மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

திருவருகைக்காலம் 4ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-1 அரசர்கள் 17:10-16|எபிரேயர் 9:24-28|மாற்கு 12:38-44

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



இரண்டு உள்ளங்களின் மகிழ்வு நான்கு கண்களின் சந்திப்பு.

ஒரு முறை காட்டில் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இடையே சண்டை வந்தது. இந்தச் சண்டையில் ஒரு வெளவால் மட்டும் ஒதுங்கிக் கொண்டது. சண்டையில் விலங்குகள் வெற்றி பெற்றன. உடனே வெளவால் விலங்குகளிடம் சென்று நானும் ஒரு விலங்குதான் என்று சொல்லி விலங்குகள் கொடுத்த விருந்தில் கலந்துகொண்டது. சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சண்டை வந்தது. வெளவால் ஒதுங்கியே வேடிக்கை பார்த்தது. இந்த முறை பறவைகள் வெற்றி பெற்றன. வெளவால் பறவைகளிடம் சென்று நானும் பறவை இனம்தான் என்று தனது சிறகுகளை விரித்துக் காட்டியது. சில மாதங்களுக்குப் பிறகு பறவைகளும், விலங்குகளும் சமரசம் செய்துகொண்டன. நம்மால் இந்தக் காடு சேதமடைகிறது. இது அமைதியான இடம், பல முனிவர்கள் இங்கு வந்து தியானம் செய்கிறார்கள். நம்மால் பிறருக்குத் துன்பம் வரக்கூடாது என்று கூறி சமரசம் செய்துகொண்டன. ஆனால், எந்தப் பக்கமும் சேராத வௌவாலை எக்காரணத்தைக் கொண்டும் நம்மோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று தீர்மானித்தன. அதனால்தான், வெளவால் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அஞ்சி இரவில் பறக்கின்றன என்று ஈசாப் கதை கூறுகிறது.

நாம் வாழும் சமுதாயத்தில் சந்தர்ப்பவாத வெளவால்களைப் பார்க்கிறோம். தேவைக்கு மட்டும் மற்றவர்களைப் பயன்படுத்திக் கொண்டு பிளாஸ்டிக் புன்னகையை உதடுகளில் உதித்துக் கொண்டு வாழும் போலி உறவுகளைப் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தியில் மரியா, எலிசபெத் சந்திப்பின் உறவில், எலிசபெத் மட்டுமல்ல, அவளது வயிற்றில் இருந்த குழந்தையும் மகிழ்வால் துள்ளியது. மீட்பரின் பிறப்பைப் பற்றிய மங்களச் செய்தியைப் பெற்றுக் கொண்ட மரியா மகிழ்வதையும், மீட்பரின் வருகையைப் பற்றி அறிய வந்த எலிசபெத் மகிழ்ச்சி அடைந்ததையும், மெசியாவின் பிரசன்னத்தை உணர்ந்து, தாயின் உதரத்தில் கருவாகி இருந்த குழந்தை அக்களிப்பால் துள்ளியதையும், இன்றைய நற்செய்தியில் சிந்திக்கிறோம். ஈரமான இதயங்கள் துன்பங்களையும் துயரங்களையும் பார்ப்பதில்லை ! இதயங்களின் உறவுகளையே பார்க்கிறது (லூக். 1:39 - 41). எலிசபெத்துக்கு உதவி தேவைப்படுகிறது என்று அறிந்தவுடன் தனது துன்பத்தைப் பார்க்காமல் உதவிட ஓடியவள் தான், இந்த மரியா. ஒரு ஆண் ஒரு பெண்ணை புரிந்து கொள்வதைவிட ஒரு பெண் தான் அடுத்த பெண்ணை நன்கு புரிந்துகொள்ள முடியும் என்பார்கள். இது மரியா எலிசபெத் சந்திப்பில் உண்மையாகிறது எனலாம்.

மரியா, எலிசபெத் என்ற இரண்டு உள்ளங்களின் மகிழ்வு நான்கு கண்களின் சந்திப்பு. இது இனிய உறவின் இதய சந்திப்பாக அமைந்தது. இறைமகன் இயேசுவும் இவ்வுலகத்தின் மீட்புக்காக மனிதனாகப் பிறந்தார். உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன் என்று தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார். இயேசுவின் வரவால் உலகம் மகிழ்ந்தது (எபி 10:7).

இறைச் சாயலை இழந்து போன மனித குலம், இயேசு மனித உரு எடுத்ததன் வழியாக, மனிதன் மீண்டும் இறைச்சாயலைப் பெற்று உயர்வடையச் செய்கிறது. கடவுளிடமிருந்து துண்டிக்கப்பட்ட உறவு சரி செய்யப்பட்டு கடவுளின் பிள்ளைகள் என்ற உயர் நிலையை இயேசுவின் மனிதப் பிறப்பால் மீண்டும் பெற்றுக்கொள்கிறோம். இயேசுவின் பிறப்பாலும், சந்திப்பாலும், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட பாமர மக்கள், ஏழைகள், நோயாளிகள், விபசாரிகள், இடையர்கள் போன்றோர் அனைவரும் இறையாட்சியின் முதல் குடிமக்கள் என்ற உரிமையைப் பெறுவதும், உயர்வடைவதும் இயேசுவின் பிறப்பாலே தான்.

மரியா, எலிசபெத் சந்திப்பு மகிழ்வைத் தந்தது. குழந்தை அக்களிப்பால் துள்ளியது (லூக். 1:41). இன்றைய சூழலில் மகிழ்ச்சி என்பது உதட்டில் பூசப்படும் சாயங்கள் மட்டுமே என்பதை நாம் பார்க்கிறோம். நாமும் செயல்படுகிறோம் என்பது உண்மை ! நமது மகிழ்ச்சி, உணவால், உடையால், பணத்தால், பதவியால் வருகின்ற மேலோட்டமான மகிழ்ச்சியா? அல்லது மற்றவர்களின் உணர்வுகளையும், உறவுகளையும் புரிந்து கொள்ளும் நிறைவான மகிழ்ச்சியா...? மரியா, எலிசபெத் இவர்களின் மகிழ்ச்சியைப் போல் அமைந்தால் அங்கே பகைமை, பகட்டு இருக்காது. உறவின் அடிப்படையில், மகிழ்வின் அடிப்படையில் துள்ளாத மனமும் துள்ளுவதாக அமையும்.

சுய ஆய்வு
மரியாவின் சந்திப்பால் எலிசபெத்தும் வயிற்றிலிருந்த குழந்தையும் மகிழ்ச்சியால் துள்ளியது. இயேசுவை சந்தித்த நோயாளிகள், ஏழைகள், பாவிகள், கைவிடப்பட்டோர் மகிழ்வைக் கண்டனர்.

இன்று நம்மைச் சந்திக்கும் மனிதர்களுக்கு இதமான ... இனிமையான வார்த்தைகளால் உறவின் மகிழ்வைத் தருகிறோமா...?

சில சந்திப்புகள் சங்கடத்தை உருவாக்குகிறது!
சில சந்திப்புகள் சந்தேகத்தை உருவாக்குகிறது!
சில சந்திப்புகள் சமாதானத்தை உருவாக்குகிறது! உங்கள் சந்திப்பு... ?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வாழ்வது யார் ? வீழ்வது யார்?

எதையும் எதிர்பாராமல் அன்னை மரியாவைப் போன்று பிறரை அன்பு செய்பவர்கள் (நற்செய்தி) வாழ்வார்கள். எதையாவது எதிர்பார்த்து பிறரை அன்பு செய்பவர்கள் வீழ்வார்கள்.

இந்த உண்மையை எடுத்துச் சொல்ல இதோ ஒரு கதை :

ஒரு காட்டுக்குள்ளே துறவி ஒருவர்! அவருக்கு வயிற்றுப்பசி! காட்டைவிட்டு நாட்டுக்குள் வந்து ஒரு பெரிய பணக்காரர் வீட்டுக் கதவைத் தட்டினார்! அவர் கதவைத் தட்டிய நேரத்தில் அந்த வீட்டிலிருந்தவர்கள் ஏதோ ஒரு டி.வி. சீரியலைச் இரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பணக்காரர் வீட்டைவிட்டு வெளியே வந்து, இப்போது உமக்கு உணவு கொடுக்க நேரமில்லை, பிறகு வாரும் என்று கூறிவிட்டார். சரி பரவாயில்லை என்று சொல்லிவிட்டு துறவி, அந்தப் பணக்காரர் வாழ்ந்த வீட்டுக்கு எதிரேயிருந்த ஒரு குடிசையின் கதவைத் தட்டினார்.

வயிற்றுப் பசி என்றார் அந்தத் துறவி. உடனே அந்த வீட்டிலிருந்த ஏழை அவரை அழைத்து அமரவைத்து, அவர் வீட்டிலிருந்த உணவைப் பரிமாறினார். துறவிக்கு மிக்க மகிழ்ச்சி! என் வயிறு நிறைந்துவிட்டது! உனது வாழ்வு நிறைய நான் ஏதாவது கொடுக்க விரும்புகின்றேன். நீ மூன்று வரங்களைக் கேள், நான் தருகின்றேன் என்றார். அந்த ஏழை மனிதரோ, ஐயா! நான் எதையும் எதிர்பார்த்து யாருக்கும் உதவி செய்வதில்லை! இல்லாதவர்களோடு பகிர்ந்துகொள்வது என் கடமை என நினைத்து நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். நான் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன். எனக்கு எந்த வரமும் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார். ஆனால் துறவியோ, சரி பரவாயில்லை, உனக்கு ஆசியளித்துவிட்டுச் செல்கின்றேன் எனக்கூறி கையை உயர்த்தினார். அவர் கையை உயர்த்திய உடனே அந்தக் குடிசை கோபுரமாக மாறியது. பெரிய மாளிகையாகிவிட்டது. துறவி காடு திரும்பினார்.

குடிசைக்கு எதிராக இருந்த பணக்காரனுக்கு, ஐயோ ஏமாந்து போய்விட்டோமே என்ற ஏக்கம்!

காரை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் சென்றான். துறவியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பிறகு துறவியைப் பார்த்து, ஒரு வேண்டுகோள் என்றான். துறவி, என்ன? என்றார்.

அதற்கு அந்தப்பணக்காரன், எதிர்வீட்டு ஏழைக்கு நீங்கள் மூன்று வரங்கள் தருவதாகச் சொன்னீர்களாம். அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் என்றான். ஆம். அதற்கு என்ன? என்றார் அந்தத் துறவி.

அதற்கு அந்தப் பணக்காரன் தயங்கியபடியே, அந்த மூன்று வரங்களையும் எனக்குக் கொடுத்தால் நல்லாயிருக்கும் என்றான்.

துறவி, சரி உனக்கு அந்த மூன்று வரங்களையும் நான் தருகின்றேன்! நீ சற்று கவனமாக இருக்க வேண்டும்! நீ என்ன நினைக்கின்றாயோ அது அப்படியே நடக்கும்! மூன்று முறை நினைக்கலாம்! கவனமாக இரு என்றார்.

சரி எனச் சொல்லிவிட்டு பணக்காரன் காரில் ஏறி அமர்ந்தான். காட்டுப்பாதை! முதல் நாள் பெய்த மழையால் சாலையில் நல்ல சேறு. சேற்றிலே கார் அகப்பட்டுக்கொண்டது.

பணக்காரனுக்கு கோபம் வந்துவிட்டது. காரைப் பார்த்து, இதெல்லாம் ஒரு காரு! இது இருந்தாலும் ஒன்றுதான் எரிந்தாலும் ஒன்றுதான் என்றான் - கார் எரிஞ்சி போச்சு!

முதல் வரம் போச்சு!

நல்ல வெயில். வியர்த்துக்கொட்டியது! கோபத்தோடு வீட்டுக்குள்ளே நுழைந்தான்! அவன் மனைவி நாற்காலியில் உட்கார்ந்து ஏஸி ரூம்ல டி.வி. பார்த்துக்கொண்டிருந்தாள்! பணக்காரன் அவளைப் பார்த்து, உனக்கு கணவன் மேலே கொஞ்சமாவது அக்கறை இருந்தா வீட்டைவிட்டு போனவரைக் காணோமே என்று என்னைத் தேடிப்பார்த்துவிட்டு வர வேலையாளை அனுப்பியிருக்கமாட்டே. எல்லாம் இந்த டி.வி. பண்ற வேலை! அதிலும் இந்த சீரியல் பண்ற வேலை! இந்த டி. வி. எப்போ நாசமா போவுமோ? என்றான்! உடனே டி.வி. ரிப்பேராகிவிட்டது.

