மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

புத்தாண்டு நாள் - அன்னை மரியாள் இறைவனின் தாய்
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எண்ணிக்கை 6:22-27| கலாத்தியர் 4:4-7 | லூக்கா 2:16-21

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


இன்று இறைவனின் தாயை நினைவுகூர்கின்றோம். தாய் என்ற சொல்லைக் கேட்டவுடன் நமது நினைவிற்கு வருவது அன்பு!

இதோ ஒரு தாயின் அன்பு எப்படிப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட ஓர் உண்மை நிகழ்ச்சி .

1980 - ஆம் ஆண்டு தென்கொரியாவிலுள்ள சியோல் என்னும் நகரிலே வீரத் தாயொருத்தி! அவள் பெயர் கிம் மிஸ். ஒரு மாடி வீட்டில் 13-வது மாடியில் அவள் குடியிருந்தாள். அவளுக்கு இரண்டு வயது குழந்தை ஒன்று.

ஒருநாள் அந்த வீட்டிலிருந்த காசோலை ஒன்று ஜன்னல் வழியாகக் கீழே விழுந்துவிட்டது. அதன் மதிப்பு ரூ.126. அதைக் கவனித்த கிம் மிஸ், தனது குழந்தையை வீட்டில் விட்டு விட்டுக் கீழே விழுந்த காசோலையை எடுப்பதற்காக மாடியிலிருந்து கீழே இறங்கினாள்.

கீழே கிடந்த காசோலையை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தாள். அங்கே அவள் காணக்கூடாத காட்சி ஒன்றைக் கண்டாள்.

வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எப்படியோ வீட்டைவிட்டு வெளியேறி, மதிலேறியது ! தவறியது. 13- வது மாடியிலிருந்து கீழே விழுந்தது. விழுந்து கொண்டிருந்த குழந்தையைத் தாய் பார்த்தாள்.

அபயக்குரல் எழுப்பி ஆட்களை அழைக்க அங்கே நேரமில்லை ! விழுந்த குழந்தைக்கு முன்னால் நின்று தனது இரண்டு கைகளையும் விரித்தாள். குழந்தை கைகளில் விழுந்தது. குழந்தைக்கு எந்த ஆபத்துமில்லை!

குழந்தை தன் மீது விழுந்தால் தனது நிலை என்னவாகும் என அந்தத் தாய் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை!

அவளுடைய இதயத்திலிருந்ததெல்லாம் அவள் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான்! அவள் அன்பைக் கடவுள் தமது வல்லமையால் ஆசீர்வதித்தார். அவளது கைகள் தெய்வீகச் சக்தியைப் பெற்றன! குழந்தை காப்பாற்றப் பட்டது!

தாய் என்பதற்கு மறுபெயர் அன்பு; தாய் என்பதற்கு மறுபெயர் பரிவு; தாய் என்பதற்கு மறுபெயர் பாசம்; தாய் என்பதற்கு மறுபெயர் நேசம்; தாய் என்பதற்கு மறுபெயர் கருணை .

ஒரு மனிதன் வாழ்க்கையில் தேடி அலைவதெல்லாம் அன்பே! அந்த அன்பை அர்த்தமுள்ள முறையில் மனித குலத்திற்குத் தருபவள் தாய்! இதனால் தான் இயேசு தனது தாயையே நமக்குத் தாயாகக் கொடுக்க கல்வாரியில் முன் வந்தார்!

நமது உலகத் தாய்களுக்கு உள்ள அத்தனை நல்ல பண்புகளும் நமது தேவதாய்க்கு உண்டு. மேலும் மற்ற தாய்களிடம் நின்று நிலவும் பண்பைவிட மேலான பண்பு ஒன்று மரியிடம் உண்டு! அதுதான் அவளிடம் நின்று நிலவும் வல்லமை!

உலகப் பெண்களில் கடவுளுக்குத் தாயாகும் பெருமை மரியாவுக்கு மட்டுமே கிடைத்தது.

கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை இன்றைய மூன்று வாசகங்களும் நமக்குத் தெளிவாக்குகின்றன. அனைவருக்கும் ஆசி வழங்குபவர் கடவுள்; கருணை பொழிபவர் கடவுள் ; அமைதி தருபவர் கடவுள் (முதல் வாசகம்) நம்மை எல்லாத் துன்பங்களில் இருந்தும் மீட்கும் கடவுள் ; நம்மீது ஒளியைப் பொழியும் கடவுள் ; பிள்ளைகளாக்கும் உரிமையை அளிக்கும் கடவுள் (இரண்டாம் வாசகம்) மீட்பர் என்ற பெயர் கொண்ட கடவுள் (நற்செய்தி) - இவை யாவும் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றன. கடவுளிடம், இறைமகன் இயேசுவிடம், மரியா கேட்டால், அவர் ஒருபோதும் அவள் கேட்பதை மறுக்கப் போவதில்லை (யோவா. 2:1-11). ஆகவே ஒரு வகையில் மரியாவால் ஆகாதது ஒன்றுமில்லை !

இதை நினைத்து இன்று நாம் பெருமகிழ்ச்சி அடைவோம். நமது விண்ணகத் தாயிடம் அன்பும் உண்டு, வல்லமையும் உண்டு. இதை மனதில் கொண்டு நமக்கு வேண்டிய வரங்களையெல்லாம் கன்னித்தாய் வழியாக இறைவனிடம் வேண்டிப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மரியா இறைவனின் அன்னை

கடவுள் தேடிய பெண் : மரியா துறவி ஒருவருக்குக் கடவுளோடு பேசும் வரம் இருக்கின்றது என்று சொல்லி பலர் அவரிடம் சென்று ஆசி பெற்று வந்தனர்.

ஓர் இளைஞனுக்குத் துறவி கடவுளோடு பேசுவது உண்மையா என்பதை அறிந்து கொள்ள ஆசை! அந்த இளைஞன் துறவியைத் தேடி காட்டுக்குச் சென்றான்.

துறவியிடம், உங்களுக்குக் கடவுளோடு பேசும் வரம் இருப்பதாக எல்லாரும் சொல்கின்றார்கள். அது உண்மையா? என்றான்.

ஆம். கடவுளோடு பேசுகின்றேன், கடவுள் என்னோடு பேசுகின்றார் என்றார் துறவி.

அப்படியானால், நீங்கள் அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது, நான் செய்த பாவங்கள் என்னென்ன என்று கேட்டுச் சொல்லுங்கள் என்றான் இளைஞன்.

