புனித ஆசீர்வாதப்பர்‌

சந்தியாகு

புனித ஆசீர்வாதப்பர்‌ (St. Benedict of Nursia) இத்தாலி நாட்டில்‌ 480 ஆம்‌ ஆண்டு பிறந்தார்‌. இவர் புனித ஸ்கொலாஸ்திக்காவின்‌ சகோதரர்‌. இவர்‌ உயர்ந்த குலத்தில்‌ தோன்றியதனால்‌ புகழ்பெற்ற உரோமை நகரில்‌ கல்வி கற்றுக்கொள்ள பெற்றோர்‌ இவரை அனுப்பினர்‌. அங்கு படிக்க வந்திருந்த இளைஞரிடையே நிலவிய தீமைகள்‌ இவரைப்‌ பதைபதைக்க வைத்தன.

உலகில்‌ பாவம்‌ மிகுந்திருப்பதைக்‌ கண்ட இவர்‌ உலகத்தைத்‌ துறந்து காட்டிற்குச்‌ சென்றார்‌. சுபியாக்கோ என்னும்‌ மலையில்‌ இருந்த ஒரு குகையில்‌ தவம்‌ செய்தும்‌, செபித்தும்‌ வாழ்வு நடத்தினார்‌. அங்கே ஒரு முனிவரைச்‌ சந்தித்தார்‌. அம்முனிவர்‌ காட்டிய வழியில்‌ மூன்றாண்டுகள்‌ அம்மலையிலேயே வாழ்ந்து வந்தார்.

ஆசீர்வாதப்பரைப்பற்றிக்‌ கேள்விப்பட்டு அநேகர்‌ அவருக்குச்‌ சீடராயினர்‌. அவர்களுக்கென்று பல துறவற மடங்களைக்‌ கட்டி வைத்தார்‌. அங்கு அவர்கள்‌ சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள்‌. இதன்‌ விளைவாகத்‌ தோன்றியதுதான்‌ பெனடிக்ட்‌ துறவறச்‌ சபை.

529 ஆம்‌ ஆண்டுஇவர்‌ மோந்தெகளினோ என்னும்‌ இடத்திற்குச்‌ சென்று ஒரு மடத்தை நிறுவினார்‌. இந்த மடம்‌ உலகப்‌ புகழ்பெற்றதாயிற்று. துறவிகளுக்கு சட்டங்களை இயற்றித்‌ தந்தார்‌. அந்தச்‌ சட்டங்கள்‌ துறவிகள்‌ உத்தமராகும்‌ வழியைத்‌ தெளிவுறக்‌ காட்டுகின்றன. துறவிகள்‌ தங்களை அடக்கி ஆள வேண்டும்‌. ஏதாவது ஒறுத்தல்‌ செய்ய வேண்டும்‌. தாழ்ச்சி, கீழ்ப்படிதல்‌, செபம்‌, மெளனம்‌ இவற்றை நேசிக்க வேண்டும்‌. உலகின்‌ மீதும்‌, அதன்‌ கவலைகள்‌ மீதும்‌ பற்று இன்றி வாழ வேண்டும்‌.

இவர்‌ காலத்தில்‌ பொதுவாக மேலை நாடுகளில்‌ மனித உழைப்பும்‌, கை வேலையும்‌ மனித மாண்பைக்‌ குறைக்‌கின்றன என்றும்‌, அவை அடிமைகளால்‌ மட்டுமே செய்யப்பட வேண்டுமென்ற தவறான கருத்து நிலவியது. இதைக்‌ கண்டிக்கும்‌ வகையில்‌ “Ora et labora” என்ற சட்டத்தையும்‌ இவர்‌ ஏற்படுத்தினார்‌.” அதாவது, செபமும்‌, உழைப்பும்‌ என்பதே. இதுவே இவரது சபையின்‌ குறிக்கோள்‌.

புனித ஆசீர்வாதப்பர்‌ தனிமையை நாடினாலும்‌, அடிக்கடி மக்களைச்‌ சந்‌திக்கும்‌ பழக்கத்திலும்‌ இருந்தார்‌. நோயாளிகளைக்‌ குணமாக்கினார்‌. வறுமையில்‌ வாழ்ந்தவர்களுக்கு பொருளுதவி அளித்‌தார்‌. ஏழைகளுக்கு உணவு வழங்கினார்‌. பலமுறை இறந்தோரை இவர்‌ உயிர்‌ பிழைத்திருக்கச்‌ செய்திருக்கின்றார்‌. தனது இறப்பை ஆறு நாட்களுக்கு முன்‌ அறிவித்தார்‌.

547 ஆம்‌ ஆண்டு இவர்‌ ஒரு நாள்‌ திவ்விய நன்மை உட்‌ கொண்ட பின்பு, பீடத்தின்‌ முன்னின்று கைகளை உயர்த்தி செபித்துக்‌ கொண்டே உயிர்‌ விட்டார்.

24 திருத்தந்தையர்களையும்‌, 5000 க்கும்‌ மேற்பட்ட புனிதர்களையும்‌ இவரது சபை நமது திருச்சபைக்குத்‌ தந்திருக்கிறது.

புனிதரின்‌ திருநாள்‌ : சூலை 11

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது