மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலத்தின் 14ஆம் ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-எசேக்கியேல் 2:23-24: | 2 கொரிந்தியர் 12:7-10 | மாற்கு 6:1-6

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



உன்னை அழைக்கிறார்.

1993-ஆம் ஆண்டிலே நம் பாரத பூமியிலே மகாராஸ்டிரா மாநிலத்தில் லாத்தூர் என்ற மாவட்டத்தில் நடந்த பூகம்பம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. 50,000-க்கு மேற்பட்ட மக்கள் உயிர் இழந்தார்கள். மரங்கள் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு எல்லாம் சுடுகாடாய் மாறிய சம்பவம் நம்மை எல்லாம் அதிர வைத்தது. மக்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் அதிகாலை நேரம். அந்த நேரத்தில் பூமியானது அதிர்ந்தது, பிளந்தது, மக்கள் மடிந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு கோர நிகழ்ச்சி நடக்கும் என்று மட்டும் அவர்கள் தெரிந்து அல்லது உணர்ந்து இருப்பார்கள் என்றால் ஒரு வேளை விழிப்போடு காத்திருந்து தங்கள் உயிரையாவது காப்பாற்றி இருக்கலாம். இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடக்கும் என்றும் அங்கும் இங்கும் வதந்திகள் பரவின. முன் அறிவிப்புக்களும் தரப்பட்டன. ஆனால் அவைகள் எல்லாம் இவர்களின் உணர்வுக்கு எட்டவில்லை. இப்படிப்பட்ட நிகழ்ச்சி இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இன்று நடப்பவை.

மனிதன் கடந்த கால நிகழ்ச்சி பற்றிக் கவலை கொள்வதில்லை. இன்றைய நிகழ்ச்சியும் இவனது கவனத்தில் இடம் பெறுவதில்லை. நாளைய வாழ்வு எனக்கு எப்படி இருக்கும் என ஆவலோடு நோக்குகிறான். வான நட்சத்திரங்கள் என்ன சொல்லுகின்றன? என் கைரேகையில் எனக்கு என்ன எழுதியுள்ளது? இந்த சோசியன் என்ன சொல்லுகிறான்? இந்தப் பறவை, கிளி எடுக்கும் பகுதியில் என்ன எழுதியுள்ளது என்று படித்தவனும் சரி, படியாதவனும் சரி இன்று தேடும் படலம் குறைந்தபாடில்லை. இப்படிப்பட்ட சோசியங்கள் எல்லாம் வாழ்வின் நிகழ்ச்சிகளோடு முழுமையாக நிறைவு பெறுவதில்லை.

ஆம் அன்புக்குரியவர்களே! எதிர்காலம் எனக்கு எப்படி இருக்கும் என அறிய ஆசிக்கிறீர்களா? இதற்குத் தகுந்த பதில் தருவதுதான் விவிலியம். பழைய ஏற்பாட்டில் எத்தனையோ இறைவாக்கினர்கள் தோன்றினார்கள். இன்றைய வார்த்தை வழிபாட்டிலே தரப்பட்டிருப்பதுபோல, எசேக்கியேல் என்பவரும் ஓர் இறைவாக்கினர்தான். இந்த இறைவாக்கினர்கள் எல்லாம் இறைவனுக்கும் மக்களுக்கும் பாலமாக வாழ்வைக் கட்டி எழுப்பும் கலைஞர்களாக இருந்தார்கள். காலத்தின் குறிகளைச் சரியாகக் கணக்கிட்டு இறைவனின் குரலுக்குச் செவிமடுத்தார்கள். வீரத்தோடும் மனபலத்தோடும் மக்களிடம் எடுத்துரைத்தார்கள். மக்களின் கடின உள்ளத்தைக் கடிந்துகொண்டார்கள். மக்களின் இன்ப துன்பத்தில் பங்கெடுத்தார்கள். நீதிக்கும், உண்மைக்கும் சான்றாகத் திகழ்ந்தார்கள். இதனால் உலகம் இவர்களை வெறுத்தது. ஆனால் யாருக்கு அழிவு? பூமியானது அதிரும் என்று கூறியவர்களுக்கா? அல்லது ஆழ்ந்த நித்திரையில் இருந்தவர்களுக்கா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாசரேத் என்ற சிற்றூரிலே மனிதனாகத் தோன்றினார் இயேசு என்ற நாமம் கொண்ட இந்தப் பெரிய இறைவாக்கினர். இறைவாக்கினர்கள் எல்லாம் இவரைப் பற்றித்தான் முன் அறிவித்தார்கள். மனிதனை இறைமயமாக்க மனிதனாகத் தோன்றினார். வீரத்தோடு போதித்தார். உண்மைக்குச் சான்று பகர்ந்தார். இருட்டடிப்பு வாழ்க்கை நடத்தும் பணக்காரர், பதவிக்காரர், அதிகாரம் படைத்தோர், உயர்ந்தோர் எனத் தன்னையே உயர்த்திய தன்னலவாதிகள் அனைவரையும் சாடினார். அவரது ஞானத்தைக் கண்டு வியந்தது ஒரு மக்கள் கூட்டம். ஆனால் உண்மையை ஏற்க மறுத்த கூட்டத்திற்கு இயேசு தடைக்கல் ஆனார். இதைப் பற்றித்தான் மாற்கு நற்செய்தியிலே 6ஆம் அதிகாரத்திலே ஒன்று முதல் 6 வசனங்கள் அழகாக விவரிக்கின்றன. வாசித்துப் பாருங்கள். உலகம் வாழ்வு பெறத் தன்னையே பலியாக்கியவர் இந்த இயேசு பெருமான்.

இன்றைய திருவார்த்தைக்குச் செவிமடுக்கும் நண்பனே! உன்னிடம் இன்று ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். இறைவன் உன்னை அழைக்கலாம். எதற்காக? ஒரு இறைவாக்கினராக! இத்தகைய அழைப்புக்கு நீ உரியவன் என்றால் நீ தயார்தானா? உண்மைக்கு, நீதிக்குச் சான்று பகர நீ தயார்தானா?

இறைவன் தன் அன்பை உன் மூலமாக மக்களுக்குத் தர விரும்பினால் அதை மறுக்காதே! மறுத்தால் உன் வாழ்வில் மாபெரும் கொடையை இழந்து நிற்பாய்! நீ ஒரு இறைவாக்கினராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேவன் உன்னை இறைவாக்கினரின் குரலுக்குச் செவிமடுக்க அழைக்கலாம். உன் இருண்ட வாழ்வில் இருந்து உன்னை ஒளிமிக்க வாழ்வுக்குக் கொண்டு வர அழைக்கலாம். அசட்டையாக இராதே! காலமும் தாழ்த்தாதே! லாத்தூர் மாவட்டத்தில் நடந்த பூகம்பத்தை உன் நினைவுக்குக் கொண்டு வா! உலக வாழ்வை அதன் இன்பத்தைக் கண்டு மதி மயங்கி ஆழ்ந்த நித்திரையில் இருந்துவிடாதே. இறைவன் உன்னை இன்று அழைக்கிறார் எதற்காக? நாம் பரிசுத்தராய் இருப்பதுபோல நீங்களும் இருங்கள் (1 பேதுரு 1:15. 16) என்று புனித பேதுரு மூலமாக அறிவிக்கும் செய்திக்குச் செவிமடுப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

எது அர்த்தமுள்ள வழிபாடு?

இயேசுவின் காலத்தில் அவரைப் பார்த்து எத்தனையோ பேர் ஆச்சரியப்பட்டார்கள்.

இயேசு அப்பங்களைப் பலுகச் செய்தபோது (யோவா 6:1-13) மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

இயேசு நோயாளிகளைக் குணமாக்கியபோது (மத் 9:27-31) மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

இயேசு ஊமைகளைப் பேசவைத்தபோதும் (மத் 9:32-33), முடவர்களை நடக்க வைத்தபோதும் (மத் 9:1-7), பாவங்களை மன்னித்தபோதும் (லூக் 7:36-50), பேய்களை ஓட்டியபோதும் (மாற் 1:21-28), இறந்தவர்களை உயிர்ப்பித்தபோதும் (யோவா 11:1-44) மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

ஆனால் இப்படி ஆச்சரியப்பட்டவர்கள் அத்தனை பேரின் வாழ்விலும் இயேசு புதுமை செய்யவில்லை. யார் யார் இயேசுவை ஆண்டவராக, கடவுளாக ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் வாழ்க்கையில் மட்டும்தான் அற்புதங்கள் புரிந்தார்.

இன்றைய நற்செய்தியிலே நாசரேத்து மக்கள் இயேசுவைப் பார்த்து ஆச்சரியப்படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் அவரைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள பலர் மறுத்ததால் அங்கே அவர் அதிகமான புதுமைகளை நிகழ்த்தவில்லை.

இயேசுவின் மீது நம்பிக்கை வைக்காதது மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டு மக்களின் குணம் படைத்தவர்களாய் (முதல் வாசகம்) அவரைக் கொலை செய்யவும் நாசரேத்து மக்கள் துணிந்தார்கள் (லூக் 4:28-30). இயேசுவைக் கண்டு மக்கள் வியப்புற்றார்கள்; இயேசுவோ அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு வியப்புற்றார் (மாற் 6:6அ).

நாமெல்லாம் இயேசுவைக் கடவுளாக ஏற்றுக்கொள்கின்றவர்கள்தான்! ஆனால் இன்னலிலும், நெருக்கடியிலும் நாம் தத்தளித்துத் தடுமாறும்போது இயேசுவைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றோம்.

கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பிய ஒருவர் தனது விருப்பத்தை அவரது கிறிஸ்தவ நண்பரிடம் தெரிவித்தார். அவரது நண்பர் அவரை கோயிலுக்கு அழைத்துச்சென்று சிலுவையிலே தொங்குகின்ற இயேசுவை சுட்டிக்காட்டி, இவர்தான் நீ வழிபட விரும்பும் இயேசு என்றார். அவரது நண்பரோ அதிர்ச்சி அடைந்து, இயேசுவுக்கே இந்தக் கதி என்றால், எனக்கு என்னென்ன நேருமோ! இப்படி சிலுவையிலே இறந்து கிடக்கும் இயேசுவை வழிபட நான் விரும்பவில்லை என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

புனித பவுலடிகளாரைப் போல கிறிஸ்துவோடு (இரண்டாம் வாசகம்) பாடுபடத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே இயேசுவை ஆண்டவராகவும் கடவுளாகவும் ஏற்றுக்கொள்ள முடியும். அவர்கள் வாழ்வில் மட்டுமே புதுமைகள் நடக்கும்.

இதுவே நமது செபமாக இருக்கட்டும்: இயேசுவே! உம்மீது நாங்கள் கொண்டிருக்கும் பக்தி முழுமையானதாக அமைய, எங்கள் வழிபாடு அர்த்தமுள்ளதாக அமைய, எங்கள் நம்பிக்கையை விசாலப்படுத்தும். உம்மைப் பெரிய இறைவாக்கினராக மட்டுமல்ல, இறைவனாகவும் ஏற்று வாழ வரம் தாரும். ஆமென்.

மேலும் அறிவோம் :

கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (குறள் : 2).

பொருள் : நூல்கள் பலவற்றைக் கற்று அறிஞராக விளங்குபவர், தூய தத்துவப் பேரறிஞனாகிய இறைவனது திருவடிகளைத் தொழுது பயன்பெற வேண்டும். அத்தகைய பணிவு இல்லையென்றால் கல்வியறிவால் உரிய பயன் கிடைக்காது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஓர் இறைவாக்கினராகவோ மெசியாவாகவோ ஏற்க மறுத்தனர்

ஒரு கிராமத்திற்கு அருகில் 'சர்க்கஸ்' நடந்து கொண்டிருந்தது. 'சர்க்கஸ்' கூடாரம் ஒருநாள் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. அந்த 'சர்க்கஸில்' கோமாளியாக நடித்தவன் ஊருக்குள் ஓடி வந்து, தீயை அணைக்கும்படி ஊர் மக்களைக் கெஞ்சிக் கேட்டான். ஆனால் அவ்வூர் மக்கள் அவனை நம்ப மறுத்தனர். அந்தக் குள்ளன் தங்களை ஏமாற்றுவதாக நினைத்தனர். சிறிது நேரத்தில் தீயானது ஊருக்குள் பரவி, ஊரில் பெரும்பகுதியை எரித்துவிட்டது. அவ்வூர் மக்கள் கோமாளியின் வெளித்தோற்றத்தை வைத்து அவனை எடைபோட்டதால் ஏமாந்தனர்.

ஒருவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு அவரை ஏளனம் செய்யலாகாது. ஏனெனில், அவர் மாபெரும் தேரிலே சிறிய அச்சாணி போன்று இருக்கலாம், பிரமாண்டமான தேரும் அச்சாணி இல்லாமல் முச்சாணும் ஓடாது. இது வள்ளுவரின் வாய்மொழி.

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து" (குறள் 667)

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து தம் சொந்த ஊராகிய நாசரேத்தில், ஓய்வு நாளன்று, தொழுகைக் கூடத்தில் மக்களுக்குப் போதிக்கிறார், அவரது போதனையைக் கேட்ட மக்கள் வியப்படைந்த போதிலும், அவர்கள் அவரை ஓர் இறைவாக்கினராகவோ மெசியாவாகவோ ஏற்க மறுத்தனர், ஏனெனில் அவர் ஒரு தச்சர்: அவருக்குப் படிப்போ, பட்டமோ, பதவியோ ஏதுமில்லை, அவரது உறவினர்களும் சாமானிய மக்கள்.

நாசரேத்தூர் இயேசுதான் மெசியா என்று பிலிப்பு நத்தானியேலிடம் கூறியபோது, "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமா?" (யோவா 1:46) அன்று அவர் ஏளனமாகக் கேட்டார். இயேசுவின் ஊரை வைத்து அவரை எடைபோட்டார் நத்தானியேல்.