துறவி, சரி என்றார்.

மறுநாள் இளைஞன் துறவியிடம் சென்று, என்ன! கடவுளைச் சந்தித்தீர்களா? அவர் என்ன சொன்னார்? என்றான்.

அதற்கு அந்த முனிவர், சந்தித்தேன் மகனே! உன் பாவங்களைப் பற்றியும் கேட்டேன். அதற்குக் கடவுள், அந்த இளைஞனுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து மறந்துவிட்டேன். இப்போது அவனுடைய பாவங்கள் எதுவும் என் ஞாபகத்திலில்லை என்று சொல்லிவிட்டார் என்றார்.

அதைக் கேட்டு அந்த இளைஞன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

ஆம். நமது கடவுள் நமது பாவங்களை மன்னித்து, அவற்றை மறந்துவிடும் கடவுள்.

இப்படிப்பட்ட கடவுள் தமது நிபந்தனையற்ற ஆழமான அன்பை உலக மக்களுக்கு வெளிப்படுத்தத் திருவுளமானார்.

தமது திருவுளத்தை நிறைவேற்றிக் கொள்ள, மனிதனாகப் பிறந்து, மனிதர்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்கள் பாவங்களை மன்னித்து, மறந்து அவர்களை வளமுடன் வாழவைக்க, மக்களினத்தைக் காப்பாற்ற, அனைவர் மீதும் அருள்பொழிய, தம் திருமுகத்தை உலகின் பக்கம் திருப்ப (முதல் வாசகம்) தாயொருவர் தேவைப்பட்டார். அவரைக் கடவுள் தேடினார். தேடிய பெண் (இரண்டாம் வாசகம்) கிடைத்தார். அவர்தான் மரியா! மேலும் அறிவோம்:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).

பொருள் :
தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மரியன்னை இறைவனின் தாய்

புத்தாண்டின் முதல் நாள் உலக அமைதி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அமைதி எங்கே இருக்கிறது என்பதை ஓர் ஓவியர் பின்வருமாறு படம் வரைந்து காட்டிப் பரிசு பெற்றார். மரங்கள் நிறைந்த அடர்த்தியான காடு; அமாவாசை இருட்டு; கோடை இடி; கண்ணைப் பறிக்கும் மின்னல்; சிங்கம், சிறுத்தைப்புலி மற்றும் கொடிய விலங்குகளின் சீற்றம்; பேய் மழை. இப்பயங்கரமான காட்டில் ஒரு பெரிய மரம்: அம்மரத்தின் நடுவில் ஒரு பொந்து: அப்பொந்தில் ஒரு தாய்ப்பறவை; அதன் இறக்கைக்கு அடியில் ஒரு சேய்ப்பறவை பயமின்றி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது. அப்பொந்துக்குக் கீழ் : “இங்கேதான் அமைதி தவழ்கின்றது" என்று ஓவியர் எழுதியுள்ளார்.

காரிருள் சூழ்ந்த பயங்கரமான காட்டில் ஒரு சேய்ப்பறவை அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம்: அது தன் தாயின் இறக்கைக்கு அடியில் உள்ளது. அச்சமும் திகிலும் நிறைந்த நம் வாழ்வில் நாம் அமைதியுடன் வாழவேண்டுமென்றால், நாம் இறைவனில் நம்பிக்கை கொண்டு, அவரது அன்பான அரவணைப்பில் இருப்பதை உணர வேண்டும். திருப்பா 91 கூறுவதை இப்புத்தாண்டின் தாரக மந்திரமாகக் கொள்வோம்: “அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின் கீழ் நீர் புகலிடம் காண்பீர் - தீங்கு உமக்கு நேரிடாது. வாதைஉம் கூடாரத்தை நெருங்காது" (திபா 91:1, 10).

புத்தாண்டாகிய இன்று குழந்தை இயேசு பிறந்த எட்டாம் நாள், இன்று குழந்தை இயேசுவுக்கு அதன் பெற்றோர்கள் விருத்தசேதனம் செய்து, இயேசு என்ற பெயரைச் சூட்டியதாக இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். அக்குழந்தை இந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் கூறுவது: "நான்தான்: அஞ்சாதீர்கள்" (யோவா 6:20). இன்பமோ துன்பமோ, வெற்றியோ தோல்வியோ, அழுகையோ சிரிப்போ, உடல் நலமோ நோயோ - எத்தகைய சூழலிலும் குவலயம் போற்றும் குழந்தை இயேசு நம்முடன் இருந்து, நம்மை வழிநடத்திக் காத்து வருகிறார்.

இன்று திருச்சபை, "மரியா இறைவனின் தாய்" என்ற பெருவிழாவைக் கொண்டாடுகிறது. மரியா மீட்பரின் தாய் மட்டுமல்ல, நம்முடைய தாயும்கூட, எனவே, இறைவனின் தாயும் நமது தாயுமான மரியன்னையின் பாத கமலத்தில் இப்புத்தாண்டை வைப்போம். அந்த அன்பு அன்னை நம்மை கரம்பிடித்து, கவலைகளைப் போக்கி, கண்ணீரைத் துடைத்து, நம்மைக் கரைசேர்ப்பார் என்பது உறுதி.

மரியாவின் படத்திற்கு முன் ஒருவர் மண்டியிட்டு, “அம்மா! உம்மை எனக்குத் தாயாகக் காட்டமாட்டாயா?" என்று கேட்க, மரியா அவரிடம், "மகனே! உன்னை எனக்குப் பிள்ளையாக காட்டமாட்டயா?" என்று கேட்டார். மரியா என்றும் நமக்குத் தாயாக இருக்கிறார். ஆனால் நாம் என்றும் அவருடைய பிள்ளைகளாக இருக்கின்றோமா? என்பதுதான் பிரச்சினை!

| மரியன்னையின் பிள்ளைகளாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? "என் ஆண்டவரின் தாய்" (லூக் 1:42) என்று மரியாவை அழைத்த எலிசபெத் அவரிடம், "ஆண்டவர் உமக்குச் சென்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" (லூக் 1:45) என்று கூறினார், மரியா பேறு பெற்றவர்; ஏனெனில் அவர் கடவுளின் வார்த்தையை நம்பினார். "கன்னி நம்பினார்; நம்பி கருவுற்றார். உடலால் கருவுறுமுன் உள்ளத்தால் கருவுற்றார்" (புனித அகுஸ்தின்).

