மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலத்தின் 18ஆம் ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
16: 2-4,12-15 | எபேசியர் 4: 17, 20-24 | யோவான் 6: 24-35

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்






நிலையான இன்பம்

அன்றொரு நாள் பள்ளி மாணவர்கள் உரையாடிக் கொண்டிருப்பதைக் காது கொடுத்துக் கேட்டேன். நான் தாமிரபரணி ஆற்றிலே மூழ்கிக் குளிப்பதில் தான் இன்பமும், சுகமும் காண்கின்றேன் என்றான் ஒரு மாணவன். இல்லை . மூழ்குவதால் நாமும் மூழ்கி உள்ளே சிக்கி மடிவோம். மாறாக குற்றால அருவியிலே தலை நீட்டி குளிப்பதில் தான் எனக்கு இன்பமும் சுகமும் உண்டு என்றான் இன்னொருவன். இதில் எனக்கு இன்பம் இல்லை. ஏனெனில் ஓடி வருகின்ற அருவியில் மின்சாரம் பாய்ந்து வருவதால் அது என் உடலைத் தாக்கும். எனவே என் வீட்டில் உள்ள குழாயில் பூப்போல் விழுகின்ற நீரிலே குளிப்பதில் தான் எனக்கு இன்பமும் சுகமும் உண்டு என்றான் மூன்றாம் மாணவன்.

இந்த வேறுபட்ட பதில்களைத் தருவது என்ன? நிலையற்ற உலகில் மனிதன் அடையும் இன்பமும் நிலையற்றவைதானே! மனிதன் பசியாக இருப்பதை நன்றாக உணருகின்றான். ஆனால் அந்த பசியும் தாகம் உண்டாக்கும் உண்மை நிலை என்ன என்பதை அறிய முடியாதவனாக வாழ்கின்றான். வயிராற உண்டால் பசி மாறிவிடும் என நினைக்கிறான் ஒருவன். போதை வர குடித்தால் போதும் என நினைக்கிறான் ஒருவன். சிற்றின்ப வாழ்விலே மூழ்கிவிட்டால் பேரின்பம் காண்பேன் எனக் கனவு காண்கின்றான் இன்னொருவன். ஏன் ! பணம் திரட்டி பொருள் சேர்ப்பதில் தான் இன்பம் காண்பேன் என நினைக்கிறான் இன்னும் ஒருவன். ஆனால் இவையனைத்தும் இன்று மனிதனுக்கு நிறைவு தருவதில்லையே! யோவான் நற்செய்தி 6:27 - இல் அழிந்துபோகும் உணவுக்காக உழைக்காதீர்கள். முடிவில்லா நிலையான வாழ்வு தரும் உணவிற்காக உழையுங்கள். அன்று வனாந்தரத்தில் இஸ்ரயேல் மக்கள் மன்னாவை உண்டார்கள். ஆனால் மடிந்தார்கள். நான் தரும் உணவை உண்பவனோ என்றுமே வாழ்வான் என்றாரே இயேசு! எதைக் குறிப்பிட்டுச் சொன்னார்?

ஆயிரக்கணக்கான மின் விளக்குகள் அரங்கேற்றப்பட்ட இடம் அழகாகக் காட்சித் தரலாம். வெளிச்சம் மிகுதியாக இருக்கலாம். ஆனால் அவையனைத்தும், உதயமாகும் சூரியனுக்கு முன்னே எம்மாத்திரம்! இந்த இடத்தில் இயேசுவின் அமுத வார்த்தைகளை ஆணித்தரமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். நானே வாழ்வு தரும் உணவு, என்னிடம் வருபவனுக்கு என்றுமே பசியிராது (யோவா. 6:35) என்பது இயேசு கூறிய உயிருள்ள வார்த்தைகள் என்பதை இன்று சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.

அன்றொரு நாள் ஆற்றங்கரை ஓரத்திலே தனிமையில் வாழ்ந்த முனிவர் விலையேறப்பெற்ற ஒரு வைரக்கல்லைக் கண்டெடுத்தார். இதைப் பார்த்த வழிபோக்கன், ஐயா முனிவரே இக்கல்லை எனக்குத் தாரும் என்று கேட்க முனிவரும் மனம் உவந்து உடன் கொடுத்தார். என்ன பைத்தியக்காரத்தனம் இந்த முனிவருக்கு. இதன் மதிப்பு தெரியாது தந்துவிட்டாரே என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். சில வாரங்கள் சென்று அந்த முனிவர் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தான் இந்த வழிப்போக்கன். ஐயா! விலையேறப்பட்ட வைரக் கல்லைக் கொடுத்த நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களே! ஆனால் வைரக் கல்லைப் பெற்ற நான் மகிழ்ச்சி இழந்து நிற்கிறேனே என்றான் கண்ணீர் நிறைந்த கண்களோடு. மகனே! இந்த உயிரற்ற வைரக் கற்களெல்லாம் உன் உள்ளத்திற்கு நிறைவு தராது என்றார் அந்த முனிவர்.

இதுதான் இயேசு சபையைத் தோற்றுவித்த புனித இஞ்ஞாசியார் நமக்குக் கற்றுத் தரும் பாடம். நான் மாவீரனாக விளங்கினால் உலகில் புகழோடு வாழ்வேன் என்று கனவு கண்ட இஞ்ஞாசியார், வெறுமையைத்தான் கண்டார். எனவே மனம் திரும்பினார் - திருந்தினார். இயேசுவைத் தன் உள்ளத்தில் அரியணை ஏற்றினார். வாழ்வில் நிறைவும் கண்டார். இவரைப் போல நாமும் வாழ்வு தரும் இயேசுவை அண்டி வருவோமா?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

புதிய மனிதர்களாவோம்.

கடவுளுக்கு எற்றவர்களாக நம்மால் வாழ முடியுமா? (நற்செய்தி)

முடியும். அதற்கு முதலாவதாக நாம் நமது தவறுகளை நியாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

ஒல்லி உடம்புக்காரர் ஒருவர் தாடியுடன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். புதிதாக மணமான ஒருவன் அவரிடம் கேட்டான்:

'நீ சிகரெட் பிடிப்பாயா?' -  'மாட்டேன்'
'குடிப்பாயா?' 'மாட்டேன்'
'சூதாடுவாயா?' 'மாட்டவே மாட்டேன்'
'சரி என் வீட்டுக்கு வா. நூறு ரூபாய் தருகின்றேன்.'

மணவாளன் அவனது மனைவிக்கு முன்னால் பிச்சைக்காரரை நிறுத்தி, "கண்ணே ! சிகரெட் பிடிக்காதே, குடிக்காதே, சூதாடாதேன்னு அடிக்கடி சண்டை போடுறியே! ... இதெல்லாம் இவரு செய்கிறதில்லை! இவரு நிலையைப் பார்..." என்றான்.

நாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்துவதற்கு ஆயிரம் உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். ஆயினும் நாம் செய்யும் தவறுகளை சரி என்று நியாயப்படுத்த முயற்சி செய்வது தவறு!

இரண்டாவதாக நமது தவறான சிந்தனைகள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றை விட்டுவிட முன்வர வேண்டும். சாதாரணமாகத் தவறுகள் நம்மைப் பிடித்துவைத்திருப்பதில்லை, நாம்தான் அவற்றை பிடித்துவைத்திருக்கின்றோம்.

நாம் ஒவ்வொருவரும் இறைவனின் அன்பார்ந்த மகனாக, மகளாக வாழ முற்படும் போது, கடவுளின் கட்டளைகளைப் பின்பற்ற முன்வரும் போது (முதல் வாசகம்), நமது மனம் மாறும்; நமது உள்ளம் உள்ளொளி பெறும்; அகத்தின் அழகு முகத்தில் தெரியும் (இரண்டாம் வாசகம்). மேலும் அறிவோம் :

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (குறள் : 706).
பொருள் : தன்னை நெருங்கி வருபவரது வடிவத்தையும் வண்ணத்தையும் தெளிவாகக் காட்டுவது கண்ணாடி. அது போன்று ஒருவரது உள்ளத்தில் மிகுந்து தோன்றும் உணர்வை அவரது முகமே வெளிப்படையாகக் காட்டிவிடும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சர்க்கரை நோயாளி ஒருவர் டாக்டரிடம் செல்ல, டாக்டர் அவரிடம், "இரண்டு கப் சாதம் மட்டும் சாப்பிடுங்கள்' என்றார். அவர் டாக்டரிடம், இந்த இரண்டு கப் சாதத்தை எப்போது சாப்பிடுவது? சாப்பிடுவதற்கு முன்பா? அல்லது சாப்பிட்ட பிறகா?" என்று கேட்டாராம். அவருடைய பசியோ யானைப்பசி; இரண்டு கப் சாதம் அவருக்குச் சோளப்பொறி. யானைப் பசிக்கு சோளப்பொறி கட்டுப்படியாகுமா?

பல்வேறு பசிகள் மனிதரை வாட்டி வதைக்கின்றன; பசி வந்தாலே மானம், குலம், கல்வி, வன்மை , அறிவுடமை, தானம், தவம், முயற்சி, தாளாமை (வாக்கம்), காதல் ஆகிய பத்தும் பறந்துவிடும், இஸ்ரயேல் மக்களுக்குப் பாலை நிலத்தில் பசி வந்தவுடன் பத்தும் பறந்துவிட்டன. அதாவது பரமனுடைய பத்துக் கட்டளைகளும் பறந்து போய்விட்டன. எஞ்சி இருந்தது அவர்களுடைய வயிறும் வயிற்றுப் பசியுமே. பாலை லக்கில் பட்டினி கிடந்து சாவதைவிட, எகிப்து நாட்டில் வயிராற உண்டு அடிமைகளாக வாழ்வதையே விரும்பினர். எனவே, மோசேயிடம் செயயாட்டிற்காகக் கூப்பாடு போட்டனர். கடவுளும் அவர்களுக்கு 'மாயா' என்ற அற்புத உணவை, வானத்து உணவை அளித்தார்,

புதிய உடன்படிக்கையின் இணைப்பாளரும் புதிய மோசேயுமாகிய கிறிஸ்து ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு அற்புதமான முறையில் உணவளித்தார். யூதர்கள் தங்கள் முன்னோர்கள் உண்ட மன்னா என்ற உனவை நினைவு கூர்ந்தனர், இந்நிகழ்ச்சி மறு ஒலிபரப்பு என்று எண்ணினர், ஆனால் கிறிஸ்து நிகழ்ச்சி முற்றிலும் வேறுபட்டது. அழிந்துபோகும் உணவுக்காக அலையாமல் அழியாத உணவைத் தேடிட அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். அவர்தான் நிலைவாழ்வளிக்கும், உண்மையான உயிருள்ள உணவு என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் (நற்செய்தி).

இயேசு யூதர்களிடம், "என்னிடம் வருபவருக்குப் பசியே இராது: என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" (யோவா 6:35) என்கிறார், அவ்வாறே சமாரியப் பெண்களிடமும், நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது (யோவா 4:14) என்று கூறுகிறார். கூடாரப் பண்டிகையின் இறுதி நாளில் இயேசு எருசலேம் ஆலயத்தில் உரத்த குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்" (யோவா 7:37) என்று மக்களை அழைத்தார்.

நாம் நமது பசியையும் தாகத்தையும் தணிக்க நாயாக அலைகிறோம்; மாடாக உழைக்கிறோம்; இடாக இளைக்கிறோம், ஆனால் நம் பசி தீரவில்லை: தாகம் தணியவில்லை. மாறாக அவை பன்மடங்கு கொழுந்துவிட்டு எரிகின்றன. ஆகாய் இறைவாக்கினர் வழியாக இறைவன் கூறியது நமது வாழ்வில் உண்மையாகிறது, *நீங்கள் விதைத்தது மிகுதி: அறுத்ததோ குறைவு, நீங்கள் உண்கிறீர்கள், ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை ; நீங்கள் குடிக்கிறீர்கள், ஆலால் நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள், ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தன் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான்” (ஆகாய் 1.6)

நாம் சாண் ஏறினால் முழம் வழுக்குகிறது! ஏன்? ஏனெனில் கடவுளை ஓரங்கட்டிவிட்டு, நாம் உயரப் பறக்கப் பார்க்கிறோம். மனசாட்சியை மழுங்கடித்துவிட்டு, குறுக்கு வழியில் சென்று குபேரர்களாக மாற விரும்புகிறோம். அங்காடியின் சிலை வழிபாட்டிற்கும் நுகர்வு வெறிக் கலாச்சாரத்திற்கும் அடிமைகளாக இருக்கிறோம். தேவைகளைக் குறைப்பதற்குப் பதிலாகத் தேவைகளைப் பெருக்குகின்றோம். மன அமைதியை இழந்து, மரண தேவதையைத் தழுவுகிறோம். சுருக்கமாக, உயிருள்ள தண்ணீர் சுரக்கும் கடவுளை கைவிட்டுவிட்டு, தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத ஓட்டைத் தொட்டிகளைக் கட்டிக் கொள்கிறோம் (எரே 2:13)

நமது இதயத் தாகத்தைத் தணிக்க வல்லவர் இயேசு ஒருவரே. நிலை வாழ்வு பெற கடவுளுக்கு ஏற்புடைய செயலை நாம் செய்ய வேண்டும். கடவுளுக்கு ஏற்ற செயல் என்பது அவருடைய மகனில் நம்பிக்கை கொள்வது. நற்கருணை நம்பிக்கையின் மறைபொருள். நற்கருணையை நாம் இயேசுவின் உடல் என்று உட்கொண்டால் மட்டும் போதாது. நற்கருனையிலுள்ள இயேசுவை நம்பி, அவரிடம் சரணடைய வேண்டும், மனிதன் அதிகமாகத் துன்புறுவது மனக் கவலையாலும் மன அழுத்தத்தாலுமே. மற்ற எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு. ஆனால் மனக் கவலையைப் போக்க வல்ல ஒரே மருந்து கடவுளிடம் சரணடைவதே.

தனக்கு உவமை இல்லாதாள்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் 7)
இறைவா எம் நெஞ்சங்கள் உமக்காகவே படைக்கப் பட்டுள்ளன; உம்மில் இளைப்பாறும் வரை அவற்றிற்கு அமைதி இல்லை - புனித அகுஸ்தீன்

ஒரு விவசாயிடம் இருந்த ஐந்து ரூபாய் பெறாத ஒரு தாமரை மலரை, ஐம்பது முதல் ஐநூறு ரூபாய் வரையில் விலை கொடுத்து வாங்கப் பலர் முன் வந்தனர். ஏன் என்று கேட்டதற்கு, காட்டில் தவம் செய்து கொண்டிருந்த புத்தருக்கு அம்மலரைப் படைக்க வேண்டும் என்று அவர்கள் பதில் சொன்னார்கள், தானே நேரில் புத்தரிடம் அம்மலரைக் கொடுத்தால் இன்னும் அதிகமாகப் பணம் கிடைக்கும் என்ற பேராசையுடன் அவவிவசாயி காட்டிற்குச் சென்று புத்தர் காலடியில் அம்மலரைப் படைத்தார், புன்னகை பூத்த முகத்துடன் அம்மலருக்கு எவ்வளவு பணம் வேண்டுமென்று புத்தர் விவசாயியைக் கேட்க, அவர் "பணமே வேண்டாம்; உங்களைப் பார்த்ததே போதும்" வென்றார். புத்தர் அவவிவசாயியின் பேராசையை அடியோடு ஒழித்து, அவரையும் நிர்வாண நிலையை அடையச் செய்தார்,

நற்கருணைப் பேழை முன் அமர்ந்து, ஆண்டவரை உற்று நோக்கும்போது, ஆண்டவர் நம் ஆசைகளை மடை மாற்றம் செய்கிறார். சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்திற்கு அழைத்துச் செல்கிறார், இன்றை இரண்டாவது வாசகத்தில் பவுலடியார் கூறுவதுபோல், பாவ நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் நமது பழைய இயல்பைக் களைந்துவிட்டு, உண்மையிலும், நீதியிலும் படைக்கப்பட்ட புதிய இயல்பை (எபே 4:22-24) கிறிஸ்து நமக்கு அளிக்கிறார்.

எனவே, கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பதுபோல், உயிருள்ள இறைவன்மீது தாகம் கொள்வோம் (திபா 42:1-2). ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பார்ப்போம் (திபா 34:8).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அன்றாட நலனும் - அருள் அடையாளமும்

நான் படித்துச் சுவைத்த பசி பற்றிய பாடல் இது.
அறியாத வயதினிலே அன்புக்கே ஏங்கி நின்றேன்
அறிந்து விட்ட வாலிபத்தில் பொருளுக்கே ஏங்கி நின்றேன்
இரண்டும் கெட்ட இப்பொழுதோ இல்வாழ்வில் குழம்புகின்றேன்
என்னதான் நடக்கும் என்று எதிர்நீச்சல் போடுகின்றேன்
உல்லாச மாளிகையில் முப்பொழுதும் காமப்பசி
இல்லாத குடிசையிலே எப்பொழுதும் வயிற்றுப்பசி
ஆராயும் மனிதனுக்கோ அடங்காத அறிவுப்பசி
அப்பனிடம் சென்றுவிட்டால் எப்பசியும் எடுப்பதிலை.
"இறைவா, உமக்காக எங்கள் இதயங்களைப் படைத்தீர். உம்மிலன்றி வேறு எதில் அவை நிம்மதி காண முடியும்? நிறைவு அடைய முடியும்?'' என்பார் புனித அகுஸ்தீன். மனித ஏக்கங்களுக்கெல்லாம் தீர்வு தரும் வகையில் இயேசு சொல்கிறார்: "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” (யோ. 6:35)

மனிதனுடைய அடிப்படை இன்றியமையாத் தேவைகளில் முதலிடம் வகிப்பது வயிற்றுப் பசி. எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம் - இது அந்தக் காலம். எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் என்பதே இன்றைய எதார்த்தம்!

உண்ணாமல் உயிர் வாழ முடியாது என்றாலும் மனிதர்கள் உண்பதற்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல. உண்பதற்காகவே உயிர் வாழ்பவர்கள் வெந்ததைத் தின்று வந்ததைப் பேசி விதி வந்தால் சாகுபவர்கள். உயிர் வாழ்வதற்காக உண்பவர்களே பெற்ற வாழ்வுக்குப் பெருமை சேர்ப்பவர்கள்.

பொதுவாக மனிதர்கள் நாம் மூன்று தளங்களில் வாழ்கிறோம்.
1. முதல் தளம் உடல் பசி, தாகம், காமம் எல்லாம் இந்தத் தளத்திற்கு உரியவை.
2. இரண்டாவது தளம் மனம்! காதல், புகழ், கலை, இலக்கியம், அன்பு, மதிப்பு, இவையெல்லாம் இத்தளத்தில் வாழ்பவர்களின் தேடல் .
3. மூன்றாவது தளம் ஆன்மா இது உடல், மனம், அறிவு என்ற எல்லா நிலைகளையும் கடந்து செல்லும் ஓர் உச்சநிலை. இதனையே ஆன்மீகத் தேடல் , அருள் வேட்கை என்று சொல்கிறோம்.

இந்த உன்னதமான மூன்றாவது கட்டத்திற்குத்தான் பெரும்பான்மையினர் வந்து சேர்வதில்லை. அது பற்றிச் சிந்திப்பதும் இல்லை என்பதுதான் மிகப் பெரிய சோகம். இப்படிப்பட்ட மக்களைத்தாம் அடையாளம் கண்டு , "நீங்கள் அருள் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்” (யோ. 6:26) என்று இயேசு உறுதிபடக் கூறுகிறார்.

நற்செய்தியாளர் யோவானின் பார்வையில் இயேசு செய்த ஒவ்வொரு புதுமையிலும் இரண்டு கூறுகள் உண்டு. 1. மக்கள் பெறும் நன்மை . 2. அருள் அடையாளம். அப்பம் பலுகிய புதுமையில் கடவுளின் பரிவையும் மக்களின் பகிர்தலையும் மக்கள் உணர வேண்டுமென்று இயேசு விரும்புகிறார். ஆனால் மக்களோ தங்கள் வயிறு நிரம்பியதையே நினைத்து மீண்டும் தங்கள் வயிற்றை நிரப்புவதற்கே இயேசுவைத் தேடிச் செல்கிறார்கள்.

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களின் மனநிலையும் அப்படித்தான். விடுதலை என்ற உன்னதமான மதிப்பீட்டை மறந்து வயிற்றுக்கான உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கிறோம். உணவு இல்லையே என்ற முணுமுணுப்பு, முறையீடு! இப்படி உணவற்ற நிலையில் வாடுவதைவிட, எகிப்தில் அடிமைகளாக இருந்தால் வயிற்றுக்குச் சோறாவது கிடைக்குமே!.... இங்கே கடவுள் அவர்களுக்கு கொடுக்க விரும்பியது விடுதலை என்ற உயர்ந்த விழுமியத்தை. ஆனால் பசி வந்ததும் மக்கள் அந்த மதிப்பீட்டை மறந்து விடுகின்றனர் - எங்களுக்கு விடுதலை வேண்டாம், வெறும் உணவு போதும் என்று கேட்பது போல. உடல் சார்ந்த ஒரு சிறிய மதிப்பீட்டுக்காக, விடுதலை என்னும் உயர்ந்த அடிப்படையான மதிப்பீட்டையே விட்டுக் கொடுக்கத் தயாராகி விடுகிறார்கள்.

நற்செய்தியிலும் இதே நிலை. இயேசு அப்பம் பகிர்தல் என்னும் நிகழ்ச்சி வழியாக பகிர்தல்' என்ற உன்னதமான பண்பை - அரும் அடையாளத்தைக் காட்டிப் பகிர்தலே ' நிறைவாழ்வுக்கு வழி என்று உணர்த்தினார். ஆனால் மக்கள் அதை உணராமல் ஓசியில் உணவு தேடி வருகிறார்கள். எனவே 2ஆம் வாசகத்தில் கேட்டது போல இனியாவது ''உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதனுக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்" (எபேசி. 4:23-24) என்ற திருத்தூதர் பவுலின் கூற்றுக்கேற்ப கடவுளின் மதிப்பீடுகளுக்காக வாழ்வோம்.

உலகில் வாழும் மக்கள் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு நோக்கம் கொண்டு செயல்படுகின்றனர். சிலர் உடல் இன்பத்தைத் * தேடுகின்றனர். சிலர் பணத்தை , பதவியைத் தேடுகின்றனர். சிலர் புகழை, வீண் பெருமையைத் தேடுகின்றனர். பெரும்பான்மையினர் உயிர்வாழ வழிவகைகளைத் தேடுகின்றனர். நோக்கு எப்படியோ போக்கு அப்படியே! மக்கள் எதைத் தேடுகிறார்களோ அதற்கு ஏற்ப அவர்களுடைய வாழ்க்கை முறையும் உயர்வானதாகவோ அல்லது தரம் குறைந்ததாகவோ இருக்கும்.

வயிற்றில் கடுமையான பசி என்பதற்காக வயிற்றை கல்லாலோ, மண்ணாலோ, ஏன் தங்கக்கட்டியாலோ கூட நிரப்பி திருப்தி காணமுடியுமா? அதுபோல மனப்பசியை ஆன்மப்பசியை உலகம் தொடர்பானவற்றால் தீர்த்துக் கொள்ள இயலாது. அதனால்தான் இன்று இயேசு சொல்கிறார்: "அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்" (யோ. 6:27). உணவு அளிப்பவராக மட்டுமல்ல இறைமகன் இயேசுவே அவ்வுணவாக இருப்பார். " வாழ்வு தரும் உணவு நானே" (யோ. 6:35)

இறைமையை நோக்கி நமது தேவைகளை நிறைவு செய்வோம் ஆபிரகாம் மாஸ்லோ என்ற உளவியலார் "தேவைகளின் படிக்கட்டு" (Hiararchy of Needs) என்னும் ஒரு சிந்தனையை வழங்கியுள்ளார். அதன்படி மனிதர்களுக்கு அடிப்படைத் தேவைகள் (உணவு, உடை, உறைவிடம்), பாதுகாப்புத் தேவைகள், உறவுத் தேவைகள், அன்புத் தேவைகள் மற்றும் ஆளுமை நிறைவுத் தேவைகள் என ஐந்து வகையான தேவைகள் படிப்படியாக ஒவ்வொரு தேவையாக நிறைவேற்றப்படும் போது மனிதர்கள் ஆளுமை நிறைவு அடைகிறார்கள் என்கிறார் அவர்.

இதே சிந்தனைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயல் வடிவம் கொடுத்துள்ளார் இயேசு . மனிதர்களின் அடிப்படைத் தேவையான உணவை வயிறார அளித்த பிறகு அவர்களின் ஆன்மீக நிறைவுத் தேவையான நிலை வாழ்வு தரும் அழியாத உணவுக்காக உழைக்க அழைக்கிறார். " மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல. மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்'' (மத். 4:4) என்கிறார்.

நரி முயலைத் துரத்தியது. வேகமாக ஓடி நின்ற முயலைப் பார்த்து நரி கேட்டது "உன்னால் எப்படி இவ்வளவு வேகமாக ஓட முடிகிறது?" முயல் சொன்னது, "நீ வயிற்றுக்காக ஓடினாய். நான் உயிருக்காக ஓடினேன்" என்று.

எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றுவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" எனச் சிலர் கேட்டதற்கு , "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்" என்றார் இயேசு. அது அழிந்து போகும் உணவுக்காக உழைக்காது, மாறாக நிலைவாழ்வு தரும் உணவுக்காக உழைப்பதாகும். அந்த அழியாத உணவான இயேசுவைத் தேடினால் இறைவார்த்தையிலும் நற்கருணையிலும் நமது ஆன்ம பசியையும் ஆன்ம தாகத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமானதும், நம் நினைவுகளில், வேதனையோடு வலம் வருபவை, அணுகுண்டுத் தாக்குதல்கள். ஆம், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6, 9 ஆகிய இரு நாட்கள், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, அணுகுண்டுகளை வீசி, பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொன்றது. இக்கொடுமையால் இறந்தோரின் நினைவாக உருவாக்கப்பட்ட ஹிரோஷிமா அமைதிப்பூங்காவில், "Let all the souls here rest in peace; For we shall not repeat the evil" அதாவது, "அனைத்து ஆன்மாக்களும் இங்கு அமைதியில் இளைப்பாறட்டும்; ஏனெனில், தீமையை மீண்டும் செய்யமாட்டோம்" என்ற சொற்கள், கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

1945ம் ஆண்டுக்குப்பின், அணுகுண்டுகளை வீசி, மக்களை நேரடியாகக் கொல்லும் தீமை நடைபெறவில்லை, உண்மைதான். ஆனால், அணுகுண்டு சோதனைகள், பூமிக்கடியிலும், கடலுக்கடியிலும் நடத்தப்பட்டு, அதன் ஆபத்தான விளைவுகளை, பூமித்தாயும், அப்பாவி மனிதர்களும் இன்றும் சந்தித்து வருகின்றனர். அணுசக்தியை, குண்டுகளாக மாற்றி, அழிவுக்குப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அந்தச் சக்தியை, பிற சக்திகளாக மாற்றும் அணு உலைகளை உலக அரசுகள் நிறுவின. இங்கும், அழிவுகள் தொடர்கின்றன.

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு (1945) அழிவுகள், செர்னோபிள், (1986) புக்குஷிமா (2011) அணு உலை விபத்துகள் ஆகியவற்றைக் கண்ட பின்னரும், நமது அரசுகள், அணுசக்தியை இன்னும் நம்பியுள்ளனவே என்ற கவலையை, இறைவனிடம் ஏந்திவருகிறோம், இந்த ஞாயிறு வழிபாட்டில்.

