ஒரு பெரிய பணக்காரன் செல்வச் செழிப்போடும், பெரும் மகிழ்வோடும் வாழ்ந்து வந்தான். காலப்போக்கில் கொள்ளைக் காரனாகவும் மாறிவிட்டான். ஆனால், அவ்வப்போது ஏழைகளுக்கு சில உதவிகளையும் செய்வான். ஒரு நாள் கடவுள் அவன் கனவில் தோன்றி ஒரு நாள் உன் வீட்டுக்கு வரப்போகிறேன் என்று சொல்லி மறைந்துவிட்டார். பணக்காரனும் ஏற்பாடு செய்தான். ஒரு நாள் கடவுள் வந்தார். பணக்காரன் மகிழ்வோடு வரவேற்று, எனது வீட்டிலுள்ள பணம், பொன், பொருட்கள் எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றான். கடவுள் உனது வீட்டிலுள்ள அனைத்தும் என்னிடமும் உள்ளது. ஆனால் என்னிடம் இல்லாத ஒன்று மட்டும் உன்னிடம் உள்ளது. அதை மட்டும் என்னிடம் கொடுத்து விடு. நீ வாழும் கரடு முரடான வாழ்க்கை , நீ செல்லும் தவறான பாதை, உனது தவறான செயல்பாடுகள், இவைகளுக்கு காரணமான உனது பாவத்தை மட்டும் என்னிடம் கொடுத்து விடு என்றார். அதை உணர்ந்த பணக்காரன் தனது பாவத்தை அறிக்கையிட்டு தன்னையும் தனது செயல்பாடுகளையும் செம்மைப்படுத்திக் கொண்டான்.
மக்களின் சீர்குலைந்த பாதச்சுவடுகளைச் செம்மைப்படுத்தி அவர்களின் மனங்களை மாற்றியமைத்து, இயேசுவின் வருகையை முன்னறிவிக்கின்றார் புனித திருமுழுக்கு யோவான். நாம் நடந்து வந்த பழைய பாதையைத் திரும்பிப் பார்க்க இன்றைய வாசகங்கள் அழைப்பு விடுக்கின்றன. பாவச்சூழலில் இருக்கும் இதயத்தை, புதிய பாதைக்குத் திருப்புவதே மனம் திரும்புதலாகும். இங்கு நாம் செம்மைப்படுத்த வேண்டியது கரடுமுரடான இடத்தையோ, மேடு பள்ளங்களையோ அல்ல. மாறாக நமது உள்ளங்களையே!
ஆண்டவருடைய வழிகளை ஆயத்தம் செய்யவும், பள்ளத்தாக்குகள் நிரப்பப்படவும், குன்றுகள் தாழ்த்தப்படவும், கரடுமுரடானவை சமதளமாக்கப்படவும் இவைகளில் நிறைவாக மனமாற்றம் காணவும் இன்றைய நற்செய்தி அழைக்கின்றது. மனம் மாறுதல் என்பது பழைய பாவ வாழ்வை, செயல்பாடுகளை முழுவதும் விட்டுவிடுதலாகும். திருமுழுக்குப் பெறுதல் என்பது புதிய சிந்தனைகளை, செயல்பாடுகளைத் தழுவிக் கொள்வதாகும்.
பழைய ஏற்பாட்டில் தாவீது அரசர் பாவம் செய்தபோது நாத்தான் இறைவாக்கினர் வழியாக இறைவன் சுட்டிக் காட்டியுள்ளார். அரசனும் இறைவா என் குற்றங்களை நான் உணர்கிறேன். உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன் என்று அறிக்கையிட்டார் (தி.பா. 51:3). தீயவர் தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு நீதியையும், நேர்மையையும், கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி என்கிறார் எசேக்கியல் (எசே 18:21). எருசலேமே உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிட்டு, கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்து கொள் (முதல் வாசகம்). கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழவேண்டும். மனிதர் அனைவரும் மனமாறி கடவுள் அருளும் மீட்பைக் காண வேண்டும் என்கிறார் திருமுழுக்கு யோவான். அனைத்தையும் உய்த்துணரும் பண்பில் வளர, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்பட, நீதியின் செயல்களால் நிரப்பப்பட்டு நேர்மைக்குப் பாதை அமைக்க அழைப்பு விடுக்கிறார் புனித பவுல்.
இன்றையச் சூழலில் நமது இதயத்தில் நிரப்பப்பட வேண்டியவைகள் அன்பு, அமைதி, மகிழ்வு. அகற்றப்பட வேண்டியவை சுயநலம், பொறாமை, வைராக்கியம் போன்றவைகளே ! கரடு முரடான பாதையை, நேரிய பாதையாகவும், கோணலான சிந்தனைகளையும், குறுக்குப் பாதைகளையும் அகற்றி, புதிய பாதை உருவாக்க முன் வருவோம். இவைகளை நமதாக்கிக் கொண்டால் நமக்குள்ளே இருக்கும் பிளவுகள், தடைச்சுவர்கள் அகற்றப்படும் என்பதையும் உணர்வோம். தங்களின் பழைய பாவ இயல்பை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருந்த பரிசேயர்களைப் போல் இல்லாமல், ஏமாற்றி வாங்கியதை நான்கு மடங்காக திருப்பிக் கொடுக்க முன்வந்து, மனமாறிய சக்கேயுவைப் போல (லூக். 19:1-10) தனது வாழ்வைச் செம்மைப்படுத்தி, பிறரையும் இயேசுவிடம் அழைத்து வந்த, சமாரியப் பெண்ணைப் போல (யோவா. 4:25-42). நாம் மனமாறி வாழ, நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் நமக்காக பத்தடி எடுத்து வைப்பார் என்பதை உணர்வோம். எருசலேமே எழுந்திரு! கீழ் திசை நோக்கு! ஏனெனில் இது விடியல் வரும் காலம் (பாரூக் 5:5) என்பதற்கு ஏற்ப நமது இதயத்தில் இறைவனை ஏற்க, தடையாக உள்ள அனைத்தையும் அப்புறப்படுத்திச் செப்பனிட்ட புதிய பாதை அமைக்க, முன் வருவோம்.
நடந்த பாதைகள் தடுமாறினாலும், நடக்கும் பாதங்கள் தளர்ந்தாலும், நமது இதயம் என்ற நிலத்தில், அன்பு, அமைதி, சமாதானம் போன்ற விதைகளை விதைப்போம்.
சிந்தனைக்கு
உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டனிடம் நிருபர், "ஐயா நீங்கள் கண்டுபிடித்த நூற்றுக்கணக்கான விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலே மிகச் சிறந்த கண்டு பிடிப்பு எது?" என்று கேட்டார். அவரின் பதிலோ கேட்டவரை ஆச்சரியப்பட வைத்தது. அந்த விஞ்ஞானி தன்னையே தாழ்த்திச் சொன்னார், "நான் கண்டுபிடித்த எல்லா கண்டுபிடிப்புகளிலும் பெரிய கண்டுபிடிப்பு, நான் ஒரு பாவி என்று கண்டுபிடித்ததே ஆகும். இரண்டாவது நான் கண்டுபிடித்த மிக முக்கியமான கண்டுபிடிப்பு நாம் அனைவரையும் மீட்கவே இயேசு பிறந்தார். நம் பாவங்களைப் போக்க அவரின் இரத்தமே அல்லாமல் வேறு ஒன்றுமில்லை என்று கண்டு பிடித்தேன்” என்றார். எத்தனை அருமையான பதில்!
நமது குற்றங்களைச் சுட்டிக்காட்டும்போது அக்கறையோடு ஆராய வேண்டும். அவற்றை கேட்டுக்கொள்ளும் மனப்பக்குவமும் நம்மில் வளர வேண்டும்.
நம்மைச் சரிசெய்துகொள்ள முன்வருவோம்
இஸ்ரயேல் நாட்டிலே, மக்களிடம் பணமிருந்தது, பதவி இருந்தது, பட்டம் இருந்தது, பரிசு இருந்தது. எல்லாருக்கும் ஓரளவு உண்ண உணவு இருந்தது, உடுக்க உடை இருந்தது, இருக்க இடமிருந்தது.
கடல் இருந்தது!
நதியிருந்தது!
சீனாய் மலையிருந்தது!
ஆனாலும் இன்றைய முதல் வாசகத்தில் பாரூக்கு இறைவாக்கினர் கூறுவது போல், பலரின் முகத்திலே துயரக் கோலம் !