"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" (குறள் 355)

என்ற உண்மையை மறந்துவிட்டார் அவர்,
கடவுளுடைய எண்ணங்களும் வழிமுறைகளும் மனிதருடைய எண்ணங்களிலிருந்தும் வழிமுறைகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவை (எசா 55:8-9). மேலும், மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; கடவுளோ அகத்தைப் பார்க்கின்றார் (1சாமு 16:13). மக்களுக்கு முன்பாகத் தங்களை நேர்மையாளர்களாகக் காட்டிக் கொண்ட பரிசேயர்கள் கடவுளின் பார்வையில் அருவருப்புக்குரியவர்கள் (லூக் 16:14).

கலக்காரர்களும் வணங்காக்கழுத்தினரும் கடின இதயம் கொண்டவர்களுமான இஸ்ரயேல் மக்களுக்கு, அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும், இறைவாக்கு உரைக்கும்படி கடவுள் எசேக்கியேலை இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறார் (எசே 2:2-5) இறைவன் பெயரால் இறைவாக்குரைப்பது இறைவாக்கினரின் கடமை. அதை ஏற்பதும் ஏற்காதிருப்பதும் மக்களைப் பொறுத்தது. நாற்பது ஆண்டுகளாக இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் கடவுளுடைய குரலைக் கேட்டும் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டனர் (திபா 95:8-10).

இருப்பினும், கடவுள் தாம் பேசுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. முற்காலத்தில் முன்னோர்களிடம் இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய கடவுள், இறுதியாகத் தம் மகன் வாயிலாகப் பேசினார் (எபி 1:1). ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடவுள் மகன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்குரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை " (யோவா 1:11), ஏனெனில், அவர்கள் அவரை ஊனக்கண்கொண்டு. அதாவது, மனித முறையில் பார்த்தனர்; எடைபோட்டனர்: புறக்கணத்தனர்.

நமது பார்வை எத்தகைய பார்வை? நாம் மற்றவர்களை எப்படிப் பார்க்கிறோம்? மதிப்பீடு செய்கிறோம்? மனித முறையிலா? அல்லது நம்பிக்கை அடிப்படையிலா? திருத்தூதர் பவுல் கூறுகிறார். "இனிமேல் தாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை . முன்பு தாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை " (2கொரி 5:16).

நாம் இன்னும் மனித முறைப்படிதான் மற்றவர்களைப் பார்க்கிறோம், ஒருவருடைய பணம், பதவி, பட்டம், ஊர், சாதி ஆகியவற்றைக் கொண்டே அவரை மதிப்பிடுகிறோம். ஏழைகளுக்கு ஒருவிதமான வரவேற்பும் பணக்காரர்களுக்கு ஒருவிதமான வரவேற்பும் கொடுத்து. ஆள் பார்த்துச் செயல்படாதிருக்க நமக்கு அறிவுறுத்துகிறார் யாக்கோபு (யாக். 2:1-4).

திருப்பணியாளர்களையும் நாம் மனித முறையில் தான் காண்கிறோம். ஓர் இளைஞனிடம், "நீ ஏன் பூசைக்குச் செல்வதில்லை" என்று கேட்டதற்கு, “அவன் பூசைக்கு எவன் போவான்?' என்றான், அவன் தனது பங்கு குருவை மனித முறையில் பார்த்ததால், அவருடைய குறைகளைத்தான் கண்டான், அந்தப் பங்கு குரு வழியாகக் கடவுள் செயல்படுவதை அவனால் பார்க்க முடியவில்லை.

குருக்களின் தகுதியுடமை அவர்களிடமிருந்து வரவில்லை : அது கடவுளிடமிருந்தே வருகிறது, அவர்களுடைய வலுவின்மையில் கடவுளுடைய வல்லமை நிறைவாய் வெளிப்படுகிறது (2கொரி 12:9). "பேதுரு திருமுழுக்குக் கொடுக்கட்டும்; இயேசுதான் திருமுழுக்குக் கொடுக்கிறார்; யூதாசு திருமுழுக்குக் கொடுக்கட்டும், இயேசுதான் திருமுழுக்குக் கொடுக்கிறார்" என்ற புனித அகுஸ்தீனாரின் கூற்றை நாம் மறந்து விடக்கூடாது.

"முகத்தில் கண் கொண்டு காணும் மூடர்காள், அகத்தில் கண்கொன்டு காண்பதே ஆனந்தம்" என்கிறார் திருமூலர், முகக்கண் கொண்டு பார்ப்பது முட்டாள் தனம்; அகக்கண் கொண்டு. அதாவது. நம்பிக்கைக் கண்கொண்டு காண்பதே அறிவுடமை; அதுவே கடவுளைக் காணும் பேரின்பத்திற்கு வழிவகுக்கும்.

பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் தலைக்கனம் கொண்டவர்களாய், தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதை கொண்டவர்களாய், இயேசுவைத் தச்சனான யோசேப்பின் மகன் என்று ஏளனம் செய்து, அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருளிலே மடிந்தனர். அத்தகைய ஆபத்திற்கு நாம் இலக்காகாமல் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் வாழக் கற்றுக்கொள்வோமாக.

மன்றாட்டு
எல்லா உண்மைகளும் எனக்குத் தெரியும் என்ற தலைக்கனத்திலிருந்தும், புதிய உண்மைகளைக் கண்டு பின் வாங்கும் கோழைத்தனத்திலிருந்தும். அரைகுறை உண்மைகளுடன் திருப்தி கொள்ளும் அசட்னடத் தளத்திலிருந்தும் உண்மையின் இறைவா! எங்களை விடுவித்தருளும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

முறியட்டும் முனசாா்ப்பு‌ எண்ணம்

நம்பிக்கை உள்ளவர்களுக்கு எந்த அடையாளமும்‌ தேவையில்லை. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எத்தனை அடையாளம்‌ தந்தாலும்‌ பயனில்லை.

“அணுவைக்‌ கூடப்‌ பிளந்து விடலாம்‌. ஆனால்‌ மனிதருக்குள்‌ பதுங்கியிருக்கும்‌ முன்‌ சார்பு எண்ணங்களை முறிப்பது கடினம்‌" என்பார்‌ தான்‌ வாழ்ந்த நூற்றாண்டின்‌. மனிதராகத்‌ திகழ்ந்த ஆல்பெர்ட்‌ ஐன்ஸ்டீன்‌. மனித சமுதாயம்‌ ஒவ்வொருவருக்கும்‌ ஒரு முத்திரை குத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தான்‌ கண்கூடான உண்மை.

நாசரேத்து ஊரைச்‌ சுற்றி வாழ்ந்த மக்களெல்லாம்‌ இயேசுவின்‌ வார்த்தையைக்‌ கேட்டு, வல்ல செயல்களைக்‌ கண்டு அவர்‌ மீது நம்பிக்கை கொண்டனர்‌. ஆனால்‌ அவருடைய சொந்த ஊரிலோ மக்கள்‌ யாரும்‌ அவர்‌ மீது நம்பிக்கை வைக்கவில்லை. காரணம்‌? அவர்கள்‌ மெசியாவிடம்‌ விளங்க வேண்டிய பண்புகளாக எதிர்பார்த்தவைகள்‌ இயேசுவிடம்‌ காணப்படவில்லை. ஆகவே புறக்கணித்தார்கள்‌.

இங்கிலாந்து நாட்டின்‌ முதல்வராக இருந்த வின்ஸ்டன்‌ சர்ச்சில்‌ ஒரு தலைசிறந்த பேச்சாளர்‌. அவரது பேச்சுவன்‌மையைப்‌ பற்றிக்‌ கேள்விப்பட்ட ஒரு வாடகைக்கார்‌ ஓட்டுனர்‌ அவர்‌ உரையைக்‌ கேட்க விரும்பினான்‌. ஆனால்‌ அவரை இவன்‌ பார்த்ததில்லை. சர்ச்சில்‌ பேசப்‌போகும்‌ மன்றம்‌ இருக்கும்‌ பகுதிக்குச்‌ சவாரி கிடைக்குமா என்று ஆவலாய்க்‌ காத்திருந்தான்‌. அப்போது பருத்த உடலும்‌, கனத்த கழுத்தும்‌ தடித்த உதடுகளுமாய்‌ ஒருவர்‌ சவாரிக்கு அழைத்தார்‌. சர்ச்சில்‌ சொற்பொழிவு ஆற்ற இருக்கின்ற மன்றம்‌ உள்ள திசையில்‌ மட்டுமே போவேன்‌ என்று டிரைவர்‌ சொல்ல அந்த மன்றத்திற்குத்தான்‌ போகவேண்டும்‌ என்றார்‌ அந்த மனிதர்‌. டிரைவருக்கு ஒரே மகிழ்ச்சி. பணமும்‌ கிடைத்தது. சொற்பொழிவைக்‌ கேட்க வாய்ப்பும்‌ கிடைத்து விட்டதே!

கூட்டம்‌ தொடங்கியது; டிரைவர்‌ நிமிர்ந்து பார்த்தார்‌. தன்‌ கண்களையே அவரால்‌, நம்ப முடியவில்லை. தனது டாக்சியில்‌ வந்தவர்தான்‌ சர்ச்சிலா? வியந்து நின்றார்‌. சர்ச்சில்‌ எப்படி இருப்பார்‌ என்று 'அந்த டிரைவர்‌ கற்பனை செய்திருந்தாரோ அப்படி சர்ச்சில்‌ இல்லாததால்‌ அவனுக்கு ஒர்‌ அதிர்ச்சி! ஏமாற்றம்‌!

இவ்வாறு மெசியா பற்றி யூதர்கள்‌ தீட்டியிருந்த உருவம்‌ வேறு. உண்மையான மெசியாவான இயேசுவில்‌ கண்ட எதார்த்தம்‌ வேறு. அவர்களின்‌ எதிர்பார்ப்புக்கு முற்றிலும்‌ மாறாக, முரணாக இயேசு தோன்றுகிறார்‌. செயல்படுகிறார்‌. ஏமாற்றத்துக்கு ஆளானவர்கள்‌ எதிர்பபினை வெளிப்படுத்துகின்றனர்‌.

தாங்கள்‌ நடத்தும்‌ பள்ளிகளில்‌ தங்கள்‌ பிள்ளைகளைச்‌ சேர்ப்பதில்லை. தாங்கள்‌ நடத்தும்‌ மருத்துவமனையில்‌ தங்கள்‌ குடும்பத்தினருக்கு மருத்துவம்‌ செய்வதில்லை. காரணம்‌ கைக்கு எட்டும்‌ கனி இனிக்காது. இயேசு சொந்த ஊரிலேயே மதிக்கப்படவில்லை. நம்மில்‌ ஒருவன்தானே எனும்‌ மெத்தனப்‌ போக்கும்‌, குறுகியபார்வையும்‌ இயேசுவுக்குள்‌ இருந்த மெசியாவை அவர்கள்‌ பார்வையில்‌ மறைத்து விட்டன. கையிலே வெண்ணெய்‌ இருக்க நெய்க்கு அலைவதுபோல நம்மிடையே இருப்பவர்களின்‌ திறமைகளை நாம்‌ கண்டு கொள்வதில்லை. ஏற்றுப்‌ பாராட்டுவதில்லை. ஒருவரின்‌ திறமைகளை மனித மாண்பின்‌ அடிப்படையில்‌ காண வேண்டும்‌.

தாமரை சேற்றில்‌ முளைத்ததால்‌ தரம்‌ தாழ்ந்துவிட்டதா?
தேசியப்‌ பூவாக மதிக்கப்படவில்லையா? நம்‌ பார்வைகள்‌ மாறட்டும்‌.

நாசரேத்தூரில்‌ இயேசு சந்தித்த புறக்கணிப்பினை நற்செய்தியாளர்‌ மார்க்‌ இரு கோணங்களில்‌ புலப்படுத்துகிறார்‌.

1. நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும்‌ வியப்பு.
“இவருக்கு இவையெல்லாம்‌ எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்ட ஞானம்‌! என்னே இவருடைய கைகளால்‌ ஆகும்‌ வல்ல செயல்கள்‌!” (மார்க்‌. 6:2). எளிய ஏழைக்குள்ளே கடவுளின்‌ மெசியாவா? பாமரத்‌ தொழிலாளிக்குள்ளே இறையாற்றலும்‌ ஞானமுமா? மக்களின்‌ புருவங்கள்‌ உயர்ந்தன. உள்ளங்கள்‌ உயரவில்லை. விரியாத, விரிய விரும்பாத பார்வை! இந்த இறுகிய மனமும்‌ குறுகிய பார்வையும்‌ நமக்குள்ளும்‌ சிறகடிக்கத்தான்‌ செய்கின்றன.

யூத ,சமுதாயத்தில்‌ இயேசுவின்‌ வாழ்வு எதிர்நீச்சல்‌ போடும்‌ ஒரு வீரப்‌ பயணம்‌. இறையரசின்‌ இலட்சியங்களை முழங்கித்‌ தடைச்‌சுவர்களைத்‌ தாண்டிச்‌ செல்லும்‌ இலட்சியப்‌ பயணம்‌.

2. சூழிவுயடுத்தும்‌ ஏளனம்‌.
“இவர்‌ தச்சன்‌ அல்லவா, மரியாவின்‌ மகன்தானே!” (மார்க்‌. 6:3). தொழிலை வைத்து, தாயின்‌ பெயரால்‌ ஒருவரை அழைப்பது யூத கண்ணோட்டத்தில்‌ இழிவுபடுத்துவதாகும்‌, அப்பன்‌ பெயர்‌ தெரியாத பிள்ளை என்பது போல.

