மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

மரித்த அனைவரின் நினைவு நாள்
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-மக்க. 2:43-45 1 கொ. 15:20-22 மத்‌. 25:31-46

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



நீத்தார்‌ நினைவு நாள்‌

நேற்று நாம்‌ அனைத்துப்‌ புனிதர்களின்‌ பெருவிழாவைக்‌ கொண்டாடினோம்‌. இறந்து, நம்மை விட்டுப்‌ பிரிந்து சென்ற சகல ஆன்மாக்களை நினைவுகூற இன்று அழைக்கப்படுகிறோம்‌. கல்லறைகளை அலங்கரித்து, பூக்கள்‌ தூவி விட்டு வரும்‌ சடங்குகளால்‌ மட்டுமல்ல. அவர்களின்‌ ஆன்மாக்களின்‌ சாந்தியடைய செபிக்க, நல்ல செயல்கள்‌ செய்ய அழைக்கப்‌ படுகிறோம்‌.

கத்தோலிக்கத்‌ திருச்சபையானது மூன்று நிலைகளை உள்ளடக்கியது. முதலாவது, உலக வாழ்வில்‌ அர்ப்பணத்தோடு வாழ்ந்து விண்ணகப்‌ பரிசைப்‌ பெற்றுள்ள புனிதர்கள்‌ ஒரு பகுதியினர்‌. இவர்கள்‌ நிறை அமைதியும்‌, நிறை வாழ்வும்‌. பெற்றவர்கள்‌. இவர்களை வெற்றித்‌ திருச்சபை (Triumphant Church) என்று அழைக்கிறோம்‌. இரண்டாவது, இறந்தவர்கள்‌ தங்கள்‌ பாவங்களுக்காக மன்னிப்புப்‌ பெற முடியாமலும்‌, முழுப்‌ பரிகாரம்‌ செய்ய முடியாத நிலையிலும்‌ இறந்தவர்கள்‌. இவர்கள்‌ வேதனையில்‌ உழல்பவர்கள்‌. இவர்களும்‌ திருச்சபையில்‌ அங்கம்‌ வகிக்கும்‌ குழுவினர்‌ (பிலி. 2:10). இவர்களை துன்புறும்‌ திருச்சபை (Suffering Church) என்று அழைக்கிறோம்‌.

மூன்றாவதாக இந்த உலகில்‌ நன்மைக்கும்‌, தீமைக்குமிடையே போராட்டத்தில்‌ ஈடுபட்டு, தீமையை அகற்றி, நன்மை செய்ய ஆன்மீகப்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டு வாழும்‌ நம்மைக்‌ குறிக்கிறது. இதனால்‌ நாம்‌ பயணம்‌ போகும்‌ திருச்சபை, அல்லது போராடும்‌ சபையினர்‌ (Militant Chயாch) என்றும்‌ அழைக்கப்படுகிறோம்‌. இந்த மூன்றையும்‌ உள்ளடக்கியதுதான்‌ நிறைவான கத்தோலிக்கத்‌ திருச்சபை. இதற்கிடையே பரஸ்பர உறவு உண்டு.

நவம்பர்‌ மாதம்‌ இரண்டாம்‌ தேதி திருச்சபையானது இப்படி இறந்தும்‌ விண்ணகம்‌ செல்ல முடியாத நிலையில்‌ இருக்கும்‌ உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகச்‌ செபிக்க, பரிகாரம்‌ செய்ய அழைப்பு விடுக்கிறது. ஏனெனில்‌ திருச்சபையானது இயேசுவின்‌ மறைஉடல்‌. இதில்‌. ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டால்‌, உடல்‌ முழுவதும்‌ பாதிக்கப்படும்‌ அன்றோ! இந்த பேருண்மையைத்தான்‌ திருத்தூதர்‌ பவுல்‌ கொந்தியருக்கு எழுதும்‌ திருமடலில்‌ (1 கொ. 12:12-27) தெளிவாக்குகிறார்‌. பிறந்த மனிதன்‌ இறக்க வேண்டும்‌. இது நியதி. ஏனெனில்‌ பாவத்திற்குக்‌ கிடைத்த கூலி (உரோ. 6:23) சாவு அல்லவா? ஆனால்‌ கடவுள்‌ கொடுக்கும்‌ அருள்கொடை. நம்‌ ஆண்டவர்‌ இயேசுவோடு இணைந்து வாழும்‌ நிலைவாழ்வு. இந்த நிலைவாழ்வு பெறாத நிலையில்‌ ஆன்மாக்கள்‌ தவித்துக்‌ கொண்டிருப்பார்கள்‌ என்றால்‌, அவர்களின்‌ வேதனையை நீக்க, இறைவனிடம்‌ சேர்க்க, நாம்‌ நம்‌ செபத்தாலும்‌, நற்செயல்களாலும்‌ தாங்க அழைக்கப்படுகிறோம்‌. இதைத்‌ தெளிவாக்க வீழ்ந்தோர்‌ மீண்டும்‌ எழுவர்‌ என்பதை எதிர்பார்த்திருக்கவில்லையென்றால்‌ அவர்‌ இறந்தோருக்காக மன்றாடியது தேவையற்றதும்‌, மடமையும்‌ ஆகும்‌. ஆகவே இறந்தவர்கள்‌ தங்கள்‌ பாவங்களினின்று விடுதலை பெறும்படி அவர்களுக்காக பாவம்‌ போக்கும்‌ பலி ஒப்புக்‌ கொடுத்தார்‌ (1மக்க.12:44-45)என விவிலியம்‌ பறை சாற்றுகிறது. எனவே நமது. செபத்தால்‌, நமது நற்செயல்களால்‌ இறந்த ஆன்மாக்கள்‌ நித்திய சாந்தி அடையட்டும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறந்தோர்‌ அனைவரின்‌ நினைவு

ஒரு பெண்கள்‌ விடுதியில்‌ படித்துக்கொண்டிருந்த மாணவிகளிடம்‌ ஒரு திருக்குறள்‌ கூறும்படி நான்‌ கேட்டதற்கு, ஒரு மாணவி கூறிய குறள்:

“பிட்‌” அடித்து வாழ்வரே வாழ்வார்‌ மற்றெல்லாரும்‌
அக்டோபரில் ஆஜர் ஆவர்”

இந்த நவீன திருக்குறள்‌ என்னிடத்தில்‌ ஓர்‌ இறையியல்‌ சிந்தனையைத்‌ தோற்றுவித்தது. விண்ணகம்‌ செல்ல நாம்‌ புனிதர்களைப்‌ பார்த்து 'காப்பி்‌ அடிக்க வேண்டும்‌, அதாவது, அவர்களை நாம்‌ பின்பற்ற வேண்டும்‌, புனித பவுல்‌ கூறுகிறார்‌; “நான்‌ கிறிஸ்துவைப்‌ போல்‌ நடப்பது போன்று நீங்களும்‌ என்னைப்போல்‌ நடங்கள்‌” (1 கொரி 11:1). இம்மையில்‌ கிறிஸ்துவையும்‌ புனிதர்களையும்‌ பார்த்துக்‌ “காப்பி” அடிக்காதவர்களுக்கு கடவுள்‌ மறுதேர்வு எழுத வாய்ப்புக்‌ கொடுக்கிறார்‌. இவ்வுலகில்‌ புனித நிலையை, அதாவது, அன்பின்‌ நிறைவை அடையாதவர்கள்‌ த “உத்தரிக்கும்‌ இடத்தில்‌” தூய்மைப்படுத்தப்படுகின்றனர்‌. விண்ணகத்திற்கும்‌ நரகத்திற்கும்‌ இடைப்பட்ட நிலை உண்டா? கிறிஸ்து கூறுகிறார்‌ : “தூய ஆவிக்கு எதிராய்‌ பேசுவோர்‌ இம்மையிலும்‌ மறுமையிலும்‌ மன்னிப்பு பெறமாட்டார்‌” (மத்‌ 12:32). மறுமையில்‌ மன்னிப்புப்‌ பெற வாய்ப்பு உண்டா? விண்ணகத்தில்‌ மன்னிப்புத்‌ தேவையில்லை. நரகத்தில்‌ மன்னிப்புப்‌ பெறமுடியாது. அப்படியானால்‌ விண்ணகத்திற்கும்‌ நரகத்திற்கும்‌ இடைப்பட்ட ஒரு நிலை இருந்தாக வேண்டும்‌. அந்நிலைதான்‌ “உத்தரிக்கும்‌ இடம்‌” என்று அழைக்கப்படுகிறது.

புனித பவுல்‌ கூறுகிறார்‌ : ஒருவருடைய வேலை எத்தகையது என்பது இறுதி நாளில்‌ வெளிப்படும்‌. அவர்‌ இம்மையில்‌ கட்டி எழுப்பியது எரிந்துபோகலாம்‌. இருப்பினும்‌. “நெருப்பில்‌ அகப்பட்டுத்‌ தப்பியவர்போல்‌ அவர்‌ மீட்கப்படுவார்‌” (1 கொரி 3:13-15). “நெருப்பில்‌ அகப்பட்டுத்‌ தப்பியவர்போல்‌ அவர்‌ மீட்கப்படுவார்‌” என்பதன்‌ பொருள்‌ .. என்ன? நாம்‌ இம்மையில்‌ செய்த வேலைகளைக்‌ கடவுள்‌ நிராகரித்து விட்டாலும்‌, நாம்‌ “நெருப்பின்‌ வழியாக” நுழைந்து மீட்கப்பட முடியும்‌. இந்த நெருப்பு கிறிஸ்துவே. அவர்‌ நம்மைச்‌ சுட்டெரிக்கவும்‌ செய்கிறார்‌; மீட்கவும்‌ செய்கிறார்‌. நாம்‌ செய்த வேலைகளுக்காக நமக்கு விண்ணக கைமாறு கிடைக்கவில்லை என்றாலும்‌, நாம்‌ இறந்து கிறிஸ்துவைச்‌ சந்தித்தபோது அவரது பார்வை நம்‌ பாவங்களைச்‌ சுட்டெரித்து, நம்மை விடுவித்து, உருமாற்றும்‌. திருத்தந்தை 16-ஆம்‌ பெனடிக்ட்‌ “நம்பிக்கை” பற்றி எழுதியுள்ள மறைத்தூது மடலில்‌ இவ்விளக்கத்தைக்‌ கொடுத்துள்ளார்‌ என்பது குறிப்பிடத்தக்கது ( Spe Salvi, எண்‌ 46, 47).

எனவே இறந்தபின்‌ நாம்‌ நெருப்பு வழியாக நுழைவதுபோல்‌ நுழைந்து மீட்கப்படக்‌ கடவுள்‌ மீண்டும்‌ ஒரு வாய்ப்பைக்‌ கொடுக்கிறார்‌. அந்த வாய்ப்புதான்‌ “உத்தரிக்கும்‌ இடம்‌” அல்லது “தூய்மைப்படுத்தப்படும்‌ நிலை.”

இரண்டாம்‌ வத்திக்கான்‌ சங்கம்‌, “இவ்வுலக வாழ்வை முடித்த சிலர்‌ தூய்மைப்படுத்தப்படுகின்றனர்‌” (திருச்சபை, எண்‌ 49) என்றும்‌, “விண்ணகத்திலுள்ள புனிதர்களுக்கும்‌, சாவுக்குப்பின்‌ இன்னும்‌ தூய்மைப்‌ படுத்தப்பெறுகின்ற நம்‌ சகோதரர்களுக்கும்‌ நமக்குமுள்ள நெருங்கிய உறவை (புனிதர்களின்‌ தோழமையை) திருச்சபை ஏற்றுக்கொள்கிறது” (திருச்சபை, எண்‌ 5 1) என்றும்‌ கூறியுள்ளது. இதன்‌ மூலம்‌ சாவுக்குப்பின்‌ “தூய்மைப்படுத்தப்படும்‌ நிலையைச்‌” சங்கம்‌ ஏற்றுக்கொள்கிறது.

பொம்மைகளுடன்‌ விளையாடிக்‌ கொண்டிருக்கும்‌ ஒரு குழந்தை அம்மாவைக்‌ கண்டவுடன்‌, பொம்மைகளைத்‌ தூக்கி எறிந்துவிட்டு அம்மாவைக்‌ கட்டித்‌ தழுவுகிறது. இவ்வுலகில்‌ நாமும்‌ அக்குழந்தைபோல்‌ பல்வேறு காரியங்களில்‌ ஈடுபடுவதால்‌, கடவுளின்மேல்‌ நமக்கு அவ்வளவு ஈர்ப்பு இல்லை. கலைமான்‌ நீரோடைகளுக்காக ஏங்கித்‌ தவிப்பதுபோல்‌ நம்‌ நெஞ்சம்‌ கடவுளுக்காக ஏங்கித்‌ தவிப்பதில்லை (திபா 42:1). இம்மையில்‌ ஏற்படாத இத்தகைய வேட்கை மறுமையிலாவது நமக்கு ஏற்பட உதவுகிறது “தூய்மைப்படுத்தும்‌ நிலை” என்று கூறலாம்‌.

இன்றைய முதல்‌ வாசகம்‌ கூறுகிறது : “நீதிமான்களின்‌ ஆன்மாக்கள்‌ கடவுளின்‌ கையில்‌ உள்ளன, இறந்து போனவர்கள்‌ அமைதியாக இளைப்பாறுகிறார்கள்‌.” எனவே இறந்தவர்களின்‌ வாழ்வு அழிவதில்லை. அவர்கள்‌ கடவுள்‌ திருமுன்‌ என்றும்‌ வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்‌. கடவுள்‌ வாழ்வோரின்‌ கடவுள்‌, இறந்தவர்களின்‌ கடவுள்‌ அல்ல. இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ திருத்தூதர்‌ பவுல்‌ கூறும்‌ அறிவுரை: நாம்‌ திருமுழுக்கு வாயிலாகப்‌ பாவத்திற்கு இறந்து புதுவாழ்வுக்கு முழுக்குப்‌ போட்டுவிட்டு, புதுவாழ்வு. வாழ்வோம்‌ (உரோ 6:3-9). இன்றைய நற்செய்தி இறுதித்‌ தீர்ப்பை எடுத்துக்‌ கூறுகிறது (மத்‌ 25:31-46). நாம்‌ அன்பின்‌ அடிப்படையில்‌ தீர்ப்புப்‌ பெறுவோம்‌. அன்பு திரளான பாவங்களை மன்னிக்கிறது. ஏழை எளியவர்களுக்கு நாம்‌ காட்டும்‌ இரக்கமே நம்மை விண்ணகம்‌ கொண்டு சேர்க்கும்‌. இம்மையில்‌ நாம்‌ ஏழை எளியவர்களை வாழவைத்தால்‌, மறுமையில்‌ கடவுள்‌ நமக்கு நிலையான வாழ்வளிப்பார்‌.

மறுமை வாழ்வு பற்றிய நமது நம்பிக்கையைக்‌ கூர்மைப்படுத்துவோம்‌. ஐயம்‌ இல்லாதவர்களுக்கு இப்பொழுது இருக்கும்‌ மண்ணகத்தைவிட இனி வரவிருக்கும்‌ விண்ணகம்‌ அருகாமையில்‌ உள்ளது.

ஐயத்தின்‌ நீங்கித்தெளிந்தார்க்கு வையத்தின்‌
வானம்‌ நணியது உடைத்து (குறள்‌ 353)

இறந்துபோன நம்‌ உற்றார்‌ உறவினர்‌, நண்பர்‌, ஆதரவாளர்‌ மற்றும்‌ அனைத்து விசுவாசிகளின்‌ ஆன்ம இளைப்பாற்றிக்காகத்‌ திருப்பலி ஒப்புக்கொடுப்போம்‌; ஏழைகளுக்குத்‌ தானதர்மம்‌ செய்வோம்‌. நமக்கு அருகாமையில்‌ உள்ள கல்லறையைச்‌ சந்தித்து மன்றாடுவோம்‌. “பாவங்களினின்று மீட்கப்படும்படி இறந்தவர்களுக்காக வேண்டிக்கொள்வது புனிதமும்‌ பயனுமுள்ள எண்ணமாய்‌ இருக்கிறது” (2 மக்‌ 12:43).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பிறப்புக்குப்‌ பின்‌ வாழ்வு உண்டா?

ஒரு கல்லறைத்‌ தோட்டத்தின்‌ வாசல்‌ கதவில்‌ காணப்பட்ட வாசகம்‌: “கல்லறைகள்‌ வாழ்வின்‌ முடிவிடங்கள்‌ அல்ல நிலை வாழ்வின்‌ பிறப்பிடங்கள்‌”.

இறப்புக்குப்‌ பின்‌ வாழ்வு உண்டா? என்றுதானே பலரும்‌ கேட்கிறார்கள்‌. ஆனால்‌ பிறப்புக்குப்‌ பின்‌ வாழ்வு உண்டா? என்று சற்று வித்தியாசமாக ஒரு கேள்வியை எழுப்பிச்‌ சிந்திக்க வைக்கும்‌ ஒரு குட்டிக்‌ கதை.

பிறப்புக்குப்‌ பின்‌ வாழ்வு உண்டா? நீங்களும்‌ நானும்‌ கேட்க முடியாது. கேட்டால்‌ பைத்தியம்‌ என்ற பட்டம்தான்‌ நமக்குக்‌ கிடைக்கும்‌ கேட்க வேண்டியவர்கள்‌ கேட்க வேண்டிய இடத்திலிருந்து கேட்டால்‌ எல்லாக்‌ கேள்விகளும்‌ அருத்தமுள்ளவைகளே! அப்படி யார்‌ கேட்க முடியும்‌?

ஒரு தாயின்‌ கருவறைக்குள்‌ இரட்டைக்‌ குழந்தைகள்‌. அவைகள்‌ உரையாடிக்‌ கொண்டிருந்தன. “பிறப்புக்குப்‌ பின்‌ வாழ்வு உண்டு என்று நீ நம்புகிறாயா?” என்று ஒரு குழந்தை மற்றொன்றிடம்‌ கேட்டது. அதற்கு “எனக்குத்‌ தெரியாது. ஏனெனில்‌ பிறந்தவர்கள்‌ யாருமே இங்கு கருவறைக்குத்‌ திரும்பி வந்ததில்லை” என்றது மற்றொரு குழந்தை.

இறந்தவர்கள்‌ திரும்பி வந்ததில்லை என்பதால்‌ இறப்புக்குப்‌ பின்‌ வாழ்வு இல்லை என்று நம்மில்‌ சிலர்‌ நினைப்பதில்லையா? இறப்புக்குப்‌ பின்‌ வாழ்வு இல்லையென்றால்‌ கடவுள்‌ மிகவும்‌ அநீதியானவர்‌ அன்றோ! உலகின்‌ நீதிகளும்‌ நியாயங்களும்‌ மாபாதகர்களின்‌ கைகளில்‌ அல்லவா இருக்கும்‌!

இறப்புக்குப்‌ பின்‌ வாழ்வு மாறுபடுகிறதே தவிர அழிவதில்லை என்பதுதான்‌ பெரும்பாலான சமயங்களின்‌ நம்பிக்கை. கிறிஸ்தவமும்‌ இதைத்‌ தெளிவாகக்‌ கூறுகிறது. ஆண்டுதோறும்‌ நவம்பர்‌ மாதத்தில்‌ இறந்தவர்களை நினைத்து அதற்கு ஏற்றவாறு நமது வாழ்வை மாற்றி அமைத்துக்‌ கொள்ள திருஅவை இன்று நம்மை அமைக்கிறது.

புனித அகுஸ்தினார்‌ எழுதிய “இறைவனின்‌ நகரம்‌” (the city of God) என்ற நூலில்‌ கார்த்தேஜ்‌ நகரில்‌ வசித்து வந்த மருத்துவர்‌ கென்னாடியுஸ்‌ (Gennadius) என்பவரைப்‌ பற்றிய கதையொன்று கூறப்பட்டிருக்கிறது. நமது ஆன்மா அழிவுறாது என்பதை அடிக்கடி மறுத்து வந்தார்‌ மருத்துவர்‌ கென்னாடியுஸ்‌. இறப்புக்குப்‌ பின்‌ மனிதனுடைய ஆன்மா அழிவுறாது வாழ்ந்து வரும்‌ என்ற உண்மையை அவர்‌ மறுத்தார்‌.

ஒரு நாள்‌ அந்த மருத்துவர்‌ கனவொன்று கண்டார்‌. அது பகல்‌ கனவல்ல. ஆழ்ந்த உறக்கத்தில்‌ வந்த கனவு. வெண்ணாடை அணிந்த இளைஞர்‌ ஒருவர்‌ காட்சியில்‌ தோன்றி அவரோடு உரையாடினார்‌.

		“கென்னாடியுஸ்‌, நீ என்னைப்‌ பார்க்கிறாயா?” கேட்டது.
		அந்த இளைஞர்‌ “ஆம்‌ என்று தன்‌ கனவில்‌ பதிலுரைத்தார்‌ மருத்துவர்‌.
		“நீ உன்‌ கண்களால்‌ என்னைப்‌ பார்க்கிறாயா?” என்று கேட்டார்‌ அந்த இளைஞர்‌. 
		“இல்லை. ஏனெனில்‌ அவை தூக்கத்தில்‌ மூழ்கிக்‌ கிடக்கின்றனவே” என்றார்‌ கென்னாடியுஸ்‌.
		“அப்படியானால்‌ என்னை நீ எப்படிப்‌ பார்க்கிறாய்‌?” என்று வினவினார்‌ இளைஞர்‌.
		“எனக்குத்‌ தெரியாது.” என்றார்‌ மருத்துவர்‌.
		“நான்‌ பேசுவதைக்‌ கேட்கிறாயா?”
		“ஆம்‌...
		“உன்னுடைய காதுகளினாலா கேட்கிறாய்‌?”
		“இல்லை”.
		அப்படியானால்‌ எப்படித்தான்‌ கேட்கிறாய்‌?
		“எனக்குத்‌ தெரியாது
		“நீ என்னுடன்‌ பேசிக்‌ கொண்டிருக்கிறாயா?””
		“ஆம்‌.
		“உன்‌ வாயினால்‌ பேசுகிறாயா?””
		“இல்லை ”.
		“அப்படியானால்‌ எப்படித்தான்‌ பேசுகிறாய்‌?”
		“எனக்குத்‌ தெரியாது” என்றார்‌ மருத்துவர்‌.

அப்போது அந்த இளைஞன்‌ கூறினார்‌: “இதைப்பற்றிச்‌ சிந்தித்துப்பாரும்‌. நீர்‌ தூங்கிக்‌ கொண்டிருந்தாலும்‌ கனவில்‌ பார்க்கிறீர்‌, கேட்கிறீர்‌, பேசுகிறீர்‌. நீர்‌ இறப்பில்‌ துயில்‌ கொள்ளும்‌ நேரம்‌ வரும்‌. “உறங்குவது போலும்‌ சாக்காடு.” என்பதுதானே வள்ளுவம்‌ கற்றுத்‌ தரும்‌ பாடம்‌. அப்போது நீர்‌ இறந்திருந்தாலும்‌ பார்ப்பீர்‌, கேட்பீர்‌, பேசுவீர்‌, உணருவீர்‌”.

கென்னாடியுஸ்‌ விழித்தெழுந்தார்‌. கடவுள்தூமே தன்‌ தூதரை அனுப்பி, இறப்பிற்குப்‌ பின்பும்‌ ஆன்மா உண்மையிலேயே வாழ்கிறது என்பதைப்‌ போதித்திருக்கின்றார்‌ என்பதை உணர்ந்தார்‌. இறப்பு என்பது இன்னொரு விதமான உறக்கம்‌. அத்தூக்கத்தில்‌ ஆன்மா உயிருடனே செயலாற்றுகிறது.

இறந்தபின்பும்‌ ஆன்மா நிலைத்துவாழும்‌ என்பதை இயேசு தெளிவாகப்‌ போதித்திருக்கிறார்‌. “ஆன்மாவைக்‌ கொல்ல இயலாமல்‌ உடலை மட்டும்‌ கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்‌. ஆன்மாவையும்‌ உடலையும்‌ நரகத்தில்‌ அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்‌ ” (மத்‌. 10:28).

“தீயவர்கள்‌ -முடிவில்லாத்‌ தண்டனை அடையவும்‌ நேர்மையாளர்கள்‌ நிலைவாழ்வு பெறவும்‌ செல்வார்கள்‌ ” (மத்‌. 25:46), கிறிஸ்து சிலுவையில்‌ தொங்கிக்‌ கொண்டிருந்தபோது நல்ல கள்ளனுக்கு நிலைவாழ்வு அளிக்கவில்லையா? “நீர்‌ இன்றே என்னோடு பேரின்ப வீட்டில்‌ இருப்பீர்‌ என உறுதியாக உமக்குச்‌ சொல்கிறேன்‌” (லூக்‌. 23:43).

நமது ஆன்மா அழியாது. மறுவாழ்வு உண்டு என்பதைக்‌ கிறிஸ்து திட்டவட்டமாகத்‌ தெளிவுபடுத்துகிறார்‌.

இறக்கும்‌ தறுவாயில்‌ பிரான்ஸ்‌ நாட்டு எழுத்தாளரா ஒருவர்‌ தன்னைச்‌ சுற்றி நின்றவர்களிடம்‌ சொன்னார்‌: “செபித்துக்‌ கொண்டே உயிர்விடுவேன்‌. எனது கல்லறையில்‌ ஒரு சிலுவையை நாட்டுங்கள்‌ அதனடியில்‌ - கல்லறைக்‌ கல்லில்‌ பின்வரும்‌ வார்த்தைகள்‌ பொறிக்கப்பட்டிருக்கட்டும்‌. “இவன்‌ நம்பிக்கையோடு உயிர்‌ வாழ்ந்தான்‌. இப்போதோ நேரில்‌ பார்க்கிறான்‌.”

நம்பிக்கையோடு வாழ்கிறேன்‌! நிலை வாழ்வை நம்புகிறேன்‌! என்பது நாம்‌ அறிக்கையிடும்‌ நம்பிக்கைக்‌ கோட்பாடுதானே! சாவுக்குப்‌ பின்னும்‌ வாழ்வோம்‌. “என்னிடம்‌ நம்பிக்கை கொள்பவர்‌ இறப்பினும்‌ வாழ்வார்‌” (யோ. 11:25). “இப்போது நாம்‌ கண்ணாடியில்‌ காண்பது போல்‌ மங்கலாய்க்‌ காண்கிறோம்‌. ஆனால்‌ அப்போது நாம்‌ நேரில்‌ காண்போம்‌.” (1 கொரி. 13:12) என்பது திருத்தூதர்‌ பவுலின்‌ நம்பிக்கை.

உலகப்‌ புகழ்பெற்ற அறிவியல்‌ ஞானி நியூட்டன்‌ என்பவரிடம்‌ ஒருவன்‌ சென்று “இறந்தவர்கள்‌ உயிர்த்தெழுவார்கள்‌ என்று நீங்கள்‌ நம்புகிறீர்களா?” என்று கேட்டான்‌. “ஆம்‌ உறுதியாக” என்றார்‌ : நியூட்டன்‌. அதற்கு அவன்‌, “அது எப்படி முடியும்‌? மனிதன்‌ இறந்ததும்‌ அவனைப்‌ புதைக்கிறோம்‌. உறுப்புக்கள்‌ சிதைய உடல்‌ மண்ணோடு மண்ணாக கலந்துவிடுகிறது. அவற்றால்‌ எப்படி ஒன்று சேர முடியும்‌? எப்படி அவற்றால்‌ மீண்டும்‌ பழைய நிலையை, பழைய உடலைப்‌ பெற முடியும்‌?” என்றான்‌. உடனே நியூட்டன்‌ அருகில்‌ இருந்த இரும்புத்தூளைக்‌ கொஞ்சம்‌ எடுத்து மண்ணோடு கலந்து, “இந்த இரும்புத்தூளை உன்னால்‌ பிரிக்க முடியுமா?” என்று கேட்டார்‌. தன்னால்‌ முடியாது என்றான்‌ அவன்‌. நியூட்டன்‌ ஒரு காந்தத்‌ துண்டை எடுத்து மணலுக்கு மேலே பிடித்தார்‌. மணலில்‌ சிதறிக்‌ கலந்துகிட்ந்த எல்லா இரும்புத்தூள்களும்‌ காந்தத்தில்‌ மேலெழுந்து ஒட்டிக்‌ கொண்டன. அதைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்த இளைஞனிடம்‌ நியூட்டன்‌ சொன்னார்‌: “இந்தச்‌ சாதாரண காந்தத்‌ துண்டுக்கே இவ்வளவு சக்தி இருக்கிறது என்றால்‌, பேராற்றலாக விளங்கும்‌ இறைவனுக்கு எவ்வளவு சக்தி இருக்கும்‌! அவர்‌ தனது வல்லமையினால்‌ எல்லா உறுப்புக்களையும்‌ ஒன்று சேர்ப்பார்‌. நாமும்‌ மீண்டும்‌ உயிர்‌ பெற்று வாழ்வோம்‌”.

நம்பிக்கை என்பது அறிவுக்கு எதிரானதோ முரணானதோ அல்ல. அறிவுக்கு அப்பாலானதும்‌ அல்ல. அறிவின்‌ முதிர்ச்சிதான்‌.

வாழ்வது ஒரு முறை. விரைவில்‌ அது ஒடி மறையும்‌. கிறிஸ்துவுக்காகச்‌ செய்வது எதுவோ, அது ஒன்றே நிலைத்து நீடிக்கும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மறையுரை

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறந்த விசுவாசிகளின்‌ நினைவு (நவம்பர்‌ 2)

இன்றைய நாளை அன்னை திருச்சபை அனைத்து ஆன்மாக்களின்‌ விழா என்று குறிப்பிட்டாலும்‌, பொதுவாக மக்கள்‌ ஆன்மாக்களின்‌ விழாவைக்‌ “கல்லறைத்‌ திருவிழா” என்றே அழைக்கின்றனர்‌. பண்டைய உரோமையர்களின்‌ சிந்தனைபடி கல்லறைகள்‌ இறந்தவர்களின்‌ நகரம்‌ என்று கருதப்பட்டது. ஆனால்‌ அன்றைய கிறிஸ்தவர்களுக்கு இது வாழ்வோரின்‌ நகரமாக விளங்கியது. இன்று அக்கல்லறைகளுக்கு வாழ்வோராகிய நாம்‌ எடுக்கும்‌ இந்த விழா, நமது வாழ்வு முடிவற்ற திருப்பயணம்‌ என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றது. இறைவன்‌ நமக்கு வழங்கியுள்ள வாழ்வு மயானத்துடன்‌ முடிந்துவிடும்‌ மாயை அன்று. மாறாக இது உண்மை, அன்பு, சகோதரத்துவம்‌ என்னும்‌ இறையாட்சி விழுமியங்களைக்‌ கட்டியெழுப்பும்‌ கல்வெட்டுக்‌ காப்பியங்கள்‌. எனவே இன்று இருந்துவிட்டு நாளை இடிந்துவிடும்‌ மணல்‌ வீடல்ல நம்முடைய வாழ்வு. மாறாக நம்‌ வாழ்வு என்றும்‌ நிலைத்திருக்கும்‌ நிஜம்‌. ஏனெனில்‌ இயேசுவில்‌ நம்பிக்கைக்‌ கொள்வோர்‌ என்றுமே வாழ்வார்‌.

நீத்தாரை நினைவு கூறும்‌ வழக்கம்‌ தொன்று தொட்டே வந்துள்ளது. உதாரணமாக எகிப்து நாட்டில்‌, பெரிய பிரமீடுகள்‌ கட்டி, இறந்தவர்‌ உடலைப்‌ பதப்படுத்தி, அங்கு அதை வைத்து, இறந்தவர்‌ உயிருடனிருந்தபோது விரும்பிய உணவையும்‌ அங்கு வைத்தனர்‌. இறந்தவர்‌ மீது கொண்டிருந்த நன்றி மற்றும்‌ பய உணர்வு இம்மக்களுக்குக்‌ காரணமாய்‌ அமைந்தது. ஆவி அடித்துவிடும்‌ என்று மக்கள்‌ மூடநம்பிக்கையும்‌ கொண்டிருந்தனர்‌. மூடப்பழக்க வழக்கங்களுடன்‌ இருக்கிறது என்ற எண்ணம்‌ மக்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆரம்ப காலத்தில்‌ நீத்தார்‌ நினைவு நாள்‌ ஆடம்பரமாகக்‌ கொண்டாடப்படவில்லை.

இறந்த விசுவாசிகளின்‌ நினைவு கூறும்‌ நற்பழக்கம்‌ முதலில்‌ துறவிகள்‌ மத்தியில்‌ ஆரம்பமானது. ஸ்பெயின்‌ நாட்டில்‌ புனித இசிதோர்‌ என்பவர்‌ பரிசுத்த ஆலி பெருவிழாவை அடுத்து வந்த திங்கள்‌ கிழமை இறந்த விசுவாசிகளின்‌ நாளாகக்‌ கொண்டாடினார்‌. 11-ஆம்‌ நூற்றாண்டில்‌ புனித ஓதில்யோ என்பவர்‌ பிரான்சில்‌ இருந்தக்‌ குளுனி துறவறங்களில்‌ நவம்பர்‌ 2-ஆம்‌ நாளை இறந்த துறவியர்‌ நாளாகக்‌ கொண்டாடும்படிப்‌ பணித்தார்‌. பிற்காலத்தில்‌ இலத்தீன்‌ திருச்சபையால்‌ ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஓடும்‌ மானும்‌, பாடும்‌ பறவையும்‌, நீந்தித்‌ திரியும்‌ மீனும்‌ ஒரு நாள்‌ இறக்கின்றன. பிறந்தக்‌ குழந்தையும்‌ ஒரு நான்‌ இறக்கிறது. வாழ வேண்டும்‌ என்ற ஆசையில்‌ பாதி நிலை கடந்துவிட்ட மனிதனும்‌ திடீரென இறக்கின்றான்‌. இப்படி அனைத்துமே இறக்கின்றன. இறப்பு இதுவரை ஒரு புரியாதப்‌ புதிராகவே இருக்கிறது. எனவேதான்‌ ஒரு கவிஞன்‌ சொன்னான்‌, “சாவே உனக்குச்‌ சாவு வந்து நேராதா” என்று. சாவுக்குச்‌ சாவு வரும்‌ என்று நாம்‌ காத்திருந்தால்‌, நாம்‌ சாகும்‌ வரைக்கும்‌ சாவு வராது என்பது மட்டும்‌ எதார்த்தமான உண்மை. இறப்பு இறைவன்‌ இருக்கிறான்‌ என்ற பாடத்தைக்‌ கற்றுத்‌ தருகிறது.

“தூங்கும்‌ போது மூச்சு சுழிமாறிப்‌ போனாலும்‌ போச்சு” என்ற பழமொழியைப்‌ படித்த பின்பும்‌, மனிதனின்‌ ஆட்டம்‌ அடங்கி விடுகிறது என்ற உண்மை தெரிந்த பின்பும்‌, இன்றைய எதார்த்தமான உலகிலே மனிதன்‌ பொன்னையும்‌, பொருளையும்‌, பணத்தையும்‌, புகழையும்‌ சேர்ப்பதற்காக, அடுத்தவனை மதிக்காது, அன்பு செய்யாது, ஆணவத்தோடு வாழ்கிறானே, அது ஏன்‌? உலகத்தையே வென்று தன்‌ காலடியில்‌ கொண்டு வர வேண்டுமென்ற எண்ணம்‌ கொண்ட அலெக்சாண்டரும்‌, வரலாற்றில்‌ வலுவான இடம்‌ பிடிக்க ஏங்கிய நெப்போலியனும்‌, பல்லாயிரக்கணக்கான யூதர்களின்‌ உயிர்களைக்‌ குடித்துப்‌ படுத்த ஹிட்லரும்‌ இந்த மண்ணில்‌ இல்லை என்பதைக்‌ கண்ட பின்னும்‌, தான்‌ வாழ வேண்டும்‌ என்பதற்காக அடுத்தவர்களை நசுக்கும்‌ அதிகாரம்‌ கொண்டு வாழ்கிறோமே! இறந்தவர்கள்‌ எதையும்‌ எடுத்துச்‌ செல்வதில்லை என்பதை, இறந்தவர்களைப்‌ பார்த்து அறிந்தப்‌ பின்பும்‌ நாம்‌ பொருளைச்‌ சேர்க்க ஓடுகிறோம்‌, அலைகிறோம்‌. இதை உணர்ந்த மாவீரன்‌ அலெக்ஸாண்டர்‌, “நான்‌ இறந்தப்‌ பிறகு என்‌ இரண்டு கைகளையும்‌ என்‌ சவப்பெட்டிக்கு வெளியே வையுங்கள்‌, இதைப்‌ பார்க்கும்‌ அனைவரும்‌, உலகையே வெல்ல வேண்டுமென்று துடித்த இந்த மனிதன்‌ இறந்த போது எதையுமே எடுத்துச்‌ செல்லவில்லை என்பதை அறிந்து கொள்ளட்டும்‌” என்றார்‌.

“மனிதனே, நீ மண்ணாக இருக்கிறாய்‌ திரும்பவும்‌ நீ மண்ணுக்கே திரும்புவாய்‌' என்ற உண்மைச்‌ செய்தியைத்‌ திருமறை கல்லறைத்‌ திருநாளில்‌ தந்தாலும்‌, அதேத்‌ திருமறைத்‌ திரும்பவும்‌ “என்னில்‌ விசுவாசம்‌ கொள்பவன்‌ இறப்பினும்‌ வாழ்வான்‌' என்ற மகிழ்வு செய்தியையும்‌ சொல்கிறது. இதற்கு மேலாக இயேசு தாம்‌ உயிருடன்‌ இருந்தபோது, மரித்த மூன்றாம்‌ நாளில்‌ உயிர்ப்பேன்‌ என்று சொன்னபடி மரித்து உயிர்த்தார்‌. புனித பவுல்‌ அழகாகக்‌ குறிப்பிடுவார்‌, “கிறிஸ்துவோடு நாம்‌ மரித்தால்‌, கிறிஸ்துவோடு நாமும்‌ உயிர்ப்போம்‌” என்று இயேசு உடலோடு வாழ்கின்றார்‌ என்பதை வலியுறுத்தத்‌ தொடக்கக்‌ கால கிறிஸ்தவர்கள்‌ காலியாக இருந்த கல்லறையை முன்னிலைப்‌ படுத்தினர்‌. “இயேசு இறந்தும்‌ வாழ்கிறார்‌” (உரோ 14:9) என்று புனிதப்‌ பவுல்‌ கூறுகிறார்‌.

“நதரதுமை மணி மண்ணில்‌ விழுந்து மடியாவிட்டால்‌ அது அப்படியே இருக்கும்‌. அது மடிந்தால்தான்‌ மிகுந்தப்‌ பயனளிக்கும்‌” (யோவான்‌ 12:24). விதை மண்ணில்‌ மடிவது இறப்பு அன்று. மாறாகப்‌ பலன்‌ கொடுப்பதற்கான புதிய வாழ்வின்‌ பிறப்பு. வாழ்வு மாறுபடுகிறது அவ்வளவுதான்‌. கிறிஸ்தவர்கள்‌ இறக்கும்‌ போது வாழ்வு மாறுபடூுகிறதேயென்று அழிக்கப்படுவதில்லை. கிறிஸ்துவில்‌ உயிர்ப்பு உண்டு என உண்மையாக நம்பப்படுகிறது இதைத்தான்‌ புனித பவுல்‌ “இறந்த கிறிஸ்து உயிருடன்‌ எழுப்பப்பட்டார்‌. இது அனைவரும்‌ உயிருடன்‌ எழுப்‌ பப்படுவர்‌ என்பதை உறுதிப்படுத்துகிறது" (கொரி 15:20) என்று கூறுகிறார்‌. இதையே கிறிஸ்துவும்‌ முன்‌ மொழிந்து சென்றார்‌. “உயிர்ப்பும்‌ உயிரும்‌ நானே; என்னில்‌ விசுவாசம்‌ கொள்பவன்‌ ஒருபோதும்‌ சாகான்‌” (யோவான்‌ 11:25).

நாமும்‌ கிறிஸ்தவர்கள்‌; கிறிஸ்துவைப்‌ போல்‌ உயிர்க்கப்‌- போகிறவர்கள்‌. ஏதோ வருடம்‌ ஒருநாள்‌ மட்டும்‌ இறந்தவர்களுக்குத்‌ திருப்பலி வைத்துக்‌ கல்லறைக்கு மாலையும்‌, தூபமும்‌ காட்டி, ஒரு சொட்டு கண்ணீர்‌ விட்டு அவர்களது நினைவைக்‌ கொண்டாடி திருப்தியடையும்‌ வழக்கமான பழக்கத்தோடு நின்றுவிடாமல்‌, வேறுபாடான முறையில்‌ நாம்‌ இறந்தவர்களின்‌ நினைவைக்‌ கொண்டாடுவோம்‌. நாம்‌ நினைவு கூறும்‌ இறந்த மனிதர்‌ இந்த மண்ணிலே வாழ்ந்தபோது, ஏழைகளுக்கு உதவினார்‌, கல்விப்பணிக்குத்‌ தன்னையே அர்ப்பணித்தார்‌ என்றால்‌, அவரை நினைவு கூறும்‌ வண்ணமாக ஓர்‌ ஏழை மாணாக்கரைப்‌ படிக்க வைத்து, வாழ்க்கையில்‌ முன்னேற்றி விடுவோம்‌. நாம்‌ இன்று நினைவு கூறும்‌ ஒருவர்‌, நீதிக்காகப்‌ போராடித்‌ தன்னையேச்‌ சமுதாயத்திற்காகப்‌ பலியிட்டவராக இருக்கலாம்‌. அவரைப்‌ போல்‌ நாமும்‌ நீதிக்காகக்‌ குரல்‌ கொடுத்து நசுக்கப்படும்‌ ஏழைகள்‌ சார்பாக நின்று நாம்‌ செயல்படுவோம்‌.

இப்படி நாம்‌ செயல்படுகின்ற போது அவர்கள்‌ நம்மிலே வாழ்கிறார்கள்‌. இதுதான்‌ உண்மையான நினைவு கூர்தலாக இருக்க முடியும்‌. எனவே, இறப்பு என்ற எதார்த்தத்தை துணிவோடு சந்திப்பவர்களாகவும்‌, அதன்‌ பொருளை உணர்ந்தவர்களாகவும்‌ வாழ முற்படுவோம்‌. ஏனெனில்‌ இறப்பு நமக்கு முடிவன்று. அது புதிய வாழ்வின்‌ பிறப்பு. எனவே, வாழும்‌ போது நாம்‌ இயேசுவைப்‌ போல அடுத்தவர்கள்‌ வாழ நன்மைகள்‌ செய்து அவரது மதிப்பீகளின்‌ படி வாழ முற்படுவோம்‌.

நம்‌ வாழ்வும்‌, இறப்பும்‌ பலருக்கு வாழ்வு கொடுக்க வேண்டும்‌. மனித வாழ்வு கடவுளால்‌ கொடுக்கப்பட்ட ஒரு மாபெரும்‌ கொடை. இதைச்‌ சரியாகப்‌ புரிந்து கொண்டு இலட்சியத்திற்காய்‌, கொள்கைகளுக்காய்‌, பலருடைய வாழ்விற்காய்‌, நம்மையே இறப்பு என்ற பெயரில்‌ இழந்தாலும்‌, இயேசுவின்‌ தோழமையில்‌, உமிர்ப்பில்‌ பங்குக்‌ கொள்கிறோம்‌. இப்படி இறக்கின்ற போது நாமும்‌ இயேசுவைப்போல என்றுமே வாழ்ந்து கொண்டிருப்போம்‌. விசுவாச வாழ்வில்‌ மரணம்‌ வித்தியாசமாகத்‌ தோன்றினாலும்‌ இயேசுவின்‌ மரணம்‌, உயிர்ப்பு சொல்லி தரும்‌ பாடம்‌ நாமும்‌ மரிப்போம்‌, இயேசுவைப்‌ போல்‌ கடவுள்‌ தஇணையால்‌ உயிர்ப்போம்‌, நல்‌ வாழ்வின்‌ பரிசைப்‌ பெறுவோம்‌. வாழ்வின்‌ நாயகணேடு இணைவோம்‌. கிறிஸ்து உயிருடன்‌ எழுப்பப்படவில்லை என்றால்‌ நாங்கள்‌ பறைசாற்றிய நந்செய்தியும்‌, நீங்கள்‌ கொண்டிருக்‌ கிற நம்பிக்‌ கையும்‌ பொருளற்றதாயிருக்கும்‌ (1கொரி 15:14).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறந்தோர்‌ நினைவு (நவம்பர்‌ - 2)

முதல்‌ வாசகம்‌ : சாஞா 4: 7-15

இன்று திருச்சபையிலே, சிறப்பாக இறந்தோரை நினைவு கூர்கிறோம்‌. இறந்தோர்‌ நம்மை விட்டுப்‌ பிரிந்தாலும்‌ அவர்களுடைய வாழ்க்கை நம்மோடு தொடர்புடையது. அவர்களோடு சேர்ந்துதான்‌ திருச்சபை முழுமை பெறுகிறது. “புனிதர்களுடைய உறவை விசுவசிக்கிறோம்‌” என்று கூறுவதன்‌ பொருள்தான்‌ இது. இறந்தோரைச்‌ சிறப்பாக நினைவுறும்‌ இந்நாளுக்கெனப்‌ பல வாசகங்கள்‌ தரப்படுகின்றன. சாலமோனின்‌ ஞானத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகம்‌ நீதிமான்களின்‌ அகால மரணத்தைப்‌ பற்றியும்‌, ஆண்டவர்‌ அவர்களுக்கு அளிக்கும்‌ மீட்புப்‌ பற்றியும்‌ கூறுகிறது.

நீதிமான்‌ இளைப்பாற்றி அடைவான்‌

கிறிஸ்து நமக்காக இறந்தார்‌. அவருடைய இறப்பிலே நாமும்‌ இறக்கிறோம்‌. அதேபோன்று அவருடைய உயிர்ப்பிலே நாமும்‌ பங்குபெறுகிறோம்‌ என்பது உண்மை. “கிறிஸ்துவே முதலில்‌ உயிர்பெற்றார்‌. அடுத்து, கிறிஸ்துவின்‌ வருகையின்போது அவரைச்‌ சார்ந்தோர்‌ உயிர்‌ பெறுவர்‌” (1 கொரி 15 : 23). வாழும்‌ நாட்களைப்‌ பொறுத்து முடிவு அமைவதில்லை. ஆனால்‌ வாழும்‌ வாழ்வைப்‌ பொறுத்தே முடிவு அமையும்‌. மரம்‌ எப்பக்கம்‌ சாய்ந்திருக்கிறதோ அப்பக்கமே விழும்‌ என்பது உறுதி. எனவே “அறிவுடைமையோடு” “கடவுளுக்கு உகந்தவராய்‌ மாசற்ற வாழ்வு வாழ்பவருக்கு” (4 : 9-10), சாவு நாம்‌ எதிர்பாராத வேளையில்‌ வரும்‌ திருடனாக அமையாது. தொடர்ந்து நம்‌ அன்பு வாழ்வை, மாசற்ற வாழ்வை மிகச்‌ சிறப்புடன்‌ முழுமையாக வாழ விடுக்கப்படும்‌ அழைப்பாகும்‌. “ஆறிலும்‌ சாவு நூறிலும்‌ சாவு” என்பது உண்மை. இந்த ஆறிலும்‌ சரி நூறிலும்‌ சரி இறையன்பு, பிறரன்பு ஆகிய இரண்டு பெருந்துணைகள்‌ நம்‌ வாழ்வைப்‌ புனிதப்படுத்த வேண்டும்‌. திருமுழுக்கு வாழ்வையும்‌, அர்ப்பண வாழ்வையும்‌ முழுமையாக வாழ முயல்வோம்‌. நமக்கு முன்‌ இறையடி அடைந்த புனிதர்கள்‌ நமக்கு வழித்‌ துணையாக அமையட்டும்‌. தம்முடைய திருமுழுக்கு, அர்ப்பண வாழ்வை நிறைவுற வாழாதவர்கள்‌ இன்னும்‌ இறைவனின்‌ பிரசன்னத்தை முழுமையும்‌ அடையாத நிலையிலே இருக்கிறார்கள்‌. அவர்களுக்காக வேண்டிக்‌ கொள்வது நமது கடன்‌. துயருறும்‌ திருச்சபைக்கு உதவுதல்‌ நமது குடும்பக்‌ கடமையென்பதை உணர்ந்து, சிறப்பாக, இறந்த நம்‌ உற்றார்‌ உறவினருக்‌ காகவும்‌, நமது செப உதவி தேவைப்படுபவர்களுக்காகவும்‌ வேண்டுவோம்‌.

ஆண்டவர்‌ அருளும்‌ இரக்கமுள்ளவர்‌

தம்முடைய மக்களுக்கு இன்று மட்டுமன்று, என்றும்‌ உறுதுணையா யிருப்பவர்‌ ஆண்டவர்‌. “அருளும்‌ இரக்கமும்‌” அவருக்கே உரியன (4 : 15). “என்றும்‌ உள்ளது அவரது பேரன்பு (திபா. 136) என்ற சொற்கள்‌ நமக்கு ஆறுதலும்‌ நம்பிக்கையும்‌ அளிக்க வேண்டும்‌. “உதவி எனக்கு எங்கிருந்து வரும்‌?” என்று நாம்‌ கேட்கும்‌ கேள்விக்கு, “ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்‌” (திபா. 121: 1-2) என்ற பதில்‌ நமக்கு வலிமை தர வேண்டும்‌.“ஆண்டவர்‌ உம்மை எல்லாத்‌ தீமையினின்றும்‌ பாதுகாப்பார்‌; அவர்‌ உம்‌ உயிரைக்‌ காத்திடுவார்‌. நீர்‌ போகும்போதும்‌, உள்ளே வரும்போதும்‌, இப்போதும்‌ எப்போதும்‌ ஆண்டவர்‌ உம்மைக்‌ காத்தருள்வார்‌'” (திபா.121:7- 8) என்ற சொற்கள்‌ இறந்தோரைப்‌ பொறுத்தமட்டில்‌ உண்மை.

எனவே, இறந்தோருக்காக நம்பிக்கையோடு வேண்டுவோம்‌. உயிரோடிருக்கும்‌ நம்முடைய வாழ்விலே, அருளும்‌, இரக்கமும்‌ கொண்ட இறைவன்பால்‌ நம்பிக்கை வளரவும்‌ வேண்டுவோம்‌. அவநம்பிக்கை நம்மை அவலத்திற்கும்‌, நம்பிக்கை நம்மை நல்வாழ்வுக்கும்‌ நலத்துக்கும்‌ இட்டுச்செல்லும்‌ என்பதை உணர்ந்து கிறிஸ்துவ நம்பிக்கையோடு வாழ்வோம்‌.

(தம்‌ பரிசுத்தர்களை அவர் கண்காணக்கிறார்‌. )

இரண்டாம்‌ வாசகம்‌ : 2 கொரி 5: 1, 6-10

பாவத்தின்‌ கூலியே மரணம்‌ (உரோ 6 : 23) என்பதும்‌, மனிதன்‌ வழியாகச்‌ சாவு உண்டானதுபோல்‌, மனிதன்‌ வழியாகவே இறந்தோர்‌ உயிர்த்தெழுதல்‌ உண்டு ( 1கொரி 15 : 21) என்பதும்‌, அவரோடு, அவரில்‌ மரித்தால்‌ அவரோடு அரசு புரிவோம்‌ என்பதும்‌ (2 திமொ 2 : 11), இறுதி நாளில்‌ நமது உடலையும்‌ அவரது உடலைப்போல்‌ நமதாண்டவர்‌ மாற்றுவார்‌ என்பதும்‌ (பிலி 3 :21) உண்மை. இறைவனது பிரசன்னத்திற்குத்‌ தகுதியற்றவர்கள்‌ இறக்கும்‌ பொழுது உத்தரிக்கிற தலம்‌ செல்வர்‌ என்பதும்‌, இவர்களால்‌ கழுவாய்‌ தேடமுடியாத நிலையில்‌, இவ்வுலகில்‌ வாழும்‌ விசுவாசிகள்‌ தம்‌ செபத்தால்‌, தவத்தால்‌ உதவிசெய்ய முடியும்‌ என்பதும்‌ திருச்சபையின்‌ போதனை. இறந்தவர்களுக்கு நாம்‌ காட்டும்‌ நன்றிக்கடன்‌, அவர்களது தற்காலிகத்‌ தண்டனையை நமது பரிகாரத்தால்‌ குறைத்து அவர்களைக்‌ கரையேற்றுவதேயாகும்‌. இதுவே இன்றைய விழாவின்‌ நோக்கம்‌.

மனித வாழ்வு நிலையற்றுது

இவ்வுலக வாழ்வு நிலையற்றது. நாடோடி வாழ்வு. வாழும்‌ மக்களும்‌, போருக்குச்‌ செல்லும்‌ வீரர்களும்‌ தம்‌ கூடாரங்களை ஆங்காங்கே அமைக்கின்றனர்‌. தம்‌ வேலை முடிந்த உடன்‌ அவற்றைச்‌ சுருட்டி மடக்கிக்‌ கொண்டு வேறு இடம்‌ செல்லுகின்றனர்‌. மனிதவாழ்வை ஒரு கூடாரத்திற்கு ஒப்பிடுகிறார்‌ பவுல்‌ (5 : 1). இறைவாக்கினர்‌ எசாயா வாக்கு சிந்தனைக்குரியது:

“என்‌ உறைவிடம்‌ மேய்ப்பனின்‌ கூடாரத்தைப்போல்‌ பெயர்க்கப்பட்டு என்னை விட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன்‌ பாவைச்‌ சுருட்டுவதுபோல்‌ என்‌ வாழ்வை முடிக்கிறேன்‌ ” (எசா 38 : 12). இந்த நில்லா உலகில்‌ வாழும்‌ நாம்‌ இடைக்கால மக்கள்‌ தாம்‌.

“நில்லாதவற்றை நிலையின என்று உணரும்‌
புல்லரிவாண்மை கடை” - (குறள்‌ 331)

இறந்கோருக்காகச்‌ செபிப்பது நமது கடமை உடலாகிய கூடாரத்தை இவ்வுலகிலே விட்டுச்செல்லும்‌ ஆன்மா இறைவனது தீர்ப்புக்கு ஏற்ப அவருடன்‌ அரசாள அழைக்கப்படலாம்‌ (மத்‌ 25 : 34) அல்லது சபிக்கப்பட்டவராய்‌ நித்திய தண்டனைக்கு ஆளாகலாம்‌ (மத்‌ 25 : 41); அல்லது மன்னிக்கப்பட்ட பாவங்களுக்குத்‌ தக்க பரிகாரம்‌ செய்வதற்காய்‌, கறைகழுவுமிடமாகிய உத்தரிக்கிற தலத்திற்கு அனுப்பப்‌ படலாம்‌ (மத்‌ 5: 26). அங்கு இவர்கள்‌ இறைவனை நோக்கி அபயக்குரல்‌ எழுப்புவதைத்‌ தவிர வேறு எதுவும்‌ செய்வதறியார்‌; “துணைவேண்டிக்‌ காலை வரை கதறினேன்‌; சிங்கம்போல்‌ அவர்‌ என்‌ எலும்புகள்‌ அனைத்தையும்‌ நொறுக்குகிறார்‌; காலை தொடங்கி இரவுக்குள்‌ நீர்‌ எனக்கு முடிவுகட்டுவீர்‌. சிட்டுக்குருவி போலும்‌ நாரை போலும்‌ கூக்குரலிடுகிறேன்‌; மாடப்புறாப்போல்‌ விம்முகிறேன்‌'” என்ற எசாயா இறைவாக்குகள்‌ (38 : 13- 14) இவர்களுக்குப்‌ பொருந்தும்‌.

“என்‌ உடலால்‌ நான்‌ வெட்கமும்‌ வேதனையும்‌ அடைகிறேன்‌”. என்றான்‌ புளோட்டைனஸ்‌. “அழியக்கூடிய உடல்‌ ஆன்மாவைப்‌ பளுவாக்குகின்றது. இந்த மண்குடிசை சிந்தனை நிறைந்த மனத்தை அழுத்துகிறது” என்பது சாலமோனின்‌ ஞானம்‌ (9:15). எனினும்‌ உடலும்‌ ஆன்மாவும்‌ இணைந்ததே மனித வாழ்வு. எனவேதான்‌ உடலை இறைவனின்‌ ஆலயமாகப்‌ பேண வேண்டியது என்கிறார்‌ பவுல்‌. நமது உடல்‌, ஆன்மாவுடன்‌ நன்மைக்கோ அல்லது தீமைக்கோ ஒத்துழைக்கிறது. இந்த அடிப்படையில்‌ தான்‌ தீர்ப்பு அளிக்கப்படும்‌. மரணத்திற்குப்‌ பிறகு பேறுபலன்களைக்‌ கூட்டவோ, பரிகாரம்‌ செய்து தண்டனையைக்‌ குறைக்கவோ அவரால்‌ முடியாது. எனவேதான்‌ வேதனை தளத்திலே வெந்துகொண்டிருக்கும்‌ ஆன்மாக்கள்‌ நம்‌ உதவியை நாடுகின்றனர்‌. இவர்களுக்கு நாம்‌ உதவுவதுடன்‌, நமது மரணத்திற்குப்‌ பிறகு இதே நிலை நமக்கு வராதபடி காத்துக்கொள்வதும்‌ நமது கடமையாகும்‌. என்‌ பாவங்களுக்கு வேண்டிய அளவு நான்‌ உத்தரித்துவிட்டேனா?

நம்பிக்கையை இழக்காமல்‌ இவ்வுலகைவிட்டுக்‌ குடிபெயர்ந்து ஆண்டவரது வீட்டில்‌ குடியேறுவதை விரும்புகிறோம்‌.

நற்செய்தி : மத்‌ 25 : 31- 46

அனைத்து ஆன்மாக்கள்‌ விழாவுக்கெனப்‌ பல வாசகங்கள்‌ தரப்பட்டுள்ளன. பொதுத்தீர்வை பற்றிய வாசகம்‌ நம்‌ தியானத்திற்காகத்‌ தேர்ந்தெடுக்கப்‌ பட்டு ஈண்டு விளக்கமுறுகிறது.

இறைவன்‌ எதிர்பார்ப்பது

இறைவன்‌ நம்‌ அனைவரிடம்‌ இருந்து எதிர்பார்ப்பது நமது பலிகளல்ல, நமது கொண்டாட்டங்களல்ல, நமது விழாக்களும்‌ பவனிகளுமல்ல, நமது தீப தூப மலர்க்‌ காணிக்கைகளுமல்ல; மாறாக, “நீதியைத்‌ தேடுதல்‌, ஒடுக்கப்‌ பட்டோருக்கு உறுதுணையாதல்‌, திக்கற்றவருக்கு வாழ்வு வழங்கல்‌, கைம்பெண்களுக்கு உதவல்‌” முதலியனவே (காண்‌ : எசா. 1 : 11-20). ப.ஏ. இல்‌ பலமுறை அழுத்திக்‌ கூறப்படும்‌ இவையன்ன அன்புச்‌ செயல்களே (இசை 58: 7 ; யோபு22 : 6 : 7; 31: 17, 19-21) இறைவன்முன்‌ நம்மை நீதிமான்களாக்கத்‌ தக்கன; இறைவனிடம்‌ நமக்கு மீட்பைப்‌ பெற்றுத்தர வல்லன. எனவே நமது அன்றாட வாழ்வு, அன்பு, இரக்கம்‌, பரிவு, நீதி ஆகிய மலர்களால்‌ தொடுக்கப்படும்‌ ஒரு முடிக்கப்படாத நெடிய பூமாலையாக அமையுமா? “அன்பு மட்டும்‌ செய்‌; வேறெதுவும்‌ நீ செய்யலாம்‌” என்ற அகுஸ்தீனாரின்‌ வாக்கு நமக்கு வழிகாட்டியாக அமையுமா?

சிறு காரியங்களில்‌ அன்பு

நம்மில்‌ பலர்‌ தம்‌ அன்பைப்‌ பிறருக்கு வெளிப்படுத்தப்‌ பெரிய தியாகங்கள்‌ செய்யக்‌ காத்திருக்கிறோம்‌. இது “ஒடு மீன்‌ ஒட உறு மீன்‌ வருமளவும்‌ வாடியிருக்குமாம்‌ கொக்கு” என்பது போல்‌ ஆகிவிடக்‌ கூடாது. ஆண்டவர்‌ நம்மிடம்‌ கேட்கும்‌ அன்பு சிறு சிறு காரியங்களை அடுத்தது. பல துளி பெருவெள்ளமல்லவா? பசியென வந்தவனுக்குப்‌ புசியென ஒரு கை உணவளித்தல்‌, மூன்று வேளை வயிராற உண்டு மகிழும்‌ நமக்கென்ன பெரிய காரியமா? தாகமென்று தவிப்பவனுக்கு ஒரு குவளை தண்ணீர்‌ தருவது, நாள்‌ முழுவதும்‌ காப்பி, தேநீர்‌ என்றிருக்கும்‌ நமக்கு முடியாததொன்றா? இவையன்ன சிறுசிறு அன்புச்‌ செயல்கள்‌ செய்ய நமக்கு ஆயிரமாயிரம்‌ வாய்ப்புகள்‌ அன்றாடம்‌ வருகின்றன. இவைகளைச்‌ செய்யாது, பெரிய வாய்ப்புக்களுக்காகக்‌ காத்திருப்பது, நாம்‌ சிறிய நன்மைகள்‌ கூடச்‌ செய்ய இயலாது நம்மைத்‌ தடுத்து விடுகிறது; பெரிய வாய்ப்புகளும்‌ நமக்குக்‌ கிட்டாது நம்மை ஏமாற்றிவிடுகின்றன. எனவே பேரையும்‌ புகழையும்‌ எதிர்பாராது அன்றாட வாழ்வில்‌ அன்புச்‌ செயல்கள்‌ புரிய நமக்குக்‌ கிடைக்கும்‌ வாய்ப்புகளைத்‌ தொடர்ந்து பயன்படுத்துவோம்‌.

பலன்‌ எதிர்பாரா அன்பு

இன்றைய வாசகத்தில்‌ கூறப்பட்டுள்ள அன்புச்‌ செயல்கள்‌ அனைத்தும்‌ பயன்கருதிச்‌ செய்யப்பட்டனவல்ல என்பது தெளிவு. “ஆண்டவரோ எப்போது நீர்‌ பசியாயிருக்கக்‌ கண்டு உணவு கொடுத்தோம்‌? தாகமாய்‌ இருக்கக்கண்டு குடிக்கக்‌ கொடுத்தோம்‌?” (25 : 37) என்ற வினாக்களிலிருந்து, இந்நற்செயல்கள்‌ புரிந்தவர்கள்‌ பதிலையோ, சன்மானத்தையோ எதிர்பார்க்கவில்லையென்பது புலனாகின்றது. எனவே ஆண்டவருக்காக, அவர்‌ பெயரிலே எளியோருக்கு அன்பு காட்டுவது சாலச்சிறந்ததெனினும்‌, ஏழைகள்‌ நமது சகோதரர்கள்‌, நம்மைப்போன்று மனிதத்‌ தன்மையுடன்‌ வாழவேண்டியவர்கள்‌, அவர்களுக்கு உதவுவது நமது கடன்‌ என்பதை உணர்ந்து செயல்படுவதும்‌ விரும்பத்தக்கதாகும்‌. எனவே பலன்‌ கருதாது, வாய்ப்புக்‌ கிடைத்தபொழுதெல்லாம்‌ அன்பாக நினைப்போம்‌. அன்புச்‌ சொற்களைப்‌ பேசுவோம்‌, அன்புச்‌ செயல்கள்‌ புரிவோம்‌.

அது கடவுளுக்கே செய்யும்‌ அன்பு

கண்காணாத கடவுளுக்கு நாம்‌ நேர்முகமாக அன்பு செய்தல்‌ இயலாது. காணும்‌ நம்‌ அயலாருக்கு நாம்‌ அன்பு காட்டும்‌ போதெல்லாம்‌ அது நாம்‌ கடவுளுக்கே செய்யும்‌ அன்பின்‌ அருட்சாதனமாகிறது. “சின்னஞ்சிறிய என்‌ சகோதரருள்‌ ஒருவனுக்கு நீங்கள்‌ இவற்றைச்‌ செய்தபோதெல்லாம்‌ எனக்கே செய்தீர்கள்‌” (25:40) என்ற இயேசுவின்‌ சொற்கள்‌ நம்‌ ஒவ்வொரு அன்புச்‌ செயலையும்‌ முத்திரையிடுகின்றன. “ஏழையின்‌ சிரிப்பிலே இறைவனைக்‌ காண்போம்‌” என்பது எவ்வளவு உண்மையாகிறது! இறந்தோருக்கு நாம்‌ செய்யும்‌ செபம்‌, இருப்போருக்காக நாம்‌ செய்யும்‌ அன்புச்‌ செயல்கள்‌ வழி வெளிப்படுவதாக.

எனக்கே செய்தீர்கள்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு ser