அசிசியின் புனித கிளாரா
சந்தியாகு
இந்தப் புனிதை இத்தாலியில் உள்ள அசிசியில் 1194 ஆம் ஆண்டு பிறந்தார். இளம் வயதிலிருந்தே தன்னை கடவுளுக்கு அர்ப்பணிக்க விரும்பினார். தவக்காலத்தில் புனித அசிசி பிரான்சிஸ் மறையுரைகள் நிகழ்த்தினார். அவரது போதனைகளைக் கேட்ட கிளாரா துறவியாக வேண்டுமென்று தனது 18வது வயதில் தீர்மானித்து குருத்து ஞாயிறு இரவில் பெற்றோருக்குத் தெரியாமல் புனித பிரான்சிஸ் அவர்களின் இல்லம் சென்று அடைக்கலம் புகுந்தார். அவர் இவருக்கு துறவற உடை அளித்தார்.
பெற்றோர் இவரை எல்லா இடங்களிலும் தேடி இறுதியாக கண்டுபிடித்து, இழுத்துக் கொண்டு போக பெருமுயற்சி செய்தார்கள். இவரோ பீடத்தை இறுகப் பிடித்துக் கொண்டார். திய்ரென தன் தலையில் இருந்த முக்காட்டை அகற்றினார். நீண்ட, பொன்மயமான தலைமுடி வெட்டப்பட்டிருப்பதை பெற்றோர் கண்டனர். அதிலிருந்து இனிமேல் வரமாட்டாள் என்று அறிந்தார்கள்.
இவரைக் கொண்டு புனித பிரான்சிஸ் ஒரு புதிய கன்னியர் சபையைத் தொடங்கினார். இதுவரை பெண்கள் அனுசரிக்காத தவ முயற்சிகளையெல்லாம் இந்தச் சபையினர் அனுசரித்தனர். ஒவ்வொரு நாளும் உபவாசம் இருந்தனர். கிளாராவின் தந்தை தனது 18வது வயதில் ஏராளமான சொத்துக்களை இவருக்கு விட்டுச் சென்றார். இயேசுவைப் பின்பற்றி தரித்திரத்தில் வாழ்ந்து வந்த கிளாரா அனைத்தையும் ஏழை களுக்குக் கொடுத்து விட்டார்.
"நாங்கள் மிக மிக ஏழைகள்என்று எல்லோரும் சொல்கிறார்கள். கடவுளைக் கொண்டிருப்பவர்கள் ஏழைகள் அல்ல" என்று கிளாரா கூறினார்.
ஒருமுறை வேத விரோதிகளான சரசேனியரின் படை அசிசி நகரிலிருந்து வந்து இப்புனிதவதி இருந்த மடத்தை கொள்ளையடிக்க படையெடுத்து வந்தது. இப்புனிதவதி திவ்விய நற்கருணை இருக்கும் பாத்திரத்தை தனது மடத்தின் வாசற் படியில் வைக்கச் சொல்லி அதன்முன் முழந்தாள் படியிட்டு "ஆண்டவரே, உம்முடைய ஊழியர்களாகிய நாங்கள் அவிசுவாசிகளான இவர்களது கைகளில் அகப்பட்டு அழிவது உமது விருப்பமா?" என்று மன்றாடினார். இவரது மன்றாட்டுக்குக் கடவுள் செவிசாய்த்தார். எதிரிகள் ஒருவித அச்சத்தால் பீடிக்கப்பட்டு ஓட்டம் பிடித்தனர்.
புனித கிளாரா நோய்வாய்ப்பட்டுக் கிடந்த 28 ஆண்டு காலமும் திருவுணவு மட்டுமே ஒரே உணவாக இருந்தது. தனது 59வது வயதில் புனிதவதியாய் விண்ணகம் சேர்ந்தார்.
திவ்விய நற்கருணையைக் கொண்டு இவர் எதிரிகளை முறியடித்தார். அதைப்போல நாமும் திவ்விய நற்கருணையைக் கொண்டு நம் ஆன்மாவின் எதிரிகளை முறியடிப்போம்.