பலாவின்‌ வெளியே முள்கள்‌ உள்ளே. சுவையான சுளைகள்‌. அரளிச்‌ செடியில்‌ அழகான பூவும்‌ காயும்‌. ஆனால்‌ அவற்றில்‌ ஆளைக்‌ கொல்லும்‌ நஞ்சு. வெளித்தோற்றத்தை வைத்து மனிதரைத்‌ தவறாக எடைபோடுகிறோம்‌. ஒருவரின்‌ குடும்பப்‌ பின்புலத்தை வைத்துத்‌ தப்புக்‌கணக்குப்‌ போடுகிறோம்‌. எசாயா 61:1 ஐ வாசித்துத்‌ தன்‌ தூதுப்‌பணியின்‌ இயல்பை எடுத்துரைத்த இயேசுவின்‌ சுடர்விடும்‌ ஞானத்தைக்‌ கண்டு யூதர்‌ வியந்தனர்‌. ஆனால்‌ அதை மகிழ்ந்து அவர்களால்‌ ஏற்க முடியவில்லை. “அவர்‌ தமக்குரியவர்களிடம்‌ வந்தார்‌. அவருக்கு உரியவர்களோ அவரை ஏற்றுக்‌ கொள்ளவில்லை” (யோ. 1:71).

அதனால்‌ இழப்பு இயேசுவுக்கா? அல்ல. நம்பிக்கை இல்லாத நமக்கே! “அங்கே உடல்நலமற்றோர்‌ சிலர்‌ மேல்‌ கைகளை வைத்து குணமாக்கியதைத்‌ தவிர, வேறு வல்ல செயல்‌ எதையும்‌ அவரால்‌ செய்ய இயலவில்லை” (மார்க்‌. 6:5) "உடன்பிறந்தார்‌, சுற்றத்தார்‌ என்றிருக்க வேண்டா, உடன்‌ பிறந்தே கொல்லும்‌ வியாதி' என்ற அவ்வையாரின்‌ கூற்று இயேசுவுக்கு எப்படியெல்லாம்‌ பொருந்துகிறது!

உண்மையையும்‌ நீதியையும்‌ உறுதியுடன்‌ உரக்க உரைப்பவர்களே இறைவாக்கினர்கள்‌. அவர்களுக்கெல்லாம்‌ இந்தச்‌ சமுதாயம்‌ கட்டி எழுப்புவது கல்லறையே! அநீதியே நீதியாகிவிடக்கூடாது என்பதற்காகவே இறைவாக்கினர்‌ தோன்றுகின்றனர்‌. அப்படித்தான்‌ “கலக வீட்டாராகிய அவர்கள்‌ செவி சாய்த்தாலும்‌ சாய்க்காவிட்டாலும்‌ தங்களிடையே ஓர்‌ இறைவாக்கினர்‌ வந்துள்ளார்‌ என்பதை அறிந்து கொள்ளட்டும்‌” (எசேக்‌. 2:5) என்று வாழ்த்தி எசேக்கியேல்‌ அனுப்பப்படுகிறார்‌ (முதல்‌ வாசகம்‌).

இறைவாக்குப்‌ பணியின்‌ சுமை தன்னை அழுத்த, திருத்தூதர்‌ பவுல்‌ தனது வலுவின்மையை உணர்கிறார்‌. ஒப்புக்‌ கொள்கிறார்‌. “என்‌ அருள்‌ உனக்குப்‌ போதும்‌. வலுவின்மையில்தான்‌ வல்லமை நிறைவாய்‌ வெளிப்படும்‌" என்ற ஆண்டவரின்‌ வார்த்தையில்‌ உறுதி பெறுகிறார்‌. தனது எல்லாத்‌ துன்பங்களிலும்‌ துயரங்களிலும்‌ வலுவின்மையிலும்‌ கிறிஸ்துவை முன்னிட்டு மகிழ்வும்‌ மனஉறுதியும்‌ பெறுவதாகக்‌ கூறும்‌ பவுலின்‌ சாட்சியத்தை இரண்டாம்‌ வாசகம்‌ தெளிவும்‌ பொலிவும்‌ பெறச்‌ செய்கிறது.

பணி வாழ்வுப்‌ பாதை அத்துணை எளிதானதல்ல. இறைப்‌பணியாளர்களை இளப்பமாகக்‌ கருதி ஏளனம்‌ செய்பவர்கள்‌ இயேசுவின்‌ காலத்தில்‌ மட்டுமல்ல இன்றும்‌ எங்கும்‌ இருக்கவே செய்கிறார்கள்‌. ஏச்சுக்களையும்‌, எதிர்ப்புக்களையும்‌ புறக்கணிப்பவர்களையும்‌ புழுதி வாரித்‌ தூற்றுபவர்களையும்‌ பொருள்படுத்தாமல்‌ எங்கும்‌ எப்போதும்‌ இறைவாக்குப்‌ பணியில்‌ நாம்‌ தொய்வின்றி ஈடுபட வேண்டும்‌ என்பதை உணர்த்துவது இன்றைய வழிபாடு.

கிறிஸ்தவ வாழ்வு என்பது சாட்சிய வாழ்வு. அது ரோசா மலர்களின்‌ மேல்‌ படுத்துறங்கும்‌ சொகுசு வாழ்வு அல்ல. வெறும்‌ காலுடன்‌ ரோசா முள்களின்‌ மேல்‌ நடக்கும்‌ சிலுவைப்‌ பாதை வாழ்வு.

“நீதிக்காக நான்‌ போரிடும்‌ போது அவர்கள்‌ என்னை உதைத்து வதைக்கலாம்‌. சிறையில்‌ அடைக்கலாம்‌. இறுதியில்‌ கொலை செய்யலாம்‌. கிடைப்பதோ உயிரற்ற என்‌ பிணமே! என்‌ ஒப்புதல்‌ அல்ல” - அண்ணல்‌ காந்தி மன உறுதியோடு சொன்ன வார்த்தைகள்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வழியை உருவாக்கும் இறைவாக்கினர்

சில மாதங்களுக்கு முன், Whatsapp வழியே, சில நண்பர்கள், ஒரு படத்தையும், அத்துடன், ஓர் எச்சரிக்கையையும் பகிர்ந்துகொண்டனர். ஏழு தலைகள் கொண்ட பாம்பு ஒன்று, சாலையோரத்தில் படமெடுத்து ஆடுவது போன்று, அந்தப் படம் அமைந்திருந்தது. படத்திற்கு அடியில், அந்தப் பாம்பு, ஹொண்டுராஸ் நாட்டில் காணப்பட்டதாகவும், ஏழு தலை நாகம், உலக முடிவுக்கு ஓர் அறிகுறி என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அந்தப் படத்தையும், எச்சரிக்கையையும் சிறிது ஆழமாக ஆய்வு செய்தால், அவற்றில் உள்ள தவறுகள் வெளிச்சமாகும். அந்தப்படம், ஹொண்டுராஸில் அல்ல, இந்தியாவில் எடுக்கப்பட்டது என்பதும், கம்ப்யூட்டர் நுணுக்கங்கள் தெரிந்த ஒருவர், படமெடுத்து ஆடும் ஒரு பாம்பின் தலையை, ஏழுமுறை வெட்டி ஒட்டி, அந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் என்பதும், புரியும்.

பிரமிக்கத்தக்க தொழில் நுட்பங்களால், நம்மிடையே தகவல் பரிமாற்றங்கள் தாறுமாறாகப் பெருகிவிட்டன. நம்மை வந்தடையும் ஒரு தகவலை உள்வாங்கி, அதில் உள்ள உண்மையையும், அதனால் விளையக்கூடிய நன்மை, அல்லது, தீமையையும் குறித்து சிறிதும் சிந்திக்காமல், அதை உடனே மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அவசரம், நம்மிடம் அதிகம் உள்ளதோ என்ற கவலை எழுகிறது. இத்தகைய அவசரப் பரிமாற்றங்களால், வதந்திகள் அதிகம் உருவாகின்றன.

ஒரு சில வேளைகளில், பொறுப்பின்றி நாம் பரப்பும் வதந்திகளால், உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளன. அண்மைய சில மாதங்களில், 'வாட்ஸப்' வதந்திகளால், இந்தியாவில், 30க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தர்மம் கேட்டு வந்த சில அப்பாவி மக்களை, குழந்தைகளைக் கடத்துபவர்கள் என்ற தவறான முடிவெடுத்து, அந்த வதந்தியைப் பரப்பியதால், அந்த அப்பாவி மக்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளனர். இதில் மற்றொரு வேதனை என்னவென்றால், திரிபுரா மாநிலத்தில், குழந்தைக் கடத்தல் வதந்திகளை நம்பவேண்டாம் என்று கூறச்சென்ற அரசு அதிகாரி ஒருவரையும், மக்கள் எரித்து கொன்றனர் என்று, நம் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

சொல்லப்படும் செய்திகளையும், அவற்றில் உள்ள உண்மைகளையும் சரிவரப் புரிந்துகொள்ளாமல், நமக்குள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் சில முற்சார்பு முடிவுகளின் (prejudice) அடிப்படையில் நாம் செயல்படுவதை, இன்றைய ஞாயிறு வாசகங்கள் கேள்விக்குள்ளாக்குகின்றன. முற்சார்பு முடிவுகளால், நாம் அனைவரும் வாழ்வில் சந்தித்திருக்கும், அல்லது, சந்திக்கவிருக்கும் வேதனையான ஓர் அனுபவத்தையும் இன்றைய ஞாயிறு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன. அந்த அனுபவம்... புறக்கணிப்பு! மனித அனுபவங்களிலேயே ஆழமான காயங்களை உருவாக்க வல்லது, புறக்கணிப்பு. அதிலும், காரணம் ஏதுமின்றி, அல்லது, நமக்குப் புரியாத காரணங்களுக்காக நாம் புறக்கணிக்கப்படும்போது, அந்த வேதனை மிகக் கொடுமையாக இருக்கும்.

தன்னை வெறுத்து, ஒதுக்கி, தனக்கெதிராகக் கிளர்ச்சிசெய்யும் இஸ்ரயேல் மக்களைப்பற்றி இறைவாக்கினர் எசேக்கியலிடம் இறைவனே முறையிடுவதை முதல் வாசகம் கூறுகிறது. தன் சொந்த ஊருக்குச் சென்ற இயேசுவை, மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள் என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.

சொந்த ஊருக்குத் திரும்பிய இயேசு செய்த முதல் செயல்... தொழுகைக் கூடத்தில் பேசியது! இயேசு பேச ஆரம்பித்ததும், அங்கிருந்தவர்கள், வியப்பில் ஆழ்ந்தனர். நேரம் செல்லச் செல்ல, மக்களின் வியப்பு, விடைபெற்றது, தயக்கங்கள் தோன்றின. அவ்வுணர்வுகள், இயேசுவைப் புறக்கணிக்க வழிவகுத்தன.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம்... மக்கள் இயேசுவைப்பற்றி கொண்டிருந்த முற்சார்பு முடிவுகள்! வழக்கு ஆரம்பமாகுமுன்னரே, தீர்ப்பு வழங்குவதைத்தான், முற்சார்பு முடிவுகள் (Prejudice) என்று கூறுகிறோம்.

பேச ஆரம்பித்தபோது, அவர் என்ன சொன்னார் என்பதை மக்கள் கேட்டதால் மகிழ்வும், வியப்பும் ஏற்பட்டன. ஆனால், விரைவில், அவர்கள் எண்ணங்கள் மாறின. ‘என்ன சொல்கிறார்’ என்பதிலிருந்து, 'யார் சொல்கிறார்' என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்ததும், அவர்கள் வியப்பு, தயக்கமாகவும், வெறுப்பாகவும் மாறியது.

கருத்தை விட்டுவிட்டு, சொல்பவர் யார் என்பதில் நம் கவனம் திரும்பும்போது, இந்தப் பிரச்சனை உருவாகும். அதிலும், சொல்பவரது குடும்பம், குலம் இவற்றைக் குறித்து முற்சார்பு முடிவுகள் எடுத்திருந்தால், பிரச்சனை பெரிதாகி, சொல்லப்பட்ட கருத்துக்களுடன், சொல்பவரும் சேர்த்து ஒதுக்கப்படுவார்.

இயேசு தன் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்ற காலக்கட்டத்தில், அவர் புகழ் ஓரளவு பரவியிருந்தது. ஆயினும், ஊர்மக்கள் அவரை இன்னும் பழையவராக, தங்களுக்கு பழக்கமானவராக எண்ணியதால், தடைச் சுவர்கள் எழுந்தன. “பழகப் பழகப் பாலும் புளிக்கும்” என்று தமிழிலும், “Familiarity breeds contempt” என்று ஆங்கிலத்திலும் பழமொழிகள் உண்டு. பெற்றோர், உடன்பிறந்தோர், ஊரில் நம்முடன் வளர்ந்தவர், வாழ்க்கைத் துணை, நமது குழந்தைகள் என்று, நமக்கு மிகவும் நெருங்கியவர்கள் பலரின் அழகான, ஆழமான அம்சங்களைக் காண்பதற்கு, நமது நெருக்கமே ஒரு தடையாகிவிடும். "ஓ, இவர்தானே" என்ற முத்திரைகள் எளிதில் நம் கைவசம் இருக்கும். இயேசுவுக்கும் இத்தகைய 'ரெடிமேட்' முத்திரைகள் குத்தப்பட்டன. "இவர் தச்சர் அல்லவா?, இவர் மரியாவின் மகன்தானே!" என்று, ஊர்மக்கள் எடுத்திருந்த முற்சார்பு முடிவுகள், முத்திரைகளாகக் குத்தப்பட்டன.

