தன்னையே செம்மறியாக்கினார் இயேசு.
இந்த உலகில் மனிதர்கள், தங்கள் படிப்பால், பதவிகளால் தீர்மானிக்கப்படுகிறார்கள். இவர் எழுத்தாளர், இவர் மருத்துவர், இவர் விஞ்ஞானி, இவர் பேராசிரியர், இவர் அதிகாரி, இவர் தலைவர் என்றெல்லாம் மனிதர்கள் பிரிக்கப்படுகிறார்கள். ஆனால் இயேசுவோ இறைவனின் ஆட்டுக்குட்டி, உலகின் பாவங்களைப் போக்க வந்தவர் (யோவா. 1:29) என்று வருணிக்கப்படுகிறார். இயேசு தன்னையே பலியாக்க தலைநிமிர்ந்து சென்றார். தனது பெருமைக்காக அல்லாமல், தன்னால் மனித குலம் வாழ்வு பெறவே இதைச் செய்யத் துணிகிறார். இவரைத்தான் உயிர் கொடுக்கும் ஆட்டுக் குட்டியாக உலகிற்கு காட்டுகிறார் திருமுழுக்கு யோவான். . ஆம்! திசை மாறிய ஆடுகளை நேரிய பாதையில், சரியான பாதையில் அழைத்துச் செல்லவே, பாவங்களைப் போக்கும் செம்மறியாகவும், சுமைகளை சுமக்கும் மனிதராகவும் தன்னையே உட்படுத்திக் கொண்டார் இயேசு. இதனால் சாதாரண விபச்சார பெண் அசாதாரண சூழ்நிலையில் புனிதையாகின்றாள். மனித குலம் பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தது (உரோ. 3:23). இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு செம்மறியாக, நமக்காகத் தம்மையே கையளித்தார். பாவத்தைச் சுமந்தவர் மட்டுமல்ல. பாவத்திலிருந்து புனித வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார் (எசாயா 53:5-6)
இந்தியாவை சிபி சக்கரவர்த்தி என்ற அரசன் ஆண்டு வந்தான். ஒரு பருந்து ஒரு புறாவை துரத்தி வந்தது. ஆனால் அந்த புறாவானது அடைக்கலம் தேடி சிபி சக்கரவர்த்தியின் மடியில் தஞ்சம் புகுந்தது. எனவே புறாவுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க விரும்பினார் அரசன். ஆனால் துரத்தி வந்த பருந்தோ, அந்தப் புறா எனது உணவு. அதை நீண்ட நேரமாகத் துரத்தி வந்திருக்கிறேன். நீங்கள் எப்படி அடைக்கலம் கொடுக்கலாம் என்று தர்க்கம் செய்தது. அதற்கு அரசன், புறாவுக்கு நான் அடைக்கலம் கொடுத்து - விட்டேன். அது எவ்வளவு எடையோ அந்த அளவுக்கு என் உடலில் உள்ள தசையை வெட்டி உனக்குத் தருகிறேன் என்று : சொல்லி புறாவை தராசின் ஒரு தட்டிலும், அடுத்த தட்டில் தன் தொடையில் இருந்து சதையை வெட்டி வைத்தார். ஆனால் புறாவின் எடைக்கு சதை ஒத்து வரவில்லை. கடைசியாக சிபி சக்கரவர்த்தி தராசில் ஏறி அமர்ந்தார். அப்போது தராசு சமநிலைக்கு வந்தது. புறாவுக்கு அடைக்கலம் கொடுக்கத் தன்னையே கொடுத்தார் அரசன். ஓர் உயிரைக் காப்பாற்ற தன்னையே கையளித்தார் சிபி சக்கரவர்த்தி.
ஆனால் உலகத்தின் பாவம் போக்கி, நமக்கு நிலைவாழ்வு கொடுக்க இயேசு பாவம் போக்கும் செம்மறியானார். நமது பாவங்களைப் போக்கி நமக்கு அடைக்கலம் கொடுக்கத் தனது. காயங்களாலும், கல்வாரி இரத்தத்தாலும் தன்னையே செம்மறியாக்கினார் இயேசு. நாம் அவருக்காக நம்மையே கொடுக்கத் தயாராக இருக்கிறோமா?
உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறி இயேசு
இன்றைய நற்செய்தியில் இயேசுவை உலகின் பாவங்களைப். போக்குகின்றவராக திருமுழுக்கு யோவான் அறிமுகப்படூத்துகின்றார்.
பாவம் என்றால் என்ன? இதோ கவிஞர் கண்ணதாசனின் கதையொன்று. ஒரு குளத்துக்குள்ளே பல மீன்கள். ஒரு நாள் அந்தக் குளத்திலே வாழ்ந்த பரிய மீன் ஒன்று அதிலே வாழ்ந்த சின்ன மீன்களைப் பார்த்து: எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்றது. அதற்குச் சின்ன மின்கள்:மிகுப்பரிய மீனாகிய உனக்கு எங்களால் எப்படி உதவி செய்ய முடியும்? நாங்கல்லாம் மிக மிகச் சிறியவர்கள் என்றன. அதற்குப் பெரிய மீன்: உங்களால் எனக்கு உதவி செய்ய முடியவில்லையென்றால் நான் உங்களுக்கு உதவி செய்கின்றேன் என்று சொல்லி ஒவ்வாரு சிறிய மீனாகப் பிடித்து விழுங்கியது. விழுங்கியபோது, இனி உங்களுக்கு எந்தத் துன்பமும் இருக்காது: இனி என்றென்றும் உங்களுக்கு நிலையான ஒய்வே என்றது.
கதையிலே வந்த பெரிய மீன் புரிந்த செயலுக்குப் பெயர்தான். பாவம். பாவத்திற்கு மறுபெயர் சுயநலம்! பாவம், சுயநலம் எங்கெல்லாம். இருக்கின்றனவோ அங்சகல்லாம் நமக்கும் கடவுளுக்குமிடையே உள்ள உறவ முறியும்: கடவுளை நேருக்கு நேர் சந்திக்கப் பயந்து நாம் அவரைவிட்டு விலகிச் செல்வோம். சூரியனை விட்டு அகன்று செல்லச் செல்ல நம் நிழல் நீளமாவது போல, கடவுளை விட்டு நமது பாவத்தால். நாம் விலகிச் சசல்லச் ஈசல்ல நமது பாவ நிழல், பாவ இருள் அதிகமாகும்.
ஒரு காலத்தில் கடவுளின் நண்பர்களாக விளங்கிய ஆதாமும், ஏவாளும். பாவம் செய்த பிறகு ஆண்டவரின் திருச்சந்நிதியை விட்டு விலகி மரங்களுக்கிடையே ஒளிந்து கொண்டதை நாம் தொடக்க நூலிலே படிக்கின்றோம் [தொநூ 3:8]. புதிய ஏற்பாட்டில் எரிகோ நகரிலே வாழ்ந்த சக்கேயு என்னும் செல்வர் தூயவராக விளங்கிய இயேசுவைச் சந்திக்க ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறி அமர்ந்திருந்தார் என்று லூக்கா நற்செய்தியில் படிக்கின்றோம் (லூக் 19:1-10). பாவம் எங்கு (கருக்கின்றதோ அங்கே பயம் இருக்கும். பயமிருக்குமிடத்திலே பாசமிருக்காது : பாசமிருக்குமிடத்திலே பயமிருக்காது! பாசம் எங்கு இல்லையோ அங்கே உறவு இருக்காது!
நாமல்லாம் இறைவனோடும், நம் அயலாரோடும், நம்மோடும். (இயற்கையோடும் நல்லுறவோடு வாழ ஆசைப்படுகின்றவர்கள். நமது ஆசை நிறைவேற வேண்டுமென்றால் நமது வாழ்வின் ஒளியாக (முதல் வாசகம்) விளங்குகின்ற ஆண்டவராம் இயேசுவின் பக்கம் நம். கண்களை திருப்ப வேண்டும் ருளுக்கும், அமைதிக்கும் ஊற்றாக விளங்குகின்ற (இரண்டாம் வாசகம்) இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் நாம் சரணடைய வேண்டும்.
இயேசு என்னும் கலங்கரைத் தீபத்தை நோக்கி நமது வாழ்க்கைப் படகைச் செலுத்தினால், நாம் கரை சேர்வோம் - புதுவாழ்வு என்னும். கரையைச் சேர்வோம். அந்தக் கரையினிலே, என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன் என நாம் ஒவ்வொருவரும் பாடி மகிழ்வோம்: ஆனந்தம். ஆனந்தம். ஆனந்தம் என ஆடி மகிழ்வோம்.
பாவ இருள் நம்மைவிட்டு அகன்ற நிலையிலே, நாம் ஒவ்வாருவரும் மனிதமும், புனிதமும் கமழ பூத்தப் புதுமலராய், புண்ணியத் திருமலராய், புவியினுக்கு ஒரு மலராய் வாழ்ந்து மகிழ்ந்திருப்போம்.
மேலும் அறிவோம்:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள் : 948)
பொருள் : வந்தநோய் எதுவென்று தெளிவாகத் தெரிந்துகொண்டு அது வந்த காரணத்தையும் அதைப்போக்கும் வழிமுறையினையும் ஆராய்ந்து. அதற்கு ஏற்றவாறு முறையான மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்!
ஓர் இளம் பெண் மாலைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் கல்லூரிக்குப் போன அவர் இரவு 11 மணிக்கு வீடு திரும்பினார். “ஏண்டி ரொம்ப லேட்டாக வந்தே?” என்று அவரை அவருடைய அம்மா கேட்டார். அதே கேள்வியை அவருடைய அப்பா ஆங்கிலத்திலும், அண்ணன் மலையாளத்திலும், தம்பி தெலுங்கிலும் கேட்டனர். ஏன்? ஏனென்றால் ஒரு வயசுப் பெண் லேட்டாக வந்தால் நாலுபேர் நாலுவிதமாகப் பேசுவார்களாம்!
கிறிஸ்துவைப் பற்றியும் நாலுபேர் நாலுவிதமாகத்தான் பேசினர். சிலர் அவரைப் பேய்பிடித்தவன், சமாரியன், குடிகாரன் என்றும் வரி தண்டுவோரின் நண்பர் என்றும் கூறினர். வேறுசிலர் அவர் தச்சரான யோசேப்பின் மகன் என்றனர்; மற்றும் சிலர் அவர் ஓர் இறைவாக்கினர் என்றனர். ஆனால் கிறிஸ்து யார்? அவரின் உண்மையான இயல்பு என்ன?
கிறிஸ்துவின் முன்னோடியும், ஒளியைக் குறித்துச் சாட்சி சொல்ல வந்தவருமான திருமுழுக்கு யோவான் இன்றைய நற்செய்தியிலே கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டி, “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி (செம்மறி). ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” (யோவா 1:29) என்று சிம்மக் குரலில் சான்று பகர்கின்றார். இன்றைய முதல் வாசகம் மெசியாவை (கடந்த ஞாயிறு போலவே) “இறை ஊழியனாகச் சித்தரிக்கின்றது. “கருப்பையிலிருந்து ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்” (எசா 49:59) இறை ஊழியனின் சிறப்புப் பண்புகள்: “அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்படும் ஆட்டுக்குட்டி ... கத்தாத செம்மறி” (எசா 53:7). “அவர் தம் உயிரை குற்ற நீக்கப் பலியாகத் தந்தார்” (எசா 53:10).
இயேசு கிறிஸ்து பாஸ்கா செம்மறி. யூதர்கள் ஆண்டுதோறும் நீசான் மாதம் 14-ஆம் தேதி ஆலயத்தில் பாஸ்கா செம்மறியைப் பலி செலுத்தினர். நீசான் மாதம் 14-ஆம் தேதி யூத குருக்கள் ஆலயத்தில் பாஸ்கா செம்மறியைப் பலி செலுத்திய அதே நேரத்தில் கிறிஸ்து கல்வாரியில் சிலுவை மரத்தில் தமது இன்னுயிரைப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றார். பாஸ்கா செம்மறியின் எலும்பை முறிக்கக் கூடாது (விப 12:4-6), அவ்வாறே கிறிஸ்துவின் கால்களை முறிக்கவில்லை (யோவா 19:33). எனவே கிறிஸ்துவே உண்மையான பாஸ்கா செம்மறி; உலகின் பாவங்களைப் போக்கியவர். “நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்” (1 கொரி 5:7) என்கிறார் திருத்தூதர் பவுல்.
