ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா
இயேசு ஒரு குறிப்பிட்ட இனத்தார்க்கு மட்டும் சொந்தமல்ல. அவர் எல்லார்க்கும் சொந்தமானவர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது இன்றையப் பெருவிழா.
எட்டுத் திக்கு மக்களும் இறைவனின் மக்களே என்பதைச் சுட்டிக்காட்டவே கிழக்கிலிருந்து (மத். 2:1) மூன்று ஞானிகள் புறப்பட்டு இயேசுவைக் காணச் சென்றார்கள் என்று திருவிவிலியம் கூறுகிறது.
இயேசு எல்லார்க்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கொண்டு வந்தவர். இதனால்தான் அவர் பிறந்தபோது விண்ணகத் தூதர் பேரணி, உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! (லூக். 2:13-14) எனக் கடவுளைப் புகழ்ந்தது! ஆம். இயேசு நன்மனம் படைத்த அனைவருக்கும் சொந்தமானவர்.
அவர் வாழ்ந்தபோது எந்த இனத்தாரையும் அவர் புறக்கணிக்க வில்லை! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத். 11:28) என்றார்.
அவர் சாகும்போது, தந்தையே இவர்களை மன்னியும் (லூக். 23:84அ) எனச் சொல்லி பாவிகள் எல்லாருக்காகவும் செபித்தார்.
இன்றும் கேட்பவர்கள் அனைவருக்கும் தூய ஆவியைத் தந்து (லூக். 11:9-13) அருங்கொடைகள் அனைத்திற்கும் ஆதி காரணமாக விளங்கி வருகிறார்.
நமது ஆண்டவர் அனைவரையும் அன்பு செய்யும் ஆண்டவராக விளங்குவதால், நாம் எந்த வேற்றுமையும் பாராட்டாது அனைவருக்கும் அன்பு நண்பர்களாக விளங்க வேண்டும். பிற இனத்தாரும் நமது பங்காளிகளே என்கிறார் புனித பவுல் (எபே. 3:6).
ஒளிவீசும் ஞாயிறைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை!
குளிர் சிந்தும் திங்களைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை!
ஆடி வரும் தென்றலைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை.
ஓடி வரும் அருவியைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை.
மலர், மணம், தேன், சுவை, கடல், கரை இவை யாவும் வேற்றுமை பாராட்டுவதில்லை! நாம் மட்டும் ஏன் வேற்றுமை பாராட்ட வேண்டும்? நாம் இயற்கையின் மணி மகுடமல்லவா?
அன்று ஒளியாய்ப் பிறந்து (எசா. 6:1) ஞானஒளி வீசி பிற இனத்தாரை தம்மை நோக்கி "ஈர்த்தார் இயேசு! வந்தவர் அனைவரும் அவரைக் கண்டு அவரிடமிருந்து அமைதியும், மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பெற்று வீடு திரும்பினர்! அதேபோல கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களை நம்பால் ஈர்க்கும், வாழ்வளிக்கும் ஒளி விளக்காகத் திகழ வேண்டும்.
இறைவா, எங்களுக்குப் போதுமான ஞானத்தைத் தாரும்!
சாதாரணமாக நம் வாழ்க்கையை இருள்மயமாக்குவது மூன்று வித நோய்கள் : உடல் நோய், உள்ள நோய், மரண நோய்.
எல்லா நோய்களிலிருந்தும் நமக்கு விடுதலையை அளித்து நமக்கு ஒளிமயமான வாழ்வை வழங்க நம் நடுவே இயேசு உலகின் ஒளியாகப் பிறந்திருக்கின்றார் (நற்செய்தி).
மத் 9:27-31: அங்கே பிறவியிலிருந்தே கண் தெரியாத இருவரைச் சந்திக்கின்றோம். பார்வையுள்ளோருக்கு 12 மணி நேரம்தான் இரவு; பார்வையற்றவர்களுக்கோ 24 மணிநேரமும் இரவு! பாவம்! அவர்கள் பகலைப் பார்த்ததே இல்லை! ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனையோ இராகங்கள் ; அவர்கள் இதயச் சுரங்கத்திற்குள்ளே எத்தனையோ ஆசைகள். அந்த ஆசைகளுக்குள்ளே ஒன்று இந்த உலகத்தைப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை! அவர்களை இயேசு தொடுகின்றார் ; அவர்களது கண்கள் திறக்கப்படுகின்றன : அவர்களது வாழ்க்கையிலே ஒளி பிறக்கின்றது.
லூக் 7:36-50 : அங்கே அவள் வாழ்க்கையிலே இருள் - உள்ளத்திலே இருள்! மின்னியதையெல்லாம் பொன்னென்று நினைத்தவள் அவள் ; வெளுத்ததையெல்லாம் பாலென்று நினைத்தவள் அவள் ; நிழலையெல்லாம் நிஜமென்று நினைத்தவள் அவள் ; ஏமாந்து போனவளாய், ஏமாற்றப்பட்டவளாய், எங்கே ஒளி கிடைக்கும் என்று ஒளியைத் தேடி அலைந்தாள்.
இறுதியாக காயப்பட்ட பறவையாக, ஒளிவிளக்காம் இயேசுவின் பாதத்திற்குக் கொண்டுவரப்பட்டாள் : மன்னிக்கப்பட்டாள் ; ஒளியின் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.
யோவா 11:1-44 : அங்கே அந்தக் கல்லறையில் இலாசரை வைத்து நான்கு நாள்களாகியிருந்தன! இலாசர் இருளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தார். இயேசு. இலாசரே வெளியே வா என்றதும் அவர் எழுந்து வெளிச்சத்திற்கு வந்தார்.
இதோ. நோயின் இருளையும், பாவ இருளையும், மரண இருளையும் அகற்றி மக்களையெல்லாம் வாழ்வாங்கு வாழவைக்க இயேசு நம் நடுவே பிறந்திருக்கின்றார். உங்கள் அனைவரையும் நான் வளமுடன் வாழவைக்கின்றேன். நீங்கள் என்னைத் தேடிவந்து என்னிடமிருந்து உங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெற்றுச் செல்லுங்கள் என்கின்றார்.
இன்று நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே! நம் நடுவே பிறந்திருக்கும் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (இரண்டாம் வாசகம்]. அவர் அனைத்து ஆசிகளையும் நம்மீது பொழிய வல்லவர் என்று நாம் நம்ப வேண்டும்.
நம்பிக்கை பிறப்பது அறிதலிலிருந்து. இயேசுவைப் பற்றி எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் அறிகின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்மீது நம்பிக்கை வைப்போம். நாம் இயேசுவைப் பற்றி அறிய பல வழிகள் உள்ளன. அவற்றில் ஓர் அருமையான வழி,தூய ஆவியாரை நோக்கி, தூய ஆவியாரே உமது முதல் வரமாகிய ஞானத்தை [முதல் வாசகம்] எனக்குத் தாரும் என்று மன்றாடுவதாகும்.
இதுவரை எத்தனையோ வரங்களை நாம் கடவுளிடம் கேட்டிருக்கின்றோம். ஒரு பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பு மாணவ, மாணவிகளைப் பார்த்து, கடவுள் உங்களுக்கு முன் தோன்றி உங்களுக்கு என்ன வேண்டும் என்றால் என்ன கேட்பீர்கள்? என்றேன். இரண்டு தேன் மிட்டாய்கள் என்றான் ஒரு சிறுவன். யாருக்கு? என்றேன். ஒன்று எனக்கு, இன்னொன்று என் தங்கச்சிக்கு என்றான். கடவுள்தான் உன் முன்னால் நிற்கின்றாரே, ஒரு மூட்டை மிட்டாய் வாங்கி எல்லாருக்கும் கொடுக்கலாமே என்றேன். அவனும், கொடுக்கலாமே என்றான்.
ஒரு நாள் ஒரு முதியோர் இல்லத்திலுள்ள தாத்தா, பாட்டிகளைப் பார்த்து, உங்களுக்கு என்ன வேண்டும்? என்றேன். ஆளுக்கொரு பல்செட் வாங்கித் தாங்களேன் என்றார்கள்! இப்படி எத்தனையோ ஆசைகள் நமது மனத்திற்குள் எழுந்து மறைகின்றன.
இன்று. இயேசுவே, உம்மை வெறும் தலைவராக மட்டுமல்ல, பெரிய சூப்பர் ஸ்டாராக மட்டுமல்ல. உம்மை ஆற்றல்மிக்க, எங்களை வாழவைக்கும் கடவுளாக, எங்கள் வாழ்வின் மையமாக. எப்படிப்பட்ட இருளையும் போக்கும் பரமனாக ஏற்றுக்கொள்ள எங்களுக்குப் போதிய ஞானத்தையும், இறையறிவையும் தாரும் என்று மன்றாடுவோம். மேலும் அறிவோம் :
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (குறள் : 4).
பொருள் :
இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். அவனுடைய திருவடியைச் சென்று அடைபவருக்குத் துன்பங்கள் எதுவும் தோன்றாது.
ஆண்டவரின் திருக்காட்சி
இந்துக்களுக்கு ஒரு கடவுள், இஸ்லாமியருக்கு ஒரு கடவுள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடவுள் என்று மூன்று கடவுள் இல்லை. கடவுள் ஒருவரே. அவர் எல்லா மனிதரும் மீட்படைய விரும்புகிறார் (1 திமொ 2: 4-5), மேலும் பேதுரு கூறுவதுபோல, "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை; எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடப்பவர் அவருக்கு ஏற்புடையவர்" (திப 10: 34-35)
மீட்பு என்பது யூத இனத்தாருக்கு மட்டும் உரிய தனியுடைமை அல்ல; மாறாக, அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொது உடைமை என்பதை இன்றையப் பெருவிழா நமக்கு உணர்த்துகின்றது. யூதர்கள் அவர்கள் மட்டுமே மீட்படைவர், மற்றவர் மீட்படையமாட்டார்கள் என்று தவறாக எண்ணினர். ஆனால் உண்மையில் பிற இனத்தவர் மீட்பரை ஏற்றுக் கொண்டனர்: யூத இனத்தார் மீட்பரை ஏற்றுக் கொள்ளவில்லை. "அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" (யோவா 1:11),
இன்றைய அருள்வாக்கு வழிபாடு பிற இனத்தாரும் மீட்படைவர் என்ற உண்மையை எடுத்துரைக்கின்றது. இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: "பிற இனத்தார் உள் ஒளியை நோக்கி வருவார்கள்" (எசா 60:3). பதிலுரைப்பாடல் கூறுகிறது, "மக்களினத்தார் அனைவரும் அவரை வணங்குவர்" (திபா 72:11). இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "பிற இனத்தாரும் யூத இனத்தாருடன் ஒரே உரிமைப்பேற்றிற்கு வாரிசுகள்” (எபே 3:6). இன்றைய நற்செய்தியில், பிற இனத்தைச் சார்ந்த ஞானிகள் குழந்தை இயேசுவை அதன் தாய் மரியாவுடன் கண்டு. அவரை ஆராதித்து, அவருக்குக் காணிக்கை செலுத்துகின்றனர் (மத் 2:11).
நாம் அனைவரும் பிற இனத்தைச் சார்ந்தவர்கள். கடவுள் தமது அளப்பரிய அன்பிலே நம்மையும் மீட்புக்குத் தகுதியுள்ளவர்களாகத் தேர்ந்து கொண்டார். எனவே அவருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்போம். "பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும்ஆண்டவரைப் போற்றுங்கள்" (திபா 117:1),
ஓர் இளைஞள் ஓர் இளம் பெண்ணைக் காதலித்தான். பெண் வீட்டார் அவர்களின் காதலுக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் காதலன் தன் காதலியிடம், "நீ கட்டிய புடவையுடன் வா: காலமெல்லாம் உன்னைக் கண் கலங்காமல் காப்பாற்றுவேன்" என்று உறுதி அளித்தான். ஆனால் அந்தப் பெண் 10 புடவைகளுடன் வந்தாள். ஏன் என்று கேட்டதற்கு, "இந்தப் பத்துப் புடவைகளும் நான் கட்டிய புடவைகள்" என்றாள்!