மக்களைச் சுற்றி மாக்கோலங்கள் இருந்தன! மலர்க்கோலங்கள் இருந்தன! மங்களக்கோலங்கள் இருந்தன!
ஆனால் மனிதர்களின் முகத்திலோ மகிழ்ச்சிக்கோலங்கள் இல்லை !
எங்கு பார்த்தாலும் கரடுமுரடான முகங்கள்!
இதற்கு என்ன காரணம்? திருமுழுக்கு யோவான் சிந்தித்தார்! தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்டு வாழ்ந்த அவருக்குச் சரியான பதில் கிடைத்தது.
இவர்களின் தேவை இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை! அதனால்தான் இவர்கள் முகங்கள் சோகத்தால் நிரம்பி வழிகின்றன! அவர்களுக்குத் தேவையானது என்ன?
மீட்பு ! அதாவது விடுதலை!
தீராத நோயிலிருந்து விடுதலை!
மாறாத பாவத்திலிருந்து விடுதலை!
மரண பயத்திலிருந்து விடுதலை!
அவர்களுக்குத் தேவை ஒரு மீட்பர்!
இயேசு நோயிலிருந்து மக்களுக்கு விடுதலை அளித்தார் (மத் 9:27-31); பாவத்திலிருந்து விடுதலை அளித்தார் (லூக் 7:36-50); மரணத்திலிருந்து விடுதலை அளித்தார் (யோவா 11:1-44).
ஆகவே இயேசுவைப் பற்றி திருமுழுக்கு யோவான் போதிக்கத் தொடங்கினார்! இயேசுவே உங்கள் மீட்பர்! அவர் தரும் விடுதலையைப் பெற உங்கள் இதயங்களைத் தூயதாக்கிக் கொள்ளுங்கள்! அவர் நோயினாலும், பாவத்தாலும், மரணபயத்தாலும் பாதிக்கப்பட்டு கரடுமுரடாகக் காட்சியளிக்கும் உங்கள் உள்ளத்திற்கு விடுதலையளிப்பார் என்றார்.
உங்கள் உள்ளம் சிரிக்கும்போது உங்கள் உதடுகள் சிரிக்கும் என்றார்!
அன்று இயேசுவே மீட்பர் என அறிக்கையிட்ட அதே திருமுழுக்கு யோவான் இன்று நம் முன் தோன்றினால் என்ன சொல்வார்?
2015 ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்ரயேல் நாட்டிலே காணப்பட்ட அதே கரடுமுரடான முகங்களை இன்றும் இந்த உலகத்திலே நான் பார்க்கின்றேன்.
உங்களில் ஒருசிலரே சிரிக்கின்றீர்கள் !
சிலர் சிரிப்பதையே மறந்துவிட்டீர்கள் !
காரணம் இன்றைய 2- வது வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுவது போல நீங்கள் குற்றமற்றவர்களாக வாழ இன்னும் முன்வரவில்லை என்பார்.
இன்று, நாம் எல்லாருமே பாவிகள் தான் என்பதை ஏற்றுக்கொண்டு, கரடுமுரடாகக் காட்சியளிக்கும்
நமது கனவுகளை,
நமது எண்ணங்களை,
நமது செயல்களை,
நமது வாழ்க்கை முறைகளை,
நமது நாகரிகங்களை,
நமது பண்பாடுகளை,
சரிசெய்துகொள்ள முன்வருவோம்!
மனம் மாறும்போது,
முகமும் மாறும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!
நமது மனமாற்றம் நாம் தேடும் மகிழ்ச்சியை நமக்குத் தரும்!
அப்போது நாம் ஒவ்வொருவரும்
கடலிடைப் பிறவா அமிழ்தாய்
மலையிடைப் பிறவா மணியாய்
கொடியிடைப் பிறவா மலராய் மாறி
காலையிலே பூபாளம் பாடி
மாலையிலே நீலாம்பரி பாடி
நாளெல்லாம் மகிழ்ந்திருப்போம்!
மேலும் அறிவோம் :
முகத்தின் முதுக்குறைந்த (து) உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும் (குறள் : 707).
பொருள் : உள்ளத்தில் தோன்றும் விருப்பு வெறுப்பு ஆகிய உணர்வுகளை விரைந்து வெளிப்படையாகக் காட்டும் முகத்தை விட பேரறிவு கொண்டது வேறு எதுவும் இல்லை!
ஒருவர் கடவுளிடம் தனக்கு ஏராளமான நிலம் வேண்டும் என்றார். கடவுள் அவரிடம், "நீ காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அவ்வளவு தூரம் ஓடு, நீ ஓடிய நிலமெல்லாம் உனக்குச் சொந்தம்" என்றார், அந்த மனிதரும் காலை 6 மணியிலிருந்து வேகமாக ஓடினார். மாலை 5.30 மணி ஆனது. மீதியுள்ள அரை மணி நேரத்தில் அதிகமான நிலத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் தலைதெறிக்க ஓடிய அவர், மாலை ஆறு மணிக்குக் கீழே விழுந்து மாரடைப்பால் மாண்டுபோனார். பேராசை அவரது உயிரைக் குடித்துவிட்டது.
தவக்காலத்தைப் போன்று திருவருகைக் காலமும் மனமாற்றத்தின் காலம். திருவருகைக் காலத்தின் தலைசிறந்த போதகரான திருமுழுக்கு யோவான் நம்மை மனமாற்றத்திற்காக அழைக்கின்றார். இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள் காட்டி, பள்ளத்தாக்குகள் நிரப்பப்பட்டு, மலைகளும் குன்றகளும் தாழ்த்தப்பட்டு, கோணலானவை நேராக்கப்பட்டு, கரடு முரடானவை சமதளமாக்கப்பட வேண்டும் என்கிறார் (எசா 40:3-5). பேராசை என்னும் பள்ளத்தாக்கு நிரப்பப்பட வேண்டும்; ஆணவம் என்ற குன்று தாழ்த்தப்பட வேண்டும். நேர்மையற்ற கோணலான வாழ்வு நேரிய வாழ்வாக வேண்டும். கரடு முரடான உறவுகள் சரிசெய்யப்பட்டு செம்மையான உறவு மலர வேண்டும்.
குறிப்பாக, இன்றைய மனிதர்களை ஆட்டிப் படைக்கும் பேராசை என்னும் பள்ளத்தாக்கு நிரப்பப்பட வேண்டும். ஆசை இருக்க வேண்டும். ஆனால் பேராசை இருக்கக்கூடாது. “எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்" (லூக் 12:15). "பொருளாசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்” (1 திமொ 6:10).
பணம் வேண்டும். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. கருவறை முதல் கல்லறை வரை சில்லரை தேவை. பொருள் பால் இல்லாமல் காமத்துப்பாலும் வாங்க முடியாது, ஆவின் பாலும் வாங்க முடியாது. ஆனால் பணத்தைக் கொண்டு எல்லாமே வாங்க முடியாது. பணத்தைக் கொண்டு உணவை வாங்கலாம், ஆனால் பசியை வாங்க முடியாது. பணத்தைக் கொண்டு பஞ்சு மெத்தை வாங்கலாம், ஆனால் உறக்கத்தை வாங்க முடியாது. பணத்தைக் கொண்டு மருந்துகள் வாங்கலாம், ஆனால் மன அமைதியை வாங்க முடியாது.
திருமுழுக்கு யோவான் எளிமை வாழ்வு வாழ்ந்தார். வசதி நிறைந்த நகரத்தில் வாழாமல், வசதி ஏதுமில்லா பாலைநிலத்தில் வாழ்ந்தார். ஆடம்பர உடை அணியாது ஒட்டக முடியிலான ஆடை அணிந்தார். தொகை தொகையாக செலவழித்து வகை வகையான உணவை உண்ணாமல், வெட்டுக் கிளியையும் காட்டுத் தேனையும் உண்டு வந்தார். மேலும், தங்களுக்குள்ள உணவையும் உடையையும் இல்லாதவர்களுடன் பகிரவும், கையூட்டு வாங்காமல் கிடைக்கும் ஊதியம் போதும் என்னும் மனநிறைவுடன் வாழ மக்களுக்கு அறிவுறுத்தினார் (லூக் 3:11-14).
பேராசைக்கு மாற்று மருந்து நமக்குள்ளதை ஏழை எளியவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் மனப்பாங்காகும். பணக்காரர் ஒருவர் எவருக்கும் எதுவும் ஈயாமல் படு கஞ்சனாக வாழ்ந்தார். ஓர் இரவு திருடர்கள் அவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய காலையும் கையையும் கட்டிவிட்டு வீட்டிலுள்ள பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். அப்போது அப்பணக்காரர். அழுதுகொண்டு, "ஐயோ! நான் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதித்ததை எல்லாம், இப்ப என் காலைக் கட்டி. கையைக்கட்டி வாரிக்கிட்டு போயிட்டாங்களே" என்றார்.