அணுசக்தியை, அணுஉலைகளைப் பற்றிய சிந்தனைகள், ஒரு ஞாயிறு வழிபாட்டிற்கு தேவையா என்ற கேள்வி எழலாம். நம் வாழ்வை, இன்று, பெருமளவில் பாதிக்கும் ஓர் ஆபத்தை, கிறிஸ்தவர்கள் என்ற முறையில், விசுவாசக் கண்ணோட்டத்துடன் சிந்திப்பதற்கு, ஞாயிறு வழிபாடு நல்லதொரு தருணம். அணுசக்தியைப் பற்றி, இரு எண்ணங்களை நாம் இன்று அலசுவது பயனளிக்கும். அணு சக்தியை காப்பாற்ற, அரசுகள், மக்களிடம் பொய்களைக் கூறி ஏமாற்றுகின்றன என்பது, முதல் எண்ணம். அணுசக்தியின் ஆபத்துக்களைப் பற்றிய உண்மைகள், மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன என்பதற்கு, வரலாற்று சான்றுகள் பல உள்ளன. ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்க அரசு அணுகுண்டுகளை வீசியபோது, மனசாட்சியுள்ள பல்லாயிரம் அமெரிக்க மக்கள் சங்கடமான கேள்விகளை எழுப்பினர். அவர்களது குரலை அடக்கியவர்கள், James Conant, Harvey Bundy, Henry Stimson என்ற மூவர். இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவர, அணுகுண்டு தாக்குதல்கள் தேவைப்பட்டன என்று, இம்முவரும், அரசின் சார்பில் பேசி, மக்களை நம்பச்செய்தனர். ஆயினும், அன்றுமுதல், இன்றுவரை, அமெரிக்க மக்கள், அந்தப் பொய்யை, சீரணிக்கமுடியாமல் தவிக்கின்றனர்.

அணுகுண்டு தாக்குதல்களைப் பற்றி பொய்கள் சொல்லப்பட்டதுபோல், உலகில் உள்ள அணுஆயுதங்களைப் பற்றியும் பல்லாயிரம் பொய்களை அரசுகள் சொல்லி வருகின்றன. உலகில் உள்ள அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இந்த உலகை ஐந்து முறைக்கும் அதிகமாக நாம் அழிக்கலாம் என்று கூறப்படுகிறது. "இவ்வுலகை முற்றிலும் அழிப்பதற்கு, எங்களிடம் உள்ள 3 அல்லது 4 குண்டுகள் போதும்" என்று தன் அணு ஆயுத சக்தியைப் பற்றி சென்ற ஆண்டு வடகொரியா அறிவித்ததைக் கேட்டபோது, நாம் வேதனையில், வெந்துபோனோம். யார் பலசாலி என்று பறைசாற்ற விரும்பும் பள்ளிச் சிறுவர்களைப் போல், இரு நாட்டின் அரசுத்தலைவர்கள், தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களைப்பற்றி, கடந்த ஆண்டு, ஊடகங்களில், பொறுப்பற்ற முறையில், அறிவிப்புக்கள் விட்டதைக் கண்டு, உண்மையிலேயே கலங்கி நின்றோம்.

உலகை அழிப்பதற்கு அணு ஆயுதங்கள் மட்டும் போதாதென்று, உலகின் பெரும்பாலான நாடுகள், அணு உலைகளைக் கட்டிவருகின்றன. அரசுகள் அமைத்துவரும் அணு உலைகளைப் பற்றியும், இதுவரை, அணு உலைகளில் ஏற்பட்டுள்ள விபத்துக்களைப் பற்றியும் ஏகப்பட்ட பொய்கள் தொடர்ந்து கூறப்படுகின்றன. தமிழகத்தின் கூடங்குளத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தைப்பற்றிய முழு விவரங்களையும் வெளிப்படுத்துமாறு மக்கள் போராடினர். முழு விவரங்களும் இதுவரைச் சொல்லப்படவில்லை. கூடங்குளத்தில் மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலுமே, அணு உலைகளைப்பற்றியும், அவற்றில் நிகழ்ந்துவரும் விபத்துக்கள் குறித்தும், முழு உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு வருகின்றன. அணுசக்தியை உலகில் காப்பாற்ற வேண்டுமெனில், பொய்யையும் நாம் கண்ணும்கருத்துமாய் காப்பாற்ற வேண்டியிருக்கும்.

இவ்வளவு ஆபத்தான அணுசக்தி நமக்குத் தேவைதானா? மாற்று சக்திகளை நாம் பயன்படுத்த முடியாதா? என்ற கேள்விகள், நமது இரண்டாவது எண்ணத்தை ஆரம்பித்து வைக்கின்றன. அணுசக்திக்கு மாற்றாக, எத்தனையோ வகை இயற்கைச் சக்திகளை நாம் பயன்படுத்தமுடியும். நீர், காற்று, சூரியஒளி என்ற அனைத்தையுமே நாம் சக்திகளாக மாற்றமுடியும். அவ்விதம் நாம் உருவாக்கும் இயற்கைச் சக்திகளைக்கொண்டு, நமது தேவைகளை, நாம் நிறைவு செய்துகொள்ளலாம். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், கட்டுக்கடங்காமல் வளர்ந்திருக்கும் நமது பேராசைகளை நிறைவு செய்யும் ஆற்றல், இந்தச் சக்திகளுக்குக் கிடையாது. இதுதான் பிரச்சனை.

பேராசைகளை நீக்கிவிட்டு, தேவைகளை மட்டும் நிறைவுசெய்யும் எளிமையான வாழ்வை ஒவ்வொருவரும் பின்பற்றினால், நமக்கு இத்தனை பொருட்கள் தேவையில்லை. தேவையற்றப் பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் தேவையில்லை. அத்தொழிற்சாலைகளை இயக்கும் அணுசக்தியும் தேவையில்லை. எப்போது நாம், தேவைகளை மட்டும் தீர்த்துக்கொள்ளும் மனிதர்களாக வாழ்வதற்குப் பதில், பேராசை வெறியர்களாய் மாறினோமோ, அப்போது, அந்த வெறிகளைத் தீர்க்க, இயற்கைச் சக்திகளைத் தாண்டி, அணுசக்தியைத் தேடினோம். பேராசை வெறியால் நாம் திரட்டிவைத்துள்ள செல்வங்களைக் காக்க, அணு ஆயுதங்களையும் உருவாக்கினோம்.

இயற்கைச் சக்திகளைக் கொண்டு வாழமுடியும் என்று சிந்திப்பது, 21ம் நூற்றாண்டில் வாழும் நமக்கு ஒத்துவராத கனவு என்று பலர் நினைக்கலாம். இயற்கைச் சக்திகளை நம்பி வாழ்ந்தால், கற்காலத்திற்குத் திரும்பவேண்டியிருக்கும் என்ற எண்ணம் நம்மில் ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளதால், இயற்கைச் சக்திகளைக் குறித்த எண்ணத்தை, நாம் எள்ளி நகையாடலாம். ஆனால், முன்னேற்றம் என்ற பெயரில், உருவாகி வரும் பல பிரச்சனைகளின் ஆணிவேர், கட்டுக்கடங்காத நமது பேராசைகள் என்றும், அடுத்தத் தலைமுறையைப்பற்றி கவலை ஏதுமின்றி, சுற்றுச்சூழலையும், பூமிக்கோளத்தையும் நிரந்தரமான ஆபத்துக்கு உள்ளாக்குகிறோம் என்றும் பல உலகக் கருத்தரங்குகளில் பேசிவருகிறோம். நாம் வளர்த்துக்கொண்டுள்ள பேராசைகள், நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்கின்றனவா என்பது கேள்விக்குறியே! அணு ஆயுதங்களுக்கு எதிராக ஆரம்பத்திலிருந்து கண்டனக்குரல் எழுப்பிவந்த, அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்கள், நாம் செல்லும் முன்னேற்றப்பாதையைக் குறித்து சொன்ன கருத்து இப்போது நினைவுக்கு வருகிறது: “I do not know with what weapons World War III will be fought, but World War IV will be fought with sticks and stones.” - Albert Einstein "மூன்றாம் உலகப்போரில் எவ்வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான்காம் உலகப்போரில், கழிகளும் கற்களும் பயன்படுத்தப்படும்."

அணு உலைகள் என்ற கோவில்களைக் கட்டி, அணுசக்தியை வழிபடும் நமது பேராசை வெறிகளை நீக்கிவிட்டு, தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்ளும் எளிய வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளமுடியும் என்று கனவு காண்பதில் தவறில்லையே! இந்தக் கனவை நமக்குள் விதைப்பவை, இன்றைய ஞாயிறு வாசகங்கள். எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படைத் தேவையாக இருக்கும் பசியைப்பற்றி முதல் வாசகமும், நற்செய்தியும் பேசுகின்றன. வேற்று உயிரினங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவுற்றால், அமைதியாக வாழும். ஆனால், மனிதர்கள் மட்டும் தங்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவேறினாலும், நிறைவேற்றமுடியாத தங்கள் பேராசையைத் தீர்ப்பதற்கு, வேறு வழிகளை, குறிப்பாக, குறுக்கு வழிகளைத் தேடுவர்.

சில ஆண்டுகளுக்குமுன், ஓர் அழகான குறும்படம் வெளியானது. இரு சிறுத்தைகளும் ஒரு மானும் இப்படத்தின் நாயகர்கள். இருசிறுத்தைகள், ஒரு மான் என்றதும், நம்மில் பலர், இந்தக் கதையின் முடிவை, ஏற்கனவே எழுதி முடித்திருப்போம். பாவம், அந்த மான். இரு சிறுத்தைகளும் அந்த மானை அடித்துக்கொன்று சாப்பிட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்திருப்போம். ஆனால், அக்காட்சியில் நாம் காண்பது, நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அவ்விரு சிறுத்தைகளும், மானும், அழகாக விளையாடுவதாக, அங்கு காட்டப்பட்டுள்ளது. அந்த அற்புத காட்சியின் இறுதியில், திரையில் தோன்றும் வரிகள் இவை: "மிருகங்களுக்குப் பசியில்லாதபோது, வன்முறையும் இல்லை. மனிதர்கள் மட்டும் ஏன் காரணம் ஏதுமின்றி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்?" என்ற கேள்வியுடன் அந்தக் குறும்படம் முடிவுறுகிறது.

பசி என்பது ஓர் அடிப்படைத் தேவை. அந்தத் தேவை நிறைவேறியபின், நாம் நிம்மதி அடைய வேண்டும். ஆனால், மனிதர்கள் நிறைவும், நிம்மதியும் அடைவதென்பது மிக, மிக, மிக அரிதாகிவிட்டது. நிம்மதி அடைவதற்குப் பதில், வேண்டும், இன்னும் வேண்டும் என்ற வெறியை நாம் வளர்த்துவருவதாலேயே, நாம், இத்தனைப் பிரச்சனைகளைச் சந்திக்கிறோம். தீராத வன்முறைப் பசியை இளையோரில் வளர்க்கும் சுயநலத் தலைவர்களை, இளையோர் விரைவில் அடையாளம் கண்டுகொள்வது, வருங்காலத்திற்கு நல்லது.

இன்றைய முதல் வாசகத்தில், பசியால் வாடும் இஸ்ரயேல் மக்கள், இறைவனுக்கும், மோசேக்கும் எதிராக முணுமுணுப்பதைக் காண்கிறோம். இறைவன் மோசே வழியாக அம்மக்களுக்குத் தரும் பதிலுரை இதுதான்:
விடுதலைப்பயண நூல் 16: 4
“இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.”

இறைவன் தந்த இக்கூற்றில், தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும் என்ற சொற்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. வாக்களிக்கப்பட்ட நாட்டில் வளமுடன் வாழ்வது எவ்வாறு என்பதைப்பற்றியப் பாடங்களை, இறைவன், பாலைநிலத்தில், தன் மக்களுக்குச் சொல்லித்தந்தார். சொல்லித்தந்த பாடங்களை அவர்கள் பயின்றனரா என்பதைப் பரிசோதிக்க, தேர்வும் வைத்தார். இம்மக்கள் தங்கள் தேவைகளை மட்டும் நிறைவுசெய்து வாழும் மக்களாக இருப்பார்களா, அல்லது, பேராசையால் அதிகம் சேர்த்துவைக்கும் மக்களாக இருப்பார்களா என்பதே, இறைவன் தந்த முதல் சோதனை. இச்சோதனையில் வென்றவரும் உண்டு, தோற்றவரும் உண்டு. அடுத்த நாளுக்குச் சேர்த்தவர்களின் உணவு, புழுவைத்து, நாற்றமெடுத்தது என்று, இதே 16ம் பிரிவின் பிற்பகுதியில் (வி.பயணம் 16:20) நாம் வாசிக்கிறோம்.

அன்றும் சரி, இன்றும் சரி... தேவைக்கும் அதிகமாகச் சேர்த்துவைப்பது, மனிதர்கள் மத்தியில் ஒரு நோயாக உருவெடுத்துள்ளது. சேர்த்துவைப்பதையே ஒரு நோய் என்று சொன்னால், மலைபோல் குவித்துவைப்பதை என்னென்று சொல்வது? குவித்துவைக்கும் தீராத நோயில் சிக்கித்தவிக்கும் பல நாட்டுத் தலைவர்களை, தலைவிகளைப் பற்றி நாம் கேள்விப்படும் செய்திகள் நம்மை வேதனையில் நிறைக்கின்றன. பல்லாயிரம் காலணிகளை, நகைகளை, புடவைகளைச் சேர்த்துவைத்த ஒரு தலைவி, பஞ்சு மெத்தையில், பஞ்சுக்குப் பதிலாக, பணக்கட்டுக்களைப் பதுக்கிவைத்திருந்த அரசியல் தலைவர், குளிக்கும் தொட்டியைத் தங்கத்தில் செய்திருந்த ஓர் அரசுத் தலைவர்... என்று, வரலாறு கூறும் இந்த பட்டியல், மிக நீளமானது. இத்தலைவர்களின் பேராசை நோயினால், நாட்டு மக்கள், முக்கியமாக வறியோர் அடையும் துன்பங்கள் ஏராளம்.