ஒரு பெண் தன் காதலனை நம்பித் தன்னுடைய பெற்றோர், உற்றார் உறவினர் ஆகிய அனைவரையும் விட்டு விட்டுக் கட்டிய புடவையுடன் வர முடியும் என்றால், நாம் கடவுளை நம்பி அவரிடம் ஏன் சரண் அடையக் கூடாது? கீழ்த்திசை ஞானிகள் தங்களுடைய சொந்தம் பந்தம், சொத்துப் பத்து எல்லாவற்றையும் விட்டு விட்டு விண்மீனை நம்பி தங்கள் நம்பிக்கைப் பயணத்தை மேற்கொண்டனர். கிறிஸ்தவ வாழ்வு ஒரு துணிச்சலான பயணம். அதனை மேற்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோமா?
கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ளத் திருத்தூதர் பவுல் அனைத்தையும் குப்பையெனக் கருதினார் (பிலி 3:8). கடந்ததை மறந்துவிட்டு முன் இருப்பதைக் கண்முன் கொண்டு இலக்கை நோக்கி ஓடினார் (பிலி 3:13-14), இறுதியாக ஓட்டத்தை முடித்துக் கொண்டு வெற்றிவாகை சூடினார் ( 2திமொ 4:7-8), வேதனையோ நெருக்கடியோ, சாவோ வாழ்வோ எதுவுமே அவரைக் கிறிஸ்துவிடமிருந்து பிரிக்க முடியவில்லை (உரோ 8:35-39).
வாழ்க்கையில் எழும் தடைகளைக் கண்டு மலைத்துப்போய் மனமுடைந்து போகிறவர் மனிதர் அல்லர். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடக் கற்றுக்கொள்ள வேண்டும். தண்ணீர் ஓடும் திசையில் செத்த பிணம்கூடச் சிரமமின்றிப் போகும். ஆனால் தண்ணீர் ஓடும் திசைக்கு எதிராக நீந்த வேண்டுமென்றால் அதற்குத் துணிச்சல் வேண்டும். இதுவரை பலர் தடந்த பழைய பாதையில் நடப்பது எளிது, ஆனால் இதுவரை எவருமே நடக்காத புதிய பாதையில் சென்றவர்கள்தான் சாதனையாளர்களாக மாறினார்கள். மற்றவர்கள் முகவரியில்லாமல் மறைந்தனர்.
கீழ்த்திசை ஞானிகள் பல தடைகளைச் சந்தித்தனர். இருப்பினும் அவற்றையெல்லாம் கடந்து தங்களது குறிக்கோளை அடைந்தனர். இலக்குத் தெளிவு உடையவர்கள். துணிச்சலுடன் செயல்படுபவர்கள், இலக்கை அடைவர் என்பது உறுதி.
எண்ணியார் எண்ணியாங்கு எய்துப எண்ணியாச்
திண்ணியர் ஆகப்பெரின் (குறள் 666)
கீழ்த்திசை ஞானிகள் கிறிஸ்துவைச் சந்திக்க விண்மீன் உதவியதுபோல, நம்மைச் சுற்றி வாழ்கின்ற பிற சமயத்தினர் கிறிஸ்துவிடம் வர நம் வாழ்வு ஒரு விண்மீனாக அமைவதாக, "உங்கள் ஒளி மனிதர்முள் ஒளிர்க" (மத் 5:16).
ஓர் அழைப்பு-ஓர் அறைகூவல்
வேறுபட்ட சமயங்களைச் சார்ந்த மூன்று பேர் எந்தச் சமயம் சரியானது, உயர்வானது என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையில், பக்கத்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவரை அணுகினர்.
அந்தப் பெரியவர் சொன்னார்: "அதோ, அந்தக் குன்றைப் பாருங்கள். அதன் உச்சியில் ஒரு மாவு ஆலை! அதனைச் சென்றடைய மூன்று வழிகள் இருக்கின்றன. நேரே தெரிகின்ற பாதை சுருக்கமானது. ஆனால் செங்குத்தானது. ஏறிச் செல்லச் சிறிது சிரமமானது. பக்கவாட்டில் ஒரு பாதை. அகலமானது. ஆனால் குண்டும் குழியுமாகக் கரடுமுரடானது. இடதுபக்கமாகச் சென்றால் இன்னொரு பாதை. மலையைச் சுற்றி வளைந்து செல்லும். தூரமானது. அதே வேளையில் எளிதானது. மூன்று வழிகளுமே மாவு ஆலையில்தான் சென்று முடிகின்றன” சிறிதுநேரம் மௌனம் காத்த பெரியவர் தொடர்கிறார்: "மாவு ஆலையை அடைந்ததும் அந்த ஆலை முதலாளி “நீ எந்த வழியில் வந்தாய்?" என்று கேட்கமாட்டார். கேட்கவும் அவருக்குத் தோன்றாது. "நீ கொண்டு வந்திருக்கும் கோதுமை நன்றாக விளைந்ததா? நன்கு காய்ந்து உலர்ந்ததா? அரைப்பதற்கு ஏற்ற பக்குவத்தில் உள்ளதா?” என்று மட்டுமே கேட்பார்.
மேலே காணும் கதையாகட்டும், கீழ்த்திசை ஞானிகளின் வருகையாகட்டும் உணர்த்துகின்ற உண்மை ஒன்றே! எந்த ஒரு சமயமும் கடவுளைத் தனி உடைமையாக உரிமை கொண்டாட முடியாது. இஸ்ரயேலரோ, பிற இனத்தவரோ எல்லா மக்களுக்கும் உரியவர் கடவுள். அவர் தரும் மீட்புக்கும் விடுதலைக்கும் எல்லாச் சமயத்தினரும் உரியவரே. உண்மையோடும் நேர்மையோடும் திறந்த மனத்தோடும் கடவுளைத் தேடுபவர்கள் அவரைக் கண்டடைகிறார்கள் என்பதே கீழ்த்திசை ஞானிகள் நமக்குச் சொல்லும் செய்தி,
இந்த உணர்வைத்தான் விடுதலை தந்த மகிழ்ச்சிக் கீதமாக இறைவாக்கினர் எசாயா இசைக்கிறார்: "ஆண்டவரின் மாட்சி உன் மீது தோன்றும். பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர். மன்னர் உன் உதயக் கதிர் நோக்கி நடைபோடுவர்" (எசாயா 60:2-3). இதே உணர்வுக்குத் தனி அழுத்தம் கொடுத்துத் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நற்செய்தியின் வழியாக, பிறஇனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள்" (எபேசி.3:6)
இயேசுவைச் சந்திக்க வந்த கீழ்த்திசை ஞானிகள் யூதர்களே அல்லர்; மாறாகப் பிற இனத்தவர்தாம்! இன்னும் சொன்னால் ஆன்மீகவாதிகளோ, சமயத்தின் பிரதிநிதிகளோ கூட அல்லர். ஆனால் முழுதும் கற்ற, மெய்யுணர்ந்த சான்றோர்கள். உலகத்தின் தலைசிறந்த வரலாற்று நிகழ்வைத் தேடி கண்டுபிடித்தவர்கள். வெறுமனே தங்கள் கடமைகளையும் வாடிக்கையான நிகழ்வுகளையும் நடத்திக் கொண்டிருந்தவர்கள் அல்ல. ஆனால் நிறை உண்மையின், நிலை வாழ்வின் முழுப் பொருளையும் தேடிக் கண்டடைந்தவர்கள்!
அந்தத் தேடலின் பயனாக அவர்களுக்குத் தென்பட்டது வெறும் வால் நட்சத்திரம் அன்று; அதற்குப் பின்னால் ஒரு மாபெரும் நற்செய்தி. விண்மீன் வெளிப்படுத்திய இறைமாட்சிமை! (It was more a theologi- cal star than an astronomical star)
கீழ்த்திசை ஞானிகள் சென்ற பாதையே கிறித்தவ வாழ்க்கை. அது அவர்கள் கால்போன பாதை அல்ல அது கரடு முரடானது, பாலை பள்ளத்தாக்கானது. மலை நதியானது! அது அவர்கள் மனம் போன பாதை, அது மூன்று படிகள் கொண்டது. தேடுதல், கண்டடைதல், அனுபவித்தல்.
1. தேடுதல் : தேடலே ஞானத்தின் தொடக்கம். வீட்டில் தொலைத்த சாவியை நினைத்து வெளிச்சம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக வீதியில் தேடிய முல்லா அல்ல கீழ்த்திசை ஞானிகள் வானியல் நூற்கள் ஆய்வு, இரண்டாண்டுப் பயண முயற்சி, ஏரோது மாளிகையில் தகவல். அவர்கள் விண்மீனை அன்று, அதில் ஒரு செய்தியை, ஓர் அடையாளத்தைக் கண்டனர். தேடுதல் எல்லாமே உண்மையை நோக்கி இருப்பதில்லை. ஏரோதும் தேடினான் உண்மையை அறிவதற்கல்ல; உண்மையைக் கொல்வதற்கு! ஞானிகளை வழிநடத்தி வந்த விண்மீன் எருசலேம் வரவும் மறைந்து விட்டது. காரணம்? அவர்கள் தேடியது ஏரோது மாளிகையை. அங்கே உண்மை அன்று. ஏரோதின் சூழ்ச்சியும் பரிசேயரின் அகந்தையுமே இருந்தன.
2. கண்டுபிடித்தல் : வெளித்தோற்றத்தில் ஓர் ஏழைக் குழந்தைதான். அக்குழந்தையில் எப்படி இறைவனைக் கண்டு தூபத்தையும் (எண்.16:40) அரசனைக் கண்டு பொன்னையும் (1 அர.7:51) மனிதனைக் கண்டு வெள்ளைப் போளத்தையும் (யோ.19:39) காணிக்கையாக்க முடிந்தது, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்க முடிந்தது! (மத்.2:11) உண்மையின் கண்டுபிடிப்பும் மனித முயற்சி அன்று; ஆவியின் செயலே!
3. அனுபவித்தல்: நம்பிக்கை வாழ்வு வார்த்தைக்குள் அடங்காது. வாழ்ந்து பார்க்க வேண்டியது. புதிய திருப்பத்தை, புதிய மனமாற்றத்தை, புது வாழ்வை, புது வழியை உணர்த்தும். "ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று அவர்கள் கனவில் எச்சரிக்கப்பட்டதால் வேறுவழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்" (மத்.2:12). "உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு... அவரே உன் சார்பில் செயலாற்றுவார்" (தி.பா.37:5)
திருக்காட்சித் திருவிழா ஒர் அழைப்பு - அதே சமயம் ஓர் அறை கூவலும் கூட.
1. நம்மை அவரை நோக்கி ஈர்க்கிறது. ஆகையால் அது ஓர் அழைப்பு.
2. நம்மை மாற்றுப் பாதையில் செல்லப் பணிக்கிறது. ஆகையால் அது ஒரு சவாலான அறைகூவல்.
திட்டங்கள்... திட்டவட்டமான செயல்கள்
மகன் தந்தையிடம் புதிர் கேள்வியொன்றைத் தொடுத்தான். “ஒரு குளத்தின் கரையில் மூன்று தவளைகள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?” என்று கேட்டான். “இது என்ன பெரிய புதிர்... மீதி இரண்டு தவளைகள் இருக்கும்” என்று பெருமையாகச் சொன்னார் தந்தை. “அப்பா, கேள்வியைச் சரியாகப் புரிந்து கொண்டு பதில் சொல்லுங்கள். மூன்று தவளைகளில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?” என்று கேள்வியை மீண்டும் சொன்னான்.
அப்பா எதையோ புரிந்து கொண்டவர் போல், “ஓ, புரிகிறது... கரையில் ஒன்றும் மீதி இருக்காது. ஒரு தவளை குதித்ததும், மற்றவைகளும் குளத்திற்குள் குதித்துவிடும்” என்று சொன்னார். அவரது அறிவுத் திறனை அவரே மெச்சிக் கொண்டதைப்போல் புன்னகை பூத்தார்.
