இறைவனின் தாய் மரியா
பிரிந்த சபையைச் சார்ந்த ஒரு சகோதரி ஒரு கத்தோலிக்கப் பெண்ணிடம் இயேசுவைத் தான் நாம் போற்ற வேண்டும். மரியாவைப் போற்றக் கூடாது. பிள்ளைகளுக்குத்தான் மதிப்பு. தாய்க்கு அல்ல. குஞ்சுக்குத்தான் மதிப்பு. கூட்டுக்கு அல்ல என்று அடிக்கடி கூறிக் கொண்டே வந்தாள். ஒருநாள் கத்தோலிக்கப் பெண் அந்தப் பிரிந்த சபைச் சகோதரி வீட்டிற்குச் சென்று அந்த வீட்டுப் பையனிடம் மட்டும் வணக்கம் செலுத்திவிட்டு அந்த அம்மாவைக் கண்டுகொள்ளாமல் புறப்பட்டாள். இதைக் கண்டு அந்த சகோதரி ஆத்திரமடைந்து என்னங்க! இன்று வித்தியாசமா நடக்கிறீங்க! என் பிள்ளைக்கு மட்டும் வணக்கம் செலுத்திப் பேசிவிட்டு என்னை ஓரங்கட்டிப் போறீங்களே! இது முறையா? என் பிள்ளைதான் என்னை மதிக்குமா? என்றாள். அதற்குக் கத்தோலிக்கப் பெண், நீங்கதான் பிள்ளைக்குத் தான் மதிப்பு. தாய்க்கு அல்ல. குஞ்சுக்குத் தான் மதிப்பு, கூட்டுக்கு அல்ல என்று சொன்னீங்களே என்றாள். பிரிவினை சபைச் சகோதரி என்ன பேசுவது என்று தெரியாது மவுனம் ஆனாள்.
தாயுமானவர் சொல்லுகிறார்: நீயில்லாமல் நானில்லை. தாயில்லாமல் சூல் (கரு) இல்லை, தாய் இல்லாமல் சேய் இல்லை என்று. மேகத்தைப் புகழ்வது அது தரும் மழைக்காகத்தானே! பூந்தோட்டத்தைப் புகழ்வது அது தரும் பூக்களுக்காகத்தானே. பசுவைப் புகழ்வது அது தரும் பாலுக்காகத்தானே. அதேபோல் தாயைப் புகழ்வது அது ஈன்றெடுத்த குழந்தைக்காக. அதேபோல் மரியாளின் பெருமை அவள் இயேசுவை ஈன்றெடுத்த தனிப்பேறு. ஆண் இல்லாமல் கடவுள் இவ்வுலகில் மனிதராக முடிந்தது. ஆனால் ஒரு பெண் இல்லாமல் இயேசு இவ்வுலகில் பிறக்க முடியவில்லை. மரியாவின் சம்மதம் இயேசுவுக்குத் தேவைப்பட்டது. எனவே மீட்பரின் தாயாக, இயேசுவின் தாயாக, இறைவனின் தாயாக விளங்குகின்றாள் மரியா.
விவிலியத்தைப் புரட்டினால் தெளிவான சான்றுகள் காண முடியும்.
எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில் என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? (லூக். 1:43) என்று கேட்கவில்லையா?
காலம் நிறைவேறியபோது. கடவுள் தன் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார் (கலா. 4:4-5) என்று வாசிக்கின்றோம்.
தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அது கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாகவும் இருந்தது. வாக்கு மனிதர் ஆனார் (யோவா.1:1,14). அந்த இயேசுவே மரியாவின் மகன் என்றும் சொல்லப்பட்டுள்ளது (மாற்.6:3).
இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர் (லூக். 1:31) என்றும் தெளிவாக வானதூதர் கபிரியேல் கூறுகிறார்.
மரியா உண்மையிலே இறைவனின் தாய் என்று கி.பி. 431- ஆம் ஆண்டிலே எபேசில் கூடிய திருச்சங்கம் தெளிவு படுத்தியுள்ளது. அதில் கிறிஸ்துவின் இறைத்தன்மைக்குத் தாய் அல்ல. மாறாக உண்மையான கடவுளாக இருந்தவரை மனிதராக ஈன்றெடுத்தவள் என்று பொருள்படும் என்றும் தெளிவு படுத்துகிறது எபேசு சங்கம்.
மரியாள் உண்மையிலே இறைவனும் மீட்பருமான இயேசுவின் தாய் என ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்படுகிறாள் என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபைக் கொள்கைத் திரட்டு நமக்கு உறுதி செய்கிறது.
பள்ளி மாணவன் ஒருவன் பள்ளிக்குச் செல்ல மறுத்தான். ஏன் என்று கேட்டால் கணித ஆசிரியர் முட்டாள் தனமாகக் கணக்கு சொல்லித் தருகிறார். நேற்று, மூன்றும் மூன்றும் ஆறு என்றார். இன்று நான்கும் இரண்டும் ஆறு என்கிறார். இதை எப்படி ஏற்றுக்கொள்வது. இது தப்புக் கணக்கு என்றான் பையன். இதேபோலத்தான் நம் பிரிந்த சகோதரர்கள் போடும் தப்புத் தாளம்.
கடவுளுடைய ஞானமும், அறிவும் எத்துணை ஆழமானது. அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை. அவருடைய செயல் முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை (உரோ. 11:33) என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
மரியாவை இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம். ஒன்று ஊன் இயல்பில், மற்றொன்று ஆவியில். மரியாவை ஊன் இயல்பில் புரிந்து கொண்ட பெண் ஒருத்தி இயேசுவைப் பார்த்து “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவள்" என்றாள். ஆனால் இயேசுவோ, "தந்தையின் வார்த்தையைக் கடைபிடிப்பவர் இன்னும் அதிகமாகப் பேறுபெற்றவர்" (லூக். 11:27-28) என்றார்.
மரியா பேறுபெற்றவள். காரணம் இயேசுவைக் கருத்தாங்கினாள், ஈன்றெடுத்தாள். பாலூட்டினாள் என்று மட்டுமல்ல. மாறாக மரியா இயேசுவின் வார்த்தைக்குச் செவிமடுத்தார். அதை உள்ளத்தில் இறுத்தித் (லூக். 2:19) திறந்த உள்ளத்தோடு ஏற்றாள். தன் வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்தார். எனவே மரியாவின் உண்மையான தாய்மைப் பேறு என்பது அவள் ஊன் இயல்பைக் கடந்து ஆவியில் செயல்பட்டார் என்பதுதான்.
எனவே இயேசுவின் குடும்பம் மிகப் பெரிய குடும்பம், ஊனியல்பின் குடும்பம் அல்ல. ஆவியின் குடும்பம், விசுவசிக்கும் குடும்பம். எனவேதான் என் விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே எனக்குச் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார் (மத்.12:50) என்று தாயை இரத்த உறவைவிட விசுவாச உறவில் உயர்த்துகிறார். நமது வாழ்வில் இறைவனின் விருப்பத்தை நாம் நிறைவேற்றும்போது நாமும் இறைவனின் தாயாகலாம் - தாயாகிறோம். இயேசுவின் சிறப்புக் குடும்பத்தில் நுழைகிறோம். இறைவனின் வார்த்தையை விசுவாசத்துடன் ஏற்றுக் கொள்வதின் மூலம் திருச்சபையும் ஓர் அன்னையாகச் செயல்படுகிறது. திருமுழுக்கு வழியாகப் புதிய பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் திருச்சபை ஓர் அன்னையாகிறது என்றால் பிறரில் நாம் கிறிஸ்துவை உருவாக்குதலின் வழியாக நாமும் அன்னையாக, தாயாக ஆகலாம் அன்றோ!
நிகழ்ச்சி
நிறைமாத கர்ப்பிணி ஒருவரை, இரு பெண்கள் என்னிடம் கொண்டு வந்து சாமி! இவளுக்கு இடுப்பு வலி வர வேண்டும் எனச் செபியுங்கள் என்றனர். குழந்தை பிறக்க வேண்டுமானால் பேறுகால வேதனை அனுபவிக்க வேண்டும். இடுப்பு வலி வரவேண்டும். இதேபோலத்தான் இயேசுவை ஈன்றெடுக்க நாமும் பேறுகால வேதனை அடைய வேண்டும். எனவேதான் தூய பவுல் அடிகளார், "பிள்ளைகளே! உங்களில் கிறிஸ்து உருவாகும்வரை உங்களுக்காக நான் மீண்டும் பேறுகால வேதனை அடைகிறேன்" (கலா. 4:19) என்றார்.
திருமணமான பெண் ஒருவர் மூன்று வழிகளில் தாய்மைப் பேறு அடையாது போகலாம். ஒன்று, பிள்ளை பெற இயலாதவளாக இருக்கலாம். இரண்டாவது, அவள் பிள்ளை பெறாதபடி கருத்தடை கருவிகளை முன்னமே பயன்படுத்தலாம். மூன்றாவது, தன் வயிற்றில் வளரும் குழந்தையைக் கருச்சிதைவு செய்யலாம்.
நம் கிறிஸ்தவ வாழ்விலும் மூன்று விபத்துக்கள் நிகழ இடமுண்டு, ஒரு சிலர் கிறிஸ்துவைக் கருத்தரிக்க இயலாத நிலையில் உள்ளனர். இவர்கள் விசுவாச மலடுகள், பாதை ஓரத்தில் விதைக்கப்பட்டவர்கள் (மத். 13:19).
வேறுசிலர் திருமுழுக்கால் தாங்கள் பெற்ற விசுவாசம் முளைக்காமல் விசுவாசக் கருத்தடை செய்பவர்கள். இவர்கள் பாறை மீது விதைக்கப்பட்ட விதையைப் போல் ஆவார்கள் (மத். 13:21).
மற்றும் சிலர் கிறிஸ்துவைச் சிறிது காலம் வளர விட்டு பின்பு கருச்சிதைவு செய்பவர்கள். இறைவார்த்தையை உலகப் பற்றுக்களால் நெருக்கிவிடும் முட்புதர்கள் இவர்கள் (மத். 13:22).
விசுவாச வாழ்வில் நாம் எந்த ரகத்தைச் சார்ந்தவர்கள்? விசுவாச மலடுகளா? அல்லது விசுவாசக் கருத்தடைச் செய்பவர்களா? உலகிற்கு கிறிஸ்துவை ஈன்றெடுத்துக் கொடுப்பதே நமது அழைப்பின் தலையாயக் கடமை. நாமும் அவரோடு இணைந்திருந்தால் மிகுந்த கனி தருவோம் (யோவா. 15:5) என்கிறார் இயேசு. எனவே அழைப்பை உணர்ந்து மரியாவைப் போல நாமும் தாய்மை நிலையில் செயல்படப் புறப்படுவோம். அது நம் தாய் மரியாவுக்குப் பெருமை சேர்க்கும்.
தூங்குபவனை எழுப்பலாம். தூங்குபவன் போல் பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியுமா?
கடவுள் தேடிய பெண் : மரியா
துறவி ஒருவருக்குக் கடவுளோடு பேசும் வரம் இருக்கின்றது என்று சொல்லி பலர் அவரிடம் சென்று ஆசி பெற்று வந்தனர்.
ஓர் இளைஞனுக்குத் துறவி கடவுளோடு பேசுவது உண்மையா என்பதை அறிந்து கொள்ள ஆசை! அந்த இளைஞன் துறவியைத் தேடி காட்டுக்குச் சென்றான்.
துறவியிடம், உங்களுக்குக் கடவுளோடு பேசும் வரம் இருப்பதாக எல்லாரும் சொல்கின்றார்கள். அது உண்மையா? என்றான்.
ஆம். கடவுளோடு பேசுகின்றேன். கடவுள் என்னோடு பேசுகின்றார் என்றார் துறவி.
அப்படியானால், நீங்கள் அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது. நான் செய்த பாவங்கள் என்னென்ன என்று கேட்டுச் சொல்லுங்கள் என்றான் இளைஞன்.
துறவி, சரி என்றார்.
மறுநாள் இளைஞன் துறவியிடம் சென்று, என்ன! கடவுளைச் சந்தித்தீர்களா? அவர் என்ன சொன்னார்? என்றான்.
அதற்கு அந்த முனிவர், சந்தித்தேன் மகனே! உன் பாவங்களைப் பற்றியும் கேட்டேன். அதற்குக் கடவுள். அந்த இளைஞனுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து மறந்துவிட்டேன்.
இப்போது அவனுடைய பாவங்கள் எதுவும் என் ஞாபகத்திலில்லை என்று சொல்லிவிட்டார் என்றார்.
அதைக் கேட்டு அந்த இளைஞன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.
ஆம். நமது கடவுள் நமது பாவங்களை மன்னித்து, அவற்றை மறந்துவிடும் கடவுள்.
இப்படிப்பட்ட கடவுள் தமது நிபந்தனையற்ற ஆழமான அன்பை உலக மக்களுக்கு வெளிப்படுத்தத் திருவுளமானார்.
தமது திருவுளத்தை நிறைவேற்றிக் கொள்ள. மனிதனாகப் பிறந்து, மனிதர்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்கள் பாவங்களை மன்னித்து, மறந்து அவர்களை வளமுடன் வாழவைக்க, மக்களினத்தைக் காப்பாற்ற, அனைவர் மீதும் அருள்பொழிய, தம் திருமுகத்தை உலகின் பக்கம் திருப்ப (முதல் வாசகம்) தாயொருவர் தேவைப்பட்டார். அவரைக் கடவுள் தேடினார். தேடிய பெண் (இரண்டாம் வாசகம்] கிடைத்தார். அவர்தான் மரியா!
மேலும் அறிவோம் :
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).
பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.
புத்தாண்டு புலர்ந்துவிட்டது; மற்றும் ஓர் ஆண்டு மலர்ந்துவிட்டது. இப்புத்தாண்டை இயேசுவின் இனிய நாமத்தில் தொடங்குவோம்; இறைவனின் தாய் புனிதமிகு கன்னிமரியின் பாசமிகு பாத கமலத்தில் வைப்போம்.
இன்று இயேசு பிறந்த எட்டாம் நாள். அவருக்கு இயேசு என்ற பெயரைச் சூட்டிய நாள். இயேசுவின் நாமம் சிந்தைக்கு இனிய நாமம்; செவிகளுக்கு இனிய நாமம்: பைந்தமிழ் பாவுக்கும் நாவுக்கும் இனிய நாமம். இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் (பிலி 2:10). நாம் மீட்படைய இயேசுவின் பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை (திப 4:12), புனித பேதுரு கால் ஊளமுற்ற ஒருவரை இயேசுவின் பெயரால் எழுந்து நடக்கச் செய்தார் (திப 3:6). பழைய ஏற்பாட்டில் சிறுவன் தாவீது கோலியாத் என்ற அரக்களைக் கடவுளின் பெயரால் கொன்றான். (1 சாமு 17:43-45).
நமது வாழ்வில் கோலியாத் போன்ற பல தீய சக்திகள் நம்மை முடக்கி விடுகின்றன.. நாம் செய்வது என்னவென்று கலங்கித் திகைக்கிறோம். ஆனால் இயேசுவின் பெயரைச் சொல்லி அவற்றை எதிர்த்து வெற்றி அடைவோம். இயேசுவின் பெயரால் நாம் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் நமக்குக் கொடுப்பார் (யோவா 15:16), கடவுள் நம் சார்பில் இருக்கும்போது நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. “ஆண்டவரே என் ஒளி அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்ச வேண்டும். யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்" (திபா 27:1).
இன்று புனிதமிகு கன்னி மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். மரியன்னையின் தனிச்சிறப்பு அவர் இறைவனின்தாய் என்பதாகும். நாம் மேகத்தைப் புகழ்வது அது கொடுக்கும் மழைக்காக; மரத்தைப் புகழ்வது அது கொடுக்கும் கனிக்காக: பசுவைப் புகழ்வது அது கொடுக்கும் பாலுக்காக; தாயைப் புகழ்வது அவர் ஈன்றெடுத்த சேயுக்காக. அவ்வாறே நாம் மரியன்னையைப் புகழ்வது அவர் ஈன்றெடுத்த உலக மீட்பருக்காக. கிறிஸ்து கடவுள் என்றால், மரியா கடவுளின் தாய் என்பதில் ஐயமில்லை. இன்றைய திருப்பலியின் வருகைப்பாடல் மரியாவை இறைவனின் தாய் என்று புகழாரம் சூட்டுகிறது. "வாழ்க புனித அன்னையே! விண்ணையும் மண்ணையும் எக்காலத்தும் ஆளும் அரசரை ஈன்றவர் நீரே." இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்து பவுல், "காலம் நிறைவேறியபோது கடவுள் தம் மகனைப் பெண்ணிடமிருந்து பிறக்கச் செய்தார் " (கலா 4:4) என்கிறார்.
மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது அவர் தூய ஆவியால் நிரப்பப்பட்டு உரத்த குரலில் மரியாவைப் பார்த்து, "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர தான் யார்?" (லூக் 1:43) என்று கேட்கிறார். மரியா ஆண்டவரின் தாய். ஆண்டவர் என்ற சிறப்புப் பெயர் இறைவனுக்கு மட்டுமே உரியது. மரியா ஆண்டவரின் தாய் என்றால், அவர்
இறைவனின் தாய் என்பது வெள்ளிடை மலை.
ஒரு பேரன் தன் தாத்தாவைச் சுட்டிக்காட்டி. "நான் என் தாத்தாமேல் உயிரை வைச்சிருக்கிறேன். ஏனெனில் என் தாத்தா என்மேல் உயிலையே எழுதி வைச்சிருக்கிறாரு” என்றான். இயேசு கிறிஸ்து அவர் சாகுமுன் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் என்ன? "இவரே உம் தாய்” (யோவா 19:27). புனித யோவான் வாயிலாக மரியாவை நமது தாயாக அளித்தார். கிறிஸ்துவின் இந்த இறுதி விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதில்லை. மரியன்னையை நமது தாயாக ஏற்றுக்கொண்டு, அவருடைய பாதத்தில் இப்புத்தாண்டை வைப்போம். "உருவிலான் உருவாகி, உலகிலொரு மகனுதிப்பக் கருவில்லாக் சுருததாங்கிய கன்னிமரி நம்மைக் கைபிடித்து வழிநடத்துவார்."
மரியா உண்மையிலேயே "இறைவனின் தாய்" என்று கி.பி. 431- ஆம் ஆண்டு எபேசில் கூடிய பொதுச் சங்கம் அறிக்கையிட்டது. "இம்மானுவேல் உண்மையிலேயே கடவுள். எனவே பேறுபெற்ற கன்னி உண்மையிலேயே இறைவனின்தாய்."
மரியா மீட்பரின் தாய். யாரெல்லாம் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுகின்றார்களோ அவர்களும் மீட்பரின் தாயாக முடியும் (மத் 12:48.50). மரியா மீட்பரை இவ்வுலகிற்கு அளித்தார். நாமும் நமது சாட்சிய வாழ்வினால் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அளிக்க முடியும்.
புத்தாண்டு இனிய நல்வாழ்த்துக்கள்!
இயேசுவுக்குப் புகழ்!மரியே வாழ்க!
புத்தாண்டில் புதிய திருப்பம்
புலர்ந்துள்ளது புத்தாண்டு!