சேகரித்து வைக்கும் பேராசை நோய் பல்வேறு அளவுகளில் நம் ஒவ்வொருவரிலும் உள்ளது. இந்த நோயின் பக்கநோயாக இருப்பது, குறுக்கு வழியைத் தேடும் நோய். இந்த நோயைப்பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். தன்னைத் தேடிவந்த மக்களைப்பார்த்து இயேசு கூறும் சொற்கள், நாம் அனைவரும் குறுக்கு வழியை விரும்புகிறவர்கள் என்பதை நமக்கு நினைவுறுத்துகின்றன.
யோவான் நற்செய்தி 6: 24-26
“நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று இயேசு அன்று கூறிய எச்சரிக்கை, குறுக்கு வழிகளில் சுகம் தேடும் அனைவருக்கும் தரப்படும் எச்சரிக்கை. குறுக்கு வழிகள் என்ற மாயையையும், பேராசை வெறிகளையும் போக்குவதற்கு இயேசு சொல்லித்தரும் ஓர் அழகான வழி இதோ:
யோவான் நற்செய்தி 6: 27
அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்.
பேராசை வெறிகளைக் களைந்து, தேவைகளை மட்டும் தீர்த்துக்கொள்ளும் பக்குவத்தை நாம் பெறவும், நம் தேவைகளை இறைவன் தீர்ப்பார் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் இந்த ஞாயிறு வழிபாட்டில் உருக்கமாக மன்றாடுவோம். தேவைகளைப் பெருக்கி, பேராசை வெறியர்களாக நாம் மாறினால், ஆண்டவனை ஒதுக்கிவைத்துவிட்டு, அணுசக்திக்குக் கோவில் கட்டி கும்பிட வேண்டியிருக்கும், எச்சரிக்கை!!!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மறையுரை

இன்றைய நற்செய்தியில்‌ நம்‌ ஆண்டவர்‌ இயேசு தன்னுடைய அன்பால்‌ இனிய பண்பால்‌, பாசத்தால்‌, பல மக்களைத்‌ தன்‌ பக்கம்‌ அணைத்துக்‌ கொண்டார்‌. இயேசு சென்ற இடமெல்லாம்‌ மக்கள்‌ கூட்டமாய்‌ சென்றனர்‌. இயேசுவைத்‌ தேடி மலைப்பகுதிக்கு சென்றனர்‌. கூட்டமாய்‌ படகேறி அவரைப்‌ பார்க்கச் சென்றனர். பாலைநிலத்திற்குச்‌ சென்றனர்‌. கோவிலுக்குச்‌ சென்றனர்‌. எப்பொழுதும்‌ அவரைச்‌ சுற்றி கூட்டம்‌ நின்றுகொண்டிருந்தது. மூன்று காரணங்களுக்காக அவரை மக்கள்‌ மிகவும்‌ தேடினார்கள்‌.

1. முகத்தில்‌ அருள்‌ இருந்தது

இயேசுவின்‌ முகத்தைப்‌ பார்க்க மக்கள்‌ அதிக ஆசை கொண்டனர்‌. ஏனெனில்‌ அந்த முகம்‌ அருளால்‌ நிறைந்திருந்தது. பக்கத்தில்‌ போனால்‌ பாதுகாப்பு, பராமரிப்புக்‌ கிடைக்கும்‌ என்பதை அந்த முகம்‌ சொல்லிக்‌ கொண்டே இருந்தது. மாசுபடியாத அந்த முகம்‌ மகிழ்ச்சியை மட்டுமே உற்பத்தி செய்தது. யாரையும்‌ பார்த்து முறைக்காத முகம்‌. பளபளவென ஒளிவீசியது. மறுபடியும்‌ திரும்பத்‌ திரும்பப்‌ பார்க்க வேண்டும்‌ என்ற ஆசையை மக்களுக்குக்‌ கொடுத்தது அந்த முகம்‌. அருள்‌ நிறைந்த முகம்‌ அனைவருக்கும்‌ ஆசியை அள்ளி அள்ளிக்‌ கொடுத்தது.

உங்கள்‌ முகத்தைச் சிறிது நேரம்‌ கண்ணாடியில்‌ பாருங்கள்‌. உங்கள்‌ முகத்தை நீங்கள்‌ பார்ப்பதற்குப் பிடித்திருக்கிறதா ? அல்லது பார்ப்பதற்கே சகிக்கலையா ? இப்படி உங்கள்‌ முகத்தை அருள்‌ இல்லாமல்‌ மாற்றியது யார்‌ நீங்கள்தானே ? ஏன்‌ ? ஒரு புன்னகை கூட உங்கள்‌ முகத்தில்‌ தெரியவில்லையே?

ஒரு சிலருடைய முகத்தை நாம்‌ பார்ப்பதற்கு ஆசைப்படுவதில்லை. பயமாக இருக்கிறது. அகோரமாக இருக்கிறது. இருளாக இருக்கிறது. அதிகாரமாகத்‌ தெரிகிறது. உங்கள்‌ முகம்‌ எப்படி இருக்கிறது. வெளிச்சமும்‌, பிரகாசமும்‌ இருக்கிறதா ?

2. இதயத்தில்‌ ஈரம்‌ இருந்தது

இயேசு என்றால்‌ பரிவு, பாசம்‌, இரக்கம்‌, இனிமை, அன்பு, அரவணைப்பு, ஆறுதல்‌, அடைக்கலம்‌ என்று பொருள்‌. இதயம்‌ முழுவதும்‌ ஈரம்‌ இருந்தது. அந்த ஈரத்தால்‌ தன்னை நாடி வந்த அனைவரையும்‌ நனைத்தார்‌. பார்த்த எல்லாரையும்‌ அன்பினால்‌ அதிசயப்படுத்தினார்‌. இனிய பண்பினால்‌ பாடம்‌ புகட்டினார்‌.

கடைச்சங்கக்‌ காலத்தைச்‌ சார்ந்த குறுநில மன்னர்‌ பாரி. அவர்‌ மூவேந்தர்களை விடப்‌ பெரும்‌ புகழ்‌ பெறக்‌ காரணம்‌ அவரது கொடைத்‌ தன்மையே. கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்‌. இவர்‌ கடையேழு வள்ளல்களில்‌ ஒருவராகச்‌ சங்க இலக்கியத்தில்‌ போற்றப்படுபவர்‌.

வள்ளல்கள்‌ எல்லாரையும்‌ விட உயர்ந்தவராகப்‌ பாரியைத்‌ தமிழ்ச்‌ சான்றோர்கள்‌ போற்றுவர்‌. அதற்குக்‌ காரணம்‌, முல்லைக்‌ கொடிக்காகத்‌ தான்‌ ஊர்ந்து வந்த தேரை இந்தச் சிறப்பால்‌ வள்ளல்களிலேயே தலை சிறந்தவராகப்‌ போற்றப்படுகின்றார்‌.

உங்கள்‌ இதயம்‌ எப்படிப்பட்டது ? கல்லான இதயமா ? கனிவான இதயமா ? கனிவான இதயமே பலருக்குப்‌ பயன்படும்‌. ஈரமான இதயமே வெறுமையில்‌ தவிப்போருக்கு நிறைவைத்‌ தரும்‌. நல்ல இதயம்‌ ஒன்று தா என்‌ இயேசுவே இன்று எனக்குத்‌ தா எனக் கேட்டுப் பெற்றுக்கொள்வோம்‌.

3. நடையில்‌ நல்லது நடந்தது

திருத்தூதர் பணிகள்‌ 10:38 சொல்கிறது. "கடவுள்‌ நாசரேத்து இயேசுவின்மேல்‌ தூய ஆவியாரின்‌ வல்லமையைப்‌ பொழிந்தருளினார்‌. கடவுள்‌ அவரோடு இருந்ததால்‌ அலகையின்‌ கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும்‌ அவர்‌ விடுவித்து எங்கும்‌ நன்மை செய்து கொண்டே சென்றார்‌". அவர்‌ எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும்‌ பிறருக்கு நன்மை செய்வதற்காகவே. அவர்‌ கால்‌ பட்ட இடங்களில்‌ நன்மை நடந்தது. அவர்‌ நடை பல நன்மையான பாதிப்புகளை உருவாக்கியது. அந்த நடை சாதராண நடையல்ல. பலரை நல்வழிப்படுத்திய நடை. பலரை பக்குவப்படுத்திய நடை.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கீழானதை விடுத்தல்

‘உயரம் தாண்டுதல்’ விளையாட்டை நாம் விளையாடியிருப்போம், அல்லது பார்த்திருப்போம். ஒரு நீண்ட குச்சியை ஊன்றி உயரத்தைத் தாண்டுகிற ஒருவர் உயரத்துக்குச் சென்றவுடன் தான் சுமந்து சென்ற குச்சியை விட வேண்டும். அப்படி அவர் விடும்போதுதான் மற்ற பக்கத்திற்கு தாண்டிச் செல்ல முடியும். தான் பிடித்து ஏறிய குச்சியைப் பற்றிக்கொண்டே இருக்கிற நபர் தன் பக்கமே மீண்டும் விழுவார் அல்லது இலக்குக் குச்சியைத் தாண்டமாட்டார்.

‘நிறைவானது வரும்போது குறைவானது மறைந்துபோகும்’ என்கிறார் பவுல். குறைவானதை நாம் களையும்போதுதான் நிறைவானது நம்மை நிரப்பிக்கொள்ளும்.

தாழ்வானவற்றையும் கீழானவற்றையும் விடுத்து உயர்வானவற்றையும் மேலானவற்றையும் பற்றிக்கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் சூழல் இயேசுவைத் தேடிய மக்கள் கூட்டம். கடந்த வார நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்து கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக, ‘நானே வாழ்வுதரும் உணவு!’ என்னும் பேருரையை ஆற்றுகிறார் இயேசு. இந்தப் பேருரையின் தொடக்கப் பகுதியே இன்றைய நற்செய்தி வாசகம். திபேரியக் கடலின் கரையருகே உணவு உண்ட மக்கள் இயேசுவைத் தேடி கப்பர்நகூம் செல்கிறார்கள். தங்களுடைய உடலுக்கு உணவு தேடிச் சென்றவர்களுடைய உள்ளங்களைத் தம்மை நோக்கித் திருப்புகிறார் இயேசு.

‘ரபி, எப்போது இங்கு வந்தீர்?’ என்னும் கேள்வியோடு தொடங்குகிறது நிகழ்வு. ‘எப்போது’ என்பது நேரத்தைக் குறிப்பதாக இருந்தாலும், மனுவுருவான காலத்தைக் குறிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். ‘ரபி’ என்னும் அழைப்பு, இயேசுவை மக்கள் போதகர் என ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது. தொடர்ந்து, ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நீர் காட்டும் அறிகுறி என்ன?’ எனக் கேட்கிறார்கள் மக்கள். அவர்களுடைய முன்னோர் பாலைவனத்தில் உண்ட மன்னா என்னும் உணவை எடுத்துக்காட்டு அறிகுறியாக முன்மொழிகிறார்கள். இறுதியாக, ‘வாழ்வுதரும் உணவு நானே’ எனத் தன்னையே வெளிப்படுத்துகிறார் இயேசு.

வயிற்றுக்கான உணவு என்னும் தாழ்வான தேடலை விடுத்து, நிலையான வாழ்வுக்கான உணவை மக்கள் தேட வேண்டும். மன்னா என்னும் உணவு பாலைவனப் பயணத்தில் மட்டுமே பசிபோக்கியது. இயேசு என்னும் உணவோ வாழ்க்கை முழுவதும் பசி போக்கும் அல்லது பசி போக்கி வாழ்வைத் தரும்.

மூன்று நிலைகளில் ‘தாழ்வானதை’ விட்டு அவர்கள் நீங்க வேண்டும்? (அ) ‘ரபி’ (‘போதகர்’) என்னும் தலைப்பை விடுத்து இயேசுவை ‘நானே’ (‘யாவே’) என ஏற்றுக்கொள்ள வேண்டும். (ஆ) ‘உடலுக்கு உணவு’ என்னும் நிலையிலிருந்து எழும்பி, ‘ஆன்மாவுக்கு வாழ்வு’ என்னும் நிலைக்கு உயர வேண்டும். (இ) ‘அறிகுறி தேடுதல்’ என்னும் நிலை விடுத்து, ‘நம்பிக்கை கொள்தல்’ நிலைக்குச் செல்ல வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வியத்தகு முறையில் மன்னாவும் காடையும் வழங்குகிறார். எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் தாங்கள் பெற்ற விடுதலை வாழ்வை மறந்துவிட்டு, தாங்கள் அடிமைத்தனத்தில் உண்ட உணவை நினைவில் ஏற்று கடவுளுக்கு எதிராக முணுமுணுக்கிறார்கள். உணவா? விடுதலை வாழ்வா? என்று தங்களுக்குள் கேள்வியைக் கேட்டு, ‘உணவு’ ஒன்றே அவசியம் என்று முடிவுசெய்துகொள்கிறார்கள். ஆண்டவராகிய கடவுளிடம் சரணாகதி அடைவதை விடுத்து, பாரவோனிடம் மீண்டும் திரும்ப முயற்சி செய்கிறார்கள்.

செங்கடலைக் கடந்து அவர்கள் தொடர்கின்ற பயணத்தில் இன்று இரண்டாம் முறையாக முணுமுணுக்கின்றனர். முதலில், தண்ணீருக்காக அவர்கள் முணுமுணுத்தனர் (காண். விப 15:22-27). இரண்டாவது முணுமுணுப்பு முன்னதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள், எகிப்தில் நைல் நதியின் கரைகளில் விளைச்சலைக் கண்டு, அதன் நிறைவை உண்டவர்கள், இப்போது பாலைவனத்தின் குறைவையும், வெறுமையையும், பாதுகாப்பின்மையையும் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக மாறுகின்றனர். உணவுத் தேவை குறித்த அவர்களுடைய அங்கலாய்ப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், எகிப்தின் உணவே தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கை – ‘இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து’ – ஏற்புடையது அல்ல.