"கிறிஸ்து தமது ஒரே பலியினால் முற்காலப் பலிகளை நிறைவு செய்தார். அவரே குருவும் செம்மறியாகவும் திகழ்ந்தார். நாம் திருப்பலியில் பங்கு பெறுவதால் நாமும் கிறிஸ்துவின் பலித் தன்மையில் பங்குபெற வேண்டும். நம்மையே பிறர்க்குப் பிட்டுக் கொடுக்க வேண்டும்; பிறர்க்காக நமது இரத்தத்தைப் பிழிந்து கொடுக்க வேண்டும். அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாக்கிக் கொள்வர். ஆனால் அன்பு உடையவர்களோ தம் உடலையும் பிறர்க்குக் கையளிப்பர்.
அன்பிலார் எல்லாம்தமக்குரியர்;அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் 72).
ஒரு காதலன் தன் காதலியிடம், “அன்பே! உனக்காக நான். தாஜ்மஹாலையும் கட்டத் தயார்” என்றான். அதற்கு அவள், “அறிவு கெட்ட முண்டம்! நான் மூணுமாசமாய் இருக்கிறேன். முதலில் என் கழுத்தில் தாலியைக் கட்டித் தொலை” என்றாள். காதலியின் கழுத்தில் தாலிகட்டத் துணியாதவன் தாஜ்மஹாலை எப்படிக் கட்டுவான்? சிறிய காரியங்களில் தியாக உணர்வு இல்லாதவர்கள் பெரிய காரியங்களில் எப்படித் தியாக உணர்வைக் காட்டுவார்கள்? “நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்” (1 யோவா 3:18).
திருமுழுக்கு யோவான் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தது போல நாமும் கிறிஸ்துவுக்குச் சான்று பகர வேண்டும். திருமுழுக்கு யோவான் யூதர்களிடம், “நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்” (யோவா 1:26) என்று கூறினார். மெசியா அவர்களிடையே நடமாடியும் யூதர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. கடவுள் பலவகையில் நம்மைச் சந்திக்கிறார். ஆனால் நாம் அவரைக் காணத் தவறிவிடுகிறோம். அன்றாட வாழ்வு ஓர் அடையாளம். கடவுளை நமது சாதாரண வாழ்வில், சாதாரண நிகழ்வுகளில் காணப் பழகிக் கொள்வதுதான் ஆழ்ந்த ஆன்மிகமாகும்.
நமது கடவுள் உண்மையிலேயே மறைவான கடவுள் (எசா 45:16). அவர் அனைத்திலும் இருக்கிறார்; அனைத்துமாய் இருக்கிறார் (கொலோ 3:1). அவரைக் காணாதபடி நமது பார்வை தடைபட்டுள்ளது (லூக் 24:16). நமது சுயநலம், ஆணவம், பொருளாசை, காம இச்சைகள் கடவுளைக் காணாதபடி நம் கண்களைக் குருடாக்கி விடுகின்றன. முகக் கண்களால் அல்ல, அகக் கண்கொண்டு கடவுளைக் காண வேண்டும். நம்பிக்கை கொண்டோர்க்கு ஒவ்வொரு முட்செடியும் மோசே கண்ட முட் செடி; கடவுளின் உடனிருப்பு; இறைவனின் திருக்காட்சி; புனிதமான இடம்; காலணியைக் கழற்ற வேண்டிய இடம் (விப 3:2-5).
நமது வாழ்வில் நிகழும் சில கசப்பான நிகழ்வுகளால், நாம். இறைவனைக் காணத் தவறிவிடுகிறோம். கடவுள்மேல் நமக்கு வெறுப்பு ஏற்படுகிறது. ஒருவர் ஆலயம் செல்வதில்லை. ஏன்? அவர் தனது மனைவியை ஆலயத்தில் தான் முதல் முதலாகப் பார்த்தாராம். அவ்வளவு மோசமான பெண்ணை ஆலயத்தில் காட்டிய அந்த ஆண்டவன் முகத்தில் ஆயுள் முழுவதும் முழிக்கமாட்டாராம்! பாவம்!! ஒரு சிலர் ஆலயத்துக்கு "அம்பாளைத்' தரிசிக்கச் செல்கின்றனர்; வேறு, சிலரோ “நம்பாளைத்" தரிசிக்கச் செல்கின்றனர். அவ்வாறு செல்வது அவர்கள் குற்றமே, ஆண்டவரின் குற்றமல்ல!
கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். என்பதை அறியாதவர்கள், கங்கையிலும் காவிரியிலும், கன்னியாகுமரியிலும் 'இந்துமகாக்கடலிலும் புனித நீராடி என்ன பயன்? என்று கேட்கிறார் அப்பர் அடிகளார்.
கங்கையாடிலென் காவிரியாடிலென்?
கொங்குதென்குமரித் துறையாடிலென்?
ஓங்குமாகடல் ஒதநீராடிலென்?
எங்கும்ஈசன் எனாதவர்க்கு இல்லையே!
ஆலயத்தில் அருள்வாக்கிலும் அருள் அடையாளங்களிலும் ஆண்டவரைச் சந்திக்கத் தெரியும் நமக்கு, அன்றாட வாழ்வின் நிகழ்வுகளில் அவரைச் சந்திக்கத் தெரியாதது ஏன்?
பாவச் சுமைதாங்கி
ஜெர்மனி நாடு. எவர்டன் என்ற இடம். அங்குள்ள ஓர் ஆலயத்தின் மேற்புற உச்சியில் ஆட்டுக்குட்டி ஒன்றை ஒற்றைக் கல்லில் செதுக்கி வைத்துள்ளனர். : இதன் வரலாற்றுப் பின்னணி வியப்புக்குரியது! ஆலயக் கோபுர உச்சியில் சிற்ப வேலை செய்து கொண்டிருந்தபோது சிற்பியைத் தாங்கியிருந்த கயிறு திடீரென்று அறுந்துபட சிற்பி கீழே விழுந்தார். அந்த இடத்தில் மேய்ந்து , கொண்டிருந்த ஒர் ஆட்டுக்குட்டியின் மேல் விழுந்ததால், தெய்வ அருளால் சிற்பி உயிர் தப்பினார். ஆனால் அவரது உடற்பளுவைத் தாங்க இயலாமல் ஆட்டுக்குட்டி உயிர் இழந்தது. தனக்காக, தன் பொருட்டு அன்றோ அந்த ஆட்டுக்குட்டி இறந்தது, அதன் நினைவாக ஏதாவது செய்ய வேண்டாமா என்று சிந்தித்த சிற்பியின் எண்ணத்தின் விளைவே மேற்குறிப்பிட்ட சிற்பம். தியாகத்துக்கு எழுப்பிய நினைவுச் சின்னம்!
பிறருக்கு வர வேண்டிய பதவி, பணம் எல்லாம் நமக்கு வராதா என்று நினைப்பவர் பலர். பிறருக்கு வரும் தண்டனை நமக்கு வராதா என்று யாராவது சொல்வார்களா?
மனித குலம் முழுவதற்கும் வர இருந்த தண்டனையைத் தன்மீது விரும்பிச் சுமந்தவர் ஒருவர் உண்டு. அவர்தான் இயேசு. நமது தண்டனை அவர்மேல் விழுந்தது என்பார் இறைவாக்கினர் எசாயா. அதனால்தான் “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகத்தின் பாவத்தைப் போக்குபவர்” (யோ 1:29) என்று இயேசுவை அறிமுகப்படுத்துகிறார் திருமுழுக்கு யோவான். இயேசு பற்றிய முதல் அறிமுகம் இது! அவரது வாழ்வின் சுருக்கமும் கூட!
“கடவுளின் செம்மறி” - இதன் பொருள் என்ன? ஒரு யூதனின் வாழ்வில் அவன் எதிர்பார்த்தது ஆற்றல்மிக்க அரசியல் தலைவரை. ஆனால் இயேசுவோ தன்னையே பலியாக்கும் சாந்தமான செம்மறியாக வந்தார்.
திருவிவிலியத்தில் செம்மறி “பாவச் சுமைதாங்கி, மீட்பின் சின்னம்” என்று இரு கோணங்களில் சித்திரிக்கப்படுகின்றது.
1.செம்மறி பாவச் ௬மைதாங்கி: யாம்கிப்பூர் என்ற யூதர்களின் சமய விழா கருத்தாழமிக்க பாவக் கழுவாய் விழாவாகும். இரு வெள்ளாட்டுக்கிடாய்கள் ஆலயத்துக்கு முன் கொண்டுவரப்படும். திருவுளச் சீட்டுப்போட்டு அவற்றில் ஒன்று பாவத்துக்காகப் பலியிடப்படும். அதன் இரத்தம் இரக்கத்தின் இருக்கை மீது தெளிக்கப்படும். “மற்ற ஆட்டின் மீது தலைமைக்குரு தன் இரு கைகளையும் வைத்து இஸ்ரயேல் மக்களின் எல்லாக் குற்றங்களையும், தவறுகளையும் பாவங்களையும் அறிக்கையிட்டு அதன் தலைமேல் சுமத்தி, பாலை நிலத்தில் போக்கு ஆடாக விடப்படும்” (லேவி. 16:21)
ஆண்டவரின் ஊழியர் பற்றிய நான்காவது கவிதையில் இறைவாக்கினர் எசாயா இயம்புவது போல, “கொலைக் களத்துக்கு "இழுத்துச் செல்லப்படும் செம்மறியாக ... அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம் தீச் செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்” (எசா. 53:5-8). இது இயேசுவுக்கு மட்டுமே பொருந்தும் என்பதைத் திருத்தூதர் பிலிப்பு எத்தியோப்பிய அரச அலுவலருக்குக் கொடுத்த விவிலிய விளக்கம் உறுதிப்படுத்தும். (தி.ப. 8:26-29). “இது எனது உடன்படிக்கையின் இரத்தம் பலருக்காகச் சிந்தப்படும்'” (மார்க். 14:24) என்ற இயேசுவின் வார்த்தைகளில் முழுமையாக நிறைவு காணும்.
2. செம்மறி மீட்பின் அடையாளம் : எகிப்திலிருந்து விடுதலையின் முந்தைய நாள் இரவு இஸ்ரயேல் மக்களின் வீடுகளில் உண்ணப்பட்டதுதான் பாஸ்கா செம்மறி. அதன் இரத்தம் யார் யாருடைய கதவு நிலைகளில் பூசப்பட்டதோ அவர்கள் அனைவரும் சாவுக்குத் தப்பினார்கள் (வி.ப. 12:13).
ஆபிரகாமின் நம்பிக்கையைச் சோதிக்கும் அந்தச் சோக நிகழ்ச்சியிலும், ஈசாக்குக்குப் பதிலாகப் பலியிட கடவுளே ஓர் ஆட்டுக்கிடாயை ஏற்பாடு செய்யவில்லையா? (தொ.நூ. 22:13).
ஆலயத்தில் யூத குருக்கள் பாஸ்கா செம்மறியைப் பலிசெலுத்திய அதே வேளையில், இயேசு கல்வாரிச் சிலுவையில் தமது இன்னுயிரைப் பலியாக ஒப்புக் கொடுத்தார் (யோ. 19:14). எனவே திருத்தூதர் பவுல் “கிறிஸ்துதான் புதிய பாஸ்கா செம்மறி” என்பார் (1. கொரி. 5:7).
தூயவாழ்வுக்கு நம்மை அழைக்கும் திருத்தூதர் பேதுரு சொல்வார்: “உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்கு உட்பட்டதல்ல. மாறாக மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும்” (1 பேதுரு 1:18-19).
இயேசுவின் சிலுவைப்பலி ஒரு தியாகப்பலி. தமக்கென ” ஒருதுளி இரத்தம் முதலாய் வைக்காது நமக்காகத் தம்மையே முழுவதும் கையளித்த பலி. துன்புறும் மனிதனைத் தேற்றும், திடப்படுத்தும் பலி! எனக்காக இயேசு எவ்வளவு பாடுபட்டார்; அவருக்காக நான் என்ன வலியை ஏற்றுக் கொள்கிறேன் என்ற உணர்வூட்டும் பலி!
தூய பிரான்சிஸ்கு அசிசியாரின் வரலாற்றில் ஒரு வினோத நிகழ்வு. அவருடைய சீடர்களுள் இருவர் போதிக்கச் சென்றார்கள். அவர்கள் சொல்லெறிந்தார்கள். அதைக் கேட்ட மக்களோ கல்லெறிந்தார்கள். கல்லெறிந்த திசையில் தான்தான் முன்னே நிற்க வேண்டும் என்று இருவருமே தள்ளுமுள்ளுச் செய்தார்களாம். “உனக்குப் பதிலாய் நான் கல்லெறிபடுவேன் ” என்றார் ஒருவர். “இல்லை, நீ இரு, நான்தான் எறிபடுவேன்”' என்று அடுத்தவர் கல் வந்த திசை பார்த்து முன்னே சென்றாராம். இதற்காகச் சண்டைபோட்டுக் கொண்டார்களாம்.