“அப்பா, மீண்டும் தவறாகச் சொல்கிறீர்கள்” என்று மகன் தலையில் அடித்துக்கொண்டு, விளக்கத் தொடங்கினான்: “மூன்று தவளைகளும் கரையில்தான் இருக்கும். அவைகளில் ஒன்று குளத்திற்குள் குதிக்கத் தீர்மானம் செய்ததே ஒழிய, இன்னும் குதிக்கவில்லை” என்று விளக்கம் கொடுத்தான். தந்தையின் முகத்தில் இறுக்கம் தெரிந்தது. இலேசாகக் கொஞ்சம் அசடும் வழிந்தது.
சில நாட்களுக்கு முன் நாம் ஆங்கிலப் புத்தாண்டு நாளைக் கொண்டாடினோம். ஒவ்வோர் ஆண்டின் துவக்கத்திலும் நாம் புத்தாண்டுத் தீர்மானங்கள் எடுக்கிறோம், திட்டங்கள் தீட்டுகிறோம். தீர்மானங்களும், திட்டங்களும் மனதளவில் நின்றுவிட்டால் பயனில்லை. அவை செயல்வடிவம் பெறவேண்டும். தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவேண்டும் என்ற பாடத்தை இன்றையத் திருக்காட்சிப் பெருவிழா நமக்குச் சொல்லித்தருகிறது. மூன்று இராசாக்கள், மூன்று அரசர்கள், மூன்று ஞானிகள் என்று பலவாறாக அழைக்கப்படும் இன்றைய விழா நாயகர்கள் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். எந்தத் தடை வந்தாலும், எடுத்தத் தீர்மானத்தில் உறுதியாய் இருந்த இவர்களை, தீர்மானங்களின் பாதுகாவலர்கள் எனக் கொண்டாடலாம். மூன்று ஞானிகளும் ஒரு விண்மீனைக் கண்டதால், கடினமானதொரு பயணம் மேற்கொண்டனர். இவர்கள் கண்ட அதே விண்மீனை இன்னும் பல்லாயிரம் பேர் பார்த்திருப்பர். ஆனால், ஏனையோருக்கு அது வெறும் விண்மீனாய் பளிச்சிட்டது, நமது புத்தாண்டுத் தீர்மானங்களைப் போல... அவ்வளவுதான்... மூன்று ஞானிகளுக்கோ அந்த விண்மீன் ஓர் அழைப்பாகத் தெரிந்தது. அவர்கள் அந்த விண்மீனைத் தொடரத் தீர்மானித்தனர். அவர்களது தீர்மானத்தைக் கேட்ட அவரது குடும்பத்தினர், உறவினர், ஊர்மக்கள் அவர்களைக் கேள்விக்குறியுடன் பார்த்திருக்கலாம். கேலி செய்திருக்கலாம். அவர்களது கேள்விகளும், கேலிகளும் இம்மூன்று ஞானிகளின் உறுதியைக் குறைக்கவில்லை. விண்மீனைத் தொடர்ந்தனர்.
விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் வழி நடந்தனர் என்றும்,. இறைவனைச் சந்தித்தபின் இவர்கள் வேறு வழியாகச் சென்றனர் என்றும் இன்றைய நற்செய்தி சொல்கிறது. வாழ்க்கையில் எந்த விண்மீன்களின் ஒளியில் நாம் நடக்கிறோம் என்றும், இறைவனைச் சந்தித்தப்பின் நம் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பது பற்றியும் சிந்திக்கலாம். விண்மீன்கள் என்றதும் நட்சத்திரங்கள், ஸ்டார்கள் என்ற சொற்களும், இச்சொற்களுடன் தொடர்புகொண்ட பல எண்ணங்களும் உள்ளத்தில் எழுகின்றன. திரைப்படம், விளையாட்டு போன்ற துறைகள் உருவாக்கும் செயற்கையான 'ஸ்டார்களும்' 'சூப்பர் ஸ்டார்களும்' எவ்வளவு தூரம் இளையோர் வாழ்வை ஆக்கிரமித்துள்ளன என்பதை எண்ணிப்பார்க்க இது நல்லதொரு தருணம். இந்த ‘ஸ்டார்களை’ச் சுற்றி வட்டமிட்டு, வாழ்வை வீணாக்கும் விட்டில் பூச்சிகளை நினைத்தால், வேதனையாய் இருக்கிறது.
வானில் தோன்றும் விண்மீன்களைத் தொடர்வது எளிதான செயல் அல்ல. விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே இந்த ஞானிகள் இரவில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்கவேண்டும். பயண வசதிகள் மிகக் குறைவாக இருந்த அக்காலத்தில் இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்ல. அதுவும் பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே ஒரு சிறு விண்மீனை மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு, அந்த விண்மீனைத் தொடர்வது அவ்வளவு எளிதல்ல. பல இரவுகள் மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்த நேரங்களில் மேகமும், பனியும் விலகும்வரைக் காத்திருந்து, மீண்டும் விண்மீனைப் பார்த்து... எத்தனை எத்தனை இரவுகள் அவர்கள் நடந்திருக்க வேண்டும்? இத்தனை இடர்கள் மத்தியிலும் ஒரே குறிக்கோளுடன் பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.
இந்த மூன்று ஞானிகளை, பாரம்பரியமாக, மூன்று அரசர்கள் என்றே அழைத்து வந்துள்ளோம். இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இன்றைய நற்செய்தி (மத்தேயு 2:1-12) நான்கு அரசர்களைப் பற்றி கூறுகிறது. ஆம், இந்த மூன்று அரசர்களுடன் நாம் ஏரோது அரசனையும் இணைத்துப் பார்க்கிறோம். இவர்கள் நால்வரும் இயேசுவைத் தேடினார்கள். விண்மீன் வழிநடத்த, பல நூறு மைல்கள் பயணம் செய்த மூன்று அரசர்கள், எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் இயேசுவை உண்மையிலேயேத் தேடினர். இயேசுவைக் கண்டதும் தங்களையே அர்ப்பணம் செய்ததன் அடையாளமாக, காணிக்கைகளை அக்குழந்தையின் காலடியில் சமர்ப்பித்தனர்... அதன்பின், வேறுவழியில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர். இந்த நிகழ்வுக்குப் பின், அவர்களைப் பற்றி விவிலியத்தில் எந்தத் தகவலும் இல்லை. திரும்பிச்சென்ற வழியில், ஏதோ காற்றோடு காற்றாக அவர்கள் கரைந்துவிட்டதைப் போல் தெரிகிறது.
இறைவனைத் தேடி, கண்டுபிடித்து, அவரை உண்மையாகவேச் சந்தித்த பலரது நிலை இதுதான். எடுத்துக்காட்டாக, எருசலேம் கோவிலில் குழந்தை இயேசுவைக் கையிலேந்திய சீமோன் இயேசுவைக் கண்டதால் உண்டான மகிழ்வுடன் இவ்வுலகிலிருந்து விடைபெற விரும்பினார். (லூக்கா 2:25-32) இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானின் நிலையும் (யோவான் 3:30) “இனி வாழ்பவன் நான் அல்ல: கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலாத்தியர் 2:20) என்று முழங்கிய புனித பவுலின் நிலையும் இதைப் போன்றதே. இறைவனை உண்மையிலேயேக் கண்டு, நிறைவடைந்த அனைவருமே தங்கள் வாழ்வை அவரிடம் அர்ப்பணித்துவிட்டு மறைவதையே விரும்புவர். இந்த அழகியப் பாடத்தை மூன்று அரசர்கள் நமக்குச் சொல்லித் தருகின்றனர்.
இதற்கு நேர்மாறாக, நான்காவது அரசன் ஏரோதுவின் செயல்பாடுகள் அமைந்தன. அவனும் இயேசுவைத் தேடினான். எதற்காக? அவரைக் கொல்வதற்காக. அவரைக் கண்டு வணங்கப் போவதாக மூன்று ஞானிகளிடம் பொய் சொன்னான். அவனது தேடுதல் வெறியாக மாறி, பல நூறு பச்சிளம் குழந்தைகளை அவன் கொன்று குவித்தான். இயேசுவைக் கண்ட மகிழ்வில் மறைந்துபோன மூன்று அரசர்களுக்கு நேர்மாறாக, ஏரோது இயேசுவை மறைக்க, அழிக்க வழி தேடினான். காரணம் என்ன? அவன் இயேசுவைவிட முக்கியமான ஒரு கடவுளைக் கண்டுவிட்டதாக நினைத்தான். அவனைப் பொருத்தவரை, அவனது அரியணையே அவன் வணங்கிய கடவுள். அரியணை என்ற இந்தக் கடவுளுக்கு, அவன் தன் மனைவியரையும், பிள்ளைகளையும் பலி கொடுத்தான் என்று சொல்லப்படுகிறது. இயேசுவையும் பலி கொடுக்க முயன்றான். ஏரோதின் வாழ்க்கை சொல்லித்தரும் எச்சரிக்கைப் பாடங்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்
. மூன்று ஞானிகளின் கதை வேறு பல அழகான கற்பனைக் கதைகளுக்கு வித்திட்டுள்ளது. அவைகளில் ஒன்று Henry Van Dyke எழுதிய “The Other Wise Man” மற்றுமொரு ஞானி என்ற கதை. இந்தக் கதையில் வரும் ஞானியின் பெயர் Artaban. தான் சந்திக்கச் செல்லும் மன்னனுக்குப் பரிசுகள் ஏந்திச்செல்ல நினைத்த Artaban, தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று, விலையுயர்ந்த மாணிக்கம், வைரம், முத்து ஆகியவற்றை வாங்கிக்கொண்டார்.
அவர் செல்லும் வழியில், நோயுற்று சாகும் நிலையிலிருந்த ஒரு யூதரைப் பார்த்தார். நோயாளியை விட்டுவிட்டுச் செல்ல நினைத்தார். ஆனால் மனம் இடம் தரவில்லை. தன்னிடம் இருந்த மாணிக்கத்தை விற்று, அந்தப் பணத்தைக்கொண்டு நோயாளிக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். இதனால், அவரது பயணம் கொஞ்சம் தாமதமானது.
அவர் பெத்லகேமை அடைந்தபோது, மற்ற மூன்று ஞானிகளும் மீண்டும் தங்கள் நாட்டுக்குப் போய்விட்டதை அறிந்தார். அதைவிட, பெரும் ஏமாற்றம்... குழந்தை இயேசுவை அவரது பெற்றோர் எகிப்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்ற செய்திதான். Artaban எகிப்து நோக்கி தன் பயணத்தைத் துவக்கியபோது, மன்னன் ஏரோதின் படைவீரர்கள் அங்குள்ள குழந்தைகளைக் கொல்வதற்கு வருவதைப் பார்த்தார். தன்னிடம் இருந்த வைரத்தைப் படைத் தளபதியிடம் கொடுத்து, ஒரு குழந்தையை அவர் காப்பாற்றினார்.
பின்னர், Artaban 33 ஆண்டுகள் தனது மன்னனைத் தேடி வந்தார். சென்ற இடமெல்லாம், தன்னால் இயன்ற அளவு பிறருக்கு உதவிகள் செய்து வந்தார். இறுதியில் அவர் எருசலேம் வந்து சேர்ந்தார். அங்கு, இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு ஏற்கனவே கல்வாரிக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்று கேள்விப்பட்டார். தன் கையிலிருக்கும் விலையுயர்ந்த முத்தை அந்த வீரர்களிடம் கொடுத்து இயேசுவை மீட்டுவிடலாம் என்று கல்வாரி நோக்கி விரைந்தார். போகும் வழியில், அடிமையாக விற்பதற்கென்று ஒரு பெண் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டார். அப்பெண்ணை விடுவிக்க, தன்னிடம் இருந்த கடைசி பரிசான அந்த முத்தையும் கொடுத்தார். அந்நேரத்தில், திடீரென இருள் சூழ்ந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டது. Artaban தலையில் அடிபட்டு கீழே விழுந்தார். அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக: "இந்தச் சிறியவர்களுள் ஒருவருக்கு நீர் இதைச் செய்யும்போது, எனக்கேச் செய்தீர்." என்ற குரல் கேட்டது. இக்குரலைக் கேட்டதும், Artaban தான் தேடி வந்த அரசனைக் கண்டுகொண்ட மகிழ்வோடு, நிறைவோடு கண்களை மூடினார்.