தங்கள் கற்பனையில் மட்டுமே இருந்த இறைச்சிப் பாத்திரத்தின் நிறைவின்மேல் விருப்பம் கொள்வதும், கானல் நீர் போலிருந்த அப்பத்தை உண்டு நிறைவுகொள்வதில் நாட்டம் கொள்வதும் எகிப்தில் அவர்கள் பட்ட அடிமைத்தனத்தின் நினைவுகளை மறைத்துவிட்டது. எகிப்தின் உணவுக்காக, தங்கள் ஆண்டவராகிய கடவுள் தந்த விடுதலையை மறந்துவிட்டு, மீண்டும் பாரவோனுக்கு அடிமைகளாகிட அவர்கள் விரும்பினர். கடவுள் அவர்கள் செய்த அனைத்தையும் அப்படியே துடைத்து எடுத்து தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்துவிடுவது போல இருந்தது அவர்களுடைய செயல். கடவுள் அவர்களுக்கு விடுதலை தந்தார், அதை இலவசமாகத் தந்தார். ஆனால், இப்போது அவர்கள் மீண்டும் அடிமைகளாக இருந்தனர். அதற்காக தங்கள் இன்னுயிரையும் விலையாகத் தர முயன்றனர். பாலைவனத்தில் நிலவிய உணவுப் பற்றாக்குறை கடவுளுடைய அரும்பெரும் செயல்களை மறந்துவிட அவர்களைத் தூண்டியது. மேலும், கடவுள் தங்களைத் தொடர்ந்து பராமரிப்பாரா? என்ற அவநம்பிக்கைநிறை கேள்வியையும் அவர்கள் உள்ளத்தில் எழுப்பியது.

அவர்கள் தங்கள் மனத்தளவில் எகிப்து நாட்டையே விரும்பி ஆண்டவருக்குத் துரோகம் செய்தாலும், ஆண்டவர் தன் பிரமாணிக்கம் மற்றும் பற்றுறுதிநிலையில் தவறவில்லை. முணுமுணுக்கும் அந்த மக்களுக்கு மன்னாவும் காடையும் வழங்குகின்றார். எபிரேயத்தில், ‘மன்னா’ என்றால், ‘அது என்ன?’ என்பது பொருள். பாலைவன மரங்கள் சுரத்த பிசின் போன்ற உணவு வகையே மன்னா. அதிகாலையில் மரத்தில் வடியும் அது மதிய வெயிலில் மறைந்து போகும். காடைகள் பாலைவனத்தை ஒரே வேகத்தில் கடக்க முடியாமல், சோர்வடைந்து ஆங்காங்கே தரையிறங்கி நின்று ஓய்வெடுக்கக்கூடியவை. இவற்றை உணவாகத் தந்ததன் வழியாக, கடவுள் இயற்கையின் வழியாக அவர்களுக்கு ஊட்டம் தருகின்றார்.

‘விண்ணகத்தின் கொடையான’ மன்னா அவர்களுக்கு தினமும் கிடைக்கும். அதைச் சேகரித்து வைக்கவோ, சேமித்து வைக்கவோ வேண்டாம் என்று கடவுள் அவர்களை எச்சரித்தார். ஓய்வுநாளுக்கு முந்திய நாள் மட்டும் அவர்கள் ஓய்வுநாளுக்காகச் சேமித்துக்கொள்ளலாம். இப்படியாக, அவர்கள் ஆண்டவராகிய கடவுளின் பராமரிப்புச் செயலில் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அத்தகைய பற்றுறுதியும் கீழ்ப்படிதலும் கடவுளின் மக்கள் கொள்ள வேண்டிய அடிப்படைப் பண்புகளாக இருந்தன. இப்படியாக, தங்களுடைய கற்பனை உணவையும், திட்டமிடுதலையும் விட்டு இறைவனின் விரலைப் பிடித்துக்கொண்டு அவர்கள் பயணம் செய்ய வேண்டியதாக இருந்தது. தொடர்ந்து அவர்களுக்கு உணவு கொடுத்ததன் வழியாக கடவுள் தன் மக்களுக்குப் பிரமாணிக்கமாக இருந்தார். ஆனால், மக்களோ உள்ளத்தில் உறுதியற்றவர்களாக இருந்தனர் – ஒரு பக்கம் ஆண்டவர் தரும் உணவையும் உண்டனர், இன்னொரு பக்கம் கருணையற்ற தங்களுடைய எகிப்தியத் தலைவர்களின் உணவின்மேலும் நாட்டம் கொண்டவர். ஆண்டவருக்கும் பாரவோனுக்கும் இடையே ஆடிக்கொண்டிருந்த ஊசல் போல இருந்தது அவர்களுடைய வாழ்க்கை.

இரண்டாம் வாசகம் (காண். எபே 4:17,20-24), இரண்டு வகையான வாழ்க்கை முறைகளை வேறுபடுத்திக் காட்டுகிறது: கிறிஸ்தவ முறை மற்றும் புறவினத்தார் முறை. இந்த இரண்டு முறைகளுக்கும் இடையே இருக்கின்ற தெரிவை எபேசிய நகரத் திருஅவைக்கு முன்மொழிகின்றார் பவுல். சமரசமற்ற ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றார். ‘இது அல்லது அது. இடைப்பட்டது எதுவும் இல்லை’ என்று நேரிடையாக அவர்களுக்குச் சவால் விடுகின்றார். புறவினத்து முறைமேல் உள்ள ஈர்ப்பை வெல்வது அவர்களின் அன்றாடப் போராட்டமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். பழைய வழிகளை விட்டுவிட்டு, தங்கள் மனப்பாங்கை அவர்கள் புதுப்பித்து, ‘கிறிஸ்துவை அணிந்துகொள்ள’ அழைக்கின்றார்.

நம் வாழ்வில் ஒவ்வொரு கட்டமும் கீழானதுக்கும் மேலானதுக்குமான இடையில் நின்று நாம் தெரிவை மேற்கொள்வது கட்டாயமாக இருக்கிறது. தள்ளிப்போடுதலுக்கும் வேலையைச் செய்வதற்குமான தெரிவு, உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுவதற்கும் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்குமான தெரிவு, அடிமைத்தனத்திற்கும் விடுதலை வாழ்வுக்குமான தெரிவு. ஒன்றைப் பற்றிக்கொண்டு மற்றதை விடுக்க வேண்டும். எப்படி?

(அ) தேர்ந்து தெளிதல். மேலானதைக் கீழானதலிருந்து வேறுபடுத்திப் பார்க்கும் முதிர்ச்சி.

(ஆ) பற்றிக்கொள்தல். எந்தவொரு சமரசமும் செய்யாமல் மேலானதைப் பற்றிக்கொள்தல்.

(இ) விடாமுயற்சி. மேலானதைப் பற்றிக்கொள்தலை ஒரு தொடர் செயல்பாடாகக் கொள்தல்.


‘ஆண்டவர் அவர்களுக்கு வானகத்து உணவை வழங்கினார்!’ எனப் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 78). மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லாலும் உயிர் வாழ்கிறார். அப்பம் நம் உடலுக்கு நிறைவு தருகிறது. ஆண்டவரின் சொல்லோ நம் ஆன்மாவுக்கு வாழ்வு தருகிறது. கீழானதை விடுத்து மேலானதைப் பற்றிக்கொள்தல் நலம்.

(ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி, அருள்பணியாளர்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் திருநாளைக் கொண்டாடுகிறோம். கடவுளிடம் மட்டுமே வேரூன்றி, மேய்ப்புப் பணியில் அக்கறை காட்டும் அருள்பணியாளர்களாக வாழ நாம் தூண்டப்படுவோமாக!)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ 18-ஆம்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (எசே. 16:2-4,12-15)

இஸ்ராயேல்‌ பிரமாணிக்கம்‌ அற்ற மணமகளாக இங்கே சித்தரிக்கப்படுகின்றாள்‌. இதைதான்‌ இறைவாக்கினர்கள்‌ எரேமியாவும்‌, ஓசாயாவும்‌ ஏற்கனவே முன்மொழிந்து உள்ளார்கள்‌. இந்த உருவகத்தின்‌ மூலம்‌ மக்களின்‌ முழுவரலாற்றையும்‌ எசேக்கியேல்‌ படம்பிடித்து காட்டுகின்றார்‌. இஸ்ராயேல்‌ மக்கள்‌ மற்ற கடவுளை வழிபடுவதின்‌ மூலம்‌ ஆன்மீக விபச்சாரத்தில்‌ ஈடுபட்டுள்ளதாகவும்‌, மற்ற சமய படிப்பினைகளின்படி பலிகளை மேற்கொள்வதன்‌ மூலம்‌ உடல்‌ ரீதியான விபச்சாரத்தில்‌ ஈடுபட்டூள்ளதாகவும்‌, மேலும்‌ வலிமைமிகு அரசர்களை தேடி சரண்‌ அடைந்ததால்‌ அரசியல்‌ விபச்சாரத்தில்‌ ஈடுபட்டுள்ளதாகவும்‌, அவர்களை இறைவாக்கினர்‌ குற்றம்‌ சாட்டுகின்றார்‌. இவ்வாறு இறைவாக்கினர்‌ இஸ்ராயேல்‌ மக்களை எச்சரிக்‌கின்றார்‌.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (எபி. 4:17,20-24)

இந்த பகுதியிலே இக்கடிதத்தின்‌ ஆசிரியர்‌ கிறிஸ்துவுக்குள்‌ புது வாழ்க்கை முறையை பற்றி விவரிக்கிறார்‌. புதிதாக மனம்‌ மாறிய அனைவரும்‌ எந்த காரணத்தை முன்னிட்டும்‌ பழைய நிலைமைக்கு திரும்ப கூடாது என்பதை கண்டிப்பாக கூறுகிறார்‌. இயேசு கிறிஸ்துவைப்‌ பின்பற்றும்‌ அனைவரும்‌ முழுமையாக மனமாற்றத்தைப்‌ பெற்றிருக்க வேண்டும்‌ என்பதை இரண்டு உருவகங்களின்‌ மூலம்‌ வலியுறுத்துகிறார்‌: இருளின்‌ செயல்பாடுகள்‌, ஒளியின்‌. செயல்பாடுகள்‌. இவை மனம்‌ மாறி புது வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்‌ என்ற கருத்தை எடுத்துக்‌ கூறுகின்றன. இந்த இரண்டு. உருவகங்கள்‌ திருமுழுக்கு வழிபாட்டு மன்றாட்டுகளிலிருந்து. எடுக்கப்பட்டவை ஆகும்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (யோவான்‌ 6:24-35)

மக்கள்‌ இயேசுவை தேடி கப்பர்நாகூமுக்கு வந்த போது இயேசு அவர்களிடம்‌ “நீங்கள்‌ அருள்‌ அடையாளங்களைக்‌ கண்டதால்‌ அல்ல மாறாக அப்பங்களை வயிறாக உண்டதால்தான்‌ என்னை தேடுகின்றீர்கள்‌ என்று உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்‌” என்றார்‌. (6:26) ஏனெனில்‌ அவர்கள்‌ இறைமகன்‌. இயேசுவை முழுமையாக. புரிந்து கொள்ளவில்லை. இன்றும்‌. உலகத்தில்‌ சுயநலத்திற்காக மதத்தைப்‌ பின்பற்றுபவர்கள்‌ இருக்கிறார்கள்‌. அழிந்து போகும்‌ உணவிற்காகவோ பொருட்களுக்‌'காகவோ நம்‌ வாழ்வை செலவிட வேண்டாம்‌ என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்‌. மாறாக நாம்‌ அனைவரும்‌ வாழ்வுதரும்‌ ஆன்மீக உணவிற்‌காக உழைக்க வேண்டும்‌. “வாழ்வு தரும்‌ செயல்‌ எது?” என்று மக்கள்‌ கேட்கும்‌ போது, இயேசு அவர்களிடம்‌ “கடவுள்‌ அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்‌” என்கிறார்‌. (6:29) இறைமகன்‌ இயேசுவை நாம்‌ உட்கொள்ள வேண்டுமென்றால்‌ அவர்‌ மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. இறைநம்பிக்கை என்பது கடவுள்‌ அனுப்பிய இறைமகன்‌ இயேசுவின்‌ மேல்‌ கொள்ளும்‌ நம்பிக்கையே ஆகும்‌.

அவரை தேடி வந்த மக்கள்‌ அவரை இறைவாக்கினர்‌ மோசே போலே நினைத்திருக்கலாம்‌. ஆனால்‌ இயேசு நற்கருணையின்‌ மகிமையை வலியறுத்துகின்றார்‌. மன்னாவையும்‌ விட சிறந்த வாழ்வு தரும்‌ உணவு தன்‌ உடல்‌ என்பதை மக்களுக்கு எடுத்துக்‌ கூறு- கிறார்‌. கடவுளால்‌ நாமனைவரும்‌ வாழ்வு பெறும்பொருட்டு வழங்கப்‌பட்ட உணவு, தனது உடலும்‌ இரத்தமும்‌ என்பதை உறுதியுடன்‌ கூறுகிறார்‌. எல்லாவற்றிற்கு மேலாக இறைமகன்‌ இயேசு தாமே. வாழ்வு தரும்‌ உணவு என்பதை வெளிப்படுத்துகிறார்‌. “வாழ்வு தரும்‌ உணவு நானே என்னிடம்‌ வருபவருக்குப்‌ பசியே இராது. என்னிடம்‌ நம்பிக்கைக்‌ கொள்பவர்க்கு என்றுமே தாகம்‌ இராது'”(6:35) இயேசுவின்‌ மீது நம்பிக்கைக்‌ கொண்டு நற்கருணையை உட்‌கொள்ளும்‌ அனைவரும்‌ வாழ்வு பெறுவர்‌.

மறையுரை

“உன்‌ கடவுளாகிய ஆண்டவர்‌ நாமே! நம்மைத்‌ தவிர வேறு. கடவுள்‌ இல்லாமல்‌ போவதாக”, இநத முதலாவது கட்டளையைக்‌ கேட்டவுடன்‌ நாம்‌ பலவகையாக எண்ணலாம்‌. முதலாவதாகவும்‌, இறுதியாகவும்‌. ஒரு கேள்வி மனதில்‌ எழலாம்‌. அதே கேள்விதான்‌ ஒரு பேராசிரியர்‌ மனதையும்‌ பாடாய்படுத்தியது. அவர்‌ ஒருநாள்‌ வயல்‌ வழியாக போய்க்கொண்டிருந்தபோது, வயலில்‌ மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு விவசாயிடம்‌, “கடவுள்‌ இருக்கிறாரா?” என்று கேட்டதற்கு, “அவர்‌ நிச்சயமாக இருக்கிறார்‌”. “அதற்கு. என்ன ஆதாரம்‌?” என்று பேராசிரியர்‌ மீண்டும்‌ கேட்டார்‌. விவசாயி சொன்னார்‌. “நான்‌ மேய்க்கின்ற மாட்டின்‌ நிறம்‌ கருப்பு. அது மேய்கின்ற புள்ளின்‌ நிறம்‌ பச்சை, அது தருகின்ற பாலின்‌ நிறம்‌ வெள்ளை. ஆகவே கடவுள்‌ இருக்கிறார்‌ என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம்‌ தேவை?” எனறு கேட்டார்‌. பேராசிரியர்‌ வாயடைத்து நின்றார்‌. கடவுள்‌ நம்முடன்‌ இருக்கின்றார்‌. அவர்‌ ஒருவரேக்‌ கடவுள்‌, என்பதை இன்றைய வாசகங்கள்‌ நமக்குத்‌ தெளிவைத்‌ தருகின்றன.

