கிறிஸ்தவப் பொங்கல் விளக்கமும், வழிபாடும்

அருட்தந்தை அடைக்கல ராசா ச.ச

(மூலநூல் : சுவாமி ஆஸ்வால்டு, தூத்துக்குடி, 1972)

pongal greetings

ஒரு சமுதாயத்தின் பண்பாடு, அச்சமுதாயத்தில் நிலவும் சமயத்தோடு நெருங்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. இவ்வுண்மையை நன்குணர்ந்த திருச்சபை, பண்பாட்டிற்க்குப் பெரும் மதிப்பு அளித்து வந்துள்ளது. திருச்சபைக்கும் பண்பாட்டிற்குமுள்ள நெருங்கிய தொடர்பை 2-ம் வத்திக்கான் சங்கம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. (காண்க, "இன்றைய உலகில் திருச்சபை எண். 53 தொடர்ச்சி) மேலும் திருச்சபையின் "அமைப்பிற்கு வெளியே தூய்மை, உண்மை என்னும் அம்சங்கள் பல காணப்படுகின்றன", (திருச்சபை-3) என்று இச்சங்கம் ஏற்றுக்கொள்ளுகிறது. எனவே "பிற மறைகளிலே காணக் கிடக்கின்ற உண்மையானதும், தூய்மையான எதையும் திருச்சபை உதறித் தள்ளுவதில்லை". மாறாக அவைகளை "உண்மையாகவே மதிக்கிறது". (கிறிஸ்தவமில்லா மறைகள்-2) "இயலுமாயின் ...... இறைபணியிலும் கூட அதை ஏற்றுக்கொள்ளுகிறது" (இறைபணி-37, 40).

ஆகவே தமிழர் பண்பாட்டின் சிறப்பு அம்சமான பொங்கல் விழா கிறிஸ்தவ இறைபணியில் ஏற்றுக்கொள்ளப்பட தகுதிவாய்ந்ததா என்று ஆராய்ந்து, ஆவன செய்து நமது பண்பாட்டையும், கிறிஸ்தவ மறையையும் இன்னும் சிறக்கச்செய்வது தமிழகத்திலே வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவனின் தலையாய கடமை.

பொங்கல் விழா

தமிழ்நாட்டில் தை மாதத்தின் முதல் நாளில் பொங்கல் விழா மங்களச் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. இது ஓர் அறுவடைவிழா. இறைவன் நல்கிய நல் விளைச்சலுக்காக அவருக்கு நன்றி செலுத்தும் விழா. இவ்விழாவிற்க்கு முந்திய நாளை, மக்கள் தயாரிப்பு நாளாக கொள்கின்றனர். இது "போகிப் பொங்கல்" என்று அழைக்கப்படுகிறது.

மூன்று நாள் கொண்டாட்டத்தில் முதல்நாளில், மக்கள் ஞாயிற்றை நன்றியுணர்ச்சியுடன் நினைக்கின்றனர். ஏனெனில் அவன்தான் தன் கிரணக்கையால் பயிர்களைச் செழித்து வளரச் செய்தவன். இரண்டாவதுநாள், மாட்டைப் பெருமைப்படுத்துகின்றனர். ஏனெனில், மாடு உழவர்களின் வலக்கரமாய் இருந்து உதவுகிறது. மூன்றாம் நாள், உற்றார் உறவினர், ஒருவர் ஒருவரைச் சந்தித்துத் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.

பொங்கல் ஒரு முதற்கனி விழா

பொங்கலைக் கடவுளுக்குப் படைத்தல்தான் பொங்கல் விழாவின் முக்கியக் கட்டமாய் அமைந்துள்ளது. இப்பொங்கல், நிலத்திலிருந்து கிடைக்கும் முதற்கனியாகிய அரிசியிலிருந்து சமைக்கப்படுகிறது. நிலத்தின் முதற்கனியை இறைவனுக்குப் படைப்பது திருவிவிலியத்தில் எங்கும் காணப்படுகிறது.