ஒருவரது பிறப்பையும், அவர் செய்யும் தொழிலையும் வைத்து, நாம் உருவாக்கிக்கொள்ளும் அவலமான முடிவுகள், எவ்வளவு தூரம் நமது சமுதாயத்தைப் பாதித்துள்ளன என்பதை, நாம் விளக்கத் தேவையில்லை. இத்தகைய முற்சார்பு முடிவுகளுக்கு இயேசுவே பலியானார் என்பது, இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் ஓர் எச்சரிக்கை!

மக்களின் முற்சார்பு முடிவுகளால், தான் புறக்கணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த இயேசு, பொருள் செறிந்த வார்த்தைகளைச் சொன்னார்: “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்.” (மாற்கு 6:4) இயேசு கூறிய இந்தப் பொன்னான வார்த்தைகள், அன்றுமுதல் இன்றுவரை பல்வேறு சூழல்களில், பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தன் பிறப்பையும், தொழிலையும் வைத்து, தன்னை, குறைவாக மதிப்பீடு செய்திருந்த அம்மக்களிடம், இயேசு, தன்னை ஓர் இறைவாக்கினராக ஒப்புமைப்படுத்திப் பேசினார். இயேசுவின் அடையாளம் பிறப்பினாலோ, அவர் செய்த தொழிலாலோ வரவில்லை. இறைவாக்கினராக, இறைவனின் வாக்காக வாழ்ந்ததே, அவருக்குரிய தனித்துவமான அடையாளம் என்பதை, தன் சொந்த ஊர் மக்களுக்கும், நமக்கும் நினைவுறுத்துகிறார் இயேசு.
இறைவாக்கினராக வாழ்வது, அன்றும், இன்றும், என்றும், சவால்கள் நிறைந்த வாழ்க்கை. ஓர் இறைவாக்கினர் சந்திக்கும் மிகப்பெரும் சவால்.... தன் மனசாட்சியின் வழியாகப் பேசும் இறைவனின் குரலுக்கு, எப்போதும், எந்நிலையிலும், என்ன விலை கொடுத்தாகிலும், செவிமடுத்து வாழ்வது. இதனால், இறைவாக்கினர், தன் வாழ்வின் பெரும்பாலான நேரங்களில், தனித்தே நிற்க வேண்டியிருக்கும். பத்தோடு பதினொன்றாக, கூட்டத்தோடு கூட்டமாகக் கரைந்து வாழாமல், ஆயிரத்தில் ஒருவராக தனித்து நிற்பது, இறைவாக்கினர்களின் பெரும் சவால்.

இன்றைய உலகம் அழுத்தந்திருத்தமாகச் சொல்லித்தரும் ஒரு முக்கியப் பாடம் - ஊரோடு ஒத்து வாழ்வது. வாழ்க்கையின் குறிக்கோள், மனசாட்சியின் தூண்டுதல் போன்ற அனைத்தையும் மறந்துவிட்டு, அல்லது, அவற்றைப் புதைத்துவிட்டு, பலரும் போகும் பாதையிலேயே பயணம் செய்யத்தூண்டுகிறது, இவ்வுலகம். தனித்து நிற்பதால், மற்றவர்களின் தாக்குதல்களுக்கு எளிதான இலக்காகிவிடுவோம், எனவே, கூட்டத்தோடு கூட்டமாக வாழ்வதே பாதுகாப்பு என்று, பலவழிகளில் பாடங்கள் சொல்லித்தருகிறது, இவ்வுலகம். உடை, உணவு, வீடு என்று, வெளி வசதிகளில் ஆரம்பித்து, மதம், அரசியல், கலாச்சாரம் என்ற பல்வேறு துறைகளில், ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய எண்ணங்களை ஒரே மாதிரியான எண்ணங்களாக மாற்ற, வர்த்தக உலகம் வெகுவாக முயன்றுவருகிறது. உலகம் சொல்லித்தரும் பாடங்களிலிருந்து விலகி, தங்கள் குறிக்கோளை அடைய, தங்கள் மனசாட்சியின் குரலுக்குப் பணிய, தங்களுக்கென பாதைகளை உருவாக்கிக் கொள்ளும் பல்லாயிரம் பேர் இன்னும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பழக்கமான, பத்திரமான பாதையில் பலரும் பயணம் செய்யும்போது, புதுப் பாதைகளை வகுத்துக்கொண்டு பயணம் செய்வோரைப்பற்றி சிந்திக்கும்போது, Robert Frost என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதிய “பயணிக்காத பாதை” (The Road Not Taken) என்ற கவிதை நம் நினைவுக்கு வருகிறது:

அந்த மஞ்சள் காட்டில் இரு பாதைகள் பிரிந்தன.
இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணம் செய்வது
என்னால் முடியாது எனத் தெரியும்.
ஒரு பாதையில் பயணம் துவக்கினேன்;
மற்றொன்றில் பிறகு பயணிக்கலாம் என்று
அப்போது எண்ணியிருந்தேன்.
மற்றொரு பாதையில் பயணிக்க
நான் மீண்டும் இவ்விடம் வருவேனா என்ற
சந்தேகம் எனக்குள்...
நான் சென்ற பாதை...
பலரும் பயன்படுத்தாத, பயணிக்காத பாதை என்று
புரிந்து கொண்டேன்.

பல ஆண்டுகள் சென்று,
நிறைவான ஒரு பெருமூச்சுடன் நான் இதைச் சொல்வேன்:
காட்டில் இரு பாதைகள் பிரிந்தன.
மற்றவர் அதிகம் செல்லாத
ஒற்றையடி பாதையில் நான் பயணித்தேன்!
அதுவே என் வாழ்வில்
பெரும் மாற்றங்களை உருவாக்கியது!

தனியொரு பாதையை அமைத்து, இறைவாக்கினராக வாழ்ந்த திருத்தூதர் பவுல் இன்றைய 2ம் வாசகத்தில், உடலில் தைத்த முள்ளைப்போல் தன்னை வதைக்கும் ஒரு பெருங்குறையைப் பற்றி பேசுகிறார். அந்தக் குறையை நீக்கும்படி அவர் இறைவனை வேண்டியபோது, இறைவன் அவரிடம், "என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" - 2 கொரி. 12:9 என்று கூறியதையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்கிறார். திருத்தூதர் பவுலைப்போல பல்லாயிரம் இறைவாக்கினர்கள், இறைவனின் அருளை மட்டுமே நம்பி வாழ்ந்ததை, அதேவண்ணம் வாழ, நம்மைத் தூண்டிவருவதை, இவ்வேளையில் நன்றியோடு எண்ணிப்பார்ப்போம்.

பலரும் செல்லாத பாதைகளில், தனித்து தங்கள் பயணத்தை மேற்கொண்ட வீர உள்ளங்களுக்கு...
அப்பயணங்களின் வழியே, புதிய பாதைகளை அடுத்தத் தலைமுறைகளுக்கு வகுத்துத் தந்த வழிகாட்டிகளுக்கு...
உலகம் காட்டும் வழிகளில் ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்திலிருந்து விலகி, இறைவன் காட்டும் வழியில் சென்றதால் புறக்கணிக்கப்பட்ட புண்ணியவான்களுக்கு...
வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட மக்கள் செவிசாய்த்தாலும், சாய்க்காவிட்டாலும் (எசே. 2: 4-5) இறைவார்த்தையைத் துணிவுடன் எடுத்துரைத்த இறைவாக்கினர்களுக்கு...
இன்று இறைவனிடம் சிறப்பாக நன்றி சொல்வோம்.

இன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதியில் நமக்கு ஓர் எச்சரிக்கையும் தரப்பட்டுள்ளது. அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் இயேசுவால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார் (மாற்கு 6:6) என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். அற்புதங்களை ஆற்ற வல்ல இறைவனையே கட்டிபோட்டுவிடும் நமது முற்சார்பு முடிவுகளை அகற்றி, மூடப்பட்டக் கல்லறைகளாக மாறியிருக்கும் நமது உள்ளங்களை இறைவன் திறந்து, நமக்கு உயிர் தர வேண்டும் என்று உருக்கமாக மன்றாடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வலுவின்மையில் வல்லமை

இந்தியத் திருஅவையில் ஆயர்கள் அறிவிக்கப்பட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் பரவும்போதெல்லாம் ஒருசேர இரண்டு வகையான பின்னூட்டங்களைப் பெறுகிறது. முதல் வகையான பின்னூட்டம், ஆயர் தெரிவுக்கான வாழ்த்துச் செய்தி. இரண்டாம் வகையான பின்னூட்டம், அவர்களைப் பற்றிய எதிர்மறையான விமர்சனம். அவர்களின் குடும்ப பின்புலம், சாதி, பழக்கம், நட்பு வட்டம் ஆகியவற்றை விமர்சித்து பல எழுதப்படுகின்றன. ஒருவருடைய குடும்பமோ, சாதியோ, உறவுகளோ அவருடைய தெரிவு அல்லவே! அவருடைய வாழ்வில் அவர் செய்த நற்காரியங்கள், மேய்ப்புப் பணி, கல்விப் பணி ஆகியவை அப்படியே வழித்தெடுத்து தூக்கி எறியப்பட்டு மேற்காணும் எதிர்மறையானவை மட்டும் அவர்கள்மேல் ஒட்டப்படுவது நமக்கு வேதனை அளிக்கிறது.

இது ஆயர் பெருமக்களின் தெரிவுகளின்போது மட்டுமல்ல, மாறாக, எல்லா நேரங்களிலும் நடக்கிறது. துறவற சபையில் ஒரு மாநிலத் தலைவி தெரிவுசெய்யப்பட்டவுடன், பங்குத் தந்தை ஒருவர் புதிதாகப் பங்கிற்கு நியமிக்கப்பட்டவுடன் என எல்லா நேரங்களிலும் நடக்கிறது. கத்தோலிக்கக் கிறிஸ்தவ உலகில் மட்டுமல்ல. வெளி உலகிலும் நடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக நடராஜன் என்பவர் கிரிக்கெட்டில் சில சாதனைகள் நிகழ்த்தியவுடன், கூகுள் எந்திரமே வியக்கும் அளவுக்கு அவருடைய சாதி தேடப்பட்டது என்பது நிதர்சனமான உண்மை. அதாவது, ஒருவர் உலகில் அல்லது திருஅவையில் மின்னுகிறார் என்றால், அந்த வெளிச்சத்துக்காக அவர் விழித்திருந்த இரவுகளை அப்படியே கூட்டி வெளியே தள்ளிவிட்டு, அவரிடம் இருக்கும் ஓர் இருட்டுப் பகுதியை முதன்மையாக வைத்து அவரை ஒட்டுமொத்தமாக இருட்டடிக்க நினைப்பது மிகப்பெரிய வன்மம் என்று நாம் சொல்லலாம்.

இந்த வன்மம் நம் எல்லாருடைய உள்ளங்களிலும் ஏதோ ஓரிடத்தில் அமர்ந்துகொண்டே இருக்கிறது.

மனித இனத்தின் மனிதாபிமானமற்ற இந்த வன்மத்தை எதிர்கொண்ட மூன்று நபர்களை இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் சந்திக்கின்றோம்: எசேக்கியேல் (முதல் வாசகம்), பவுல் (இரண்டாம் வாசகம்), இயேசு (நற்செய்தி வாசகம்).

இரண்டாம் வாசகத்திலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். கொரிந்தியத் திருஅவை பவுலின் கண்களில் விழுந்த தூசியாக, அவருடைய செருப்புக்குள் சிக்கிய சின்னக் கல்லாக உறுத்திக்கொண்டும் அழுத்திக்கொண்டும் இருக்கிறது. ‘நீங்க எப்படியும் போங்கடா!’ என்று சொல்லிவிட்டு ஓய்ந்துவிடவும் அவருக்கு மனமில்லை! ‘உங்களுக்கு ஏதாச்சும் செய்யணுமே!’ என்ற ஏக்கம் எதிர்பார்ப்பும் அவருக்கு இல்லை! பாவம் பவுல்! துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்பவுல். அப்படி என்ன பிரச்சினை கொரிந்து நகரில்? கொரிந்து நகரம் ஒரு மெட்ரோபோலிடன். புதுமை விரும்பிகள். புதிதாக எது வந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். கிறிஸ்தவத்தை அப்படித்தான் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், தங்களின் ‘கொரிந்து’ வாழ்க்கை முறையை அவர்களால் விட முடியவில்லை. இது தொடர்பான முரண்களை பவுல் தன் முதல் திருமுகத்தில் கையாளுகின்றார். பவுல் கொரிந்து நகரை விட்டுச் சென்றவுடன், ‘சூப்பர் திருத்தூதர்கள்’ (இப்படித்தான் பவுல் அவர்களை அழைக்கின்றார்) என்னும் ஒரு குழுவினர் வந்து அவர்களின் மனத்தை மாற்றி, பவுல் அறிவித்த நற்செய்தியிலிருந்து அவர்களைத் திருப்புகின்றனர். அவர்களின் வாய்ஜாலம், சொற்பந்தல் அவர்களைக் கவர்ந்துவிடுகிறது. பவுலையும் அவர் அறிவித்த நற்செய்தியையும் தங்கள் புறங்கைகளால் தள்ளி விடுகின்றனர். தன் வாழ்க்கை முழுவதும் உண்மையாக, நேர்மையாக இருக்கின்ற பவுலால், அந்த மக்களின் நேர்மையற்ற இச்செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகவும் மனம் நொந்து போகிற அவர், ‘என் உடலில் தைத்த முள் போல ஒன்று என்னை வருத்திக்கொண்டே இருக்கிறது’ என்று மனம் திறக்கிறார்.