நாம்‌ அனைவரும்‌ ஒரே கடவுளின்‌ குழந்தைகளாய்‌ அவரையே நாம்‌ ஆராதிக்க வேண்டும்‌. நம்‌ ஒரே கடவுளையே நாம்‌ அணுகும்‌போது மூடநம்பிக்கைகளையும்‌, தேவையற்ற வழிபாடுகளையும்‌ நாம்‌ களைக்‌ கேட்டுள்ளார்‌. அதனை நாம்‌ நிறைவேற்றவில்லை என்றால்‌ நாம்‌ அவரைவிட்டு விலகிச்செல்கிறோம்‌. சுருக்கமாகச்‌ சொன்னால்‌ வாழ்வை இழந்து விடுவோம்‌.

நம்‌ கடவுள்‌ விடுதலையளிப்பார்‌

எசேக்கியேல்‌ இறைவாக்கினர்‌ இறைவன்‌ இஸ்ராயேலருக்கு அளித்த விடுதலையை ஒரு அருமையான 'உருவகத்துடன்‌ நமக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்‌. ஒரு தாயைப்‌ போல இறைவன்‌ அன்று அவர்களை வழிநடத்தியுள்ளார்‌. இஸ்ராயேல்‌ பிறந்த. அன்று தொப்புள்‌ கொடி அறுக்கப்படவில்லையாம்‌? நீராட்டப்பட்டு தூய்மையாக்கப்‌ படவில்லையாம்‌! உப்பு நீரில்‌ கழுவப்படவில்லையாம்‌! துணிகளால்‌ அகற்றப்படவில்லையாம்‌ ஆனால்‌ இறைவன்‌. அவர்களை நீராட்டி, அவர்கள்மேல்‌ இருந்த இரத்தத்தை துடைத்து. எண்ணெய்‌ பூசி அணிகலன்களால்‌ அவர்களை அழகு செய்தார்‌. அவரின்‌ மாட்சி அவர்கள்‌ மேல்‌ படச்‌ செய்து அவர்களின்‌ அழகு. நிறைவு பெற விளங்கிடச்‌ செய்தார்‌. என்ன ஒரு அருமையான இறைவன்‌. இஸ்ராயேல்‌ மக்கள்‌ கொடுத்து வைத்தவர்கள்‌. கடவுள்‌ தாமே இறங்கி வந்து அவர்களின்‌ அடிப்படைத்‌ தேவை முதல்‌ அனைத்துத்‌ தேவைகளையும்‌ பூர்த்தி செய்து தானும்‌ அவர்களின்‌ குடும்பத்தில்‌ ஒரு உறுப்பினராக இருந்து கூடவே வாழ்ந்து வந்தவர்‌.

இறைவன்‌ இஸ்ராயேல்‌ மக்களின்‌ அவல நிலையை உணர்ந்து அவர்களை அன்பு. செய்து. விடுதலை வழங்கினார்‌. நாம்‌ எத்தகையோராகவும்‌ இருக்கலாம்‌. ஆனால்‌ நம்‌ ஒரே இறைவனை அணுகினோம்‌ என்றால்‌ நாமும்‌ வாழ்வு பெறுவோம்‌. கடவுள்‌ பாரவோனைக்‌ கொல்லவில்லை. மாறாக இஸ்ராயேல்‌ மக்களுக்கு புது உலகைக்‌ கொடுத்தார்‌. தீமை இவ்வுலகில்‌. கொடி கட்டி பறக்கலாம்‌.. ஆனால்‌ நாம்‌ இறைவனை கண்டோமென்றால்‌ நாம்‌ கானான்‌ தேசம்‌ அடைவோம்‌. கடவுள்‌ என்றும்‌ மாறாதவர்‌. ஆனால்‌ அந்தோ பரிதாபம்‌! இஸ்ராயேல்‌ மக்கள்‌ இறைவனின்‌ அருளை உணர மறந்து தங்கள்‌ சொந்த பலத்தின்‌ மேல்‌ நம்பிக்கை கொண்டனர்‌. மார்தட்டிக்‌ கொண்டனர்‌. இறுதியாக கடவுளையும்‌ மறந்தார்கள்‌. விடுதலையின்‌ இறைவனை மறந்தார்கள்‌.

நம்‌ கடவுள்‌ வாழ்வின்‌ கடவுள்‌

நம்‌ கடவுள்‌ வாழ்வின்‌ கடவுள்‌. மனிதனின்‌ மனம்‌ பாவ வாழ்க்கையில்‌ கரையலாம்‌. கடவுளின்‌ மனம்‌ அன்பில்‌ கரையும்‌. அதனால்‌ என்னவோ நாம்‌ என்றும்‌ வாழ்வைக்‌ காண கிறிஸ்துவை நமக்குத்‌ தந்தார்‌. கிறிஸ்து நம்‌ அனைவருக்கும்‌ வாழ்வின்‌ நெறி- முறைகளை கற்றுத்‌ தந்தார்‌. தம்‌ வாழ்க்கையின்‌ மூலம்‌ நம்‌ அனைவரையும்‌ முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச்‌ சென்றுள்ளார்‌. இதையேதான்‌ இன்றைய இரண்டாம்‌ வாசகமும்‌ நற்செய்தியும்‌ நமக்கு அறிவுறுத்துகின்றது.

நாம்‌ நம்முடைய பழைய நடத்தையை மாற்றி தீமைகளால்‌ ஏமார்ந்து அழிவுறுவதைத்‌ தவிர்க்க வேண்டுமானால்‌ கடவுளது சாயலால்‌ படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து. கொள்ள வேண்டும்‌. நாம்‌ அனைவரும்‌ புதிய மனப்‌ பாங்குடன்‌. வாழ்கிறோம்‌. இறைவன்‌ நம்மோடு இருக்கிறார்‌ என்பதற்கு அத்தாட்சி நமது உண்மையான நீதியிலும்‌ தூய்மையிலும்‌ வெளிப்படும்‌.

நம்மைப்‌ படைத்த இறைவன்‌ அறிவுரை மட்டும்‌ கூறிவிட்டு வாழுங்கள்‌ என்று சொல்லவில்லை. மாறாக தன்‌ மகனையே நமக்கு வாழும்‌ போது. வருகின்ற இக்கட்டான சூழ்நிலைகளில்‌ மனம்‌ தளராமல்‌ தொடர்ந்து வெற்றிநடை போட தேவையான அருளையும்‌ சக்தியையும்‌ வழங்கும்‌ ஒரு உன்னதமான பரிசுதான்‌ இறைமகன்‌ இயேசுவின்‌ உடலும்‌ இரத்தமும்‌. உடலைப்‌ பேண பலவகையான உணவு முறைகளைக்‌ கையாளும்‌ நாம்‌ நம்‌ மனதைப்‌ பேண இறைமகன்‌ ஏசுவின்‌ உடலும்‌ இரத்தமும்‌ விலைமதிப்பற்ற உயரிய மூலமாகும்‌. நம்‌ இறைவன்‌ நம்மை என்றுமே கைவிடாதவர்‌. கடவுளைக்‌ காண விரும்பும்‌ எவரும்‌ புதிய மனநிலையுடன்‌ சமுதாயத்தில்‌ உலா வருகின்ற மனிதரைக்‌ கண்டு தெரிந்து கொள்ளட்டும்‌. அன்று இயேசுவைக்‌ கண்டு இவர்‌ உண்மையிலேயே கடவுளின்‌ மகன்‌ என பறைசாற்றிய உதடுகள்‌ போல்‌ நம்மையும்‌ உண்மை யிலேயே இவர்கள்‌ கடவுளின்‌ மக்கள்‌ என்று அனைவரும்‌ சாற்றுவர்‌.

நம்‌ கடவுள்‌ விடுதலையின்‌ கடவுள்‌ வாழ்வின்‌ கடவுள்‌. அவர்‌ ஒருவரை நாம்‌ அனைவரும்‌ வழிபடவேண்டும்‌. இல்லையேல்‌ இன்றைய முதல்‌ வாசகத்தில்‌ இறைவன்‌ இஸ்ராயேல்‌ மக்களைப்‌ பறைசாற்றுவது போல நம்மையும்‌ நோக்கி பறைசாற்றுவார்‌.. விடுதலையின்‌ கடவுள்‌ வாழ்வின்‌ கடவுளை நாம்‌ என்றுமே ஆராதிக்க வேண்டும்‌. அதுவே உண்மையான விசுவாசியின்‌ முதல்‌ அவரை நாம்‌ நம்‌ கடவுளாக ஏற்றுக்‌ கொள்கிறோம்‌ என்றால்‌. அவர்‌ நம்‌ மீட்பராக இருக்கிறார்‌. நம்‌ ஆராதனை நம்‌ முழு அர்ப்‌பணிப்பை காட்டுகிறது. அன்னை மரியாள்‌ போல்‌ நாம்‌ அனைவரும்‌ இறைவனின்‌ மேன்மையை உணர்ந்தவர்களாய்‌ போற்றிப்‌ புகழ்ந்து பாடுவோம்‌.

கடவுளுக்கும்‌ செல்வத்திற்கும்‌ நாம்‌ ஊழியம்‌ செய்ய செல்வத்தைப்‌ பின்‌ தொடர்ந்தால்‌ மரணம்‌ கிடைக்கும்‌. “எவ்வகைப்‌ பேராசைக்கும்‌ இடங்கொடாதவாறு எச்சரிக்கையாக இருங்கள்‌. மிகுதியான உரிமைகளைக்‌ கொண்டிருப்பதால்‌ ஒருவருக்கு வாழ்வு வந்து விடாது”. தீமைகள்‌ தலைவிரித்தாடக்‌ காரணம்‌ பொருளாசையே! “பொருளாசையினால்‌ சிலர்‌ விசுவாசத்தினின்று பிறிந்து திரிந்து பல சோதனைகளை தாங்களாகவே தங்கள்‌ மேல்‌ வருவித்துக்‌ கொள்கிறார்கள்‌.”(1திமோ. 6:10) வாழ்வு வேண்டுமென்‌-. நால்‌ ஒரே கடவுளை விசுவசிப்போம்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

1.அன்பே கடவுள்‌.
2.பொருளாசை அழிவின்‌ பிறப்பிடம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ - பதினெட்டாம்‌ ஞாயிறு

முதல் வாசகம் விப. 16:2-4:12-15

பாலைவனத்தில்‌ இஸ்ரயேலர்‌ இறைவனுக்கும்‌ மோயீசனுக்கும்‌ எதிராக முறுமுறுத்ததும்‌, இறைவன்‌ இவர்களுக்கு மன்னாவும்‌ காடைகளும்‌ அளித்ததும்‌ இன்றைய வாசகமாக அமைகிறது. இந்நிகழ்ச்சியிலே வெறும்‌ புதுமையைக்‌ காண்பதைவிட, இறைவன்‌ தம்‌ மக்களைக்‌ கண்ணும்‌ கருத்துமாய்க்‌ கண்காணிப்பவர்‌, பாதுகாத்து வழிநடத்துபவர்‌ என்பதை உணர்வது நல்லது. “மன்னா ' என்ற சொல்‌ மன்‌+ஹீ: “இது யாதோ?” என்று பொருள்படும்‌. இறைவனின்‌ கருணையைக்‌ கண்டு ஆச்சரியமுற்று மக்கள்‌ “மன்னா “மன்னா ' என்று கூறியதாகக்‌ கொள்ளலாம்‌!

இஸ்ரயேலர்‌ முறுமுறுப்பு

துன்பங்கள்‌ தொடர்ந்து வரும்போது “ஏன்‌? எது வரை? எவ்வளவு காலம்‌?” (காண்‌ : திபா. 12) என்பன போன்ற கேள்விகள்‌ எழுவது வழக்கமே. இஸ்ரயேலரும்‌ இதற்கு விதிவிலக்கன்று. பழைய காலத்தை எண்ணி வருந்துகின்றனர்‌. எகிப்து நகர அற்ப மகிழ்ச்சிகளை நினைத்து ஏங்குகின்றனர்‌. நமது வாழ்விலும்‌ இது எவ்வளவு உண்மை? ஒரு நொடிப்பொழுது துன்பம்‌ நம்மை எதிர்ப்படும்போது மனம்‌ தளர்கிறோம்‌, இறைவனுடைய நன்மைத்தனத்தில்‌ ஐயப்படுகிறோம்‌. ஏன்‌, சில வேளை இறைவனையே குறை கூறுகிறோம்‌. பழங்காலத்தை எண்ணி மனம்‌ வருந்துகிறோம்‌. உற்றுழி உதவுபவர்‌ இறைவன்‌ என்பதை மறந்து விடுகிறோம்‌. கணப்பொழுதுத்‌ துன்பத்தைப்‌ பெரிதுபடுத்துகிறோம்‌. “நீர்‌ போகும்போதும்‌ உள்ளே வரும்போதும்‌, இப்போதும்‌ எப்போதும்‌ ஆண்டவர்‌ உம்மைக்‌ காத்தருள்வார்‌' (திபா.121) என்பதை உணர்வதில்லை. இஸ்ரயேலருக்கும்‌ நமக்கும்‌ வேறுபாடு இல்லையே? “துன்பக்‌ கடலிடைத்‌ தோணித்‌ தொழில்‌ பூண்ட தொண்டர்‌ தம்மை இன்பக்‌ கரை முகந்து i ஏற்றும்‌... அன்பர்க்கு அணியன காண்க ஐயா தன்‌ அடித்தலமே”' (அப்பர்‌) என்பதை உணர்வோம்‌. “உச்சிமீது வானமே இடிந்து வீழ்ந்த போதினும்‌ I அச்சமில்லை” என்ற முறையிலே வாழ்வோம்‌.