மனதுக்கு நிறைவைத்தரும் ஒரு கதை. விண்மீனைக் கண்டு பயணம் புறப்பட்டவர்களெல்லாம் கடவுளை நேரில் கண்டனரா? இல்லையே. எத்தனையோ பேர், கடவுளை நேரில் காணாதபோதும், அந்தக் கடவுளின் நியதிகளை வாழ்நாள் முழுவதும் பின்பற்றினர். இதனால், அவர்களே பலரை, கடவுளிடம் அழைத்துச்சென்ற வின்மீண்களாயினர் என்பதை Artaban புரிய வைக்கிறார்.
உண்மையான விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்றதால் தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப்போல், Artabanஐப் போல், எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். தீர்மானமாய் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளைப் போல், இப்புத்தாண்டின் துவக்கத்தில் நாமும் இறைவனைக் காணவும், அவரிடம் மற்றவர்களை அழைத்துவரும் விண்மீன்களாய்த் மாறவும் தேவையான இறையருளை வேண்டுவோம்.
திருக்காட்சி திருவிழா
வரலாற்றுப் பின்னணி
இது ஒரு பழமையான விழா. சாதாரணமாக கிரேக்க- உரோமானிய கலாச்சாரத்தில் பேரரசரின் பிறப்பையோ, அல்லது பதவியேற்பு விழாவையோ, அல்லது ஒரு நகரத்திற்கு அவர் தரும் வருகையையோ சுட்டிக்காட்டவே 'திருக்காட்சி' (epiphany) என்ற பெயர் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், தெய்வீகத்தின் வெளிப்பாட்டைச் சுட்டிக்காட்டுவதாக அமைகிறது இவ்விழா.
இது பழமைக்காலத்திலிருந்தே ஜனவரி 6-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. எகிப்திய முறைப்படி சூரிய கடவுளின் திருவிழா இந்நாளிலேயே கொண்டாடப்பட்டது. மேலும், குளிர் காலம் முடிந்து இளவேனிற் காலம் துவங்குவதனாலும் இந்நாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலும், ஏயோன் (Aeon) என்ற கடவுளின் பிறந்த நாள் இந்நாளிலேயே கொண்டாடப்பட்டது. இக்கடவுள் ஒரு கன்னிகையிடமிருந்து பிறந்ததாக ஒரு நம்பிக்கை. இவை அனைத்தையும் உள்ளடக்கியே, உரோமானிய சமயத்தில் ஜனவரி 6ஆம் நாளைச் சூரிய கடவுளின் விழாவாக மிகவும் ஆடம்பர- மாகக் கொண்டாடி வந்தனர். கிறிஸ்தவ மதம் உரோமானியரை கைபற்றிய பின்பு, இவ்விழா நாளிலே கிறிஸ்துவின் திருக்காட்சித் திருவிழாவைக் கொண்டாடி வந்தனர்.
இத்திருவிழாவிலே நான்கு சிறப்புகள் உண்டு. இயேசுவின் பிறப்பைக் குறிப்பதாக இருந்தது. அத்தோடு, இயேசுவின் திருமுழுக்கு, ஞானிகளின் வருகை மற்றும் கானாவூர் திருமண விழாவில் இயேசு தண்ணீரை இரசமாக மாற்றிய நிகழ்வு ஆகிய நான்கையும் குறிப்பதாக இவ்விழா முற்காலத்தில் கொண்டாடப்பட்டது. காலம் செல்லச்செல்ல, இந்நாள் ஞானிகளின் வருகையைக் குறிப்பதாக மட்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதல் வாசகப் பின்னணி (எசா. 60:1-6)
பொதுவாக எசாயா எழுதிய புத்தகத்தை மூன்றாகப் பிரிப்பர். இவற்றுள் இவ்வாசகம் 3-ஆவது எசாயா என்ற பிரிவின் கீழ் வருகிறது. இஸ்ராயேல் பாபிலோன் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வாங்கிய பின் எழுதப்பட்டவையாக இருக்கிறது. இப்பிரிவின் கீழ் வரும் அதிகாரங்கள் (56-66). எனவே இவற்றில் புதிய சுதந்திரம், புதிய வாழ்வு, புதிய எருசலேம், புதிய விண்ணகம் என்னும் கருத்துக்கள் காணக்கிடக்கின்றன.
குறிப்பாக, இன்றைய முதல் வாசகமாக நமக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் பகுதியில், சீயோன் ஒளியாக இருந்து மக்களினங்களை தன்னிடத்தில் ஈத்துக்கொள்வேண்டும் என்பதே மையக்கருத்தாக இருக்கிறது. குறிப்பாக 55 முதல் 59 வரை உள்ள அதிகாரங்களில் இருள் என்ற கருத்தே அதிகமாக இருக்கிறது. அதற்கு மாற்றாக இவ்வதிகாரத்தில் ஒளி என்ற கருத்து முதலிடம் பெறுகிறது. சீயோன் ஒளியாக இருந்து மக்களினங்களின் இருளை போக்க வேண்டும் என்பது உள்ளார்ந்த கருத்து. இவை அனைத்தும் மீட்பரின் வருகையை முன்னறிவிப்பதாகவே இருக்கிறது. மெசியா வந்து உலகின் இருளை போக்கி, தம் ஒளியால் உலகை நிரப்புவார் என்பதே இவ்வாசகம் நமக்குக் கொடுக்கும் செய்தி.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபே. 3:2-3,5-6)
எபேசியருக்கு எழுதப்பட்ட திருமுகம் பொதுவாகப் பவுலால் எழுதப்பட்டது என்று கருதப்பட்டாலும், சுமார் 80% அறிஞர்கள் பவுலின் சீடர்களுள் ஒருவர் எழுதியிருக்கக்கூடும் என்று கருதுகின்றனர். இவ்வாசகம் எடுக்கப்பட்டிருக்கும் பகுதி, இறைபுகழோடு இறைவன் இயேசு கிறிஸ்து வழியாகச் செய்துள்ள பெருங்காரியங்களை நினைவுபடுத்துவதாக அமைகின்றது. இயேசு வழங்கிய மீட்பு யூதருக்கு மட்டுமல்ல, மாறாக யூதரல்லாதோருக்கும் பொருந்தும் இயேசுவின் மீட்புச்செயல் அனைவருக்கும் உரியது என்று சுட்டிக்காட்டுவதாக அமைகிறது இவ்வாசகம். இத்திருவிழாவின் சிறப்பு அம்சம் மீட்பரை புறஇனத்தார் கண்டுகொள்வர் என்ற கருத்துக்கு ஒத்ததாக அமைகிறது.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 2:1-12)
மத்தேயு நற்செய்தி மட்டுமே ஞானிகளின் வருகையைக் குறிப்பிடுகிறது. இந்த நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவர்கள் அரசர்களா? ஞானிகளா? குருக்களா? என்ற கேள்விகள் உண்டு. பொதுவாக மூன்றரசர்கள் திருவிழா என இவ்விழா அழைக்கப் பட்டாலும், இவர்கள் ஞானிகளாகவே கருதப்படுகிறார்கள். எத்தனை பேர் வந்தனர் என்ற வினாவிற்கும் பல விடைகள் உண்டு. கிழக்கத்திய திருச்சபையில் 12 பேர் என்ற பாரம்பரியம் உண்டு. மத்தேயு நற்செய்தியில் இது வெளிப்படையாக கொடுக்கப்படாவிட்டாலும், இவர்கள் கொண்டுவந்த காணிக்கைகள் மூன்றாகையால், ஞானிகளும் மூவர் என்கிறது பாரம்பரியம். இவர்களின் பெயர்களும் ஒவ்வொரு பாரம்பரியத்தைக் கொண்டு மாறுகிறது. சீரியா, அர்மேனியா போன்ற திருச்சபைகள் பல்வேறு பெயர்களைக் கொடுத்துவந்தாலும் மேற்கத்திய திருச்சபைப் பாரம்பரியம் கொடுக்கும் பெயர்கள்: கஸ்பார், மெல்கியோர், பல்தசார். இவர்கள் எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்ற கேள்விக்கும் பல பதில்கள் தரப்பட்டிருக்கின்றன. சிலர் மெசபடோமியா, பெர்சியா, தென் அரேபியா, பாபிலோன் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனாலும், தெளிவாக இவ்விடம்தான் என்ற கூறுவதற்கில்லை. மத்தேயு நற்செய்தியாளரின் முக்கிய கவனம் இவர்களைப் பற்றிய வரலாற்று செய்திகளைக் கூறுவதல்ல. மாறாக, சிறந்த இறையியலைக் கற்பிக்கிறார். இயேசு புதிய மோசே, புதிய இஸ்ராயேல், புதிய ஞானம் என்றெல்லாம் விளக்க முனையும் நற்செய்தியாளர். இந்நிகழ்வின் மூலமாக இயேசுவின் வாழ்வு, குறிக்கோள் மற்றும் பணி ஆகியவற்றை விளக்குகிறார். மேலும் பழைய ஏற்பாட்டின் கூறுகள் நிறைவேறியது என்பதை காட்டுவதாயும் அமை-கிறது இப்பகுதி.
மறையுரை
திருக்காட்சி திருவிழா ஒரு மாபெரும் திருவிழா. இது கிறிஸ்து பிறப்பு பெருவிழா போன்று சிறப்பானது. குறிப்பாகக் கிழக்கத்திய கிறிஸ்தவர்களுக்கு இது மிகவும் சிறப்பும் பெருமையும் வாய்ந்தது. ஏனெனில், இயேசுவின் பிறப்பு யூத நிலத்தில் நிகழ்ந்தது. முதல் செய்தியும் யூதர்களுக்கே அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரின் பிறப்பு பிறஇனத்தவர்க்கு தெரியவந்தது அந்த மூன்று ஞானிகளின் வருகையால்தான். இவர்களே புறஇனத்தாரின் பிரதிநிதிகளாக மீட்பரிடம் வந்து காணிக்கைகள் செலுத்தி, வணங்கிச் சென்றனர். புறஇனத்தவருக்கு மீட்பரின் செய்தி அறிவிக்கப்பட்டது இந்நாளில்தான். எனவேதான் யூதரல்லாதோர் இந்நாளை மிகச் சிறப்பாக கொண்டாடிவந்தனர், கொண்டாடிக்கொண்டும் வருகின்றனர். இத்தகைய பெருமை வாய்ந்த நாள் நமக்குக் கொடுக்கும் அழைப்பு என்ன? செய்தி என்ன? கிறிஸ்தவர்களாகிய நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது? அந்த மூன்று ஞானிகள் வந்தனர், கண்டனர், பாதை மாறிச் சென்றனர்.
தேடல் என்பது மனித இனத்தினூடே கலந்த ஒப்பில்லாத ஒரு இயக்கம். தேடல் இல்லாத மனிதர் இருக்க முடியாது. தேடல் இல்லாத மனித இனமும் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. தேடலின் விளைவே கலாச்சாரம். தேடலின் விளைவே முன்னேற்றம். தேடல் மனிதரை உந்தித்தள்ளும் ஒரு ஊக்கசக்தி. கவலையும், பிரச்சனையும் நிறைந்த இவ்வுலகிலே தேடல் ஒன்றே வாழ்வதற்கு நம்பிக்கை அளிக்கிறது. மீட்பு கிடைக்கும் என்ற விசுவாசம் பிறக்கிறது. சகல பிரச்சனைகளும் ஓய்ந்து, ஒளி பிறக்கும் என்ற நிறைவு உதிக்கிறது.
