புனித வனத்து அந்தோணியார்
சந்தியாகு
(St. Anthony the Abbot)
புனித வனத்து அந்தோணியார் 251 ஆம் ஆண்டு எகிப்தில் இறைபக்தி நிறைந்த ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். தனது 18வது வயதிலேயே பெற்றோரை இழந்தார். தேவ அழைத்தலை உணர்ந்தார்.
"நீ நிறைவு பெற விரும்பினால் உன் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு, வானகத்தில் செல்வம் கிடைக்கும். பின் வந்து என்னைப் பின்செல்" என்னும் சொற்களை இவர் ஒருநாள் கோவிலில் கேட்டார்.
இவ்வார்த்தைகள் இவர் மனதை மாற்றியது. உடனே தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு துறவற வாழ்வை மேற்கொண்டார்.
தனது ஊருக்கு அருகிலேயே கடின உழைப்பு. வேதாகம நூலை வாசித்தல், செபம் இவற்றில் நாள்தோறும் நேரத்தைச் செலவிட்டார். நாளடைவில் ஊரைவிட்டு வெகு தொலைவில் உள்ள மலைப்பகுதிக்குச் சென்றார். அங்குப் புனித அத்தனாசியாருக்கு இவரது தோழமை கிடைத்தது. நாளடைவில் பலரும் இவரை அணுகவே, இவரது சீடர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இவர்கள் ஆங்காங்கே குழுக்களாகத் துறவு வாழ்வு மேற்கொண்டனர்.
அவ்வப்போது அலெக்சாண்டிரியா நகருக்குச் சென்று அங்குக் கொடிய வேதகலகத்தில் மரணத்தை எதிர்நோக்கி வாழ்ந்த மறைசாட்சி களை விசுவாச சத்தியத்தில் திடப்படுத்தினார்.
புனித அத்தனாசியார் இவரது துறவு வாழ்வைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இந்தக் குறிப்புகளின் பலனாகப் பலரும் பாலைநிலத்திற்கும், கூடுகளுக்கும் சென்று வாழ்நாளெல்லாம் தவ, செப வாழ்வு வாழ்ந்து இறைவன் பதம் சென்றனர்.
இவ்வுலக வாழ்வு எத்துணை மின்னல் வேகத்தில் தோன்றி மறைகிறது! ஆனால் நித்தியம், நித்திய பேரின்பம் என்பது எத்துணை மேலானது என்று தியானிப்பது எவ்வளவு பலன் தருகிறது என்று அந்தோணியார் கொடுத்து வந்த மறையுரை பிற்காலத்தில் புனித அகுஸ்தினாரை மிகவும் கவர்ந்திழுத்தது.
பரலோகத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இரவில் படுத்திருப்பார். சூரியன் உதித்ததும் கடவுளைப் பற்றி சிந்திக்க சூரியன் இடையூறாக இருக்கிறதே என்பார். சாத்தான் இவரைக் குரூரமாகத் தாக்கியது. தாழ்ச்சியாலும், செபத்திலும் தவத்தாலும், கடவுள் மீதுள்ள நம்பிக்கையாலும் சிலுவை அடையாளத்தாலும் சாத்தானை முறியடிப்பார்.
ஒருநாள் பயங்கர சோதனைகளுக்குப் பின் அவர் "ஆண்டவரே, நீர் எங்கே போயிருந்தீர்?" என்று கேட்டார். "நீ போர் புரிவதைப் பார்த்தேன். நீ அடைந்த வெற்றியைக் கண்டு மகிழ்ந்தேன். நீ வீரத்துடன் போராடியமையால் உன் பெயரை உலகெங்கும் பிரபல்யமாக்குவேன்" எனக் கடவுள் கூறினார்.
தனது 105வது வயதில் செங்கடலுக்கு அருகில் கோல்சீம் குன்றில் இறைவனடி சேர்ந்தார்.
"உத்தமத்தனத்தை நீ அடைய விரும்பினால் இன்று உன் வாழ்வின் கடைசி நாளெனக் கருதி செயலாற்று. கடவுள்மீதும், அவர் பராமரிப்பின் மீதும் நம்பிக்கை வைக்கிறவன் வல்லமையுள்ளவனாகிறான்" என்று புனித வனத்து அந்தோணியார் கூறியுள்ளார்.
ஜனவரி 17 ஆம் தேதி அந்தோணியார் பொங்கல் என்று விழா எடுக்கும் பழக்கம் தமிழகத்தில் பல ஊர்களில் காணப்படுகிறது.
புனிதரின் திருநாள் : ஜனவரி 17


