்சும் புனைந்துரையும்தானா? கிறிஸ்துவின் அன்பே என் அன்பை அளக்கும் அளவுகோலா?
கிறிஸ்து உங்கள் மேல் அன்புகூர்ந்ததுகபோல், நீங்களும் அன்பு கொண்டு ஒழுகுங்கள்.
நற்செய்தி : யோ. 6 : 41- 51
இறைவனின் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவராக வந்தவர் நம் பெருமான். பாலைவனத்தில் முன்னோர் உண்ட மன்னாவின் உட்பொருளாகத் திகழ்பவர் நம்பெருமான் என்று உணர்த்துவது இன்றைய வாசகம்.
நானே உயிருள்ள உணவு
இன்றைய வாசகத்தின் ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த பொருள் பொதிந்தது. மீண்டும் மீண்டும் தியானித்து உணரவேண்டியது. இங்கே சுருக்கமாகவும் பொதுவாகவும் இப்பகுதியின் பொருளைத் தியானிப்போம்.
நம் பெருமான் உயிரூட்டும் உணவு. வானில் இருந்து இறங்கிவரும் உணவு. இது அவர்தம் தசை. இதை உண்பவன் சாகான்; வாழ்வான். இது உலகம் உய்வதற்காகப் பலியாகும் தசை. இதை விசுவசிப்பவன் வாழ்வான். இவ்விசுவாசம் தந்தை தரும் கொடை. நம் பெருமானின் சொற்களையும் செயல்களையும் உய்த்து உணர்ந்து ஏற்றுக்கொள்பவன் இவ்விசுவாசக் கொடையைப் பெறுவான்.
நம் ஆண்டவர் தம்மை உயிருள்ள உணவு என்று குறிப்பிடுவதைக் கேட்டு யூதர்கள் முணுமுணுக்கவில்லை. ஏனெனில், இறைவாக்கினர் தமது சொற்களைக் கடவுளிடமிருந்து பெறுவதால் தங்களை உயிருள்ள உணவு என்று வருணித்துக் கொள்ளலாம். ஆனால் யூதர்களின் முணுமுணுப்பு நம் பெருமான் தம்மை வானிலிருந்த இறங்கி வந்ததாக வருணித்துக் கொள்வதால்தான் உண்டாகிறது. அவருடைய சொற்கள் அல்ல, அவரே விண்ணில் இருந்து இறங்கி வந்தவர் என்பதை ஏற்க முடியாமல் முணுமுணுக்கின்றனர்.
இவனைப் பற்றி எல்லாம் எங்களுக்குத் தெரியுமே என்று அலட்சியம் கொள்வதாலும், அவருடைய சொற்கள், செயல்கள் ஆகியவற்றை உணராததாலும் உண்டாகிறது முணுமுணுப்பு.
இது புரிந்துகொள்வதற்குக் கடினம் என்று எண்ணி யூதர்களைப். பொறுத்துக் கொள்ளவில்லை நம் பெருமான். மாறாகத், தம்மை மறுப்பவர்கள் தம்மையல்ல, தந்தையையே மறுக்கின்றனர் என்கிறார். தந்தையிடமிருந்து வருகின்ற விசுவாசக் கொடையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் என்று அவர்களைக் கண்டிக்கிறார்.
“செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே? அம்மையாய் அப்பன் ஆய அத்தனே அருளின் வாழ்வே” என்ற நன்றியுடன் ஏற்பது நமக்கு அழகு.
தந்தை ஈர்க்கிறார்
“தந்தை ஈர்த்தால் ஒழிய எவனும் என்னிடம் வர இயலாது” என்று கடவுளின் அருளாலேயே இந்த அருளார் அமுதத்தை ஒருவன் அருந்த முடியும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார் நம் பெருமான். நமது வாழ்வில் கடவுளின் அருள் எத்தனை எத்தனையோ வழிகளில் செயல்புரிகின்றது. ஆயினும் அதனை அறியாதவர்களாகவே வாழ்ந்து விடுகிறோம். “முடிவில்லாப் பேரன்பால் உன்னைக் கவர்ந்து கனிவுடை அன்பு கூர்ந்தோம் உன்பால்” என்று (எரே. 38 : 3) கடவுள் உணர்த்துகிறார். “வண்ணமும் வடிவமும் இவன் கண்டிலன், எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலன்... அண்ணலே அறிவான் இவன் தன்மையே” (தேவாரம்) என்று இறைவன் கவர்வதன் முதன்மையை நம்மவரும் உணர்த்தியுள்ளனர். ஆதலின் நாமும் 'தாயுமானவருடன் “இரும்பைக் காந்தம் இழுக்கின்றவாறு எனைத் திரும்பிப் பார்க்க ஒட்டாமல் திருவடிக் கரும்பைத் தந்து கண்ணீர் கம்பலை எலாம் அரும்பச் செய்! எனது அன்னை ஒப்பாம் மனே” என்று வேண்டுவோம்.
விண்ணகத்திலிருந்து இறங்க வந்த வாழ்வு தரும் உணவு நானே. இதை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் (யோ.. 6 : 47 - 51)
எத்துணை இனியவர் அவர்…
நிகழ்வு:
வயநாடு என்றவுடனேயே இன்று நம் நினைவுக்கு வருவதெல்லாம் நிலச்சரிவும், மண்ணில் புதைந்த உடல்களும், இரவு பகலாய் கண் விழித்துப் போராடி உயிர்களைக் காக்கும் போர் வீரர்களும், தன்னார்வப் பணியாளர்களுமே. கடுமையான போராட்ட சூழலில் கண் எதிரே தோன்றும் உயிர்களை மீட்பதும், உயிரற்ற உடல்களைத் தேடி சடலங்களைச் சேகரிப்பதுமாய் இருக்கின்ற இச்சூழலில் அபயக்குரல்கள் ஆங்காங்கே ஓங்கி ஒலிக்கும் பொழுதில் அதிர்ச்சியான மனதிற்கு ஆச்சரியம் ஊட்டும் ஒரு நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. வயநாடு பகுதியில் உள்ள சூரன்மலை என்ற பகுதியைச் சார்ந்தவர் மூதாட்டி சுஜாதா. அவர் இரவில் திடீரென்று எழுகையில் தன் வீட்டில் பாதிக்கு மேல் சேறும், சகதியும் இருப்பதை கண்டு அதிர்ந்து போகிறார். நிலைமை மிக மோசமாய் இருக்கிறது என்பதை அறிந்து, அடுத்த அறையில் தூங்கி கொண்டிருந்த தன் பேத்தியை எழுப்பி அவ்விரவில் கடும் சீற்றத்திற்கு மத்தியில், உருண்டு விழுந்து பாறைகளுக்கிடையில், சகதியின் நடுவில் தட்டு தடுமாறி தன் பேத்தியுடன் சூரன்மலை காட்டிற்குள் சென்று விடுகிறார். மீட்பு படையினர் வரும் வரை இங்கேயே இருப்போம் என்று எண்ணி முடிப்பதற்கு மூன்று யானைகள் அவர்கள் முன் நிற்கக் கண்டு அதிர்ந்து போகிறார் மூதாட்டி சுஜாதா. அங்குத் தப்பித்து இங்கு மாட்டிக் கொண்டோமே என்று நினைக்கிறார். அப்போது மூன்று யானைகளுக்கு முன்பாகக் கண்ணீரோடு அம்மூதாட்டி சொல்கிறார்: ‘நாங்கள் நிலச்சரிவில் உயிர் பிழைத்து வந்துள்ளோம். என்ன செய்வதென்று தெரியவில்லை. உயிரைக் காப்பாற்றுங்கள். எங்களை ஒன்றும் செய்யாதீர்கள்’ என்று அம்மூதாட்டி பேசியிருக்கிறார். அழுகிறார். இதைச் சொல்லும்போது யானை ஒன்றின் கண்ணின் ஓரத்தில் தண்ணீர் வந்ததை கண்டுள்ளார் அம்மூதாட்டி. யானை இவர்கள் சொன்னதை கேட்டு அழுததாக அம்மூதாட்டி சொல்கிறார். இரவு முழுவதும் அந்த யானைகள் அவர்களைப் பாதுகாத்து பராமரித்து உடனிருந்திருக்கின்றன. காலையில் மீட்பு படை காப்பாற்றும் வரை யானைகள் அங்கே அவர்களோடு தங்கியிருக்கின்றன. பேத்தியும் பாட்டியும் யானைகளின் கால்மட்டிலேயே உறங்கி இருக்கின்றனர். என்ன ஒரு இனிமை. என்ன ஒரு மனிதநேயம். என்ன ஒரு இறை பராமரிப்பு. யானைகள் மிதித்துக் கொள்ளும் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் அது மற்றவரின் மனதை அறிந்து மதித்து இருக்கின்றது, காலடியில் நின்றோரை பாசத்தோடு மனதார உதவி இருக்கின்றது என்றால் அது ஆச்சரியம் கலந்த உண்மையே. இது இறைவன் எத்துணை இனியவர் என்பதை உணர செய்கிறது. உறுதியாய் இறை உடனிருப்பை நாட செய்கிறது. இறைஇயேசுவில் இனிய சகோதர, சகோதரிகளே!
ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிற்றுக்கிழமையில் இறைவன் எத்துணை இனியவர் என்று சுவைத்து பாருங்கள் என்கிற திபா 34:8இல் சொல்லப்பட்டுள்ள இறைவனின் தனிப்பெரும் இரக்கத்தைக் கொண்டாடி மகிழ அழைப்பு கொடுக்கிறது. இறைவன் இனியவராய் தன்னை வெளிப்படுத்துகிறார் நம் கசப்புமிகுந்த பாத்திரத்தை இனிய மனமகிழ்வின் பாத்திரமாய் மாற்றுகிறார். அவரை அணுகி வருவோர் ஒருநாளும் இனிமையைச் சுவைக்காமல் இருப்பதில்லை என்கிற ஆழமான இறை உடனிருப்பை, புரிதலை வாரி வழங்குகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.
முதல் வாசகத்தில்,
பாகால் இறைவாக்கினர்கள் 400 பேரை எதிர்த்துப் போரிட்டு இறைத்துணையோடு வெற்றி பெற்ற எலியா மனச்சோர்வோடு, விரக்தியோடு நிற்பதை பார்க்கின்றோம். ஈசபேல் 1அரச 19:2 இல் வாசிப்பதுபோல, ‘நீர் அவர்களது உயிரைப் பறித்தது போல், நானும் நாளை இந்நேரத்திற்குள் உன் உயிரைப் பறிக்காவிடில், தெய்வங்கள் எனக்குத் தண்டனை கொடுக்கட்டும்’ என்று சொன்னாள். இதைக் கேட்ட எலியா பயந்து அச்சமுற்று ஓடி மறைகிறார். காட்டிலும் மேட்டிலும் சுற்றுகிறார். இறைவாக்கினாக இறைவனின் துணை நாடி சென்றவர். மனம் நொடிந்து, விரக்தியில் வீழ்ந்து போகிறார். இறைவனின் இனிமையைச் சுவைத்தவர் இன்று கசப்பினை சுவைக்கிறார். இது நிரந்தரமல்ல. இது உனக்கானதல்ல. இது உன் நிலை அல்ல என்று இறைவன் மீண்டும் உணர்த்தி ‘நீ என் பார்வையில் விலையேற பெற்றவன்’ (எசா 43:4) என்று தெம்பூட்டுகிறார். ‘நீ எனக்குரியவன்’ என்று உறுதியளிக்கிறார். மனச்சோர்வோடு இருந்தவருக்கு உடல் சோர்வோடு வதங்கியவருக்கு உணவு அளிக்கிறார்;. என் உயிரை எடுத்து கொள்ளும் ஆண்டவரே, நான் சாகிறேன் என்று சொன்னவருக்குக் கடவுள் நான் உனக்கு வாழ்வு கொடுக்கவே வந்தேன் என்று தன் இனிமை மிகு உடனிருப்பை வழங்குகிறார். நொடிந்தவர் நாற்பது பகலும், நாற்பது இரவும் நடந்து ஓரேபு மலையை அடைகிறார் என்றால் இறைவன் எத்துணை இனியவராய் இருந்து அவரை வழிநடத்தியிருக்கிறார், பாருங்கள்!
நற்செய்தியில்,
இயேசு இனியவராய் வருகிறார். ஆனால் மக்கள் எல்லோரும் இடறல் படுகின்றனர். யோவான் 1:11 இல் “அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” என்கிற கூற்று யோவான் 6:41-51 இல் மிகத் தெளிவாக பார்க்கப்படுகின்றது. இயேசு தன் சொல்லாலும், செயலாலும், முன்மாதிரியான வாழ்வாலும் இனிய இறைவனாய், இதயத்தில் உறையும் தலைவனாய், உள்ளத்தை அன்பால் நிரப்பும் இரக்கம் நிறைந்த திருமகனாய், வல்ல செயல்கள் புரிந்து வல்லமை வழங்க வந்த இறைத்தந்தையின் இனிய மகனாய் இவ்வுலகத்திற்கு வந்தார். ஆனால் அவரின் ஊரார் மற்றும் சுற்றியிருந்த மக்கள் யாவரும் இவர் யோசேப்பின் மகன் தானே, மரியாவின் மகன் தானே, இவர் தந்தை தச்சர் அல்லவா என்று இனியவரை ஏற்க இடறல் படுகின்றனர். எனவே இறுதிவரை இறையாசீரைப் பெறாமலேயே போய்விடுகின்றனர். ‘என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்’ (யோவான் 6:47) என்று சொல்லியும்கூட அவர்களால் ஏன் இயேசுவின் இனிமையைச் சுவைக்க முடியவில்லை. யோசிக்க வேண்டும்.
அவர்கள் மட்டுமல்ல இன்று நாமும்கூட பல நேரங்களில் இயேசுவே இனியவர் என்று சுவைக்க முடியவில்லை. காரணம் இவ்வுலக காரியங்களைச் சுவைப்பதில் இருக்கின்ற ஆர்வம், ஆண்டவரைத் தேடுவதில் குறைந்து விட்டது. இறைவனின் இனிமையைக் கண்டு மகிழ்வதற்கு பதிலாக இவ்வுலக இனிமையே முதன்மையானவைகள் என்று மூலைகளிலும், சந்துகளிலும், வீதியோரங்களிலும், கேளிக்கை விடுதிகளிலும் தேடுகின்றோம். அதில்தான் நிறைவு என்று எண்ணுகின்றோம். அவற்றால் வாழ முயற்சிக்கின்றோம். இதைத்தான் இரண்டாம் வாசகத்தில் பார்க்கின்றோம்.
இரண்டாம் வாசகத்தில்,
புனித பவுல் எபேசு நகர மக்களுக்குக் கொடுக்கின்ற போதனையில் யாரெல்லாம் இறைவனின் இனிய அருளை, இரக்கத்தை, மன்னிப்பை, ஆசீரை, அன்பை, கருணையை, பரிவை பெறுகிறார்கள் என்பதையும், யாரால் பெற முடியாது, யாரால் அவர் எத்துணை இனியவர் என்று சுவைத்து பார்க்க முடியாது என்று எடுத்துரைக்கிறார். பவுல் ஆறு விடயங்களை நமக்;கு தருகிறார்: ‘மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல், தீமை இவையெல்லாம் இருக்கும் இடத்தில் இறைவனின் இனிமை இருக்கவே செய்யாது. இறைவனும் இனியவர் என்று சுவைக்கவும் முடியாது. அதற்கு நேர் மாறாய் ‘நன்மை செய்தல், பரிவு காட்டுதல், மன்னித்தல், அன்பு கொண்டு வாழ்தல், நேர்மையைக் கடைபிடித்தல், இறைபராமரிப்பை நாடுதல்’ இவையெல்லாம் இருக்கும்போது இறைவன் எத்துணை இனியவர் என்று நம்மால் சுவைக்க முடியும். அந்தச் சுவையை அனுபவிக்கவும் முடியும்.
எனவே,
முதல்வாசகத்தில்: எலியாவின் மனச்சோர்வு – இறை உடனிருப்பால், இறைப்பராமரிப்பினால் இனிமையாக்கப்பட்டது
இரண்டாம் வாசகத்தில்: எபேசு நகர மக்களின் மனக்கசப்பு – அன்பினால், தற்கையளிப்பினால் இனிமையாக்கப்பட்டது
நற்செய்தியில்: இடறல் மனப்பான்மை – தந்தையின் ஈர்ப்பினால், மகனின் வாழ்வுதரும் உணவால் இனிமையாக்கப்பட்டது
இவ்வாறாய் நாமும் இன்றைய நாளில் இறைவனின் இனிமையைச் சுவைத்து, அவர் எத்துணை இனியவர் என்று சுவைத்து பாருங்கள் என்று அடுத்தவர்களுக்கு அறிவிக்க வேண்டுமென்றால் பின்வரும் மூன்று சிந்தனைகளை நம் சிந்தையில் பதித்து பயணிக்க வேண்டும்:
1. வார்த்தையை வாசிக்க வேண்டும்
2. இறைபராமரிப்பை நாட வேண்டும்
3. மனம் மாற வேண்டும்
வார்த்தையை வாசிக்க வேண்டும்:
உலகில் உள்ள எல்லா புத்தகங்களையும் நீங்கள் வாசித்தாலும் இறைவனின் இனிமையைக் காண முடியாது. அதற்கு நீங்கள் விவிலியத்தை வாசிக்க வேண்டும். ஏனென்றால் எபி 4:12 சொல்கிறது, “ஆண்டவரின் வார்த்தை உயிருள்ளது”. இத்தகு உயிருள்ள வார்த்தை நம் உயிருடன் கலக்கும்போது அது எவ்வாறாய் அமையுமெனில், திபா 119:103 இல் வாசிப்பது போன்று, “உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானது” என்று சொல்வதற்கு மட்டுமல்ல, நாளும் பொழுதும் அது நமக்குத் துணை நிற்கும், இனிய வாழ்வை தரும் இறைவனின் உடனிருப்பு என்பதையும் உறுதி செய்யும்.
இறைபராமரிப்பை நாட வேண்டும்:
இன்று செய்வினைகளையும், திருநீறு போடுவதையும், கைகளில் கயிறு கட்டுவதையும், மைப்போட்டுப் பார்ப்பதையும், வசியம் வைப்பதையும், பெந்தகோஸ்தே சபைகளுக்குச் சென்று நாடகமாடுவதும் எதார்த்தமாகி இறைவனின் இறைபராமரிப்பை நாடாமலும், தேடாமலும் இருக்கின்ற இதயமற்ற பிள்ளைகளாய் நம்மை மாற்றிக் கொண்டிருக்கின்றது இன்றைய உலகம். அதற்கு நாமும் ஈடு கொடுக்கின்றோம். 1 பேதுரு 2:1-3 இல் ‘ஆண்டவர் எத்துணை இனியவர்’ என்பதை நீங்கள் சுவைத்திருந்தால், எல்லா வகையான தீமையையும் வஞ்சகத்தையும் வெளிவேடம், பொறாமை, அவதூறு ஆகியவற்றையும் அகற்றுங்கள். புதியதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாயிருங்கள்’ என்று இறைபராமரிப்பை நாட கற்றுக்கொடுக்கிறார் புனித பேதுரு. அதுமட்டுமல்லாமல், செக்கரியா 9:16இல் யாரெல்லாம் இறைபராமரிப்பை நாடுகிறார்களோ அவர்களை ஆண்டவர் இவ்வாறாய் ஆசீர்வதிக்கிறார்: ‘கடவுளாகிய ஆண்டவர் தம் மக்களாகிய அவர்களை ஆயர் தம் மந்தையை மீட்பது போல் மீட்டருள்வார்’ இத்தகு இனிமையைத்தான் எலியா அன்றைய நாளில் இறைவனின் மீட்பாய் சுவைத்தார்.
மனம் மாற வேண்டும்:
இன்றைய இரண்டாம் வாசகத்தில் காணப்படும் மனமாற்றத்திற்கு எதிரான தீய காரியங்களைத் தூர எறிந்துவிட்டு, தூரத்தில் நிற்கும் நாம் ஆண்டவரின் அருகில் வந்து அவரின் இனிமையைச் சுவைக்க வேண்டுமென்றால், அது மனமாற்றத்தின் வழியாக மட்டுமே சாத்தியமாகும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். நம் மனம் இறைவனை நோக்கி இருந்தால் அதுவே இறைவனின் இனிமையைச் சுவைப்பதற்கான இனிய வழி. திப 17:30இல் வாசிப்பது போல, ‘இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும் மனம் மாற வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார்’ இக்கட்டளையை நிறைவேற்றுவதில் கருத்தாய் இருப்போம். காலம் முழுவதும் இறைவனின் இனிமையைச் சுவைப்போம்.
வார்த்தையை வாசியுங்கள், இறைபராமரிப்பை நாடுங்கள், மனம் மாற்றம் காணுங்கள்!
அப்போது இறைவன் எத்துணை இனியவர் என்று மகிழ்வீர்கள்!!