‘உடலில் தைத்த முள்’ என்பது பவுலின் உடல்நலக்குறைவு, பேச்சுத்திறமையின்மை, நிதிக்குறைபாடு, குழுமப் பிரச்சினை என பல பொருளில் புரிந்துகொள்ளப்பட்டாலும், பவுல் எதைச் சொல்ல வந்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ‘உடலில்’ என்று அவர் சொல்வதால் இச்சொல்லாட்சி அவருடைய உடல்நலக்குறைவு அல்லது இயலாமையைக் குறிப்பதாக இருக்கலாம். ‘உடலில் தைத்த முள்’ என்பது பவுலால் மறைக்க இயலாத ஒன்று என்று நாம் புரிந்துகொள்வோம். பவுலின் உடலில் தைத்த முள்ளைக் கண்டவர்கள் எல்லாம் அவர்மேல் இரக்கப்படுவதற்குப் பதிலாக, அவருடைய வலுவின்மை கண்டு எள்ளி நகையாடினர்.

பவுல் தன் திருத்தூதுப் பணியால், தன் எழுத்துக்களால் மிக உயர்ந்து நின்றாலும், உடலில் தைத்த ஒற்றை முள்ளால் கூனிக் குருகி, செருப்புத் தூசி போல உணர்கின்றார். எந்த அளவுக்கு அது அவருக்குத் தாழ்வு மனப்பான்மையைக் கொடுத்திருக்கும்! தன் கண்களில் தான் வீழ்ந்துவிட்டது போல அல்லவா அவர் நினைத்திருப்பார்! அந்த முள்ளை, ‘சாத்தானால் அனுப்பப்பட்ட தூதன்’ எனப் பவுல் வரையறுக்கிறார். பவுல் அனுபவித்த வலுவின்மை அவருக்கு மிகப்பெரிய அவமானமாக இருந்தது. அதுவே அவருடைய திருத்தூதுப்பணிக்கான தடையாக மாறியது.

இந்த வலுவின்மை தன்னிடமிருந்து நீங்க வேண்டும் எனப் பவுல் கடவுளிடம் வேண்டுகின்றார். தன் முயற்சிகள் எல்லாம் பலன் தராதபோது இறைவனிடம் சரணடைகிறது மனித மனம். தன் வலுவின்மையே இறைவன் செயல்படும் தளம் என உணர்ந்தார் பவுல். அந்த வலுவின்மையில் இறைவன் செயல்பட்டதால் அதுவே தன் வல்லமை என அறிக்கையிடுகின்றார். மேலும், இந்த நேரத்தில்தான், ‘என் அருள் உனக்குப் போதும்!’ என்ற இறைவனின் மேலான உடனிருப்பை அவர் உணர்கின்றார்.

ஆக, வலுவின்மை பவுலைப் பொருத்தவரையில் வல்லமையாக, இறைவனின் இயங்குதளமாக மாறுகிறது.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் சொந்த ஊருக்கு வருகின்றார். தொழுகைக் கூடத்தில் கற்பிக்கின்றார். கேட்டவர்கள் வியக்கிறார்கள். ‘மரியாவின் மகன்தானே!’ என அவரை அழைக்கின்றனர். இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுப் பிறந்தார் என்ற பேச்சு நாசரேத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவியது. அதனால்தான், அதையே கேலி செய்யும் விதமாக, ‘யோசேப்பின் மகன்!’ (வழக்கமாகச் சொல்லப்படுவது) எனச் சொல்லாமல், ‘மரியாவின் மகன்!’ – ‘ஆணுறவு இல்லாமல் பிறந்த மகன்!’ – என அழைக்கின்றனர். மேலும், ‘தச்சர்!’ ‘நம்மில் ஒருவர்!’ எனச் சொல்லி அவரைப் போதகராக ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர்.

இயேசுவின் எளிமையான பிறப்பு அவருடைய உடலில் தைத்த முள்ளாக மற்றவர்களுக்குத் தெரிகிறது. இயேசுவின் இந்த எளிய பின்புலம் கண்டு அவர்மேல் இரங்காமல், அவரைப் பற்றி இடறல்படுகின்றனர். அவரைப் பற்றி அதிகம் தெரிந்தவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள் என்பதுதான் உச்சகட்ட முரண். அவர்களுடைய பொறாமை அல்லது குறுகிய மனப்பான்மையால் அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். அவர்களின் எதிர்ப்பும் நிராகரிப்பும் எந்த அளவுக்கு இருந்தது என்றால், ‘இயேசுவால் வேற வல்ல செயல்கள் செய்ய இயலவில்லை’ என்று எதார்த்தத்தை அப்படியே பதிவு செய்கின்றார் மாற்கு. அவர்களுடைய நம்பிக்கையின்மை கண்டு இயேசு வியப்புறுகின்றார். மற்ற ஊர்களுக்குப் புறப்படுகின்றார். தன் ஊராரின் மனநிலை கண்டு, அறியாமை கண்டு, இழிநிலை கண்டு இயேசு மனதிற்குள் சிரித்திருப்பார். அவர்கள்மேல் அவருக்குக் கோபம் இல்லை. மாறாக, அவர்களின் இயலாமை கண்டு இரக்கமே கொள்கின்றார்.

ஆக, இயேசுவின் குடும்பப் பின்புலம் மற்றும் அவருடைய தச்சுத் தொழில் அவருடைய வலுவின்மையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இயேசு சில வல்ல செயல்களைச் செய்துவிட்டு, தன் பணியைத் தொடர அங்கிருந்து புறப்படுகின்றார்.

இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எசேக்கியேலின் அழைப்பு பற்றிய பகுதியாக இருக்கிறது. இறைவாக்கினரைக் கடவுள், ‘மானிடா’ என அழைக்கிறார். கடவுளின் திருவுளத்தை அறிவிக்கவும் கடவுளின் செயல்களைச் செய்யவும் ஏற்படுத்தப்பட்ட மிகச் சாதாரண மனிதரே இறைவாக்கினர் எனக் காட்டுவதற்காக, ‘மானிடா’ என்ற சொல்லாடல் இங்கே பயன்படுத்தப்படுகிறது. சிலைவழிபாடு செய்துகொண்டு, பிளவுபட்ட மனத்தினராய் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களுக்கு எசேக்கியேல் உரைத்த செய்தி அவர்களைத் தொடவில்லை. ஒலி கேட்காதவர்போல இருந்துகொள்கின்றனர். இறைவாக்கினர் அறிவிக்கும் தீங்கு எதுவும் தங்களுக்கு நேரிடாது என அவர்கள் நினைத்துக்கொள்கின்றனர். அவர்களின் எதிர்ப்பு மனநிலை இறைவாக்கினர் எசேக்கியேலுக்கு நெருடலாக இருந்திருக்கும். தன் பணி ஏற்றுக்கொள்ளப்படாதது பற்றி அவர் விரக்தியும் சோர்வும் அடையலாம். இந்த நேரத்தில்தான், ஆண்டவராகிய கடவுள் தன் உடனிருப்பை அவருக்கு உறுதி செய்கின்றார். இறைவனின் பிரதிநிதியாக அவர் அவர்கள் நடுவே இருக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்று ஆறுதல் தருகின்றார் ஆண்டவர்.

ஆக, மக்களின் நிராகரிப்பை இறைவாக்கினர் தன் வலுவின்மையாக உணர்ந்தாலும், இறைவாக்குப் பணியின் வழியாக இறைவன் தரும் உடனிருப்பே எசேக்கியேலின் வல்லமையாக மாறுகிறது.

இவ்வாறாக,

‘உடலில் தைத்த முள்’ அதைச் சுமப்பவருக்கு வலியைத் தந்தாலும், அதைப் பார்ப்பவர்களுக்கு அது ஒரு குறையாகவே தெரிகிறது.

வலுவின்மையும் எதிர்ப்பும் நிராகரிப்பும் வெற்றிக்கான தடைகள் என நாம் பல நேரங்களில் எண்ணுகின்றோம். ஆனால், இவை மனித வாழ்வின், கிறிஸ்தவ வாழ்வின் எதார்த்தங்கள். இவையே நம் கடவுளின் இயங்குதளங்களாக மாறுகின்றன.

‘வலுவின்மையில் வல்லமை’ நம் வாழ்வில் செயல்படுவது எப்படி?

(அ) என் உடலில் தைத்த முள் எது?

நம் எல்லாருடைய உடலிலும் ஒரு முள் தைத்துள்ளது. உடல்சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த, பின்புலம் சார்ந்த, திறன்சார்ந்த என எவ்வளவோ முள்கள் நம்மைத் தைத்துக்கொண்டே இருக்கின்றன. சதை என்று இருந்தால் முள் குத்தத்தானே செய்யும்! எனக்கு அடுத்திருப்பவரின் உடலில் தைத்துள்ள முள்ளைக் காண்பதற்கு முன் நான் என் உடலில் தைத்த முள் எது என்பதை அறிய வேண்டும். அறிந்த நான் அதையே என் இறைவனின் வல்லமை செயலாற்றும் தளமாக உணர வேண்டும். எடுத்துக்காட்டாக, அகுஸ்தினார், ‘இச்சைநிறை பார்வையையும் தன் கடந்த காலத்தையும்’ ‘உடலில் தைத்த முள்’ எனக் காண்கிறார்.

(ஆ) நிறைய இரக்கம்

அடுத்தவர் உடலில் தைத்துள்ள முள்ளைச் சுட்டிக்காட்டி, அதை விமர்சிப்பதை விடுத்து, அதை எடுக்க முடியாவிட்டாலும் அவர் அனுபவிக்கின்ற துன்பம் கண்டு கொஞ்சம் இரக்கம் காட்டுதல் நலம். ஒருவர் 10 நல்ல விடயங்கள் செய்தாலும், அவருடைய 1 வலுவின்மையே நமக்குப் பெரிதாகத் தெரிகிறது. நல்ல விடயங்கள் செய்தால் வலுவின்மைகளை மறைத்துவிடலாம் என்று நான் சொல்லவில்லை. கொஞ்சம் இரக்கம் போதும் என்றே நான் சொல்கின்றேன்.

(இ) இறைவனிடம் எடுத்துச்செல்வது

பவுல் தன் வலுவின்மை பற்றி இறைவனிடம் முறையிடுகின்றார். அதை எடுத்துவிடுமாறு மூன்று முறை வேண்டுகின்றார். இறைவனின் பார்வையில் அனைத்தும் ஒரே நேரம்தான். நம்மை ஒற்றை நொடியில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என அளவிடக்கூடியவர் அவர். ‘ஆண்டவரே! இதுதான் நான்! இவ்வளவுதான் நான்!’ என எடுத்துச்செல்வது நலம். அவர்முன் இறுமாப்பும், ‘என்னால் முடியும்! நான் பார்த்துக்கொள்கிறேன்!’ என்ற தற்பெருமையும் தேவையில்லை.

இறுதியாக, எசேக்கியேல், இயேசு, பவுல் ஆகியோர் வரிசையில், நாம் அனைவரும் முள்களைத் தாங்கி நிற்கிறோம். முள் இருக்கும் இடத்தில் அருளும் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். முள்ளும் அருளும் இணைந்தே நிற்பதுதான் நாம்.

திருப்பாடல் ஆசிரியர் கூறுவது போல (காண். திபா 123), ‘ஆண்டவரே, எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மை நோக்கியிருக்கும்!’ என்று இறைவேண்டல் செய்வோம். அவரின் இரக்கம் பெற்ற நாம், அதே கண்களை இரக்கத்தின் கண்களாக மற்றவர்கள்மேல் பதிய வைப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வலுவின்மைகளை வல்லமையாய் மாற்ற தயாரா?

ஒரு வகுப்பில் உயரம் சற்று குள்ளமாக இருந்த ஒரு மாணவியை எல்லாரும் கிண்டல் செய்து கொண்டே இருப்பார்கள். இவ்வாறு அடிக்கடி பிறர் அம்மாணவியை ஏளனம் செய்ததால் அம்மாணவி சற்று மன அழுத்தத்திற்கு ஆளானார். தன் உயரத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னம்பிக்கையை இழந்தார். தன்னையே வெறுக்க ஆரம்பித்தார். துறுதுறுவென இருந்த அம்மாணவியின் நடவடிக்கைகளில் மாற்றம் கண்ட ஆசிரியர் அம்மாணவியை சந்தித்து பேசிய போது அம்மாணவி நடந்ததைச் சொன்னாள். என்னால் முன்பு போல் இயல்பாக இருக்க முடியவில்லை என்று வருந்தினாள். அந்த ஆசிரியர் அம்மாணவிக்கு வழிகாட்டினார். அதன் பிறகு தன்னுடைய உயரத்தை வைத்து தன்னை ஏளனம் செய்பவர்களிடம் சிரித்துக்கொண்டே "நான் குள்ளமாக இருப்பதால் வரிசையில் முதலில் இருக்கிறேன். பாடமோ இல்லை ஏதேனும் நிகழ்ச்சிகளோ அதைத் தெளிவாக தொந்தரவில்லாமல் பார்க்கிறேன். ஏன் ஆட்டோவில் கூட என்னால் நின்று பயணிக்க முடியும். உங்களால் முடியுமா? "என்று சொல்வாள். இவ்வாறாக தன் பலவீனமாக எதைக் கருதினாளோ அதையே அவள் தன் பலமாக மாற்ற கற்றுக்கொண்டார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் "வலுவற்றிருக்கும் போது வல்லமையை உணர்கிறேன் " என்று கூறும் இவ்வார்த்தைகள் நமக்கெல்லாம் ஆழ்ந்த இறையியல் சிந்தனையையும் உளவியல் சிந்தனையையும் கொடுக்கிறது. இங்கே பவுலடியார் தன் பாவ சோதனைகளை பலவீனமாகச் சுட்டிக்காட்டுகிறார். அது முள் போல தன்னை உறுத்திக்கொண்டிருக்கிறதை அவர் உணர்கிறார். ஆயினும் அவர் கடவுளின் அருளை நாடிச் செல்கிறார். கடவுளின் இரக்கமும் அருளும் அவருடைய வலுவின்மையை பலவீனங்களை வல்லமையாக மாற்றுகிறது.