இதே நம்பிக்கையும், விசுவாசமும் தான் இந்த மூன்று ஞானிகளை உந்தித்தள்ளியது. மீட்பின் ஒளியை கண்டுகொள்ள ஏவியது. அவர்கள் வெகுகாலமாக மீட்பை எதிர்பார்த்திருந்தனர். மீட்பரை எதிர்பார்த்திருந்தனர். யூதர் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே மீட்பரை எதிர்பார்த்திருந்தது. அந்த எதிர்பார்ப்பே இவ்வரசர்களை மீட்பரிடம் கொண்டுவந்தது. நட்சத்திரம் மீட்பரின் பிறப்பை அறைகூவ, அதே நட்சத்திரம் அவர்களைப் பெத்லகேமிற்கு வழிகாட்ட, கொடுமைக்காரனாக இருந்தாலும் ஏரோதின் உதவியும் கைகூட, அவர்கள் மூவரும் மீட்பரை கண்டடைகின்றனர். மூவரும் வேறு வேறு இனத்தவராயும், சமயத்தவராயும், நாட்டினராயும் இருந்தாலும், மீட்பின் தேடலிலே ஒன்றிணைகின்றனர். கண்டடைந்தும் விடுகின்றனர். தேடல் இருந்தால் கண்டிப்பாகக் கண்டடைதலும் உண்டு.
தேடுவதை கண்டடைவது தேடலோடே சேர்ந்து வருவது. கண்டடைதல் இல்லையென்றால் தேடல் அர்த்தமற்றதாகிவிடுகிறது. நாம் தேடுவதை கண்டடைவோம் என்ற எதிர்நோக்கே நம்மை தேடப் பணிக்கிறது. கண்டடைந்ததும் அலாதியான ஆனந்தமடைகிறோம். தேடல் பூர்த்தியாகிவிட்டது என்ற நிம்மதி பெருமூச்சு விடுகிறோம். சாதாரண மனித தேடலே இவ்வாறு இருந்ததென்றால், மீட்பின் தேடல் எவ்வாறிருக்கும்? மீட்பரை தேடுவோருக்கு எத்தகைய மகிழ்ச்சியும் ஆனந்தமும் இருக்கும்? அதே ஆனந்தமும் மகிழ்ச்சியுமே இவர்களிடம் இருந்தது. தேடலின் பலன் நிச்சயம் உண்டு. மீட்பரை கண்டடைவோம் என்ற எதிர்நோக்கு தேடுதலுக்கு முன்னரே இருந்திருக்குமோ என்னவோ! அவர்கள் தேடத் துவங்கும் போதே மீட்பருக்கு கொடுக்க வேண்டிய காணிக்கைகளை எடுத்து வந்துவிட்டனர்.
அக்காணிக்கைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு அர்த்தத்தை உள்ளடக்கியவை. பொன், தூபம், வெள்ளைப்போளம். பொன் சாதாரணமாக அரசருக்குக் காணிக்கையாக்கப்படும் பொருள்.
இயேசு அரசருக்கெல்லாம் அரசர் என்பதை எண்பிக்கவே இக்காணிக்கை. அடுத்து தூபம். இது தெய்வத்திற்கு படைக்கப்படும் காணிக்கை. இறைவனை வழிபடும்போது தூபம் இட்டு வழிபடுவது அனைத்து கலாச்சாரங்களின், மதங்களின் பழக்கம். இயேசு இறைமகன் தெய்வம் ஈடுஇணையற்ற இறைவன் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. இறுதியாக வெள்ளைப்போளம். இது சாதார ணமாக இறந்தோருக்கு பூசப்படும் பொருள். இறப்பை நினைவுபடுத்து. வதாக அமைகின்றது. இயேசுவின் இறப்பு மீட்பளிக்கும் இறப்பு, மாட்சி பொருந்திய இறப்பு. இத்தகைய அவரின் இறப்பு பிறப்பிலேயே முன்குறிக்கப்படுவதாக அமைகின்றது. இயேசுவைக் தேடினர் அந்த ஞானிகள், மீட்பரைக் கண்டுகொண்டனர். இறுதியாகப் பாதை மாறினர். இயேசுவை சந்திக்கும் எவரும் பாதை மாறியாக வேண்டும். பாதை மாற்றம் இல்லா சந்திப்பு ஏமாற்று வேலையாகத்தான் அமையும். வெளிவேடத்தனமாக இருக்கும். உண்மை ஆன்மீகமாய் இராது. இந்த ஞானிகள் மீட்பரின் சந்திப்பினாலே ஊக்கம் பெற்றனர். பாதை மாறினர். உயிர் பிழைத்தனர்.
இயேசுவின் திருக்காட்சித் திருவிழா நமக்கு விடுக்கும் அழைப்பு இதுவாகத்தான் இருக்க முடியும். இயேசுவை சந்தித்து பாதை மாற அழைக்கப்படுகிறோம். நம் தேடல் இயேசுவாக இருக்க வேண்டும். தேடல் கண்டிப்பாகக் கண்டடைதலிலே முடிய வேண்டும். இயேசுவைக் கண்ட நாம், அவரின் மீட்பை சுவைத்த நாம் அத்தேடலின் விளைவாக, அக்கண்டடைதலின் பலனாகப் பாதை மாற வேண்- டும். இயேசுவை சந்திப்பதற்கு முன்னரும் சந்தித்ததற்கு பின்னரும் சந்தித்தவர் ஒன்றாகவே இருப்பாரானால் அது பொய்மை. அது இயேசுவை இழிவு செய்வதற்கு சமமாகும். இயேசு சந்திப்பவரின் வாழ்வை மாற்ற வேண்டும். சந்திப்பவரின் எண்ணத்தை தொடவேண்டும். சந்திப்பவரின் வாழ்வு முழுமையையும் தலைகீழாக புரட்டிப்போட வேண்டும். இது நிகழாதவரை, சந்திப்புப் பொய் சந்திப்பாகிவிடும். தேடல் வெற்றுத் தேடலாகிவிடும். கண்டடைந்தது வீணாகிவிடும்.
ஞானிகள் வந்தனர் கண்டனர் பாதை மாறினர். நாமும் ஞானிகளாவோம். இயேசுவைத் தேடிவருவோம். அவர் தரும் மீட்பை கண்டடைவோம். நம் வாழ்க்கை முழுவதையும் மாற்றுவோம். இவை நிகழ்ந்தால் நாமும் ஞானிகள். இல்லையேல் அஞ்ஞானிகள்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
இரண்டு அரசர்களும், தவிக்கும் ஞானிகளும்
இரண்டு அரசர்கள் - ஏரோதும், அரசருக்கெல்லாம் அரசரான இயேசுவும். ஏரோதின் ஆணவம் இயேசுவின் தாழ்ச்சி. ஏரோதின் கொடுங்கோலாட்சி இயேசுவின் அமைதியாட்சி. ஏரோதின் சூதுள்ள மனம் இயேசுவின் கபடற்ற தன்மை. இவர்களுக்கிடையே தவிக்கும் ஞானிகள். யாருக்கு உதவுவது இயேசுவை கொல்லத் துடிக்கும் ஏரோதிற்கா? உலகத்தை மீட்கத் துடிக்கும் இயேசுவிற்கா? இறையாட்சியின் பக்கம் முடிவெடுக்கிறார்கள்.
நாமும் ஏரோது போன்ற தீமையின் சக்திக்கும், இயேசுவாகிய நன்மையின் சக்திக்கும் இடையே தவிக்கிறோம் இவ்வுலகிலே. யார் பக்கம் சாய்வது? யார் பக்கம் முடிவெடுப்பது? ஞானிகள் போல இறையாட்சி மலர முடிவெடுப்போம். தீமையை அழிக்க உதவுவோம்.
இயேசுவைத் தேடுதல் தம்மவராலே இயேசு மறுக்கப்படல்
யூதரல்லாதோரான இம்மூன்று ஞானிகள் வானத்தில் எழுந்த நட்சத்திரத்தைக் கண்டு இயேசுவைத் தேடி வருகின்றனர். அவர்களின் கேள்வி: "எங்கே அவர்?" தேடுதலின் விளைவாக எழும் கேள்வி. மாறாக, இதே கேள்வியை யூதகுலத்தவரும் கேட்கின்றனர். "யூதர்களின் அரசர் எங்கே பிறப்பார்?' இயேசுவின் சொந்த மக்களும் இதே கேள்வியைத்தான் கேட்கிறார்கள். ஏன்? மதவாதிகளுக்கே தெரியவில்லை மீட்பர் பிறந்த செய்தி. ஞானிகள் சொன்ன பிறகே மறைநூலை புரட்டிப்பார்க்கிறார்கள். பெத்லகேமில் என்ற விடையைப் பெற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பிரச்சனையே இயேசுவின் வாழ்வு முழுவதும் வரும். தம் இனத்தவரே இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுப்பர். இறுதியில் கொல்லவும் துணிவர். தேடல் இல்லாதோர் இயேசு வழங்கும் மீட்பை அனுபவிப்பதில்லை. அவரைத் தேடுவோருக்கு மீட்பு மறுக்கப்படுவதில்லை.
ஆண்டவரின் திருக்காட்சி
இன்று, குழந்தையாகப் பிறந்த இயேசு உலகிற்கு, றெப்பாக பிற இனத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெரு விழாவைக்கொண்டாடுகின்றோம்.இன்றையஇறைவார்த்தைகள், வாசகங்கள் அனைத்திலும் பிற இனத்தாரைக் குறிக்கும் சொல் லாடல்கள் பயன்படுத்தப்பட்டுன்ளதைக் காணலாம். முதல் வாசகத்தில், “பிற இனத்தார் உன் ஓளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோபுவர்” (வச. 3) என்றும், “அவர்கள் அனைவரும்ஒருங்கேதிரண்டுஉன்னிடம்வருகின்றனர்” (வச.4) என்னும் பிற இனத்தார் நேரடி யாகக் குறிப்பிடப்படுகின்றனர். இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், “நற்செய்தியின் வழியாக, பிறஇனத்தாரும்கிறிஸ்துஇயேசுவின்மூலம்உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன்பங்காளிகளும் ஆகியிருக்கறொர்கள்” (எபே 3:6) என இயேசுவின் வழியாய் பிற இனத்தாருக்கு கிடைத்த நலன்களை எடுத்துரைக்கின்றார். நற்செய்தியில் பிற இனத்தார் என நேரடியாகக் குறிப்பிடப் படாவிட்டாலும் “கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்” (வச. 1) பிற இனத்தாரைக் குறிப் பதாகக் கொள்ளலாம். யூதர்களுக்கு கிழக்கு என்பது யோர்தானுக்கு அப்பால் உள்ள பகுதியைக் குறிக்கும். அது எப்போதும் பிற இனத்தார் பகுதியையே குறித்து வந்தது. இருப்பினும் இது எந்தப் பிறஇனக் குழுமத்தை குறித்தது என்பதைக் குறித்து அறிஞர்கள் இடையே வேறுபட்ட கருத்துக்கன் நிலவுகின்றன. இந்த ஞானியரைக் குறிக்கும் மூலச் சொல்லான “மாஜாய்””( MAGI) என்பது பாரசீகர்களைக் குறிக்கலாம் என்றும், அவர்கள் வானவியல் அறிவு கொண்டு விண்மீனால் வழிநடத்தப்பட்ட்தால் அவர்கள் பாபிலோனியர்களாக இருக்கும் என்றும், அவர்கள் பாலன் இயேசுவுக்குத் தந்த பரிசுப் பொருள்களின் அடிப்படையில் அவர்கள் அராபிய அல்லது சிரியாவின் பாலைநிலங்களைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. எது எப்படியிருப்பினும் அவர்கள் திருநூலையும், மெசியா பெத்லகேமில் பிறப்பார் எனும் மீக்காவின் (மீக் 5:1-2) இறைவாக்கையும் அறியாத பிற இனத்தார். அவர்களுக்கு இயேசுவின் திருக்காட்சி அருளப்படுகின்றது.
இனி இன்றைய நற்செய்தி தருகின்ற முக்கியமான கிறிஸ்நியல், இறையியல் செய்தி என்ன என அறிய முயல்வோம். அதற்கு முன் நற்செய்திப் பகுதியின் பின்னணித் தகவல்கள் சிவைற்றைத் தெரிந்து கொள்வோம்.