இறைவன் பதில்

“பால்‌ நினைந்தூட்டும்‌ தாயினும்‌ சாலப்‌ பரிந்து” (திருவா) உதவிடுபவர்‌ நம்‌ இறைவன்‌, “பால்குடிக்கும்‌ தன்‌ மகவைத்‌ தாய்‌ மறப்பாளோ? கருத்தாங்கினவள்‌ தன்‌ பிள்ளைமீது இரக்கம்‌ காட்டாதிருப்பாளோ? இவர்கள்‌ மறந்திடினும்‌, நான்‌ உன்னை மறக்கவே மாட்டேன்‌” (எசா.49 : 14-16) என்று கூறியவர்‌ நம்‌ கடவுள்‌. தம்‌ பிள்ளைகளாகிய இஸ்ரயேலரின்‌ கூக்குரலைக்‌ கேட்டு இரங்குகிறார்‌. பசி தவிர்க்க மன்னாவும்‌ உருசியூட்டக்‌ காடைகளும்‌ அளிக்கிறார்‌. “தாயவளாய்த்‌ தந்தையாகிய நாயனார்‌ நம்‌ கடவுள்‌ (சுந்தரர்‌) என்பதை உணர்வோம்‌. தம்‌ மக்கள்‌ துயர்‌ கண்டு தாயாய்‌ வந்து உதவுபவர்‌ நம்‌ கடவுள்‌ என்பதை ஏற்போம்‌. புதுமை செய்தும்‌, பாவிகள்‌, பிணியாளர்‌, பசித்திருப்போருக்கு நல்வாழ்வு அளிப்பவர்‌ நம்‌ கடவுள்‌ என்பதை அறிவோம்‌. “கேளுங்கள்‌ கொடுக்கப்படும்‌" என்று கூறியவர்‌ மட்டுமன்று, கேட்பதைத்‌ தருபவர்‌ நம்‌ கடவுள்‌ என்பதை நம்புவோம்‌. நாம்‌ ஒடுக்கப்பட்ட வேளையிலே ஓடோடி வந்து நமக்கு உதவுபவர்‌ நம்‌ கடவுள்‌ என்பதைத்‌ தெளிவோம்‌. “தாய்‌ தன்னை அறியாத கன்று இல்லை; தன்‌ கன்றை தாயும்‌ அறியும்‌; உலகின்‌ தாய்‌, ஐய; நீ அறிதி எப்பொருளும்‌... வாராதே வரவல்லாய்‌'” (கம்பராமா) என்று செபிப்போம்‌.

அதேவேளையிலே, நாமும்‌ இவ்‌இறைப்பண்பை நமதாக்குவோம்‌. இல்லையென வந்தோருக்கு ஈந்தளிப்போம்‌; துன்பம்‌ என்று வந்தோர்‌ துயர்‌ களைவோம்‌; பசியென்று வந்தோருக்குப்‌ புசிக்கக்‌ கொடுப்போம்‌; அபயம்‌ என்று அலறுபவர்க்கு அடைக்கலம்‌ தருவோம்‌. “நான்‌ பசியாய்‌ இருந்தேன்‌, “நீங்கள்‌ எனக்கு உணவு கொடுக்கவில்லை ” (மத்‌. 25 : 42) என்று நம்மைப்‌ பற்றிக்‌ கூறப்படக்‌ கூடாத நிலையில்‌ நம்‌ வாழ்க்கையை அமைப்போம்‌.

(இதோ நாம்‌ உங்களுக்கு வானத்தினின்று அப்பங்கள்‌ பொழுவோம்‌.)

இரண்டாம் வாசகம்: எபே. 4:7.20-24

கிறிஸ்தவ வாழ்வு கிறிஸ்துவின்‌ வாழ்வு. கிறிஸ்தவர்கள்‌ கிறிஸ்து+அவர்கள்‌ என வாழவேண்டும்‌; கிறிஸ்துவுக்குள்‌ வாழ வேண்டும்‌. “புதியதொரு மனித இனமாகப்‌ படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார்‌ ' (எபே. 2 : 15); “புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள்‌” (4 : 24);“இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ள வேண்டும்‌” (உரோ. 13 : 14). இவையே இன்றைய வாசகக்‌ கருத்துக்கள்‌.

பழையன கழ்தல்‌

பழைய இயல்பு என்பது நம்‌ பாவ வாழ்வைக்‌ குறிக்கும்‌. கிறிஸ்துவை அறியாதார்‌, அவருடைய மதிப்பீடுகளைப்‌ பின்பற்றாதார்‌ -இன்னார்‌ கிறிஸ்தவர்களாயினும்‌ சரி, பிற சமயத்தினராயினும்‌ சரி- இவர்களது வாழ்க்கை பல சமயங்களில்‌ “கண்டதே காட்சி, கொண்டதே கோலம்‌” என்ற முறையில்‌ அமையலாம்‌. “இன்று உண்டு குடித்து மகிழ்வோம்‌; ஏனெனில்‌ நாளை நமதன்று” என்ற முறையில்‌ அமையலாம்‌. ஊனியல்பின்‌ இச்சைகளுக்கு ஏற்ப அமையலாம்‌ (கலா, 5 : 16 - 21). இவை அனைத்தும்‌ தூய ஆவியாரின்‌ உந்துதலுக்கு எதிரானவை. கிறிஸ்துவின்‌ போதனைகள்‌, மதிப்பீடுகளுக்கு மாறானவை. இவற்றைத்‌ தவிர்ப்பது நமது தலையாயக்‌ கடன்‌. “பொய்யினால்‌ மிடைந்த போர்வை புரைபுரை அருகி வீழ மெய்யனாய்‌ வாழமாட்டேன்‌... நீதியால்‌ வாழ மாட்டேன்‌, நீத்தலம்‌ தூயேன்‌ அல்லேன்‌, ஓதியும்‌ உணரமாட்டேன்‌, உன்னை உள்வைக்க மாட்டேன்‌, சோதியே சுடரே ' உதவிடு (அப்பர்‌) என்று நம்‌ கல்மனம்‌ கரைந்திட இறைவனிடம்‌ வேண்டுவோம்‌. வேண்டுதலோடு நின்று விடாது, பழைய பழக்கப்பட்ட, பாழ்படுத்தும்‌ பாவங்களை நம்மிடமிருந்து களைய முயற்சி செய்வோம்‌. முயற்சியுடையார்‌ இகழ்ச்சி அடையார்‌.

புதியன புகுதல்‌

புனிதம்‌ என்பது பாவத்தைக்‌ களைவதில்‌ மட்டுமன்று (separation), நேர்வழிப்படுத்துவது, அர்ச்சிப்பது என்பதிலும்‌ அடங்கும்‌ (Consecration). “தூயோராய்‌ இருங்கள்‌. ஏனெனில்‌ உங்கள்‌ கடவுளும்‌ ஆண்டவருமாகிய நான்‌ தூயவர்‌ (லேவி. 19 : 2) என்பது புதுவாழ்வுக்கு நமக்கு விடுக்கப்படும்‌ அழைப்பு எனலாம்‌. இப்புது வாழ்வை, புனித வாழ்வை இயேசு “உங்கள்‌ தந்தை இரக்கமுள்ளவராய்‌ இருப்பது போல நீங்களும்‌ இரக்கம்‌ உள்ளவர்களாய்‌ இருங்கள்‌ ” (லூக்‌. 6 : 36) என்பதன்‌ மூலம்‌ சுட்டிக்‌ காட்டுகிறார்‌. ஆம்‌, கிறிஸ்துவில்‌ புதுவாழ்வு என்பது கிறிஸ்து போதித்த, கிறிஸ்து வாழ்ந்து காட்டிய வாழ்வை நாமும்‌ வாழ்வதே. “நான்‌ உங்களிடம்‌ அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும்‌ ஒருவர்‌ மற்றவரிடம்‌ அன்பு கொண்டிருக்க வேண்டும்‌ என்பதே என்‌ கட்டளை” (யோ. 15 : 12; 13 : 34) என்பதே கிறிஸ்து நம்மை இப்புதுவாழ்வுக்கு அழைக்க விடுக்கும்‌ சவால்‌. “என்‌ ஆடுகளும்‌ என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக்‌ கொடுக்கிறேன்‌” (யோவான் 10 : 15) என்பதே அவரது வாழ்வுப்‌ படிப்பினை. அன்பு, சமாதானம்‌, நீதி இவைவழியே கிறிஸ்து தாம்‌ கடவுளின்‌ சாயல்‌ என்பதை வாழ்ந்து காட்டினார்‌. இவையே நமக்குப்‌ புதுவாழ்வு வழங்கும்‌ சாதனங்கள்‌. இவை புதுவாழ்வுச்‌ சாதனங்கள்‌ மட்டுமன்று, இப்புது வாழ்வு இயக்கிகளும்‌ ஆகும்‌. எனவே, தூய ஆவியாரின்‌ பலன்களான “அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம்‌, நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்‌ ' (கலா. 5 : 22) இவற்றில்‌ வளர முயற்சி செய்வோம்‌. அன்பு, சமத்துவம்‌, நீதி ஆகியவற்றை நம்மிலும்‌, பிறரிலும்‌ வளர்க்கும்‌ புத்துலகச் சிற்பிகளாவோமா? “முப்பது கோடி ஜனங்களின்‌ சங்கம்‌ முழுமைக்கும்‌ பொது உடைமை; ஒப்பிலாத சமுதாயம்‌ உலகத்துக்கொரு புதுமை” (பாரதி). இப்புதுமையை உலகுக்கு, ஊருக்குக்‌ கொணர்வதில்‌ நமது பங்கு என்ன?

(நீதியிலும்‌ புனிதத்திலும்‌ கடவுள்‌ சாயலாகப்‌ படைக்கப்பட்ட புதிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள்‌. )

நற்செய்தி: யோவான் 6:24-35

கப்பர்நகூம்‌ செபக்கூடத்தில்‌ இயேசு “உயிர்தரும்‌ உணவு” பற்றிப்‌ பேசியது இன்றைய வாசகம்‌. தன்னைப்பற்றி ஓர்‌ அருங்குறி காட்ட வேண்டும்‌ என்றோருக்கு, தானே அவ்‌அருங்குறி; தன்னை விசுவசிப்போர்‌ நிறைவாழ்வு கொள்வர்‌ என்று பதிலளிக்கிறார்‌.

அழிந்துது போகும்‌ உணவு

இஸ்ரயேலர்‌ பாலைவனத்தில்‌ மன்னாவை உண்டு தங்கள்‌ பசி தீர்த்தனர்‌. மன்னா உணவு உடற்பசியை மட்டுமே அடக்கியது. உள்ளப்‌ பசியை , இறைவன்‌ பால்‌ அன்புப்‌ பசியை அதனால்‌ அடக்கக்‌ கூடவில்லை. எனவே தான்‌, அவர்கள்‌ மேலும்‌ மேலும்‌ இறைவனிடம்‌ முறுமுறுத்தனர்‌; எகிப்திய அடிமைத்‌ தளைக்கும்‌, அது அளித்த நிலையற்ற சுகங்களுக்கும்‌ ஏங்கினர்‌. நமது வாழ்விலும்‌ இது உண்மைப்படும்‌. இறைவனைத்‌ தவிர்த்த, இறைவனுக்கெதிரான எந்த மகிழ்ச்சியும்‌ உண்மை மகிழ்ச்சியன்று. இவை யாவும்‌ இன்‌றிருந்து நாளை மறைவன. “காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா ' என்பதுபோல, இவ்வுலக இன்பங்கள்‌ காற்றில்‌ பதராய்‌ மறையக்‌ கூடியன; அழிந்து போகும்‌ உணவுக்கு ஒப்பாவன. எனவே “அசை வன்பாசம்‌ எய்தி அங்குற்றேன்‌ இங்குற்றேனாய்‌ ஊசலாட்டுண்டு வாளா உழந்து உழிதராமே... உன்தன்‌ பாதம்‌ ஏத்துமாறு அருள்‌ எம்மானே ' (அப்பர்‌) என்று வேண்டுவோம்‌. அழியும்‌ இன்பங்களில்‌ அமிழ்ந்து அழிந்துவிடாது நடக்க இறையருளை வேண்டுவோம்‌.

உயர்‌ தரும்‌ உணவு

மன்னாவை உண்டோர்‌ இறந்து மடிந்தனர்‌. ஏனெனில்‌ அது உண்மையான உணவன்று. ஆனால்‌ உண்மையான உணவு, உயிர்‌ தரும்‌ உணவு நமக்கு அருளப்படுகிறது. அதை நமக்களிப்பவர்‌ தந்தையே (6 : 33). கிறிஸ்துவே, அவரது சொற்களே, அவரது மதிப்பீடுகளே அவ்உண்மை உணவு ( 6 : 35).. அவர்‌ வானின்று இறங்கி வந்தவர்‌ ( 6 : 41). “தாகமாய்‌ இருப்பவர்களே, நீங்கள்‌ அனைவரும்‌ நீர்நிலைகளுக்கு வாருங்கள்‌; கையில்‌ பணமில்லாதவர்களே, நீங்களும்‌ வாருங்கள்‌ தானியத்தை வாங்கி உண்ணுங்கள்‌ ' (எசா. 55 : 1) என்று கூறப்பட்டது இவ்உயிரளிக்கும்‌ உணவு பற்றியே என்பது உணரற்பாலது. “வாழ்வு தரும்‌ உணவு நானே. என்னிடம்‌ வருபவருக்கு பசியே இராது; என்னிடம்‌ நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம்‌ இராது ” (யோ. 6 : 35) என்று இயேசு கூறுவதும்‌ இதுவே.