அது காலப்போக்கின் ஒரு புதிய திருப்பம்
-மனித வாழ்க்கை ஏட்டின் ஒரு புதிய பக்கம்
-உலக வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயம்.
புத்தாண்டு என்பது என்ன?
மனிதனைத் தவிர காலத்தைக் கடந்த கடவுளுக்கோ, கடவுளின் மற்ற படைப்புகளுக்கோ - உயிரற்ற சடப்பொருளாகட்டும், உயிருள்ள ஆனால் உணர்வற்ற பயிரினமாகட்டும், உணர்வுள்ள ஆனால் அறிவற்ற மிருக இனமாகட்டும், அல்லது அறிவே நிறைவான இறைவனாகட்டும் அனைத்துக்கும் - புத்தாண்டு என்பது பொருளற்றது!
புத்தாண்டு என்பது ஓர் எல்லைக்குட்பட்ட காலத்தின் தொடக்கம் தானே! அது உண்மை என்றால், காலமற்ற, காலத்தைக் கடந்த கடவுளுக்கு ஒரு காலத்தின் தொடக்கமா? நினைத்துப் பார்க்க முடியவில்லை.
நாள், வாரம், மாதம், வருடம் என்று வரையறுக்கப்பட்ட கால எல்லைகளுக்கு மதிப்பேது?
பூமி தன்னையே சுற்றுவதைக் கண்டு, தன்னைச் சுற்றிக் கொண்டே சூரியனைச் சுற்றுவதைக் கண்டு நாள் என்றும் வாரம் என்றும், மாதம் என்றும், ஆண்டு என்றும் வகுத்தும் கணித்தும் அதற்கு ஒரு தொடக்கத்தைக் கற்பித்தவனே மனிதன் தானே!
இம்மை, அதன் தொடர்ச்சியான மறுமை இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நித்தியம் ஒன்றே உண்மை! அந்த நித்தியத்தை நம் வசதிக்காக அநித்தியமாக்கிக் கொள்கிறோம் நாம்.
எப்போது பூமி சுற்றத் தொடங்கியது? யாருக்குத் தெரியும்?
தமிழனுக்கு என ஒன்று, தெலுங்கனுக்கு என ஒன்று, ஆங்கிலேயனுக்கு என ஒன்று... இப்படி எத்தனை எத்தனை புத்தாண்டுகள்! அத்தனையும் மனிதக் கற்பனைகள்!
நமக்கென வகுத்துக் கொண்ட புத்தாண்டுக்கு நாம்தாம் பொருள் தரவேண்டும்.
குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தின் தொடக்கமாகப் புத்தாண்டு இருப்பதுபோல, நமது வாழ்க்கையிலும் ஒரு புதிய தொடக்கத்தைக் காண விழையும் போதுதான், ஒரு புதிய திருப்பத்தைப் பார்க்க நினைக்கும் போதுதான் புத்தாண்டு பொருள் பெறும்; பொலிவு பெறும்!
தவறுகள் கூட வாழ்வுக்கு வலுவூட்டும். கூட்டித் தள்ளும் குப்பைகள் வயலுக்கு உரமாவது போல கடந்த ஆண்டு நாம் செய்த தவறுகளை உரமாக்கிப் புதிய ஆண்டில் நம் வாழ்க்கையைப் பசுமையாக்கிக் கொள்வோம்.
கடவுள் மனித இனத்துக்கெனத் திறந்து வைத்திருக்கும் மாளிகைதான் புதிய ஆண்டு.
தந்தை ஒருவர் தன் இருமக்களையும் அழைத்துத் தன் சொத்தை ஒப்படைக்கப் பொறுப்பான தகுதியுள்ள வாரிசு யார் என்பதை அறிய ஒரு சோதனைக்கு உட்படுத்தினார். குறிப்பிட்ட பணத்தை இருவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுத்து இரு அறைகளை ஒதுக்கி தனித்தனியாக அந்த அறைகளைப் பொருட்களால் நிரப்புங்கள் என்றார். மூத்தவன் வண்டி வண்டியாக வைக்கோலை வாங்கிச் சிறிதுகூட இடம் இல்லாமல் அறை முழுவதையும் நிரப்பினான். இளையவனோ ஒரு மெழுகுதிரி ஒரு தீப்பெட்டி, ஒரு ஊதுபத்தி வாங்கித் திரியை ஏற்றி வைத்தான். ஊதுவத்தியைப் புகைய விட்டான். மீதிப்பணத்தை ஏழை எளியவருக்கு அள்ளிக் கொடுத்தான். தந்தை மூத்த மகனுக்குரிய அறைக்குள் நுழைய முயன்றார். நுழைய முடியாதபடி அறைமுழுவதும் இறுகஇறுக வைக்கோல் மலை. இளையவன் அறைக்குள் நுழைந்தார். பார்க்கும் இடம் எல்லாம் ஒளி வெள்ளம், மூக்கைத் துளைக்கும் நறுமணம்.
இரண்டு பேர்களுமே அறைகளை நிறைத்திருந்தார்கள். ஆனால் என்ன வேறுபாடு? ஒருவன் குப்பை கூளம் போல வைக்கோலால் நிறைத்திருந்தான். மற்றவனோ ஒளியாலும் நறுமணப் புகையாலும் நிறைத்திருந்தான். வைக்கோல் நிறைந்த அறைக்குள் அவனாலும் நுழைய முடியவில்லை. அவன் தந்தையாலும் நுழைய முடிய வில்லை. மற்ற அறைக்குள்ளோ நுழைந்த அனைவராலும் ஒளியையும் மணத்தையும் அனுபவிக்க முடிந்தது.
நாமும் இப்படி வீணானவற்றால் நம் மனத்தையும் வாழ்வையும் நிறைக்காது இளையவனைப் போல இறைவார்த்தை என்ற ஒளியை ஏற்றி நற்செயல்களால் வாழ்வை நறுமணம் கமழச் செய்தால் வாழ்க்கை எப்படிப் பொலிவுறும்! புத்தாண்டு எப்படிப் பொருள் பெறும்!
ஞானியாக மக்கள் கருதிப் போற்றிய அந்தப் பெரியவரிடம் இளைஞன் ஒருவன் வந்தான். அவரைச் சோதிக்க எண்ணி உள்ளங்கைக்குள் ஒரு சிட்டுக் குருவியை மறைத்துக் கொண்டு கேட்டான்: “சிட்டுக்குருவி உயிரோடு இருக்கிறதா? இல்லை இறந்து விட்டதா?" இறந்து விட்டது என்று சொன்னால் குருவியைப் பறக்க விட்டு உயிரோடு இருக்கிறது எனச் சொல்லலாம். உயிருள்ளது என்று சொன்னால் மெதுவாக நசுக்கிக் கொன்றுவிட்டு இறந்து விட்டது என்கலாம் என்பதுதான் இளைஞனின் திட்டம். ஞானி சொன்ன பதில்: “அது உன் கையில் இருக்கிறது" புத்தாண்டு எப்படி இருக்கும்? அது உன்னைப் பொருத்தது.
"இறைவன்தாமே உனக்கு முன்பாகப் போகிறார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை. உனைக் கைவிடுவதும் இல்லை. நீ பயப்படவும் கலங்கவும் வேண்டியதில்லை" (இ.ச.38:8) என்ற நம்பிக்கை உணர்வில், “அதோ அங்கே ஒரு தேவை! உன்னால் அதனைத் தீர்த்து வைக்க முடியும். இதோ இங்கே ஒரு புண்! உன்னால் இதனை ஆற்றிவிட முடியும்" என்ற இலட்சிய ஈடுபாட்டில் புதிய வாழ்க்கைப் பாதை பிறக்கட்டும். புதிய ஆண்டின் ஒவ்வொருநாளும் கடந்து செல்லட்டும்.
புலர்ந்துள்ள புதிய ஆண்டில் மனங்களில் மகிழ்ச்சி மலரட்டும், இல்லங்களில் நல்உறவு வளரட்டும். வாழ்க்கையில் வளமை பெருகட்டும்!