பின்னணி
மத்தேயு இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளை தன் நற்செய்தியின் முதல் இரு அதிகாரங்களில் விவரிக்கின்றார் அவற்றுள் முதல் அதிகாரம், பிறக்க இருக்கும் இயேசு “யார்?” எனும் வினாவிற்கு விடை காணுகின்றது. இயேசுவின் தலைமுறை அட்டவணையின் வழி இயேசு “தாவீதின் மகன்” என்றும் “ஆபிரகாமின் மகன்” என்றும் (மத் 1:1) மத்தேயு விவரிக்கின்றார். யோசேப்புவுக்குக் கனவில் தோன்றிய வானதூதர் விவரிக்கின்றார். இந்த இயேசு கருவுற்றது தூய ஆவியால்தான் என்றும் (மத் 1:20), அவரது பெயர் “இயேசு” என்றும், “அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” (மத் 1:21) என்றும் இயேசுவின் அடையாளத்தை விவரிக்கின்றார். மத்தேயு நற்செய்தி யின் இரண்டாம் அதிகாரம் “எங்கே?” எனும் கேள்விக்கு விடை காணுகின்றது.இந்த அதிகாரம்ஞானியர் வருகை (2:1-12), எகிப்துக்கு ஓடிப்போதல் (2:13-15), மாசற்ற குழந்தைகளின் படுகொலை (2:16-18), எகிப்திலிருந்து திரும்புதல் (2:19-23) ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இங்கு எருசலேம், பெத்லகேம், எகிப்து, ராமா, நாசரேத்து என பல இடங்கள் குறிப்பிடப்பட்டாலும், இன்றைய நற்செய்திப் பகுதி எருசலேம், பெத்லகேம் ஆகிய இடங்களிலேயே மையம் கொண்டுள்ளது.
பெத்லகேமின் மாண்பு
இன்றைய நிகழ்ச்சிப் பகுதி தூவீதின் நகராக விளங்கிய பெத்லகேமின் மாண்பை விவரிக்கின்றது. அதை மத்தேயு ஏன் விவாதிக்கின்றார், எவ்வாறு நிறுவுகின்றார் எனக் காண்போம்
இயேசுவின் பணிவாழ்வின் பின்னணியில் இயேசு கலிலேயாவின் நாசரேத்திலிருந்து வந்ததாகவே பலரும் நம்பினர். இந்த கலிலேயா அதிக வரலாற்று முக்கியத்துவம் இல்லாத பகுதி. நந்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரமுடியுமோ?” (யோவா 1:46) என்றும், பரிசேயர்கள் “கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை” (யோவா 7:52) என்றும் கூறியதிலிருந்து கலிலேயா, நாசரேத்து ஆகியவை றுச்காலத்தில் இருந்த நிலைமை, அவை குறித்து யூதர்களும், முவார்களது தலைவர்களும் கொண்டிருந்த கருத்து ஆகியவை தெளிவாகின்றன. அதற்கு மாறாக மெசியா தாவீதின் வழி மரபில் பதோன்றவிருப்பதால் யூதேயாவின் பெத்லகேமில்தான் பிறப்பார் வன்றே நம்பினர். ஏனெனில் இறைவாக்னெர்கள் இதைத்தான் முன்னறிவித்தனர்: “யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தொன்றுவார்” (மத் 2:6; மேலும் காண் மீக் 5:1-2; 2 சாமு 5:2). எனவே இந்த நற்செய்திப் பகுதி இயேசு உண்மையில் யூதேயாவைச் சார்ந்தவர், இவர் பெத்லகேமில் பிறந்தவர், அங்குதான் ஞானியர் முழந்தை இயேசுவைக் கண்டு வணங்கினர் என்று இயேசுவின் உண்மை அடையாளத்தையும், பெத்லகேமின் மாண்பையும் விளக்குகின்றது.
மேலும் இங்கு “யூதாவின் ஆட்சி மையம்” எனும் சொல்லாடல் சற்று உற்று நோக்கப்பட வேண்டியது. உண்மையில் ஞானியர் யூதர்களின் அரசரைக் காண அக்கால ஆட்சி மையமான எருசலேமுக்கு, அக்கால அரசரான ஏரோதிடம் (வச. 1) வந்தனர். ஆனால் இறைவாக்குகள் எருசலேமை ஆட்சி மையமாகக் காட்டாமல், ஏரோதை அச்சமும் (வச. 3) கலக்கமும் (கொண்டவனாகக் காட்டுகின்றது. அதற்கு மாறாக பெத்லகே மையும், குழந்தை இருந்த வீட்டையும் ஆட்சி மையமாகவும் குழந்தையை மெசியாவாகவும் காட்டுகின்றது. இதுதான் கிறிஸ்மஸ் செய்தி. இறைவனைக் குடிவிலும், குழந்தை வடிவிலும் “ஞானியர்” கண்டுகொண்டதுதான் திருக்காட்சிப் பெருவிழாவின் செய்தியும் கூட...
ஆண்டவரின் திருக்காட்சி
முதல் வாசகம்: எசா 60:1-6
பாபிலோனிய அடிமைத் தளையாலே அழிந்துபட்ட எருசலேமுக்கும், அல்லல்பட்ட இஸ்ரயேலருக்கும் ஆறுதல் மொழிகளாக எழுதப்பட்டவை (எசா 40; 55;60-62 ஆகிய அதிகாரங்கள்). எருசலேம் புத்துயிர் கொள்ளும் என்று நம்பிக்கையூட்டும் இன்றைய வாசகம் இயேசுவின் இறைக் காட்சியால் அனைத்து மக்களும் வாழ்வு பெறுவர் என்பதைக் காட்டுகிறது.
எருசலேம் நாமே
பாபிலோனியத் தளை விரைவில் முடிந்துவிடும். ஆண்டவருடைய மாட்சி முன்பு சீனாய் மலையில் தங்கியது போல (விப 24: 16), இப்போது அவரது மகிமை எருசலேம் மீது உதயமாகும் (எசா 60:2). ஆண்டவர் அதன்மேல் தங்குவார். "சீயோனைச் சுற்றிச் செல்லுங்கள்... அதன் கொத்தளங்களை எண்ணிப் பாருங்கள்... அப்போது இனிவரும் தலைமுறைகளை நோக்கிச் சொல்வீர்கள்: கடவுள் எவ்வளவு மேலானவர் என்று"(திபா 48:13-14). அந்தச் சீனாய் மலையே நாம்; அந்தச் சீயோன் மலையே நாம்; அந்த எருசலேமே நாம். இரக்கத்தின் கடவுள் நம்மேல் எழுந்துள்ளார். நம்மைச் சூழ இருக்கும் பாதுகாப்பு மலைகளாக "இப்போதும் எப்போதுமே ஆண்டவர் நம்மைச் சூழ்ந்துள்ளார்" (திபா 25:1-12). ஆம், கடவுள் நம்மோடு, நம்மேல், நம்மைச்சூழ இருக்கிறார். என்னே மகிமை நமக்கு! இதை உணர்ந்து, கிறிஸ்து நம்மிடையே பிறந்ததற்காக நன்றி கூறுகிறோமா?
கிறிஸ்து நம்மோடிருப்பது பிறருக்காக
எருசலேமின் மகிமையைக் கண்டு புறவினத்தார் அதை நோக்கி ஓடிவந்தது போல (60: 3), பெத்லகேமில் இயேசுவின் ஒளியைக் காணக் கீழ்த்திசை ஞானிகள் வந்ததுபோல (இன்றைய நற்செய்தி), நம்மிலே, நம்முடைய நடை உடை பாவனைகளிலே, சொல் செயல்களிலே கிறிஸ்துவைக் காண, கண்டு அனுபவிக்கப் பிற மக்கள் வர வேண்டும். நம்மிடமிருக்கும் கிறிஸ்து காந்த சக்தியாக அமைந்து, கிறிஸ்துவை அறியாதவரை நம்மைச் சுற்றி வரச்செய்ய வேண்டும். கிறிஸ்துவாகிய காந்த சக்தி நம்மில் செயல்பட வைக்கிறோமா? புதிய எருசலேமில் "ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு; அதன் ஒளியிலே எல்லா நாட்டு மக்களும் நடந்து செல்வர்... அங்கு இரவே இராது" (திவெ 21 24) என்பார் திருவெளிப்பாடு ஆசிரியர். நம்மைப் பார்த்துப் பிறரும் ஆண்டவரது ஒளி அவனிடம், அவளிடம் உள்ளது; “அங்கு இரவே இராது" என்று கூறமுடியுமா
?
கிறிஸ்து நம்மோடிருப்பது இந்தியாவுக்காக
"எகிப்து தன் வேலைப் பயனாகிய செல்வங்களோடும், எத்தியோப்பியா தன் வணிகத்தால் கிடைத்த வருமானத்தோடும், செபா தன் உயர்ந்து வளர்ந்த குடிகளோடும், இஸ்ரயேலே, உன்னிடம் வந்து சேரும்" (எசா 45:14) என்பார் எசாயா. இன்றைய வாசகத்திலும் "மக்களினங்களின் செல்வம் உன்னிடம் வந்து சேரும்... மீதியான், ஏப்பாகு நாட்டு இளம் ஒட்டகங்களும் வரும். சேபா நாட்டினர் அனைவரும் பொன்னும் தூபமும் ஏந்தி வருவர்" (60:5-6) என்கிறார். "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி"களைக்கொண்ட நம் பாரத அன்னை, ஆன்மீக வாழ்விலும், பண்பாடு, கலாச்சாரத்திலும் முன் நின்ற இந்திய நாடு, ஈராயிரம் ஆண்டளவாக நற்செய்தியைக் கேட்க வாய்ப்புப் பெற்றிருந்த பழம்பெரும் கீழ்த்திசை நாடு, ஏன் இன்னும் இயேசுவைக் கண்டுகொள்ளவில்லை? நம்முடைய ஒளி மரக்காலின் கீழ்வைத்த விளக்காகிவிடவில்லையா? (மத் 5: 15-16). இருளைப் பழிப்பதில் பொருளில்லை. இருளிலே நம்முடைய சிறு தீபங்களை ஏற்றுவோம். கீழ்த்திசை ஞானிகளை இயேசுவிடம் இட்டுச் சென்ற விண்மீன்களாக ஒளிர்வோம். நமது நடத்தை அதற்குச் சான்று பகரட்டும். பற்பல சிறு ஒளிகள் கூடித்தானே பேரொளியை உண்டு பண்ணுகின்றன!!
எருசலேமே, எழுந்து ஒளி வீசு.
இரண்டாம் வாசகம் : எபே 3 : 2-3, 5-6
கீழ்த்திசை ஞானிகள் பாலன் இயேசுவைக் கண்டு ஆராதித்தது ஒரு அடையாளம், ஒரு மறைபொருள். யூதருக்கு மட்டும் இயேசு அரசரன்று, மக்களினத்தார் அனைவருக்கும் அவர் மன்னர் என்பதைச் சுட்டுகிறது இந்நிகழ்ச்சி (மத் 2:1-12). பவுல் அடியாரும் இம்மறைபொருளின் கருத்தை அறிந்து, புறவினத்தாருக்காகப் பாடுபட்டு உழைப்பதை விளக்குகிறது இன்றைய வாசகம்.
அருள் அளிப்பவர் கடவுள்
கிறிஸ்துவ வாழ்வின் தொடக்கம், அடிப்படை, அனைத்தும் கடவுளது கொடையே என்பது பவுல் அடியாரின் துணிவு. "பாவிகளை மீட்கவே இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார் என்னும் மொழி உண்மையானது... அந்தப் பாவிகளிலெல்லாம் பெரும் பாவி நானே. இருப்பினும் இறைவனின் இரக்கத்தைப் பெற்றேன்" (1திமொ 1:15-16) என்கிறார். “நான் கடவுளின் தனிப்பட்ட அருளைப் பெற்றவன்" (உரோ 15:15; 1 கொரி 3: 10; கலா 1:15-16;2-9) என்று அடிக்கடி அவர் கூறுவதன் மூலம் தனது இயலாமையையும், இறைவனின் அளவுகடந்த பரிவையும், அவர் தன்னை ஆட்கொண்ட அருளையும் நினைவுறுத்துகிறார்.