தன் வலுவின்மையை ஏற்றுக்கொள்ளும் உளவியல் முதிர்ச்சியும் அதை மாற்ற கடவுளிடம் சரணடையும் ஆன்மீக முதிர்ச்சியும் பவுலடியாரை வல்லமைமிக்க நற்செய்தி பணியாளராய் மாற்றியது என்றால் அது மிகையாகாது.

நற்செய்திவாசகத்தில் இயேசுவின் பிறப்பின் பின்புலத்தை உற்று நோக்கி அவரை அவர் சொந்த ஊர் மக்களே ஏற்றுக்கொள்ளாத போதும் அவர் அதை பலவீனமான நிலையாகக் கருதவில்லை. தொடர்ந்து முன்னேறி வல்லமை மிகுந்தவராக கடவுள் பணி செய்தார் என நாம் அறிந்திருக்கிறோம். அதே போல இஸ்ரயேல் மக்கள் இறுக்கமானவர்களாக இருந்தாலும் அந்த வலுவற்ற சூழலைக் கடந்து வல்லமையான இறைவாக்கினராக திகழ்ந்தார் எசேக்கியேல்.

எனவே நம் சொந்த வலுவின்மைகளோ அல்லது சூழல் சார்ந்த வலுவற்ற நம்மை தளர்ச்சி செய்யக்கூடிய காரணிகளோ எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உளவியல் முதிர்ச்சியோடும் கடவுளிடம்சரணடையக்கூடிய ஆன்மீக முதிர்ச்சியோடும் பயணித்தால் கடவுளின் வல்லமை நம்மிலும் வெளிப்படும். நாமும் வலுவற்றவனான நான் வல்லமையை உணர்கிறேன் என நிச்சயம் பறைசாற்ற முடியும்.

இறைவேண்டல்

வல்லமையான இறைவா !உம் வல்லமை எங்களில் வெளிப்படுமாறு வலுவற்ற நாங்கள் உம்மிடமே சரணடைகிறோம். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ 14-ஆம்‌ ஞாயிறு
முதல்‌ வாசகப்‌ பின்னணி (எசே. 2:2-5)

இன்றைய வாசகத்தில்‌ இறைவாக்கினர்‌ எசேக்கியேல்‌ இறைவனின்‌ வார்த்தையைக்‌ கேட்டு அதன்படி வாழ மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார்‌. இவர்‌ எருசலேமில்‌ பிறந்தார்‌. கி.மு. 597- இல்‌ நெபுகத்நேசர்‌ பாபிலோனிய மன்னன்‌ எருசலேமைக்‌ கைப்பற்றி அங்கிருந்த மக்களை தன்‌ நாட்டிற்கு அகதிகளாக கொண்டு சென்றான்‌. எரேமியாவும்‌ இதில்‌ ஒருவர்‌. ஆறு ஆண்டுகள்‌ வரை அவர்‌ அங்கேயே இருந்தார்‌. அப்போது கடவுள்‌ அவரை தமது பணிக்காக அழைத்தார்‌. பின்னர்‌ மிகப்பெரிய பொறுப்பை அவருக்கு கொடுத்தார்‌. அவரிடம்‌ “நீ சென்று மக்களிடம்‌ எருசலேமின்‌ அழிவை பற்றிச்‌ சொல்‌' என்று அனுப்பினார்‌. அவரும்‌ அவ்வாறே செய்தார்‌.

ஆனால்‌ மக்கள்‌ இவரது குரலுக்குச்‌ செவிசாய்க்கவில்லை. அவருடைய போதனையை எதிர்த்தனர்‌. ஆனால்‌ அவர்‌ மனம்‌ தளராது தொடர்ந்து இறைதிட்டத்தை பறைசாற்றினார்‌. எரேமியாவைப்‌ போல எசேக்கியேலும்‌ எருசலேம்‌ நகரின்‌ அழிவுகுறித்து முன்கூட்டியே கூற கடவுள்‌ தேர்ந்தெடுத்து அனுப்பினார்‌. ஆனால்‌ மக்கள்‌ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்ப்பின்‌ மத்தியிலும்‌ இறைவாக்குரைப்பது இறைவாக்கினரின்‌ கடமை. அவர்‌ இறைவாக்கு உரைக்காத நிலையிலும்‌ அவரது பிரசன்னமே அவர்களுக்கு ஒரு பாடமாய்‌ அமையும்‌, ஒரு தீர்ப்பாகவும்‌ இருக்கும்‌. தங்கள்‌ நடுவில்‌ இறைவாக்கினர்‌ ஒருவர்‌ அனுப்பப்பட்டுள்ளார்‌ (2:5) என்று அவர்கள்‌ உணர்வதே அவர்களை தம்‌ வாழ்க்கை மாற்றத்திற்கு இட்டுச்‌ செல்லும்‌. எவ்வாறு எசேக்கியேல்‌ தன்னுடைய சொந்த மக்களால்‌ ஏற்றுக்கொள்ளப்படவில்லையோ அதேபோல்‌ இயேசுவும்‌ தனது சொந்த ஊரில்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படவில்லை. அவருடைய போதனை உயர்ந்து இருந்தாலும்‌ மக்கள்‌ அதை ஏற்க முன்வரவில்லை.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (கொரி. 12:7-10)

அனுபவம்‌ நமக்கு கற்றுத்தரும்‌ பாடம்‌ நாம்‌ வலுவற்றவர்கள்‌ என்பது. நாம்‌ நம்முடைய வல்லமையை நம்புவதில்லை. சிறிய எதிர்பார்ப்பு கட நம்மை சோதனைக்கு உட்படுத்துகிறது. கடவுள்‌ ஒருவரே நமது பலவீனத்தை அகற்ற முடியும்‌ என்பதை தூய பவுல்‌, தான்‌ வலுவற்றவன்‌ என உணர்ந்ததனால்‌ அவரால்‌ இதை கூறமுடிகிறது. பவுல்‌ தான்‌ வலுவற்றவன்‌ என உணர்ந்ததால்‌ அவரால்‌ வல்லமை பெறமுடிந்தது. யூத சமயத்தில்‌ இருந்து வந்த கொரிந்து நகர மக்கள்‌ பவுலுக்கு எதிராக எழுந்து அவர்‌ ஒரு உண்மையான சீடர்‌ அல்ல, தவறான கிறிஸ்துவ தத்துவங்களை போதிப்பவர்‌ என்று குற்றம்‌ சாட்டினர்‌. அவரை துன்பத்திற்கு உள்‌- ளாக்கினர்‌. இதனால்‌ பவுலின்‌ போதனையை கேட்ட மக்கள்‌ தவறான எண்ணத்திற்கு உட்படுத்தப்பட்டார்கள்‌. ஆனால்‌ பவுல்‌ நியாயப்படுத்துகிறார்‌. கடவுள்‌ அவருக்கு அளித்த கொடைகள்‌ தனிப்பட்ட திறமைகள்‌ மேலான வாழ்வு பற்றி அவர்‌ எடுத்து கூறு- கிறார்‌. பவுல்‌ இதனை பெருமையாக எண்ணிக்‌ கொள்ளவில்லை. மாறாக தன்னுடைய கடமை உணர்வு பாவங்களை எண்ணி மனம்‌ வருந்தும்‌ தன்மை இவைகளை சுட்டிக்காட்டுகிறார்‌. மேலும்‌ வலுவற்ற நிலையிலும்‌ கடவுளின்‌ வலிமைபெற இறைவனிடம்‌ வேண்டுகிறார்‌. கடவுளும்‌ அதற்கு பதிலளிக்கிறார்‌. “என்‌ அருள்‌ உனக்கு போதும்‌, வலுவின்மையில்‌ தான்‌ வல்லமை நிறைவாய்‌ வெளிப்படும்‌” என்கிறார்‌. (2கொரி. 12:9) கடவுள்‌ இந்த வார்த்தைகளை பவுலுக்கு மட்டுமல்ல நமக்கும்‌ கூட நாமும்‌ எந்த அளவுக்கு வலுவற்றவர்களாக இருக்கிறோம்‌ என்பதை எண்ணிப்பார்க்கத்‌ தூண்டுகிறது. நம்முடைய வலுவின்மையில்‌ கடவுளிடம்‌ நம்பிக்கையாய்‌ இருக்க வேண்டும்‌. தாழ்ந்த உள்ளத்தோடு கடவுளிடம்‌ உதலியைநாடும்போது கடவுளும்‌ உதவியாக நம்‌ பக்கம்‌ நின்று வருகிறார்‌. பவுலின்‌ வாழ்வு நமக்கு ஒரு முன்‌உதாரணமாக விளங்குகிறது.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (மாற்கு 6:1-6)

இயேசு நாசரேத்தை விட்டு வெளியேறி யோர்தான்‌ சென்று திருமுழுக்கு யோவானிடம்‌ திருமூழுழுக்கு பெற்றார்‌. பின்பு 40 நாட்கள்‌ பாலைவனத்தில்‌ செபத்திலும்‌ நோன்பிலும்‌ செலவிட்டார்‌. அதன்பின்‌ கலிலேயா திரும்பி கிராமம்‌ கிராமமாகச்‌ சென்று போதிக்கத்‌ தொடங்கினார்‌. தனது போதனையின்‌ மையமாக கப்பர்நாகூமை தேர்ந்தார்‌. இந்த நகரமானது நாசரேத்திலிருந்து ஏறத்தாழ 36 கி.மீ. தொலைவில்‌ உள்ளது. யேசுவின்‌ போதனை மற்றும்‌ புதுமைகள்‌ கலிலேயா முழுவதும்‌ நாசரேத்து வரை எட்டியது. இதைக்‌ கண்ட மக்கள்‌ மிகவும்‌ ஆச்சரியத்துடன்‌ இயேசுவைப்‌ பார்க்கத்‌ தொடங்கினார்கள்‌. இயேசுவும்‌ சிறப்பான முறையில்‌ அவர்களுக்கு இறைவார்த்தை போதித்தார்‌. இதுவரை கேட்காத செவிகளும்‌ இயேசுவின்‌ வார்த்தையைக்‌ கேட்டு ஆச்சரியப்படும்‌ அளவுக்கு அவை இருந்தது. இயேசு இறைவாக்கினர்‌ எசாயா (61:1-2) எழுதிய மெசியாவின்‌ வருகைப்‌ பகுதியை யூதர்களுக்கு விளக்கினார்‌. அவர்கள்‌ இதை ஏற்க மறுத்தனர்‌. மேலும்‌ மெசியா இனிதான்‌ வருவார்‌ என்று தவறாக புரிந்து கொண்டனர்‌. எனவே இயேசுவை மரியாளின்‌ மகன்‌ தச்சனின்‌ மகன்‌ என்றுதான்‌ அவர்களால்‌ காண முடிந்தது. அவரிடம்‌ இறைதன்மை உள்ளதை அறிய தவறினர்‌. எனவே அவர்கள்‌ இயேசுவுக்கு எதிராக செயல்‌- பட்டார்கள்‌. அவர்களின்‌ கர்வம்‌ ஆணவம்‌ இறுமாப்பு இயேசுவை மெசியா என அடையாளம்‌ காண தடையாய்‌ இருந்தது. அவர்கள்‌ விசுவாசத்தில்‌ தளர்ந்து இருந்தார்கள்‌. எனவேதான்‌ இயேசுவின்‌ புதுமைகளை அவர்களால்‌ ஏற்றுக்‌ கொள்ள முடியவில்லை. இயேசு இறந்த சிறுமியை உயிர்த்தெழச்‌ செய்தார்‌. ஆனால்‌ தனது சொந்த ஊரில்‌ அவரால்‌ புதுமை செய்ய முடியவில்லை. காரணம்‌ விசுவாசம்‌ இல்லை. அதணல்‌ அவர்களால்‌ இயேசுவை ஏற்றுக்‌ கொள்ள முடியவில்லை.

மறையுரை

இவ்வுலகில்‌ பிறந்த ஒவ்வொரு மனிதனும்‌ மற்றவர்களால்‌ புறக்கணிக்கப்படுகிறான்‌. இயேசுவின்‌ பணிவாழ்வில்‌ அவரின்‌ போதனையை ஏற்றுக்‌ கொண்டனர்‌ ஆனால்‌ அவரை ஏற்க மறுத்தனர்‌. நாமும்‌ இயேசுவின்‌ போதனையைக்‌ கேட்கிறோம்‌. அவரை காணாமலே விசுவசிக்கிறோம்‌. இயேசு ஒவ்வொரு மனிதரிலும்‌ தன்னை வெளிப்படுத்துகிறார்‌. நாம்‌ எந்த நிலையில்‌ இருந்தாலும்‌ நமக்கு மீட்பளிக்க தயாராய்‌ உள்ளார்‌. அவரை ஏற்பதும்‌ மறுப்பதும்‌ நமக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம்‌. இதைதான்‌ நாம்‌ பல இடங்களில்‌ பார்க்கிறோம்‌. இயேசுவின்‌ பிறப்பை அறிந்தவுடன்‌ அவரை ஏற்றுக்‌- கொண்ட இடையர்கள்‌ கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்‌ இயேசுவின்‌ சீடர்கள்‌ பாவியான சக்கேயு சமாரியப்‌ பெண்‌ மகதலேன்‌ மரியாள்‌, நல்ல கள்ளன்‌, நிக்கோதேம்‌, அரிமத்தியா யோசேப்பு, வறியவர்கள்‌, எளிய மக்கள்‌ தங்கள்‌ வலுவின்மையை ஏற்ற மக்கள்‌ எல்லா- வற்றிலும்‌ மேலாக அன்னை மரியாள்‌. இவர்கள்‌ இயேசுவை தங்கள்‌ மறுத்த மக்களைப்‌ பார்க்கிறோம்‌. சொந்த ஊர்மக்கள்‌ பரிசேயர்கள்‌ சதுசேயர்கள்‌ மதபோதகர்கள்‌ யூதத்‌ தலைவர்கள்‌ நெறி கெட்ட நேர்மையற்ற அரசன்‌. இலர்கள்‌ தங்களுடைய ஆணவம்‌ கர்வம்‌ பாவ வாழ்வால்‌ இயேசுவின்‌ மீட்பைப்‌ பெறமுடியாமல்‌ போனார்கள்‌ இதைப்போலதான்‌ இயேசுவுக்குப்‌ பின்‌ வந்தவர்களும்‌ ஏற்றுக்‌ கொள்‌- ளப்படவில்லை. குறிப்பாக யூதரான சவுல்‌ கிறிஸ்துவை அறிந்து பவுலாக மாறிய பின்னும்‌ கிறிஸ்தவர்கள்‌ அவரை ஏற்கவில்லை (தி.ப. 9:26). இவரின்‌ நற்செய்தி ஆர்வத்தைக்‌ கண்டு சீடர்கள்‌ இவரை செசாரியாவிலிருந்து தர்சுக்கு அனுப்பினர்‌ (தி.ப. 9:30). நமது வாழ்வுக்கு வருவோம்‌. நாம்‌ இயேசுவை நமது மீட்பராகக்‌ கொண்டுள்ளோம்‌ நமது திருமுழுக்கின்‌ மூலம்‌ இறைவனின்‌ பிள்ளை- களாகிறோம்‌, அவரை பின்பற்றுவதற்காக வாழ முன்‌ வருவோம்‌. கடவுள்‌ நம்மை அழைத்திருக்கிறார்‌. அவர்‌ அழைக்காவிட்டால்‌ நாம்‌ பிறந்திருக்க மாட்டோம்‌. நாம்‌ அவரின்‌ அழைப்பைப்‌ பெற்றுள்‌- ளோம்‌. கடவுளே நாம்‌ எதைச்‌ செய்ய வேண்டும்‌ என்பதை அறிவுறுத்தி வழிநடத்துகிறார்‌. கடவுள்‌ நம்மை அழைத்தது நாம்‌ அவரைவிட்டுச்‌ சிறந்தவர்கள்‌ என்பதற்காக அல்ல. மாறாக நாம்‌ அவருடைய சீடர்களாக இருப்பதால்தான்‌. அவர்‌ நம்மை அன்பு செய்கிறார்‌. இயேசு தன்னைப்‌ பின்தொடர நாம்‌ ஒவ்வொருவரையும்‌ அழைக்கிறார்‌. அவர்‌ நம்மிடம்‌ விரும்புவது அவரை ஏற்றுக்கொண்டு மீட்படைய வேண்டும்‌ என்பது மட்டுமே இது அனைவருக்கும்‌ கொடுக்கப்பட்ட வாய்ப்பு. அவரை ஏற்பதா? மறுப்பதா? என்பது நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு. அவரை ஏற்றால்‌ நாம்‌ மீட்புப்‌ பெறுவோம்‌. நாசரேத்தூர்‌ மக்கள்‌ பலர்‌ யேசுவை ஏற்றுக்‌ கொள்ள- வில்லை, ஆனால்‌ சிலர்‌ ௮வரது போதனைகளைக்‌ கேட்டு புதுமை- களைக்‌ கண்டு ஏற்று கொண்டார்கள்‌ மீட்பு பெற்றார்கள்‌. தங்களின்‌ ஆணவம்‌ கர்வம்‌ சப இன்பம்‌ தவறை உணறமறுத்தவர்கள்‌ அவரை விட்டுச்‌ சென்றனர்‌. பலர்‌ இயேசுவை உண்மையாக பின்‌ தொடர்ந்தார்கள்‌. அவர்களில்‌ மரியாள்‌ முதன்மையான இடத்தை. வகிக்கிறார்‌. நாமும்‌ இதைப்‌ போல “ஆம்‌' என்று இயேசுவைப்‌. பின்பற்றுவோம்‌. நம்முடைய மீட்பின்‌ பாதையை திரும்பிப்‌ பார்ப்போம்‌. பாதையை செம்மை படுத்துவோம்‌, தொடர்ந்து இயேசுவின்‌ சீடர்களாக வாழ்வோம்‌. வாழ்வில்‌ என்ன சிக்கல்‌ துன்பம்‌ வந்தாலும்‌ இயேசுவுக்கு சான்று பகர்பவர்களாக வாழ்வோம்‌. மகிழ்ச்சியான தருணத்தில்‌ கடவுளை எண்ணிப்‌ பார்க்கிறோம்‌. ஆனால்‌ துன்பம்‌ சவால்‌ எழும்‌ சூழல்களில்‌ கடவுளின்‌ துணையை நாடுகிறோமா என்பதை சிந்தித்து பார்ப்போம்‌, நாம்‌ வாழும்‌ சமுதாயத்தில்‌ இரண்டு வகை மனிதர்கள்‌. பணம்‌ பதவி பட்டம்‌ என பிதற்றும்‌ மக்கள்‌. இவை அனைத்தும்‌ இறைவனின்‌ கொடை என வாழும்‌ மக்கள்‌. நாம்‌ இதில்‌ எந்த வகை???

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்
‌ நம்பிக்கையா? விசுவாசமா?
நிலைவாழ்வு, நிலையற்ற வாழ்வு.
பிறர்‌ நலம்‌ பேணல்‌.
பிறரை ஏற்றுக்‌ கொள்ளாத மனநிலைகுறைவாக. எடை போடுதல்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ - பதின்நான்காம்‌ ஞாயிறு

முதல் வாசகம்‌ :எசே2:2-5

இன்றைய வாசகம்‌ எசேக்கியேல்‌ இறைவாக்கினரின்‌ அழைப்புப்‌ பற்றிக்‌ கூறுகிறது. கலகக்காரர்களாகிய இஸ்ரயேல்‌ மத்தியிலே இறைவன்‌ எசேக்கியேலை அனுப்பி, ஆண்டவரின்‌ திருவாக்கை அவர்‌ அவர்களுக்கு உரைக்குமாறு பணிக்கிறார்‌.

ஆவியார்‌ இறைவாக்களிக்கிறார்‌

“ஆவி” என்று இங்கு எசேக்கியேல்‌ கூறுவது மூவொரு கடவுளில்‌ ஒருவரான “தூய ஆவியாரை கட்டாது. இறைவனின்‌ சக்தி, வல்லமை, அருள்‌ முதலியவற்றை இது சுட்டும்‌. இந்த இறைவனின்‌ சக்திதான்‌ இறைவாக்கினரை ஆட்கொண்டு வழி நடத்துகிறது. “ஆவி என்னுள்‌ புகுந்து என்னை என்‌ கால்களின்மேல்‌ நிலை நிறுத்திற்று (2: 2) என்பது இக்கருத்திலேயே. “அப்போது ஆவி என்மீது இறங்கிற்று”' (3 : 1), “ஆவி என்னைத்‌ தூக்கி உயரே எழுப்பிற்று”” (3 : 14), “ஆவி என்னுள்‌ புகுந்து, என்னைக்‌ காலூன்றி நிற்கச்‌ செய்தது” (3 : 24), “ஆவி என்னைத்‌ தூக்கி நிறுத்திற்று” (8: 3) “ஆவி என்னைத்‌ தூக்கி நிறுத்திற்று” (11 : 1) “ஆண்டவருடைய ஆவி வேகத்தோடு இறங்கிற்று ” (11 :5), “ஆண்டவரின்‌ ஆவி என்னைத்‌ தூக்கி... கொண்டு போய்விட்டது” (11 : 24; 37 : 1), “ஆவி என்னைப்‌ பிடித்துத்‌ தூக்கியது ” (43 : 5) என்ற சொற்கள்‌ இறைவாக்கினர்‌ இறைவனின்‌ வல்லமையிலே இறைவனின்‌ சார்பாகச்‌ செயல்படுகிறார்‌ என்பதை உணர்த்துகின்றன. இவ்‌இறைவனின்‌ சக்தி, பு.ஏ. இலே தூய ஆவியார்‌ வழி நம்‌ யாவர்மீதும்‌ பொழியப்படுகிறது. “இறுதி நாள்களில்‌ நான்‌ மாந்தர்‌ யாவர்‌ மேலும்‌ என்‌ ஆவியைப்‌ பொழிந்தருள்வேன்‌. உங்கள்‌ புதல்வரும்‌ புதல்வியரும்‌ இறைவாக்கு உரைப்பர்‌. உங்கள்‌ இளைஞர்கள்‌ காட்சிகளையும்‌ உங்கள்‌ முதியோர்‌ கனவுகளையும்‌ காண்பர்‌. அந்நாள்களில்‌ உங்கள்‌ பணியாளர்‌ பணிப்‌ பெண்கள்‌ மேலும்‌ என்‌ ஆவியைப்‌ பொழிந்தருள்வேன்‌. அவர்களும்‌ இறைவாக்கு உரைப்பர்‌” (திப. 2: 17 – 18) என்பது நம்மைப்‌ பற்றிக்‌ கூறப்பட்டது என்பதை உணர்வோமா? இறைவனுக்கு நம்‌ சொல்லாலும்‌ வாழ்க்கையாலும்‌ சான்று பகர்வது நமது கடமை என்பதை அறிந்து செயல்படுவோமா? “உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின்‌ மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள்‌ பணி” (1 பேது. 2: 9).

ஆண்டவரே அனுப்புகிறார்‌

'ஆவியாரால்‌ ஆட்கொள்ளப்பட இறைவாக்கினர்‌ மக்களிடையே அனுப்பப்படுகிறார்‌. இறைவாக்குரைக்கும்‌ வரம்‌ பிறர்‌ நன்மையைக்‌ கருதி அளிக்கப்படும்‌ ஒன்று (1 கொரி, 14: 1- 19). இறைவாக்கினராய்‌ அழைக்கப்பட்ட எசாயா, “இதோ, நானிருக்கிறேன்‌. அடியேனை அனுப்பும்‌” (எசா. 6 : 7) என்கிறார்‌. ஆண்டவரும்‌, “(நீ போய்‌ இந்த மக்களுக்கு... அறிவி” (6: 8) என்கிறார்‌. எரேமியாவை அழைத்த ஆண்டவரும்‌,” 'சிறுபிள்ளை தான்‌” என்று சொல்லாதே; யாரிடமெல்லாம்‌ உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம்‌ செல்‌; எவற்றை எல்லாம்‌ சொல்லக்‌ கட்டளை இடுகின்றேனோ அவற்றைச்‌ சொல்‌” (எரே. 1 : 7-8) என்பார்‌. இதே போன்றே, “மனிதா... இஸ்ரயேல்‌ மக்களிடம்‌ உன்னை நாம்‌ அனுப்புகிறோம்‌” என்று எசேக்கியேலிடம்‌ கூறுகிறார்‌ ஆண்டவர்‌ (2: 3).

“இது ஆண்டவராகிய இறைவன்‌ வாக்கு” (2 : 4) என்று சொல்லி, எசேக்கியேல்‌ இறைவாக்குரைத்தாலும்‌, விவேகமற்ற மக்கள்‌, முரட்டுத்தன மானவர்கள்‌ இறைவாக்கைக்‌ கேட்க மறுப்பார்கள்‌. இம்மறுப்பு, எதிர்ப்பின்‌ மத்தியிலும்‌ துணிந்து இறைவாக்குரைப்பது இறைவாக்கினரின்‌ கடமை. அவர்‌ இறைவாக்கு உரையாத நிலையிலும்‌ அவரது பிரசன்னமே அவர்களுக்கு ஒரு பாடமாயமையும்‌, ஒரு தீர்ப்பாகவும்‌ இருக்கும்‌. “தாங்கள்‌ நடுவில்‌ இறைவாக்கினர்‌ ஒருவர்‌ அனுப்பப்பட்டுள்ளார்‌” (2 : 5) என்று அவர்கள்‌ உணர்வதே அவர்களைத்‌ தம்‌ வாழ்க்கை மாற்றத்திற்கு இட்டுச்‌ செல்லும்‌. மக்கள்‌ முன்‌ மேடையேறி நற்செய்தியைப்‌ போதிக்க நமக்கு வாய்ப்பு இருக்காது. ஆனால்‌, பிறர்‌ நம்‌ வாழ்வையும்‌ நடத்தையையும்‌ பார்த்து, “நம்‌ நடுவிலே இறைவாக்கினர்‌ ஒருவர்‌ அனுப்பப்பட்டுள்ளார்‌” என்று கூறமுடியுமா? அப்பழுக்கற்ற வாழ்க்கையே ஆண்டவருக்குச்‌ சாட்சியம்‌ பகரும்‌ வாழ்க்கை என்பதை உணர்ந்து, “நன்றே தரினும்‌ நடு இகந்து ஆம்‌ ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்‌” (குறள்‌ 113) என்ற முறையில்‌ வாழ்வோமா? ( மக்களீடம்‌ உன்னை நாம்‌ அனுப்புகிறோம்‌. )

இரண்டாம் வாசகம் 2கொரி. 12:7-10 தன்னைப்‌ பற்றி, தன்‌ அழைப்பு, சாட்சியப்பணி, அதனால்‌ தான்‌ பட்ட. துயரங்கள்‌ பற்றிப்‌ பெருமைப்படக்‌ கூறுகிறார்‌ பவுல்‌ (காண்‌. 2 கொரி. 11 -12). அப்போது, தனக்கு ஏற்பட்ட சோதனை (“என்‌ உடலில்‌ தைத்த முள்‌”) பற்றிக்‌ கூறுகிறார்‌. இன்றைய வாசகத்திலே, “நான்‌ வலுவின்றி இருக்கும்‌ போதுதான்‌ நான்‌ வலிமை மிக்கவனாயிருக்கிறேன்‌ ”' (12 : 10) என்று அவர்‌ கூறுவது, நமக்கு நமது துன்பங்களில்‌ உறுதுணையாயிருக்க வேண்டும்‌.