தங்களுடைய பொருள்களைச் சேர்த்து வைத்துப்பின் அவற்றை இழப்பவர்கள் பிறர்க்குக் கொடுப்பதில் உள்ள இன்பத்தை அறியாதவர்களா? என்று கேட்கிறார் வள்ளுவர்,
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர் (குறள் 228)
தண்ணீர் மேல் படகு சென்றால் அது உல்லாசம், படகுக்குள் தண்ணீர் சென்றால் கைலாசம். பணம் நமக்கு அடிமையாக இருந்தால் சொர்க்கம், பணத்துக்கு நாம் அடிமையானால் நரகம், மேலை நாட்டுப் பணக்காரர்கள் அமைதியைத் தேடி நமது நாட்டுக்கு வருகின்றனர். ஆனால் இந்தியர்களோ பணத்தைத் தேடி மேலை நாடு செல்கின்றனர், இது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.
ஏழைகளும் ஏழையரின் உள்ளத்தினரும்தான் இறையாட்சியின் அருளடையாளங்கள், அவர்களே இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் பாரூக் குறிப்பிடும் விண்ணக எருசலேமின் மகிமையை அடைவர். அவர்கள் தான் கிறிஸ்துவின் நாளை எதிர்நோக்கிக் குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்பவர்கள் (பிலி 1:11), கண்ணீரோடு விதைக்கும் அவர்களே மகிழ்வுடன் அறுவடை செய்வர். அவர்களுக்கே கடவுளுடைய அரசு உரித்தானது (மத் 5:3). அவர்களே கடவுள் தரும் மீட்பைக் காண்பர் (லூக் 1:5). இன்றைய நுகர்வு கலாச்சாரத்திற்கு மாற்றுக் கலாச்சாரத்தை வகுத்துக் கொடுப்பர்கள்தான் ஏழ்மை வார்த்தைப்பாட்டை எடுத்த துறவறத்தார். ஆனால், இன்றைய துறவறத்தார் அக ஏழ்மையைக் கடைப்பிடிக்கும் | அளவுக்கு புற ஏழ்மையைக் கடைப்பிடிப்பதில்லை. புற ஏழ்மை இல்லாத அக ஏழ்மை பொருளற்றது.
ஒரு துறவற இல்ல விழாற்கு விருந்தினராக அழைக்கப்பட்ட ஒரு பொதுநிலையினர், அங்கு கொடுக்கப்பட்ட விதவிதமான அறுசுவை உணவை உண்டபின், "ஏழ்மை வார்த்தைப்பாடே இவ்வளவு ருசியாக இருந்தால், கற்பு வார்த்தைப்பாடு எவ்வளவு ருசியாக இருக்குமோ?" என்று கூறினாராம்! கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்,
இன்றைய விளம்பர உலகில் தேவையற்ற பொருள்களை எல்லாம் கவர்ச்சியுடன் விளம்பரம் செய்து நம்மை அவற்றிற்கு அடிமைகள் ஆக்குகின்றனர். தேவைகளைப் பெருக்குவதால் மன அமைதி வராது. தேவைகளைக் குறைப்பதால்தான் மன அமைதி கிடைக்கும்.
ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்
ஆசைப்படப்பட்ட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தமாயே (திருமூலர்)
காத்திரு
''சித்தார்த்தா " - ஆங்கில நாவல் இது. அதில் இப்படி ஒரு காட்சி. சித்தார்த்தா என்ற அந்த இளைஞன் ஒருத்தியைக் காதலிக்கிறான். அவள் எங்கே சென்றாலும் பின்னாலேயே சுற்றுகிறான். திடீரென்று ஒருநாள் தன்னைச் சுற்றித் திரியும் அவனைப் பார்த்து அவள் கேட்கிறாள்: ''என்னைக் காதலிக்க உனக்கு என்ன அருகதை உண்டு?" ஒருகணம் அதிர்கிறான். "என்ன கேள்வி இது? என்றாலும் இதோ பதில்" என்று அவளைக் காதலிக்கத் தனக்கு உள்ள தகுதியைப் பட்டியலிடுகிறான்.
1. என்னால் உன்னை நேசிக்க முடியும். 1 can love you.
2. என்னால் உன்னை நினைக்க முடியும். I can think of you.
3. எல்லாவற்றிற்கும் மேலாக என்னால் உனக்காகக் காத்திருக்க முடியும். Above all1 can wait for you.
இறைவனை அன்பு செய்கிறேன் என்பதற்கான அடையாளங்களில் ஒன்று அவனுக்காகக் காத்திருத்தல். அன்பு இல்லையென்றால் காத்திருத்தல் எரிச்சலாக இருக்கும். அன்புடன் என்றால் அதில் ஒரு த்ரில்' இருக்கும். 'காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு. காக்க வைப்பதில் சுகம் உண்டு',
நம் வாழ்வில் பெரும்பகுதி காத்திருக்கிறோம் - பயணத்தில் பஸ்ஸுக்காக, படுக்கையில் உறக்கத்துக்காக, வாசலில் நண்பனுக்காக, வரிசையில் (2) திரைப்பட நுழைவுச் சீட்டுக்காக... இப்படி ஏதோ ஒன்றுக்காக, யாரோ ஒருவருக்காக.
ஆனால் இறைவனுக்காக எந்த அளவு, எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம்?
"ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப் போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்த (லூக்.2:26) சிமியோன் எப்படியெல்லாம் இஸ்ராயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலுக்காகக் காத்திருந்தார்! “உமது மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன" என்ற அவரது உற்சாக வார்த்தைகளில் எத்துணை மகிழ்ச்சி, மனநிறைவு! மீட்பர் அரசியல் தலைவன் அல்ல துன்புறும் ஊழியன் என்ற உண்மையின் வெளிப்பாடு அல்லவா அன்றே அவர் கண்டது!
அன்னை மரியா எப்படியெல்லாம் காத்திருந்தாள்?
- மனிதர் அவளுக்கு வழங்கும் அடைமொழிகள் எத்தனை எத்தனை! விண்ணகத்தின் வாயிலே, விடியற்கால விண்மீனே, நீதியின் கண்ணாடியே, மறைபொருளின் ரோஜா மலரே இப்படியாக.
- கடவுள், தூதன் கபிரியேல் வழியாக வழங்கிய அடைமொழி அருள்மிகப் பெற்றவரே, இறையாசி நிறைந்தவரே என்பது
- மரியா தனக்குத் தானே வழங்கிக் கொண்ட அடைமொழி: 'இதோ ஆண்டவருடைய அடிமை'.
அடிமை என்பவன் யார்?
- தலைவனுக்காகக் காத்திருப்பவன்.
- தலைவனுக்குத் தன்னையே அர்ப்பணித்தவன்.
- தலைவனுக்கு அனைத்து வகையிலும், பணிவிடை புரிபவன்
- தலைவனுக்குக்காகத் தன்னையே இழப்பவன்.
அடிமை என்ற சொல்லில் காத்திருத்தல் மட்டுமல்ல வெறுமை யாக்குதலைப் பார்க்கிறோம்.
மனிதனோடு இணைய இறைவன் தன்னையே வெறுமையாக்கினார். (பிலிப்.2:7) இறைவனோடு இணைய மனிதன் தன்னையே வெறுமையாக்க வேண்டும்.
வெறுமையாக்குவது இறைவன் தன் அருளை, மீட்பை, நிறைவைப் பெற மிகவும் இன்றியமையாதது.
"உன் பாத்திரம் களிமண்ணால் நிறைந்திருந்தால் இறைவன் ஊற்றும் பால் அதில் விழும் போது தெறித்துச் சிதறும். எவ்வளவுக்கு எவ்வளவு அது காலியாக, வெறுமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இறைவன் ஊற்றும் பாலால் நிரம்பும்” என்ற சிலுவை அருளப்பரின் கூற்று திருவருகைக்காலச் சிந்தனைக்கு ஏற்றது.
அயர்லாந்து நாட்டில் ஒரு கிறிஸ்துமஸ் பழக்கம் உண்டு. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னிரவு வீட்டில் உள்ள கதவுகளையெல்லாம் திறந்து வைப்பார்கள். முன் கதவுக்கருகில் ஒரு மெழுகுதிரியை ஏற்றி வைப்பார்கள். பெத்லகேமில் அன்று இரவு மரியாவும் சூசையும் வீடுதேடி அலைந்ததன் நினைவாக அவர்களை வரவேற்க ஆயத்தமாக இருப்பது போல இப்பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திருவருகைக் காலத்தில் மீட்பரின் வருகைக்காக நமது இதயக் கதவு திறந்திருக்கிறதா? அருள்வாழ்வு என்னும் விளக்கு அங்கு ஒளிர்கிறதா? “இதோ நான் கதவருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால் நான் உள்ளே சென்று அவர்களோடு உணவருந்துவேன். அவர்களும் என்னோடு உணவருந்துவார்கள்” (தி.வெ.3:20) என்கிறார் ஆண்டவர்.
வர இருப்பவர் எரேமியா பார்வையில் நீதியின் தளிர். (எரே.33:15)
எசாயா பார்வையில் அமைதியின் ஊற்று. (எசா.9:6)
அந்த நீதியின் தளிர் செழித்து வளர, அந்த அமைதியின் ஊற்று சுரந்து பாய நம் வாழ்வில் “ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்”. (புலம்பல் 3:26)
''கலைமானைக் கண்ணியில் சிக்க வைத்துப் பிடிக்க முடியாது. ஏனெனில் அதற்குக் கூர்மையான பார்வை உண்டு. ஒரு பறவை விழிப்பாய் இருந்தால் வெகு எளிதில் வலையில் சிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியும். இவ்வாறு மிருகங்களெல்லாம் தங்களையே காத்துக் கொள்ள விழிப்பாய் இருக்கின்றபோது நீ மட்டும் ஏன் விழிப்புடன் இருப்பதில்லை ?" - புனித பசிலியார்.
“சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுங்கள்”
நிகழ்வு
அரசாங்க அதிகாரி ஒருவர் இருந்தார். தீமையின் மொத்த உருவாக இருந்த அவர், குற்றத்திற்கு மேல் குற்றம் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் செய்த குற்றமனைத்தும் வெளியுலகிற்குத் தெரிய வந்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்ய வந்தபோது, அவர் ஒரு அப்பாவியைக் கை காட்டி, “இவர்தான் எல்லாக் குற்றங்களையும் புரிந்தவர்; அதனால் இவரைக் கைது செய்யுங்கள்” என்றார். இதனால் காவல்துறையினர் அந்த அப்பாவியைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதன்பிறகு அரசாங்க அதிகாரியின் வீட்டில் அவரது மனைவி, பிள்ளைகள் என ஒருவர் மாற்றி ஒருவர் திடீர்த் திடீரென இறந்தார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு அரசாங்க அதிகாரிக்கு நன்கு அறிமுகமானவர்கள், “இப்போதாவது நீ உன்னுடைய பாவத்தை விட்டுவிட்டு, திருந்த நட” என்று அறிவுரை கூறினார்கள். இவரோ, “நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை; நான் எதற்கு மனம்மாறவேண்டும்?” என்று சொல்லித் தொடர்ந்து குற்றங்கள் புரிந்து வந்தார்.
ஒருநாள் இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை எழுதியவர், இவர் பொருட்டு, சிறையில் தண்டனையை அனுபவித்து வந்தவர். அவர் அந்தக் கடிதத்தில், “நீங்கள் எனக்குச் செய்த குற்றத்தை நான் மன்னித்துவிட்டேன்” என்று எழுதி இருந்தார். இக்கடிதம் அரசாங்க அதிகாரியில் உள்ளத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் இவர், “எத்தனையோ மனிதர்கள் நான் மனம்மாற வேண்டும் என்று சொன்னபோது, அவையெல்லாம் என்னிடத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை; ஆனால், என் குற்றங்களுக்காகத் தண்டனை பெறுகின்றவர் என்னை மன்னித்துவிட்டார் என்று சொன்னது, என்னுடைய வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இனிமேல் நான் பாவம் செய்யாமல், புதியதொரு வாழ்க்கை வாழ்வேன்” என்றார்.
ஆம், பாவங்களுக்கு மேல் பாவங்கள் செய்த இந்த அரசாங்க அதிகாரி, யாருக்கு எதிராகப் பெரிய பாவம் செய்தாரோ, அவரிடமிருந்தே மன்னிப்புப் பெற்றதும் புதியதொரு மனிதராக வாழத் தொடங்கினார். திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, பாவத்தை விட்டுவிட்டுச் சிறந்தவற்றை ஏற்றுச் செயல்பட அழைப்பு விடுக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
சிறந்தவற்றை ஏற்றுச் செயல்படுவதற்குப் பவுல் விடுக்கும் அழைப்பு ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்களுக்கு நல்லது எது, தீயது எது எனத் தெரியாது. காரணம், இவர்களுடைய அறியாமை அல்லது அறிவின்மை. அறிவின்மை அழிவுக்கு இட்டுச் செல்லும். அதனால்தான் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர ஓசேயா வழியாக, “அறிவின்மையால் என் மக்கள் அழிகின்றார்கள்” (ஓசே 4:6) என்கிறார். இன்னும் ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்களுக்கு நல்லது எது, தீயது எனத் தெரியும்; ஆனால், இவர்களால் நல்லவற்றைச் செய்ய முடியாது (உரோ 7:15). காரணம், இவர்களுடைய உடல் பலவீனம்.
இப்படி நல்லது எது, தீயது எது எனத் தெரியாமலும், நல்லது எது எனத் தெரிந்தும், அதைச் செய்ய முடியாமலும் இருக்கும் மனிதர்களைப் பார்த்துத்தான், பவுல் “நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மென்மேலும் வளர்ந்து, அன்பில் சிறந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகின்றேன்” என்கிறார். நாம் சிறந்தவற்றை ஏற்றுச் செயல்படுமாறு பவுல் இறைவனிடம் வேண்டுகிறார் எனில், நாம் சிறந்தவற்றை ஏற்றுச் செயல்படுவதே பவுலின் விருப்பம் என்று உறுதியாகச் சொல்லலாம். பவுல் சொல்லும் சிறந்தது எது என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் சொல்கின்றது. தொடர்ந்து அது குறித்துச் குறித்துச் சிந்திப்போம்..
எது சிறந்தது?
பவுல் சொல்வது போல், சிறந்தவற்றை ஏற்றுச் செயல்படுவதற்கு, ஒருவருக்கு எது சிறந்தது எனத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் சிறந்தது எது எனத் தெரிந்திருப்பது மட்டுமல்லாமல், அதன்படி வாழவேண்டும்.
நற்செய்தியில் வரும் திருமுழுக்கு யோவான், கடவுள் வழங்கிய சிறந்த கொடையான அவருடைய வாக்கைப் பெற்றுக்கொண்டு, அதன்படி வாழ்ந்து, “பாவ மன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்” என்கிறார். இங்கே சிறந்தது எது எனில், மனம்மாற்றம்தான். ஆம், எவர் ஒருவர் தன்னுடைய பாவத்தை விட்டுவிட்டு மனம்மாறிப் புதியதொரு வாழ்க்கை வாழ்கின்றாரோ, அவர் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்கின்றார்.
உண்மையான மனம்மாற்றம் எது என்பதைத் திருமுழுக்கு யோவான், மத்தேயு நற்செய்தியில் இன்னும் தெளிவாகக் கூறுவார். “நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்” (மத் 3:8) என்று திருமுழுக்கு யோவான் சொல்வதன் மூலம், மனம்மாற்றம் என்பது வெறும் சொல்லல்ல, அது செயல் என்று என்பது புரிகின்றது. சிறந்தவற்றை ஏற்றுக் செயல்படுத்தவேண்டும் என்றும், மனம்மாற்றம்தான் சிறந்தது என்றும் சிந்தித்த நாம், எதற்காக நாம் மனம்மாறவேண்டும் என்று சிந்திப்போம்.
சமமாக்க வரும் கடவுள்
நாம் வாழும் இவ்வுலகில் உயர்ந்தவன் – தாழ்ந்தவன், பணக்காரன் – ஏழை, படித்தவன் – பாமரன்... இப்படி ஏற்றத்தாழ்வுகள் நிறைய உண்டு. இத்தகைய ஏற்றத்தாழ்வுகளால், மனிதர்கள் சக மனிதர்களை மனிதர்களாகக்கூட மதிக்காத அவலநிலை ஏற்பட்டுள்ளது. மனிதர்கள் சக மனிதர்களை மனிதர்களாக மதித்திருந்தால் இனத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் இவ்வளவு கலவரங்களும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்காது. இந்தக் கலவரங்களும் உயிர்ச்சேதமுமே மனிதர்கள் சக மனிதர்களை மனிதர்களாக மதிக்கவில்லை என்பதற்குச் சான்றுகளாக இருக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் பாரூக் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், “.....குன்றுகள் எல்லாம் தாழவும் பள்ளத்தாக்குகள் நிரம்பவும் இவ்வாறு நிலம் முழுவதும் சமமாகவும் கடவுள் கட்டளையிட்டுள்ளார்” என்கிறது. ஆம், மெசியாவின் வருகையின் போது எல்லாம் சமமாகும். அப்போது மேற்சொன்ன எந்தவோர் ஏற்றத் தாழ்வும் இராது.
ஒருவேளை நாம் சக மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காமல், அவர்களை வேறுபடுத்திப் பார்க்கின்றோம் எனில், முதலில் நாம் மனம்மாறி, மெசியாவாம் கிறிஸ்து இயேசுவோடு ஒன்றிணைந்து இருக்கும் நாம் அனைவரும் ஒன்றாய் இருக்கின்றோம் (கலா 3:28) என்ற உணர்வோடு வாழவேண்டும். இத்தகைய மாற்றமானது நம்மிடமிருந்து தொடங்கவேண்டும்.
ஆகவே, மெசியாவாம் இயேசு எல்லாவற்றையும், எல்லாரையும் சமமாக்க வருவதால், நாம் நம்மிடம் இருக்கும் மனிதர்களை பிரித்துப் பார்க்கும் மனநிலையிலிருந்து மனம்மாறி, எல்லாரையும் சகோதரர் சகோதரியாகப் பார்க்கும் சிறந்தவற்றை ஏற்றுச் செயல்படுத்திக் கடவுளின் அன்பு மக்களாவோம்.
சிந்தனை
‘தாயின் கருவில் உருவானது முதல், மனித உயிர் மாண்புடன் மதிக்கப்பட்டுக் காப்பாற்றப் படவேண்டும்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் இவ்வுலகில் உள்ள எல்லாரையும் மனித மாண்போடு நடத்தி, எல்லாரையும் சமமாக நடத்த வரும் இயேசுவின் உண்மையான சீடர்களாகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
திருவருகைக்காலம் 2ம் ஞாயிறு
மனசாட்சியற்ற தலைவர்களும், பேராசை பிடித்த செல்வந்தர்களும் இயற்கைச் சீரழிவுகளுக்கும், சமுதாய அவலங்களுக்கும் காரணம் என்று நாம் குற்றம் சுமத்திவிட்டு ஒதுங்கிவிட முடியாது. எப்போதெல்லாம் நம் சுட்டுவிரல் அடுத்தவரை நோக்கி நீள்கிறதோ, அப்போதெல்லாம் மற்ற விரல்கள் நம்மையும் குத்திக்காட்டுகின்றன என்பதை உணர வேண்டும். இன்றையச் சமுதாயச் சீரழிவுக்கு நாமும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறோம் என்பதை, பணிவுடன் ஏற்றுக்கொண்டு, நம் வாழ்வுப் பாதையைச் சீராக்க முயல்வோம்.. பாதையைச் செம்மையாக்குங்கள், மேடுபள்ளங்களைச் சமமாக்குங்கள், என்ற எச்சரிக்கை இன்றைய நற்செய்தியில் ஒலிக்கிறது. நம்மில் ஒருவராகப் பிறக்கவரும் இறைவனை, தகுந்த முறையில் வரவேற்க நமக்கு வழங்கப்பட்டுள்ள அருள் நிறை காலம், திருவருகைக் காலம்.
கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட நாம் எடுக்கும் முயற்சிகளைவிட, பல நூறு மடங்கு அதிக முயற்சிகள் எடுத்துவருகிறது, வர்த்தக உலகம். கிறிஸ்மஸ் விழாவுக்கென்று, கடைவீதியில், பொருள்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்த ஓர் இளம் தாய் நம் திருவருகைக் காலச் சிந்தனைகளை ஆரம்பித்து வைத்தார். அவரது ஐந்து வயது மகன், ஒரு கடையில் அலங்காரமாய் வைக்கப்பட்டிருந்த குழந்தை இயேசுவைக் காண அம்மாவை அழைத்தபோது, அந்த இளம் தாய், "அதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல" என்று சொன்னது நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நாம் சிந்தித்தோம். திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று, நாம் மீண்டும் கடைவீதிக்கு வந்துள்ளோம். 'நேரமில்ல' என்று சென்ற வாரம் சிந்தித்ததுபோல, 'நேரம் வந்துவிட்டது' என்று இன்று சிந்திக்க வந்துள்ளோம்.
கிறிஸ்மஸ் அலங்காரங்களுடன் மின்னும் ஒரு கடைவீதியில் நாம் நடந்து செல்வதாகக் கற்பனை செய்துகொள்வோம். அங்கே... "இறுதிநாள் நெருங்கியுள்ளது… ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்" என்ற குரல் ஒரு பக்கம் ஒலிக்கிறது. "இன்றே இறுதிநாள்... தள்ளுபடி விற்பனையில் பொருள்களை அள்ளிச் செல்லுங்கள்" என்று வேறொரு குரல் மறுபக்கம் ஒலிக்கிறது. இவ்விரு குரல்களுக்கும் போட்டி வந்தால், எந்தக் குரல் வெல்லும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். தள்ளுபடி விற்பனையைப்பற்றி குரல் வரும் திசை நோக்கி, முட்டி, மோதிக்கொண்டு, கூட்டம் அலைமோதும்.
பெருநகரங்களில், கடைவீதிகள், அடுக்குமாடி கட்டிடங்களாய் மாறி உள்ளன. இக்கடைவீதிகளுக்கு Shopping Mall என்று பெயரிட்டிருக்கிறோம். அமெரிக்காவின் Shopping Mall ஒன்றில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி இது:
அந்த Mallஇல் கிறிஸ்மஸ் வியாபாரம் வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்தது. பொருட்கள் வாங்கிக் களைத்துப் போனவர்கள் இளைப்பாறுவதற்கு அந்த Mallன் ஒரு பகுதியில் தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் அமர்ந்திருந்த ஒருவர், பொருள்கள் வாங்கியவர்களிடமும், அல்லது, வாங்க வந்திருப்பவர்களிடமும் வலியச்சென்று பேச ஆரம்பித்தார். அவர் மிகவும் கண்ணியமாக, கனிவாகப் பேசியதால், அவர் சொன்னதை மக்கள் கேட்டனர். அவர் அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் ஒரு சில கேள்விகள் மட்டும் கேட்டார்: "ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? கிறிஸ்மசுக்கு இத்தனை பரிசுகள் வாங்கத்தான் வேண்டுமா? நீங்கள் செலவு செய்யும் பணத்தில் பாதியை ஏழைகளோடு பகிர்ந்துகொண்டால், உங்கள் கிறிஸ்மஸ் இன்னும் மகிழ்வாக இருக்காதா? நீங்கள் பல நாட்களாக மன்னிக்க முடியாமல் கஷ்டப்படும் ஒருவரைத் தேடிச்சென்று, அவருடன் ஒப்புரவனால், அதைவிட சிறந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இருக்க முடியுமா? இந்தக் கடைகளில் காணப்படும் கிறிஸ்மஸ் மகிழ்ச்சி உங்களுக்குச் செயற்கையாக தெரியவில்லையா?" என்று அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையில் கேள்விகளை எழுப்பி வந்தார்.
அவர் சொன்னதில் இருந்த உண்மைகளை உணர்ந்த பலரும், தலையசைத்தனர். பொருள்கள் வாங்க வந்த ஒரு சிலர் மீண்டும் திரும்பிச்சென்றனர். வேறு சிலர் தாங்கள் புதுப்பிக்க விரும்பிய உறவுகளுக்காக பரிசுப் பொருள்கள் வாங்கிச்சென்றனர். இன்னும் ஒரு சிலர் அந்த Mallஇல் நேரத்தைச் செலவிடுவதற்குப் பதில், அருகிலிருந்த ஒரு கோவிலுக்குச் சென்று அமைதியாக நேரத்தைச் செலவிட்டனர்.
கடைகளின் உரிமையாளர்கள் இந்த மனிதரைப் பற்றிக் கேள்விப்பட்டனர். Mallன் காவலாளிகளிடம் சொல்லி, அந்த மனிதர் மீண்டும் Mallக்குள் நுழையாதவாறு தடுத்தனர். அந்த மனிதரை ஏன் அவர்கள் தடைசெய்தனர் என்ற கேள்வி எழுந்தபோது, "அவர் நம் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்" என்று பதில் சொன்னார்கள். "அவர் எங்கள் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்தார்" என்று அந்த வியாபாரிகள் தங்களைப்பற்றி மட்டும் சொல்லாமல், மக்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு, "அவர் நம் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்" என்று நமக்கும் சேர்ந்து பதில் சொன்னார்கள். இது, அவர்கள் படித்து, பழகி வைத்துள்ள வியாபாரத் தந்திரம். நமக்கும் சேர்த்து சிந்திப்பது, முடிவெடுப்பது என்று பல வழிகளிலும் வியாபாரிகள் நம்மை ஒரு மாய வலையில் கட்டிப்போட்டு வைத்துள்ளனர். வியாபாரிகள் விரித்த வலைகளில் மக்கள் சிக்காமல் இருக்க, Mallஇல் அமர்ந்து கேள்விகள் எழுப்பிய அவர், கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை கெடுத்தாரா, அல்லது அந்த மகிழ்ச்சிக்குப் புதியத் தெளிவுகளை தந்தாரா என்பது நாம் சிந்திக்கவேண்டிய கேள்வி.
கிறிஸ்மஸ் மகிழ்ச்சி என்றால் என்ன, இவ்விழாவை எவ்விதம் கொண்டாடுவது என்ற கேள்விகளுக்கு வியாபாரிகள் 'ரெடிமேட்' பதில்களை வைத்திருக்கின்றனர். அந்தப் பதில்களை, எண்ணங்களை நம்மீது திணிக்க முயன்று, வெற்றியும் பெறுகின்றனர். வியாபாரிகள் தயாரித்து வைத்திருக்கும் 'ரெடிமேட்' எண்ணங்களுக்குப் பின்னணியில் அவர்களது சுயநலம் ஒளிந்திருப்பதை எளிதில் உணரலாம். ஆனால், Mallக்கு வந்த மக்களிடம் கேள்விகள் எழுப்பிய மனிதரோ, எவ்வித சுயநலமும் இல்லாமல், கிறிஸ்மஸ் விழா இன்னும் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடப்படவேண்டும் என்ற எண்ணத்தில், தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். Shopping Mall என்ற மாய வலையில் சிக்கியிருந்த மனிதர்களை விழித்தெழச் செய்த அந்த மனிதர், பல வழிகளில் திருமுழுக்கு யோவானை நமக்கு நினைவுபடுத்துகிறார்.
திருமுழுக்கு யோவான் நம் நகரங்களில் உள்ள கடைவீதிகளுக்கு இன்று வந்தால், மனதைப் பாதிக்கும் கேள்விகள் எழுப்பியிருப்பார். திருமுழுக்கு யோவான், ஒரு தீப்பிழம்பாக இருந்ததால், இன்னும் ஒரு படி மேலேச் சென்று, அந்த வியாபாரிகளையும் தங்கள் வழியிலிருந்து மாறச்சொல்லி சவால் விட்டிருப்பார்.
சுயநலக் கலப்படம் எதுவும் இல்லாமல், அந்த Mall மனிதரோ, அல்லது திருமுழுக்கு யோவானோ கிறிஸ்மஸ் என்றால் என்ன, அதை எப்படிக் கொண்டாடுவது என்று சொல்லித்தருவதைக் கேட்கப் போகிறோமா? அல்லது, சுயநல இலாபங்களுக்காக நமது விழாக்கள் மீது வேறுபட்ட அர்த்தங்களைத் திணிக்கும் வியாபாரிகள் சொல்லித் தருவதைக் கேட்கப் போகிறோமா? "இறுதிநாள் நெருங்கியுள்ளது… ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்." என்று திருமுழுக்கு யோவான் எழுப்பும் குரலைக் கேட்கப் போகிறோமா? அல்லது, "இன்றே கடைசி நாள்... தள்ளுபடி விற்பனையில் பொருள்களை அள்ளிச் செல்லுங்கள்." என்று வியாபாரிகள் எழுப்பும் குரலைக் கேட்கப் போகிறோமா?
வியாபாரிகளும், விளம்பரதாரர்களும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் தயாரிக்கும் ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கு, நாம் ஆன்மீக வழிகளில் திருநாட்களுக்கு தயாரிக்கும் ஆர்வமாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆன்மீக உலகம் கூறும் தயாரிப்பு என்ன? நாம் எதிர்நோக்கியிருக்கும் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு என்ன வகையில் தயாரிக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கு இன்றைய நற்செய்தி வரிகள் விடைபகர்கின்றன. இறைவாக்கினர் எசாயா இன்றைய நற்செய்தியின் வழியாக நம் அனைவருக்கும் விடுக்கும் அறைகூவல் இதுதான்:
லூக்கா நற்செய்தி 3: 4-6
“பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.”
தற்பெருமையில் பூரித்துப்போய், தலைகனம் மிகுந்து வாழும்போது உள்ளத்தில் மலைகள் தோன்றும். துன்பத்தைக் கண்டு நொறுங்கிப் போகும்போது, பள்ளங்கள், பள்ளத்தாக்குகள் உருவாகும். இந்த மலைகளைத் தாழ்த்தி, பள்ளங்களை நிரப்புவதற்குத் தேவையான ஆயுதங்கள் எங்கே? தேடி எங்கும் போகவேண்டாம். அவை நம்மிடமே உள்ளன. ஒருவேளை, அவற்றை அதிகம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டதால், தூசி படிந்து, துரு பிடித்துப் போயிருக்கலாம். அந்த ஆயுதங்கள் எவை? தாழ்ச்சி, நம்பிக்கை... தாழ்ச்சி, நம்பிக்கை இவற்றைக்கொண்டு மனதை பண்படுத்துவோம். இறைவன் இந்தப் பாதையில் வருவார். நம் மனதில் தங்குவார். வரும் ஆண்டு முழுவதும், மனிதக் குடும்பம், அன்பு, பரிவு ஆகிய உணர்வுகளால் மென்மையடைந்து, மேன்மையடைய வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.
திசை மாற்றம்!
திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றில் நாம் ஏற்றும் மெழுகுதிரி ‘பெத்லகேம் திரி’ என அழைக்கப்படுகிறது. இது குறித்துக்காட்டும் மதிப்பீடு அமைதி.
நம் வாழ்வுப் பயணம் அனைத்தும் ஒன்று கடவுளை நோக்கியதாக இருக்கும், இல்லை என்றால் கடவுளை விட்டு விலகியதாக இருக்கும். இவ்விரண்டு பயணங்களும் எதிரெதிர் திசைகளில் செல்கின்றன. திசை மாற்றம் என்பது வாழ்வு மாற்றமாக இருக்கிறது. நம் வாழ்வு, பணி, உறவுநிலைகள் அனைத்தும் திசைகள் சார்ந்ததாகவே இருக்கின்றன. நம் தனிப்பட்ட மதிப்பீடுகளை நோக்கி நாம் பயணம் செய்கிறோம், அல்லது அதற்கு எதிர்த்திசையில் பயணம் செய்கிறோம். குடும்ப மற்றும் உறவுநிலைகளில் உறவை நோக்கிச் செல்கிறோம், அல்லது உறவிலிருந்து விலகிச் செல்கிறோம்.நாம் செய்கிற பணியில் நிறைவும் மகிழ்ச்சியும் ஆர்வமும் இருக்கும்போது நாம் அதை நோக்கிச் செல்கிறோம். அல்லது அதற்கு எதிர்த்திசையில் செல்கிறோம்.
திசை மாற்றமே மனமாற்றமாக இருக்கிறது. ஊதாரி மகன் எடுத்துக்காட்டில் (லூக் 15), தந்தையை விட்டு எதிர்த்திசையில் செல்கிற மகனை வறுமை பற்றிக்கொள்கிறது. தந்தையை நோக்கி அவன் திரும்பும்போது மகிழ்ச்சியால் இல்லம் நிரம்புகிறது. சக்கேயு நிகழ்வில் (லூக் 19:1-10) இயேசுவை நோக்கிய திசை சக்கேயுவின் வாழ்வில் மாற்றம் வருகிறது.
நாம் செல்கிற திசை சரியானது என்பதை நாம் அறிந்துகொள்வதற்கான அளவுகோல்தான் ‘அமைதி.’ ஆகையால்தான், ‘அமைதிக்காகவே படைக்கப்பட்டுள்ள எங்கள் இதயங்கள் உம்மில் அமைதி காணும்வரை அமைதி அடைவதில்லை’ என மொழிகிறார் புனித அகுஸ்தினார்.
‘அமைதி’ (ஷலோம்) என்பது சலனமற்ற, முழுமையான மனப்பாங்கு எனப் புரிந்துகொள்வோம். சொல்லோவியமாகப் புரிந்துகொண்டால் கீறல் இல்லாத முழுமையான பானை. எந்தவொரு ஆற்றல் விரயமும் நம்மில் நிகழாதபோது நம் உள்ளம் அமைதி கொள்கிறது. மூளையின் செயல்பாட்டில் நாம் மூழ்கியிருக்கும்போது அமைதியை இழக்கிறோம். மூளையிலிருந்து சற்றே இறங்கி மனம் நோக்கி நகரும்போது அமைதி கொள்கிறோம்.
(அ) திசை மாற்றம் என்பது ஆண்டவரால் நிகழ்கிறது
‘சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம்’ (திபா 126) என்று மொழிகிறார் ஆசிரியர் (பதிலுரைப்பாடல்). கனவுக்கும் நிஜத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன? நாம் உணவு உண்ணுவதுபோல கனவு காண்கிறோம் எனில், அந்தக் கனவு நம் பசியை ஆற்றுவதில்லை. நிஜத்தில் நாம் உண்ணும்போதுதான் நம் பசி ஆறுகிறது. கனவில் நடக்கும் செயல்களுக்கு நம் முயற்சி தேவையில்லை. சீயோனின் அடிமைநிலையை ஆண்டவரே மாற்றுகிறார்.
இந்த நிகழ்வையே முதல் வாசகத்தில் (காண். பாரூக்கு 5:1-9) வாசிக்கின்றோம். பாரூக்கு எரேமியா இறைவாக்கினரின் செயலர். பாரூக்கு நூல் கத்தோலிக்க விவிலியத்தின் இணைத்திருமுறை பகுதியில் இருக்கிறது. இதன் கிரேக்க மூலம் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட முதல் ஏற்பாட்டு நூல்களை யூதர்களும், பிரிந்த சகோதரர்களும் ‘வெளிப்படுத்தப்பட்ட நூலாக’ ஏற்றுக்கொள்வதில்லை.
பாபிலோனியாவுக்கு இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக நாடுகடத்தப்பட்டபோது இவரும் உடன் சென்றவர். எருசலேமில் எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரையும் நெபுகத்னேசர் தன் அரண்மனைக்கு எடுத்துச்சென்றுவிட்டார். ஆக, பாரூக்கு அடிமைத்தனத்தின் கோரத்தை நேருக்கு நேர் கண்டவர்.
இன்று இருக்கும் நிலையை நாளை ஆண்டவர் புரட்டிப்போடுவார் என்ற நம்பிக்கையைத் தருகிறார் பாரூக்கு. பாரூக்கு ஐந்து வகை புரட்டிப்போடுதல்களை முன்வைக்கின்றார்: (1) துன்ப துயர ஆடை களையப்பட்டு, மாட்சியின் பேரழகு அணிவிக்கப்படும், (2) ஒன்றுமில்லாத வெறுந்தலையில், ஆண்டவரின் மாட்சி மணிமுடியாகச் சூட்டப்படும், (3) பெயரில்லாதவர்களுக்கு, தங்கள் பெயர்களை இழந்தவர்களுக்கு, ‘ஐரின் டிகாயுசனேஸ்’ (‘நீதியில் ஊன்றிய அமைதி’) என்றும் ‘டோக்ஸா தெயோசேபெயாஸ்’ (இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி’) என்றும் பெயர்கள் சூட்டப்படும், (4) நடந்து சென்றவர்கள் பல்லக்கில் மன்னர்போல் தூக்கிவரப்படுவார்கள், மற்றும் (5) மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகளில் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் சமமான நறுமணமும் மிகுந்த சாலைகளில் நடத்திவரப்படுவர்.
அடிமைத்தனத்தின் பழைய பாதைக்கு எதிர்மறையாக இருக்கிறது இறைவன் அமைத்துத் தரும் புதிய பாதை. பழைய பாதை இஸ்ரயேல் மக்களை நிர்வாணமாக நடத்திச் சென்றது. ‘ஆடைகள் களையப்படுதல்’ என்பது ‘அடையாளங்கள் அழிக்கப்படுவதைக்’ குறிக்கிறது. பாபிலோனியாவில் நிர்வாணமாக நின்றவர்களை தன் மாட்சி என்னும் பேரழகால் உடுத்துகின்றார் இறைவன். புதிய பாதை அவர்களுக்கு ஆடை அணிவிக்கிறது. கடவுள் அருளும் மாட்சியின் பேரழகே அவர்களின் ஆடையாக இருக்கிறது. பழைய பாதையில் அவர்கள் தலைமுடி மழிக்கப்பட்டது. அடிமைகளின் தலைமுடி சுகாதாரத்திற்காகவும், நேர மேலாண்மைக்காகவும் மழிக்கப்படும். இப்படி மொட்டைத் தலையாய் இருந்தவர்களுக்கு மணிமகுடம் அணிவிக்கிறார் இறைவன். புதிய பாதையில் அவர்கள் மாட்சியை மணிமுடியாகச் சூடியிருக்கின்றனர். பழைய பாதையில் இஸ்ரயேல் மக்களுக்குப் பெயரில்லை. அடிமைகளும், சிறைக்கைதிகளும் பெயர் சொல்லி அழைக்கப்படுவதில்லை. அவர்கள் வெறும் எண்கள்தாம். பெயர் என்னும் அடையாளம் இழந்தவர்கள் ‘ஐரின்’ (அமைதி), ‘டோக்ஸா’ (மாட்சி) என்ற அழகான பெயர்களைப் பெறுகிறார்கள். இந்த இரண்டு பெயர்களும் அவர்கள் இவ்வளவு நாள் இழந்தவற்றைத் திருப்பி தருவனவாக இருக்கின்றன. பழைய பாதை இருளாக இருந்தது. புதிய பாதை பேரொளியால் ஒளிர்கிறது. பழைய பாதை அவர்களை மண்டிபோட வைத்திருந்தது. புதிய பாதை அவர்களை எழுந்து நிற்கச் செய்கிறது. பழைய பாதை கண்ணீராய் நிறைந்தது. புதிய பாதை மகிழ்வால் நிறைகிறது. பழைய பாதையில் சங்கிலி கட்டப்பட்டு கால்நடையாக இழுத்துச் செல்லப்பட்டனர் மக்கள். இறைவன்தாமே இனி இவர்களை பல்லக்கில் தூக்கி வருவார். புதிய பாதையில் அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல உயர்மிகு மாட்சியுடன் அவர்கள் அழைத்துவரப்படுகிறார்கள்.பழைய பாதையில் யாருடைய உயிரையும் பற்றி யாரும் கவலைப்படவில்லை. புதிய பாதையில் இறைவன் அவர்களின் உயிரைப் பாதுகாக்கின்றார். பழைய பாதை இரத்தம் மற்றும் வியர்வையால் துர்நாற்றம் அடித்தது. எருசலேமிலிருந்து பாபிலோனியாவுக்குச் செல்லும் பாதை கரடு முரடானது. பள்ளத்தாக்குகள், குன்றுகள் நிறைந்தது. இவற்றையெல்லாம் சமன்படுத்துவதோடு இறைவன் இன்னும் ஒருபடி போய், பாதைகளில் சாம்பிராணியும் போடுகின்றார். அடிமைகள் இழுத்துச் செல்லப்பட்ட பாதை இரத்தம், உடலின் அழுகல் என நாற்றம் எடுக்கும். நறுமணம் இந்த நெடியை மாற்றுவதோடு, புத்துணர்ச்சியையும் கொடுக்கும். புதிய பாதையில் நறுமணம் வீசும் மரங்கள் நிழல் தருகின்றன.
இவ்வாறாக, இஸ்ரயேல் மக்களைத் தேடி வருகின்ற இறைவனின் பாதை புதிய பாதையாக இருக்கிறது.
(ஆ) திசை மாற்றம் பெற்றவர்கள் அதில் நிலைத்திருக்க வேண்டும்
இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ளும் வரை பிலிப்பி நகர மக்கள் தங்களின் பழைய பாதையில் இருக்கின்றனர். இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கை அவர்களைப் புதிய பாதைக்கு அழைத்துவருகின்றது. இந்தப் புதிய பாதையில் அவர்கள், ‘அறிவிலிலும் அன்பிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுவதாக’ முன்மொழிகின்றார். மேலும், அவர்களின் செயல்கள் நீதியின் செயல்களாக வேண்டுமென்று அறிவுறுத்துகின்றார்.
புதிய பாதைக்கு இறைவனின் அருளால் அழைத்துவரப்படுகின்ற பிலிப்பி நகர மக்கள், தங்கள் சொந்த நற்செயல்களால் அந்தப் பாதையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
(இ) திசை மாற்றம் என்பது தலைகீழ் மாற்றமாக இருக்கிறது
‘ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்’ என்று மொழிகின்ற திருமுழுக்கு யோவான் புதிய பாதைக்கான தயாரிப்பு வேலைகளை முன்னெடுக்க அறைகூவல் விடுக்கின்றார். மேலும், ‘இந்தப் புதிய பாதையில் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்’ என்ற எசாயாவின் வாக்கு நிறைவேறுவதாக லூக்கா பதிவிடுகின்றார். எசாயா மொழிகின்ற சொல்லாடல்களை உருவகங்களாக எடுத்துக் கொள்வோம்:
பாலைநிலம்: நம் மனம் இறைவன் இல்லாமல், ஒளி இல்லாமல், மகிழ்ச்சி இல்லாமல், நிறைவு இல்லாமல் காய்ந்திருக்கும் நிலை. பாலை என்பது ஒரு குறைவு. பேரரசர், ஆளுநர், குறுநிலமன்னர்கள், தலைமைக்குருக்கள் என பளிங்குத் தரைகளில் வலம் வந்தவர்களுக்கு எட்டாத ஆண்டவரின் குரல், பாலைநிலத்தில் வாழ்ந்த திருமுழுக்கு யோவானை எட்டுகிறது. நம் வாழ்விலும் குறை மேலோங்கி நிற்கும் போது இறைவன் குரல் நம்மை எட்டுகிறது.
வழி: இது ஆண்டவர் அமைத்துத் தரும் புதிய பாதையைக் குறிக்கிறது. வழி நம் முன்பாக இருந்தாலும் அந்த வழிக்கான பயணத்தை மேற்கொள்ளும்போது தான் அந்த வழி அர்த்தம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக நாம் பயணிக்கும் நான்கு வழிச் சாலைகள், வாகனங்கள் இல்லாத போது வெறும் காட்டுப்பகுதியே. பயன்பாட்டில் தான் வழியானது வழியாக மாறுகிறது.
ஆயத்தமாக்குதலும் செம்மையாக்குதலும்: ஆயத்தமாக்குதல் புதிய முயற்சியையும், செம்மையாக்குதல் புதுப்பிக்கும் முயற்சியையும் குறிக்கிறது. நாம் நம் வாழ்வில் சில நேரங்களில் புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம். சில வேளைகளில் ஏற்கெனவே உள்ள பாதையைப் புதுப்பிக்கின்றோம். புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க துணிவு தேவை. பழைய பாதையைப் புதுப்பிக்க உள்ளுணர்வு தேவை.
பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும், மலை, குன்று யாவும் தகர்க்கப்படும்: பள்ளத்தாக்குகள் என்பவை என் வாழ்வில் உள்ள குறைவு மனநிலைகள். மலை என்பது என் வாழ்வில் உள்ள மேட்டிமை எண்ணங்கள். பள்ளத்தாக்குகள் நமக்குப் பயம் தருகின்றன. மலை நம் பார்வையை மறைக்கின்றது.
கோணலானவை நேராக்கப்படும். கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். கோணலானவை என்பவை நமக்கு நாமே நாம் சொல்லும் பொய்கள். இவை, நம் மனவுறுதியைக் குலைக்கின்றன. கரடுமுரடானவை என்பவை நம்மைத் தொற்றிக் கொண்டிருக்கும் பிறழ்வுகள்.
விதை விதைக்கச் செல்லும் திசை துயரம் நிறைந்ததாக இருக்கிறது. ஆனால், அறுவடை செய்து அரிக்கட்டுகளை எடுத்துக்கொண்டு வரும் திசை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கிறது.
இன்றைய திருப்பலியின் சபை மன்றாட்டில், ‘ஆண்டவரை நோக்கி விரைந்து செல்லும் மக்கள் எதிரே உள்ள தடைகளால் நிறுத்தப்படாமல் இருக்க’ செபிக்கின்றோம்.
செம்மையான வாழ்வு பாதையே அமைதி !
திருவருகை காலத்தின் இரண்டாம் வாரத்தில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த வாரத்தில் நாம் சிந்திக்க இருக்கும் சிந்தனைகள் அமைதியைப் பற்றியவை. மேலும் இவ்வார வாசகங்கள் மெசியாவின் வருகைக்காக தாயாரிக்க முன்னோடியாய் அனுப்பப்பட்ட திருமுழுக்கு யோவானை சுட்டிக்காட்டுவனவாய் அமைகின்றன.
அமைதி என்பது என்ன ? அமைதி என்றால் சத்தமில்லாத அல்லது நிசப்தமான நிலை . இது வெளிப்புறமானது. மனித வாழ்வில் அமைதி என்பது உள்ளார்ந்த குழப்பமில்லாத, சலனமற்ற ,பிரச்சனைகளும் கவலைகளும் வலிகளும் இல்லாத வாழ்வு என்பது நமது புரிதல். நாடுகளுக்கிடையே அமைதி என்பது போர்கள் இல்லாத சுமூக உறவு உள்ள சூழ்நிலை. ஆக அமைதியை நாம் வரையறுக்க இயலாது.
அதே நேரத்தில் அமைதி என்பது ஆவியாரின் கொடை. அதை கடவுளாலன்றி யாராலும் கொடுக்க இயலாது.கடவுளோடு உள்ளவரன்றி யாராலும் அனுபவிக்கவும் முடியாது. ஆக அமைதி என்பது கடவுளோடு உறவு கொண்டு வாழ்கின்ற ஒருவருடை ஆன்மீக சலனமற்ற நிலை என்று கூட நாம் புரிந்து கொள்ளலாம்.
இத்தகைய அமைதியைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
நம் வாழ்வை செம்மையாக்க வேண்டும். இதுதான் திருமுழுக்கு யோவான் வழி கடவுள் நமக்கெல்லாம் கொடுக்கிற அழைப்பு. கடலுக்குள்ளே நீந்தும் உயிரினங்கள் கடலுன் மேல்புறத்தில் நடப்பவற்றை கண்டுகொள்ளாமல் அமைதியாக வாழ்வகின்றன. அவ்வாறுதான் கடவுளோடு இணைந்து உறவு கொண்டு, பாவ நாட்டங்களை வெறுத்து உலகோடு ஒட்டாமல் வாழ்கின்ற எவரும் உண்மையான, கடவுள் அருளுகின்ற அமைதியை கண்டுணர்வர். ஆகவே அமைதியை அடைய நம் வாழ்வு செம்மையாக இருக்கிறதா என்று நம்மையே நாம் சோதித்து அறிய வேண்டும். உலகோடு இணைந்து பாவசோதனைகளுக்கு அடிமையாய் நாம் இருந்தால் நமது வாழ்வு செம்மையானது அல்ல.
நம் அன்றாட வாழ்வுப்பாதையை எவ்வாறெல்லாம் செம்மையாக்கலாம்?
***பரபரப்பான வாழ்வில் கடவுளுக்கென்று நேரம் ஒதுக்குதல்
***வாழ்வின் எதார்த்தங்களை இறைநம்பிக்கையோடு ஏறறுக்கொள்தல்
*** பாவத்திற்கு இட்டுச்செல்லும் கைப்பேசி, இணைய பயன்பாடுகளை குறைத்தல்
***சோம்பேறித்தனம் அதிக துரித உணவுகள் உண்ணுதல் குடிப்பழக்கம் போதைப்பழக்கங்களை விட முயற்சித்தல்
***பிறரை மதித்து ஏற்றுக்கொள்ளுதல்
போன்ற காரியங்களை செய்து நமது வாழ்வை நாம் செம்மைப்படுத்த வேண்டும். இத்தைகைய செயல்கள் நம்மை கடவுளோடு இணைக்கும்.நாம் அமைதியாக வாழ வழிவகுக்கும்.
இறைவேண்டல்
அமைதியின் அரசரே! எம் வாழ்வை செம்மையாக்கி அமைதியாய் வாழ வரமருளும். ஆமென்.