பிறர் மீது விழும் கல்லெறியை, தான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இருவருமே கடவுளின் செம்மறிகள்தாம்!
“இறைவா நண்பனுக்கு வந்த மாரடைப்பு எனக்கு வரட்டும். அவர் அதனின்று விடுதலை பெறட்டும்” என்று செபிப்பவரும் ' இறைவனின் செம்மறியே!
நான் துன்பப்பட்டாலும் பிறர் துன்புறக்கூடாது என்று எண்ணும் எல்லாரும் இறைவனின் செம்மறிகளே!
பிறர் குற்றத்தைத் தன்மீது சுமந்து கொண்டு பிறரைக் காப்பாற்றுபவரும் கடவுளின் செம்மறியே!
இதையெல்லாம் விடுத்து பிறர் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. தான் பிழைத்துக் கொண்டால் சரி என்று எண்ணுபவர்களைப் பற்றி என்ன சொல்ல?
தவ வலிமை மிக்க முனிவர் ஒருவர் தான் இறக்கும் நேரம் நெருங்குவதை உணர்ந்தார். தனக்குப் பின் தன் பணியைத் தொடரப் பொருத்தமான சீடரைத் தேர்ந்து தெளிய விரும்பினார்.ஒர் இளைஞனைச் சந்தித்தார். “என்னிடம் பொன்னோ பொருளோ இல்லை. என் குரு என்னிடம் சொன்ன இரகசியம் ஒன்று உண்டு. அதை நீ யாரிடமும் சொல்லாமல் இருந்தால் நூறாண்டு வாழலாம். அதை நீ எவரிடமாவது சொன்னால் இறந்துவிடுவாய்”' என்று சொல்லி நீண்ட வாழ்வுக்கான அந்த இரகசியத்தைக் கற்றுக் கொடுத்தார்.
அதைப் பற்றிச் சிந்தித்த சீடன், அடுத்த நாள் மக்கள் கூடும் பொது இடத்தில் நின்று எல்லோருக்கும் கேட்குமாறு உரக்கச் சொன்னதும் அந்த இளைஞன் க்ழே விழுந்து இறந்தான். நிகழந்ததைக கேள்விப்பட்ட முனிவர் தன் தவ வலிமையால் இளைஞனை உயிர்பெறச் செய்து அவனிடம் “இரகசியத்தைச் சொன்னால் இறந்து விடுவாய் என்று நான் எச்சரித்தும் ஏன் சொன்னாய்?”' எனக் கேட்டார். “ஒருவன் வாழ்வதை விட ஊரார் அனைவரும் வாழ்வது நல்லதல்லவா! அதனால்தான் சொன்னேன்” என்று பதில் அளித்தான். “நானும் துறவிதான். ஆனால் இந்த மக்கள் உன்னை மட்டும் எப்பொழுதும் தங்கள் நெஞ்சில் வைத்திருப்பார்கள் ” என்று வாழ்த்தினார் முனிவர்.
தன்னைத் தந்து பிறரை வாழவைப்பதே கிறிஸ்தவ வாழ்வின் அழைப்பு. தான் இறைமகனாய் இருந்தும் மக்கள் வாழ்வு பெறும்பொருட்டு தன்னையே கையளித்தவர் இயேசு. இயேசுவின் பணி தொடர நாம் ஒவ்வொருவரும் இறைவனின் செம்மறியாக மாறுவோம்!
ஆட்டுக்குட்டியாக அறிமுகமான இயேசு …
தமிழகத்திலும், உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழர்களாகிய நாம், பொங்கல் திருவிழாவைச் சிறப்பிக்கின்றோம். இறைவனின் கருணையால், இயற்கை வளமும், மனித உழைப்பும் இணைந்து, நமக்குக் கொடுத்த கொடைகளுக்கு நன்றிசொல்லும் அழகான அறுவடைத் திருநாள் இது.
இந்த அறுவடைத் திருநாளைக் கொண்டாட அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ள நிலம், நீர், காற்று, வயல்வெளி, மாடு, மற்றும், இத்திருநாளின் உயிர்நாடியாக விளங்கும் விவசாயப் பெருமக்கள் ஆகியோரைக் காண, கிராமங்களையும், வயல்வெளிகளையும் நாடிச் செல்லவேண்டிய நாள்கள் இவை. இயற்கையோடு நம்மை மீண்டும் இணைக்க வேண்டிய இத்திருநாளை, ஒரு வியாபாரத் திருநாளாக மாற்றிவிட்டன, பன்னாட்டு நிறுவனங்கள். அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் ஊடகங்கள், குறிப்பாக, தொலைக்காட்சி நிறுவனங்கள், இந்த நாள்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, நம்மை, தொலைக்காட்சி பெட்டியின் முன்பு கட்டிப்போட்டு வைத்துள்ளன. உண்மையான வயல்வெளிகளில் நடந்து, இயற்கையான காற்றை உள்வாங்கி, உள்ளத்திலும், உடலிலும், புத்துணர்ச்சி பெறுவதற்குப் பதில், ஊடகங்கள் காட்டும் வயல்வெளி காட்சிகளைக் கண்டு அறுவடைத் திருநாளை நம் வீட்டுக்குள்ளேயே கொண்டாடும் வழக்கத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
வியாபார உலகமும், ஊடக உலகமும் இணைந்து, நம்மைச் சுற்றி விரித்திருக்கும் இந்த மாய வலையிலிருந்து விடுபட்டு, நம் அறுவடைத் திருநாளின் ஆணிவேர்களாய் விளங்கும் விவசாயப் பெருமக்களுக்காகவும், அவர்களுக்கு துணை நிற்கும், நிலம், நீர், விலங்குகள் ஆகியவற்றிற்காகவும் நன்றி கூறி, பொங்கல் திருநாளை கொண்டாட முயல்வோம். நம் மனங்களில், நன்றி உணர்வும், பகிரும் உணர்வும் பொங்குவதற்கு, இப்பொங்கல் திருநாளன்று இறைவன் நமக்குத் துணை செய்யவேண்டும்.
பொங்கல் விழாவின் முக்கியக் காரணம் அறுவடை. பொருள்செறிந்த அறுவடைத் திருநாளையொட்டி வரும் இஞ்ஞாயிறு வழிபாடு, அறுவடையைக் குறித்த சிந்தனைகளை நம்முன் வைக்கிறது. நல்ல நிலங்களில் வளரும் பயிர்களைப் போல, பாதுகாப்பானச் சூழல்களில் வளர்ந்து, நமக்கும், பிறருக்கும், பயன்தரும் கருவிகளாக நாம் மாறமுடியும் என்ற அழகான எண்ணங்களை, இன்றைய ஞாயிறு வாசகங்கள், நம் உள்ளத்தில் விதைக்கின்றன.
நமக்கே உரித்தான அடையாளங்களைப் புரிந்துகொள்வதைப்பற்றிச் சிந்திக்கும்போது, வலைத்தளத்தில் வலம்வரும் ஓர் அழகியக் கதை நினைவுக்கு வருகிறது. ‘Value What You Have’ - அதாவது, ‘உன்னிடம் உள்ளதை மதித்து வாழ்வாயாக’ என்ற தலைப்புடன் வெளியான அச்சிறுகதை இதோ:
Olavo Bilac என்பவர், பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், பத்திரிக்கையாளர். ஒரு நாள், அவரது நண்பர் அவரைத் தேடிவந்தார். தன்னுடைய சிறு பண்ணை வீட்டை தான் விற்க விரும்புவதாகக் கூறிய நண்பர், அதை விற்பதற்கு நல்லதொரு விளம்பரத்தை எழுதித் தரும்படி Bilac அவர்களிடம் கேட்டுக்கொண்டார். Bilac அவர்கள் பின்வரும் விளம்பர வரிகளை எழுதினார்:
"ஓர் அழகிய பண்ணை வீடு விற்பனைக்கு வருகிறது. இங்கு பறவைகளின் கானம் அதிகாலை முதல் ஒலிக்கும். பண்ணையின் நடுவில் அழகிய, தெளிந்ததொரு நீரோடை செல்கிறது. காலை இளஞ்சூரியனின் ஒளியில் வீட்டின் முகப்பு தினமும் குளிக்கும். மாலையில் பண்ணையில் பரவும் நிழலும், அமைதியும் நிம்மதி தரும்." என்ற இவ்வரிகளை எழுதி நண்பரிடம் கொடுத்தார் Bilac.
ஒரு சில வாரங்கள் சென்று தன் நண்பரைச் சந்தித்த Bilac அவர்கள், "என்ன? அந்த பண்ணை வீட்டை விற்றுவிட்டாயா?" என்று கேட்டார். அதற்கு நண்பர், "இல்லை நண்பா! நீ அந்தப் பண்ணை வீட்டைப்பற்றி எழுதிய விளம்பரத்தை வாசித்தபின், என் பண்ணை வீடு எவ்வளவு அழகானதென்பதை உணர்ந்துகொண்டேன். அதை நான் விற்கப் போவதில்லை." என்று புன்னகையுடன் பதில் சொன்னார்.
நம்மைப்பற்றி, நம்மிடம் உள்ளவற்றைப்பற்றி எவ்வளவு தூரம் நாம் அறிந்துள்ளோம்; நம்மை நாமே எவ்வளவு ஆழமாய் புரிந்துவைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்து, நமது நல் வாழ்வு, நல வாழ்வு அமையும். நம்மிடம் உள்ள உண்மையான கருவூலங்களைப் புரிந்துகொள்ளாமல், தூரத்துக் கானல்நீரை துரத்துவதால், வாழ்வின் பெரும் பகுதியை, நாம் வீணாக்குகிறோம். நம் உண்மை அடையாளங்களுடன் வாழ்வதற்குப்பதில், அவரைப்போல், இவரைப்போல் என்று போலி முகமூடிகளை அணிந்து வாழ முயல்கிறோம். பல நேரங்களில், இந்தப் பொய்யான, மாயைகளைப் பெறுவதற்கு, நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலைபேசுகிறோம். நம் குடும்ப உறவுகள், தொழில், நண்பர்கள் என்று, நம்மைச் சூழ்ந்துள்ள நல்லவற்றை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம்.
நாம் நாமாகவே வாழ்வதற்கு, நம்மைப்பற்றிய தெளிவு முதலில் நமக்கு வேண்டும். இந்தத் தெளிவு, நம்மைப்பற்றிய உண்மையான மதிப்பை நமக்குள் உருவாக்கும். வேறு யாரும் நம்மை மதிப்பதற்குமுன், நமது பார்வையில் நாம் மதிப்புப் பெறவேண்டும். நமது பார்வையில், இறைவன் பார்வையில், நாம் மதிப்பு பெற்றவர்கள் என்பதை, இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா 49: 3, 5-6) நாம் சந்திக்கும் இறைவாக்கினர் எசாயாவைப் போல், நாமும், நெஞ்சுயர்த்திச் சொல்லவேண்டும்.
இறைவாக்கினர் எசாயா 49: 1,5
கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்... ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்.
ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் மதிப்புப் பெறும்போதுதான், அடுத்தவரையும் நம்மால் மதிக்கமுடியும். இன்றைய நற்செய்தியில் (யோவான் 1: 29-34) நாம் சந்திக்கும் திருமுழுக்கு யோவான், இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. தன்னைச் சுற்றிலும் எப்போதும் அலைமோதும் கூட்டத்தைக் கண்டு, யோவான், தான் என்ற அகந்தை கொண்டு, நிலை தடுமாறவில்லை. தன் உண்மையான நிலை, தன் மதிப்பு அனைத்தும் இறைவனின் வழியை ஏற்பாடு செய்வதில்மட்டுமே அடங்கியுள்ளது என்று, தன்னைப்பற்றியத் தெளிவு யோவானுக்கு இருந்தது. தான் ஏற்பாடு செய்திருந்த வழிக்கு உரிமையாளர் வந்துவிட்டார் என்பதை உணர்ந்ததும், மக்களின் கவனத்தை அந்த உரிமையாளர் பக்கம் திருப்பினார் திருமுழுக்கு யோவான். இதைத்தான் இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.
யோவான் நற்செய்தி 1: 29,34
இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்... இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்.”
யோவான் நற்செய்தியின் முதல் பிரிவில் பல அறிமுகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நற்செய்தியின் ஆரம்பமே ஓர் இறையியல் அறிக்கையாக அமைந்துள்ளது. அந்த அறிக்கையில், இயேசு, இறைவனுடன் வாழ்ந்த வாக்கு என்றும், அந்த வாக்கு மனிதரானார் என்றும், நற்செய்தியாளர் யோவான் அறிமுகம் செய்து வைக்கிறார் (காண்க. யோவான் 1: 1-18). இதைத் தொடர்ந்து, திருமுழுக்கு யோவானின் அறிமுகம் இடம்பெறுகிறது. அவர், தான் மெசியாவோ, எலியாவோ, இறைவாக்கினாரோ அல்ல, தான் பாலைநிலத்தில் ஒலிக்கும் குரல் என்று தன்னையே அறிமுகம் செய்கிறார் (காண்க. யோவான் 1: 19-28).
மறுநாள், அதாவது, தான் யார் என்று மக்களுக்கு அறிமுகம் செய்துகொண்ட மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!..." என்றார் (யோவான் 1:29). இன்றைய நற்செய்தி இவ்வாறு ஆரம்பமாகிறது. "நான் மெசியா அல்ல" (யோவான் 1:19) என்று முந்தின நாள் திட்டவட்டமாகக் கூறிய திருமுழுக்கு யோவான், மறுநாள், இயேசுவைக் கண்டதும், 'இதோ மெசியா' என்று அவரை, மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" (யோவான் 1:29) என்று அவரை அறிமுகம் செய்துவைக்கிறார். 'மெசியா' என்ற சொல்லின் முதல் பொருள், 'அர்ச்சிக்கப்பட்டவர்' என்றாலும், அந்த அர்ச்சிப்பின் விளைவாக, அவர் ஓர் அரசராக, தலைமைகுருவாக மாறும் நிலையும் அச்சொல்லுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்சி, அதிகாரம் என்ற எண்ணங்களுடன் தொடர்புள்ள 'மெசியா' என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், 'ஆட்டுக்குட்டி' என்ற சொல்லின் வழியே, இயேசுவின் பணிவாழ்வை அறிமுகப்படுத்துகின்றனர், திருமுழுக்கு யோவானும், நற்செய்தியாளர் யோவானும்.
ஒருவரை முதல் முறையாகச் சந்திக்கும்வேளையில், அல்லது, அவர் நமக்கு அறிமுகம் செய்துவைக்கப்படும் வேளையில், அவரைப்பற்றி நம் மனதில் பதியும் உருவம், எண்ணம் ஆகியவை ஆழமானதாக, நீண்டகாலம் நீடிப்பதாக அமையும் என்பதைக் கூற, ஆங்கிலத்தில், "First impression is the best impression" என்ற கூற்று பயன்படுத்தப்படுகிறது. இதை மனதில் கொண்டே, ஒருவர் அறிமுகமாகும் வேளையில், அவரைப்பற்றி சொல்லப்படும் கருத்துக்களில் அதிக கவனம் செலுத்தப்படும்.
'ஆட்டுக்குட்டி' என்ற சொல்லில், பலியாகுதல், பாவங்களைச் சுமத்தல், விருந்தில் உணவாகுதல் போன்ற எண்ணங்கள் வெளிப்படுகின்றன. கூடுதலாக, பாஸ்கா இரவன்று, ஆட்டுக்குட்டியின் இரத்தம், கதவு நிலைகளில் பூசப்பட்டதால், இஸ்ரயேல் மக்கள் அழிவிலிருந்து காக்கப்பட்டனர். எனவே, 'ஆட்டுக்குட்டி', மக்களின் கவசமாகவும் அமைந்தது. பலியாதல், பழிதீர்த்தல், உணவாதல், உயிர்களைக் காத்தல் என்ற அனைத்து அர்த்தங்களும் இயேசுவுக்கு அற்புதமாகப் பொருந்தியிருந்ததால், அவரை, திருமுழுக்கு யோவான், "கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று அறிமுகப்படுத்தினார்.
தன்னைவிட வேறொருவர் அதிக மதிப்புடையவர் என்று சொல்ல, ஒருவருக்கு, தன்னம்பிக்கையும், தன்னைப்பற்றியத் தெளிவும் தேவை. இத்தகையத் தெளிவும், நம்பிக்கையும் இல்லாமல், பிறரை உயர்த்திப் பேசும்போது, அதில் ஒரு போலியான தாழ்ச்சி தெரியும். இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவான், இயேசுவைச் சுட்டிக்காட்டி, புகழுரைகள் சொன்னார். இயேசுவும், திருமுழுக்கு யோவானைக் குறித்து மிகச்சிறந்த புகழுரை வழங்கியுள்ளார் என்பதை நாம் அறிவோம். மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. (மத்தேயு நற்செய்தி 11: 11) என்று இயேசு கூறினார். இயேசுவும், யோவானும், ஒருவரையொருவர் புகழ்ந்துகொண்டது, வெறும் முகத்துதி அல்ல. இருவரும் தங்களை உள்ளூர உயர்வாக மதித்தவர்கள், எனவே அவர்களால் அடுத்தவரின் உயர்வையும் மனதார உணரமுடிந்தது. வாயாரப் புகழமுடிந்தது.
திருமுழுக்கு யோவான், இயேசுவை, 'கடவுளின் ஆட்டுக்குட்டி' என்று அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வு, மனித வாழ்வில் நிகழும் அறிமுகங்கள், அவற்றில் பொதிந்திருக்கும் பொருள் ஆகியவற்றைச் சிந்திக்க நம்மை அழைக்கின்றது.
விளம்பரத்தை விரும்பும் இன்றைய உலகில், 'மக்கள் திலகம்', 'சூப்பர் ஸ்டார்', 'சாதனைப் புலி', 'லிட்டில் மாஸ்டர்'... போன்ற மிகைப்படுத்தப்பட்ட பட்டங்கள் வழியே தலைவர்கள், நடிகர்கள், மற்றும், விளையாட்டு வீரர்கள் அறிமுகம் செய்துவைக்கப்படுவதை நாம் அறிவோம். இவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்களில் பூசப்பட்டிருக்கும் செயற்கைத்தனம், நம்மை வெட்கத்திலும், வேதனையிலும் நிரப்புகின்றது.
இத்தகைய ஒரு சூழலில், தங்கள் வாழ்வை மக்களின் நலனுக்காகக் கையளித்த பல உன்னத மனிதர்கள், தாங்கள் எவ்வாறு நினைவுகூரப்படவேண்டும் என்பதைக் குறித்து தெளிவான எண்ணங்களை வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், அமெரிக்க ஐக்கிய நாட்டில் கறுப்பினத்தவரின் சம உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் போராடிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர்.
1968ம் ஆண்டு, தன் 39வது வயதில் கொல்லப்பட்ட மார்ட்டின் லூத்தர் அவர்கள், இறப்பதற்கு இரு மாதங்களுக்கு முன், அட்லான்டா நகரில், அவர் மேய்ப்புப்பணி ஆற்றிவந்த எபனேசர் பாப்டிஸ்ட் ஆலயத்தில், தன் வாழ்வையும், மரணத்தையும் குறித்து, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் அன்று தன் உரையில் கூறிய ஒரு சில எண்ணங்கள் இதோ:
"அவ்வப்போது நான் என் மரணத்தையும், இறுதி ஊர்வலத்தையும் பற்றி நினைப்பதுண்டு. என் அடக்கச் சடங்கில் என்ன சொல்லப்படும் என்பதையும் எண்ணிப் பார்த்திருக்கிறேன். உங்களில் யாராவது அவ்வேளையில் உயிரோடு இருந்தால், என் அடக்கச் சடங்கில் மறையுரை வழங்குபவரிடம், என்னைப்பற்றி அதிகம் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுங்கள். நான் உலக அமைதி நொபெல் விருது பெற்றதைச் சொல்லவேண்டாம். அதேவண்ணம், நான் பெற்றுள்ள ஏனைய விருதுகளைக் குறித்து சொல்லவேண்டாம். அவை முக்கியமல்ல.
மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர், தன் வாழ்வை, மற்றவர்களுக்குப் பணியாற்றுவதற்காக வழங்கினார் என்று, அந்த மறையுரையாளர் சொல்லட்டும். பசித்தோருக்கு உணவளிக்கவும், ஆடையற்றோரை உடுத்தவும் நான் முயன்றேன். சிறைப்பட்டோரைச் சந்திக்க முயன்றேன். மனித குலத்திற்குப் பணியாற்ற முயன்றேன். மறையுரையாளர் இவற்றையெல்லாம் சொல்லட்டும்.
நான் எனக்குப்பின், சொத்துக்களை விட்டுச்செல்லப் போவதில்லை. ஆனால், ஒரு குறிக்கோளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை விட்டுச் செல்வேன். அதைமட்டும், என் அடக்கச் சடங்கில் சொல்லுங்கள்" என்று மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கூறினார். இந்த உரை வழங்கிய இரு மாதங்களில், 1968 ஏப்ரல் 4ம் தேதி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டார்.
தன் மரணத்தைக் குறித்தும், தான் எவ்வாறு நினைவுகூரப்படவேண்டும் என்பது குறித்தும் அவர் வழங்கிய உரை, அன்று பதிவு செய்யப்பட்டதால், இரு மாதங்களுக்குப் பின், அவரது அடக்கச் சடங்கில், அவ்வுரை மீண்டும் ஒலிபரப்பானது.
மக்களால் தான் எவ்விதம் நினைவுகூரப்படவேண்டும் என்பதில் மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் மிகத் தெளிவான எண்ணங்கள் கொண்டிருந்தார். 1929ம் ஆண்டு, சனவரி 15ம் தேதி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் பிறந்தார். இன்று, அவரது பிறந்தநாளின் 94வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கிறோம். அவரது பிறந்தநாள், அமெரிக்க ஐக்கிய நாட்டில், மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் நாள் என்று, ஒவ்வோர் ஆண்டும், சனவரி மாதம் மூன்றாம் திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு, சனவரி 16, இத்திங்களன்று மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் நாள் சிறப்பிக்கப்படுகிறது.
இனவெறியினால் உண்டாகும் பாகுபாடுகள், அநீதிகள் போன்ற உலகின் பாவங்களைப் போக்க, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், தனக்கே உரிய வழியில் முயன்ற செம்மறியாக வாழ்ந்தார். உலகின் பாவங்களைப் போக்கிய செம்மறியான இயேசுவும், அவரது வழியைப் பின்பற்றிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் போன்ற அவரது சீடர்களும், நமக்கு வழிகாட்டிகளாக அமைய வேண்டுவோம். அவர்களின் எடுத்துக்காட்டுகளால் தூண்டப்பட்ட நம் வாழ்வும், பணிகளும், நம்மைச் சுற்றியுள்ள உலகின் பாவங்களைப் போக்கவும், அவ்வுலகை அருள் நலன்களால் நிறைக்கவும் மன்றாடுவோம்.
நாம் ஒவ்வொருவரும் நமக்குரிய மதிப்பை முதலில் நமக்குள் நாமே வளர்த்துக்கொண்டு, பிறருக்கும் அவரவருக்குரிய மதிப்பை வழங்க ஆரம்பித்தால், உலகம் மதிப்பு பெறும், மீட்பு பெறும். இந்த அறுவடைத் திருநாளன்று, மதிப்பை விதைப்போம். மாண்பை அறுவடை செய்வோம்.
பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு முதல் வாசகப் பின்னணி (எசா. 49:3,5-6)
பாபிலோனிய நாட்டில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ராயேல் இனத்தை மீண்டும் எருசலேமில் குடியேற வழிவகுத்தவர் மன்னர் சைரஸ். அன்னிய அரசனையே இறைவன் தன் கருவியாகத் தெரிந்து கொண்டார். இறைவன் தன் அரசுக்கு அனைவரையும் அழைக்- கின்றார். "உலகம் உருவாகும் முன்னரே அவர் நம்மைத் தெரிந்து கொண்டார்" (எபே 1:5) எனினும் ஒரு சிலரைச் சிறப்பாகத் தன் பணிக்குப் பெயர் சொல்லி அழைக்கின்றார்.
ஒவ்வொரு ஊழியனும் இறைவனால் முன்குறிப்பிட்டு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். "தாயின் கருவினிலே என்னை அழைத்திருக்கிறார், என் தாய் வயிற்றினிலே எனக்குப் பெயரும் இட்டுயிருக்கிறார்". அழைக்கப்பட்ட ஊழியனை பராமரித்து, காத்தும் வருகின்றார்.
"இவரே என் அன்பார்ந்த மகன், இவரிடம் நான் பூரிப்படைகிறேன்" (மத்தேயு 3:17) என்று தந்தை கிறிஸ்துவை பற்றிக் கூறியதன் எதிரொலியை “இஸ்ராயேல் நம் ஊழியன், உம்மில் நாம் மகிமையடைவோம்" என்ற வாக்கில் முன்குறிக்கப்பட்டதைக் கேட்கிறோம். இயேசு பணிசெய்து துன்புறும் ஊழியனாக வந்தார். கிறிஸ்துவின் தொண்டர்களாகிய நாம் அனைவரும் அவரைப் போலவே பணிபுரிய அழைக்கப்பட்டுள்ளோம்.
இரண்டாம் வாசகப் பின்னணி (1கொரி. 1:1-3)
கொரிந்து கிரேக்க நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான செல்வச் செழிப்பும், கலைவளமும் மிகுந்த நகரம். புனித பவுல் ஒன்றரை ஆண்டுகள் இங்குத் தங்கி திருச்சபையைக் கட்டியெழுப்பினார். அவர் அங்கிருந்து சென்ற சில ஆண்டுகளில் பிரச்சனைகள் எழுந்தன. கொரிந்தியத் திருச்சபைக்கு அறிவுரை கூறியும், வேத உண்மைகளை விளக்கியும் எழுதிய முதல் திருமுகத்தின் தொடக்கமே இன்றைய வாசகம். கிறிஸ்தவர்களை வாட்டி வதைத்த பவுலை, இயேசு தமாஸ்கஸ் செல்லும் வழியில் தடுத்தாட்கொண்டு, அவர்மூலம் திருச்சபையைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்தவனாக அழைக்கப்பட்டதே இறைவன் நமக்குக் காட்டியுள்ள தனிச் சலுகையாகும். "தன் தாய் வயிற்றிலே, இறைவன் என்னைத் தேர்ந்தெடுத்தார். அன்பு செய்கிறார்" என்று ஒவ்வொருவரும் கூற முடியும். அழைக்கப்பட்ட நாம் அனைவரும் திருமுழுக்கால் தூயதாக்- கப்பட்டோம். தூய்மையில் வளர்ந்து புனிதராக நாம் அழைக்கப்பட- டுள்ளோம். தூய பவுல் நம் அனைவரையும் புனிதர்கள் என்றே அழைக்கின்றார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 1:29-34)
புனித திருமுழுக்கு யோவான், இயேசுவுக்கு திருமுழுக்குக் கொடுத்தவர். இயேசு யார், இயேசுவின் முக்கிய பணி என்ன என்பதை தன் சீடர்களுக்கு விளக்கும் வண்ணமாக இன்றைய வாசகம் அமைந்துள்ளது. "இயேசு உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறி, மீட்பர்" என்பதை தெளிவு படுத்துகின்றார். நற்செய்தியாளர் யோவான், "உலகத்தில் உள்ள அனைவரும் பாவிகள். தன்னில் பாவம் இல்லை என்பவன் பொய்யன்" என்று கூறி, உலக மக்களைப் பாவங்களிலிருந்து மீட்பதே இயேசுவின் தலையாய பணியாகும்" என்கிறார். இயேசு யார்? அவர் பணி என்ன? என்பதை உலகிற்கு அறிவிக்கும் அறிவிப்பாளர் எனச் சொல்லித் திருமுழுக்கு யோவான் தன்னை தாழ்த்திக் கொள்கிறார்.
மறையுரை
கிணற்றிலே விழுந்துவிட்ட ஒரு வழிப்போக்கர், "உதவி", “உதவி" என்று கூறி அழைத்தார். இறைமகன் கிறிஸ்து அவ்வழியாக வந்தார். அவர் ஆறுதல் வார்த்தையோ, அறிவுரையோ கூறாது, கிணற்றுக்குள் தானே இறங்கி, வழிப்போக்கரைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு, வெளியேறி வந்து அவரைக் காப்பாற்றினார்.
இதே மீட்புப் பணி புரியவே ஆண்டவர் நம்மை அழைக்- கின்றார். "நீயே என் ஊழியன், உன் வழியாய் நான் மாட்சி- யுறுவேன்'' (எசா 49:3).
திருவிவிலியம் இயேசுக்கு பல பெயர்களைச் சூட்டியுள்ளது. குறிப்பாக ஊழியர், மீட்பர், ஆண்டவர், செம்மறி, போன்றவை சில. குறிப்பாக இன்றைய நற்செய்தியில் "கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று அழைக்கப்படுகிறார். பழைய ஏற்பாட்டில் யூத பாஸ்கா விழா இரண்டு நிலைகளில் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் நிசான் மாதம் 14-ஆம் தேதி மதியம் ஆட்டுக்குட்டியினை எருசலேம் ஆலயத்தில் பலியிட்டனர். இரவு குடும்பமாக இணைந்து அதனை சமைத்து உண்டனர். மூன்று (ஒத்தமை) நற்செய்தியாளர்களும் பாஸ்கா இராவுணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
ஆனால் நற்செய்தியாளர் யோவான் சற்று வித்தியாசமாக இயேசு உலக மீட்பிற்காக அனைவரின் பாவங்களைக் கழுவதற்காக, யூத பாஸ்கா ஆட்டைப் போல நிசான் மாதம் 14-ம் தேதி மதியம் மூன்று மணிக்குத் தன்னை சிலுவையில் தியாகம் செய்வதாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இதனை விளக்கும் வண்ணம் தான் தொடக்கத்திலே திருமுழுக்கு யோவான் “கடவுளின் ஆட்டுக்குட்டி" எனவும் வர்ணிக்கின்றார்.
ஒருவரை நாம் அறிமுகப்படுத்த வருகின்றோம் என்றால் ஓரளவாவது அவரைப் பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டும் அல்லது கேட்டிருக்க வேண்டும். அதுபோலத்தான் இயேசுவை அதுவும் "கடவுளின் ஆட்டுக்குட்டி”, “உலகின் பாவங்களைப் போக்குபவர்” என்று அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் உறுதியாகத் திருமுழுக்கு யோவான் அவரை அறிந்திருக்க வேண்டும்.
ஆனால் அவரோ "நான் முதலில் அவரை அறியவில்லை” எனவும், பின்னர் "தூய ஆவியின் அருளால் அறிந்து கொண்டேன்" என்றும் கூறுகிறார். இயேசுவைப் பற்றி அறிய வேண்டுமென்றால் ஆவியின் பொழிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதையேதான் யோவான் 16:18 "உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது நிறையுண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்" என்றார் கிறிஸ்து.
கி.பி. 258-ம் ஆண்டு புனித லாரன்ஸ், கிறிஸ்துவர் என்பதற்காக எரியும் நெருப்புக் கட்டிலில் சுட்டெரிக்கப்பட்டபோது, “இயேசுவுக்காக எனது உடலின் ஒரு பக்கம் தயாராகி விட்டது, மறுபக்கமும் வேக என்னைப் புரட்டிப் போடுங்கள்" என்று புன்- முறுவலோடு கூறினாராம்.
தூய தெர்த்தூலியன், "மறைசாட்சிகளின் இரத்தம் கிறிஸ்த- வர்களை வளர்க்கும் வித்து" என்று முழக்கமிட்டார். ஏன் இன்றும் நம்மிலே எத்தனையோ பேர் இயேசுவுக்காக உயிரைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
நமது நாட்டில் ஒரு மாநிலமான ஒரிசாவிலே எத்தனையோ கிறிஸ்தவர்கள் தினமும் கிறிஸ்துவுக்காக இறக்கின்றார்கள். இவர்களைப் பார்க்கும்போது ஒவ்வொருவரும் தன்னுடைய மரணத்தின் மூலமாக "இதோ இறைவனின் ஆட்டுக்குட்டி” என்று இயேசுவுக்கு சான்று பகர விழைகின்றனர் என்பது தெளிவாகிறது.
நாம் இயேசுவுக்கு சான்று பகர்வது என்பது வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில் இயேசுவுக்காகக் கொல்லப்பட்டு மறைசாட்சி- யாக இறப்பதில்தான் இருக்கின்றது என்று எண்ணிவிடலாகாது. மாறாக இயேசுவுக்கு சான்று பகர்வது என்பது அவருக்காக இறப்பதில் மட்டுமல்ல மாறாக அவருக்காக வாழ்வதிலும் உள்ளது. நமது ஒவ்வொரு செயல்பாட்டிலும் இயேசுவுக்கு சான்று பகர்கின்றோம் என்று உணர வேண்டும். ஏனெனில் இவ்வாறு செயல் படுவதில் உறுதிப்பாடு கொண்டிருந்தால்தான் நாம் இயேசுவுக்காக இறக்கவும் தயாராக இருப்போம்! இந்த ஒரு வாழ்க்கையைத்தான் புனிதர்களின் வாழ்விலும், மறைசாட்சியாளர்களின் வாழ்விலும் நாம் பார்க்கின்றோம்.
இன்றைய முதல் வாசகத்திலே இறைவன் கூறுகிறார். "இஸ்ராயேலே, உன் வழியாக நான் மாட்சியுறுவேன்" என்றுரைக்கின்றார். வல்லமை மிக்க, ஆற்றல் மிக்க இறைவன் தம் ஊழியர்களாகிய இஸ்ராயேல் மக்களால் மாட்சி பெறுவதாக பறைசாற்றுகின்றார். ஒரு வகையில் இறைவனை மாட்சிப்படுத்தும் அளவுக்கு நாம் உயர்ந்தவர்கள். மேலும் நாம் இறைவனின் ஒளியாக வாழ அழைக்கப்படுகிறோம்.
விவிலியத்தில் "ஒளி" ஓர் அடையாளச் சொல்லாகப் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒளியானது இருளையும், தீமை யையும் போக்க வல்லது, வெளிச்சத்தைக் கொடுக்கவல்லது, எதனாலும் கறைப்படுத்தப்பட இயலாத ஒன்று! ஆற்றலின் இருப்பிட- மாக விளங்குவது. இறைவனின் ஆற்றல் மிக்க இறைப்பிரசன்னத்- திற்கு அடையாளமாகச் சுட்டிக் காட்டப்படுவது. "ஆண்டவரே என் ஒளி" (தி.பா. 27:1). "ஆண்டவரே உனக்கு என்றுமுள்ள ஒளியாக இருப்பார்" (எசாயா 60:20).
புனித பவுல் இரண்டாம் வாசகத்திலே கொரிந்து நகர மக்களை "தூயவர்கள்" என்று அழைக்கிறார். கொரிந்து திருச்சபை நேர்மறையான, புனிதமான கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய திருச்சபை அல்ல. ஒழுக்கக் கேடானவர்கள். பிரிவினைச் சிந்தனை உள்ளவர்கள். நீதிமன்றத்திற்குச் சென்று ஒருவருக்கெதிராக மற்றவர் சண்டையிட்டுக் கொண்டவர்கள். இருப்பினும் பவுல் அவர்களைத் 'தூயவர்கள்' என்று அழைக்கிறார். நாம் தீமைகளிலும், பாவத்திலும், வாழ்ந்தாலும் அன்பால் நாம் விலையேறப்பெற்றவர்களாகவும், தூயவர்களாகவும் மாற்றப்படுகிறோம் எனப் பவுல் சுட்டிக் காட்டு- கின்றார்.
இறைவனின் செம்மறி என்னும் அடைமொழி அவர் நம் பாவங்களைச் சுமப்பவர் என விளக்குகிறது. அவரது திருநாமத்தில் அவரது சீடரான குருக்கள் பலர் மனிதர்களின் பாவங்களை இன்றும் போக்குகின்றனர். அவரைப் போலத் தியாகப் பலியாகத் தம்மைக் கையளித்துக் கொண்ட கிறிஸ்தவர்கள், இயேசுவின் பெயரால் வறுமையில் வாடுவோருக்கு அடைக்கலம் வழங்கவும், அநீதியைக் களைந்து, சாதி, சமய, தீவிரவாத பேதங்களைத் துடைத்தெறிந்து, சமுதாயத்தில் அனைவருக்கும் சமநீதி, மகிழ்வளிக்கவுமே அழைக்கப்படுகின்றோம்.
பிற மறையுரை கருத்துக்கள்
➤ நாமே இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட இறை ஊழியர்கள். நம் வழியாய் இறைவன் மாட்சியுற வேண்டும்.
➤ நம் நற்செய்திகள் ஒளியாய் இருளடைந்த உலகில் ஒளிர்தல் அவசியம்.
பொதுக் காலம் இரண்டாம் ஞாயிறு
கிறிஸ்து பிறப்புக் காலம் முடிந்து ஆண்டின் பொதுக் காலத்தில் நுழைந்துள்ளோம். இன்றைய முதல் வாசகத்தில் எசாயாவுக்கு இறைவன் தந்த அழைப்பும், பணியும் விவரிக்கப் படுகின்றது.நற்செய்தியில் நமதாண்டவரைப் பற்றியத் திருமுழுக்கு யோவானின் சான்று விவரிக்கப்படுகின்றது. நற்செய்தி தரும் ஆழமான கருத்துகளை அதன் பின்னணியோடு தெரிந்து கொள்ள முயல்வோம்.
பின்னணி
யோவான் நற்செய்தி, ஓர் அருமையான கிறிஸ்தியல் பாடலுடன் தொடங்குகின்றது (காண். யோவா 1:1-18). அதைத் தொடர்ந்து வருகின்ற பகுதி (யோவா 1:19-51), நாள்களின் கணக்கில் விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது,
➤ வச. 19-28 - முதல் நாள் - யோவான் தான் மெசியா அல்ல என ஒப்புக்கொள்கிறார்.
➤ வச. 29-34 - இரண்டாம் நாள், “மறுநாள்” (வச. 29), யோவான் இயேசுவைக் கடவுளின் ஆட்டுக்குட்டி என்றும், இறைமகன் என்றும் சான்று பகர்கிறார்.
➤ வச. 35-42 - மூன்றாம் நாள் - "மறுநாள்" (வச 35), யோவானின் சீடர்கள் இயேசுவைப் பின் தொடர்கின்றனர்.
➤ வச. 43-51 - நான்காம் நாள் - “மறு நாள்” (வச. 43), இயேசு பிலிப்புவிற்கும், நத்தனியேலுக்கும் தன்னை வெளிப்படுத்துகின்றார்.
.
இந்த நான்கு நாள்களும் யோவா 2:1-12ல் நிகழவிருக்கின்ற கானா திருமண நிகழ்விற்கும், அங்கு இயேசு தன் மாட்சியை வெளிப்படுத்தியதற்கும் முன் தயாரிப்பாக அமைகின்றது. இது இறைவன் சீனாய் மலையில் தனது மாட்சியை வெளிப்படுத்தும் முன்பாக இஸ்ரயேலைத் தயாரித்ததை ஒத்திருக்கின்றது (காண். விப 19:7-9).
இனி இரண்டாம் நாள் நிகழ்வின்படி, (இன்றைய நற்செய்தி யின்படி) இறைவார்த்தை தரும் செய்தியை அறிந்துகொள்ள முயல்வோம்.
1. இயேசுவும் யோவானும்
இன்றைய நற்செய்தியில் இரு கதாபாத்திரங்கள் மட்டுமே காட்டப்படுகின்றனர். அதிலும் இயேசு மறைமுகமாக, அமைந்த கதாபாத்திரமாக, யோவானை நோக்கி வருவதாக மட்டுமே காட்டப்படுகின்றார். ஆனால் நிகழ்ச்சிப் பகுதி முழுவதும் யோவான் பேசுவதாக அமைந்திருக்கின்றது. அவர் இயேசுவைப் பற்றியும், யோவானாகிய தனக்குக்கிடைத்த வெளிப்பாடு பற்றியும் பேசுகின்றார். அவரின் வார்த்தைகளின் அடிப்படையில் இயேசுவைப் பற்றி நற்செய்தியாளர் தரும் செய்திகளைக் காண்போம்.
2. இயேசுவின் அடையாளம்
திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளின் பின்னணியில் இயேசுவின் பல்வேறு அடையாளங்களைப் பின்வருமாறு பட்டிய லிடலாம்
🕀 கடவுளின் ஆட்டுக்குட்டி (வச. 29).
🕀 உலகின் பாவத்தைப் போக்குபவர் (வச. 29).
🕀 திருமுழுக்கு யோவானைவிட முன்னிடம் பெற்றவர் (வச. 30).
🕀 முன்பே இருந்தவர் (வச.30).
🕀 தூய ஆவி புறாவைப் போல இறங்கி வரப் பெற்றவர் (வச. 32).
🕀 இறைவனால் முன்னுரைக்கப் பெற்றவர் (வச. 33அ).
🕀 தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் (வச. 33ஆ).
🕀 அனைத்திற்கும் மேலாக, 'இறைமகன்' (வச. 34).
ஆக இயேசுவுக்கான பலவகை அடையாளங்களை யோவான் வெளிப்படுத்துகின்றார்.
3. திருமுழுக்கு யோவானின் நிலை
இயேசுவைப் பற்றி இவ்வளவு அடையாளங்களை இவ்வளவு உயர்வாகக் கூறிய திருமுழுக்கு யோவான் தன்னைப் பற்றிக் குறிப்பிடும்போது தாழ்மையாக, அமைந்த மனதுடனே குறிப்பிடுகின்றார்.
🕀 'இவர் (இயேசு) என்னைவிட முன்னிடம் பெற்றவர் (வச. 30).
🕀 எனக்கு முன்பே இருந்தார் (வச. 30 ஆ).
🕀 இவரைப் பற்றியே சொன்னேன் (வச. 30 இ).
🕀 எனக்குத் தெரியாதிருந்தது (வச. 31 அ).
🕀 இவரை (இயேசுவை) வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன் (வச. 31 ஆ).
🕀 நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்து வருகிறேன் (வச. 31)
🕀 மாறாக இயேசு தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் – வச 33).
🕀 நான் கண்டேன் - சான்றும் கூறி வருகிறேன் (வச. 34).
எனவே இன்றைய நற்செய்தியில் புனித திருமுழுக்கு யோவான் இயேசுவின் அடையாளத்தை வெளிப்படுத்தி, அவருக்குச் சான்று பகர்ந்து உயர்த்துகின்றார். தன்னை அவர்முன் தாழ்த்திக் கொள்கின்றார். நாமும் இத்தகைய மனநிலை கொண்டு வாழ்வோம்.
பொதுக்காலம் - இரண்டாம் ஞாயிறு
முதல் வாசகம் : எசா. 49:3, 5-6
பாபிலோனிய நாட்டில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் இனத்தை மீண்டும் எருசலேமில் குடியேற வழி வகுத்தவன் பாரசீகப் பேரரசன் சைரசு. அந்நிய அரசனையே இறைவன் தன் கருவியாகத் தெரிந்துகொண்டார். எனினும் இவன் என்றும் இறைவனுக்கு ஏற்புடையவனாக இருக்கவில்லை. எனவே, எதிர்காலத்தில் வரவிருக்கும் இறைவனுக்கு ஏற்புடைய ஊழியனை எசாயா அறிமுகப்படுத்துகின்றார். இவர் கருவிலே திருவுடையார்; துன்பத்தின் உறைவிடம்; என்றும் இறைவனின் திருச்சித்தத்தை நிறைவேற்றும் திருத்தொண்டர். இவ்வாறு வரவிருக்கும் மீட்பர் இக்கவிதையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளார்.
இறைவனின் அழைப்பு
இறைவன் தன் அரசுக்கு அனைவரையும் அழைக்கிறார். “உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்” (எபே. 1: 4). எனினும் ஒரு சிலரைச் சிறப்பான பணிக்குப் பெயர் சொல்லி அழைக்கிறார். இறைவனது அழைப்பைக் கேட்டவுடனே “ஆண்டவரே பேசும்; உம் அடியான் கேட்கிறேன்" என்றார் சாமுவேல் (1 சாமு. 3:10). இறைவனின் அழைப்பைக் கேட்ட எரேமியாஸ் வியப்பும் திகைப்பும் கொண்டு அழைப்பை ஏற்க மறுத்த வேளையில், தனது வார்த்தைகளை அவரது வாயில் ஊட்டி இறைவாக்குரைக்க இறைவன் அவரைப் பணிக்கிறார் (எரே 1:1-10). ஒவ்வொரு ஊழியரும் இறைவனால் முன் குறியிடப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்டவர்.
“கருப்பையிலே ஆண்டவர் என்னை அழைத்திருக்கிறார்; என் தாய் வயிற்றிலேயே எனக்குப் பெயரிட்டிருக்கிறார் (2)
அழைக்கப்பட்ட தன் ஊழியனைப் பராமரித்தும் வருகிறார். "தன் கையின் நிழலில் என்னைக் காத்தருளினார்; தீட்டிய அம்பாக என்னைச் செய்து தமது அம்பறாத்தூணியில் ஒளித்து வைத்தார் (2). அழைக்கப்பட்ட ஊழியர்களின் வரிசையில் வந்த ஒப்பற்ற ஊழியனே இறை இயேசு. “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (மத். 3:17) என்று தந்தை, கிறிஸ்துவைப் பற்றிக் கூறியதன் எதிரொலியை “இஸ்ரயேல் நம் ஊழியன்; உன்னில் நாம் மகிமையடைவோம்" (3) என்றவாக்கில் கேட்கின்றோம். தெய்வத் திருமகன் ஊழியனாகவே வந்தார். கிறிஸ்துவின் தொண்டர்களாகிய நாம் அனைவரும் அவரைப் போல் பணி புரியவே அழைக்கப்பட்டுள்ளோம். "என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற வாக்கு எனக்குப் பொருந்துமா?
புறவினத்தாரின் ஒளி
இஸ்ரயேல் இனம் குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்தது. தன் இனத்தை மட்டுமே மெசியா மீட்க வருவார் என்று எண்ணியது. ஆனால் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இவ்வூழியன் அனைத்து மக்களின் மீட்பாவார்; ஒளியாவார் என்கிறார் எசாயா.
“யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும்
இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக்கொணர்வதற்கும்
நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ?
உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு
நான் உன்னைப் பிற இனத்தார்க்கு
ஒளியாக ஏற்படுத்துவேன்." எசா. 49: 6
இந்த ஒளியை மனதில் கொண்டே ஆனந்தக் கவிதை பாடுகிறார் எசாயா; "எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!... அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னரிடம் வருகின்றனர்.” (60 : 1-4).
பாலன் இயேசுவைக் கையிலேந்திய சிமியோன் பாடினார்: “இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" (லூக். 2: 32).
தன்னையே சுட்டிக் காண்பித்து "நானே உலகின் ஒளி" என்றார் இயேசு; அதே ஆண்டவர் நம்மையும் விளித்து, "நீங்கள் உலகின் ஒளி" என்றும் கூறினார். நாம் நமது வாழ்வில் இறை இயேசுவின் ஒளியைப் பிரதிபலிக்கும் மின்மினிப் பூச்சிகள் ஆகவாவது திகழ்கின்றோமா?
புறவினத்தார்க்கு ஒளியாக என்னை ஏற்படுத்தினார்.
இரண்டாம் வாசகம் : 1 கொரி. 1:1-3
கொரிந்து கிரேக்க நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று. செல்வச் செழிப்பும். கலைவளமும் மலிந்த நகரம். பவுல் இங்கு ஒன்றரை ஆண்டுகள் தங்கி திருச்சபையை நிறுவினார். அவர் அங்கிருந்து சென்ற சில ஆண்டுகளில் பிரச்சனைகள் எழுந்தன. கொரிந்தியத் திருச்சபைக்கு அறிவுரை கூறியும், வேத உண்மைகளை விளக்கியும் எழுதிய முதல் நற்செய்தியின் தொடக்கமே இன்றைய வாசகம்.
பவுலின் அழைப்பு
கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்த பவுலை தமாஸ்கஸ் செல்லும் வழியில் இயேசு தடுத்தாட்கொண்டார் (திப. 9). "தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள்" என்று இறையருளை நன்றிப் பெருக்குடன் நினைவு கூர்கின்றார் பவுல் (கலா. 1:15). கிறிஸ்தவனாக அழைக்கப்பட்டதே இறைவன் நமக்குக் காட்டியுள்ள தனிச் சலுகை. தன் வயிற்றிலேயே ஏன், நித்தியத்திற்கும் இறைவன் என்னைத் தேர்ந்தெடுத்து அன்பு செய்தார் என்று ஒவ்வொரு கிறிஸ்தவனும் கூற முடியும். இயேசு தன் சீடர்களை நோக்கி “நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” என்றார் (யோ. 15:16). கிறிஸ்துவால் அழைக்கப்பட்டு, அவரது சீடனாயிருப்பதில் பூரிப்படைகின்றேனா?
தூயவராக அழைப்பு
சீனாய் மலையில் காட்சி கொடுத்த கடவுள் இஸ்ரயேல் இனத்தைத் தம் உடைமையாகப் பிரித்தெடுத்து, "அவர்களைக் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் மாற்றினார்" (விய. 19: 6-15). தூய என்ற சொல் ஏனைய பொருள்களிலிருந்து அல்லது ஆட்களிலிருந்து பிரிக்கப்பட்டு இறைவனுக்கே உரியதாக்கப்பட்ட பொருளை அல்லது ஆளைக் குறிக்கும். கோயில் தூய்மையானது என்றால் ஏனைய கட்டடங்களிலிருந்து பிரிக்கப்பட்டு இறைவனுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது என்பதே பொருள். தனித்து நிற்கும் தனக்குவமை இல்லாத பரம்பொருளை தூயவர் என அழைக்கிறோம். "தூயவர் என்பதே அவரது பெயர்” (லூக். 1: 49), ஒவ்வொரு கிறிஸ்தவனும், இயேசுவின் அர்ப்பணத்தால் பாவத்தினின்று பிரிக்கப்பட்டு, இறைவனுக்கு ஏற்றக் காணிக்கையாகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளான். “நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்” (எபே. 1:4). "தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப் படுத்தினேன்” (எரே. 1:5) என்பது வேதவாக்கு. "கடவுளின் கோயில் தூயது; நீங்களே அக்கோயில்" என்பது பவுல் போதனை (1 கொரி 3:17). "இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும் பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக" (1தெச. 3:13).
நாம் திருமுழுக்கால் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; இதைப் பாதுகாப்பதுடன், இதில் மேலும் வளர்ச்சியடைந்து தூயவராகும்படி அழைக்கப்பட்டுள்ளோம். பவுல் அனைத்துக் கிறிஸ்தவர்களையும் தூயவர்கள் என்றே அழைக்கிறார். நாயினும் கடையனேயினும் இறையருளால் அவரது அடி சேர முடியும் - தூயவராக முடியும்.
"ஆய நான் மறையவனும் ஆதல்
அறிந்து நான் யாவரினும் கடையன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக்கண்டு
நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய்." - திருவாசகம்
தூயவராவதில் என் அக்கறை என்ன?
நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தூயவர் ஆக்கப்பட்டவர்கள்.
நற்செய்தி: யோவான். 1:29 - 34
இயேசு கடவுளின் ஆட்டுக்குட்டி
இயேசுவைச் சுட்டிக்காட்டி “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று அழைக்கிறார் திருமுழுக்கு யோவான். 'ஆட்டுக்குட்டி' என்ற அடைமொழி விவிலியத்தில் மீட்பின் சின்னமாக விளங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுபட்ட நாளில் அவர்களைக் காப்பாற்றியது அவர்கள் கதவு நிலைகளில் பூசப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தம். எசாயா இறைவாக்கினரும் இறை ஊழியரை (மெசியாவை) ஒரு ஆட்டுக்குட்டியாகவே சித்தரித்துள்ளார். "அவரோ அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோல் அமைதியே உருவாக இருந்தார்" (53:7).
நாமும் பலியாவோம்
எருசலேம் ஆலயத்திலும் ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒரு ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டு வந்தது (விப. 29: 38 - 42). இஸ்ரயேல் மக்களை மீட்ட ஆட்டுக்குட்டிபோல் உலக மக்களை மீட்ட ஆட்டுக்குட்டி இயேசு. இயேசுவே இறை ஊழியனான ஆட்டுக்குட்டியாகத் தம்மையே கையளித்தார் (மாற். 14:24) "இது பலருக்காகச் சிந்தப்படும் என் இரத்தம்.” எனவே பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கப்பட்ட ஆட்டுக்குட்டிபோல் தம் இரத்தத்தை சிந்துகிறார் இயேசு. இயேசுவை ஒரு ஆட்டுக்குட்டியாகக் காணும்போது அவரை ஒரு பலியாகப் பார்க்கிறோம். அதுவும் இரத்தப் பலி - மீட்புப் பலி.
பலி என்பது ஒரு பொருள் முழுமையாக அழிக்கப்பட்டு அர்ப்பணிக்கப் படுவதாகும். பலிப்பொருள் சுய அர்ப்பணத்தின் ஓர் அடையாளமே. இயேசுவில் பலிப்பொருளும், பலி நிறைவேற்றுபவரும் ஒன்றே.
மாசற்ற ஆட்டுக்குட்டி மக்களின் பாவங்களுக்காக இரத்தம் (உயிர்) அளிப்பது போலவே, பாவ மாசற்ற இயேசுவும் மக்கள் ஈடேற்றத்துக்காகத் தம் உயிரைத் தானம் செய்கிறார். இயேசுவைப் போல் நாமும் பலியாகும் ஆட்டுக்குட்டிகளாக, அதாவது பிறர் மீட்புக்காகத் தம்மையே அர்ப்பணிக்கும் ஊழியர்களாக வாழ நற்செய்தி அழைக்கிறது.
தூய ஆவி புறா வடிவில் இறங்கி வந்த நிகழ்ச்சி இயேசு திருமுழுக்குப் பெற்ற நேரத்தில் நடந்தது. திருமுழுக்கு யோவான் 'ஆவியானவர்' என்று குறிப்பிடும்போது அது இறைவனுடைய ஆற்றலையும், வல்லமையையும் குறிக்கிறது. இப்பொருளில்தான் எசாயா கூறுகிறார்: “உன்மேல் இருக்கும் என் ஆவியும் உன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகளும், உன் வாயினின்றும் உன் வழிமரபினர் வாயினின்றும், வழிவழிவரும் உன் தலைமுறையினர் வாயினின்றும் இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது" (59 : 21). "ஆண்டவரின் ஆவி என் மேலே; ஏனெனில் ஆண்டவர் என்னை அருள்பொழிவு செய்துள்ளார்" என்பது எசாயாவின் கூற்றே.
சான்று பகர்வோம்
திருமுழுக்கால் அருள்பொழிவு செய்யப்பட்ட நாமும் ஆவியின் வல்லமையைக் கொண்டுள்ளோம். இந்த உண்மையை உணர்கின்றோமா? இறை ஆவியின் வல்லமை நம்மை ஒளியின் மக்களாக்கி ஒளியின் கனிகளாகிய நீதிக்கும், உண்மைக்கும் சாட்சியம் கூறத் தூண்டுகிறது.
நாம் பெற்ற திருமுழுக்குப் பாவத்தைக் கழுவுவதற்காக மட்டும் கொடுக்கப்பட்டது அன்று. இறைவனின் வல்லமையில் பங்களிக்கும் திருமுழுக்கு ஆகும். இத்தெய்வீக வல்லமை நம் உள்ளத்தில் உண்டு என்று உணரும்போது, வெளி பலத்தையும் பாதுகாப்பையும் அதிகம் தேடி அலையோம்.
நான் கண்டேன்! அவரே கடவுளின் மகன் எனச் சாட்சியம் கூறுகின்றார் திருமுழுக்கு யோவான். தம் பணியைச் சாட்சியப் பணியாகக் கண்டார். சாட்சியப் பணி தன்னை மையமாகக் கொண்ட வாழ்வு அன்று; எனவேதான் "அவர் வளர வேண்டும் நான் குறைய வேண்டும்' என விரும்பினார்.
கிறிஸ்தவர்களாகிய நாமும் சாட்சிய வாழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளோம். இந்தக் குறிக்கோளின் தெளிவும் உறுதியும் நம்மிடம் விளங்குகிறதா? அப்படி இல்லையென்றால் நம்மில் ஆழ்ந்த 'கிறிஸ்து அனுபவம்' இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இவரே கடவுளின் செம்மறி... உலகின் பாவங்களைப் போக்குபவர்.
கடவுளின் செம்மறி!
வரலாற்று இயேசு பற்றிய ஆய்வில் அடிக்கடி கேட்கப்படுகிற ஒரு கேள்வி: ‘தாம் யார் – கடவுளின் மகன், கடவுள் – என்று இயேசுவுக்கு தெரிந்திருந்ததா?’ ‘இத்தெளிவை அவர் எப்போது, யார் வழியாகப் பெற்றார்?’ இயேசு தம்மைப் பற்றிய அறிவில் இறுதிவரை வளர்ந்துகொண்டே சென்றார் என்பதுதான் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. இயேசுவின் பணிவாழ்வுத் தொடக்கத்தில் வானத்திலிருந்து ஒலிக்கிற குரல், ‘என் அன்பார்ந்த மைந்தர் இவரே!’ என்று அறிக்கையிடுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில், தன்னிடம் வருகிற இயேசுவைக் காண்கிற திருமுழுக்கு யோவான், ‘இதோ, கடவுளின் செம்மறி!’ என்று அறிக்கையிடுகிறார். தம் பணிவாழ்வின் நடுவே தம் சீடர்களிடம், ‘மக்கள் நான் யார் எனச் சொல்கிறார்கள்?, நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’ என்று தம் திருத்தூதர்களிடம் கேட்கிறார்.
நம்மைப் போலவே வரலாற்று இயேசுவும், ‘நான் யார்?’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்.
‘நான் யார்?’ என்னும் கேள்வியின் மறுபக்கமாக இருப்பது ‘நான் யாருக்காக?’ என்னும் கேள்வி. இந்த இரண்டு கேள்விகளைப் பற்றி எழுதுகிற திருத்தந்தை பிரான்சிஸ், இளைஞர்கள் ‘நான் யார்’ என்னும் கேள்வியிலிருந்து ‘நான் யாருக்காக’ என்னும் கேள்விக்குக் கடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்துகிறார் (காண். ‘கிறிஸ்து வாழ்கிறார்’, 286).
கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து வருகிற மூன்று ஞாயிறுகளும் ‘வெளிப்பாடு ஞாயிறுகள்’ என அழைக்கப்படுகின்றன. திருக்காட்சிப் பெருவிழாவில் ஆண்டவராகிய இயேசு புறவினத்தாருக்கு ஒளியாகத் தம்மை வெளிப்படுத்துகிறார். திருமுழுக்குப் பெருவிழாவில் வானகத் தந்தை தம் மகனை இந்த உலகுக்கு வெளிப்படுத்துகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் இயேசுவை, ‘கடவுளின் செம்மறி – உலகத்தின் பாவத்தைப் போக்குபவர்’ என வெளிப்படுத்துகிறார்.
இன்றைய நற்செய்திப் பகுதி திருமுழுக்கு யோவானுக்கும் இயேசுவுக்கும் உள்ள நெருக்கத்தையும் வேறுபாட்டையும் விளக்குவதாகவும் அமைந்துள்ளது. ‘உலகிற்கு வந்துகொண்டிருந்த ஒளி’ இயேசு, ‘அந்த ஒளிக்குச் சான்று பகர்கிறவர்’ யோவான். யோவானுக்குப் பின்னர் வந்தாலும் யோவானுக்கு முந்தையவராக இருக்கிறார் இயேசு – ‘கடவுளோடும் கடவுளாகவும் இருக்கிற வாக்கு’. யோவான் தண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கிறார். இயேசு தூய ஆவியாரால் திருமுழுக்கு கொடுக்கிறார்.
‘இதோ, கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்!’
‘செம்மறி’ அல்லது ‘ஆட்டுக்குட்டி’ என்னும் சொல்லை நாம் மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்:
(அ) பாஸ்கா ஆட்டுக்குட்டி – இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறுமுன் பாஸ்கா கொண்டாடுகிறார்கள். ஆட்டுக்குட்டியைப் பலியிட்டு அதன் இரத்தத்தால் தங்கள் வீட்டு நிலைகளில் குறியிடுகிறார்கள் (காண். விப 12). பாஸ்கா கொண்டாட்டம் அவர்களுடைய விடுதலையின் அடையாளமாக இருக்கிறது. ஆண்டவராகிய இயேசுவும் பாஸ்கா ஆடு போல பலியாகி நமக்கு பாவத்திலிருந்து விடுதலை தருகிறார். மேலும், எருசலேம் ஆலயத்தில் பாஸ்கா ஆடு பலியிடப்படும் நேரத்தில் இயேசு சிலுவையில் இறப்பதாகப் பதிவு செய்கிறார் நற்செய்தியாளர் யோவான்.
(ஆ) பாவக் கழுவாய் ஆடுகள் – இஸ்ரயேல் மக்கள் ஒவ்வோர் ஆண்டும் பாவக் கழுவாய் (எபிரேயத்தில் ‘யோம் கிப்பூர்’) நாளைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள் (காண். லேவி 16). இந்த நாளில்தான் தலைமைக்குரு திருத்தூயகத்துக்குள் நுழைவார். அவர் தம் பாவத்துக்காக கன்றுக்குட்டி ஒன்றை ஒப்புக்கொடுப்பார். பின் இரண்டு செம்மறி ஆடுகள் அவர்முன்பாக கொண்டு வந்து நிறுத்தப்படும். அவற்றில் ஒன்றை மக்களின் பாவங்களுக்காகப் பலியிடுவார் குரு. மற்றொரு ஆடு ஊரின் நடுவே அனுப்பப்படும். அந்த ஆட்டின்மேல் மக்கள் தங்கள் பாவங்களைச் சுமத்துவார்கள். அதன் முடியைப் பிடுங்க, அடிக்க, அதன்மேல் எச்சில் உமிழ என்று அந்த ஆடு அனைத்து அவமானங்களையும் சுமந்துகொண்டு பாலைநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கே இறந்து போகும். இயேசு இவ்விரண்டு ஆடுகளையும் அடையாளப்படுத்துகிறார். மக்களின் பாவங்களுக்காகப் பலியாகிறார். சிலுவையைச் சுமந்துகொண்டு ஊருக்கு வெளியே செல்கிறார்.
(இ) நல்லாயன் – தம்மை ‘நல் ஆயன்’ என்று அடையாளப்படுத்துகிற இயேசு, ‘நல் ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரைக் கையளிக்கிறார்’ என்கிறார் (காண். யோவா 10:11).
‘உலகின் பாவத்தைப் போக்குபவர்’ என்று நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். ஆனால், திருப்பலியில், ‘உலகின் பாவங்களைப் போக்குபவர்’ என்று சொல்கிறோம். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? யோவான் நற்செய்தியில் ‘பாவம்’ என்பது ‘மானிட நிலை. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தூரம். அலகை செயல்படும் இடம்.’ இந்த நிலையிலிருந்து நம்மை விடுவிக்கிறார் இயேசு. ‘பாவங்கள்’ என்று சொல்லும்போது நம் தனிப்பட்ட பாவங்களை மன்னிக்கிறவராக, அவற்றை நீக்குபவராக இருக்கிறார் இயேசு. ‘பாவங்களிலிருந்து’ விடுபட அல்ல, ‘பாவத்திலிருந்து’ விடுபடவே நாம் முயற்சி செய்ய வேண்டும்.
இன்றைய முதல் வாசகம், துன்புறும் ஊழியனின் இரண்டாவது பாடல் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ‘ஊழியர்’ என்னும் சொல் இஸ்ரயேல் மக்களை, இறைவாக்கினரை, மெசியா என்னும் அரசரைக் குறிக்கலாம். இங்கே பாரசீக மன்னன் சைரசுவையும் குறிக்கலாம். ஊழியரை ஆண்டவராகிய கடவுள் ‘உருவாக்குகிறார்,’ ‘தெரிந்துகொள்கிறார்,’ ‘மதிப்பளிக்கிறார்,’ ‘உடன் நிற்கிறார்.’ ‘பிற இனத்தாருக்கு ஒளியாக’ உன்னை ஏற்படுத்தினேன் என்று ஊழியரிடம் கூறுகிறார் ஆண்டவராகிய கடவுள். இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருஅவையை ‘மக்களித்தாரின் ஒளி’ (இலத்தீனில், ‘லூமன் ஜென்ஷியும்’) என்று அழைக்கிறது.
இரண்டாம் வாசகத்தில், கடவுளின் திருத்தூதனாக தன்னையே அறிமுகம் செய்கிற பவுல், அனைவரும் தூயவராக அழைக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறார். மேலும் கிறிஸ்துவை ‘அனைவருக்கும் ஆண்டவர்’ என்று அறிக்கையிடுகிறார்.
பதிலுரைப்பாடலில், ‘உம் திருவுளம் நிறைவேற்ற வருகிறேன்!’ என மொழிகிறார் பாடல் ஆசிரியர். கடவுளின் திருவுளம் நிறைவேற்றுவதற்காக நம் நடுவே வருகிறார் இயேசு.
இன்றைய நாள் இறைவார்த்தை வழிபாடு நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) நான் யார்? நான் யாருக்காக?
மேற்காணும் கேள்விகளுக்கான விடைகளை நாமும் தேடிக்கொண்டிருக்கிறோம். வானகத் தந்தையோ, திருமுழுக்கு யோவானோ இயேசுவுக்கு வெளிப்படுத்தியதுபோல, இவற்றுக்கான விடைகளை நமக்கு யாரும் வெளிப்படுத்துவதில்லை. நாமாகவே முட்டி மோதிக் கண்டுபிடிக்கிறோம். வாழ்வின் பாதியில்தான் பல நேரங்களில் நமக்கு விடை கிடைக்கிறது. அல்லது வாழ்வின் இறுதியில் நாமாகத் திரும்பிப் பார்த்து நம் புள்ளிகளை இணைத்துக்கொள்கிறோம். இவ்விரு கேள்விகளுக்கான விடைகளை நாம் தேர்ந்து தெளிய வேண்டும். கடவுளைப் பற்றி அறிக்கையிடும்போதெல்லாம் நாம் நம்மைப் பற்றி அறிக்கையிடுகின்றோம். அறிக்கையிடுதலுக்கு அடிப்படையாக இருப்பது அறிதல்.
(ஆ) என் அறிக்கை என்ன?
முதல் வாசகத்தில், ‘மெசியா மக்களித்தாரின் ஒளி’ என்று அறிக்கையிடப்படுகிறார். இரண்டாம் வாசகத்தில், ‘கிறிஸ்து நமக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஆண்டவர்’ என்று அறிக்கையிடுகிறார் பவுல். நற்செய்தி வாசகத்தில் இயேசுவை, ‘கடவுளின் செம்மறி, உலகின் பாவம் போக்குபவர்’ என்று அறிக்கையிடுகிறார் யோவான். இயேசுவைப் பற்றிய என் அறிக்கை என்ன? கடவுள் பற்றிய பேச்சு அல்லது ஒருவர் தன் கடவுளை அறிக்கையிடுதல் என்பது வெளிவுலகில் ஏற்புடையதாகக் கருதப்படுவதில்லை. கடவுள் தொடர்பான அடையாளங்களை வேகமாக நாம் அழித்துக்கொண்டே வருகிறோம். நம் கடவுளைப் பற்றிய அறிக்கை மற்றவர்களுக்கு இடறலாக இருக்கிறது. ஒவ்வொருவரும் நம் உள்ளத்தில் இந்த அறிக்கை செய்ய வேண்டும். கடவுள் எனக்கு யார்? என்பதை நாம் கேட்போம். இந்தக் கேள்வியில் கடவுள் பற்றிய புரிதல் மட்டுமல்ல, நம்மைப் பற்றிய புரிதலும் அடங்கியுள்ளது.
(இ) ஆட்டுக்குட்டி!
இன்றைய உலகம் குதிரைகளையும், சிங்கங்களையும், யானைகளையுமே பெரிதாக முன்மொழிகிறது. நாம் அனைவரும் கடவுளின் குதிரைகளாக, சிங்கங்களாக, யானைகளாக இருக்க விரும்புகிறோமே தவிர, செம்மறி போல, ஆட்டுக்குட்டி போல இருக்க விரும்புவது கிடையாது. யாராவது ஒருவர் நம்மைப் பார்த்து, ‘நீ ஒரு சிங்கம்! குதிரை! யானை!’ என்று வாழ்த்தினால் மகிழ்கிற நாம், ‘நீ ஓர் ஆடு!’ என்று சொன்னால் மகிழ்வதில்லை. உலகின் பார்வையில் வலுவற்ற உயிரினமாக இருக்கின்ற ஒன்றோடு இயேசுவை அடையாளப்படுத்துகிறார் யோவான். காயம்பட்டு நிற்கிற ஆட்டுக்குட்டியே மக்களின் காயத்திற்குக் கட்டுப்போடுகிற பலிப்பொருளாக மாறுகிறது. இன்னொரு பக்கம், ‘பலி ஆடு’ என்னும் மனநிலை நம்மில் வரக் கூடாது. மற்றவர்களுடைய பலிப்பீடத்தில் பலியாகிற ஆடுகள் அல்ல நாம். மாறாக, ‘இதோ நான் வருகிறேன்!’ என்று ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வை நம் கரத்துக்குள் வைத்திருக்கிற ஆடுகள்! இயேசு எந்த நிலையிலும் தலைவராகவே இருந்தார். ‘நானாக அளித்தாலன்றி, என் உயிரை யாரும் என்னிடமிருந்து எடுத்துவிட முடியாது’ (காண். யோவா 10:18) என்கிறார் இயேசு. நம் வாழ்க்கை நகர்வுகளை நம் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
‘உலகின் பாவம் போக்கும் செம்மறியை’ நற்கருணையில் உட்கொள்கிற நாம் அவர் தருகிற விடுதலையைப் பெற்றுக்கொள்ள முன்வருவோம்.
பணிவாழ்வில் சான்றாவோம்
இன்றைய எதார்த்த உலகில் தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் பலர் சமூக வலைத்தளங்களிலும், பள்ளி, கல்லூரி நிகழ்வுகளிலும் பேசும்போது “உன் வாழ்க்கை, உன் விருப்பம்” என்ற கருத்தை முன்வைக்கின்றனர். நாம் வாழ்கின்ற ஒற்றை வாழ்வை, நம் விருப்பம் போல வாழ வேண்டும் என்ற கருத்து இன்றைய நவீன காலத்தில் அதிகமாகவே முன்வைக்கப் படுகின்ற ஒன்று. ஆனால், கிறிஸ்துவ வாழ்வு கொஞ்சம் வித்தியாசமானது. உண்மையான கிறிஸ்துவ வாழ்வை, சீடத்துவத்தை வாழ நாம் விரும்பினால், நம் விருப்பப்படி அல்ல, மாறாக, நம்மைப் படைத்த கடவுளது விருப்பப்படி, கடவுளின் ஊழியர்களாக வாழ வேண்டும். இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் பாடமும் அதுவே.
முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்றிணைக்கக் கடவுளின் திருவுளப்படி, அவர்தம் ஊழியனாகத் தாம் பணியாற்றுவதை விளக்குகின்றார். பதிலுரைப்பாடல் "உமது திருவுளம் நிறைவேற்ற இதோ, வருகின்றேன்" என இறைவனுக்குப் பதிலிறுக்கக் கற்றுத் தருகின்றது. இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கடவுளின் திருவுளத்தால் இயேசு கிறிஸ்துவின் பணியாளராகவும், திருத்தூதராகவும் தாம் அழைக்கப்பட்டுள்ளதை நினைவுகூர்கின்றார். நற்செய்தியில் திருமுழுக்கு யோவான், கடவுளின் திருவுளப்படி மீட்பராகிய இயேசுவுக்குச் சான்று பகர்கின்றார். அவ்வாறு சான்று பகர அவரை உந்தியவை 3. அருங்குணங்கள்.
- எளிமை உணவிலும், உணர்விலும், உடையிலும், உரையிலும் அவருக்குள் எளிமை குடி கொண்டிருந்தது (மத் 3:4). அந்த எளிய உணர்வே அவரைத் துணிவுடன் இறைவாக்குரைக்கத் தூண்டிற்று.
- நேர்மை ; 'இவர் யாரென்று எனக்குத் தெரியாதிருந்தது' (யோவா 1:31) என்று இயேசுவைப் பற்றிய தன் முன் அறியாமையை அப்பட்டமாக எடுத்துரைத்தார். இயேசுவைப் புரிந்துகொண்டபின் அவரை முன்னிறுத்திய நேர்மைத்தனம் நம்மை நெகிழ வைக்கின்றது.
- சான்றாண்மை: 'நானும் கண்டேன்; இவரே இறைமகன்' (யோவா 1:34) எனும் வார்த்தைகளால் திருமுழுக்கு யோவான் இயேசுவுக்கு சான்று பகர்ந்தார். இயேசுவின் இறையாட்சிப் பணிக்குப் பாதை படைத்தாரெனப் பண்போடு சொல்லலாம்.
விவிலியத்தில் இறைவனின் திருவுளம் நிறைவேற்றுவதற்காகவே வாழ்ந்தவர்கள் பலர். கடவுளின் திருவுளப்படி ஈசாக்கைப் பலியிட முன்வந்த ஆபிரகாம், இறைத் திருவுளப்படி, இஸ்ரயேல் மக்களின் விடுதலை வீரரான மோசே, “உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என இறைத் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்த அன்னை மரியா எனப் பலரும் நமக்குப் பாடமாய் உள்ளனர். “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதே என் உணவு” (யோவா 4:34) என உயர்ந்து நிற்கின்றார் இயேசு. “என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்" (மத் 26:39) என்ற இயேசுவின் வார்த்தைகள் நம் வாழ்வாகுமா ? நம் விருப்பப்படி வாழாமல், நம் கடவுளின் விருப்பப்படி வாழ நாம் தயாரா ? அப்படி வாழ்ந்தால்தான் நாம் இறைவனுக்கு உகந்த பணியாளர்கள், இயேசுவுக்கு உகந்த சீடர்கள்.