“என்‌ உடலில்‌ கைக்கு முன்‌ வாழ்க்கையில்‌ எல்லோருக்கும்‌ துன்ப துயரங்கள்‌ வருவது இயல்பே. இத்துன்பங்களுக்கு ஓர்‌ ஆன்மீகக்‌ காரணம்‌ காட்டுகிறார்‌ பவுல்‌. “நான்‌ செருக்குறாதபடி”, “நான்‌ செருக்குறாதிருக்கவே” (12 : 7), இறைவன்‌ இடர்களை எனக்கு அனுப்பினார்‌ என்பார்‌. நாம்‌ வலிமை மிக்கவர்கள்‌, நம்மால்‌ எல்லாம்‌ கூடும்‌, நமக்கு மிஞ்சியது கிடையாது என்று பலவேளைகளில்‌ மார்தட்டி நிற்கும்‌ நமக்கு, நாம்‌ குணப்படுத்த முடியாத, நம்‌ சக்திக்கு மேற்பட்ட துன்பங்கள்‌ வரும்போதுதான்‌, நமக்கு மேற்பட்ட சக்தி ஒன்று உளது என்று நம்பி அச்சக்தியிடம்‌ அடைக்கலம்‌ புகுகின்றோம்‌. எனவே “நாம்‌ செருக்குறாதபடியே' நமக்குத்‌ துன்பங்கள்‌ வருகின்றன என்பது உண்மை.

“என்‌ உடலில்‌ தைத்த முள்‌” என்று பவுல்‌ குறிப்பிடுவது அவருக்கு ஏற்பட்ட சோதனைகள்‌, அல்லது, வேத விரோதிகளின்‌ தாக்குதல்கள்‌, அல்லது, ஏதோ ஒர்‌ உடல்நோய்‌ என்பதாக இருக்கலாம்‌. ஆராய்ச்சியாளருள்‌ பலர்‌. இது அவருக்கிருந்த ஒரு நெடுநாள்‌ நோயைக்‌ குறிக்கும்‌ என்பர்‌. சிலர்‌. இது அவருடைய வலிப்பு நோயைச்‌ சுட்டும்‌ என்பர்‌. எது எவ்வாறாயினும்‌, பவுல்‌ ஒரு நோயால்‌ துன்புற்றார்‌ என்பது உண்மை. இத்துன்பத்திலே அவர்‌ மனம்‌ தளரவில்லை, கடவுளைப்‌ பழிக்கவில்லை. அவரிடம்‌ வேண்டுகிறார்‌. தொடர்ந்து, விடாது இறைஞ்சி வேண்டுகிறார்‌. “மும்முறை வேண்டினேன்‌ ” (12: 8) என்பதற்குப்‌ பலமுறை வேண்டினேன்‌ என்பது பொருளாகும்‌. நமது இன்னல்‌ இக்கட்டுகளிலும்‌, நோய்‌ நோக்காடுகளிலும்‌ நாமும்‌ இறை - மருத்துவராகிய இயேசுவிடம்‌ விரைகிறோமா? தொடர்ந்து வேண்டுகிறோமா? “இடைவிடாது செபியுங்கள்‌, என்ன நேர்ந்தாலும்‌ நன்றி கூறுங்கள்‌” (1 தெச. 5:16).

'வலுவின்மையிலே இறைவன்‌

சீரும்‌ சிறப்பும்‌ நிறைந்து வாழ்ந்த எகிப்தியர்‌, பாபிலோனியர்‌, சுமேரியர்‌ ' முதலியோரையன்று, நாடோடி மக்களான இஸ்ரயேலைத்‌ தேர்ந்தெடுத்தார்‌ இறைவன்‌. இறை ஞானத்திற்கும்‌ சட்ட நுணுக்கங்களுக்கும்‌ பேர்போன மறை நூலறிஞரை விட்டுவிட்டு, ஒரு தச்சனின்‌ மகனைத்‌ தேர்ந்தெடுத்தார்‌ இறைவன்‌. இவரேதான்‌ திருச்சபையைக்‌ கொடுமைப்படுத்திய, “நோய்வாய்ப்பட்ட ஒருவரை (பவுலை), தம்‌ பணிக்குத்‌ தேர்ந்தெடுத்தார்‌... என்னே இறைஞானத்தின்‌ மறைபொருள்‌! “கடவுள்‌ ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம்‌ கருதுபவற்றைத்‌ தேர்ந்து கொண்டார்‌. அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம்‌ கருதுபவற்றைத்‌ தேர்ந்துகொண்டார்‌ ” (1 கொரி. 1: 26 - 31) என்பது பவுலைப்‌ பொறுத்தமட்டில்‌, ஏன்‌ நம்மைப்‌ பொறுத்தமட்டிலும்‌ கூட, எவ்வளவு உண்மையானது?

“நான்‌ தரும்‌ அருள்‌ உனக்குப்‌ போதும்‌” (12 : 9) என்கிறார்‌ ஆண்டவர்‌. இவ்வருள்‌ இறைவன்‌ நமக்களிக்கும்‌ இணையற்ற வல்லமையாகும்‌. “இந்தச்‌ செல்வத்தைக்‌ கொண்டிருக்கும்‌ நாம்‌ வெறும்‌ மட்கலங்களே ” (2 கொரி. 4:7) என்பதை உணர்கிறோமா? “அவர்‌ சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்‌; வலிமையிழந்தவரிடம்‌ ஊக்கம்‌ பெருகச்‌ செய்கின்றார்‌” (எசா.0 : 29) என்பதை அறிவோமா? பவுலைப்‌ போன்று, நமது குறைபாடுகளில்‌ இன்னல்‌ இக்கட்டுகளில்‌, நோய்‌ நோய்க்காடுகளில்‌ இறைவனைத்‌ திட்டாது, அவருடைய திருவுளத்தை ஏற்று அத்துன்ப துயரங்களிலே பெருமைப்படுவோமா? “கிறிஸ்துவை முன்னிட்டு மன நிறைவோடு”மனமகிழ்வோடு வாழக்‌ கற்றுக்கொள்வோமா? “என்னுடைய வலுவின்மையிலே நான்‌ வலிமைமிக்கவனாய்‌ இருக்கின்றேன்‌ ”” (12:10). ( கிறிஸ்துவின்‌ வல்லமை என்னுள்‌ குடிகொள்ளும்‌. )

நற்செய்தி :மாற் 6:1-8

“அவர்‌ தமக்குரியவர்களிடம்‌ வந்தார்‌. அவருக்கு உரியவர்கள்‌ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” என்று யோவான்‌ எழுதியது (யோ. 1: 11) இன்று மாற்கு நற்செய்தியில்‌ வேறொரு வகையிலே கூறப்படுகிறது. இயேசு தம்‌ சொந்த ஊரான நாசரேத்துக்கு வருகிறார்‌. அவருடைய ஊரினரே அவருடைய புகழை, அவருடைய போதனையை ஏற்க மறுக்கின்றனர்‌.

ஊரினர்‌ எதிர்ப்பு

கப்பர்நகூம்‌ ஊரிலே இயேசு போதித்து வந்தார்‌. “அவருடைய போதனையைக்‌ கேட்டு மக்கள்‌ மலைத்துப்‌ போயினர்‌. ஏனெனில்‌, அவர்‌ மறைநூலறிஞரைப்‌ போலன்றி, அதிகாரமுள்ளவராகப்‌ போதித்து வந்தார்‌” (1: 2 - 22). இப்போது தம்‌ சொந்த ஊரில்‌ வந்து போதிக்கிறார்‌. இங்கு அவருடைய போதனையைக்‌ கேட்டு மக்கள்‌ மலைத்துப்‌ போயினர்‌. எனினும்‌ எத்தகைய மலைப்பு இங்கே? முதலில்‌ மலைத்தனர்‌. “இதெல்லாம்‌ இவருக்கு எங்கிருந்து வந்தது? என்னே இவர்‌ பெற்ற ஞானம்‌? என்னே இவர்‌ கையால்‌ ஆகும்‌. புதுமைகள்‌?” (6 : 2) என்றனர்‌. அடுத்து, இகழ்ந்தனர்‌. “இவர்‌ தச்சன்‌ அல்லரோ? மரியாளின்‌ மகன்தானே!... இவர்‌ சகோதரிகளும்‌ நம்மோடில்லையா?”” (2 : 3) என்றனர்‌. இறுதியாக, இடறல்பட்டனர்‌; அதாவது அவர்‌ குற்றவாளியென்று கூறும்‌ நிலைக்கு வந்தனர்‌. பிறரைப்‌ பற்றிய நமது மதிப்பீடுகளும்‌ இம்முறையிலே அமைவதில்லையா? மலைக்கிறோம்‌. இகழ்கிறோம்‌, இறுதியில்‌ வெறுக்கிறோம்‌. “அன்பிலார்‌ எல்லாம்‌ தமக்குரியர்‌” என்ற முறையிலே, நம்மைத்‌ தவிர வேறு பிறர்‌ நல்லவராயிருக்கக்‌ கூடாதென்று நினைக்கிறோம்‌. நாம்‌ நல்லது செய்யாவிட்டாலும்‌, நல்லது செய்பவர்‌ களுக்கு தீமைப்பட்டம்‌ சூட்டுகிறோம்‌; அவர்கள்‌ நற்செயல்களுக்குக்‌ “காரணங்கள்‌” காட்டுகிறோம்‌. பிறர்‌ உயரக்‌ கண்டு மனம்‌ பொங்குகிறோம்‌. பிறர்‌ உயரத்‌ தடை செய்கிறோம்‌. இம்முறையிலே நாம்‌ இந்நாசரேத்தூர்‌ மக்களுக்குப்‌ பிந்தியவர்களில்லையே!

இயேசுவின்‌ பதில்‌.

ஒருவரோடு நாம்‌ அதிகம்‌ பழக்கப்பட்டுவிட்டால்‌ அவருடைய மேன்மையை அறிவது அரிது. அதிகமாக அறிதல்‌ வெறுப்பையே கொடுக்கும்‌ என்பது வழக்கு. இறைவாக்குரைப்பவரைப்‌ பொறுத்தவரை இது உண்மையே. தம்‌ சொந்த ஊரிலே அவருக்கு மதிப்போ மரியாதையோ கிடையாது. இதையே இயேசு. “சொந்த ஊரிலும்‌ சுற்றத்திலும்‌ தம்‌ வீட்டிலும்‌ தவிர மற்றெங்கும்‌ இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு” (6 : 4) என்ற வசனத்தின்வழி கூறுகிறார்‌.

இஸ்ரயேல்‌ வரலாற்றிலே நடந்தது இதுதானே? எந்த இறைவாக்கினரை அவர்கள்‌ மதித்தனர்‌? கொடிய குத்தகைக்காரர்கள்‌ உவமைவழி (காண்‌ : லூக்‌. 20 : 9 - 18) ஆண்டவர்‌ இதைத்தானே கூறினார்‌. இன்றும்‌ கிறிஸ்தவர்களாகிய நம்முள்‌ சிலர்‌ இயேசுவை ஒரு மனிதன்‌, புரட்சிவீரன்‌ என்று மட்டும்தானே காண்கிறார்கள்‌. அதே வேளையிலே இயேசு பற்றி, அவர்‌ போதனை பற்றி, அவர்‌ புதுமைகள்‌ பற்றிக்‌ கேள்விப்படும்‌ பிறமதத்தினர்‌, அவர்‌ தேவன்‌, தெய்வக்குமாரன்‌ என்று சொல்லி, அவரிடம்‌ நம்பிக்கையோடு வருவதை நாம்‌ வேளாங்கண்ணி, விவேக்நகர்‌ போன்ற இடங்களில்‌ காண்பதில்லையா? என்னே கேவலம்‌ நமக்கு? கிறிஸ்தவர்கள்‌ என்று சொல்லிக்‌ கொள்ள நமக்குத்‌ தகுதி என்ன? இயேசுவே தம்‌ மக்களின்‌ விசுவாசமின்மை கண்டு வியப்புறுகிறார்‌. “அவர்களுள்‌ சிலர்‌ அவ்வாக்குகளை நம்பவில்லையே!” (உரோ. 3 :3) என்று யூதர்கள்‌ பற்றிப்‌ பவுல்‌ கூறியது இன்று நமக்குப்‌ பொருந்தியமைவது எவ்வளவு உண்மை? விசுவாசமின்மை இயேசு செயல்படத்‌ தடையாகிறது. எனவேதான்‌ அங்கு ஒருசிலருக்கு மட்டும்‌ இயேசு குணம்‌. கொடுத்தாரேயொழிய “வேறு ஒரு புதுமையும்‌ செய்ய முடியவில்லை” (6:5). என்று வாசகம்‌ முடிகிறது. இயேசுவின்‌ புதுமைகளுக்கு அடிப்படை விசுவாசமே என்பது நற்செய்திகள்‌ தரும்‌ சான்று. எனவே, நமது வாழ்விலும்‌ விசுவாசத்தை வளர்ப்போம்‌. விசுவாசம்‌ என்பது வெறும்‌ வாய்ப்பிரகடனம்‌ அன்று; அன்பில்‌ வெளிப்படும்‌ பற்றுறுதி. இது இறைவன்மேல்‌ பற்று, பிறர்பால்‌ பற்று என்று மலரும்போது, உண்மை விசுவாசம்‌ வெளிப்படுகிறது. விசுவசிப்போம்‌; அன்பு செய்வோம்‌. (விசுவாசமில்லாததைக் கண்டு அவர் வியப்புற்றார்.)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு ser