நாம் அருள்பெற்றது பிறர் நலனுக்காக
அவருக்குக் கொடுக்கப்பட்ட அருளானது “நமது நன்மைக்காகவே" (3:2). "அந்த அருள்தான் என்னைப் புறவினத்தாருக்காகக் கிறிஸ்து இயேசுவின் தொண்டனாக்கிற்று" (உரோ 15: 15). நற்செய்தியைப் புறவினத் தாருக்கு அறிவிப்பதற்காகவே (கலா 1: 15-16) இவ்வருள் வழங்கப்பட்டது. பவுல் அடியாருக்குப் போன்றே நமக்கும் இறையருள் அபரிமிதமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வருளுக்கு நாம் காட்டும் நன்றி, நற்செய்திக்காகப் பணிபுரிவதேயாகும். நம்முடைய வாழ்வில் நற்செய்தி மதிப்பீடுகள் முக்கிய இடம் பெறும்போதுதான், நாமும் கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு, பவுல் அடியார் போன்று சாட்சியம் பகர முடியும். இன்று இறைக்காட்சித் திருநாள். இறைவன் நம் வழியாகப் பிறருக்குக் காட்சியளிக்க வேண்டும். பிற சமய மக்களிடையே வாழும் நாமே பிறருக்கு இறைவனின் வெளிப்பாடுகளாக அமைய இறைவன் நமக்கு அருள் பாலிப்பாராக.
ஆவியாரின் அருளால் செயல்படுவோம்
மறைபொருளின் விளக்கம் தருபவர் தேவ ஆவி (3:5). “ஏனெனில் இறைவாக்கு ஒருபோதும் மனிதரின் விருப்பத்தால் உண்டானதில்லை. மனிதர் பரிசுத்த ஆவியாரால் தூண்டப்பட்டு, கடவுளின் ஏவுதலால் பேசினர்" (2 பேதுரு 1: 21). மறைநூலை அறியவும், மறை பொருளைக் கண்டுணரவும் தூய ஆவியாரின் அருள் நமக்கு எப்போதும் தேவை. “ஆண்டவரே பேசும்; உம் அடியான் கேட்கிறான்" (1சாமு 3:10) என்ற திறந்த உள்ளத்தோடு ஆவியாரின் அருளை நாடுவோம். ஆவியாரின் அருளே நமக்கு "ஞானமும் மெய்யுணர்வும் ஆலோசனையும் வல்லமையும் அறிவும் ஆண்டவரைப் பற்றிய அச்சமும்" (எசா 11: 2) தரவல்லது. அதே ஆவியாரின் அருளே நம்மைப் புறவினத்தாருக்கு நற்செய்தியின் தூதுவர்களாக மாற்றக்கூடியது. இறைக்காட்சித் திருநாளாகிய இன்று ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு, "எளியோருக்கு நற்செய்தி அறிவிக்க... கட்டுண்டவர்களுக்கு மீட்புச் செய்தியை வெளிப்படுத்த" (எசா 61:1-3) முயற்சி செய்வோம். இவ்வாறுதான் நாம் கொண்டாடும் இறைக்காட்சி விழா அமைந்து பொருள் தர வேண்டும்.
பிற இனத்தவரும் நம்மோடு சேர்ந்து ஒரே உரிமைப் பேற்றுக்கு வாரிசுகள்.
நற்செய்தி: மத் 2:1-12
ஞானிகளின் வருகை மீட்பு வரலாற்றில் ஒரு புதுத்திருப்பம். இதுவரை இடையர்கள், சிமியோன், அன்னா ஆகிய யூத இனத்தவர்க்கே காட்சி கொடுத்த கடவுள் குமாரன், இன்று பிற மறையினர், பிற இனத்தவரான கீழ்த்திசை ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்துகிறார். நமதாண்டவர் அனைத்து மக்களுக்கும் உரியவர் என்பதை இக்காட்சி நமக்குக் கற்பிக்கிறது.
பெத்லகேமில் இயேசு
விண்ணிலே நடக்கும் விபரீதங்களைக் கொண்டு, மண்ணிலே நடக்கும் நிகழ்ச்சிகளைக் கணிக்கும் கீழ்த்திசை ஞானிகள், எருசலேமை அடைந்து "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?" என்று கேட்டார்கள் (2:2). தனக்கு மாற்று அரசன் பிறந்துவிட்டானோ என்று ஏரோதன் கலங்கினான் (2: 3). மெசியாவின் பிறப்பிடத்தைத் தேடும்படி கட்டளை விடுத்தான். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் வேதநூல் வழிநின்று பெத்லகேமின் வரலாற்றை ஆராய்ந்தனர். யாக்கோபு தன் மனைவி இராக்கேலை அடக்கம் செய்தது பெத்லகேமில்தான் (தொநூ 48:7) ; ரூத் வாழ்ந்த இடமும் இதுவே (ரூத்.2: 1); தாவீது பிறந்த ஊர் இதுவே (1சாமு 16:1; 17:12). தாவீதின் வாரிசாக, பெத்லகேமில் யூதர்களின் அரசர்-இஸ்ரயேலின் மீட்பர் - தோன்றுவார் என்பது இறை வாக்கெனத் தெளிவுபடுத்தினார். ஞானிகள் அவரைக் காண விரைந்தனர். இந்நிகழ்ச்சியில் மூன்றுவித மக்களைச் சந்திக்கின்றோம். ஏரோதன்: பதவிவெறி பிடித்தவன்; தனக்கு எதிராக எழும் எவரையும் கொன்று குவிப்பவன்; தன் மகனையும் அவன் விட்டு வைக்கவில்லை. புதிய அரசனின் பிறப்பில் தன் அரியணைக்கே ஆபத்து வந்ததென, தெய்வத் திருமகனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தான். "குழந்தையைக் கண்டபின் என்னிடம் வந்து தெரிவியுங்கள். நானும் சென்று ஆராதிக்க வேண்டும்” என்று நெஞ்சாரப் பொய் சொன்னான். தலைமைக் குருக்கள், மறை நூல் அறிஞர்கள் மற்றொரு ரகம்: வேத நூல்களை நன்கு அறிந்தவர்கள்; விளக்கம் அளிப்பவர்கள். ஆனால் உண்மையின் ஊற்றிடம் செல்வதுபற்றிக் கவலைப்படாதவர்கள். ஞானிகளோ, ஞானத்தின் இருப்பிடத்தைத் தேடி அலைந்தனர். எத்துணை இடர்ப்பாடுகள் ஏற்படினும் அவற்றை முறியடித்துத் தம் பயணத்தின் குறிக்கோளைக் கண்டடைந்தவர்கள். எனவே, இயேசுவுக்கு எதிராக எழுபவர் ஏரோது. அவரைப் பற்றி, பற்றோ, பாசமோ, பகையோ அற்றவர்கள், தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர். இறுதியாக, அவரைக் காணத் துடிக்கும் ஞானிகள்; இவ்வாறு மூன்று பிரிவினர். நான் எவர் பக்கம்?
ஞானிகளின் விசுவாசத்திற்கு ஒரு சோதனை
அவர்கள் எதிர்பார்த்தது அரண்மனையில் பிறந்துள்ள குழந்தை. யூதர்களின் அரசனோ அரண்மனையில் பிறக்காது, மாட்டுத் தொழுவத்தில் மரியின் மடியில் மலரெனத் துயில்கொண்டிருந்தார். அவரைத் தெண்டனிட்டு வணங்கினர். "தம் பேழைகளைத் திறந்து பொன்னும், தூபமும், வெள்ளைப் போளமும் அவருக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்" (2:11). இந்நிகழ்ச்சியை ஏற்கனவே எசாயா சுட்டிக் காட்டியுள்ளார். "எருசலேமே எழுந்திரு, எழுந்து ஒளி வீசு: ஏனெனில் உனது ஒளி வந்துவிட்டது... மக்களினங்கள் உன் ஒளி நோக்கி வருவார்கள்... ஒட்டகங்களின் கூட்டம் உன்னை நிரப்பும்" (எசா 60:1-6; திபா 72: 10-15).
இயேசு அரசர், குரு, மீட்பர்
உலோகங்களில் அரசு செலுத்துவது பொன். அதுவே அரசரின் அடையாளப் பொருள். "அவரது தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோப்பின் குலத்தின்மீது என்றென்றும் அரசாள்வார்” (லூக் 1: 33). இயேசுவைத் தம் அரசராய் ஏற்றுப் பொன்னை வழங்கினர். வழிபாட்டில் தூபம் இடம் பெறுகிறது. இயேசு நம்மையும் இறைவனையும் இணைக்கும் பாலம்; நித்திய பலி செலுத்தும் நிலையான குரு இவர். இதைக் குறிப்பதே தூபம். இயேசு இறப்பதற்காகவே பிறந்துள்ளார். இதைக் குறிப்பதே போளம். பெத்லகேம் குடிலில் இயேசு அரசராக, நித்திய குருவாக, உலக மீட்பராக ஆராதிக்கப்படுகிறார். யூதரல்லாத அனைத்து மக்களின் சார்பில் இந்த ஞானிகள் அவரை ஆராதித்தனர். நாமும் அவர்களுடன் இணைந்து நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து ஆராதிப்போம்.
வீட்டிற்குள் போய்ப் பிள்ளையை, அதன் தாய் மரியாவுடன் கண்டு தெண்டனிட்டு வணங்கிளர்.
கடலின் திரள் செல்வம்
சிற்றூர் ஒன்றுக்கு இளைஞன் ஒருவன் வந்தான். ஊருக்கு வெளியிலிருந்த ஒரு மரத்தின்கீழ் அமர்ந்திருந்த அவனைப் பற்றி ஊரார் ஒவ்வொரு விதமாக ஊகித்தார்கள். அந்த இளைஞன் தன்னைப் பற்றி யாருக்கும் எதுவும் சொல்லவில்லை. ‘அவன் ஒரு ஞானி, பித்துப் பிடித்தவன்’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகச் சொன்னார்கள். ஒரு நாள் மாலையில் அந்த இளைஞனிடம் சிறுமி ஒருத்தி வருகிறாள். ‘உன் பையில் என்ன வைத்திருக்கிறாய்?’ என்று சிறுமி இளைஞனிடம் கேட்டாள். பழைய அந்தப் பையைத் திறந்த இளைஞன் அதிலிருந்த வைரக்கல்லை எடுத்து சிறுமியிடம் நீட்டினான். மாலை வெயில் பட்டு வைரம் மின்னியது. ‘இதை எனக்குத் தருவாயா?’ எனக் கேட்டாள் சிறுமி. ‘எடுத்துக்கொள்!’ என்று சொல்லி சிறுமியிடம் வைரக் கல்லைக் கொடுத்தான் இளைஞன். வைரக்கல்லின் பிரமாண்டம் கண்டு வியந்தாள் சிறுமி. மறுநாள் காலையில் துயில் எழுந்த இளைஞன் தன் அருகே அதே சிறுமி நிற்கக் கண்டான். ‘என்ன ஆயிற்று?’ என விசாரித்தான். தன் கையை விரித்து இளைஞனை நோக்கி நீட்டிய சிறுமி, ‘இந்தா உன் வைரம்!’ என்றாள். ஆச்சர்யத்துடன் இளைஞன், ‘உனக்கு இது வேண்டாமா?’ என்று கேட்டான். ‘இந்த வைரக் கல்லை அப்படியே எனக்குத் தரத் தூண்டிய உன் உள்ளத்தைத் தா!’ என்றாள் சிறுமி.
கீழ்த்திசையிலிருந்து வந்து தாங்கள் பெற்றிருந்த அறிவை, தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருள்களைத் தந்துவிட்டு வெறுங்கையராய் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பிய மூன்று ஞானியரை இன்று நாம் கொண்டாடுகிறோம்.
இறையியல் அடிப்படையில், திருக்காட்சிப் பெருவிழா ஆண்டவராகிய இயேசுவை புறவினத்தாருக்கு வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.
இலக்கிய அடிப்படையில், ஞானியரின் வருகை குழந்தைகள் கொல்லப்படும் நிகழ்வுக்கான தொடக்கமாக இருக்கிறது.
விண்மீன், ஒளி, பயணம், மகிழ்ச்சி, அன்பளிப்புகள் ஆகியவை இன்றைய வாசகங்கள் முழுவதும் நிறைந்திருக்கின்றன.
(அ) ஒரு திடீர் நிகழ்வு
ஏரோதுவுக்கும் எருசலேம் வாழ் மக்களுக்கும் ஞானியரின் வருகை ஒரு திடீர் நிகழ்வாக இருக்கிறது. திடீரென ஊருக்குள் நுழைகிற ஞானியர், ‘யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்’ என்று கூறுகிறார்கள். ஏரோதுவும் அவருடன் சேர்ந்த எருசலேமும் கலக்கம் அடைகிறது.
(ஆ) ஒரு நீடித்த நிகழ்வு
ஞானியர் நீண்ட பயணம் செய்து எருசலேம் வருகிறார்கள். அவர்கள் புறப்பட்ட இடமும் அவர்களுடைய அடையாளமும் நமக்கு மறைவாக இருக்கின்றன. ஆனால், ‘வானங்கள் கடவுளின் மாட்சியை வெளிப்படுத்துகின்றன’ என்பதை அறிந்தவர்களாகவும் நம்புகிறவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். கடவளின் வெளிப்பாட்டை தங்கள் உள்ளுணர்வாலும் வெளிப்புற அடையாளத்தாலும் அறிகிற அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
(இ) ஒரு தொடர் நிகழ்வு
எருசலேமுக்குள் நுழைந்த இவர்கள் தங்கள் பயணத்தைத் பெத்லகேம் நோக்கியும், பின்னர் தங்கள் வாழ்விடம் நோக்கியும் தொடர்கிறார்கள். எருசலேமும் பெத்லகேமும் அவர்களுடைய இலக்கு அல்ல. தங்கள் வாழ்வே இவர்களுடைய இலக்கு. ஒவ்வொருவரும் தாம் தொடங்கிய புள்ளி நோக்கியே நகர வேண்டும் என்னும் பெரிய வாழ்வியல் தத்துவத்தை இவர்கள் நமக்கு எடுத்துரைக்கிறார்கள். ‘பாதை மாறுவதே பயணம்’ என்று கற்றுத் தருகிறார்கள்.
இந்த நாளின் பொருள் என்ன?
(அ) பயணம்
நாம் அனைவருமே பயணிகள், திருப்பயணிகள். நகர்ந்துகொண்டே இருக்கும்போதுதான் நாம் வாழ்ந்துகொண்டே இருக்கிறோம். கீழ்த்திசை ஞானியர் தொடக்கமுதல் இறுதி வரை பயணிகளாகவே காட்டப்படுகிறார்கள். இவர்களுடைய பயணத்தின் இலக்கு மாறிக்கொண்டே இருக்கிறது – எருசலேம், ஏரோதுவின் அரண்மனை, பெத்லகேம், சொந்த ஊர். ஆனாலும் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எந்தவொரு பாதுகாப்பு வளையத்தையும் வைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு வழிகாட்டியைக் கைக்கொள்கிறார்கள்: விண்மீன், மறைநூல் அறிஞர்களின் செய்தி, கனவில் எச்சரிக்கை. வாழ்வின் அழைப்புகள் எப்போதும் எங்கிருந்தும் வரலாம் என்று நினைக்கிற அவர்கள், தங்களுக்கு வெளியே தங்களுக்கு உள்ளே என அனைத்தையும் பற்றிக் கருத்தாக இருக்கிறார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் மீண்டும் நாடு திரும்பக் கூடிய பயணத்தை முன்னுரைக்கிறார் எசாயா. பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மீண்டும் எருசலேம் திரும்புகிறார்கள். இழுத்துச் செல்லப்பட்டவர்கள் தூக்கி வரப்படுகிறார்கள். இருளும் அழுக்கும் அழுகையும் நிறைந்த இடம் ஒளியும் தூய்மையும் மகிழ்ச்சியும் நிறைந்த இடமாக மாறுகிறது.
இன்று நாம் மேற்கொள்கிற அனைத்துப் பயணங்களையும் எண்ணிப்பார்ப்போம். பயன் தராத பயணங்கள் எல்லாம் நேர விரயமே. இலக்குகள் இல்லாத பயணங்கள் எல்லாம் ஆற்றல் விரயமே.
(ஆ) ஒளி
நற்செய்தி வாசகத்தில் விண்மீனின் ஒளி கீழ்த்திசை ஞானியருக்கு வழி காட்டுகிறது. ஏரோதுவின் அரண்மனை விட்டு வெளியே வருகிற ஞானியர் மீண்டும் ஒளியைக் கண்டுகொள்கிறார்கள். இன்றைய முதல் வாசகத்தில் எருசலேம் நகரமே ஒளிர்கிறது. இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்துவின் நற்செய்தி வழியாக புறவினத்தார் பெற்ற வெளிப்பாட்டை எடுத்துரைக்கிறார் பவுல். ஏரோதுவும் எருசலேம் மக்களும் விண்மீனைக் கண்டுகொள்ளவில்லை. தம்மைத் தேடுகிறவர்களுக்கே கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார். நம் ஒவ்வொருவரும் ஒளியை நோக்கி வர வேண்டும் என்பதே கடவுளின் அழைப்பாக இருக்கிறது.
(இ) கொடை
கீழ்த்திசை ஞானியர் வெறும் பரிசுப் பொருள்களை மட்டும் குழந்தைக்குக் கொடுக்கவில்லை. மாறாக, யூதர்களுடைய அரசர் பிறந்திருக்கிறார் என்னும் செய்தியை ஏரோதுவுக்கும் எருசலேம் மக்களுக்கும் அறிவிக்கிறார்கள். தாங்கள் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு வழங்குகிறார்கள். ஞானியர் தாங்கள் பெற்ற ஞானத்தைத் தங்களுக்குள் வைத்துக்கொள்வதில்லை.
இறுதியாக,
ஞானியரை நோக்கிய ஓர் இறைவேண்டலோடு நம் சிந்தனையை நிறைவு செய்வோம்:
‘தாமதமாக வருபவர்களின் பாதுகாவலர்கள் நீங்கள்!
உண்மையை நோக்கி நீண்ட பயணம் செய்கிறவர்களுக்கு!
அறிதலையும் கற்பனைiயும் குழப்பிக்கொள்பவர்களுக்கு!
தங்களை அறியாமலேயே தங்கள் நல்லுள்ளத்தால் மற்றவர்களுக்குத் துயரம் ஏற்படுத்தக் காரணமாக இருப்பவர்களுக்கு!
அறிவும் திறன்களும் இருப்பதால் எப்போதும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு!
நீங்கள் பாதுகாவலர்கள்!’
பெயரில்லாக் கீழ்த்திசை ஞானியர்களின் தேடல் தொடர்கிறது. தங்களுடைய தேடலில் தங்களை முழுவதுமாகக் கரைத்துக்கொள்கிறார்கள் இவர்கள்.
இவர்கள் கொண்டு வந்த பொன்னும், தூபமும், வெள்ளைப் போளமும் அல்ல, மாறாக, இவர்களுடைய தற்கையளிப்பு இதயமே நம்மை அவர்கள் நோக்கி இழுக்கிறது.
தேடலின் விடையாகும் கடவுள்
அருள்பணி. K.J. பிரவின் ராஜ்
மனிதர்கள் இயல்பிலேயே தேடல் நிறைந்தவர்கள். நேர்நிலையாகவும், எதிர்மறையாகவும் பல தேடல்கள் மனித வாழ்வில் உண்டு. இந்தத் தேடல்களிலேயே உயர்ந்த தேடல் இறைத்தேடல்தான். உலககையும், உலகு சார்ந்தவற்றையும் தேடுவதை விட, கடவுளையும் கடவுள் சார்ந்தவற்றையும் அதிகமாகத் தேட வேண்டும். "எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளைத் தேடுங்கள்" (மத் 6:33) என்பதுதான் இயேசுவின் அறிவுரையும் கூட. இன்று நாம் கொண்டாடும் விழாவும் ஒரு தேடலின் விழாவே. கடவுளின் மகனைத் தேடுகின்ற விழா.
இன்றைய நற்செய்தியில் ஏரோது, ஞானிகள் என இருதரப்பினரும் இயேசுவைத் தேடுகின்றார்கள். ஏரோதுவால் கண்டுபிடிக்க முடியாத இயேசுவை ஞானிகள் கண்டு வணங்குகின்றனர். காரணம், ஞானிகளிடம் இருந்த தேடலின் மூன்று பண்புகள். அவை எவையெனில்...
- ஞானம் நிறைந்த தேடல்: ஞானிகள் விண்மீனின் பொருளைக் கண்டடைய முயன்றது அவர்களது ஞானத்தின் வெளிப்பாடு. கீழ்த்திசை ஞானிகளுக்கு யூத வரலாறு, கடவுள் தந்த வாக்குறுதி பற்றியோ, மெசியா பற்றிய எதிர்பார்ப்பு எதுவுமோ தெரியாவிட்டாலும், அவர்களது ஞானம் அவர்கள் மெசியாவைக் கண்டுபிடிக்க உதவுகின்றது. ஏரோது ஒரு யூதன். யூத வரலாறு, வாக்குறுதி, எதிர்பார்ப்பு எல்லாம் தெரிந்தவன். மறைநூல் அறிஞர்களின் ஞானமிக்க ஆலோசனை பெறும் வாய்ப்பு அவனுக்கு இருந்தது. ஆனாலும் இயேசுவை ஞானத்தோடு அவன் தேடவில்லை.
- துணிவு நிறைந்த தேடல்: ஏரோது அரண்மனையில் விண்மீன் நின்று விட்டது. வழிகாட்டி வந்த ஒரே அடையாளமும் போய்விட்ட நிலையில் ஞானிகள் மனம்சோர்ந்து போய்விடவில்லை. கனவில் வேறு வழியாகச் செல்ல எச்சரிக்கப்பட்டபோது, புதிய இடத்தில் வேறுவழியை எப்படிக் கண்டுபிடிப்பது எனக் கலங்கவில்லை. துணிவோடு தேடினார்கள், கண்டுபிடித்தார்கள். ஏரோது ஒரு கோழை. தன் ஆட்சிக்குப் பாதிப்பு வந்து விடுமோ என்று கலங்கி, தன் மாமியாரையும், இரண்டு மகன்களையும் கொன்ற கோழை. துணிவில்லாத அவனால் இயேசுவைக் காண முடியவில்லை.
- தாழ்ச்சி நிறைந்த தேடல்: ஞானிகள் செல்வந்தர்கள். பொன், வெள்ளைப்போளம், தூபம் ஆகியவற்றைக் காணிக்கையாகத் தரும் அளவுக்கு வசதி இருந்தது. பல மைல் தூரம் பயணத்திற்குத் தேவையான பொருள் இருந்தது. ஆனாலும் மாட்டுத் தொழுவத்தில் ஒரு குழந்தைக்கு முன் தங்களைத் தாழ்த்துகின்றனர். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து இயேசுவை வணங்கிய முதல் நபர்கள் அவர்களே. அவர்களது தாழ்ச்சி கடவுளைக் காண அவர்களுக்கு உதவியது. ஏரோதுவிடம் தாழ்ச்சி இல்லை. தனக்கு மேல் ஓர் அரசரை நினைத்துப் பார்க்கக்கூட மனமில்லாத ஆணவக்காரன் அவன். எனவே இயேசுவைக் காண அவனால் முடியவில்லை.
இன்று கடவுளைத் தேடும் நமக்கு இம்மூன்று பண்புகளும் தேவை.
இவையிருந்தால்தான் நமது தேடல் வெற்றியைத் தரும்.