பழைய ஏற்பாட்டின் முதற்கனி:

பழைய ஏற்பாட்டில், ஏப்ரல் மாதத்தில் பார்லியையும் (2 சாமு 21:9) மே மாதத்தில் கோதுமையையும் மக்கள் அறுவடை செய்தனர். அப்போது அவர்கள் எல்லாரும் மகிழ்ந்நிருந்தனர். (இச16:15) இம்மகிழ்ச்சியில் மக்கள் படைப்பின் இறைவனை மறந்துவிடவில்லை. அறுவடைக்காலம் இறையருட் பெருக்கின் அருங்குறி. ஆகவே நல்ல விளைச்சலை நல்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தினர் (திபா 67:6). அறுவடை விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர். இவ்விழாவின்போது அறுவடையின் முதற்கனியாகிய கதிர்கட்டை இறைவனுக்குக் காணிக்கையாக அளித்தனர் (லேவி 23:10). இதனால்தான் அறுவடைவிழா, 'முதற்கனியின் நாள்' என்று அழைக்கப்பட்டது (எண் 28:26).

இதன் தொடர்ச்சியாகவே, மிருகங்களின் தலைக்குட்டியையும், மனிதர்கள் தம் தலைப்பேற்றையும், குறிப்பாக ஆண்குழந்தையையும் (விப13:12,தொ.நூ22:2) இறைவனுக்குக் காணிக்கையாக அளிக்கும் வழக்கம் உருப்பெற்றது.

கிறிஸ்து - தலைப்பேறானவரும், முதற்கனியும்:

கிறிஸ்து விண்ணகத் தந்தையின் தலைப்பேறான மகன். ஆகவே மோசே சட்டப்படி மரியா, தன் தலைப்பேறான இயேசுவை ஆண்டவருக்கு அர்ப்பணித்தார் (லூக் 2:22-24). பழைய ஏற்பாட்டில் அறுவடை நாளன்று முதற்கனியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட கதிர்கள், ஐம்பதாம் நாள் அப்ப காணிக்கையாய் அளிக்கப்பட்டன (லேவி 23:16). அதுபோல பிறந்தவுடன் முதற்பேறான காணிக்கையாய் ஒப்புக்கொடுக்கப்பட்ட இறைமகன் கிறிஸ்து, இறுதியில் பெரிய வியாழன், புனித வெள்ளியன்று அப்பமாய்க் காணிக்கையானார். ஆகவே இயேசுவின் வாழ்க்கையே ஓர் அறுவடை விழா.

கிறிஸ்து படைப்பனைத்திலும் தலைப்பேறு (கொலோ 1:15) திருச்சபையில் திருமுழுக்கு பெற்ற அனைவரும் முதற்கனியாக ஒப்புக்கொடுக்கப்படுகின்றனர் (யாக் 1:18, 1கொரி 16:15). ஆகவே ஒவ்வொரு அறுவடைவிழாவும் அல்லது முதற்கனி விழாவும் நாம் பெற்ற திருமுழுக்கை நமக்கு நினைவூட்டுகிறது.

பொங்கலும் கிறிஸ்தவரும்:

பொங்கல் விழா, அறுவடையின் முதற்கனியை இறைவனுக்குப் படைக்கும் விழா என்பதாகக் கண்டோம். அறுவடையின் முதற்கனியை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தல், விவிலிய பொருட்செறிவு கொண்ட ஓர் இறையியல் கோட்பாடு என்றும் நோக்கினோம். எனவே தமிழகக் கிறிஸதவர்கள் பொங்கல் விழாவைச் சிறப்புடன் கொண்டாடுவது மிகவும் பொருத்தமாகும்@ பொருளுடையதாகும். ஒரு தமிழ்க் கிறிஸ்தவர், தமிழர் என்ற முறையிலும் பொங்கல் விழாவைக் கொண்டாடத் தகுதியுடையவராகிறார். ஏனெனில் இவ்விழா, கிறிஸ்தவனின் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்து, உயிர்த்தெழுதலில் அவரது நம்பிக்கையையும் உறுதிப்படுத்தி, விண்ணுலக வாழ்வை இம் மண்ணுலகிலேயே முன்சுவையாக அனுபவிக்க உதவுகிறது.

பொங்கல் ஓர் அறுவடை விழா. ஆகவே எல்லாருக்கும் பொதுவான ஒரு சமூக விழா. பொதுப்படக் கூறின் இந்திய விழாக்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புராணக் கதையின் அடிப்படையில் எழுந்ததாகவே இருக்கும். ஆனால் பொங்கல் விழாவைப் பொருத்தமட்டில், அது எத்தகைய புராணத்தையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. இறைவன்பால் மக்கள் கொண்டிருந்த நன்றிப் பெருக்கே பொங்கல் விழாவாக உருவெடுத்தது.

ஆகவே பொங்கல் விழா இன,மத வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவருக்குமுரிய ஒரு பொது விழா. ஒரு சமூக விழா. நிலத்தை பண்படுத்திப் பயிர் செய்யும் உழவர்கள் மட்டுமல்ல, அதன் பலனை உண்டு மகிழும் அனைவருமே இந்நன்றிப் பெருவிழாவைக் கொண்டாட வேண்டும்.

வழிபாடு

   1. வருகைப்பாடல்
   2. வாழ்த்து
பணி : தந்தை, மகன், தூயஆவியின் பெயராலே
எல் : ஆமென்!
பணி : நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய
ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல் : உம்மோடும் இருப்பதாக 

3. முன்னுரை :

இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே! பொங்கல் விழாவைக் கொண்டாட நாம் இங்கு குழுமியுள்ளோம். பொங்கல் விழா, தமிழர் விழா! தமிழன் நன்றி மறவாதவன்! 'செய்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை', என்பதை நன்கு உணர்ந்தவன். அந்த நன்றியுணர்ச்சியை காட்ட எழுந்ததே இப்பொங்கல் விழா.
தமிழகம் வயல் செறிந்த ஒரு நாடு. பெரும்பாலான மக்கள் உழுதுண்டு வாழ்கின்றனர். பொங்கல் விழாவன்று, இம்மக்கள், நிலத்தை வளப்படுத்தி தங்களுக்கு வாழ்வளித்த படைப்பின் இறைவனுக்கு, அறுவடையின் முதற்கனியை அளித்து, நன்றிப்பலி செலுத்துகின்றனர்.
பொங்கல் விழா, உழவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது உழைப்பின் பயனைத்துய்க்கும் எல்லா மக்களுக்கும் ஒரு பெரும் விழா. ஆகவே நாம் அனைவரும் ஒன்றித்து இறைவன் நமக்கு அளித்துள்ள அருங்கொடைகள் அனைத்திற்க்கும் நன்றி கூறுவோம்.

   4. முதல் வாசகம் : லேவியர் 23:9-14
   5. தியானப்பாடல் : தி.பா. 65:1, 9-13
   எல் : கடவுளே, உம்மைப் புகழ்ந்து பாடுவது ஏற்புடையது.
   6. நற்செய்தி : லூக்கா 2: 22-24
   7. மறையுரை : (விளக்கம் காண்)

8. நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1.எம்மைப் படைத்து பராமரிக்கும் பரம்பொருளே! இறைவா! நீர் எங்களுக்கு கொடையாக தந்த இயற்கைக்காகவும், அதன் பலன்களுக்காகவும் நன்றி கூறுகிறோம். இந்த வளமிக்க இயற்கையை நாங்கள் பாதுகாத்து எம்பின்வரும் சந்ததியினரும் அதன் பலன்களை பெறும் வண்ணம் வாழ்ந்திட வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.சேற்றில் பதித்து, வெயில் மழை பாராமல் எப்போதும் விளைநிலங்களில் பணிபுரியும் எமது விவசாய நண்பர்களுக்காக மன்றாடுகிறோம். தங்களின் உடல் உழைப்பின் பலனை நிறைவாகப் பெற்று, பஞ்சம், பசி, கடன், நோய் போன்ற எல்லா தீமைகளிலிருந்தும் விடுதலை பெற்று நிறைவோடு வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.விவசாய வளமிக்க எம் நாட்டை ஆளும் அதிகார வர்க்கத்தினருக்காக மன்றாடுகிறோம். தங்கள் சுயநலத்தை மறந்து ஏழை, எளிய விவசாய பெருமக்களின் வாழ்வு, வளம் பெற விவசாய தொழில் சிறக்க சட்ட திட்டங்களை இயற்றி செயல்படுத்தும் மனதிடனை அவர்களுக்கு அளித்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.இயற்கை சீற்றம், பொய்த்த பருவமழை, விவசாய இடுபொருட்களின் விலையேற்றம், உலகமயமான சந்தை பொருளாதாரம் போன்ற தீய சக்திகளின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகள் உமது அருள் துணையோடு, நியாயமான தொழில் முறைகளை பின்பற்றி உழைக்கவும், அவர்கள் வாழ்வு ஏற்றம் காணவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.இந்த பொங்கல் விழா வழிபாட்டில் கலந்து கொள்ளும் நாங்கள் அனைவரும் விவசாய மக்களையும், அவர்களின் உழைப்பையும் மதித்து, சுயநலத்தோடு உணவு பொருட்களை எமக்கென பதுக்காமல், நல்மனத்தோடு அவற்றை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளும் தாராள மனத்தை எமக்கு தந்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

   9. காணிக்கைப் பாடல்
   10. பொங்கல் அர்ச்சிப்பு (திருப்பலியின் இறுதியில்)

பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!
எல : உம்மோடும் இருப்பாராக!
பணி: சகோதர, சகோதரிகளே, பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இவ்வேளையிலே, மகிழ்ச்சிக்கெல்லாம் ஊற்றாகிய கடவுளை நினைத்து, அவர் நமக்கு அளித்துள்ள அருங்கொடைகள் அனைத்திற்காகவும் அவருக்கு நன்றிகூறுவோம்.
குரு: என்றும் வாழும் தந்தாய்! உம் ஞானமும் பேரன்பும் விளங்க, இவ்வுலகத்தைப்படைத்து, மனிதனை அப்படைப்பின் சிகரமாய் வைத்து, அவனை அதன் ஆளுனனாக ஏற்படுத்தியதற்காக. எல்: ஆண்டவரே, உமக்கு நன்றி கூறுகிறோம்.
குரு: உழைக்கும் கரங்களுக்கு ஆற்றல் மிக அளித்து உமது படைப்பின் வளத்தை மக்களனைவரும் பெற்று மகிழச் செய்வதற்காக.
எல்: ஆண்டவரே, உமக்கு நன்றி கூறுகிறோம்.
குரு: எமக்கு நல்ல மழையைத் தந்து, நிலத்தை வளப்படுத்தி, நிரம்ப பலனைத் தந்ததற்காக.
எல : ஆண்டவரே, உமக்கு நன்றி கூறுகிறோம்.
குரு: எங்கள் உழைப்பை ஆசீர்வதித்து, எங்கள் வாழ்வில் நிறைந்த மகிழ்ச்சியையும், அமைதியையும் அளித்ததற்காக,
எல்: ஆண்டவரே உமக்கு நன்றி கூறுகிறோம்.
குரு: பொருள் வளம் தந்து அதன் வழியாக அருள் வளமும் அளித்தமைக்காக,
எல்: ஆண்டவரே உமக்கு நன்றி கூறுகிறோம்.
குரு: அனைத்தையும் படைத்த இறைவா! படைப்புப் பொருள் யாவும் உமதே. எங்களது உழைப்பின் மூலம் உமது படைப்பு அலுவலில் பங்கு தந்து, அதன் பலனைத் துய்க்கும் பேற்றையும் தந்து, உமது அருளை என்றும் போற்றிப் புகழ வாய்ப்பளித்ததற்காக எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உமக்கு நன்றி கூறுகிறோம்.
எல : ஆமென்!
பணி: மன்றாடுவோமாக, நன்மைகளுக்கெல்லாம் ஊற்றாகிய இறைவா! உழவர்களுக்கும், அவர்களது உழைக்கும் கரங்கள் மூலம் எங்களுக்கும், நீர் அளித்துள்ள அருட்கொடைகளுக்கெல்லாம் நன்றி செலுத்துகிறோம். எங்கள் நன்றியின் அடையாளமாக நாங்கள் உமக்கு படைக்கும் அறுவடையின் முதற்கனியாலான இப்பொங்கலை (அல்லது அறுவடையின் முதற்கனியான இப்பொருட்களை) + ஆசீர்வதித்தருளும். எங்களுக்கு உழைக்கும் திறனையும், அதன் பலனையும் நிரம்பத்தந்து, வளம் மிக்க எம் நாட்டை, அன்பும், நீதியும், அமைதியும், ஒற்றுமையும், பகிர்வும் கொண்ட நல்மனம் படைத்த மனிதர்களின் நாடாக்குமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(பீடத்தின் முன் படைக்கப்பட்ட பொங்கல், கரும்பு, மஞ்சள் போன்ற விளை பொருட்கள் மீது தீர்த்தம் தெளிக்கிறார்.)

இறுதிப்பாடல்

வருகைப்பாடல்

இறையாட்சி மலர

இறையாட்சி மலரவேண்டும் புதூழ்வு புலரவேண்டும் - 2
வார்த்தை மனுவாக இங்கு நீதி நிலைக்க வேண்டும் - 2
நிலைமாறுமா கரம்சேருமா வலுவாகுமா துயர் மாறுமா
நிலைமாறுமே கரம்சேருமே வலுவாகுமே துயர்மாறுமே
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்
விரைவில் நாம் காண்போம்

1. பாலும் தேனும் பொழிந்திடுமே
கானான் கனவு பலித்திடுமே
பாறை தண்ணீர் சுரந்திடுமே
மன்னா நிலங்கள் யாவும் இங்கு
பசுமை நிறங்கள் ஆகும் (2) (விண்ணும்...)

2. சிங்கமும் கன்றும் தோழமையில்
சிறுவர் நட்பில் பாம்பருகில்
வேலும் வாளும் ஏர்முனையில்
துணுக்கள் எல்லாம் புதுப்பொலிவில்
பாடும் மனங்கள் யாவும் இனி
பாசம் நிறைந்ததாகும் (2) (விண்ணும்....)

தியானப் பாடல்

தினமொரு வரம்

தினமொரு வரம் வேண்டும் தீர்க்கமாய் தினம் வேண்டும்
தீங்கில்லாத உள்ளம் வேண்டும்
தீர்ப்பிடாத மனம் வேண்டும் இயேசுவே (2)
கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே

1. கடுகளவு விசுவாசம் தேவை என்று ஓடிவந்தேன்
கரையாத கல்மனமும் கரைந்திட காத்திருந்தேன் (2)
இனி இறைவார்த்தை விதையாகி இறைவாழ்வு பயிராகி
குறையில்லா நிறைவாழ்வு நிறைவாக தினம் பெறவே
கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே

2. பறவைகள் பகிர்வதுபோல் மரங்கள் கனிதருவதுபோல்
மேகம் மழைதருவதுபோல் நிலவு ஒளிதருவது போல் (2)
இனி இரக்கத்தால் இறைமகனாய் நீதியால் பண்பாளராய்
உண்மையாய் வாழ்ந்திடவே உணர்ந்து உயிர் வாழ்ந்திடவே
கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே

காணிக்கை பாடல் 
எடுத்துக்கொள்ளும்

எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே
உடல்பொருள் ஆவியையும்
எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே
சிந்தனை சொல் செயல்
அனைத்தையும் தந்தோம்
நிந்தனை யாவையும் ஏற்கவும் துணிந்தோம்

 1. அனைத்தையும் உம் அதிமிக மகிமைக்கே என்று
  ஆர்வமாய் வாழ்ந்திட துணைபுரிவாயே

 2. உம் அருள் ஒன்றே எமக்கென்றும் போதும்
  உம் பதம் நாங்கள் சரண் அடைந்தோமே

நன்றிப்பாடல்
இறைவன் படைத்த

இறைவன் படைத்த நாளிதே
நன்றி நன்றி பாடுவோம்
இதயம் மகிழும் நாளிதே
நன்றி நன்றி பாடுவோம்
நன்றி இறைவா - 4

1. வானம் பூமி யாவுமே நன்றி கூறட்டும்
  வாழும் உயிர்கள் இயேசுவை வணங்கி மகிழட்டும் (2)
  இதயம் இன்று இனிய கீதம் பாடட்டும் பாடட்டும்
  இறைவன் இயேசு என்றும் நம்மைக் காப்பதால் 
  நன்றி இறைவா - 4

2. கவலை யாவும் மறைந்தது கலக்கம் இல்லையே
  காலமெல்லாம் கர்த்தர் யேசு நம்மோடு உள்ளார் (2)
  புதிய வானம் புதிய பூமி பூத்திட
  புதிய பயணம் புவியில் இன்று தொடருவோம்
  நன்றி இறைவா - 4 

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு பொங்கல்