அதைப்பார்த்த மனைவி, அட பாவி மனுஷா, சீரியல் போச்சுய்யா. நீ போனாலும் பரவாயில்லை. உனக்கு என்ன ஆச்சு? என்றாள். அதற்கு அந்தப் பணக்காரன் , என்ன பேச்சு ஓவரா போவுது! இதுக்கு மேல வாயத் துறந்தே! அறைஞ்சிடுவேன், வாயில பல் இருக்காது என்றான்! உடனே மனைவி வாயிலே இருந்த எல்லா பற்களும் கொட்டிவிட்டன! ஒரே வினாடியிலே மனைவி கிழவியாகிவிட்டாள்.

கதை முடிந்தது! கருத்து என்ன?

எதிர்பாராமல் அன்பு செய்பவர்கள் வாழ்வார்கள்; எதிர்பார்த்து அன்பு செய்பவர்கள் வீழ்வார்கள்.

இன்றைய நற்செய்தியின் வழியாக அன்னை மரியா, நமக்கு வழங்கும் அருள்வாக்கு என்ன? என்னைப் போலே நீங்கள் எதையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்யுங்கள், அன்பு காட்டுங்கள்; அப்போது வாழ்வீர்கள் என்கின்றார்!

மரியா எதையுமே எதிர்பார்க்காமல் பிறரை அன்பு செய்தவர்!

இதோ ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின் படியே எனக்கு நிகழட்டும் என்றார். அப்போது வானதூதரிடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை.

கானாவூரில், இதோ இரசம் தீர்ந்துவிட்டது என்றார். அப்போது மணமக்களிடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை!

மலைநாட்டு மங்கை எலிசபெத்தை தேடிச்சென்று வாழ்த்தினார். அப்போது எலிசபெத்திடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை!

கல்வாரி மலையிலே உலக மாதாவானார். அப்போதும் உலக மக்களிடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை.

நல்லாயரான (முதல் வாசகம்) இயேசு, தனது உடலை உலகுக்கு அளித்த ஆண்டவர் (இரண்டாம் வாசகம்) எதிர்பார்க்காமல் அன்பு செய்யும் அனைவரின் தேவைகளையும் கவனித்துக்கொள்வார்.

மேலும் அறிவோம் :

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது (குறள் : 103).

பொருள் : எந்தப் பயனையும் எதிர்பாராமல் ஒருவர் செய்த பேருதவியின் பயன்பாட்டை ஆராய்ந்தால் அந்த நன்மை ஆழ்கடலைக் காட்டிலும் பெருஞ்சிறப்பு வாய்ந்தது ஆகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை

ஓர் அப்பா தமது ஐந்து வயது மகனைத் தமது வீட்டுக்கு முன்னால் இருந்த ஒரு வேப்ப மரத்தின் கிளையில் அமரச் சொன்னார், பின்பு அவனைக் கீழே குதிக்கும்படி கேட்டார். அவன் கீழே விழாமல் அவனைத் தாங்கிப் பிடித்துக் கொள்வதாகவும் அவனுக்கு வாக்குறுதி அளித்தார். சிறுவன் முதலில் தயங்கினாலும், பின் தன்னுடைய அப்பாவை நம்பிக் கீழே குதித்த போது, அவனுடைய அப்பா அவனைத் தாங்கிப் பிடிக்கவில்லை , கீழே விழுந்த சிறுவன் கால் பிசகி வலி பொறுக்க முடியாமல் அழுதான். ஆனால் அவனுடைய அப்பாவோ சிரித்துக் கொண்டு அவனிடம், "மகனே! உலகில் யாரையும் நம்பாதே; உன் அப்பனையும் நம்பாதே. இதுதான் நான் உனக்குக் கற்றுக் கொடுக்க விரும்பிய பாடம்" என்றார்!

இன்றைய உலகில் மனிதர் மனிதரை எளிதாக நம்புவதில்லை . இந்நிலையில் கடவுள் நம்பிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. இத்தகைய நிலை வரும் என்பதை முன்கூட்டியே அறிந்த இயேசு கிறிஸ்து. "மானிட மகன் வரும்போது நம்பிக்கையைக் காண்பாரோ?" (லூக் 18:8) என்னும் கேள்வியை எழுப்பிவிட்டுச் சென்றுள்ளார்.

திருவருகைக் காலத்தின் இறுதி ஞாயிறு அன்று “நம்பிக்கையின் நங்கையாகிய” மரியாவைத் திருவழிபாடு நம்முன் நிறுத்துகிறது. மரியாவின் தனிச் சிறப்பு என்ன? “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" (லூக் 1:45) என்று மரியாவிடம் இன்றைய நற்செய்தியில் எலிசபெத்து அறிக்கையிடுகிறார், கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மரியா நம்பினார். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மீக்கா கூறியதை நம்பினார். யூதாவின் குடும்பங்களில் மிகச் சிறியது எனக் கருதப்படும் பெத்லகேமிலிருந்து மெசியா தோன்றுவார். தம் மந்தையை மேய்ப்பார். மக்கள் அச்சமின்றி வாழ்வர் (காண். மீக்கா 5:2-5).

அனைத்துக்கும் மேலாக "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" (லூக் 1:37) என்னும் வானதூதரின் வார்த்தையை மரியா நம்பினார். அந்த நம்பிக்கையின் விளைவாகக் கன்னிமையில் மீட்பரின் தாயாகும் பேறு பெற்றார், "கன்னி நம்பினார்; கன்னி நம்பிக் கருவுற்றார். உடலால் கருவுறு முன் உள்ளத்தால் கருவுற்றார். அவர் உடலில் தாங்கிய கிறிஸ்துவைவிட உள்ளத்தில் தாங்கிய "கிறிஸ்து மேலானவர். ஏனெனில் உடலில் கிறிஸ்துவை பத்து மாதங்கள் மட்டுமே சுமந்தார். ஆனால் உள்ளத்திலோ கிறிஸ்துவை ஆயுள் முழுவதும் சுமந்தார் " (புனித அகுஸ்தினார்).

வெளிநாட்டிலிருந்து திருச்சிக்குச் சுற்றுலா பயணிகளாக வந்த ஒரு காதல் ஜோடியை நான் சந்தித்தபோது அவர்களிடம், "நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?" என்று கேட்டதற்கு அவர்கள். "ஆலயத்தில் இருக்கும் கடவுளைவிட எங்கள் அகத்தில் இருக்கும் கடவுளை நம்புகிறோம்” என்று அவர்கள் கூறியது எனக்கு வியப்பளித்தது.

"மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்" (லூக் 2:19) என்று நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.

"உடலில் 'சுகர்' இருந்தாலும் ஆபத்து; உள்ளத்தில் 'ஃபிகர் ' இருந்தாலும் ஆபத்து” என்று சொல்லப்படுகிறது, நமது உள்ளத்தில் கிறிஸ்து குடியிருக்கிறாரா? அல்லது வேறு "ஃபிகர்" குடியிருக்கிறதா ? ஆண்டுதோறும் கிறிஸ்துவைக் குடிலில் பிறக்கச் செய்வதால் என்ன பயன்? நாள்தோறும் அவரை நமது உள்ளத்தில் குடி வைக்கும் வண்ணம் மாயா நம்மை அழைக்கின்றார்.

ஒரு குருத்துவக் கல்லூரியில் மரியியல் பேராசிரியர் மாணவர்களிடம், "மரியா 'ஆகட்டும்' என்று சொல்லாதிருந் திருந்தால் என்ன நடந்திருக்கும்?" என்று கேட்டதற்கு, "போரடிக்கும் உங்கள் மரியியல் வகுப்புகள் நடைபெறாது" என்று அவர்கள் சொன்னார்கள்! பேராசிரியர் எதிர்பாராத பதில்!

மரியா 'ஆகட்டும்' என்றார். "வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்” (யோவா 1:14). இன்றைய இரண்டாம் வாசகத்தில், "என் கடவுளே உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்" (எபி 10:7) என்று சொல்லிக்கொண்டு இவ்வுலகிற்கு வந்த கிறிஸ்து கெத்சமனித் தோட்டத்தில் 'ஆகட்டும்' (மத் 6:39) என்றார்; உலகம் மீட்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவையும் அவர் தாய் மரியாவையும் இயக்கிய உந்து சக்தி, உள்ளுயிர் "ஆகட்டும்” என்ற தாரக மந்திரம்.

நாம் கடவுளை உண்மையாகவே நம்பினால் அவருடைய விருப்பத்திற்கு 'ஆகட்டும்' என்று துணிவுடன் சொல்ல வேண்டும். "உம் திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக” (மத் 6:10). 'நம்பிக்கையின் தந்தை' என்று அழைக்கப்படும் ஆபிரகாம், தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார் (எபி 11:8), தமக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கைக்கு இடமில்லா நிலையிலும் கடவுளை நம்பினார் (உரோ 4:18-20), தமக்குப் பிறந்த வாக்குறுதியின் ஒரே மகன் ஈசாக்கையும் பலியிட அவர் தயங்கவில்லை .

சொத்தையும் சுகத்தையும் இழந்த யோபு கடவுள்மீது நம்பிக்கை இழக்கவில்லை. "அவர் என்னைக் கொன்றாலும் கொல்லட்டும்” (யோபு 13:15). "காயப்படுத்தினாலும் கட்டுப்போடுபவர் அவரே. அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே" (யோபு 5:18) என்று அவரால் சொல்ல முடிந்தது.

கடவுளை நம்புவோர்க்கு மற்றவர்களைவிட அதிகம் துன்பங்கள் வரும். ஏன்? அழிந்துபோகும் பொன்கூட நெருப்பில் புடமிடப்படுகிறது. அப்படியானால், அதைவிட விலையுயர்ந்த நமது நம்பிக்கை புடமிடப்பட வேண்டும் (1 பேது. 1:7) 'உலகை வெல்லுவது நமது நம்பிக்கையே' (1 யோவா 5:4). "எந்நிலையிலும் நம்பிக்கையைக் கேடயமாகப் பிடித்துக்கொண்டு தீயோனின் தீக்கணைகளை அணைத்துவிட முடியும்" (எபே 6:16).

- கடவுள் நம்பிக்கையுடன் தன்னம்பிக்கையும் இணைந்து செல்ல வேண்டும். “நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்; இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒருநாளில்." கைரேகைகளை நம்பி வாழ்வது முட்டாள் தனம்; 10 விரல்களே நமது மூலதனம்! முயற்சித் திருவினையாக்கும்.

நிலக்கரி, வைரம் ஆகிய இரண்டுமே கரி வகையைச் சேர்ந்தவை; பூமிக்கடியில் இருக்கிறது. பூமியின் அழுத்தம் பொறுக்க முடியாமல் வெளியில் வந்த கரி. நிலக்கரி, பல நூறு ஆண்டுகள் அழுத்தத்தைப் பொறுத்துக்கொண்ட கரிதான் வைராமாகிறது. துன்பத்தின் முடிவு இன்பம், வாழ்க்கையில் சோதனைகள் வருவது சிரமப்படுத்த அல்ல. மாறாகப் பட்டை தீட்ட !

நம்பிக்கையின் விண்மீன், புதுயுகம் படைத்த புதிய ஏவா மரியன்னையைப் பின்பற்றி 'ஆகட்டும்' என்று துணிந்து சொல்வோம்; அகிலத்தை மாற்றி அமைப்போம்; ஆனந்தம் அடைவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கிறிஸ்துமஸ் எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் வாழ்த்து... பகிர்ந்து மகிழ்ந்திருக்கிறோம். கிறிஸ்துமஸ் எச்சரிக்கை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இதோ குழந்தை இயேசுவே கொடுக்கும் ஒரு கிறிஸ்துமஸ் எச்சரிக்கை.
''என் பிறப்பு நாள் எச்சரிக்கை இது!” மத அமைப்பிற்கப்பால் மனிதனானவன் நான்.
என்னையே இழந்து இகத்தில் எழுந்தவன்! ஏழ்மை என் உடன்பிறப்பு, வறுமை ஆருயிர் நண்பன். கோவிலில் நான் குழந்தையாகப் பிறக்கவில்லை,
மாட்டுத் தொழுவத்தில் மழலையாக மலர்ந்தேன்.
செல்வத்தில் திளைத்துச் சிரித்துத் தினம் மகிழ...
சொத்துக்களால் சுகம் காண விழையும்...
சோதர சோதரிகளே எனது பிறப்பை
எப்படி நீங்கள் ஆலயத்தில் கொண்டாடலாம்?
எச்சரிக்கிறேன். அசிங்கப்படுத்தாதீர்கள் என்னை.
துணிவிருந்தால் சேரிக்கு வாருங்கள்.
சேர்ந்து கொண்டாடுவோம்.
எனது பிறப்பில் இணைந்து மகிழ்வோம். எச்சரிக்கிறேன்.
அலங்கார ஆலயத்தில் எனது பிறப்பைக்
கொண்டாடி அசிங்கப்படுத்தாதீர்கள் என்னை.
எச்சரிக்கிறேன்''. ( நன்றி: திருஇருதயத்தூதன்)

மருத்துவமனையில் பிறந்தேன் என்பதற்காக, ஒவ்வொரு பிறந்த நாளையும் கொண்டாட மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டுமா என்ன !
என்றாலும் இயேசுவின் மன உணர்வு... ...
பொருட்படுத்தாமல் இருக்க முடியாது.