எனவே, மரியாவின் உண்மையான பிள்ளைகளாக நாம் நடக்க வேண்டுமென்றால், நாமும் அவரைப்போல் கடவுளை முற்றிலும் நம்பி, கடவுளிடம் சரண் அடைய வேண்டும். மரியா கடவுளை நம்பியதால் கடவுள் அவருக்குத் துன்பம் வராமல் பாதுகாக்கவில்லை . மரியாவைக் கடவுள் சென்மப்பாவம் தீண்டாமல் பாதுகாத்தார்; ஆனால் துன்பம் தீண்டாமல் பாதுகாக்கவில்லை. கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது மரியா சிலுவை அருகில் நின்றுகொண்டிருந்தார் (யோவா 19:25). அப்போது சிமியோன் கூறிய இறைவாக்கு, "உமது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக் 2:35) நிறைவேறியது. ஆனால் மரியா சிலுவை அடியில் விசுவாசத்தால் நிமிர்ந்து நின்றார். இத்தகைய வீரத் தாயின் புதல்வர்களாகிய நாம் துன்பத்தைக் கண்டு துவண்டு போகலாமா ?

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நாம் அடிமைகள் அல்ல; பிள்ளைகள்" (கலா 4:7). அதே திருத்தூதர் கூறுகிறார்: “கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், அப்பா, தந்தையே என அழைக்கிறோம்" (உரோ 8:15), எனவே, நாம் கோழைகள் அல்ல; கடவுளின் பிள்ளைகள் அவ்விதமே அச்சமின்றி வாழ்வோம்.

மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது அவருடைய வயிற்றில் இருந்த திருமுழுக்கு யோவான் பேருவகையால் துள்ளினார் (லூக் 1:44). மரியா நமது மகிழ்ச்சியின் காரணம், மரியாவைப் பின்பற்றி நாமும் இப்புத்தாண்டில் பிறரை மகிழ்விப்பதில் கருத்தாய் இருப்போம். பிறரை நமது சொல்லாலோ செயலாலோ புண்படுத்தாதபடி கவனமாய் இருப்போம். அகம் மலர்ந்து தருமம் செய்வதைவிட, முகம் மலர்ந்து இனிய சொல் கூறுவது சிறந்தது.

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின் (குறள் 92)

இறைவன் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்துப் பாதுகாப்பாராக! அவரின் உடனிருப்பு என்றும் உங்களை வழிநடத்தவதாக! உலகம் தரமுடியாத அமைதியால் கிறிஸ்து உங்கள் உள்ளத்தையும் இல்லத்தையும் நிரப்புவாராக! வாழ்க புனித மரியே! விண்ணையும் மண்ணையும் எக்காலத்தும் ஆளுகின்ற அரசரை ஈன்றவரே வாழ்க!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வேண்டும் மூன்றுவித நம்பிக்கைகள்

இயேசு ஒருநாள் பேதுருவோடு பூமிக்கு வந்து உலகைச் சுற்றிப் பார்க்க விரும்பினார். இருவரும் புறப்பட்டனர். இறைமக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆசை.

போகிற வழியில் எதிரே ஒரு குதிரைவண்டி மணலில் சிக்கிக் கொண்டதைப் பார்த்தனர். வண்டியை அப்படியே விட்டுவிட்டுப் பாதையோரத்தில் வண்டிக்காரன் முழந்தாளிட்டுச் செபித்துக் கொண்டிருந்தான்: “இறைவா, என் வண்டியை ஓடவிடு. நீ நினைத்தால் இந்த அற்புதத்தைச் செய்யலாம். உன்னால் முடியாதது உண்டா என்ன?" உருக்கமான அவன் செபத்தைக் கேட்டதுமே செப வேளையில் தூங்கியே பழக்கப்பட்ட பேதுருகூடச் சிலிர்த்துப் போனார். இயேசுவைப் பார்த்து "ஆண்டவரே, அவனுடைய செபம் உம் மனத்தைத் தொட வில்லையா? உதவி செய்யும்" என்று கெஞ்சினார். இயேசுவோ பேதுருவை முறைத்து அமைதியாக இரு' என்ற சொல்லிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.

சிறிது தொலைவு சென்றதும் இன்னொரு குதிரை வண்டி தலைகீழாக உருண்டு கிடந்ததைக் கண்டனர். வண்டிக்காரனோ சொல்லக்கூடாத பொல்லாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டிக் கொண்டும் தெய்வ நிந்தனை செய்து கொண்டும் விழுந்து கிடந்த வண்டியை நிமிர்த்தப் பாடுபட்டுக் கொண்டிருந்தான். வேர்த்து விறுவிறுக்க அவன் உழைக்கும் உழைப்பெல்லாம் பயனற்றுப் போகிறதே என்று பேதுரு பரிதாபப்பட்டு “ஆண்டவரே, இவன் இப்படிப் பாடுபடுகிறானே, பயனளியும்" என்று மன்றாடினார். இரவு முழுவதும் உழைத்தும் எதுவும் கிடைக்காத நிலையில் விடியல் வேளையில் கரைமேல் நின்று கொண்டே வலைகிழிய மின்படச் செய்தவர் அல்லவா இயேசு என்ற நினைவு பேதுருவுக்கு வந்தது. “பேதுரு, பேசாமல் இருக்க மாட்டே” என்று இயேசு கடிந்ததும் வாயடங்கி நின்றார் பேதுரு.

கொஞ்சத்தூரம் போனதும் இன்னொரு குதிரை வண்டி சேற்றில் மாட்டிக் கொண்டதைப் பார்த்தனர். வண்டிக்காரனோ கடவுள் உதவி செய்வார் என்ற உறுதிப்பாட்டோடு 'இயேசுவே' என்று இறைவன் நாமத்தைத் துதித்துக் கொண்டு நுகத்தடியைப் பிடித்து அசைத்து இழுக்க முயன்று கொண்டிருந்தான். அதைக்கண்ட பேதுருவுக்கு இயேசுவிடம் உதவி கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் கேட்கும் துணிவில்லை. முந்தைய அனுபவங்களின் காரணமாக பேசவே பயந்தார். ஆனால் இயேசுவோ பேதுருவைப் பார்த்து “நீ அந்தச் சக்கரத்தைப் பிடி, நான் இந்தச் சக்கரத்தைப் பிடித்துக் கொள்கிறேன், இரண்டு பேரும் அவனோடு சேர்ந்து தள்ளுவோம்" என்றார். வண்டி நகர்ந்தது.