தூய மரியாள் இறைவனின் தாய் புத்தாண்டுப் பிறப்பு
முதல் வாசகப் பின்னணி (எண். 6:22-27)
-
விடுதலைப்பயணம் முடிந்தது, இறைவன் இஸ்ராயேல் மக்களைச் சீனாய் மலையில் தேர்ந்தெடுக்கிறார். இஸ்ராயேல் மக்கள் இடையே உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார். கடவுள் மோசே யின் மூலமாக லேவியர் குலத்தைத் தனியாகத் தனிதன்மையோடு தேர்ந்தெடுக்கிறார். அவர்கள் கடவுளுக்குப் பலி செலுத்தவும், கடவுளுக்கு வழிபாடு நடத்தவும் வேண்டியிருந்தது. இந்தக் குலத்தின் தலைவரான ஆரோனின் குடும்பத்தார் குருக்களாகவும், பிறர் குருக்களுக்கு உதவுபவர்களாகவும் செயல்பட்டனர். சிறப்பான நிகழ்ச்சிகளின் போதும், பலிகளுக்குப் பிறகும் "ஆசீர்" கொடுப்பது குருக்களின் வழிபாட்டுக் கடமையாக இருந்தது. இந்த ஆசீர்வாதமானது மக்களுக்கு உடன்படிக்கையை கடைபிடிப்பதால் கிடைத்த பரிசாகும். மேலும் இது ஆபிரகாமின் மூலம் எல்லா நாடுகளுக்கும் வாக்களிக்கப்பட்ட ஆசீருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. இங்குக் கடவுள் மோயீசன் வழியாக ஆரோனுக்கும் அவர் புதல்வர் களுக்கும் கொடுத்த ஆசீரின் வார்த்தைகள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் வாசகப் பின்னணி (கலா. 4: 4-7)
கலாத்தியாவில் வசிக்கும் மக்கள் தூய பவுலால் 2-ஆம் பயணத்தின்போது மனமாற்றம் பெற்றவர்கள். அவர்கள் கிறிஸ்தவ கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்கள். ஒரு சில யூதர்கள் அவர்களிடம் வந்து பவுல் சொல்லும் கோட்பாடுகள் தவறாக இருப்பதாகவும், பழைய சட்டங்கள்கூட கடைபிடிக்கப்பட வேண்டுமென்றும் கூறினார்கள். இதை முறியடிப்பதற்காகவே பவுல் எபேசிலிருந்து இந்த மடலை எழுதுகிறார். குறிப்பாக இயேசுவின் வருகை பழைய சட்டங்களை நிறைவுக்கு கொண்டுவந்துவிட்டது எனவும், நிழல் உண்மையால் விலக்கிவிடப்பட்டது எனவும், கிறிஸ்தவர்கள் பழைய சட்டங்களின் அடிமைப்பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு கடவுளின் பிள்ளைகளாக மாற்றம் பெற்றார்கள் எனவும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
நற்செய்தி வாசகப் பின்னணி (மாற்கு 2: 16-21)
கிறிஸ்து பிறந்த செய்தி இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அவர்கள் வானதூதர்களின் வார்த்தையை அப்படியே கேட்டுக் கடைப்பிடிக்கின்றனர். நற்செய்தியாளர் இங்கு மரியாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். கிறிஸ்து பிறந்த காலத்தில் ஒரு குழந்தை மாட்டுத்தொழுவத்தில் பிறப்பதென்பது சாதாரணமாக நடந்த ஒன்று. ஏனெனில் அது பஞ்சகாலத்தில் அதாவது பொருளாதாரரீதியாக நிறைய ஏழைகள் இருந்தார்கள். எனவே குழந்தை பிறக்க நல்ல இடம் இல்லாமல் இவ்வாறு நடந்தது. ஆனால் இடையர்க ளுக்கு ஆச்சரியம் என்னவென்றால் வானதூதர் கொடுத்த செய்தியை போல மனித பிறவி எடுத்த தெய்வத்தைத் தீவனத் தொட்டியில் பார்த்ததுதான்.
மறையுரை
பிறப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலையை கொடுக்கிறது. சிலருக்கு பிறந்த நாள் என்றால் சந்தோஷம், மகிழ்ச்சி. இவர்கள் பிறந்ததற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்வார்கள். பலருக்கு பிறந்த நாள் என்றாலே ஏதோ இழந்தது போல் “ஏன்தான் பிறந்தோமோ?' என்ற மனநிலை அதிகமாக இருக்கும். இந்த இரண்டு மனப்பான்மைகளும் நமது வாழ்க்கை அனுபவங்களைப் பொறுத்து அமைந்து விடுகிறது.
பிறப்பும், இறப்பும் நமது கையில் இல்லை. நாம் எவ்வாறு பிறக்கப்போகிறோம், ஆணாகவா பெண்ணாகவா சிவப்பாகவா என்று தெரியாது. எந்த நாட்டில் எந்த ஊரில், எந்தத் தெருவில் யாருக்கு பிள்ளையாகப் பிறக்கப் போகிறோம் என்பதும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஒரு அன்பான, பாசமான, தியாகம் நிறைந்த அன்னைக்கு மகனாக, மகளாகப் பிறக்கப் போகிறோம் என்பது எல்லோருக்கும் தெரியும். அன்னையால் இந்த உலகம் நமக்கு அறிமுகமாகிறது. அன்னையால் நாமும் இந்த உலகத்திற்கு அறிமுகமாகிறோம். பிறப்பெடுக்கும் ஒவ்வொரு குழந்தையாலும் அன்னை என்ற முகவரி ஒரு பெண்ணிற்கு இயல்பாகக் கிடைக்கிறது. எதுவுமே நமது கையில் இல்லாத நிலையில் நமது பிறப்பிற்கு ஆதாரம் இறைவன். இறைவனின் இந்தத் தெய்வீகத் திட்டத்தில் கருவிகளாகச் செயல்படுபவர்கள் நமது பெற்றோர். குறிப்பாக நமது தாய்தான் நம்மைப் பத்து மாதம் சுமந்து பாலூட்டி, சீராட்டி எடுத்து நமக்கு உருக்கொடுத்து உண்டாக்குபவர், புதுவாழ்வு கொடுப்பவர். "கடவுள் ஒவ்வொரு வீட்டிலும் பிறக்க முடியாது, இருக்க முடியாது என்பதற்காக அன்னையை படைத்தார்” என்ற சான்று நமது அன்னை கடவுளின் பார்வையில் விலைமதிப்பேறப் பெற்றவள் என்பது நிறைவாகிறது.
எவ்வாறு அன்னை இந்தப் புத்துலகை நமக்கு அறிமுகம் செய்கிறாரோ, இந்த உலகம் நம்மை அறிந்து கொள்கிறதோ அவ்வாறுதான் ஒவ்வொரு புத்தாண்டின் போதும், கிறிஸ்தவ பாரம்பரியத்தில் புத்தாண்டும் இறைவனின் தாய் என்ற பெறுவிழாவும் சேர்ந்து வருவது உண்மைப் பொருளை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. அன்னையின் வழியில் நேரமும் காலமும் தம்மில் நம்மைச் சேர்த்துக் கொள்கிறது என்பதால் இங்குத் தாயும் முக்கியம் புத்தாண்டும் முக்கியம். எனவேதான் இந்த இருபெரும் விழாக்கள். மரியாள் இறைவனின் தாய் என்பதை பின்வரும் உண்மைகளால் ஏற்றுக்கொள்கிறோம். மரியாள் உண்மையாக ஒரு மனித பிறவியாக இருந்தாலும், கடவுளால் உலக மீட்பராம் இயேசுவிற்கு மனித உரு கொடுக்கத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். இதன் மூலம் தான் உலக மாந்தர் மீட்படைய முடியும் என்பது திண்ணமாகிறது. இந்த மாபெரும் பாக்கியம் கடவுளால் கொடுக்கப்பட்டது. இதை மரியாள் உணர்ந்து கொண்டாள். எனவேதான் "இதோ ஆண்டவரின் அடிமை” (லூக்கா 1:48) என்று கூறுகிறாள். எனவே நாம் மரியாவை புகழ்ந்து பாடும் போதெல்லாம் அவர் மூலம் செயல்பட்ட நமது கடவுளையே புகழ்கிறோம். ஏனெனில் நம்மில், நம்மோடு பிறந்த ஒருவருக்கு இந்த மாபெரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
கடவுளால் எல்லாம் செய்ய முடியும். "பாவத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் இயேசு மனிதனாக இருக்க வேண்டும்" என்று திட்டமிருந்ததால் "பெண்ணிடமிருந்து பிறந்தார்" என்ற உண்மை நிகழ வேண்டியிருந்தது. இங்குக் கடவுள் தெய்வீக அன்பின் மூலம் மனித குலத்தைப் பெருமைபடுத்தி உள்ளார். 2-ஆம் வத்திக்கான் சங்கத்தின் "திருச்சபை” என்ற கோட்பாட்டில் 8-ஆம் அதிகாரத்தில் அன்னை மரியாள் கடவுளின் தாய் என்பதை பல இடங்களில் நாம் காண்கிறோம். 8:53எனவே அவர் உண்மையாகவே கடவுளும் மீட்பருமானவரின் தாய் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுப் போற்றப்படுகின்றார். தம் மகனின் பேறுபலன்களை முன்னிட்டு அவர் சீரிய முறையில் மீட்கப் பெற்று நெருங்கிய, பிரிக்க முடியாத முறையில் அவரோடு இணைக்கப் பெற்று இருக்கிறார். இறைவனின் தாய் என்ற இந்த உன்னத நிலையாலும் பெருமையாலும் அணி செய்யப்படுகின்றார்.
8:54 இவர் கிறிஸ்துவின் தாய், மக்களின் தாய், சிறப்பாக நம்பிக்கை கொண்டோரின் தாய்.
8:56 ஏவாளோடு ஒப்பிட்டு மரியாவை "வாழ்வோரின் தாய்" எனவும் அழைக்கின்றனர்.
8:58 'அம்மா இவரே உம் மகன்' (யோவா 19:26-27) என்னும் சொற்களால் சிலுவையில் உயிர்விட்ட அந்தக் கிறிஸ்து இயேசுவே மரியாவைத் தம் சீடருக்குத் தாயாக அளித்தார்.
8:59நம் இணைப்பாளர் ஒருவரே, மக்கள்பால் மரியா கொண்டுள்ள தாய்க்குரிய பணியால் கிறிஸ்துவின் இந்த இணையற்ற இணைப்பாளர் பணி சற்றேனும் மறைவதில்லை.
8:60 இதனால் தான் அருள்நிலையைப் பொறுத்தமட்டில் மரியா நமக்குத் தாயாக அமைந்துள்ளார்கள்.
8:61 இசைவளித்த நேரத்திலிருந்து தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் முடிவில்லா நிறைவுபெறும் வரை அருள் திட்டத்தின்படி மரியாவின் தாய்மையும் தடையின்றி நீடிக்கும். தாய்க்குரிய அன்போடு காத்து வருகின்றார். எனவேதான் கன்னி மரியா திருச்சபையிலே பரிந்துரைப்பவர் எனச் சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகின்றார்.
8:63 அன்னையும் கன்னியும் என்று சரியாக அழைக்கப்பெறுகின்ற திருச்சபையின் மறைபொருளின் தூய கன்னி மரியா கன்னி- மைக்கும் தாய்மைக்கும் தனிப்பட்ட சிறந்த ஓர் எடுத்துக் காட்டாக உள்ளார். கடவுளால் அனுப்பப்பட்ட மகனையே அவர் பெற்றெடுத்தார். இவரை நம்பிக்கை கொண்டவராய்ப் பெற்றெடுத்து வளர்ப்பதில் மரியா தாய்க்குரிய அன்போடு ஒத்துழைக்கிறார்.
8:65 தூய கன்னி தம் வாழ்வில் தாய்க்குரிய அன்பிற்கு மாதிரியாய் உள்ளார்.
8:69 கடவுளுக்கும் மக்களுக்கும் தாயான கன்னி மரியா தம் இறைவேண்டலால் தொடக்க காலத் திருச்சபைக்கு உதவினார்.
மரியா இறைவனின் அன்னையாகவும், இறைமக்களின் அன்னையாகவும் இருக்கின்றார் என்பதை மேற்கூறியவைகள் நமக்குத் தெளிவுப்படுத்துகின்றன. தனிமனித வாழ்வில் இறைமக்கள் தாய்க்குரிய வாஞ்சையோடு அந்த அன்னையிடம் வருவதையும், அவர் வழியாக மக்கள் பெறுகின்ற கொடைகளையும் அவர்களின் அனுபவத்தையும் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். நாமும் நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் அனுபவித்துள்ளோம். இன்றைய காலக்கட்டத்தில் எத்தனையோ பேர் தாயின் அன்புக்காக ஏங்குகின்றனர். தாய்மையைச் சிறப்பித்துக் கூறுகின்ற நமது சமுதாயத்தில் கருவில் சிதைக்கின்றவர்களும் பெற்றெடுத்து சிசுவைக் கொலை செய்கின்றவர்களும், குப்பைத் தொட்டியிலும், புதர்களிலும் போடுகின்றவர்களும் நம்மிடையே இருக்கின்றார்கள். இப்படிக் கைவிடப்பட்டோர் ஒரு சில நல்ல உள்ளங்களால் பராம- ரிக்கப்பட்டு நல்ல மனிதர்களாக வளர்க்கப்படுகின்றனர். இருப்பினும் உண்மையான தாயின் அன்பு அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இது போன்ற சூழல்களில் நாம் அனைவரும் அன்புகாட்டி வாழ அழைக்கப்படுகின்றோம்.
நம் எல்லோருக்கும் ஒருவிதமான இரக்க குணம் இருப்பதை உணரமுடிகின்றது. வாழ்வின் ஒருசில நிலைகளில் நாம் நம்முடைய உள்ளத்தில் உணருகின்ற இரக்கக் குணத்தை மற்றவர்களுக்குக் காட்ட முடிகின்றது.
எப்பொழுதெல்லாம் இந்த இரக்க குணத்தை நாம் மற்றவர்களுக்கு நமது உறவு முறைகளில், பணி செய்யும் இடங்களில், சாலையோர நிகழ்வுகளில், பிச்சையெடுப்பவர்களில் காட்டுகின்றோமோ அப்பொழுதெல்லாம் நாம் தாயின் அன்பையும் இரக்கத்தையும் அவர்களுக்குக் காட்டுகின்றோம்.
அந்தத் தாய்மை இவ்வுலகில் வாழுகின்ற மனிதர்களில் சிறந்திட அன்னையின் வழியைப் பின்பற்ற வேண்டும். அன்னை மரியா தனது கீழ்ப்படிதலினால் இறைவனுக்குத் தாயாக அதன்வழி அவரின் மீட்புத் திட்டத்தில் இணைந்து திருச்சபையில் வாழும் மக்களுக்கும், கிறிஸ்துவை விசுவசிக்கும் ஒவ்வொருவருக்கும் எப்படித் தாயாக இருக்கின்றாரோ அதைப் போன்று அந்த அன்னையின் வழிநடந்தால் நாம் அவரின் பிள்ளைகளாக இவ்வுலகில் வாழ்வோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
🕇 இந்த புதுவருட நாட்களில், எல்லா நாளும் அன்னை நம்மை புதுவழியில் வழிநடத்துவாள்.
🕇அன்னை மரியா இயேசுவால் நமக்கு கொடையாக கொடுக்கப்பட்டவள், "இதோ உன் தாய்". பரிசை பாதுகாப்பதில், நமது மதிப்பையும், மாண்பையும் பரிசளித்தவருக்கு தெரியப்படுத்து கிறோம்.
🕇இயேசுவுக்கு பிறப்பு கொடுத்ததன் மூலம் மனிதகுலத்திற்கு மரியாள் வரம் பெற்று தந்திருக்கின்றார்கள்.
🕇 மரியா இயேசுவின் தாய், இறைவனின் தாய், நமது தாய். நமது வாழ்வை வளப்படுத்தும் காரணி அவரே!
🕇 தாய்மையின் நிறைவில் மரியாள். நமது பெண்களும் நமது தாய்மையை தெய்வீகத்திற்கு இணையாகக் கருதி போற்றி வாழ வேண்டும். கருகலைப்பு, கருத்தடை சாதனங்கள் இத்தெய்வீகத் தாய்மைக்கு எதிரானவை. அவற்றிற்கு உடந்தையாகவோ, தூண்டுதலாகவோ, கருவியாகவோ ஒரு போதும் இருத்தலாகாது.
இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா
இன்று புதிய ஆண்டொன்றை துவங்குகின்றோம். இந்த நாளும், இந்த ஆண்டு முழுவதும் நமக்கு இனிதானதாக இருக்க வேண்டும் என்னும் நமது ஆசைக்கு ஏற்ப, இன்றைய இறைவார்த்தை முதல் வாசகத்தில் ஆசியின் வார்த்தைகள் கூறப்படுகின்றன. நாம் பொருள் செல்வம், உடல் நலச்செல்வம் மற்ற பிற உலகச் செல்வங்களை விரும்பலாம் ஆனால் இறைவன் அவற்றையும் தாண்டி. நம் வாழ்வுக்குத் தேவையான, உயர்வான மூன்றை நமக்குத் தர விரும்புசின்றார். அதாவது, ஆசி, அருள், அமைதி ஆகிய மூன்றையும் இறைவன் இன்றும், என்றும், என்றென்றும் வழங்க விரும்புகின்றார். அதையே நாம் ஒருவருக்கொருவர் வழங்கி புத்தாண்டு நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம்.
இன்றைய நற்செய்தி இயேசுவின் பிறப்புடன் தொடர்புடைய நிகழ்வுகளான இடையர் குழந்தை இயேசுவைச் சந்தித்ததையும், இயேசுவுக்குப் பெயரிடப்பட்ட நிகழ்வையும் விவரிக்கின்றது. இந்த நற்செய்திப் பகுதி அளிக்கும் முக்கியமான இறையியல் செய்திகளை மட்டும் இவண் காண்போம்.
1. முன்னறிவிப்பு - நிறைவேற்றம்
இயேசுவின் பிறப்பின்போது வானதூதர்கள் இடையர் களுக்குத் தோன்றி இயேசுவின் பிறப்பின் செய்தியை, “எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை” (வச. 10) அறிவித்தபோது குழந்தையை, இவனத் தொட்டியில் கடத்தி யிருப்பதை (வச. 12) அடையாளமாகத் தந்தனர். இடையர்கள் குழந்தையைக் காண வரும்போது இந்தத் தவனத் தொட்டி அடையாளத்தை லூக்கா மறக்காமல் குறிப்பிடுகின்றார் (வச. 16). இவ்வாறு “முன்னறிவிப்பு - நிறைவேற்றம்' எனும், அமைப்பு இங்கு எடுத்தாளப்படுகின்றது. மேலும் இயேசு எனும் பெயரும் ஏற்கெனவே வானதூதரால் முன்னறிவிக்கப்பட்டு இப்போது இயேசுவுக்கு கூட்டப்படுறெது (வச. 21).
2. சட்டத்திற்கு உட்பட்டவராய். . .
இன்றைய இரண்டாம் வாசகத்தில், “ காலம் நிறைவேறிய போது... கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்ட வராகவும்” அனுப்பியதாக பவுலடியார் குறிப்பிடுகின்றார். இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சிகளை விவரிக்கின்ற லூக்கா இயேசுவின் பெற்றோர் எவ்வாறு சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டனர் என்று விவரிக்கின்றார். முதலாவதாக, அகுஸ்து சர் தம்பேரரசு முழுவதும் மக்கள்தொகை கணக்கிட்டபோது பல வன்முறைகள் வெடித்தன (காண். திப 5:37). ஆனால் இயேசுவின் பெற்றோர் கிளர்ச்சியாளருடன் சேராமல், சட்டத்தை மதித்து தங்கள் பெயரை பதிவு செய்ய பெத்லகேமுக்குச் சென்றனர். இன்றைய நற்செய்தியில், எட்டாம் நாளில் செய்யவேண்டிய விருத்தசேதன நிகழ்வையும், இயேசுவுக்குப் பெயரிடும் நிகழ்வை யும் நிகழ்த்துகன்றனர் (வச. 21). இந்த நற்செய்திப் பகுதியைத் தொடர்ந்துவருகிறபகுதியில்மோசேயின் சட்டப்படி இயேசுவுக்கு 'தூய்மைச் சடங்கு நிறைவேற்றப்படுவதையும் (வச. 22), அத்திருச் சட்டத்தில் எழுதியுள்ளபடி தலைபேறு ஆண்டவருக்கு அர்ப் பணிக்கப்பட்டு அதற்கு ஈடாக பறவைகள் அளிக்கப்பட்டு இயேசு “மீட்கப் படுவதையும்” காண்கிறோம் (காண். வச 23-24). எனவே இயேசுவின் பெற்றோர் சட்டத்திற்கு உட்பட்ட குடிமக்களாகவும், சமயப் பற்றாளர்களாகவும் காட்டப்படுகின்றனர்.
3. ஏழையராம். . .
1 இயேசுவின் பிறப்பின் நிகழ்வு விவரிப்புகள் எல்லாம் ஒரு சாதாரண சாமான்ய குடும்ப நிகழ்வாக, இயேசுவின் பெற்றோரை ஏழையராகவே படம்பிடித்துக் காட்டுகின்றன. இயேசு பிறந்த போது, “பிள்ளையைத் துணிகளில் பொதிந்து, தவனத்தொட்டியில் கிடத்தினர்” (வச.7); இடையர்கள்தான் இயேசுவைமுதலில்பார்க்க வந்த முதல் பார்வையாளர்கள் (வச. 15-17); இயேசு ஆலயத்தில் அர்ப்பணித்து மீட்கப்படும்போது ஏழையர்களுக்கு என விதிக்கப் பட்டிருந்த இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை இயேசுவின் பெற்றோர் பலியாகத் தரூகின்றனர் (வச. 24). இவ்வாறு இயேசுவைச் சுற்றி நிகழ்பவை எல்லாம் ஒரு “புலம் பெயர்ந்த“ “அகதிக்கு“ இருக்கும் எளிமையான பின்னணியிலே விவரிக்கப்படுகின்றன.
4. மாண்பும் உயர்வும். . .
இயேகுவின் பெற்றோரும் சூழலும் சாதாரணமாகத் தோன்றி னாலும், இயேசுவின் பிறப்பிலே சில அசாதாரணமானவைகளும் நிகழ்கின்றன. வானதூதர் இடையர்களுக்குத் தோன்றுகின்றனர் (வச. 70-12), விண்ணகத் தூதர் பேரணி பாடல் இசைக்கின்றது (வச.13-14); சிமியோன் இக்குழந்தையைப் பற்றியும் அதன் தாயைப் பற்றியும் முன்னறிவிக்கின்றார் (வச. 25-35). இவ்வாறு இயேசுவின் பிறப்பிலே அவரது மாண்பும், உயர்வும் அசாதாரணமான நிகழ்வுகள் வழி. எண்பிக்கப்படுகன்றன.
5. உள்ளத்தில் கருத்தி சிந்தித்து. . .
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் பிறப்பைச் சுற்றிய நிகழ்வுகளைக் குறித்து மூன்று வகையான உணர்வுகள் வெளிப் படுத்தப்படுகின்றன; குறிப்பிடப்படுகின்றன; முதலாவது, இடையர் கள் குழந்தையைப் பற்றித்தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்” (வச.17),மேலும், “தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றி புகழ்ந்து பாடிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள்” (வச. 20). எனவே அவர்களது வெளிப்பாடு மகிழ்ச்சி, ஆனந்தம். இரண்டாவது, இடையர்கள் சொல்வதைக் கேட்டவர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்ட வற்றைக் குறித்து வியப்படைந்தனர் (வச. 18). இவர்களின் உணர்வு வியப்பாக இருந்தது. இறுதியாக தொடக்க முதல் இயேசுவின் பிறப்பு நிகழ்வுகள் அனைத்தோடும் தொடர்புடைய மரியாவின் உணர்வை நற்செய்தியாளர் “மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்” (வச. 19, மேலும் காண். வச. 51) என வெளிப்படுத்துகின்றார். ஆச அன்னை மரியாவின் உணர்வு ஆழ்நிலை தியானமாக, செபமாக இருந்தது. நமது உணர்வுகள் இக்காலங்களில் எப்படி உள்ளன?
இறைவனின் அன்னை புனித மரியா ஜனவரி 1
முதல் வாசகம் : எண் 6: 22-27
இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் அளித்த ஆசீர், புத்தாண்டு துவக்கத்தில் இவ்வாசகத்தின் மூலம் நம் எல்லோருக்கும் அளிக்கப்படுகிறது. ஆண்டவரின் பெயரைக் கூவி அழைத்தோமாயின் நமக்கு
ம் அவரது ஆசீர் (6:24), இரக்கம் (6:25), சமாதானம் (6:26) கிட்டும்.
இயேசுவின் பெயர் வாழ்வு தரும் பெயர்
பெயர், ஒருவருடைய ஆளுமையைக் குறிக்கும். பெயர் மாற்றம் அல்லது புதுப்பெயர் புது அழைப்பை, புதுப்பணியைச் சுட்டும். ஆபிராம் ஆபிரகாம் ஆகி “அநேக மக்களுக்குத் தந்தையாகிறார்" (தொநூ 17:5); யாக்கோபு இஸ்ரயேல் ஆகி “மனிதர்களை மேற்கொள்பவராகிறார்" (தொநூ 32:28). சவுல் பவுல் ஆகி நற்செய்தியின் போதகராகிறார் (திப 13 : 9). கடவுள் “ஆண்டவர்”("yahweh") ஆகி இஸ்ரயேலருக்கு விடுதலைஅளிக்கிறார் (விப 3:14-15). ஆண்டவர், இயேசுவாகப் பிறந்து, ("yah-ho shua") "மக்களை அவர்கள் பாவங்களிலிருந்து மீட்பவர் ஆகிறார்" (மத் 1: 21). இயேசு என்னும் புதுப் பெயர் நமக்கு வாழ்வளிக்கும் பெயர் (திப 4:12, 1 யோவா 2: 12; மாற் 16: 17- 18). இப்புத்தாண்டிலே அப்புதுப் பெயரைக் கூவியழைப்போம். பாவம் ஒழிய, புது வாழ்வு மலர இப்பெயர் நமக்குப் பலமும் சக்தியும் தரும். “இயேசு” என்று சொன்னாலே போதும்; நம் பாவங்கள் எல்லாமே தீரும்.
நமக்கு ஆசி வழங்கும் பெயர்
புத்தாண்டிலே ஆண்டவரின் ஆசீர் நமக்குத் தேவை. அவரது ஆசீர் ஒன்றே நம்மை அனைத்துத் தீமைகளிலிருந்தும் பாதுகாக்கும் சக்தி கொண்டது."உமது பெயரால் அவர்களைக் காத்தருளும். நான் அவர்களோடு இருந்தபோது அவர்களை உமது பெயரால் காத்துவந்தேன்” (யோவா 17: 11-12) என்று இயேசு கூறுவது நமக்கு நம்பிக்கையளிக்க வேண்டும். ஆண்டவரின் ஆசீரும் அவரது பாதுகாப்பும் நமக்கு என்றும் இருக்கிறது. "ஆண்டவர் நீ போகும் போதும் காப்பார்; வரும்போதும் காப்பார்; இப்போதும் எப்போதும் உன்னைக் காப்பார்" (திபா 121:8).
கனிவு காட்டும் பெயர்
புத்தாண்டிலே ஆண்டவரின் இரக்கம் நம்மோடு தொடர்ந்து இருக்க வேண்டும். "ஆண்டவரே, உமது முகத்தைத் திருப்பும்; ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும்" (திபா 4: 6), எங்களைத் தயவுடன் கண்ணோக்கியருளும் என்று வேண்டுவோம். கனிந்த உம் திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்; உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்" (திபா 31;16) என்று இறைஞ்சுவோம்.
புத்தாண்டிலே ஆண்டவரின் சமாதானம் நமக்குக் கிட்ட வேண்டும். அவர் ஒருவரே உண்மைச் சமாதானத்தை நமக்கு அருள முடியும். பிறப்பிலே அவர் சமாதானம் கொண்டு வந்தார். "உலகிலே அவர் தயவு பெற்றவருக்கு அமைதி ஆகுக" (லூக் 2: 14); இறப்பிலே அவர் சமாதானம் அளித்தார். "சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் சமாதானத் தையே உங்களுக்கு அளிக்கிறேன்" (யோவா 14:27). உயிர்த்த பின்னும் அவர் சமாதானத்தை விட்டுச் சென்றார். "உங்களுக்குச் சமாதானம்" (யோவா 20:20-21). எனவே புத்தாண்டிலே குடும்பத்திலும், உலகிலும் சமாதானம் நிலவ வேண்டுவோம். “உன் மதில்களுக்குள் அமைதி இருப்பதாக; உன் மாளிகைகள் பாதுகாப்புடன் விளங்குவனவாக. அமைதி உன்னகத்து விளங்குவதாக” (திபா 122:7-8) என்று இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
ஆண்டவர் உனக்கு ஆசீர் அளித்துக் காப்பாற்றுவாராக.
இரண்டாம் வாசகம் : கலா 4:4-7
ஆண்டின் முதல் நாள். நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஊட்டும் நாள். மரியா கடவுளின் தாயானதினாலே நம்முடைய தாயாகவும் மாறுகிறார். இன்று அவருடைய தாய்மையின் திருநாள்; நம் அனைவரின் மகப்பேற்றின் திருநாள். எனவே மகிழ்ச்சிமிக்க நன்றிப் பாடலோடு புத்தாண்டில் கால்வைப்போம்.
கிறிஸ்து பெண்ணிடமிருந்து பிறந்தார் (4:5)
பெண் வழியாக எவ்வாறு மனித குலத்துக்கு அழிவு வந்ததோ (தொநூ 3:1) அதே போன்று, பெண் வழியாகவே மனித குலத்திற்கு மீட்பும் கிடைத்தது. "அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் இவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களில் இருந்து மீட்பார்" (மத் 1: 21, லூக் 1: 31-33). மரியாவின் வழி பெண்மையை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பெண்மை தாய்மையோடு தொடர்புடையது. பெண்மையை வெறும் போகப் பொருளாகக் கருதுவது மிருகத்தனமானது. இன்று, ஆண்டின் முதல் நாளில், மரியாவின் தாய்மையை வணங்கும் நாளில் நமது தாய்மார்களுக்காக, நமது சகோதரிகளுக்காக, இளம் பெண்கள் மற்றும் விதவைகளுக்காக இறை அன்னையிடம் வேண்டுவோம். பெண் குலத்தின் பெருமையாகிய மரியா பெண்ணினம்பால் நமது மதிப்பையும் மரியாதையையும் வளரச் செய்வாராக!
எந்த ஒரு சமுதாயம் பெண்ணினத்தை மதிக்கக் கற்றுக்கொள்கிறதோ, "ஆண் என்றும் பெண் என்றும் வேற்றுமை இல்லை” (கலா 3: 28) என உணர்ந்து, பெண்ணுக்கு வாழ்வும் வழியும் காட்ட முன் வருகிறதோ அதுதான் பண்பாடுள்ள சமுதாயம் என்பதை உணர்ந்து நடப்போம். மரியாவை வாழ்த்துவோம்; அவள்வழி பெண்குலத்திற்குப் பெருமை தருவோம்.
பெண்டிரும் தங்களுடைய தாழ்வு மனப்பான்மையை அகற்ற வேண்டும். மரியா ஒரு பெண். பு.ஏ.-இல் நம் ஆண்டவர் அருகில் இருந்தோரில் பலர் பெண்கள். எனவே துணிவுடன் முன்வந்து, திருச்சபைக்கும் உலகுக்கும் பணி செய்தல் பெண்களின் கடன். பெண்டிர் முன்வருவார்களா? திருச்சபை பெண்களுக்குத் தன் பணித் தளத்தில் முக்கியத்துவம் தருமா
?
நாம் அனைவரும் இறைமக்கள் (4:6)
இறைவன் நமது தந்தை. நாம் இறைவனின் பிள்ளைகள் என்பது ஏதோ ஒரு கட்டுக்கதையன்று; வெறும் நம்பிக்கையன்று. முழுக்க முழுக்க உண்மை இது. ஏனெனில் நம்மை இறைவனின் "பிள்ளைகளாக்கும் தேவ ஆவியை" (உரோ 8; 15) இறைவன் நமக்கு அளித்துள்ளார். இத்தேவ ஆவியாரின் உதவியாலே தான், "அப்பா, தந்தாய்” என நாம் இறைவனை அழைக்க முடிகிறது (உரோ 8:15; கலா 4:6). "இத்தேவ ஆவியாரே நாம் கடவுளின் பிள்ளைகளெனச் சான்று பகர்கிறார்" (உரோ 8:16). என்னே நாம் பெற்ற பேறு!
பாவத்திற்கும் சாவுக்கும் சட்டத்துக்கும் அடிமைகளாய் இருந்த நாம் இறைவனின் உரிமை மக்களாக மாறுகிறோம். "கிறிஸ்துவோடு கடவுளின் செல்வம் அனைத்திற்கும் உரிமையாளர்களாக" (உரோ 8:17) மாறுகிறோம். கிறிஸ்துவோடு உடன்பிறவாத சகோதரர்களாகிறோம். இவ்வளவு உயர்ந்த ஒரு நிலையை இறைவனே நமக்களித்துள்ளார் (கலா 4:7). எங்கே உரிமைகள் உண்டோ, அங்கே கடமைகளும் உண்டு. இறைவனின் மக்களுக்குரிய கடமைகளில் கண்ணும் கருத்துமாயிருக்கிறோமா? இறைவனின் கட்டளைகள், சிறப்பாக அவரது அன்புக் கட்டளை நமது வாழ்வின் அடிப்படையாக அமைந்திருக்கிறதா?
ஆண்டின் முதல் நாள் இன்று. நமது மகப்பேற்றுக்கும் அதைச்சார்ந்த உரிமைகளுக்கும் நன்றி செலுத்தும்போது இறைமக்களுக்கு ஏற்றப் புனித வாழ்வை, அன்பு வாழ்வை வாழ்வதற்கு அன்னை மரியாவிடமும், அவர் மகன் நம் சகோதரர் இயேசுவிடமும் வேண்டுவோம்.
கடவுள் தம் மகனின் ஆவியை நம் உள்ளங்களுக்குள் அனுப்பினார்.
நற்செய்தி: லூக் 2: 16-21 ஆண்டின் தொடக்கத்தில் கன்னி மரியா கடவுளின் தாயான விழாவைக் கொண்டாடுகிறோம். கபிரியேல் தூதனின் மங்களச் செய்தி முதல் (லூக் 1:26), மனுமகனின் மரணம்வரை, இயேசுவும் மரியாவும் ஒன்றாகவே நற்செய்தியில் இடம் பெறுகின்றனர். வீட்டிற்குள் போய்ப் பிள்ளையை அதன் தாய் மரியாவுடன் கண்டு தெண்டனிட்டு வணங்கினர் (மத் 2: 11). ஆண்டவரின் தூதர் யோசேபுக்குக் கனவில் தோன்றி எழுந்து பிள்ளை யையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம் என்றார் (மத் 211-14). இடையர்சென்று மரியாவையும் குழந்தையையும் கண்டனர் (2:16). மரியாவின்றி மைந்தன் இயேசு இல்லை. மரியா வழியே இயேசுவிடம் செல்கிறோம். எனவே நம் ஒவ்வொருவர் வாழ்விலும், திருச்சபையின் வாழ்விலும் மரியா சிறப்பிடம் பெறுகின்றார். குழந்தை இயேசுவைப் பெற்று வளர்த்து ஆளாக்கிவிட்ட அன்னை நம்மையும் தம் குழந்தைகளாகப் பாவித்துப் பாதுகாக்க வேண்டும் என்பதால்தான் ஆண்டின் தொடக்கத் திலேயே மரியாவை நினைவுகூர்கின்றோம்.
மரியா கடவுளின் தாய்
கபிரியேல் தூதர் கன்னி மரியாவை நோக்கி “மரியே அஞ்சாதீர். கடவுளின் அருளை அடைந்துள்ளீர். இதோ உமது வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" (லூக் 1:31) என்று கூற, இதோ, ஆண்டவரின் அடிமை; உமது வார்த்தையின்படியே ஆகட்டும் என்றார் (1: 38). அதே வேளையில் உருவிலானைக் கருவிலே தாங்கிக் கன்னித் தாயானார். கடவுளையே தாங்கிய கற்புக்கரசி தன் வீடு தேடி வந்ததைக் கண்ட எலிசபெத்தம்மாள் "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" என்று வியப்படைந்தார்.
இயேசு தெய்வத் திருமகன் என்றால், அவரைப் பெற்றவரைத் தேவதாய் என்றழைப்பதில் என்ன தயக்கம்? எனினும் ஒருசிலர் கன்னி மரியாவைக் கடவுளின் தாயென அழைக்கலாகாது என்றனர். இறை இயேசுவில் உள்ள மனித ஆளுக்குத் தான் அவர் தாயே தவிர, தெய்வ ஆளுக்கு அன்று என்று தெய்வத் திருமகனைக் கூறு போட்டனர். இவ்வேளையில் தான் எபேசு நகரில் 4-ம் நூற்றாண்டில் கூடிய திருச்சங்கம் கன்னி மரியா கடவுளின் தாய் என்ற உண்மையை வேதசத்தியமாக வரையறை செய்தது. அன்று முதல் இன்று வரை எல்லாத் தலைமுறைகளும் அவளைப் பேறு பெற்றவர் எனப் போற்றுகின்றன.
மரியா என்னுடைய தாய்
கடவுளின் தாயாகச் சம்மதித்தபொழுதே அவர் நமக்கும் தாயாகிவிட்டார். ஏனெனில் மக்களை மீட்டு அருள் வாழ்வு வழங்கும் அற்புதக் கனியைத் தந்த கற்பகத்தரு மரியா; இயேசுவாகிய திராட்சைக் கொடி பயிரான நிலம் அவர். வாழ்வு அளிப்பவர் தாய்; அருள் வாழ்வு அவள் வழியாகவே நமக்கு வருகிறது. எனவே அவர் நமது தாய். இந்த உறவு கல்வாரியில் இரத்தத்தால் முத்திரையிடப்படுகிறது. "இவரே உன் தாய்" என்று கூறப்பட்ட சொற்கள் யோவானுக்கு மட்டுமல்ல; நமக்கும் பொருந்தும். எனவே “கடவுளின் தாய், என் தாய்!” என்று புனித தனிஸ்லாசுடன் நாம் பெருமையுடனும், உரிமையுடனும் கூற முடியும். அன்னையின் அடிச்சுவட்டில் நடக்கிறேனா? அவரிடம் என்னை முழுதும் அர்ப்பணிக்கின்றேனா?
இயேசு எனது மீட்பர்
யூத முறைப்படி பாலன் பிறந்த எட்டாம் நாள் பெயர் சூட்டுவிழா நடந்தது. இயேசு என்று பெயரிட்டனர். "கடவுள் மீட்பர்” என்பது அதன் பொருள். வல்லமையுள்ள பெயர்; மண்ணும் விண்ணும் மண்டியிடும் இப்பெயருக்கு! “நசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்" (திய 3:6). "ஏனெனில், நாம் மீட்படைவதற்கு அவர் பெயரைத் தவிர இவ்வுலகில் மனிதருக்கு வேறு பெயர் அருளப்படவில்லை” (திப 4 : 12). "நீங்கள் தந்தையிடம் எதைக் கேட்டாலும் அதை என் பெயரால் உங்களுக்குத் தருவார்" (யோவா 16: 23). ஆதலால்தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர் மண்ணவர் கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் (பிலிப் 2:9). வல்லமையுள்ள இப்பெயரை வாயுள்ள வரை சொல்வோம்.
மரியாவோ இந்நிகழ்ச்சிகளை உள்ளத்தில் இருத்தி சிந்தித்து வந்தார்.
பயணமும் நோக்கமும்
இன்று புதிய ஆண்டுக்குள் நுழைகிறோம். மனிதர்களாகிய நமக்கு இடம் சொந்தம். கடவுளுக்கு காலம் சொந்தம். 2026 என்னும் புதிய காலத்தை தம் கரத்தில் ஏந்தி அந்தக் காலத்திற்குள் நம்மை நகர்த்துகிற கடவுளுக்கு நன்றி கூறுவோம். ‘காலங்கள் அவருடையன, யுகங்கள் அவருடையன. ஆட்சியும் மாட்சியும் என்றென்றும் அவருக்கே!’
அன்னை கன்னி மரியாவை இறைவனின் தாய் (‘தெயோடோகோஸ்’) என்று எபேசு திருச்சங்கம் அறிவித்ததை நினைவுகூர்ந்து சிறப்பிக்கிறோம். கிறிஸ்து பிறப்பின் எட்டாவது நாளாகிய இன்று குழந்தைக்கு அவருடைய பெற்றோர், ‘இயேசு’ என்று பெயரிடுகிறார்கள்.
முத்து ஒன்றைத் தேடிய இளவரசன் பற்றிய கதையோடு (தழுவல்: புனித தோமாவின் பணிகள், ‘ஓர் ஆன்மாவின் பாடல்’) சிந்தனையைத் தொடங்குவோம்.
அவன் ஓர் அன்பார்ந்த இளவரசன். கீழைநாட்டின் அரசனாக அவனை முடிசூட்ட விரும்புகிற அவனுடைய பெற்றோர் அவனுடைய ஆற்றலைச் சோதிப்பதற்காக எகிப்து நாட்டில் உள்ள முத்து ஒன்றை எடுத்துவர அவனை அனுப்புகிறார்கள். விலைமதிப்பில்லாத அந்த ஒற்றை முத்தை ஒரு பெரிய பாம்பு பாதுகாத்து வந்தது. எந்நேரமும் சீறிக்கொண்டே இருக்கும் அந்த பாம்பின் பாதுகாப்பில் உள்ள முத்தை எடுத்து வருவதற்காக எகிப்து செல்கிறான் இளவரசன். மாறுவேடத்தில் இருக்கிற இளவரசன் தான் எகிப்துக்கு வந்த நோக்கத்தை யாரிடமும் சொல்லாமல் முத்தைத் தேடுவதில் கருத்தாயிருக்கிறான். ஒருநாள் தனக்கு அருகில் வசித்த ஒருவனிடம் தான் வந்த நோக்கத்தைச் சொல்லிவிடுகிறான். அடுத்த சில நாள்களில் அவனுடைய உணவில் ஏதோ ஒரு மருந்து கலக்கப்பட அவன் தான் வந்த நோக்கத்தை மறந்துவிட்டு, எகிப்திய அரசனுடைய அடிமையாக வேலை செய்யத் தொடங்குகிறான்.
இளவரசனைப் பற்றிய எத்தகவலும் இல்லையே என்று நினைத்துக்கொண்டிருந்த அவனுடைய பெற்றோர் தன் மகனுக்கு நேர்ந்ததைப் பற்றி வருந்தி கடிதம் ஒன்றை எழுதி கழுகின் வழியாகக் கொடுத்து அனுப்புகிறார்கள்: ‘தூக்கத்திலிருந்து நீ விழித்தெழு! நீ ஓர் இளவரசன். உன் அடிமைத்தனத்தை நினைத்துப் பார்! நீ தேடிச் சென்ற விலைமதிப்பில்லாத முத்தைப் பற்றி கருத்தாயிரு! நீ அதற்காகவே அங்கு அனுப்பப்பட்டாய்! விரைந்து வா! மாட்சியின் ஆடை உனக்காகக் காத்திருக்கிறது!’
கழுகின் வழியே வந்த செய்தி கேட்டு விழித்தெழுகிற இளவரசன் தன் வருகையின் நோக்கம் மறந்தது கண்டு வருந்தி முத்தை தேடிச் செல்கிறான். பாம்பைக் கொன்றழித்து முத்தைக் கைப்பற்றி நாடு திரும்புகிறான்.
புத்தாண்டின் முதல் நாள் அன்று நாம் அனைவருமே முத்தெடுக்கச் சென்ற இளவரசன் போல இளமையுடன் எதிர்நோக்குடனும் ஆவலுடனும் இருக்கிறோம். நாள்கள் நகர நகர நம் பயணத்தின் இலக்கை மறந்துவிட்டு அடிமையாக வாழ்கிறோம். விழித்தெழும்நாளில் முத்தைக் கண்டுகொள்கிறோம். நம் வாழ்க்கையே நாம் தேடிச் செல்லும் முத்து.
நம் தேடலை என்றும் நினைவுகூர்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் தம் அன்பார்ந்த இஸ்ரயேல் மக்களை ஆரோன் வழியாகத் தேடி வருகிறார். தலைமைக்குருவாகிய ஆரோன் ஆண்டவராகிய கடவுள் சார்பாக இஸ்ரயேல் மக்களுக்கு வழங்க வேண்டிய ஆசியை மோசே வழியாகக் கற்பிக்கிறார்:
‘ஆசி வழங்குவாராக! அருள் பொழிவாராக! அமைதியை அருள்வாராக!’ என்று உடலுக்கும், ஆன்மாவுக்கும், உள்ளத்துக்கும் நலம் தருகிறார் ஆண்டவராகிய கடவுள்.
இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு பொழுதும் தங்கள் ஆற்றலால் அல்ல, மாறாக, இறைவனின் ஆற்றலால் தாங்கள் இயங்குவதை நினைவில்கொள்ள வேண்டும்.
நம் வாழ்க்கைப் படகின் துடுப்பை இறைவனின் கரத்தில் ஒப்படைத்துவிட்டு நாம் கொஞ்சம் சற்றே படகில் இளைப்பாறுவோம்.
நற்செய்தி வாசகத்தில், மூன்று நபர்களின் மூன்று செயல்களை நாம் வாசிக்கிறோம்.
(அ) இடையர்கள் குழந்தையைக் காண்கிறார்கள்.
இடையர்கள் வானதூதர்களின் செய்தியைக் கேட்டவுடன் புறப்பட்டு வருகிறார்கள். மெசியாவைக் காண வேண்டுமெனில், ஆட்டு மந்தையை விட்டுவிட்டு நகர வேண்டும். மேலானதைப் பெற வேண்டுமெனில் கீழானதை விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும்.
(ஆ) இடையர்கள் அறிவித்த செய்தியைக் கேட்ட ஊரார் வியப்படைகிறார்கள்.
இயேசுவின் சமகாலத்தில் இடையர்கள் தாழ்வானவர்களாகக் கருதப்பட்டார்கள். பொய்யர்கள், திருடர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்கள் வழியாகவே ஆண்டவராகிய கடவுள் தம் மகனின் பிறப்புச் செய்தியை ஊராருக்கு அறிவிக்கிறார். ‘ஊருக்கும் உலகுக்கும்’ அவர்கள் அறிவித்த செய்த வியப்பை ஏற்படுத்துகிறது.
(இ) நிகழ்வை உள்ளத்தில் இருத்திச் சிந்திக்கிறார் மரியா.
வானதூதர் மங்கள வார்த்தை சொன்னபோது அவருடைய வாழ்த்தை உள்ளத்தில் இருத்துகிறார் மரியா. பின்னர் கடவுளுடைய வார்த்தையை தம் வயிற்றில் இருத்துகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் வாழ்க்கை நிகழ்வுகளை மனத்தில் இருத்துகிறார். ‘சும்பல்லோ’ என்னும் கிரேக்கச் சொல்லுக்கு ‘அனைத்தையும் கூட்டிச் சேர்த்தல்’ என்பது பொருள். வாழ்வின் புள்ளிகளை இணைத்துப் பார்க்கிறார் மரியா.
புதிய ஆண்டில் நாம் அடையும் வெற்றிக்கு மேற்காணும் மூன்று செயல்களும் அவசியம்: (அ) மேன்மையானதை அடைய தாழ்வானதை விட்டுவிட வேண்டும். (ஆ) மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு அச்சமும் இன்றி வாழ வேண்டும். (இ) வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தும் – நம் கட்டுக்குள் இருந்தாலும் இல்லை என்றாலும் – இணைத்துப் பார்க்க வேண்டும். அப்படி இணைத்துப் பார்ப்பதற்கான ஆழ்ந்த அமைதி வேண்டும். அவசரமும் பரபரப்பும் குறைக்க வேண்டும்.
இரண்டாம் வாசகத்தில், ‘காலம் நிறைவேறியபோது’ கடவுள் தம் மகனை அனுப்பினார் என்கிறார் பவுல். காலத்தைக் கழித்தல் வேறு, நிறைவேற்றுதல் வேறு. புத்தாண்டின் முதல் நாளில் நாம் காலத்தின் புனிதத்தை மேன்மையை உணர்ந்துகொள்வோம். நாம் செய்கிற செயல்கள், ஓடுகிற ஓட்டங்கள் அனைத்தும் காலத்தை நிறைவேற்றுவதற்காக இருக்க வேண்டுமே அன்றி, காலத்தைக் கழிப்பதற்காக அல்ல.
காலத்தின் ஓட்டத்தில் இருக்கும் நாம், காலத்தைக் கடந்த நிலையை அடைவதையே இலக்காகக் கொள்வோம்.
நாம் தேடி வந்த முத்தை எடுத்தவுடன், நமக்காகக் காத்திருக்கும் மாட்சி என்னும் ஆடை நோக்கி ஓடுவோம். நம் வாழ்வின் நோக்கத்தை யாரிடமும் சொல்லிவிட வேண்டாம். நம் எண்ணம் எல்லாம் விலையுயர்ந்த முத்தைக் குறித்ததாகவே இருக்கட்டும். சீறும் எந்தப் பாம்பையும் நாம் வென்றுவிடலாம். ஏனெனில், நாம் இளவரசர்கள், இளவரசிகள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!