இயேசுவே இறைத்தந்தையின்‌ ஞானம்‌. “வாருங்கள்‌, நான்‌ தரும்‌ உணவை உண்ணுங்கள்‌; நான்‌ கலந்துவைத்துள்ள திராட்சை இரசத்தைப்‌ பருகுங்கள்‌ ” (நீமொ. 9 : 4 - 8) என்று ஞானம்‌ விடுக்கும்‌ அழைப்பையே இயேசுவும்‌ நமக்கு விடுக்கிறார்‌. அன்றாடம்‌ திருப்பலி வழி, விவிலிய வாசகங்கள்‌ வழி, பிறரன்பு வழி, காலத்தின்‌ சூழல்கள்‌ வழி இயேசுவே நம்மைத்‌ தம்‌ விருந்துக்கு அழைக்கிறார்‌. எனவே இயேசு தம்மையே அளிக்கும்‌ விருந்தினை அன்றாடம்‌ நாடுவோம்‌. அன்புச்‌ செயல்‌ புரிய, நீதிச் செயல்புரிய நாம்‌ அழைக்கப்படும்‌ போதெல்லாம்‌ இயேசுவின்‌ விருந்துக்குச்‌ செல்கிறோம்‌ என்பதை உணர்வோம்‌. சிறப்பாக அவருடைய வார்த்தை, அவரளித்த திவ்ய நற்கருணை நமது வாழ்வுக்கு வளமளிக்கும்‌ விருந்தாக அமையட்டும்‌. வேதாகம வாசகம்பால்‌, திவ்ய நற்கருணையின்பால்‌ நமது ஈடுபாடு என்ன?

நானே உயர்‌ தரும்‌ உணவு.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு

நிகழ்வு:

ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் பார்த்த இடங்களில் எல்லாம் மணல் தென்பட்ட காவிரி ஆறு இன்று கண்ணைப் பறிக்கும்வண்ணம் தண்ணீரால் நிரம்பி வழிகிறது. தடம் புரண்டு ஓடும் நீரின் ஓட்டம் ஆரம்பித்த இடம் நம் எல்லோரும் அறிந்தது போன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர உயர மதகுகள் திறக்கப்பட்டு பரந்து விரிந்த பூமியில் பக்குவமாய் வருகிறது நீர். இரண்டு நாட்களுக்கு முன்னால் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நிரம்புகிறது. எல்லா மதகுகளிலிருந்தும் தண்ணீர் திறந்து விடப் படுகிறது. தண்ணீர் வருவதற்கு முன் அங்கு நடமாடிய நாய் ஒன்று தண்ணீர் வருவதை கண்டு ஒரு பாறையின் மீது நிற்கிறது. நிற்கதியாய் மாறுகிறது. எங்கும் செல்ல முடியவில்லை. மூன்று நாட்களாக அதே இடத்தில் நிற்கிறது. சுற்றிலும் தண்ணீர், ஆனால் சுற்றி பார்த்தும் பயன் இல்லாமல் நாய் அங்கேயே அமர்கிறது. இதைப் பார்த்த சேலத்தைச் சார்ந்த சில இளைஞர்கள் ட்ரோன்; கேமிரா மூலமாகப் பிஸ்கட் மற்றும் பிடிகரி என்ற உணவையும் வைத்து அந்நாய்க்கு அருகில் அனுப்பினர். அதுவும் மகிழ்ச்சியாய் சாப்பிட்டது. அதன் பின் தீயணைப்புத் துறையினரிடம் தகவல் கொடுத்து மீட்டெடுக்க முயற்சித்தனர். தண்ணீரில் தவித்த அந்த வாய் பேச முடியா ஜீவனுக்கு உணவு அளித்த அந்த இளைஞர்களை மக்கள் சமூக வலைத்தளத்தில் வெகுவாய் பாராட்டுகிறார்கள். படைப்பின் மீது படைப்பின் உச்சமான மனிதன் இவ்வளவு கரிசணையோடு உணவு அளிக்கிறான் என்றால் படைத்தவன் இன்னும் அதிகமாய் உணவு அளிப்பார் அன்றோ!

இறைஇயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே!
ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிற்றுக்கிழமையில் அடியெடுத்து வைக்கும் நமக்கு இன்று இறைவன் அருமையான ஒரு செய்தியை வழங்குகின்றார். வாசிக்கப்பட்ட இறைவார்த்தைகளில் பின்னணியில் சிந்திக்கிறபொழுது இறைவன் தன்னையே உணவாக நமக்கு அளிக்கிறார். அத்தகைய உணவை உட்கொள்ளும் நாம் எத்தகையோராய் வாழ்கிறோம் என்பதை சிந்திக்க, தியானிக்க அழைப்பு விடுகிறது இன்றைய நாள் வழிபாடு.

முதல் வாசகத்தில்

எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அழைத்து வரப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மோசேயிடம் முறையீடுகிறார்கள். முறையீடுகிறார்கள் என்பதைவிட திட்டுகிறார்கள். பார்வோன் என்ற மன்னனின் அடிமைத்தளையிலிருந்து விடுவித்துச் செங்கடலில் கால் தண்ணீரில் நனையாதவண்ணம் மீட்டெடுத்த இறைவனின் மாபெரும் இரக்கப் பெருக்கை உணராத மக்கள், மிகப் பெரிய மீட்புச் செயலை இறைவன் நமக்காய் நிகழ்த்தியவர் என்றும், நம்மைக் காப்பாற்றியவர் என்கிற உள்ளார்ந்த தேடலும் நம்பிக்கையும் இல்லாத மக்கள் உணவிற்காய் மோசேயிடத்தில் கேட்கிறார்கள். விப 16:6 இல் மோசேயும், ஆரோனும் இணைந்து இவ்வாறு சொல்கிறார்கள்: “நீங்கள் எகிப்து நாட்டினின்று உங்களை வெளியேறச் செய்தவர் ஆண்டவர் தாமே என்பதை இன்று மாலையில் உணர்ந்து கொள்வீர்கள்”. அப்படியிருந்து அவர்கள் கொந்தளிக்கிறார்கள். அப்போதுதான் கடவுள் அவர்களுக்கு இறைச்சியையும், உணவையும் அளிக்கிறார். மாலையில் காடை வருகிறது. காலையில் மன்னாவைப் பொழிகிறார். மக்கள் ஆனந்தமாய் எடுக்கிறார்கள். உண்கிறார்கள். மனமகிழ்வு கொள்கிறார். மன்னா என்பது என்னவென்று அவர்களுக்குப் புரியவில்லை. மோசே சொல்கிறார்: “ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே”

இன்றைய நற்செய்தியிலும்கூட இயேசு ஒரு கேள்வியைக் கேட்கிறார். மக்கள் அனைவரும் எங்கே போனீர்கள் என்று கேட்கிறபொழுது, இயேசுவின் பதில் வித்தியாசமாய் இருக்கிறது. ஏன் வந்தீர்கள் என்றோ, ஏன் பின்வருகிறீர்கள் என்றோ, எங்களைத் தனியாக விடமாட்டீர்களா என்றோ கேட்கவில்லை. மாறாக, “நீங்கள் அருள் அடையாளங்களைக் கண்டதால் அல்ல. அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்” என்கிறார். சற்றும் மக்கள் எதிர்பார்க்காத பதில். ஏன் இயேசு இப்படி சொன்னார். நீங்கள் நான் கொடுத்த உணவை நோக்கி வருகிறீர்கள். ஆனால் நான்தான் அந்த உணவு என்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லையோ என்கிற எதார்த்தத்தை இயேசு மக்களிடத்தில் வழங்குகிறார். எனவேதான் மத் 28:20 இல் “இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களுடன் இருப்பேன்” என்று வாக்குறுதி கொடுத்து, வாழ்வு தரும் அப்பமாய் இயேசு இன்றும் நமக்கு உணவளிக்கிறார். யோவான் 6:51 இல் நாம் காண்பது போன்று “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. என்னை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்” என்று வாழ்வின் அப்பமாய் தன்னை வெளிப்படுத்துகிறார். அதுமட்டுமல்லாமல் மத்தேயு 26: 26 இல் “ இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, ‘இதைப் பெற்று உண்ணுங்கள். இது எனது உடல்” என்று தன்னையே உணவாக இயேசு கொடுக்கிறார். இயேசுவின் பிறப்பிலேயே நாம் பார்க்கலாம். அவரின் பிறப்பு பெத்லகேமில் நடக்கிறது. மாட்டுத் தொழுவத்தில் பிறக்கிறார். பிள்ளையைத் துணிகளால் சுற்றி தீவனத்தொட்டில் கிடத்திருப்பார்கள். இதுவே உங்களுக்கு அடையாளம் என்று இடையர்களுக்குச் சொல்லப்படுகிறது. இது எதன் அடையாளம் - பெத்லகேம் என்றால் அப்பத்தின் வீடு என்று பொருள். ஆக இயேசு இவ்வுலகத்தின் உணவாய் வந்திருக்கிறார் என்பதே அதன் பொருள். எனவேதான் இயேசு வாழ்வு தரும் உணவாய் இன்று நமக்கு வருகிறார். நம்முடைய கத்தோலிக்க திருஅவையில் இரண்டு விதமான உணவு அளிக்கப்படுகிறது. குறிப்பாகச் செபங்களில் எல்லாம் உயர்ந்த செபமாய் பார்க்கப்படுகின்ற திருப்பலியில் இரு உணவை இறைவன் நமக்குத் தருகிறார். ஒன்று முதலில் வார்த்தை பிட்டு கொடுக்கப்படுகிறது. இரண்டாவது உடல் பிட்டு கொடுக்கப்படுகிறது. வார்த்தையான உணவும், வாழ்வாகிய உணவும் இயேசுவால் நமக்கு வழங்கப்படுகிறது. இதை நாம் பக்தியோடும், தகுந்த மனநிலையோடும் வாங்க முன்வர வேண்டும். ஏனோ தானோவென்று, கை வீசு அம்மா கை வீசு என்றோ, மிட்டாய் வாங்குவது போலவோ வாங்குவதை நிறுத்திக் கொள்வது நாம் கடவுளுக்குக் கொடுக்கும் மரியாதை ஆகும்.

இவ்வளவு தூரம் இறைவன் தன்னை உணவாய் கொடுத்து நமக்கு உயிர் அளிக்கிறார் என்றால் என்னிடம் இயேசு என்ன எதிர்பார்க்கிறார். உணவின் வழியாய் இறைவன் உணர்த்தும் இறைச்சிந்தனை என்ன? இறைவன் வழங்க விரும்புகின்ற வாழ்வியல் சிந்தனைகள் என்னென்ன?

உணவு – உடனிருப்பின் அடையாளம்

இயேசு தன்னை இன்று உணவாய் வழங்கிறார் என்றால் அவர் நம்மோடு என்றும் வாழ்கிறார் என்கிற புரிதலை நமக்கு வழங்குகின்றார். இது எதற்காக என்றால் நாமும் அவரோடு மட்டுமே வாழ வேண்டுமென்ற உச்சக்கட்ட நம்பிக்கை வாழ்வைக் கொடுக்கிறது. விப 13:21 இல் இறைவன் இஸ்ரயேல் மக்களுக்குப் பகலில் மேகத்தூணாகவும், இரவில் நெருப்புத் தூணாகவும் இருந்து தன் உடனிருப்பை வழங்கியது போன்று, நாளும் பொழுதும் இறைவன் நமக்கான உடனிருப்பை உறுதி செய்வதுதான் நற்கருணை என்ற உணவின் மையம். அவ்வுணவை உட்கொள்ளும் பொழுதெல்லாம் இறைவன் என்னுடன் இருக்கிறார் என்கிற நம்பிக்கை நம்மில் உதிக்க வேண்டும்

.

உணவு – தேடலின் அடையாளம்

இயேசுவை முதலில் உடல் பசிக்காய் தேடியவர்கள் இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, ஆன்மப் பசிக்காய், உள்ளார்ந்த தேடலுக்கான விதைகளாய் மாறுகிறார்கள். எனவேதான் யோவா 6:34 இல் “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் என்று கேட்டுக்கொண்டார்கள்” என்று பார்க்கிறோம். இது எதன் மையம் என்றால் தேடலின் விளைவு. உண்மையான ஆன்மிகப் பசியை அவர்கள் பெற்றதால், உடலைக் கடந்து ஆன்மாவிற்கான தேடலைத் தொடர்ந்ததால் அவர்கள் இறைவுணவால் வாழ்விக்கப்பட்டனர். எனவே நற்கருணையை தேடுவோர் நிச்சயம் வாழ்வைப் பெறுவார்கள்.

உணவு – புதிய வாழ்வின் அடையாளம்:

மக்கள் அனைவரும் அறிந்திராத மன்னாவால் உண்பிக்கப்படும் வரை அவர்கள் பழைய வாழ்வின் சுவட்டில்தான் நடந்தார்கள். எனவேதான் அழைத்த இறைவனை மறந்து அடிமைப்பட்ட பார்வோனை நினைத்தார்கள். ஆனால் எப்போது இறைவன் மன்னாவை – உணவை வழங்கினாரோ அப்போது அவர்கள் புதிய வாழ்வின் அடையாளத்தைப் பெறுகிறார்கள். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் மிக அழகாய் எடுத்துரைக்கிறது. எபே 4: 22 இல் “எனவே உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்து விடுங்கள்” என்று வாசிக்கக்கின்றோம். மேலும் ‘ புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள்’ என்றும் புனித பவுல் அடியார் நமக்கு பறைசாற்றுகிறார். அப்படியென்றால் பழையவற்றை நீக்கிப் புதிய இயல்பை, புதிய வாழ்வை நற்கருணை நமக்குத் தருகிறது. இதை எப்படி உணரலாம் என்றால் நாம் செய்யும் ஒப்புரவின் வழியாய் அறியலாம். நற்கருணையை எவ்வாறு வாங்க வேண்டுமென்று 1கொரி 11:27 இல் பார்க்கிறோம். “எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்” என்று சொல்லப்படுகிறது. நற்கருணை – புதிய வாழ்வின் அடையாளமாய் இறைவன் தருகிறார். பழைய வாழ்வைக் களைந்துவிட்டு புதிய வாழ்வை நோக்கிப் பயணிப்போம்.

இவ்வாறாய் இறைவன் தன்னை உணவாக அளிக்கிறார். அதை உடனிருப்பாய், உறவின் தேடலாய், உண்மையான புதிய வாழ்வின் அடையமாய் கொடுக்கிறார். சிந்திப்போம். தொடர்ந்து செபிப்போம். இறைவனே நமக்கு உணவளிக்கிறார் என்கிற உயர்ந்த நம்பிக்கையோடு நாளும் பயணிப்போம்! ஆமென்

.

“ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்” (திபா 78: 24)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு ser