பேதுருவுக்கு ஒன்றுமே புரியவில்லை. மூன்று நிகழ்ச்சிகளிலும் இயேசு நடந்து கொண்ட முறை புதிராக இருந்தது. வியப்பாகவும் இருந்தது. விளக்கம் கேட்க விரும்பினார். தயங்கினார். அவரது கலக்கத்தைப் பார்த்த இயேசு விளக்கத் தொடங்கினார்.

"முயற்சி எதுவுமின்றி முதல் வண்டிக்காரன் செபித்துக் கொண்டிருந்தான். திண்ணையில் இருந்து கொண்டே தெய்வத்தை நினைப்பவனுக்கு நான் எப்போதும் படியளக்க விரும்புவதில்லை. இரண்டாவது வண்டிக்காரனோ தெய்வ சிந்தனை இன்றியே உழைத்ததனால் அவன் உழைப்பு வெறுமையைக் கண்டது. அவனன்றி அணுவை அசைக்க முயன்றவன் அவன். ஆனால் மூன்றாவது மனிதனோ தன்னம்பிக்கையோடும், தெய்வ நம்பிக்கையோடும் செயல்பட்டவன். தெய்வ நம்பிக்கையோடும் தன்னம்பிக்கையோடும் எவன் உழைக்கிறானோ அவனுக்கு வலிய தேடிச் சென்று உதவக் காத்திருக்கிறேன்”

கடவுளால் மட்டுமே முடியும் என்பது போல செபித்திடு மனிதனால் மட்டுமே முடியும் என்பது போல உழைத்திடு

வெற்றி உனதே! அத்துடன் நல்லது நடக்கும் என்ற பொது நம்பிக்கையை வளர்த்துக் கொள். இறைவா, நீயும் நானும் இணைந்து கையாள முடியாத எதுவும் எனக்கு இந்த ஆண்டில் நடக்கப் போவதில்லை என்பதை எனக்கு நினைவூட்டிக் கொண்டே இரும்!

ஆக, வாழ்க்கைக்கு வேண்டும் மூன்று நம்பிக்கைகள்:
தெய்வ நம்பிக்கை: கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற உணர்வு - மத்.19:26.
தன்னம்பிக்கை : எனக்கு உறுதியூட்டும் இறைவனருளால் என்னால் சாதிக்க இயலாதது எதுவுமில்லை என்ற உறுதி - பிலி.4:13.
பொது நம்பிக்கை : என்ன ஆனாலும் நல்லது நடக்கும் என்ற எண்ணம் -1 தெச.5:18

நம்புங்கள். செபியுங்கள். நல்லது நடக்கும். நம்பிக்கை என்பதே மனிதனுக்கு உயிரூட்டும் உயிர்ச்சத்து.

“ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களேயன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல என்கிறார் ஆண்டவர் (எரேமி.29:11).

புத்தாண்டில் மூன்று விதமான இறையாசீர் நம்மோடு இருக்க வேண்டுமென்று எண்ணிக்கை நூலாசிரியர் வாழ்த்துகிறார் (எண்.6:2426):
1. ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
2. ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன் மீது அருள் பொழிவாராக!
3. ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! இன்பமாயிருக்கப் போதுமான இனிமைகளும் உறுதியாயிருக்கப் போதுமான முயற்சிகளும் இதயத்துடன் இருக்கப் போதுமான துக்கங்களும் துள்ளிப்பாடப் போதுமான தன்னம்பிக்கையும் ஆண்டவனை நேசிக்கவும் அயலானை நேசிக்கவும் போதுமான இறையருளும் புத்தாண்டு அருளட்டும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மரியா இறைவனின் தாய்!

இன்னும் மண்ணில் பிறக்காத குழந்தை ஒன்று இறைவனிடத்தில் மிக உருக்கமாகக் கேட்டது, “நாளைய நாளில் நீர் என்னை மண்ணுலகிற்கு அனுப்பப்போவதாக அறிந்தேன். அப்படி நீர் என்னை அனுப்பும் பட்சத்தில் - ஒரு குழந்தையாக நான் பிறக்கும் பட்சத்தில் - அங்கே எப்படி நான் வாழ்வது?”. அதற்கு இறைவன் அதனிடம், “உன்னுடைய வருகைக்காக தேவதை ஒருத்தி காத்துக்கொண்டிருக்கின்றாள். அவள் உனக்குத் தேவையான அத்தனையும் பார்த்துக்கொள்வாள்” என்றார்.

“நான் மண்ணுலகிற்கு போனபின்பு, உம்மிடத்தில் நான் பேசவேண்டும் என்று நினைக்கின்றேன். அப்போது நான் என்ன செய்வது?” என்று கேட்டது குழந்தை. “அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படாதே, உன்னுடைய தேவதை உன்னுடைய கைகளைக் கூப்பிவைத்து, உன்னை என்னிடத்தில் ஜெபிக்க வைப்பாள், அதன்மூலம் நீ என்னிடத்தில் பேசிக்கொள்ளலாம்” என்றார் இறைவன். தொடர்ந்து குழந்தை இறைவனிடம், “இங்கே நான் பாதுகாப்பாக இருந்துவிட்டேன். ஆனால், நான் மண்ணுலகிற்குப் போனபின்பு, எனக்கு ஆபத்து வருகின்றபோது, என்னை யார் பாதுகாப்பார்?” என்று கேட்டது. அதற்கு இறைவன் மிகவும் அமைதியாக, “உன்னுடைய தேவதை உனக்கு எந்தவொரு ஆபத்தும் வராமல், ஏன் தன்னுடைய உயிரைத் தந்தாவது உன்னைப் பாதுகாத்துக்கொள்வாள்” என்றார்.

இறுதியாகக் குழந்தை தன்னுடைய முகத்தை மிகவும் சோகமாக வைத்துக்கொண்டு சொன்னது, “நான் மண்ணுலகிற்குப் போனபின்பு, உம்முடைய திருமுகத்தைக் காணமுடியாது போய்விடுமே, அப்போது உமது திருமுகத்தைக் காண்பதற்கு நான் என்ன செய்வது?”. “மண்ணுலகில் உனக்கென்று ஒரு தேவதை இருக்கிறாளே, அவள் உன்னை என் பக்கம் திருப்புவாள், உன்னை என்னுடைய திருமுகத்தைக் காணச்செய்வாள்” என்றார் இறைவன். குழந்தை சற்று பொறுமை இழந்து, “எதற்கெடுத்தாலும் தேவதை இருக்கிறாள், தேவதை இருகின்றாள் என்று சொல்கின்றீரே, யார் அந்த தேவதை?” என்று கேட்டது. இறைவன் மிகவும் சாந்தமாக, “அந்தத் தேவதை (உன்னுடைய) அம்மா தான்” என்றார்.

ஆம், இந்த மண்ணுலகில் நமக்காக இருக்கின்ற தேவதை, தெய்வம், இறைவி எல்லாம் “அம்மா”தான். இந்த உன்னதத்தை உணர்ந்துதான், “இறைவன் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால்தான் தாயினைப் படைத்தார்” என்று யூதப் பழமொழி சொல்கின்றது.

இன்று தாயாம் திருச்சபை “மரியா இறைவனின் தாய்” என்னும் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது. ஆண்டின் முதல் நாளான இன்று, அன்னையின் அடிதொட்டு தொடங்குவது உண்மையில் மிகப் பெரிய ஆசிர்வாதம்தான். இவ்வேளையில், இன்று நாம் கொண்டாடுகின்ற விழா நமக்கு எடுத்துரைக்கும் செய்தி என்ன? என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். கி.பி.431 ஆம் ஆண்டு, எபேசு நகரில் நடைபெற்ற திருச்சங்கம் ‘மரியா இறைவனின் தாய்’ என்னும் விசுவாசப் பிரகடனத்தை அறிக்கையிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை மரியாவை இறைவனின் தாயாகப் பாவித்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் முதல் நாளில், விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். மரியா இறைவனின் தாயாகின்றபோது, இறைவனின் அன்புப் பிள்ளைகளாகிய நமக்கும் தாய் என்பதுதான் உண்மை. எனவே, ஒரு தாய்க்குரிய வாஞ்சையுடன் மரியா எப்படியெல்லாம் நமக்குத் துணை புரிகின்றார், நம்மை ஆசிர்வதிக்கின்றார் என்று இப்போது பார்ப்போம்.

மரியா, இந்த உலகமே உயிருக்குப் பயந்து, (நம்மை விட்டு) ஓடிபோனாலும், ஓடிப்போகாத ஒரு தாய் என்று சொன்னால் மிகையாகாது. உரோமை அரசாங்கம் இயேசு கிறிஸ்துவின்மீது சிலுவையைச் சுமத்தி, கல்வாரி மலையில் அறைந்து கொன்றபோது, அவரோடு யாருமே இல்லை, மரியா மட்டும்தான் அவரோடு இருந்தார். அப்படியானால், இயேசுவோடு இறுதிவரைக்கும் இருந்த ஒரே சொந்தம் தாய் மரியா என்பதுதான் உண்மை. இயேசுவோடு மட்டுமல்ல, நம்மோடும் இறுதிவரைக்கும் இருக்கின்ற ஒரே சொந்தம் தாய் (மரியா) என்பதுதான் அசைக்கக் முடியாத உண்மை. அதனால்தான் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை இவ்வாறு சொன்னார், “தாயைப் பெற்றிருக்கின்ற யாரும் ஏழை இல்லை” என்று. ஆம், நமக்கென்று ஒரு தாய் இருகின்றாள், அவள் நம்மை ஒருபோதும் விட்டு விலகிவிடாத தாய், அவள் நம்மோடு இருக்கின்றபோது, நாம் ஒன்றும் ஏழைகள் இல்லை, மாறாக ஆசிர்பெற்ற மக்கள்.

அடுத்ததாக, மரியா தன்னுடைய மகன் இயேசுவுக்காக, இன்று நமக்காக பல்வேறு தியாகங்களை மேற்கொண்ட, மேற்கொள்ளும் ஒரு தியாகச் சுடர். ஒரு குழந்தையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி அழகுபார்ப்பதற்கு ஒரு சாதாரண தாய் எவ்வளவு தியாகங்களை மேற்மேற்கொள்கின்றாளோ, அவ்வளவு தியாகங்களையும் மேற்கொண்டவர் அன்னை மரியா. அது மட்டுமல்லாமல் தான் பெற்றெடுத்த மகன் தனக்காக வாழாமல், மனுக்குல மீட்புக்காக தன்னுடைய வாழ்வைத் தியாகம் செய்தவர். அப்படிப்பட்ட தியாகச் செம்மலை ஈன்றெடுத்து, அவரை மனுக்குல மீட்புக்காக தியாகம் செய்த மரியாவின் தியாக உள்ளத்தை எப்படி வார்த்தைகளால் விவரித்துச் சொல்வது?..

வழக்கமாக தாயின் தியாகத்தை பெலிக்கான் பறவையோடு ஒப்பிடுவார்கள். பெலிக்கான் பறவை தன்னுடைய குஞ்சுகளுக்கு இரை கிடைக்காதபோது, தன்னுடைய கூரிய, சிவந்த அலகினால் தன்னுடைய மார்பினில் குத்தி, அதிலிருந்து வழிகின்ற இரத்தத்தைக் கொண்டு குஞ்சுகளுக்கு உணவூட்டும். தாயும் கூட அப்படித்தான் தன்னுடைய பிள்ளை நன்றாக இருக்கவேண்டும், வாழ்வில் உயரவேண்டும் என்பதற்காக, தன்னுடைய உடலை வருத்திகொண்டு பல்வேறு தியாகங்களைச் செய்கின்றாள். அதனால்தான் ‘ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன்தீருமா?” என்று தாயின் தியாகத்திற்கு ஈடாக எதையும் கொடுத்துவிட முடியாது என்கிறார் கவிஞர் வாலி.

இப்படி நமக்காக பல்வேறு தியாகங்களை மேற்கொள்கின்ற, இறுதிவரைக்கும் உடனிருக்கின்ற தாய், அன்னை மரியைப் பெற்றிருப்பது உண்மையில் நாம் பெற்ற பாக்கியம்தான். இந்த அன்னையின் அன்பு மக்களாக, அவருக்கு உகந்தவராக வாழவேண்டும் என்றால், அந்த அன்னை நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். அது வேறொன்றுமில்லை ‘அவர் (இயேசு) சொல்வதையெல்லாம் செய்வதுதான்” (யோவா 2:5). நாம் இயேசு சொன்ன வழியில் நடக்கும்போது, நாம் அன்னையின் அன்பு மக்களாக மாறுவதோடு மட்டுமல்லாமல், இயேசுவின் அன்புச் சகோதர சகோதரிகளாக மாறுகின்றோம் என்பது உண்மையாகின்றது.

இயேசு அல்லது இறைவன் சொன்ன வழியில் நாம் நடக்கும்போது, அவர் நமக்கு இன்று மூன்று ஆசிர்வாதங்களைத் தருவதாக வாக்களிக்கின்றார். பாதுகாப்பு, அருள், அமைதி ஆகிய இம்மூன்றும்தான் இறைவன் தருகின்ற ஆசிர்வாதங்கள். (இன்றைய முதல் வாசகம்),

ஆகவே, மரியா இறைவனின் தாய் என்னும் விழாவைக் கொண்டாடுகின்ற நாம், மரியா நம்மீது கொண்டிருக்கும் அளவுகடந்த அன்பினை உணர்ந்து, அவருடைய அன்பு மக்களாக வாழ முயற்சி செய்வோம். அதே நேரத்தில் இறைவனுடைய வழியில் நடப்போம். அதன்வழியாய் இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!

என்னங்க! எல்லாரும் இங்க வந்து நிக்குறீங்க! இந்தக் குளிர்ல! கோவிலுக்கு உள்ளே, வெளியே என்று ஒரே மக்கள் கூட்டம்! போன வருடத்தோடு நம்ம வாழ்க்கையில இன்னொரு வயது கூடிடுச்சு என்று எந்த வருத்தமும் நம்மிடம் இல்லை! கடந்த ஆண்டு விட்டுச் சென்ற காயங்கள் நம்மிடம் இல்லை! நாம் இன்று அணிந்துள்ள புதிய ஆடை போல நம் உள்ளத்தில் ஒருவிதமான புத்துணர்வு.

விவிலியத்தில் முதன்முதலாகப் புத்தாண்டு கொண்டாடியவர்கள் நம் முதற்பெற்றோர் ஆதாமும் ஏவாளும்தான். ஏதேன் தோட்டத்திற்குள் அவர்கள் இருந்தது வரை அவர்களுக்குக் காலம் பற்றிய உணர்வு இல்லை. தோட்டத்திற்கு வெளியே அனுப்பப்பட்டவுடன்தான் காலம் பற்றிய உணர்வு அவர்களுக்கு வருகின்றது. ஆண்-பெண் என்று இருந்த அவர்கள், தந்தை-தாய் என்று மாறுகிறார்கள். ஏவாள் கருத்தரித்து தன் முதல் மகனைப் பெறுகிறாள். நம் முதற்பெற்றோரின் புத்தாண்டு சாபத்தில் தொடங்கியது. 'வயிற்றினால் ஊர்ந்து புழுதியைத் தின்பாய்' என்று பாம்புக்கும், 'உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்' என்று பெண்ணுக்கும், 'நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை என்பாய்' என்று ஆணுக்கும் ஆண்டவர் சாபம் அளிக்கின்றார். நெற்றி வியர்வைதான் வாழ்வின் நியதி என்றால், நாம் இங்கே ஆலயத்தில் கூடி நிற்பது ஏன்? வேதனைதான் வாழ்வின் எதார்த்தம் என்றால், இந்த இரவில் நாம் இறைவேண்டல் செய்வது ஏன்?

இந்த இரவில் நாம் நம் காலத்தைக் கொண்டாடுகின்றோம். காலம் எப்போது தோன்றியது? என்பது பற்றிய கேள்விக்கு இன்றும் தெளிவான விடை இல்லை. ஆனால், 'காலங்கள் அவருடையன, யுகங்களும் அவருடையன' என்பது வாழ்வியல் எதார்த்தமாக இருக்கிறது. நாம் காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டவர்கள் என்றாலும், இடத்தைத் தெரிவு செய்யும் ஆற்றல் பெற்றுள்ள நாம், காலத்தின்முன் கையறுநிலையில் இருக்கின்றோம். காலம் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தை நமக்கு தருகிறது. அடுத்து வரப் போகும் ஆச்சர்யத்தையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது. 'கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார். காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கின்றார்' என்கிறார் சபை உரையாளர் (சஉ 3:11).

இந்த நாள் நமக்கு நான்கு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: கிரகோரியன் காலண்டர்படி புத்தாண்டுத் திருநாள், மரியா இறைவனின் தாய் என்னும் திருநாள், இயேசுவுக்கு பெயர் சூட்டப்பட்ட நாள், மற்றும் கிறிஸ்து பிறப்பின் எட்டாம் திருநாள். இந்த நாளின் இறைவார்த்தை வழிபாடு நமக்குத் தரும் செய்தி 'ஆண்டவரின் உனக்கு ஆசி அளிப்பாராக!'

அது என்னங்க ஆசி அல்லது ஆசீர்? எபிரேயத்தில் 'ஆசிர்' என்னும் சொல் உள்ளது. அச்சொல்லுக்கு 'செல்வம்' அல்லது 'வளம்' என்பது பொருள். தமிழ் ஒருவேளை எபிரேயச் சொல்லைத் தன் சொல்லாக ஏற்றிருக்கலாம். அல்லது தமிழ்ச்சொல் எபிரேயச் சொல்லாக மாறியிருக்கலாம் என்பது முதல் புரிதல். இரண்டாவதாக, 'ஆசீர்' என்னும் சொல்லை, 'ஆ' மற்றும் 'சீர்' என இரண்டாகப் பிரித்தால், 'ஆ' என்பது பெயர்ச்சொல்லாகவும், 'சீர்' என்பது வினைச்சொல்லாகவும் உள்ளது. 'ஆ' என்பதன் பொருள் 'பசு' என்று அறிவோம். அதைத் தவிர்த்து, 'ஆ' என்றால் 'ஆகுதல்' அல்லது 'ஆகுகை' ('வளர்தல்'), 'ஆறு' ('குணம்' அல்லது 'பண்பு'), 'ஆன்மா' ('உள்ளம்) என்ற பொருள்களும் உண்டு. ஆக, உன் 'ஆகதலும்,' 'ஆறும்,' 'ஆன்மாவும்' 'சீர் ஆகுக!' என்று சொல்வதே 'ஆசீர்!'

விவிலியத்தில் ஆசீர் மிக முக்கியமானதாக இருக்கக் காரணம் கடவுள் நம் முதற்பெற்றோருக்குக் கொடுத்த சாபம். அந்த சாபம் இல்லை என்றால், ஆசீருக்குப் பயன் இல்லை. ஏனெனில், சாபத்தின் சாயம் ஆசீரில் களையப்படுகின்றது. ஆசீர் நம் உழைப்பைத் தாண்டியதாக இருக்கிறது. ஆசீர் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. ஆசீர் நமக்கு ஆச்சர்யத்தைக் கொண்டு வருகிறது.

படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகின் உயிரினங்களுக்கும் (தொநூ 1:24), ஆணுக்கும் பெண்ணுக்கும் (1:28) ஆசி வழங்குகின்றார். நோவாவுக்கும் புதல்வர்களுக்கும் (தொநூ 9:1), ஆபிரகாமுக்கும் (12:1) மற்ற குலமுதுவர்களுக்கும் எனத் தொடரும் ஆசி இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. கீழ்ப்படிதலுக்கான ஆசிகளை இணைச்சட்ட நூல் (28:1-14) பட்டியலிடுகிறது. ஈசாக்குக்குப் பிடித்தமான வேட்டைக் கறியுடன் வருகின்ற ஏசா, 'என் தந்தை எழுந்து தம் மகன் கொண்டு வந்திருக்கும் வேட்டைக் கறியை உண்டு மனமாற எனக்கு ஆசி வழங்குவாராக!' என இறைஞ்கின்றார். தான் தன் சகோதரனால் ஏமாற்றப்பட்டதை உணர்கின்ற அவர், ஈசாக்கை நோக்கி, 'அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா!' என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுகின்றார். அவரின் அழுகை நம்மையும் சற்றே தடுமாற வைக்கிறது.

'ஆண்டவரே, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? கடந்த ஆண்டு என் வாழ்க்கையில் கஷ்டம் ஏன்? துன்பம் ஏன்? கலக்கம் ஏன்? ஏமாற்றம் ஏன்? பின்னடைவு ஏன்?' என்று இன்று நாமும் அவர்முன் அழுகின்றோம். ஏசாவுக்கு வழங்குவதற்கு அப்பா ஈசாக்கிடம் ஆசி இல்லை. ஆனால், 'அப்பா, தந்தையே!' என்று தூய ஆவியாரின் உதவியால் நாம் கதறியழும் ஆண்டவர் (இரண்டாம் வாசகம்) நமக்கு நிறைய ஆசி வழங்கக் காத்திருக்கிறார். காலத்திற்கு உட்பட்டு வாழும் நம் நிலையை அறிந்தவர் அவர். ஏனெனில், புனித பவுல், 'காலம் நிறைவுற்றபோது, தன் மகனைக் கன்னியிடம் பிறந்தவராக – அதாவது, காலத்திற்கு உட்பட்டவராக – நம் மண்ணுலகுக்கு அனுப்பினார்.' காலத்தின் வரையறுக்குள் கடவுள் வந்ததால் காலம் புனிதம் பெற்றது. காலம் அடிமை வாழ்விலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமைப் பேற்றை அளிக்கின்றது

கடவுளே நுழைந்த கால நீரோட்டத்தின் மிகச் சிறிய பகுதியே 2022 என்னும் புதிய ஆண்டு. இந்த ஆண்டுக்குள் நுழையும் நமக்குக் கடவுள் தரும் ஆசீரைப் பட்டியலிடுகின்றது முதல் வாசகம் (காண். எண் 6:22-27). மூன்று ஆசிகள், ஒவ்வொரு ஆசியிலும் இரு கூறுகள் என்று அமைந்துள்ளன: ;: (அ) 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' இதில் ஆண்டவர்தான் செயலாற்றுபவர். ஆண்டவர் தான் ஆசீர் அளிப்பவர். 'உனக்கு' என்பது இரண்டாம் நபர் (முன்னிலை) ஒருமை. ஆக, இது மொத்தமாக கூட்டத்தின்முன் வழங்கப்பட்டாலும், ஆசி ஒவ்வொரு தனிநபருக்கும் உரியது. (ஆ) 'ஆண்டவர் அவர் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்வாராக! உனக்கு அருள்கூர்வாராக!' 'ஒளி' என்பது விவிலியத்தில் வாழ்வைக் குறிக்கும். ஆண்டவரின் முகம் எப்போதும் ஒளிரக் கூடியது. இந்த முகம் மனிதர்கள்மேல் படும்போது அவர்களும் ஒளி பெறுகின்றனர். வாழ்வு பெறுகின்றனர். மேலும், உருவகத்தின் அடிப்படையில் 'திருமுகம் ஒளிர்தல்' என்பது 'அருள்கூர்தல்' என்றும் பொருள்படும். 'ஹனான்' ('அருள்') என்ற வார்த்தை 'தன் குழந்தையை கூர்ந்து பார்க்கும் தாயின்' செயலைக் குறிக்கிறது. (இ) 'ஆண்டவர் தன் திருமுகத்தை உயர்த்துவாராக! உனக்கு அமைதி தருவாராக!' மீண்டும் ஆண்டவரின் திருமுகமே இங்கு செயலாற்றுகிறது. 'தாழ்ந்து போன முகம்,' அல்லது 'குனிந்த முகம்' அவமானத்தை அல்லது கோபத்தைக் குறிக்கும் (தொநூ 4:6,7). மேலும், வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொள்ளுதல் கோபத்தையும், ஒருவரிடமிருந்து விலகி நிற்பதையும், கண்டுகொள்ளாததையும் குறிக்கும் (இச 31:18, திபா 30:8, 44:25). ஆண்டவர் தன் முகத்தை தாழ்த்திக் கொள்ளாமல், வேறு பக்கம் திருப்பிக் கொள்ளாமல் உன் பக்கம் திருப்புகிறார். இறுதியாக அவர் 'ஷலோம்' ('அமைதி, நிறைவு, நலம்') தருகிறார்.

இந்த மூன்று ஆசிகளையும் ஒருசேர வாசிக்கும்போது என்ன தோன்றுகிறது? எனக்கு வெளியில், என்னில், எனக்கு உள்ளே என்று மூன்று நிலைகளில் வரும் ஆசி நம்மை முழமையான மனிதர்களாக ஆக்குகின்றது – அல்லது நம் ஆகுதலைச் சீர்படுத்துகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகம் (லூக் 2:16-21), 'இடையர்களின் வருகை,' 'இடையர்களின் வியப்பு,' 'மரியாவின் பதிலுணர்வு,' 'இடையர்களின் செல்கை,' மற்றும் 'இயேசுவின் விருத்தசேதனம்' என்று ஐந்து நிகழ்வுகளாக நகர்கிறது. ஆண்டவரின் ஆசி தங்களுக்கு மீட்பாக வந்ததை இடையர்கள் வந்து கண்டு, வியப்படைகின்றனர். ஆண்டவரின் ஆசியால் தான் அடைந்த நிலையை எண்ணி மரியா அனைத்தையும் மனத்தில் இருத்திச் சிந்திக்கின்றார். ஆண்டவரின் ஆசியைப் பெறும் - தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையைப் பெறும் - விருத்தசேதனச் சடங்கு குழந்தைக்கு நிறைவேற்றப்படுகிறது. காலத்திற்கு உட்பட்ட கடவுள், அப்படி உட்படுதலின் வலியையும் உணரத் தொடங்குகின்றார்.

'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' எனக் கேட்ட எலிசபெத்து, மரியாவை இறைவனின் தாய் என வாழ்த்துகின்றார் (லூக் 1:43). கீழைத்திருஅவை ஆயர் நெஸ்டோரியஸ் அவர்களுடைய தப்பறையான கொள்கைக்குப் பதிலிறுக்கின்ற எபேசு பொதுச் சங்கம் (கிபி 431), 'இம்மானுவேல்தான் கடவுள். இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய்' என்று அறிவிக்கின்றது. நாசரேத்து மரியாவை இம்மானுவேலின் தாய், இறைவனின் தாய் என்னும் நிலைக்கு உயர்த்தியது ஆண்டவரின் ஆசியே!

'ஆ-சி' என்னும் சொல்லின் பின்புலத்தில் அன்னை கன்னி மரியாவின் வாழ்க்கை மூன்று வகை 'ஆ-சி'களால் நிறைந்துள்ளது: (அ) 'ஆண்டவரின் சித்தம்,' (ஆ) 'ஆண்டவரின் சிறப்பு,' மற்றும் (இ) 'ஆண்டவரின் சிரிப்பு.' (அ) 'ஆண்டவரின் சித்தம்' - இவ்விரண்டு வார்த்தைகளில் மரியாவின் சரணாகதி அடங்கியுள்ளது. முதல் ஏவா தன் சித்தம் நிறைவேற வேண்டும் என விரும்பியதால் ஆண்டவரின் சாபத்திற்கு உள்ளானார். இரண்டாம் ஏவா ஆண்டவரின் சித்தமே நிறைவேற வேண்டும் என விரும்பியதால் (காண். லூக் 1:37) இறைவனின் ஆசியைப் பெற்று அவரின் தாயாக உயர்கின்றார். (ஆ) 'ஆண்டவரின் சிறப்பு' – மரியா தன் புகழ்ச்சிப் பாடலில், 'இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்' (காண். லூக் 1:48) என்னும் சொற்கள் வழியாக தான் அடைந்துள்ள சிறப்பான நிலையை அறிக்கையிடுகின்றார். இது 'ஆண்டவர் தந்த சிறப்பு' என்பதை அவர் உணர்ந்தார். (இ) 'ஆண்டவரின் சிரிப்பு' – மரியா சிரித்ததாக விவிலியம் பதிவு செய்யவில்லை. ஆனால், அவர் தன் மகிழ்ச்சியை என்றும் தக்கவைத்துக்கொள்கின்றார். சிமியோனின் சொற்கள், இளவல் இயேசு காணாமற் போதல், சிலுவையின் நிழல் என்று எல்லா இடங்களிலும், தன் வலுவின்மை, இயலாமை, மற்றும் கையறுநிலை குறித்து மனதிற்குள்ளேயே சிரித்துக்கொள்கின்றார். 'ஆண்டவரின் மகிழ்வே நம் வலிமை' (நெகே 8:10) என்ற நிலையில் அவர் ஆண்டவரில் எந்நேரமும் சிரித்தவராக இருந்தார்.

இறைவனின் தாய் அவர் என்றால், இம்மானுவேலின் சகோதர சகோதரிகளாகிய நம் தாயும் அவரே. நம் முதல் தாய் ஏவா கொண்டு வந்த சாபத்தை, நம்மிடமிருந்து அகற்றி, நமக்கு ஆசியைப் பெற்றுத் தர வந்த இந்தத் தாய் நம் புத்தாண்டுக்கு வழங்கும் செய்தியும் இதுவே:

(அ) 'ஆண்டவரின் சித்தம் நிறைவேற்றுங்கள்!' வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் இறைவனின் குரலைக் கேட்டு வழிநடக்க இந்த ஆண்டு முயற்சி செய்வோம். 'நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், 'இதுதான் வழி. இதில் நடந்து செல்லுங்கள்' என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்' (எசா 30:21) என்கிறார் கடவுள். இறைவனின் குரலைக் கேட்க வேண்டுமென்றால், நம் உள்ளிருக்கும் ஓசைகள் அடங்க வேண்டும். நம் வெளிப்புறக் கவனச்சிதறல்கள் குறைய வேண்டும்.

(ஆ) 'ஆண்டவரின் சிறப்புக்கு உரியவர் நீங்கள்!' இந்த உலகின் பார்வையில் நாம் எப்படி இருந்தாலும், நம் இறைவனின் பார்வையில் மதிப்புக்கு உரியவர்கள் நாம் (எசா 43:4). ஆக, நம் தன்மதிப்பையும், மனித மாண்பையும் சீர்குலைக்கும் எதையும் செய்தல் ஆகாது. மதிப்பற்றவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது (காண். 2 திமொ 2:20-21) அவசியம்.

(இ) 'ஆண்டவரின் சிரிப்பைக் கொண்டிருங்கள்!' இந்த ஆண்டு நாம் நிறைய சிரிக்க வேண்டும். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்பதால் மட்டுமல்ல, மாறாக, இறைவன் நம்மோடு இருப்பதால். அவநம்பிக்கை, அதீத எண்ணம், கவலை உள்ளம் அனைத்தையும் ஓரத் தள்ளிவிட்டு என்ன நடந்தாலும், எதைப் பார்த்தாலும், நாமே முட்டாள்தனமாகச் செயல்பட்டாலும் ஒரு புன்முறுவல் பூத்துவிட்டு அடுத்த நிமிடத்திற்கு நகர வேண்டும்.

'ஆண்டவர் உனக்கு ஆ-சி வழங்குவாராக!' என்று நாம் வாயார ஒருவர் மற்றவரை வாழ்த்துவோம். இதையே திருப்பாடல் ஆசிரியர் தன் இறைவேண்டலாக (67), 'கடவுளே! எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக!' என முன்மொழிகின்றார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு