தச்சனுக்குத் தெரியுமா?

அருட்பணி இயேசு கருணாநிதி

நற்செய்தி சிந்தனை - லூக்கா 5:1-11


Photo by Dennis Jarvis -www.flickr.com

'தச்சனுக்குத் தெரியுமா தண்ணீரின் ஓட்டம்?' - இயேசு பேதுருவின் படகை ஆழத்திற்குக் கொண்டுபோய் வலைகளைப் போடச் சொன்னபோது பேதுருவின் எண்ண ஓட்டம் இப்படித்தான் இருந்திருக்கும். 'ஆயினும் உம் சொற்படியே வலைகளைப் போடுகிறேன்' என்று பேதுரு வலைகளை வீசுகின்றார். வலை கிழியுமட்டும், இரு படகுகள் மூழ்கும் மட்டும் மீன்கள் கிடைத்தன. பேதுரு தன்னுடைய தவற்றை உணர்ந்தவராய், 'ஆண்டவரே, நீர் என்னை விட்டுப் போய்விடும்' என்று இயேசுவிடம் இறைஞ்சுகின்றார்.

மூன்று விடயங்கள் இங்கே முக்கியமானவை:

அ. தயக்கம்
'இது அப்படி நடக்குமா?' 'நினைத்த நேரத்தில் பணம் கிடைக்குமா?' 'பொருளாதார நிலை சரியாகுமா?' 'இந்தப் பிரச்சினை சரியாகுமா?' 'நான் நாளை நலமாகி விடுவேனா?' - இப்படி நிறைய தயக்கங்கள் நம்மிடம் எழுவதுண்டு. மேலும், நாம் தவறிவிட்டால், அல்லது ஏதாவது பிரச்சினையாகிவிட்டால் அதன் எதிர்விளைவையும், மற்றவர்களின் கேலிப் பேச்சையும் எப்படி எதிர்கொள்வது? என்ற கேள்வியும் நம்மிடம் எழுவதுண்டு. நாம் முன்னேறிச் செல்வதற்கு தயக்கம் பெரிய தடையாக இருக்கின்றது. அதிலும், அவசரமான நேரங்களில் நாம் காட்டும் தயக்கம் ஆபத்தாகிவிடுவதும் உண்டு. சில நேரங்களில் பணம் மற்றும் மற்ற தேவைகளின் காரணமாகவும் நாம் தயக்கம் காட்ட நேரிடும். பேதுருவுக்கு ஏற்பட்டிருக்கிற தயக்கம் இயேசுவின் வார்த்தைகளை நம்புவதில் இருக்கிறது. பேதுரு பிறப்பிலேயே மீன்பிடித் தொழில் செய்கின்றவர். தண்ணீரின் ஆழம், ஓட்டம், மீன்களின் இருப்பு, வகை அனைத்தையும் அறிந்தவர். ஆகையால்தான், அந்தத் தொழிலே தெரியாத ஒருவர் மீன்பிடி பற்றிச் சொன்னபோது தயக்கம் காட்டுகிறார். பேதுரு தன்னுடைய மூளையால் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்ததால் அவருடைய மனம் செயலாற்றுவதை அவரால் அனுமதிக்க முடியவில்லை.

ஆ. என்னைவிட்டுப் போய்விடும்
இயேசுவை அவருடைய வாழ்வில் மூன்று பேர் தங்களைவிட்டு அகலுமாறு கூறுகிறார்கள். ஏரோது குழந்தையாக இருந்த இயேசுவை உலகைவிட்டே அகலச் செய்ய முயலுகின்றார். கெரசெனேர் மக்கள் தங்கள் பன்றிகள் கடலுக்குள் வீழ்ந்து இறந்தவுடன் இயேசுவை அகலச் சொல்கின்றனர். இங்கே பேதுரு இயேசுவை அகலச் செய்கின்றார். இந்த மூன்று இடங்களிலும் இயேசுவின் பிரசன்னம் அவர்களின் வலுவின்மையை சுட்டிக்காட்டுகிறது. அந்த வலுவின்மையை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக வலுவின்மை சுட்டிக்காட்டப்படுவதைத் தவிர்க்க விரும்புகின்றனர்.



https://it.wikipedia.org/wiki/Ges%C3%B9_nel_Nuovo_Testamento

இ. அனைத்தையும் விட்டுவிட்டு
'ஆண்டவரே, இன்றைக்கு இரண்டு படகுகள் மீன் பிடித்தாயிற்று. இப்படியே ஒவ்வொரு நாளும் பிடித்தால் நாம் ரொம்ப பணக்காரர் ஆகிவிடலாம்!' - 'இன்னும் கொஞ்சம்,' 'இன்னும் கொஞ்சம்,' 'இன்னும் கொஞ்சம்' என்ற கார்ப்பரெட் எண்ணம் பேதுருவுக்கு அளவே இல்லை. இயேசுவை ஒரு பொன் முட்டையிடும் வாத்தாக பேதுரு பார்க்கவில்லை. அனைத்தையும் பெற்றவர் அனைத்தையும் இழக்கத் துணிகின்றார். ஆக, இழப்பதில்தான் வாழ்க்கை என்பதை பேதுரு உடனே அறிந்துகொள்கின்றார். மீன்களை விட்டுவிட்டு ஆண்டவரைப் பற்றிக்கொள்வதே சிறந்தது என்னும் ஞானத்தை பேதுரு நொடிப் பொழுதில் பெற்றுக்கொள்கின்றார்.

பவுல் ஏறக்குறைய இதே கருத்தை, 'நீங்கள் கடவுளைப் பற்றிய அறிவில் வளர வேண்டும்' என்று அறிவுறுத்துகின்றார். கடவுளைப் பற்றிய அறிவு வந்தவுடன் அவருடைய வல்லமை நம்மை நிரப்பிவிடுகிறது. ஆக, இவ்வறிவு வெறும் மூளை அறிவு அல்ல. மாறாக, வாழ்க்கையையே புரட்டிப் போடும் அறிவாக இருக்கின்றது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  புனிதர்கள்