காலிழந்து நின்றால் தோள் கொடுக்கும் உள்ளம்
கண்ணிழந்து நின்றால் கை கொடுக்கும் உள்ளம்
ஏழை என்று கண்டால் ஏற்றுக் கொள்ளும் உள்ளம்
இல்லை என்று கேட்டால் அள்ளிக் கொடுக்கும் உள்ளம்

ஆலயமோ, அடுத்திருக்கும் சேரியோ.... கனிவு கொண்ட இவ்வுள்ளங்கள் உலகில் இருக்கும் வரை, தெய்வம் மீண்டும் மீண்டும் பிறக்கத்தான் செய்கிறார்.

கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்பது என்ன? கடவுள் தன் பேரன்பை மனிதனோடு எப்படிப் பகிர்ந்து கொள்கிறார் என்பது தானே! அந்த அன்பைப் பெற்று, அனுபவிக்கிற நாம் எப்படிப் பிறரோடு பகிர்ந்து கொள்வது என்பதன் வெளிப்பாடுதான் எலிசபெத்து, அன்னை மரியா இவர்களின் இனிய சந்திப்பு.

இறை அனுபவம் பெற்ற இரு பெண்கள் சந்திக்கிறார்கள்; தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எலிசபெத்துக்கு இறைவன் செய்த மாபெரும் செயலைக் குறித்து மகிழ்ந்து நிற்கும் மரியா, “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" (லூக்.1:43) என்று வியந்து போற்றும் எலிசபெத்து. ஒருவர் கணவனை அறியாத கன்னிப் பெண், மற்றவர் கருவுற இயலாத வயதான மலடி. இரண்டு பேருமே தங்கள் வயிற்றில் சுமக்கும் கருவில் கடவுளின் அருளைக் கண்டவர்கள். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்ற கடவுளின் ஆற்றல் கொண்டவர்கள்.

இறை அனுபவத்தின் வெளிப்பாடு பிறரோடு அவ்வனுபவத்தைச் செயல் மூலம் பகிர்ந்து கொள்வதாகும். தன்னிலே இறைவனை உணர்பவர் பிறரிலும் இறைவனைச் சந்திப்பார். அவரின் சொல்லிலும் செயலிலும் பிறரன்பு மிளிரும்; மனித நேயம் மலரும்!

அன்னை மரியாவின் ஆன்மீகம், அவளது புனிதம் இரு அம்சங்களைக் கொண்டது:

1. இறைவன் நோக்குடைய திருவுளம்.
"நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்ற அர்ப்பணத்தில் பார்க்கலாம்.

2. மனித நேய நோக்குடைய பிறர்பணி.
எலிசபெத்துக்கு உதவ விரைந்த நிகழ்விலும்,
ஏன் கானாவூர் திருமணத்திலும் காணலாம்; கல்வாரிச் சிலுவையடியிலும் சிந்திக்கலாம்!

எந்த பக்தி முயற்சியும் இறைவனை நோக்கி மேலே, மனிதனை நோக்கி கீழே என்று இருவழிப் பயணமே!

ஓர் ஆடு தொலைந்து விட்டது. அதை அன்போடு வளர்த்த பெண் தேடுகிறாள். பிரிவைத் தாளாமல் ஊர் ஊராகத் தேடுகிறாள். அது பற்றிக் கேள்விப்பட்ட கசாப்புக் கடைக்காரனும் தேடுகிறான். அது கிடைத்தால் காசாக்கலாமே என்ற நினைப்பு. தேடும் முயற்சியில் இருவரும் சந்திக்கிறார்கள். அப்போது ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கேட்ட கேள்வி: "ஆட்டைப் பாத்தாயா?''

அவளது சந்திப்பு - வாழ்வு தரும் சந்திப்பு - வளர்க்க வேண்டுமென்று!
அவனது சந்திப்பு - அழிவு தரும் சந்திப்பு - கொல்ல வேண்டுமென்று!

விவிலியத்தில் பல சந்திப்புகள். ஏரோது மூன்று ஞானிகளைச் சந்திக்கிறான்; ஆர்வத்தோடு வினவுகிறான். பின்னணி கொலைவெறி! பவுல் இயேசுவைச் சந்திக்கிறார். நேர்மையோடு என்றாலும் தீமை செய்த அவரைத் தடுத்து இயேசுவால் ஆட்கொள்ளப்பட்ட சந்திப்பு. அதன் விளைவு?

இயேசுவைச் சந்தித்தார். வாழ்வு பெற்றார். இயேசுவில் மனிதனைச் சந்தித்தார்.

- “எல்லாருக்கும் எல்லாமும் ஆனேன்” என்று பிறருக்காகத் தன்னையே தியாகம் செய்யும் அளவுக்கு!
- "யூதனென்றும் கிரேக்கனென்றும், ஆண் என்றும் பெண் என்றும் இல்லாத சமத்துவ உலகைப் படைக்கத் துடிக்கும் அளவுக்கு.

வாழ்க்கை கடவுள் தந்த கொடை. நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம். நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழச் செய்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

முதல் கிறிஸ்மஸ் எப்படி இருந்திருக்கும்?

கிறிஸ்மஸ்’ விழாக்காலத்தின் உயிர்நாடியாக விளங்கும் பல பாடல்களில், அதிகம் புகழ்பெற்ற ஒரு பாடல், "அமைதியான இரவு" என்று துவங்கும், "Silent Night" என்ற பாடல். இப்பாடலுடன் தொடர்புடைய சில எண்ணங்கள், நம் சிந்தனைகளின் முதல் பகுதியாக அமைகின்றன.

ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 24ம் தேதி இரவு, ஆஸ்திரியா நாட்டின் ஒபென்டோர்ஃப் (Obendorf) என்ற ஊரில், ஒரு சிற்றாலயத்திற்கு முன், மக்கள் கூடி வருவர். குறிப்பிட்ட நேரத்தில், அச்சிற்றாலயத்திற்கு முன் இருவர் வந்து நிற்பர். ஒருவர் 'கிட்டார்' இசைக்கருவியை மீட்ட, இருவரும் சேர்ந்து, "Silent Night" பாடலை, அது, முதன்முதலில் இயற்றப்பட்ட ஜெர்மன் மொழியில், "Stille Nacht, Heilige Nacht" என்று பாடுவர். அதைத் தொடர்ந்து, அங்கு குடியிருப்போர் அனைவரும் இணைந்து, அப்பாடலை, அவரவர் மொழிகளில் பாடுவர். இவ்வாண்டு, இந்நிகழ்வு, இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், இப்பாடல் இயற்றப்பட்டு, முதல் முறையாக, ஒபென்டோர்ஃப் சிற்றாலயத்தில், 1818ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி இரவு பாடப்பட்டதால், இவ்வாண்டு, டிசம்பர் 24ம் தேதி, இப்பாடல், தன் 206வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.

கடந்த 206 ஆண்டுகளாக, மக்களைக் கவர்ந்துள்ள இப்பாடல், 300க்கும் அதிகமான மொழிகளில் பாடப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டு, UNESCO நிறுவனம், இப்பாடலை, கலாச்சார பாரம்பரிய சொத்து (Intangible Cultural Heritage) என அறிவித்துள்ளது. 'அமைதியான இரவு, புனிதமான இரவு' என்ற அழகிய உருவகங்களுடன் துவங்கும் இப்பாடலின் வரிகளை எழுதியவர், 25 வயதான ஜோசப் மோர் (Josef Mohr) என்ற இளம் அருள்பணியாளர். இதற்கு இசை அமைத்தவர், 30 வயதான Franz Xaver Gruber என்ற ஆசிரியர். அருள்பணி மோர் அவர்கள், இப்பாடலை எழுதியதன் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லையெனினும், அவர் வாழ்ந்த காலத்தில், 1815ம் ஆண்டு, இந்தோனேசியாவில், Tambora எரிமலையில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிப்பு, 1816ம் ஆண்டு, ஐரோப்பாவில் நிலவிய கடும் குளிரினால் உருவான பஞ்சம், மற்றும் 1803ம் ஆண்டு முதல், 1815ம் ஆண்டு முடிய நடைபெற்ற ‘நெப்போலியப் போர்கள்’ (Napoleonic Wars) ஆகியவை, இப்பாடலை எழுத அவரைத் தூண்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இயற்கைப் பேரிடர்கள் நடுவிலும், மனிதர்களால் உருவாக்கப்படும் போர்கள் நடுவிலும், நாம் இறைவனின் அமைதியைப் பெறவேண்டும் என்ற வேண்டுதலுடன், இப்பாடல், கடந்த 206 ஆண்டுகளாக, ஒவ்வொரு கிறிஸ்மஸ் காலத்திலும் தொடர்ந்து ஒலித்து வருகிறது.

அமைதி நிலவ வேண்டும் என்ற ஏக்கத்துடன் எழுப்பப்பட்டு வரும் இப்பாடல், ஏதோ ஒரு வழியில், உலக அமைதிக்கு வழி வகுத்துள்ளது என்பதற்கு, 1914ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி இரவு, ஒரு சான்றாக அமைந்துள்ளது.

1914ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் முதல் உலகப் போர் ஆரம்பமானது. அந்தப் போர் விரைவில் முடிந்து, வீரர்கள் எல்லாரும் கிறிஸ்மஸுக்கு வீடு திரும்புவர் என்றுதான் ஆரம்பத்தில் அனைவரும் நினைத்தனர். ஆனால், உண்மை நிலை விரைவில் புரிய ஆரம்பித்தது. டிசம்பரிலும் போர் தொடர்ந்தது. போரை முற்றிலுமாக நிறுத்த, அல்லது குறைந்த பட்சம் தற்காலிகமாவது நிறுத்துவதற்குத் தேவையான முயற்சிகள் ஆரம்பமாயின. பிரித்தானியாவைச் சேர்ந்த 101 இல்லத்தலைவிகள் இணைந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா நாடுகளில் இருந்த இல்லத்தலைவிகளுக்கு அனுப்பிய ஒரு மடல், போர் நிறுத்த முயற்சிகளை ஆரம்பித்து வைத்தன. இந்தப் போரை, "பயனற்றப் படுகொலை" (useless massacre) என்று கூறிய திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், போரில் ஈடுபட்டிருந்த அத்தனை நாட்டுத் தலைவர்களுக்கும், டிசம்பர் 7ம் தேதி, விண்ணப்பம் ஒன்றை அனுப்பினார். "விண்ணகத் தூதர்களின் பாடல்களை, கிறிஸ்மஸ் இரவில், இந்த உலகம் கேட்கவேண்டும். அதற்காகவெனினும், அந்த இரவில், துப்பாக்கிச் சப்தங்களை நிறுத்துங்கள்" என்று திருத்தந்தை விண்ணப்பித்திருந்தார்.

இல்லத் தலைவிகளும், திருத்தந்தையும் மேற்கொண்ட முயற்சிகள் ஓரளவு பயன் தந்தன. அதிகாரப் பூர்வமற்ற போர் நிறுத்தம், டிசம்பர் 24ம் தேதி காலையிலிருந்து கடைபிடிக்கப்பட்டது. அன்றிரவு, வழக்கத்திற்கும் அதிகமாக, குளிர் வாட்டியெடுத்தது. பிரித்தானியப் படைவீரர்கள், தாங்கள் தங்கியிருந்த பதுங்குக் குழிகளில் மெழுகுதிரிகளை ஏற்றிவைத்தனர். போர்க்களங்களில், இருளில் விளக்கேற்றுவது முட்டாள்தனம். விளக்குகள், எதிரிகளின் கவனத்தை ஈர்க்கும்; பதுங்கு குழிகள் தாக்கப்படும் என்ற போர்க்கள விதிகளை எல்லாம் பிரித்தானிய வீரர்கள் அறிந்திருந்தாலும், கிறிஸ்மஸ் இரவைக் கொண்டாட, விளக்குகளை ஏற்றி, "Silent Night" என்ற கிறிஸ்மஸ் பாடலைப் பாட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில், அருகிலிருந்த பதுங்குக் குழியிலிருந்து ஜெர்மானிய வீர்கள், அதே பாடலை, "Stille Nacht, Heilige Nacht" என்று, ஜெர்மன் மொழியில் பாட ஆரம்பித்தனர்.

இப்பாடலை இருவேறு மொழிகளில் பாடியவாறு, ஜெர்மானிய, பிரித்தானியப் படைவீரர்கள், எரியும் மெழுகு திரிகளைக் கையிலேந்தி, பதுங்குக் குழிகளைவிட்டு வெளியேறினர். பதுங்குக் குழிகளைவிட்டு வெளியேறும் எந்த வீரனும் கையில் துப்பாக்கி ஏந்தியபடியே வெளியேறவேண்டும்; தோல்வி அடைந்து சரண் அடையும்போது மட்டுமே, துப்பாக்கி ஏதுமின்றி, நிராயுதபாணியாய் தலைக்கு மேல் கரங்களை உயர்த்தியவண்ணம், வெளியேற வேண்டும் என்பவை, போர்க்களத்தில் பின்பற்றவேண்டிய விதிகள்.

ஆனால், 1914ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி இரவு, அந்தப் போர்க்களத்தில், "Silent Night" பாடல், போர்க்கள விதிகளை மாற்றியமைத்தது. ஆயுதங்களுக்குப் பதிலாக எரியும் மெழுகு திரிகளைத் தாங்கி வெளியே வந்தனர், இரு நாட்டு வீர்களும். தங்களிடம் இருந்த பிஸ்கட், ரொட்டி, சாக்லேட், பழங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து உண்டனர். ஒருவருக்கொருவர், வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்னர், மீண்டும் தங்கள் பதுங்குக் குழிகளுக்குத் திரும்பிச் சென்றனர். "நான் என் வாழ்வில் அனுபவித்த மிகச் சிறந்த கிறிஸ்மஸ் விருந்து இதுதான்" என்று, அவ்வீரர்களில் பலர், தங்கள் குடும்பத்தினருக்குக் கடிதங்கள் அனுப்பினர்.

1914ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி, கிறிஸ்மஸ் இரவில், "Silent Night" கிறிஸ்மஸ் பாடல், துப்பாக்கிச் சப்தங்களை மௌனமாக்கி, எதிரிகளை ஒருங்கிணைத்தது. நாம் வாழும் இன்றைய உலகில், பெரும் திருவிழாக் காலங்களிலும், துப்பாக்கிச் சப்தங்கள் ஒலிக்கின்றன. அதுவும், கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட மக்கள் கூடிவரும் கோவில்களில், தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

இவ்வுலகில் அமைதி உருவாகும் என்ற கனவுடன் பாடப்பட்டு வரும் 'அமைதியான இரவு' பாடல், தன் 206வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், இவ்வுலகம், அமைதியில் வாழ்வதற்குத் தேவையான அருளை, இன்று, மீண்டும் ஒருமுறை, இறைவனிடம் மன்றாடுவோம்.

நம் சிந்தனைகளின் இரண்டாம் பகுதியில், அன்னை மரியாவும், எலிசபெத்தும் சந்தித்த நிகழ்வின்மீது நம் கவனத்தைத் திருப்புவோம். கிறிஸ்மஸ் நெருங்கிவரும் நேரத்தில், பல பங்குகளில், பள்ளிகளில், கிறிஸ்மஸ் நாடகங்கள் அரங்கேறுவது வழக்கம். இந்நாடகங்களில், மரியாவுக்கு வானதூதர் தோன்றுவது, முதல் காட்சி. மரியா எலிசபெத்தைச் சந்திப்பது, இரண்டாவது காட்சி. பின்னர், மாட்டுத் தொழுவம், இடையர், மூவேந்தர் என்று... காட்சிகள் தொடரும்.

அழகான இக்காட்சிகளில் நடிப்பவர்கள் எல்லாரும் குழந்தைகள் என்பதால், இரசிப்போம், சிரிப்போம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன், இப்படி ஒரு நாடகம் முடிந்து திரும்பிவரும் வழியில், ஒரு நண்பர் திடீரென, "முதல் கிறிஸ்மஸ் இவ்வளவு அழகாக இருந்திருக்குமா?" என்ற கேள்வியை எழுப்பினார். நம்மைச் சிந்திக்கவைக்கும் கேள்வி இது.

முதல் கிறிஸ்மஸ் எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு அழகாக, மகிழ்வாக இருந்திருக்க வாய்ப்பில்லை. யூதேயா முழுவதும் உரோமைய ஆதிக்கமும், அராஜகமும் பரவியிருந்தன. இந்த அடக்கு முறைக்கு, உரோமைய அரசு, படை வீரர்களை அதிகம் பயன்படுத்தியது. அடுத்த நாட்டை அடக்கியாளச் செல்லும் படைவீரர்களால் அதிகம் பாதிக்கப்படுவது, அந்நாட்டில் இருக்கும் பெண்கள். பகலோ, இரவோ எந்த நேரத்திலும் இந்தப் பெண்களுக்குப் படைவீர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம். இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளம் கிராமத்துப் பெண் மரியா.

தன் சொந்த நாட்டிலேயே இரவும் பகலும் சிறையில் அடைக்கப்பட்டதைப்போல் உணர்ந்த மரியாவின் உள்ளத்தில் "இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழியைக் காட்டமாட்டாயா இறைவா?" என்ற வேதனை நிறைந்த கேள்வி விண்ணகத்தை நோக்கி எழுந்திருக்கவேண்டும். மரியா எழுப்பிவந்த வேண்டுதல்களுக்கு விடை வந்தது. எப்படிப்பட்ட விடை அது! மணமாகாத அவரை தாயாகுமாறு அழைத்தார் இறைவன்.

இது அழைப்பு அல்ல. தீர்ப்பு. மரணதண்டனையை வழங்கியத் தீர்ப்பு. மணமாகாத இளம் பெண்கள் தாயானால், அவர்களை ஊருக்கு நடுவே நிறுத்தி, கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்பது, யூதர்களின் சட்டம். இதை நன்கு அறிந்திருந்தார் மரியா. அதுவும் உரோமையப் படைவீரர்களால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகி, கருவுற்ற பல இளம்பெண்கள் இவ்வகையில் கொல்லப்பட்டதை மரியா நேரில் கண்டிருக்கவேண்டும். அவர்களில் சிலர், இளம்பெண் மரியாவின் தோழிகளாகவும் இருந்திருக்கக்கூடும். தாங்கள் செய்யாத ஒரு குற்றத்திற்காக, அந்த இளம்பெண்கள் கொடுமையாகக் கொல்லப்பட்டதைப் பார்த்த மரியா, பின்னர், தனிமையில் வந்து கதறி அழுதிருக்க வேண்டும். மணமாகாமல் தாயாகும் நிலைக்கு, இறைவன் தந்த இவ்வழைப்பிற்கு சரி என்று சொல்வதும், மரணதண்டனையைத் தனக்குத் தானே வழங்கிக்கொள்வதும், வலியச்சென்று, தூக்குக் கயிறை எடுத்து, கழுத்தில் மாட்டிக்கொள்வதும் ஒன்றுதான். இருந்தாலும், அந்த இறைவன் மேல் அத்தனை அதீத நம்பிக்கை அந்த இளம் பெண்ணுக்கு! பெரும் போராட்டத்தின் இறுதியில், 'இதோ உமது அடிமை' என்று சொன்னார் மரியா. அவரது நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் வானதூதர் இன்னொரு செய்தியைச் சொன்னார். அவரது உறவினராகிய எலிசபெத்து கருதரித்திருக்கிறார் என்பதே அச்செய்தி. குழந்தைப்பேறு இல்லாததால், ஊராரின் பழிச்சொற்களைக் கேட்டு, கேட்டு மனம் வெறுத்து, வீட்டுக்குள் தன்னையே சிறைபடுத்திக்கொண்ட எலிசபெத்தைச் சந்திக்க மரியா சென்றார். இந்நிகழ்வு இன்றைய நற்செய்தியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

லூக்கா நற்செய்தி 1: 39-45

இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் மரியாவும், எலிசபெத்தும் சொல்லித்தரும் பாடங்கள் பல உள்ளன. இவ்விருவரும் தங்கள் வாழ்வில் இறைவனைத் தேடியவர்கள். தன்னைத் தேடியவர்களைத் தேற்ற, இறைவன் அன்று வந்தார்; இன்று வருகிறார்; இனியும் வருவார் என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் ஓர் அற்புத விழாவே, கிறிஸ்மஸ். இது, மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் முதல் பாடம்.

இறைவன் நம் வாழ்வில் செயலாற்றும் பல்வேறு வழிகளை, இவ்விரு பெண்களின் வாழ்வும் சித்திரிக்கிறது. எலிசபெத்தின் வாழ்வில், மிக, மிகத் தாமதமாகச் செயல்பட்ட இறைவன், மரியாவின் வாழ்வில் ஒரு புயலென நுழைந்தார். மிகத் தாமதமாகவோ, அல்லது, புயல் வேகத்திலோ, வாழ்வில் காரியங்கள் நிகழும்போது, கூடவே கேள்விகள் பலவும் எழுகின்றன. ஏன் எனக்கு? ஏன் இப்போது? போன்ற கேள்விகள், மரியாவின் உள்ளத்திலும், எலிசபெத்தின் உள்ளத்திலும் கட்டாயம் எழுந்திருக்கவேண்டும்.

கேள்விகள் எழுவது இயற்கை. ஆனால், எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள், விளக்கங்கள் கிடைக்காது. மரியா வானதூதரைச் சந்தித்தபோதும், மரியா, எலிசபெத்தைச் சந்தித்தபோதும், ஒரு சில கேள்விகள், வெளிப்படையாகக் கேட்கப்பட்டன. பல கேள்விகள் அவர்கள் மனதில் அடைபட்டிருந்தன. கேள்விகள் கார் மேகங்களாகச் சூழ்ந்திருந்தாலும், அந்த மேகங்களிலிருந்து பெய்த இறைவனின் கருணை என்ற மழையில் அவர்கள் இருவரும் நனைந்தனர். கடவுளைக் கேள்விக் கணைகளால் துளைப்பதற்குப் பதில், கடவுளின் கருணை மழையில் நனைவது மேலான ஒரு வழி. இது, மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் இரண்டாவது பாடம்...

இவ்விருவருக்கும் இடையே நிகழ்ந்த அச்சந்திப்பு ஒருவரை ஒருவர் வாழ்த்துவதிலும், ஆசீர்வதிப்பதிலும், இறைவனைப் புகழ்வதிலுமே நிறைந்தது. "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" - லூக்கா 1: 42 என்று எலிசபெத்து மரியாவைப் புகழ்ந்த இச்சொற்களைப்போல், நாம் தினமும் ஒருவர் ஒருவரை வாழ்த்தினால், ஆசீர்வதித்தால், இந்த பூமியில் எவ்வளவு நலம் வளரும்! பிறரை வாழ்த்தும்போது, ஆசீர்வதிக்கும்போது நாமும் வாழ்த்தப்பெறுகிறோம், ஆசீர் பெறுகிறோம். வயதில் முதிர்ந்தவர்கள், "மவராசனா இரு" "மவராசியா இரு" என்று வாழ்த்தும்போது எழும் நிறைவு, கேட்பவரையும் நிறைக்கிறது, கொடுப்பவரையும் நிறைக்கிறது. மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் மூன்றாவது பாடம் இது.

2005ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருஅவையில் திருநற்கருணை ஆண்டு சிறப்பிக்கப்பட்ட வேளையில் தன் தலைமைப் பொறுப்பை ஏற்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அவ்வாண்டு மே 31ம் தேதி, அன்னை மரியாவின் வணக்க மாதத்தை நிறைவு செய்யும் செப வழிபாட்டில், அன்னை மரியாவும், எலிசபெத்தும் சந்தித்த நிகழ்வையும், திருநற்கருணை பவனியையும் இணைத்து, வழங்கிய அழகான எண்ணங்கள் நம் சிந்தனைகளை நிறைவு செய்கின்றன:

"இளம்பெண் மரியா, எலிசபெத்தைச் சந்திக்க மேற்கொண்ட பயணத்தை, வரலாற்றில் நிகழ்ந்த முதல் திருநற்கருணை பவனியாக நாம் கருதலாம். இறைவனை தன் கருவில் தாங்கியதன் வழியே, வாழும் நற்கருணைப் பேழையாக விளங்கிய மரியா, மக்களை மீட்க, இறைவன் இறங்கிவந்து தங்கிய உடன்படிக்கைப் பேழையாகவும் விளங்கினார். மரியாவும், எலிசபெத்தும் சந்தித்த வேளையில், அவர்களுக்கிடையே, முதல் நற்கருணை ஆசீர் நிகழ்ந்தது. அவர்கள் இருவர் மட்டும் அல்லாமல், அவர்கள் கருவில் வளர்ந்துவந்த குழந்தைகளும் மகிழ்வால் நிறைந்தனர். அம்மகிழ்வின் சிகரமாக, அன்னை மரியாவின் புகழ் பாடல் எழுந்தது."

இந்த கிறிஸ்மஸ் காலத்தில், குழந்தை இயேசுவை, நம் இல்லங்களிலும், கோவில்களிலும் ஓர் அலங்காரப் பொருளாக மட்டும் வைத்துவிடாமல், அவரை, நம் உள்ளங்களில் சுமந்துசெல்லும் பேழைகளாக மாறுவோம். கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் வேளையில், அன்னை மரியாவையும் எலிசபெத்தையும் போல, உள்ளார்ந்த அன்புடன், ஒருவர் ஒருவருக்கு, ஆசீர் வழங்குவோம், ஆசீர் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருவருகைக்காலம்‌ 4-ஆம்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (மீக்‌. 54-43)

மெசியாவைப்‌ பற்றிய இறைவாக்குப்‌ பகுதிகளில்‌ இதுவும்‌ ஒன்று. எசா. 7:14-இல்‌ குறிப்பிட்டுள்ளது போல இங்கும்‌ மெசியாவின்‌ பிறப்பு முன்னறிவிக்கப்படுகின்றது. வரலாற்று ரீதியாக நோக்கும்‌ போது மீக்காவின்‌ காலத்தில்‌ இஸ்ரயேரை ஆகாசு மன்னன்‌ ஆட்சி செய்து வந்தான்‌. அவனது ஆட்சி தீமை நிறைந்ததாய்‌ இருந்தது. இம்மன்னனுக்குப்‌ பதிலாகப்‌ புதிய நல்ல மன்னனை எழுப்புவார்‌ என்றும்‌, அவர்‌ கறைபடிந்த எருசலேமில்‌ அல்ல, பற்று உறுதி கொண்ட தாவீது அரசரின்‌ நகரான பெத்லகேமிலிருந்து தோன்றுவார்‌ என்றும்‌ மீக்கா கூறுகிறார்‌. இப்பகுறி மன்னன்‌ எசேக்கியாவின்‌ பிறப்பை முன்னறிவிக்கிறது எனினும்‌, மீட்பு வரலாற்றில்‌ இப்பகுதி கிறிஸ்துவின்‌ பிறப்பிடத்தை முன்னறிவிப்பதாகவும்‌ உள்ளது.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (எபி. 10:5-10)

கிறிஸ்துவின்‌ மேன்மை தெளிவாக அதே சமயம்‌ விரிவாகவும்‌ இதில்‌ எடுத்தியம்பப்படுகிறது. இன்றைய வாசகப்‌ பகுதியானது எவ்வாறு கிறிஸ்துவின்‌ வருகை பழைய பாவப்‌ பரிகாரப்‌ பலியைப்‌ பொருளற்றதாக மாற்றியது என்பதைக்‌ கூறுகிறது. பழைய ஏற்பாட்டு வசனங்களை மேற்கோளிட்டு கிறிஸ்துவில்‌ நம்பிக்கைக்‌ கொள்ள அழைக்கிறது.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (லூக்கா 1:39-44)

கன்னி மரியாள்‌ எலிசபெத்‌ இவர்களின்‌ சந்திப்பு இன்றைய நற்செய்தியாகத்‌ தரப்பட்டுள்ளது. தூய ஆவியினால்‌ கருத்தரிக்கப்பட்டபின்‌ கன்னி மரியாள்‌ எலிசபெத்தைக்‌ காணச்‌ செல்கிறாள்‌. எலிசபெத்தின்‌ இல்லத்திற்கும்‌, கன்னி மரியின்‌ இருப்பிடத்திற்கும்‌, ஏறக்குறைய 100 கி.மீ. தொலைவு இருக்கலாம்‌. தனது வாழ்த்தைப்‌ பரிமாறிக்‌ கொள்ள விழைகிறார்‌. ஏனெனில்‌ அக்காலத்தில்‌ குழந்தைப்‌ பேற்றைக்‌ கடவுளின்‌ கொடையாகக்‌ கருதினர்‌. எனவே கர்ப்பிணி பெண்களை வாழ்த்துவதை ஒரு பழக்கமாகக்‌ கொண்டுள்ளனர்‌. மேலும்‌ இப்பகுதியானது பழைய ஏற்பாட்டிற்கும்‌ புதிய ஏற்பாட்டிற்கும்‌ பாலமாக அமைந்துள்ளது. எவ்வாறெனில்‌ இறைவாக்கினரான திருமுழுக்கு யோவானைத்‌ தாங்கிய எலிசபெத்‌ பழைய எற்பாட்டைக்‌ குறிப்பதாகவும்‌, இயேசுவைத்‌ தாங்கியக்‌ கன்னி மரியாள்‌ புதிய ஏற்பாட்டைக்‌ குறிப்பதாகவும்‌ விவிலிய அறிஞர்கள்‌ புரிந்துக்‌ கொண்டு, இப்பகுதி புதிய, பழைய ஏற்பாட்டுகளை இணைக்கும்‌ பகுதியென மொழிகின்றனர்‌.

மறையுரை
உணர்வுகளை மதிப்போம்‌, உறவினை வளர்ப்போம்‌

10,000 மைல்களுக்கு அப்பால்‌ உள்ள அமெரிக்காவில்‌ வாழும்‌ பில்கேட்ஸை இணையதளம்‌ மூலம்‌ தெரியும்‌. ஆனால்‌ பக்கத்து வீட்டில்‌ இருப்பது அந்தோனிசாமியா? ஆரோக்கியசாமியா? என்று தெரியாது. கண்ணுக்குத்‌ தெரியாத அணுவிலிருந்து அண்டவெளியின்‌ கடைசி கிரகணம்‌ வரை கொஞ்சமாவது தெரியும்‌. ஆனால்‌ இப்பொழுது நான்‌ யார்‌? என்று நம்மைக்‌ கேட்டால்‌, கொஞ்சம்‌ வெடவெடுத்துப்‌ போய்விடும்‌.

என்ன முரண்பாடான உலகம்‌ பார்த்தீர்களா? தகவல்‌ தொழில்‌ நுட்பத்தால்‌ உலகத்தைச்‌ சுருக்கி விட்டோம்‌. அதே சமயம்‌ உறவுகளைத்‌ தொலைத்துவிட்டு, குட்டிக்குட்டித்‌ தீவுகளாய்ச்‌ சிதறிக்கிடக்கிறோம்‌.

பிரச்சனைகளைத்‌ தீர்க்கக்‌ கண்டுபிடித்தச்‌ சாதனங்களை இன்று பிரச்சனைகளைப்‌ பெற்றெடுக்கும்‌ அமுத சுரபிகளாகவே நம்மில்‌ பலர்‌ பயன்படுத்துகின்றனர்‌. ஏன்‌ இந்த அவலநிலை? இந்நிலையை மாற்றப்‌ போவது யார்‌? இதற்குத்‌ தீர்வு என்ன? இப்பேர்பட்ட வினாக்களுக்கு விடைகளைத்‌ தந்து, நம்‌ வாழ்விற்குச்‌ சில முன்னுதாரணங்களையும்‌ தருகின்றன இன்றைய வாசகங்கள்‌ அதிலும்‌ குறிப்பாக இன்றைய நற்செய்தி வாசகம்‌ நவீன உலகின்‌ கலகத்துக்கு ஒரு சரியான மருந்தைத்‌ தருகின்றது.

பெண்மையின்‌ மேன்மைக்கு மெருகூட்டும்‌ தாய்மைப்‌ பேற்றை இருபெண்கள்‌ பெற்றிருக்கிறார்கள்‌. அவர்கள்‌ முறையே தூய எலிசபெத்‌ மற்றும்‌ தூய கன்னிமரியாள்‌. இப்பெண்களின்‌ சந்திப்பு, இவர்களின்‌ உணர்வு பரிமாறுதல்கள்‌, கலந்துரையாடல்‌ எனப்‌ பல சிறப்பம்சங்களைத்‌ தன்னகத்தே இன்றைய நற்செய்தி வாசகம்‌ கொண்டுள்ளது.

நமது மறையுரைக்கு கன்னிமரியாள்‌ எலிசபெத்து அவர்களின்‌ சந்திப்பு மற்றும்‌ கலந்துரையாடலை எடுத்துக்கொள்வோம்‌. இவைகள்‌ நமக்குச்‌ சொல்லும்‌ பாடம்‌ என்ன என்பதையும்‌ ஆராய்வோம்‌.

அறிவு மற்றும்‌ உணர்வு என்ற இரு வேறுபட்டத்‌ தன்மைகளைக்‌ கொண்டதுதான்‌ மனித இனம்‌. இவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்று மறக்கப்படும்‌ போது இல்லை மறைக்கப்படும்போது, மனித மாண்பு அங்கே மழுங்கடிக்கப்படுகிறது. இதுதான்‌ எல்லா பிரச்சனைகளின்‌ அடிப்படை. மாறாக எங்கே அறிவும்‌, எங்கே உணர்வும்‌ மதிக்கப்படுகின்றனவோ அங்கேப்‌ பிரச்சனைகள்‌ குறைந்து உறவுகள்‌ வளம்பெறும்‌.

யூதச்‌ சமூகம்‌ ஒரு தந்தைவழி சமூகம்‌. அதில்‌ பெண்ணினம்‌ இரண்டாம்‌ தர பாலினமாகவே கருதப்பட்டது. சட்டங்கள்‌, சடங்கு முறைகள்‌ சமயம்‌ எல்லாமே ஒன்றுக்கொன்று மாறிமாறி அவர்களைக்‌ கீழ்ப்படுத்தவே பயன்படுத்தப்பட்டன. இதற்கு எடுத்துக்காட்டாக மகப்பேறின்மை கடவுளின்‌ சாபம்‌ எனக்‌ கருதப்பட்டது. அதுவும்‌ பெண்ணுக்கே கடவுளின்‌ தண்டனை எனவும்‌ கொடூரமாய்‌ வர்ணிக்கப்பட்டது. இந்தக்‌ காலக்‌ கட்டத்தில்தான்‌ எலிசபெத்‌, முதிர்ந்த வயதில்‌ குழந்தைப்‌ பேறு இன்றி இருந்தார்‌. அப்பொழுது கடவுளின்‌ திருவுளத்தால்‌ கருவுற்றார்‌. எவ்வளவு பெரிய மகிழ்ச்சி இது காலங்காலமாய்ப்‌ பழியினைச்‌ சுமந்து, கடவுளால்‌ கைவிடப்பட்டவள்‌ எனப்‌ பிறரால்‌ இகழப்பட்ட நிலையில்‌, ஒரு புதிய கெளரவம்‌. சாரா, அன்னா, போன்றவர்களுக்குக்‌ கிடைத்தப்‌ பாக்கியம்‌ இதோ இவருக்கும்‌ கொடுக்கப்பட்டது. தாகத்தால்‌ நாவு வறண்டு தண்ணீருக்காய்ப்‌ பாலைவனத்தில்‌ அலையும்‌ ஒருவருக்கு ஒரு சோலைவனமே தென்பட்டால்‌, அவன்‌(ள்‌) படும்‌ மகிழ்ச்சியைவிடப்‌ தூய எலிசபெத்தின்‌ மகிழ்வு மிகப்பெரியது.

மறுபுறம்‌ இளமைப்‌ பருவத்தில்‌ கனவுகளோடும்‌ ஏகப்பட்ட உற்சாகத்தோடும்‌ புது வாழ்க்கையைத்‌ தொடங்கவிருக்கிறார்‌ தூய கன்னி மரியாள்‌. கடவுளால்‌ மனிதனுக்குக்‌ கொடுக்கப்பட்டக்‌ கொடைகளில்‌ திருமணமும்‌ ஒன்று. இந்த இல்லற வாழ்க்கையை இன்னும்‌ சிறிது காலத்திற்குள்‌ தொடங்கவிருக்கிறார்‌. அப்போதுதான்‌ கன்னியான மரியாளுக்குத்‌ தூது வருகிறது. எல்லாம்‌ வல்ல இறைவனிடமிருந்து. ஆம்‌, இறைவனிடமிருந்து கபிரியேல்‌ திருத்தூதர்‌ மூலமாய்த்‌ தூது வருகின்றது.

எந்தவொரு நபரின்‌ வருகைக்காக யுகங்கள்‌ யுகங்களாகப்‌ படைப்பு முழுவதும்‌ ஏக்கத்தோடு காத்திருந்ததோ, அந்தத்‌ தருணம்‌ இதோ வந்துவிட்டது. படைத்தவர்‌ மண்ணுலகில்‌ மானிட உடல்‌ எடுக்க நல்மங்கையைத்‌ தேடிக்கொண்டிருந்தாராம்‌. அம்மங்கைக்‌ கன்னிமரியாள்‌ எனக்‌ கண்டு, அவரிடம்‌ அனுமதிக்‌ கேட்கத்‌ தன்‌ தூதுவரை அனுப்பிணார்‌. இறைவனின்‌ தாய்‌ என்ற பேறு இனி யாருக்குக்‌ கிடைக்கும்‌? என எண்ணியெண்ணி வியந்து, தன்னை இறையடிமையென்று சமர்ப்பணம்‌ செய்தாள்‌ கன்னிமரியாள்‌. இந்நிகழ்வு முடிந்தவுடன்‌ விரைவாக எலிசபெத்தைச்‌ சந்திக்கச்‌ செல்கின்றாள்‌ இக்கன்னிப்பெண்‌.

ஒருபுறம்‌ வேதனையிலிருந்து மீண்ட மகிழ்ச்சியுடன்‌ எலிசபெத்‌. மறுபுறமோ காலங்களைக்‌ கடந்த அதிசயத்தை, இன்ப ஆச்சரியத்தைச்‌ சுமந்தவனாய்‌ இன்பத்தின்‌ ஆழத்தில்‌ கன்னி மரியாள்‌. இப்படிப்பட்ட தூய பெண்கள்‌ சந்தித்துக்‌ கொள்கின்றனர்‌. பொதுவாக உணர்ச்சியின்‌ விளிம்பில்‌ இருக்கும்‌ போது, பிறரைப்‌ பற்றி எண்ணம்‌ கூட ஏற்படாது. ஆனாலி இவர்கள்‌ கலந்துரையாடலைக்‌ கவனிக்கும்‌ போது, இந்தப்‌ பழக்கம்‌ பொய்யாகி விட்டது. எலிசபெத்‌ தன்னைப்‌ பற்றி பேசாமல்‌ கன்னி மரியாளைப்‌ பற்றி அவரது மேன்மையைப்‌ பாராட்டுகிறாள்‌. கன்னி மரியாளோ இப்புகழ்ச்சிகளை இறைவனுக்குச்‌ சார்த்திவிட்டு, எலிசபெத்தை வாழ்த்துகிறாள்‌. இவ்வாறு தன்னலம்‌ நாடாது, பிறர்‌ உணர்வுகளை மதித்து வந்ததால்‌, இவர்களின்‌ உறவுகள்‌ வளர்ந்தன.

இன்று, நமது குழந்தைப்‌ பள்ளியிலோ அல்லது நண்பர்களிடமோ பெற்ற பாராட்டை நம்மிடம்‌ பகிர வரும்போது, நாம்‌ எவ்வாறு செவிமடுக்கின்றோம்‌? அறிவோடுப்‌ பார்க்கும்‌ போது அவர்களது பாராட்டு ஒன்றும்‌ நமது குடும்பப்‌ பொருளாதராத்திலோ அல்லது குடும்ப உறவிலோ பெரிய மாற்றத்தைக்‌ கொண்டு வராது. ஆனால்‌ அன்பின்‌ அடிப்படையில்‌ பார்க்கும்‌ போது நமது குழந்தையினுடைய மகிழ்ச்சி என்ற உணர்வு எவ்வளவு பெரியது, நமது ஆர்வமான செவிமடுத்தல்‌ குழந்தையின்‌ எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கச்‌ செய்யும்‌.

ஜெர்மானியர்களில்‌ பெரும்‌பாலானோர்‌ ஹிட்லரை ஒரு வரலாற்றுப்‌ பிழையென்றே கருதுகின்றனர்‌. ஏனெனில்‌ அவன்‌ இரண்டாம்‌ உலக யுத்தத்தின்‌ போது ஆயிரக்கணக்கான யூதர்களைக்‌ கொடூரமாகக்‌ கொன்று குவித்தான்‌. மேலும்‌ தனது எதிரிகளைச்‌ சித்ரவதைச்‌ செய்து அழித்தான்‌. ஹிட்லரை மனிதன்‌ என்பதைவிடக்‌ கொலை வெறிக்‌ கொண்ட மிருகம்‌ எனலாம்‌. இவ்வாறு கொடுங்கோலனாய்‌ மாறியதற்கு யார்‌ காரணம்‌? குழந்தைப்‌ பருவத்தில்‌ சரியான முறையில்‌ அவனது உணர்வுகள்‌ மதிக்கப்படவில்லை. பிற்காலத்தில்‌ அவனும்‌ பிறரது உணர்வுகளை உண்மையாக மதிக்கவில்லை. இதனால்தான்‌ இன்று கூட ஹிட்லரை உலகம்‌ வெறுக்கிறது.

அதற்கு மாறாகக்‌ “கீதாஞ்சலி” என்ற கவித்தொகுப்பை வழங்கிய கவிஞர்‌ தாகூரையோ உலகம்‌ “நோபிள்‌” என்ற உயரியப்‌ பரிசினை வழங்கி வாழ்த்துகிறது. ஏன்‌ தாகூருக்கு இந்தச்‌ சிறப்பு? தன்னுடைய உணர்வுகள்‌ மட்டுமல்ல, பிறரது சின்னச்சின்ன உணர்வுகளுக்குகூட மதிப்பளித்து அவைகளைத்‌ தனதுக்‌ கவிதையில்‌ வெளிப்படுத்தினார்‌. இந்த ஒரு குணம்தான்‌ அவரை உயர்ந்தக்‌ கவிஞராக்கியது.

எங்கெல்லாம்‌ உணர்வுகள்‌ மதிக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம்‌ உறவுகளும்‌ மகிழ்வும்‌ பெருகுகின்றன. அதற்கு மாறாக எங்கெல்லாம்‌ உணர்வுகள்‌ மதிக்கப்படுவதில்லையோ அங்கெல்லாம்‌ பகைமையும்‌ வெறுப்பும்‌ மற்றும்‌ தீமையும்‌ பெருகின்றன. இத்திருப்பலிக்‌ கொண்டாட்டத்தில்‌ பிறரது உணர்வுகளைப்‌ போற்றும்‌ மனிதர்களாக மாற வேண்டிக்கொன்வோம்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

1. நடமாடும்‌ ஆலயங்கள்‌ ஆவோம்‌.
2. கன்னிமரியின்‌ வழியாய்‌ இறை இயேசுவைச்‌ சந்திப்போம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைவாக்குப் பயணம் - திருவருகைக்காலம் 4ஆம் ஞாயிறு

பின்னணி

கிறிஸ்து பிறப்புக்கான தயாரிப்பின்‌ இறுதி ஞாயிற்‌றுக்‌ கிழமையில்‌, கிறிஸ்மஸ்‌ பெருவிழாவிற்கு மிக அண்மையில்‌ இருக்கும்‌ இந்நாளில்‌ இரு தாய்களின்‌ சந்திப்பை திருச்சபை நமது சிந்தனைக்கு அளிக்கின்றது இதுவரை லூக்கா நற்செய்தியில்‌ திருமுழுக்கு யோவானின்‌ பிறப்பும்‌, இயேசுவின்‌ பிறப்பும்‌ முன்னறிவிக்கப்பட்டிருக்க, எருசலேமிலிருந்த யோவானின்‌ (செக்கரியா, எலிசபெத்து) குடும்பத்தையும்‌, இயேசுவின்‌ (யோசேப்பு, மரியா) குடும்பத்தையும்‌ ஒன்றிணைக்கின்றது இந்த பகுதி. இந்தத்‌ தாய்களின்‌ சந்திப்பிலே உலகச்‌ செய்திகள்‌, உடல்நலம்‌ குறித்த விசாரிப்புகள்‌ இல்லாமல்‌ உலக வரலாற்றிலும்‌, தங்களின்‌ தனிப்‌பட்ட வாழ்விலும்‌ இறைவன்‌ செய்த அளப்பரும்‌ செயல்கள்‌ பேசப்படுகின்றன, இறையியல்‌ பேசப்படுகின்றது. இந்த பகுதியில்‌ பேசப்படும்‌ சில இறையியல்‌ கருத்துக்களை விளங்கிக்கொள்ள இங்கு முயல்வோம்‌.

நல்‌ உணர்வுகளின்‌ கோர்வை

பிள்ளையைக்‌ கருத்தாங்கிப்‌ பெற்றெடுப்பது என்பது தன்னிலே பல உணர்வுகளை உள்ளடக்கியது என நாம்‌ அறிவோம்‌. ஆனால்‌ இங்கு அதோடுகூட ஆன்மிக அனுபவம்‌ சார்ந்த உணர்வுகள்‌ பல வரிசையாக, கோர்வையாக கோர்த்து அளிக்கப்படுகின்றன: மரியா விரைந்து செல்கின்றார்‌ (வச. 29); எலிசபெத்தை வாழ்த்துகின்றார்‌ (வச. 40); அவ்வாழ்த்தைக்‌ கேட்ட குழந்தை மகிழ்ச்சியால்‌ துள்ளுகிறது (வச. 41); எலிசபெத்து தூய ஆவியால்‌ ஆட்கொள்ளப்படுகிறார்கள்‌ (வச. 47); அவர்‌ மரியாவையும்‌ இயேசுவையும்‌ ஆசி பெற்றவர்களென வாழ்த்துகின்றார்‌ (வச. 42); மரியாவின்‌ வாழ்த்தால்‌ யோவான்‌ பேருவகை கொண்டதாகக்கூறுகின்றார்‌ (வச.44), மரியாவைப்‌ பேறுபெற்றவர்‌ எனப்‌ போற்றுகின்றார்‌ (வச. 45). ஆக நேர்மறை உணர்வுகளான வாழ்த்து, மகிழ்ச்சி, ஆவியால்‌ ஆட்கொள்ளப்படல்‌, ஆசி, பேருவகை, பேறு, நம்பிக்கை ஆகியவற்றால்‌ இப்பகுதி நிரப்பப்‌ பட்டுள்ளது.

யோவானின்‌ முன்னறிவிப்பு

ரபேக்காவின்‌ வயிற்றில்‌ இரு புதல்வர்கள்‌ முட்டி மோதிக்‌ கொண்டது (காண்‌. தொநூ 25:22) அவர்களின்‌ பிற்கால வாழ்க்கையை முன்னறிவித்தது (காண்‌. தொநூ 25:23). இங்கு திருமுழுக்கு யோவானின்‌ மகிழ்ச்சி துள்ளள்‌, வானதூதர்‌ முன்னறிவித்ததை - அதாவது “தாய்‌ வயிற்றில்‌ இருக்கும்‌ போதே தூய ஆவியால்‌ முற்றிலும்‌ ஆட்கொள்ளப்படுவார்‌” (லூக்‌ 1:75) நிறைவேற்றுகின்றது. தன்‌ தாயின்‌ வயிற்றிலிருந்து பிறப்பதற்கு முன்னரே திருமுழுக்கு யோவான்‌ தான்‌ முன்னறிவிக்க வேண்டிய வரைக்‌ கண்டுபிடித்து, தனது மகிழ்ச்சியான துள்ளளினால்‌ முன்னறிவிக்கின்றார்‌.

எலிசபெத்தின்‌ இறைவாக்கு

மகன்‌ யோவான்‌ இயேசுவை முன்னறிவிக்கின்றவராக இருந்தார்‌ என்றால்‌ அவரின்‌ தாய்‌ மகனைவிட பல மடங்கு இறை வாக்கினராக, இறைவாக்கை முன்னறிவிக்கின்றவராக, இதுவரை கூறுப்படாத பலவற்றைகண்டு வெளிப்படுத்துகின்றார்‌. முற்காலத்து இறைவாக்கினர்போல எலிசபெத்து தூய ஆவியால்‌ முற்றிலும்‌ ஆட்கொள்ளப்படுகிறார்‌ (வச. 41); மரியாவை பெண்‌களுக்குள்‌ ஆசி பெற்றவர்‌ என்று கண்டுபிடித்து அறிவிக்கின்றார்‌ (வச. 42); மரியின்‌ வயிற்றில்‌ வளரும்‌ குழந்தையும்‌ ஆசிபெற்றது எனக்‌ கண்டு கொள்கின்றார்‌; அறிவிக்கின்றார்‌ (வச. 42) தன்‌ வயிற்றுக்‌ குழந்தையும்‌ பேருவகையால்‌ துள்ளுவதாகக்‌ கூறுகின்றார்‌. இவ்வாறு எலிசபெத்து தானும்‌ ஓர்‌ இறைவாக்கினர்‌ என எண்பிக்கின்றார்‌.

இறைவாக்கினர்‌ எலிசபெத்து

எலிசபெத்து இறைவாக்கினர்‌ எனக்‌ கண்டோம்‌. அவர்‌ கூறிய இறைவாக்குகளுள்‌ இயேசுவைப்‌ பற்றியும்‌ மரியாவைப்‌ பற்றியும்‌ கூறியவை மிகவும்‌ முக்கியமானவை. முதலில்‌ இயேசு வைப்‌ பற்றிய இறைவாக்கைப்‌ பற்றிக்‌ காண்போம்‌.

4. இயேசு ஆண்டவர்‌

விவிவியத்தில்‌ பெரும்பாலும்‌ கடவுளைக்‌ குறிக்கவே 'ஆண்டவர்' எனும்‌ வார்த்தை பயன்படுத்தப்படும்‌ (காண்‌. லூக்‌ 1:6, 91,15,16, 25. இயேசுவை ஆண்டவர்‌ என்றுஅழைப்பது அவரின்‌ உயிர்ப்புக்கு பிறகே நிகழும்‌ (காண்‌. திப 1:21; 2:34-36, 4:26, 33; 8:16), உயிர்ப்புக்கு பிறகு ஆண்டவர்‌ என்று அறிக்கையிடப்படப்‌ போகின்ற இயேசுவை அவர்‌ குழந்தையாக, தாயின்‌ கருப்பையில்‌ இருக்கும்‌ போதே ஆண்டவர்‌ என “கண்டு” அவரைத்‌ “தன்‌ “ஆண்டவர்‌” என நம்பி (விசுவசித்‌து) அறிக்கையிடுகின்றார்‌.

ஆண்டவரின்‌ தாய்‌ - ஆண்டவரின்‌ வாக்கை நம்பியவர்‌
பேறுபெற்றவர்‌

இயேசுவைப்‌ பற்றி மட்டுமல்ல அன்னை மரியாவைப்‌ பற்றியும்‌ இறைவாக்குரைக்கின்றார்‌. முதலில்‌ அவரை “ஆண்டவரின்‌ தாய்‌” என்று அறிக்கையிடுகின்றார்‌. அடுத்து அவரை “ஆண்டவரின்‌ வாக்கை நம்பியவர்‌” என்று அறிவிக்கின்றார்‌. இறுதியாக அவரை “பேறு பெற்றவர்‌” என்கின்றார்‌. லூக்‌ 11:27-ல்‌ கூட்டத்திலிருந்த பெண்‌ ஒருவர்‌ “உம்மைக்‌ கருத்தாங்கிப்‌ பாலூட்டி வளர்த்த உம்‌ தாய்‌ பேறுபெற்றவர்‌” என்று மரியாவின்‌ தாய்மையை பேறுபெற்றதாகக்‌ கூறுவார்‌. இயேசு அவரிடம்‌, “இறைவார்த்தையைக்‌ கேட்டு அதைக்‌ கடைப்பிடிப்போர்‌ இன்னும்‌ அதிகம்‌ பேறு பெற்றோர்‌” (லூக்‌ 1:28) என்பார்‌. அங்கு இயேசு சொன்ன இறைவார்த்தையைகேட்டு அதை கடைபிடிப்பவராக” (லூக்‌ 17:28) மரியாவைக்‌ கண்டு எலிசபெத்து “அண்டவர்‌ சொன்னவை நிறைவேறும்‌ என நம்பியவர்‌” (காண்‌. 1:45) என்று கூறுவதால்‌ மரியா இயேசுவைப்‌ பெற்றதால்‌ மட்டுமல்ல இறைவார்த்தையை நம்பியதாலும்‌ பேறுபெற்றவராகின்றார்‌. அதாவது இருமுறை பேறுபெற்றவராகின்றார்‌.

இந்த இறைவாக்குகள்‌ அனைத்தின்‌ விளைவாக எலிசபெத்து மரியா, தன்னைவிட உயர்ந்தவர்‌ என்றும்‌, மரியாவின்‌ குழந்தை தன்‌ குழந்தையைவிட உயர்ந்தது என்றும்‌ தன்‌ பணியும்‌, தன்‌ மகனின்‌ பணியும்‌ இந்த ஆண்டவர்‌ - அவரின்‌ தாய்‌ ஆகியோரை இனம்‌ கண்டு, உலகுக்கு அறிவித்து அதிலே மகழ்ச்சி கொள்வதுதான்‌ என்பதையும்‌ நமக்குப்‌ புரிய வைக்கின்றார்‌. என்னே! அருமையான தாய்கள்‌! அருமையான அவர்களின்‌ புதல்வர்கள்‌!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருவருகைக்‌ காலம்‌ - நான்காம்‌ ஞாயிறு

முதல்‌ வாசகம்‌ : மீக்கா 5 : 2-5

“ஆண்டவருக்கு நிகர்‌ யார்‌? (மிக்காயகூ”) என்று பொருள்படும்‌ பெயருடைய மீக்கா இறைவாக்கினர்‌, ஏறத்தாழ கி.மு. 759-க்குப்‌ பின்‌ வாழ்ந்திருக்க வேண்டும்‌. தண்டனைத்‌ தீர்ப்பும்‌ (4-3) வாக்குறுதிகளும்‌ (4-5) இவருடைய இறைவாக்குகளில்‌ மாறிமாறிக்‌ காணப்படுகின்றன. இன்றைய வாசகம்‌ வாக்குறுதிப்‌ பகுதியைச்‌ சாரும்‌.

தம்மைத்‌ தாழ்த்துவோர்‌ உயர்த்தப்பெறுவர்‌

யூதாவின்‌ குலத்திலுதித்த எட்சரோனின்‌ மகன்‌ காலேபு எப்ராத்‌ என்பவரை மணமுடித்து (1 குறி 2 :19. 24) பெத்லகேமில்‌ குடிபுகுந்தார்‌ (ரூத்‌ 1: 2). அவ்வூரே பின்னர்‌ எப்ராத்தா எனப்‌ பெயர்‌ பெற்றது போலும்‌ (தொநூ 35 : 19 ; 48 : 17). எப்ராத்தா என்றால்‌ “கனி தருவது'' எனப்‌ பொருள்‌ பெறும்‌. ஒலிவ மரமானது தனது அடிப்பாகத்தில்‌ முதுமையினால்‌ பட்டுப்போய்‌, உயிரற்றது போல்‌ காணப்படினும்‌, அது அடிமரத்திலிருந்து கிளைகள்‌ கட்டி, பழங்களை அளவின்றித்‌ தரக்கூடியது. அதுபோன்றே பெத்லேகேமும்‌ இருக்கும்‌. யூதாவின்‌ வழித்தோன்றல்களில்‌ மிகச்‌ சிறியது ஆகி, பயனற்றது என்று கருதப்படினும்‌, முதிய ஒலிவமரம்‌ போன்று வளமிக்க கனியைத்‌ (இயேசுவைத்‌) தரவிருக்கிறது. ஆகாதது, உதவாக்கறை, பயனற்றது என்று இறைவனுக்கு எதுவும்‌ கிடையாது. “உலகம்‌ பொருட்படுத்தாதையும்‌ தாழ்ந்ததெனக்‌ கருதுவதையும்‌, இகழ்ச்சிக்கு உரியதையும்‌ கடவுள்‌ தேர்ந்துகொண்டார்‌ (கொரி 1: 28) என்பார்‌ பவுல்‌ அடியார்‌. கிறிஸ்துவின்‌ வருகைக்கு ஏற்ற மனநிலை தாழ்மையும்‌, எளிமையும்‌ என்பதை உணர்வோம்‌. “எளிய மனத்தோர்‌ பேறு பெற்றோர்‌ (மத்‌ 5:3).' “தாழ்ந்தோரை உயர்த்தும்‌ கடவுள்‌" (லூக்‌ 1: 25) நம்மையும்‌ மகிமைப்படுத்துவார்‌.

நாம்‌ பிறருக்கு பெத்லகேம்‌ (ரொட்டியின்)‌ வீடு ஆவோம்‌

பெத்லகேம்‌ என்பதற்கு “உரொட்டியின்‌ வீடு” என்று பொருளுண்டு. பெத்லகேமில்‌ பிறந்த இயேசு ஐந்து அப்பங்களைப்‌ பசித்திருந்த ஐயாயிரம்‌ பேருக்கு அளித்தார்‌ (மத்‌ 14: 13-20. “நானே உயிர்‌ தரும்‌ உணவு” (யோவா 6: 35) என்றார்‌. “அப்பத்தை எடுத்து நன்றி கூறி... இது உங்களுக்காக அளிக்கப்படும்‌ என்‌ உடல்‌” (லூக்‌ 22:19) என்றார்‌. பெத்லகேம்‌ உணவளிக்கும்‌ இடம்‌. பெத்லகேமில்‌ பிறந்தவர்‌ பிறருடைய பசியைத்‌ தீர்க்க உணவளித்தது மட்டுமன்று, தம்மையே உணவாக அளித்து, “இந்த உணவை எவராவது உண்டால்‌ அவர்‌ என்றுமே வாழ்வார்‌" (யோவா 6: 51) என்கிறார்‌. நம்முடைய இல்லங்களும்‌ உள்ளங்களும்‌ பெத்லகேம்‌ ஆவது எப்போது? பசித்தோருக்கு புசியென உணவளிக்க முன்‌ வருகிறோமா? உள்ளக்‌ குமுறல்கள்‌, ஆன்ம அமைதியின்மையால்‌ வருந்துவோர்‌, நம்‌ வீடுகளில்‌, நம்முடைய உரையாடல்களில்‌ ஆறுதலும்‌ மகிழ்ச்சியும்‌ பெறுகிறார்களா?

பெத்லகேம்‌ குணங்களைப்‌ பெறுவோம்‌

பெத்லகேமிலிருந்து இறைவன்‌ மனுவுரு எடுத்தார்‌. பெத்லகேமில்‌ இருந்து அவரது ஆட்சியும்‌ வல்லமையும்‌ வெளிப்படுகிறத; பெத்லகேமிலிருந்து அவர்‌ “தமது மந்தையை மேய்க்கிறார்‌' (5: 4). பெத்லகேமிலிருந்து அவர்‌ “நமக்கு அமைதி தருகிறார்‌" (5:5). நமது இல்லங்களில்‌ இறைவன்‌ ஆட்சி செய்வது எப்போது? நம்‌ இல்லங்களிலிருந்து இறைப்பணிக்காக, நீதி, சமாதானம்‌, அன்பு, முதலியவற்றை மக்களுக்கு அளிப்பதற்காக நம்‌ மக்களைத்‌ தாராள உள்ளத்தோடு அர்ப்பணிக்கிறோமா? நம்‌ இல்லங்களில்‌, பெற்றோரிடம்‌ நல்ல ஆயனுக்குரிய அருங்குணங்கள்‌ (திபா 23) வெளிப்படுகின்றனவா? நம்‌ இல்லங்கள்‌ சமாதானத்துக்கு அடையாளங்களாக இருக்கின்றனவா? நம்‌ இல்லங்கள்‌ பெத்லகேம்‌ ஆவது எப்போது? இயேசு அங்கே வந்து பிறப்பது எப்போது?

தமது மந்தையை அவர்‌ மேய்ப்பார்

இரண்டாம்‌ வாசகம்‌ : எபி 10 : 5-10

இயேசுவின்‌ பிறப்பு மனுக்குலத்திற்குப்‌ புதுவாழ்வு கொணர்ந்தது. பழையது கழிந்தது, புதியது மலர்ந்தது (உரோ 6 : 19, 1 கொரி 16 : 54-55; எபே 4 ; 22-23, கலா 3: 27). பழைய பலிமுறைகள்‌, வழிபாட்டுச்‌ சடங்குகள்‌, “புதிய பலிக்கு” இடமளிக்கின்றன. இப்புதிய பலியே இயேசுவின்‌ கீழ்ப்படிதல்‌. இயேசுவின்‌ பிறப்பிலே இப்புதிய பலியைக்‌ காண்கிறார்‌ எபிரேயருக்குத்‌ திருமடல்‌ எழுதிய ஆசிரியர்‌. “எல்லோர்க்கும்‌ நன்றாம்‌ பணிதல்‌” (குறள்‌ - 125).

கிறிஸ்துவ நிறைவு தருபவர்‌

ஆள்‌ நம்‌ கண்முன்‌ இருக்கும்போது அவரின்‌ நிழற்படம்‌ நமக்குத்‌ தேவையில்லை. இதேபோன்றுதான்‌ ப.ஏ. பலிகளும்‌ பாவங்களைப்‌ போக்குவதற்காக ஒப்புக்கொடுக்கப்பட்டன. ஆயினும்‌ “இந்தப்‌ பலிகளினாலே பாவம்‌ நீங்கவில்லை" (10 :3). “அதே பலிகளால்‌ இறைவனை அணுக வருபவர்களை நிறைவுள்ளவர்களாக்கத்‌ திருச்சட்டத்திற்கு வலிமை இல்லை" (10 : 2. 14). இவை யாவும்‌ நிழற்படங்கள்‌ போன்றே இருந்தன. கிறிஸ்து ஒருவரே “தாம்‌ தூயவராக்கியவர்களை ஒரே பலியினால்‌ என்றென்றைக்கும்‌ நிறைவுள்ளவராக்கினார்‌'” (10 : 16). “அவர்களுடைய பாவங்களையும்‌ அக்கிரமங்களையும்‌ இனி நினையேன்‌” என்கிறார்‌. “இவற்றிற்கு மன்னிப்புக்‌ கிடைத்தபின்‌, பாவப்‌ பரிகாரப்‌ பலிக்கு இடமே இல்லை” (19 : 17, எசா 23 : 12). எனவே சடங்குமுறைகள்‌, ஆசாரங்கள்‌ முதலியவற்றில்‌ நம்பிக்கை வைக்காது கிறிஸ்து ஒருவரிலே ஆழ்ந்த நம்பிக்கை வைத்து வேண்டுவோம்‌.

பணிவுள்ளம்‌ வேண்டும்‌

கிறிஸ்து வந்துவிட்டார்‌. அவர்‌ வழியாக நாம்‌ அறிவது, கீழ்ப்படிதல்‌ தான்‌ இறைவனுக்கு அவர்‌ தந்த பலியென்பது. “பலிகளோ உமக்கு உகந்ததாய்‌ இல்லை; அப்போது நான்‌ கூறியது. “இதோ இறைவா, உம்‌ திருவுளத்தை நிறைவேற்ற வந்துவிட்டேன்‌” (10 : 6-7). இதே கருத்தை திருப்பாடல்‌ ஆசிரியர்‌, “பலியினால்‌ உம்மை மகிழ்விக்க முடியாது... கடவுளுக்கு ஏற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே" (திபா 51: 16-17) என்கிறார்‌. ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள்‌, பிற பலிகள்‌ செலுத்துவதா? அவரது குரலுக்குக்‌ கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல்‌ பலியைவிடச்‌ சிறந்தது” (1 சாமு 15 : 22, ஒசே 6: 6, மீக்‌ 6: 6-8, எசா 1: 10-20). எனவே, பணிந்த உள்ளம்‌, கீழ்ப்படியும்‌ மனப்பான்மை இறைவனுக்கு உகந்தது என்பதை நாம்‌ உணர வேண்டும்‌. பலிகள்‌ மற்றும்‌ சடங்குகள்‌ வேண்டாமென்பதல்ல இங்கே கூறப்படுவது. ஆனால்‌ ஏழ்மை உள்ள இதயம்‌, தாழ்ச்சி, கீழ்ப்படிதல்‌, பணிந்து நடத்தல்‌ இவையின்றி, நம்முடைய பலிகளாலும்‌ செபங்களாலும்‌ பலனில்லை. ஏனெனில்‌ பலியெனப்‌ பிற பொருள்களைக்‌ கொடுப்பதைவிடப்‌ பலியாகத்‌ தன்னைக்‌ கொடுப்பதே மேலான தியாகம்‌ என்பது விவிலியப்‌ பாடம்‌. “கங்கை ஆடிலென்‌, காவிரி ஆடில்‌ என்‌?"

ஆண்டவரே பேசும்‌; உன்‌ அடியான்‌ கேட்கிறோன்‌.

சாமுவேலின்‌ கீழ்ப்படிதல்‌ இறைவனால்‌ ஏற்றுக்கொள்ளப்பட்டது. சாமுவேல்‌ இஸ்ரயேலருக்குத்‌ தலைவராகிப்‌ பிலிஸ்தியரை அழித்தொழித்தார்‌ (1 சாமு 4-7). “இதோ அடியேன்‌, என்னை அனுப்பும்‌ (எசா 6 : 8) என்ற எசாயாவின்‌ பணிவை ஏற்று இறைவன்‌ அவரைத்‌ தம்‌ இறைவாக்கினர்‌ ஆக்கினார்‌. “நான்‌ ஆண்டவருடைய அடிமை. உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்‌” (லூக்‌ 1: 38) என்ற மரியாவின்‌ தாழ்நிலையைக்‌ கடைக்கண்‌ நோக்கி இறைவன்‌ அவரை எல்லாத்‌ தலைமுறைகளுக்கும்‌ பேறுடையவள்‌ ஆக்கினார்‌ (லூக்‌ 1 : 47-48). “இதோ உமது திருவுளத்தை நிறைவேற்ற வந்துவிட்டேன்‌” (எபி 10 : 7) என்ற இயேசுவின்‌ கீழ்ப்படிதலே அவருக்கு விண்ணவர்‌, கீழுலகோர்‌ மண்டியிடக்‌ காரணமாயிற்று (பிலி 2 : 7-1. கிறிஸ்துமஸ்‌ குடிலுக்கு முன்‌ நாம்‌ அளிக்க இருக்கும்‌ பலி யாது? பொருள்களா? அல்லது நாமா?

( இறைவா, உம்‌ திருவுளத்தை நிறைவேற்ற வந்துவிட்டேன்‌. )

நற்‌எசய்தி : லூக்‌ 1: 39-44

உருவிலானைக்‌ கருவிலே தாங்கிய கன்னி மரியா தன்‌ உறவினர்‌ எலிசபெத்தைச்‌ சந்தித்த நிகழ்ச்சியை லூக்கா கூறுகிறார்‌. கருவுற்றிருந்த இரு தாய்மார்களின்‌ சந்திப்பு இது. கடவுள்‌ குமாரனுக்கே மனித வாழ்வு தந்த தெய்வத்‌ திருமகள்‌ மரியா, எலிசபெத்தைச்‌ சந்திக்க வருகின்றார்‌. கடவுள்‌ குமாரனின்‌ வருகைக்காக மக்களைத்‌ தயார்‌ செய்யவந்த திருமுழுக்கு யோவானைத்‌ தாங்கியுள்ள எலிசபெத்தம்மாள்‌ அவரை வரவேற்கிறார்‌.

பெண்குலத்தின்‌ பெருமை மரியா

கருவிலே கடவுள்‌ குமாரனையே தாங்கிச்சென்ற கதிர்பாத்திரம்‌ அவர்‌. எனினும்‌ எலிசபெத்‌ தன்‌ முதுமைப்‌ பருவத்தில்‌ தாய்க்‌ கோலத்தில்‌ இருக்கிறார்‌ என்பது கேட்டு அயின்கரீம்‌ என்ற ஊருக்கு விரைந்து செல்லுகிறார்‌. “உங்களுக்குள்‌ பெரியவராக இருக்க விரும்புகிறவர்‌ உங்கள்‌ தொண்டராய்‌ இருக்கட்டும்‌... தொண்டு ஏற்பதற்காக அல்ல; தொண்டு ஆற்றுவதற்கும்‌ பலருடைய மீட்புக்கு ஈடாகத்‌ தம்‌ உயிரைக்‌ கொடுக்கவும்‌ வந்தார்‌" (மத்‌ 20: 27-28). இயேசுவின்‌ போதனையைச்‌ செயலில்‌ காட்டியவர்‌ மரியா. தான்‌ தெய்வத்‌ திருமகளாயிருந்தும்‌, சாதாரண எலிசபெத்தம்மாளுக்கு உதவிபுரிய விரைந்து செல்லுகிறார்‌. மரியா அங்கு வந்த உடனே அவ்வீடு களிப்பால்‌ நிரம்பியது. மரியா தம்‌ மகனுடன்‌ வந்தார்‌! விளைவு, தாயும்‌ சேயும்‌ இருக்குமிடமெல்லாம்‌ எல்லையற்ற மகிழ்ச்சி! கானாவூர்‌ கல்யாணத்தில்‌ மரியாவையும்‌ இயேசுவையும்‌ சந்திக்கின்றோம்‌. அங்கும்‌ மண மக்கள்‌ மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை (போவா 2). “மண மகன்‌ தங்களோடு இருக்கும்‌ அளவும்‌ மண விருந்தினர்‌ துக்கம்‌ கொண்டாடலாமா?” மத்‌ 9 : 15).

அன்னையின்‌ வரவில்‌ இயேசு

எலிசபெத்‌ தூய ஆவியால்‌ தூண்டப்பட்டு கன்னிமரியாவைக்‌ கடவுளின்‌ ' தாய்‌ எனக்‌ காண்கின்றார்‌. அவரை நெஞ்சார வாழ்த்தினார்‌. “பெண்களுக்குள்‌ நீர்‌ ஆசி பெற்றவர்‌. உம்‌ வயிற்றில்‌ வளரும்‌ குழந்தையும்‌ ஆசி பெற்றதே ! என்‌ ஆண்டவரின்‌ தாய்‌ என்னிடம்‌ வர நான்‌ யார்‌?” என்று வியப்பும்‌ திகைப்பும்‌ கொண்டார்‌. ஆண்டவரின்‌ பேழை தன்‌ நகர்‌ நோக்கி எடுத்து வரப்பட்டதை அறிந்த தாவீது அதைப்‌ பெற்றுக்கொள்ளத்‌ தான்‌ தகுதியற்றவர்‌ என்பதை உணர்ந்து வியப்பும்‌ வேதனையும்‌ கொண்டார்‌ (2 சாமு 6 : 9). இறைவனது பிரசன்னத்தைக்‌ குறிக்கும்‌ பேழை அல்ல மரியா; இறைவனே குடியிருந்த கோயில்‌. “மணி வயிற்றில்‌ உருத்தெரிய வரும்‌ பெரும்பேறு உலகுய்ய உளதாக'' (பெரிய புராணம்‌). இதுவரை, கல்லிலும்‌ மரத்தாலும்‌ ஆன பேழைகளிலும்‌, படங்களிலும்‌ பிரசன்னமாக இருப்பதாக எண்ணப்பட்ட கடவுள்‌, இன்று அன்னையின்‌ மணிவயிற்றில்‌ உருவாகி எலிசபெத்தம்மாள்‌ வீட்டிற்கு வருகிறாள்‌. தாயும்‌ சேயும்‌ வந்ததால்‌ அங்கு அக இருள்‌ நீங்கி அருள்வாழ்வு பொங்கியது. எலிசபெத்தம்மாள்‌ தூய ஆவியால்‌ நிரப்பப்படுகிறாள்‌. அவளது குழந்தை அக்களிப்பால்‌ துள்ளுகிறது. எனவே உடலுக்கடுத்த உதவி புரிவதற்கு மட்டுமன்று, ஆன்மீக அருளைப்‌ பொழியவும்‌, அன்னை அங்கு வந்தார்‌. அருளுக்கே ஊற்றான தெய்வத்‌ திருமகனை அங்கு கொண்டு சென்றதால்‌, மரியா அருள்‌ வழங்கும்‌ கருவியாகிவிட்டார்‌. ஆண்டவரின்‌ கொடைகளைப்‌ பங்கிட்டளிக்கும்‌ பரோபகாரி நமதன்னை!

“பெண்களில்‌, கேனியனான கெபேரின்‌ மனைவி யாவேல்‌ பேறு பெற்றவர்‌. கூடாரம்வாழ்‌ பெண்களுள்‌ ஆசீர்வதிக்கப்பட்டவர்‌" (நீதி 5 : 24) என்று வாழ்த்தப்பட்டவரும்‌, ஒலோபெர்னசின்‌ தலையைக்‌ கொய்து நாட்டைக்‌ காத்ததால்‌ “மகளே! மண்ணுலகப்‌ பெண்களுக்குள்‌ நம்‌ ஆண்டவரால்‌ ஆசி பெற்றவர்‌ நீரே” (தித்‌ 19:22-23) என்று பாராட்டப்பட்ட யூதித்தும்‌ நம்‌ அன்னையின்‌ முன்னோடிகள்‌. எனினும்‌ இவர்கள்‌ வெறும்‌ நிழலேயாவர்‌. “பெண்களுக்குள்‌ நீர்‌ ஆசி பெற்றவர்‌. உம்‌ வயிற்றில்‌ வளர்ந்த குழந்தையும்‌ ஆசி பெற்றதே" என்று நாம்‌ நாள்தோறும்‌ அன்னையைப்‌ புகழ்கின்றோம்‌. எலிசபெத்‌ கொண்டிருந்த அதே உள்ளத்துடன்‌ அன்புடன்‌ நாமும்‌ நம்‌ அன்னையைப்‌ புகழ வேண்டும்‌.

ஆண்டவர்‌ சொன்ன வாக்கு நீறைவேறும்‌ என்று விசுவசித்தவர்‌ பேறுபெற்றவரே.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு